Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுவராஜ், கைஃபின் ‘வாவ்’ சேஸிங்.. ஜெர்சியைக் கழற்றிச் சுழற்றிய கங்குலி..! #OnThisDay #15YearsOfHistoricalChasing

Featured Replies

யுவராஜ், கைஃபின் ‘வாவ்’ சேஸிங்.. ஜெர்சியைக் கழற்றிச் சுழற்றிய கங்குலி..! #OnThisDay #15YearsOfHistoricalChasing

 
 
 

மயிர்கூச்செரிதல். இந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? எப்போதாவது உங்களுக்கு மயிர் கூச்செரிந்திருக்கிறதா? ஒருவிதப்  பரவச நிலையை அடையும் தருணங்களில் மட்டுமே அதை  அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு நேரத்தில் இந்த பரவச நிலை கிடைக்கலாம். ஆனால் நூறு கோடி மக்களுக்கு ஒரே  சமயத்தில் அப்படியொரு பரவச நிலை கிடைக்கிறது என்றால் அது எத்தகயதொரு முக்கியமான தருணமாக இருந்திருக்க முடியும்? 

1983ல் உலககோப்பையை இந்தியா வென்றது என்பது அன்றைய தினத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலோனோருக்கு ஒரே சமயத்தில் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் டிவியும் இல்லை. நேரடி ஒளிபரப்பும் இல்லை. ஆனால் 2002 ஜூலை மாதத்தில் 13 ஆம் நாள் இரவு இந்தியாவில் கிரிக்கெட்டை ரசிக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு அப்படியொரு மயிர்கூச்செரியும் அனுபவம் கிடைத்தது. காரணம் வேறொன்றும் இல்லை இந்தியா ஒரு மேட்ச்சை ஜெயித்தது அவ்வளவு தான். ஆனால் அது மகத்தான மேட்ச். இந்தியாவை ஆண்ட இங்கிலாந்துக்கு இந்தியா அதிர்ச்சி வைத்தியம் தந்த நாள் அது. இங்கிலாந்து அணியினர் கிரிக்கெட்டின் புனிதம் என லார்ட்ஸ் மைதானத்தை கொண்டாடுவார்கள். அதே மண்ணில் தான் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய அணி. அந்த மேட்சை வென்ற போது கங்குலி சட்டையைக் கழற்றிச் சுற்றினார். அவர் மட்டுமல்ல டிவியில் நேரலையில் மேட்ச்சை பார்த்தவர்களும் சட்டையைக் கழற்றிச் சுழற்றினார்கள். நான் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த ஒரு அரங்கில் கெட்ட வார்த்தையில் திட்டிக்  கொண்டாடி மகிழ்ந்திருந்தார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்த தருணம் அது. எதிரியை வெல்வது என்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். ஆனால் அடிமைப்பட்டுக்கிடந்தவன் தன்னை  அடிமைப்படுத்தியவனை அவனது இடத்தில் வைத்து வைத்துச்  சூடு போடுவது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு கொண்டாட்டத்தைத்  தரும் தருணமது. 

1990 செப்டம்பர் முதல் 2001 நவம்பர் வரை இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டே டெஸ்ட் தொடர்களில் மட்டுமே மோதின. 1993க்கு பிறகுஎட்டு ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இங்கிலாந்து. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஏழு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வந்திருந்தது. முன்னதாக 2000த்தின் இறுதியிலும், 2001ன் தொடக்கத்திலும் முறையே பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இங்கிலாந்து அணி. அப்போதைய பாகிஸ்தான் அணியும் இலங்கை அணியும் மிகவும் வலுவானவை. 

நாசர் உசேன்

90 களின் இறுதியில்  தோல்விகளால் துவண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு நாசர் ஹுசைன் கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார். அவரது தலைமையில் பாகிஸ்தானையும், இலங்கையும் வென்றது இங்கிலாந்து அணி. பாக் மற்றும் இலங்கை அணிகள் அதிர்ச்சியடைந்தன. இங்கிலாந்தை எல்லோரும் மீண்டும் நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். இந்தச் சமயத்தில் ஆஷஸில் படுதோல்வி அடைத்துவிட்டு இந்தியா வந்தது இங்கிலாந்து அணி. அப்போது இந்தியாவும் வலுவான அணியாக விளங்கியது. இந்தத் தொடர் மிகவும் சவாலாகவே இருக்கும் என கணித்தார்கள் கிரிக்கெட் அனலிஸ்டுகள். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வென்றது இந்திய அணி. 

