Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்?

Featured Replies

ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்? நிலாந்தன்:-

is-true.jpg
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்? என்பது அக் கூட்டத்தின் தலைப்பு. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏற்கெனவே மன்னாரில் ‘தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்?’ என்ற தலைப்பிலும் வவுனியாவில் ‘ தடுமாறும் தலைமைகளால் தளர்வுறுகிறாரர்களா தமிழ் மக்கள்? – அடுத்தது என்ன?’ என்ற தலைப்பிலும் இரு கூட்டங்களை மேற்படி அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது. தலைவர்கள் தடம் மாறிய பின்னரும் தமிழ் மக்கள் தடுமாறவில்லை என்ற ஓர் எடுகோளின் அடிப்படையில் அவ்வாறு தடம் மாறாத அல்லது தடுமாறாத தமிழ் மக்களுக்கு தடம் மாறிய தலைவர்கள் தலைமை தாங்கலாமா? என்பதேகடந்த வாரம் நடந்த கூட்டத்தின் தொனிப் பொருளாகும். அதன்படி தடம் மாறாத அல்லது தடுமாறாத ஒரு தலைமையை உருவாக்குவது அந்தத் தலைமையின் கீழ் ஒரு மாற்று அணியை உருவாக்குவது என்றும் மேற்படி தலைப்பை விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் தடம் மாறாத வாக்காளர்களில் குறைந்த எண்ணிக்கையினரே அக் கூட்டத்தில் பங்குபற்றினார்கள். கூடுதலான பட்சம் அரசியல்வாதிகளும், கருத்துருவாக்கிகளும் ஏற்கெனவே வழமையாக அரசியல் விவாதங்களில் ஈடுபாடு காட்டும் பிரிவினரும் அதில் பங்குபற்றினார்கள். முதலில் அரசியல்விமர்சகர்கள் உரையாற்றினார்கள். பின்னர் அரசியல்வாதிகள் உரையாற்றினார்கள். இடையிடை சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் உரையாற்றினார்கள். உரைகளில் பெரும்பாலானவை ஒரு மாற்று அணிக்கான தேவையை வலியுறுத்துபவைகளாக அமைந்திருந்தன.

சில உணர்ச்சிவசப்பட்ட பொது மக்கள் தமிழரசுக் கட்சிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்தார்கள். சில அரசியல்வாதிகளும், விமர்சகர்களும், கருத்துருவாக்கிகளும் விக்கினேஸ்வரன் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்கக்கூடியவர் என்ற தொனி வரக்கூடியதாக கருத்துத் தெரிவித்தார்கள். சில அரசியல்வாதிகளும்,விமர்சகர்களும் ஒரு தனிநபரில் அவ்வாறு நம்பிக்கைகளை முதலீடு செய்வது சரியா என்று கேள்வி எழுப்பினர். கூட்டத்தில் கருத்துரைத்த ஒரு பொது மகன் ‘விக்கினேஸ்வரன் இடையில் திடீரென்று கையை விரித்தால் மாற்று அணி என்னவாகும்?’ என்று கேள்வி எழுப்பினார். புளட் இயக்கத்தைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினரான லிங்கநாதன் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சி ஒன்றை சுட்டிக்காட்டினார். அக்காட்சி வருமாறு.

கவுண்டமணி தனக்கு முன்னால் இருந்தவர்களை நோக்கி பின்வருமாறு கேட்கிறார். ‘கற்பில் சிறந்த பத்தினிகளின் பெயர்களைச் சொல்லுங்கள்’ என்று. அவர்கள் கண்ணகி, மாதவி என்று காப்பிய நாயகிகளின் பெயர்களைச் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட கவுண்டமணி அவர்களை நோக்கி ஆத்திரத்தோடு கேட்கிறார் ‘கற்பிற் சிறந்தவள் யார் என்று கேட்கும் பொழுது உங்களுக்கு புராண நாயகிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்களா?உங்களுடைய வீட்டில் இருக்கும் உங்களுடைய மனைவி, அம்மா, அக்கா போன்ற உறவுகள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? என்று.

இக் கதையைச் சொன்ன லிங்கநாதன் அரங்கில் அமர்ந்திருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்து பின்வரும் தொனிப்படக் கேட்டார். ‘நீங்கள் எல்லாருமே கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு மேல் போராட்டத்திலும், மிதவாத அரசியலிலும் ஈடுபட்டு வருபவர்கள். உங்களில் யாராவது ஒருவர் ஏன் மாற்று அணிக்கு தலைமை தாங்கக் கூடாது?’ என்று. இக்கேள்வி அந்த இடத்தில் மட்டுமல்ல தற்பொழுது ஒரு மாற்று அணியை நோக்கி உரையாடப்படும் எல்லா இடங்களிலும் கேட்கப்பட வேண்டிய ஒரு கேள்விதான். அதிலும் குறிப்பாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஒரு மாற்று அணிக்கு இப்போதைக்கு தலைமை தாங்க மாட்டார் என்று சில நாட்களுக்கு முன் கூறியிருக்கும் ஒரு பின்னணிக்குள் இக் கேள்வி மேலும் அழுத்தம் பெறுகிறது.

