Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுதெய்வ நெறிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுதெய்வ நெறிகள்

சிறுதெய்வ ஆய்வு நாட்டுபுறப் பண்பாட்டியலின் ஒரு பெரும் பிரிவாகும். இந்த வகையான ஆய்வு தமிழ்நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளேதான் தொடங்கப்பட்டது. சரியாகச் சொல்வதானால், இந்த ஆய்வுத்துறை தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் பிள்ளைப் பருவத்தில் உள்ளது. இந்த வகையான ஆய்வுச் சிந்தனையைத் தொடங்கியதில் தாமரை, ஆராய்ச்சி போன்ற இதழ்களுக்கே பெரும்பங்குண்டு.

சொல்விளக்கம்

முதலில், நாம் தமிழில் ''சிறுதெய்வம்'' என்ற சொல்லின் தோற்றத்தை நோக்குவோம். இச்சொல் முதன்முதலாக ''சென்று நாம் சிறுதெய்வம் சேரோம் அல்லோம்'' என்று அப்பர் தேவாரத்தில் பயின்று வருகிறது. இதன் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆகும். இதற்கு நேர்மாறாகப் ''பெருந்தெய்வம்'' என்ற சொல்வழக்கு புறநானூற்றிலேயே காணப்படுகிறது. இரண்டு வேந்தர்களையும் ஒன்றாகக் கண்ட புலவர், ''இரு பெருந்தெய்வமும் உடன் நின்றா'' அங்கு (பாடல் எண்:58) என்று பலராமனையும் திருமாலையும் நினைத்துப் பாடுகிறார். எனவே, சமூகத்தின் அடித்தளத்து மக்கள் (Subalterns) வழிபடும் கடவுளரைச் சிறுதெய்வங்கள் எனவும், மேல்தளத்து மக்கள் வழிபடும் தெய்வங்களைப் பெருந்தெய்வம் எனவும் குறிப்பிடும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்திருப்பதாகத் தெரிகிறது.

ஆய்வு நெறியில் ''சிறுதெய்வம்'', ''பெருந்தெய்வம்'' என்ற சொற்களைத் தாழ்ந்தவை, உயர்ந்தவை என்ற பொருளில் எடுத்துக்கொள்ள இயலாது. உண்மையில் சிறுதெய்வங்கள் எனப்படுபவையே மிகப்பழைய நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் பேணி நிற்பவையாகும். இக்கட்டுரையில் சிறுதெய்வம் என்ற சொல் நாம் ''பழகிவிட்ட சொல்'' என்பதனாலேயே எடுத்தாளப்படுகிறது.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர், ''செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாளன்'' என்று முருகனைக் குறிப்பிடுகின்றார். இப்பாடலில் செத்துப் பிறப்பனவாக அவர் குறிப்பது சிறுதெய்வங்களையே என்று ஊகிக்கலாம்.

''சிறு தெய்வம்'' என்ற சொல் எதைக் குறிக்கும்? சிறு தெய்வங்களின் முதற்பண்பு அவை பிராமணரால் பூசை செய்யப் பெறாதவை ஆகும். பிராமணப்பூசை இன்மையால் இவை இயல்பாகவே இரத்தப்பலி பெறும் தெய்வங்களாகும். இத்தெய்வங்கள், நாள்தோறும் ஆறுகாலப் பூசை பெறுவதில்லை. இத்தெய்வங்களின் திருவிழக்களில் ''சாமியாட்டம்'' (Ectasy) இடம்பெறும்.

வழிபடுவோர்

சிறுதெய்வ வழிபாடு சமூகத்தில் எப்பிரிவினரிடம் தொல்வழக்காக உள்ளது என்பது அடுத்த கேள்வி பொதுவாக, பிராமணரல்லாத எல்லாச் சாதியினரும் சிறுதெய்வ வழிபாட்டை உடையவர்கள் ஆவர். பிராமணரல்லாத சாதியாரிடமும், சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுள்ள புலாலுண்ணாத வேளாளரிடத்தில் சிறுதெய்வ வழிபாடு மிகக்குறைவாக உள்ளது. நிலவுடைமை அமைப்பில் பிற எல்லாச் சாதியாரும் சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டவரே.