டெஸ்ட் தொடர் முடிந்தது ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமானது.  அந்தக்  காலக்கட்டங்களில் ஒருநாள் போட்டிகளில் பலவீனமான அணியாக இருந்தது இங்கிலாந்து. 1998 முதல் 2001 வரை நான்கு ஆண்டுகளில் விளையாடிய 15 ஒருநாள் தொடர்களில் 12ல்  இங்கிலாந்து தோல்வியைத் தழுவியிருந்தது. வென்ற மூன்று தொடர்களில் இரண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரானது. மற்றொன்று வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, இங்கிலாந்து அணிகள் மோதிய முத்தரப்புத்  தரப்பு தொடரில் இறுதிப் போட்டியில்  ஜிம்பாப்வே  அணியை வீழ்த்தி சாம்பியனானதே!  இதைத்தவிர அந்த நான்கு ஆண்டுகளில் இங்கிலாந்து எதையும் சாதித்து விடவில்லை. 

இந்தியாவும் கிட்டத்தட்ட இங்கிலாந்தைப் போல பலவீனமான அணியாகவே விளங்கியது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு  இடையேயான முத்தரப்பு கோப்பை , ஆசிய கோப்பை, ஐசிசி நாக் அவுட் டிராபி, இந்தியா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு    இடையேயான முத்தரப்பு கோப்பை, ஆஸ்திரேலிய தொடர், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபேவே அணிகளுக்கு இடையேயான முத்தரப்புத் தொடர், இந்தியா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்புத் தொடர், இந்தியா கென்யா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையான முத்தரப்புத் தொடர் என வரிசையாகத் தோற்றது. 

 2000 மார்ச் முதல் 2001 இறுதிவரை விளையாடிய ஒருநாள் தொடர்களில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் மட்டுமே வென்றிருந்தது. மேலே குறிப்பிட்டிருந்த தொடர்களில் ஐசிசி நாக் அவுட் டிராபி முதல் இந்தியா கென்யா மற்றும் தென் ஆப்பிரிக்க இடையிலான முத்தரப்புத் தொடர் வரை ஆறு முறையும் தொடர்ச்சியாகக் கோப்பையை யாருக்கு என நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இப்படியாக ஃபைனல் அலர்ஜியால் இந்தியா அவதிப்பட்டிருந்த சமயத்தில்தான் இங்கிலாந்து தொடர் ஆரம்பித்தது. 

முதல் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. மூன்றாவது போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நான்காவது போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. ஏழு போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என இந்தியா முன்னிலையில் இருந்தபோது நிச்சயமாக நீண்ட நாட்கள் கழித்து இந்தியா கோப்பையை ஜெயிக்கப்போகிறது என மகிழ்ச்சியில் இருந்தான் இந்திய  அணியின் ரசிகன். 

சச்சின் மற்றும் கங்குலி

ஆறாவது ஒருநாள் போட்டி டெல்லியில் நடந்தது. நிக் நைட்டின் அபாரமான சதம் மற்றும் பிளிண்டாப்பின் அதிரடி அரை சதத்தின் உதவியோடு இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 272 ரன்களை நிர்ணயித்தது நாசர் உசேன் அணி. இந்திய அணி விளையாடிய போது கங்குலியைத் தவிர வேறு யாரும் ஒழுங்காக விளையாடவில்லை. கங்குலி 74 ரன்களில் அவுட்ஆனார் . அப்போது இந்திய அணிக்கு 59 பந்துகளில் 61 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தன. அகர்கர் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார் எனினும் இந்தியாவால் 269 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. 

ஏழாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம். இங்கிலாந்துக்கும்தான். இந்திய அணியின் பைனல் அலர்ஜியால் ரசிகர்களுக்கு சற்றே நம்பிக்கை குறைந்திருந்தது. மும்பை வான்கடேவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. டிரெஸ்கோதிக் 95 ரன்கள் எடுத்தார். பிளிண்டாப் 50 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். கங்குலி கோப்பையைத் தூக்குவதற்கு 255 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியிலும் கங்குலி மட்டுமே தனி ஒருவனாக போராடினார். அவர் 99 பந்துகளில் நான்கு பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் விளாசி 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 79 பந்துகளில்  65 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைமை. கையில் ஆறு விக்கெட்டுகள் இருந்தன.