அக் கூட்டத்தில் உரையாற்றிய சுரேஸ் பிரமேச்சந்திரன் ‘ஒரு மாற்று அணியைக் குறித்து போதிய அளவு பேசப்பட்டு விட்டது. அது தொடர்பில் பகிரங்கமாகவும் உரையாடப்பட்டுள்ளது. உட்சந்திப்புக்களிலும் உரையாடப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் காரியமாகவில்லை. எல்லாமே பேச்சளவில் தான் நிற்கின்றன. ஆனால் ஒரு மாற்று அணிக்கான தேவை உச்சமாகக் காணப்படும் ஒரு காலகட்டம் இது’ என்று பேசினார்.

ஒரு மாற்று அணிக்கான பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டிலிருந்து முனைப்பாக இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தோடு அதற்கான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்தன. தமிழ் மக்கள் பேரவையில் புளட் இயக்கம் இணைந்த பொழுது அந்த எதிர்பார்ப்புக்கள் மேலும் பலமடைந்தன.சித்தார்த்தனும் அந்த எதிர்பார்ப்புக்களை ஓரளவிற்கு அனுசரித்து நடந்து கொண்டார்;. கடந்த ஆண்டின் இறுதியளவில் இது குறித்து தன்னுடைய முடிவைத் தெரிவிப்பதாக அவர் ஏனைய கட்சிகளுக்கு கூறியுமிருக்கிறார். ஆனால் இவ்வாண்டின் தொடக்கத்தில் வவுனியாவில் இடம்பெற்ற’ தடுமாறும் தலைமைகளால் தளர்வுறுகிறாரர்களா தமிழ் மக்கள்? – அடுத்தது என்ன?’ என்ற கூட்டத்தின் போது சித்தார்த்தன் ஒரு மாற்று அணியை ஊக்குவிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை. யாப்புருவாக்கச் சூழலில் நாங்களாக அதைக் குழப்பினோம் என்ற பெயர் எங்களுக்கு வரக்கூடாது என்று அவர் உரையாற்றினார். அதாவது யாப்புருவாக்க காலகட்டத்தில் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்தால் அது எதிர்த் தரப்பிற்கே சாதகமாகி விடும். அதோடு யாப்புருவாக்க முயற்சிகளையும் குழப்பி விடும். எனவே இப்போதைக்கு கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியில் வரும் எண்ணம் இல்லை என்ற தொனிப்பட அவர் உரையாற்றினார்.

அவருடைய உரை அங்கு பிரசன்னமாகி இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனை கோபமடையச் செய்தது. அவர் சித்தார்த்தனை நோக்கி பகிரங்கமாகக் கேள்விகளை எழுப்பினார். பங்காளிக் கட்சிகள் ஒரு பொது அரங்கில் பகிரங்கமாக வாக்குவாதப்படும் ஒரு நிலமை தோன்றியது. எனினும் அதற்குப் பின்னரும் ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்கான சந்திப்புக்கள் இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது. இப்பொழுது விக்கினேஸ்வரன் அதற்குரிய காலம் இதுவல்ல என்று கூறியதன் மூலம் ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகள் மேலும் தளர்வடையலாம் என்ற ஓர் அபிப்பிராயம் எழுந்துள்ளது.

விக்கினேஸ்வரனை மையமாக வைத்துக் கொண்டு ஒரு மாற்று அணியை கட்டியெழுப்பலாம் என்று ஏன் எதிர்பார்க்கப்படுகின்றது? ஏனெனில் அவருக்கு மக்கள் அபிமானம் உண்டு. அதனால் ஒரு பலமாக வாக்கு வங்கியை அவர் கொண்டிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பே அதற்குக் காரணம். ஜனவசியமிக்க அவரை மையமாக வைத்துக் கொண்டு ஏனைய கட்சிகளும் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களும் சேர்ந்து ஒரு கூட்டை உருவாக்கும் பொழுது அது ஒப்பீட்டளவில் ஒரு பலமான கூட்டாக அமையும் என்று நம்பப்படுகிறது. இப்படி ஒரு பலமான கூட்டாக தேர்தலை எதிர்கொள்ளும் பொழுது அங்கே வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகமிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் ஒரு மாற்று அணி என்பது வெறுமனே ஒரு தேர்தல் கூட்டு மட்டும்தானா?