கோயில் அடையாளம்

சிறுதெய்வக் கோயில்களின் அளவு மிகச் சிறியது. சில இடங்களில் அவை கட்டடமின்றி அமைதலும் உண்டு. இன்னும் சில இடங்களில் மரங்களும், புதருமே தெய்வமாகக் கருதி வழிபடப்பெறும். மரங்கள் பெரும்பாலும், வேம்பு, பனை, பூவரசு, உடை ஆகியவையாக இருக்கும். பெண்தெய்வக் கோயில்கள் பெரும்பான்மை வடக்கு நோக்கியும், சிறுபான்மை கிழக்கு நோக்கியும் ஆண்தெய்வக் கோயில்கள் கிழக்கு நோக்கியே அமைவதும் மரபாகும். ஒரு சிறுதெய்வக் கோயிலில் பெரும்பாலும் ஒரு தெய்வம், அல்லது மூன்றிலிருந்து இருபத்தொரு தெய்வங்கள்வரை வடக்கு, கிழக்கு, தெற்கு நோக்கி அமைந்திருக்கும்.

பெயர்கள்

சிறு தெய்வங்களின் பெயர்கள் பெருந்தெய்வங்களின் பெயர்களிலிருந்து தெளிவாகவே வேறுபட்டு நிற்கின்றன. ஆண் சிறு தெய்வங்களின் பெயர்கள் பொதுவாக அய்யா, அப்பன், அடியான், சாமி முதலிய விகுதிகளோடும், (கருப்பையா, இருளப்பன், பனையடியான் கருப்பசாமி) பெய்தெய்வங்களின் பெயர்கள் அம்மன், நாச்சி, கிழவி முதலிய விகுதிகளோடும் (முத்தாலம்மன், பெரியநாச்சி, அரியாக்கிழவி) அமைந்திருக்கும்.

கோயில் அமையும் இடங்கள்

இச்சிறுதெய்வக் கோயில்கள் பொதுவாக ஊர்மந்தை, ஊரின் எல்லை, குளக்கரை, கண்மாய்க்கரை, களத்துமேடு, வயற்புறம்; அழிந்த கோட்டைகளில் வாசற்பகுதி இருந்த இடம், நெடுஞ்சாலை ஓரம் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும். அந்த இடங்கள் அனைத்தும் காவலுக்குரிய இடங்கள் ஆகும். எனவே, பெரும்பாலான சிறுதெய்வங்கள் காவல் தெய்வங்களாக (Guardian deities) அமைவனவே.

உருவம்

பெண் சிறுதெய்வங்கள் பீடத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் இரண்டு கைகளோடு, தலையில் வெவ்வேறு வகையான மகுடங்களுடன் இருக்கும். கையில் வேல், வடிந்த காது, கழுத்தில் காறை, காலில் தண்டை ஆகியவற்றோடு அமைந்திருக்கும். ஒன்றிரண்டு தனித்த வேறுபாடுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக, உச்சினி (உஜ்ஜயினி) மாகாளியம்மன் இடது உள்ளங்கையில் கபாலம் ஏந்தியிருக்கும். சில பெண்தெய்வங்கள் இடுப்பில் குழந்தை ஒன்றை வைத்திருப்பதாக நாட்டுப்புறப் பாடல்களிலும், வழக்கு மரபுகளிலும் செய்திகள் உள்ளன. ஆண்தெய்வங்கள் நின்ற கோலத்திலும், ஒரு காலை மட்டும் முழங்காலிட்ட கோலத்திலும, தவழ்ந்த கோலத்திலும் காணப்படும். ஒரு காலை முழந்தாளிட்ட நிலைமையில், ஒரு கை (வலக்கை) ஓங்கிய நிலையில் ஆயுதம் ஏந்தி இருக்கும் இத்தோற்றத்தில் அமைந்த தெய்வங்களை ''நொண்டிச்சாமி'' என்பார்கள். தவழ்ந்த கோலத்தில் அமைந்த தெய்வங்களைச் ''சப்பாணி'' என்பார்கள். தெய்வ உருவங்கள் பெரும்பான்மை கல்லிலும், சிறுபான்மை மண்ணாலும் அமைந்திருக்கும். மண்ணால் (சுதையால்) அமைந்த தெய்வங்கள் வண்ணங்கள் பூசப்பெற்றவையாக இருக்கும்.