 கைஃபை 20 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் பிளிண்டாப். ரசிகர்களுக்கு டென்ஷன் எகிறியது. அஜய் ராத்ரா எட்டு ரன்களில் திருப்திப்பட்டார். முந்தைய போட்டியில் வெளுத்துக் கட்டிய அகர்கர் டக் அவுட் ஆனார். இன்னொரு முனையில் ஹேமங் பதானி மட்டும் போராடிக்கொண்டிருந்தார். 13 பந்தில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்பஜனை அவுட் செய்தார் பிளிண்டாப். 

49வது ஓவரில் ஏழு ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. இந்தியாவுக்காக பதானியும் கும்பிளேவும் களத்தில் இருந்தனர். பிளிண்டாப் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள், இரண்டாவது பந்தில் ஒரு ரன், மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் கிடைத்தன. கடைசி மூன்று பந்தில் ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பதானி பேட்டிங் செய்யும் முனையில் இருந்தார். 

இந்திய ரசிகர்களுக்கு வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது. இறுதி ஓவரின் நான்காவது பந்தில் கும்பிளேவை அட்டகாசமாக ரன் அவுட் செய்தார் பிளிண்டாப். கடைசி விக்கெட்டாக களமிறங்கினார் ஸ்ரீநாத். அவரது விக்கெட்டை அலேக்காக தகர்த்தார் பிளிண்டாப். இந்தியாவின் கதை முடிந்தது. பிளிண்டாப் ஜெர்சியை கழட்டிக்கொண்டு மைதானம் முழுவதும் சுற்றினார். மீண்டுமொரு முறை கோப்பை யாருக்கு என முடிவு செய்யும் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு பிளின்டாபின் செய்கை கடும் எரிச்சலைத் தந்தது. நீண்ட நாட்கள் கழித்து ஒருநாள் தொடரை இழக்காததாலும், டெஸ்ட் தொடர் தோல்விக்கு பழிவாங்கும் விதமாக ஒருநாள் தொடரை இந்திய மண்ணில் டிரா செய்ததாலும் சந்தோஷத்தில் மிதந்தது இங்கிலாந்து பட்டாளம். இவைதான் நாட்வெஸ்ட் சீரிஸுக்கு முந்தைய பிளாஷ்பேக். 

2002 பிப்ரவரி 3ஆம் தேதி ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போடுவதற்கு இந்தியாவுக்கு விரைவிலேயே வாய்ப்பு கிடைத்தது. 2002 ஜூனில் இந்தியா இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதலில் இந்தியா இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையிலான முத்தொடரும் அதன் பின்னதாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடக்கவிருந்தது. 

நாசர் உசேன் தலைமையில் வலுவான அணியாக இங்கிலாந்து உருவெடுக்க ஆரம்பித்திருந்தது, இலங்கையோ கெத்து பார்மில் இருந்தது. இந்தியா இங்கிலாந்து மண்ணில் அசிங்கப்பட்டு திரும்பவரும் என்றே அத்தனை பேரும் ஆருடம் சொன்னார்கள். முத்தரப்புத் தொடர் துவங்கியது. ஒவ்வொரு அணியும் மற்ற இரண்டு அணிகளுடன் மூன்று முறை மோதவேண்டும் என்பது விதி. புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்கள் பிடிப்பவர்கள் இறுதிப்போட்டியில் ஆட முடியும். புள்ளிகள் அடிப்படையில் இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.

2002, ஜூலை 13 ஆம் தேதி  லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி நடந்தது. செவ்வாய்க்கிழமை மேட்ச். அப்போதெல்லாம் மொபைலில் ஸ்கோர் வராது. மேட்ச் பார்க்க வேண்டும் என்றால் டிவியில் தான் பார்க்க முடியும். ரேடியோ மூலம் ஸ்கோர் வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம் என்பது தான் நிலைமை. கிரிக்கெட்டை உயிர்மூச்சாக கருதும் வெறித்தனமான ரசிகர்கள் இந்தியாவில் இருந்தார்கள். பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவலகங்களில் கட் அடித்து விட்டு மேட்ச் பார்த்தவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம். அப்படித்தான் நானும் கட் அடித்துவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டு மணிக்கெல்லாம் டிவி முன் அமர்ந்தேன். இந்த முறையாவது இறுதிப்போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று பிரார்த்தனைகள் தொடங்கின.

