Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம்: விக்ரம் வேதா

Featured Replies

சினிமா விமர்சனம்: விக்ரம் வேதா

  •    
    திரைப்படம் விக்ரம் வேதா
     
    நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி
     
    இசை சாம் சிஎஸ்
     
    இயக்கம் புஷ்கர் காயத்ரி

தமிழில் ரசிகர்களின் புத்திசாலித்தனத்தின் மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்படும் படங்கள் மிக மிகக் குறைவு. `விக்ரம் - வேதா` அப்படி ஒரு திரைப்படம்.

படத்தின் தலைப்பு குறிப்பிடுவதைப் போல, விக்ரமாதித்யன் - வேதாளம் கதைதான் படம்.

விக்ரமாதித்யன் வேதாளத்தை தனது தோளில் சுமந்துகொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு புதிர் கதையைச் சொல்லி, அதற்கான விடையைக் கேட்கும். சரியான பதில் சொன்னவுடன் வேதாளம் பறந்து சென்றுவிடும்.

மீண்டும் விக்ரமாதித்யன் வேதாளத்தை துரத்திச் சென்று பிடிப்பான். இது திரும்பத் திரும்ப நிகழும்.

இந்த பாணியை பின்னணியாக வைத்து, படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் புஷ்கரும் காயத்ரியும்.

v

விக்ரம் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி.

கொடுங்குற்றவாளிகளை சுட்டுத்தள்ளும் ஒரு காவல்துறை அணியில் இருக்கிறார்.

வேதா என்ற 14 கொலைகளைச் செய்த கேங்ஸ்டரை சுட்டுத்தள்ள முடிவுசெய்கிறது அந்த அணி.

இந்த நிலையில் தானே முன்வந்து சரணடையும் வேதா, ஜாமீன் பெற்று வெளியேறுகிறான்.

வேதா தானாக முன்வந்து சரணடைந்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலைத் தேட ஆரம்பிக்கிறான் விக்ரம்.

இப்படி பல முறை விக்ரமின் கையில் சிக்கும் வேதா ஒவ்வொரு முறையும் ஒரு புதிரை முன்வைக்கிறார்.

அந்தப் புதிருக்கான விடையை அடையும்போது, வேறு ஒரு புதிர்.

சினிமா விமர்சனம்: விக்ரம் வேதா

கதை என்று பார்த்தால் ஒரு சாதாரண த்ரில்லர்தான்.

ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி VS குற்றக்கும்பல் தலைவன் என்று மிகச் சாதாரணமாகத்தான் துவங்குகிறது படம்.

ஆனால், சற்று அவசரப்படாமல் கவனித்தால் பல ஆச்சரியங்களை ரசிகர்களுக்கு பரிசளிக்கிறது இந்தப் படம்.

கடைசிக் காட்சி வரைக்கும் இந்த ஆச்சரியத்தைத் தக்கவைத்திருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் விக்ரம், ஓடாமல் இருக்கும் ஒரு பழைய புல்லட் வாகனத்தை சரி செய்ய ஆரம்பிக்கிறார்.

படம் நெடுக உதிரி பாகங்களுக்காக அலைகிறார்.

ஒவ்வொரு பாகமாகக் கிடைக்கிறது.

புல்லட் முழுவதுமாக தயாராகும்போது, படம் உச்சகட்டத்தை எட்டுகிறது.

இது போன்ற ரசிக்கத்தக்க காட்சிகள் படம் நெடுக இருக்கின்றன.

சினிமா விமர்சனம்: விக்ரம் வேதா

எப்போதுமே நீதியின் பக்கம் நிற்கும் விக்ரமே கதையின் நாயகனைப்போலத் தோன்றினாலும், படம் நகர நகர படத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கிறது வேதாவின் பாத்திரம்.

அந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய் சேதுபதி.

கையில் ஒரு வடையை வைத்தபடி மிக சாவதானமாக காவல்துறையிடம் சரணடையும் துவக்கக் காட்சியிலேயே படத்தின் கவனத்தை அவர் மீது திருப்பிவிடுகிறார்.