கிடந்த கோலத்தில் ஒரே ஒரு தெய்வம் மட்டும் கள ஆய்வில் இதுவரை காணப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேற்குப் பகுதியிலும், குமரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும், காணப்படும் இத்தெய்வத்திற்கு ''வண்டிமலைச்சியம்மன்'' என்று பெயர். இந்தப் பெயருடைய அம்மன் கோயில்களில் இரண்டு உருவங்கள் மிகப்பெரிய அளவில் மண்ணால் அமைக்கப்பட்டிருக்கும்.

சிறுதெய்வமா, பெருந்தெய்வமா என்று உறுதியிட்டுரைக்க முடியாதபடி மிகச் சில தெய்வங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ''காமாட்சி அம்மன்'' ஆகும். தமிழ்நாட்டின் பழம்பெரும் கோயில்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் ஒரு பெருந்தெய்வக் கோயிலாகும். ஆயினும், தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் காமாட்சியம்மன் பிராமணப் பூசையின்றி இரத்தப்பலி பெறும் சிறுதெய்வமாகவே காணப்படுகிறது. எனவே, காமாட்சி அம்மன் முதலில் சிறுதெய்வமாக இருந்து, இடைக்காலத்தில் பெருந்தெய்வமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.

உருவமில்லாதன

சிறுதெய்வக் கோயில்களில் உருவம் இல்லாதன, உருவம் உடையன என இருவகை உண்டு. மரங்களையே தெய்வங்களாக வழிபடுதல் ஒரு வகையாகும். சில இடங்களில் கல்லாலான கழுமரங்களே வழிபடப்பெறுகின்றன. சில இடங்களில் பீடங்கள் மட்டும் உருவமின்றி வழிபடப்பெறுகின்றன. அழகர்கோயிலில் பதினெட்டுப் படிகளும், படிகளுக்கு முன்னமைந்த இரண்டு கதவுகளுமே தெய்வமாகக் கருதி வழிபடப் பெறுகின்றன. இன்னும் சில இடங்களில் நடப்பட்ட குத்துக்கற்களில் தெய்வம் உறைவதாக நம்பி வழிபடுவர். தெய்வங்கள் பந்தியாக (வரிசையாக 21 தெய்வங்கள்) அமைந்த கோயில்களில் முக்கியமான ஒன்றிரண்டு உருவங்களையும், பிற தெய்வங்கள் பீடங்களாகவும் வழிபடப்படுகின்றன.

வழிபடுகடவுளர் இயல்பு

உருவமுடைய சிறுதெய்வங்கள் எல்லாம், அவை ஆணாயினும், பெண்ணாயினும் ஆயுதங்களை ஏந்தியிருப்பது அவற்றின் பொதுப் பண்பாகும். எனவே, சிறுதெய்வங்கள் அனைத்தும் வீர வழிபாட்டுத் தெய்வங்கள் எனக் கருதப்படுகின்றன. தன்னுடைய ஊரை, ஊரின் கால்நடைகளை, கண்மாய் நீரை, பெண்களை, விளைந்த பயிர்களைக் காக்கின்ற சண்டையில் உயிர்துறந்த ஆண்கள் எல்லாம் வீர வழிபாட்டிற்கு உரியவர்களாவர். இவர்களுக்குத் தனிப்பெயர் இருந்தாலும் வேடியப்பன், பட்டவன் என்ற பொதுப் பெயர்களில் வடமாவட்டங்களிலும் மதுரை, முகவை மாவட்டங்களில் கருப்பசாமி என்ற பொதுப்பெயரிலும் நெல்லை, குமரி மாவட்டங்களில் சுடலைமாடன் என்ற பொதுப் பெயரிலும் இத்தெய்வங்கள் அடங்கிவிடும். இப்பொதுப் பெயர்கள் பொது வழிபாட்டுநெறி (Cult) ஒன்றை உருவாக்கிவிடுகின்றன.

