Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைவெளி நிரப்பப்படுமா?

Featured Replies

இடைவெளி நிரப்பப்படுமா?

 

தமிழக அரசியலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் இருபெரும் ஆளுமைகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்த ஜெயலலிதாவின் மறைவு மற்றும் கருணாநிதியின் முதுமை என்பன தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் 6 முறை ஆட்சிப் பீடம் ஏறிய ஜெயலலிதா தான் இறந்தாலும் கூட இன்னும் நூறாண்டுகள் அ.தி.மு.க. வாழும் என கூறினார். ஆனால் அவர் இறந்து ஓராண்டு நிறைவடைவதற்குள்ளேயே அக்கட்சி பல துண்டுகளாக சிதறி இன்று நிலையற்ற ஒரு ஆட்சியையே தமிழகத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கிறது.

வரட்சி, விவசாயிகள் தற்கொலை, நீட்தேர்வு, குடிநீர் தட்டுப்பாட்டு என்று பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கியுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கிறோம் என்று அணைகளிலிருந்து நீர் ஆவியாக வெளியேறுவதை தடுக்க ரெஜிபோர்ம் போட்டு நீர்நிலைகளை மூடும் திட்டங்களை தமிழக அமைச்சர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். இவை பெரும் கேலிக்கூத்தாக மாறியுள்ளதோடு ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு, ஈழத் தமிழர் நினைவேந்தல் என்று அரசுக்கு பிடிக்காத விடயங்களில் யார் ஈடுபடினும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்கின்ற நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் தங்கள் கட்சிக்குள்ளேயே பல கோடி ரூபாவை பேரம் பேசி அணிகள் மாறிக்கொள்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், சசிகலா – தினகரனின் செயற்பாடுகள் என்பன தமிழக ஆளும் கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு பா.ஜ.க. வின் கைப்பாவையாக அ.தி.மு.க. செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஸ்டாலினுக்கு அவரது தந்தை கருணாநிதியின் அளவு அரசியல் சாணக்கியம் இல்லை என்றே கூறவேண்டும். இதுபோன்ற காரணங்களால் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தற்போது தமிழகம் என்பது வழிதெரியாத பாதையில் சாரதி இன்றி செல்லும் பயணிகள் பஸ்ஸை போலவே உள்ளது. தமிழக அரசியலில், குழப்பமான சூழல் நிலவுகிறது.எனவே வெற்றிடத்தை நிரப்பப் போகிறோம் என, சிறிய கட்சிகள் எல்லாம் வேட்டியை மடித்து கட்டி களம் இறங்கியுள்ளன. அ.தி.மு.க. - தி.மு.க.வும், மக்களிடம் இருந்து செல்வாக்கை காப்பாற்றிக்கொள்ள, தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. இந்நிலையில், ரஜினி, கமல் என உச்ச நடிகர்கள் அடுத்தடுத்து எழுப்பிய, குரல்கள் அரசியல் வட்டாரத்தில், புதிய புயலை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் எப்போது அரசியலுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதோடு சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வேண்டாம் என்ற எதிர்ப்பை அரசியல் வாதிகளிடமும் ஏற்டுத்தியுள்ளது.

 ஆனால், தமிழக அரசியலை எடுத்து பார்த்தால் அங்கு சினிமாவையும் அரசியலையும் பிரிப்பது என்பது மிக கடினம். தமிழக அரசியலுக்கும் சினிமாத்துறைக்கும் நீண்டகாலத் தொடர்புண்டு. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என 60 ஆண்டு காலத் தமிழகத்தின் அரசியல் சரித்திரமே இவர்களால்தான் எழுதப்பட்டிருக்கிறது.கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், நெப்போலியன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலில் உள்ளனர். அதேபோல விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம் மிகச் சிறப்பான முறையில் தொடங்கி நல்ல முறையில் வளர்ந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பது வரை வளர்ந்த அவரது அரசியல் வளர்ச்சி அதன் பிறகு சரியத் தொடங்கிவிட்டது. நடிகர் விஜய்யும் நீண்டகாலமாக அரசியலுக்குள் நுழைவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். அண்மையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் அவரது குரல் ஒலித்தது. ஆனால் நேரடியாக அரசியலுக்கு வருவது தொடர்பில் இன்னும் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி ரஜினி, கமல் இவர்களில் யாரேனும் களமிறங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கிணங்கவே அவர்களின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.