எங்கேயுமே உறுத்தலில்லாத, மிகை நடிப்பில்லாத விஜய் சேதுபதிக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும்.

p0598sk0.jpg
 
''நான் நானாக இருக்க விரும்புகிறேன் கமலோடு ஒப்பிட வேண்டாம்''

விக்ரமாக வரும் மாதவன், நேர்மையான, புத்திசாலித்தனமான காவல்துறை அதிகாரியின் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமான தேர்வு. மாதவனுக்குப் பதிலாக வேறு யாரும் இந்தப் பாத்திரத்தைச் செய்திருந்தால் பொருத்தமாக இருக்குமா என்று தோன்ற வைக்கிறார்.

v

படத்தில் பெண் பாத்திரங்களாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் பாத்திரங்கள் சவாலானவையல்ல. தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

திரைக்கதைக்கு அடுத்தபடியாக இந்தப் படத்தின் மிக முக்கியமான பலங்கள், ஒளிப்பதிவும் பின்னணி இசையும்.

சற்றே இருண்மை படிந்த இந்தக் கதைக்கு உரிய நியாயத்தைச் செய்கிறது வினோத்தின் ஒளிப்பதிவு.

அதேபோல சாமின் பின்னணி இசை, படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்துகிறது.

சினிமா விமர்சனம்: விக்ரம் வேதா

வெகு நாட்களுக்குப் பிறகு வசனங்களுக்குக் கைதட்ட வைத்திருக்கிறார்கள் புஷ்கரும் காயத்ரியும்.

முதல் பாதியிலும் பிற்பாதியிலும் பல தருணங்கள் மிக மெதுவாக நகர்வது, இரண்டாவது பாதியில் உள்ள பாடல் ஆகியவை படத்தின் பலவீனங்கள்.

ஆனால், அதையெல்லாம் மீறி ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த உணர்வை அளிக்கிறது விக்ரம் - வேதா.

http://www.bbc.com/tamil/arts-and-culture-40680961

  • தொடங்கியவர்

கதை சொல்லித் தப்பிக்கும் 'வேதாளம்' விஜய் சேதுபதி... மாதவனிடம் மாட்டுகிறாரா? - ‘விக்ரம் வேதா’ விமர்சனம்

16 கொலை செய்த தாதா ‘வேதா’ விஜய் சேதுபதியைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார், 18 என்கவுண்டர் செய்த போலீஸ் ‘விக்ரம்’ மாதவன் இருவருக்குமான டாம் அண்ட் ஜெர்ரி துரத்தலே விக்ரம் வேதா.

விஜய் சேதுபதி

 

படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும் முன், விஜய் சேதுபதிக்கு, படத்தில் அவர் கொடுப்பதுபோலவே  ஸ்பெஷல் ‘Gift-U’ கொடுக்கலாம்! ’வேதா... வேதா’ என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, திரையில் வரும் நொடியிலேயே திரையை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறார். அதன்பின் க்ளைமாக்ஸ் வரை அதகளம் பண்ணுகிறார் நடிப்பில். வடையை வலது கையில் பிடித்து அசால்ட் நடையில் முதுகு காட்டி சரண்டர் ஆக எண்ட்ரி ஆவதில் தொடங்கி, நம்மை சரண்டர் செய்கிறார். வசன உச்சரிப்பில் அதே ஸ்பெஷல் கெத்து. தம்பி கதிர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பாசமும், தாதாயிசத்தின்போது குரோதமுமாய் டபுள் டமாக்கா வெடி வெடிக்கிறார். ‘உனக்கு கத கேட்டுப் பழகிடுச்சு.. எனக்கு கத சொல்லியே பழகிடுச்சு’ என்றபடி மாதவனை மடக்கும் இடங்கள்  மாஸ்! 

நேர்மையான போலீஸ் மாதவன் வடசென்னையின் தாதாயிசத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, தாதா விஜய் சேதுபதியின் கேங்கை சுற்றி வளைப்பதில்  ஆரம்பிக்கிறது கதை. அதன்பின் தானாக சரண்டராகும் விஜய் சேதுபதி, மாதவனுக்கு ஒரு கதை சொல்கிறார். அங்கே ஆரம்பித்து ஒவ்வொரு முறை மாட்டும்போதும் கதை சொல்வதும், அந்தக் கதையின் முடிச்சை அவிழ்க்க மாதவன் முயலும்போது அவருக்கு வேறு சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுமாகச் செல்கிறது திரைக்கதை. இறுதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, விக்ரம், வேதாவைப் பிடிக்கிறாரா.. அவர்மீதும்  என்கவுண்டர் ஆயுதம் பாய்கிறதா என்பதை வெள்ளித்திரையில் கண்டுகொள்ளுங்கள்! 

