Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதியைப் பிரித்துக் காட்டும் சுடலைகள்

Featured Replies

சாதியைப் பிரித்துக் காட்டும் சுடலைகள்
 

சிவப்பு குறிப்புகள்

சாதி ஆதிக்க சமூகங்களில் ஆதிக்க சாதியினர், பிறப்பினூடாக சிறப்புச் சலுகைகளை கோருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடந்த சாதி மோதல்கள், மரணம் கூட சாதியிலிருந்து தப்பிக் கொள்ள அனுமதிக்காது என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளன. 

மேலும், இறந்தவரை எரிக்கும் இடங்கள் கூட, சாதி ஒடுக்கு முறைக்கான இடமாகியுள்ளதையும் இது காட்டியுள்ளது.

கடந்த வருட இறுதியிலிருந்து, ஒடுக்கப்பட்ட சாதி கிராமங்களினுள் அமைந்த உயர் சாதியினரின் சுடலைகளுக்கு எதிரான கிளர்வுகள் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றன. யுத்தக் காலத்தில், தசாப்தங்களாக என்று கூற முடியாவிடினும், பல வருடங்களாக, இவ்வாறான சுடலைகள் பயன்படுத்தப்படவில்லை. 

இந்தச் சுடலைகளில் சடலங்களை எரிக்க தொடங்கிய முயற்சிகள், 13 மே 20177 அன்று, யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக பல நூறு பேர் பங்கு கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு வழிவகுத்தன.

ஜூலையின் முதல் இரண்டு வார காலத்தின்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. புன்னாலைக்கட்டுவன் வடக்கு - திடற்புலம் கிராமத்தில், உயர் சாதியினர் தமது உரிமையை வலியுறுத்துவதற்காக, அவசரமாக ஓர் உடலை அங்கு எரித்தனர்.

தமது கிராமத்திலிருந்த சுடலையைப் புனரமைப்பு செய்ததை எதிர்த்த கிராமத்தவர்களைக் கைது செய்ததைத் தொடர்ந்து, புத்தூரில் உள்ள கலைமதி கிராமத்தில், தொடர்ச்சியானதொரு சத்தியாக்கிரகம் நடந்து வருகின்றது.

யுத்தத்தின் பின்னரான மீளுறுதிப்படுத்தல்

அநேகமாக தெற்காசியா போன்றே, யாழ்ப்பாண சமூகத்திலும் சாதியானது, ஆதிக்கம் மிக்க சமூகக் கட்டமைப்பாக இருந்தது. மேலும், தனித்துவமான இனத்துவப் பரம்பலும் யாழ்ப்பாணத்தின் சிறு காணி உறவுகளும் ஆதிக்கம் செலுத்தும் வேளாள சாதியினரின் பெரும்பான்மையும், மிகத் தீவிரமான, பலமான சாதிக் கட்டமைப்பின் இயல்பைக் கொண்டிருந்தது.

1960கள் மற்றும் 1970களின் முற்பகுதிகளில், சாதி ஆதிக்கம் மிகுந்த மாவிட்டபுரம் கோவில் உட்பட்ட கோவில்களினுள் அனுமதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் ஆலயப் பிரவேசத்துக்காக சக்திமிக்க இயக்கம் காணப்பட்டது.

இத்தோடு, ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் அவமதிக்கப்பட்ட பொது இடங்களில் - குறிப்பாக தேநீர்க் கடைகளில் - சமமாக நடத்தப்படுதல் என்பதைக் கோரி, உறுதியான போராட்டங்கள் நடந்தன.

கம்யூனிஸ்ட் கட்சியினால் நடத்தப்பட்டதும், பல செயற்பாட்டாளர்களின் உயிர்களைக் காவு கொண்டதுமான இந்தப் போராட்டங்கள், சாதியை ஒழிக்கவில்லை, ஆயினும் இந்தப் போராட்டங்கள், யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்குப் பெரும் அடியாக அமைந்தன.

தமிழ்த் தேசியத்தின் அணிதிரளலால் மற்றும் யுத்தத்தினால் பின்தள்ளப்பட்டிருந்த சாதிப் போராட்டங்கள், சாதி பற்றிய பகிரங்கமாகப் பேசுவதை நிறுத்தி விட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, இராணுவத்தைத் தோற்கடித்தல் என்ற தனது ஒரே இலக்கினால், வெளிப்படையான சாதி அரசியலை ஒடுக்கியது.

