Jump to content

ஊஞ்சல் தேநீர்


Recommended Posts

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 25

தமிழைப் புரியாமல் எழுத சில எழுத்தாளர்கள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களில் தேனுகாவும் ஒருவர் என்று அந்தக் காலத்தில் அவரை விமர்சித்தவர்கள் உண்டு. ஆனால், அவர் ஒருவர்தான் தமிழ்ச் சூழலில் புழக்கத்தில் இல்லாத பல இசங்களைக் கற்றுணர்ந்து, அதன் தேவைகளையும் புரிதலையும் ஏற்படுத்தியவர்.
9.jpg
எப்போதும் தனக்குத் தெரியாத விஷயத்தை ஒருவர் எழுதினால் அவரை வார்த்தைகளால் சேதப்படுத்தும் வழக்கத்தை தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கிறது. என்றாலும், அவர் தன் மீது வீசப்பட்ட அத்தனை விமர்சன அஸ்திரங்களையும் மாலைகளாக மாற்றிக்கொள்ளும் பக்குவத்தைப் பெற்றிருந்தார். கேட்க மிரட்சியாகவும், ஆச்சர்யமாகவும் உள்ள அநேக செய்திகளை அவர் ஆர்வத்தோடு எங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

‘காந்தியமே உலகை வழிநடத்தும்’ என்றும் ‘காந்திக்காக ஏங்கும் உலகு’ என்றும் அவர் கட்டுரைகளின் வாயிலாக காந்தீயக் கருத்துகளைத் தூக்கிப் பிடித்தார். குறிப்பாக கியூபிசம், கன்ஸ்ட்ரக்  ஷனிசம், இம்ப்ரஷனிசம், போஸ்ட் இம்ப்ரஷனிசம், எக்ஸ்பிரஷனிசம், சர்ரியலிசம் போன்ற இசங்களின் ஊடே கலை இலக்கியத்தை அணுகும் பயிற்சியை அவரே எங்களுக்கு வழங்கினார்.

“ஒருவன் சிரிக்கிறான். ஆனால், ஆழ்மனதில் அவன் அழுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை எப்படி ஓவியத்தில் கொண்டுவருவது? இந்த சிக்கலைத் தீர்க்கத்தான் சர்ரியலிச ஓவியம் பிறந்தது!” என்பார். “ஒரு கோப்பையைப் பார்க்கிறீர்கள். அதன் வடிவம் என்ன என்றால் உடனே வட்டம் என்பீர்கள். உண்மையில், கோப்பையின் மேற்புற வாயைக் கவனத்தில் கொண்டு வட்டம் என்கிறீர்கள்.

ஆனால், அது வட்டமில்லை. நீங்கள் எதிரில் பார்ப்பது வேறு. சாய்கோணத்தில் அமைந்திருக்கும் வடிவம் வேறு. ஒரு பொருளை பல்வேறு கோணங்களாக பார்க்க விரும்பினால் அதுவே கியூபிசம்...” என எளிய உதாரணங்களால் இசங்களை விளக்குவார். இயல்பிலேயே எதையும் தன்னுள் மறைத்துக்கொள்ளாத அவருடைய பண்பினால் ஓவியம், சிற்பம், இசை மட்டுமல்ல, கட்டிடக்கலை குறித்தும்கூட ஓரளவு எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

முதன்முதலில் கவிஞர் பாலா எழுதிய சர்ரியலிசம் பற்றிய நூலை வாசித்த தேனுகா, “இலக்கியத்தில் உள்ள சர்ரியலித்தை எழுதிய நீங்கள் ஓவியத்தில் உள்ள சர்ரியலிசத்தையும் எழுதியிருக்கலாமே?” என்றிருக்கிறார். டாலி, ஆந்த்ரே பிரத்தோன், மார்க்ஸ் ஏனிஸ்ட் போன்ற ஓவியர்களைக் குறிப்பிட்டு தேனுகா பேசியதைக் கேட்ட பாலா, “இவ்வளவு தெரிந்த நீங்கள் என்னைவிட சிறப்பாக எழுத முடியும்...” என உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

அதன் விளைவாகவும் அதன் தொடர்ச்சியாகவும் எழுதப்பட்டதுதான் ‘டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை’ என்னும் அவருடைய முதல் கட்டுரை. இறந்த உடலின் உள்ளே உள்ள சதை, எலும்புகளை எடுத்துவிட்டு பதப்படுத்தி வைப்பவர்களுக்கு ‘டாக்சிடெர்மிஸ்டுகள்’ என்று பெயர். தமிழ் மரபு சார்ந்த வடிவங்கள் அழிந்துவருகின்றன. அழிந்துவரும் அவ்வடிவங்கள் நவீனத்திற்கு முன் நிற்காது.

எனவே, அதைப் பதப்படுத்தி வைக்கவேண்டும் என்ற கருத்தைத்தான் அக்கட்டுரையில் எழுதியிருப்பார். ‘தமிழ்ப்பாலையில் ஒரு பசுஞ்சோலை’ என அக்கட்டுரை குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸில்’ க.நா.சு. வியந்தது குறிப்பிடத்தக்கது. சிற்பங்களிலும் ஓவியங்களிலும் தென்படும் தமிழ்ப் பண்புகளைப் பற்றி அவருடைய ஆய்வுகள் பேசுகின்றன.

போக சக்தி அம்மன் திரிபங்கமாக அமர்ந்திருப்பதையும் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் சரிபங்காக அமைந்திருப்பதையும் காரண காரியத்தோடு விளக்கியிருக்கிறார். இந்திய தத்துவ மரபிலிருந்தும் தமிழ் தத்துவ மரபிலிருந்தும் நடராஜரையும் சோமாஸ்கந்தரையும் அணுகிய அவருடைய பார்வைகள் வித்யாசமானவை.

அழகுணர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்திய ஓவியங்களில் பயன்படுத்தப்படும் தாந்திரிக் வண்ணங்களுக்குப் பின்னாலுள்ள தொன்மத்தை அவர் ஆய்ந்திருக்கிறார். கறுப்பை ராமருக்கும், நீல வண்ணத்தைக் கண்ணனுக்கும் பச்சையைக் காளிக்கும் பயன்படுத்தும் முறை தத்துவங்களிலிருந்து பெறப்பட்டிக்கிறது.

ஒரு நடன மாதுவை வரையும்போது அவள் இடையும் கையிலுள்ள கிளியும் நளினமும் எப்படி வரவேண்டும் என முன்னோர்கள் வகுத்துள்ள இலக்கணங்களை அவர் அறிவார். ஆர்ட்டும், கிராப்ட்டும் எங்கு வித்யாசப்படுகின்றன என்பதுதான் அவருடைய பெரும்பாலான கட்டுரைகள். “பார்த்தது போலவே செய்வது ஒருபோதும் கலையாகாது. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டக்கூடியதாக இருந்தால், அதில்தான் கலையம்சம் இருக்கிறது...” என்னும் தெளிவை அவர் கொண்டிருந்தார்.

ஒருமுறை இலக்கியப் பேரவையில் நானொரு கவிதை வாசித்தேன். அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தனைபேருமே அதை கவிதையே இல்லை என்றுதான் சொன்னார்கள். எல்லோருடைய கருத்துரைகளையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த தேனுகா, “இதையேன் கவிதை இல்லை என்கிறீர்கள். உண்மையில், இதுவே கவிதை.

லகுவாக புரிந்துகொள்ள முடியாததை இல்லை என்றோ தவறு என்றோ நம்முடைய மனம் சொல்கிறது. ஆனால், ஒவ்வொரு படைப்பிலும் ஏதோ ஒன்று இருக்கிறது. வெறுமனே ஒரு படைப்பு உருவாவதில்லை. ஒரு மனிதனிடம் புரிந்துகொள்ள முடியாத சில விஷயங்கள் இருப்பதால் அவன் மனிதனே இல்லை என்றா சொல்கிறோம்? அப்படித்தான் படைப்பும்.

புரிந்துகொள்ள முடியாத எல்லையிலிருந்துதான் ஒரு படைப்பு உருவாகிறது, நம்முடைய முயற்சியினால் அதைக் கண்டடைய வேண்டுமே தவிர, புறக்கணிக்கக் கூடாது. இதே கவிதையை பாரதி, இன்னும் சில ஆண்டு கழித்து வேறு மாதிரி எழுதலாம். ஒருவேளை அப்போது நம்மால் புரிந்துகொள்ளப்படலாம். உடனே, புரியவேண்டுமென்பதில்லையே. காலத்தைப்போலவே கவிதைகள் கனிவதற்கும் காத்திருக்க வேண்டும்.

பொதுவாக படைப்பு என்பதில் அனுபவத்தைத்தான் பார்க்கவேண்டுமே அன்றி, சரியையோ தவறையோ புரிதலையோ பார்க்க வேண்டியதில்லை...” என்றார். ஒருபுறம் புதுமைகளை ஏற்கவும் இன்னொரு புறம் மரபுசார்ந்த ஆக்கங்களை வளர்த்தெடுக்கவும் அவர் விரும்பினார்.

கர்நாடக இசை சாரங்களை உள்வாங்கி வியந்தோதும் அவருக்கு பீத்தோவானின் இசைக் குறிப்புகளை சிலாகிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஜியாமெட்ரி வடிவங்களைக் கொண்டு ஓவியம் வரைந்த எஸ்சரை புகழ்ந்துகொண்டே இந்திய ஓவியர்களான தையப் மேத்தாவையும் எம். எப். உசேனையும் சுட்டிக்காட்டுவார்.

இப்படியெல்லாம் வியப்பதற்காகவே அவர் நூல்களை தேடித்தேடி வாசித்தார். பார்த்து வந்த வங்கி வேலையைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஓவியக் கண்காட்சிகளைக் காண பிற ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பயணப்படும் அதிதீவிர கலா ரசனை உடையவராக அவரிருந்தார். “ஒருமுறை பட்டீஸ்வரம் கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே நின்றபடி வீணை வாசிக்கும் சிற்பம் ஒன்றிருந்தது. அதன் கையில் இருந்த வீணையில் இரண்டு கும்பங்கள் மட்டுமே இருந்தன.

நடுப்பகுதி இல்லை. ஆனாலும், அந்த சிற்பத்தின் அழகு எவ்விதத்திலும் கெடவில்லை. ஏனெனில், சிற்ப லட்சணங்களை புரிந்துகொண்டால் ஒரு சின்ன கல்லில் கூட உங்களால் சிற்பத்தைப் பார்க்க முடியும்...” என்று அவர் விவாதிக்கத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது. “மேற்கு நாடுகளிலெல்லாம் நம்மூரைப் போல வரைவதை எல்லாம் ஓவியமென்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு ஓவியத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன், அதில் காம்போசிஷன் இருக்கிறதா, அறிவியல் சார்ந்து உள்ளதா, இம்பரஷனிசம் என்றால் ஆப்டிக்கல் கலர்ஸ் இல்யூஷன் உள்ளதா என்றெல்லாம் பார்ப்பார்கள். ஒரு ஓவியத்தை கூர்ந்து கவனித்தால்தான் அனலிட்டிகளுக்கும் சிந்தட்டிக்கள் கியூசத்திற்கும் உள்ள வேறுபாடுகள் விளங்கும்...” என்பார். பெரிய பெரிய தத்துவங்களைக்கூட எளிய விதத்தில் சொல்லக்கூடிய அவரைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பார்கள்.

உங்களைச் சந்திக்க வருகிறோம் என்று சொல்லிவிட்டால் போதும், தேதியிலிருந்து கிழமையிலிருந்து தங்க ஏதுவான அறைவரை கவனித்துக்கொள்வார். நவீன ஓவியக் கோட்பாடுகளை உள்ளடக்கி கட்டப்பட்ட அவருடைய வீடே ஆர்ட் கேலரியைப் போலிருக்கும். அவ்வீட்டை அவர் பொறியாளர் முகமது ரஃபியின் துணையுடன் பியத் மோந்திரியானின் நியோபிளாஸ்டிஸ பாதிப்பில் கட்டியிருந்தார். குறிப்பாக, அவர் வீட்டிலிருந்த ஒரு நாற்காலி ரொம்பவும் விசேஷமானது.

ரீத்வெல்த்தின் உலகப் புகழ்பெற்ற சிவப்பு நீலநிற நாற்காலியைப் போலவே ஆசாரி துரையின் உதவியுடன் ஒரு நாற்காலியை அவர் வடிவமைத்து வைத்திருந்தார். இந்த நாற்காலி வித்யாசமாக இருக்கிறதே என்றால் ரீத்வெல்த்தின் சிறப்புகளைப் பகிர்ந்துகொள்வார். பெரும்பாலும் நண்பர்களுடனான அவரது உரையாடல் இப்படித்தான் ஆரம்பிக்கும்.

இசையிலிருந்து சிற்பத்திற்கும், சிற்பத்தில் இருந்து ஓவியத்திற்கும், ஓவியத்திலிருந்து இலக்கியத்திற்கும், இலக்கியத்திலிருந்து இசைக்குமாக அவருடைய உரையாடல்கள் பெரிய வட்டமடிக்கும். அந்த வட்டப்பாதையில் சிக்கிக்கொண்டால் அவ்வளவு எளிதாக அதிலிருந்து வெளிவர முடியாது.
 

(பேசலாம்...)

www.kungumam.co

  • Replies 75
  • Created
  • Last Reply
Posted
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 26

உலகமே தேனுகாவை கலை விமர்சகர் என்று அடையாளப்படுத்தினாலும் அவர் அந்த பதாகைக்குள் அடைபட மறுத்தார். தெரிதாவைப்போல் அவருமே மொழியின் குழப்பங்களிலிருந்து விடுதலை பெறவே விரும்பினார். சூரசம்ஹாரத்தில் முருகன், சூரன் தலையை வெட்ட, யானைத் தலைவரும் யானையின் தலையை வெட்ட, யாளித் தலைவரும்... அப்படித்தான் தேனுகாவும் இருந்தார்.
10.jpg
ஒன்றோடு நிறுத்திக் கொள்வதில் அவருக்கு சம்மதமில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றை தாவிப் பிடிக்க முயன்றார். இசை, ஓவியம், சிற்பம் என்ற வெவ்வேறு கலை வடிவங்களை கைக்கொண்டாலும் அந்த மூன்றிலுமுள்ள மையப் புள்ளியாகத் தத்துவத்தையே முதன்மையாகக் கருதினார்.

‘வெட்டிக்கிட்டேன் துளித்துக்கிட்டேன், வேற தல வச்சிக்கிட்டேன்’ என்ற சூரசம்ஹாரப் பாடலைப் போல வேறு வேறு உருவங்களாக அவர் வெளிப்பட எண்ணினார். இறுதியில் தத்துவம் சார்ந்து செல்ல விரும்பிய தேனுகா, வார்த்தைகளைத் துறக்கப் போகிறேன் என்று சபதமெடுத்தார். மத்திய அரசு வழங்கும் ஃபெலோஷிப் விருது உள்பட அவர் எழுதிய பல நூல்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன.
10a.jpg
என்றாலும், நிறைவுறாத மனத்துடனே அவரிருந்தார். படைப்பாளர்களுக்கே உரிய நிறைவுறாத அந்த மனம், அவரை பல்வேறு தளங்களுக்குப் பயணப்பட வைத்தது. தமிழ்ப் போதாமைகளையும் தமிழ்த் தேவைகளையும் கவனத்தில் கொண்டிருந்த அவர், போலிகளைப் புகழ்வதில் தயக்கம் காட்டினார். அதன் விளைவாக பெரும் மன உளைச்சலுக்குள் அந்த போலிகள் அவரைத் தள்ளினார்கள்.

தங்களைப் பாராட்டாத தேனுகாவை அங்கீகரிப்பதில்லை என்று முடிவெடுத்த அந்த போலிகள், அவருக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டதை கலை இலக்கிய உலகு நன்கறியும். உள்ளூர்க்காரர்களை உதாசீனப்படுத்திவிட்டு உலகப் பார்வை யென்பது பம்மாத்து என்று அந்த போலிகள் தேனுகாவைத் திணறடித்தார்கள்.

பட்டீஸ்வரத்திலுள்ள நாயக்கர் காலத்து சுவரோவியத்தை காப்பியடித்து, அதை மைசூருக்கு அனுப்பி விருது பெற்ற ஒருவர், ஆள்பிடித்து தேசிய விருது பெற முயன்ற இன்னொருவர் என அந்த போலிகள் கூட்டத்திலிருந்த தத்துப்பித்துகளே தேனுகாவைக் காயப்படுத்தினார்கள். நிஜத்தை உணர்ந்தவர்களுக்கு வார்த்தைகள் கைகொடுப்பதில்லை.

மொழிகளின் குழப்பங்களிலிருந்து விடுதலை பெற விரும்புகிறேன் என்று அவர் சொன்னதுகூட அந்த உளைச்சலின் வெளிப்பாடுதான். தேனுகாவின் தாத்தா சீனுவாசம் பிள்ளை. அந்த சீனுவாசம் பிள்ளைதான், வள்ளலாரின் அருட்பா பாடல்களை தெருவெங்கும் நடந்தபடியே பாடிப் பரப்பியவர். அவருடைய மகனான முருகையா, சுவாமிமலை முருகன் கோயிலில் நாதஸ்வர சேவகம் செய்துவந்தவர். அதாவது தேனுகாவின் தந்தை.

கோயில் நடையில், ஒவ்வொரு நாளும் ஆறு வேளை நாதஸ்வரம் வாசித்த தந்தை முருகையாவுக்குத் தாளம் தட்டும் சிறுவனாக தேனுகா இருந்திருக்கிறார். தம்முடைய பால்ய வயதிலேயே இசையின் நுட்பங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு அப்படித்தான் கிடைத்திருக்கிறது. அவரே ஒருதரம் சொன்னதுபோல, தினசரி கோயிலில் ஆறு வேளையும் அறுபது படிகள் ஏறி இறங்கி சங்கீதத்தைப் பயின்றிருக்கிறார்.

காலையில் பூபாளம், பெளலி, மலையமாருதம், பிலஹரி, மதியத்திற்குமுன் சுருட்டி, மதியத்தில் மத்தியமாவதி, சாயங்காலத்தில் பூர்வீ கல்யாணி, கல்யாணி, இரவில் நீலாம்பரி என்று அவருடைய தந்தை நாதஸ்வரத்தை இசைத்திருக்கிறார். தவிர, சந்நிதி தெருவிலேயே அவர்கள் வீடு இருந்தபடியால் பெரிய பெரிய இசை மேதைகள் எல்லாம் அவருக்கு இள வயதிலேயே அறிமுகமாகிவிடுகிறார்கள்.

அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமராத இசை ஜாம்பவான்களே இல்லை. ஒருபுறம் இசை ஜாம்பவான்கள் என்றால் மற்றொரு புறம் இலக்கிய ஜாம்பவான்கள். மெளனி, கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட் சுவாமிநாதன், க.நா.சு., எம்.வி.வெங்கட்ராம் போன்ற பெரும் இலக்கியவாதிகளின் பரிச்சயத்தையும் அவர் அந்த வயதிலேயே பெற்றுவிடுகிறார்.

எல்லோருக்கும் எல்லாமும் வாய்ப்பதில்லை. அப்படியே வாய்த்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ளும் திறமும் உரமும் தேனுகாவைப் போன்றோருக்கே சாத்தியமாகிறது. ஒருமுறை ‘பெரும்பாலும் நின்றுகொண்டே வாசிக்கும் நாதஸ்வரக் கலைஞர்கள் எப்போதிலிருந்து அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தார்கள் தெரியுமா?’ என்றார்.

எங்களுக்குத் தெரியாதென தெரிந்துகொண்டு அவரே அச்சம்பவத்தை சொல்லத் தொடங்கினார். “திருவையாறு தியாகப்பிரம்ம உற்சவத்தில், தியாகராஜ சுவாமிகள் பட ஊர்வலம் அவருடைய வீட்டிலிருந்து புறப்பட இருந்தது. அவ்விழாவுக்கு நாதஸ்வரம் இசைக்க அழைக்கப்பட்டிருந்தவர் நாதஸ்வரச் சக்ரவர்த்தியான திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை.

மங்கள வாத்தியத்திற்குத்தான் முதலிடம் என தியாகப்பிரம்ம செகரட்டரி முசிறி சுப்ரமணிய ஐயர், ராஜரத்தினத்தை அழைக்கிறார். அப்போது ராஜரத்தினம் பிள்ளை நின்றுகொண்டு வாசிக்க மாட்டேன், மேடையில் அமர்ந்துதான் வாசிப்பேன் எனச் சொல்லிவிடுகிறார். அன்றிலிருந்துதான் நாதஸ்வரக் கலைஞர்கள் அமர்ந்து வாசிக்கும் பழக்கமேற்படுகிறது.

நின்றவர்களை அமரவைத்த பெருமை ராஜரத்தினத்திற்கே உரியது. ஒரு கலைஞன் தன் ஸ்தானத்தை இப்படித்தான் நிலைப்படுத்தணும் இல்லையா..?” என்றார். மைசூர் மகாராஜா ராஜரத்தினத்தை அழைத்து வாசிக்கச் சொன்னபோதுகூட தனக்கும் ராஜாவுக்கு சமமான மேடையை அமைத்தால்தான் வாசிப்பேன் என்றிருக்கிறார்.

கலையை ரசிகனுக்குக் கீழே வைக்கக்கூடாது, சமானமாக அல்லது சமத்துக்கு மேலாக வைக்க வேண்டும். அந்த நிகழ்வில், ராஜரத்தினத்தின் இசையைக் கேட்ட மகாராஜா அவரைத் தன்னுடைய இருக்கையில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறார் என்பன போன்ற தகவல்களையெல்லாம் அவர் சொல்லக் கேட்பது தனி ருசி.

நாதஸ்வரச் சக்ரவர்த்தி ராஜரத்தினத்தைப் போலவே கிளாரிநெட் மேதை என்று போற்றப்படும் ஏ.கே.சி. நடராஜனைப் பற்றியும் அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அரியக்குடி, செம்பை, செம்மங்குடி, ஜி. என். பி., மதுரை மணி ஐயர் என்று எத்தனையோ பேர் அவர் உரையாடல்களில் உயர்த்தப்படுவார்கள்.

காருக்குறிச்சி அருணாசலமும் ஏ.கே.சி நடராஜனும் ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கே., வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர்கள் போனது என்.எஸ்.கே.வை பார்ப்பதற்கல்ல. அங்கே தங்கியிருந்த டி.என்.ராஜரத்தினத்தைப் பார்க்க. இவர்கள் போயிருந்தபோது டி.என்.ஆரும், கலைவாணரும் மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

காருக்குறிச்சியும் ஏ.கே.சியும் பதுங்கிப் பதுங்கி உள்ளே போவதைப் பார்த்த டி.என்.ஆர்., கலைவாணரிடம், “அவனுவளுக்கும் ரெண்டு கிளாஸ் ஊத்திக்கொடுங்க...” என்றிருக்கிறார். “என்னைப்போல சங்கீத ஞானம் வரணுமின்னா இந்த ஞானப்பால குடிக்கட்டு’’ முன்னு டி.என்.ஆர் சொல்ல, கலைவாணர் பதறிப்போய் மறுத்த கதைகளை எல்லாம் தேனுகாவிடமிருந்துதான் தெரிந்து கொண்டோம்.

இச்சம்பவத்தை ஏ.கே.சி.யே தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகச் சொல்லிய அவர், அதைக் கட்டுரையாகவும் எழுதியிருக்கிறார். கலைஞர்கள் தங்களுக்குப் பின்னால் வரும் கலைஞர்களை எப்படி நடத்தினார்கள் என்பதைச் சொல்வதற்காகவே அச்சம்பவத்தை எங்களுக்குச் சொன்னாரே தவிர, மதுவை ஞானப்பாலாக அருந்தலாம் என்னும் அர்த்தத்தில் அல்ல.

சக கலைஞர்களை சமமாக நடத்தும்போதுதான் கலைகள் ஜீவிக்கும் என அந்தக் காலத்துப் பெரியவர்கள் அறிந்திருக்கிறார்கள். இறுதிவரை தேனுகாவுக்கு கும்பகோணமும் அதைச் சுற்றியுள்ள கோயில்களும் பிரமிக்கத்தக்க விஷயங்களாகவே இருந்தன. ஒரே கோயிலுக்குப் பலமுறை போய் சிற்ப நுட்பங்களை சிலாகித்துக்கொண்டிருப்பார்.

கும்பகோணத்தின் சிறப்பு டிகிரி காப்பியில் அல்ல, அங்கே வாழ்ந்த எண்ணற்ற கலை இலக்கிய கர்த்தாக்களே என்பது அவர் சித்தம். கணித மேதை ராமானுஜனையும் அவர் அப்படித்தான் உள்வாங்கிக்கொண்டார். ‘எண்களின் தோழன் ராமானுஜன்’ என்னும் கட்டுரையில், ‘எண்களுடன் தோழமை கொண்டவர் ராமானுஜன் மட்டுமல்ல. கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், இசைக்கலைஞர்கள் போன்ற எண்ணிறைந்தோர் எண்களால் ஆன புதிய படைப்புகளைப் படைத்தனர்.

ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார், சைவ சமயக் குரவர்களில் ஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களும் ஒன்று, இரண்டு, மூன்று என ஏழு எண்கள் வரை படைத்த ரகுபந்த கவிதைகள் கணித செய்யுள் வடிவத்தின் எடுத்துக்காட்டு...’ என்கிறார். ‘இசை உலகிலும் எண்களுண்டு. தாளம் என்னும் கால எண்களால் ஆனது லயம்.

ஒன்பது தாள பார்வதி அம்மன் சிலை, பத்து தாள சிவன், விஷ்ணு, ரிஷபதேவர் சிலைகள் என அனைத்திலும் எண்களுண்டு. யெகுதி மெனுகின் வயலின் இசைக்கும் எஸ்சர் என்ற ஜியாமெட்ரி ஓவியனுக்கும் கூட எண்களே பிரதானம்’ என்று அக்கட்டுரையை முடித்திருப்பார். ஆதிமூலத்தின் அரூப ஓவியங்கள், சந்தானராஜின் ஓவியப் பெருவெளி என அவர் அடுத்தடுத்து எழுதிய கட்டுரைகள், சம்பந்தப்பட்ட ஓவியர்களின் வாழ்க்கையில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தின.

கம்பீர நாட்டை, சங்கராபரணம், நீலாம்பரி, ஆகிரித்தை போன்ற தலைப்புகளின் கீழ் அவர் எழுதிய கவிதைகளும் குறிப்பிடத்தக்கன. ‘தோற்றம் பின்னுள்ள உண்மைகள்’ என்னும் மிக முக்கியமான அவருடைய கட்டுரையில், நவீன கவிதைகளைப் புரிந்துகொள்வதிலுள்ள சிக்கலையும் அச்சிக்கலை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதையும் சொல்லியிருக்கிறார்.

ஞானக்கூத்தனின் கவிதைகளை மேற்கோளாகக் கொண்டு அவர் நவீன கவிதைகளின் போக்குகளைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறார். என் திருமணப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது, அதில் அச்சிடப்பட்டிருந்த என் கவிதையை வாசித்துவிட்டு “எதிர்பார்ப்புதான் வாழ்க்கை, இல்லீங்களா பாரதி” என்றார்.

“எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கலைஞனுக்கு கலை ஓர் அனுபவமாக வாய்க்கிறது. அதுபோலவே உங்களுக்கும் வாழ்க்கை அனுபவமாக மாறட்டும்” என்று வாழ்த்தினார். அனுபவங்களின் திரட்சிதான் வாழ்க்கை என்றால் தேனுகா, அந்த அனுபவங்களைத் தேடித்தேடி பெற்றுக்கொண்டவர். கலை ரசிகராக இருந்து கலை விமர்சகராக மாறியவர், ஒருகட்டத்தில் கலைப் பித்தராகவே மாறிப்போனார்.

எரிக் எரிக்சன் என்ற உளவியல் அறிஞரைப் பற்றிய குறிப்புரையில், ‘இவர் மரணத்தின் மண்டை ஓட்டையே பிளந்து கபால மோட்சத்தைக் காண்பிப்பவர்’ என்று எழுதியிருப்பார். மரணத்தின் மண்டை ஓட்டை பிளக்கும் வாய்ப்பிருந்தால் நான் முதலில் காண விரும்பும் முகம் தேனுகாவினுடையதாயிருக்கும். ஏனெனில், நீண்ட நெடிய கலை இலக்கியப் பரப்பில் மோட்சத்தைக் காட்டும் சக்தி அந்த ஒரு முகத்திற்கு மட்டுமே உண்டு.
 

(பேசலாம்...)

www.kungumam.co

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 27

இரண்டாயிரமாவது ஆண்டின் நடுப்பகுதியில், பாக்கியம் சங்கரின் ‘வீடுகள் என்னும் அறைகள்’ கவிதை நூல் வெளிவந்தது. இன்று சிறுகதையாசிரியனாகவும் திரைப்பட வசனகர்த்தாவாகவும் வலம்வரும் பாக்கியம் சங்கர், அன்று கவிஞனாகியே தீருவதென்னும் கங்கணத்தைக் கட்டிக்கொண்டிருந்தான்.
10.jpg
அவ்வப்போது எழுதி வைத்திருந்த கவிதைகளை நூலாக்கிப் பார்க்கவும் அந்நூலை விழா எடுத்து விமரிசையாக வெளியிடவும் அவன் ஆசையுற்றிருந்தான். ஏறாத பதிப்பக வாசல்களே இல்லை. எல்லா பதிப்பகங்களும் ஏதேதோ காரணங்களைச் சொல்லி தட்டிக்கழித்தன. அப்பதிப்பகங்கள் கவிதைகளைத் தவிர எதைக் கொடுத்தாலும் பிரசுரிக்கிறோம் என்றன.

கவிதை நூல்களை யாரும் விரும்பி வாங்குவதில்லை என்பதால் ஜோசியம் குறித்தோ தன்னம்பிக்கை குறித்தோ எழுதுங்களேன் என சம்பந்தப்பட்ட பதிப்பக உரிமையாளர்கள் யோசனை சொன்னார்கள். நூலை வெளியிட முன்வரவில்லை என்பதைவிட அவர்கள் சொன்ன யோசனைகள் துக்கமளித்தன.
10a.jpg
ஒரு நவீன கவிஞன் உருவாகிவிடக் கூடாதென்பதில் இன்றுவரை வணிகப் பதிப்பகங்கள் கவனமாக இருக்கின்றன. “என்னடா கவிதைக்கு வந்த சோதனை...” என்று நானும் அவனும் சலித்துக்கொள்வோம். ‘என்னுடைய கவிதைத் தொகுதியை நானே வெளியிட்டுக் கொண்டதைப்போல் நீயும் உன்னுடைய கவிதைத் தொகுதியை வெளியிட்டால் என்ன’ என்றேன்.

‘‘புத்தகம் போடுமளவுக்கு பணம் புரட்ட வழியில்லையே...’’ என்றான். அந்தச் சூழலில்தான் நிவேதிதா பதிப்பக தேவகி, “உங்கள் நண்பரின் கவிதை நூலை நான் வெளியிடுகிறேன்...” என உறுதியளித்தார். பாக்கியம் சங்கருக்கோ கனவு ஈடேறப்போகிறது என்பதைவிட சமூகம் தன்னை அங்கீகரித்துவிட்டதாக ஆச்சர்யப்பட்டான்.

கண்கள் மேல் செருக கம்பீரமாக அவன் அன்று பார்த்த அந்தக்காட்சி இன்னமுமே நெஞ்சிலிருந்து அகலவில்லை. புத்தகம் போட்டுத் தருகிறேன் என்றதும், தன் நூல் என்ன தாளில் அச்சிடப்படவேண்டும், என்ன மாதிரியான அட்டைப்படம் வரவேண்டும், எழுத்துப் பிழைகள், வாக்கிய இடைவெளி, கவிதைகளை வரிசைப்படுத்த வேண்டிய பட்டியல், முன்னுரை எழுதுபவர்களின் பெயர்கள் வரவேண்டிய எழுத்துருக்களின் அளவு என ஒவ்வொன்றையும் பதிப்பகத்தார்க்கு உபதேசிக்கத் தொடங்கினான்.

நிவேதிதா பதிப்பகம் பல நூல்களை வெளியிட்டுள்ளது. எத்தனையோ நூல்களை வெளியிட்டு அனுபவம் பெற்றபோதும், பாக்கியம் சங்கரின் நூலைக் கொண்டுவருவதற்குள் அவர்களுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. புத்தகம் போடுவதாக சொன்ன ஒரே பாவத்திற்காக அவர்கள் அவனிடம் பட்டபாடு கொஞ்சமல்ல நஞ்சமல்ல. இவன் ஒன்று சொல்ல, அதற்கு அவர்கள் ஒன்று செய்ய என ஏகக் களேபரம்.

இத்தனைக்கும் அந்நூல் அறுபத்தி நான்கு பக்கங்களே அடங்கிய மிகச் சிறிய நூல். ஆனால், சங்கருக்கோ தன் நூலை வெளியிடுவதன் மூலம் நிவேதிதா பதிப்பகம், ஓரியண்ட் லாங்மேன் அளவுக்கு உயரப் போகிறது என்னும் எண்ணமிருந்தது. அதோ இதோ என்று ஒருவழியாக நூலும் வெளிவந்தது. அடுத்து வெளியீட்டு விழா முயற்சியில் இறங்கினோம்.

அதுவும் வழக்கம்போல் நண்பர்களின் உதவியுடன் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள இக்சா மையத்தில் நூல் வெளியீட்டு விழா ஏற்பாடானது. பத்துப்பேரிலிருந்து பத்தாயிரம் பேர்வரை கலந்துகொள்ளும் எந்த நிகழ்வாயிருந்தாலும் அதை விழா என்றே சொல்லும் பழக்கம் நம்முடையது.

அந்த விழாவிலோ அல்லது கூட்டத்திலோ பல்வேறு பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். கொள்கை ரீதியில் முரண்பட்ட கருத்துடைய பலரும் ஒன்றாகக் கலந்துகொண்ட கூட்டம் அது. பேராசிரியர். பெரியார்தாசன், எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஷ், தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.சி.ஜெயந்தன் என பெரும்பட்டியலில் பாக்கியம் சங்கரின் நண்பனென்பதாலும் புத்தகம் போட சிபாரிசு செய்தவன் என்பதாலும் என் பெயரையும் அதில் சேர்த்திருந்தார்கள்.

அப்போது நான் பிரமுகனும் இல்லை, பிரபலமும் இல்லை. அந்தக் கூட்டத்தில் பாக்கியம் சங்கரின் கவிதைகள் காலத்தை கடந்து நிற்குமா என்னும் கேள்வியை எழுப்பியவர் செந்தூரம் ஜெகதீஷ் என்றுதான் நினைவு. அவர் ஆரம்பித்து வைத்த விவாதத்தை அதற்குப்பின் வந்தவர்கள், ஏற்கவோ மறுக்கவோ செய்தார்கள்.

சொல்லப்போனால் இரண்டில் ஒன்றை கருத்தாகத் தேர்ந்தெடுத்து சொல்லவில்லையென்றால் கூட்டத்தின் அடிப்படை நோக்கமே தவறாகிவிடும் போலிருந்தது. ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்று பசவய்யா ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதைப்போல் இருப்பதுதான் கவிதை. முக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக இருந்தால்தான் கவிதை.

பிரச்னைகளை பிரதானப்படுத்தாமல், யார் படித்தாலும் பொருந்தக்கூடிய விதத்தில் அமைந்தால் அதுவே கவிதை என ஆளுக்கொரு கருத்தை முன்வைத்தார்கள். கத்தியை எடுத்துக்கொண்டு ஒருவர் வந்தால் ஈட்டியைத் தூக்கிக்கொண்டு இன்னொருவர் என இன்றைக்கே நல்ல கவிதை என்றால் என்னவென்று சொல்லிவிடுவார்கள் போலிருந்தது.

என் முறை வந்ததும், ‘‘‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்பது நல்ல கவிதைதான். ஆனால், அக்கவிதையை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தால், அமர்ந்திருக்கும் ஒருவன் தன் வேலையாளையோ வேண்டப்பட்டவரையோ ஏவுவது போலிருக்கிறது. கவிதையின் தொனி ஏவுவது போலிருந்தால் அதை எப்படி நல்ல கவிதையாகச் சொல்ல முடியும்?

வீடு வாசலென்று நிரம்ப வாய்த்தவர்களுக்கு வேண்டுமானால் இது கவிதையாக இருக்கலாம். என்னால் ஏற்க முடியாது. ஜன்னலை மூடிக்கொண்டு வீட்டிலே உட்கார்ந்திருப்பவர்களுக்குத்தான் இது கவிதை. வீடோ ஜன்னலோ இல்லாத நடைபாதைவாசிகளுக்கும் ஏழை ஜனங்களுக்கும் இது கவிதை இல்லை.

குற்றேவல் புரியச்சொல்லும் கூற்று. தவிர, காற்றாகவே வாழ்கிறவர்களுக்கு கதவைத் திறக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது...” என என் பங்குக்கு நானும் குட்டையைக் குழப்பினேன். எனக்கும் கைதட்டியவர்கள் பின்னால் பேச வரப்போகிறவரை பாவத்தோடு பார்த்தார்கள். பாக்கியம் சங்கருக்கு புத்தகம் போடச் சொன்னதன் பெரும் பயனை அப்போதே நான் அடைந்ததுபோல் இருந்தது.

முகத்தைத் துடைத்துக் கொண்டு மறுபடி இருக்கைக்குத் திரும்பினேன். அதன் பிறகுதான் மேடையில் என் அருகில் அமர்ந்திருந்த பெரியார்தாசன் மெல்ல வாய்மலர்ந்து ‘‘தம்பி, கணையாழியிலா வேலைபார்க்கிறீர்கள்?” என்றார். அவர் குரல், இப்படியான கருத்துகளை வைத்துக்கொண்டு ரொம்ப நாள் அந்தப் பத்திரிகையில் தாக்குப்பிடிக்க முடியாதே என்பது போலிருந்தது.

“புரிஞ்சிட்டத தெளிவா சொல்றீங்க. இதுதான் வேணும். தப்பா இருந்தா மாத்திக்கலாம். ஆனா, பட்டத தைரியமா சொல்ற திராணி வேணும். காலத்தப் போல கருத்துகளும் மாறிக்கிட்டே இருக்கும். ஒண்ணையே புடிச்சிக்கிட்டு தொங்கக் கூடாது...” என்றார். பெரியார்தாசன் என்னிடம் கிசுகிசுத்ததை அப்படியே மேடையிலும் பேசினார்.

தனக்குத் தெரிந்த ஒருவர், மக்களின் பிரச்னைகளுக்காக எழுதி வந்ததையும், தன்னுடைய பெயரைக்கூட எழுதி வைக்க மறந்ததையும் குறிப்பிட்டார். காலத்தைக் கடந்து நிற்கவேண்டியதை கவிதைகள் பார்த்துக்கொள்ளும். காலத்தை ஒட்டி நிற்கவேண்டியதே கவிஞனின் கடமை. கதவையும் காற்றையும் விட்டுவிட்டு மனிதனையும் நேயத்தையும் நோக்கி வாருங்கள் என்றார்.

உண்மையிலேயே பெரியார்தாசனின் அன்றைய பேச்சு, புதிதாக எழுத வரக்கூடியவர்கள் கருத்தில் கொள்ளத்தக்க பல நல்ல கருத்துகளைக் கொண்டிருந்தது. அந்த வெளியீட்டு விழாவுக்குப் பின் பாக்கியம் சங்கர் கவிதை நூலே வெளியிடவில்லை. பெரியார்தாசன் பிள்ளை குணமுடையவர். யாரையும் எளிதாக ஒட்டிக்கொள்ளச் செய்யும் பேச்சு அவருடையது.

எட்டுமணி நேரமானாலும் சக்தி குறையாமல் பேசக்கூடிய வல்லமையும் சிந்தனையும் உடையவர். ஒருமுறை தஞ்சாவூரில், பெரியாரைப் பற்றி அவர் பேசினார். கூட்டத்தில் இருப்பவர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். கூட்டம் தொடங்கி இரண்டுமணி நேரமாகிவிட்டது. ஆனாலும், அவர் பேச்சின் சுவாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை.

அவரே ஒருகட்டத்தில் கடிகாரத்தைப் பார்த்து, “இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியாரை இரண்டுமணி நேரத்தில் பேசி முடிக்க முடியாது என்பதால், ஒரு தேநீர் இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடருவோம்...” என்றார். பாடம் நடத்துவதுபோல் அவர் பேச்சிருந்தாலும் இடையிடையே எழும் சிரிப்பொலிகளும் கைதட்டல் ஓசைகளும் அரங்கத்தை அதிர வைக்கும்.

அன்றும் அப்படித்தான். இடைவெளி எடுத்துக்கொண்டு சொன்னதுபோலவே அதற்கு அடுத்த இரண்டு மணிநேரமும் அனல் பறக்கப் பேசினார். வேதங்களிலும், கிரந்தங்களிலும் சொல்லப்பட்டிருப்பவை என்ன? அதை ஏன் பெரியார் எதிர்த்தார்? என்பதையெல்லாம் மடைதிறந்த வானம்போல் கொட்டித் தீர்த்தார்.

சேஷாசலமாக இருந்த, தான், பெரியார்தாசனாக ஏன் ஆனேன் என்பதை விளக்கும்விதமாகத் தொடங்கிய அப்பேச்சில், பெரியாரின் அத்தனை கருத்துகளையும் எளிய சொற்களால் புரியவைத்தார். ‘சேஷாசலம் இந்துவாக பிறப்பதற்குக் காரணம் சேஷாசலமில்லை. ஆனால், அவன் பெரியார்தாசனாகி கடவுள் மறுப்பு, சாதி மத எதிர்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, வகுப்புரிமைப் பாதுகாப்பு என பேசுவதற்குப் பெரியாரே காரணம்.

பகுத்தறிவின்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்புக்குக் காரணமான பெரியாரே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் என்று பேசினார். ‘நல்ல நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்துகொள்ளாத ஒருவர், பெரியாரை பின்பற்ற முடியாது’ என்பதை அந்தக் கூட்டத்திலும் அவர் அறிவித்தார்.

தமிழகத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக இருந்த பெரியார்தாசனை, நான் மெச்சவோ அடையாளப்படுத்தவோ வேண்டிய அவசியமில்லை. பெயர் சொன்னாலே போதும், யார் என விளங்கிக்கொள்ளும் ஆகிருதியாக இருந்தார். கருப்பு, சிவப்பு, நீலம், பச்சை என அவருடைய வண்ணங்கள் மாறிக்கொண்டே இருந்தன.

சேஷாசலம், பெரியார்தாசன், வீ.சித்தார்த்தன், நல்மன பெரியார்தாசன், அப்துல்லா என அவர் அவ்வப்போது தன்னுடைய பெயரையும் சிந்தனையையும் புனரமைத்துக்கொண்டார். என்றாலும், அவர் எப்போதும் மக்களை ஈர்க்கக்கூடிய பேச்சாளராகவே திகழ்ந்தார். தமிழகத்தின் உள்ளடங்கிய குக்கிராமங்கள் வரை பெரியாரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்ததில் அவருக்கும் பங்குண்டு.

நாத்திகப் பிரசாரத்தில் ஈடுபடுகிறவர்கள், பக்த சிகாமணிகளின் வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் ஆளான காலத்தில், அவர்களே ரசித்துக் கேட்கும்படியான மொழியழகை அவர் கொண்டிருந்தார். அந்த மொழியில் அழகிருந்ததா எனச் சிலர் கேட்கலாம். பேச்சின் இடையிடையே நக்கலையும் நையாண்டித்தனத்தையும் தூவுவதால் எத்தனை மணி நேரமானாலும் அவர் பேச்சில் கட்டுண்டு கிடக்க நேரும். தன்னால் படித்துப் புரிந்துகொள்ளப்பட்ட விஷயத்தை அடுத்தவருக்கு விளங்கும்படி சொல்வது தனிக்கலை. அந்தக் கலையில் தனித்துத் தெரிந்த பெரியார்தாசன், ஒருபோதும் ஒரே கருத்தைப் பற்றிக்கொண்டு நின்றதில்லை.
 

(பேசலாம்...)

www.kungumam.co

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி- 28

சாமி இல்லை என்ற பெரியாரை உணர்த்த, பெரியாருக்கு முன்பே இந்த நிலத்தில் இறை மறுப்புக் கொள்கைகள் வேரூன்றி இருந்ததை சித்தர் பாடல்களின் வாயிலாக விளக்குவார் பெரியார்தாசன். சான்றுகளுக்காக ஒரு சிறு குறிப்புகூட இல்லாமல் கருத்து களையும் பாடல்களையும் பேச்சின் போக்கிலேயே சொல்லிக் காட்டுவார்.
10.jpg
நடப்பு அரசியலையும் நகைப்புக்குரிய விமர்சனங்களையும் அவர்போல கலந்துகட்டி கலகலப்பாக யாராலும் பேச இயலாது. “வாக்களிப்பளிப்பவர்கள் கையில் ஏன் மை வைக்கிறார்கள்? மீண்டும் அவர் திரும்பி வந்து கள்ள ஓட்டு போடக்கூடாது  என்பதற்காகத்தானே..? அப்படி யானால் முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வருமா கள்ள ஓட்டு போடக் கூடியவர்கள். ஏன் அவர்கள்  கையிலும் மை வைக்கிறார்கள்?

அப்படியே அவர்கள் கள்ள ஓட்டு போட வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்களை இவர்களால் அடையாளங் காணமுடியாதா? கேட்டால், பதவியில் இருப்பவர்களும் பதவியில் இல்லாதவர்களும் சமம் என்பதைக் காட்ட மை வைக்கிறோம் என்பார்கள். அப்படியே  ஆனாலும் முன்னாள்களும் இந்நாள்களும் மக்கள் பணத்தில் கை வைப்பதை மை வைப்பதால் தடுக்க முடிந்திருக்கிறதா..?” என்பார்.