இங்கிலாந்து அணிக்கு அப்போது நாசர் உசேன் கேப்டன். அந்த அணியில் டிரஸ்கொதிக், நைட், பிளிண்டாப், மைக்கேல் வான், காலிங்வுட், இரானி, ஸ்டூவர்ட்,ஜைல்ஸ் என நட்சத்திர வீரர்கள் நிறைந்திருந்தார்கள். இந்திய அணியில் சேவாக், கங்குலி, சச்சின், டிராவிட், யுவராஜ், கைஃப், மோங்கியா, ஹர்பஜன், கும்ளே, ஜாகீர், நெஹ்ரா இருந்தனர். டாஸ் வென்ற உசைன் சிரித்துக் கொண்டே பேட்டிங்கை தேர்ந்தெடுத்தனர். "நாம்மாளுக சேஸிங் லட்சணம் தெரியும்". "சச்சின் அவுட்ட்டானா  விக்கெட்டை குடுத்துட்டு வந்துருவானுங்க", "ஜெயிக்கிற மாதிரி போக்குகாட்டிட்டு கடைசில வழக்கம் போல தோத்துருவானுங்க" என டாஸ் போட்ட பிறகு இந்திய ரசிகர்ளிடம் இருந்து கமென்ட்டுகள் தெறித்தன.

முதல் ஓவரை நெஹ்ரா வீசினார். முதல் பந்தே வைடு. அதைத் தொடர்ந்து நோ பால். முதல் ஓவரில் எட்டு ரன்கள் வந்தது. தனது இரண்டாவது ஓவரிலும் நெஹ்ரா சொதப்பினார். எட்டாவது ஓவரில் ஜாகீர் கான் பந்தில் வீழ்ந்தார் நைட். அப்போது களம்புகுந்த நாசர் உசேன் டிரெஸ்கொதிக்குடன் இணைந்து கங்குலிக்கு தலைவலியைத் தந்தார். 

ட்ரெஸ்கோதிக்

இந்த இருவரும் இந்திய பவுலர்களை கதற வைத்தனர். ஜாகீர், நெஹ்ரா, கும்ளே, ஹர்பஜன், கங்குலி, சேவாக், யுவராஜ் என யார் வீசினாலும் ரன்கள் வந்து கொண்டே இருந்தது. ஸ்கோர் விர்ரென எகிறியதில் வெறும் 32 ஓவர்களில் 200 ரன்களைத் தொட்டது இங்கிலாந்து அணி. 37வது ஓவரில் டிரெஸ்கோதிக் 109 ரன்களில் அவுட் ஆனார். ஸ்கோர் 227/2

 அதன் பின்னர் பிளிண்டாப் ஹுஸைனுடன் இணைந்து ரன்கள் சேர்த்தார்.  45 வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தனது முதல் சதத்தை நிறைவு செய்தார் நாசர் உசேன். சதமடித்த பிறகு அவர் ஆக்ரோஷமாக தனது ஜெர்சியில் உள்ள மூன்று எனும் எண்ணை காண்பித்து இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றினார். 1989லிருந்து இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் ஆடும் நாசர் உசேனுக்கு இது தான் முதலும் கடைசியுமான சதம் என்பது குறிப்பிடத்தக்கது. பிளிண்டாப் 32 பந்தில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிந்தாலும் நாசர் உசேன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்திருந்தார். நாசர் உசேனின் அட்டகாசமான கேப்டன் இன்னிங்சால் இங்கிலாந்து 325 ரன்கள் குவித்தது. 

 இந்தியா கோப்பையை வெல்ல 326 ரன்கள் என்பது இலக்கு. இப்போதெல்லாம் எளிதாக ஒருநாள் போட்டிகளில் நானூறு ரன்களைக் கூடத் தொடுகிறார்கள். அதைச் சேசிங்கும் செய்கிறார்கள். ஆனால் 2002ல் நிலைமை அப்படி கிடையாது. அப்போது 270 ரன்களை சேசிங் செய்வதே கடினமான காரியம். இங்கிலாந்து 325 ரன்களை குவித்ததும் இடிந்து  போய் உட்கார்ந்தனர் ரசிகர்கள். அந்தப் போட்டிக்கு முன்பு வரை இந்தியா வெறும் நான்கு முறை மட்டுமே 300க்கு மேற்பட்ட இலக்கை இலக்கை சேசிங் செய்திருந்தது. இங்கிலாந்து அணி ஒரே ஒரு முறை மட்டுமே முதல் இன்னிங்சில் முன்னூறு ரன்களுக்கு மேல் எடுத்தும் தோல்வியைத் தழுவியது.