மேலும் முற்போக்குச் சிந்தனையுடனிருந்த தமிழ் செயற்பாட்டாளர்களை அது ஒழித்து விட்டதும், ஒடுக்கப்பட்ட சாதி சமுதாயங்களின் அணிதிரளும் ஆற்றலைக் குலைத்து விட்டது.

இவ்வாறு 1960களில் ஊக்கத்துடன் தொடங்கப்பட்ட சாதி ஒழிப்பு இயக்கம், 1980இல் நடுப்பகுதியளவில், முற்றாகச் செயலிழந்துவிட்டது.

யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில், மீள் குடியேற்றம் மற்றும் தமது கிராமங்களில் வாழ மீண்டும் வந்தமை என்பவற்றுடன், சாதி, இரகசியமாக யாழ்ப்பாணத்தில் மீளுறுதிப்படுத்தி  வருகின்றது. சாதி, பகிரங்கமாக பேசப்படாத போதும், சாதியடிப்படையிலான விலக்கல், கோவில்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் இயல்பாகவுள்ளது.

அநேகமாக, காணி இல்லாத நாட்கூலி வேலையில் தங்கியுள்ள வேலையாட்களாக உள்ள ஒடுக்கப்பட்ட சாதிச் சமுதாயங்களின் பொருளாதார நிலையும், சமூக விலக்கி வைத்தலின் இயங்கியலை மேலும் மோசமாக்குகின்றது.

ஒடுக்கப்பட்ட சாதிக் கிராம குறிச்சிகளுக்கு, கடைசியாகவே வீதிகள், மின் விநியோகம், நீர் வழங்கல் என்பன கிடைக்கின்றன. உள்ளுர் அலுவலர்களின் மனோநிலையில், சாதியடிப்படையிலான  விலக்கி வைத்தல் ஊறிக்கிடப்பதே இதன் காரணமாகும்.

மேலும், ஆகவும் கூடியளவில் ஏழைகளாகவுள்ள ஒடுக்கப்பட்ட சாதிப் பிள்ளைகள், கிராமப் பாடசாலைகளிலே படிக்க, வசதியுள்ள கிராமத்தவர்கள், தமது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர்.

இதனால் யாழ்ப்பாணத்திலுள்ள பல கிராமப் பாடசாலைகளில், ஒடுக்கப்பட்ட சாதிப் பிள்ளைகள் மட்டுமே படிக்கின்றனர். இதனால், இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் தள்ளிவைக்கப்படுதல் மற்றும் வறுமை என்ற சுற்றோட்டத்தில் சிக்கியுள்ளது.

சுடலைப்போர்

கடந்த வருடத்தில், இவ்வாறு வெளியில் தெரியாது இருந்த சாதி ரீதியான புறந்தள்ளல், ஒடுக்கப்பட்ட சாதி  மக்களின் கிராமத்தின் மத்தியில் அமைந்த உயர் சாதிச் சுடலைகளை மையமாக வைத்து, சாதிச் சண்டைகளூடாக வெளித்தெரியத் தொடங்கியுள்ளது.

ஒக்டோபர் 2016இல், புன்னாலைக்கட்டுவனில் உள்ள திடற்புலம் கிராமத்தில், புன்னாலைக்கட்டுவன் வடக்கு வேளாள சாதியினர், பல தசாப்தங்களின் பின்னர், ஒரு சுடலை மீது தமது கட்டுப்பாட்டை மீளக் கொண்டுவர முயன்றனர். 

காணி உரிமையுடைய மேல் சாதிக் கிராமத்தவர்களிடம் கூலி வேலை செய்து சீவிக்கும் பலர் வாழும் திடற்புலம் மக்கள், இந்தச் சுடலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்தச் சுடலைக் காணியினுள், திடற்புலம் மக்கள் சிலர் அத்துமீறி வீடமைத்து, பல காலமாக வாழ்ந்தும் வருகின்றனர். வேளாளத் தலைவர்கள், சுடலைக்குள் வாள் ஏந்திய கும்பலைத் தங்க வைத்துக்கொண்டு, சுடலையைச் சுற்றி மதில் கட்ட முயன்றனர்.

இது, வன்முறை மோதலாகியது. கிராமிய நிலையமும் திடற்புலம் வாசிகசாலையும், கழிவு எண்ணெய் ஊற்றி அசிங்கப்படுத்தப்பட்டன. இந்த மக்கள், உள்ளூர் அலுவலர்களின் பக்கச்சார்பு பற்றி குறைப்பட்ட போதும், பொலிஸார் தமது முறைப்பாடுகளில் அக்கறை காட்டவில்லை என, கிராமத்தவர்கள் கூறுகின்றனர்.

