Jump to content

ஊஞ்சல் தேநீர்


Recommended Posts

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 50

இடையிடையே சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிக்கொண்டிருந்த வாலியின் படைப்புகள் வாகீச கலாநிதி கி.வா.ஜெகந்நாதனால் பாராட்டப்பட்டன. நாடகத்துறையில் கால் பதிப்பதற்கு முன்பாக பத்திரிகையாளராகும் ஆசையும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்திய தேசிய ராணுவம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த காலம் அது. சுதந்திர இந்தியக் கனவை ஈடேற்றும் விதத்தில் அந்த காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களில் ஒன்றுதான் ‘மணிக்கொடி’.

‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் ஒருவரான சிட்டியின் அறிமுகம் வாலிக்குக் கிடைக்கவே, எப்படியாவது ஒரு பத்திரிகையைக் கொண்டுவருவதென திட்டிமிட்டிருக்கிறார். பத்திரிகையின் பெயர் ‘நேதாஜி’. ஏற்கனவே அவருக்கிருந்த ஓவிய ஆர்வம் பத்திரிகை உருவாக்கத்திற்குப் பயன்பட்டிருக்கிறது. நண்பர்களின் ஒத்துழைப்போடு பத்திரிகை தயாராகிவிட்டது.
3.jpg
வெளியிட வேண்டுமே என்னும்போதுதான் ஸ்ரீரங்கம் ‘ராஜாஜி கல்ச்சுரல் அசோசியேஷன்’ ஆண்டு விழாவிற்கு எழுத்தாளர் கல்கி வரவிருக்கும் தகவலை அறிகிறார். உடனே, அவசர அவசரமாக எழுத்தாளர் எங்கே தங்கியிருக்கிறார் எனத் தெரிந்துகொண்டு, தயாரிக்கப்பட்ட கையெழுத்துப் பத்திரிகையுடன் கல்கியைச் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார்.

எழுத்தாளர் கல்கியோ, ஏற்கனவே ஒப்புக்கொண்ட கூட்டங்கள் இருப்பதால் பத்திரிகையை வெளியிட வர இயலாது எனச் சொல்லிவிடுகிறார். எழுத்தாளர் கல்கி வந்து பத்திரிகையை வெளியிடப்போவதாக நண்பர்களிடம் ஜம்பமாகச் சொல்லிவிட்டு வந்த வாலியால், அந்த வருத்தத்தை தாங்கமுடியவில்லை. என்ன செய்வதென்றும் விளங்கவில்லை.

அதுமட்டுமல்ல, எழுத்தாளர் கல்கி வரப்போவதாக ஊரெல்லாம் தண்டோரோ வைக்காமலேயே தகவல் பரவியிருந்தது. இந்த நிலையில் தன்னால் அழைத்துவர முடியாமல் போனதென்றால் கேலி பேசுவார்களே என்னும் அச்சம் அவரை அரித்தது. மிகுந்த கசப்புற்ற வாலி, அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் போய் உட்கார்ந்துகொள்கிறார். சொன்னதை நடத்திக்காட்ட முடியாமல் போகையில், யார் முகத்தையும் அவருக்கு எதிர்கொள்ளத் துணிவில்லை.

ஒருவிதமான தோல்வி மனநிலை. அப்புறம் ஒருவழியாக தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினால், வீட்டு வாசலில் ஒரே கூட்டம். எழுத்தாளர் கல்கி வந்திருக்கிறார். கூடவே சின்ன அண்ணாமலையும் இன்னும் சிலரும். வர இயலாது எனச் சொன்னதால் மனம் உடைந்திருந்த வாலிக்கு, அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. தவிர, பத்திரிகையில், தான் எழுதியிருந்த கவிதையைப் பற்றியும் கல்கி குறிப்பிட்டுப் பேசியதில் கூடுதல் மகிழ்ச்சி.
3a.jpg
‘கல்யாணப் பத்திரிகைக்குப் போகாமல் இருந்தாலும் கையெழுத்துப் பத்திரிகைக்குப் போகாமல் இருக்ககூடாது’ என கல்கி சொன்னதாக சின்ன அண்ணாமலை அப்போது தெரிவித்திருக்கிறார். கடும் பணிச்சுமைக்கு இடையிலும் எழுதவரும் புதியவர்களை ஆதரித்து அரவணைக்கும் பண்பை அவர் கல்கியிடமிருந்து பெற்றிருக்கிறார் எனக் கொள்ளலாம்.

வாலியைப் பொறுத்தவரை எடுத்துக்கொண்ட வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். முனைந்து, தான் செய்யும் ஒரு செயலில் தோற்றுவிடக் கூடாதென்பதில் எச்சரிக்கையுடன் காரியமாற்றுபவர். தன் எழுத்துகள் யாரைப்போய் சேர்கின்றன என்பதிலும், யாரைப்போய் சேர வேண்டும் என்பதிலும் தீர்க்கமான முடிவுகளை அவர் வைத்திருந்தர்.

1958ல் தொடங்கிய அவருடைய சினிமா பிரவேசம் இறுதி மூச்சு உள்ளவரை வெற்றிகரமான பயணமாகவே பார்க்கப்படுகிறது. எத்தனையோ இயக்குநர்கள், எத்தனையோ இசையமைப்பாளர்கள், எத்தனையோ நடிகர்கள், எத்தனையோ தயாரிப்பார்கள்... என அவர் சந்தித்த மனிதர்களையும் சவால்களையும் கணக்கிட்டால் ஆச்சர்யமாயிருக்கிறது. நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டுக்கொண்டு, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பலர் இயக்கிய, நடித்த, தயாரித்த திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதியிருக்கிறார். தன் அளவும் மாற்றாரின் அளவும் அவருக்குப் புரிந்திருந்ததுதான் அதிலுள்ள விசேஷம்.

அவர், காயப்படுத்துபவர்களைக் கடந்துபோகக்கூடியவர் அல்ல. எதிர்நின்று சவால்களை சமாளிப்பதையே விரும்பியிருக்கிறார். இயக்குநர்களும் உதவி இயக்குநர்களும் தன் பெயரில் ஆபாசமான வரிகளை எழுதி, தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியபோதும் அதற்கான பொறுப்புகளை அவர் தட்டிக்கழிக்க எண்ணியதில்லை. கண்ணதாசன் காலத்தில் கண்ணதாசனைப் போலவே எழுதியவர் என்ற விமர்சனம் அவர்மீது உண்டு.

உண்மையில், அது விமர்சனமே இல்லை. அவர் பாடல்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டவர்கள் அப்படிச் சொல்வதில்லை. கண்ணதாசனை உயர்த்திச் சொல்வதற்காக வாலியைத் தாழ்த்தியதாகவே அதைப் பார்க்கமுடியும். வாலியேகூட அம்மாதிரியான விமர்சனங்களை ஆரோக்கியமாக எதிர்கொண்டே பதிலளித்திருக்கிறார். “திராவிட முன்னேற்றக் கழகம் அச்சமயத்தில் தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்தது. எதுகையும் மோனையும் இல்லாத பாடல்களை மக்களுமே விரும்பவில்லை. எழுதிக்கொண்டிருந்த எல்லோருமே ஒரே மாதிரிதான் இயங்கினோம்.

அப்படி இருக்கையில், கண்ணதாசனைப் போல நான் எழுதியதாகச் சொல்லுவது சரியல்ல...” என்றிருக்கிறார். ‘சக்க போடு போடு ராஜா, உன் காட்டுல மழை பெய்யுது...’ என்னும் பாடலில் கண்ணதாசன் எங்கே தெரிகிறார் எனவும் கேட்டிருக்கிறார். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...’, ‘நான் செத்துப் பிழைச்சவண்டா...’, ‘நான் ஆணையிட்டால்...’ போன்ற பாடல்களை கண்ணதாசன் பாடல்களாகக் கொள்ள முடியுமா, அவர் சந்தத்தை கையாண்ட விதமும் நான் சந்தத்தை கையாளும் விதமும் வேறாக இருக்கையில், ஆதங்கப்படாமலும் இல்லை.தஞ்சை ராமையாதாஸைப்போல சுதந்திரமான மனநிலையுடைய பாடலாசிரியராக தன்னை நிறுவிக்கொள்ள அவர் விரும்பினார். அவருடைய தனித்துவத்திற்கும் ஆளுமைக்கும் எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லமுடியும்.
3b.jpg
ஆனால், என் நோக்கம் அவர் பாடல்களை வியந்து எழுதுவதல்ல. ஒரு பாடலாசிரியராக அவர் வளர்ந்த விதமே. காலம் எதை விரும்புகிறதோ அதைத் தரக்கூடியவராக இருந்ததால்தான் ஆயிரக்கணக்கான பாடல்களை நான்கு தலைமுறைக்கு அவரால் அளிக்க முடிந்தது. முந்நூறு மொழிமாற்றுப் படங்களுக்குப் பாடல்களை எழுதியிருக்கிறார். பதினெட்டு மொழிகளைக் கற்று புலமையோடு இருந்த பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸே, மொழிமாற்றுப் படங்களுக்கு பொருத்தமான வார்த்தைகளை எழுதக் கற்பித்தவர் என்று எழுதியிருக்கிறார்.

அவ்வப்போது வாலியை திரைத்துறையைச் சாந்தவர்களே விமர்சித்திருக்கிறார்கள். அதுவும் அவரை மேடையில் வைத்துக்கொண்டே. சில சமயம் சப்பைக் குதிரைகளும் கிண்டி ரேசில் ஜெயித்து விடுவது உண்டு. அப்படித்தான் இந்தப்படத்தின் பாடல்களும் என ‘கற்பகம்’ திரைப்படத்தின் வெற்றிவிழாவில் சின்ன அண்ணாமலை பேசியிருக்கிறார். ஆனால், காலகதியில் அதே சின்ன அண்ணாமலையின் ‘ஆயிரம் ரூபாய்’ படத்திற்குப் பாட்டெழுதும் வாய்ப்பு வாலிக்கு வந்திருக்கிறது.

தன்னை பூஷிப்பவர்களையும், தூஷிப்பவர்களையும் அவர் ஒரேமாதிரிதான் பார்க்கப் பழகியிருந்தார். தன்னைப் புரிந்துகொள்பவர்கள் பூஷிக்கிறார்கள். புரிந்துகொள்ளாதவர்கள் தூஷிக்கிறார்கள் என்பதைத் தாண்டி அவர் அதற்கு மதிப்பளித்ததில்லை. காலம் ஒரு திசையை நோக்கி நகர்கையில் படைப்பும் படைப்பாளனும் அந்தத் திசைநோக்கி நகரவில்லையெனில் தேங்கிவிடக்கூடும் என அவர் தெரிந்து வைத்திருந்தார்.

அதனால், அவர்போல் இவர் எழுதினார்; இவர்போல் இன்னொருவர் எழுதவில்லை என்பதெல்லாம் ரசிப்பவர்கள் ஏற்படுத்தும் பிம்பமே அன்றி, அதற்கும் எழுதுபவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரே சமூகத்தின் காற்றையும் தண்ணீரையும் பயன்படுத்தும் இருவர் வேறுபட்டு சிந்தித்தால்தான் ஆச்சர்யமே. ஒரே மாதிரி சிந்திப்பது தவறில்லை.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in

  • Replies 75
  • Created
  • Last Reply
Posted
 

ஊஞ்சல் தேநீர் 51

‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செந்தூரப்பூவே...’ பாடலைக் கேட்ட கண்ணதாசன், ‘‘நானும் இப்படித்தான் சிந்தித்திருப்பேன்’’ என கங்கை அமரனைப் பாராட்டியிருக்கிறார். 1963ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘கற்பகம்’ திரைப்படமே வாலியின் வாழ்வில் விளக்கேற்றிய திரைப்படம்.
4.jpg
அந்தத் திரைப்படமும், அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. நூறு நாள் ஓடி, வெற்றி விழாவும் கண்ட அத்திரைப்படத்தை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கூட்டுக்குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்களையும், நெருக்கடிகளையும் மிக நேர்த்தியாகப் படம்பிடித்து பாராட்டுப் பெற்றவர்.

இதனுடன் இணைத்துச் சொல்லப்பட வேண்டிய இன்னொரு செய்தி, ‘கற்பகம்’ திரைப்பட வெற்றி விழாவில், வாலிக்கான கேடயத்தை வழங்கியவர் கண்ணதாசன். இவருக்கு அவர் போட்டி, அவருக்கு இவர் போட்டி என மற்றவர்கள் பேசிக்கொண்டாலும், அவர்கள் இருவருமே அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

வாலிக்கு நேர்ந்த நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கண்ணதாசனின் பாடல்களே ஆறுதலையும் தேறுதலையும் அளித்திருக்கின்றன. வாலி, கண்ணதாசனை எந்த இடத்திலும் குறைத்துச் சொன்னதே இல்லை. மாறாக, ஆசானாகவும் தோழராகவுமே போற்றியிருக்கிறார். தனக்கு எதிராக கடைவிரிக்க வந்தவர்தான் வாலியென கண்ணதாசனும் எண்ணவில்லை. வாலியும் நினைக்கவில்லை.

கால ஓட்டத்தில் சம்பவங்கள் அனைத்துமே வரலாறாகிவிடுகின்றன. கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடைவெளி ஏற்பட்டிருந்த காலத்தில், தொழில்ரீதியாக தனக்கு ஏற்பட்ட சரிவை சரி செய்துகொள்ள வாலியை எம்.ஜி. ஆர். பயன்படுத்திக்கொண்டார்.

எம்.ஜி.ஆர்., வாலியைப் பல சமயங்களில் வழிமொழிந்திருக்கிறரே தவிர, முன்மொழிந்ததாகச் சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால், ‘படகோட்டி’ திரைப்படத்திற்கு வாலி பாடல் எழுதியிருக்கும் தகவலே, இரண்டு பாடல்கள் முடிந்த நிலையில்தான் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பவும் அவ்வப்போதைய மனநிலைக்கு ஏற்பவும் செயல்பட்ட எம்.ஜி.ஆர்., எத்தனையோ பாடலாசிரியர்களைத் திரைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் அளவுக்கு பாடல்கள் மீது அக்கறை செலுத்திய நடிகர்கள் முன்னாலும் இல்லை. பின்னாலும் இல்லை.
திரைப்பட பாடல்களின் செல்வாக்கையும் அது மக்கள் மீது செலுத்திவரும் ஆதிக்கத்தையும் அவர் ஒருவர்தான் துல்லியமாக நிறுத்தவர். அவருக்கு வார்த்தை வழங்கிய கவிஞர்களை அவர் கைவிட்டதேயில்லை. பணமும் பதவியும் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார்.

ஒரு விநோதமான சம்பவம் வாலியின் வாழ்வில் நடந்திருக்கிறது. தொடர்ந்து பல படங்களுக்கு வாலி பாடல் எழுதிவந்த சமயத்தில், ‘அரச கட்டளை’ என்னும் தலைப்பில் எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி இயக்கிய படத்திற்கு பாடல் எழுத வாலி அழைக்கப்பட்டிருக்கிறார்.

அப்படத்தில் எம்.ஜி.ஆர். தமிழ்க் கவியாக நடிக்கிறார். மக்களை விழிப்படையச் செய்து, அரசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்க வைப்பதே அக்கதாபாத்திரத்தின் பணி. இறைவனின் கட்டளைக்கு முன்னால் அரசனின் கட்டளை எம்மாத்திரம்? எனப் பாடலில்
சொல்லவேண்டும்.

சூழலை உள்வாங்கிக்கொண்ட வாலி, மறுநாளே பல்லவியை எழுதிப்போய் எம்.ஜி. ஆரிடம் காட்டியிருக்கிறார். அவ்வளவுதான். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிடுகிறது. “என்னை அவமானப்படுத்தும் நோக்கத்தில்தானே இப்படி எழுதியிருக்கிறீர்கள்” எனக் கடிந்துகொள்கிறார்.
வாலிக்கு விதிர்விதிர்த்து போகிறது. தான் அவர்மீதும், அவர் தன்மீதும் அன்புகொண்டிருக்கும் வேளையில், இதென்ன அசம்பாவிதம் என யோசித்து வரிகளை திரும்பப் படித்தபோதுதான் காரணம் புரிந்திருக்கிறது.

‘ஆண்டவன் கட்டளைக்கு முன்னால் / உன் / அரச கட்டளை என்னவாகும்?’ என்பது வரி. அப்போது ‘ஆண்டவன் கட்டளை’ என்னும் பெயரில் சிவாஜி ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இறைவனின் கட்டளைக்கு முன்னால் என்று எழுதியிருந்தால் பிரச்சனையில்லை.ஆண்டவன் கட்டளை என்று எழுதியதால், வாலி ஏதோ விகல்பம் செய்வதாக விளங்கிக்கொண்டு கோபித்திருக்கிறார்.

பெரிய நடிகர்களுக்குப் பாட்டெழுதும்பொழுது என்னென்ன மாதிரியெல்லாம் சிக்கல் வருமென்று யோசிக்க முடியாது. பாட்டுக்கு யோசிப்பது பாதியென்றால், பாட்டுக்குப் பின்னால் வரக்கூடிய பாதிப்புக்கு யோசிப்பது மீதியாகிறது. நல்ல எண்ணத்தில் எழுதினாலும், அதைப் பிழையாகப் புரிந்துகொண்டு தங்கள் இஷ்டம்போல் பாடலாசிரியனிடம் நடந்துகொள்வார்கள்.

இப்போதும்கூட.
அதேபோல இந்த சென்டிமென்ட் என்றொரு பிசாசு. அந்தப் பிசாசு பிடிக்காத சினிமாக்காரர்களை எண்ணிவிடலாம். ‘தா’வில் ஆரம்பித்தால் படம் ஜெயிக்கும். ‘பா’வில் ஆரம்பித்தால் படம் பட்டிதொட்டிவரை பாயும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவரவருடைய தனிப்பட்ட விஷயம். அதை யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ஆஸ்கார் மேடையிலும் அறிவித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கே கூட அப்படியான நம்பிக்கைகளில் ஈடுபாடுள்ளதை வாலியே சொல்லியிருக்கிறார்.

‘ம’ வரிசையில் ஆரம்பித்து வாலி எழுதினால் அப்பாடல் மாபெரும் வெற்றி அடையும் என்பது அவர் நம்பிக்கை. அதன் காரணமாகவே ‘அன்பே வா, முன்பே வா’ என்று எழுதிய வாலியின் வரியை, ‘முன்பே வா, அன்பே வா’ என்று திரைப்படத்தில் பாட வைத்திருக்கிறார். அவர் நம்பிக்கைக்கேற்ப அப்பாடலும் பெரு வெற்றி பெற்றது.

வாலி எழுதியதால் அப்பாடல் வெற்றியடைந்ததா? இல்லை அவர் ‘மு’ வில் ஆரம்பித்து எழுதியதால் வெற்றியடைந்ததா? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். பாடலைக் கேட்கிற யாரும் வாலி, ‘ம’ வரிசையில் பல்லவியை ஆரம்பித்திருக்கிறா
ரென்றோ ‘க’ வரிசையில் ஆரம்பித்திருக்கிறாரென்றோ பார்ப்பதில்லை.இது குறித்து வாலி சொல்லும்போது, “நானெழுதினால் ஹிட்டாகுமென்று நினைப்பது எனக்கு ஒன்றும் பாதகமில்லையே. அப்படி நினைத்துதானே என்னிடம் வருகிறார்கள்.

அதிலென்ன தவறு” என்றிருக்கிறார்.மற்றவர்களின் நம்பிக்கையைச் சந்தேகிக்கக்கூடாது. நமக்கு அவர்கள் நம்பிக்கையில் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களை கோபிப்பதோ விமர்சிப்பதோ நாகரிகமில்லை என்பார்.நம்பிக்கையில் இரண்டு வகை. ஒன்று நல்ல நம்பிக்கை, இன்னொன்று மூட நம்பிக்கை. இதில் நீங்கள் எதை ஆதரிப்பீர்கள் எனக்கேட்டதற்கு, “நம்பிக்கை என்றால் நம்பிக்கைதானே.

அதிலென்ன நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை. பகுத்தறிவினால் வருவது நல்ல நம்பிக்கையென்றால், பக்தியினால் வருவது மூட நம்பிக்கையென்று வைத்துக்கொள்ளுங்கள். அதைக்கூட பகுத்தறிவுவாதிகள்தான் சொல்கிறார்களே தவிர நானில்லை” என்றும் நழுவியிருக்கிறார்.

கர்மவிதிகளின்படிதான் எல்லாம் நடக்கின்றன எனும் நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். இல்லையென்றால், பம்பாய் பிராட்வே தியேட்டர் வாசலில் ஹார்மோனியத்தை வைத்து பாட்டு பாடிக்கொண்டிருந்த நெளஷாத்தும், சென்னை பிராட்வே தியேட்டரில் வடை விற்றுக்கொண்டிருந்த சிறுவன் எம்.எஸ்.வி.யும் இசைத்துறையில் இத்தனை பெரிய சிகரத்தைத் தொட்டிருக்க முடியுமா? என ‘நினைவு நாடாக்கள்’ நூலில் எழுதியிருக்கிறார்.

சமயோசிதமாகப் பேசி எதிராளியின் வாதத்தை முறியடிக்கக்கூடியவர். ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆரின் ‘தாழம்பூ’வும் சிவாஜியின் ‘அன்புக்கரங்களு’ம் தயாராகிக்கொண்டிருந்தன. இரண்டு திரைப்படத்திற்கும் வாலிதான் பாடல். அப்படியிருக்கையில், எதேச்சையாக சந்திக்க வந்த வாலியிடம் எம்.ஜி.ஆர், “உங்க அன்புக் கரங்கள் எப்ப ரிலீஸ்” எனக் கேட்கிறார்.