  1996 ஆம் ஆண்டிலிருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது போலவும் வராதது போலவும் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடினார். அவரது ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வர வேண்டுமென நினைத்தாலும்,' ஆன்மிகமா? அரசியலா? 'எனத் தன்முன் இருக்கும் இரு பாதைகளில் ஆன்மிகத்தையே அவரது மனம் பெரிதும் விரும்புகின்றது. ஆனாலும் அண்மையில் தனது ரசிகர்களுடனான சந்திப்பில் அரசியல் பற்றி ரஜினி பேசினார். ஆண்டவன் முடிவு செய்தால் அரசிலுக்கு வருவேன் என்றார். மேலும், விரைவில் போருக்கு தயாராகுங்கள் என அரசியலுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். இதனால் இதுவரை வேற்று கட்சிகளில் இருந்த ரஜினி ரசிகர்கள் தற்போது ரஜினி மன்றங்களுக்கு திரும்பி கட்சிப் பணிகளை செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளில் அவ்வப்போது குரல் கொடுத்துவந்த நடிகர் கமல்ஹாசனுக்கும் அ.தி.மு.க. அரசிற்கும் இடையில் நிலவி வந்த பனிப்போர் இப்பொழுது நேரடி மோதலாகவே மாறிவிட்டது. அரசின் அனைத்துத்துறைகளிலும் ஊழல் நிலவுகின்றது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் தெரிவித்த கருத்து ஆளும் அ.தி.மு.க. அரசை பதற்றம் கொள்ள வைத்துள்ளது. அமைச்சர்கள் பலரும் வரிசையாக அவருக்கெதிரான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கமல், தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். இதனை நிரூபிக்குமாறு அமைச்சர்கள் கேட்டதும் மக்கள் தாங்கள் இலஞ்ச ஊழல் மூலம் அடைந்த இன்னல்களை மின்னஞ்சல் ஊடாக அரசிற்கு தெரியப்படுத்துங்கள் என்று அமைச்சர்களின் மின்னஞ்சல் இணைப்புகளை தனது டுவிட்டரில் வெளியிட்டு இதில் முறைப்பாடுகளை அறிவியுங்கள் என்ற கோரிக்கையை மக்களை நோக்கி கமல் விடுத்துள்ளார். கமலுடைய கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ஆதரித்துள்ளார். கமலின் அறிவிப்பு வந்த சில மணித்தியாலங்களிலேயே அமைச்சர்கள் தமது மின்னஞ்சல் முகவரிகளை அழித்து விட்டனர். இதேவேளை அரசியலுக்கு வருவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, கமல்ஹாசன் மறுக்கவில்லை. நான் எப்போதோ வந்து விட்டேன். விரைவில் உங்களை சந்தித்து பேசுகிறேன் என்று பதில் கூறியுள்ளார்.எனவே கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி என்று பரவலாக பேசப்படுகிறது. அவரது ரசிகர்களும் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கினால் சந்திக்க தயார் என்று அமைச்சர்களும் சவால் விடுத்து வருகிறார்கள். அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை கமல் எப்போது அறிவிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் பிக்பொஸ் நிகழ்ச்சி பற்றியும், தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியது ஏன் என்பது குறித்தும் வாரப்பத்திரிகை ஒன்றுக்கு கமல் பேட்டியளித்துள்ளார். அதில்

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலாசார சீரழிவு இருக்கிறது என்று பலர் சொல்கிறார்கள். நிலா காயுது நேரம் நல்ல நேரம். கட்ட வண்டி கட்ட வண்டின்னு பாட்டு பாடியவர்கள்தானே நாம். அப்போது அழியாத கலாசாரமா இப்போது அழிஞ்சிடப் போகுது. அதெல்லாம் கலாசார சீரழிவுன்னு நினைத்தால் சீரழிவுதான். கேளிக்கைன்னு நினைத்தால் கேளிக்கைதான். யாரைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவர் என்று சொல்கிறீர்கள்? ஜெயலலிதாவுடன் நான் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் கமலை போல அமர்ந்து நீங்கள் பேசியிருப்பீர்களா என்றும் கேட்டுள்ளனர். எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா இல்லையா என்பதை இதனை வைத்தே புரிந்து கொள்ளலாம். ஜெயலலிதாவை கடைசி வரைக்கும் நான் மேடமாகத் தான் பார்த்தேன். ஆனால் விருமாண்டி படத்திற்கு பிறகு அவர் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது.