பெண் தெய்வங்களில் பகைவரால் கொல்லப்பட்டோர், பாலியல் வன்முறையை எதிர்க்கும் முயற்சியில் இறந்தோர், பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கவும் அதை எதிர்க்கவும் தற்கொலை செய்துகொண்டோர், கணவனோடு உயிர் நீத்தோர் ஆகியோரை வீர வழிபாட்டிற்கு உரியவர்கள் எல்லாம் தங்கள் இறப்பிற்கு உரிய காலமல்லாத காலத்தில் தங்கள் இறப்பினை (அகால மரணத்தை)ச் சந்தித்தவர்கள் ஆவர்.

வீரவழிபாட்டு நெறியில் இரண்டு சாரார் ஒரே தெய்வத்தை வழிபடுவதும் உண்டு. கொல்லப்பட்ட வீரனைச் சார்ந்த பிரிவினர் அவன் வீரத்தையும், பிற வரங்களையும் வேண்டி வழிபடுவர். கொன்ற பிரிவினர் கொல்லப்பட்ட வீரனின் ஆவியால் தாங்கள் பழிவாங்கப்படக்கூடாது என்பதற்காக ''சமாதானம்'' (சாந்திச் சடங்குகள் - Propitiatory rites) செய்து வணங்குவர்.

பொதுவாகப் பெண்தெய்வ வழிபாடுகள் உடல்வளம், மனவளம், மகப்பேற்று வளம், பயிர்வளம், இவற்றையே குறிக்கோளாகக் கொண்டு நடைபெறும். அதாவது, மக்களையும் பயிர்களையும் நோய் வராமல் காத்தல், வந்த நோயிலிருந்து காத்தல், மனநலக் குறைவைச் சரிசெய்தல், மகப்பேறு வரந்தருதல், பயிரை நன்றாக விளையச் செய்தல் ஆகியவையே பெண் தெய்வத்தின் கடமைகளாக அமைகின்றன.

பூசாரி

சிறுதெய்வக் கோயில்களில் பிராமணரல்லாதாரே பூசாரிகள் ஆவர். பள்ளர், பறையர், சக்கிலியர், நாவிதர், வண்ணார் ஆகிய சாதியாரின் கோயில்களில் பெரும்பாலும் அந்தந்தச் சாதியாரே பூசாரிகளாக இருப்பர். பிற மேல் சாதியாருக்கு உரிமையான கோயில்களில் மண்பாண்டங்களும், மண்ணில் தெய்வ உருவங்களும் செய்யும் குயவர் (வேளார்) சாதியாரும், நந்தவனம் வைத்துப் பூத்தொடுக்கும் பண்டாரம் எனப்படும் சாதியாரும், உவச்சர் (கம்பர்) சாதியாரும் பூசாரிகளாக இருப்பர். ஒன்றிரண்டு கோயில்களில் அந்தந்தச் சாதியாரே (மறவர், கள்ளர்) பூசாரிகளாக இருப்பார்கள். பொதுவாக பிற தெய்வக் கோயில்களைப் போலச்சிறுதெய்வக் கோயில்களில் ஆறுகாலப் பூசைகள் நடப்பதில்லை.