பச்சையப்பன் கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியாகப் பணியாற்றி வந்தாலும் இதர துறைகள் சார்ந்தும் அவருடைய தேடல்கள் தொடர்ந்தன. பெரியாரே பெரியவர் என ஏற்றுக்கொண்ட அவரால் அம்பேத்கரையும் மார்க்ஸையும் புத்தரையும் நபியையும் விலக்கி வைக்க முடியவில்லை. அம்பேத்கரை ஆழ்ந்து படித்தபின் வீ.சித்தார்த்தன் என தன்பெயரை கெஸட்டில் மாற்றிக் கொண்டார்.

அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற மிக முக்கியமான நூலை தமிழில் அவரே மொழிபெயர்த்தார். புத்த மதம் குறித்து அறிந்துகொள்ள எண்ணுபவர்கள், அம்பேத்கரின் அந்நூலைத் தவிர்க்க மாட்டார்கள். புத்தமதம் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தும் அந்நூல், அம்பேத்கரின் புத்தமத தழுவல் குறித்த சந்தேகங்களை மிக நேர்த்தியாக நிவர்த்தி செய்கிறது.

இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகக் கருதினாலும் அதனுள்ளே கிளைத்துள்ள சமூகச் சிக்கல்களை அம்பேத்கர் அந்நூல் மூலம் விளக்கியிருக்கிறார். நுட்பமாகவும் ஆழமாகவும் அம்பேத்கரால் ஆக்கியளிக்கப்பட்டதே அந்நூல். அந்நூலை வாசித்த பிறகு, இந்தியாவில் மூட நம்பிக்கை வெறி அடங்கி, சமத்துவ சமுதாயம் மலர, உண்மையான மதச்சார்ப்பின்மை ஓங்கவேண்டுமானால் பவுத்தம் பரவ வேண்டும் என பெரியார்தாசனுக்குத் தோன்றுகிறது.

அதன் விளைவாக தானுமே புத்த மதத்தைத் தழுவுவதாக அறிவித்து, 1992ல் முறைப்படி தீக்‌ஷாவும் பெறுகிறார். நாக்பூரிலுள்ள இந்தோரா பவுத்த விஹாரின் தலைமை பிக்கு சஹாயையும், எம்.டி.பஞ்ச்பாயையும் சந்தித்து புத்தமதம் குறித்த மேலதிக விளக்கங்களைப் பெற்றிருக்கிறார்.

பத்தாண்டுகளுக்கு மேலாக தானும் பவுத்தன் என்றே பெரியார்தாசன் சொல்லிவந்த நிலையில் அதிலிருந்து எப்போது விடுபடுகிறார் என அறியமுடியவில்லை. எதை ஒன்றையும் பெரியார்தாசனால் மேலோட்டமாக ஒப்புக்கொள்ள முடிந்ததில்லை. ஆல விருட்சமேயானாலும் அதன் ஆணிவேர்வரை சென்று ஆராயும் பண்பு அவரிடமிருந்தது.

தேடல் என்பது கிடைக்கும் வரைதான் இருக்கமுடியும். பெரியார்தாசனோ, கிடைத்ததிலிருந்து விடுபட்டதைத் தேடத் தொடங்கிவிடுகிறார். ‘இந்துத்துவம் இறைமயப்படுத்துவதை தம்மம் அறமயப்படுத்துகிறது. இந்துத்துவம் முன்வைக்கும் சாராம்சவாதத்திற்கு தம்மத்தில் இடமில்லை. குறிப்பாக சுயம், ஆத்மன், பிரும்மம் போன்ற கருத்தாக்கங்களை பவுத்தம் முற்றாக மறுக்கிறது.

உயிர்கள் யாவும் ஒன்று என்றால் சுயத்தையோ ஆத்மாவையோ பிரும்மத்தையோ கருத்திற்கொள்ள வேண்டியதில்லை. இந்துமதம், ஒருவன் வேதங்களின் மறைபொருளை அறிய பிரும்மத்தை அடைய வேண்டும் என்கிறது. பவுத்தமோ, வேதங்களின் மறைபொருளை அறிவதைவிட அவன் எப்படி வாழ்கிறான் என அறிவதையே மெய்ஞானமாகக் கொள்கிறது.

இறைவழியைக் காட்டிலும் அறவழியே சமூகத்தின் தேவை என்பதுதான் புத்தத்தின் சிறப்பு...’ தம்மத்தை சுவீகரித்த இந்துமதத்தின் சூழ்ச்சிகளை பெரியவர் ஓ.ரா.ந.கிருஷ்ணன், இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா என்னும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். இந்துத்துவம் முன்வைக்கும் ‘தர்மயுத்தம்’ போல் அபத்தமான கருத்தாக்கம் எதுவுமில்லை.

யாரை எதிர்த்து யார் நடத்தினாலும் யுத்தகங்கள் நல்ல பயனைத் தருவதில்லை. யுத்தம் என்று வந்துவிட்டாலே போட்டியும் சூழ்ச்சியும் வெற்றி தோல்வி கணக்குகளும் வந்துவிடுகின்றன. எனவே, அது தர்மத்துக்கே தேவையான யுத்தம் என்றாலும் அது ஏற்புடையதில்லை என்றுதான் பவுத்தம் சொல்கிறது. சாமி, சடங்கு, பூஜை, சாதி, மாயம், மந்திரம், பிரார்த்தனை இவை எல்லாவற்றுக்கும் மேலாக தனியுடைமைச் சுரண்டல் பவுத்தத்தில் இல்லை.

பவுத்தத்தில் உள்ளவை: அன்பு, அறிவு, சமத்துவம், ஒழுக்கம், இரக்கம், வீரம், விவேகம் என தான் புரிந்துகொண்டதை ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூல் முன்னுரையில் பெரியார்தாசன் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல ‘மலரினும் மெல்லிது’ என்னும் தலைப்பில் திருக்குறள் காமத்துப்பாலுக்கு அவர் எழுதிய விளக்கவுரையும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அரசியல் கருத்துகளை மேடையில் பேசுகிறவர்கள், இலக்கியத்திலுள்ள அகம் சார்ந்த பனுவல்களை வியக்கத் தயங்குவார்கள். காதலுணர்வையோ, காம உணர்வையோ பகிர்ந்துகொண்டால் அது ஏதோ தன் புகழுக்கும் கருத்துக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகக் கருதுவார்கள்.

பேச வேண்டியது எதுவென்றாலும், அதை எந்தத் தயக்கமுமில்லாமல் வெளிப்படுத்தும் தன்மையைப் பெற்றவராக பெரியார்தாசனிருந்தார். தன் மகனுடைய திருமண நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல் அது. ஒரு மகனுக்குத் தந்தையாக அவர் சொல்லிக்கொடுத்தது காமத்துப்பாலென்றால் கேட்பவர்க்கு ஆச்சர்யமளிக்கலாம். என்றாலும், அவர் அந்நூலை எழுத எழுந்த ஆசை எங்கிருந்து வந்தது எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஒருமுறை எழுத்தாளர் விந்தனிடம் எம்.ஆர்.ராதா திருக்குறள் குறித்து விவரிக்கும் போது, “ஜீன்ஸும் டி- ஷர்ட்டும் போட்ட பசங்களெல்லாம் தாடியும் ஜடாமுடியும் வச்சிருந்த வள்ளுவர் கிட்ட பிச்ச வாங்கணும்யா. கண்ணால பேசுறதுதான் காதல். கண்ணால பேசினதுக்குப் பெறகு வாய்ப்பேச்சு எதுக்குன்னு போட்டாரே ஒரு போடு, அதைக் கேட்டுத்தான் காமத்துப்பாலுக்கு உரை எழுதினேன்...” என்கிறார்.

புதுக்கவிதை வடிவில் எழுதப்பட்ட அந்நூல், காமத்துப்பாலின் முதன்மை அம்சங்களையெல்லாம் தொட்டுக் காட்டுகிறது. ஏனையோர் எழுதிய பொருளுரைகளிலிருந்து பெரியார்தாசனின் காமத்துப்பால் பொருளுரை பெருமளவு வேறுபட்டது. வார்த்தைகளின் விளக்கங்களை மட்டும் விவரிக்காமல், அதைப் புதுக்கவிதையாக ரசிக்க வைத்திருப்பார்.

‘கண்ணுள்ளார் காதல்’ என்னும் குறளில், காதலன் கண்ணுக்குள்ளே இருக்கிறான். ஆகையால் மை எழுதினால் அவர் முகம் மறைந்துவிடும். ஆகவே, கண்ணுக்கு மை தீட்டுவதை தவிர்க்கிறேன் என காதலி எழுதுவதாக இருக்கிறது. அதற்கு உரையெழுதும் பெரியார்தாசன், காதலன் முகத்தில் கரி பூசக்கூடாது என்பதற்காக கண்ணுக்கு மை எழுதவில்லை என்பதாக அழகுபடுத்தியிருப்பார்.

மை பூசுவதற்கும் கரி பூசுவதற்கும் உள்ள வேறுபாட்டை அவர் அறிவார். என்றாலும், குறளின் சுவையைக் கூட்டிக்காட்ட இப்படியான மீறல்களையும் அந்நூலில் அவர் கையாண்டிருப்பார். ‘அலர்’ என்ற சொல்லுக்கு வெவ்வேறு பொருளுண்டு. குறளுக்கு உரையெழுதியுள்ள பலரையும் அலர் என்னும் சொல் ஆட்டிப் படைத்திருக்கிறது.

அலர் என்பதை அலர் என்றே மு.வ.மும் இன்னபிறரும் பொருள் கொள்கிறார்கள். அலர் என்பதை கிசு கிசு என்று பாரதிதாசனும், பழிதூற்றல் என்று கலைஞரும், ஊர் பரிகசித்து ஏளனம் செய்வது என்று நாமக்கல் கவிஞரும் எழுதுகிறார்கள். பெரியார்தாசனோ வதந்தீ என்று பொருள் கொள்கிறார். வதந்தி என்பது தீப்போல பரவுவதால் அதை வதந்தீ எனச் சொல்லி, வார்தையில் விளையாடியிருக்கிறார்.
 
அந்த நூலில் என்னைக் கவர்ந்த இடம், ‘வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை / ஆரஞர் உற்றன கண்’ என்னும் குறளுக்கு அவர் எழுதியிருக்கும் உரைதான். அவன் வந்தாலும் தூக்கமில்லை. வராவிட்டாலும் தூக்கமில்லை. அவனால் துன்பமுறும் என் கண்களுக்கு தூக்கமே மறந்துவிட்டது என வள்ளுவர் சொல்லியிருப்பதை, அவனால் என் கண்களுக்கு எப்போதும் ஏகாதசிதான் எனக் குறித்திருப்பார்.

திராவிட அரசியலிலும் பெரியாரிய கொள்கைகளிலும் ஊறித் திளைத்தவரான பெரியார்தாசனால் ஏகாதசி என்ற சொல்லை எப்படி பயன்படுத்த முடிந்ததோ? இதே எண்ணத்தை நூலுக்கு அணிந்துரை வழங்கிய சிலம்பொலியாரும் முன்வைத்திருக்கிறார். மூட நம்பிக்கைக்கு எதிரான வராக அவர் இருந்தபோதும் மக்களின் வழக்கு மொழியிலுள்ள சொல்லாடல்களைப் பயன்படுத்த அவர் தயங்குவதில்லை.

அந்நூலில் மட்டுமல்ல, அவருடைய எல்லா நூல்களிலும் மக்கள் வழக்கிலுள்ள நம்பிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏறக்குறைய 55 நூல்கள் எழுதியிருக்கிறார். கட்டுரை, கவிதை, சிறுவர் கதைகள், உரைவீச்சு, தன்முனைப்பு கருத்துரைகள் என எழுத்திலும் பேச்சிலும் அவர் தொடாத தலைப்புகளே இல்லை.

அவர் எழுதிய நூல்களில், ‘பெரியாருக்குப்பின் திராவிட இயக்கம்,’ ‘போராடுங்கள்,’ ‘மனிதரைக் காக்கவா மதம்,’ ‘சிந்தியுங்கள்,’ ‘கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்,’ ‘பெரியார் விதைத்த புரட்சி விதைகள்’ ஆகிய நூல்கள் முக்கியமானவை. ‘ஆகாயம் சுருங்குமா,’ ‘சின்னக் குருவியின் சூரிய வாழ்த்து’ போன்ற கவிதை நூல்களிலும் தன்னுடைய கொள்கைகளை முழக்கங்களாக வெளியிட்டிருக்கிறார்.

‘ஆகாயம் சுருங்குமா’ என்ற தன் அழகிய கவிதைநூல் தலைப்பை ‘முதல் மரியாதை’ திரைப்பாடலில் பயன்படுத்தியதற்காக வைரமுத்துவிற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். அது நன்றியா, தன்னுடையதென உரிமை கொண்டாடும் உத்தியா என்பது அவருக்கே தெரியும். பெரியார்தாசனின் நான்குமணி நேர பேச்சை நான் கேட்டிருக்கிறேன்.

ஆனால், அதையும் தாண்டி காஞ்சிபுரத்தில் ஒருமுறை ஏழு மணிநேரம் தொடர்ந்து பேசி, கூட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார். தனி ஆவர்த்தனத்தையும் தகுதியான ஆவர்த்தனமாக மாற்றும் கலையை அவர் கற்று வைத்திருந்தார். உலக நாடுகள் முழுக்க தன் பேச்சுத் திறனால் மக்களைக் கட்டி ஆண்ட பெரியார்தாசன், பின் வருவதை முன் யோசித்து பேசக்கூடியவர் அல்ல. மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிடுவார். பிறரைக் காயப்படுத்துவது அவர் நோக்கமில்லை என்பதால் அவ்வப்போது வார்த்தைகள் அவரிடம் வசமிழந்துவிடும்.
 

(பேசலாம்...)

www.kungumam.co.

Posted

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 29

பெரியார்தாசன், கல்லூரியில் பேராசிரியராக இருந்த காலத்தில் ஊழல் அரசியல்வாதி களுக்கு எதிராக மிகக் காத்திரமாகப் பேசிவந்தார். அப்போது எம்ஜிஆர் முதலமைச்சர். அவருக்கு எதிராகவும், அவர் நக்ஸலைட்டுகளை ஒடுக்க எடுத்து வந்த நடவடிக்கைக்காகவும் கடுமையாக விமர்சிக்கிறார். இந்தத் தகவல் காவல்துறை உயரதிகாரி மோகன்தாஸ் மூலமாக எம்ஜிஆருக்குத் தெரிய வருகிறது.
11.jpg
ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் நக்ஸலைட்டுகளுக்கு ஆதரவாகப் பேசிவருவது குற்றமாகப் பார்க்கப்பட்டு, கைது வாரண்டும் பிறப்பிக்கப்படுகிறது. இதையடுத்து எம்ஜிஆர் ‘கைது செய்வதற்கு முன்பாக பெரியார்தாசனை வந்து என்னைச் சந்திக்கச் சொல்லுங்கள்...’ என்கிறார்.

மாநிலத்தின் முதலமைச்சர் தன்னுடைய பேச்சினால் கோபமுற்றிருப்பதை அறிந்த பெரியார்தாசன், தனக்கு வந்து விட்ட எந்த பாதிப்புக்காகவும் தன் பேச்சை வாபஸ் பெற்றுக்கொள்ள எண்ணவில்லை. மாறாக எம்ஜிஆரை சந்திக்கிறார். எம்ஜிஆரும், ‘நானும் உங்கள் பேச்சின் ரசிகன்தான். எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்பதை அறிவேன்.
11a.jpg
இருந்தாலும் ஒரு கல்லூரிப் பேராசிரியராக இருந்துவரும் நீங்கள் மாணவர்களை கிளர்ச்சிக்குத் தூண்டுவது சரியா? சட்டத்தின் பார்வையில் நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பவர் என்பதால் நடவடிக்கையைத் தவிர்க்கிறேன்...’ என கைது வாரண்டை கிழித்துவிடுகிறார்.

எங்கே பேராசிரியர் வேலையும் பறிபோய்விடப் போகிறதோ என அச்சத்தோடு போன தன்னை, ஆசையோடு சாப்பிட வைத்து, மறுக்க மறுக்க ஒரு கட்டு பணத்தாளை சட்டைப் பாக்கெட்டில் திணித்தனுப்பிய எம்ஜிஆரை அதன்பிறகும்கூட பெரியார்தாசன் விமர்சிக்காமல் இல்லை. எம்ஜிஆர். நல்லவிதமாகத் தன்னிடம் நடந்துகொண்டார் என்பதற்காக, கைது செய்யாமல் காசு கொடுத்து கெளரவித்தார் என்பதற்காக அவருடைய மக்கள் விரோத ஆட்சியை கண்டிக்காமல் இருக்கமாட்டேன் என்றே பேசிவந்தார்.

‘‘ஒரு நல்ல கருத்து வெகு ஜனங்களைப் பற்றிக்கொண்டால், அது பெளதீக சக்தியாக மாறும்...’ என்ற காரல் மார்க்ஸை பெரியார்தாசன் வெகுவாகப் பின்பற்றினார். கற்பதையும் கற்பிப்பதையும் தொடர்ந்து செய்துவந்த அவர், “மீனுக்கு நீந்தவும் கன்றுக்குட்டிக்கு தாவவும் கற்பிக்க வேண்டியதில்லை. ஏனெனில், கற்றுக்கொண்டே பிறப்பவை இதர உயிரினங்கள். கற்றுக் கொள்வதற்காகவே பிறப்பவர்கள் மனிதர்கள்!” என்பார்.

“சாப்பிடுவதற்காக ஒரு கவளம் சோற்றை கையில் எடுக்கின்ற போது அதில் நூறு பேருடைய வியர்வையாவது கலந்திருக்கிறது என்பதை உணர வேண்டும். அப்போதுதான் இந்த சமூகத்தின் மீது நமக்கு அன்பு வரும். அக்கறை வரும். நமக்குத் தேவையான ஒவ்வொன்றையும் தருகின்ற சமூகத்திற்கு நாமும் எதையாவது தர வேண்டும் என்ற எண்ணம் வரும்...’’ என மேடைதோறும் சொல்லி வந்தார்.

ஒரு நல்ல பேச்சைக் கேட்டவுடன், நமக்குள் ஏற்பட வேண்டிய நல்ல விளைவுகளை அவருடைய சொற்பொழிவுகள் செய்து வந்தன. மாதம் ஐந்து கூட்டமென தொடர்ந்து தனி ஒருவராக இருநூற்றி ஐம்பது கூட்டங்களுக்குமேல் சொற்பொழிவு செய்திருக்கிறார். அவர் பேச்சைக் கேட்கையில் நமக்கு சோர்வே வராது என்பது விஷயமில்லை. அவருமே சோர்வில்லாமல் பேசுவதுதான் வியப்பு.

ஒருமுறை மலைவாழ் மக்கள் மாநாட்டில் அவருடைய பேச்சைக் கேட்ட அன்பர்கள், நினைவுப் பரிசாக பாம்பைக் கையில் கொடுத்திருக்கிறார்கள். அச்சம்பவத்தை சிரிக்க சிரிக்க அவர் சொல்ல கேட்க வேண்டும். “பாம்பை மாலையாகப் போட வந்ததுகூட பிரச்னையில்லை. அதை வீட்டுக்கு எடுத்துப்போங்கள் என்றார்களே அங்குதான் டகிலடித்தது.

இத்தனை வீரமாகப் பேசிய நீ பாம்புக்கு பயந்தவனா என அவர்கள் எண்ணியிருக்கலாம். அதற்காக, ஆடு பாம்பே விளையாடு, பாம்பே என்று பாடும் சித்தராகவா முடியும் சொல்லுங்கள்..!” என்று கேட்பார். இப்படி ஊர்தோறும் விடாமல் அவர் பேச்சுக்குக் கிடைத்த எதிர்வினைகளும் திகிலூட்டும் சம்பவங்களும் எத்தனையோ உண்டு.

எதைச் செய்தாலும் மனம் ஒன்றி செய்யும் தன்மையை தன்னுடைய பள்ளித் தமிழாசிரியர் சுந்தரமூர்த்தி வாத்தியாரிடமிருந்து பெற்றதாக அவரே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். “வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள் நல்நோக்குண்டாம், துப்பார்த் திருமேனி தும்பிக்கையான் பாதம், தப்பாமல் சார்வார் தமக்கு” என்ற பாடலை விநாயகர் பாடலாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில், அது விநாயகர் பாடலே அல்ல. “எவன் ஒருவனுக்கு திக்குவாயிருக்கிறதோ, எவன் ஒருவனுக்கு சித்தப்பிரமை பிடித்திருக்கிறதோ, எவன் ஒருவனுக்கு கண்பார்வை மங்கலாக இருக்கிறதோ, அவனுக்கான மருத்துவப் பாட்டு அது. சித்த மருத்துவப் பாட்டைத்தான் இந்த சிகாமணிகள் விநாயகர் துதியாக்கி, அதை நம்மையும் பாட வைத்திருக்கிறார்கள்.

‘துப்பார்த் திருமேனி’ என்றால் இன்றைக்கு நம்மால் குப்பைமேனி என்றழைக்கப்படும் இலையே அன்றி வேறில்லை. இரவில் அவ்விலைமீது குப்பையைக் கொட்டினால் அக்குப்பை காலையில் இருக்காது. தன்னைத் தானே தூய்மையாக்கிக் கொள்ளும் இலை அது. அதேபோல தும்பிக்கையான் பாதம் என்றால் தும்பைப்பூ.

குப்பைமேனி இலையையும் தும்பைப்பூவையும் கையாந்தகரை வேரையும் சேர்த்து கசாயமாக்கிக் குடித்தால் திக்குவாய் சரியாகிவிடும் என்றுதான் பாடினார்களே தவிர, விநாயகரைத் தொழுதால் வினை தீரும் என்று பாடவில்லை. தமிழர்கள் என்றைக்கோ எழுதிய மருத்துவப் பாட்டின்படி கசாயம் குடித்து சரியான திக்குவாயன்தான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பெரியார்தாசன்!” என்றும் இன்னொரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

மேடைப் பேச்சுக்களை வெறும் கைதட்டல்களுக்காக அவர் நிகழ்த்தியதில்லை. நேற்றைக்கு ஒரு மேடை, இன்றைக்கு ஒரு மேடை என மேடைகள் வித்தியாசப்பட்டாலும் அவர் ஒரே மாதிரியான கொள்கையைத்தான் கடைப்பிடித்தார். எதிரே இருப்பவர்கள் உற்சாகத்தோடு தன்னை உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பது தான் அந்தக் கொள்கை.

அந்தந்த கணத்து அதிசயங்களை அவர்போல யாரும் கொண்டாடியதில்லை. நேற்று ஒரு மாதிரியும் இன்று ஒரு மாதிரியும் தோன்றினால் அதையும் மேடையிலேயே சொல்லிவிடுவார். ‘சைவப் பற்றாளனாக இருந்த தான் பெரியாரின் சீடனாகி, புத்தரை தரிசித்து, நல்மன பெரியார்தாசனாக நம்பிக்கை பெற்று, அப்துல்லாவாக தற்போது ஏக இறைவனை தொழத் தொடங்கியிருக்கிறேன்’ என்று ஒளிவு மறைவில்லாமல் தன் நிலையை அறிவித்தார்.

தன்னுடைய மாறுதல்கள் ஒவ்வொன்றும் சுய தேவைகளுக்காகவோ லெளகீக வாய்ப்புகளுக்காகவோ நிகழ்ந்ததில்லை என்பதை தெளிவுபடுத்துவதாகவே அவருடைய இறுதியுரைகள் அமைந்துள்ளன. “இதுயாவுமே தத்துவத் தேடலில் நானடைந்த படிப்பினைகள். என்னை பின் தொடர்வதில் சிலருக்கு சிரமம் இருக்கலாம்.

ஆனால், நான் செல்லும் பாதைக்கு உண்மையாயிருக்கிறேன். சந்தேகத்தோடு என்னைப் பார்க்கிறவர்களுக்கு என் சத்தியத்தைப் பிரமாணப்படுத்த வேண்டியதில்லை...” எனவும் கூறியிருக்கிறார். மாறிக்கொண்டே இருப்பதுதான் வளர்ச்சி என்றும் அம்மாற்றித்தினால் நிகழ்வதுதான் கொள்கை என்றும், அவரே அவரை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

ஏற்றுக்கொண்ட ஒன்றுக்கு விசுவாசமாக இருப்பது ஒருவகையென்றால் அதுவாகவே மாறிவிடும் இயல்புதான் அவருடையது. தான் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதாக அறிவித்தவுடன் எழுந்த விமர்சனங்களையும் அவர் அப்படித்தான் எதிர்கொண்டார். தொலைபேசியிலும் நேரிலும் அவரிடம் இதுகுறித்து விவாதித்தவர்களை கடுமையான சொற்கள் கொண்டு அவர் காயப்படுத்தவில்லை.

நெஞ்சைத் திறந்து காட்டிய பின்னும் தன் நேர்மையைச் சந்தேகிப்பவர்களை ஒரு புன்னகையோடு அவர் கடந்துபோனார். நீண்ட ஆய்வுக்கும் வாசிப்புக்கும் பின்பே இஸ்லாத்தை தழுவியதாக அவர் சொன்னதை கருத்துமுதல்வாதிகள் ‘கதைவிடுகிறார்’ என்றார்கள். இதுவரை மறுமையிலோ இறைக்கோட்பாட்டிலோ நம்பிக்கையில்லாதவருக்கு திடீரென்று எப்படி ஞானம் வந்தது எனவும், மறுபிறவி உண்டென்று இப்போது உணர்கிறவர் நாத்திகம் பேசியது பித்தலாட்டமா எனவும் கேட்டார்கள்.

அவர் எந்த முடிவுகளையும் நிர்ப்பந்தத்தால் எடுக்கவில்லை என்று மட்டும் தெரிகிறது. தன் தரப்பை நியாயப்படுத்துவதற்காக எந்த அஸ்திரங்களையும் பிரயோகிக்கக்கூடியவர் அல்ல அவர். தெரிதலிலும் அறிதலிலும் அதன்பின்னான புரிதலிலுமே அவர் பயணித்தார். அவருடைய கல்லூரிக் காலங்களில் இருந்தே பலவிதமான கருத்துமோதல்களின் களமாக அவரிருந்திருக்கிறார்.

பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபொழுது, அதை வீட்டுக்குக்கூட தெரிவிக்காமல் தொடர் பசியுடன் நூலகத்திலேயே கழித்த பொழுதுகள் அவருடையவை. குருவிக்கரம்பை சண்முகம் மூலம் விஷயமறிந்த சுரதா, மதிய வேளைகளில் தனக்கு வாங்கிக் கொடுத்த ஜனதா சாப்பாட்டை அவர் எங்கேயும் சொல்லாமல் இருந்ததில்லை.

பல மொழிகளைக் கற்றிருந்தார் என்றாலும், அவராலும் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் போனது உண்மைதான். இன்றைக்கு திருப்புகழ் சந்தத்தை வைத்துக்கொண்டு யாரால் பாட்டெழுத முடியுமென்று கேட்ட சுரதாவை கவிதைகளால் வெல்ல முடிந்த பெரியார்தாசனுக்கு அரபு மொழியைக் கற்க முடியாமல் போனதேயென்ற வருத்தமிருந்தது.

காய்த்தல் உவத்தலற்று பேசும் அவர் கணீர் குரலைக் கேட்ட இயக்குநர் பாரதிராஜா, தம்முடைய ‘கருத்தம்மா’ திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக அவரை அறிமுகப்படுத்தினார். நடித்த முதல் படத்திலேயே குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார். எத்தனையோ மேடைகளில் வாய்கிழியப்பேசிய தன்னை, வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த சினிமாவையும் அதற்குக் கிடைத்த தேசியவிருதையும் எள்ளலோடு பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

பெண் சிசுக்கொலை பெரும் பிரச்னையாக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் ‘கருத்தம்மா’ திரைப்படம் வெளிவந்தது. காலத்தின் தேவை கருதி எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தில் நடித்ததும் சமூகப்பணியே என்னும் எண்ணம் அவரிடமிருந்தது. அதன்பின்னும் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். இருபத்தியாறு படங்களுக்குமேல் நடித்திருப்பதாக செய்தி.

என்றாலும், ‘கருத்தம்மா’ அளவுக்கு வேறு எந்த பாத்திரத்திலும் அவர் சோபிக்கவில்லை. திரைத்துறைக்கு வந்தபிறகும் தம்முடைய அசலான பேச்சுக்கலையை அவர் கைவிடவில்லை. மக்கள் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பது நடிப்பை அல்ல என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. மெய்யையும் ஞானத்தையும் எதிர்பார்த்த மக்களிடம், பொய்யாகவும் போலியாகவும் நடந்துகொள்ள அவர் விரும்பவில்லை.

சில நேரங்களில் அவர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார். பாக்கியம் சங்கரின் நூல் வெளியீட்டு விழாவில் அவர் சொன்னதுபோல, காலத்திற்கேற்ப கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்த கருத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் திராணி வேண்டும். மேலும், ஒன்றே சிறந்ததென்று தொங்கிக்கொண்டிருக்கக் கூடாது.

உண்மையில், ஒரு பகுத்தறிவாளன் என்பவன் அறிவின் கண்களையும் அன்பின் கண்களையும் ஒன்றாகவே திறந்துகொள்கிறான். இதிலுள்ள விநோதம் என்னவென்றால், அவன் கண்களை மூடிக்கொண்ட பிறகுதான் அவனையும் அவன் காட்டியதையும் இந்த உலகம் பார்க்கத் தொடங்குகிறது.
 

(பேசலாம்...)

kungumam.co.

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 30

காலம் தீர்மானித்து வைத்திருக்கும் பாதைகளில் நம்முடைய கால்கள் பயணிக்கின்றனவா, இல்லை காலத்திற்கேற்ப நம்முடைய கால்கள் பயணிக்கத் தொடங்குகின்றனவா எனத் தெரியவில்லை. ஏனெனில், ஒருகாலம்வரை நாடகக் கலையிலும் சினிமாத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கலை இலக்கியப் பத்திரிகையின் அகத்தையும் முகத்தையும் மாற்றும் யோசனையை எங்கிருந்தோ பெற்றிருக்கிறார்.
9.jpg
அந்த அவர் வேறு யாருமல்ல. கோமல் சுவாமிநாதன். அதுவரை கலை இலக்கியப் பத்திரிகைகளில் நிலவி வந்த குழு மனப்பான்மை, அவர் வருகைக்குப் பின்புதான் ஓரளவு மட்டுப்பட்டது. அந்தக் காலங்களில் எழுத்துகளின் வகைகளுக்கேற்ப எழுத்தாளர்களும் தனித்தனி குழுக்களாக இயங்கி வந்தார்கள். ஒரு குழு இன்னொரு குழுவை ஏற்கவோ பின்தொடரவோ விரும்பியதில்லை.

எதார்த்த இலக்கியமென்றும் எதிர்கால இலக்கியமென்றும் ஏதேதோ பெயர்களில் இயங்கிவந்த அவர்களை, ‘சுபமங்களா’ என்னும் இலக்கியப் பத்திரிகை மூலம் ஒன்றிணைத்தவர் கோமல் சுவாமிநாதன். யாருடைய கருத்துகளும் புறந்தள்ளக் கூடியதல்ல என்பதால், அவரவர் தங்கள் கருத்துகளைப் பேசும் பொதுமேடையாக ‘சுபமங்களா’வைப் புனரமைத்த எண்ணம் அவருடையது.
9a.jpg
இடது, வலது, மேல், கீழ், உள், வெளி என்ற பாகுபாடையெல்லாம் அவர் ஒவ்வொரு இதழிலும் உடைத்தெறிந்தார். அப்படி உடைத்தெறிய இரண்டு பக்கத்திலும் உள்ள நியாயங்கள் அவருக்குத் தெரிந்திருந்தன. எது சரி, எது தவறு என்னும் தராசில் அவர் எந்தப் படைப்பையும் படைப்பாளனையும் எடை போட விரும்பவில்லை.

காலம் செய்யவேண்டிய காரியம் அதுவென்று ஒதுங்கியே நின்றார். என்றாலும், அவருக்கென்று சில சார்புகளும் கொள்கைகளும் இருந்தன. காங்கிரஸ்காரராக வாழ்வைத் தொடங்கிய அவர், இறுதிக் காலங்களில் தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அறிவித்துக் கொண்டார். கோமல் சுவாமிநாதன் ஆசிரியப் பொறுப்பேற்கும் வரை ‘சுபமங்களா’வின் முகம், சனாதன, சமஸ்கிருத, பெண்கள் பத்திரிகையின் முகமாக இருந்தது.

பெரிய கவனத்தையோ அதிகமான வாசகர்களையோ கொண்டிராத அப்பத்திரிகையை, கலை இலக்கிய வரலாற்றை முன்னெடுத்த பத்திரிகையாக மாற்றிய பெருமை அவருக்கே உரியது. கலை இலக்கியத் துறையில் அவருக்கிருந்த பரிச்சயத்தைவிட, கலை இலக்கியம் கற்றுக் கொடுத்த பண்பாட்டையும் கலாசாரத்தையும் கடைசிவரை அவர் காப்பாற்றினார். யாரோடும் சுமுகமான ஸ்நேகமான அன்பையே அவர் கொண்டிருந்தார்.

தமிழ்ப் படைப்பாளர்கள் அத்தனைபேரும் ஒரு குடையின் கீழ் நின்று நிழல்பெறவும் நிலைபெறவும் அவர் விரும்பினார். கலை இலக்கியப் பத்திரிகையுலகில் அவருக்கு முன்பும் அவருக்குப் பின்பும் அப்படி ஒருவர் இருந்திருக்கிறாரா என்னும் கேள்விக்கு, அவரே ‘தீபம்’ நா. பார்த்தசாரதி இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். கோமல் சுவாமிநாதன் என்றதும் சட்டென்று நம்முடைய நினைவுக்கு வருவது அவருடைய ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம்தான்.

நாடகமென்றால் நகைச்சுவைத் துணுக்குகளின் குவியல் என்றிருந்த காலத்தில், அதை ஒரு சமூக ஆயுதமாக நிறுவிக் காட்டிய பிதாமகன் அவர். இன்றைக்கும் குடிநீர் கேட்டுப் போராடும் தாய்க்குலங்கள், காலி குடங்களை சாலையில் இருத்திப் போராடும் வடிவ உத்தியை அவர்தான் வழங்கினார். தேர்தல் புறக்கணிப்பு என்னும் சொல்லை, அதற்குமுன் எந்த ஒரு நாடகப்பிரதியும் கொண்டிருக்கவில்லை.

அரசர்களின் வரலாற்று நாடகங்களை மட்டுமே கண்டு வந்த நம்முடைய மக்களுக்கு, சமூக வரலாற்றைக் கற்பிக்கும் நாடக ஆக்கங்களை அவர் எழுதினார். போராட்டங்களைத் தூண்டுவதாக அவர் நாடகங்கள் பலமுறை காவல் துறையால் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. எழுபதுகளில் தமிழகத்தில் பரவலாக இயங்கி வந்த நக்சலைட்டுகளுக்கு ஆதரவான குரல் அவருடையது.

என்றாலும், தனி மனித பயங்கரவாதத்துக்கு அவர் ஒருபோதும் ஒத்துழைப்புக் கொடுத்ததில்லை. அவருடைய ‘அனல்காற்று’ திரைப்படம், தனி மனித பயங்கரவாதத்தை விமர்சித்தே எடுக்கப்பட்டது. மக்கள் சக்தியே விடுதலையைப் பெறும் வழியென்று மிகத் தீவிரமாக அவர் நம்பினார். அத்திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்கள், வடகிழக்கு மாநிலங்களில் இன்று போராடி வரும் மாவோயிஸ்ட்டுகள் மீதான விமர்சனங்களையும் உள்ளடக்கியவை.

எதற்கு போராடுகிறோம் என்பதும் எப்படி போராடுகிறோம் என்பதும் ஒரு போராளிக்குத் தெரியவில்லை என்றால், அந்தப் போராட்டமே பாழ்பட்டுவிடும் என்றுதான் அத்திரைப்படத்தில் சொல்லியிருப்பார். ஆளும் ஆதிக்க சக்திகளை முறியடிக்க, அப்பாவிகளைக் கொல்வது ஒரு புரட்சிக்காரனுக்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது என்பதை அத்திரைப்படத்தில் மிக நேர்த்தியாக வடித்திருப்பார்.

வனாந்தரங்களிலும் மலைக்குகைகளிலும் ஒளிந்துகொண்டு மக்களுக்காகப் போராடுகிறோம் என்பவர்கள், அதே மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை அதைவிட காத்திரமாகச் சொன்ன படம் வேறு ஏதுமில்லை. மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களே விடுதலையைப் பெற்றுத்தரும் என்னும் தெளிவை அவருடைய நாடகங்களும் திரையாக்கங்களும் முன்மொழிந்தன ‘ஓர் இந்தியக் கனவு’ என்னும் திரைப்படத்தில் மலைவாழ் மக்களின் அவலங்களையும் அவர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளையும் பேசியிருப்பார்.

அத்திரைப்படத்தில் கதாநாயகி மூலம் அவர்களுக்கான உரிமைகள் பேசப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய எல்லா படைப்புகளுமே இடதுசாரி மனநிலையில் இருந்துதான் எழுதப்பட்டிருக்கின்றன. அவர் காங்கிரஸ்காரராக இருந்த காலத்திலும்கூட அவருடைய படைப்புகள், முற்போக்கு சாயத்தையே பூசிக்கொண்டன. இன்றைக்கு மத்தியில் ஆண்டுவரும் பாரதீய ஜனதா கட்சி, வெகுவிரைவில் காங்கிரஸ்காரர்களையும் சிவப்புசட்டை போட வைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.

மதவாத, இனவாத, சாதிவாத போக்குகளைக் கண்டிக்கும் திராணியுடைய எழுத்து ஆளுமையாக கோமல் சுவாமிநாதன் இருந்திருக்கிறார். அவர் படைப்புகளின் வாயிலாக மக்களிடம் விதைக்க விரும்பிய புரட்சிகர கருத்துக்கள், முளைவிட்டு கிளைவிட்டு முழு மரமாகும் சாத்தியமுடையன. முப்பதுகளில் பிறந்த கோமல் சுவாமிநாதன், தன்னுடைய பதினேழாவது வயதிலிருந்தே அரசியல் ஈடுபாடுடையவர்.

ஒன்றாயிருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மேடைகளில் அவர் சொற்பொழிவாளராக சிலகாலம் தோன்றியிருக்கிறார். இடி முழங்குவதுபோல் பேசிவந்த அவரை ‘கோடையிடி கோமல்’ என்றே அழைத்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அரசியலிலிருந்து அவர் பார்வை நாடகக் கலை பக்கம் திரும்பியது. 1936ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது ‘இதயத்துடிப்பு’ என்னும் நாடகத்தை அரங்கேற்றிய அவர், அதன்பின் முழுநேர அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.

நாடகத்துறையில் அவர் கால்பதிக்க, எஸ்.வி.சகஸ்ரநாமம், பி.எஸ்.ராமையா, முத்து ராமன், மேஜர் சுந்தர்ராஜன், கு.அழகிரிசாமி உள்ளிட்டோர் உதவியிருக்கிறார்கள். சகஸ்ரநாமம் நடத்திவந்த ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக்குழுவுக்கு அவர் எழுதியளித்த ‘புதியபாதை’, ‘மின்னல் காலம்’, ‘தில்லைநாயகம்’ ஆகிய நாடகங்கள், குடும்பம் சார்ந்த கதையோட்டத்தில் நுட்பமான சமூக விமர்சனங்களைக் கொண்டிருந்தவை.

மேஜர் சுந்தர்ராஜனுக்காக அவர் எழுதிய ‘அவன் பார்த்துப்பான்’, ‘டில்லி மாமியார்’, ‘அப்பாவி’ முதலிய நாடகங்களும், நடிகை மனோரமாவுக்காக அவர் எழுதிய ‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’ என்ற நாடகமும் பின்னர் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்து மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றன.

‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தைப் படமாக்குவதே தன் இலட்சியம் என்று கூறிய கே.பாலச்சந்தர், அந்நாடகத்தை திரையாக்குவதில் எடுத்துக்கொண்ட சிரத்தையிலிருந்து நாடகத்திற்கும் திரைக்குமான இடைவெளியை கோமல் சுவாமிநாதன் புரிந்துகொண்டிருக்கிறார். அதற்குமுன்பே உலகப் படங்களின் பரிச்சயம் அவருக்கு இருந்தபோதும் பாலச்சந்தரின் தொடர்பு அவரை பரவலாக்கியது.

முற்போக்கு முகாம்களில் அவர் அவதார புருஷராக அறியப்பட்டார். ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தைப் பொறுத்தமட்டில் அது ஏதோ குடிநீர் பஞ்சத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற அளவில் இல்லாமல், சமூக தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படமாக அத்திரைப்படம் இன்றுவரை பார்க்கப்படுகிறது. அத்திரைப்படம் வெளிவந்த சமயத்தில் எம்ஜிஆர் ஆட்சியிலிருந்தார்.

திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருந்தபோதிலும் அத்திரைப்படம் கடும் சிக்கலுக்கு உள்ளானது. அத்திரைப்படத்தை வெளியிடக் கூடாதென்று குரல் கொடுத்தவர்களில் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். அவரே திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தபோதும், அத்திரைப்படம் வெளிவருவதில் அவர் காட்டிய தயக்கம்தான் ‘தண்ணீர் தண்ணீர்’ பேசிய அரசியல்.

பெரியாரின் சீடர்களாக தங்களை சொல்லிக்கொண்டவர்களும் அத்திரைப்படம் பேசிய கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு எதிர்வினையாற்ற எண்ணவில்லை. மாறாக, அரசுக்கு எதிரான படம்போல அதை சித்தரித்து விடுவதில்தான் குறியாயிருந்தார்கள். அதன் விளைவாக, வெற்றிப் படமாகி யிருக்க வேண்டிய அத்திரைப்படம், பெருவெற்றிப் படமாக அமைந்தது. எதிர்ப்பினால் கோரிக்கைகளைப் பெறலாம் என்று சொல்லித்தந்த அந்தத் திரைப்படமும் எதிர்ப்பினால்தான் பெருவெற்றி பெற்றது என்பதை மாற்று சினிமாக்காரர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
 

(பேசலாம்...)

kungumam.co.

Posted
 
 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 31

தமிழ்ச்சூழலில் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்திற்குப் பிறகுதான் கோமல் சுவாமிநாதனைக் கூர்ந்து கவனிக்கும் நிலை ஏற்பட்டது. அதற்கு முன்பே அவர் தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த ‘ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸ்’ எனும் நாடகக்குழு அரங்கேற்றிய, ‘நவாப் நாற்காலி’, ‘சந்நிதி தெரு’, ‘பட்டணம் பறிபோகிறது’, ‘வாழ்வின் வாசல்’, ‘யுத்த காண்டம்’, ‘அஞ்சு புலி ஒரு பெண்’, ‘கூடு இல்லா கோலங்கள்’, ‘ஆட்சி மாற்றம்’,  ‘ராஜ பரம்பரை’ போன்ற நாடகங்கள், ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தின் வெற்றியால் மீண்டும் மீண்டும் மேடையேறின.
17.jpg
ஒவ்வொரு நாடகமும் பலமுறை மேடையேறும் வாய்ப்பைப் பெற்றன. கருத்தும் செறிவும் நிறைந்த அவருடைய நாடகப் பிரதிகள் காலத்தின் கையேடுகள். அவ்வப்போதைய சமூகப் பிரச்னைகளை முன்வைத்து, அவரால் எழுதப்பட்ட நாடகங்களை, நவீன நாடகங்களின் தோற்றுவாயாகக் கருத இடமுண்டு. அவர் காலத்தில் இயங்கி வந்த ஏனைய நாடகக்காரர்களுக்கு பெரும் சவாலாக கோமல் சுவாமிநாதன் இருந்திருக்கிறார்.

சோ, விசு போன்றோர் நடத்தி வந்த நாடகங்களிலிருந்து முற்றி லும் வேறுபட்ட தொனியை கோமல் சுவாமிநாதனின் நாடகங்கள் கொண்டிருந்தன. அடர்த்தியாகச் சொல்லவேண்டும் என்பதற்காக அழகியலை அவர் நாடகங்கள் புறந்தள்ளிவிடவில்லை. உலக நாடகப் போக்குகள் குறித்த பார்வைகள் அவரிடமிருந்தன.
17a.jpg
அதே சமயத்தில் அன்றைக்கு நவீன நாடகங்கள் என்னும் பெயரில் நிகழ்த்தப்பட்டு வந்த கூத்துகளை ஒருபோதும் அவர் ஆதரித்ததில்லை. நாடகம் குறித்த தெளிந்த கருத்தோட்டத்தை வைத்திருந்தார். அரங்க அமைப்பிலும் கதாபாத்திரத் தெரிவிலும் அவருடைய தனித்துவங்கள் வெளிப்பட்டன. வாத்தியார் ராமன், சாமிக்கண்ணு, வீராச்சாமி போன்றவர்களை வெகுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்த சிறப்பு அவருடையது.

கோமல் சுவாமிநாதன், கேரளத்திலும் வங்கத்திலும் நிகழ்த்தப்படுவதைப் போல தமிழகத்திலும் மக்களின் குரலையும் மக்களுக்கான குரலையும் நாடகங்கள் கொடுக்க வேண்டும் என விரும்பியவர். அதற்காக இடையறாமல் உழைத்தவர். அவர், தம்முடைய நாடகங்களுக்குப் பெயரிடுவதில்கூட விசேஷ கவனத்தை எடுத்துக்கொண்டவர். குறிப்பாக, ‘சுல்தான் ஏகாதசி’, ‘செக்கு மாடுகள்’, ‘மனிதன் என்னும் தீவு’,  ‘கல்யாண சூப்பர் மார்க்கெட்’, ‘நள்ளிரவில் பெற்றோம்’ ஆகிய நாடகங்களின் உட்கருவை அத்தலைப்புகளே மிகச் சரியாகப்  பிரதிபலித்துவிடும்.