இந்தப் புள்ளிவிபரங்களை எல்லாமே டிவியில் பார்த்தபோது நொறுங்கிப்போனார்கள் இந்திய ரசிகர்கள். ஏற்கனவே ஃபைனல் அலர்ஜி வேறு இருந்ததால் இந்தியா வெற்றி பெறும் என யாருக்கும் நம்பிக்கையே இல்லை. ஆனால் இந்தியா வெற்றிகரமாக இலக்கை கடந்தது. அதன் பின்னர் இந்த 15 ஆண்டுகளில் 325 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை வெறும் ஆறு முறை மட்டுமே இந்தியாவால் சேஸிங் செய்ய முடிந்திருக்கிறது. அப்படியானால் இது எப்படிப்பட்ட மகத்தான சேசிங் என்பதை உணர முடிகிறதா? 

உலகத் தரத்திலான அந்த சேசிங் நடந்து இன்றோடு 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் இன்னமும் அந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்துக்குள் உணர்வுப்பூர்வமாக பொதிந்திருக்கிறது. யூடியூபில் மேட்சை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, மனதுக்குள் பிளேபேக் செய்ய முடியும். எனினும் அப்போது மேட்ச் பார்க்கத் தவறியவர்களுக்காக போட்டியின் ஹைலைட்ஸ் இங்கே

 

 

எப்படி நடந்து அந்த 'வாவ்' சேசிங்?

சேவாக்கும் கங்குலியும் தொடக்க வீரராக களமிறங்கினார்கள். சேவாக் பேட்டிங் முனையில் இருக்கும்போதே முதல் ஓவரை மெய்டனாக வீசினார் டேரன் கோ. இப்போது மீதமுள்ள  49 ஓவரில் 325 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலை.அலெக்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கைத் துவங்கினார் சேவாக். இந்த முறை அதிரடி பாணி ஆட்டத்துக்கு பொறுப்பெடுத்துக் கொண்டார் கங்குலி. பவுண்டரிகளாக விளாசினார். நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் கங்குலி. அதன் பின்னர் சராசரியாக  ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பந்து எல்லைக்கோட்டைத் தொட்டது. 

எட்டு ஓவர்கள் முடிவில் இந்தியா 50 ரன்களை கடந்தது. பத்தாவது ஓவரை பிளிண்டாப் வீச வந்தார். வான்கடே சம்பவத்தால் கடுப்பில் இருந்த கங்குலி பிளிண்டாப் பந்தை வெளுத்துக் கட்டினார். அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசினார். 12 வது ஓவரை பிளிண்டாப் வீசியபோது மீண்டும் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.கங்குலியின் அதிரடியில் எனெர்ஜி ஏற்றிக்கொண்ட சேவாக் 13வது ஓவரை வீசிய இரானியின் பந்துகளை பிரித்து மேய்ந்தார். அந்த ஓவரில் மட்டும் ஹாட்ரிக் பவுண்டரிகள் உட்பட நான்கு பவுண்டரியுடன் 16 ரன்களை எடுத்தார். 15வது ஓவரை மீண்டும் பிளிண்டாப் வீச ஒரு பவுண்டரி அடித்தார் கங்குலி. இந்தியாவின் ஸ்கோர் நூறைக் கடந்தது. 

விக்கெட் விழாமல் நூறு ரன்கள் வந்ததால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால் அடுத்த ஓவரிலேயே அலெக்ஸ் டியூடர் கங்குலியின் விக்கெட்டை எடுத்தார். சற்றே மெதுவாக வீசப்பட்ட பந்தை கங்குலி கணிக்கத் தவறியதில் பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. 43 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 60 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் கங்குலி.

அடுத்த ஓவரை வீச சுழற்பந்து வீச்சாளர் ஜைல்ஸை அழைத்தார் நாசர் உசேன். இதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. சேவாக்கை அட்டகாசமான ஒரு லெக் ஸ்பின் பந்தில் வீழ்த்தினார் ஜைல்ஸ்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததில் ரசிகர்களின் கண்களில் கலவரம் தெரிந்தது. மோங்கியாவுடன் டெண்டுல்கர் இணைந்து அணியை மீட்பார் என நம்பிக்கை இருந்தது. இரண்டே ஓவர்கள் இடைவெளியில் இராணியின் பந்தில் இன்னுமொரு விக்கெட் விழுந்தது. இம்முறை பெவிலியன் திரும்பியவர் மோங்கியா. 