நான் கட்டம் எதுவும் போடவில்லை. என்னை இந்த கட்டத்திற்கு (ஊழல் குற்றச்சாட்டு கூறும் அளவுக்கு) கொண்டு வந்து விட்டார்கள். 15 வருடங்களாக தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டிருந்தனர். முதலில் வலியில் பேசினேன். பின்னர் கோபத்தில் பேசினேன். இப்போது மேலும் உத்வேகத்துடன் பேசுகிறேன். இது முதிர்ச்சியாக கூட இருக்கலாம். தெருவில் போய் நின்று மக்களை எழுப்பி கோ‌ஷம் போடுடா என்று சொல்கிறவன் அரசியலுக்கு வந்துட்டான் என்றுதானே அர்த்தம். எனது இந்த எதிர்ப்புக் குரல் அரசுக்கு எதிராக மட்டுமல்ல என்பது மு.க.ஸ்டாலினுக்கும் தெரியும். ஒருவேளை அவர் ஆட்சிக்கு வந்தாலும் வாழ்த்துடன் முன்கூட்டியே இந்த எச்சரிக்கையையும் சொல்வேன்.நண்பர் ரஜினியிடமும் இதைதான் தெரிவித்துள்ளேன். தமிழக மக்கள் தலைவர்களை தேடுவதை விட்டுவிட்டு சரியான ஒரு சமூகத் தொண்டனை தேட வேண்டும். நல்ல ஆட்சி இல்லாதபோதும் குரல் கொடுப்பதில் முதல்வனாக இருக்க வேண்டும். காந்தி, பெரியார், காமராஜர் ஆகியோர் அந்த மாதிரியான முதல்வர்கள்தான். அதைத் தான் நானும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த ஆட்சி தானாகவே கலையும். கலைக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீ யார் என்று கேட்பார்கள். ஜோசியக்காரனா என்றும் கேட்பார்கள். நான் மக்களில் ஒருத்தன். ஆட்சியை கலைப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்வதாக நினைப்பது வேடிக்கை. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்து கொண்டுள்ளனர். விஸ்வரூபம்- 2, சபாஷ் நாயுடு ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு எனது அடுத்த படம் ‘தலைவன் இருக்கின்றான்'. படத்தின் தலைப்பை இப்போது முடிவு செய்யவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தலைப்பை பதிவு செய்து விட்டேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.  

ஆயினும், கமல்ஹாஸன் நேரடியாக அரசியல் கட்சி தொடங்க மாட்டார். கட்சி தொடங்க, தொண்டர்களை பராமரிக்க, தேர்தலைச் சந்திக்க ஆகும் செலவுகள் பற்றி அவருக்கும் தெரியும். போத்தீஸ், பிக்பொஸ், கபடி என விளம்பரத் தூதராக மாறி சம்பாதித்துக் கொண்டிருக்கும் கமல், நிச்சயம் கைக்காசை இறக்கமாட்டார். அதனால் தனிக் கட்சி என்பது சந்தேகம்தான். கமலுக்கு இப்போது தி.மு.க. மட்டுமே பலத்த ஆதரவுக் குரல் கொடுத்துள்ளது என விமர்சிக்கப்படுகிறது. மேலும் தமிழக ஆளும் கட்சியும் மத்திய அரசும் கமலை கடுமையாக எதிர்க்கின்றனர். இதேவேளை ரஜினியின் அரசியல் நுழைவை தடுப்பதற்கும் கதிராமங்கலம் போராட்டத்தை மறைக்கவும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் விமர்சனங்களை மூடவுமே கமல் அரசியல் பேசுவதாக சிலர் விமர்சிக்கின்றனர். ஆயினும் கமல் இதற்கு முன்னரும் கூட வெளிப்படையாக அரசை விமர்சித்துள்ளார். அத்தோடு பல சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். ரஜினி தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறியதை வழிமொழிந்து தமிழ் பற்றுள்ளவர் தமிழகத்தை ஆளலாம் என்றும் கூறியிருந்தார்.