பெண்ணிய கருத்துகளையும் தலித் விடுதலையையும் அவர் நாடகங்கள் பிரதானப்படுத்தியவை. அரசியல் சமூகப் பிரச்னைகளை நாடகங்களாக ஆக்கி, அதை மேடையேற்றுவதில் ஆர்வமுடைய அவர், சக நாடகக் கலைஞர்களுடன் சுமுகமான உறவைக் கொண்டிருந்தவர். ஒருகாலம் வரை அவர் நாடகங்களைப் பார்ப்பதற்கென்றே தனிக்கூட்டம் கூடியிருக்கிறது.

தோழர் ஜீவாவும் வி.பி.சிந்தனும் தன்னுடைய நாடகங்களைப் பார்க்க வந்ததை, அவர் எழுதிய ‘பறந்துபோன பக்கங்கள்’ நூலில் பதிவு செய்திருக்கிறார். சக நாடகாசிரியர்களுடன் அவருக்கிருந்த நல்லுறவினால்தான் வெற்றிகரமான நாடக விழாக்களை சென்னையிலும் மதுரையிலும் அவரால் நடத்த முடிந்தது. தில்லியில் பிரசித்தி பெற்ற ‘யதார்த்தா’ நாடகக்குழுவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும்  அவரே.

‘யதார்த்தா’ நாடகக்குழுவினர் நிகழ்த்திவந்த சி.சு.செல்லப்பாவின் ‘முறைப்பெண்’ நாடகத்தின் சிறப்பை அவர் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். அந்நாடகத்தை எழுதிய செல்லப்பாவையும் அவர்தான் மேடைக்கு அழைத்து பெருமைப்படுத்தினார். ஒரு நாடக ஆசிரி யனுக்கு ஏற்படும் நியாயமான கோபங்களைப் பொருட்படுத்தி, அவனைச் சாந்தப்படுத்தும் ஆற்றலைக் கோமல் பெற்றிருந்தார்.

நிஜ நாடகக் குழுவைச் சேர்ந்த மு.ராமசாமியின் ஒத்துழைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நிகழ்ந்த மதுரை நாடகவிழாவை கோமல் சுவாமிநாதன் தன் சொந்த விழா போலவும் வீட்டு விசேஷம் போலவும் நடத்திக் காட்டியதை நவீன நாடகக்காரர்கள் மறந்துவிடமாட்டார்கள். நாடகக் கலைஞர்கள் அத்தனை பேரையும் அரவணைத்து அவர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படும் பக்குவமுடையவராக அவருடைய செயல்பாடுகள் அமைந்தன.

ஆரம்பத்தில் தன்னால் எழுதப்பட்ட நாடகத்தைப் பார்க்க வரமறுத்த செல்லப்பாவை, கோமலின் அன்புதான் கூட்டி வந்ததென ‘யதார்த்தா’  பென்னேஸ்வரன் எழுதியிருக்கிறார். சக நாடக ஆசிரியர்கள்மீது கோமல் சுவாமிநாதன் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் அளவிட முடியாதது. யாரையும் தன்வயப்படுத்தும் தகுதியை அவர் எழுத்துகளும் அணுகுமுறைகளும் கொண்டிருந்தன.

என்றாலும், தன்னுடைய கருத்துகளைத் திணிக்கும் காரியத்தை அவர் எங்கேயும் எப்போதும் செய்ததில்லை. ஒருவரை அதே பலத்தோடும் அதே பலவீனத்தோடும் அங்கீகரித்துப் பழகியவர் அவர். நாடகக் கதாசிரியர், இயக்குநர், எழுத்தாளர், பத்திரிகையாளர், மேடைப் பேச்சாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டிருந்த அவர், தேசிய விருது குழுவிலும் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருது, யாருக்கு எப்படி வழங்கப்படுகிறது எனும் வேடிக்கைகளை அவர் ஒருவர்தான் வெளி  உலகுகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். அவர் நடுவர் குழுவில் பங்கு வகித்த ஆண்டில்தான் பாரதி ராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’  திரைப்படம் தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு விருது வழங்கப்படும் எனவும் யூகிக்கப்பட்டது. கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக நடிப்புலகில் தனக்கான இடத்தை அகில இந்திய அளவில் சிவாஜிகணேசன் பெற்றிருந்த போதிலும் அவர் அத்திரைப்படத்தில் புதுவிதமான எதார்த்த நடிப்பைக் காட்டியிருந்தார்.

ஓவர் ஆக்டிங் செய்பவர் என்று சொன்னவர்கள்கூட ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் அவர் நடித்ததை அசல் நடிப்பென்று ஆமோதித்தார்கள். ஆனாலும், அந்த ஆண்டும் அவருக்கு அவ்விருது வழங்கப்படவில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி, சிவாஜி கணேசனுக்கான விருதை சசி கபூருக்கு அறிவித்தார்கள்.

ஜெயா பச்சனின் தலைமையில் இயங்கிய நடுவர் குழு, ‘சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருப்பதால், சிறந்த நடிகராக அவரைத் தேர்ந்தெடுத்தால், காங்கிரஸ் கட்சியின் சலுகையினால் அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புரளியைக் கிளம்பும் என்று புதுக்கரடியை அவிழ்த்துவிட்டதாக’ கோமல் குமைந்திருக்கிறார்.

‘ஒருவருடைய அரசியல் செயல்பாடுகளை வைத்து அவருடைய கலைச் செயல்பாடுகளைக் கணக்கிடுவது சரியா?’ எனக் கோமல் கேட்டிருக்கிறார். உடனே, அவர்கள் ‘சிவாஜி கணேசன் குண்டாயிருக்கிறார்...’ என்றிருக்கிறார்கள். ‘கிராம மக்களின் மரியாதைக்குரிய ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் குண்டாயிருந்தால் என்ன?’ என்று திரும்பவும் கோமல் கேட்டிருக்கிறார்.

‘அதுவும் சரிதான். ஆனால், நாங்கள் எல்லோரும் சசிகபூரைச் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்க விரும்புகிறோம்...’ என்றிருக்கிறார்கள். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில்தான் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த ஆண்டு தேசிய விருது பெறுவதற்குரிய அத்தனை தகுதியிருந்தும் தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக சிவாஜி கணேசனுக்குச் சிறந்த நடிகருக்கான விருது மறுக்கப்பட்டதாகக் கோமல் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதை ‘சிந்து பைரவி’யில் நடித்த சுஹாசினியும், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்துவும் பெற்றார்கள். தகுதி ஒருபுறம் இருந்தாலும் அதைப் பெற்றுத்தருவதில் கோமல் கொண்டிருந்த போர்க்குணம் குறிப்பிடத்தக்கது. சிவாஜிக்கு மறுக்கப்பட்ட விருதை எப்படியாவது பிறிதிருவர்க்குப் பெறும் நோக்கில், சுஹாசினிக்காகவும் வைரமுத்துக்காகவும் அவர் போரிட்டிருக்கிறார்.

அவரே, ‘மகாகவி பாரதிக்குப் பிறகு வைரமுத்துதான் என இருபது நிமிடங்களுக்கு மேல் என்னென்னவோ விவாதித்துதான் வைரமுத்துவுக்கான முதல் தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்தேன்...’ என ‘சுபமங்களா’வில் எழுதியிருக்கிறார். ஒருவர் எத்தனை தகுதிகளைக் கொண்டிருந்தாலும் அத்தகுதிகளை எடுத்துச் சொல்லவும், அதுவே உயர்ந்ததென்று அழுத்திச் சொல்லவும் இன்னொருவர் தேவைப்படுகிறார்.

இன்னொருவர் என்பதைவிட ஒருவராவது தேவைப்படுகிறார் என்பது இன்னும் பொருத்தம். கோமல் சுவாமிநாதனின் தந்தை அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவருடைய வாசம் இருந்திருக்கிறது. பணி மாற்றலாகி ஒவ்வொரு ஊருக்குப் போகும்போதும் அந்த ஊரிலுள்ள இலக்கிய நாடகக்காரர்களை ஸ்நேகித்திருக்கிறார்.

மிகச் சிறிய வயதிலிருந்தே எழுத்துகளை வாசிப்பதில் அவருக்கிருந்த அலாதியான ஆர்வம், நல்ல எழுத்துகளை நோக்கி நகரவும் எழுத்தாளர்கள் மீதான நேசத்தை வளர்த்துக்கொள்ளவும் உதவியிருக்கிறது. தன்னுடைய கால்சட்டை பருவத்தில் தோழர் ஜீவாவை ரயில் பயணத்தில் சந்தித்திருக்கிறார்.

1956ல் கால்சிராயோடு தினமும் தன்னுடன் பயணிக்கும் அந்த பெரியவர்தான் ஜீவா எனத் தெரிந்து, எப்படியாவது அவரிடம் பேசிவிட வேண்டுமென ஏங்கியிருக்கிறார். அதற்காகவே ஒரு கேள்வியையும் தயாரித்துக் கொண்டு ஜீவாவிடம் அக்கேள்வியைக் கேட்டிருக்கிறார். ‘புரட்சிக்குப் பின்னான சோவியத் ரஷ்ய எழுத்தாளர்கள், புரட்சிக்கு முன்னிருந்த டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ், துர்கனேவ் போல மாபெரும் இலக்கிய கர்த்தாக்களாக ஏன் உருவாகவில்லை? அப்படியானால் அது புரட்சிக்குப் பின்னான சோவியத் ரஷ்யாவின்  தோல்விதானே?’ என்றிருக்கிறார்.

கேள்வியைக் கூர்ந்து கவனித்த ஜீவா, சிறுவனாயிருந்த கோமலைத் தட்டிக்கொடுத்துவிட்டு, ‘புரட்சிக்குப் பின்வந்த ரஷ்ய எழுத்தாளர்கள் யாரையாவது படித்திருக்கிறீர்களா?’ என்றிருக்கிறார். இல்லை என்றதும் அவரே ‘ஷோலக்கோவ்வை படியுங்கள்...’ என்றிருக்கிறார். ‘உங்கள் கேள்விக்கான பதில் மிக விரிவானது. குறிப்பாக, இலக்கியத்தின் வளர்ச்சி இரண்டு விதத்தில் இருக்கிறது.

பெர்பெண்டிக்குலர் குரோத், ஹரிசாண்டல் குரோத் என்று சொல்வார்கள். சீரழிந்த ரஷ்யாவின் இலக்கிய வளர்ச்சி என்பது பெர்பெண்டிக்குலர் வளர்ச்சிக்கு ஒப்பானது. புரட்சி மலர்ந்த ரஷ்யாவின் வளர்ச்சியோ ஹரிசாண்டல் வளர்ச்சியைப் பெற்றி வருகிறது...’ என பொறுமையாக விளக்கியிருக்கிறார்.

இலக்கிய வளர்ச்சியின் நீளத்தையும் அகலத்தையும் விளக்கிக்கொண்டே வந்த ஜீவா, கோமலுக்காக முந்தைய நிறுத்தத்திலேயே இறங்கி சில மணிநேரம் செலவழித்திருக்கிறார். ‘ஹரிசாண்டல் வளர்ச்சியைப் பொறுத்தவரை மிக நிதானமாகத்தான் நடைபெறும் என்பதால் தற்போதைய மாற்றங்களை உங்களால் யூகிக்க முடியவில்லை. யூகிக்க முடியாததை தோல்வியாகச் சொல்ல முடியுமா?’ என்றும் கேட்டிருக்கிறார்.

ஒரு மாபெரும் தலைவர், தன் முன்னால் வைக்கப்பட்ட ஒரு சின்னஞ் சிறுவனின் கேள்விக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எண்ணி எண்ணி கோமல் சுவாமிநாதன் சிலாகித்திருக்கிறார். அதைப்போலவே காமராஜரும் பேர்சொல்லி அழைக்கும் இடத்தில்தான் கோமல் சுவாமிநாதன் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த காலத்தில், காமராஜர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கியே கதராடைக்கு மாறியிருக்கிறார்.

காமராஜரைப் பொறுத்தவரை யாரையும் ஒன்றுபோல நடத்தக் கூடியவர். ஒருமுறை மதுரை மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் கூட்டம். அது, ராஜாஜி மந்திரிசபை நடந்துகொண்டிருந்த காலம். அக்கூட்டத்தில் கலந்துகொள்ள காமராஜர் வருவதாக ஒப்புக்கொள்கிறார். காமராஜர் வருகிறார் என்றதும் ஊர்க்காரர்களுக்கு ஏக குஷி. தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

அவ்வூரில் முஸ்லிம் சகோதரர்கள் அதிகம் என்பதால் பறப்பன, மிதப்பன, ஊர்வன, உதைப்பன எல்லாம் உணவாகத் தயாராகியிருக்கிறது. தலைவர் வரும்வரை அக்கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க, கோமல் உள்ளிட்ட பிரமுகர்களும் மாவட்ட நகர கழக முன்னோடிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
 

(பேசலாம்...)

www.kungumam.co

Posted

ஊஞ்சல் தேநீர்


யுகபாரதி - 32

 

தலைவர் வந்தவுடன் உணவருந்தலாம் என்றிருந்த நிலையில், வெவ்வேறு ஊர்களில் கூட்டத்தை முடித்துக்கொண்டு காமராஜர் மிகத் தாமதமாக வருகிறார். வந்ததும் வராததுமாக விருந்து ஏற்பாட்டாளர்கள் ‘‘இலையை விரிக்கலாமா’’ எனக் கேட்கிறார்கள். பதிலேதும் சொல்லாத காமராஜர், அவர்கள் கேள்வியை முடிப்பதற்குள், சட்டென்று அடுக்களைக்குள் தலையை நீட்டி, ‘‘சைவமா? அசைவமா?’’ எனக் கேட்கிறார்.

விருந்து ஏற்பாட்டாளர்கள் மிகுந்த சந்தோசத்தில் ‘‘அசைவ உணவு தான்’’ என்கிறார்கள். தலைவரின் பாராட்டைப் பெறப் போகிறோம் எனும் தொனியில் அவர்கள் சொல்லியதும் “அதுசரி, சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு என்ன இருக்கிறது?” என்கிறார். “வெள்ளை சாதமும் ரசமும் இருக்கிறது” என்கிறார்கள்.

“அது மட்டும்தான் இருக்கிறதா?” எனக் கேட்ட காமராஜருக்குக் கோபம் வந்துவிடுகிறது. “என்னைப்போலவே ஊர் ஊராக காங்கிரஸுக்காக சுற்றிவரும் இவர்களுக்கு வெள்ளை சாதமும் வெறும் ரசமும் போதுமா? அப்படியானால் இவர்கள் ஒசத்தியில்லையா? உடனே, மாமிசம் சாப்பிடாதவர்களுக்குக் கறிகாய்களைக் கொண்டுவந்து சமையுங்கள். அதன்பின் உணவருந்தலாம்!” என்று கடிந்துகொள்கிறார்.
3.jpg
அதுவரை அசைவ உணவென்றால் என்னவென்றே தெரியாத கோமலுக்கும் இன்னபிறருக்கும், தாங்கள் சொல்லாமலே தங்களுக்காக பேசிய காமராஜரைப் பிடித்துவிடுகிறது. அடுத்தவர்களின் வயிறையும் இதயத்தால் பார்க்கத் தெரிந்த காமராஜர், அந்நிகழ்ச்சியில் சைவ உணவு தயாராகும்வரை சாப்பிடாமல் காத்திருந்திருக்கிறார். இதை ஏதோ சாப்பாட்டுப் பிரச்னை என்பதாகப் பார்க்க முடியவில்லை.

தகுதி வாய்ந்த தலைவர் ஒருவரின் தன்மையைக் காட்டக்கூடிய ஒரு சோற்றுப்பதமாகவே பார்க்கத் தோன்றுகிறது. தன்னைப் போலவே பிறரும் கவனிக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என எண்ணிய காமராஜரை, தன் தலைவர்களில் ஒருவராக கோமல் கருதியதில் வியப்பில்லை.

கோமல் சுவாமிநாதனின் திரைத்துறை அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். சுவையும் சுவாரஸ்யமும் நிரம்பிய அவருடைய அனுபவங்கள், பிரபல இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடமிருந்து தொடங்குகிறது. கே.எஸ்.ஜியிடம் உதவி இயக்குநராக கோமல் பணிபுரிந்த காலத்தில், சினிமாவின் இயல்புகள் முற்றிலும் வேறுமாதிரி இருந்தன. படக் கம்பெனிகள் முழுக்கவும் ஜோதிட வலையில் சிக்கியிருந்தன.

ஒரு கதையைச் சொன்னால், அக்கதையைச் சொன்னவரின் ஜாதகத்தை வைத்துதான் அக்கதையைப் படமெடுக்கலாமா, வேண்டாமா என முடிவெடுத்திருக்கிறார்கள். கோமல் சொன்ன ஒரு கதை கே.எஸ்.ஜி.க்கும் அதைத் தயாரிக்க விரும்பிய வி.கே.ராமசாமிக்கும் பிடித்துவிடுகிறது. ஆனாலும், அப்படக் கம்பெனியை நிர்வகித்து வந்த வி.கே.ராமசாமியின் சகோதரர் முத்துராமலிங்கமோ ஜோசியக் குறிப்பை வைத்துதான் முடிவெடுப்பார்.

அதன்படி, மேற்கு மாம்பலத்தில் வசித்துவந்த காகபுசுண்டரிடம் அழைத்துப்போய் கோமலின் நாடி ஜோதிடத்தை முத்துராமலிங்கம் கணித்திருக்கிறார். அப்போது அந்த ஜோதிடர், சம்பந்தப்பட்ட ஜாதகங்களில் தோஷமிருந்ததாகவும் காகபுசுண்டருக்கு ஆயிரம் ரூபாயில் பிராயச்சித்தம் செய்தால் கதையைப் படமாக்கலாம் எனவும் சொல்லிவிடுகிறார். அதை காகபுசுண்டரே சொன்னதுபோல் கருதிய முத்துராமலிங்கம், நிவர்த்தி செய்தெல்லாம் கதையைப் படமாக்கத் தேவையில்லை என கோமலுக்கு டாட்டா காட்டிவிடுகிறார்.
3a.jpg
கார்ல் மார்க்ஸை படித்திருந்தாலும்கூட, சினிமா என்று வந்துவிட்டால் காகபுசுண்டரின் காலையும் பிடித்தாக வேண்டிய நிலை அப்போதிருந்ததை ‘காகபுசுண்டரும் கார்ல்மார்க்ஸும்’ கட்டுரையில் கவலையுடன் பதிந்திருக்கிறார். ஜோதிடத்தால் தன் ஆரம்ப வாய்ப்பை இழந்த அதே கோமல் சுவாமிநாதன் தன் இறுதிக்காலங்களில் ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளதாகவும் தெரிவித்ததை மறைக்க முடியாது.

ஒன்றைத் தெரிந்துகொள்வதில் அவருக்கிருந்த தாகம், சித்த மருத்துவத்தையும் ஜோதிடத்தையும் கற்க வைத்திருக்கிறது. கற்றதிலிருந்து நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்வதே அவருடைய பண்பாக இருந்திருக்கிறது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’, ‘கைகொடுத்த தெய்வம்’, ‘பேசும் தெய்வம்’ போன்ற படங்களில் வசன உதவியாளராக பணிபுரிந்த கோமல், ‘பாலூட்டி வளர்த்த கிளி’, ‘பெருமாளே சாட்சி’, ‘நவாப் நாற்காலி’ போன்ற படங்களுக்குக் கதை வசனம் எழுதியிருக்கிறார்.

அப்படங்கள் போதிய கவனத்தைப் பெறவில்லை. என்றாலும், அவர் எழுத்து முயற்சிகள் எங்கேயும் தடைபடவில்லை. நாடகங்களாக பெரும் வெற்றி பெற்ற அவருடைய கதைகள், திரைப்படமாக எடுக்கப்படுகையில் ஏனோ மக்களால் கொண்டாடப்படவில்லை. அவரே இயக்கிய ‘யுத்தகாண்டம்’ திரைப்படமும் ரசிகர்களால் கண்டுகொள்ளப்படாதது துக்கமே.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனோடு பணியாற்றிய போதுதான் குருதத்தின் அறிமுகம் கோமலுக்குக் கிடைக்கிறது. கே.எஸ்.ஜி. இயக்கிய ‘கை கொடுத்த தெய்வம்’ திரைப்படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, அதை இந்தியில் தயாரிக்க அதன் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் விரும்பியிருக்கிறார்.

எஸ்.எஸ்.ஆர். நடித்த கதாபாத்திரத்தில் குருதத்தை போடலாம் என முடிவெடுக்கப்படுகிறது. அப்போது இந்தி சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக குருதத் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார். ‘பியாசா’, ‘காகஸ் கி ஃபூல்’, ‘சாஹிப் பீபி அவர் குலாம்’ போன்ற படங்கள் வெளிவந்திருந்தன. ஓர் ஆண்மீது இரண்டு பெண்கள் காதல் வயப்படுவதை மையமாகக் கொண்ட அத்திரைப்படங்களை இந்திய ரசிகர்கள் வரவேற்றார்கள்.

வடக்கிலும் தெற்கிலும் அவருடைய படங்கள் வசூலை வாரிக் குவித்துக்கொண்டிருந்தன. அத்திரைப்படங்களால் கவர்ந்திழுக்கப்பட்டவர்கள், அதுபோல்தான் குருதத்தின் வாழ்வும் அமைந்திருந்தது என்பதை அறிந்திருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் கீதா தத்தும், வஹிதா ரஹ்மானும் குருதத்தின் காதல் சோகத்துக்குள் சிக்கியிருந்தார்கள்.

அசலான கலைஞனாக அறியப்பட்ட குருதத்தின் இயற்பெயர் சிவசங்கர் படுகோன். கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், காதலின் சோகத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தக் கூடியவர். சொந்த வாழ்வில் எத்தனையோ சறுக்கல்களையும் சிக்கலைகளையும் சந்தித்த அவரை இந்தித் திரையுலகம் கைவிடாத காலம் அது. அவர் நடித்த, இயக்கிய, தயாரித்த அத்தனை படங்களுமே கிளாசிக் என்று சொல்லத்தக்கவை.

அப்படியான ஒருவரை தங்களுடைய படத்தில் நடிக்க வைக்க ‘கை கொடுத்த தெய்வம்’ படக்குழுவினர் மும்பைக்குப் போயிருக்கிறார்கள். அந்தப் பயணத்தில்தான் முதல்முதலாக கோமல் சுவாமிநாதன் விமானத்தில் பயணிக்கிறார். ஒருபக்கம் குருதத்தை சந்திக்கும் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் விமானப் பயணம். இரண்டுமே பதற்றம் நிறைந்ததாக அவருக்கு இருந்திருக்கிறது.

மிகுந்த நம்பிக்கையோடு போன படக்குழுவினரிடம் குருதத் சொல்கிறார். “சிவாஜி கணேசன் நடிப்புச் சக்கரவர்த்தி. அவர் போல என்னால் நடிக்க இயலாது. அவர் நடித்திருப்பதில் கால்பங்கைக்கூட நான் தாண்டமாட்டேன். ஒரு மாபெரும் கலைஞன் நடித்த பாத்திரத்தில் என்னை நீங்கள் நினைத்துப்பார்த்தது மகிழ்ச்சி. ஆனால், அந்த ரோலுக்கு என்னைக்காட்டிலும் ராஜ்கபூர்தான் பொருத்தமாயிருப்பார்.
3b.jpg
வேண்டுமானால் நானே பேசி கால்ஷீட் வாங்கித் தருகிறேன். இதற்குப் பிறகும் இந்தப் படத்தில் நான் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எஸ்.எஸ்.ஆர். செய்த ரோலை நான் செய்கிறேன்!” என்றிருக்கிறார். குருதத் போன்றவர்களே வியந்த அப்படியான சிவாஜிக்கு, இறுதிவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படவேயில்லை. தான், நடுவர் குழுவில் இருந்தும்கூட அவ்விருதை சிவாஜிக்கு பெற்றுத் தர இயலவில்லை என்னும் வருத்தம் கோமல் சுவாமிநாதனுக்குக் கடைசிவரை இருந்தது.

கோமல் சுவாமிநாதன், வியாபார சினிமாவில் பணியாற்றிக் கொண்டே மாற்று சினிமாவைப் பற்றிய கனவிலிருந்தவர். சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’யைப் போல தமிழிலும் சினிமாக்கள் வரவேண்டும் என விரும்பியவர். ‘‘‘பதேர் பாஞ்சாலி’யை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் ஒவ்வொரு மாதிரியான அர்த்தங்களைக் கொடுக்கிறது. முப்பதாண்டுகளாக அப்படத்தை அவ்வப்போது பார்த்துவருகிறேன்.

என்றாலும், அப்படத்தின் முழு அர்த்தத்தையும் நான் விளங்கிக்கொண்டேனா எனத் தெரியவில்லை!” என்றிருக்கிறார். காலங்கடந்த படைப்புகளை உருவாக்கக்கூடிய கலைஞன், ஒருகட்டத்தில் தன்னை ரசிப்பவர்களையும் கலைஞனாக்கி விடுகிறான். அவனுக்கு வேறு எதுவுமே முக்கியமில்லை. சோறோ, சுகமோ, கொள்கையோ, கோட்பாடோ அவனுக்குக் குறுக்கே நிற்பதில்லை.

அவன் கண்டதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறான். பகிர்ந்து கொள்வதன்மூலம் மேலும் சில படைப்புகள் உருவாகும் என நம்புகிறான். பன்முக அடையாளங்களைப் பெற்றிருந்த கோமல் சுவாமிநாதனின் நிஜமான அடையாளமாக நான் கருதுவது, இலக்கியவாதிகளோடு அவர் ஏற்படுத்திக்கொண்ட நெருக்கம்தான்.

தி.ஜானகிராமன், க.நா.சுப்ரமணியம், திருலோக சீதாராம், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், ப.சிங்காரம், சுந்தரராமசாமி, சண்முகசுந்தரம், விக்ரமாதித்தியன், கலாப்ரியா, வண்ணதாசன், சி.எம்.முத்து, இராஜேந்திரசோழன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன் என அவர் பழகாத எழுத்தாளர்களே தமிழில் இல்லை.

நீண்ட வாசிப்பையும் நெடிய தொடர்புகளையும் பேணிவந்த அவர், யார் ஒருவர் குறித்தும் புகாரோ புலம்பலோ வைக்கவில்லை என்பதுதான் இதிலுள்ள விசேஷம். தன்னை உணர்ந்தவர்கள் அகத்தையும் முகத்தையும் அழகாக வைத்திருக்கிறார்கள். கோமல் சுவாமிநாதனைப் போன்றவர்கள், அடுத்தவர்களின் அகத்தையும் முகத்தையும்கூட அழகாக்கிவிடுகிறார்கள். அதிருப்தியில் இருந்துதான் அரிது உண்டாகிறது. இப்போதைய சிறுபத்திரிகைச் சூழலிலும் ஒரு கோமல் சுவாமிநாதன் இருந்தால் தேவலாம்.
                 
(பேசலாம்...)

 

kungumam.co

Posted

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 33

ஸ்ரீந்தியத் தமிழர்களைவிட மண்பற்று மிக்கவர்கள் ஈழத்தமிழர்களே என்பதை அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தின் வாயிலாக  உணர்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், மண்பற்று என்பது இனத்தையும் மொழியையும் கடந்த ஒன்று எனக் கருதுபவர் அண்ணன்  பொ.ஐங்கரநேசன்.
5.jpg
தம்முடைய சூழலியல் கட்டுரைகள் மூலம் அவர் எத்தனையோ விஷயங்களைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். இன உரிமையை மீட்பது  போலவே இயற்கையை மீட்பதும் அவசியம் என்பதுதான் அவர் தொடர்ந்து முன்வைத்து வருவது. பிரபஞ்சத்தின் ஏக எஜமானர்களாகத்  தங்களைக் கருதிக்கொள்ளும் மனிதர்கள், ஏனைய உயிரினங்கள் வாழ அனுமதிக்காத அவலத்தை அவர்போல் இன்னொருவர் தமிழில்  எழுதியதாகத் தகவல் இல்லை.

இன்று சூழலியல் குறித்து வெளிவரும் பல நூல்களுக்கு ஆதாரமாக விளங்குபவை அவருடைய ‘ஏழாவது ஊழி’ கட்டுரைகளே.  இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்த தொல்குடி சமூகம், விஞ்ஞான சாதனங்களின் உற்பத்தி பெருக்கத்திற்கு எந்தெந்த விதத்தில்  பலியாகிறது என்பதை அவர் ஒருவரே புள்ளிவிபரங்களுடன் புரிய வைப்பவர்.

அந்நூலில் அவர் ஆகாயத்திற்கு மேலும் கீழும் உள்ள அத்தனை விஷயங்களையும் அலசியிருக்கிறார். கொதிக்கும் பூகோளத்திலிருந்து  விடுதலைச் சூழலியல்வரை அவரால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அடர்த்தியும் ஆழமும் நிறைந்தவை. நுனிப்புல் மேய்தலோ  பதிவிறக்கப்பட்ட தகவல்களோ அந்நூலில் எதுவுமே இல்லை.

முற்று முழுக்க நிரூபிக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் அது. இன்னும் சொல்லப்போனால், சூழலியல் குறித்து  உலகமெங்கும் எழுதிவரும் அறிஞர்களின் பட்டியலில் இடம்பெறத்தக்க பெயரே அவருடையதும். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்  கடலும், மலையும் எங்கள் கூட்டம்’ என்று பாரதி எழுதியதை அன்பின் வெளிப்பாடாக எண்ணிக் கொண்டிருந்த என்போன்றோர்க்கு அது,  அன்பு சார்ந்த பதிவு அல்ல, அறிவியல் சார்ந்த கூற்று என விளக்கப்படுத்தியவர் அவர்தான்.

பல பத்தாண்டுகளாக யாழ்ப் பாணத்திலிருந்து வெளிவந்த இருமாத சஞ்சிகையான ‘நங்கூரம்’ பத்திரிகையில் அவர் எழுதிய அறிவியல்  கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. மக்கள், தங்கள் நிலத்துக்கான போராட்டத்தைக் கையிலெடுக்கும் அதே வேளையில், பூச்சிக்கொல்லிகளால்  பாழ்பட்ட நிலத்தின் மீதான கரிசனமே அவருடைய சூழலியல் குறிப்புகள்.

இடதுசாரி பார்வையிலிருந்து ஈழப் போராட்டத்தை அணுகக்கூடிய ஒருவர், பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சிகளையும் சர்வதேச அரசியல்  அழுத்தங்களையும் ஒருசேர கணக்கிலெடுத்துக் கொள்ளும் தன்மையை அவர் எழுத்துகளில் காணலாம். ‘நுகர்வெனும் பெரும்பசி’ என்னும்  நூலில் ராமச்சந்திர குஹா சொல்லியிருப்பதைப் போல மனிதர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும்பசிக்கு இயற்கையை இரையாக்கிக்  கொண்டிருக்கிறார்கள் என்பதை அண்ணன் ஐங்கரநேசன், வேறு ஓர் அரசியலிலிருந்து சொல்லியிருக்கிறார்.

‘மென்பானங்களின் வன்முறைகள்’ எனும் கட்டுரையும் ‘நீர்ப் போர் மூளுமா’ எனும் கட்டுரையும் குறிப்பிடும்படியானவை. இரண்டாயிரமாவது  ஆண்டின் முற்பகுதியில் அவர் எனக்கு அறிமுகம். அவ்வப்போது அவருடைய கட்டுரைகளை இணையத்திலும் இதழ்களிலும் வாசித்திருந்த  எனக்கு, அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தவர் அண்ணன் அறிவுமதிதான்.

73, அபிபுல்லா சாலை அலுவலகத்தில்தான் முதல்முதலாக அவரைச் சந்தித்தேன். அந்த நாளை அவருமே மறக்க வாய்ப்பில்லை.  எப்படியெனில், அன்றுதான் அண்ணன் ஐங்கரநேசனுக்கு அவர் பார்த்து வந்த பத்திரிகைப் பணி பறிபோயிருந்தது. அடுத்து என்ன  செய்வதென்ற யோசனையில் அண்ணன் அறிவுமதியைச் சந்தித்து ஆலோசிக்க அவர் வந்திருந்தார்.

அவருடைய சூழலைப் புரிந்துகொள்ளாமல் அவர் எழுதிய சூழலியல் கட்டுரைகள் குறித்து அப்போது நான் சிலாகிக்கத் தொடங்கியதை  நினைத்தால் இப்போது சிரிப்பு வருகிறது. ஒருவர் என்ன சூழலில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் பேசிவிடக் கூடிய  விடலைத்தனம் அப்போது என்னிடமிருந்தது ஆச்சர்யமில்லை. என்றாலும், என் கேள்விகள் எதையுமே அவர் தவிர்க்கவில்லை.

மாறாத புன்னகையும் மறுக்காத அன்பையுமே அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் தீவிரமாக  இயங்கிவந்த அவர், அந்த சந்திப்பிலிருந்து எனக்கு உணர்த்திவரும் நட்பின் கனம் மிகுதியானது. சுற்றுச்சூழல் குறித்து தமிழில் வெளிவந்துள்ள  மிக முக்கியமான நூலான ‘ஏழாவது ஊழி’ அப்போது வெளிவந்திருக்கவில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘நங்கூரம்’ இதழிலும் இன்னபிற இதழ்களிலும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘ஏழாவது ஊழி’.  நாற்பதுக்கும் மேலான கட்டுரைகள் அடங்கிய அந்நூலில் அவர் எழுதாத சூழலியல் கருத்துகளே இல்லை. பொதுவாக அறிவியல்  கட்டுரைகளோ, சூழலியல் கட்டுரைகளோ எழுதுபவர்களின் மொழி, ஈர்ப்புடைய மொழிநடையைக் கொண்டிருக்காது.

புள்ளிவிபரங்களை விட்டுவிடக் கூடாதே என்னும் கவலையில் இயல்பிலிருந்து வேறுபட்டு எழுதுவார்கள். கனதியான செய்திகளை சொல்ல  வேண்டியிருப்பதால் அவர்களின் மொழிநடை பொருத்தமற்ற வேதிப்பொருட்களின் சேர்க்கை போலிருக்கும். உச்சரிக்க சிரமமான அறிவியல்  பெயர்களை வலுக்கட்டாயமாக திணித்திருப்பார்கள்.

ஆனால், அண்ணன் ஐங்கரநேசனின் எழுத்திலோ எந்த சிக்கலும் இருப்பதில்லை. வாசிப்பனு பவத்தை முதன்மையாகக் கொண்டே அவர்  எழுதுவார். தன்னுடைய அறிவை வெளிப்படுத்துவதைவிட வாசிப்பவரின் மனநிலையை உள்வாங்கியே பதங்களைப் பிரயோகிப்பார்.  சிலந்திகளைப் பற்றி அவர் எழுதினால்கூட அதை ஒரு கதையிலிருந்துதான் ஆரம்பிப்பார்.

அரக்னி என்ற நெசவுப் பெண்மணி, தையற்கலையில் தனக்கிருந்த தேர்ச்சியாலும் இறுமாப்பினாலும் கிரேக்க கடவுளான ஏதினாவுக்கு  சவால்விடுகிறாள். ‘‘உன்னைப் படைத்த என்னிடமே சவாலா?’’ என்று கடவுளுக்குக் கோபம் வந்துவிடுகிறது. என்ன திறமையிலிருந்தாலும்  கடவுளிடம் மனிதன் தோற்றுவிடுவதுதானே பொதுவிதி. அந்த விதியினால் அரக்னியும் ஒரு கட்டத்தில் கடவுளிடம் தோற்றுவிடுகிறாள்.

இதுவரை யாரிடமும் தோற்காத தாம் கடவுளிடம் தோற்றுவிட்டோமே என்னும் அவமானம் தாங்கமுடியாமல் அரக்னி தற்கொலை  செய்துகொள்கிறாள். கடவுளுக்கோ இப்போது கோபம் இரண்டு மடங்காகி விடுகிறது. ‘‘தோல்வியை ஏற்கக்கூட மனமில்லாத அளவுக்கு  கர்வமா உனக்கு?’’ என்று கண்டிக்கிறார்.

கண்டித்ததோடு மட்டுமல்லாமல் மீண்டும் அரக்னியை உயிர்ப்பித்து, கர்வமுடைய அனைவருக்கும் உன் வாழ்க்கை பாடமாக  அமையட்டுமென்று அரக்னியின் சந்ததிகளைச் சிலந்திகளாகச் சபித்துவிடுகிறார். அந்த சாபத்தின் காரணமாகவே சிலந்திகள் வாழ்நாள் பூராவும்  தொங்கிக்கொண்டிருக்கின்றன. இது, கிரேக்கத்தில் இன்றளவும் சொல்லப்பட்டு வரும் ஐதீகக் கதை. இந்தக் கதையின் சரடுபிடித்து  சிலந்திகளை அவர் விளக்கத் தொடங்குவார்.
5a.jpg
சிலந்தி இழைகளின் பிரத்யேகமான இயல்புகளை விவரிக்கையில், அதிலிருந்து மனிதகுலம் பாராசூட்டையும் குண்டு துளைக்காத  உடைகளையும் எப்படி தயாரித்தன என்பதை அவரால் சொல்ல முடியும். அத்தோடு நில்லாமல், பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  ஜெயந்தி எதிரிசிங்கே என்பவர் 98ம் வருடம் செய்த சிலந்திகள் பற்றிய ஆய்வைக் குறிப்பிடுவார்.

இயற்கை வழங்கிய அற்புதமான பூச்சிக்கொல்லிகளான சிலந்திகளால் நெற்பயிரைத் தாக்குகின்ற பூச்சிகள் கட்டுக்குள் இருந்ததை ஆதாரத்தோடு  நிரூபிக்க முயல்வார். ஒட்டடைகளென்றோ நூலாம்படை களென்றோ துடைத்தெறியும் சிலந்திவலைகளின் நன்மைகளைப் பட்டியலிடும் அவர்  சிலந்திகளின் நச்சுத்தன்மை எத்தகையன என்பதையும் விவரிப்பார்.

பயத்தின் காரணமாக சிலந்திகளைவிட்டு எட்டிநிற்கும் நம்மை அதன் சாதக அம்சங்களைத் தொட்டுக்காட்டிப் பராமரிக்கச் சொல்லுவார். பிற  உயிர்களிடத்தில் அன்பு செய்யாவிட்டால் மனித உயிர்கள் மதிப்பிழந்து போகும் என்பதை சூழலியல் சார்ந்து அவர் எழுதும் எல்லாக்  கட்டுரைகளிலும் பதிவு செய்திருக்கிறார்.

நம்முடைய மரபை நாம் எப்போது கைவிடத் தொடங்கினோமோ அப்போது இருந்துதான் நோயை சுவீகரிக்கும் நிலை ஏற்பட்டதென்று  சொல்லும் அவர், பழமைக்குத் திரும்புவோம் என்று எங்கேயும் எழுதியதில்லை. மரபுக்குத் திரும்புவோம் என்றுதான் எழுதுவார்.  பழமைக்குத் திரும்புவதிலும் மரபுக்குத் திரும்புவதிலும் உள்ள வேறுபாட்டை அவருடைய எழுத்துகள் உணர்த்துகின்றன.

புழக்கத்திலுள்ள தமிழ் மரபு சார்ந்த சொற்றொடர்களை அதிகமாகக் கையாளும் அவர், நுணலும் தன் வாயால் கெடும் என்னும் பழமொழியை  வைத்துக் கொண்டு செல்லிடை பேசியின் ஆபத்துகளைச் சொல்லிவிடுவார். விஞ்ஞான சாதனங்கள் இயற்கைக்கு ஊறு விளைவிக்கின்றன  என்பதற்காக முற்றாக விஞ்ஞானமே வேண்டாம் என்னும் குரலில் அவர் பேசுவதில்லை. தேவைதான் ஒன்றைத் தீர்மானிக்கின்றன என்பதால்  அந்தத் தேவையின் நீள அகலங்கள் குறித்த தெளிவுகளை ஏற்படுத்துவதில் அவருடைய எழுத்துகள் முக்கிய பங்காற்றும்.

ஈழத் தமிழர்கள் தங்களுடைய தேசிய மலராகக் கார்த்திகைப் பூவைக் கொள்ளவேண்டுமென விடுதலைப்புலிகள் அறிவித்த போது, அதை  வழிமொழிந்து அண்ணன் ஐங்கரநேசன் எழுதிய கட்டுரை கவனிக்கத்தக்கது. அவர் அக்கட்டுரையை எழுதும்வரை கார்த்திகை மலர்தான்  காந்தள் மலர் என்று பலருக்குத் தெரியாமலிருந்தது.

தமிழரின் வாழ்வியலோடு நெருக்கமான காந்தள் மலர் தனித்த இயல்புகளையும் தன்மைகளையும் கொண்டது. சிவப்பும் மஞ்சளும் கலந்த  அம்மலர், கார்த்திகை மாதத்தில் பூக்கத் தொடங்குவதால் கார்த்திகைப் பூ என்று ஈழத் தமிழர்கள் அழைக்கிறார்கள். வெளிர் பச்சையிலிருந்து  பாதி சிவப்பும் பாதி மஞ்சளுமாக மலரும் அம்மலர், இறுதியில் குருதிச் சிவப்பில் வசீகரிக்கும்.

கார்த்திகை மலரின் அழகையும் வாசத்தையும் குறிப்பிட்டு எழுதிய அக்கட்டுரையில் ஒரு தேசம் தன்னுடைய அடையாளமாக பறவையையும்,  விலங்கையும் மலரையும் ஏன் கொள்கிறது என்பதை அரசியலோடு முன்வைத்திருப்பார். காந்தள் மலருக்கு வாசமில்லை என்றாலும், தேசிய  மலராக அறிவிக்கப்பட்டிருப்பதால் தேசிய வாசம் வீசுகிறது என்றிருப்பார்.

இந்தியா தாமரையையும், இலங்கை நீலோற்பலத்தையும், ஐக்கிய அமெரிக்கா ரோஜாவையும் தங்களுடைய தேசிய மலர்களாக  அறிவித்துக்கொண்டதைப் போல, ஈழத் தமிழ்த் தேசம் கார்த்திகைப் பூவை தேசிய மலராக அறிவித்ததிலுள்ள பண்பாட்டுச் சான்றுகளை சங்க  இலக்கியத்திலிருந்து கொடுத்திருப்பார்.

‘காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்’ என்ற பதிற்றுப்பத்து பாடலையும், ‘மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தண் மென்விரல்கள்’ என்று  சிலப்பதிகாரச் செய்யுளையும் எடுத்தாளும் திறம் அவருடையது. ‘சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த கடவுட் காந்தளுள்ளும்’ என  அகநானூறை ஆய்ந்தெழுதும் அவர், ‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன், வெறியாட்டு அயர்ந்த காந்தளும்’ என்ற தொல்காப்பியத்தையும்  அக்கட்டுரையில் துணைக்கு அழைத்திருப்பார்.

(பேசலாம்...) 

kungumam.co.

Posted

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 34

விஞ்ஞான அறிவு இலக்கியத்திற்கு விரோதமானதென்னும் மாயையைப் போலவே இலக்கிய அறிவும் விஞ்ஞானத்திற்கு விரோதமானதென்னும் மாயை நிலவுகின்றது. ஆனால், அண்ணன் ஐங்கர நேசன் போன்றவர்கள் விஞ்ஞானத்தைக்கூட இலக்கிய அறிவிலிருந்து பார்க்கப் பயின்றிருப்பது வியப்பளிக்கிறது.

இனம், மொழி, பண்பாடு, கலாசாரம், உரிமை இவற்றின் ஊடாகவே அறிவியலை அணுகவேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணங்களும், பார்வைகளும். அறிவியல் என்பது அறத்தின் பாற்பட்டு செயல்படும்வரை சிக்கலில்லை. அதே அறிவியல் அறத்திற்கு எதிராகப் போகும் போதுதான் சங்கடம். அந்த சங்கடத்தின் விலை, ஜப்பானின் கியூஷூ தீவிலுள்ள மினமாட்டாவாகவும், இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபாலாகவும் ஆகிவிடுகிறது.

‘விலை உயிரென்றால் விஞ்ஞானம் ஏன்?’ என்ற கேள்வியைத்தான் உலகெங்கிலுமுள்ள சூழலியவாதிகள் எழுப்புகிறார்கள். வளர்ச்சி எனும் பெயரில் பெருமுதலாளிகளின் பேராசைகளுக்கு வளைந்துகொடுக்கும் அரசுகளை அவர்களால் ஒருபோதும் ஆதரிக்க முடிவதில்லை. இழப்பீடுகளாலும் இன்னபிற நிவாரணங்களாலும் ஒரு மனித உயிரைக்கூட மரணத்திலிருந்து காப்பாற்ற முடியாதபோது விஷப் பரீட்சையான விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு விளையாடாதீர்கள் என்றே அவர்கள் கெஞ்சுகிறார்கள்.

அரச பயங்கரவாதமென்பது ஆயுதங்களால் மட்டுமல்ல, அடிப்படை ஜீவாதார பிரச்னைகளில் ஏற்படுத்தும் அச்சுறுத்தலே என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். ஒரு நாடு தன்னுடைய மக்களுக்கு விசுவாசமில்லாமல் வியாபாரிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் விசுவாசமாயிருந்தால் என்ன நேரும் என்பதைத்தான் இப்போது பார்த்து வருகிறோம்.

பசுவைக் காப்பதற்காக மனிதர்களைக் கொல்கிறார்கள். மனிதர்களைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு பூசாரிகளையும் சாமியார்களையும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துகிறார்கள். அண்ணன் ஐங்கரநேசனின் கட்டுரைகளின் வாயிலாக அறிவியலை எந்த அளவுக்குப் புரிந்துகொள்கிறோமோ அதே அளவுக்கு அரசியலையும் புரிந்துகொள்ளலாம்.