இதையடுத்து  சச்சினுடன் டிராவிட் இணைந்தார். இந்த ஜோடி 11 பந்துகளுக்கு மட்டுமே தங்கியது. இராணி தனது அடுத்த ஓவரில் எளிதாக டிராவிட் விக்கெட்டை எடுத்தார். டிராவிட் ஆடிய ஷாட்  மோசமானதாக இருந்தது. சச்சினுடன் இப்போது ஜோடி போட்டவர் யுவராஜ் சிங். இந்த ஜோடி மூன்று ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது. ஜைல்ஸ் வீசிய புத்திசாலித்தனமான பந்தொன்றில் கிரீஸை விட்டு இறங்கி வந்து அடிக்க ஆசைப்பட்டு முயன்று விக்கெட்டை இழந்தார் சச்சின். டெண்டுல்கர் போல்டு ஆவது மிகவும் அரிதான நிகழ்வு. மிகச்சரியாக பந்தை கணிக்கக் கூடிய சச்சினையே ஏமாற்றினார் ஜைல்ஸ். அது மிகச்சிறப்பான விக்கெட். 

24 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஐந்து விக்கெட் விழுந்திருந்தது. இன்னும்  26 ஓவர்களில் 179 ரன்களை எடுக்க வேண்டும். களத்தில் இருப்பதோ யுவராஜ் - கைப் என இரண்டே பேட்ஸ்மேன்கள். இதில் ஒருவருக்கு கூட ஒருநாள் போட்டியில் சதமடித்த அனுபவம் இல்லை. இவர்கள் இருவரை விட்டால் பின்னே வரக்கூடியவர்கள் ஹர்பஜன், கும்ளே போன்றவர்கள்தான். இந்தியா இனி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என ஆருடம் சொல்லிவிட்டு டிவியை ஆஃப் செய்துவிட்டு எழுந்தவர்களின் எண்ணிக்கை மீதமிருந்த மேட்ச்சை  பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கக்கூடும். 

"வழக்கம்போல சொதப்பிட்டாய்ங்க" என்றபடியே பலரும் அவரவரது வேலையை பார்க்கக் கிளம்பினார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு மிகச்சிறப்பான மேட்சை மிஸ் செய்யப்போகிறோம் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இந்த முத்தரப்பு தொடரில் மற்ற போட்டிகளில் யுவராஜ் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததால் சிறிதாக நம்பிக்கை இருந்தது.

யுவராஜ் மற்றும் கைப்

இன்னும் ஒரு விக்கெட் போனா டிவியை ஆஃப் செய்துவிடலாம் எனும் நினைப்பில் இருந்த ரசிகர்கள் கணிசமானவர்கள். இங்கிலாந்து எளிதாக மேட்சை ஜெயிக்கப் போகிறோம் என நினைத்தது. நூறு ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் இந்தியா தோற்றுப்போகும் என ஆளாளுக்கு கிரிக்கெட் ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்கள்.  யுவராஜும் கைஃபும் நிதானமாக ஆடத் தொடங்கினார்கள்; விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள்; அதே சமயம் பிரஷரை இங்கிலாந்து பக்கம் திருப்ப வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள்.

அடுத்த நான்கு ஓவரில் பத்தொன்பது ரன்கள் வந்தன. 29 வது ஓவரை இராணி வீசியபோது அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார் யுவி. கைஃப் மறுமுனையில் மிகவும் பொறுமையாக ஆடினார். 35வது ஓவரில் ஸ்கோர் 208/5.  எங்களோடு மேட்ச் பார்த்துக்கொண்டிருந்து சச்சின் அவுட் ஆன பிறகு எழுந்து போன ஒரு நபர் மீண்டும் தண்ணீர் குடிப்பதற்காக அங்கே வந்தார். ஸ்கோரை பார்த்தவுடன் " இன்னுமா இவனுக விளையாடிட்டு இருக்கானுங்க. தேவையத்த வேலைக தம்பிகளா. ஒழுங்கா போய் நைட்டு சாப்பிட்டு படுத்து தூங்குங்க " என்றார். எங்களுக்கு யுவராஜ் - கைப் என இரண்டு இளங்காளைகளின் மீதும் நம்பிக்கை இருந்தது 

38வது ஓவரை பிளிண்டாப் வீசியபோது  ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார் யுவி. அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. அலெக்ஸ் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 12 ரன்கள் எடுத்தார் கைஃப். இவர்கள் இருவரும் கடைசி வரை நின்றால் நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என நம்பிக்கை வந்தது. 