உங்க என்ற சொல்லில் இருந்த பொருள் வாலிக்கு புரிந்துவிட, “உங்க அன்புக்கரங்களில் இருந்து எனக்கு எப்போதுமே ரிலீஸ் இல்லையே” என பதிலளித்திருக்கிறார். அவர் தலைமையில் கவியரங்கங்களில் பங்குபெற்றபோது பல சமயங்களில் அவருடையமொழியறிவையும் சட்டென்று வந்துவிழும் வார்த்தை ஜாலங்களையும் கண்டு வியந்திருக்கிறேன்.

இன்னமுமே எனக்கு நினைவில் நிற்பது கமலஹாசன் பிறந்தநாள் விழா கவியரங்கம்தான். அவர் தலைமையில் நான், கபிலன், இளையகம்பன் ஆகியோர் கவிதை வாசித்தோம். அப்போது கபிலன் கமலைக் குறித்து சொல்லும்போது, “நீ பூணூலை அறுத்த புதிய பாரதி” என்றார்.

கவியரங்கைக் காண வந்திருந்தவர்கள் அனைவரும் கமல்ஹாசனின் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள். கபிலன் அப்படிச் சொன்னதும் அரங்கமே கிடுகிடுக்கும் அளவுக்குக் கைதட்டல். பிறகு நானும் இளையகம்பனும், விவேகாவும் வாசித்தோம். எல்லோருடைய கவிதைகளையும் வாழ்த்திய அவர், கபிலனை மட்டும் பாராட்டவில்லை. மாறாகக் கோபித்துக்கொண்டார்.

பிறந்தநாள் விழாவில், “ஏன் அறுக்கிறதைப் பத்தியெல்லாம் பாடணும்” எனக் கேட்டார். தலைமைக் கவிஞராக இருப்பவர், அரங்கை ஒழுங்கு செய்து கொடுக்கலாமே தவிர, இதைத்தான் வாசிக்கவேண்டும், அதைத்தான் வாசிக்கவேண்டும் என ஆணையிட முடியாது.

பூணூலை அறுத்த புதிய பாரதிக்குக் கோபித்துக்கொண்ட அவரே பத்து வருடங்கள் கழித்து, பெரியார் திடலில் நடந்த தொல்.திருமாவளவனின் பிறந்தநாள் விழா கவியரங்கில் “கலித்தொகைபோல் நீயொரு தலித்தொகை” என்றார். அருகில் அமர்ந்திருந்த என்னிடம் “என்னய்யா தலித்தொகை புதுசா இருக்கா” என்று புன்முறுவினார்.காலத்திற்கும் களத்திற்கும் சூழலுக்கும் ஏற்பவே அவருடைய வார்த்தைகளும் சிந்தனைகளும் பின்னப்பட்டன.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 52

தலைவர்கள் குறித்தும் தனி நபர்கள் குறித்தும் வாலி எத்தனையோ கவிதைகளை எழுதியிருக்கிறார். தலைவர்களையும் தனி நபர்களையும் மேடையிலேயே துதிபாடியிருக்கிறார். முதல் மாதம் கலைஞரையும் இரண்டாவது மாதம் ஜெயலலிதாவையும் மூன்றாவது மாதம் வைகோவையும் நான்காவது மாதம் மூப்பனாரையும் அவர் வாழ்த்துவதைப் பார்த்தவர்கள், ‘வாலி ஏன் எல்லோரையும் உச்சியில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்?’ என்றிருக்கிறார்கள். ‘ஒரு கவிஞனுக்கு அரசியல் வேண்டாமா? எல்லோரையும் புகழ்கிறார் என்றால் அவர் அரசியல்தான் என்ன?’ எனவும் கேட்டிருக்கிறார்கள். ‘சமூகம் சார்ந்து சிந்திக்க வேண்டுமானால், எது சிறந்த கொள்கையாகப்படுகிறதோ அதைப் பற்றிக்கொண்டுதானே நிற்கவேண்டும்.
2.jpg
அப்படியில்லாமல் அந்தத் தலைவரையும் புகழ்வது, இந்தத் தலைவரையும் புகழ்வது என்றிருந்தால் அந்த வார்த்தைகளுக்கு என்ன மதிப்பிருக்க முடியும்?’ எனச் சர்ச்சித்திருக்கிறார்கள். அதையெல்லாம் தெரிந்து கொண்ட வாலி, “எல்லோரிடமும் கடவுள் இருக்கிறார் என்னும் எண்ணமுடையவனே நான்...” என எளிதாகக் கடந்திருக்கிறார். “என்மீது விமர்சனம் வைப்பவர்கள், எல்லோரையும் விமர்சிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். என்னால் யாருமே புண்படக்கூடாது என்பதுதான் என் எச்சரிக்கை. மேலும், புல் பூண்டில்கூட இறைவன் இருப்பதாகக் கருதினால் எதை, யாரை தூஷிக்க வாய்வரும்...” என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்’, ‘பெரும் புள்ளிகள்’ ஆகிய இரண்டு தொகுப்பில் அவர் எழுதிய வாழ்த்துக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவர் காவியம் இயற்றுவதிலும் ஆர்வம் காட்டினார். ‘அவதார புருஷன்’, ‘பாண்டவர் பூமி’, ‘பகவத் கீதை’, ‘கிருஷ்ண விஜயம்’ ஆகியவை நூல்களாக வெளிவந்துள்ளன. புதுக்கவிதை வடிவில் அவர் காவியங்களை எழுத வேண்டுமென விரும்பியிருக்கிறார். ஆழ்ந்த பக்தியும் மொழிப்பற்றும் உடைய அவர், இக்காலத்திற்கு ஏற்றவாறு காவியங்களை ஆக்கி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இயைபுத் தொடைகளில் அதிக கவனம் செலுத்தும் அவருடைய சொல்லாடல்கள் வாசிக்கத் தக்கன.

ஒரு சொல்லுக்கு இத்தனை அர்த்தங்களா எனவும், இத்தனை அர்த்தங்களுக்கும் ஒரே சொல்லா எனவும் அக்காவியங்களில் வார்த்தைகளை அருவிபோல் கொட்டியிருப்பார். சோ.ராமசாமி சொல்வதைப் போல, ‘பாண்டவர் பூமி’யில் சரித்திரமும், ‘அவதார புருஷனி’ல் பக்திப் பரவசமும், ‘பகவத் கீதை’யில் தத்துவமும் அவருக்கு மட்டுமே சாத்தியம். விரிந்த தளத்தில் பக்தி நூல்களையும், சரித்திர ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளாமல் அக்காவியங்களை அவரால் ஆக்கியிருக்க முடியாது. அதே சமயத்தில் சோ.ராமசாமி இயக்கிய ‘முகமது பின் துக்ளக்’ திரைப்படத்தில் ‘அல்லா அல்லா...’ என்றொரு பாடலை எழுதியிருப்பார்.

அப்படம் வெளிவரவிருந்த சமயத்தில் அப்படம் இஸ்லாமி யர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படமென்று சொல்லப்பட்டது. வதந்தி பரவியிருந்தது எனவும் சொல்லலாம். பிரதமர் இந்திராகாந்தி வரை தலையிட்டுத்தான் அப்படம் வெளிவந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படமாக எண்ணியவர்களின் வாயை அடைப்பதற்கே ‘அல்லா அல்லா...’ இணைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த எதிர்ப்பாளர்கள், அப்பாடலைக் கேட்டதும் கைதட்டி ஆரவாரம் செய்தது தனிக்கதை. ஒரு பாடலால் ஒரு படத்தைக் காப்பாற்ற முடியும் என நிரூபித்தவராக வாலி இருந்திருக்கிறார்.

ஆனாலும், அப்பாடலில் வாலி, அல்லாவுக்கு இணை வைத்து நபியைச் சொல்லியிருப்பதால் இலங்கை வானொலியில் இன்று வரை அப்பாடல் ஒலிபரப்பப்படவில்லை. ‘சமரசமில்லாமல் வாழ்வில்லை’ என்பதை தாரக மந்திரமாகக் கொண்டிருந்த வாலி, தன்னுடைய சுயமரியாதையை யாராவது சமரசம் செய்து கொள்ளச் சொன்னால் முகத்தில் அடித்தாற்போல் பேசியிருக்கிறார். ஒருமுறை இயக்குநர் பாலச்சந்தர், வாலியின் பாடலைக் கேட்டுவிட்டு, “இவ்வளவு சிறப்பாக பாடல் இருப்பதால் அது கண்ணதாசன் எழுதியதாக நினைத்தேன்...” என்றிருக்கிறார்.
2a.jpg
உடனே வாலியும், “இவ்வளவு சிறப்பாக குடும்பக்கதை வந்திருப்பதால் நானும் இப்படத்தை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்...” என்றிருக்கிறார். சரிக்குச் சரியாக வாதிடுவதில் அவர் சமர்த்தர். பாடல் வரிகளில் திருத்தம் கேட்கும் பொழுது, சரியான காரணங்களைச் சொல்லாவிட்டால் சண்டைதான். தன்னை அப்டேட் செய்துகொண்டே இருந்ததால் ஒரு பாடலில் எங்கே ஆங்கிலத்தை கலக்கலாம், எங்கே ஆங்கிலத்தைக் கலக்கக்கூடாது எனப் புரிந்து வைத்திருந்தார். வேகமான பாடல்களில் மட்டுமே ஆங்கிலப் பிரயோகங்களை அனுமதிப்பார். அதுவல்லாத மெல்லிசைப் பாடல்களில் எங்கேயுமே ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியதில்லை. இயக்குநரே விரும்பினாலும் தவிர்த்துவிடுவார்.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் காட்டலாம். அதுகூட அவர் பார்வைக்கு எட்டாமல் நடந்திருக்கலாம் என்றே நம்புகிறேன். வாலியின் திரைவாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கின்றன. திரும்பிய திசையெல்லாம் அவருடைய பாடல்களே காற்றை நிறைத்திருக்கின்றன. இந்த இடத்தில் அவர், திரைப்படங்களுக்கு எழுதிய திரைக்கதைகளையும் வசனங்களையும் பற்றிச் சொல்ல வேண்டும். அவருடைய படங்களில் என்னை மிகவும் கவனிக்க வைத்தது, ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்னும் திரைப்படம். அப்படத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த ஜோதிபாண்டியன் இயக்கியிருப்பார். தேசிய விருது பெற்ற அத்திரைப்படம், இட ஒதுக்கீட்டை விமர்சித்திருந்தது. காயத்ரி என்னும் பெயருடைய பிராமணப் பெண், கருப்பாயியாக மாறி கலெக்டராகிவிடுவார்.

காயத்ரி ஏன் கருப்பாயியாக மாறினாள் என்பது கதை. மண்டல் கமிஷனைப் பற்றி தீவிரமான விவாதங்கள் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அப்படம் வெளியானது. ஆனபோதும், அப்படத்தை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எடுக்கப்பட்டதால் அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பு ஜோதிபாண்டியனுக்குக் கிடைக்காமல் போனதோ என்னவோ? ஒரு திரைப்படம் எந்த விஷயத்தையும் பேசலாம். பொதுக்கருத்துக்கு அல்லது பொதுப்புத்திக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. மாற்றுக் கருத்துக்கும் மாற்று சிந்தனைகளுக்கும் இடமளிக்கத் தவறுகிற சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழாதென்பதே ஜனநாயகவாதிகள் சொல்வது.

‘ஒரே ஒரு கிராமத்திலே’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஓலக் குடிசையிலே’ என்னும் பாடல் எப்போதும் என் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது. இளையராஜாவின் குரலில், மெய்மறக்கச் செய்த அவ்வரிகள் நாடோடித் தாலாட்டு வகைக்கு நல்ல சான்று. ஆரம்பகாலங்களில் நாடகங்களை எழுதியும் நடித்தும் அனுபவம் பெற்றிருந்ததால், அவருக்கு திரைக்கதைகளை அமைப்பதிலும் திரையில் தாமே தோன்றி நடிப்பதிலும் சிரமம் இருக்கவில்லை. இயக்குநர் பாலச்சந்தர் சொல்லிக் கொடுத்ததால்தான் திரைப்படத்திலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தேன் என அவர் சொல்லியிருந்தாலும், காலத்தையும் களத்தையும் சூழலையும் கருத்திற்கொண்ட ஒருவருக்கு, எல்லாமே சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது.

தனக்கு இடப்படும் பணி எதுவோ, அதைச் சரியாகச் செய்துவிடுவதில்தான் மொத்தமுமே இருக்கின்றன. மெட்டுக்கு வார்த்தைகளை அளந்து அளந்து போடக்கூடிய பாடலாசிரியர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள் என்றொரு கருத்து நிலவுகிறது. ஒருவகையில் அது உண்மையும்கூட. வார்த்தைகளின் பொருளும் குறியும் அவர்களை அறியாமலே அவர்களை உணர்ச்சிக்குத் தள்ளிவிடும். கலைஞரின் திரைக்கதைகளைத் தொடர்ந்து படமாக எடுத்துவந்தவர் இராம.நாராயணன். ஒருகட்டத்தில் மக்களின் நாடி பிடித்து, பாம்புகளை வைத்து படமெடுக்க ஆரம்பித்தார். அப்போது அவருடைய படங்களுக்கு வாலிதான் பாடல்கள் எழுதிவந்தார்.

இராம.நாராயணன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இயக்கி வெளிவந்த ஒரு படத்திற்கு பாராட்டு விழா நடந்திருக்கிறது. அந்த விழாவில் பேசிய வாலி, மொத்த நாகத்தையும் வைத்து படமெடுக்கும் இராம.நாராயணனுக்கு இனி, துத்தநாகத்தை வைத்துத்தான் பாடலெழுத வேண்டுமென ஹாஸ்யமாகப் பேசியிருக்கிறார் அப்போது மேடையிலிருந்த கலைஞர், “நான் துத்தநாகத்திற்கெல்லாம் பாட்டெழுத மாட்டேன்” என்று செல்லமாய் வாலியை சீண்டியிருக்கிறார். அந்த வாக்கியம் வாலிக்கு வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது. வார்த்தைதானே, விட்டுவிடலாம் என சமாதானமடையவில்லை. மறுநாள், கலைஞரே பேசி வருத்தம் தெரிவித்தவுடன்தான், மீண்டும் இராம. நாராயணனுக்கு பாடல் எழுத சம்மதித்திருக்கிறார்.
2b.jpg
இறுதிக் காலங்களில் ஒருநாள், இளம்கவிஞர்கள் எல்லோரையும் ஒருசேர சந்திக்க வேண்டுமென வாலி விரும்பினார். நண்பர் மை.பா.நாராயணன் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஒரு முழுநாள் இளம் கவிஞர்களோடு அவர் அடித்த இலக்கிய அரட்டைகள் மறக்க முடியாதவை. என் தோளிலும் இளையகம்பன் தோளிலும் கைகளைப் போட்டுக்கொண்டு, “ஒருபக்கம் பாரதி, இன்னொரு பக்கம் கம்பன், வேற என்னய்யா வேணும் வாழ்க்கையில” என்று குறும்பாகச் சிரித்த சிரிப்பு எதையோ இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. முதல் முதலில் வித்யாசாகரின் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்த அதே மிடுக்கோடும், அதே குண இயல்புகளோடுமே அவர் இறுதிநாளிலும் இருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பாட்டெழுத வாங்கியிருந்த அட்வான்ஸைத் திருப்பித் தரச்சொல்லிவிட்டுத்தான் மரித்திருக்கிறார். இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய ‘காவியத் தலைவனே’, அவர் கடைசியாகப் பாட்டெழுத ஒப்புக்கொண்ட திரைப்படம். ‘காவியக்கவிஞர்’ வாலி என்னும் அடைமொழிக்குப் பொருத்தமாகவே அவருடைய இறுதிச் சொற்களும் அமைந்தன என்பது எதார்த்தமில்லை. ‘பீமா’ என்னும் திரைப்படத்தில் ‘ரகசியக் கனவுகள்’ பாடலை எழுதிவிட்டு வீடு திரும்பிய பொழுது, அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி தொலைபேசியில் அழைத்தார். பாடலில் ஏதோ திருத்தம் இருக்கிறதுபோல என எண்ணிக்கொண்டு, தொலைபேசியை எடுத்த என்னிடம், “இன்னொரு பாடலிருக்கிறது. உடனே எழுதவேண்டும், முடியுமா?” என்றார்.

திரையில் என்னை அறிமுகப்படுத்தியவர் என்பதால் எதையுமே கேட்காமல், “தாராளமாக எழுதுகிறேன், மெட்டை அனுப்புங்கள்” என்றேன். சொன்னதுபோல மறுநாளே ‘எனதுயிரே எனதுயிரே’ என்னும் பாடலை எழுதிக்கொண்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஒலிப்பதிவுக் கூடத்திற்குப் போனேன். அங்கே போகும்வரை எனக்குத் தெரியாது, அப்பாடலின் மெட்டு, ஏற்கனவே வாலிக்குத் தரப்பட்டதென்று.‘‘ஒரு இயக்குநர், ஒரு பாடலாசிரியனின் சிந்தனைக்குப் பாடலை விட்டுவிட்ட பிறகு, அந்த சிந்தனையிலிருந்து நல்லதை எடுப்பதுதான் இயக்குநரின் வேலையே தவிர, தான் சிந்தித்ததை தாங்கள் ஏன் எழுதவில்லை எனக் கேட்பது அபத்தம்’’ என்று ஆரம்பத்தில் வித்யாசாகர் ஒலிப்பதிவுக்கூடத்தில் வாலி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. என்னைப் பாட்டெழுத அழைக்கும் இயக்குநர்களிடம் இப்பொழுது நான் சொல்வதும் அவர் சொன்னதுதான். ‘‘என்ன வேண்டுமென்று சொல்லுங்கள், எழுதிவிடலாம்.’’
 

(பேசலாம்...)

http://www.kungumam.co.in

Posted
 
 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 53
 

நம்முடைய நினைவுகளில் இருந்து ஒருவர் அகலாமல் இருக்கிறார் என்றால், அவரை நாம் மறக்காமல் இருக்கிறோம் என்பதல்ல பொருள். மறுக்கவோ, மறக்கவோ முடியாத பல காரியங்களை அவர் நமக்குச் செய்திருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.
4.jpg
அவ்வாறு அவர் செய்திருக்கும் காரியங்கள் நல்லவிதமாக இருக்கும்பட்சத்தில் அவரை நாம் நம்முடைய இறுதிமூச்சு உள்ளவரை விலகுவதில்லை. எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் என்னுடைய நினைவுகளில் மட்டுமல்ல; நிஜத்திலும் வாழ்ந்துகொண்டிருப்பவர்.

எழுத்தின் சகல நுட்பங்களையும் கற்பித்து, என்னை எனக்கே அறிமுகப்படுத்திய அவர் இறந்து பதினேழு ஆண்டுகள் ஆகின்றன. இந்த பதினேழு ஆண்டுகளில் அவரை நான் நினைக்காத நாளில்லை என்று சொல்வது மிகையாகப் படலாம். ஆனால், அதுதான் உண்மையென்பதை என்போல அவரிடமிருந்து விஷயதானத்தைப் பெற்றுக் கொண்டவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.

தனிச்சுற்று இதழ்களிலும் பாக்கெட் நாவல்களிலும் கவிதைகளை எழுதிக்கொண்டு இருந்த என்னை, நவீன இலக்கியத்தின் பக்கமும் நல்ல எழுத்தாளர்களை நோக்கியும் பயணிக்க வைத்தவர் அவரே.
4a.jpg
அவருடைய அறிமுகம் வாய்க்கும் வரை மரபுக் கவிதைகளைத் தாண்டி நான் வரவில்லை. ஓரளவு யாப்புப் பயிற்சி பெற்றிருந்த காரணத்தால் அதையே கவிதை எழுதுவதற்கான முழுத் தகுதியாக நம்பிக்கொண்டிருந்தேன். பெரிய வாசிப்பில்லை. ஆழ்ந்து ஒரு விஷயத்தை அணுகி, அதைப் பக்குவத்துடன் பார்க்கவும் பழகியிருக்கவில்லை.

பத்திரிகைகளில் பெயர் பார்த்து சந்தோஷப்படும் சராசரி மனநிலையில்தான் என் பொழுதுகள் கழிந்தன. பத்திரி கைகளில் ‘ஸ்பேஸ் ஃபில்லர்’களாக பிரசுரிக்கப்பட்ட என்னுடைய கவிதைகளை, உலகமே உற்று நோக்கிக்கொண்டிருப்பதான பாவனையில் மிதந்துகொண்டிருந்தேன்.

அக்காலங்களில் கவிதை என்று பிரசுரமானவற்றை என் எந்தக் கவிதைத் தொகுப்பிலும் இன்றுவரை இணைக்கவில்லை. காரணம், அது கவிதைகளே இல்லை என்பதை ப்ரகாஷ் போன்றவர்களே புரியவைத்தார்கள்.

துணுக்குகளை மடக்கி எழுதியதை கவிதை என்னும் பெயரில் அப்போதைய தினசரிகள் தங்கள் இலவச இணைப்புகளில் பிரசுரித்துக்கொண்டிருந்தன. அதையும் கவிதையாகக் கருதி, இந்த வாரத்தில் என்ன வந்திருக்கிறது எனக்கேட்டு, பாராட்டியும் விமர்சித்தும் என்னை ஒழுங்கு செய்தவர் தஞ்சை ப்ரகாஷே.

வெறும் ஆர்வப் பெருக்குடன் அலைந்துகொண்டிருந்த என்னை, இலக்கியத்தின் முகத் துவாரத்தில் கொண்டு நிறுத்தும் காரியத்தைச் செய்தவர் அவர்தான். அவருடைய பாராட்டுகளைப் போலவே விமர்சனங்களும் மென்மையானவை. ‘தூங்குகிற குழந்தையின் கையிலிருக்கும் கிளுகிளுப்பையை பிரித்தெடுப்பதுபோல’ என கு.அழகிரிசாமி எழுதுவாரே அப்படி.

தோற்றத்தில் ஓஷோவைப் போலிருக்கும் அவர், உதிர்க்கும் சொற்களில் உண்மையும் அன்பும் மிகுந்திருக்கும். தாடியை நீவிக்கொண்டே அவர் பேசும் அழகில் சொக்கிக் கிடந்த நாள்கள் அநேகம்.நெடிய உருவம். உருண்ட விழிகள்.