4.jpg

சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து அவர் எழுதிய எழுத்து கள் புத்த மதத்தின் மீது வைத்த கேள்விகளாகவும் பார்க்கப்படுகின்றன. ‘புலிகள் அழியலாமா’ எனும் கட்டுரையில், ‘‘காட்டு ராஜாவாகக் கர்ஜித்துக் கொண்டிருந்த சிங்கத்தை அழிவின் குகைக்குள் அடைத்துவிட்டு, புலியை தேசிய விலங்காக முடிசூட்டி அழகு பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா, விரைவிலேயே புலியையும் அழிவின் குகைக்குள் தள்ளிவிடுமென்றே தெரிகிறது...’’ என எழுதியிருப்பார்.

உண்மையில், இக்கட்டுரையை வாசிக்கத் தொடங்கியபோது சிங்கத்தை தேசிய விலங்காகக் கொண்ட ஒரு நாட்டுக்கும், புலியை தேசிய விலங்காகக் கொண்ட இன்னொரு நாட்டுக்கும் இடையே நிகழ்ந்து வரும் வல்லாதிக்க போட்டியைக் குறிப்பதாகப்படும். இரண்டு குறியீடுகள் வழியே அரசியலை முன் வைக்கிறாரோ என நினைத்து அக்கட்டுரையை வாசிக்கத் தொடங்கினால் அது முழுக்க முழுக்க காட்டுயிர்கள் பற்றிய கவலையாயிருக்கும்.

‘‘இந்திய கானகங்களில் வாழுகின்ற புலிகள் பற்றிய அண்மைக்கால கணக்கெடுப்பு களைப் பார்த்தால், புலிகளுக்கு ராஜயோகம் இருப்பதாகத் தெரியவில்லை. உலகிலுள்ள ஆறாயிரம் புலிகளில் மூவாயிரத்து எழுநூறு புலிகள் இந்திய கானகங்களில் இருப்பதாக இந்தியா பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இந்திய காட்டுயிர் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் ஆயிரத்து ஐநூறுக்கும் குறைவான புலிகளே இருப்பதாக அறிவித்திருக்கிறது...’’ என கட்டுரையை வளர்த்துக்கொண்டு போவார்.

ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதிவரை அந்தக் கட்டுரை எதைக் குறித்து எழுதப்பட்டது என்பதை பூடகமாக சொல்லிக்கொண்டு போய், புலிகளின் ராஜாங்கம் என்று நம்பப்படும் இந்தியாவிலேயே அதன் இருப்பு கேள்விக்குறியாகி வருவதை ஆய்வறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என முடித்திருப்பார். ‘Project Tiger’ எனும் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை எழுபதுகளில் இந்திராகாந்தி தொடங்கியதிலிருந்து சமீப காலம்வரை புலிகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை அக்கட்டுரை பேசும்.

அழிந்துவரும் புலிகள் குறித்து தீவிர அக்கறை காட்டிய உலகத் தலைவர்களில் முதன்மையானவர் இந்திராகாந்தியே என்றிருப்பார். 1978ல் ஆயிரத்து எண்ணூறாக இருந்த புலிகளின் எண்ணிகை, இந்திராகாந்தியின் விசேஷ கவனத்தாலும் செயற்கரிய திட்டத்தாலும் 1988ல் நான்காயிரத்து ஐநூறாகப் பெருகிய புள்ளிவிபரத்தை சொல்லியிருப்பார். அதே சமயம், 1984ல் இந்திரா காந்தியின் படுகொலை புலிகளுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்ததென்றும் கூறியிருப்பார்.

நானறிந்தவரை சூழலியல் குறித்து எழுதியவர்களில் அரசியலை உட்செறித்து எழுதியவர் அண்ணன் ஐங்கரநேசன் மட்டுமே. இலங்கையின் கள அரசியல் நிலவரத்தையும் இந்தி யாவின் அரசியல் கள அணுகுமுறையையும் நன்கு அறிந்திருந்த அவர், அவற்றின் ஊடாக எழுதிய அத்தனை சூழலியல் கட்டுரைகளும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கனவே. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், சென்னை கிறித்தவக் கல்லூரி யிலும் கல்வி பயின்றவர் என்பதால் தமிழர்கள் வாழும் இரண்டு முக்கிய பிரதேசங்கள் குறித்தும் அவரால் சிந்திக்க முடிந்திருக்கிறது.

உயிர்வாழ்தலில் ‘உண்ணுவதும் உணவாவதும், வலிந்தவை பிழைப்பதும், நலிந்தவை அழிவதும்’ இயற்கையின் நியதி என்பதால் பரிணாமப் பாதையெங்கும் இனங்களின் மறைவும் தவிர்க்கமுடியாதது என ‘ஏழாவது ஊழி’யில் எழுதியிருப்பார். காலம் நெடுகிலும் புவியியல் சரித்திரம், ஒரு மில்லியன் ஆண்டுவரைதான் ஓர் இனம் வாழ்ந்துள்ளது எனக் குறித்திருக்கிறது. அல்லது ஒரு ஆண்டில் மில்லியனில் ஓர் இனத்தை காலம் களையெடுக்கிறது.

இந்தக் களையெடுப்பிலிருந்து தப்பிக்கவே ஒவ்வொரு இனமும் போராடி வருகின்றது. அறிவியலாலும் அரசியலாலும் தங்களைத் தற்காத்துக்கொள்ள நிகழ்த்திவரும் போராட்டமே வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் பூமியின் சமநிலையைப் பேணி வருகிறது. தற்போது தரையில் வாழும் எந்த பெரிய விலங்கைவிடவும் மனிதர்கள் நூறு மடங்கு பெருகியிருக்கிறார்கள்.

4a.jpg

புதிய உயிரினங்கள் வாழவும் பெருகவும் வழிவிடாத மனிதர்கள், காலத்தின் களையெடுப்பைத் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவே இயற்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள். இந்த இயற்கையை ஒரு காலம்வரைதான் தடுத்தாட்கொள்ள முடியும், ஒரேயடியாகத் தடுத்தால் உலகத்திலுள்ள அத்தனை இனங்களும் தரைமட்டமாகிவிடும் என்பதுதான் சூழலியலாளர்கள் சொல்லி வருவது.

கூடங்குளம், கதிராமங்கலம், நெடுவாசல் என்று தமிழகத்தில் தற்போது எழுந்துள்ள சூழலியல் பிரச்னைகள் அனைத்தையுமே இந்த விதத்தில்தான் அணுகவேண்டியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கான எதிர்ப்பாகவோ அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கான முட்டுக்கட்டையாகவோ ஆட்சியாளர்களும் ஆளும் அரசின் ஆதரவாளர்களும் கொடிபிடித்தாலும்கூட இந்தப் போராட்டங்கள் ஓய்ந்துவிடக் கூடாது என்பதே என் விருப்பம்.

இனமும் மொழியும் ஓர் மனிதனின் அடையாளமென்றால், இயற்கையே ஆதாரம். ஆதாரத்தை அழிக்கக்கூடிய அரசையும் நிறுவனங்களையும் அனுமதிக்க ஆரம்பித்தால் வாழ முடியாது என்பதல்ல பிரச்னை, பூமியே இல்லாமல் போகும் என்பதுதான் நிதர்சனம். அண்ணன் ஐங்கரநேசன் போன்றவர்கள் அதை வலியுறுத்தவே தங்களை வருத்திக்கொள்கிறார்கள். ‘கேட்குமா தவளைச் சத்தம்’, ‘வாழைகள் வாழுமா’, ‘நீல நஞ்சு’, ‘முற்றுகையில் மழைக்காடுகள்’, ‘காணாமல் போகும் கடற்குதிரைகள்’, ‘தந்திர விதைகளும் தற்கொலை விவசாயிகளும்’ என அவர் எழுதிய அத்தனை கட்டுரைகளுமே உயிர் நேசத்தையும் மானுட விடுதலையையும் கோருகின்றன.

பத்திரிகையாளராகப் பணிபுரிந்த காலத்தில் அண்ணன் ஐங்கரநேசன் எடுத்த நேர்காணல்களை ‘வேர் முகங்கள்’ என்னும் தலைப்பில் சாளரம் வெளியிட்டிருக்கிறது. ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள கலை இலக்கிய ஆளுமைகளோடு அவர் நடத்திய உரையாடல்கள் ‘ஏழாவது ஊழி’ நூலுக்கு சற்றும் சளைத்ததல்ல.

ஓர் ஆளுமையிடம் உரையாடுவதற்கு அந்த ஆளுமை குறித்த தகவல்களை அனைத்து மட்டத்திலிருந்தும் சேகரித்திருக்கிறார். நாளதுவரை அந்த ஆளுமையின் நடவடிக்கைகளையும் ஏற்கனவே அந்த ஆளுமை அளித்த நேர்காணல்களையும் தேடித்தேடிக் கண்டடைந்து வாசித்த பிறகே கேள்விகளைத் தயாரித்திருக்கிறார். இல்லையென்றால், எப்போதோ ஒருமுறை ‘‘சத்யஜித்ரேயின் படங்கள் கட்டுரையைப் போல இலக்கணமாக இருக்கின்றன’’ என்ற பாரதிராஜாவிடம், ‘‘கலைப் படங்களுக்கான உங்கள் வரையறை என்ன?” வென்று கேட்டிருக்க முடியாது.

பாரதிராஜாவும் கலைப் படங்களுக்கான வரையறையாக சாந்தாராமின் படங்களை உதாரணமாகச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. பாலசந்தரைவிட சினிமா மொழியை நன்கு புரிந்துகொண்ட நீங்கள், ஏன் பாலசந்தர் அளவுக்கு பல்வேறுபட்ட கதைகளைக் கையாளவில்லை எனக் கேட்கவும், அதற்கு பாரதி ராஜா, “அடிமட்ட வாழ்விலிருந்து வந்த நான், ஒரே பாய்ச்சலில் மேலே வந்துவிட்டேன்.

எனவே, இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்து வாழ்வை என்னால் தொட முடியவில்லை” என பகிர்ந்துகொள்ளும் சூழல் ஏற்பட்டிருக்காது. ஓர் ஆளுமை குறித்து வாசகர்கள் அறிந்துகொள்வதைவிட அந்த ஆளுமையே அறிந்து கொள்ளத்தக்க கருத்துகளை உள்ளடக்கியுள்ள அவருடைய நேர்காணல்கள் பத்திரப்படுத்தத் தக்கவை.

குறிப்பாக, ஈழப் போராட்டக் களத்தில் ஒரு கையில் எழுதுகோலும் மறுகையில் துப்பாக்கியுமாயிருந்த புதுவை இரத்தினதுரையிடம் அவர் நடத்திய நேர்காணல் நெகிழ்வானது. ‘‘பொதுவாக போராட்டக் களத்திலிருந்து வெளிப்படும் கவிதைகள் கவிதைகளே அல்ல என்று தமிழ்நாட்டு சிறுபத்திரிகைகள் கூறுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு, இரத்தினதுரை அளித்திருந்த பதில் கண்ணீர்விட வைத்தது.
 

(பேசலாம்...)   

kungumam.co.

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 35

“புலிகள் அமைப்பில் புது அங்கத்தினராக தரப்படும் படிவத்தில், போராட உங்களைத் தூண்டியது எது? என்னும் கேள்வி இருக்கும். அந்தக் கேள்விக்கு பல இளைஞர்கள் ‘இரத்தினதுரை அண்ணனின் கவிதைகள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருக்க, நாட்டை மீட்கவும் உரிமைக்கு போராடவும் தூண்டுபவை கவிதைகள் இல்லையென்றால் வேறு எது கவிதைகள்?” என்று அண்ணன் ஐங்கரநேசன் கேட்டிருப்பார்.

“கவிதைக்கான அளவுகோல் ஆளாளுக்கு, சூழலுக்குச் சூழல் மாறுபாடுடையது. எனக்கு எது கவிதை என்று படுகிறதோ அது இன்னொருவருக்கு கவிதையாகாமல் போகலாம். ஆனாலும், கவிதைகளின் உச்சமான பணியாக நான் கருதுவது இதைத்தான்” என்றிருக்கிறார். அதைவிட இன்னொரு சம்பவம். “புதுக்குடியிருப்பில் ஒன்பது வயது பெண் பிள்ளை ஒன்று கிணற்றில் விழுந்துவிடுகிறது. மயக்க நிலையில் அந்தப் பெண் பிள்ளையை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கையில், எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகிறோம், தமிழீழ மண்ணை மீட்க ஓடிப்போகிறோம் என்று பாடியதாக பத்திரிகையில் செய்தி வந்ததே, அதுதான் ஒரு கவிஞனின் முழு திருப்தி” எனவும் சொல்லியிருப்பார்.

மண்ணையும் மக்களையும் நேசிக்கக்கூடிய படைப்பாளிக்கு இலக்கிய அங்கீகாரம் இரண்டாம் பட்சம்தான். மக்கள் அங்கீகாரமே முதன்மையானது; முக்கியமானது. அண்ணன் ஐங்கரநேசன் அளந்து அளந்து காலடியை எடுத்துவைப்பவர். எதைச் செய்தாலும் நேர்த்தியும் உண்மையும் அவரை நிழலாகத் தொடர்ந்து வரும். ‘வேர் முகங்கள்’ தொகுப்பில் அவர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுத்த நபர்கள் பலதரப்பட்டவர்கள். சி.மெளனகுரு, மணவை முஸ்தபா, இ.பத்மநாப ஐயர், த.ஜெயகாந்தன், நா.சுப்ரமணியன், பரமு.புஷ்பரட்னம், ஞானரதன், சுஜாதா, டிராட்ஸ்கி மருது என சகல துறையினரையும் நேர்கண்டு எழுதியிருக்கிறார்.

யார் எந்த விதத்தில் சிறப்பு என்பதும், யாரிடம் என்ன கேள்வியை முன்வைக்க வேண்டுமெனவும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. சூழலியலில் ஆர்வமுடையவர் என்பதால் அதுபற்றி மட்டுமே எழுதுபவராக அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அடிப்படையில் பத்திரிகையாளராக இருந்ததால் யாரை எதிர்கொள்வதிலும் அவருக்குச் சிக்கல் ஏற்படவில்லை.

1.jpg

யாழ்ப்பாணத்தில் வெகு காலம் தனியார் பயிற்சி வகுப்புகள் நடத்தியதன் மூலம் ஆசிரியராகவும் அறியப்பட்ட அவரைப் பின் தொடர்ந்து வர ஓர் இளைஞர் பட்டாளமே காத்திருக்கிறது. அதன் காரணமாகவே போருக்குப் பிந்தைய தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றியும் கண்டார்.

சூழலியல் சார்ந்து பேசியும் எழுதியும் வந்த அவரை, வட மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக்கினார். அமைச்சர் என்றால் தமிழ்நாட்டு அமைச்சரைப் போல தண்ணீர் ஆவியாமல் இருக்க தெர்மாகோலைப் போர்வையாக்கி மூடுபவராக அவர் இல்லை. துறைசார்ந்த தேர்ச்சியும் தெளிவும் மிக்கவராக அவர் செயல்பட்டார்.

அரசு சார்பில் நடத்தப்பட்ட மரம் நடும் விழாவையும் மாவீரர் மரம் நடு விழாவாகவே அறிவித்தார். காணொளி மூலம் அவர் ஆற்றியிருக்கும் பணிகள் பற்றிய தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவர் பொறுப்பேற்றதிலிருந்து உரங்களைத் தெளித்து வயலையும் வயிறையும் புண்ணாக்காத இயற்கை வேளாண்மைக்கு மக்களைப் பழக்கினார். அவர் விரும்பி அழைத்ததால் ஒரே ஒருமுறை யாழ்ப்பாணம் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

வேளாண்மை திருவிழாவாக கொண்டாடப்பட்ட அவ்விழாவில் என் தலைமையில் கவியரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர் நோக்கம் கவியரங்கை நடத்தி என்னை சிறப்பிப்பது மட்டுமல்ல. போரின் சாட்சி களாக சிதிலமடைந்து கிடக்கும் தன்னுடைய ஊரையும் உறவையும் எனக்குக் காட்டுவதே. தமிழகத்தில் இருந்துகொண்டு தங்களையும் தங்கள் அரசியல் முன்னெடுப்புகளையும் விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள் அங்குள்ள நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவர் பெரு விருப்பமாக இருந்தது.

ஒருவார காலம் அங்கிருந்தேன். அப்போது அவர் என்னை இரண்டுமுறைதான் சந்தித்தார். கிளிநொச்சியில் கவியரங்கம். கலந்துகொண்ட அத்தனை பேருமே வெகு சிறப்பாக கவிதை வாசித்தார்கள். இரண்டாவது நாளிலிருந்து என்னோடு சில இளைஞர்கள் சேர்ந்து கொண்டார்கள். “அரசியல் மாச்சர்யங்கள் கொண்ட இந்த இளைஞர்கள், உனக்கு யாழ்ப்பாணத்தின் அத்தனை திக்குகளையும் காட்டுவார்கள். நீ எந்த அரசியலோடு ஈழத்தை பார்க்கிறாயோ அதே அரசியலோடு பார்த்துவிட்டுப் போ.

உண்மை ஒன்றாகவும் உலகம் ஒன்றாகவும் சொல்வதை உணர்வுபூர்வமாக நீயும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு...” என்று சொல்லிவிட்டு அந்த இளைஞர்களின் கையில் என்னை ஒப்படைத்தார். அந்த இளைஞர்களில் ஒருவர் ஏற்கனவே எனக்கு தமிழகத்தில் அறிமுகமாகியிருந்த கவிஞர் செல்வம். அறிவுமதி அண்ணன் அலுவலகத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்த அவரைத் தவிர ஏனைய இளைஞர்கள் எல்லோருமே எனக்குப் புதியவர்கள்.

1a.jpg

விடுதலைப்புலிகள் குறித்த மாற்று அபிப்ராயம் கொண்டிருந்தவர்களும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்கள். அத்தனை இளைஞர்களுமே போராட்டத்தின் வலிகளையும் தோல்வியின் கசப்புகளையும் என்னோடு பகிர்ந்துகொண்டார்கள். போர்க்காலத்தில் புலிகள் ஊடகப் பிரிவில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய ரமணனால் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அழாமல் என்னிடம் பேச முடியவில்லை.

கொலையுண்டு கிடக்கும் குழந்தைகளின் சடலத்தின் மீது நடந்துபோய் பெரியவர்களைப் படம் பிடித்த காட்சியை அவர் விவரிக்கையில் நெஞ்சே அடைத்துவிடும் போலிருந்தது. பக்கத்து வீட்டுக் குடும்பமே பலியுண்டு கிடக்கையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவர் அவர்கள் வீட்டில் வைத்திருந்த அரிசிப் பானையைத் துழாவிய கொடூர சூழலை அவர் அழாமல் சொல்ல வேண்டுமென்று நான் எதிர்பார்த்தது எத்தனை பெரிய வன்முறை என என்னை நானே நொந்து கொள்கிறேன்.

ஈழத்து வீதிகளிலும் முல்லைத்தீவின் ஓரங்களிலும் போரின் சுவடுகள் நான் போயிருந்த வருடத்தில் கழுவப்படாமல் இருந்தன. ஒல்லாந்தையார் கோட்டை சுவர் முழுக்க பட்டுத் தெறித்திருந்த குண்டுகளின் வார்ப்படங்கள் துயர ஓவியத்தின் வண்ணங்களைப் பூசிக்கொண்டிருந்தன. அம்மைத் தழும்புகளைப் போல மதில் சுவர்கள் நெடுக தோட்டாக்கள் துளைத்த வடுக்கள் துருத்திக்கொண்டிருந்தன.

முள்ளிவாய்க்கால் பிரதேசங் களில் என்னுடைய கால்கள் நடந்தபோது, காலையிழந்தும் கையையிழந்தும் ஒரு பெரியவர் போய்க் கொண்டிருந்தார். வன்னிக் காடுகளிலும் வடமராச்சியிலும் பாதி கருகிய நிலையில் பனைமரங்கள் நின்று கொண்டிருந்தன. நல்லூர் கந்தசாமி கோயிலில் வழக்கம்போல தீபாராதனைகள் நடந்தன. திலீபனின் நினைவுத்தூணை இலங்கை ராணுவம் சிதைத்திருந்தது. புனரமைக்கப்பட்ட யாழ் நூலகத்தில் என்னுடைய கைகளில் தட்டுப்பட்ட கவிதை நூலை எழுதியவர் நீலாவாணன் என்னும் பெயரைத் தாங்கியிருந்தார்.

கடல்வழியே கடந்தால் சில கிலோ மீட்டர் தொலைவே உள்ள ஒரு நாட்டில் அத்தனை அழிவுகள் நடந்தபோது, எந்த கவலையுமில்லாமல் போராட்டம் குறித்துப் பொறுப்பற்று பேசிய தமிழகத்தில் பிறந்ததற்காக அப்போது வெட்கமாயிருந்தது. அந்த நெருக்கடியான சூழலிலும் என்னை அடையாளம் கண்டுகொண்ட ஒரு பெண்மணி, என்னுடைய சினிமா பாடலை மெச்சினார்.

“காற்று வழியாக உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ராணுவ முகாம்களை அச்சத்தோடு கடக்கிற பொழுதெல்லாம் தூரத்திலிருந்து கேட்கும் ஏதோ ஒரு பாடல் எங்களுக்குத் தைரியமூட்டுகிறது. அந்தப் பாடல்கள் எங்கள் தனிமையை, விரக்தியை, அனைத்தையும் இழந்த அவல நிலையை ஓரளவு மறக்கடிக்கிறது. என்றோ ஒருநாள் உங்கள் கைகள் எங்களை ஏந்திக்கொள்ளும்...” என்றார்.

அந்தப் பெண்மணியைப் பொறுத்தவரை அதிகம் படித்தவராகவோ அரசியல் மதிநுட்பம் நிறைந்தவராகவோ தென்படவில்லை. என்னைப் பார்த்ததும் அவருக்குச் சொல்லத் தோன்றியதைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். என்னால்தான் அதன்பின் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாமல் போனது. உடனிருந்த இளைஞர்கள் என்னை சகஜமாக்குவதற்காக ஏதேதோ பகடி செய்தார்கள். இப்படித்தான் ஒருமுறை என்று அவர்கள் சொல்லத் தொடங்கிய எந்தக் கதைகளும் அதன்பிறகு என் செவிகளுக்கு எட்டவில்லை.

பக்கத்திலிருந்தும் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்னும் துக்கம் தொண்டையை நெரித்தது. ஒருவாரம் அங்குமிங்கும் அழைத்துச் சென்ற இளைஞர்கள், வாரக் கடைசியில் என்னை வழியனுப்ப வந்திருந்த அண்ணன் ஐங்கரநேசனிடம் ஒப்படைத்தார்கள். “பயணம் எப்படியிருந்தது?” என்றார். “வலி நிறைந்த இந்தப் பயணத்தில் நீங்கள் எப்படி வாழ்வை நடத்துகிறீர்கள்?” என்றேன். “வாழ்வே வலி நிறைந்ததுதான் என்று புரிந்து கொண்டால் எந்த பயணமும் சிரமமில்லை...” எனச் சொல்லி வழக்கம்போல் சிரித்தார்.

இப்போது அவர் வகித்து வந்த அமைச்சர் பதவியை அரசியல் காழ்ப்பு காரணமாக அவரே ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ‘நீதிமன்றத்தை நாடுகிறார் அமைச்சர் ஐங்கரநேசன்’ என்னும் தலைப்பில் பிரபல இணைய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. நீதிமன்றத்தை நாடுவதைவிட மக்கள் மன்றத்தில் தன்னை நிரூபிக்கவே அவர் விரும்புவார்.

பெருந்திரளாக மக்கள் அவர் பின்னே அணிவகுக்கிறார்கள். மக்களால் நேசிக்கப்படும் ஒருவர், எந்த இக்கட்டிலும் மக்களிடமிருந்து விலகி அதிகாரத்தின் கைக்குள் அகப்படுவதில்லை. வலி நிறைந்ததுதான் எனப் புரிந்து கொண்ட அண்ணன் ஐங்கரநேசன், புதிய வலியைத் தாங்கிக்கொள்ளும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

எளிய வாழ்விலிருந்து அரசாங்கத்தின் அமைச்சர் பதவிவரை எட்டமுடிந்த அவருக்கு சூழலியலின் சகல சூட்சுமங்களையும் காலம் கற்பித்திருக்கும். எந்த இக்கட்டான நிலையிலும் அறத்தைத் தழுவி நிற்பவர்களை ஊழியால் ஒன்றும் செய்ய முடியாது. அதே நம்பிக்கையோடும் அதே உண்மையோடும் அவர் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளைத் தார்மீக நெறியோடு எதிர்கொண்டு சாதிப்பார் என்றே தோன்றுகிறது.

“பார்த்தீனியத்தை ஒடுக்குவதற்கு எம்முன்னால் உள்ள ஒரே தீர்வு, அவை பெரும் எடுப்பில் சூழ்ந்து கொள்வதற்கு முன்னால் கைகளினால் பிடுங்கி அழிப்பதுதான்” என ‘படையெடுக்கும் பார்த்தீனியம்’ எனும் கட்டுரையில் எழுதியிருப்பார். இப்போதும் அவர் தன்னைச்சுற்றி மண்டிக்கிடக்கும் அரசியல் பார்த்தீனியத்தைப் பிடுங்கி எறியும் பணியில்தான் இறங்கியிருக்கிறார்.
 

(பேசலாம்...)

kungumam.co.

Posted
 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 36

எந்த ஒரு முடிவையும் நாம் எடுப்பதில்லை. அது, ஏற்கனவே யாராலோ எடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கூட முடிவை நாமே எடுப்பதாகவும், எடுக்கப்போவதாகவும் சொல்லிக் கொள்கிறோம். உலக நிகழ்வுகள் ஒன்றுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. அப்படியிருக்க, கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றுக்கான முடிவை நாமெப்படி நல்லதாகவும் கெட்டதாகவும் எடுக்க முடியும்? இது ஒருவிதமான நம்பிக்கை.

இந்த நம்பிக்கையை சிலர் விதியாகவும் இயற்கையாகவும் பார்க்கிறார்கள். காரணம் எதுவும் இல்லாமல் நானும், இசாக்கும், ஹாஜாக்கனியும், கவிக்கோ அப்துல் ரகுமானை சந்தித்தே தீருவது என்று அன்று எடுத்த முடிவும் கூட அப்படியானதுதான். இத்தனை ஆண்டுகளில் கவிக்கோவை அவ்வளவு தீவிரமாக சந்தித்தே ஆகவேண்டுமென எனக்குத் தோன்றியதில்லை. ஆனால், அம்முறை ஏனோ அப்படி ஒரு தீவிரம் என்னை ஆட்கொண்டிருந்தது.
3.jpg
கவியரங்குகளிலும் இன்னபிற மேடைகளிலும் அவரோடு இணைந்து பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தபோதும், அவரை அவருடைய இல்லத்தில் சென்று அவ்வப்போது சந்தித்து அளவளாவும் வழக்கத்தை நான் வைத்திருக்கவில்லை. இசாக்கிற்கும், ஹாஜாக்கனிக்கும் என் தீவிரமும் தீர்க்கமும் எளிதாகப் புரியக்கூடியது என்பதால், எந்த மறுப்புமில்லாமல் என்னுடன் கிளம்பினார்கள்.

நாளைக்குப் போகலாம் என்றோ அடுத்த வாரத்தில் ஒருநாள் சந்திக்கலாம் என்றோ அவர்களில் ஒருவர் சொல்லியிருந்தால் கூட அன்றைய பயணம் தடைபட்டிருக்கும். ஆனால், அவர்கள் இருவருமே என் விருப்பத்திற்கு ஏற்ப செவிசாய்த்து உடன் வந்தார்கள். மூவருக்குமே கவிக்கோ என்றால் கவிதைகளைத் தாண்டிய பிரியமும் பிரமிப்பும் உண்டு.

நாங்கள் கவிக்கோ இல்லத்திற்குச் சென்றிருந்தபோது, அவர் வாராந்திர மருத்துவ சோதனைக்குப் போயிருப்பதாகத் தகவல் வந்தது. எப்போது வருவார் என்றதும், மதியத்திற்குப் பிறகுதான் வரக்கூடும். வந்தாலும், சந்திக்கும் வாய்ப்பில்லை. அவர் உடலை வருத்தும் மருந்தெடுத்துக் கொள்வதால் ஓய்வு தேவைப்பட உறங்கிவிடுவார். மாலையோ இரவோ கண்விழிக்கும்போதுதான் சந்திக்க இயலும் என்றார்கள்.
3a.jpg
இசாக்கும், ஹாஜாக்கனியும் திரும்பிடலாமா? என்றார்கள். எனக்கென்னவோ திரும்பிவிட மனமில்லை. நள்ளிரவே ஆனாலும் அவர் கண் விழிக்கும்வரை காத்திருந்து, அவரைச் சந்தித்துவிட்டுக் கிளம்புவோமே என்றேன். சொல்லவொண்ணா தீவிரத்தோடு அன்றிருந்தேன். பாடல் பதிவு நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில் உடனே வரச்சொல்லி தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

தவிர்க்க முடியாத வேலையிலிருப்பதாக மனமறிந்து பொய்சொல்லி, அழைப்புகளைத் துண்டித்தேன். அன்று மட்டும் கவிக்கோவைச் சந்திக்காமல் திரும்பியிருந்தால் அதன்பின் அவரைச் சந்திக்கும் வாய்ப்பே இல்லை என்பதை அப்போது நாங்கள் மூவருமே அறிந்திருக்கவில்லை. எந்த முடிவையும் நாம் எடுப்பதில்லை. அது, ஏற்கனவே யாராலோ எடுக்கப்பட்டுவிட்டது. கவிக்கோ கண்விழிக்கும்வரை அவர் வீட்டு வாசலிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

அந்தப் பேச்சிலும் கவிக்கோதான் மிகுதியும் வந்துபோனார். கவிக்கோவை பேச ஆரம்பித்தால் எனக்கோ, இசாக்கிற்கோ, ஹாஜாக்கனிக்கோ நேரம் போவதே தெரியாது. மணிக்கணக்காக, நாள் கணக்காக, வருஷக்கணக்காக அவரைப்பற்றிப் பேசியிருக்கிறோம். எங்கள் மூவருக்குமான பொதுமொழியாக கவிக்கோ அன்றுமிருந்தார். அடிக்கடி சந்திக்கவில்லையென்றாலும் யாரோ ஒருவரை மட்டுமே நம்முடைய இதயம் நெருக்கமாக உணரும். உணர்த்தும். அப்படி ஒருவராக கவிக்கோ இருந்தார்.

இருந்தார் என்று எழுதுகிற இந்த நொடியில் என்னையுமறியாமல் கண்கள் கலங்குவதை தவிர்க்கமுடியவில்லை. தட்டச்சு எந்திரத்தில் கண்ணீர்த் துளிகள் படாதவாறு தள்ளி வைத்துக்கொள்கிறேன். பாரதியோ, பாரதிதாசனோ, கண்ணதாசனோ இல்லை என்பதை ஏற்கும் என் மனம், கவிக்கோ இல்லை என்பதை ஏற்க இன்னும் சிலகாலம் ஆகலாம். ‘உன் கண்களால் தூங்கிக்கொள்கிறேன்’ என்றெழுதிய கவிக்கோவுக்கு, எங்கள் வருகை குறித்த பொறி தட்டியிருக்க வேண்டும்.

வழக்கத்துக்கு மாறாக அன்று முன்னமே எழுந்துவிட்டார். எழுந்தவுடனேயே எங்கள் காத்திருப்பை தெரிந்து கொண்ட அவர், அவசர அவசரமாக படுக்கையிலிருந்து வராந்தாவிற்கு வந்தார். “சொல்லியிருந்தால் தூங்கப்போயிருக்க மாட்டேனே, மருந்தும் மாத்திரைகளும் உடம்பைச் சோர்வுறச் செய்தன, மற்றபடி தூக்கமில்லை...” என்று உரையாடலைத் தொடங்கிய அவர், எங்கள் மூவரையும் அன்றலர்ந்த புன்னகையால் குசலம் விசாரித்தார்.

உடல் நலம் எப்படியிருக்கிறது? என்ற எங்களது கேள்வியையோ தொந்தரவு செய்துவிட்டோமா என்ற எங்களுடைய பரிதவிப்பையோ அவர் பொருட்படுத்தவே இல்லை. ‘கவிக்கோ’ விருது விழா ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது. அழைப்பிதழ் கிடைத்ததா? என மூவரிடமும் கேட்டார். கடந்த ஒருவார காலமாக விழாவை எண்ணிக்கொண்டு சரியாக உறங்காததை அவருடைய கண்கள் கூறின.

“சமீபத்துல ஓம் பாட்டு ஒண்ண கேட்டேம்ப்பா நல்லா இருந்துச்சி, அந்தப் பொண்ணு ஸ்ரேயா கோஷல் ரொம்ப பிரமாதமாப் பாடியிருக்கு. அந்தப் பொண்ணு சென்னைக்கு எப்போதாவது பாட வந்தா என்ன கூட்டிட்டுப் போ. வாழ்த்தணும்...” என்றார். ஸ்ரேயா கோஷலை, அவர் லதா மங்கேஷ்கருக்கு நிகராகப் புகழ்ந்தார். இன்னும் ஒருபடி மேலேபோய் “லதாவுக்கு பிறமொழி உச்சரிப்பு அவ்வளவாக வராது.

ஆனா, ஸ்ரேயாவுக்கு தமிழும் மலையாளமும் அட்சர சுத்தமாக வருகிறது...” என்றார். பெங்காலியான ஸ்ரேயா கோஷல் நானெழுதிய நாற்பதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றதும் ஆச்சர்யத்துடன், “அவ்வளவையும் குறுவெட்டுல பதிஞ்சி தா கேட்டுடுறேன்...” என்றார். கவிக்கோ திரையிசைப் பாடல்களின் காதலர். ‘அம்மி கொத்த சிற்பி எதற்கு?’ என்று திரைப்பாடல் குறித்து அவர் சொன்னதை பெரிதுபடுத்திய பத்திரிகைகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும் அவர் அலமாரியில் சேமித்து வைத்திருந்த இசைத்தட்டுகளின் எண்ணிக்கை தெரியாது.

கவிதை நூல்களுக்கு சற்றும் குறைவில்லாமல் சினிமா பாட்டு புத்தகங்களை பைண்ட் செய்து வைத்திருந்தார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல திரைப்படப் பாடல்களை மேற்கோள் காட்டுவார். திரை இசையில் தனித்து விளங்கும் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் எத்தனையோமுறை அவரைப் பாடல் எழுதித்தரும்படி கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்ன காரணத்தினாலோ நாகரீகமாகத் தவிர்த்துவிட்டார்.

அவர் பாடல் எழுதவில்லை என்றாலும், ராஜாவும், ரகுமானும் அவர்மீது கொண்டிருந்த அன்புக்கும் மரியாதைக்கும் அளவில்லை. இருபது வருடங்களுக்கு முன் இயக்குநர் அருண்மொழியும், சத்யசீலனும் தயாரித்த ஒரு படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதித் தந்திருக்கிறார். வாணி ஜெயராமும், பி.சுசீலாவும் பாடிய அப்பாடல்கள், “விடியாத நள்ளிரவில் வாங்கிய சுதந்திரம் போலாயிற்று...” என்று அவரே ஒருமுறை வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார்.

தன்னை கவிஞனாக ஆக்கியதில் இந்தி இசையமைப்பாளர் நெளஷாத்துக்கு பெரும் பங்குண்டு என எழுதியிருக்கிறார். ‘இல்லையிலும் இருக்கிறான்’ என்னும் நூலில் எட்டாவது சுரம் என்றொரு கட்டுரை இருக்கிறது. அதில், நெளஷாத்தின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். ஹமீர் என்ற கடினமான ராகத்தை நெளஷாத், ‘கோஹினூர்’ திரைப்படத்தில் கொண்டு வந்திருக்கும் தகவலையும், போஜ்பூரி நாட்டுப்புறப் பாடலை அடிப்படையாகக் கொண்டு ‘முகலே ஆஸம்’ திரைப்படத்தில் இசையமைத்திருப்பது பற்றியும் அவர் அக்கட்டுரையில் வியந்திருக்கிறார். நெளஷாத்தின் துணையில்லாமல் அவருடைய ஓர் இரவுகூட கழிந்ததில்லை.

‘அன்மோல் கடீ’, ‘பாபுல்’, ‘தீதார்’, ‘தர்த்’, ‘மேலா’, ‘தில்லகீ’ ஆகிய படங்களில் நெளஷாத் இசையமைத்த பாடல்களை மனப்பாடமாக அவரால் சொல்ல முடியும். இன்னும் சொல்லப் போனால் அவருடைய தூண்டுதலால்தான் செங்கம் ஜப்பார், நெளஷாத் இசையமைத்த ‘முகலே ஆஸம்’ படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். இசைப்பேழை வெளியீட்டு விழாவுக்கு வந்த நெளஷாத்திடம் நான்கு மணி நேரம் உரையாடியதை பெருமையாகக் கருதி, அன்றும் அவ்வுரையாடலை எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.

நெளஷாத்தை கவிக்கோ வியந்ததுபோலவே கவிக்கோவை நெளஷாத் வியந்து, அவர்களுடைய இரண்டாவது சந்திப்பு நடந்திருக்கிறது. ‘இசையே என்னுடைய முதல் காதலி. அது ஒருதலைக் காதலாகிவிட்டதால் கவிதையைக் கைப்பிடித்தேன்’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் போனவர், தான் மொழிபெயர்த்து வைத்திருந்த மலையாளத் திரையிசைப் பாடல்களை எடுத்துவந்து வாசித்துக் காட்டினார். ஓசை ஒழுங்குகளோடு மொழி பெயர்க்கப்பட்டிருந்த அப்பாடல்கள் அற்புதமான உணர்வுகளை மீட்டின.

அந்த உரையாடலில், தமிழ்க் கவிதைகளின் திசைவழியைத் தீர்மானித்த கவிக்கோ, திரைப்பாடல்கள் எழுதியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என யூகிக்க முடிந்தது. இசைப்பாடல் மீது ஏகக் காதல் வைத்திருந்த கவிக்கோ, திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை என எடுத்த முடிவு ஏற்புடையதில்லை. பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் அவருக்குப் பிடித்தமான பாடலாசிரியர்கள்.

சிலவேளைகளில் கம்பதாசனையும், கு.மா.பாலசுப்ரமணியத்தையும் போற்றி யிருக்கிறார். கவிக்கோவை கவிஞராக, பேராசிரியராக, சொற்பொழிவாளராக, பத்திரிகைகளில் பத்தி எழுதுபவராக பலர் அறிந்திருக்கலாம். எனினும், எங்கள் தலைமுறைக்கு கவிதையின் சகல சூட்சுமங்களையும் கற்பித்த ஆகிருதியாகவும் ஆசானாகவும் இருந்தவர் அவர் ஒருவரே. நவீன கவிதைகளின் தோற்றுவாயாக சிலர் பாரதியையும் சிலர் ந.பிச்சமூர்த்தியையும் சொல்வார்கள். எங்களுக்கோ அவர்கள் இரண்டுபேரையும் சொல்லி, அதிலிருந்து, தான் எப்படி வேறுபடுகிறேன் என்பதை காகிதங்களிலும் கவியரங்குகளிலும் நிரூபித்தவர் அவர்.
 

(பேசலாம்...)

www.kungumam.co

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 37

அரங்கக் கவிதைகளுக்கென்று அப்துல் ரகுமான் ஏற்படுத்திய வகைமாதிரிகள் ஒன்றிரண்டு அல்ல. ஒவ்வொரு கவியரங்க மேடையிலும் அவர் தனித்துத் தெரிவார். உத்திகளாலும் உச்சரிப்பினாலும் மொத்தக் கூட்டத்தையும் கட்டிப்போடும் வித்தையை அவர் கற்றிருந்தார். மேடையில் நிறுத்தி நிதானமாக அவர் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினால், இயற்கை அழைப்பே ஆனாலும், எழுந்துபோக மனம் வராது.

ஆளுமை நிரம்பிய அவருடைய உடல்மொழியை ரசித்துக்கொண்டே இருக்கலாம். கவிதைகளின் ஓசைக்கேற்ப முன்னும் பின்னும் அவருடைய கைவிரல் அசைவுகள், காற்றின் தீராத பக்கங்களில் எதை எதையோ எழுத முயலும். எந்த மேடைகளையும் அவர் குறைத்து மதிப்பிட்டதில்லை. தன்னையும் தன் கவிதைகளையும் விரும்பக்கூடிய யார் அழைத்தாலும், அவர்களின் அழைப்பை அவமதிக்காத பண்பு அவரிடமிருந்தது.
2.jpg
ஒருமுறை கம்பன் கழகத்தில் கவிதை வாசிக்க அழைத்திருக்கிறார்கள். அழைத்தவர்களுக்கோ, அழைப்பை ஏற்று கலந்துகொள்ள சம்மதித்தவர்க்கோ ஒரு பிரச்னையுமில்லை. இடையிலிருந்தவர்கள்தான் இடைஞ்சல் செய்கிறார்கள். திராவிட இயக்க மேடைகளில் கவிதை பாடிவரும் அப்துல் ரகுமானை கம்பன் கழகத்திற்கு அழைப்பதா? என்று அவர்கள் ஏற்படுத்திய சர்ச்சையை, கம்பன் கழகம் கருத்திற் கொள்ளவில்லை.

கம்பனை நேசிக்கக்கூடிய யார் ஒருவரையும் தவிர்க்கவோ, தடுக்கவோ மாட்டோமென்று கவிக்கோவின் வருகைக்குப் பச்சைக்கொடி காண்பித்தது. சர்ச்சைகள் சூழ்ந்திருந்த அந்த அவைக்கு கவிக்கோ வருகிறார். ‘‘ரகு, மானைத் தேடியதுதான் ‘ராமாயணம்’ என்றால், ரகுமானாகிய நான் கம்பனைப் பாடக்கூடாதா?’’ என்றதும், அரங்கத்தில் எழுந்த கைதட்டு விண்ணைப் பிளந்திருக்கிறது. இறுதியில் சர்ச்சையைக் கிளப்பியவர்களே கவிக்கோவிடம் கையெழுத்துப் பெற காத்திருந்தது தனிக்கதை.

தன்னை எதிர்ப்பவர்களையும் தன் கவிதைகளால் வளைத்துவிடும் திறனை அவர் பெற்றிருந்தார். எத்தனைபேர் அவருடன் கவிதை வாசித்தாலும் அவர் சிந்தனைகளும், கவிதை வார்ப்பு முறைகளும் வித்தியாசமான தொனியிலிருக்கும். முதல் பத்து வாக்கியங்களில் தவிர்க்கமுடியாத கவனத்தை அவர் பெற்றுவிடுவார். துண்டுத் துண்டு காகிதங்களில் அவர் சிந்தனைகளை அடுக்கிக்கொண்டே போகும்முறை வேறு எவருக்கும் வாய்க்காதது.

கவியரங்கக் கவிதைகளுக்குத் தனி அடையாளமும், கெளரவமும் வந்ததே அவரால்தான். கவிதைகளை நிகழ்த்துக் கலையாக மேடையில் அரங்கேற்றும் முறையை அவர் வைத்திருந்தார். அறுபது ஆண்டுக்கு மேலாக ஒருவர் ஒரு செயலை அலுப்போ, சலிப்போ இல்லாமல் தொடர்வது கடினம். அதுவும், தொடங்கும்போதிருந்த அதே அக்கறையுடன் அதே ஆர்வத்துடன் ஈடேற்றுவது சாத்தியமேயில்லை.

ஆனால், கவிக்கோவிற்கு அது சாத்தியப்பட்டது. ஏனெனில், வெறும் கைதட்டலுக்காக அவர் எங்கேயும் கவிதைகளை வாசித்ததில்லை. கவியரங்குகளின் மேன்மையை உத்தேசித்தே அவருடைய கவிதைகள் எழுதப்பட்டன. ‘ஓரல் பொயட்ரி’ என்ற வகைமைக்கு எத்தனையோ உதாரணங்களை அவர் தந்திருக்கிறார். தமிழாய்ந்த அறிஞர்களும் அவருடைய மேடைக் கவிதைகளில் மெய்சிலிர்த்திருக்கிறார்கள்.

தலைமைக் கவிஞராக அவர் இருந்தால் பின்னால் வாசிப்பவருக்கு ஏற்றவாறு அரங்கத்தைத் தயார் செய்துகொடுப்பார். நல்ல வரிகளை யார் வாசித்தாலும் தயக்கமில்லாமல் திரும்பச் சொல்லச் சொல்லி, ‘‘இந்த இடத்தை கவனியுங்கள்’’ என்று கூட்டத்திற்கு ஆணையிடுவார். ‘அடடா, சபாஷ், அற்புதம்’ என்று அவரே ரசிகராக மாறி வாசிப்பவருக்கு உற்சாக மூட்டுவார்.
2a.jpg
அரங்கு நிறைந்த கூட்டமானாலும் அவர் தலைமையென்றால் கூச்சலோ, குழப்பமோ துளியும் இருக்காது. அரங்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பார். எத்தனைபேர் கைதட்டினாலும் அவருடைய அந்த ஒற்றைப் பாராட்டுக்கு ஏங்கியே கவிதைகள் தங்களை எழுதிக்கொள்ள எண்ணும். முப்பது கவியரங்கிலாவது அவரோடு பங்கெடுத்திருப்பேன். ஒருதரம் கம்பன் கழகத்தில் அவர் தலைமையில் ஒரு கவியரங்கம்.
‘‘‘பத்துப்பாட்டு’ எழுதும் பக்குவமுடைய யுகபாரதி, சினிமாவில் குத்துப்பாட்டு எழுதலாமோ?’’ என என்னுள்பட சினிமா கவிஞர்களைச் செல்லச் சிலேடையில் சீண்டினார். “இருக்கிற எல்லா கல்லையும் / நீ ஒருவனே சிலை செய்துவிட்டதால் / பாவப்பட்ட எங்களுக்கு / பாக்கியிருப்பது அம்மிதான் / கொத்திக்கொண்டிருக்கிறோம் / உப்புப்புளிக்கு உதவுகிறது’’ என்றதும் அரங்கு அதிர்ந்தது.