விக்ரம் வேதா

இறுக்கமான முகத்துடன், கட்டுமஸ்தான உடல்வாகுடன் இந்தக் கதாபாத்திரத்துக்காகத் தன்னைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார் மாதவன். அந்த ஆரம்பக் காட்சியின், நீளமான சிங்கிள் ஷாட்டில் ஒவ்வொரு இன்ச்சிலும் அநாயாச நடிப்பால் அசத்துகிறார். மனைவி ஷ்ரதா ஸ்ரீநாத்துடனான லவ் மொமண்ட்ஸில், சாக்லேட் பாயாக மாறி ரொமான்ஸ் காட்டுகிறார். விஜய் சேதுபதியின் கதை முடிச்சை அவிழ்க்கும்போது  குழம்புவதும், விடை கிடைத்ததும் துள்ளுவதுமாய் நடிப்பின் சீனியாரிடியை நிரூபிக்கிறார்.  

ஷ்ரதா  ஸ்ரீநாத் சும்மா வந்து போகாமல், முக்கிய பங்கு வகிக்கிறார். ‘சந்திரா’வாக வளையவரும் வரலட்சுமியின் கதாபாத்திரம், கொஞ்சம் வித்தியாசம். வரும் காட்சிகளில் எல்லாம் எக்ஸ்ப்ரஷன்ஸில் கவர்கிறார். இடது கையில் சாப்பிட்டுக்கொண்டே ‘வேதான்னா யாரு?’ என்று விஜய் சேதுபதி கேட்க ‘அக்காங்’ எனும்போது க்யூட்! ‘சேட்டா’வாக வரும் ஹரீஷ் பேரடியும், விஜய் சேதுபதியின் தம்பியாக கதிரும் நல்ல கதாபாத்திரத் தேர்வு! 

விஜய் சேதுபதி மாதவன் நடிக்கும் விக்ரம் வேதா

வழக்கமான திருடன் போலீஸ் கதையை, வித்தியாசமான கேப்ஸ்யூலில் கொடுத்திருக்கும் திரைக்கதையும், இயக்கமும் புஷ்கர் - காயத்ரிக்கு சபாஷ் போட வைக்கிறது.  ஒவ்வொரு முறை மாட்டிக்கொள்கிற வேதாளமான விஜய் சேதுபதி, விக்கிரமாதித்தனான மாதவனிடம் கதை சொல்வதும், அதற்கு விடை சொல்லும்போதே வேறு பல விடைகள் மாதவனுக்குக் கிடைப்பதுமாய் சரவெடி கொளுத்துகிறது கதை. சீரியஸான காட்சிகளிலும் மெலிதான நகைச்சுவையை படம் நெடுகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். படத்தில் அடிக்கடி வரும் பின்னி மில் காட்சியில் ‘இந்த மில்லு வேலை செய்யறதுக்காக வெச்சிருக்காங்களா, இல்ல நம்மள மாதிரி ஆளுக சண்ட போடறதுக்காக வெச்சிருக்காங்களா?’ என்று விஜய் சேதுபதி கேட்பது ஒரு உதாரணம். அந்த ‘நல்லி எலும்பு பரோட்டா’ சாப்பிடும் வி.சேவின் டுட்டோரியல், படம் முடிந்ததும் பரோட்டா கடையைத் தேடவைக்கிறது.

மணிகண்டனின் வசனங்கள் தேவைக்கேற்ற நச். ‘முட்டை உடைஞ்சுடுச்சுனா முட்டை உடைஞ்சுடுச்சேனு பதறக்கூடாது, உடனே ஆம்லேட்டு போட்டு சாப்பிட்டு பிரச்னையை முடிச்சடணும்’,  ‘போலீஸ் மகன் போலீஸாதான் இருப்பான். கிரிமினல் மகன் கிரிமினலாதான் இருப்பான்றது, என்ன லாஜிக். அப்போ காந்தி அப்பா காந்தியா, கோட்சே அப்பா கோட்சேவா?' என்று விஜய் சேதுபதிக்கான வசனங்களில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாய் ஈர்க்கிறார். 

மாதவன் விஜய் சேதுபதி

பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு வடசென்னையையும், பின்னி மில்லையும்  அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வருகிறது. படம் நெடுக வந்து, படம் முடிந்த பின்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது  சாம் சி.எஸ்ஸின் ‘தனனனனன நா... தனனனனன நா’ பி.ஜி.எம். அனிருத் குரலில் ‘யாஞ்சி யாஞ்சி’யில் கொஞ்சும் மெலடியில் கவர்ந்து, ‘டசக்கு டசக்கு டும் டும்’மில் கலக்கல் நண்பனாய் ஆடவைக்கிறார்.