இதன்போது நடந்த காரசாரமான வாக்குவாதத்தின் போது, ஒடுக்கப்பட்ட சாதிக் கிராமத்தவர்களுக்கு, உயர் சாதிச் சண்டியர்கள், 1982இல் திடற்புலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதை நினைவூட்டிப் பேசியுள்ளனர்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் தோற்றியுள்ள பயம், சாதி ஒடுக்கு முறை மற்றும் அது சார்ந்த வன்முறையின் ஆழத்தைப் பிரதிபலிக்கின்றது. இது, வருங்கால சந்ததியினரின் மனத்திலும் பீதியை விளைவிக்கக் கூடியது.

மார்ச் 2017 தொடங்கி, புத்தூரில் இது போன்ற ஒரு சுடலை, பெரிய மோதலுக்கான இடமாயிற்று. ஒப்பீட்டளவில் பெரிய ஊரான, இடதுசாரிகள் பலமாகவுள்ள கலைமதி கிராமிய மக்கள், துணிந்து நிற்கின்றனர்.

உயர்சாதியினரும் தாழ்த்தப்பட்ட மக்களும் 

கலைமதிக் கிராமத்தில் அருகில் உள்ள சுடலையில் சடலத்தை எரிக்க முற்பட்ட போது உண்டான மோதல், பொலிஸ் நடவடிக்கைக்கு காரணமாயிற்று. தற்போது சுடலையின் சுவரை உடைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 28 கிராமத்தவர்கள், ஒரு வாரத்துக்கு மேலாகத் தடுப்பில் உள்ளனர். 

இந்தக் கிராமத்தவர்கள், அண்மையில் மக்கள் வசிப்பிடத்தினுள் சுடலைகள் இருக்கும் பிரச்சினை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சில நாட்களாகத் தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளர். இந்த மக்கள் இந்தப் பிரச்சினையை வட மாகாண சபை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கோருகின்றனர்.

இவ்வாறான சுடலைகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதான மனத்தாங்கல்களுக்கு, பல காரணங்கள் உள்ளன. சுற்றுச் சூழல் மாசடைதல், ஆரோக்கியக் கேடு, சமூக ரீதியான அருவருப்பு, தமது வீட்டுக்கு அண்மையில் உடலை எரிப்பதில் தமக்கு உண்டாகும் கௌரவக் குறைப்பு என்பனவை அவையாகும்.

சரியாக பராமரிக்கப்படாத இந்தச் சுடலைகளில், விலங்குகள், மனித உடற்பாகங்களைக் கொண்டு திரிவதாக, பாதிக்கப்பட்ட கிராமத்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும் தமது வீடுகளுக்கு அண்மையில் உடலை எரிக்கும்போது, உளவியல் அழுத்தம் ஏற்படுத்துவதாகவும், குறிப்பாக சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் கூறுகின்றனர்.

மக்களி்ன் வீடுகளிலிருந்து தூரத்தே அமைந்த சுடலைகள் இருப்பதாகவும், அவற்றை ஊருக்குள் அமைந்த சுடலைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும் எனவும் அவர்கள் கூறுகின்றன.

அரசியல் துலங்கல்

உள்ளூர் அலுவலர்கள், சாதி ரீதியான பாகுபாடு காட்டுபவர்களாகவே உள்ளனர். வடமாகாண சபையின் கீழ் வரும் பிரதேச சபை, இந்தப் பிரச்சினையையிட்டு எதுவும் செய்யவில்லை. உண்மையில், டெங்கு பரவுதல் கடும் பிரச்சினையாக இருக்கும் வேளையில், பராமரிப்பு இல்லாத பல சுடலைகள், சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் பல சுடலைகளை அகற்றியும் மீள்பார்வைக்கு உட்படுத்தியும், மக்கள் வாழ்விடங்களுக்கு அப்பால் இவற்றை அமைக்க முடியும். யாழ்ப்பாணத்தில் உள்ள நிலப்பற்றாக் குறையும், சுடலைகளின் எண்ணிக்கையைக்  குறைக்க வேண்டிய காரணமாகும்.

இவ்வாறான சுடலைக் காணிகளை விளையாட்டுத் திடலாகவும் வீடமைப்புக்கான  இடமாகவும் பயன்படுத்த முடியும். 