அவ்வார்த்தைகள் அவருடைய புகழ்பெற்ற கூற்றுக்கு பதில் சொல்வதற்காக எழுதப்பட்டவைதான். என்றாலும், அதை தப்பிதமாக எடுத்துக்கொண்டு கோபிக்காமல், ‘‘பிரமாதம்... பிரமாதம்... எங்கே இன்னொருமுறை சொல்’’ எனக்கேட்டு, அதே அரங்கத்தில் என்னை மெச்சி மகிழ்ந்தார். நானறிந்தவரை கவியரங்கக் கவிதைகளை செப்பமாகவும், சிரத்தையாகவும் கையாண்டவர்களில் முதன்மையானவர் கவிக்கோதான்.

அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர் மு. கருணாநிதி வரை பலருடைய தலைமைகளில் அவர் கவிதைகளை வாசித்திருக்கிறார். என்றாலும், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிடக் கூடிய ஆற்றல் அவரிடமிருந்தது. ‘முஷாயிரா, கஜல், கவாலி, நஸம், ஹைக்கூ’ என தமிழுக்கு அறிமுகமில்லாத பல வடிவங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் அவரே. அவருக்கு முன்பு அவ்வடிவங்களை யாருமே தமிழ்ப்படுத்தும் முயற்சியில் இறங்கவில்லை.

ஏனைய மொழிகளிலுள்ள வடிவங்களைத் தமிழ்ப்படுத்தி, அதை எல்லோருக்குமான வடிவமாக ஜனநாயகப்படுத்துவதில் அவர் காட்டிய ஆர்வம் குறிப்பிடத்தக்கது. இளம் கவிஞர்களை ஊக்குவித்து, அவர்களுக்கான புதிய சாளரங்களைத் திறந்துவைக்கும் பிதாவாக அவர் இருந்தார். வாணியம்பாடியில் கவிராத்திரி என்னும் நிகழ்வை ஏற்படுத்தி எத்தனையோ நல்ல கவிஞர்களும், கவிதைகளும் உருவாகக் காரணமாயிருந்தார். “இரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை” என்று சுதந்திரத்தைப் பற்றி கவிதையெழுதிய அரங்கநாதன் அவருடைய மாணவர்களில் ஒருவர்.

ஒரே மாதிரியான தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த தமிழ்ப் புதுக்கவிதைக்கு சூஃபித்துவ அந்தஸ்தை ஏற்படுத்தியவர் கவிக்கோ. ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’ என்னும் நூலில் கஜல் கண்ணிகளைத் தமிழில் எழுதியதுபோல ‘பறவையின் பாதை’ என்னும் நூலில் சூஃபித்துவ சிந்தனைகளை எழுதியிருப்பார். ஒரே வாசிப்பில் அக்கவிதைகளை விளங்கிக்கொள்ள இயலாது. அக்கவிதைகள் ஒவ்வொருமுறையும் வெவ்வேறு மாதிரியான அர்த்தங்களைத் தரக்கூடியன.

இம்மையிலும், மறுமையிலும் ஒருவர் எதைத்தேட விரும்புகிறாரோ அதைப்பற்றிய அவதானிப்புகளே அக்கவிதைகள். முழுக்க முழுக்க ஒரு சூஃபியின் குரலை ஒத்திருக்கும் அக்கவிதைகளின் வழியே ஞானத்தை எட்டுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பார். ‘பித்தனு’ம், ‘ஆலாபனை’யும் அவருடைய லட்சியப் படைப்புகள். ‘‘தத்துவங்களின் நேர்முக வெளிப்பாடு ‘ஆலாபனை’ எனில் எதிர்முக வடிவில் வெளிப்பட்ட கவிதைகளே ‘பித்தன்’ என்று அவரே சொல்லியிருக்கிறார்.

‘‘கதவு தட்டும் ஓசை கேட்டால் / யாரென்று கேட்காதே / ஒருவேளை அது / நீயாக இருக்கலாம்’’ என அவர் பித்தனில் எழுதிய கவிதையை வாசித்தவர்களுக்கு அவருடைய குரலில் வெளிப்பட்ட சூஃபித்துவம் விளங்கும். சூஃபித்துவ கவிதைகளை எழுத விரும்புவோர், மெளலானா ஜலாலுதீன் ரூமி போன்றோருடைய கவிதைகளை வாசிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். ‘பித்தன்’, ‘ஆலாபனை’, ‘ரகசியப்பூ’, ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’, ‘பறவையின் பாதை’ ஆகிய தொகுப்புகளில் கவிக்கோ கையாண்ட மொழிநடை
விசேஷமானது.

பின்நவீனம், முன்நவீனம் என்றெல்லாம் தன்னையோ தன் கவிதைகளையோ அறிவித்துக்கொள்ளாமல் அறிவுக்கும் ஞானத்திற்குமான பாலத்தை அக்கவிதைகளின் வழியே அவர் போட்டிருக்கிறார். சக்தி உபாசகனாக பாரதி தன்னை அறிவித்துக்கொண்டதுபோல், ஏகத்துவத்தின் தேடலே தன்னுடையதென அறிவித்துக்கொள்ளாமல் அத்தேடலில் மூழ்கியிருந்தார்.

‘‘அவர் சொல்லும்வரை ‘அ’ கரம் என்பது பக்கவாட்டில் நிற்கும் மாட்டின் வடிவம்’’ என்று அறியாமலிருந்ததாக எழுத்தாளர் சிவசங்கரி சொல்லுவார். இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற பணியில் அவர் ஈடுபட்டபொழுது, கவிக்கோவைச் சந்தித்திருக்கிறார். அச்சந்திப்பில் கவிக்கோ பகிர்ந்து கொண்டதை கட்டுரையாகவும் நேர்காணலாகவும் வெளியிட்டிருக்கிறார். அந்த நேர்காணலில் தொன்மையிலிருந்து அண்மைவரை இலக்கியத்தை கவிக்கோ தொட்டுக் காட்டியிருப்பார்.

‘‘சங்க இலக்கியத்தைத் தொடர்ந்து வருவதுதான் சமய இலக்கியமா?’’ என்ற கேள்விக்கு, “முதலி லிருந்தது அகம், புறம். அப்புறம் வந்ததுதான் இகம், பரம்” என்றிருப்பார். காலத்தையும், இலக்கியத்தையும் உள்வாங்காமல் அப்படியான பதிலை ஒருவர் சொல்ல முடியாது. “திணையென்றால் ஒழுக்கம் என்று பொருள். இலக்கணத்தை எழுதிய காலத்திலேயே ஒழுக்கம் குறித்த சிந்தனைகள் நம்மிடம் இருந்திருக்கிறது. அதனால்தான் உயர்திணை என்ற சொல்லுக்கு எதிர்ப்பதமாக தாழ்திணை என்று சொல்லவில்லை.

எதையும் தாழ்த்தக்கூடாது என்னும் சிந்தனையுடைய தமிழர்கள், தாழ்திணையை அல் திணையென்றே அறிவித்தார்கள். அதுதான் அஃறிணையாகியிருக்கிறது. காலத்தின் கொடுமையைப் பார்த்தீர்களா, தாழ்திணையை அஃறிணையாக்கிய நம்மிடம் வந்து, விலங்குகள் நலவாரியம் பசுவதை கூடாதென்னும் பாடத்தை நடத்திக்கொண்டிருக்கிறது” என வேதனைப்பட்டிருக்கிறார்.
 

(பேசலாம்...)

kungumam.co.

Posted

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 38

“மாடு என்ற சொல், கால்நடையை மட்டுமல்ல, செல்வத்தையும் குறிக்கக்கூடிய சொல். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் மேய்ச்சல் நாகரிகம் பழக்கத்திலிருந்ததால் மாடும், உழவும் எத்தனை முக்கியம் என்பதை தமிழன் அறிந்திருக்கிறான். அதனால்தான் மாட்டை செல்வமாகக் குறித்திருக்கிறான்...” என்று கவிக்கோ விளக்கியிருக்கிறார்.

“ஆ” என்றால் பசு. ஆவின்பால் என்றால் பசுவின் பால் என்பதுதான் பொருள். தமிழர்கள் காளையையும், பசுவையும் மொழியின் முதலிரண்டு இடத்தில் வைத்திருக்கிறார்கள். கவிக்கோ அருவிபோல சிந்தனைகளைக் கொட்டக்கூடியவர். மொழியை அவர் அளவுக்கு நுட்பமாக வைத்துக்கொண்டு கருத்துகளை முன்வைக்க முடியாது. உரிய சொற்களை உரிய இடத்தில் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்.
2.jpg
பிறப்பினால் இஸ்லாமியராக இருந்தாலும் மற்ற மத நூல்களை வாசிப்பதிலோ அவற்றில் உள்ள நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதிலோ அவருக்குத் தயக்கம் இருந்ததில்லை. மொழியின் வழியே அத்தனை மதங்களையும் அவர் அணுகி, அணுக்கம் கொண்டிருக்கிறார். எம்மதத்தின் சாரங்களையும் தன்னுடைய கவிதைகள் பற்றிக்கொள்ள அவர் தடைபோட்டதில்லை.

இந்து மத பக்தியை வலியுறுத்திய இடைக்கால இலக்கியத்தை அவர் அளவுக்கு சொட்டச் சொட்ட ரசித்து நயம் சொன்னவர்கள் எவருமில்லை. இலக்கிய நுகர்வுக்கு அப்பாலுள்ளதே மதம் என்னும் தெளிவோடு அவரிருந்தார். விவிலிய வாசகங்களையும், பிரபந்த பனுவல்களையும் அவர் சொல்லக் கேட்கையில், அந்தந்த மதத்திலுள்ளவர்களே வியக்கத்தக்க விதத்தில் வெளிப்படுவார்.

ஐம்பெரும் காப்பியங்களில் சமணம் வேரூன்றி இருந்த காலத்தில் எழுதப்பட்டவை ‘மூன்று’ என்று சொல்லும் கவிக்கோ, “பள்ளி எனும் பெயருடைய ஊர்களெல்லாம் அப்போது பிறந்தவையே...” என்பார். திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி என்பவையெல்லாம் ஒருகாலத்தில் சமணர்களின் குடியிருப்புகளாக இருந்தன எனும் சரித்திரச் சான்றுகளை இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுவார்.
2a.jpg
நீதி இலக்கியத்தைக் கற்றிருந்த அவர் சமூக நீதியின் தேவைகளையும் அவசியத்தையும் உணர்ந்திருந்தார். திராவிட இயக்கத்தின் அத்தனை கொள்கைகளிலும் அவருக்கு ஈர்ப்பு இருந்ததாகச் சொல்வதற்கில்லை. கடவுள் மறுப்புக் கொள்கையைப் பொறுத்தவரை அவர் ஒரு சூஃபியின் மனநிலையைக் கொண்டிருந்தார். தமிழில் சித்தர்கள்போல உருதில் சூஃபிகளா? என்று கேட்டதற்கு, ‘‘ஏகத்துவத்திற்கு எதிராகவா சூஃபிகள் செயல்பட்டார்கள்? ஏகத்தை அடைய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒருவழியை சூஃபிகள் கொண்டிருக்கிறார்கள்.

இறை மறுப்பாளர்கள், சூஃபிகளும் சித்தர்களும் ஒன்று என்கிறார்கள். நான் அப்படி கருதுவதில்லை...” என்பார். அதேபோல “இசையை ஹராம் என்று இஸ்லாம் சொல்வதால் மதத்திலிருந்தோ, இசையிலிருந்தோ என்னால் விடுபடமுடியாது. இசையில்லாமல் இறைவனை அடையும் வழியிருக்கிறதா சொல்லுங்கள்?” எனவும் கேட்டிருக்கிறார். கவிக்கோ இந்தி திரைப்படப் பாடல்களை ரசித்து ரசித்துக் கேட்கக் கூடியவர் என முன்பே சொல்லியிருக்கிறேன்.

இசைக்காக மட்டுமல்ல, அப்பாடல்களை அவர் வரிகளுக்காகவும் இதயத்தில் வரித்துக்கொண்டவர். ‘தூல் கா பூல்’ எனும் திரைப்படத்தில் வரும் “தூ ஹிந்து பனேகா, நா முசல்மான் பனேகா...” என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. “நீ இந்துவும் இல்லை. நான் முஸ்லீமும் இல்லை. நீ மனிதனின் பிள்ளை, மனிதனாவாய்!” என்னும் பாடலை அவ்வப்போது நினைவிலிருந்து சிலாகிப்பார்.

“எங்கே குரான் இல்லையோ அது கோயில் இல்லை. எங்கே கீதை இல்லையோ அது பள்ளிவாசல் இல்லை...” என்று அவர் அப்பாடலை மொழிபெயர்த்த அழகை, கவிஞர் மீரா ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். மதம் கடந்து மொழி கடந்து மனிதர்களை நேசிக்கும் இலக்கியங்களை ரசிக்கவும் படைக்கவும் அவர் விரும்பினார். தன்னுடைய பாட்டனாரும் தந்தையாரும் மிகச் சிறந்த கவிஞர்களாக இருந்தபடியால் இளம் வயதிலேயே கவிதை அவருக்குப் பிடிபட்டுவிட்டது.

அல்லது கவிதை அவரை தன் பிடிக்குள் வைத்துக்கொண்டது. மரபுக்கவிதைகளே கவிதைகள் என்றிருந்த காலத்தில் அவர் புதுக்கவிதைகளை எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கவிதையை கல்லூரி நிர்வாகம் இலக்கணப்படி எழுதவில்லையென மலரில் பிரசுரிக்க மறுத்தது. ஆனாலும், கவிக்கோ அசராமல் அக்கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதே மலரில் வெளிவரச் செய்தார்.

எழுத்தின் சகல நுணுக்கங்களையும் அறிந்திருந்த அவர், இலக்கணங்களை அறியாதவரல்ல. யாப்பை முறைப்படி எழுதக்கூடியவர்தான். என்றாலும், புதுக்கவிதையே காலத்தின் தேவை என்பதை அவர் அறிவுறுத்தினார். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘பால்வீதி’க்குப் பிறகுதான் சர்ரியலிஸ கவிதைகள் தொகுப்பாக வெளிவரத் தொடங்கின. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய மீமெய்ம்மையியல் கவிதைகளை சிற்றிதழ்களில் எழுதியிருந்தார்கள்.
2b.jpg
தமிழுக்குப் புதிதான மீமெய்ம்மை இயல் கவிதைகளை முழுத்தொகுப்பாக வெளியிட்டு பரிசோதனைக் கவிதைகளுக்கான வெளியை ஏற்படுத்திய கவிக்கோ, அக்கவிதைகளுக்கு எழுந்த எதிர் விமர்சனங்களை எளிதாகக் கடந்துவிடவில்லை. ‘பால்வீதி’ கவிதை நூலில் இடம்பெற்ற கவிதைகளை அது வெளிவந்த சமயத்தில் பலரும் புரியவில்லையென்றுதான் சொன்னார்கள். கவிதை என்றால் புரியவேண்டும் என்னும் ரீதியில் விமர்சனம் வைத்தவர்கள், ஒருகட்டத்தில் அக்கவிதைகளில் மனிதாபிமானம் வெளிப்படவில்லை என்றார்கள்.

வழக்கமான கவிதைகளைப் போல அல்லாமல் மீமெய்ம்மையியலில் என்னென்ன சித்தாந்தங்கள் உண்டோ அத்தனையையும் அக்கவிதைகள் மூலம் கவிக்கோ பரிசோதித்திருப்பார். இன்றுவரைகூட சர்ரியலிஸ கவிதைகளைப் புரிந்துகொண்டு வினையாற்றும் நிலைக்கு தமிழ்க்கவிதை வாசகர்கள் வரவில்லை என்பது வேறு விஷயம். படிமத்தையும், குறியீட்டையும் பிரதானமாகக் கொண்ட அக்கவிதைகள், மேலை நாட்டு இஸங்களின் பாதிப்பால் எழுதப்பட்டதாக சிலர் கருதக்கூடும்.

ஆனால், கவிக்கோவோ அதையும் நம்முடைய தொன்ம இலக்கியத்திலிருந்தே எழுதியதாக சொல்லியிருக்கிறார். நம்முடைய சங்கப் பாடல்களில் கையாளப்பட்டுள்ள உள்ளுறை இறைச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதியதை விளக்கினார். அதன் பிறகும் அக்கவிதைகளை விளங்கிக்கொள்வதில் ஏற்பட்ட சிரமத்தை நீக்க, அவரே அக்கவிதைகளை விளக்கி உரையெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய கவிதைகளுக்கு தானே உரையெழுத நேர்ந்த சூழலை ஒரு புன்சிரிப்போடு கடந்து செல்வார்.

‘மரணம் முற்றுப்புள்ளி அல்ல’ என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரை நூல் அப்படி வந்ததுதான். அந்நூலை அவர் கவிதைகளுக்கு அவரே எழுதிய உரைநூல் என்பதிலும் பார்க்க, அடர்த்தியான கவிதைகளை விளங்கிக்கொள்ள அவர் தயாரித்த பயிற்சி ஏடு என்பதே என் புரிதல். சங்க இலக்கியத்தில், ‘ஒரு பூவில் தேன் குடித்து பிறகு பறந்துவிட்ட வண்டு வசிக்கும் நாட்டின் தலைவனே’ என்று வரும் பாடலையும், ‘அருவிகள் விடாமல் கொட்டும் நாட்டுக்காரன், கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையே’ என்று வரும் இன்னொரு பாடலையும் குறிப்பிட்டு, உள்ளுறை இறைச்சியை விளக்கியிருப்பார்.

அதாவது, வண்டு போல் என்னிடமிருந்து பறந்துவிடாதே என்பதிலுள்ள குறியீட்டையும் வாக்குப் பொய்த்தவன் நாட்டில் விடாமல் மழைபெய்து, அருவி எப்படி பெருக்கெடுக்கிறது என்பதிலுள்ள படிமத்தையும் மிக நேர்த்தியாக புரிய வைத்திருப்பார். வாழ்நாளின் இறுதிக்கணம்வரை கவிதைகள் எழுதிய கவிக்கோ, நேயர்களின் விருப்பமாகவே இருந்தது நெகிழத்தக்கது. அவர், காத்திரமான விமர்சனங்களையும் கனிவோடு எதிர்கொள்ளப் பழகியிருந்தார்.

(பேசலாம்...)

kungumam.co

Posted

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 39

‘இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் நாகூர் ரூமி நூல் ஒன்றை வெளியிட்டார். அவ்விழாவில் பேசிய நான், ‘‘தமிழை அடையாளமாகக் கொண்டால்தான் சிறுபான்மையினர் காக்கப்படுவார்கள். அப்படியிருக்கையில், இங்கே இருக்கும் தமிழ்ப்பற்றுள்ள இஸ்லாமியர்கள்கூட ஏன் தமிழில் பெயர் வைக்கத் தயங்குகிறார்கள்?’’ எனக் கேட்டு வைத்தேன்.
8.jpg
அவ்வளவுதான், கூட்டமே கொந்தளித்து என்னைக் குதறத் தொடங்கிவிட்டது. இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாத நான், பொறுப்பில்லாமல் பேசிவிட்டதாக வருந்தினார்கள். விழாவுக்கு வந்திருந்த இஸ்லாமிய பற்றாளர்களில் சிலர், ‘‘யுகபாரதியிலே தமிழ் எங்கேயிருக்கிறது? யுகமும் பாரதியும் சமஸ்கிருதம் அல்லவா?’’ என வறுத்தெடுக்கவும் செய்தார்கள்.

ஒருவர்பின் ஒருவராக என்னை சபித்தும் சங்கடப்படுத்தியும் பேசிக்கொண்டிருந்த அவ்விழாவுக்கு, தலைமை வகித்திருந்தவர் கவிக்கோ. எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்ட அவர், இறுதியில் என் கேள்வியில் இருந்த நியாயத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்தினார். ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்ற கேள்விக்கு, ‘பெயரில்தான் எல்லாமிருக்கிறது’ என்று அவர் அன்று பேசிய அந்த உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

எனக்கு சாதகமாக அவர் பேசவில்லை. ஆனால், என் கேள்வியை வெறுப்பில்லாமலும் கோபமில்லாமலும் அவர் ஒருவரால்தான் எதிர்கொள்ள முடிந்தது. இந்துக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமென குரல் கொடுப்பவர்கள், மசூதிகளில் தமிழில் ஏன் பாங்கிசைக்க வற்புறுத்தக் கூடாதென்னும் கேள்விக்கு சாதுர்யமாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பதிலளித்திருக்கிறார். ‘மதம் மக்களுக்கு போதைப் பொருள்’ என்ற காரல் மார்க்ஸிடமிருந்து அடிப்படைவாதம் குறித்த தெளிவுகளை அவர் பெற்றிருக்கிறார்.

சமூகத்தின் மீதிருந்த அக்கறையினால் அவர் வாரந்தோறும் ‘கல்கண்டு’ இதழில் எழுதி வந்த கவிதைகள், ‘சுட்டுவிரல்’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. வெளிவந்த அந்நூல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாகவும் வைக்கப்பட்டது. ஆட்சியாளர்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் சுட்டுவிரல் நீட்டி கேள்வி கேட்ட அந்நூல் பாடமாக வைக்கப்பட்டவுடன் கவிக்கோ மீது காழ்ப்பு கொண்ட மதவெறி சக்திகள் அவருக்கு எதிராகக் கொடிபிடித்தன.

சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய மதவாத சக்திகள், பாடத்திட்டக் குழுவின் அனுமதியில்லாமல் அந்நூலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. அந்த சமயத்தில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நான், மதவெறி சக்திகளுக்கு எதிராக தஞ்சாவூரில் ஏற்பாடு செய்திருந்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். மாணவர்களால் ஒன்றிணைக்கப்பட்ட அக்கூட்டத்திலிருந்துதான் அப்துல்ரகுமான் என்னும் பேரை நான் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

அதன்பிறகுதான் அவர் எழுதிய அத்தனை கவிதைகளையும், கட்டுரைகளையும் வாசிக்கத் தொடங்கினேன். சுட்டுவிரலுக்கு எதிர்ப்பு கிளம்பாமல் இருந்திருந்தால் கவிக்கோவை அவ்வளவு சீக்கிரம் நான் கண்டடைந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலகப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் வியந்து, கவிக்கோ எழுதிய கட்டுரைகள் ‘ஜூனியர் போஸ்ட்’டில் தொடராக வெளிவந்தன.

நூறு வாரங்களுக்குமேல் தொடராக வெளிவந்த அக்கட்டுரைகளை பள்ளிக்கூட நூலகத்தில் அமர்ந்து வாசித்த காட்சி இன்னமும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அவர் மேற்கோள் காட்டிய கவிதைகளை மனப்பாடம் செய்ததும் அக்கவிதைகளைப் போலவே எழுதிப் பார்த்ததுமே கவிதைகளோடு எனக்கேற்பட்ட உறவுக்குக் காரணமென்று இப்போது தோன்றுகிறது.
8a.jpg
என்போல எத்தனையோ ஏகலைவன்களை அவர் உருவாக்கியிருக்கிறார். ஒரே ஒரு வித்தியாசம், அவர் யாருடைய கட்டைவிரலையும் விலையாகக் கேட்டதில்லை. மாறாக தன்னுடைய சுட்டுவிரலைக் கடனாகக் கொடுத்திருக்கிறார். அண்ணன் அறிவுமதி அவரை ‘ஆண் தாய்’ என்று விளிப்பார். கவிக்கோவின் இலக்கியக் கட்டுரைகள் வெகுசன ரசனையை எட்டிய அளவுக்கு வேறு யாருடைய இலக்கியக் கட்டுரைகளும் எட்டவில்லை.

தவிர, பொதுமக்கள் அவ்வளவு பூரிப்போடு இலக்கியக் கட்டுரைகளை அதன்பின் வாசிக்கவில்லை என்பதுதான் உண்மை. எழுதுபவரின் மீதுள்ள நம்பிக்கையும், பிரியமும்தான் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுகிறது. உரைநடையில் புதுவிதமான அணுகுமுறையை அவர் கொண்டிருந்தார். ஒரு வாக்கியத்தை இன்னொரு வாக்கியத்தால் திறக்கும் அற்புதமான சாவியை அவருடைய எழுத்துகள் கொண்டிருந்தன.

“எது மேலேற உதவுகிறதோ அதுவே கீழே தள்ளிவிடுகிறது. எது இன்பத்திற்குக் காரணமாக இருக்கிறதோ அதுவே துன்பத்திற்கும் காரணமாகிவிடுகிறது” என அவர் இயல்பான தளத்திலிருந்து உன்னதமான இடத்திற்கு வாசகனைக் கூட்டிச்செல்ல முற்படுவார். முதுமையை, நிமிஷக் கரையான் அரித்த ஏடு / ஞாபகங்களின் குப்பைக் கூடை / வியாதிகளின் மேய்ச்சல் நிலம் / காலத்தின் குறும்பால் கார்ட்டூன் ஆகிவிட்ட மாமிச ஓவியம் / இறந்த காலத்தையே பாடும் கீறல் விழுந்த இசைத் தட்டு - என அவர் அடுக்குவதைக் கேட்டால் வயதானவர்கள்கூட இளமைக்குத் திரும்பிவிடுவார்கள்.

பெரும்பாலும் அவருடைய வாக்கியங்கள் ஒரு சூஃபியின் தன்மையைக் கொண்டிருக்கும். கிறக்கத்தின் உச்சத்திலிருந்து உதிர்ந்துவிழும் அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் ஏதோ ஒருவித லயமிருக்கும். பொதுவாகக் கவிஞர்கள் வார்த்தைகள் மீதுள்ள உச்சபட்ச மோகத்தினால் சொல்ல வரும் கருத்தை பாதியிலேயே விட்டுவிட்டு வேறு எங்கேயோ போய்விடுவார்கள். பாரதியும் தருமுசிவராமும் (பிரமிள்) கூட அதற்கு விதிவிலக்கல்ல. ஒருசில கட்டுரைகளில் அவர்களுமே பிறழ்ந்திருப்பதை அறியலாம்.

‘என் கதை’யில் ராமலிங்கம்பிள்ளையும் ‘வனவாச’த்தில் கண்ணதாசனும் உரைநடையை ஓரளவுக்கு எட்டிப்பிடித்தவர்கள் என்பார்கள். அந்தவிதத்தில், கவிக்கோவின் உரைநடை பிரத்யேகமானது. உரைநடைக்கு கவிதையின் அழகையும் கவிதைக்கு உரைநடையின் எளிமையையும் கொடுத்தவராக அவரைக் கருதலாம். வ.ரா.வைவிட கொஞ்சம் தூக்கலான கவிநடை கவிக்கோவினுடயது.

கவிக்கோவுடன் எழுத வந்த கவிஞர்களில் வேறு எவருமே அதிகமான உரைநடை ஆக்கங்களைப் படைக்கவில்லை. ஐந்தே ஐந்து சிறுகதைகளை கவிக்கோ எழுதியிருக்கிறார். நாவல் முயற்சியில் ஈடுபடும் ஆவலிருந்தது. அதற்குள் காலம் அவரைக் கவ்விக்கொண்டது. அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள், இலக்கியக் கட்டுரைகளுக்கு நிகரானவை.
8b.jpg
சொல்லும்விதத்தில் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபாடுடையது அவர் அணுகுமுறை. கவிதைக்கும் உரைநடைக்கும் இடையிலான மொழியை அவர் வைத்திருந்தார். வார்த்தைகளை விரயமாக்காமல் சொல்ல வருவதைச் சொல்லிவிடுவார். சுண்டக்காய்ச்சிய பால்போல் எது இறுதியாக நிற்குமோ அதை மட்டுமே சொல்லுவார்.

உலக இலக்கியவாதிகளையும் இலக்கியக் கோட்பாடுகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அவர், ஆறாவது விரலென்று எழுதுகோலைச் சொன்னது ஆச்சர்யமில்லை. கஜல் கவிதைகளை இலக்கண சுத்தமாக எழுத ‘மான்கண்’ என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையை வாசித்தால் கஜலை கேட்கிற எல்லோருமே கஜல் கவிதைகளை எழுதிவிட முடியும். மிர்சா காலிப்பின் ஒரு முழு நீள கஜலை மொழிபெயர்த்து, அவர் விளக்கியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

கஜலின் முதலிரண்டு அடிகள் ‘மத்லா’ என்பதும் இறுதியிரண்டு அடிகள் ‘மக்தா’ என்பதும் அவர் சொல்லாமல் என் போன்றோருக்குத் தெரிந்திருக்காது. முதலிரண்டு அடிகளின் இறுதிச் சீர்கள் இயைபுத் தொடையிலும், அடுத்து ஒன்று விட்டு ஒன்று இயைபுத் தொடையிலும் வர வேண்டுமென அவர் எழுதிக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கண்ணிகள் 5,7,9,11 என்று ஒற்றைப் படையில்தான் வரும் என்பதை துல்லியமாக வரையறுத்திருக்கிறார். மரபுப் பயிற்சி உள்ளவர்களால்தான் சீர்களைப் பிரித்து வடிவ நேர்த்தியைச் சொல்லமுடியும்.

அசை, சீர், தளை, தொடை ஆகியவற்றை ஒதுக்கி புதுக்கவிதைக்கு வெளிச்சம் பாய்ச்சியவரே கவிக்கோதான் என்றபோதும் சிக்கலான வரையறைகள் கொண்ட கஜலை, தமிழ் நிலத்தின் தன்மைக்கேற்ப மாற்றியமைக்காமல் உள்ளதை உள்ளவாறு புரியும்படி எழுத்துகளில் வகுப்பெடுத்திருப்பார். கவிக்கோ, எதைச் செய்தாலும் எதைச் சொன்னாலும் முதலில் அவர் அச்செயலையும் அச்சொல்லையும் ஒத்திகை பார்த்துவிடுகிறார்.

ஹைக்கூவைப் பற்றி ஆரம்பத்தில் எழுந்த எல்லாக் கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடிந்ததே அந்த ஒத்திகையினால்தான். ஆகச் சிறந்தவற்றை அறிவிக்கும்முன் அவை பற்றிய அறிதலையும் புரிதலையும் அவர் ஏற்படுத்திக்கொள்கிறார். பண்டாரம், பரதேசி, அன்னக்காவடி, துந்தணாக்காரன், பக்கீர்சா என ஒரு பட்டாளமே பாடித்திரிந்த தெருக்களில் வளர்ந்தவர் அவர். இல்லையென்றால், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களைப் பதம்பிரித்து அவரால் வெளியிட்டிருக்க முடியாது.

புதுக்கவிதையில் குறியீடு என்று முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்துகொண்டே, மூலை முடுக்குகளில் கேட்ட மக்களிசைப் பாடல்களில் வெளிப்பட்ட தெறிப்புகளை அவர் கவனித்தார். நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து நவீன இலக்கியத்துக்கான கச்சாப் பொருளைக் கண்டெடுத்தவர் அவர். சாந்தாராமின் ஒரு திரைப்படக் காட்சி, நம்மூர் நாட்டுப்பாடலுடன் ஒத்திருக்கும் அழகை இயக்குநர் லிங்குசாமி நூல் வெளியீட்டு விழாவிலும் நினைவு கூர்ந்தார்.

குச்சிகட்டி காக்கட்டா, குணமதியே உன் தடத்தை என்பது அப்பாடலில் வரும் வரிகள். திரைத்துறைக்கு வராமலேயே திரைத்துறையினரால் அதிகமும் கவனிக்கப்பட்ட கவிஞராக கவிக்கோ இருந்தார். மேடைகளிலும் பத்திரிகைகளிலும் தீவிரமாக இயங்கிவந்த அவர், சிற்றிதழ்களின் அரசியலில் பெரிதாக சிக்கிக் கொள்ளவில்லை. அவ்வப்போது கலை இலக்கிய விமர்சகர்கள் அவரையும் அவர் எழுத்துகளையும் காயப்படுத்தியிருக்கிறார்கள்.

அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தபோது, அவருடைய ஆலாபனை நூல் விருதுபெறத் தகுதியற்ற நூலென்று தலையங்கம் தீட்டினார்கள். வக்ஃபு வாரியத் தலைவராக அவர் பொறுப்பேற்றபோது, அவருக்கு எதிராக அவருடைய சமுதாயத்தவர்களே முடிவை பரிசீலனை செய்யச் சொல்லி முதல்வருக்கு மொட்டைக் கடுதாசி போட்டார்கள். எல்லாவற்றையும் அவர் எளிய புன்னகையால் புறந்தள்ளினார்.
8c.jpg
கடந்த அறுபது ஆண்டுகளில் அதிகமான மேடைகளை ஆக்கிரமித்தவர் அவர் ஒருவர்தான். காலாவதியாகிக்கொண்டிருந்த கவியரங்குகளைக் காப்பாற்ற அவர் பட்டபாட்டை நானறிவேன். கொடுக்கப்படும் தலைப்பிலிருந்து எல்லாவற்றிலும் புதுமையைப் புகுத்த அவர் சிந்தித்துக்கொண்டே இருந்தார். அரபு, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவருக்கிருந்த புலமை, தமிழில் அவர் செய்து பார்த்த பல பரிசோதனைகளுக்கு உதவி புரிந்தது. சூஃபி, கஜல், ஹைக்கூ வடிவிலான கவிதைகளை தமிழ் நிலத்தில் பரப்பிய பெரும் பணி
அவருடையது.

தொடர் சொற்பொழிவு மூலம் சீவக சிந்தாமணியையும் திருக்குறளையும் மக்களிடத்தில் கொண்டுசெல்ல அவர் எடுத்த முயற்சிகள் முடிவில்லாதது. பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அவரோடு பழகியிருக்கிறேன். எப்போதுமே எந்த கோரிக்கையும் அவர் என்னிடத்தில் வைத்ததில்லை. இறுதி சந்திப்பில்தான் ஸ்ரேயா கோஷலைச் சந்திக்க விரும்பிய கோரிக்கையை வைத்தார்.

அதைக்கூட நிறைவேற்றும் வாய்ப்பில்லாதபடி காலம் மிகக் கொடூரமாக அவரை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது. நமக்கு எவ்வளவோ செய்தவர்கள், நம்மிடம் ஒரு உதவியைக் கோரும்போது அதை நிறைவேற்ற முடியாமல் போவதுதான் துக்கத்திலேயே பெரிய துக்கம். எந்த முடிவையும் நாம் எடுப்பதில்லை. அது, ஏற்கனவே யாராலோ எடுக்கப்பட்டுவிட்டது.

(பேசலாம்...)

kungumam.co.

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 40

வண்ணங்களின் பின்னணியில்தான் இந்திய அரசியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளைக்கு எதிராக காவியை முன்னிறுத்திய திலகருக்கோ, காவிக்கு எதிராக கறுப்பை முன்னிறுத்திய பெரியாருக்கோ அவை வெறும் வண்ணங்களல்ல. தாங்கள் கொண்டிருந்த அரசியலின் வெளிப்பாடுகள் அல்லது குறியீடுகள். கறுப்பு, சிவப்பு, வெள்ளை, பச்சை, காவி, நீலம் என்பவை வண்ணங்களின் பெயர்கள் என ஒருவர் சொல்வாரேயானால் அவருக்கு இந்திய சமூகத்தின் மத அரசியலோ, சாதி அரசியலோ தெரியவில்லை என்பதை எளிதாக யூகித்துவிடலாம்.
4.jpg
ஏனெனில், நிற அடிப்படையிலான வேறுபாடுகளிலிருந்து நம்முடைய சமூகம் இன்னும் வெளியேறவில்லை. ‘வெள்ளையாயிருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பதும் ‘கருப்பாயிருப்பவன் சகல பாவங்களையும் செய்யக்கூடியவன்’ என்பதும் நம்முடைய புத்திக்குள் யாராலோ திணிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திணிப்பை புரிந்துகொள்வதில்தான் இந்திய அரசியலுக்கான விமோசனம் இருக்கிறது.

இன்றைக்குக்கூட வெள்ளைப் புரட்சி, நீலப் புரட்சி, பச்சை புரட்சி என்று நம்முடைய ஆட்சியாளர்கள் தங்கள் ஊழல் திட்டங்களுக்கு வண்ணங்களின் பெயர்களையே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அவர்கள் அடித்துக்கொண்டிருக்கும் சாயங்கள் வெளுக்கத்தான் போகிறது. மேலோட்டமாக அல்லாமல் மிக ஆழமாக வண்ணங்களுக்குப் பின்னேயுள்ள அரசியலை விளங்கிக்கொண்டு, அதையே தன் ஓவியங்களின் அடையாளமாக ஆக்கிக்காட்டியவர் அண்ணன் வீர.சந்தானம்.
4a.jpg
ஒரு வண்ணம் இன்னொரு வண்ணத்தின்மீது ஆதிக்கம் செலுத்துவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடிந்ததில்லை. இந்தியா முழுக்க காவியைப் பரப்பும் வேலையில் ஆளும் மத்திய அரசு ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில், கறுப்பும், சிவப்பும் என்ன செய்ய காத்திருக்கின்றன என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அரசியலுக்கு வண்ணமுண்டு எனப் புரிந்துகொள்ள முடிந்த நம்மால் வண்ணங்களில் அரசியலை முன்வைத்த அண்ணன் வீர.சந்தானத்தை புரிந்தகொள்ள முடிந்தா?

ஓரளவு முடிந்தது எனலாம். திராவிட அரசியலின் அடுத்த பாய்ச்சலாக அவர் தமிழ் தேசிய அரசியலை நம்பினார். அவர் முன்வைத்த அரசியலை விமர்சிப்பவர்களும் ஆதரிப்பவர்களும்கூட அப்பழுக்கற்ற அவருடைய மாந்தநேயத்தை சந்தேகித்ததில்லை. ஓவியத்துறையில் தனித்து விளங்கிய அவர், தமிழக அரசியல் களத்திற்கு தன்னால் இயன்ற பங்களிப்புகளை இறுதிவரை செய்திருக்கிறார். மரபு ஓவியத்திலிருந்து நவீன ஓவியங்களைக் கண்டடைந்த அவர், ஓர் ஆளுமையாக வளர்ந்ததற்கு அவருடைய அரசியல் பார்வையே காரணமென்பதை ஓவிய விமர்சகர்களும் மறுக்கமாட்டார்கள்.

தனக்கு முன்னே இருந்த வழிகளையெல்லாம் உற்றுணர்ந்து, அவ்வழியே புதிய புதிய கிளை வழிகளை ஏற்படுத்தியவர். ஓவியமென்பதும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய முரசம்தான் என்பதை அவருக்கு முன்னால் வேறு யாரும் அறிவிக்கத் துணியவில்லை. கலையை பிரசாரமாக்கக் கூடாது என்னும் கருதுகோலை வைத்திருந்த தன் முன்னோர்களிடமிருந்து அவர் வேறுபட்டதாகச் சொல்ல முடியாது. அவர்களிடமிருந்து பெற்ற உரத்தினால்தான் புதிது செய்யும் எண்ணமே அவருக்கு உதித்திருக்கிறது. தம்முடைய வாழ்விலிருந்தே படைப்புகளை உருவாக்கும் பயிற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார்.

கும்பகோணத்தை அடுத்த உப்பிலியப்பன்கோயில் ஊர் சந்நிதானத்தில் தன் இளமைக்காலத்தை வறுமையோடு கழித்த அவர், அக்கோயிலிலிருந்த தெய்வத்திடம் பிரார்த்தனைகளுக்குப் பதிலாக ஓவியங்களை வைத்திருக்கிறார். வாலிப வயதுவரை அவருடைய வயிறு, கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களை உண்டே நிறைந்திருக்கிறது. தெய்வத்திடம் முறையிட்டால் வறுமை நீங்கிவிடுமென்றோ வசந்தகாலம் பூத்து விடுமென்றோ அவர் ஏனோ நம்பாதவராய் இருந்திருக்கிறார்.

அதைவிட, கோயில் பணியில் ஈடுபட்டிருந்த தன் தாயும், தந்தையும் கர்ம சிரத்தையோடு செய்து வந்த தெய்வ காரியங்களால்தான் தனக்கு ஓவிய சக்தி கிடைத்ததென்றும் அவர் எங்கேயும் சொல்லியதில்லை. மாறாக, தெய்வங்களையே கேள்வி கேட்கும் குரலைத்தான் அவருடைய ஓவியங்கள் கொண்டிருந்தன. ஆனாலும்கூட, அவர் ஓவியங்கள் நம்முடைய புராதன கோடுகளையும், சிற்பங்களையும் அடிப்படையாகக் கொண்டவையே.

காமதேனு, செங்கோட்டு யாழ், சிறுதெய்வ சிலைகள், கற்பக விருட்சம் என அவர் திரும்பத் திரும்ப நம்முடைய தொன்மங்களிலிருந்தே ஓவியங்களை மீட்டுக்கொண்டிருந்தார். புராண இதிகாசக் குறியீடுகளை மறுப்பவராயிருந்தாலும் அவருக்குள்ளே பதிந்திருந்த அக்குறியீடுகளைக் கொண்டே அவற்றுக்கு எதிரான திசையில் பயணித்திருக்கிறார். கும்பகோணத்தில் எந்தத் திசையில் நடந்தாலும் நாலைந்து கோயில்களை கண்ணில் கண்டுவிடலாம்.

உலாத்தவும், உறங்கவும், ஓய்வெடுக்கவும் கோயில்களைத் தேர்ந்தெடுத்த அண்ணன் வீர.சந்தானத்திற்கு அக்கோயில்களிலிருந்த சிலைகளை ஓவியப் பிரதியெடுக்கும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் எம்ஜிஆராக ஆகவேண்டும் எனவும் தோன்றியிருக்கிறது. ஏதோ ஒரு திரைப்படத்தில் எம்ஜிஆர் பேருந்து நடத்துனராயிருந்து டிக்கெட் பரிசோதக ராக பதவி உயர்வு பெறுவார். எனவே, தாமும் நடத்துனராக வேலையில் சேர்ந்து எம்ஜிஆர் ஆகவிடலாம் என எண்ணியிருக்கிறார்.

நடத்துனர் பணி கிடைக்காமல் போகவே தன்னால் எம்ஜிஆராக முடியாது என்று புரிந்துகொண்டு, ஓவியனாக மாற உத்தேசித்திருக்கிறார். அவர் எண்ணம் ஈடேறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது கும்பகோணம் ஓவியக் கல்லூரி. உப்பிலியப்பன்கோயில் கிராமத்திலிருந்து நடந்துபோகும் தூரமே கல்லூரி அமைந்திருந்ததால் பொருளாதாரத் தேவைகளால் தடைபடாமல் அவருடைய கல்லூரிப் படிப்பு தொடர்ந்திருக்கிறது.

இந்தியா சுதந்திரமடைவதற்கு ஐந்துநாள் முன் பிறந்த அவர், சுதந்திர இந்தியாவின் கொடுமைகளுக்கு எதிராக தன் தூரிகையைத் தூக்கிப்பிடித்த களப்போராளியாக அறியப்படுகிறார். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்த அவர், மேற்படிப்புக்காக சென்னை ஓவியக் கல்லூரிக்கு வருகிறார். அங்கேதான் அவருக்குள் புதைந்திருந்த தனித்த ஆற்றல்கள் வெளிப்படுகின்றன.

புகழ்பெற்ற ஓவியர் தனபாலின் மாணவராக ஆகிறார். கலைகளின் சகல நுணுக்கங்களையும் கற்றுத்தேர ஆசிரியர் தனபால் எல்லாவிதத்திலும் அவருக்கு உதவுகிறார். ஓவியத்தில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த அவரை புடைப்புச் சிற்பத்திற்கு மடைமாற்றிய பெருமை ஆசிரியர் தனபாலுக்குரியது. அவரே, வறிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வீர.சந்தானத்தை மகனாகப் பாவித்து, தன் வீட்டிலேயே தங்கவைத்து வளர்த்
தெடுத்திருக்கிறார்.

திராவிட இயக்க அரசியல் சார்பு கொண்டிருந்த ஓவியரும், சிற்பியுமான தனபாலைத் தவிர்த்துவிட்டு தமிழக ஓவிய வரலாற்றை எழுத முடியாது. 1958ம் ஆண்டிலேயே பெரியாரை சிற்பமாக்கி ஓவியப் பதிவை ஏற்படுத்தியவராக தனபால் அறியப்படுகிறர். பெரியாருடன் மட்டுமல்ல, பாரதிதாசன், ஜீவானந்தம், கலைவாணர் எனப் பலருடனும் நெருங்கிப் பழகிய தனபால், ஜீவாவின் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவிபுரிந்தவர். கலைவாணரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜீவா தலைமறைவாக இருந்ததே தனபாலின் வீட்டில்தான்.

அந்த வீட்டில் இருந்துதான் வீர.சந்தானமும் தன் மேற்படிப்பு வாழ்க்கையை மேற்கொள்கிறார். மாணவர்களையும் மகன்களாக, மகள்களாகக் கருதும் தன்பாலின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வீர.சந்தானம் வாழ்ந்திருக்கிறார். ஆசிரியர் தனபாலின் மனைவியான மீனாட்சியம்மா உருட்டி உருட்டி உள்ளங்கையில் வைத்த கவளத்திலிருந்து உருவானதே இந்த உடம்பு என எத்தனையோ சந்தர்ப்பங்களில் அண்ணன் வீர.சந்தானம் நெக்குருகியிருக்கிறார். அங்கேதான் ஓவியர் ஆதி மூலத்தின் அறிமுகமும் ஓவியத்தின் அத்தனை பரிமாணங்களும் அவருக்குப் பிடிபடுகிறது.

வழக்கமான ஓவியர்களிடமிருந்து வித்தியாசப்படவும் தனித்த அடையாளத்தை உருவாக்கவும் உதவிய அந்தக் காலங்களை, ‘‘மயக்கமே மகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியே மயக்கமாகவும் ஒன்று கலந்த உற்சாகமான பொழுதுகள்அவை’’ என்று சொல்லியிருக்கிறார். “அண்ணன் ஆதிமூலமும், தனபால் சாரும் இல்லையென்றால் என் காதல் மனைவியை நான் கைப்பிடித்திருக்க முடியாது” என்றிருக்கிறார். “என் வீட்டு சார்பாக அவர்கள் வீட்டில் போய் பெண் கேட்டதும், அவர்கள் ஆரம்பத்தில் மறுத்து பின் ஒப்புக்கொள்ள ஜவாப்தாரி போட்டதும் அவர்கள்தான்.