40 ஓவர்கள் முடிவில் இந்தியா 257/5 என இருந்தது. 60 பந்துகளில் 69 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலை.  "ச்ச்ச விக்கெட் இல்ல. இருந்திருந்தா கன்பார்ம் இந்தியா ஜெயிக்க வாய்ப்பிருக்கு" என கமென்ட்ஸ் பறந்தது. "இவனுங்க இப்பிடித்தான் ஆசை காட்டுவானுங்க கடைசி ஓவர்களில் சொதப்பிருவானுக" என்றது இன்னொரு குரல். 41 மற்றும் 42 வது ஓவர்களில் தலா ஒரு பவுண்டரி அடித்தார் யுவி.  

ரெகுலர் பந்துவீச்சாளர்கள் இந்த இருவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாததால் மாற்றி யோசித்தார் நாசர் உசேன். உடனடியாக காலிங்வுட்டை  அழைத்தார். அவருக்கு இந்த மேட்சில் இது தான் முதல் ஓவர். அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த யுவராஜை காலி செய்தார் காலிங்வுட். 63 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார் யுவி. அந்த மேட்ச் ஆடும் போது யுவராஜுக்கு வயது வெறும் இருபது தான். 

யுவராஜ் மற்றும் கைப்

சீனியர்கள் சொதப்பிவிட்டார்கள். இவ்வளவு பெரிய இலக்கை அதுவும் இறுதிப்போட்டியில் துரத்த முயன்றதற்காக யுவராஜுக்கு லைக்ஸ் குவிந்தன. அந்த மேட்சில் எக்கச்சக்க பேர் யுவராஜ் ரசிகர்கள் ஆனார்கள். அந்த மேட்ச் முதல் இப்போது வரை யுவராஜ் இங்கிலாந்துடன் ஆடுவது என்றால் குஷி ஆகிவிடுவார். டி20 உலக கோப்பையில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸர்கள் வெளுத்தது முதல் இந்தாண்டின் துவக்கத்தில் ஒருநாள் போட்டியொன்றில் 25/3 என இருந்த இந்திய அணியை தோனியுடன் இணைந்து விளாசி ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்ச ரன்னை குவித்தது வரை எதையும் மறந்துவிட முடியாது. 

அன்றைய தினம் யுவராஜ் அவுட் ஆன பிறகு  இந்தியாவின் வெற்றிக்குத் தேவைப்பட்டது 50 பந்தில் 59 ரன்கள் மட்டுமே. இப்போது களத்தில் கைஃபும் ஹர்பஜனும் இணைந்தனர். காலிங்வுட் வீசிய பிறகு 43வது  ஓவரை இராணி வீசினார். 'யுவராஜ் போனால் என்ன நான் இருக்கிறேன்' என நம்பிக்கை தரும் விதமாக ஒரு சிக்ஸ்ர் விளாசினார் கைஃப். அடுத்த ஓவரில் ஹர்பஜன் ஒரு சிக்ஸ் வைத்தார்.

30 பந்துகளில் 31 ரன்கள் தேவை என இலக்கு வந்தபோது பிளிண்டாப் பந்து வீச வந்தார். 46 வது ஓவரில் ஆறு ரன்கள் வந்தது. அடுத்த ஓவரை டேரன் கோ வீசினார். கைஃப் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். கடைசி மூன்று ஓவர்களில் 14 ரன்கள் எடுத்தார் வெற்றி என்பது நிலைமை. 48வது ஓவரை வீசிய பிளிண்டாப் ஹர்பஜன், கும்ளே என இரண்டு பேரை வெளியேற்றினார். F*** *** என ஒரு கெட்ட வார்தையைச் சொல்லி அந்த விக்கெட்டை கொண்டாடினார். ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. திடீரென இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியது. இந்தப் போட்டி ஆறு மாதங்களுக்கு முன்னதாக வான்கடேவில் நடந்த மேட்சை நினைவுபடுத்தியது. கடைசி கட்ட ஓவர்களில் பிளின்டாப் மீண்டும் மிகச்சிறந்த பவுலராக மிளிர்ந்தார். கைஃப் பதற்றப்படவில்லை. 