தீட்சண்யமான பார்வை. எதைப் பற்றியும் தெளிவாக சொல்பவராகவும் சொல்லித்தரக்கூடியவராகவும் அவர் இருந்தார். வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதிவந்த நான், அவரின் அறிவுறுத்தலுக்குப் பிறகே இலக்கியப் பத்திரிகைகளுக்குத் திரும்பினேன்.

இலக்கியத்தை வாசித்து நுகரும் பயிற்சியை அவரில்லாமல் நான் பெற்றிருப்பேனா என்பது சந்தேகமே. அவர் என் ஆசான்களில் முதன்மையானவர். எனக்கு மட்டுமல்ல, எனையொத்த தஞ்சை படைப்பாளிகள் பலருக்கும் அவர்தான் ஆசானெனும் ஸ்தானத்தில் இருந்தார்; இருக்கிறார்.

அவருக்கு எவ்வளவு தெரியுமென அளவிடக்கூடிய தராசு எங்களிடம் இருக்கவில்லை. அவர் ஒருவரைத் தவிர யாருடைய பேச்சையும் நாங்கள் கேட்டதுமில்லை. அவரோடு முரண்படுவோம். ஆனால், அவர் உறவை முறித்துக்கொள்ள எண்ணியதில்லை.

எந்த இலக்கிய சர்ச்சைக்கும் தீர்ப்பு சொல்லக்கூடிய நீதிமானாக அவரை வைத்திருந்தோம். அவரும், தான் சொல்வதைக் கேட்கிறார்கள் என்பதற்காக கூடுதலாக எங்களை வழிநடத்த மாட்டார். எங்கள் போக்கில் எங்களை அனுமதித்து இலக்கிய சாளரத்தைத் திறந்துவிடுவார்.

ஒருநாள் இருநாள் அல்ல, ஒவ்வொரு நாளும் புதிய செய்திகளைச் சொல்பவராக அவர் இருந்தார். ஒரே அடியாக கருத்துகளை அடித்து நொறுக்குபவராக அவர் இருந்ததில்லை. இது அந்தக் காலத்தில் அப்படி இருந்தது, இப்போது இப்படி இருக்கிறது என்று மட்டுமே விளக்குவார்.

அறிந்தும் அறியாமல் நாங்கள் முன்வைக்கும் கேள்விகளை உள்வாங்கி, அதற்குரிய பதில்களை அளிப்பார். அவர் சொல்வதெல்லாம் சரியா, சரியில்லையா என்னும் சந்தேகமே எங்களுக்கு எழுந்ததில்லை. ஏனெனில், அவருடைய உரையாடல் தொனியில் அத்தகைய தெளிவு இருக்கும்.

பழந்தமிழ் இலக்கியத்தில் பாண்டித்தியம் உடைய ஒருவர், நவீன இலக்கியத்தை அலட்சியப்படுத்துவார். அதேபோல நவீன இலக்கியத்தை பயின்ற ஒருவர், பழந்தமிழ் இலக்கியத்தை மருந்துக்குக்கூட சேர்த்துக்கொள்ள மாட்டார். ஆனால், தஞ்சை ப்ரகாஷ் இரண்டையும் பழுதற பயின்றவர்.

மரபின் தொடர்ச்சியே புதுமை என்று சொல்லக்கூடிய திராணி அவரிடமிருந்தது. புதுமை என்பதற்காக பொக்குகளையும் புழுதிகளையும் அவர் கொண்டாடியதில்லை. உலகக் காவியங்களை விரல் நுனியில் வைத்திருந்த அவர், பல மொழிகளைக் கற்றிருந்தார்.

ஆங்கிலம், சமஸ்கிருதம், மராட்டி, தெலுங்கு, ப்ரெஞ்ச், உருது, கன்னடம், வங்கம், மலையாளம் என பத்து மொழிகளில் அவருக்குப் புலமை இருந்தது. அம்மொழிகளில் அவ்வப்போது வெளிவரும் நூல்களை கவனித்து வாசிக்கும் பழக்கத்தையும் வைத்திருந்தார்.தஞ்சை கீழராஜவீதியில் ரப்பர் ஸ்டாம்ப், பிளாக் மேக்கிங்குடன் சேர்ந்த அச்சகக் கூடத்தை  நடத்தி வந்தார்.

அதை அச்சகக் கூடமென்று சொல்வதைவிட, இலக்கிய அரட்டைக்கூடம் என்றுதான் சொல்லவேண்டும். எப்போதும் அவரைச்சுற்றி ஓர் இலக்கிய வட்டம் அமர்ந்திருக்கும்.அந்த வட்டத்தில் பிரபஞ்சன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், எம்.வி. வெங்கட்ராம், வல்லிக்கண்ணன், வண்ணநிலவன், தேனுகா, மாலன், கரிச்சான்குஞ்சு, வெங்கட்சாமிநாதன், தி.ஜானகிராமன், வேல.ராமமூர்த்தி, தஞ்சாவூர்க் கவிராயர், சி.எம்.முத்து, நா.விச்வநாதன் எனப் பலர் அடங்குவர்.

“மிகச் சிறிய வசதிகளை உடைய ஒருவர், எப்படி ஆண்டுக்கணக்கில் நவீன இலக்கியத்தின் மீது ஆர்வமும் கவனமும் வைத்திருக்க முடியும்” என அசோகமித்திரன் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அந்த ஆச்சர்யத்தில் அவரை “இலக்கிய யோகி” என்றும் அழைத்திருக்கிறார்
ஒருவர் எழுத்தாளராக ஆவதற்கு எவ்வளவு படிக்கவேண்டும் என்கிற அளவீடு இல்லை. எவ்வளவு படிக்கவேண்டும் என்பதுடன் எதையெதை படிக்கவேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தன்னுடைய எழுத்துகளை பிறர் படிக்கவேண்டும் என்று எண்ணக்கூடிய ஒருவர், பிறருடைய எழுத்துகளை எவ்வளவு படித்திருக்கிறார் என்பதில்தான் எழுத்தின் சூட்சுமங்கள் அடங்கியிருக்கிறது. நிரம்பப் படித்துவிடுவதால் மட்டுமே ஒருவர் எழுத்தாளரென்னும், அந்தஸ்தைப் பெற்றுவிடுவதில்லை.

எதுவுமே படிக்காமல், தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை எழுதி, பெரிய எழுத்தாளர் எனும் பெயரை வாங்கிய எத்தனையோ எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். நான் சொல்வது, பள்ளிப் படிப்பையோ, பட்டப் படிப்பையோ அல்ல.

தன் வாழ்நாள் முழுக்க புத்தக வாசத்திலேயே உழன்றவராக எழுத்தாளர் தஞ்சை. ப்ரகாஷைச் சொல்லலாம். அவர் வாசித்தறியாத புத்தகங்களே இல்லை. நான்கு தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களை அவர் வாசித்திருந்தார். ஆழ்ந்தும் அகன்றும் அவர் வாசித்த பல விஷயங்களை எழுதவும் பேசவும் பழகியிருந்தார். நுனிப்புல் மேய்ந்து கருத்துச்சொல்லும் வழக்கம் அவரிடம் இருந்ததில்லை. எதையும் ஆய்ந்து விளக்கமளிக்கும் ஆற்றல் அவரிடமிருந்தது. பிரபலமான எழுத்தாளர்களிடம் எப்படி நடந்துகொள்வாரோ அப்படியேதான் பிரபலமில்லாத எழுத்தாளர்களிடமும் நடந்துகொள்வார்.

அன்றே தன் முதல் கதையை, கவிதையை எழுதியவராய் இருந்தாலும், அவரைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான். என்னுடைய பள்ளிப் பருவத்தில் பெரும்பாலான விடுமுறைகளை அவருடன் கழித்திருக்கிறேன். என் தந்தையைக் காட்டிலும் கூடுதலான வயதுடைய அவர், எந்த இடத்திலும் என்னை சிறியவனாக நடத்தியதில்லை.

வயதுக்கு மீறிய செய்திகளை அறிந்துகொள்வதால் வழிமாறிவிடுவானோ என்று என் வீட்டிலுள்ளவர்களுக்கு கவலையிருந்தது. இலக்கியத்தின் இன்னொரு பகுதியைத் தெரிந்துகொள்ள முனைந்து, படிப்பிலும் ஒழுக்கத்திலும் தவறிவிடுவானோ என்றும் அஞ்சியிருக்கிறார்கள்.ஓரிருமுறை அப்பாவேகூட தஞ்சை ப்ரகாஷிடம் பழகுவது குறித்து விசனப்பட்டிருக்கிறார். “அவர் ஒருமாதிரி எழுதக்கூடியவர். அவருடன் உனக்கென்ன பழக்கம்” என்றிருக்கிறார்.

அந்த ஒருமாதிரியை கடைசிவரை ப்ரகாஷ் என்னுடன் பகிர்ந்துகொள்ளவே இல்லை.எழுத்தின் உச்சங்களை மட்டுமல்ல; எழுதுவதால் நேரும் கஷ்டங்களையும் அவர்மூலமே நான் அறிந்துகொண்டேன்.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in

  • 2 weeks later...
Posted
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 54

வரலாற்றுத் தரவுகளில் இருந்து வாழ்வை புரிந்துகொள்ளவும் அப்புரிதலில் இருந்து இலக்கியம் செய்யவும் தஞ்சை ப்ரகாஷ் அளவுக்கு எனக்குக் கற்றுக்கொடுத்தவர் எவருமில்லை. அவரை யாரென்று அறிந்துகொள்வதற்கு, என்னுடைய இரண்டாவது கவிதை நூலான ‘பஞ்சாரத்’திற்கு அவர் எழுதிக்கொடுத்த ‘நிசம்பசூதனி’ குறித்த ஆய்வுரை ஒன்றுபோதும். இரண்டாம் மாறவர்மன் தஞ்சையை அழிக்க படையெடுத்து வந்தபோது, அதை தடுத்து நிறுத்திய காளியைப் பற்றிய ஆய்வுரையே அது. நோயுற்று சென்னை ரெட்டி மருத்துவமனையில் இருந்தபோது, அந்தஆய்வுரையை அவர் சொல்லச் சொல்ல பிரதியெடுத்தவர், கவிஞர் இளம்பிறை.
3.jpg
உடல் சுகமில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோதும், என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியதை அவ்வளவு எளிதாக என்னால் மறந்துவிடமுடியாது. தஞ்சையைக் காப்பாற்றிய காளியால் தஞ்சை ப்ரகாஷைக் காப்பாற்ற முடியாது போனது துர்லபமே. தனக்குக் கிடைத்த ஆசானிடமிருந்து அறிவைப் பெறுவது இயற்கை. அன்பைப் பெறுவதுதான் பாக்கியம். அறிவுக்கு அப்பால் எவ்வளவோ இருப்பதாக அவர் சொல்லுவார். மனிதர்கள் அறிவைக் காட்டிலும் நம்பிக்கைகளின் வழியேதான் வாழ்வை நடத்துவதாக எண்ணியுமிருக்கிறார். காளி காட்சியளித்து, தஞ்சாவூரைக் காப்பாற்றியதாக அவர் சொல்லியதை நான் ஏற்கவில்லை.

“அது எப்படி அறிவுக்குப் பொருத்தமில்லாமல் வரலாற்றை வடிவமைக்க முடியும்?” என்றிருக்கிறேன். “அறிவால் எல்லாவற்றையும் அறிய முடியுமென்றால் மெய்ஞானத்தை என்னவென்பீர்கள்?” என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார். விவாதங்களை அவர் நடத்திக்கொண்டு போகும்விதம் அலாதியாயிருக்கும். எதிர்த்தரப்பினர் என்ன வாதம் வைத்தாலும், அதை மறுத்தே தீருவதென்னும் முனைப்பு அவரிடம் இருந்ததில்லை. அறிவைவிடவும் நம்பிக்கைகள் மீதுதான் அவருக்குப் பற்று இருந்தது. கார்டன் மார்க்ஸ் லயனல் ப்ரகாஷ் என்னும் இயற்பெயருடைய அவர், ஒருமுறைகூட தன்னை கிறிஸ்தவராக வெளிப்படுத்தியதில்லை.

மாறாக ‘அங்கிள்’ எனும் சிறுகதை மூலம் கிறிஸ்தவ மதகுருமார்களின் கண்டனத்திற்கு ஆளானார். ‘பற்றி எரிந்த தென்னை மரம்’, ‘கடைசிக்கட்டி மாம்பழம்’, ‘மேபல்’, ‘பொறா ஷோக்கு’ போன்ற கதைகளின் வழியே தஞ்சை மாவட்டத்து வாழ்வியலை மிக அழகாக சித்திரித்திருக்கிறார். அசலான தஞ்சை மண்ணை அதன் இயல்பான தன்மையுடன் எழுதிக்காட்டியவர் அவர். மராட்டியரின் வருகைக்குப்பின் தஞ்சை நகரில் ஏற்பட்ட சம்பிரதாய மாற்றங்களை அவர் படைப்புகளில் மட்டுமே காண முடியும். அக்ரஹார வாடையில்லாத அவருடைய தமிழில் காவிரி ஓடிய தஞ்சையை அறியலாம். பெரும் உணர்ச்சிப் பிரவாகத்தில் எழுதிச்சொல்லும் அவருடைய எழுத்துமுறை, ஏனைய தஞ்சை எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது.

தஞ்சை ப்ரகாஷின் முப்பத்தொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை பொன்.வாசுதேவன் கொண்டுவந்திருக்கிறார். அத்தொகுப்பிலுள்ள கதைகளை இப்போது வாசித்தாலும் ஆரம்பகாலங்களில் என்னுள் ஏற்படுத்திய அதே அதிர்வையும் ஆச்சயர்த்தையும் ஏற்படுத்துகின்றன. என்றாலும், தஞ்சை ப்ரகாஷின் எழுத்துகள், ஒருபோதும் கதையைச் சொல்வதற்காக எழுதப்பட்டதல்ல. எழுத்தின் வழியே வாழ்வைச் சொல்வதற்காக எழுதப்பட்டவை. தொன்மைமிக்க தஞ்சை நகரின் சிதிலமடைந்த இன்றைய நிலையை விவரிப்பவை. தஞ்சை சமஸ்தானத்தையும் மராட்டிய மன்னர்களின் வருகையையும் அவர் எழுத்துகளின் வழியே கண்டறியலாம். மரபு மீறலையும் ஒழுக்க நெறிகளையும் கேள்விக்குட்படுத்தவே அவர் எழுதினார்.

தன்மீது ஒட்டியுள்ள அழுக்கை மறைக்கவும் அதை துடைத்தெறியவும் ஒரு சமூகம் எவ்வளவு பாடுபடுகிறது என்பதையே அக்கதைகளில் அவர் பிரதானப் படுத்தியிருக்கிறார். அவருடைய ‘கரமுண்டார் வூடு’, ‘மீனின் சிறகுகள்’, ‘கள்ளம்’ ஆகிய நாவல்களை வாசித்தவர்கள் என் கூற்றிலுள்ள உண்மையை உணர்வார்கள். மனிதர்களில் யாருமே ஒழுங்கில்லை என்பதுபோல அவருடைய நாவல்கள் பின்னப்பட்டிருந்தாலும், எளிய மனிதர்களின் எதிர்பார்ப்புகளை அக்கதாபாத்திரங்கள் துல்லியமாக விளக்கிவிடும். தான் பிறந்த கள்ளர் சமூகத்தை கசடு நிரம்பிய சமூகமாக சித்திரிப்பதிலிருந்தே அவர் சொந்த சாதி அபிமானத்தைத் துறந்தவர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

திருக்காட்டுப்பள்ளியை அடுத்த உஞ்ஜினி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், இந்திய கிராமங்கள் முழுவதையும் அறிந்து வைத்திருந்தார். தமிழ் இலக்கியத்திற்கு அவருடைய பங்களிப்புகளாகச் சொல்ல நிறைய உண்டு. குறிப்பாக, அவர் ஏற்படுத்திய ‘கதைசொல்லிகள்’ அமைப்பு. முழுக்க முழுக்க கதைகளைச் சொல்வதற்காகவே அவர் ஓர் அமைப்பை உருவாக்கினார். அவ்வமைப்புமூலம் ஆயிரக்கணக்கான கதைகளை அவரும் பிறரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெரியகோயில் வாசலிலோ ராஜராஜசோழன் சிலைக்கு அடியிலோ அமர்ந்து அக்கதைகளைக் கேட்டுச் சிலிர்த்திருக்கிறேன். மனித மேன்மைகளையும் விகாரங்களையும் அக்கதைகளே எனக்குத் தெரியப்படுத்தின. அவ்வமைப்பை அவர் காரணமில்லாமல் தொடங்கவில்லை.
3a.jpg
ஆதியிலிருந்தே கதை சொல்லும் மரபு நம்முடையதென்று நிறுவும் ஆசை அவருக்கிருந்தது. கதைகளை எழுதிப் பழகாமல் சொல்லிப் பழகவேண்டுமென அவர் விரும்பினார். கதைகளைச் சொல்லும்பொழுதுதான் கற்பனைகள் விஸ்தரிக்கின்றன. எழுதும்போது அப்படியல்ல. எழுத்தில் ஏதோ ஒரு தடையிருக்கிறது. கேட்பவரின் முகக்குறிப்பை அறிந்து கதைகளைச் சொல்கையில், அக்கதையின் லட்சணம் தெரிந்துவிடும். எழுதப்படும் கதைகளுக்கான எதிர்வினைகள் முழுமையாகக் கிட்டுவதில்லை என்பது அவர் வாதம். தவிர எழுதுபவன் தன்னை நிறுவவே எழுதுவதாகவும் அவர் எண்ணினார்.

தஞ்சை ப்ரகாஷும் தஞ்சாவூர்க் கவிராயரும் இணைந்து தொடங்கிய ‘கதைசொல்லிகள்’ அமைப்பு வெகுகாலம் உயிர்ப்போடு இருந்தது. தமிழில் எழுதிவந்த பல முக்கியமான எழுத்தாளர்கள் அவ்வமைப்பில் கலந்துகொண்டு தங்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். தங்களால் எழுதப்பட்ட கதைகளே ஆனாலும், ஒருசிலர் தொடர்ச்சியாக கதையைச் சொல்ல முடியாமல் போன சம்பவங்களும் உண்டுதான். பெரும்பாலும் தஞ்சை ப்ரகாஷ் எழுதப்பட்ட கதைகளைச் சொல்லியதில்லை. அங்கேயே அப்போதே யோசித்துதான் சொல்லுவார். அதிசயத்தை நிகழ்த்துவதுபோல அவரே அவர் கதையில் கரைந்தும் போய்விடுவார். அவ்வமைப்பில் யார் வேண்டுமானாலும் கதைகளைச் சொல்லலாம்.

ஒருவரே இரண்டு மூன்று கதைகளைச் சொல்லவும் அனுமதியுண்டு. வெகு விமரிசையாக நடந்துவந்த அவ்வமைப்பை கேள்விப்பட்ட புராதன செவ்விந்தியரான எரிக் மில்லர் ‘உலகத்தின் இரண்டாவது கதைசொல்லிகள்’ என்று அவ்வமைப்பை பாராட்டியிருக்கிறார். நம்முடைய கர்ணபரம்பரைக் கதைகளையும், நாடோடிக் கதைகளையும் தஞ்சை ப்ரகாஷ் சொல்லக் கேட்பது தனி அனுபவம். வயதுக்கு வராதவர்கள் கேட்கக்கூடாத கதைகளும் அவர் சேகரிப்பில் இருந்தன. அதையெல்லாம் அவர் எழுதாமல் போய்விட்டாரே எனும் வருத்தம் எனக்குண்டு. எழுதாமல் இருக்கவே அமைப்பு தொடங்கிய அவரிடம் எழுத வேண்டுமென யாராவது கோர முடியுமா?

தஞ்சாவூர்க் கவிராயர் சொல்வதுபோல, எழுத்துக்கு விரோதியாகவே அவர் இருந்தார். “சொல்லும்போது கிடைக்கும் சுகம் எழுதும்போது வருவதில்லை” என்பது அவர் ஒப்புக்கு சொல்லியதில்லை. உணர்ந்து சொல்லியது. எழுத்துக்கு எதிர்த் திசையில் ஓர் எழுத்தாளர் என்னும் அடைமொழி தஞ்சை ப்ரகாஷுக்குப் பொருந்தும். உண்மையில், வடிவ நேர்த்திக்குள் வசப்பட்டுவிடும் கதைகளில் எதார்த்தமும் சத்தியமும் இடம்பெறுவதில்லை. அதன் காரணமாகவே தஞ்சை ப்ரகாஷின் கதைகள் சுதந்திரமான எழுத்துமுறையைக் கொண்டிருந்தன. எதற்குள்ளும் அடங்கிவிடாத அவருடைய சுதந்திர மனநிலைதான், ‘சும்மா இலக்கிய கும்பல்’ எனும் அமைப்பையும் உருவாக்கியது.

எழுதுவதெல்லாம் எழுத்தாவதில்லை. யாரோ ஒருவர் எழுதிய அல்லது சொல்லிய கதையைத் திரும்பச் சொல்லும்போது அக்கதையில் வரும் பாத்திரங்கள் புது உரு கொள்கிறது. அப்படி காலந்தோறும் உருவாக்கப்பட்ட கதைகளே நம்மையும் நம்முடைய வாழ்வையும் நடத்துவதாக அவர் நம்பினார். “பதிவு செய்து வைக்கலாமே” என்றால், “தேவையானதை காலமே பதிவு செய்துகொள்ளுமே” என்பார். காகிதங்களில் எழுதப்பட்டதைவிட காற்றில் கரைத்துவிட்ட கதைகள்தான் நிலைக்கின்றன என்பது அவருடைய நம்பிக்கை.