 

முதல்பாதியின் விஜய் சேதுபதி எண்ட்ரிக்குப் பிறகு படம் கொஞ்சம் நொண்டியடிக்கிறது. தாதாவான விஜய் சேதுபதிக்கே தலைமையாக இருக்கும் ‘சேட்டா’ ஹரிஷ் பேரடி என்ன ஆகிறார்? அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அருமைதான்.. ஆனால் அத்தனை இண்டலிஜெண்ட் மாதவன், எல்லாவற்றையும் அந்தக் காட்சியில்தானா யோசிப்பார்? அதற்குமுன் கொஞ்சமும் சந்தேகம் வந்திருக்காதா?

இப்படிச் சில கேள்விகள் இருந்தாலும், தெளிவான திரைக்கதையும், விஜய் சேதுபதியின் க்ளாஸ் நடிப்பும் விக்ரம் வேதாவுக்கு பெரிய ப்ளஸ்ஸாகக் கைகொடுக்கின்றன.

http://www.vikatan.com/cinema/movie-review/96425-vikram-vedha-review.html

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: விக்ரம் வேதா

vikramvedhareview

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமுக்கும் (மாதவன்) தாதாவான வேதாவுக்கும் (விஜய் சேதுபதி) இடையில் நடக்கும் ‘விக்கிரமாதித்தன் - வேதாளம்’ துரத்தலே ‘விக்ரம் வேதா’.

16 கொலைகள் செய்த வேதாவை சுட்டுக் கொல்ல வலைவீசித் தேடுகிறான் 18 என்கவுன்ட்டர்கள் செய்த விக்ரம். முதல் காட்சியிலேயே வேதாவின் கூட்டாளிகளைக் கொன்று குவிக்கிறது விக்ரம் குழு. தலைமறைவாக இருக்கும் வேதாவைக் கண்டுபிடித்துக் கொல்ல போலீஸ் படையை அனுப்பும்போது, வேதாவே சரணடைகிறான். அந்தக் கணத்தில் படம் களைகட்டுகிறது. தன் நண்பனும் சக போலீஸ் அதிகாரியுமான சைமனை (பிரேம்) கொன்றது யார் என்பதை தேடும் விக்ரமாக நாமும் மாறிப்போகிறோம். இறுதியில் நல்லவன் யார், கெட்டவன் யார்? இருவரும் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது படம்.

கனகச்சிதமான திரைக்கதையோடு இயக்கியுள்ளனர் புஷ்கர் - காயத்ரி. ஆரம்பத்திலேயே விக்கிரமாதித்தன் - வேதாளம் கதையை விளக்கி, இது வழக்கமான சினிமா இல்லை என்பதை புரியவைத்துவிடுகின்றனர். வழக்கமான போலீஸ் - ரவுடி கதை என்றாலும், திரைக்கதை வடிவமைப்பில் புதுமையைப் புகுத்தியதற்காக அவர்களுக்கு ஒரு சபாஷ்! மாதவன் - விஜய் சேதுபதி இடையே நடக்கும் ஆடுபுலியாட்டம், கதை சொல்லி தீர்வு கேட்பது, அந்த தீர்வை ஏற்கெனவே செயல்படுத்தி இருப்பது, தர்மம், உணர்வு என நியாயத்தின் பக்கங்களைப் பகிர்வது என திரைக்கதையை செதுக்கி நுணுக்கமான பதிவுகள் மூலம் அழுத்தமாக தடம் பதிக்கின்றனர். ஊகிக்கமுடியாத திடீர் திருப்பங்களை, வித்தியாசமான கோணங்கள் மூலம் நம்பத்தகுந்த வகையில் காட்சிப்படுத்தியிருப்பது கூடுதல் சிறப்பு.

‘போலீஸ் மகன் போலீஸாதான் இருப்பான். கிரிமினல் மகன் கிரிமினலாதான் இருப்பானா? அப்போ காந்தி அப்பா காந்தியா, கோட்சே அப்பா கோட்சேவா?’ என்பது போன்ற மணிகண்டனின் வசனங்கள் பல இடங்களில் கவர்கின்றன.