Indian team

12 பந்தில் 11 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் கைஃப் - ஜாகீர் இணை சேர்ந்தது. 49வது ஓவரில் டேரன் வீசிய முதல் பந்தில் ஜாகீர் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் கைஃப் இரண்டு ரன்கள் எடுத்தார். மூன்றாவது பந்தில் ஒரு ரன் வந்தது. நான்காவது பந்தில் ஜாகீர் ரன் எதுவும் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் தட்டுதடுமாறி ஒரு ரன் எடுத்தார். இப்போது  கைஃபிடம் ஸ்ட்ரைக் வந்தது. ஏழு பந்தில் ஆறு ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமை. இந்தியாவின் கையில் இரண்டே விக்கெட்டுகள் இருந்தன. கடைசி ஓவரை பிளிண்டாப் வீசுவார் என்பதால் இந்த பந்தில் ஒரு ரன் எடுத்து மீண்டும் ஸ்டரைக்குக்கு கைஃப் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அட்டகாசமான ஒரு பவுண்டரி அடித்தார் முகமது கைஃப் 

இப்போது ஆறு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை. பிளிண்டாப்  பந்துவீச வந்ததில் ரசிகர்கள் பயந்தனர். ஏனெனில் அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்தது ஜாகீர். ஒரு ரன் வித்தியாசத்தில்  இந்தியா வெற்றியைத் தோற்றுவிடுமோ என சந்தேகம் இருந்தது. ரசிகர்களின் பிபியை எகிறவைக்கும் விதமாக கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஜாகீர் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஸ்டம்புகளை மறைத்துக் கொண்டு ஜாகீர் நின்றார்.

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட ஒரு பந்தை ஜாகீர் எப்படியாவது அடித்தால் போதும் என்ற மனநிலையில் தட்டிவிட்டு ஓடினார். அந்த பந்தில் ரன் அவுட் வாய்ப்பை மிஸ் செய்தது இங்கிலாந்து. அந்த கணத்தில் சுறுசுறுப்பாக ஓடி இரண்டு ரன்களை  எடுத்தார் ஜாகீர்கான். ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சியில் எப்படி வெற்றியைக் கொண்டாடுவது எனத் தெரியாமல் முழித்தபோது, புகழ்பெற்ற லார்ட்ஸ் பால்கனியில் இருந்து பனியனை கழற்றிச் சுற்றியவாறு பிளிண்டாப் சொல்லிய அதே கெட்ட வார்தையைச் சொல்லி பதிலடியைத் தந்தார் கங்குலி. இந்திய அணியில் இருந்து  இப்படியொரு ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை முதன்முதலாக அனுபவித்த இந்திய ரசிகர்களும் ஆக்ரோஷமாகவே அந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். 

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சேஸிங்கை செய்து முடித்தது இந்திய அணி. 72 பந்துகளில் 85 ரன்கள் எடுத்த அந்த ஒரே ஒரு போட்டி போதும் தனது பேரனிடம் கூட அந்த வீர வரலாற்றைச் சொல்வார் முகமது கைஃப். சீனியர் வீரர்கள் சொதப்பிய பிறகு 20 வயது யுவராஜும், 21 வயது கைஃபும் நாங்கள் இருக்கிறோம் என ரசிகர்களுக்கு தெம்பளித்த நிகழ்வுக்கு பிறகு இந்தியா பல சாதனைகளை படைக்க ஆரம்பித்தது. அதில் ஒன்று தான் 2003 உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் வரை இந்தியா வந்தது. 

பின்னாளில்  பாய்காட் கங்குலியிடம் இப்படி ஒரு கேள்வியை வைத்தார். "கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸில் சட்டையை கழற்றி வீசிய அனுபவத்தை பற்றி கண்டிப்பாக ஏதாவது சொல்லுங்கள். அது ஒரு கெட்ட விஷயம் தானே" என்றார் . அதற்கு பதிலளித்த கங்குலி "உங்கள் வீரர் ஒருவரும் மும்பையில் இப்படிச் செய்தாரே" என்றார். "ஆமாம் ஆனால் லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா அல்லவா" என இன்னொரு கேள்வியைக் கேட்டார் பாய்காட். 

"லார்ட்ஸ் உங்களுக்கு மெக்காவாக இருக்கலாம் எங்களுக்கு வான்கடே தான் மெக்கா" என பதிலடி தந்தார்  சவுரவ் கங்குலி. 

அது கெத்து பதில்.. அது கெத்து வெற்றி !

http://www.vikatan.com/news/sports/95321-indias-best-chasing-innings-in-the-history.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.