அவர் எழுத்தை புறக்கணிக்க இன்னுமொரு காரணம் இருந்தது. அக்காரணத்தை அவரே கட்டுரையாகவும் எழுதியிருக்கிறார். ‘எழுதுகிற பிழைப்பு’ என்னும் கட்டுரையில், இன்றைய பத்திரிகைகள் எழுத்தாளனுக்கு தரும் ஊதியத்தைப் பற்றியும் கெளரவத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். எழுதிப் பிழைக்கும் பிழைப்பு, ஈனப் பிழைப்பு. ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க எழுதிப் பிழைக்கலாம் என எடுக்கும் முடிவு அபாயகரமானதே எனவும் வருந்தியிருக்கிறார். ‘காதுகள்’ நாவல் மூலம் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம், எழுதி ஈட்டிய தொகையில் தன்னையும் தன் மகள்களையும் கரையேற்ற பட்டபாடுகளை அருகிருந்து பார்த்தவர்களில் அவரும் ஒருவர்.

சுட்டுவிரலிலும் நடுவிரலிலும் இரத்தம் சொட்டச்சொட்ட எம்.வி.வெங்கட்ராம் எழுதிக்கொடுத்த ‘காதுகள்’ நாவலைப் பிரதியெடுத்து, அச்சுக்கு அனுப்பியவர் தஞ்சை ப்ரகாஷ்தான். நெசவுத் தொழிலிலும் ஜரிகை வணிகத்திலும் ஈடுபட்டுவந்த எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் ஒருகட்டத்தில்  எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கைக்கொண்டபோது அடைந்த ஏமாற்றங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. அதனாலோ என்னவோ அவர் இறுதிவரை எழுத்துக்கு எதிராகவே செயல்பட்டுவந்தார். ஒப்பீட்டளவில் குறைவாக எழுதியுள்ள தஞ்சை ப்ரகாஷ், எழுத்தைவிட அதிகமாக இலக்கியப் பேச்சில்தான் ஈடுபட்டார். சதா இலக்கிய உரையாடல்தான். நண்பர்களை வட்டமாக அமர்த்திக்கொண்டு அவர் அடிக்கும் இலக்கிய அரட்டைக்கு ஈடு இணை எதுவுமில்லை. நேரம் போவதே தெரியாமல் தனக்குத் தெரிந்ததையெல்லாம் எதிரே இருப்பவரிடம் கொட்டிவிடுவார்.
 

(பேசலாம்...)
  • 2 weeks later...
Posted

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 55

தன்னுடைய கதைகளை வெளியிட்டு புகழ் சேர்த்துக்கொள்ளும் ஆர்வம் தஞ்சை ப்ரகாஷுக்கு என்றைக்குமே இருந்ததில்லை. ‘பி.கே.புக்ஸ்’, ‘ப்ரகாஷ் வெளியீடு’ ஆகிய பதிப்பகங்கள் மூலம் கி.ராஜநாராயணன், அம்பை, க.நாசு, கே.டேனியல் உள்ளிட்ட பலருடைய படைப்புகளை அவர் வெளிக்கொணர்ந்திருக்கிறார். ‘பாலம்’, ‘வைகை’, ‘குயுத்தம்’, ‘சாளரம்’, ‘தஞ்சை முரசு’, ‘வெ.சா.எ’ ஆகியவை அவர் நடத்திய இலக்கிய இதழ்கள். பிறருடைய எழுத்துகளை அச்சில் பார்த்து குதூகலிக்கும் மனம் அவருடையது. எழுத்தாளர்களுடன் அவர் கொண்டிருந்த பற்றும் அன்பும் வேறு எவருக்கும் சாத்தியப்படாதவை. அவர் இந்த முகாமைச் சேர்ந்தவர், இவர் அந்த முகாமைச் சேர்ந்தவர் என்ற பாகுபாட்டோடு அவர் எவருடனும் பழகியதில்லை.
2.jpg
அவரைப் பொறுத்தவரை எல்லோருமே எழுத்தை நேசிப்பவர்கள். எழுத்தை நேசிப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர் நேசத்தில் உரிமை கோரலாம். எழுதினால் என்ன கிடைக்கும் என்னும் யோசனையே அவருக்கு இருந்ததில்லை. மேலும், எழுத்தின் வாயிலாகக் கிடைக்கும் அனுபவமே வாழ்க்கை என்னும் புரிதலை அவர் வைத்திருந்தார். எழுதுபவர்களிடையே  இருந்துவந்த குழு மனப்பான்மையை அவர் சட்டை செய்ததில்லை. ‘‘அவர்கள் சொல்வது ஒருவிதத்தில் சரி, இவர்கள் சொல்வது இன்னொருவிதத்தில் சரி...’’ என்பார். ‘‘இரண்டு பக்கமும் இருக்கிறீர்களே எது உங்கள் தரப்பு?’’

என்னும்போதுதான் தன்னுடைய முடிவுகளை அம்பலப்படுத்துவார். நல்ல இலக்கியம் என்பதற்கு அவர் வகுத்துவைத்திருந்த முன்முடிவுகளை அவர் எதற்காகவும் மாற்றிக்கொண்டதில்லை. ஒருமுறை கவிஞர் சுகனின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில், கவிதை குறித்த தன்னுடைய புரிதலை வெளிப்படுத்தினார். சுகன் அப்போது எழுதிவந்த கவிதைகள் நேரடித் தன்மையைக் கொண்டிருந்தன. ‘‘இதெல்லாம் கவிதைகளா?’’ என்னும் கேள்வியை எழுப்பி, எவை நல்ல கவிதைகள் எனவும் தஞ்சை ப்ரகாஷ் அக்கூட்டத்தில் விளக்கினார். அவரை அடுத்து பேசவந்த கவிஞர் ஆரூர் தமிழ்நாடனோ அப்பேச்சை கடுமையாக விமர்சித்து, “இதெல்லாம் கவிதையில்லை என்று சொல்பவர்க்கு கவிதை குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது...” என்றார்.

அவ்வளவுதான் அரங்கமே அல்லோலகல்லோலப்பட்டது. இரண்டு பக்கத்திலிருந்தும் கூச்சல், குழப்பம். ஒருகட்டத்தில் பிரச்னை பெரிதாகி கைகலப்பு வந்துவிடுமோ? என்றுகூட எண்ண வேண்டியிருந்தது. ஆனால், அவ்விழாவின் முடிவில் ஆரூர் தமிழ்நாடனை ஆரத்தழுவிக் கொண்ட முதல் ஆளாக தஞ்சை ப்ரகாஷ் இருந்தார். கருத்துகளை கருத்துகளால் மட்டுமே எதிர்கொள்ளத் தெரிந்தவராக தஞ்சை ப்ரகாஷ் தன்னை தகவமைத்துக் கொண்டிருந்தார். சுடுசொற்களையும் புன்னகையோடு ஏந்திக்கொள்வார். அவருக்கே அவருக்கான பார்வைகளை அவர் யாரிடமும் திணித்ததில்லை. அதே சமயம், அப்பார்வைகளை எந்த மேடையிலும் துணிந்து முன்வைக்கவும் தயங்கியதில்லை.

தஞ்சையின் அடையாளமாக பெரியகோவிலையும், சரஸ்வதி மகாலையும் சொல்பவர்கள், ப்ரகாஷை தஞ்சையின் இலக்கிய அடையாளமாகவே ஏற்றிருந்தார்கள். தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகள் பலரையும் நான், அவருடைய அச்சகக் கூடத்தில்தான் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நான் நடக்கத் தொடங்கியபோது தீவிரமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அரசியல் பத்திரிகையொன்றில் உதவி ஆசிரியராக இருந்த என்னை, ‘கணையாழி’க்கு மடைமாற்றியதில் அவருக்கும் பங்கு உண்டு. இலக்கிய ஆர்வத்துடன் அரசியல் பத்திரிகையில் பணியாற்றுவதிலுள்ள சிரமங்களை அவர் உள்வாங்கியிருந்தார்.

‘எரியீட்டி’ என்னும் தலைப்பில் அவருமே அரசியல் பத்திரிகையைத் தொடங்க ஆசைப்பட்டவர்தான். தன் இலக்கிய வாழ்வில் பெற்றிருந்த அனுபவங்களை காய்த்தல் உவத்தல் இல்லாமல் என்னுடன் பகிர்ந்த அவர், என் வளர்ச்சியை பெருமிதத்தோடு வரவேற்றார். எப்போது சென்னைக்கு வந்தாலும் ‘கணையாழி’ அலுவலகத்திற்கு வந்து என்னை வாழ்த்துவார். கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ பத்திரிகையில் எழுத்தாளர் வண்ணநிலவன் வேலை பார்த்த தகவலெல்லாம் அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. பத்திரிகைத்துறையிலும் பதிப்புத்துறையிலும் தனக்கு மிஞ்சிய ஏமாற்றங்கள் எனக்கு வந்துவிடக்கூடாதென எச்சரித்திருக்கிறார்.

இலங்கை எழுத்தாளர் கே.டேனியலின் ‘பஞ்சமர்’ நாவலை அவர் பதிப்பித்தபோது தலித் இலக்கியம் எனும் சொல்லாடல் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கவில்லை. அடுத்த முப்பது ஆண்டுகளில் தலித் இலக்கியம் பெரும் கவனத்தை ஈர்க்கும் என்பதை அவரால் முன்கூட்டியே யூகிக்க முடிந்தது. ப்ரகாஷ் பதிப்பித்த ‘பஞ்சமர்’ நாவலுக்கு ஸ்ரீலங்கா ‘சாகித்ய அகாடமி’ பரிசு கிடைத்தது. பரிசளிப்பு விழாவுக்கு எழுத்தாளர் டேனியலைத் தேடியபோதுதான், அவர் சிறையிலிருக்கும் விஷயமே அரசுக்குத் தெரிந்தது. பரிசை அரசு அறிவித்தபோது டேனியல், ‘பஞ்சமர்’ நாவலின் இரண்டாம் பாகத்தை சிறையிலிருந்தபடியே எழுதிக்கொண்டிருந்தார்.

டேனியல் மெத்தப் படித்தவரில்லை. இசங்களையோ, இலக்கிய அனுபூதிகளையோ கருத்திற்கொண்டு எழுதியவருமில்லை. மக்களின் பாடுகளே அவருடைய பாடு பொருளாயிருந்தன. உழைக்கும் வர்க்கத்தின் குரலையே அவருடைய எழுத்துகள் முழங்கின. ஒரு பக்கம் இனக்கலவரமும் இன்னொரு பக்கம் ஜாதிவெறியும் தலைவிரித்தாடிய இலங்கையை, டேனியல் ஒருவரே மக்கள் மொழியில் எழுதிக்காட்டியவர். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கெங்கோ இருந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிய அவருடைய இறுதிக்காலங்கள் தஞ்சாவூரில் கழிந்தன. அவருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்தவர்களில் பேராசிரியர் மார்க்ஸும் தஞ்சை ப்ரகாஷும் முக்கியமானவர்கள்.
2a.jpg
இலங்கை எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையும், டொமினிக் ஜீவாவும் டேனியலின் பால்யகால நண்பர்கள். இடதுசாரி இலக்கியத்தில் அதிருப்தியுற்ற எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஒருகட்டத்தில், முற்போக்கு இலக்கியம் என்பதற்கு மாற்றாக நற்போக்கு இலக்கியத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாட்டுக்குள் டேனியல் வரவில்லை. அதன் விளைவாக பால்ய நண்பர்களாக இருந்த மூவரும் பிரிந்துவிடுகிறார்கள். எஸ்.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவிலும் டொமினிக் ஜீவா மலையகத்திலும் டேனியல் தமிழகத்திலும் வாசம் செய்ய நேர்ந்தது. இந்தப் பிரிவை மூவரும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வருத்தத்தோடு பகிர்ந்திருக்கிறார்கள். கருத்து முரண்பாடுகளால் பிரிந்திருந்த அவர்கள் மூவரையும் இணைக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தன.

என்றாலும், எஸ்.பொன்னுத்துரையால் டேனியலின் சமாதியை மட்டுமே காண முடிந்தது. வெகுகாலம் கழித்து தஞ்சாவூருக்கு என்னுடன் வந்திருந்த எஸ்.பொன்னுத்துரைக்கு டேனியலின் கல்லறையைக் காட்டும் பொறுப்பை ஏற்றது தஞ்சை ப்ரகாஷும் என் அப்பாவும்தான். ராஜகோரி இடுகாட்டில் டேனியலுக்கு அஞ்சலி செலுத்தும்போது எஸ்.பொன்னுத்துரை வடித்த கண்ணீரின் சூட்டை தஞ்சை ப்ரகாஷ் பல வருடங்களாக சொல்லிக்கொண்டிருந்தார். “அறிவுக்கு அப்பால் வேறு ஒன்று உள்ளதைப்போல, இலக்கியத்திற்கு அப்பாலும் ஒன்று உள்ளது. அதுதான் எஸ்.பொன்னுத்துரையை அழவைத்தது...” என்ற சொற்களுக்கு ஆத்மநேசமே அடிப்படை.

சிறுவயதிலிருந்தே தமிழ் இலக்கியத்தில் துளிர்விடும் புதிய தலைமுறை படைப்பாளிகளுடன் சுற்றுபவராக தஞ்சை ப்ரகாஷ் இருந்திருக்கிறார். வசதியான குடும்பப் பின்னணி கொண்ட அவர், தன்னுடைய மூதாதையர்கள் சேமித்துக்கொடுத்த செல்வத்தையெல்லாம் இலக்கியத்திற்காகவே செலவிட்டார். மத்திய, மாநில அரசு வேலைகளைத் துறந்துவிட்டு. இலக்கியமே வாழ்வென்று இயங்கிவந்தார். இழந்ததைப் பற்றிய வருத்தங்களை அவர் எந்த நொடியிலும் வெளிப்படுத்தியதில்லை. இலக்கிய தேசாந்திரியாக இருந்தது குறித்தோ தன்னை ஏமாற்றியவர்கள் குறித்தோ அவரிடம் புகார்களே இருந்ததில்லை.

‘பின்நகர்ந்த காலம்’ நூலில் எழுத்தாளர் வண்ணநிலவன், கடிதம் மூலம் தனக்கு அறிமுகமான தஞ்சை ப்ரகாஷ் திடீரென்று ஒருநாள் தன் வீட்டு வாசலில் வந்து நின்றதை வர்ணித்திருக்கிறார். நல்ல எழுத்து எங்கிருந்தாலும் தேடிப்போய் வாழ்த்துவதே அவர் வழக்கம். எழுத்தாளர்களை நேரடியாகச் சந்தித்து அளவளாவுவதில் அவருக்கிருந்த ஆர்வம் குறையவேயில்லை. ‘‘அப்படித்தான் ஒருமுறை தகழியைச் சந்திக்கும்போது...’’ என உரையாடலை சர்வ சாதாரணமாகத் தொடங்குவார். உதாரணங்களும் மேற்கோள்களும் நிறைந்த அவருடைய உரையாடல்கள் எதிரே இருப்பவர்களை எளிதாக ஈர்த்துவிடும். நவீன இலக்கிய வாசமுடைய அவரிடம், ‘திரைப்பாடல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்கப்பட்டது.

அப்போது தஞ்சையைச் சேர்ந்த பாடலாசிரியர் வாசன் திரைத்துறையில் வளர்ந்துகொண்டிருந்தார். அவரை முன்வைத்தே அக்கேள்வி கேட்கப்பட்டது.“திரைப்பாடல்களை போகிறபோக்கில் புறந்தள்ளிவிடக்கூடாது. அதிலேயும் நல்ல அம்சங்கள் இருக்கின்றன. கண்ணதாசனிடமும் பட்டுக்கோட்டையிடமும் வெளிப்பட்ட காத்திரமான அரசியல் பார்வைகளை, நவீன இலக்கியவாதிகள் கவனிக்கத் தவறுகிறார்கள். சந்தத்திற்கு எழுதுவது சவாலானது. அதைச் சரியாகச் செய்ய மொழிப்பயிற்சியோடு இலக்கியப்பயிற்சியும் அவசியம். வாசனைப்போல இன்னும் பல புதியவர்கள் திரைத்துறைக்கு வரவேண்டும்.

அப்போதுதான் தஞ்சாவூரின் இசைமரபு மீட்கப்படும்...” என்றார். அவர் அக்கருத்தைச் சொல்லும்போது அருகிருந்து கேட்ட நானும், திரைத்துறையில் பாடல் எழுதப் புகுவேன் என அப்போது நினைக்கவில்லை. என் முதல் திரைப்பாடலை மட்டுமே அவர் கேட்டார். அதன்பின் ஆயிரம் பாடல்களை எழுதிவிட்டேன். அவர் இருந்திருந்தால் அவற்றைப்பற்றி என்னமாதிரியான கருத்துகளைச் சொல்வாரென யோசிக்க முடிகிறது.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in/

Posted

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 56

நிராகரிக்கப்படும் எதற்காகவும் குரல் கொடுப்பவர் தஞ்சை ப்ரகாஷ். அரசியல் ரீதியாக அவருடைய நிலைபாடுகள் எம்மாதிரி இருந்தாலும் எழுத்து, இலக்கியம், பத்திரிகை என்று வந்தால் அவர் ஒடுக்கப்படுபவரின் பக்கமே நின்றிருக்கிறார். பல நூல்களுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரைகளை வாசித்தால் அப்படித்தான் தோன்றுகிறது. இயற்கை உணவிலும் சித்த மருத்துவத்திலும் ஈடுபாடுடைய அவர், சித்த மருத்துவ சொல்லகராதியை தயாரிப்பதில் மும்முரம் காட்டினார்.
2.jpg
அவர் முடிக்காமல் விட்ட பணிகளில் அதுவும் ஒன்று. பெரும் கனவுகளில் சிறகடித்த அவருடைய கவிதைநூல், ‘என்றோ எழுதிய கனவு’ என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது. அவர் இறந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த அந்நூலை தொகுத்து வெளியிட்டவர் நண்பர் செல்லத்துரை. 84 கவிதைகள் அடங்கிய அத்தொகுப்பில் ‘பாபாஜான்’ எனும் கவிதை வெகு பிரசித்தம். அதை அவர் தொண்ணூறுகளின் இறுதியில் நிகழ்ந்துவந்த இலக்கியப் பேரவை கூட்டங்களில் வாசித்திருக்கிறார்.
 
சொல்லத்தகாத சில கவிதைகளும் அதில் உண்டுதான். காமச் சாற்றில் ஊறிக்கிடக்கும் அக்கவிதைகள் தனித்த வாசிப்புக்குத் தக்கவை. எழுத்தை எதற்காகவும் புறக்கணிக்கக்கூடாது என்பது அவர் வைத்திருந்த பொதுவிதி. வெகுசன பத்திரிகைகள் பிரசுரிக்க தயங்கும் படைப்புகளை வெளியிடவே ‘குயுத்தம்’, ‘பாலம்’ ஆகிய இதழ்களை அவர் தொடங்கினார். ‘மடக்குத்தி’ என்னும் பிரபஞ்சனின் சிறுகதை, ‘பாலம்’ இதழில் பிரசுரமாகி பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. கடித இலக்கியத்தை வளர்ப்பதற்காக அவர் கொண்டுவந்த ‘சாளரம்’ இதழில், தமிழின் முக்கிய படைப்பாளர்கள் அத்தனைபேரின் கடிதங்களும் வெளியாகியுள்ளன.

கவிஜீவன், புத்தகன், செல்லத்துரை, விஜயராகவன்... என பலரும் அவரை ஆசான் என்றுதான் அழைப்பார்கள். எனக்கோ அவரை அப்படி அழைப்பதில் தயக்கமிருந்தது. மனதளவில் அவர்தான் எனக்கு ஆசானென்றாலும், ஏனோ அவரை அப்படி நான் அழைக்கவில்லை. அவருடைய இலக்கியச் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களால் எழுந்த தயக்கமல்ல. ஆசான் எனும் சொல் இயல்புக்கு பொருந்தாதது போலிருந்தது. அவருமே அப்படி அழைப்பதை விரும்பியதில்லை. “நான் உங்களுக்கு தூதுவனும் அல்ல. குருவும் அல்ல. நண்பன். நல்ல நண்பனா என்று தெரியவில்லை...” என்பதோடு நகர்ந்துவிடுவார்.
 
வயதின் எல்லைகளைக் கடந்த துறவு நிலையை அவரிடம் கண்டிருக்கிறேன். பல மொழிகளை லாவகமாக கையாளத் தெரிந்த அவருக்கு சமஸ்கிருதத்தின் மீது இருந்த சாய்வு புரிந்துகொள்ளக்கூடியது. ‘‘தேவ பாஷை சமஸ்கிருதம் என்றால் மகாதேவ பாஷை தமிழ்...’’ என்ற டி.என்.ராமச்சந்திரனின் கூற்றை அவர் ரசிக்கவில்லை. சமஸ்கிருதத்தின் மீது அவருக்கிருந்த அதீத பற்றை நா.விச்வநாதனும் தன்னுடைய ‘புனைவெளி’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
  2a.jpg
சமஸ்கிருதம் மேட்டுக்குடியினரின் மொழியாக இருந்ததால் பிறருக்கு மறுக்கப்பட்டது என்பதை அவர் இறுதிவரையிலும் ஏற்கவே இல்லை. எந்த மொழியையும் அப்படியெல்லாம் மறுத்துவிட முடியாது என்றுதான் சொல்லிவந்தார். “சமஸ்கிருதத்தை யாரும் எங்கேயும் படிக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. மொழியையும் அறிவையும் அடக்கியோ அமுக்கியோ வைக்கமுடியாது. சமஸ்கிருதம் குறித்த இந்த வரலாறு உண்மையல்ல...’’ என்று கூறிய தஞ்சை ப்ரகாஷ், வேதநாதச்சாரியாரிடம் முறையாக சமஸ்கிருதம் பயின்று ‘சிரோன்மணி’ பட்டம் பெற்றவர்.