விஜய் சேதுபதியின் என்ட்ரிக்காக ஒட்டுமொத்த திரையரங்கமும் காத்துக் கிடக்கிறது. மிடுக்கான தோற்றம், கம்பீரமான நடிப்பில் மாதவன் அசத்துகிறார் என்றால் சின்னச் சின்ன உடல் அசைவிலேயே விஜய் சேதுபதி ஸ்கோர் பண்ணுகிறார். அவரது குரலும் அசட்டையான சேட்டைகளும் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. வடையை கையில் வைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்குள் நுழையும் காட்சியில் தொடங்கி படம் நெடுக பார்ப்பவர்களை உடல்மொழியால் வசீகரிக்கிறார். உணர்வுப்பூர்வமான தருணங்களில் நெக்குருகுவது, துரோகம் உணர்ந்து பழிதீர்ப்பது என மிகவும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ‘சட்டைல்லாம் ரத்தக்கறை ஆகிட்டே இருக்கு. அதான் துப்பாக்கி இருந்தா டொப்னு சுட்டுடலாம்ல’ என்று நகைச்சுவையைத் தெளித்து ரசிக்க வைக்கிறார்.

எல்லைக்கு உட்பட்டு துப்பறிவது, நியாயத்தைவிட சட்டத்துக்கு உட்பட்டு கடமை ஆற்றுவது, ஆதாரங்களைக் கண்டறிந்து தர்மத்தின் பக்கம் நிற்பது என நேர்த்தியாக நடித்திருக்கிறார் மாதவன். அநாயாசமாக ரத்தம் தெறிக்க என்கவுன்ட்டர் செய்வது, நம்பும்படி அதற்கு திரைக்கதை எழுதுவது, மனைவி ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் காதல் பொழிவது, விஜய் சேதுபதியிடம் மோதுவது ஆகிய காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

காட்டன் புடவை, மைதீட்டிய கண்கள், பக்குவமான நடிப்பு என அசல் வழக்கறிஞராகவும், இல்லத்தரசியாகவும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அசத்துகிறார். கணவன் மாதவனிடம் காதல் கொள்ளும் மனைவியாகவும், தன்பக்க நியாயத்துக்காக குரலை உயர்த்தி வாதாடும்போதும் கவனிக்க வைக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான உடல்மொழி, வசன உச்சரிப்பால் மனதில் நிற்கிறார் வரலட்சுமி. கதிர், பிரேம், விவேக் பிரசன்னா, ஹரீஷ் ஆகியோரின் கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன.

டைட்டிலில் இடம்பெறும் விக்கிரமாதித்தன் வேதாளம் அனிமேஷன் கதையின்போதே இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். தன் முத்திரையைப் பதித்துவிடுகிறார். ‘யாஞ்சி யாஞ்சி’, ‘டசக்கு டசக்கு’ பாடல்கள் இனிமையும் துள்ளலுமாக ஒலிக்கின்றன.

சென்னை வியாசர்பாடியை சமீபகால தமிழ் சினிமாக்கள் உள்ளும் புறமுமாகக் காட்டிவிட்டாலும்கூட, அந்தப் பழுதடைந்த குடியிருப்புகளில் இன்னும் காட்சிப்படுத்த எதார்த்த அழகு ஏராளமாக உள்ளது என்பதை பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு நிரூபிக்கிறது.

கதிர் ஏன் சென்னை வந்தார்? சேட்டா ஹரீஷ் என்ன ஆனார்? மாதவன் ஏன் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவை எடுத்துவிட்டு காரணம் தேடுகிறார்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. என்கவுன்ட்டர் செய்யப் புறப்படும் போலீஸ் படையின் குறுக்கே விஜய் சேதுபதி அலட்சியமாக நடந்து சென்றாலும், ஒரு போலீஸ் அதிகாரிகூட அவரை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. செக்போஸ்ட்டில் மாட்டாமல் கடத்தல் சரக்கை விஜய் சேதுபதி காரில் கொண்டுவருகிறார். இப்படி ஒன்றிரண்டு மைனஸ்கள் இருந்தாலும், காட்சிப்படுத்திய விதம், கதாபாத்திரத் தேர்வு, பார்ப்பவர்களின் புத்திசாலித்தனத்தை பரிசோதிக்கும் வகையிலான திரைக்கதை ஆகியவை மூலம், முருங்கை மர வேதாளம்போல, ரசிகர்கள் மனதில் உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்துகொண்டு விடுகிறான் ‘விக்ரம் - வேதா’!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19356937.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.