சாமியாடி - தோற்றமும் ஆட்டமும்

பெரும்பாலும் சிறுதெய்வக் கோயில்களில் பூசாரிகள் சாமியாடிகளாக இருப்பதில்லை. வழிபடும் அடியர்களிலேயே ஒருவர், இருவர் அல்லது சிலர் சாமி ஆடுவர். இரண்டு மூன்று சாதிகளுக்குரிய கோயில்களில் சாதிக்கொரு சாமியாடியும் உண்டு. பெண்தெய்வக் கோயில்களில் ஆண்களும் ஆண்தெய்வக் கோயில்களில் பெண்களும் ஆடுவதுண்டு. சாமியாட்டம் திருவிழாக் காலங்களில் மட்டுமே நடைபெறும்.

சாமியாடுவோர் ஆண்களாக இருப்பின் வேட்டியை வரிந்துகட்டியும், பெண்களாக இருப்பின் தலைமுடியை விரித்துப்போட்டும் சாமியாடுவர். சாமி ஆடுபவர் கையில் வேப்பிலையும், எலுமிச்சம் பழமும் இருக்கும். அந்தக் குறிப்பிட்ட சிறு தெய்வத்திற்குரிய ஆயுதங்கள் - கருவிகள் ஆன அரிவாள், வாங்கரிவாள், சிறு பிரம்பு, பூண் கட்டிய தடிக்கம்பு, சாட்டை, வாள், கட்டாரி ஆகியவற்றில் ஒன்றை ஏந்தி ஆடுவர்; தீப்பந்தம், தீச்சட்டி ஏந்தியும் ஆடுவர். மதுரை, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஒருவர் நீர்க்கரகம் எடுத்துத் தெய்வப் பிரதிநிதியாக ஆடுவார். அவருக்குக் ''கோமறத்தாடி'' எனப் பெயர். அவர் மஞ்சள் ஆடை அணிவார். கையில் வெள்ளிக் கடகம், மஞ்சள் காப்புக்கயிறு அணிவார். சில சிறுதெய்வக் கோலில்களில் சிவப்பு வண்ணக் கால்சட்டை அணிந்து காலில் சலங்கை கட்டி ஆடுவர். சிவப்புக் கால்சட்டையோடு, சிவப்புத் தொப்பியணிந்து ஆடுவதும் உண்டு. பொதுவாக எல்லாச் சிறுதெய்வக் கோயில்களிலும் சாமி ஆடுவோர், திருவிழாவிற்கு முன்னர் 10 அல்லது 15 நாள் தொடங்கிப் புலால் உண்பதைத் தவிர்த்தும், உடலுறவைத் தவிர்த்தும் விரதமிருப்பர். இன்னும் சில கோயில்களில் பூசைசெய்யும் நேரத்தில் பூசை செய்வோர் வாயினை ஒரு வெள்ளைத் துணியினால் கட்டிக்கொள்வர்.

சிறுதெய்வக் கோயில்களில் நடைபெறும் சாமியாட்டம் அல்லது தெய்வ ஆட்டம் பலவகைப்படும். பெரும்பாலும் ''திமிரி'' என்னும் சிறிய வகை நாட்டுப்புற நாதஸ்வர இசைக்கும், மேளத்திற்கும் ஏற்ப ஆண்களும் பெண்களும் குதித்தாடுவார்கள். பெண்கள் தலைமயிர் விரித்த தலையை முன்னும் பின்னுமாக ஆட்டி ஆடுவார்கள்.

பொதுவாக ஒரு சிறுதெய்வம் இரண்டு அல்லது மூன்று பேர் மீது மருள் கொண்டு இறங்கும் ''மருளாடி'' சாமியாடி'' ''கோமறத்தாடி'' என ஒவ்வொரு வட்டாரத்திற்கும் சாமியாடுவோர் பெயர் வேறுபடும். சாமியாடுவோரில் ஒருவர் மட்டுமே தெய்வத்தின் பிரதிநிதிபோலக் கையிலோ தலையிலோ கரகம் வைத்து ஆடுவார். பிறர் ஆயுதங்களை ஏந்தியோ, வேப்பிலை, எலுமிச்சம் பழம் மட்டும் கையில் வைத்துக்கொண்டோ ஆடுவர். ஆடுவோர் எல்லோரும் கழுத்தில் பூமாலை அணிவர்.