கலை வடிவங்கள் அனைத்திலும் அவருக்கிருந்த புலமை அளப்பரியது. இலக்கியப் படைப்புகளில் மட்டுமல்லாது இசை, சிற்பம், ஓவியம் குறித்தும் அவருக்குத் தெரிந்திருந்தது. எது நல்ல ஓவியம்? எது நல்ல சிற்பம்? எது நல்ல இசை? என அவர் விவரிக்கத் தொடங்கினால், கற்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தைக் கணித்துவிடலாம். தேவநாத சாஸ்தியாரையும், ஆபிரகாம் பண்டிதரையும் அவர் அளவுக்கு எங்களுக்கு அந்தக் காலத்தில் அறிமுகப்படுத்தியவர் எவருமில்லை.
 
ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாம்ருத சாகரம்’ எனும் இசைநூல் குறித்து தஞ்சை ப்ரகாஷ் விவரிக்க கேட்க வேண்டும். தமிழிசையின் மரபுகளையும் அது தேய்ந்து அழிந்த கதைகளையும் கேள்விப்பட்டு, அதை மீட்டெடுக்க முனைந்த பண்டிதரை, சுருதி சுத்தமாக அவர்தான் மீட்டிக் காட்டினார். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழிசையின் இலக்கண வடிவத்தை விளக்கி, காலப் பிரமாணத்தை வரையறுத்த ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வுநூல் இன்றும் இசைப்பிரியர்களின் வேதநூலாக விளங்குகிறது.
2b.jpg
மின்சாரம்கூட இல்லாத தஞ்சை நகரில் இருந்துகொண்டு, தன்னுடைய மருத்துவ ஆய்வையும் இசை ஆய்வையும் மேற்கொண்ட பண்டிதர் தன் சொந்த செலவில் உலக இசை மாநாடுகளை நடத்திக்காட்டியவர். அவரும் அவருடைய மனைவியும் உலகம் முழுக்க பயணித்து, தமிழர்களின் மரபுப்படி இருபத்தி நான்கு அரங்கில் வைத்து ‘கருணாம்ருத சாகரத்’தை அரங்கேற்றியிருக்கிறார்கள். மூன்று பாகங்களை கொண்ட மிகப் பிரமாண்டமான அந்நூல், இசைக்கடலில் குதிப்பவரை கப்பலாக இருந்து கரையேற்றக்கூடியது.

முதல் பாகம் இலக்கணத்தையும் இரண்டாவது பாகம் இசைநூல்களையும் மூன்றாவது பாகம் ராகங்களையும் ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறது. ‘‘திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் கலந்துகொள்ளும் எத்தனைபேருக்கு பண்டிதரைப் பற்றி தெரிந்திருக்கிறது...’’ என தஞ்சை ப்ரகாஷ் கவலைப்பட்டிருக்கிறார். தமிழர்களின் சொத்தாக கருதப்பட வேண்டிய ‘கருணாம்ருத சாகரத்’தை அரசு செலவில் பதிப்பிக்க அவர் எடுத்த முயற்சிகள் கால ஓட்டத்தில் கரைந்துவிட்டன.

“ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க செலவிட்டு தமிழுக்கும் தமிழிசைக்கும் செய்திருக்கும் அற்புதமான தொண்டை மதிக்காமல் இசைவிழாக்கள் நடத்தப்படுவதில் என்ன லாபம்...” என ஒரு கட்டுரையில் கேட்டிருக்கிறார். தண்டபாணி தேசிகர் பாடியதால் தீட்டுப்பட்டதென்று மேடையைக் கழுவியவர்கள், ஆபிரகாம் பண்டிதரை அங்கீகரிக்காமல் விடுவதிலுள்ள அரசியல் நமக்குப் புரியாமல் இல்லை. தமிழர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் பேதங்களால் இன்னும் எத்தனை எத்தனை கலைச்செல்வங்களை இழக்கப் போகிறார்களோ?

பதினேழாம் நூற்றாண்டின் கடைசியில் தஞ்சை நகரமே இசைக்குத் தலைநகரமாக விளங்கியிருக்கிறது. சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் தமிழகம் தன்னை இருண்டகாலத்தில் ஆழ்த்திக்கொண்டுவிட்டது. தமிழிசையின் மூலக்கூறுகளை தனதாக்கிக்கொண்ட சமஸ்கிருத, கன்னட, தெலுங்கு, மராட்டிய மொழிகளால் இல்லாமல் போன இசை செல்வத்தை மீட்க எண்ணிய ஆபிரகாம் பண்டிதரை ‘தமிழன்பன்’ என்றே ப்ரகாஷ் குறிப்பிடுவார்.

தமிழிசை, கர்நாடக இசையுடன் நாட்டுப்புற இசையிலும் தஞ்சை ப்ரகாஷுக்கு ஆர்வம் இருந்தது. அவர் எழுதிய கவிதைகளிலேயே அதற்கான சான்றுகளும் இருக்கின்றன. ஓசை ஒழுங்குகளுக்கேற்ப அவர் பிரயோகிக்கும் கவிதை மொழி நாட்டாரியலை ஒத்திருப்பது. ஆனாலும், கர்நாடக இசையில் லயித்துப்போவார். தி.ஜானகிராமனின் நாவல்களில் தென்படும் இசையின் பாங்குகளை அவரால் கிரகித்துச் சொல்லமுடியும். ‘மோகமுள்’ நாயகி யமுனாவைப் பார்ப்பதற்காக கும்பகோணத் தெருக்களில் அவரும் நா.விச்வநாதனும் அலைந்து திரிந்தது தனிக்கதை.

நாவலில் வரக்கூடிய நாயகியைக் காதலிக்கும் அளவுக்கு அவருக்கு இசைப்பித்து இருந்தது. அவ்வப்போது தியாகய்யரின் பெருமைகளைச் சொல்லியிருக்கிறார். தியாகய்யர் பற்றி பேச்சு எழுந்தால் உடனே அவர், எழுத்தாளர் ஸ்வாமிநாத ஆத்ரேயனை சொல்லாமல் இருக்கமட்டார். தியாகய்யரின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களை வைத்து ஆத்ரேயன் எழுதிய ‘தியாகராஜ அனுபவங்கள்’ நூல் தஞ்சை ப்ரகாஷின் விருப்பப் பட்டியலிலிருந்தது.
 
தெரிந்த சம்பவங்களை வைத்துக்கொண்டு ஆத்ரேயன் செய்திருக்கும் இலக்கிய ஜாலங்களைப் புகழ்ந்து தள்ளுவார். சிறுகதைகளென்று சொல்லத்தக்க அவ்வெழுத்துகளை கட்டுரைகளென்று ஆத்ரேயன் முன்னுரையில் கூறியிருப்பதை அவரால் ஏற்க முடியவில்லை. ஜவுளி வணிகம் செய்துவந்த ஆத்ரேயனின் ‘மாணிக்க வீணை’ நூல் குறித்தும் ஓரிருமுறை விவரித்திருக்கிறார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தியாகய்யர், தன்னுடைய கீர்த்தனைகளை எழுத தமிழ் மக்கள் உதவியதை பெருமிதத்தோடு சொல்லி, தஞ்சை ப்ரகாஷ் பூரித்துப் போவார்.

அவருக்கு எதிலுமே ருசிப்பு முக்கியம். கலையானாலும் இலக்கியமானாலும் அவர் ருசியை முதன்மையாகக் கருதுவார். கருத்து ரீதியாக முரண்படுகிறவர்களைக்கூட அவரால் நேசிக்கமுடிந்ததும் அதனால்தான். ருசிப்புக்காகவும் ரசிப்புக்காகவுமே தன் வாழ்நாளை கழித்தவரென்றும் ப்ரகாஷை இலக்கியத் தோழர்கள் மதிப்பிடுவார்கள். குணங்குடி சர்பத்தை எடுத்துக்கொண்டால்கூட, இரண்டு முழுக் கோப்பை அருந்தாமல் அவருடைய ருசி அடங்கியதில்லை.
 
ஒரு ருசி தனக்குப் பிடித்துவிட்டதால் அதை எல்லாருக்கும் காட்டிவிடத் துடிப்பார். அதன் விளைவாகவே ‘யுவர் மெஸ்’ஸை நடத்தியிருக்கிறார். பேருக்குத்தான் அது மெஸ்ஸே தவிர, அங்கேயும் அவர் நடத்தியது இலக்கியம்தான். தமிழ் எழுத்தாளர்களை வரவழைத்து மேல்தளத்தில் அமர்த்திக்கொண்டு, கீழ் தளத்தில் அவர் நடத்தியதை மெஸ்ஸாக யாருமே கருதவில்லை.

அம்மெஸ்ஸை கவனித்துக்கொண்ட இருளாண்டியையும் முருகேசனையும் இலக்கியவாதிகள் நல்ல விமர்சகர்கள் என்றே கூறுகிறார்கள். தஞ்சை ப்ரகாஷின் அறிமுகம் எனக்குக் கிடைக்கும்போது அவரை சந்திக்க வருகிறவர்கள் எல்லாம் யுவர் மெஸ்ஸைப் பற்றி பாராட்டிப் பேசியதை கேட்டிருக்கிறேன். திவாலான அந்த மெஸ்ஸை இலக்கிய நினைவு சின்னம்போல எல்லோரும் கொண்டாடுவார்கள். அங்கேதான் பிரபஞ்சன் உருவானார் என்றும் அங்கேதான் வண்ணநிலவன் சிலகாலம் தங்கி இருந்தார் என்றும் அவர்கள் சொல்வதைக் கேட்கலாம்.

இலக்கியத்தைத் தவிர எதையுமே சரிவர நடத்தத்தெரியாதவர் எனும் பட்டத்தை தஞ்சை ப்ரகாஷ் சிரிப்புடன் ஏற்றுக்கொள்வார். இலக்கியத்தைத் தாண்டி வேறு எதிலேயுமே பற்றில்லாமல் இருந்த அவரைப் பற்றிக்கொள்ள எத்தனையோ கைகளிருந்தன. முதிய வயதிலும் குழந்தைபோல அவரால் சிரிக்கவும்
சிநேகிக்கவும் முடிந்தது.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in/

  • 2 weeks later...
Posted

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 57

‘திருமணமாகாத எழுத்து’ என்றொரு கட்டுரையை தஞ்சை ப்ரகாஷ் எழுதியிருக்கிறார். திருமணக்கூட்டில் அடைபடாத எழுத்தாளர்களை பற்றிய சித்திரிப்பு அது. அக்கட்டுரையில் திருமணம் செய்துகொள்ளாத தருமு சிவராம், நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோரை அளந்திருப்பார். கவிதையியலிலும் தத்துவ இயலிலும் தனித்து விளங்கிய தருமு சிவராமை உடன்வைத்து கவனித்துக்கொண்டவர் தஞ்சை ப்ரகாஷ். ஆனாலும், அவருடைய குணம் இறுகி இருந்ததற்கான காரணம் ‘‘திருமணம் செய்து கொள்ளாததே...’’ என்றிருக்கிறார்.
5.jpg
காற்றின் தீராத பக்கங்களில் கவிதை எழுதிய தருமு சிவராமின் இதயத்தை எழுதும் துணிச்சல் அவருக்கு இருந்தது. ‘‘சிவராமின் இன்டலக்சுவலிச முகத்தை பெண்கள் விரும்பவில்லை. அவர் காதலித்த பெண்கள் அவரைப் புறக்கணித்தார்கள்...’’ அதனால் அவர் எப்போதும் சோர்ந்து இருந்ததாகவும் அங்கீகரிக்கப்படாத இதயம் விகாரத்திற்குள் விழுந்துவிடுவதை அவர் விஷயத்தில் பார்த்ததாகவும் குறித்திருக்கிறார். சிவராமைப் பின்பற்றும் பலருக்கும் இது அதிர்ச்சியளிக்கக்கூடிய கூற்று. ஒரு படைப்பாளனின் தனிப்பட்ட விஷயங்களையெல்லாம் பொதுத்தளத்தில் எழுதலாமா? எனவும் கேட்கலாம்.

விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உரிய அக்கருத்தை மன தத்துவ ரீதியில் அணுகி தஞ்சை ப்ரகாஷ் எழுதியிருப்பது எனக்குப் பிழையாகப்படவில்லை. அவர் உடன் பழகிய நண்பர்கள் சொல்லத் தயங்கியதை ப்ரகாஷ் ஒருவரே சொல்லியிருக்கிறார். அதே கட்டுரையில் நகுலனைப் பற்றியும் தன்னுடைய பதிவுகளைச் செய்திருக்கிறார். கடைசிவரை சுசீலா புராணம் பாடிய நகுலன், அந்த சுசீலா யாரென்றே சொல்லாமல் காதலித்ததைக் கருணையுடன் காட்டியிருக்கிறார். ‘‘காதலித்த பெண், யாரென்று சொல்லத் தயங்கிய நகுலன் ஒருகட்டத்தில் சசீலாவை காவிய நாயகியாக மாற்றிவிட்டார்...’’ என எழுதியிருக்கிறார்.

எனக்குத் தெரிய எழுத்தில், திருமணமான, திருமணமாகாத என்ற பாகுபாடுகளைப் பற்றி யாருமே எழுதியதில்லை. மனத்தின் வெளிப்பாடுகளே படைப்புகள் என்றால் அம்மனத்தின் தவிப்புகளையும் கொந்தளிப்புகளையும் பகுத்துப் பார்க்க தஞ்சை ப்ரகாஷுக்கு முடிந்திருக்கிறது. “காமம்தான் சக்தி, பசிதான் நம்முடைய மூலம். பசிதான் மனிதனை எழுப்பும் கனல். பசியில்லையென்றால் மனிதனில்லை. காமம் இல்லையென்றால் அவன் தொடக்கமே இல்லை...” என்று ‘மீனின் சிறகுகள்’ நாவலில் அவர் எழுதியிருப்பதை இக்கட்டுரையுடன் இணைத்துப் பார்க்கலாம். பெண்கள் குறித்து அவர் முன்வைத்த கருத்துகள் பலவேளைகளில் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்றன.
5a.jpg
“எல்லாப் பெண்களுமே பெண்கள்தான் என சொல்ல வருகிறவன் ரசனை கெட்டவன். அப்புறமேன் எல்லாப் பெண்களும் ஒன்றாக உலகில் வளைய வரவில்லை. பெண்கள் அனைவருமே ஒன்றுதான் என்னும் அபிப்ராயம் பொய்தான். ஏமாற்றுதான்...” என அவர் சொல்வதை ‘கரமுண்டார் வூடு’ நாவலிலும் ‘கள்ளம்’ நாவலிலும் காணலாம். தன்னுடைய அத்தைகளும் பாட்டிகளும் பகிர்ந்துகொண்டதையே நாவலாக எழுதியதாக அந்நாவல்களின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். திருநெல்வேலி ராஜவல்லி புரத்திலுள்ள எழுத்தாளர் வல்லிக்கண்ணன் வீட்டில் தஞ்சை ப்ரகாஷ் ஓரிரு இரவுகள் தங்கியிருக்கிறார். 1960 வாக்கில் என நினைவு.

அந்த சந்தர்ப்பத்தில் வல்லிக்கண்ணன், தான் எழுதிய இரண்டு நாவல்களின் கையெழுத்துப் பிரதியை ப்ரகாஷிடம் வாசிக்கக் கொடுத்திருக்கிறார்.ஒன்று ‘கல்யாணியின் கணவன்’, மற்றொன்று ‘சம்பங்கிபுரத்து பொம்பிளைகள்’. இரண்டுமே இலக்கியத் தரமுடைய நாவல்கள். அதிலும், ‘சம்பங்கிபுரத்து பொம்பிளைகள்’ நாவல் முழுக்க முழுக்க போர்னோகிராபியை அடிப்படையாகக் கொண்டது.‘முதலிரவு’ என்னும் தலைப்பில் வெளிவந்த தொ.மு.சி.ரகுநாதனின் நாவலை அன்றைய ராஜாஜி அரசாங்கம் தடைசெய்ததைப் போல ‘சம்பங்கிபுரத்து பொம்பிளைகளு’ம் வெளிவந்தால் தடை செய்யப்படும் என வல்லிக்கண்ணன் கருதியிருக்கிறார்.

திருமணமாகாத, தான், பாலியல் குறித்து எழுதியதை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ எனத் தயங்கியுமிருக்கிறார். திருமணமாகியிருந்தால் அவர் அந்நாவலை தயக்கமில்லாமல் வெளியிட்டிருப்பார் என்பது அவர் கருத்து. அக்கட்டுரையில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. ‘இருட்டு’ என்னும் பெயரில், தான் மட்டுமே எழுதி, தான் மட்டுமே ரசித்துப் படிக்க வல்லிக்கண்ணன் அமாவாசைக்கு அமாவாசை தயாரித்த கையெழுத்துப் பத்திரிகையைப் பற்றிய செய்தியே அது. இதையெல்லாம் ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உணர வாய்ப்பில்லை.

சம்பந்தப்பட்ட இரண்டுபேருமே இப்போது இல்லை. காலக் கரையான்கள் அரித்துவிட்ட வல்லிக்கண்ணனின் கையெழுத்துப் பிரதிகள் இப்போது யாரிடம் இருக்கிறதோ தெரியவில்லை. எழுத்தை அணுகும்விதம் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. ஒருவிதத்தில் அம்மாற்றமே இலக்கியத்தின் இருப்பைத் தீர்மானிக்கிறது. தஞ்சை ப்ரகாஷின் வழியே நான் கண்டடைந்த இலக்கிய உலகிற்கும் இன்றைக்கு என் முன்னாலிருக்கும் இலக்கிய உலகிற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்தே அவருடைய எழுத்துகள் நூலாக்கம் பெறுகின்றன.

தன் எழுத்துக்குக் கிடைத்திருக்கவேண்டிய நியாயமான அங்கீகாரங்களை அவர் அறியவே இல்லை. இப்போது அவர் வாசிக்கப்படும் அளவுக்கு முன்னெப்போதும் வாசிக்கப்படவில்லை என்பதை நினைக்க, வருத்தமே மிஞ்சுகிறது. இதற்கிடையில் அவர் எழுத்துகளைப் பற்றியும் அவரைப்பற்றியும் தவறான விமர்சனங்களைச் சில எழுத்துமோகிகள் வைக்கிறார்கள். அதற்கெல்லாம் பதில்சொல்ல அவர் இல்லை. நம்முடைய நினைவுகளில் இருந்து ஒருவர் அகலாமல் இருக்கிறார் என்றால், அவரை நாம் மறக்காமல் இருக்கிறோம் என்பதல்ல பொருள். மறுக்கவோ மறக்கவோ முடியாத பல நற்காரியங்களை அவர் நமக்குச் செய்திருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என தொடக்கத்தில் சொல்லிருக்கிறேன்.

அவரைப் பற்றிய நினைவுகளையும் அவருடன் கழித்த பொழுதுகளையும் எழுதிக்கொண்டே இருக்கலாம். அவரிடமிருந்து கற்றதில் பாதியைக்கூட நானின்னும் பயன்படுத்தவில்லை. அவருமே அப்படித்தான். தனக்குக் கிடைத்ததைப் பிறருக்குத் தருவதுதான் அவரது வாடிக்கை. தஞ்சை ப்ரகாஷ் அவருடைய கவிதையில் ஒன்றை அடிக்கடி சொல்லிக்காட்டுவார். ‘சாவுகள் வாழ்கின்றன’ எனும் கவிதை அது. ‘சாவுகள் வாழ்கின்றன/ வாழ்க்கைகள் நசிக்கின்றன / நீயும் நானும் ஏமாளிக் கும்பல்’ என்று முடியும் அக்கவிதையில், ‘க.நா.சுவும் புதுமைப்பித்தனும் கு.ப.ராவும் செத்துக்கொண்டே இருந்ததைப் பார்த்துக்கொண்டே இருந்தோம்...’ என எழுதியிருப்பார்.

இறந்து இத்தனை ஆண்டுகளாகியும் தஞ்சை ப்ரகாஷ் என்னுள் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். இலக்கியத்தில் தோல்விக்கோ மரணத்திற்கோ வழியே இல்லை. நினைவுகளும் அனுபவங்களுமே அதன் நோக்கம். அனுபவங்களைப் பகிர்ந்துகொள்பவர்கள் நினைக்கப்படுகிறார்கள். தான், கற்றதையெல்லாம் பிறருக்கு வாரி வழங்கிவிட்டு வெறுமையாகிவிடுவதே நல்ல சகிருதையனுக்கான இலக்கணம் என்பார்கள். கற்றதைப் பிறருக்கு வழங்கியதால் தஞ்சை ப்ரகாஷ் வெறுமையாகாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 58

சின்னச் சின்ன சமரசங்கள் செய்தாவது வாழ்வை நடத்தும் கட்டாயத்திலிருக்கும் நமக்கு, இறுதிவரை ஒருவர் சமரசமில்லாமல் வைராக்கியத்தோடு வாழ்ந்திருக்கிறார் என்பதைக் கேட்க ஆச்சர்யம் ஏற்படுகிறது. ‘அப்படியெல்லாம் ஒருவர் வாழ்வது சாத்தியமே இல்லை’யென விவாதிக்கும் அதேதருணத்தில், அறம் சார்ந்த நம்முடைய மதிப்பீடுகள் எந்த அளவுக்கு மாறிப்போயிருக்கின்றன என்பதையும் யூகிக்க முடிகிறது.
9.jpg
‘அறன்வழிப்பட்டதே வாழ்வென்னும்’ சிந்தனையிலிருந்து ஒரு சமூகம் விடுபடுவது அபாயகரமானது. ஆனால், தன் மொத்த வாழ்வையும் அறத்துடனும் அர்த்தத்துடனும் அமைத்துக்கொண்டவர் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி. மூத்த பத்திரிகையாளர் என்னும் பதத்தில் அவர் அறியப்பட்டாலும் அதுமட்டுமே அவருடைய அடையாளம் இல்லை. நான் சொன்ன அறம் சார்ந்த வைராக்கியத்தின் அடையாளங்களில் அவரும் ஒருவர்.