திருமணம் முடித்து சொந்த ஊரான உப்பிலியப்பன் கோயிலுக்கு மனைவியைக் கூட்டிக்கொண்டு போனேன். அங்கே என்னைப் பெற்ற அம்மா, தன் மருமகளிடம் ‘எம் மவன் எவ்வளவு பவுனு போட்டான்’ என்றார். நானோ ‘அரைப் பவுன் தாலி மட்டுமே வாங்கிக் கொடுத்திருந்தேன்.’ அதைச் சொன்னதும் என்னுடைய அம்மா தன் கழுத்தில் கிடந்த சங்கிலியைக் கழற்றிப் போட்டார்.”

இயலாமையிலும் வறுமையிலும் நம்முடைய குடும்பங்கள் பரிமாறிக் கொள்ளும் அன்புக்கு இணையே இல்லை என்று அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களைக்கூட பகடியோடும் பாசத்தோடும் பகிர்ந்து கொள்வார். என்னுடைய முதல் மூன்று கவிதைத் தொகுப்புகளுக்கான முகப்பை அவர்தான் வரைந்துகொடுத்தார். அய்யனார், நிசும்பசூதனி, வீரனார் என அவர் வரைந்து கொடுத்த ஓவியங்களைத் தாங்கிய என்னுடைய மூன்று கவிதைத் தொகுப்புகளும் தஞ்சை மாவட்டத்து அரசியலையும் எதார்த்த வாழ்வையும் பேசின.

காவிரிப் பாசனம் பொய்த்துப்போன சோகங்களை நானறிந்த மொழியில் வலியோடு அந்நூல்களில் எழுதியிருந்தேன். “விட்டுடாத, இந்த நெருப்ப அணைக்காம வச்சிக்கிட்டா பொழச்சிக்கிடலாம். பஞ்சம் பொழக்க எதை எதையோ செய்றாங்க. நீ எழுத வந்திருக்க. ஒன்ன எழுத்தும் எழுத்த நீயும் காப்பாத்திக்கணும்” என்றார். முதல் அறிமுகத்திலேயே அவர் எனக்கு அண்ணனாகிவிட்டார். கோணலான கோடுகளை சமூக நிமிர்வுக்காக வரைந்து வந்த அவர், தட்டிக்கொடுத்ததில் என் முதுகுத் தண்டும் முறுக்கேறியது.
 

(பேசலாம்...)

www.kungumam.co

Posted
 

ஊஞ்சல் தேனீர்

யுகபாரதி - 41

எழுத்தாளர்களும் ஓவியர்களும் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவைகளை அண்ணன் வீர.சந்தானம் அவ்வப்போது உணர்த்திக்கொண்டிருந்தார். கவிதை நூல்களுக்கோ இலக்கிய பத்திரிகைகளுக்கோ அவர் வரைந்துகொடுக்கும் ஓவியங்களுக்கு விலையையோ சன்மானத்தையோ எதிர்பார்த்ததில்லை. நவீன இலக்கியப் படைப்பாளர்கள் பலருக்கும் அவர் பெரும் உந்துவிசையாக இருந்திருக்கிறார். அட்டை வடிவமைப்பில் கவனத்தை ஏற்படுத்தி, நூலின் தகுதியைக் கூட்டிக்காட்டியதில் அவருடைய ஓவியங்களுக்கு முக்கிய பங்குண்டு.

அப்படித்தான் ஆரம்பகால என்னுடைய கவிதை நூல்கள் அரசியல் தளத்திலும் விமர்சனத் தளத்திலும் வெகுவான கவனத்தை ஈர்த்தன. என் முதல் இரண்டு தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த அரசியல் கவிதைகளை ஆவேசத்தோடு பல மேடைகளில் சொல்லிக்காட்டி உற்சாகப்படுத்தியிருக்கிறார். கவிதைகளில் வெளிப்பட்ட அரசியலை வண்ணங்களின் வாயிலாகவும் கோடுகளின் வாயிலாகவும் உரக்கப் பேசுவதற்கு அவர் ஓவியங்கள் உதவின. தஞ்சை மாவட்டத்து நிலப்பரப்பை அவர் நன்கு உள்வாங்கியவர் என்பதால், வண்டல் மண் அரசியலை பொதுவெளியில் அவரால் தயக்கமில்லாமல் சொல்ல முடிந்தது.
3.jpg
ஒருபக்கம் திராவிட இயக்கமும் இன்னொரு பக்கம் இடதுசாரி இயக்கங்களும் வேரூன்றி கிளைபரப்பி நின்றபோதும், வேளாண்மையை மீட்டெடுக்க முடியாமல் போன துக்கத்தை அவர் ஓவியங்கள்  வெளிப்படுத்தின. பேராசிரியரும் கவிஞருமான த.பழமலய், அண்ணன் வீர.சந்தானத்தின் ஓவியக்கூடத்தில் அமர்ந்து எழுதிய ‘குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்’ என்னும் கவிதை நூல் குறிப்பிடப்பட வேண்டியது. அந்நூலுக்கு அண்ணன் வரைந்திருந்த ஓவியங்கள் அசாத்திய பொலிவைச் சேர்த்திருந்தது.

அதற்கு முன் கவிஞர் பழமலய் எழுதிய ‘சனங்களின் கதை’ என்னும் கவிதை நூல், அதுவரை இருந்த கவிதை மரபுகளையெல்லாம் புரட்டிப்போட்டது. வட்டாரச் சொற்களை மிகுதியாகக் கையாண்ட அந்நூல் வெளிவந்த பிறகுதான், எளிய சொற்களின் வழியே கவிதை எழுதக்கூடிய பெரும் பட்டாளம் ஒன்று உருவானது. “பாடுகளைப் பாடுதல்” என்னும் நிலையில் என்போன்றோர்க்கு பழமலய்யின் கவிதைகளே மாதிரிகளை வழங்கின. கலைகள் முழுவதுமே மக்களுக்கானவை என்னும் புரிதலிலிருந்த கவிஞர் பழமலய்யும், அண்ணன் வீர.சந்தானமும் எக்கலையாயினும் அதை மக்கள் மொழியிலேயே வெளிப்படுத்த முனைந்தது முக்கியமான காலகட்டம்.

திராவிட இயக்கத்தின் பின்புலத்தில் வளர்ந்திருந்தாலும் அவர்கள் இருவருமே தமிழ்த்தேசிய அடையாளத்தை கலைகளில் கட்டியெழுப்ப விரும்பினார்கள் குறிப்பாக, அண்ணன் வீர. சந்தானம் அவ்வரசியலில் சாதியத்தைத் தூக்கிப்பிடிக்காமல் பொதுவுடமைச் சார்பாளராக இறுதிவரை இருந்தார். இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்பது தான் அவர் கொண்டிருந்த அல்லது பற்றியிருந்த கொள்கை என நான் புரிந்துகொள்கிறேன். மிகச் சமீபத்தில் வெளியான என்னுடைய நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவில், அவர் நம்பிக்கையோடு பேசிய உரையை நான் என் வாழ்நாள் பெருமிதங்களில் ஒன்றாகக் கருத இடமிருக்கிறது.
3a.jpg
“என் தம்பிகள் ஒருபோதும் தோற்கமாட்டார்கள். தோற்பவர்களை நான் தம்பிகளாகப் பெறவில்லை” என்று கணீர் குரலில் அவர் பேசிய பேச்சைக் கேட்டவர்கள், அடுத்த சில வாரங்களில் அவர் இல்லாமல் போவார் என எண்ணியிருக்க மாட்டார்கள். அவ்விழாவில் ஐந்து தேசிய விருதுகளை வாங்கிய இயக்குநர் பாலுமகேந்திரா, அவ்விருதுகளை பாதுகாக்காமல் தவறவிட்ட துயரத்தை பகிர்ந்துகொண்டார். விருதுகளை வாங்குவதைவிட அதைக் காப்பது பெரிது என்று கூறிய அவர், “கலைகளில் ஜெயிப்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிடுகிறார்கள். நாம் கலையிலும் தோற்கக்கூடாது, வாழ்க்கையிலும் தோற்கக்கூடாது” என்றபோது அனுபவ வார்த்தைகளின் திரட்சியில் அரங்கம் உறைந்திருந்தது.

பெரிய பின்புலமோ வசதி வாய்ப்புகளோ இல்லாமல் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்த எனக்கு, அவர் அவ்வப்போது கொடுத்துவந்த நம்பிக்கைக்கு அளவில்லை. சோர்ந்துபோன வேளைகளில் அவரிடமிருந்து வரும் ஒரு தொலைபேசி, வாழ்வதற்கான கச்சாப்பொருளை சொற்களின் வழியே வழங்கிவிடும். எழுந்து நிற்பதற்கான சக்தியை யார் வேண்டுமானாலும் தந்துவிடலாம். ஆனால், எழுந்து நிற்பதற்கான அரசியலை அவர் போன்றவர்களால்தான் தரமுடியும்.

அண்ணன் வீர.சந்தானம் ஓவியத்தின் மூலம் தன்னுடைய அரசியலை நிறுவிய அதே சமயத்தில் அரசியல் மேடைகளை ஒரு கலைஞன் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கற்பித்திருக்கிறார். ஒருமுறை ஓர் அரசு பங்களாவில் நடந்த ஓவியப்பட்டறையில் அவருடைய ஓவியங்களும் பங்கெடுத்தன. அப்போது எதிர்பாராதவிதமாக அல்ல, எதிர்பார்த்தவிதமாக ஓர் அமைச்சரின் வருகையால் அவ்வோவியங்கள் அங்கிருந்து அகற்றப்படுகின்றன. ஆட்சியிலிருப்பவர்களும் அதிகாரத்திலிருப்பவர்களும் கலைகளைக் கையாளும் விதத்தைப் பார்த்து அவரால் சும்மா இருக்க முடியவில்லை.

தன்னுடைய எதிர்வினையை வார்த்தையாக வெளிப்படுத்தாமல், ‘உடைந்து நொறுங்கும் நாற்காலிகள்’ என்னும் தலைப்பில் தொடர் ஓவியங்களைத் தீட்டி அதனைக் காட்சிப்படுத்தினார். அதிகாரத்திற்கு எதிராக முஷ்டியை உயர்த்திய அவருடைய ஓவியங்கள் கலகக் குரலுடையன. முற்று முழுக்க சிதிலுமடைந்த நாற்காலிகளை வெவ்வேறு வகைகளில் வரைந்து, நாற்காலிகளையும் அதில் அமர்ந்திருப்பவர்களையும் கோபமடைய வைத்திருக்கிறார். பதவியிலிருப்பவர்கள் கலைஞர்களை கெளரவிக்கத் தவறுகிற போதெல்லாம் அவருடைய தூரிகைக்குக் கோபம் வந்து விடும்.

அதேபோன்று வடக்கிலும் விவான் சுந்திரம் என்னும் ஓவியர், நாற்காலி வரிசையை வரைந்து அதிகார பீடங்களை அசைக்க முயன்ற தகவலை கலை விமர்சகர் இந்திரன், தம்முடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். பேசக்கூடிய ஓவியங்களையே அவர் விரும்பினார். கவிஞர்.காசி ஆனந்தன், “மோனாலிசா ஓவியம் தனக்குப் புரியவில்லை. ஓவியராக உங்களுக்கு ஏதாவது புரிகிறதா” என்றபோது, “எனக்கும் அந்த ஓவியம் என்ன சொல்ல வருகிறது என்பது புரியவில்லை” என்றுதான் சொல்லியிருக்கிறார். விசேஷ காரணங்களையும் வியக்கத்தக்க விவரங்களையும் அவரால் தந்திருக்க முடியும்.

என்றாலும், எந்தப் பாசாங்குமில்லாமல் மனதில் பட்டதை அப்படியே ஒப்புக்கொள்ளும் தன்மையே அவரிடம் இருந்திருக்கிறது. கலைகள் மக்களுக்கு ஏன் புரியவேண்டும்? கலா ரசிகர்களின் பசிக்குத் தீனியானால் போதாதா? என்றெல்லாம் கேட்கக்கூடிய நிலையில், மக்களுக்குப் புரியும் மொழியில் ஆக்கப்படுவதே கலை என்னும் உறுதியைக் கொண்டிருந்தவர் அவர். தமிழக சூழலில் அண்ணன் வீர. சந்தானம்  ஒருவர்தான் உலகம் முழுக்க நிலவிவந்த அரசியல் மாற்றங்களையும் எழுச்சிகளையும் ஓவியக் கித்தானில் சொல்ல விழைந்தவர். மத்திய அரசின் நெசவாளர் சேவை மையத்தில் உயர் பதவியில் இருந்த போதும்கூட, அவர் எண்ணங்களும் செயல்பாடுகளும் மக்களை நோக்கியே அமைந்திருந்தன.

துறைசார்ந்த பங்களிப்பில் இரண்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். பல்வேறு அரசியல் நெருக்கடிகள் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளுக்கு அவர் பந்தாடப்பட்டிருக்கிறார். ஈழ விடுதலையை முன்வைத்து அவர் ஆற்றிவந்த காரியங்களுக்காக அரசு அவருடைய பெயரை கண் காணிப்புப் பட்டியலில் வைத்திருந்தது. பணி நிமித்தம் தன் இரண்டு மகள்களிடமிருந்தும் மனைவியிடமிருந்தும் பிரிய நேர்ந்திருக்கிறது. என்றாலும், மக்களிடமிருந்து அவர் ஒருநாளும் பிரிந்ததில்லை. ஓவியத்தின் மீது தான் கொண்டிருந்த தீவிரமான ஈடுபாட்டால், தன் மனைவிக்கு பல ஆண்டுகளாகத் தனிமையைப் பரிசளிக்க நேர்ந்ததை கவலையோடும் விரக்தியோடும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனைவிக்கு மனநிலை பிறழ்ந்ததே தன்னால்தானென்ற குற்ற உணர்வை ஒளிவு மறைவில்லாமல் தன்னைப் பற்றிய ஆவணப் படத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார். பேரக்குழந்தைகளைக் கொஞ்சுவதுபோலவே குழந்தையான என் மனைவியையும் இப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கிறேன் எனச் சொல்லி, ஆறாகப் பெருக்கெடுக்கும் கண்களை அலட்சியத்துடன் துடைத்திருக்கிறார். மக்களை நேசிக்கக்கூடிய கலைஞனுக்கு இப்படியான  இக்கட்டுகளும் இடர்பாடுகளும் வேதனைக்குப் பதிலாக வேகத்தையே கொடுக்கின்றன. முன்னிலும் தீவிரமாகச் செயல்படும் மூர்க்கத்தையும் தாக்கத்தையும் அத்தகைய சூழல்கள் அமைத்துத் தருகின்றன.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஈழப் போராட்டத்தின் விதைகள் தமிழக மண்ணிலும் தூவப்பட்டன. மதம், கட்சி, சாதிப் பாகுபாடின்றி தமிழ்ச் சமூகமே ஈழத்துக்கான ஆதரவு நிலையை அப்போது எடுத்திருந்தது. அப்பாவித் தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டது போதாதென்று, இந்தியாவும் அமைதிப்படை என்னும் பேரால் தமிழர்களைக் கொன்று குவித்தது. இந்திராகாந்திக்குப் பிறகு இனப்படுகொலை என்னும் சொல்லைப் பயன்படுத்திய அண்ணன் வீர.சந்தானம், சிங்கள அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான ஓவியங்களைத் தீட்டிக் காட்சிப்படுத்தினார்.

அதன் விளைவாக வெவ்வேறு குழுக்களாக தமிழகத்தில் உலவிவந்த ஈழ விடுதலை அமைப்புகள் பலவற்றுடனும் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே “முகில்களின் மீது நெருப்பு” என்னும் ஓவிய நூலும் வெளிவந்தது. கவிஞர் சேரனின் கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்த அந்த ஓவிய நூல், அரசியல் தளத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகக் காத்திரமான விவாதத்தைத் தொடங்கிவைத்தது. இராசகிளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்நூலே தமிழில் வெளிவந்த முதல் ஓவிய நூல்.

ஈழத்தில் விடுதலைப் போராளி குட்டிமணியின் கண்கள் சிங்களப் படையினரால் பிடுங்கி எறியப்பட்டதைக் கண்டித்து அண்ணன் வீர.சந்தானம் வரைந்த ஓவியங்கள், இனப்படுகொலையின் கோரத் தாண்டவத்தை இப்போதும் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. மொழியால் மட்டுமே ஓர் இனம் மூச்சுவிடும் என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார். எனவேதான், தன் ஓவியங்களை அவர் தமிழ்பேசும் ஓவியங்களாகத் தகவமைத்தார். அவருடைய ஓவியங்களில் மிகுதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் முகங்களே வெளிப்பட்டன. புனரமைக்கப்படாத ஓர் ஆதி இனத்தின் அவலக் குரலை அவருடைய கோடுகள் பிரதிபலித்தன.
 

(பேசலாம்...)

kungumam.co.

Posted

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 42

முதல் சந்திப்பிலேயே பிடித்துவிடக்கூடிய முகவெட்டும் தாடியும் கம்பீரமும் அண்ணன் வீர.சந்தானத்துடையது. வாக்கியங்களை விட்டுவிட்டு உதிர்த்தாலும் அவற்றுக்கு இடையே விரவிவரும் கவிநயம் யாரையும் வசீகரித்துவிடும். இயக்குநர் பாலுமகேந்திரா அந்த வசீகரத்தால்தான் ‘சந்தியாராக’த் தில் அவரை நடிக்கவைத்தார். அவரைத் தொடர்ந்து பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் அவரைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.

இளவயதில் எம்.ஜி.ஆர். ஆகவேண்டும் என ஆசை கொண்டிருந்தாலும், அவர் நடிக்க வந்தபோது அந்த ஆசையிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தார். எந்த பாத்திரமானாலும் ஏற்று நடிக்கும் ஆவலை அவர் அறவே தவிர்த்திருந்தார். முழுநேர நடிகனாக தன்னை நிறுவிக்கொள்ள அவரால் முடிந்திருக்கும். என்றாலும், வர்த்தக சினிமா வலையில் சிக்கிக்கொள்ள அவர் துளியும் விரும்பவில்லை.
2.jpg
எத்தனையோபேர் வற்புறுத்திக் கேட்டபொழுதும்கூட எண்ணிச் சொல்லும் படியான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள், ஓரளவுக்காவது தமிழ் வாழ்வியலைச் சொல்லும்படியான படங்களாக இருந்தன. இயக்குநர் வ.கெளதமன் இயக்கிய ‘மகிழ்ச்சி’ திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார். எழுத்தாளர் நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலைத் தழுவி எழுக்கப்பட்ட அப்படத்தில் நடிக்க வேண்டுமென கெளதமன் கோரிக்கை வைத்தபோது, “அன்புகொண்ட உனக்காக தொழுநோயாளியாகவும் நடிக்கத் தயார்” என்றிருக்கிறார்.

கெளதமன் கேட்கப்போனதும் அப்படியான கதாபாத்திரத்திற்காகத்தான். சொல்லத் தயங்கிக்கொண்டிருந்த வேளையில், அவராகவே அப்படிச் சொன்னதை ஆச்சர்யத்தோடு அப்படம் வெளிவந்த சமயத்திலேயே ஒரு நேர்காணலில் கெளதமன் நெகிழ்வோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். தொழுநோயாளி கதாபாத்திரத்தில் நடிக்க, வீட்டிலிருந்தே அந்த வேசத்தைப் போட்டுக்கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்குப் போயிருக்கிறார். கிழிந்த, அழுக்கான, பார்க்கவே சகியாத கோலத்தில் படப்பிடிப்புக்குப்போன அவர், தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் வி.எஸ்.ராகவனின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்திருக்கிறார்.

தொழுநோயாளி வேடத்திலிருந்தாலும் திமிரும் செருக்கும் நிரம்பிய அவருடைய உடல்மொழி யாரையும் அச்சுறுத்தும். தனது அருகில் வந்து அமர்ந்திருக்கும் தொழுநோயாளியைப் பார்த்த பழம்பெரும் நடிகரான வி.எஸ்.ராகவனுக்கோ அந்தக் கோலமும் அவர் செய்கைகளும் அசூயையாகப் பட்டுவிட்டன. உடனே, தனக்கு அருகில் யாரோ ஒரு பிச்சைக்காரன் வந்து அமர்ந்திருக்கிறான் என குய்யோ முய்யோ என சத்தம் போட்டிருக்கிறார்.

அப்போதும் வீர. சந்தானம் தன்னை யாரென்றே சொல்லாமல் பராக்குப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். “முதலில் இந்த ஆளை வெளியே அனுப்புங்கள். இல்லையென்றால் நான் நடிக்க மாட்டேன்” எனவும் ராகவன் ஆதங்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகு கெளதமன் வந்து விவரத்தை விளக்கிய பிறகுதான் படப்பிடிப்பு அமைதியாகத் தொடர்ந்திருக்கிறது.

வேசம் எதுவென்றாலும் பொருந்திப்போகக்கூடிய சாயலை அவர் முகம் கொண்டிருந்தது. எதையும் உள்வாங்கிக்கொண்டால் அதுவாகவே மாறிவிடும் அற்புதமான கலைஞராகவும் அவரிருந்தார். அவர் நடிகராக வேசமேற்ற பல படங்களுக்கு நான் பாடல் எழுதியிருக்கிறேன். ஒலிநாடா வெளியீட்டு விழாக்களில் சந்திக்கும்போது, “கேட்டேன், நல்லா இருந்துச்சு’’ என இறுக அணைத்துக்கொள்வார்.
2a.jpg
“நீ வருவேன்னு தெரியும். ஆனா ஊடக அரசியலையும் திரைத்துறை சவால்களையும் எதிர்கொண்டு நீச்சலடிக்கிறியே அதுதான் பெரிய சாதனை” என உச்சிமோர்ந்து அவர் நெற்றியில் இட்ட முத்தக் கறைகளை, தற்போதைய மரணக் கண்ணீர் வந்து அழித்துக்கொண்டிருக்கிறது. அண்ணன் வீர.சந்தானம் நடிப்பிற்கான தேசிய விருதையும் ஒருமுறை பெற்றிருக்கிறார். அரிதாரம் பூசிக்கொண்டு திரையில் தோன்றுவதன் மூலம் அதிகமான மக்களிடம் தம்முடைய குரலும் ஓவியங்களும் பரவும் என்பதற்காகவே நடிக்க ஒப்புக்கொண்டதாக ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.

இயக்குநர் மீராகதிரவனின் ‘அவள் பேர் தமிழரசி’ என்னும் திரைப்படத்தில் தோற்பாவைக் கூத்துக் கலைஞராக நடித்திருக்கிறார். இயல்பிலேயே அண்ணன் வீர. சந்தானம் தோற்பாவைகளின் வண்ணங்களையும் வடிவங்களையும் உட்செரித்தவர். இன்னும் சொல்லப்போனால், தோற்பாவைகளை நவீனஓவிய மரபாக்கிய பெருமையும் அவருக்குண்டு.

‘பீட்சா,’ ‘கத்தி,’ என அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘சந்தியாராக’த்திற்குப் பிறகு மனதில் பதிந்த கதாபாத்திரமாக அதைத்தான் சொல்ல முடியும். நலிந்த கூத்துக்கலைஞனின் குரலை மீராகதிரவன் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பார். படம் வெகுவாக சிலாகிக்கப்படவில்லை. என்றாலும், அண்ணன் வீர.சந்தானத்தின் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது.

அவர் நடிக்கவில்லை, அப்படியே வாழ்ந்திருக்கிறார் எனவும் சில பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன. உண்மையிலேயே அவர் கூத்துக் கலையை உள்வாங்கியவர் என்பது பலருக்குத் தெரியாது. கே.சி.எஸ்.பணிக்கர், எஸ்.தனபால், ஏ.பி.சந்தானராஜ் ஆகிய ஓவிய, சிற்ப மேதைகளை ஆசியராகக் கொண்டிருந்த அவர், தனக்கான ஓவிய பாணியை தஞ்சாவூர் மரபு ஓவியங்களிலிருந்து உருவாக்கிக் கொண்டதாகக் கருத இடமுண்டு.

பிற்காலச் சோழர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சாவூர் ஓவிய மரபு, நாயக்கர், மராட்டியர் வருகைக்குப்பின் உச்சத்தை அடைந்தது. சிற்பக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்கள் ஒன்றிணைந்த மரபே தஞ்சாவூர் பாணி ஓவிய மரபு. தஞ்சாவூர் பாணி என்பது தனித்த தன்மையுடையதல்ல. அது ஏனைய கலை வடிவங்களின் கூட்டுக்கலவையே. தோற்பாவைகள், திரைச்சீலைகள், சுதைச் சிற்பங்கள், வெண்கலம் சார்ந்த தஞ்சாவூர் தட்டுகள், சுவரோவியங்கள் ஆகியவற்றையே தஞ்சாவூர் பாணி என்கிறோம்.

அண்ணன் வீர.சந்தானம், தென்னிந்திய தோற்பாவை மரபையும் பாரம்பரிய வண்ண மரபையும் சுவரோவியக் கோடுகளையும் தன்னுடைய ஓவியங்களில் கொண்டுவந்தவர். நம்முடைய பெண்கள் வாசலில் இடும் கோலங்களையும் மரச்சிற்பங்களில் பதியப்படும் பல்வேறு விதமான உருவங்களையும் இணைத்து ஒரு புதிய மரபை உருவாக்கிக் காட்டியவர். சின்னதும் பெரியதுமாக நீளும் அவருடைய கோடுகள், உருவத்திலிருந்து அரூபங்களைச் சமைத்தன.

அதனால்தான் வீர.சந்தானத்தின் ஓவியங்கள் “உள் மனதில் தாக்கங்களை நிகழ்த்தும் மந்திர சக்தி மிக்கவை” என பேராசியர் வீ.அரசு எழுதியிருக்கிறார். தாந்திரிக மரபையும், கலை கலைக்காக என்னும் பார்வையையும் ஆரம்பத்தில் கொண்டிருந்த அண்ணன் வீர.சந்தானம், ஒரு காலத்திற்குப் பிறகே தன்னுடைய பாதை எதுவென்று வரையறுத்திருக்கிறார்.

“ஒரு நடன மாதையோ, ஒரு தெய்வத்தின் நிலையையோ அல்லது இயற்கை எழிலையோ வரைந்தால் ஓவியமென்று கொண்டாடுபவர்கள் தன் சகல பலத்தையும் ஒன்று திரட்டி, கழுத்து நரம்பு புடைக்க ரிக்‌ஷா இழுப்பவனை வரைந்தால் ஓவியமில்லை என்கிறார்களே” என வருந்திய அவர், வாழ்க்கைக்கும் ஓவியத்திற்குமுள்ள இடைவெளியைக் குறைக்க விரும்பினார்.

குறைக்க விரும்பினார் என்பதுகூட சரியில்லை. இடைவெளியே இருக்கக்கூடாது என்பதுதான் அவர் எண்ணமாயிருந்தது. ஈழத்தில் தொடங்கிய இனப்படுகொலைக்கு எதிராக ஆரம்பித்த அவருடைய ஓவியப் பயணம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், அப்போரின் அவலங்களைக் கல்லில் சிற்பங்களாக வடிக்கும்வரை நீண்டது. தஞ்சையை அடுத்த விளாரில், அப்பணியில் அவர் ஈடுபட்டிருந்த நேரத்தில் ஒருமுறை அவரைப் பார்க்கப் போயிருந்தேன். கனல் கக்கும் கண்களுடன் இரவுபகலாக அப்பணியை அவர் செய்துகொண்டிருந்தார்.

“சோழர் கால கல்வெட்டுகளில் தமிழனின் வீரத்தைக் காண்கிறோம். இதோ நான் செய்து கொண்டிருக்கும் இந்தக் கல்வெட்டுகள், தமிழனின் சோகத்தைச் சொல்லப் போகின்றன” என வானத்தைப் பார்த்து கையுயர்த்தினார். ஈழம் விடுதலை அடைவதைப் பார்க்காமல் நான் கண்மூட மாட்டேனென சொல்லிக்கொண்டிருந்தார்.

அதையே என் நூல்கள் வெளியீட்டிலும் பேசினார். நம்பிக்கை பொய்த்துப் போவதில்லை என எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும், நிஜம் எப்போதும் நம்பிக்கையின் எதிர்த் திசையைத்தான் கலைஞர்களுக்குக் காட்டுகிறது. உலகமே கூடி நின்று ஓர் இனத்தை அழித்தொழிக்கும் காரியத்தில் ஈடுபடுகையில் அதை எதிர் கொள்ள ஆயுதங்களாலேயே முடியாதபோது, காகிதங்களாலும் தூரிகைகளாலும் என்ன செய்துவிட முடியும்?

தோற்கக்கூடியவர்களை நான் தம்பிகளாகப் பெறவில்லை என மேடைதோறும் அவர் முழங்கிவந்தாலும், காலத்தால் தோற்கடிக்கப்பட்ட அண்ணனுக்காக அவருடைய தம்பிகள் கண்ணீர் வடிக்கும் நிலையே ஏற்பட்டிருக்கிறது. அண்ணன் வீர.சந்தானம், அமைப்புகளின் அளவைப் பார்க்காமல் தன்மையைப் பார்த்தே ஆதரவளிப்பவர். லட்சம்பேர் கூடியிருக்கும் மேடையானாலும் பத்துபேர் மட்டுமே கூடி ஆலோசிக்கும் அரங்கமானாலும் தன்னுடைய பங்களிப்பை தமிழ் தேசிய நலனுக்காக செய்து கொண்டிருந்தவர்.

ஓவியம் மூலம் அவர் ஈட்டிய தொகையை பல சிற்றிதழ்களுக்குக் கொடையாகக் கொடுத்தவர். ‘அரங்கேற்றம்,’ ‘இனி,’ ‘தோழமை,’ ‘நந்தன்,’ ‘தமிழர் கண்ணோட்டம்’ ஆகிய இதழ்களில் அவர் தொடர்ந்து ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார். ஓவியர் ஆதிமூலம் சோழ மண்டல ஓவிய கிராமத்தை உருவாக்கியதைப் போல தாமும் தாம்பரத்தை அடுத்த படப்பையில் ஓவிய கிராமம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார்.

எழுத்தாளர்களும் ஓவியர்களும் ஒன்றிணைந்து செயலாற்றும் தளமாக ஓர் இடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு சாத்தியப்படுத்தினார். மனைகளை வாங்கி மிகக் குறைந்த விலைக்குப் பகிர்ந்தளித்தார். இப்போதும் ஓவியர் விஸ்வம், நெடுஞ்செழியன், ராமன் போன்றவர்கள் அங்கிருந்தே தனது ஆக்கங்களை உருவாக்கி வருகிறார்கள்.

(பேசலாம்...)

www.kungumam.co

Posted
 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 43

மிகமிகக் குறைந்த விலைதான் என்ற போதும்கூட வயிற்றுப்பாட்டுகே வழியில்லாமல் இருந்த அந்தக் காலத்தில் அண்ணன் வீர.சந்தானத்தின் விருப்பத்திற்கு என்னால் இசைவு தெரிவிக்க முடியாமல் போனது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை படப்பைக்கு வருகிறேன் என்றதும், “வேண்டுமானால் நான் கட்டியிருக்கும் வீட்டில் தங்கிக் கொள்ளேன்...” என்றார்.
3.jpg
எழுத்து, படைப்பு எல்லாவற்றையும் தாண்டி தாயுள்ளத்தோடு அவர் சொன்ன அந்த வார்த்தைகளில் பொதிந்திருந்த அன்புக்கு ஈடாக எதுவுமே இல்லை. எதையுமே அவருக்கு மறைத்து வைத்துப் பழக்கமில்லை. நண்பர்களோடு இணைந்து எப்போதாவது குடியைக் கொண்டாடுவார். சதா கைகளில் புகையும் சிகரெட்டை “விட்டுடலாமே அண்ணா...” என்றேன்.

“கோயிந்தசாமியை விட்டாலும் இவனை விட முடியவில்லையே!” என்றார்.‘‘அது யார் கோயிந்தசாமி?’’ என்றதும், “ஒருமுறை நண்பர்கள் தொந்தரவு தாங்காமல் குடிக்க நேர்ந்தது. குடி சும்மா இருக்குமா, நேரம் போனதே தெரியவில்லை. அப்போ ஒங்க அண்ணி மட்டுந்தான் வீட்டுல. நான் நண்பர்களோடு பேசிவிட்டு வீட்டுக்குப் போக தாமதமாகிவிட்டது.

வீட்டுக்குப் போனதும் குடிக்கப் போனேன் என்றால் தவறாகி விடுமேன்னு கோயிந்தசாமியைப் பாக்கப் போயிருந்தேன் என கதைவிட்டேன். அதிலிருந்து எப்போது குடிக்க நேர்ந்தாலும் கோயிந்தசாமியைப் பார்க்கப் போனதாக சொல்லத் தொடங்கினேன்.

ஒருகட்டத்தில், ஒங்க அண்ணியே ‘கோயிந்தசாமிய பாக்கப் போயிட்டீங்களா’ன்னு கேட்கத் தொடங்கினா. யாருன்னே தெரியாத கோயிந்தசாமி பலதடவ என்னக் காப்பாத்தியிருக்கான்...” என்று சொல்லிவிட்டு “அந்த கோயிந்தசாமி பயல நீ பாத்துடாத...” எனவும் எச்சரித்தார்.
அவர் வீட்டுக்குப் போனால் வீடு நிரம்ப அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களை வரிசையாகக் காட்டுவார்.

“இது போனவாரம் காவிரி பிரச்னைக்காக வரைந்தது. இது முல்லைப் பெரியாறுக்கு, அதோ அது இருக்கிறதே அது மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை முன்னிட்டு...” என தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்னைகளுக்கு எப்போதெல்லாம் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஓவியத்தால் எதிர்வினையாற்றினார்.

பெரும்பாலும் தமிழகத்தில் காணக்கிடைக்கும் பண்டைய ஓவியங்கள் கடவுளோடும் மதங்களோடும் சம்பந்தமுடையவை. ஆனால், உலகியல் சார்ந்த ஓவிய மரபு தமிழர்களுக்கு இருந்துள்ளது. அதற்கான சான்றுகளை நம்முடைய பழைய இலக்கியங்கள் வழங்குகின்றன.

அது பற்றிய விரிவான ஆய்வு தேவை என தமிழறிஞரும் பேராசிரியருமான கா.சிவத்தம்பி சொல்லியிருக்கிறார். அந்தப் பணியை மேற்கொள்ளத் தகுதியுடையவராக இருந்தவர்களில் வீர.சந்தானமும் ஒருவரென்று ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை தம்முடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆய்வுப்பணியை மேற்கொள்வது ஒருபுறமிருக்க, தன்னுடைய கலையாற்றலைக் கூட முழுமையாக வெளிப்படுத்தாமல், ஒரு முழுநேர தமிழ்த்
தேசியப் போராளியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் எனவும் அக்கட்டுரையில் எஸ்.வி.ஆர். வருந்தியிருக்கிறார்.

அண்ணன் வீர.சந்தானத்தைப் பொறுத்தவரை எந்த விளம்பரத்தையும் எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தியதில்லை. மாறாக, போராட்டக் களத்தில் இறங்கி முழக்கமிடுவதிலும் சிறை செல்லுவதிலும்தான் குறியாயிருந்தார்.அரசின் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் அஞ்சாதவராகச் செயல்பட்டார். கலைஞர்களோ எழுத்தாளர்களோ பெரிதில்லை. களத்தில் நின்று போராடுபவர்களே பெரியவர்கள் என அவர் கருதினார்.

தமிழகத்தில் இன்றுள்ள எல்லா அரசியல் தலைவர்களோடும் அவருக்கு நெருக்கமான தொடர்புண்டு. என்றாலும், அவர்களில் யார் ஒருவர் மக்கள் விரோத செயலில் ஈடுபட்டாலும் அதை அவர் ஏற்றுக்கொண்டதில்லை.முகத்திற்கு நேரே விமர்சித்து வெளியேறிவிடுவார். ஓட்டு அரசியலைவிட்டு மக்கள் அரசியலுக்கு வாருங்கள் என்றுதான் ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ என்னும் பெயரில் தொல்.திருமாவளவனும், மருத்துவர் ராமதாஸும் கைகோர்க்க காரணமாயிருந்தவர்களில் முதன்மையானவர் வீர.சந்தானமே.

‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்க’த்தின் மூலம் உதிரி உதிரியாயிருந்த தமிழ் அமைப்புகளை ஒன்றுசேர்த்து மாலையாகத் தொடுக்கும் ஆர்வம் அவருக்கிருந்தது. என்றாலும், பல்வேறு காரணங்களால் அவருடைய முயற்சிகள் பின்னடைவைக் கண்டன.தமிழ் இணைப்பு மூலம் சாதியத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய அவர் எடுத்துக்கொண்ட சங்கற்பம், பொய்யாய் பழங்கதையாய் போனது. இனத்தையும் மொழியையும் சாதி விழுங்கி ஏப்பம்விடும் என்பதை பின்னால்தான் அவருமே புரிந்துகொண்டார்.

அவர் ஆசை ஆசையாக தஞ்சையில் நிறுவிய முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு ஆளும் அரசால் ஆபத்து நேரவிருந்த சமயத்தில் குரல் தழுதழுக்க அவர் உரையாடிய உஷ்ணத்தை அவ்வளவு எளிதாக என்னால் கடந்துவிடமுடியாது.பத்திரிகையாளரும், நண்பருமான டி.அருள் எழிலன் எழுதி இயக்கிய ‘கள்ளத்தோணி’ குறும்படத்தில் வயதான ஈழ அகதியாகத் தோன்றுவார்.

பேத்திக்கும் தாத்தாவுக்குமான உரையாடல்கள், அச்சு அசலான உண்மைத் தன்மையோடு வெளிவர அவருடைய உடல்மொழி உதவியிருக்கிறது. போர் என்றால் என்னவென்று கேட்கும் பேத்திக்கு வேதனையோடு அவர் விளக்கிக் காட்டுவார். அப்போது உடல் நடுங்கி குரல் சிறுத்து அவரே வேறு ஒருவராய்த் தெரிவார்.அவர் அக்குறும்படத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள், கல்லான ஒருவரையும் கண்ணீர்க் கடலுக்குள் தள்ளிவிடும்.

அதேபோல லயோலா கல்லூரியின் ஊடகப் பிரிவினர் தயாரித்த ‘வேட்டி’யிலும் அவருடைய நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்திருந்தது. இறுதிக் காட்சியில் ‘தூ’ எனக் காறித்துப்பும்போது திருந்தாத சமூகத்தின் மீது மொத்தக் கோபத்தையும் கொட்டியிருப்பார்.
“ரொம்ப அருமையா துப்பியிருக்கீங்கண்ணே...” என்றபோது,‘‘பாரதி,ஒனக்குத் தெரியுமா, என்னுடைய காதலே காறித் துப்பிய காதல்தான்!”

என்றார். “என்னாண்ணே சொல்றீங்க..?” என்றதும், “நான் வேலை பார்த்து வந்த நெசவாளர் சேவை மையத்திற்கு அருகில்தான் சாந்தா வீடிருந்தது.
நான் வந்துவிட்டதைத் தெரிவிக்க மூன்றுமுறை காறித்துப்புவேன். உடனே சாந்தா வெளியே வந்து பார்த்துச் சிரிக்கும். உலகமே காதலைக் காறித் துப்பிக்கொண்டிருந்த காலத்தில் நானும் சாந்தாவும் காறித் துப்பித்தான் காதலை வளர்ந்தோம்!” என்று சொல்லி சிரித்துக்கொண்டார்.
இதே சம்பவத்தை மருத்துவமனையில் பலரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். சூழலின் இறுக்கத்தை தளர்த்த அவர் கையாளும் உத்திகளில் இதுவும் ஒன்று.

நெருப்பு கக்கும் ஓவியங்களை ஒரு பக்கம் தீட்டிக்கொண்டே, எதார்த்த வாழ்வின் சுவாரஸ்யங்களை அவர் சுகிக்கத் தெரிந்தவர். ஒரு சம்பவத்தையோ சூழலையோ விவரிக்கும்பொழுது, பெரும்பாலும் அவர் ஒரு நாடகக்காரனாக அவதாரம் எடுத்துவிடுவார்.

சொல்ல வந்த விஷயத்தை சுவைபட கூறுவதில் அவருக்கிருந்த பேரார்வம் ஒரு தேர்ந்த எழுத்தாளனைத் தோற்கடித்துவிடக் கூடியது. ஈழத்தில் நிகழ்ந்த இறுதிப் போரை விவரிக்கையில், “காந்திதேசம் கொடுத்தது... புத்த தேசம் கொன்னது!” என ரத்தினச் சுருக்கமாய் ஓர் மேடையில் பேசினார்.
நீட்டி முழக்காமல் நேரடியாக சொல்லிவிடக் கூடிய ஆற்றல் அவருடையது. தனக்கு நெருக்கமானவர்கள் கருத்து ரீதியாக வேறுபட்டாலும் அரசியல் ரீதியாக மாறுபட்டாலும் அதை அவர்களிடமே தைரியத்தோடு விவாதிப்பார்.

‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ சிதைவுண்ட பொழுதும் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபொழுதும் அதற்குக் காரணமானவர்களை அவர் கண்டிக்கத் தவறியதில்லை.ஈழப் பிரச்னையில் ஈடுபாடு கொண்டிருந்த வைகோவிடமும், பழ.நெடுமாறனிடமும் அவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் அதிகம். தமிழர்கள் ஒன்றிணையாமல் பங்காளிச் சண்டைகளைப் போட்டுக் கொண்டிருப்பதால்தான் எதிரிகள் நம்முடைய நிலத்தையும் வளத்தையும் அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கொண்டிருந்தார்.

சர்வதேச சமூகத்திடம் சுட்டுவிரல் நீட்டி அவர் அறைகூவல் விடுத்த காணொளி இப்போதும் இணையத்தில் கிடைக்கிறது. “தமிழர்கள் தனி நாடு கண்டுவிடக் கூடாதென கங்கணம் கட்டியிருக்கும் இந்தியாவின் வேலைத் திட்டத்திற்கு ஒத்தூதும் சர்வதேச சமூகமே, ஒருநாள் எங்கள் கனவும் உறுதியும் பலிக்கத்தான் போகிறது.

உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் விடுதலைக் கனவை விலக்கிக்கொண்டதில்லை. எண்ணிக்கையிலும் அளவிலும் சிறியதாக உள்ள இனம்கூட
விடுதலை பெற்றிருக்கையில் எங்கள் தாயகக் கனவை நாங்கள் ஒருபோதும் ஒதுக்க மாட்டோம். மேலும் போராடுவோம்...” என்று அவர் தன்னிச்சையாகப் பேசி வெளியிட்ட பதிவிலிருந்தே அவருடைய உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொள்ள முடியும்.

சென்னை ஓவியக் கல்லூரிக்கு நூறாண்டுக்கும் மேலான பாரம்பர்யம் உண்டு. அந்த பாரம்பர்யத்தின் முதல் கண்ணியாக தனபால், முருகேசன், கே.எம்.ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, ஆர்.டி.பாஸ்கர் ஆகிய ஓவியர்கள் இருந்திருக்கிறார்கள்.அடுத்த கண்ணியாக வீர.சந்தானம், ட்ராஸ்கி மருது உள்ளிட்டவர்கள் வருகிறார்கள். அரசியல் புரிதலையும் ஓவிய மரபையும் உள்வாங்கிக்கொண்ட அவர்கள் ஒரே நேரத்தில் பத்திரிகை, அரசியல், சினிமா ஆகிய மூன்று தளங்களிலும் இயங்கியிருக்கிறார்கள்.

ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. மூன்று தளங்களுமே வண்ணங்களையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு யார் புதிய வண்ணங்களைத் தரப்போகிறார்களோ அவர்களே வெல்வார்கள்.

அண்ணன் வீர.சந்தானம் ஓவியராக இருந்தாலும் வண்ணங்களைவிட எண்ணங்களை விதைப்பதிலேயே விருப்பம் காட்டியவர். அவர் வரைந்து, முடியாமல் வைத்திருக்கும் ஓவியத்தை யார் வந்து முடிக்கப் போகிறார்களோ? தெரியவில்லை.

அதேபோல வண்ணங்களின் அரசியலைப் புரிந்துகொண்டு, இறுதியாக யார் வந்து இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் முகத்தில் கரியைப் பூசப் போகிறார்
களோ? அதுவும் தெரியவில்லை.
 

(பேசலாம்...) 

kungumam.co.

Posted
 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 44

ஒரு படைப்பாளனுக்கு பாட்டாளி வர்க்கச் சிந்தனை இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது இப்போது பிரச்னையே இல்லை. எப்படியும் எழுதலாம். எதையும் எழுதலாம். எழுதுபவனின் அனுபவத்தை, அதை வாசிப்பவன் உள்வாங்கிக் கொண்டாலே போதும். ஒருபடி மேலே போய் அவன் உள்வாங்கிக் கொண்டானா? இல்லையா? என்றுகூட படைப்பாளன் கவலைப்பட வேண்டியதில்லை. அது வாசிப்பவனின் அறிவு சார்ந்த, அனுபவம் சார்ந்த எல்லையாக இன்றைக்குப் பார்க்கப்படுகிறது.
3.jpg
ஒரு படைப்பு வாசிப்பவனுக்குப் புரியவில்லை என்றாலோ அல்லது பிடிக்கவில்லை என்றாலோ அது அவனுடைய தலைவிதியுடன் சம்பந்தப்பட்டதாகச் சொல்லி படைப்பாளன் தப்பித்துக்கொள்ளலாம். என்னுடைய படைப்புகளைப் புரிந்துகொள்ள வாசகனுக்கு வக்கில்லை என்றும் வாதிடலாம். ஆனால், எழுபதுகளில் எழுத வந்த படைப்பாளர்களுக்கு இந்த சுதந்திரம் இருக்கவில்லை.