பொதுவாக இவ்வகையான ஆட்டம் தவிர வெவ்வேறு வகையான ஆடல்களும் சில இடங்களில் நடைபெறும். இவற்றுள் வட்டார வேறுபாடு உண்டு. தென் மாவட்டங்களில்தான் இப்பொழுது பல்வகையான ஆட்டங்களைக் காணும் வாய்ப்பு உள்ளது.

விழாக்களும் இரத்தப் பலியும்

சிறுதெய்வக் கோயில்களில் திருவிழாக்கள், பெரும்பாலும் மாசிமாதத்தில் ''மகா சிவராத்திரி''யன்று நடைபெறும். இத்திருவிழாவினை ''மாசிக்களரி'' என்பர். நெல்லை, குமரி மாவட்டங்களில் மட்டும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும். திருவிழாக்களின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக இரத்தப்பலி நடை பெறும். எருமைக்கடா, ஆட்டுக்கடா, சேவல், பன்றி ஆகியவை பலியிடப்பெறும்.

பொதுவாகத் தமிழ்நாட்டில் இக்காலத்தில் கோவை மாவட்டத்தில் ஒன்றிரண்டு இடங்களைத் தவிர எருமைக்கடா பலிகொடுக்கும் வழக்கம் நின்றுபோயிற்று. எருமைக்கடா பலிபெறும் பெண்தெய்வங்கள் மைசூர்ப் பகுதியில் உருவான மகிஷாசுரமர்த்தினி (எருமைத்தலை அரக்கனைக் கொன்ற காளி) வழிபாட்டில் இருந்து கிளைத்திருக்க வேண்டும். அலைந்து திரியும் (nomadic) சாதியாரான நரிக்குறவர் இக்காலத்திலும் தங்கள்தெய்வத்துக்கு எருமைக்கடா பலி கொடுக்கின்றனர்.

விதிவிலக்காக அன்றிப்பெண் விலங்குளையோ, பறவைகளையோ பலிகொடுக்கும் வழக்கம் வழிபாட்டு நெறிகளில் இல்லை. இரத்தப்பலி என்பது பொதுவாக ஆண் விலங்குகளையும் பறவைகளையுமே குறிக்கும். உயிர்ப் பெருக்கத்திற்குக் காரணமான பெண் உயிர்களைப் பலி கொடுத்தால் தெய்வம் தண்டிக்கும் என்னும் தொல்பழைய நம்பிக்கையே இதற்குக் காரணமாகும். சங்க இலக்கியத்தில் நன்னன் என்னும் ஒருவன் பெண் கொலை செய்து பெரும்பழி ஏற்றதனைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

தாழ்த்தப்பட்ட சாதியார் ஆன சக்கிலியர் போன்ற சாதிகளில் மட்டுமே பன்றியைப் பலி கொடுப்பர். வெட்டப்பட்ட மிருகத்தின் தலையினை மட்டும் எடுத்துத் தெய்வத்திற்கு நேர் எதிரே கோயிலுக்கு உள்ளாகவோ, வெளியிலோ அமைந்திருக்கும் பலிபீடத்தின் மேல் வைப்பர். சில தெய்வங்களுக்குப் பலியிடும் விலங்கின் தலையை வெட்டாமல் நெஞ்சினைக் கீறி இருதயத்தை மட்டும் எடுத்துப் பலிபீடத்தின் மேல் வைப்பர்.

பெண் தெய்வங்களில் சில தெய்வங்களுக்கு இரத்தப்பலி தரும்போது, நிறை சினையாகவுள்ள பெண் ஆட்டைத் தேர்ந்தெடுத்து, ஊருக்கு வெளியே அதைக் கொண்டுபோய் அதன் வயிற்றைக் குத்திக்கிழித்து, உள்ளே இருக்கும் ஆட்டுக்குட்டியைத் தனியே வெளியே எடுத்துக் கோயிலில் அத்தெய்வத்தின் பலிபீடத்தில் வைப்பர். இதற்குச் ''சூலாடுகுத்துதல்'' அல்லது ''துவளக்குட்டி'' எனப் பெய்ர. ஒரு கோயிலில் ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்கள் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பலிபீடமும் இருக்கும்.