திருவாரூர் இரா.தியாகராஜன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சின்னக்குத்தூசியின் கருத்துகளிலும் எழுத்துகளிலும் முரண்படுகிறவர்கள்கூட, அவருடைய வாழ்வியல் நெறிகளில் சந்தேகம் எழுப்பியதில்லை. ‘தவ வாழ்வு’ என்று சொல்லத்தக்க வாழ்வே அவருடையது. பத்திரிகைத்துறையில் காலூன்றும் கனவுகளோடு சென்னை வரும் எவரையும் ஆதரித்து அரவணைத்து அவர்களின் உயர்வுக்கு உதவக்கூடிய ஸ்தானத்தில் அவர் இருந்திருக்கிறார். திராவிட இயக்கக் கொள்கைகள் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதி பாசாங்கோ பம்மாத்தோ அற்றவை.

பிராமண சமூகத்தைச்  சேர்ந்த ஒருவர், திராவிட இயக்கக் கொள்கைகளைத் தூக்கிப்பிடித்தார் என்று சொல்லி அவருடைய மாண்புகளைக் குறைப்பதில் எனக்கு விருப்பமில்லை. அவர் எந்த சமூகத்தில் பிறந்திருந்தாலும் இதே பற்றையும் இதே உறுதியையும் கொண்டிருப்பார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஐம்பதுகளில் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்கிய மணலூர் மணியம்மாளுடன் இணைந்து, ஊர் ஊராக சோவியத் ரஷ்யாவின் சிவப்புப் புத்தகங்களை மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் தலையில் சுமந்தபடி விற்கத் தொடங்கியதில் அவர் வாழ்வு துவங்கியிருக்கிறது. அதன்பின் திராவிட இயக்கக் கொள்கைகளிலும் அவற்றின் தேவைகளிலும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

கள நிலவரத்தைக் கருத்திற்கொண்டும் இடைவிடாத வாசிப்பிலிருந்தும் அவர் பெற்றுக்கொண்ட அனைத்தையும் பத்திரிகை வாயிலாகப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள எழுத்தைத் துணையாகக் கொண்டிருக்கிறார். ஒருவிதத்தில் அவருமே திராவிட இயக்கப் பாசறைப் போராளியாகத் தன்னை வரித்துக்கொள்ள காலம் கட்டாயப்படுத்தியிருக்கிறது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அன்று நிகழ்ந்து வந்த சாதிய வன்கொடுமைக்கு எதிராக முழக்கமிடத் துணிந்த அவர், முழுதாகத் தன் வாழ்வையே அவற்றுக்கு அர்ப்பணிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

பொதுவாழ்வில் ஈடுபாடுடைய தலைவர்களில் ஒருசிலர் திருமண வாழ்வைத் துறந்திருக்கிறார்கள். ஆனால், பத்திரிகைப் பணியில் பொதுவாழ்வை மேற்கொண்ட சின்னக்குத்தூசியும் திருமணத்தைத் தவிர்க்க எண்ணியது எதன் உந்துதலால் என்பதை அவர் எங்கேயும் தெரிவிக்கவில்லை. ஒருவருக்கு ஒரு கொள்கைமீது அளவுகடந்த பற்றில்லாமல் சொந்த வாழ்வைச் சுருக்கிக்கொள்ள மனம் வராது. மிகமிக வசதி குறைந்த திருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரத்தில் அமைந்திருந்த மேஸ்திரி மேன்ஷனில்தான், அவருடைய கடைசிக் காலங்கள் கழிந்தன.
9a.jpg
கொஞ்சகாலம் ‘பாரடைஸ் மேன்ஷனி’ல் இருந்திருக்கிறார். அவரை இழந்த அம்மேன்ஷன் இப்போது ‘பாரடைஸ் லாஸ்’ஸாக காட்சியளிக்கிறது. அவரையும் அவர் பத்திரிகைகளில் எழுதி வந்த அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். ஆதாரத்துடன் கட்டுரைகளை அணுகும் அவருடைய வாதப் பிரதிவாத முறை வேறு எவருக்கும் வாய்க்காதது. காலங்களையும் சம்பவங்களையும் மிகச் சரியாகக் குறிப்பிட்டு அவர் எழுதியவை, திராவிட இயக்கங்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்.

ஆயிரக்கணக்கில் அவர் எழுதிய கட்டுரைகளில் ஒருசிலவற்றை ‘நக்கீரன்’ தொகுத்து வெளியிட்டிருக்கிறது. ‘முத்துச்சரம்’, ‘பவளமாலை’, ‘புதையல்’, ‘கருவூலம்’, ‘பெட்டகம்’, ‘களஞ்சியம்’ முதலிய தலைப்புகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. ‘புதுமைப்பித்தன் பதிப்பகம்’ வெளியிட்ட ‘முத்தாரம்’ நூலிலும் பல முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

‘மாதவி’, ‘தென்றல்’, ‘முரசொலி’, ‘நவசக்தி’, ‘அலை ஓசை’, ‘எதிரொலி’, ‘நக்கீரன்’, ‘நாத்திகம்’, ‘ஜூனியர் விகடன்’ ஆகிய பத்திரிகைகளில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பத்திரிகை எதுவாயினும் அவருடைய பணியென்பது திராவிட இயக்கச் சார்பையே கொண்டிருந்தது. ஓர் எழுத்தாளரோ அல்லது ஓர் அரசியல்வாதியோ, சம்பந்தப்பட்ட விஷயத்தில் தனக்குள்ள கருத்தைச் சார்பு நிலையிலிருந்து தெரிவிக்கலாம். ஆனால், ஒரு பத்திரிகையாளர் அப்படியான சார்புடன் செயல்பட வாய்ப்பில்லை. ஏனெனில், பத்திரிகையாளர் என்பவர் இரண்டு பக்கங்களையும் பார்க்கவேண்டிய கடப்பாடு உடையவர்.

நடுநிலை என்னும் சொல்லுக்கு நியாயமும் நீதியும் செய்யக்கூடிய இடத்தில் அவர் இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் அந்நிலையிலிருந்து தவறுவது முறையோ மரபோ அல்ல. இருந்தாலும், சின்னக்குத்தூசி திராவிட இயக்கக் கருத்து நிலையிலிருந்தே தம்முடைய அரசியல் விமர்சனங்களை அளித்துவந்தார். “யாரும் நடுநிலையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது...” என்பதே அவர் வாதமாயிருந்தது. இனத்தையும் மொழியையும் பிரதானப்படுத்தும் பல பத்திரிகையாளர்களுக்கு அவரே ஆதர்சமாக விளங்கியிருக்கிறார்.

நடுநிலை என்று சொல்லிக்கொண்டு, அவரவர் தங்கள் அபிப்ராயங்களை கருத்துகளாக அளித்துவந்த காலத்தில் ‘‘என் கருத்துகள் சார்புடையனவே...’’ எனச் சொல்லும் தைரியம் அவருக்கிருந்தது. அரசியல் நிலைப்பாடுகளை ஒட்டி எடுக்கப்படும் முடிவுகள் நடுநிலை சார்ந்ததாக இருக்க முடியுமா? என்னும் கேள்விக்கு, “அரசியல் விமர்சனங்களில் நடுநிலை என்று ஒன்று இருப்பதாக நான் நம்பவில்லை. நான் இன்ன கட்சிக்காரன் என்று பட்டப்பகலாக வாசகர்களுக்குத் தெரியும் வகையில் இருப்பதால் எனது எழுத்துகளைப் படிக்கும் வாசகர்கள் எவரும் ஏமாற வாய்ப்பே இல்லை...” என்றிருக்கிறார்.

தவிர, “பொதுப்படையாக எல்லாரும் அயோக்கியன் என்று எழுதுவதுதான் நடுநிலை என்றால் அதன் உண்மைத்தன்மை ஆராயப்பட வேண்டியது...” எனவும் சொல்லியிருக்கிறார். “நான் திராவிட இயக்கத்தின் அனுதாபி, கலைஞரை ஆதரிப்பவன் என்ற உணர்வோடுதான் என்னுடைய கட்டுரைகள் படிக்கப்படுகின்றன. அப்படியிருக்கையில், பிறருடைய நம்பிக்கைகளைப் பெறுவதற்காக நடுநிலை என்னும் முகமூடியை அணிந்துகொள்ள வேண்டியதில்லை...” எனவும் அறிவித்திருக்கிறார்.

தீர்க்கமும் தெளிவும் மிக்க சின்னக்குத்தூசியின் பங்களிப்பைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் திராவிட இயக்கங்களின் வெற்றி இல்லை. இன்றும் திராவிட இயக்கம் என்னும் பதாகையில் இயங்கிவரும் அ.தி.மு.க.வையும் தே.மு.தி.க.வையும் ஆதரித்து சின்னக்குத்தூசி ஒரு கட்டுரைகூட எழுதியதில்லை. அதைவிட, அவ்வியக்கங்களை அவர் திராவிட இயக்கங்களின் பட்டியலிலிருந்து தவிர்த்தே வந்திருக்கிறார். மதவாதத்திற்கு எதிராகவும் சமூகநீதிக்கு ஆதரவாகவும் செயல்படுபவையே திராவிட இயக்கங்கள் என்னும் தெளிவை அவர் எங்கேயும் விட்டுக்கொடுத்ததில்லை.

சமயத்தில் திராவிட இயக்கங்களே எதார்த்த சூழலுக்கேற்ப தங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டு தேர்தலில் எதிரணியுடன் கூட்டணி யமைத்தபோதும்கூட, அவர், தான் கொண்டிருந்த திராவிடக் கருத்தியலை மாற்றிக்கொள்ள முனைந்ததில்லை. திராவிட இயக்கங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. சொல்லப்போனால், எது ஒன்றையும் விமர்சிக்கக் கற்றுக்கொடுத்ததே அவ்வியக்கங்கள்தான் எனும்போது, அவற்றை விமர்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இருந்தாலும், திராவிட இயக்கத்தின் தேவையை உத்தேசித்தே அவருடைய கட்டுரைகள் எழுதப்பட்டன. அரசியல் களத்தில் மாற்றை முன்வைத்த இயக்கங்களுக்கு, திராவிட இயக்கப் பார்வையிலிருந்து பதிலளித்த அவருடைய பணி குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கங்கள் எதையுமே செய்யவில்லை என்னும் கூக்குரல் இப்போது எழுந்திருக்கிறது. ‘கழகங்கள் இல்லாத தமிழகமே தங்கள் கனவு’ என பாரதிய ஜனதா கட்சியும் ஒருசில தமிழ்த் தேசிய அமைப்புகளும் முழங்கி வருகின்றன. திராவிட இயக்கங்கள் தாங்கள் செய்த சாதனைகளைக்கூட பொது சமூகத்திற்குச் சொல்லாததன் விளைவே இப்படியான விமர்சனங்கள் எழக் காரணம். இந்த இடத்தில்தான் சின்னக்குத்தூசியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

உண்மையில், திராவிட இயக்கங்களைப் புறக்கணிக்கக்கூடிய சக்தியை, அவற்றை எதிர்க்கும் எந்த இயக்கமும் பெறவில்லை. தங்களுடைய அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ள அதையும் இதையும் முழக்கமாக வைக்கிறார்களே தவிர, அவர்களால் திராவிட இயக்கத்தின் வேரை அசைக்க முடியும் என்று நம்புவதற்கில்லை. தங்கள் பலத்தை உணராத கட்சிகள் திராவிட இயக்கங்களுக்கு எதிராக அணிதிரள்வதன் பின்னாலுள்ள அரசியல் நமக்கு விளங்காமலில்லை. முன் எப்போதையும்விட மதச் சார்புள்ள அமைப்புகள் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் அவற்றின் ஆட்டத்தை நிறுத்தவும் கால்களை உடைக்கவும் திராவிட இயக்கத்துடன் இடதுசாரிகள் கைகோர்த்திருப்பது நல்ல அறிகுறி.

எது? எங்கே? எப்போது நடந்தது? என்பதை யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். ஆனால், நடந்த அச்சம்பவம் ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என்பதைச் சொல்வதற்கு சின்னக்குத்தூசி போன்றோர் தேவைப்படுகிறார்கள். ஐம்பதாண்டுகாலப்பத்திரிகை வாழ்வில், அவர் எத்தனையோ சம்பவங்களுக்குப் பின்னாலிருந்த அரசியலைத் தெரிந்து வைத்திருந்தார். திராவிட இயக்க கருத்தியலுக்கு எதிர்நிலையில் இருப்பவர்களும் அவர்மீது வைத்திருந்த அன்பும் மரியாதையும் அளப்பரியன.

‘இருபதாம் நூற்றாண்டு நிகழ்வுகளின் மனிதக் கணினி’என்று அவர் புகழப்பட்டிருக்கிறார். ‘நடமாடும் தகவல் களஞ்சியம்’ என்றும், ‘அரசியல் தட்பவெப்பத்தைக் கணிக்கும் அளவுமானி’ என்றும் அவரைப் பலரும் வியந்திருக்கிறார்கள். தன்னை உணர்ந்திருந்த சின்னக்குத்தூசிக்கு, தான் என்னவாக பார்க்கப்படுகிறோம் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலோ அக்கறையோ துளியும் இருந்ததில்லை. கடனே என்று சமூகப்பணியைக் கருதாமல், கடமையாகத் தன் காரியங்களைச் செய்துவந்த அவருடைய அறிமுகத்தில் எத்தனையோ இளம் குருத்துகள் துளிர்த்திருக்கின்றன.
 

(பேசலாம்...)

http://www.kungumam.co.in/

Posted
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 59

இரண்டாயிரமாவது ஆண்டுகளின் தொடக்கத்தில்தான் சின்னக்குத்தூசி அவர்கள் எனக்கு அறிமுகம். நக்கீரன் பொறுப்பாசிரியரும் என் அத்யந்த நண்பருமான கோவி.லெனினே அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேஸ்திரி மேன்ஷன் 6ம் எண் அறையில்தான் எங்கள் அறிமுகவிழா அரங்கேறியது. என்னுடன் இயக்குநர் மீரா கதிரவனும் வந்திருந்தார். நாங்கள் அவரைச் சந்திக்கப் போயிருந்தபோது அவர் புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு உட்பட்டிருந்தார். அண்ணன் ‘நக்கீரன்’ கோபாலைக் கைதுசெய்யும் பொருட்டு அவருடன் நெருங்கிப் பழகிவந்த பலரையும் காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருந்த சமயம் அது.
2.jpg
அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து எதிர்த்துவந்த ‘நக்கீரனி’ல் அக்காலங்களில் சின்னக்குத்தூசி எழுதிய காத்திரமான கட்டுரைகள் ஆளும் தரப்பை அச்சுறுத்தின. ஆகவே, கண்காணிப்பு வளையத்திற்குள் சின்னக்குத்தூசியும் சிக்கியிருந்தார். அறிமுகப்படலம் முடிந்து அவர் எங்களுடன் உரையாடத் தொடங்குவதற்குள் கேள்விமேல் கேள்வியாக காவல்துறை கேட்டுக் கொண்டிருந்தது. அவரோ எதற்குமே சலிக்காமல் எல்லா கேள்விகளுக்கும் புன்னகையை வரவழைக்கும் பதில்களைத் தந்து கொண்டிருந்தார்.

விசாரணைக்கு நடுவிலேயே எங்களை அமர்த்திக்கொண்டு, எங்களின் கடந்த காலத்தையும் எதிர்கால லட்சியங்களையும் தெரிந்துகொண்டார். அவரிடம் நாங்கள் லட்சியங்களாகச் சொன்னவற்றை இப்போது நினைத்தால் என்னவோ போல் இருக்கிறது. புலனாய்வுத்துறையின் நெருக்குதலிலும் அவர் பதற்றமே இல்லாமல் பதிலளித்த காட்சி இப்போதும் நிழலாடுகிறது. இரண்டு வாக்கியங்களை அவர் எங்களுடன் பேசுவதற்குள், நாலைந்து முறையாவது புலனாய்வுத்துறை குறுக்கிட்டது. நானோ மீரா கதிரவனோ, கோவி.லெனினோ அவர் இடத்தில் இருந்திருந்தால் கசப்பையும் வெறுப்பையும் காட்டியிருப்போம்.
2a.jpg
விசாரிக்க வந்திருந்த அதிகாரிகளில் ஒருவர், “உங்களப் பத்தி தெருவுல விசாரிச்சோம். யாரும் நல்ல அபிப்ராயம் சொல்லலையே...” என்றார். “என்னை யாரென்றே தெரியாத அவர்கள் என்னப்பத்தி நல்ல அபிப்ராயம் வைத்திருப்பார்களா? அது மட்டுமல்ல, அவங்க ஏன் என்னப்பத்தி நல்ல விதமா உங்களுக்குச் சொல்லணும்..?” எனக் கேட்க, கேள்வி கேட்ட, அதிகாரி வாயடைத்துப் போனார். உடனே அவருடன் வந்திருந்த இன்னொரு அதிகாரி, “உங்களுக்கு கடவுள் பக்தி இல்லையாமே, சாமி கும்பிட மாட்டீங்களாமே...” என ஆச்சர்யத்துடன் வினவினார்.

அவர் சாமி கும்பிடாதவர் என ஊருக்கே தெரிந்த விஷயத்தை பாமரத்தனமாகக் கேட்கிறாரே, எதுவுமே தெரியாத இவர் எப்படி அதிகாரியானார் என்னும் சந்தேகம் எங்களுக்கு எழுந்தது. தெரிந்தே இருந்தாலும் தெரியாதது போலத்தான் ஆரம்பிப்பார்களோ என்னவோ? சாமி குறித்து கேள்வி கேட்ட அதிகாரி சின்னக்குத்தூசியின் முகத்தை உற்றுப் பார்க்க, “யாருங்க எனக்கு சாமி இல்லைன்னு சொன்னது, எனக்கு சாமி உண்டுங்க. காலையில எழுந்திரிக்கும்போது சாமிய பாக்குறேன். தூங்கும்போதும் சாமிய பாக்குறேன். எனக்குப் பின்னாடி போட்டோவுல இருக்கு பாருங்க அதாங்க என்னோட சாமி...” என்று சொல்ல, அதிகாரிக்கு வியர்க்கத் தொடங்கியது.

சின்னக்குத்தூசி கைதூக்கிக் காட்டிய போட்டோவில் பெரியார் ஈ.வெ.ராமசாமி சிரித்துக் கொண்டிருந்தார்! விசாரணை முடிவுக்கே வரவில்லை. நீண்டுகொண்டேயிருந்தது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரைக் குடைந்து கொண்டிருந்தார்கள். ‘‘ஒரு கட்டுரைக்கு எவ்வளவு தருவார்கள்? ஒரு கட்டுரையை எழுத எத்தனை மாதமாகும்? எழுதிய கட்டுரையை போஸ்ட்டில் அனுப்புவீர்களா? கொரியரில் அனுப்புவீர்களா...?’’ என அவர்கள் கேட்பதைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு, அவர்கள் விசாரிக்க வந்திருக்கிறார்களா? இல்லை, பேட்டி எடுக்க வந்திருக்கிறார்களா? என்பது விளங்கவில்லை.

இடையில் கொஞ்ச நேரம் சின்னக்குத்தூசி எங்கள் பக்கம் திரும்பி, திரைப்படத் துறை குறித்தும் இசை குறித்தும் உரையாடுவார். பிறகு விசாரணையை அவர்கள் தொடருவார்கள். பார்க்க விநோதமாகவும் வெறுப்பாகவும் இருந்தது. ஒரு மூத்த பத்திரிகையாளரை இப்படியெல்லாமா காவல்துறை இம்சிக்கும் என்றிருந்தது. அதைவிட, சின்னக்குத்தூசி எங்களிடம் உரையாடியதை அவ்வதிகாரிகள் ஏன் தங்கள் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார்கள் என்பது இன்றுவரை புரியவே இல்லை.

விசாரணை அதிகாரிகளின் உடல் மொழியும், உண்மையை அறிய அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் எத்தகையன என்பதை அதுவரை நாங்கள் அறிந்திருக்கவில்லை. விசாரிக்க வந்தவர்களுக்கு தேநீரும் உணவும் கொடுத்து சின்னக்குத்தூசி உபசரித்தது உள்பட. ஒருவழியாக அவர்கள் கிளம்பிவிடுவார்கள் என்று பார்த்தால் இரவு உணவையும் அங்கே முடித்துவிட்டுத்தான் கிளம்புவார்கள் போலிருந்தது. “என்ன சாப்பிடுறீங்க சார்...?” என்று சின்னக்குத்தூசி எங்களைப் பார்த்துக் கேட்கும்போது, ‘‘நேரம் போகட்டுமே...’’ என்றார் ஒரு அதிகாரி. அவர் முகம் இன்னமுமே எனக்கு மறக்கவில்லை.

காவல்துறையின் புலனாய்வுத்துறை அதிகாரிகளை வரிசையாக நிற்க வைத்து அவரை அடையாளம் காட்டச்சொன்னால் பதினேழு வருடத்திற்குமுன் பார்த்த அவரைச் சரியாகக் காட்டிவிடுவேன். அப்படி பதிந்திருக்கிறது அந்த அதிகாரியின் முகம். வெகுநேரம் கழித்து அவர்கள் கிளம்பினார்கள். முதலில், ‘உங்களைப் பற்றி தெருவில் யாருக்குமே நல்ல அபிப்ராயம் இல்லை’யென்ற அதிகாரி, விடைபெறும்போது, “நீங்கள் ரொம்ப நல்லவராய் தெரிகிறீர்கள்...” என்றார். அண்ணன் கோபாலைப் பற்றி துப்புத் துலக்கவந்த அதிகாரி, தன்னை துலக்கிக்கொண்டு வெளியேறியதும் நாங்களும் புறப்பட்டு விட்டோம்.

வாகன வசதியில்லாத எங்களுக்குப் பேருந்தைப் பிடிக்கும் அவதி. சுவாரஸ்யம் நிறைந்த அந்தச் சந்திப்பிலிருந்து சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பிலும் என் உடனிருந்த கோவி.லெனின், ‘தன்னைச் செதுக்கியதில் சின்னக்குத்தூசிக்கு பெரும் பங்குண்டென...’ நெகிழ்ந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல. அவரை அறிந்த அத்தனைபேருமே அப்படித்தான் சொல்வார்கள். அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னக்குத்தூசிக்கான மதிய உணவு லெனின் வீட்டிலிருந்துதான் போய்க்கொண்டிருந்தது. ஓரிருமுறை நானும் லெனினுடன் மேன்ஷன் வாசல்வரை உணவுப் பையைத் தூக்கியிருக்கிறேன்.