ஆனால், இவ்வாறான கோரிக்கைகள் யாவும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. இதற்குப் பதிலாக, நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. நீதிமன்றங்கள், சுடலை  மதிலை உயர்த்தும்படியும் மின் மூலம் சடலங்களை எரிக்கும் படியே, தீர்ப்பு வழங்குகின்றன.

மின்மூலம் எரித்தல் என்பது, நடைமுறையில் கிராமங்களில் சாத்தியமாகாது. சாதியை மையமாகக் கொண்ட ஆழமான சமூகப் பிரச்சினை காணப்படுவதால், இதற்கு அரசியல் ரீதியான  துலங்கல் அவசியமாகிறது. இது, வடமாகாண சபையின் பொறுப்பாகும்.

இந்தப் புதிய சாதி மோதல்களைக் கையாள, உள்ளூராட்சி மற்றும் மாகாண அரசாங்கம் தவறிவிட்டு, சட்ட வழிகளையும் பொலிஸ் நடவடிக்கைகளையும்கொண்டு பிரச்சினைகனைத் தீர்க்க முற்பட்டால், அது யுத்தத்துக்குப் பின்னரான யாழ்ப்பாண சமூகத்தின் ஜனநாயகப்படுத்தல் முறைமையைக் கெடுப்பதாகவே அமையும்.

பேரினவாத சக்திகள்

சாதி தொடர்பான கருத்து வெளிப்பாடுகளைத் தவிர்க்க முடியாதபடி, பேரினவாத சக்திகளே தமது வசப்படுத்தியுள்ளன. பின்தங்கிய நிலையில் உள்ள மேல் சாதி தமிழ் மேட்டுக் குடியினர், சாதி ஒடுக்குமுறை ஊடாக, தமது சமூக வலுவைப் பலப்படுத்த விழைகின்றனர். 

அதே சமயம், இங்குள்ள சாதிப் பிரச்சினையைப் பயன்படுத்தி, தமிழ் சமூகத்தைத் தாக்கும் திட்டத்துக்குப் பயன்படுத்துவதுடன், அதிகாரப் பகிர்வு யோசனைகளை மட்டம் தட்டவும், சிங்கள, பௌத்த தேசிய வாதிகள் முயல்கின்றனர். இந்தப் போக்கை, பத்திரிகைகளில் வரும் கட்டுரைகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஒரு சமுதாயத்தினுள்ளே ஒடுக்குமுறை காணப்படுமிடத்து, வேறு சமுதாயத்தின் ஆதரவு வரவேற்கப்பட வேண்டும். 

உதாரணமாக, தேர்தல், அரசியல், சமூக வாழ்வு, திருமணம் என்பவற்றை, சாதி அமைப்பு எவ்வாறு சிங்கள, தமிழ்ச் சமுதாயங்களில் தாக்குகின்றது என்பதையிட்டு, ஒரு கலந்துரையாடலை சிங்கள முற்போக்காளர்கள் தொடங்கினால், இது தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் சாதி ஒடுக்குமுறையின் கடுமையை ஆராய, கருத்துகளையும் புதிய வழிகளையும் காட்ட முடியும்.

இன மற்றும் வர்க்க அடிப்படைக்கு உட்பட வெவ்வேறு ஒடுக்குமுறை வடிவங்களில், அரச அதிகாரம் மற்றும் வர்க்க அதிகாரம் என்பவற்றின் பல பயன்களைக் கேள்விக்கு உட்படுத்தாது, தமிழ்ச் சமூகத்தில் சாதியமைப்பைக் கையாள விரும்பும் செயற்பாட்டாளர்கள், தமது பெரும்பான்மை சார்ந்த பெருமை மற்றும் மேட்டுக் குடியினரின் நலன்கள் என்பவற்றைக் காட்டிக் கொடுத்து விடுகின்றனர்.

சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு, ஆதரவு தேவை. ஆனால், இவ்வாறான போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் ஆதரவாளர்கள், சாதி சக்தியோடு இணைந்து வரும் அரச அதிகாரம், வர்க்க அதிகாரம் என்பவற்றையும் எதிர்க்க வேண்டும். 

தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சுடலை மோதல்களும் அதற்காக பலரின் துலங்கல்களும், இனிவரும் காலங்களில் சாதி ஒடுக்குமுறையின் ஆழமான இயங்கியல் எவ்வாறு இருக்குமென்பதைக் கோடிட்டுக் காட்டுவனவாக உள்ளன.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாதியைப்-பிரித்துக்-காட்டும்-சுடலைகள்/91-200792

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.