தெய்வகங்கள் வரிசையாக அமைந்த கோயில்களில் ''அய்யனார்'' இருப்பினும் அது இரத்தப்பலி பெறாத தெய்வமாகும். எனவே அதே வளாகத்திலுள்ள பிற தெய்வங்களுக்கு இரத்தப்பலி இடும்போது, இரத்தப்பலி பெறாத அய்யனார் போன்ற தெய்வ உருவங்களைத் திரையிட்டு மறைத்துவிடுவர். இரத்தப்பலி பெறாத தெய்வங்களை நாட்டுப்புறத்து வழக்கு மரபில் ''சுத்தமுகத்தெய்வம்'' என்று கூறுவர்.

பிற படையல்

சிறுதெய்வங்களுக்குப் படைக்கப்படும் உணவு வகை என்று எதையும் குறிப்பிட இயலவில்லை. திருவிழாவில் இறுதி நிகழ்ச்சியாகச் சில தெய்வங்களுக்கு ஊன் (ஆட்டுக்கறி) கலந்த சோறு படைக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் இதற்குத் ''திரைச்சோறு'' எனப்பெயர் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ''ஊட்டுக்கொடுத்தல்'' என்பர். பொதுவாக, சிறுதெய்வக் கோயில்களில் வழிபடுவோர்க்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ''தெய்வம்'' தன்மிது குடிகொண்டுவிடுமூ என்ற அச்சத்தினால் குறிப்பிட்ட சில சிறுதெய்வக் கோயில்களில் தரப்படும் (தெய்வத்திற்கு சூட்டிய) பூவினைப் பெண்கள் அணிந்துகொள்வதில்லை.

நேர்த்திக்கடன்

காணிக்கை அல்லது நேர்த்திக்கடனாகச் சிறுதெய்வக் கோயில்களுக்கு நெல் முதலிய தானியங்கள் தரப்படுகின்றன. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தைவரம் வேண்டி ''பிள்ளைத் தொட்டில்'' (மரத்தாலான மிகச்சிறிய தொட்டில்) செய்து கோயிலில் தொங்கவிடும் வழக்கமும் பரவலாக உள்ளது. எல்லாச் சிறு தெய்வக் கோயில்களிலும் தெய்வத்திற்குரிய ஆயுதங்களை (வேல், வாள், தடி, கட்டாரி, அரிவாள்)யும் சாட்டை, பாதுகை, மணி திருநீற்றுக் கொப்பரை முதலியனவற்றையும் அடியவர்களே நேர்த்திக்கடனாகச் செய்து தருகின்றனர்.

சமூக மாற்றம் இருபதாம் நூற்றாண்டில் சமூக மாற்றங்கள் காரணமாகப் பெண் சிறுதெய்வங்களில் சில பெருந்தெய்வமாக மாற்றப்பட்டுள்ளன. இரத்தப் பலியினை நிறுத்துவது, பெருந்தெய்வக் கோயில்களைப் போலப் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவினைக் கொண்டாடுவது, சில இடங்களில் பிராமணரைப் பூசாரியாக்குவது முதலிய படிநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. சில கோயில்களில் ''சாமியாட்டம்'' காலப்போக்கில் ஆடுவோரின்று மறைந்து இம்மாற்றத்திற்கு மேலும் துணை செய்கிறது. ஒரு கோயிலை வழிபடும் அடியவர்கள் சமூக மாற்றங்களினால் பொருளாதார வலிமை பெறுவதும், பணக்காரர் அறங்காவலர் பொறுப்புக்கு வருவதும் இம்மாற்றத்திற்கு அடிப்படைக் காரணங்களாகும். இம்மாற்றமும் நகர்ப்புறங்களில்தான் பெருமளவில் நடந்துள்ளது.

நன்றி: தெய்வங்களும் சமூக மரபுகளும்

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.