‘‘பெரியாருக்கு குத்தூசி குருசாமி, காமராஜருக்கு டி.எஸ்.சொக்கலிங்கம், ராஜாஜிக்கு கல்கி இருந்ததைப்போல கலைஞரையே என் பேனா வரித்துக் கொண்டிருக்கிறது...’’ என சின்னக்குத்தூசி ஓரிடத்தில் பிரகடனப்படுத்தியிருக்கிறார். கலைஞர் மீது அவர் பேனா கொண்டிருந்த அன்பை கட்டுரைகளில் பார்க்க முடிகிறது. வெளிப்படையாக வியந்தோத அவர் எழுத்து, திராவிட இயக்க எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவசியம் ஏற்பட்டால் வாக்கியங்களில் ஆங்கிலக் கலப்பை அனுமதிப்பதில் அவருக்குத் தயக்கம் இருந்ததில்லை. வேறு யாராவது ஒருவர் கலைஞரைத் தாக்கிவிட்டால் அவரால் பொறுத்துக்கொள்ளவும் முடிந்ததில்லை. என்றாலும், கலைஞரிடம் அவருமே முரண்படாமலில்லை.

ஐக்கிய முன்னணி அரசில் திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்திருந்த சமயம் அது. அப்போது எட்டு மாநிலங்களில் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகளே ஆட்சியிலிருந்தன. ஜக்கிய முன்னணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் நரசிம்மராவ். ஐக்கிய முன்னணியை வழிநடத்தும் பொறுப்பிலிருந்த அவர், அவ்வப்போது அதிரடியான அறிக்கைகளைக் கொடுத்து ஊடகங்களில் தீனியாகிக் கொண்டிருந்தார். அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருந்த அவர், ஒருகட்டத்தில் ‘ஹவாலா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு அமைச்சர்களும் பதவி விலக வேண்டு மென...’ பாய்ந்துவிட்டார்.

அதுகுறித்து ‘முரசொலி’யில் தலையங்கம் எழுதிய சின்னக்குத்தூசி, “ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பது சரிதான். ஆனால், அதே அளவுகோலின்படி ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள நரசிம்மராவ் எப்போது தலைவர் பதவியிலிருந்து விலகுவார்...” எனும் கேள்வியைத் தலையங்கத்தின் முடிவில் எழுப்பியிருக்கிறார்.

தலையங்கத்தின் தொனி, ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்த தி.மு.க.வினுடையதோ, அதன் தலைவராயிருந்த கலைஞருடையதோ அல்ல; முற்று முழுக்க சின்னக்குத்தூசியினுடையது. தலையங்கம் வெளிவந்த இரண்டாவது நாளில், ஐக்கிய முன்னணி குறித்தோ அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குறித்தோ ‘முரசொலி’யில் எதிர்மறையாக வருவது நல்லதல்ல என்று எண்ணிய கலைஞர், ஏன் அப்படியெல்லாம் எழுத வேண்டுமென சின்னக்குத்தூசியைக் கண்டிக்கிறார் அல்லது கடிந்து கொள்கிறார்.

“கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாமே இப்படியான விமர்சனங்களை வைப்பது அ.தி.மு.க.விற்குச் சாதகமாகி விடுமே...” எனும் கருத்தை கலைஞர் தெரிவிக்க, “எட்டு மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் கட்சிகள் குறித்து எதையுமே எழுதவேண்டாம் எனில், தினசரி தலையங்கம் எழுதுவது சிரமமாகிவிடாதா...?” என சின்னக்குத்தூசி சொல்லியிருக்கிறார். உடனே, “நானே தலையங்கம் எழுதுவேன், தெரியும்ல...” எனக் கலைஞர் குரலை உயர்த்தியிருக்கிறார். “நீங்கள் எழுதினால் தலையங்கம் பன்மடங்கு சிறப்பாக இருக்கும். இன்னும் நிறையபேர் படிப்பார்கள்...” என்று கூறி, அந்த நொடியிலேயே ‘முரசொலி’யிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

ஒருவரை நேசிக்கிறோம் என்பதற்காக அவர் எடுக்கும் எல்லா முடிவுகளையும் சரியென்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என சின்னக்குத்தூசி நினைத்திருக்கலாம். அப்போது ‘முரசொலி’யிலிருந்து வெளியேறிய அவர், இரக்கமற்ற முறையில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது மறுபடியும் தம் பணிகளைத் தொடங்க ‘முரசொலி’க்குள் முதல் ஆளாக நுழைந்திருக்கிறார்.

‘முரசொலி’யிலிருந்து வெளியேறிய பிறகும், அவர் திராவிட இயக்கத்தையோ கலைஞரையோ விமர்சித்து எழுதாததைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து ஓர் இயக்கத்தை விமர்சிக்கவோ அதற்கு எதிராகச் செயல்படவோ துணியாதவரே சின்னக்குத்தூசி. எழுத்தை எழுத்தால் மட்டுமே எதிர்கொள்ளப் பழகியிருந்த அவர், தன் கட்டுரைகளை கடுமையாக எதிர்ப்பவர் யாராயிருந்தாலும் மதிப்பளித்திருக்கிறார். தன் கட்டுரைக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை தன்னை எதிர்த்து எழுதியவருக்கும் தர வேண்டுமென பத்திரிகைகளுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். அதனால்தான் தோழர் இரா.ஜவஹர் போன்றோர் அவரை ‘தோழமைத் தந்தை’ என்ற சொல்கொண்டு
அழைத்திருக்கிறார்கள்.
 

(பேசலாம்...)

http://www.kungumam.co.in/

  • 2 weeks later...
Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

 

 

- யுகபாரதி 60

தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் மறைந்தபோது ‘விகடனி’ல் பணியாற்றிய நிருபர் ஒருவர் சின்னக்குத்தூசியைச் சந்தித்து, விஸ்வநாதன் குறித்த மேலதிக விபரங்களைக் கேட்டுக்கொண்டு போய் ஓர் அஞ்சலி கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரை வெளிவந்தவுடன் விபரங்களைப் பெற்றுப்போன நிருபர், ‘விகடன்’ அளித்த காசோலையுடன் வந்திருக்கிறார். “கட்டுரையை எழுதியது நீங்கள். எனக்கு எதற்கு காசோலை...” என்று சின்னக் குத்தூசி அக்காசோலையைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார். விடாப்பிடியாக “எனக்குத் தெரியாது. அலுவலகத்தில் கொடுத்தார்கள். நான் உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்...” எனக்கூறி அந்நிருபர் மேசையில் காசோலையை வைத்திருக்கிறார்.
5.jpg
அப்போதுதான் தனக்கு வங்கிக்கணக்கே இல்லையென்னும் தகவலை சின்னக்குத்தூசி தெரிவிக்கிறார். அதன்பின் அக்காசோலை, பணமாகத் திரும்பி வந்திருக்கிறது. அதையும் அவர் பெற்றுக்கொள்ளாமல், பத்திரிகை வாயிலாக உதவி கேட்டிருந்த ஒரு சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு அப்பணத்தை அனுப்பும்படி சொல்லியிருக்கிறார். உதவி செய்வதே இதயத்திற்கான சிறந்த சிகிச்சையென சின்னக் குத்தூசிக்குச் சொல்லியா தர வேண்டும்? இளம் பத்திரிகையாளர்களை வாஞ்சையுடன் வரவேற்கும் அவர், ஒருபோதும் தம்முடைய கருத்துகளை அவர்களுக்குள் திணித்ததில்லை. மாறாக, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை முடிந்தவரை தெளிவுபடுத்தும் பணியையே செய்திருக்கிறார்.

ஒருமுறை ‘குங்குமம்’ பத்திரிகையில் ‘எவர்கிரீன் கலைஞர்’ என்னும் கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதை எழுதிய பத்திரிகையாளர் எம்.பி.உதயசூரியன் இப்போது ‘புதிய தலைமுறை’ வார இதழில் ஆசிரியராயிருக்கிறார். யோகா பயிற்சி அமைப்பு நடத்திய அவ்விழாவில், கலைஞர் பேசிய பேச்சை முன்வைத்தே அக்கட்டுரை எழுதப்பட்டது. ‘‘82 வயதிலும் தாம் இளைஞராக இருக்கக் காரணம், யோகா பயிற்சியே...’’ என்று கலைஞர் கூறியதைத்தான் உதயசூரியன் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். அக்கட்டுரையை வாசித்த சின்னக்குத்தூசி, “தம்பி நம்ம உதயசூரியன்...” என கலைஞரிடம் உதயசூரியனை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

“இவருடைய நகைச்சுவைக் கட்டுரைகளை வாசித்திருக்கிறீர்கள்தானே...” என சின்னக்குத்தூசி கேட்க, “நம்ம சின்னப் பையனை எனக்குத் தெரியாதா..?” என கலைஞர் சிலேடையைச் சிதறவிட்டிருக்கிறார். கலைஞர் ‘சின்ன’ப் பையன் என்றது, உதயசூரியன் நம்முடைய சின்னம் என்னும் அர்த்தத்தில். ஒத்த சிந்தனையுடைய இரண்டு ஆளுமைகள் சிலேடையிலும் வார்த்தை விளையாட்டிலிலும் ஈடுபடுவதில்தான் இலக்கியத்தின் நயமிருக்கிறதோ? திராவிட இயக்கத்தவர்கள் வார்த்தை விளையாட்டுகளில் விருப்பமுடையவர்களே ஆனாலும், அவர்களுக்கும் சில நேரங்களில் வார்த்தைகளில் சந்தேகம் ஏற்படுவது உண்டு.

அப்படி ஒரு சந்தேகம் சின்னக்குத்தூசிக்கு வந்திருக்கிறது. ‘தூமை’, ‘லோலாயி’ ஆகிய வார்த்தைகள் சென்னையில் மட்டுமே புழக்கத்திலுள்ளன. குழாயடிச் சண்டையில் சர்வ சாதாரணமாக பெண்கள் பிரயோகிக்கும் அவ்வார்த்தைகள் எந்த மொழியிலிருந்து வந்திருக்கும் என்னும் ஐயம் அவருக்கு. பல மொழி பேசக்கூடியவர்கள் கலந்திருக்கும் சென்னையின் மொழி வித்தியாசமான ஓசையைக் கொண்டது. தமிழே ஆனாலும், அதை தமிழ்போல் உச்சரிக்காததால் விநோதமான அர்த்தங்களை அச்சொற்கள் கொண்டுவிடுகின்றன. ஆகவே, ‘‘அவ்வார்த்தைகள் தமிழ்தானா..?’’ என்னும் சந்தேகத்தை திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசிடம் கேட்டிருக்கிறார். “மாதா மாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான் வளர்ந்து ரூபம் ஆனது...” என்று சிவவாக்கியர் பயன்படுத்தியிருப்பதைச் சான்றாகக் காட்டி அது தமிழ்தான் என்று திருநாவுக்கரசு பதிலளித்திருக்கிறார்.
5a.jpg
அத்துடன், ‘‘‘ஸ்திரீலோலன்’ என்னும் சொல்லின் பெண்பால் விகுதியே ‘லோலாயி...’’’ என்றும் தெரிவித்திருக்கிறார். சொற்களின் வேர் எதுவாயிருந்தாலும், அது தமிழோடு கலந்துவிட்டதால் அதை என்ன பொருளில் பயன்படுத்த வேண்டும் என்பதில் சின்னக்குத்தூசிக்கு அக்கறை இருந்திருக்கிறது. சமஸ்கிருதக் கலப்பையும் ஆங்கி லக் கலப்பையும் வெறுத்தவர் இல்லை என்றாலும் அதை தெரிந்துகொள்வதில் அளவுக்கு அதிகமான ஆர்வத்தைக் காட்டியிருக்கிறார். சின்னக்குத்தூசியின் அறையை ‘ஞானானந்தர் மடம்’ என்று விளித்த க.திருநாவுக்கரசு, நீதிக்கட்சி வரலாற்றையும் திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றையும் எழுதியவர்.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் பலருடனும் சின்னக்குத்தூசிக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. என்றாலும், அந்த தொடர்பைப் பயன்படுத்தி அவர் தனக்காக எதையுமே சாதித்துக் கொண்டதில்லை. அன்றைக்குத் தமிழக முதல்வராயிருந்த கலைஞருடன் தினசரி ஒரு மணிநேரம் தொலைபேசியில் பேசுவதாக எத்தனையோ பத்திரிகையாளர்களும் கவியரசர்களும் மேடையில் பெருமையடித்திருக்கிறார்கள்.‘நட்டுவைத்த வேல்போல் பொட்டுவைத்த’ என்றும், ‘கூலிங்கிளாஸ் போட்ட குறுந்தொகை’ என்றும் புகழ்ந்து, கலைஞருக்கும் தமக்குமுள்ள நெருக்கத்தைக் காண்பித்திருக்கிறார்கள்.

ஆனால், அவர் நிழலாகவே இருந்துவந்த சின்னக்குத்தூசி, ஓர் இடத்தில்கூட அப்படியான பெருமிதச் சொற்களை வெளிப்படுத்தியதில்லை. ‘முரசொலி’யிலிருந்து வெளிவந்திருந்த சமயத்தில், கவிஞர் இளையபாரதி தம் கவிதை நூலை கலைஞர் கையால்வெளியிட விரும்பி சின்னக் குத்தூசியை அணுகியிருக்கிறார். அப்பொழுதுகூட அவர் அக்கோரிக்கையை ஆற்காடு வீராசாமி மூலமே நிறைவேற்றித் தந்திருக்கிறார். தன்னை எப்போதோ தலையங்கத்திற்காக கோபித்துக்கொண்ட கலைஞரைச் சந்திக்க விரும்பாமல் அல்ல. தன்னைச் சந்திக்க நேர்ந்தால் வேலையில்லாமல் இருக்கும் தன் குறித்த சங்கடம் கலைஞருக்கு ஏற்படுமே என்றுதான்.

அதே போன்றதொரு நாகரிகத்தை கலைஞரும் சின்னக்குத்தூசியிடம் கடைப்பிடித்திருக்கிறார். ஒருமுறை பெரியாரின் கடவுள் கொள்கையில் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞருக்கும் இடையே பூசல் வெடித்திருக்கிறது. இரண்டு பேருடனும் இணைக்கமாக இருந்த சின்னக் குத்தூசி, அது சம்பந்தமாக வீரமணியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். பேசிய தகவலை கலைஞரிடமும் தெரிவித்திருக்கிறார். தன்னை விமர்சிக்கும் வீரமணியைச் சந்தித்திருக்கிறாரே எனக் கருதாத கலைஞர், குறிப்பிட்ட விஷயத்திற்கான மறுப்பை தாமே எழுதுவதாகச் சொல்லி வீரமணிக்கும் சின்னக் குத்தூசிக்கும் இருந்த நட்பைக் காப்பாற்றியிருக்கிறார்.

நண்பர்களுக்கு இடையே தன்னால் சிக்கல் வந்துவிடக் கூடாதென எண்ணிய விஷயத்தில் ‘விடுதலை’யும், ‘முரசொலி’யும் போட்டி போட்டுக் கொண்டிருந்திருக்கிறது. ‘விடுதலை’ திராவிடக் கழக நாளேடு என்பதையும் ‘முரசொலி’ தி.மு.க.வின் நாளேடு என்பதையும் சொல்ல வேண்டியதில்லையே. ஆற்காடு வீராசாமி நடத்தி வந்த ‘எதிரொலி’யிலும் சின்னக்குத்தூசி சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையில் ‘எதிரொலி’யை நடத்திவந்த வீராசாமியின் சிரமங்கள் சின்னக் குத்தூசிக்குத் தெரியாமலில்லை.
கடனில் எதிரொலித்துக் கொண்டிருந்த அப்பத்திரிகையில், சம்பளம் வாங்காமல் பல மாதங்கள் உருண்டோடி இருக்கின்றன.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சின்னக் குத்தூசியின் தந்தை மரணமடைந்து விடுகிறார். ஊருக்குச் செல்லவே பணமில்லை என்னும் நிலையில், எங்கெங்கோ இரண்டாயிரம் ரூபாயைப் புரட்டி வீராசாமி தந்திருக்கிறார். கைக்கு வந்த இரண்டாயிரம் ரூபாயில் தந்தைக்கான இறுதிக் காரியங்களைச் செய்யக் கிளம்புகிறார் சின்னக் குத்தூசி. ஆனால், அவருக்கு முன்பாகவே அவருடைய திருவாரூர் நண்பர்கள் இறுதிக் காரியத்திற்குத் தேவைப்படும் பணத்தை ஏற்பாடு செய்துவிடுகிறார்கள். ஒரு மகனாக அவர் செய்யவேண்டிய கடமையிலிருந்து தவறாதவாறு அவரைத் தாங்கிப்பிடித்த நண்பர்களும் அவரைப் போலவே இருந்திருக்கிறார்கள். நாமெப்படியோ அப்படியே நமக்கு நண்பர்கள் வாய்ப்பார்கள் என்பது பொய்யில்லை.

வெறும் இரண்டாயிரத்தை மட்டுமே கொடுத்தனுப்பி இருக்கிறோமே, அது போதாதே என வீராசாமி ஒருபுறம் வருந்திக் கொண்டிருக்க, சின்னக்குத்தூசியோ எல்லா செலவுகளையும் நண்பர்களே பார்த்துக்கொண்டார்களென கொண்டுபோன இரண்டாயிரத்தை மறுபடியும் அவரிடமே திருப்பிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தில், நின்றுபோக இருந்த ‘எதிரொலி’மீண்டும் வந்திருக்கிறது. தேவைக்குக்கூட பணத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவழிக்கும் குணம் சின்னக் குத்தூசிக்கு இருந்திருக்கிறது. அறம் சார்ந்து வாழ்வதென முடிவெடுத்துவிட்ட ஒருவர், எந்த இக்கட்டிலும் அதிலிருந்து வழுவுவதில்லை. கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பார்த்தால்கூட சின்னக் குத்தூசி, அண்ணாந்து பார்க்கத்தக்க உயரத்தை எட்டிவிடுகிறார்.

ஏற்றுக்கொண்ட கொள்கையிலும் வகுத்துக்கொண்ட வழியிலும் அடிபிறழாமல் நடக்க, தன்னைத்தானே வருத்திக் கொண்டிருக்கிறார். பல பத்திரிகைகள் அதிக சம்பளம் கொடுத்து, அவரை சுவீகரிக்க நினைத்திருக்கின்றன. வறிய வாழ்விலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள அவருக்குக் கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அவர், காகிதப் புலியாக மட்டுமில்லாமல், தேவையேற்படும் போதெல்லாம் களப் போராளியாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த திருவாரூரைச் சேர்ந்தவர் என்பதால் இளவயதிலிருந்தே இசை ஒன்றுதான் அவரை ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.

தமிழிசையிலும் திரைப்படப் பாடல்களிலும் அவருக்கிருந்த ஆர்வத்தை பத்திரிகையாளர் கோலப்பன், சின்னக்குத்தூசி நினைவு மலரில் எழுதியிருக்கிறார். ஒருகாலத்தில் கோலோச்சிய நாகசுர, தவில் வித்வான்களின் மேதமைகள் அவருக்குத் தெரிந்திருக்கிறது. மதுரை மணி, ஆலத்தூர் சகோதரர்கள், குளிக்கரை பிச்சையப்பா, வேதாரண்யம் வேதமூர்த்தி, காருக்குறிச்சி அருணாச்சலம், திருவாவடுதுறை ராஜரத்னம் என பலரும் அவருடைய இசை ரசனைக்கு வித்திட்டிருக்கிறார்கள். ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்றுப் பதிகத்தையும் ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்ற திருத்தொண்டத் தொகையையும் அகார உகாரங்களுடன் அச்சரம் பிசகாமல் கோலப்பனுக்குச் சின்னக் குத்தூசி பாடிக் காட்டியிருக்கிறார்.

“‘மாதர்ப்பிறை கண்ணியானை...’ என்னும் பாடலில் வரும், ‘கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறி யாதன யாவும் கண்டேன்...’ என்னும் வரியை மெய்மறந்து சின்னக்குத்தூசி பாடுகையில் ஓடிப்போய் அவருடைய கால்களை கட்டிக்கொள்ளலாம் போலிருந்தது...’’ எனக் கோலப்பன் வியந்திருக்கிறார். ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் ‘சொன்னதை செய்திட சாகசமா...’ என்னும் பாடலை அவ்வப்போது விரும்பிக்கேட்கும் சின்னக்குத்தூசிக்கு, அதிகம் பிடித்த பாடகர் என்றால் மதுரை சோமுவே. அவரை அடுத்து மகாராஜபுரம் சந்தானம். இசையை நுட்பத்துடன் ரசிக்கத் தெரிந்த சின்னக்குத்தூசிக்கு, கர்நாடக இசையைக் காட்டிலும் தமிழிசையே முக்கியமாகப்பட்டிருக்கிறது.

‘‘வருடந்தோறும் திருவையாற்றில் நடக்கும் தியாகய்யர் உற்சவத்தைக் கொண்டாடக் கூடிய இசைவாணர்கள், தமிழிசையை வளர்த்தெடுத்த முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயரைக் கொண்டாடுவதில்லையே, ஏன்..?’’ என ஒரு கட்டுரையில் வேதனைப்பட்டிருக்கிறார். திருவாரூரில் அவதரித்த மூம்மூர்த்திகளுக்கு விழா எடுப்பவர்கள், திருவாரூருக்கு அருகிலேயுள்ள சீர்காழியில் அவதரித்த தமிழிசை மும்மணிகளைப் புறக்கணிப்பதற்குப் பின்னே உள்ள அரசியலை அக்கட்டுரையில் அலசியிருக்கிறார். தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகளை மதிக்கக்கூடியவர்கள் தமிழிசையை இன்னமுமே தீட்டாகக் கருதும் நிலையை அக்கட்டுரையில் கண்டித்தும் இருக்கிறார்.