நிச்சயமாக இல்லை. ஒரு மாற்று அணி என்பது ஒரு தேர்தல் கூட்டு மட்டுமல்ல. அது அதை விட ஆழமானது. அது ஒரு புதிய அரசியல்செயல்வழிக்கான அடித்தளமாகவும் இடை ஊடாட்டத் தளமாகவும் இருக்க வேண்டும். அந்த அரசியல் செயல்வழி குறித்து மிக ஆழமாக உரையாடப்படவும் வேண்டும். எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதைப் போல 2009ற்குப் பின்னரான ஒரு புதிய மக்கள் மைய அரசியலை அந்த மாற்று அணி முன்னெடுக்க வேண்டும். ஒரு பலமான தேர்தல் கூட்டை உருவாக்குவது என்பது ஒரு வெற்றிக்கான உத்தியாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பது என்பது தேர்தல் உத்திகளை விட ஆழமானது. அடிப்படையானது. இவ்வாறான ஒரு புதிய மக்கள் மைய அரசியலைக் குறித்து சரியான தரிசனமும், திடசங்கற்பமும் தியாகசிந்தையும் இருக்குமானால் மாற்று அணி ஒன்றைப் பற்றி யோசிக்கும் தரப்புக்கள் ஒரு தனி நபரின் ஜனவசியத்தில் மட்டும் தங்கியிருக்கத் தேவையில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களை எப்படி ஒரு போராட்ட சக்தியாக மாற்றுவது என்பது பற்றியே கூடுதலாக சிந்திக்க வேண்டும்.

மிகக் குறுகிய காலத்துள் விக்கினேஸ்வரன் மக்களின் அபிமானத்தைப் பெற்றதற்கு காரணம் என்ன? அவருடைய நேர்மை குறித்தும், நீதி குறித்தும் தமிழ் மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே காரணம். அவர் நேர்மையானவர், நீதியானவர் என்று ஏன் தமிழ் மக்கள் நம்புகிறார்கள்? ஏனெனில் அவர் அவருடைய கட்சி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி நடக்க வேண்டும் என்று கூறுவதனால்தான். அவருடைய கட்சி தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவை? அவையாவன. சுயநிர்ணய உரிமையின் பாற்பட்டு தமிழ் மக்களின் கூட்டுரிமையைப் பாதுகாக்கும் விதத்திலான தன்னாட்சிக் கட்டமைப்பு ஒன்றை கொண்டு வருவோம் என்பதுதானே? இதன்படி கூறின் விக்கினேஸ்வரன் தமிழ்த்தேசிய அரசியலை விசுவாசமாக முன்னெடுக்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள் என்று பொருள். அதாவது தமிழ்த் தேசிய உணர்வுகளுக்கு விசுவாசமாகத் தலைமை தாங்கும் எவரையும் தமிழ் மக்கள் தங்கள் தலையில் தூக்கி வைப்பார்கள் என்று பொருள்.

மறைந்த இந்திய எழுத்தாளர் ஜெயக்காந்தன் ஒரு முறை சொல்லியிருந்தார். காந்தியம் எனப்படுவது இந்தியாவைப் பொறுத்தவரை மண்ணில் கலந்திருக்கும் விதையைப் போன்றது. ஒரு மழை பெய்யும் பொழுது அது முளைத்தெழும் என்று. ஜெயக்காந்தன் காந்தியத்திற்கு சொன்ன உதாரணம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தேசியத்திற்கும் பொருந்தும். தமிழ்த்தேசியம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை மண்ணில் கலந்திருக்கும் விதைதான். மழை பொழியும் பொழுது அது துளிர்த்தெழும். ஒரு விக்கினேஸ்வரன் இல்லையென்றாலும் அது வேறொருவரைக் கண்டு பிடிக்கும். அது சில நபர்களில் தங்கியிருப்பதில்லை. கட்சிகளிலோ, இயக்கங்களிலோ தங்கியிருப்பதில்லை. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தன்னாட்சியை தமிழ் மக்கள் அனுபவிக்கும் வரையிலும் அதற்கான தேவையும் இருக்கும்.