ஏதாவது ஒரு சிந்தனையுடன் தங்களை ஐக்கியப்படுத்தி எழுதவேண்டிய கட்டாயமிருந்தது. திராவிடமோ, தேசியமோ, மார்க்சியமோ அவர்கள் கைகொள்ள வேண்டிய சிந்தாந்தங்களாக முன் வைக்கப்பட்டன. எதையேனும் ஒன்றைப் பற்றித்தான் அவர்கள் மேலேற வேண்டியிருந்தது. குறைந்தபட்சம் அறம் சார்ந்தாவது அவர்கள் எழுத வேண்டு மென பொதுச் சமூகம் எதிர்பார்த்தது.

ஒரு படைப்பாளன் சமூகத்தில் மதிக்கத்தக்க கருத்துக்களைச் சொல்பவனாகக் கருதப்பட்டான். மனித குலத்தின் மேன்மைகளைப் போற்றுபவனாக அல்லது மனித குலத்தை மேன்மையோடு பார்க்கப் பழகியவனாக தரிசிக்கப்பட்டான். குறிப்பிட்ட சித்தாந்தத்தில் அவனுக்கு ஏற்போ, மறுப்போ இருக்கலாம். ஆனாலும், அவன் அந்த வட்டத்திலிருந்து வெளியேறிவிட முடியாது. முழு வீச்சோடு இலக்கியம் இயங்கி வந்த அந்தக் காலகட்டத்தில் எழுதவந்தவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் இராசேந்திரசோழன்.

இன்றைய வட தமிழக எழுத்தாளர்கள் பலருக்கும் அவரே முன்னத்தி ஏராகச் சொல்லப்படுகிறார். நடுநாட்டு சொல்லக ராதியை உருவாக்கிய கண்மணி குணசேகரனும், வட்டார நாவல்களில் பெண்ணியத்தைப் பிரதானப்படுத்தும் ச.தமிழ்ச்செல்வியும் தங்கள் ஊற்றுக்கண்ணாக இராசேந்திரசோழனைப் பார்க்கிறார்கள். இமையத்தின் கதைகளும்கூட அப்படியானதாகத்தான் எனக்குப்படுகிறது. ‘எட்டுக்கதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்புமூலம் எழுத்துலகிற்கு எழுபதுகளில் அறிமுகமான இராசேந்திரசோழன், இடதுசாரி முகாமைச் சேர்ந்தவராகத் தன்னைக் காட்டிக்கொண்டவர்.

காட்டிக்கொண்டது மட்டுமல்ல, அக்கொள்கைகளைத் தன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியும் வந்தவர். எழுதுபவர்கள் எல்லோருமே இடதுசாரியாகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறவர்கள் உண்டு. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்பதும் பொருத்தம் என்பதும் விவாதத்துக்குரியன. கருத்துத்தளத்தில் நின்றுகொண்டு கலைசெய்வதை இன்றைய படைப்பாளர்கள் வேடிக்கை என்கிறார்கள். முன் யோசனையுடனும், முன் தயாரிப்புடனும் படைக்கப்படுவது படைப்புகளே இல்லை என்றும் எண்ணுகிறார்கள்.

எழுத்தை விமர்சகர்கள் அளவிட்டுக் கொண்டிருந்த காலம்போய், எழுத்தாளர்களே தங்கள் சக படைப்பாளர்களின் எழுத்துக்களை அளவிடும் அவலமான காலத்தில் நாமிருக்கிறோம். இராசேந்திர சோழனின் எட்டுக்கதைகளை இன்றைக்கு வாசித்தாலும் அதன் இறுக்கமும் அடர்த்தியும் குலையாமல் இருப்பதை உணரமுடியும். ‘புற்றில் உறையும் பாம்புகள்,’ ‘தனபாக்கியத்தோட ரவ நேரம்,’ ‘வினை,’ ‘இச்சை,’ ‘பரிணாமச் சுவடுகள்,’ ‘பாசி,’ ‘சூழல்,’ ‘எதிர்பார்ப்புகள்,’ ‘கோணல் வடிவங்கள்,’ ‘சிதைவுகள்’ போன்ற கதைகள் இருபது வருடமாகியும் என் நினைவிலிருந்து அகலாததற்கு அதுவே காரணம்.

ஒரு கதை, அது சொல்லவந்த கருத்தால் நிற்கிறதா இல்லை எழுதப்பட்ட நேர்த்தியால் நிற்கிறதா என்று கேள்வி எழுப்பினால், இரண்டுமே தேவை என்றுதான் சொல்லுவோம். அதற்கான உதாரணங்களைக் காட்ட இராசேந்திரசோழனின் பல கதைகள் உதவக்கூடும். தமிழினி பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘இராசேந்திரசோழன் கதைகள்’ தொகுப்பில் மொத்தம் எழுபத்தி ஏழு கதைகள் அடங்கியுள்ளன. அடங்கியுள்ளன என்ற சொல்லைவிட இடம்பெற்றுள்ளன என்பதே சரி.

அடங்கிப்போனவை கதைகளாகவே ஆகமுடியாது என்பது என் எண்ணம். அடங்கிக்கிடக்கும் உணர்வுகளைத் தட்டியெழுப்பக் கூடியவைகளே கதைகள். எல்லாமே ரத்தினங்கள் என்று சொல்வதற்கில்லை. பொக்குகளும் புழுதிகளும் உண்டுதான். என்றாலும், மிகுதியை கணக்கிட்டே அபிப்ராயங்கள் அரும்புகின்றன. ‘புற்றில் உறையும் பாம்புகள்’ கதையின் இறுதி வாக்கியம் அக்கதையை மறக்க முடியாத கதையாக மாற்றிவிடும்.

‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே அய்யா, இதுதானய்யா கற்பு’ என்று புதுமைப்பித்தன் ‘பொன்னகர’த்தில் எழுதியிருப்பார். 1934ல் வெளிவந்த அக்கதை அப்போதைய மதராஸில் வறிய பெண் ஒருத்தி தன் கணவனைக் காப்பாற்றுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டதை நியாயப்படுத்தியது. அக்கதை வெளிவந்த சமயத்தில் எழுந்த எதிர்வினைகள் கற்பு குறித்த பார்வைகளை அகலச் செய்தன.

இத்தனை வருடங்களைத் தாண்டியும் அக்கதை உதாரணக் கதையாகக் காட்டப்படுவதற்கும், அக்கதைக்கு எழுந்த எதிர்வினைகளே காரணமென்பதை யாருமே மறுக்க மாட்டார்கள். கருத்தாலும் செய்நேர்த்தியாலும் ஒரு கதை கவனிக்கப்படுவதைப் போலவே அதற்கு எழும் எதிர்வினையும் அக்கதையைக் காப்பாற்றி இறவாமல் வைக்கிறது.

அதற்கும் நாற்பது ஆண்டுகள் கழித்து எழுதவந்த இராசேந்திரசோழன், தன் கதையின் இறுதி வாக்கியத்தை இப்படி முடிக்கிறார். ‘போமே சரிதான், இப்பத்தான் ஒரேயடியா காட்டிக்கிறா... பெரிய பத்தினியாட்டம்...” புதுமைப்பித்தனுக்கும் இராசேந்திரசோழனுக்கும் உள்ள கால இடைவெளியை கருத்திற்கொள்வதை விடுத்து கதையாக வாசித்தால் இரண்டுமே அதனதன் அம்சத்தில் சிறப்பானவை.

மதராஸில் வாழ்ந்த பெண்ணுக்கான கற்பிலக்கணமும், வட ஆற்காடு மாவட்டத்தில் வாழ்ந்த பெண்ணுக்கான கற்பிலக்கணமும் வெவ்வேறாகவே இருந்திருக்கின்றன. மட்டுப்படாத காமத்தோடு ஒரு பெண், எதிர்வீட்டு இளைஞன் குறித்து பேசிக்கொண்டிருப்பதை விளங்கிக்கொள்கிறான் கணவன். தன் மனைவியை அடக்கவும் அதட்டவும் அவனுக்கு பத்தினி எனும் சொல் பயன்படுகிறது. பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் அளவிடும் சொல்லாக கற்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. காலங்கள் கடந்தாலும்கூட கற்பின் கட்டுமானங்கள் அசைவதில்லை.

ஒரு பெண்ணை கேவலப்படுத்த அல்லது கேள்விக்குள்ளாக்க இன்றும் இல்லாத கற்புதான் ஏதுவாக இருக்கிறது. இராசேந்திரசோழனின் இந்தக் கதையை பெண்ணியவாதிகளால் ஏற்க இயலாது. ‘இவரெப்படி இடதுசாரி படைப்பாளராகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்?’ எனக் கேட்கலாம். ‘பெண்ணை கற்பு சார்ந்து கொச்சைப்படுத்தும் ஒருவனுடைய குரலை பதிவு செய்ததன் மூலம் ஆணாதிக்கம் அல்லவா வெளிப்படுகிறது?’ எனவும் சொல்லலாம்.

உண்மை அதுவே ஆயினும், அவருடைய கதைகளின் அசல் தன்மையே அதுதான். கருத்துக்காகவும் கொள்கைக்காகவும் எதார்த்தத்தை மீறி அவரால் எதையுமே எழுத முடிந்ததில்லை. கொள்கைகளும் கோஷங்களும் தேவைதான் என்றாலும், அதையே கட்டிக்கொண்டு அழவேண்டியதில்லை என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்திருக்கிறது. ‘உள்ளதை உள்ள படியே சொல்வதில்தானே இலக்கியமிருக்கிறது’ என்று அவரே ஒரு காலத்தில் சொல்லியிருக்கிறார்.

உள்ளதை உள்ளபடியே சொல்லக்கூடிய ஒருவர் இடதுசாரியாகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் இருக்கமுடியாது என அவர் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கமே அவர் மீது விமர்சனம் வைத்தது. மே தின மலருக்கு கதை கேட்ட கட்சிப் பத்திரிகை, அவர் எழுதி அனுப்பிய ‘சிறகுகள் முளைத்து’ என்னும் குறுநாவலை பிரசுரிக்க மறுத்துவிடுகிறது.

கட்சியின் கட்டுத் திட்டங்களுக்கு விரோதமானதாக அக்கதை பார்க்கப்பட்டு, பிரசுர தகுதியிழந்தது. பிறகு வெகுகாலம் கழித்து அக்குறுநாவலை ‘உதயம்’ என்னும் சிற்றிதழைத் தொடங்கி வெளியிட வேண்டிய நிலை இராசேந்திரசோழனுக்கு ஏற்பட்டது. ஒருவிதத்தில் அவர்களுடைய மறுப்புகள்தாம் எழுத்து குறித்து தீவிரமாகச் சிந்திக்க அவரைத் தூண்டியிருக்கிறது. ஒரு படைப்பாளன் புரட்சி குறித்தும் மக்கள் எழுச்சி குறித்தும் மட்டுமேதான் எழுதவேண்டுமா, கட்சிக் கட்டுப்பாடு அல்லது ஸ்தாபன விதிகளுக்கு உட்படாத எழுத்துக்கள் எழுத்துக்களே இல்லையா என்னும் கேள்வியோடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேறிவிடுகிறார்.

அதுவரை தன்னை ஆதரித்தவர்கள், திடீரென்று கைவிட்டு விட்ட நிலையில் எதையுமே அவரால் எழுத முடியவில்லை. ஒரு காலம்வரை அவரால் படைப்பிலக்கியத்தில் பங்கெடுக்கமுடியாமல் போய்விடுகிறது. படைப்பின் பாதைகள் சட்டென்று அடைபட்டுவிட்டால் ஒரு படைப்பாளனால் எந்த திசையில்தான் நகரமுடியும்? இயல்பாக விமர்சனங்களைத் தாண்டிச் செல்வது ஒருவகை. வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற தன்னைத் தயார்படுத்திக் கொள்வது இன்னொருவகை. இராசேந்திரசோழன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். என்னென்ன விமர்சனங்கள் அவர்மீது வைக்கப்பட்டதோ அதையெல்லாம் தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முனைந்தார்.

உலகெங்கும் படைக்கப்பட்டுவரும் முற்போக்கு இலக்கியங்கள் குறித்த ஆய்விலும் அப்போதுதான் இறங்குகிறார். இடதுசாரியாக அறியப்பட்ட அவர், இடதுசாரி இலக்கியத்தின் மீது முன்வைத்த விமர்சனங்கள் முக்கியமானவை. என்றாலும், அவருடைய விமர்சனங்கள் எதுவும் எதிர்த்தரப்பினருக்கு சாதகமானதாக அமையவில்லை. வீட்டுக்குள் இருக்கும் ஒட்டடைகளை அடிக்க வீட்டை கொளுத்துவதல்ல வழியென்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.

ஆகவே, அவர் மார்க்சிய கத்தி யைப் போலி மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகத் திருப்பினாரே தவிர மார்க்சியத்துக்கு எதிராகத் திருப்பவில்லை. இராசேந்திரசோழனை வெறும் கதாசிரியராக, நாவலாசிரியராகப் பார்ப்பதற்கில்லை. நான் அவரை அறிந்தபோது அவர் ‘தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சி’யில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அதே கட்சியில் நகரப் பொறுப்பு வகித்து வந்த என் அப்பாவின் தோழராகவும் அவர் இருந்தார்.

திண்டிவனத்தை அடுத்த மயிலத்தை வாழிடமாகக் கொண்டிருந்த அவர், அவ்வப்போது தஞ்சாவூர் வருவது வழக்கமாயிருந்தது. கட்சிப் பணிகள் தொடர்பாகவும் கட்சி ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பங்கேற்கவும் அவர் வருகிற போதெல்லாம் அவரைச் சந்தித்திருக்கிறேன். ‘அஸ்வகோஷ்’ என்னும் பெயரில் எழுதுபவரும் அவரே என்பதை அப்பா சொல்லித்தான் அறிந்துகொண்டேன். ‘கடவுள் என்பது என்ன?’, ‘சொர்க்கம் எங்கே இருக்கிறது?’, ‘சொர்க்கத்துக்குப் போவது எப்படி?’ போன்ற அவருடைய மார்க்சிய மெய்யியல் நூல்கள் அப்போது எனக்குப் புரியவே இல்லை.

கதையோ கவிதையோ எழுதுகிறவன், இதையெல்லாம் ஏன் படிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது. அதைவிட மார்க்சிய மெய்யியல் நூலை எழுதக்கூடிய ஒருவர் நல்ல கவிதையோ கதையோ எழுத வாய்ப்பில்லை என்றே நினைத்தேன். அதுமட்டுமல்ல, அவர் மேடையில் பேசும்போது ஒருமுறைகூட நான் கைதட்டியதில்லை.

“என்ன இந்த அஸ்வகோஷ் மாமா இப்படி அறுக்கிறார்..?’’ என்றே அப்பாவிடம் குறைபட்டுக்கொண்டேன். ‘‘அடே அவரு பேசுறது பெரிய விஷயம்டா, அத தெரிஞ்சுக்க நீ இன்னும் நிறைய படிக்கணும்...” என்பார். “ம்ஹும். இவரு பேசறதையே புரிஞ்சிக்க முடியலையாம். இதுல படிச்சிட்டு வேற புரிஞ்சிக்கணுமா...” என நக்கலடிப்பேன். நான் அப்படிக் கருதினாலும் அப்பாவும் அவரொத்த தோழர்களும் அவருடைய நூல்களை ஆழ்ந்து படிப்பார்கள். அவர் நூல்களை அவர்கள் பிரித்து மேய்ந்து விவாதிப்பது ஆச்சர்யமளிக்கும்.

சூரியனுக்குக் கீழுள்ள அத்தனை விஷயங்களையும் அலசக்கூடியவர் என்பதான தோற்றத்தை அவருடைய நூல்கள் ஏற்படுத்தின. கைத்தறி ஜிப்பாவும் தோள் பையுமாக வளையவந்த அவர், கதாசிரியர் என்பதைவிட அறிவுஜீவி என்கிற பிம்பத்திற்கு பொருத்தமாயிருந்தார். அவர் அணிந்துவரும் ஜிப்பாவை அவரே அவர் கைப்பட தைத்துக்கொள்வது என்று அப்பா சொன்ன நாளில், வரும் தீபாவளிக்கு அப்பா துணியெடுத்துத் தரமாட்டாரோ என்னும் அச்சம் கவ்வியது.
 

(பேசலாம்...)

www.kungumam.co

  • 2 weeks later...
Posted
 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 45

ஒருவரைப் பார்த்தவுடன் பிடிப்பது வேறு, பார்க்கப் பார்க்கப் பிடிப்பது வேறு என்பதுபோல அஸ்வகோஷ் என்கிற இராசேந்திரசோழன் மாமா, பார்க்கப் பார்க்க அல்ல, படிக்கப் படிக்க பிடித்துப்போனார்.முதலிலேயே அவருடைய கட்டுரை நூல்களைப் படிக்காமல் கதைத் தொகுப்புகளை வாசித்திருந்தால் ஆரம்பத்திலேயே பிடித்துப் போயிருப்பாரோ என்னவோ! அவருடைய கதைகள் இறுக்கமும் அடர்த்தியும் கொண்டவை என்று முன்பே சொல்லியிருக்கிறேன். ஆனாலும், கதாபாத்திரங்களின் குரலாக அவை அமைந்திருந்ததால் அவருடைய கட்டுரை நூல்களைவிட கதைத் தொகுதிகள் எளிய புரிதலுக்கு ஏற்புடையதாக இருந்தன.

‘புற்றில் உறையும் பாம்பு’களையோ, ‘கோணல் வடிவங்க’ளையோ இன்றைய புரிதலில் வேறாக அர்த்தப்படுத்திக்கொண்டாலும், அன்றைக்கும் அவை ஏதோ ஒருவிதத்தில் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். இப்போதுகூட அவருடைய நூல்களின் தலைப்பைச் சொன்னால் தலை சுற்றுகிறது. “ ‘மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி,’ ‘பின் நவீனத்துவம் பித்தும் தெளிவும்,’ ‘இந்தியம் திராவிடம் தமிழ்த்தேசியம்,’ ‘சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமை,’ ‘அணுசக்தி மர்மம் - தெரிந்ததும் தெரியாததும்,’ ‘அணுஆற்றலும் மானுட வாழ்க்கையும்’ ” போன்ற நூல்களின் தலைப்பை வாசித்தாலே அவர் எவை எவை குறித்தெல்லாம் சிந்தித்திருக்கிறார் என யூகிக்கலாம்.
12.jpg
அவர் எழுதியவை அத்தனையுமே அவசியமானவைதான். ஆனாலும், ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் ஏன் இதையெல்லாம் எழுதப் புகுந்தார் என்பதுதான் யோசனைக்குரியது. உலகையும் அரசியலையும் உள்வாங்கிக்கொள்ளாமல் எழுதக்கூடிய எந்த எழுத்துமே ஜீவனற்றவை எனச் சொல்லவே அவர் இவ்வளவையும் எழுதியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவர் காலத்தை விரயம் செய்து எழுதிய நூல்களின் வாயிலாக அவருடைய எழுத்தாளர் அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இராசேந்திரசோழன் இலக்கியத்திற்கு அளித்த பங்களிப்பைவிடவும் இதர சிந்தனைப் போக்குகளுக்கு செய்த பங்களிப்பே அதிகம் என்பதாக ஆகிவிட்டது.

உண்மையில், அதுகுறித்தெல்லாம் அவருக்கு எந்த விசனமும் இல்லை. இதையே தன்னுடைய ‘பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம்’ எனும் குறுநாவலில் சுய எள்ளலாக வெளிப்படுத்தியிருக்கிறார். “ஒருகாலத்தில் ஒரு லட்சிய வேகத்தில் காலராக் கண்டவன் பேதி மாதிரி நமது பண்டிதரிடமிருந்து தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்த எழுத்துகள் கொஞ்சநாள், மலச்சிக்கல் கண்ட மாதிரி இறுகி இடைபட்டு ஓர் இடைவெளிவிட்டுப் போயிருந்ததில் முன்னே மாதிரி இப்போது தனக்கு எழுதவருமா என்பது அவருக்கே சந்தேகமாயிருந்திருக்கிறது.

எழுதியே தீருவது என்றோ அல்லது சும்மாவாவது எதையாவது எழுதிப் பார்க்கலாமே என்றோ உட்கார்ந்தால்கூட அன்னாருக்கு முன்னே மாதிரி எழுத வருவதில்லை என்று தெரிகிறது” என அக்குறுநாவலில் அவரே அவரை சுய எள்ளல் செய்திருப்பார். திடீரென்று எழுத்து வறண்டு போனாலோ அல்லது எழுத முடியாத அளவுக்கு மென்டல் பிளாக் வந்தாலோ இப்போதும் நான் எடுத்து வாசிக்கும் குறுநாவல் அது. ஒரு எழுத்தாளனின் அக மற்றும் புறச் சிக்கல்களை அத்தனை பகடியுடன் விவரித்த வேறு ஒரு படைப்பை இதுவரை என்னால் கண்டடைய முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தேன் என்போமே அப்படியான சிரிப்பை வரவழைக்கக்கூடிய எழுத்துகள் அவை.

அந்தக் குறுநாவலைப் படிக்கும்போது சிரிப்பு வரவேண்டுமானால் கொஞ்சமாவது உங்களுக்கும் எழுத்து குறித்தோ, எழுத முடியாமல் போகும் சிக்கல் குறித்தோ தெரிந்திருக்க வேண்டும். குடும்பஸ்தனாகிவிட்ட ஓர் எழுத்தாளன், தன் கதையையோ, காவியத்தையோ எழுத என்ன பாடுபடுகிறான் என்பதே அக்குறுநாவலின் மையம். அதுவும் அவன் கொள்கை கோமானாக தன்னை நிறுவிக்கொள்ள ஆசைப்படுபவனாக இருந்துவிட்டால் அவ்வளவுதான். ஒருவரிகூட எழுத முடியாமல் தவிக்கும் நிலையில் அவன் ஏற்கனவே வாங்கிவைத்த பெயருக்கு களங்கம் வராதிருக்க என்னென்ன செய்கிறான் என்பதை அக்குறுநாவலில் விளாசியிருப்பார்.
12a.jpg
கதை நெடுக பண்டிதத் தமிழ் வாடை அடித்தாலும், வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம் கொடுக்கும் சொல்லாட்சிகள் நிறைந்திருக்கும். அதிலும் பண்டிதரின் இல்லக்கிழத்தியிடம் எடுக்கப்பட்டுள்ள நேர்காணல் தனிரகம். நானறிய நவீன தமிழ் இலக்கியப்பரப்பில் வெளிவந்த முதல் பகடி இலக்கிய நூலாக இதைக் கருதலாம். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அலைகள் வெளியீட்டகம் வெளியிட்ட அக்குறுநாவல் பற்றி ‘புதிய பார்வை’ இதழில் கவிஞர்.கல்யாணராமன் எழுதியிருந்தார். அதன்பின் கல்யாணராமனும் பேராசியரியராகி அவருமே தொடர்ந்து எழுதாதவராகப் போனாரென்பது பிற்சேர்க்கையாக சொல்லப்படவேண்டியது.

இராசேந்திரசோழன் எழுத்தின் பல தளங்களிலும் இயங்கியவர். ஆசிரியர் பணியின் ஊடே இலக்கிய ஈடுபாடும் அரசியல் ஈடுபாடும் கொண்டிருந்த அவர், 1970 முதல் 1985 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்தவர். அதன் பிறகு அக்கட்சியின் போக்குகள் மற்றும் நிலைப்பாடுகள் பிடிக்காமல் ஒத்த கருத்துடைய தோழர்களுடன் விலகி, ‘தமிழ்த்தேச பொதுவுடமைக்கட்சி’ என்கிற அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்கிறார். இதில் ஓர் இருபதாண்டு காலம். பிறகு அக்கட்சியிலிருந்தும் வெளியேற வேண்டிய நிலை.

பொதுவாக தலைமையின் ஜனநாயகமற்ற சர்வாதிகாரப் போக்குகளை அவரால் எந்தக் கட்டத்திலும் ஏற்க முடிந்ததில்லை. அவர் தன்னை ஒரு சுதந்திர எழுத்தாளராகக் கருதுவதில்லை. அவரளவில் கொள்கைகளைப் பற்றுக்கோடாக வைத்துக்கொண்டே பயணித்திருக்கிறார். ஆனாலும், அந்தப் பற்றும் வெறும் கோடாகத் தெரியும் தருணங்களில் அவரால் அதை ஏற்கவோ ஜீரணிக்கவோ முடியாமல் போயிருக்கிறது. சிறுகதை, நாவல், குறுநாவல் என்பதுடன் ஒருகட்டத்தில் அவர் எழுதியளித்த நாடக ஆக்கங்களை, ‘அஸ்வகோஷ் நாடகங்கள்’ என்னும் தலைப்பில் மங்கை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

அவரே சொல்வதுபோல, “நாடகம் என்பது நடிக்கப்படுவதற்காக எழுதப்படுகிறதே தவிர படிக்கப்படுவதற்காக எழுதப்படுவதில்லை. நடிப்பதற்கான பிரதி, படித்து நுகர்வதோடு மட்டுமே நின்றுவிடுமானால் அதற்கு இலக்கியத் தகுதி கிட்டுமே அன்றி நிகழ்த்துக்கலைக்கான தகுதி கிடைக்காது.” செஞ்சுடர் கலா மன்றம் சார்பிலும் தமிழ்க்  கலை இலக்கிய பேரவை சார்பிலும் அவருடைய நாடக ஆக்கங்கள் அத்தனையுமே மேடையேறின. ஒரு நாடகக்காரருக்கு நேரும் சகல சவால்களையும் எதிர்கொண்டு அவர் நிகழ்த்திக்காட்டிய ‘நாளை வரும் வெள்ளம், வெளியாரை வெளியேற்றுவோம், வட்டங்கள், விமோசனம், நாமிருக்கும் நாடு’ போன்றவை குறிப்பிடும்படியானவை.

தற்போது அந்நாடகப் பிரதிகள் புத்தகமாக்கப்பட்டாலும், நிகழ்த்தும்படியான சூழலை நினைத்து மட்டுமே பார்க்க முடிகிறது. 1978இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய இரண்டாவது மாநாட்டில், நண்பகல் இடைவேளையில் ‘சகஸ்மாலா’ என்னும் நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. புற சாதனங்கள் ஏதுமன்றி ஒரு பத்து நடிகர்கள் தங்கள் குரல் , உடல் அசைவுகளை வைத்துக்கொண்டு, உலகை உலுக்கிய சுரங்க விபத்தை அதிர்ச்சியூட்டும் விதத்தில் சித்திரித்திருக்கிறார்கள். அந்த சித்திரிப்பை உள்வாங்கிக்கொண்ட நொடியிலிருந்து தானுமே அப்படியான ஆக்கங்களை உருவாக்க எண்ணியிருக்கிறார். அதுமட்டுமல்ல, அவருடைய கதைகளில் மிகுதியாக வெளிப்பட்டவை உரையாடல் தொனி என்பதால் நாடகப் பிரதிகளை உருவாக்குவதில் அவருக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

அத்தோடு அதே ஆண்டு திண்டுக்கல்லை அடுத்த காந்தி கிராமத்தில், தில்லி தேசிய நாடகப்பள்ளி நடத்திய பத்து வார கால தீவிர பயிற்சிப் பட்டறையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். Theatre என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரடியான தமிழ்ச்சொல்லாக ‘அரங்க ஆட்டம்’ என்னும் சொல்லைத் தேர்ந்து கொடுத்தவர் அஸ்வகோஷே. நிகழ்த்துக் கலை குறித்து அவர் எழுதியுள்ள ‘அரங்க ஆட்டம்’ என்னும் நூலை நாடகக் கலைஞர்கள் தங்கள் கையேடாகக் கருதலாம். உலகப் புகழ்பெற்ற நாடகப் பிரதிகள் தமிழில் எத்தனையோ மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. என்றாலும், நாடகத் தோற்றம் குறித்தோ நாடக நாட்டிய சாஸ்திரம் குறித்தோ வெளிவந்ததில்லை.

வங்கம், மராத்தி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலுள்ள நாடகங்களை ஒப்பிட்டு, அதிலிருந்து தமிழ் நாடக முறைகள் எந்தெந்த விதத்தில் உடன்பட்டும், முரண்பட்டும் நிற்கின்றன என்பதை மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். அந்நூலில் எழுபதுகளில் அறிமுகமான நவீன நாடகப் போக்குகள் தமிழ்ச் சூழலில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தின என்பதை விவரித்திருக்கிறார். குறிப்பாக ந.முத்துசாமியின் ‘கூத்துப்பட்டறை,’ அ. மங்கையின் ‘மெளனக்குரல்,’ இளைய பத்மநாபன், வீ.அரசுவின் ‘பல்கலை அரங்கு,’ பிரளயனின் ‘சென்னைக் கலைக்குழு,’ பத்திரிகையாளர் ஞாநியின் ‘பரீக்‌ஷா,’ கே.ஏ.குணசேகரனின் ‘தன்னானே,’ மு.ராமசாமியின் ‘நிஜ நாடகக்குழு’ ஆகியவற்றை அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல புதுவையை மையமாக வைத்து இயங்கிவரும் ஆறுமுகம், ராஜு, வேலுசரவணன் பற்றியும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நாடகத்துறைப் பேராசிரியர் செ.ராமானுஜம் பற்றியும் பதிவு செய்திருக்கிறார்.  ‘அரங்க ஆட்டம்’ நூல் எத்தகைய தனித்துவமுடையது என்பதை திரைக் கலைஞர்கள் பலருக்கு பயிற்சியளித்துவரும் தம்பி சோழன் என்னைவிட நேர்த்தியாக விளக்குவார். இராசேந்திரசோழனின் எழுத்துகளில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால், அவரே அவர் எழுத்துகள் குறித்து நூலின் முன்னும் பின்னும் எழுதிவிடுவதுதான். இது முழுமையாக வந்திருக்கிறது, இதை நான் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என அவரே வாக்குமூலம் கொடுத்துவிடுவார்.

சிலசமயத்தில் அந்த வாக்குமூலத்திலிருந்து நாம் வேறுபடலாம். அல்லது மாறுபடலாம். ஏறக்குறைய பனிரெண்டு நாடகப் பிரதியை வழங்கியுள்ள அவர், தன்னுடைய நாடகங்களில் ‘விசாரணை’ மற்றும் ‘வட்டங்கள்’ மட்டுமே முழு நிறைவை அளித்ததாகச் சொல்லியிருக்கிறார். அந்நாடகங்கள் கட்டமைப்பிலும் வெளிப்பாட்டிலும் தீவிரமுடையவை எனச் சொல்லும் அவர், ஏனைய நாடகங்கள் அந்தந்த நேரம் சார்ந்தும் பயன் சார்ந்தும் எழுதப்பட்டவை என்கிறார். என்னளவில், இந்த தீர்மானங்களையும், முடிவுகளையும் அவர் அறிவிக்க வேண்டியதில்லை.

கதையானாலும் கட்டுரையானாலும் அவர் சொல்லியதற்கு அப்பாலும் விடுபட்டுப் போனவற்றை நேர்மையாகச் சொல்லிவிட எத்தனிக்கிறார். ஒரே நேரத்தில் எழுத்தாளனும், விமர்சகனும் அவரை உண்டு இல்லை என பண்ணிவிடுகிறார்கள். “அறிவை ஜனநாயகப்படுத்துவதொன்றே அதிகாரத்தை முறியடிக்கும்” என நம்பும் அவர், தன்னுடைய படைப்புகளில் வெளிப்படும் அதிகாரத்தையும் விமர்சனத்தால் வீழ்த்திவிட விரும்புகிறார்.படைப்பை அனுபவப் பாத்திகளில் நடாமல் விவாதத்தளத்தில் வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்.

கிணற்றில் வீசிய கல்லாக சில நிமிடம் சிற்றலைகளை ஏற்படுத்திவிட்டு பின் அமைதியாவதை படைப்பென்று கருதக்கூடிய மனநிலை அவருக்கு வாய்க்கவில்லை. அதே சமயத்தில் அவருடைய படைப்புகள் குறித்த பெருமிதங்களும் அவருக்கு இல்லாமல் இல்லை. அவ்வப்போது தனக்கு திருப்தியும் நிறைவுமளிக்கும் ஆக்கங்களை அவரே நினைவுபடுத்துகிறார். முழுத் தொகுப்பாக வெளிவந்துள்ள அவருடைய சிறுகதைகளில் தென்படும் ஏற்ற இறக்கங்கள் பற்றி அவரே பின்னுரையாக எழுதியிருப்பதை விமர்சன உரையென்றுதான் கொள்ள வேண்டும்.
 

(பேசலாம்...)

kungumam.co

Posted
 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 46

படைப்பூக்கம் மிகுதியாகக் காணப்பட்ட காலங்களில் எழுதப்பட்ட கதைகளையும், படைப்பூக்கம் ஓரளவு மட்டுப்பட்டிருந்த காலங்களில் எழுதப்பட்ட கதைகளையும் வகுத்தும் தொகுத்தும் இராசேந்திரசோழன் அலசியிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் செயல்பாட்டாளராக அவர் ஆனதற்குப் பிறகு அவரிடமிருந்து வெளிப்பட்ட கதைகள் தரவரிசையில் பின்னாலிருப்பது கவனிக்கத்தக்கது.

இக்கருத்தை வேறு யாராவது விவாதித்தால், ‘அப்படியில்லை. அவர் எப்போதுமே ஒரே தரத்தில்தான் எழுதிக்கொண்டிருந்தார்’ எனலாம். ஆனால், அப்படியில்லாமல் அவரே சொல்லும்போது அதை நம்மால் மறுக்கவோ எதிர்வாதம் செய்யவோ வழியில்லாமல் போய்விடுகிறது. தன்னுடைய படைப்புகளே சிறப்பானவை என்று அங்கிருந்தும் இங்கிருந்தும் மேற்கோள்களைக் காட்டி முட்டுக்கொடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், என்னுடையதில் இவை இவை போதாமையுடையன என விட்டுக்கொடுப்பதை இராசேந்திரசோழனிடம் மட்டுமே காணமுடியும்.
6.jpg
“சொல்லப்பட்ட செய்தியிலும் செய்நேர்த்தியிலும் தட்டித்தட்டி பொறுக்கிப் பார்த்து கனகச்சிதமாக செதுக்கப்பட்ட நெத்துப் பயிறுகள்...” என சில கதைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அந்த விதத்தில் அவர் ஓர் இருபது கதைகளை மட்டுமே ஆகச் சிறந்த கதைகளாக அறிவிக்கிறார். மீதமுள்ள கதைகளில் சில இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டியவை என்றும், வலுவாகச் சொல்லியிருக்க வேண்டியவையில் வேக்காடு குறைந்துவிட்டதாகவும் குறைப்பட்டிருக்கிறார்.

நன்னிப்பயிறாக சில கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு, “நன்னிப்பயிறுகள் விதைக்கு உதவாது. என்றாலும், தின்பதற்கு ருசி...” என்று சொல்லியிருக்கிறார். கதைகள் இலக்கிய ருசியோடும் இலக்கிய சாரத்தோடும் அமையப்பெறும். அதே வேளையில், பொதுவெளியிலும் அறிவுத் தளத்திலும் விவாதங்களை ஏற்படுத்தவேண்டுமென அவர் சிந்தித்திருக்கிறார். 77 கதைகளில் நான்கோ ஐந்தோ கதைகள்தான் தொழில்முறை விலைமாதர்கள் பற்றியவை. அப்படியிருந்தும் யாரோ ஒரு விமர்சகர், தன்னை தரந்தாழ்ந்து விமர்சித்தார் என்பதைக்கூட வெளிப்படையாகச் சொல்லிச் செல்லும் இராசேந்திரசோழன், தம்மைப் புகழ்பவர்களையும் சந்தேகத்துடனே அங்கீகரிக்கிறார்.

“என்னைப்பற்றித்தான் எனக்கே தெரியுமே... நீங்கள் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்பதே அவருடைய படைப்பு மனம். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘மனப்பத்தாயத்’திற்கு யார் யாரிடம் அணிந்துரை வாங்குவது என்று யோசித்தபொழுது இரண்டு பெயர்களை என்னால் தவிர்க்கமுடியவில்லை. கருத்து ரீதியாக ஞானக்கூத்தனிடம் எனக்கு மாறுபாடு உண்டென்றாலும் அவரையும் இராசேந்திரசோழனையும் என்னால் தவிர்க்க இயலவில்லை.
6a.jpg
கருத்து ரீதியாக என்னை அப்போது ரொம்பவும் கவர்ந்திருந்த எழுத்தாளராக இராசேந்திரசோழனே முன்னிருந்தார். அப்பாவின் தோழர் என்பது கூடுதல் காரணமாயிருக்கலாம். அக்காலத்தில் ‘தமிழர் கண்ணோட்டம்’ என்னும் இதழில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த கட்டுரைகளின் வழியேதான் அரசியல் பாடங்களைக் கற்றுக்கொண்டிருந்தேன்.

அந்தப் பாடத்தை இன்னமும் நான் முழுதாகக் கற்கவில்லை என்பது வேறு விஷயம். ஒருவேளை முழுதாகக் கற்றிருந்தால் நானுமே படைப்பூக்கத்திலிருந்து வேறு வேறு அரசியல் செயல்பாட்டில் இறங்கியிருப்பேனோ என்னவோ. எல்லா நன்மையிலும் தீமையுண்டு என்பதைப்போல எல்லா தீமையிலும் நன்மை இருக்கிறது. தனக்கு நன்மையும் சமூகத்திற்கு தீமையும் விளையக்கூடிய ஒன்றை மட்டும் எந்நாளிலும் செய்துவிடக்கூடாது.

முதல் கவிதைத் தொகுப்புக்கான வேலைகள் மும்முரமாக தொடங்கியபோது, ‘ராஜரிஷி’ என்னும் அரசியல் வார ஏட்டில் உதவி ஆசிரியனாகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். கவிதைகள் என்று நான் நம்பி வைத்திருந்த காகிதங்களில் இது இது மட்டுமே கவிதை என தேர்ந்தெடுத்துக் கொடுத்த பெருமை வித்யா ஷங்கருக்குரியது. ‘நக்கீரன்’ துரை என்று அழைக்கப்பட்ட அவர், வித்யா ஷங்கர் என்னும் பெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். ‘சந்நதம்’ என்னும் தலைப்பில் வெளிவந்த அவருடைய கவிதைத் தொகுப்பு அப்போதும் என் அபிமானத்துக்குரிய கவிதைகளைக் கொண்டிருந்தன.

மனப்பாடம் செய்து அக்கவிதைகளை அவரிடம் சொல்லி நன்மதிப்பைப் பெற்றிருந்தேன். இராசேந்திரசோழனிடம் அணிந்துரை பெறலாம் என எண்ணியதை அப்பாவிடமும், ஆசிரியர் துரையிடமும் பகிர்ந்துகொண்டேன். இருவருமே ஏக பெருமிதத்துடன் என் விருப்பத்தை வழிமொழிந்தார்கள். மின்னஞ்சல் வசதியெல்லாம் அப்போது கிடையாது. எது ஒன்றையும் தபால் மூலமோ தந்தி மூலமோதான் தெரிவிக்கவேண்டும். இராசேந்திரசோழனிடம் என் தொகுப்பு குறித்த விவரங்களைச் சொன்னதும் அவரும் அகம் மகிழ்ந்து அணிந்துரை தர ஒப்புக்கொண்டதை அப்பாவே தொலைபேசியில் தெரிவித்தார்.

மயிலம் முகவரிக்கு கவிதைகளை அஞ்சல் செய்யச் சொன்னதாக அப்பா சொன்னபோதும் எனக்கென்னவோ அது அவ்வளவு சரியாகப்படவில்லை. நானே அவரை நேரில் பார்த்து கவிதைகளைத் தந்து விடுவதாகச் சொல்லி திண்டிவனத்திற்கு பஸ் ஏறினேன். அவர் வீட்டுக்கு நான் போனபோது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. கதைகளில் நான் படித்திருந்த மயிலம் நேரிலும் அப்படியேதானிருந்தது. இராசேந்திரசோழனின் கதைகளை ஊன்றிப் படித்தால் மயிலத்தின் வரைபடம் கண்முன்னே விரியும்.

தி.ஜானகிராமனை வாசிக்கையில் எப்படி கும்பகோணத்தின் சுற்றுவட்ட ஊர்கள் விரியுமோ அப்படி. காவிரிக்கரையும் அக்ரகாரத் தெருக்களும் அட்சரம் பிசகாமல் தி.ஜா.வின் எழுத்துக்களில் தென்படுவதைப்போலவே வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டத்தின் தெருக்களையும் மனிதர்களையும் இராசேந்திரசோழனின் கதைகளில் காணலாம்.

நடுநாட்டு இலக்கிய கர்த்தா ஒருவரைச் சந்திக்கப் பயணிக்கிறோம் என்ற கெக்களிப்பில் வெயிலும் வேர்வையும் ஒருபொருட்டே இல்லையென்று வீடு சேர்ந்த என்னை அவர் புன்முறுவலோடு வரவேற்றார். அப்பா தொலைபேசியதையும் தொகுப்பு தயாராவது குறித்த மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார். இரண்டொரு நாளில் எழுதி அனுப்புகிறேன் என்றார்.

சொன்னதுபோலவே நான்காவது நாள் அவருடைய அணிந்துரை தபாலில் வந்து சேர்ந்தது. ‘கூட்டை உடைத்துக்கொண்டு’ என்னும் தலைப்பில் அவர் எழுதி அணுப்பிய அணிந்துரை உண்மையாக, என் எழுத்துலக விஜயத்திற்கு அணி செய்வதாக அமைந்தது. சிறுவயது முதலே என் எழுத்து முயற்சிகளைக் கண்ணுற்றிருந்த அவர், “கவிதையுலகில் தனக்கென ஓர் அடையாளத்தைப் பதிக்கவும், அதன்வழி அவ்வுலகில் தன்னுடைய பயணத்தைத் தொடரவும் விழையும் ஒரு படைப்பாளியின் நம்பிக்கை மிகுந்த வெளிப்பாடுகளாகவே இக்கவிதைகள் தென்படுகின்றன.

இவ்வெளிப்பாட்டின் பக்குவப்பட்ட சொல்லாட்சியே இவைகளைக் கவிதைகளாகவும் ஆக்குகின்றன...” என்று எழுதியிருந்தார். “உயிர்த்துடிப்பற்ற யந்திரத்தனமான கட்சி வாழ்க்கையில் தந்தையின் பங்குபற்றி ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடாக, ‘வணக்கம் காம்ரேட்’ கவிதை வந்திருக்கிறது...” எனவும் அவ்வணிந்துரையில் எழுதியிருந்தார். அக்கவிதை குறித்து மிக மென்மையாக அப்பாவிடம் கோபித்துக்கொண்ட தோழர்கள் என் நடவடிக்கையில் அச்சம் கொண்டிருந்ததை நூல்வெளியீட்டில் வெளிப்படுத்தினார்கள்.

அப்பாவைப் பற்றிய என்னுடைய விமர்சனம், அப்பா அப்போது சார்ந்திருந்த கட்சித் தோழர்களுக்கு உசிதமாகப்படவில்லை. அப்பா மீதான விமர்சனத்தை, அவர்கள் மீது வீசிய கணையாக எடுத்துக்கொண்டார்கள். சுதந்திர சிந்தனைகளோடு வளரக்கூடிய ஒருவனின் செயலூக்கமுள்ள கவிதையாக அவர்கள் அக்கவிதையைப் பார்க்கவில்லை.

புரட்சிக்கு எதிரான மனமுடைய ஒருவனை தோழர் மகனாகப் பெற்றுவிட்டாரே என அப்பா மீதுதான் அனுதாபப்பட்டார்கள். வேறு வழியே இல்லாமல் அவரும் அதை ஏற்கவேண்டியதாயிற்று. இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இராசேந்திரசோழனை வாசிக்கும்போது, சிறிய அளவில் எனக்கேற்பட்ட சம்பவங்கள் அவருக்கும் ஆரம்பகாலத்தில் ஏற்பட்டதை அறியமுடிகிறது.

எதிர் விவாதம் செய்யக்கூடிய அறிவோ ஆற்றலோ அப்போது எனக்கில்லை என்பதால் நான் என்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எளிதாகக் கடந்துவிட்டேன். ஆனால், இராசேந்திரசோழனோ தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தர்க்கத்தோடும் நியாயத்தோடும் தகர்த்தெறியத் துணிந்திருக்கிறார். போலி இலக்கிய, அரசியல் விமர்சனங்களை அவரால் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடிந்ததில்லை. புரட்சி என்னும் சொல்லை வறட்டுத்தனமாகப் பயன்படுத்திய மார்க்சியவாதிகள் மீது அவருக்கு ஏற்பட்டது அளப்பரிய வருத்தம்.