பொறுத்திருந்து பார்ப்போம் தமிழக அரசியலில் ரஜினி, கமல் இருவரும் களம் இறங்குவரா என்று. ரஜினி கன்னடர், தமிழக அரசியலில் நுழையக்கூடாது என்ற சீமான் உள்ளிட்டோர் எதிப்பு தெரிவிக்கின்ற போதிலும் ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதேவளை கமல் நேரடியாக அரசியலில் இறங்கினால் அவரை இனத்தை கூறி யாரும் ஓரங்கட்ட முடியாது. ஏனெனில் அவர் தமிழர். அத்தோடு சினிமாவை தாண்டி கமலும் ரஜினியும் நல்ல நண்பர்கள் என்பதால் இருவரும் இணைந்தும் களமிறங்க கூடும் ... இல்லை.. ஒருவர் களமிறங்க மற்றவர் ஆதரவு தெரிவிக்கலாம்.... இவர்கள் சினிமாக்காரர்கள்.... அரசியலில் ஜெயிக்க முடியாது என்று நாம் கூறமுடியாது ... அரசியலில் தோற்றுப்போவார்கள் என்று ஆருடம் கூறவும் முடியாது.... பொறுத்திருந்து பார்ப்போம் தமிழகத்தின் அடுத்த தலைமை சினிமாவில் இருந்து வரபோகின்றதா என்று... ஆனால் தமிழகத்தில் இப்போது பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. மத்திய அரசு தமிழகத்தை கண்டுகொள்வதாகவே இல்லை.. கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் வேண்டாம் என மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர். 100 நாட்களை கடந்து விவசாயிகள் டில்லியில் போராடினர். ஆனால் மத்திய அரசு இவற்றை கணக்கெடுத்ததாக தெரியவில்லை. மேலும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட போதிலும் மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இது போன்ற சம்பவங்கள் தமிழர்களை இரண்டாம் தாயின் சேயாக பார்க்கும் கண்ணோட்டத்தையே காட்டுகின்றது. மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. கால்பதித்து விட்டது. எதிரெதிராக இருந்த நிதிஷ் குமாரையே தன் பக்கம் இழுத்து விட்டது. தமிழகத்தில் இப்போது எதற்கும் வளைந்து கொடுக்கும் அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. வின் கைபொம்மை போன்றதாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து கால்பதிக்க அது எதுவும் செய்யும். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டுவைத்து கூட களமிறங்கலாம். இப்போதே தமிழின் தொன்மையை அழிக்கும் வகையில் ஹிந்தி கட்டாயம் உள்ளிட்ட பல விடயங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. அத்தோடு பெரியாரின் கருத்து ஆழப்பதிந்துள்ள தமிழகத்தில் பா.ஜ.கவின் மத ரீதியான நடவடிக்கைகள் மக்களை பிளவுபடுத்தக் கூடும். இது தமிழகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல. ஏற்கனவே காவிரி தொட்டு அண்டை மாநிலங்கள் அனைத்தும் தமிழகத்தை எதிரியாகவே பார்க்கின்றன. குடிநீருக்காக நதிநீரை வழங்கவே மறுகின்றன.. இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளன. இதனை தீர்க்கும் திராணி தற்போதுள்ள அரசியல்வாதிகளிடம் இல்லை. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது பிரதமர் மோடி அவரை வீடுதேடி வந்து சந்தித்துள்ளார். ஆனால் இன்றைய அ.தி.மு.கவினர் பா.ஜ.க. எள் என்றால் எண்ணெய் போல உள்ளனர். இந்நிலை மாற வேண்டும். ஆளுமை மிக்க தலைமைத்துவம் ஒன்றின் தேவைப்பாடு தமிழகத்துக்கு மிக மிக அவசியம்.. இந்நிலையில் ரஜினி, கமல் இருவரில் யார் களமிறங்கினாலும் அது கருணாநிதி மற்றும் ஜெயலலிதா விட்டு சென்றுள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும்.. பொறுத்திருத் திருந்து பார்ப் போம்... இந்த இடைவெளி இவர்களால் நிரப்பப்படுமா என்று.. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-29#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.