எனவே தமிழ் மக்களின் கூட்டுரிமைக்காக விசுவாசமாக செயற்படும் எவரையும் தமிழ் மக்கள் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இது விடயத்தில் அவர்கள் சாதி பார்க்க மாட்டார்கள்,சமயம் பார்க்க மாட்டார்கள்,பிரதேசம் பார்க்க மாட்டார்கள். அந்தத் தலைவர் நேர்மையானவரா? அர்ப்பணிப்பு மிக்கவரா? என்று மட்டுமே பார்ப்பார்கள்;. ஒரு காலம் வவுனியாவிலும், ஏனைய சோதனைச் சாவடியிலும் படைத்தரப்போடு நின்ற இயக்கங்களைக் கூட தமிழ் மக்கள் பின்னாளில் ஏற்றுக் கொண்டார்கள். ஏன் ஏற்றுக்கொண்டார்கள்? அவர்கள் தமிழர்களுக்காக உண்மையாக உழைக்கிறார்கள் என்று நம்பியபடியால்தான். எனவே இந்த இடத்தில் மாற்றுத் தரப்பை நோக்கி சிந்திக்கும் எல்லாரும் லிங்கநாதன் கேட்ட கேள்விக்குப் பதிலைத் தேட வேண்டும்.

ஒரு மாற்று அணிக்கான தேவைகள் விக்னேஸ்வரனோடுதான் உற்பத்தியாகின என்பதல்ல. அவை விக்கினேஸ்வரனுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பிரிந்து சென்ற பொழுதே அது தோன்றி விட்டது. ஓர் அமுக்கக்குழுவாக தமிழ் சிவில் சமூக அமையம் உருவாக்கப்பட்ட பொழுதே அது தோன்றி விட்டது. முன்னாள் மன்னார் ஆயரின் தலைமையில் நிகழ்ந்த ஒரு சந்திப்பில் தமிழ் தேசியப் பேரவை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட பொழுதே அதற்கான தேவை அதிகரித்துக் காணப்பட்டது. அக் கோரிக்கையின் பிரகாரம் சந்திப்புக்களை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பு முதலில் சம்மதித்தது. ஆனால் பிறகெதுவும் நடக்கவில்லை.

அவ்வாறு ஒரு தமிழ்த்தேசியப் பேரவையை உருவாக்கும் முயற்சியில் கூட்டமைப்பு ஒத்துழைத்திருந்தால் தமிழ் மக்கள் பேரவைக்கான ஒரு தேவை எழுந்திருக்காது. தமிழ் மக்கள் பேரவை ஒரு பொது அரங்கு. அதில் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் உண்டு. அது ஒரு முழு அளவிலான கட்சியாக மாறாது என்று தெரிகிறது. எனவே தமிழ் மக்கள் பேரவையின் போதாமைகள் உணரப்பட்ட பொழுது ஒரு மாற்று அணிக்கான தேவைகள் மேலும் அதிகரித்தன. இதில் விக்கினேஸ்வரன் இடையில் வந்தவர்தான். அவருடைய வருகைக்குப் பின் ஒரு மாற்று அணியை நோக்கிய எதிர்பார்ப்புக்கள் அதிகரித்தன. இப்பொழுது அவர் அது உடனடிக்கு சாத்தியமில்லை என்று கூறுகிறார். ஆனால் அதை அவர் மட்டும் தீர்மானிக்க முடியாது. அவரை எதிர்ப்பவர்களும் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் எந்தளவிற்கு அவரை உந்தித் தள்ளுகிறார்களோ அந்தளவிற்கு அவரும் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.

எனவே ஒரு மாற்று அணிக்கான தேவை என்பது ஒரு வரலாற்றுக் கட்டத்தின் தேவையாகும். கடந்த நூற்றாண்டில் அறுபதுகளுக்குப் பின்னரான தமிழ் மிதவாதத்தின் போதாமைகளின் விளைவே ஆயுதப் போராட்டமாகும். ஆயுதப் போராட்டத்தின் தோல்வியின் விளைவே கடந்த எட்டாண்டு கால மிதவாதமாகும். இந்த மிதவாதத்தின் போதாமைகளின் விளைவே ஒரு மாற்று அணிக்கான தேவையாகும். அதை சில தனிநபர்களுக்கு எதிரானதாக வியாக்கியானப்படுத்தத் தேவையில்லை. ஒரு கட்சிக்கு எதிரானதாகவும் விளங்கிக் கொள்ளத் தேவையில்லை.ஒரு மாற்று அணி எனப்படுவது ஒரு கட்சிக்கோ அல்லது சில நபர்களுக்கோ எதிரானது அல்ல. அதை உருவாக்குவதற்கு சில தனிநபர்களில் மட்டும் தங்கியிருக்கத் தேவையில்லை. நேர்மையாகவும், விசுவாசமாகவும் அர்ப்பணிப்போடும் உழைத்தாலே போதும். அப்படி உழைப்பவர்களைதமிழ் மக்கள் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். வரலாறு அவர்களைச் சரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தும். ஏனெனில் வரலாறு வெற்றிடங்களை விடுவதில்லை.

https://globaltamilnews.net/archives/33044

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.