அந்த வருத்தத்தின் விழைவே அவரை இத்தனை நூல் எழுத வைத்திருக்கிறது. ‘திராவிடம், தமிழ்த் தேசியம், மார்க்சியம்’ என்னும் நூலில் மூன்றுக்குமுள்ள பொருத்தப்பாடுகளை அவர்போல் இன்னொருவர் எளிதாக விளக்கியதில்லை. ‘அம்பேத்கரின் சாதி ஒழிப்பு - சில சிந்தனைகள்’ என்னும் நூலில் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியது ஏன் என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

“மதமே சாதியை நிலைத்திருக்க வைக்கிறது என்பது உண்மையெனில், அதை விட்டொழிக்க அல்லது விலகியிருக்க எண்ணாமல் இன்னொரு மதத்தைத் தழுவிக்கொள்வது எப்படி சரியாகும்..?” எனக் கேட்டிருக்கிறார். “இந்து மதத்திற்கு எதிராக புத்த மதத்தைத் தழுவுவதைவிட இந்து மதத்திலேயே இருந்துகொண்டு இந்துமதத்திலுள்ள சிக்கல்களைக் களையவேண்டும்...” என்றிருக்கிறார். அதுமட்டுமல்ல, மதங்களிலேயே ஜனநாயகமுடைய மதமாக அவர் இந்துமதத்தைத்தான் பார்க்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் அதிலிருந்து வெளியேறினால் அதைவிட ஜனநாயகமுடைய மதம் என்ன இருக்கிறது என்பதுதான் அவருடைய கேள்வி. கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல மிக ஜாக்கிரதையாக அவ்விஷயத்தைக் கையாண்டிருக்கிறார். மார்க்சியவாதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஒருவர், இந்துமத சார்பு நிலையை எடுப்பதிலுள்ள சங்கடங்களையும் அந்நூலில் சொல்லாமல் இல்லை. இடையிடையே இப்படி நினைக்கக்கூடாது, அப்படி நினைக்கக்கூடாது என அவரே அணையையும் கட்டிவிடுகிறார். அந்நூலை வாசிக்கும்போது இவர் சொல்வது சரிதானே என்பதுபோல் இருந்தாலும், புத்தகத்தைக் கீழே வைத்ததும் ஏதோ நெருடுகிறது.
 

(பேசலாம்...)

kungumam.co

Posted
 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 47

“மதமே கூடாது என்று சொன்னால் அப்படிச் சொல்பவர்கள் எல்லாம் ஒன்று சேர, மற்றொரு மதம் உருவாகும் வாய்ப்பிருக்கிறதே..?” என்கிறார் இராசேந்திரசோழன். “இந்து மதத்திற்கு மாற்றாக புத்த மதம் இருந்திருந்தால் அது இத்தனை ஆண்டுகளில் இந்தியா முழுக்கவே பரவி இருக்காதா?” எனக் கேட்கிறார். இன்றைய இந்தியாவில், குறிப்பாக பாரதிய ஜனதாவின் ஆட்சிக்குப் பிறகும், அவரால் இப்படி எழுத முடிவது வியப்பளிக்கிறது. ‘‘இந்து மதம் பிரச்னையில்லை. இந்துத்துவவாதிகளே பிரச்னை!’’ என்கிறார். “தலித் விடுதலை என்பது சனாதன தர்மத்துக்கு வெளியே இல்லை. உள்ளேதான் இருக்கிறது.
4.jpg
வெளியே போய் மல்லுக்கட்டுவதைவிட உள்ளே இருந்து தூய்மை செய்யலாமே...” என்கிறார். இந்து மதத்தை தூய்மைப்படுத்துவதோ இன்னபிற மதங்களைத் தழுவிக்கொள்வதோ அவரவர் விருப்பம் சார்ந்தது. அம்பேத்கர், தான் கண்டடைந்த வழியைக் காட்டியிருக்கிறார். அதில் ஏற்பும் இருக்கலாம். மறுப்பும் இருக்கலாம். இராசேந்திரசோழன் தம் கருத்தை ஏற்கும்படியான விதத்தில் விவாதிக்கிறார். ஆனால், நிகழும் சமூக அவலத்தை முன்வைத்து யோசிக்கும்பொழுது எல்லா விவாதங்களும் அடிபட்டுப்போகிறது.

முற்று முழுக்க சாதிய சமூகமாக மாறிவிட்ட இந்தியச் சூழலில், சாதிக்கான மாற்றைத் தேடுவதே வீண் வேலை என்பதுதான் அவர் சொல்ல வருவது. மார்க்சியத்தைக் கற்றறிந்த அவர் முன்வைக்கும் வாதங்கள் மண்ணுக்கு ஏற்றவையாக இல்லை என்று தள்ளிவிட வேண்டியதில்லை. இன்னும் சிலகாலம் கழித்து அவரே வேறு ஒரு மாற்றைச் சொல்லக்கூடும். “அம்பேத்கரின் சிந்தனைகளைக் கேள்விக்குள்ளாக்குவதா, அவரது கருத்துகளுக்கே மறுப்பா என்கிற உணர்ச்சி வசப்படல்களுக்கு ஆளாகாமல் நிதானத்துடனும் பொறுப்புடனும் நூலை விவாதித்துச் செயல்படும்படி...” முன்னுரையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவர் என்ன வேண்டுகோளை வைத்தாலும் மதமாற்றமே தீர்வு என எண்ணுபவர்கள் அல்லது புரிந்துகொண்டவர்கள் உணர்ச்சிவசப்படாதிருக்க வாய்ப்பில்லை. மிக எளிதாக இராசேந்திரசோழனை அவர்கள் கூண்டிலேற்றலாம். ஒரு தலித்தாக இருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் இந்து மதத்தின் நெருக்கடிகளை உணரமுடியும். போகிற போக்கில் சாதி சமத்துவத்தை பேசிவிட முடியாதே. வேதங்களிலும் சாத்திரங்களிலும் சொல்லப்பட்டதைத்தான் இந்துத்துவவாதிகள் கையிலெடுக்கிறார்கள். அப்படியிருக்க, இந்துமதத்தைவிட்டு ஏன் வெளியேற வேண்டும் என்பது தப்பிக்க நினைப்பவனை தலையைப் பிடித்து முக்கி மீண்டும் தண்ணீரிலேயே மூழ்கடிப்பதற்குச் சமம் என்றே கருதுவார்கள்.

இராசேந்திரசோழனைப் பொறுத்தவரை விவாதங்களுக்கான வித்தை ஊன்றுவதையே தன் வேலையாகக் கொண்டவர். மறுப்பும் ஏற்பும் எப்படியானாலும் அதை நிதானமாக எதிர்கொள்ளப் பழகியவர். தன்னுடைய வாதமே சரியென்று பக்கவாதமோ முடக்குவாதமோ செய்பவர் அல்ல அவர். ஏற்புடையதெனில் தம் கருத்தே ஆனாலும் திரும்பப்பெற்றுக்கொள்வார். ‘தமிழ்த்தேச மார்க்சியக் கட்சி’ என்னும் அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் ‘மண்மொழி’ என்னும் தமிழ்த்தேசிய விழிப்புணர்வு இதழை தற்போது நடத்தி வருகிறார். ‘பகுத்தறிவின் மூட நம்பிக்கைகள்’ என்னும் தலைப்பில் அவ்விதழ் வெளியிட்டுள்ள சிறு கையேட்டை சில நாட்களுக்கு முன் வாசிக்க நேர்ந்தது.

சாங்கியன் என்னும் பெயரில் வெளிவந்துள்ள அச்சிறு கையேடு, ‘இந்துமதத்திலுள்ள மூடநம்பிக்கைகளை விமர்சிப்பவர்கள் ஏன் ஏனைய மதங்களிலுள்ள மூடநம்பிக்கைகளை விமர்சிப்பதில்லை’ என்கிறது. ‘மூடநம்பிக்கை எல்லா மதத்திலும் இருக்கின்றபொழுது இந்துமதத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குவது, குழப்பத்தை விளைவிப்பதாக’க் கூறுகிறது. ‘சந்தர்ப்பவாத நாற்காலிக் கட்சிகள், எந்தப் பிரச்னையிலும் அடியோட்டமாக எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யாமல் மேலோட்டமான படாடோபமான போலித்தனமான காரியங்களில் ஈடுபடுவதாக’க் குற்றம் சாட்டுகிறது.
4a.jpg
‘எது மேலோட்டம், எது அடியோட்டம் என்பதை பகுத்தறிவின் துணையுடன் பார்க்கவேண்டுமே அல்லாது, எடுத்தேன் கவிழ்த்தேன் என்னும் நிலை மாற்றங்களுக்கு உதவாது’ என அச்சிறு வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இராசேந்திரசோழனின் கதைகளில் வரும் பெண்கள் சமகால பெண்களைப் போல புரட்சியோ கலகமோ செய்பவர்கள் இல்லை. கணவனே மாதர் சங்கக் கூட்டங்களுக்கு அனுப்பினாலும் அங்கேயும் செல்ல அவர்களுக்கு நகை நட்டு தேவைப்படுகிறது. ஊர்வலத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ளும் மாதர் சங்க உறுப்பினர்களும் பிரதிநிதிகளும் கழுத்து நிரம்ப போட்டுவரும் நகைகளைக் கண்டு தனக்கு ஏன் இதெல்லாம் கிடைக்கவில்லை என ஏங்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், அவருடைய கட்டுரைகளோ பெண்கள் சமூகம் மதிப்பீடுகள் குறித்து விவாதிக்கின்றன. பெண்ணுக்கான பொருளியல் சுதந்திரத்தையும், பாலியல் சுதந்திரத்தையும் பேசுகின்றன. எது சர்வாதிகாரம், எது ஜனநாயகம் என்பதை பெண்களின் கண்கொண்டு பார்க்கின்றன. புரட்சி, முற்போக்கு என்பதெல்லாம் தொழிற்சங்க அரங்கில் ஊக்கத்தொகை, பஞ்சப்படி சார்ந்து சுருங்கிப் போகிறதே தவிர, மற்றபடி பாலுறவு சார்ந்த, பெண் சார்ந்த சிந்தனைகளில் இவர்களிடம் எவ்வித முற்போக்கும் புரட்சியும் இல்லை என்கிறார் பொது சமூகத்திடமிருந்து கற்பிதங்களை உள்வாங்கிக்கொண்ட புரட்சிக்காரர்கள், தன்னளவில் செய்துகொள்ள வேண்டிய சோதனைகள் எவை எவை என்பதையும் அந்நூலில் குறித்திருக்கிறார்.

பண்பாட்டு கட்டமைப்பையே அசைத்துவிடும் ஆபத்து நிறைந்ததாக அக்கட்டுரைகளை சிலர் கருதலாம். ஆனால், அவருடைய விருப்பமே அதுதான் என்பதை மறுப்பதற்கில்லை. “இந்தியா என்பது தேசமே அல்ல. அது பல தேசங்களின் ஒன்றியம்...’’ என்பதை சின்னவயதில் அவர் பேசக் கேட்டிருக்கிறேன். ‘‘பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையே நாம் கோருவது” என, அவர் அடித்தொண்டை வறள முழங்கிய காலங்களாக தொண்ணூறுகள் இருந்தன. “மாநில சுயாட்சி, முதலாளி வர்க்கத்தை காக்கும் பாசிச அரசு...” என அவர் அப்போது உதிர்த்த சொற்களின் அர்த்தங்கள் எல்லாம் இப்போதுதான் புரிகின்றன.

இருபத்தைந்து வயதில் எழுதத் தொடங்கியவர் எழுபதுகளின் பிற்பகுதிவரை என்னென்ன எழுதியிருக்கிறார் என்பதை ஆய்ந்துசொல்லும் பக்குவம் எனக்கில்லை. ஆனால், அவர் எழுதியதை எல்லாம் ஆவேசத்தோடு படித்து வந்திருக்கிறேன். மாறுபாடுடைய கருத்துகளை அவர் எழுதினாலும் கூட அதை அக்கறையோடு புரிந்துகொள்ள ஆர்வப்பட்டு ஆகர்ஷித்திருக்கிறேன். கற்பனைகளில் சஞ்சரிப்பவனே எழுத்தாளன் என்னும் பிம்பத்தை உடைத்தெறிந்த எத்தனையோபேரில் அவரும் ஒருவர். என் வருத்தம், அவர் படைப்பிலக்கியத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதுதான்.

வாசகனை நேரே நிறுத்தி கதை சொல்லும் அவருடைய பாணி தனித்துவமானது. காட்சிபூர்வமான விவரணைகளை எந்த இடத்திலும் அவர் தவிர்ப்பதில்லை. உரையாடலை மிகுதியாகப் பயன்படுத்தினாலும்கூட தேவைக்கு அதிகமாக அக்கதாபாத்திரங்கள் பேசுவதில்லை. உட்கார்ந்து ஒரே மூச்சில் எழுதப்பட்ட கதைகளைப் போலவே எல்லாமும் இருக்கின்றன. ஆவேசப் பெருக்கோடு படைப்பை அணுகக்கூடிய தருணங்களை அவருடைய படைப்புகள் நமக்கு வழங்குகின்றன. இவ்வளவு நேர்த்தியான கதைசொல்லி எழுபத்தி ஏழு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார் என்பது என் வருத்தம் மட்டுமல்ல, அவரை வாசித்த அனைவரின் வருத்தமும் அதுவாகத்தானிருக்கும்.

கட்சி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் படைப்பாளன், படைப்பிலக்கியத்திலிருந்து வெகுதூரம் விலகி சென்றுவிடக்கூடிய அபாயத்தின் சாட்சியாக அவர் இருக்கிறார். என்றாலும், வெறுமனே அவர் பொழுதைப் போக்கிக்கொண்டிராமல் இயங்கியிருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட சமூகப் பொறுப்பிலிருந்தும் சமூக அக்கறையிலிருந்தும் நொடிப்பொழுதுகூட அவர் சும்மா இருக்க எண்ணவில்லை என்பதையே அவருடைய எழுத்துகள் சொல்கின்றன. மிகக் குறிப்பாக என்னைக் கவர்ந்த அவருடைய முக்கியமான நூல், ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைதானா’ என்பது. அந்நூலில் அவர் அடுக்கி அடுக்கி கருத்துகளை விவாதிக்கும் விதம் அற்புதமானது.

“புரட்சிக்குப் பிறகான பாட்டாளி வர்க்கம் இடைக்காலத்தில் சர்வாதிகாரத்தை தன் பாதையாகக் கொள்ளலாமே தவிர அதுவே நிலையாகிவிடக் கூடாது. அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதல்ல புரட்சியின் வேலை. எனவே, முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும்...” என்றிருப்பார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கூற்றுக்களிலிருந்தே அவ்விவாதத்தை அவர் நடத்திச்செல்வது ஆரோக்கியமான புரிதலை நமக்குள் ஏற்படுத்தும். “சமூகத்தின்மேல் இதுவரை செல்வாக்கு செலுத்திவந்துள்ள தத்துவங்களில் மனித குலத்தை வதைக்கும் ஒடுக்கு முறைகளிலிருந்தும் அடிமைத்தளைகளிலிருந்தும் விடுவிக்க அறிவியல் பூர்வமாக வழிகாட்டும் ஒரே மகத்தான தத்துவம் மார்க்சியம் மட்டுமே” என்றிருப்பார். 

சோவியத்தின் வீழ்ச்சியை மார்க்சியத்தின் வீழ்ச்சியாகச் சொல்பவர்கள் உண்டு. அப்படிச் சொல்கிறவர்களை மார்க்சிய விரோதிகளாகப் பார்க்காமல் அவர்கள் புரிதலில் ஏற்பட்டுள்ள கோளாறை நிவர்த்தி செய்யும் விதத்தில்தான் அந்நூலை எழுதியிருப்பார். ஒரு படைப்பாளனுக்கு பாட்டாளி வர்க்க சிந்தனை இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது இப்போது ஒரு பிரச்னையே இல்லை என்ற நிலையில்தான் இராசேந்திரசோழனின் படைப்புகள் அதிகமும் கவனம் பெறுகின்றன. நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுச் சூழலை பத்து பத்து ஆண்டுகளாகப் பிரித்துக்கொண்டால் எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர்களில் பலர் இன்று என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

வெவ்வேறு சிந்தனைப்போக்குடைய அவர்கள் கட்சி அரசியலிலும் கள செயல்பாட்டிலும் ஈடுபாடு காட்டியதால் தங்கள் படைப்பின் ஆதார சுருதிகளை இழந்தவர்களானார்கள். எண்பது, தொண்ணூறுகளில் எழுத வந்தவர்கள் தத்துவங்களிலிருந்து விலகி தன்னுணர்வுகளில் விழுந்தார்கள். இரண்டாயிரத்தை சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் எங்கே விழுவது எனத் தெரியாத இடத்திலெல்லாம் விழுந்துகொண்டிருக்கிறார்கள். உலகமயமாக்கலுக்குப் பின் சந்தைகள் பெருகிவிட்டன. வணிகமும் நுகர்வும் மலிந்துவிட்டன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனத் தெரியாமல் இந்த வணிகத்திலும் நுகர்விலும் படைப்புலகமும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

எழுத்து என்பது காகிதத்திலிருந்து கணினிக்கு இடம்பெயர்ந்தது போலவே சிந்தனைகளும் அவசரகால சந்தைக்கு சரக்குகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன. வாழ்க்கையை கற்பனை மயமான புத்தகங்களில் படித்து பிரேமை கொண்டிருந்த ஒரு சமூகம், கள எதார்த்தத்தை இப்போதுதான் சந்திக்கிறது. இந்தச் சந்திப்பில் எழுதினால் என்ன வரும், எவ்வளவு தேறும் என்பது பிரதான கேள்வியாக வைக்கப்படுகிறது. எதையும் தருவதல்ல எழுத்து, எல்லாவற்றையும் சிந்திப்பதற்கான சக்தியை ஏற்படுத்துவதே எழுத்தின் அடிப்படை. எப்படி சொல்கிறீர்கள் என்றால், ஒரே ஒரு வாக்கியத்தில் விடையளிக்கலாம். எல்லோரும் இராசேந்திரசோழனின் நூல்களை ஒரே ஒருமுறை வாசியுங்கள். அவரை எனக்குத் தெரியும் என்பதால் அல்ல. எல்லோரையும் அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதால்.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 48

காலம், களம், சூழல் இவை மூன்றும் ஒருங்கே அமையப் பெறாதவர்கள், எந்தத் துறையிலாவது கவனத்தை ஈர்த்திருக்கிறார்களா என யோசிக்கலாம். உரிய காலமும், உரிய களமும், உரிய சூழலும்தான் ஒருவரை முன்னோக்கியோ, பின்னோக்கியோ நகர்த்துகிறது. இந்து மதத்திற்கு மாற்றாக புத்தர் தம்மத்தை நிறுவியதும், தென்னாப்பிரிக்காவில் பயின்றுவந்த காந்தி, வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியதும்கூட மேற்கூறிய மூன்றையும் உள்ளடக்கியே புரிந்துகொள்ளப்பட வேண்டியவை.

காலத்திற்கோ, களத்திற்கோ, சூழலுக்கோ ஒவ்வாத விஷயத்தில் ஈடுபடுகிறவர்கள், எத்தனை ஆற்றலுடையவர்களாக இருந்தாலும் கவனம் பெறுவதில்லை. சம்பந்தப்பட்டவர்களின் உழைப்பிலும் உறுதியிலும் சிக்கல் இல்லை. என்றாலும், அவர்கள் தம் பணியை எங்கிருந்து தொடங்குகிறார்கள் என்பது முக்கியமானது. ஆச்சாரமான ஸ்ரீரங்கத்து அய்யங்கார் குடும்பத்தில் பிறந்த ஒருவர், திராவிட இயக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் தன்னையும், தன் எழுத்துகளையும் அறியச் செய்திருக்கிறார் என்பது எளிதான காரியமில்லை.
3.jpg
கவிஞர் வாலி என்று அழைக்கப்பட்ட அவர், காவியக் கவிஞரென்றும், வாலிபக் கவிஞரென்றும் போற்றப்படுபவர். தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் அதிகப் பாடல்கள் எழுதியவராகவும் அவரைச் சொல்லலாம். காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டதிலும், களத்திற்கேற்ப தன்னை தயாரித்துக்கொண்டதிலும், சூழலுக்கேற்ப நடந்துகொண்டதிலும் அவருக்கு நிகர் அவர்தான். அவர் யாரைப் பின்பற்றி எழுத வந்தார் என்பது தவிர்க்கப்பட வேண்டிய கேள்வி. தனக்கு முன்னால் இருந்த அத்தனை படைப்பாளிகளையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.

புதுக்கவிதையின் பிதாமகன் என்று சொல்லப்படும் ந.பிச்சமூர்த்தியிடமே அவர் தன் முதல் கவிதையைக் காண்பித்திருக்கிறார். அப்போது ஸ்ரீரங்கக் கோயில் நிர்வாக அதிகாரியாக ந.பிச்சமூர்த்தி பணிபுரிந்து வந்திருக்கிறார். யாரோ ஒரு பொடியன் கவிதை என்னும் பெயரில் எதையோ காட்டுறானே என எண்ணாமல், வாலியின் கவிதையைப் படித்துவிட்டு வாழ்த்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ‘தமிழ் உனக்குச் சோறு போடும். தொடர்ந்து எழுது...’ என்றும் சொல்லியிருக்கிறார்.

அப்படிச் சொன்ன ந.பிச்சமூர்த்திக்கு தமிழ் சோறு போட்டதாகத் தகவல் இல்லை. என்றாலும், ஏன் அவர் வாலியிடம் அவ்வாறு சொன்னாரென்பது ஆராயத்தக்கது. ‘தமிழ் உனக்குச் சோறு போடும்...’ என வாலிக்குச் சொன்ன இன்னொருவர் கலைவாணர். நண்பர் ஒருவர் மூலம் கலைவாணரைச் சந்திக்கும் வாய்ப்பை இளம் வயதிலேயே வாலி பெற்றிருக்கிறார். தன்னைக் கண்டடைந்து கொள்வதில் அந்த வயதிலேயே வாலிக்கு ஆர்வம் இருந்திருக்கிறது.

பெரியவர், பெருமான், ஆசான் என பலரும் பலவிதமாக வாலியைச் சொல்வார்கள். ஆனால், எனக்கு அவர் எப்போதும் அய்யாதான். அவரைச் சந்தித்து உரையாடும்பொழுது களிலெல்லாம் அவரை நான் அய்யா என்னும் விகுதியில்தான் அழைத்திருக்கிறேன். அவருடைய மகனை விடவும் குறைவான வயதுடைய என்னை, ஒருமையிலோ பெயர் சொல்லியோ அவர் அழைத்ததேயில்லை. ‘என்ன சார், சொல்லுங்க சார்...’ என்பதுதான் அவர் வழக்கமாக உரையாடலைத் துவங்கும் பாணி.

முதல்முதலாக அவரைச் சந்தித்தது இசையமைப்பாளர் வித்யாசாகரின் ஒலிப்பதிவுக் கூடத்தில்தான். அப்போது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்டப் பாடல் பணிகள் தொடங்கியிருந்தன. அப்படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குநர் ராதாமோகன் ஏற்றிருந்தார். அதற்குமுன் அவர் இயக்கிய ‘அழகிய தீயே’ பரவலான கவனத்தைப் பெற்றிருந்தது.

‘அழகிய தீயே’ திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியவன் என்னும் முறையிலும், தொடர்ச்சியாக வித்யாசாகரின் இசையில் பாடல் எழுதி வருபவன் என்னும் தகுதியிலும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு பாடல் எழுத அழைக்கப்பட்டிருந்தேன். அது ஒரு கனவுப்பாடல். அந்தக் கனவுப் பாடலுக்கு உதாரணமாக, ‘எங்கேயும் எப்போதும் சந்தோசம் சங்கீதம்...’ என்னும் பாடலை இயக்குநர் சொல்லியிருந்தார். பெரும்பாலும் வித்யாசாகர் பாடலுக்கான பல்லவியை எழுதி இசையமைக்கவே விரும்புவார்.

அதன்படி பாடலுக்கான சூழலை விளக்கி, பல்லவி சிலவற்றை எழுதித்தரும்படி கேட்டிருந்தார். அவர் கேட்டதற்கு இணங்க நானும் சில பல்லவிகளை எழுதிக்கொடுத்தேன். தேர்வுகள் அவருடையன. எது பாடலுக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ அதை அவரே தேர்ந்தெடுத்து மெட்டமைப்பார். ‘பொன்னியின் செல்வனு’க்கும் அவ்வாறே ஏற்புடையதாகக் கருதிய ஒரு பல்லவியை மெட்டமைத்து இயக்குநரிடம் வித்யாசாகர் காட்டினார்.

மெட்டைக் கேட்ட இயக்குநருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், வார்த்தைகள் அவருக்குத் திருப்தி தரவில்லை. “இதே மெட்டை வைத்துக்கொண்டு வேறு பல்லவியை எழுதுங்கள். கூடவே, சரணத்தையும் எழுதி வாருங்கள்...” என்றார். சட்டை தைத்த பிறகு உடம்பை சரி செய்யுங்கள் என்பது போலிருந்தது. அப்போது பாடல் துறையில் பெரிய அனுபவம் இல்லாத எனக்கு, அவர் ஏன் பல்லவியை மாற்றச் சொல்கிறார் எனப் புரியவில்லை. முடியாது என மறுத்துப்பேசவோ விவாதிக்கவோ இயலாத நிலை.

ஒருவாறாக மையமாக தலையசைத்து விட்டு வீட்டுக்கு வந்தேன். இரண்டு, மூன்று நாட்களாக வெவ்வேறு மாதிரி யோசித்து, நிறைய பல்லவிகளையும் நிறைய சரணங்களையும் எழுதி எடுத்துக் கொண்டு போனேன். எல்லாவற்றையும் வாசித்த இயக்குநர், அப்போதும் நான் நினைப்பதுபோல் வரவில்லையே எனக் கையை விரித்தார்.

‘அழகிய தீயே’ திரைப்படத்தில் நானெழுதிய இரண்டு பாடல்களையும் அதன் வசனகர்த்தாவான அண்ணன் விஜிதான் இறுதி செய்தார் என்பதால், ராதாமோகனின் ரசனையும் விருப்பமும் எனக்குப் பிடிபடவில்லை. அல்லது அவர் சொன்னதை என்னால் சரியாக உள்வாங்க முடியவில்லை. மீண்டும் எழுதி வாருங்கள் என்றார். பாட்டெழுத வந்த எனக்கு, பரீட்சை எழுதுவது போலிருந்தது. மீண்டும் சில பல்லவிகள், சில சரணங்கள். அந்தமுறையும் அவரை என்னால் திருப்திப்படுத்த முடியவில்லை.

தொடர்ந்து திரைத்துறையில் பாட்டெழுதும் பணியை நம்மால் மேற்கொள்ள முடியுமோ முடியாதோ எனும் சந்தேகம் வந்தது. அச்சமும் மனச்சோர்வும் ஆட்கொண்ட தருணம் அது. இயக்குநர் உதாரணம் காட்டிய ‘எங்கேயும் எப்போதும்’ பாடலில் வருவதைத்தான் வேறு வேறு உவமைகளால் படிமங்களால் எழுதியிருந்தேன். இருந்தாலும், அது ஏன் இயக்குநருக்குப் பிடிக்காமல் போனதென்று யூகிக்க முடியவில்லை.

வார்த்தை போதாமையா? அனுபவப் போதாமையா? என்று அவருமே விளக்கவில்லை ஒருவழியாக ஊருக்கே மூட்டை கட்டிவிடலாம் என முடிவுக்கு வந்து, மிக நாகரிகமாகவும், மிகமிக நளினமாகவும் என் தரப்பு நியாயத்தை இயக்கு நரிடமும் இசையமைப்பாளரிடமும் விளக்கிவிட்டு விலகிக் கொண்டேன். அந்த மெட்டுதான் வாலிக்கு வழங்கப்பட்டது. அவர் என்ன எழுதுகிறார், எப்படி எழுதுகிறார் என அறிய ஆவலாயிருந்தது.

அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட அவர், அந்தச் சூழலை கையாளும் விதம் குறித்து கற்க எண்ணம். எனவே, ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வாலி வரும் அன்று எனக்கும் தகவல் சொல்லும்படி ஒலிப்பதிவுக்கூட பொறுப்பாளரிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் வித்யாசாகரின் அனுமதியுடன் என்னை அழைத்திருந்தார். நம்மால் எழுத முடியாதுபோன ஒரு பல்லவியை வாலி எவ்வாறு எழுதுகிறார் என்பதிலிருந்து என் தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்றிருந்தேன்.

அதே சமயம், அவர் இயக்குநரை அணுகும் விதத்தை அறிந்துகொள்வதும் நல்லது எனத் தோன்றியது. இத்தனை ஆயிரம் பாடல்களையும் ஒருவர் சலிக்காமல் அறுபது ஆண்டுகளாக எழுதி வருகிறார் என்றால், எழுத்துத் திறமை மட்டும் போதாது. அதற்கு மேலும் ஏதோ ஒன்று இருக்கவேண்டுமில்லையா? அந்த ஏதோ ஒன்று என்ன என்பதுதான் என்னுடைய சிக்கலே. சிக்கலை அவிழ்த்துவிடும் பரபரப்பில், வித்யாசாகரின் ஒலிப்பதிவுக் கூடத்தின் பின் கட்டிலுள்ள கண்ணாடிக் கதவு வழியே நடப்பதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தேன்.

வழக்கமான வேட்டி ஜிப்பாவில் வெற்றிலைச் செல்லத்தைக் குதப்பியபடி வாலி ஒலிப்பதிவுக் கூடத்தின் மைய அறைக்கு வந்தார். எப்போதும் அவர் உதட்டில் ஒட்டியிருக்கும் அதே சிரிப்பு. அதே பாந்தம். வித்யாசாகர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார். பதில் வணக்கம் செலுத்தியபின், வித்யாசாகரின் கையைக் குலுக்கினார். இயக்குநர் அமர்ந்தவாக்கில் கும்பிட்டதாக நினைவு. வெகு நேரம் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். ராதாமோகனின் முந்தைய திரைப்படமான ‘அழகிய தீயே’வையும் அதில் இடம்பெற்றிருந்த ஒன்றிரண்டு நல்ல அம்சங்களையும் வாலி பகிர்ந்துகொண்டார்.

சிரிப்பொலியும் பேச்சொலியும் மாறி மாறி கேட்டுக்கொண்டிருந்தன. ஆவி பறக்கும் சரவணபவன் காப்பியோடு அலுவலகப் பையன் அறைக்குள் நுழைந்தான். அவனுடைய பேரைக் கேட்ட வாலி, எதையோ சொன்னார். பின்னும் கொஞ்சம் பேச்சோசை. சிரிப்போசை. அதன்பிறகு நிதானமாக “பாட்ட பாத்துடலாமா...” என வாலி ஆரம்பித்தார். இயக்குநரும் இசையமைப்பாளரும் விழி மலர நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். ஜிப்பாவின் இடது பாக்கெட்டிலிருந்து பாடல் பிரதியை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.

அவர் காகிதத்தை கையில் வைத்து வாசிப்பதே அழகாயிருந்தது. சந்தமும் ஒழுங்கும் அபாரமாயிருந்தன. கற்பனைகளும் சிந்தனைகளும் எட்ட முடியாத உயரத்தில் எழுதப்பட்டிருந்தன. நான் எழுத முடியாமல் விலகிக்கொண்ட பாடல் என்பதால் அவ்வரிகள் ஒவ்வொன்றும் என்னை என்னவோ செய்தன.

இத்தனை வயதிலும் கம்பீரமும் கலையழகும் குறையாமல் வாலியால் எப்படி எழுத முடிகிறது என்றிருந்தது. வாசித்த வரிகளைக் கேட்டுக் கொண்டிருந்த ராதாமோகன், தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தார். “என்ன ஓய் பேசாம இருக்குறீர்? நீர் வேற மாதிரி எதிர்பார்க்கிறீரோ..?” என இயக்குநரைக் கேட்டார். ‘ஆமாம்’ என்பதுபோல் அவரும் சிரித்தார். உடனே, வலது பாக்கெட்டிலிருந்து இன்னொரு காகிதத்தை எடுத்து வாசித்தார்!
 

(பேசலாம்...)

http://kungumam.co.in

Posted
 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 49

இயக்குநர் ராதாமோகனின் தலை நிமிரவில்லை. அறையே நிசப்தமானது. “என்னதான் வேணுமுன்னு தெளிவாக சொல்லு மய்யா, எழுதிடலாம்...” என்று வாலி தடித்த குரலில் கேள்வி எழுப்பினார். இயக்குநருக்கு ஒன்றும் புரியவில்லை. எதை எதையோ விளக்கினார். அவர் உதாரணமாக எடுத்துச் சொன்ன பாடல்களில் மிகுதியும் வாலி எழுதிய பாடல்களாயிருந்தன. அந்தக் காலத்தின் மொழியும், மனோநிலையும் அப்பாடல்களில் விரவியிருந்தன. அதெல்லாம் சரி, என்று தாடியை நீவிக்கொண்ட வாலி, “நீர் சொல்வதுதானே முதல்ல வாசிச்சதில இருக்கு, அப்பறமென்ன?” என்றார்.

“நீங்க எவ்வளவு இன்புட்ஸ் கொடுத்தீங்களோ, அதுதான் நான் எழுதி இருக்கிறதும். வார்த்தை மாடர்னா வேணுமுன்னா சொல்லுங்க. இல்ல, கவித்துவமா வேணுமா சொல்லுங்க. எதுவுமே தெளிவா சொல்லாம உம்முன்னு உக்காந்திருந்தா எப்படி? என் அனுபவத்துல வெற்றிபெற்ற எல்லா இயக்குநருக்கும் ரெண்டாவது படத்துல இப்படி குழப்பம் வர்றது சகஜம். அத சரி பண்ணிக்கணுமுன்னா நல்லா பேசணும்...” என்றார். இசையமைப்பாளர் வித்யாசாகர் எதுவுமே செல்லாமல் அமைதியாயிருந்தார். எல்லாவற்றுக்கும் சாட்சியாய் கதவுக்கு வெளியே நின்று கொண்டிருந்த எனக்கு பதற்றமாயிருந்தது.
5.jpg
மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் எனப் புரியாத சூழலில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறைக்குள் வந்தார். பழையபடி சூழல் சகஜ நிலைக்குத் திரும்பியது. அந்த இடைவெளியில் இயக்குநர் ராதாமோகன் கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டார். ஏசி அறையில் அவருக்கு ஏன் வேர்த்ததென்று சொல்வதற்கில்லை. அதன்பிறகு தற்போதைய இயக்குநர்களை அவர் கடிந்து கொண்டதும், ஒரு பாடல் எப்படி இருக்கவேண்டும் என விளக்கிச் சொன்னதும் எனக்குமே பாடமாயிருந்தன.

“காலமும் களமும் சூழலும்தான் பாடல்களைத் தீர்மானிக்கின்றன. நம்முடைய விருப்பம் சார்ந்து எழுதிக்கொள்வது ஒருபோதும் திரைப்பாடலாகாது...” என்பதைத்தான் அவர் வெவ்வேறு வார்த்தைகளில் விளக்கினார். ஒரு பாடலாசிரியனின் சிந்தனைக்குப் பாடலை விட்டு விட்ட பிறகு அந்த சிந்தனையிலிருந்து நல்லதை எடுப்பதுதான் இயக்குநரின் வேலையே தவிர, தான் சிந்தித்ததை தாங்கள் ஏன் எழுதவில்லை எனக் கேட்பது அபத்தம். ஒருவேளை, தான் சிந்தித்ததே வரவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட இயக்குநரே எழுதிக்கொள்ள வேண்டியதுதான். தமிழ்த் திரையில் அப்படி எத்தனையோ நல்ல பாடல்களை இயக்குநர்கள் எழுதியுமிருக்கிறார்கள்.

பெரும் குழப்பமாக முடிந்த அந்தச் சந்திப்பில், வாலியுடனான என் முதல் அறிமுகம் வாய்க்காமல் போனது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அறிமுகமாகிக்கொள்ளலாமே என வித்யாசாகரும் தவிர்த்தார். எனக்குமே அதுதான் சரியாகப்பட்டது. விபரீதமான சூழலில் ஏற்படுத்திக்கொள்ளும் அறிமுகம் வில்லங்கமாகிவிடும் எனும் அச்சமுமிருந்தது. அதன்பிறகு ஓராண்டு கழித்துதான் வாலியிடம் அறிமுகமானேன். ஐ.பி.ஆர்.எஸ். விழாவில். என்னை அறிமுகப்படுத்தியவர் இளம் பாடலாசிரியர்களை அன்புகொண்டு ஆதரிக்கும் கவிஞர் முத்துலிங்கம் அவர்களே. அரசவைக் கவிஞராக இருந்த அவர், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை உற்சாகப்படுத்தி வளர்த்தெடுப்பவர். அது மிக நல்ல சந்திப்பாக அமைந்தது. அதன்பின் எங்கு பார்த்தாலும் வாலியால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
5a.jpg
ஒவ்வொரு முறையும் வாஞ்சையுடனும் வாழ்த்துகளுடனும் அவர் என்னை ஆரத்தழுவினார். ‘வண்ணத்திரை’யில் உன்னைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் பார்த்தாயா? என்றோ, வித்யாசாகரிடம் உன்னுடைய ‘கண்டேன் கண்டேன்’ என்ற ‘மதுர’ திரைப்படப் பாடலை பாராட்டினேனே, சொன்னாரா என்றோ, அவர் கேட்கும் தொனியில் பாசமும் பண்பும் இழையோடும். அவருடைய கைகள் ஒருபோதும் இளம்பாடலாசிரியனைப் பற்றிக் கொள்ளத் தயங்காதவை. தனக்கு முன்னால் இருந்தவர்கள் தன்னை எப்படி நடத்தினார்களோ அப்படி நடந்தோ, நடத்தியோ விடக்கூடாது என்பதில் அவருக்குத் தெளிவு இருந்தது.

ஒரு துறையில் தனக்குப் பின்னால் வருபவர்களை வரவேற்று, அவர்களுக்கு ஆக்கபூர்வமான அறிவுரைகளைச் சொல்பவராக அவர் இருந்தார். தஞ்சையில் நடக்கவிருந்த என்னுடைய திருமணத்திற்கு வாலியை அழைக்க விரும்பி, கவிஞர் முத்துலிங்கத்துடன் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அழைப்பிதழை வாங்கிக்கொண்டு ஆசீர்வதித்த அவர், அதில் இடம்பெற்றிருந்த கவிதையை வாசித்துவிட்டு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.“தோழர் நல்லகண்ணுவின் தலைமையில் திருமணமா, அபாரம். எத்தனை பெரிய மனுஷர். அப்பழுக்கில்லாத அரசியல் தலைவர். ஆனா, பாருங்க, நம்ம மக்கள் அவரை ஒரு எலக்‌ஷன்லகூட ஜெயிக்க வைக்கல” என்றார்.

அந்தச் சந்திப்பில், பாடல் துறையில் நான் இயக்குநர்களிடமும் இசையமைப்பாளர்களிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் கற்பித்தார். “வார்த்தைகளை ஒடித்து அழகழகா கற்பனையா சொல்ற பாணி ஒனக்கும் முத்துக்குமாருக்கும் நல்லா வருது. ‘கணையாழி’யில வேல பாத்ததால நவீன கவிதைகள்ல ஒனக்கு பரிச்சயம் ஏற்பட்டிருக்கு. இதே கதியில எழுதினா முக்கியமான ஆளா வரலாம், பாத்துக்கோ...”என்றார். “பொதுவுடைமை சிந்தனைகளில் எனக்கும் ஈடுபாடு உண்டு. ஆனா, சினிமாவுல எப்படிங்கிறத யோசிச்சிக்கோ. நாம செய்யிறது வேல. முதலாளிய ஒழிக்கிறது இல்ல...” என்றதும், பேச்சின் திசையை முத்துலிங்கம் மாற்றினார். கண்களைப் பார்த்து ஊடுருவும் அவருடைய உரையாடல்களில் அவ்வப்போது தெறிக்கும் நகைச்சுவை தனி ரகம்.

அதுவும் கவிஞர்கள் மட்டுமே சூழ்ந்திருக்கையில் அவர் அடிக்கும் இலக்கிய கமெண்ட்களை நினைத்து நினைத்து சிரிக்கலாம். ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்னும் நினைவே வராதவாறு நடந்துகொள்வார். தன்னை அப்டேட் செய்துகொண்டே இருப்பார். பாடல் வேறு, கவிதை வேறு என்பதைப் புரிந்து செயல்பட்டவர். “இந்த குட்டிரேவதியும் சாருநிவேதிதாவும் எழுதறத படிக்கிறீங்களா?” என்பார். திரைத்துறையில் இருப்பவர்களைப் பற்றி இலக்கியவாதிகள் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறார்களோ எனக்குத் தெரியாது. ஆனால், இலக்கியவாதிகளைப் பற்றி உயர்ந்த மதிப்பீடே அவர் வைத்திருந்தார்.

கல்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் மூன்று பேரும் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது அவர் எண்ணம். “எழுத்தாளர்கள் சினிமாவை இரண்டாவதாகவே கருதுகிறார்கள். பிரதானமாகக் கருதி செயல்பட்டிருந்தாலும் சினிமாவிற்கு தரமும் வளமும் கூடியிருக்கும்...” என்பார். ஜெயகாந்தன் ‘பாதை தெரியுது பார்’ திரைப்படத்தில் எழுதிய ‘சிட்டுக்குருவி பாடுது...’ என்னும் பாடலையும் கல்கி எழுதிய ‘காற்றினிலே ஒரு கீதம்...’ என்னும் பாடலையும் சிலாகித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். இலக்கியத்தில் இருந்து சினிமாத்துறைக்கு வந்த பலரோடும் அவருக்கு நல்ல பரிச்சயமிருந்தது.

இசங்களைக் குறித்த புரிதலும் அதற்கு எதிர்வினையாக வரும் விமர்சனங்களையும் அவர் கடைசிவரை கவனித்துக்கொண்டிருந்தார். ‘நிஜகோவிந்தன்,’ ‘பொய்க்கால் குதிரைகள்,’ ‘அம்மா’ எனும் தலைப்புகளில் வெளிவந்துள்ள தன் கவிதை நூல்களை இலக்கியக்காரர்கள் வாசித்தார்களா? எனும் கவலை அவருக்கு இருக்கவில்லை. நாலும் வந்தால்தான் தமிழுக்கு நல்லது என்று அடிக்கடி சொல்லுவார். அழைப்பிதழோடு போயிருந்த எங்களைத் திருப்பி அனுப்ப அவருக்கு மனமே இல்லை. ஒன்றைத் தொட்டு இன்னொன்றுக்கு அவர் உரையாடல் நகர்ந்துகொண்டே இருந்தது. எனக்குமே அவரிடமிருந்து விடைபெற விருப்பமில்லை.

ஆனாலும், அவர் அறுவை சிகிச்சை முடிந்து அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தார். பேச்சு உற்சாகமாயிருந்தாலும் அவர் உடல் சோர்வுற்றிருந்ததை உணரமுடிந்தது. “உடல் நலக்குறைவு காரணமாக திருமணத்திற்கு வர இயலுமா? தெரியவில்லை. ஃபிளைட்டிலாவது வரலாம் போலிருக்கிறது. பிராப்தம் எப்படி இருக்கோ பாப்போம்” என்றதும், நானும் முத்துலிங்கமும் பதறிப்போய், நீங்கள் வரவேண்டும் என்பதில்லை. இங்கிருந்தே வாழ்த்துங்கள் என்று சொல்லிவிட்டு வந்தோம்.

அவருடைய ‘பொய்க்கால் குதிரைகள்’ கவிதைகளை இயக்குநர் பாலச்சந்தர் ‘அக்னிசாட்சி’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். கவிஞர், பாடலாசிரியர், நாடகாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பல முகங்கள் அவருக்கு இருந்தாலும், அவர் ஆரம்பத்தில் விரும்பியது ஓவியர் என்னும் முகத்தைத்தான். அவர் வரைந்த பாரதியார் ஓவியத்தைப் பார்த்துவிட்டு, “என் தோப்பனாரை இந்த பிள்ளையாண்டான் தத்ரூபமா கொண்டு வந்துட்டான். அச்சு அசல் நேரில் பார்க்கிறது போல இருக்கு...” என்று ஓவியத்தைப் பார்த்து கண்ணீர் உகுத்தவர், பாரதியாரின் மகள் தங்கம்மாள்.
5b.jpg
‘சிவாஜி’ பத்திரிகையை நடத்திவந்த திரிலோக சீத்தாராமனுடன் வாலி வீட்டுக்கு வந்திருந்த தங்கம்மாளும், வாலி ஓர் ஓவியனாக அவதாரம் எடுப்பார் என்றுதான் நினைத்திருந்தார். பாரதி மகளே தன் மகனை பாராட்டியதைக் கேட்ட வாலியின் தந்தை அவரை சென்னை ஓவியக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். ஆனால், ஓராண்டுக்குமேல் சென்னை வாழ்வு வாலிக்கு சித்திக்கவில்லை. காரணம் என்னவென்றே தெரியாமல் ஊருக்குத் திரும்பிவிட்டதாக ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்னும் நூலில் எழுதியிருக்கிறார். ஊருக்குத் திரும்பினாலும் அவருடைய படைப்பு மனம் சும்மா இருக்கவில்லை.

தற்செயலாக அவர் பார்த்த ‘மருதநாட்டு இளவரசி’ திரைப்படம் அவரை படாதபாடு படுத்திவிட்டது. இளங்கோவனுக்குப் பிறகு வசனத்தில் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திய கலைஞரின் எழுத்துகள் அவரையும் நாடகாசிரியனாக ஆக்கியிருக்கிறது. வானொலி இதழில் ஓவியங்கள் தீட்டிவந்த அவர், அதன்பின் தொடர்ச்சியாக நாடகங்களை எழுதுவதும் இயக்குவதும் நடிப்பதுமாக இருந்திருக்கிறார். அப்போது வாலியின் நண்பர் எம்.ஆர்.பாலு என்பவர் ‘பேராசை பிடித்த பெரியார்’ என்னும் நாடகத்தை நடத்தியிருக்கிறார்.

தமிழ்நாடு என்னும் பேர் வைக்க ஆசைப்பட்ட பெரியார் என்பதையே அந்நாடகத் தலைப்பு சொல்ல விரும்பியது. அந்நாடகத்தில், ‘இவர்தான் பெரியார் / இவரை / யார்தான் அறியார்’ என்னும் பாடலை எழுதியிருக்கிறார். நாடகத்தையும் பாடலையும் ரசித்த பெரியார், ‘‘பாட்டென்றால் இப்படித்தான் எல்லோருக்கும் புரியும்படி அமைய வேண்டும்...” என்றிருக்கிறார். தொடர்ந்து, ‘நாட்டுக்கு உபயோகமில்லாத பாட்டெல்லாம் சினிமாவில் வருவதாக’ பெரியார் அப்போது குறைபட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.