சின்னக் குத்தூசியின் கண்டனத்திற்கு பதிலளித்த பத்திரிகையாளர் சோ, “நாத்திகத்தையும் இந்துமத எதிர்ப்பையுமே முதன்மையாகக் கொண்ட கழகங்களின் பகுத்தறிவுக்கும் சங்கீத உலக சம்பிரதாயங்களுக்கும் என்ன சம்பந்தம்...” என்று கேட்டிருக்கிறார். அத்துடன் நில்லாமல், ‘‘தமிழ் மும்மணிகள் கீர்த்தனைகளை மட்டும்தான் இயற்றியிருக்கிறார்களே தவிர, இசையமைத்துத் தரவில்லையே...’’ எனவும் கேட்டிருக்கிறார். “கீர்த்தனையை இயற்றியவர்களே மெட்டமைத்துத் தர வேண்டுமென்பது விதியென்றால், பாபநாசம் சிவனின் பாடல்கள் பல மேடைகளில் பாடப்படுகின்றனவே, அவற்றுக்கெல்லாம் பாபநாசம் சிவனா இசையமைத்தார்..?’’ என்ற சின்னக்குத்தூசியின் கேள்விக்கு சோவிடம் பதிலில்லை.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in

Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

 

 

யுகபாரதி - 61

‘‘மகாராஜா இயற்றி, செம்மங்குடி சீனிவாச அய்யர் இசையமைத்த சுவாதித் திருநாள் கீர்த்தனைகளை மேடைதோறும் பாடுகிறவர்கள், ஏன் அதே மேடைகளில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இசையமைத்த அருணாச்சல கவிராயர் பாடல்களை பாடுவதில்லை..?’’சின்னக்குத்தூசியின் கேள்விக்கு சோ மவுனமே சாதித்திருக்கிறார். விஷயத் தெளிவில்லாமல் எந்த தர்க்கத்தையும் சின்னக்குத்தூசி வைத்ததில்லை. ஒருவர் தன்னிடம் முன்வைக்கும் கேள்வி, எந்த அரசியலில் இருந்து எழுப்பப்படுகிறதோ அந்த அரசியலை உள்வாங்கி பதில் சொல்ல அவர் தகவல்களைச் சேகரித்துக் கொண்டே இருந்திருக்கிறார். ராஜாஜியைப்போல அறிவாளியே இல்லையென்று சொல்கிறவர்கள், தமிழிசை குறித்து அவர் சொல்லியிருப்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
3.jpg
பாரதியையும் கல்கியையும் கொண்டாடி மகிழ்பவர்கள், தமிழில் பாடவேண்டும் என்ற அவரின் கனவை ஈடேற்றத் தயங்குகிறார்கள். காரணம், சாதிப் பித்தால் விளைந்த தமிழ்த் துவேஷம்.‘‘‘வாதாபி கணபதிம்’-க்குப் பதிலாக ‘ஞான விநாயகனே’ என்றும் ‘சித்தி விநாயக தனிசம்’ என்பதற்குப் பதிலாக ‘சரவணபவ எனும் திருமந்திரம் தனை’ என்றும் பாடுவதால் இசைக்கு என்ன கேடு வந்துவிடும்...” என்ற சின்னக்குத்தூசி, ஆண்டாளின் திருப்பாவையைப் பிரபலப்படுத்திய எம்.எல்.வசந்தகுமாரியை அக்கட்டுரையில் சிலாகித்திருக்கிறார். “சூடிக்கொடுத்த ஆண்டாள், பாடல்களை பாடிக்கொடுத்தாரே அன்றி இசையமைத்துக் கொடுக்கவில்லையே...” என்றிருக்கிறார்.

தமிழைப் பாடாமல் இருப்பதற்கு சோ போன்றவர்கள் எதையெல்லாம் காரணமாகச் சொன்னார்களோ, அதையெல்லாம் அரசியல் விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்ப்பது சின்னக் குத்தூசிக்கு வாடிக்கையாய் இருந்திருக்கிறது. ‘பாடிப் பறந்த குயில்’ எனும் தலைப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி சின்னக்குத்தூசி ஓர் அஞ்சலிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதை எப்போது படித்தாலும் என் கண்கள் கலங்கிவிடும். தமிழிசைக்குத் துணை நின்ற இசையரசியை அதைவிட அழகாக வேறு யாரும் சித்திரித்ததில்லை.‘‘உடல்நலமில்லாமல் இருந்த காந்திக்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களே மருந்தாக மாறின...’’ என்பதில் தொடங்கி நெகிழ்வான பல சம்பவங்களை அக்கட்டுரையில் அடுக்கியிருப்பார்.

இசைமேடைகளில் தெலுங்கும் சமஸ்கிருதமும் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த காலத்தில், தேவகோட்டை தமிழிசை மாநாட்டில் கலந்துகொண்டு “பெரும்பாலும் தமிழ்ப் பாடல்களைப் பாடமுடியுமா..?” என்று கேட்டதற்கு, “பெரும்பாலும் பாட முடியாது. வேண்டுமானால் முழுவதும் தமிழ்ப் பாடல்களைப் பாடுகிறேன்...” என்ற எம்.எஸ்.ஸை வணங்கித் தொழலாம். ஒருவரைப் பாராட்டவோ விமர்சிக்கவோ அவர் வைத்திருந்த தராசின் நடுமுள்ளாக சமூகநீதி இருந்திருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர், ஈ.வெ.கி. சம்பத், கி.வீரமணி, கண்ணதாசன், ஜெயகாந்தன் என பலருடனும் அவர் கொண்டிருந்த உறவைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

ஒருவர்மீது அவர் வைக்கும் அன்பை எதற்காகவும் விலக்கிக் கொண்டதில்லை. ஒருகாலத்தில் ஒத்த கருத்துடன் பயணித்தவர்கள் பின்னொரு காலத்தில் வேறு கருத்தைக் கொண்டுவிட்டாலும், அன்பை அடைகாக்க அவர் தவறியதில்லை. வேறு வேறு தலைவர்களுடனும் வேறு வேறு ஆளுமைகளுடனும் பழகும் வாய்ப்பைப் பெற்ற ஒருவர், எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடந்துகொள்வது எளிதல்ல. அவர் சொல்வதை இவரிடமோ இவர் சொல்வதை அவரிடமோ வாய் தவறியும் சொல்லிவிடாத சின்னக் குத்தூசியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. காலத்தைப் பின்தொடரும் பத்திரிகையாளர்கள் அவருடைய எழுத்துகளிலிருந்து தங்களை வடிவமைத்துக்கொள்ளலாம்.

பொதுவாக அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதுபவர்கள், எதிர்த் தரப்பினரைத் தாக்குவதையே குறியாக வைத்திருப்பார்கள். தங்களுக்கு பதில் சொல்ல சாதகமான பகுதிகளை மேற்கோள் காட்டி தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைப்பார்கள். ஆனால், சின்னக்குத்தூசி அப்படியல்ல. எதிர்த் தரப்பினரின் வாதத்தை முழுமையாக சொல்லிவிட்டே கட்டுரையைத் தொடங்குவார். ‘இந்தியாவில் நடந்த முதல் ஊழல்’ என்று கட்டுரையைத் தொடங்கினால் உண்மையில், அது ஊழலா? இல்லை ஊழலாக பார்க்கப்பட்டதா? என்பதைச் சொல்லாமல் அக்கட்டுரையை முடிக்கமாட்டார். சம்பந்தப்பட்ட விஷயத்தை அரசியல் கட்சிகள் எப்படி பார்த்தன? தொடரப்பட்ட வழக்குகள் எதன் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன?
3a.jpg
ஏற்கனவே நீதிமன்றங்கள் இப்படியான வழக்குகளுக்கு என்னவிதமாக தீர்ப்பளித்தன? என்பதையெல்லாம் விளக்கமாக எழுதும் முறை அவருடையது இரண்டு கட்டில், இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருக்கும் அவருடைய மிகச்சிறிய மேன்ஷன் அறையில், குவியல் குவியலாக கத்திரிக்கப்பட்ட பத்திரிகைக் குறிப்புகள் நிறைந்திருந்தன. தனித் தனிக் கவர்களில் தலைப்பிட்டு அவற்றையெல்லாம் பாதுகாக்க அவர் பெரும் பாடுபட்டிருக்கிறார். அரசியல், இசை, இலக்கியம், அறிவியல் என எதை எடுத்துக்கொண்டாலும், அவரால் அதற்கான தரவுகளைத் தர முடிந்திருக்கிறது.‘‘மறைமலையடிகள் பெரியாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினாராமே...’’ என்று யாராவது கேட்டால்,

“அது 1928ல் நடந்தது’’ என்றும், ‘‘‘சுத்த சைவ இரத்த ஓட்டம் உள்ளவர்கள் ஈ.வெ. ராமசாமியையும் சுயமரியாதை இயக்கத்தையும் கொல்லாமல் இருக்கலாமா...’ என மறைமலையடிகள் குகானந்த சபையில் பேசியதாக வந்த பத்திரிகைச் செய்தியால் விளைந்த விபரீதமென்றும்...’’ அவரால் சொல்ல முடியும். கூடவே, கடிதத்தில் இடம்பெற்றிருந்த முக்கியமான வாக்கியங்களையும், அதற்குப் பெரியார் எப்படி எதிர்வினையாற்றினார் என்பதையும் சொல்லிவிடுவார். அடிகளாரும் பெரியாரும் அவ்விஷயத்தில் எவ்வளவு நாகரீகமாக நடந்துகொண்டார்கள் என்ற நயத்தலில் சின்னக்குத்தூசி வெளிப்படுவார். 1940களில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

பத்திரிகைத் துறையிலுள்ள நெருக்கடிகளையும் அதில் பணியாற்றுபவர்களின் ஏக்கங்களையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது. ‘கோடி கோடியாய் பணம்’ என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதும் பத்திரிகையாளர்கள் அந்த மாதச் சம்பளத்திற்குப் படும் அவஸ்தைகள் வாசகர்களின் பார்வைக்கு வருவதில்லை. அக்காலத்தில் ‘தினமணி’யில் உதவி ஆசிரியராக இருந்த எஸ்.எஸ்.மாரிசாரி ‘சுயராஜ்யம்’ எனும் நூலில் சுதந்திரத்திற்கு முன்பிருந்த பத்திரிகையாளர்களின் வாழ்வை எழுதியிருக்கிறார். அப்போது ஆசிரியர் பொறுப்பிலிருந்தவர் ‘பேனா மன்னன்’ என்றழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம். மாரிசாமியுடன் புதுமைப்பித்தன், சிவசிதம்பரம், வெங்கடராஜுலு, ஏ.ஜி.வெங்கடாச்சாரி, சந்தானம், காசி விஸ்வநாதன் ஆகியோரும் பணியாற்றியிருக்கிறார்கள்.

அப்போது ‘தினமணி’ குழுமம் மிகக் குறைந்த சம்பளத்தையே வழங்கியிருக்கிறது. அதையும் மொத்தமாகத் தராமல் ஐந்து, பத்தாக தந்திருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு எல்லோரும் ஒன்றிணைந்து கூட்டாக அதன் நிறுவனர் கோயங்காவிடம் சம்பளம் போதவில்லை என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கோயங்காவோ கோபமாகிவிடுகிறார். ‘‘நஷ்டத்தில் பத்திரிகை இயங்கிக் கொண்டிருப்பதால் சம்பளத்தை உயர்த்தியோ மொத்தமாகவோ தரமுடியாது...’’ எனவும் சொல்லிவிடுகிறார். உண்மையில் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தது அதே குழுமத்தில் இருந்து வெளிவந்த ஆங்கில ஏடான ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’தானே அன்றி, ‘தினமணி’ அல்ல.

பத்திரிகைத்துறையோ பலசரக்குக் கடையோ எங்கே இருந்தாலும் முதலாளிகள் முதலாளிகள் தானே? தன்னிடம் வேலை செய்பவர்கள் தனக்கு அடங்கி நடக்காமல் கேள்வி எழுப்புகிறார்களே என்றதும் கோயங்காவாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வானுக்கும் பூமிக்கும் குதித்த அவர், இவர்களுடைய கோரிக்கைக்குக் கிஞ்சித்தும் செவி சாய்க்கவில்லை. உடனே கோயங்காவை மிரட்டுவதாக நினைத்துக்கொண்டு அத்தனை பேரும் ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியிருக்கிறார்கள். ராஜினாமா கடிதத்தை எழுதும் ஐடியாவைக் கொடுத்தவர் சிறுகதை முன்னோடியான எழுத்தாளர் புதுமைப்பித்தன். ஒவ்வொருவரும் தனித் தனியாக ராஜினாமா கடிதத்தை எழுதியனுப்ப, கோயங்காவிடமிருந்து பதில் கடிதம் வந்திருக்கிறது.

கடிதத்துடன் செக்கையும் கோயங்கா அனுப்பியிருக்கிறார். கடிதத்தை பிரித்துப் படித்தால் கோயங்கா அவர்களை மிரட்டியிருக்கிறார்.“இதுவரை நீங்கள் பார்த்த வேலைக்கான சம்பளத்தை இத்துடன் செக்காக இணைத்திருக்கிறேன். தங்கள் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது...” என்று அக்கடிதத்தில் கோயங்கா குறிப்பிட்டிருக்கிறார். சம்பளம் போதவில்லை என்று கேட்கப்போனால் சம்பளமே இல்லாமல் செய்துவிட்டாரே என வருந்தியவர்கள், விஷயத்தை ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் கொண்டு போயிருக்கிறார்கள். அவர் ராஜினாமா கடிதம் எழுதவில்லை. ஆனாலும், விஷயத்தைக் கேள்விப்பட்ட அவர், “இனியும் செய்வதற்கு ஒன்றுமில்லை.

வாருங்கள், நாம் எல்லோரும் வெளியேறி புது பத்திரிகையை ஆரம்பிப்போம்...” என்றிருக்கிறார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘தினசரி’ நாளேடு.‘காந்தி படுகொலை, தியாகராஜபாகவதர் - என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலை, பெரியார் - மணியம்மை திருமணம்’ முதலான செய்திகள் முதலில் வெளிவந்தது அந்த ‘தினசரி’யில்தான். மேற்கூறிய சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதிய சின்னக் குத்தூசி, பத்திரிகாதிபர்களின் முதுகைச் சொறியும் இன்றைய பத்திரிகையாளர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். பிறருக்காக நஷ்டப்படத் துணிந்த சொக்கலிங்கம் போன்றோரை அவர் எப்பொழுதுமே நினைவில் வைக்கத் தவறியதில்லை.
 

(பேசலாம்...)

http://www.kungumam.co.in

Posted

 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 62

மூடநம்பிக்கைக்கு எதிராக சின்னக்குத்தூசி எழுதும் கட்டுரைகளில் குறும்பும் கேலியும் கொப்பளிக்கும். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட போதிலும் இன்னமும் ஜோதிடம், ஜாதகம், எண் கணிதம் என்பதில் மக்கள் காட்டிவரும் ஆர்வத்தை அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை. 96ல் ‘தலைவர்களை ஏமாற்றும் ஜோதிடப்புலிகள்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் இருந்த ஜோதிடப்புலி சிவானந்த சிவயோகி ராஜேந்திரா என்பவரைப் பற்றிய கட்டுரை அது. அந்த சாமியார் வைத்திருந்த மடத்திற்குப் பெயர் ‘கோடி மடம்’.
17.jpg
150 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மடத்தில் வாழ்ந்த சாமியார் ஒருவர் எழுதி வைத்துவிட்டுப் போன ஓலைச்சுவடியிலிருந்து எதிர்காலத்தை கணித்துத் தருவதாகச் சிவயோகி அளந்த கதையை நம்பி, இந்தியாவிலுள்ள பெரிய தலைவர்களெல்லாம் அந்த சாமியாரைச் சந்தித்து ஆசியும் அறிவுரையும் பெறக் காத்துக்கிடந்திருக்கிறார்கள்.‘‘தன்னிடமுள்ள கிரந்த புத்தகத்தில் எதிர்கால அரசியல் நிகழ்வுகளும் எழுதப்பட்டுள்ளன...’’ என்ற அவர், வாய்க்கு வந்ததையெல்லாம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.‘கோடி மடம்’, அகில இந்தியாவையும் ஆட்டிப்படைத்திருக்கிறது. நரசிம்மராவும் இந்திராகாந்தியும்கூட அவரிடம் ஆலோசனை பெறுவதாக பத்திரிகைகளும் தம் பங்குக்குப் புரளியைக் கிளப்பிவிட, சாமியாரின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

‘நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறார்’ என்று புகழப்பட்ட அந்த சாமியார் தனக்குக் கிடைத்த திடீர் வாழ்வால் கோடியில் புரண்டிருக்கிறார். ‘கோடி மடம்’ எனும் பெயருடைய அம்மடத்தில் கோடிக்கணக்கில் பணம் குவிந்திருப்பதை வருமான வரித்துறை மோப்பம் பிடித்திருக்கிறது. அந்நிலையில், திடீரென்று ஒருநாள் அச்சாமியாரிடம் விசாரிக்க வருமான வரித்துறையினர் வந்திருக்கிறார்கள். யார் யாரையோ விசாரித்து அவர்களுக்கு நடக்க இருப்பதைக் கணித்த சாமியார், தனக்கு நடக்கப்போவது என்ன எனத் தெரியாமல் இருந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை சின்னக் குத்தூசி, குறும்பும் எள்ளலும் தொனிக்க அக்கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
17a.jpg
‘‘எமர்ஜென்சியைக் கொண்டுவந்த இந்திராகாந்திக்கே ஆலோசனை சொல்வதாகக் கூறிய ஜோதிடப்புலி, இந்திராகாந்தி இறுதியில் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாவார் என்பதை ஏன் சொல்லவில்லை..?’’ என்றும் அக்கட்டுரையில் கேட்டிருக்கிறார்.‘‘ஒருவேளை கிரந்தப் புத்தகத்தில் அத்தகவல் இடம்பெற்றிருந்தால் அந்த உண்மையை மறைத்த குற்றத்திற்காக அவரையும் கைது செய்யலாம் தானே..?’’ என்னும் விதத்தில் அக்கட்டுரை போகும். “கைலாச மலர் வாடும். பஞ்சரத்தினக் கிளி பறந்துபோகும். நாலாத் திசையிலும் குழப்பம் மேலோங்கும். மொட்டு விரியும். முத்துக்கள் உடையும்...” என்று கிரந்தப் புத்தகத்தில் இருப்பதாக நரசிம்மராவிடம் சிவயோகி சொன்னதாக ஒரு தகவல்.

 “கைலாச மலர் வாடும் என்றால் காங்கிரஸ் தோற்கும் என்றும், பஞ்சரத்தினக் கிளி பறந்துபோகும் என்றால் இந்தியாவுக்கு ஆபத்துவரும் என்றும், மொட்டு விரியும் என்றால் தாமரை ஆட்சிக்கு வரும் என்றும், முத்தாரம் உடையும் என்றால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத குழப்ப நிலை...’’ என்றும் சாமியார் நரசிம்மராவிடம் சொல்லியிருக்கிறார். அறிவுக்குப் பொருந்தாமல் அவர் சொன்னது ஒன்றுகூட நடக்கவில்லை. இருந்தும், அதுவெல்லாம் நடக்குமென்று நம்பிய நரசிம்மாராவ் போன்ற தலைவர்களின் தகுதியை சின்னக் குத்தூசி அக்கட்டுரையில் சந்தேகித்திருக்கிறார்.

‘‘சாதாரண மனிதர்களை ஏமாற்றினால் மோசடி சட்டத்தில் உள்ளே தள்ளும் அரசு, பெரும் பெரும் தலைவர்களை ஏமாற்றும் சாமியார்களின் காலடியில் விழுந்து கிடக்கிறதே...’’ என்றும் அக்கட்டுரையில் கவலைப்பட்டிருப்பார். அதேபோல, சின்னக்குத்தூசியும் பத்திரிகையாளர் ஞாநியும் இணைந்து, காஞ்சி காமகோடி பீடாதிபதியை எடுத்த நேர்காணல் நூல் இன்றும் பலரால் வாசிக்கப்பட்டு வருகிறது. ஆன்மிக வியாபாரத்தைச் செய்துவரும் சாமியார்களின் போலி முகத்தைத் தோலுரிப்பது என்றால் அவருக்கு அப்படியொரு ஆனந்தம் இருந்திருக்கிறது. திருச்சியில் பெரியார் நடத்தி வந்த ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பயின்ற சின்னக் குத்தூசி, இறுதிநாள்வரை பெரியாரின் சமூகப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியராகவே தன்னைத் தகவமைத்திருக்கிறார்.
17b.jpg
சமையல்வேலை செய்துவந்த தந்தைக்கும் வீட்டுவேலை செய்துவந்த தாய்க்கும் மகனாகப் பிறந்த அவருக்கு, சொந்த வீடோ அந்த வீட்டில் சமையல் செய்து உண்ணும் வாய்ப்போ இல்லாமல் போனதுதான் இயற்கையின் முரண். அவருடைய நெடிய வாழ்வில் காலத்திற்கேற்ப கருத்துகளையும் பாதைகளையும் மாற்றிக்கொண்ட எத்தனையோ அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறார். காமராஜரை ஒழிக்க ராஜாஜி தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்ததையும், அதே ராஜாஜி, தி.மு.க.வை தோற்கடிக்க ‘‘நானும் காமராஜரும் வேறு வேறு அல்ல...’’ என்றதையும் ஒரு மாதிரியாக சின்னக் குத்தூசி பார்த்திருக்க வாய்ப்பில்லை. அண்ணாவைப் புகழ்ந்த கண்ணதாசன் ஒருகட்டத்தில் காமராஜருக்காக அண்ணாவை ஏசியதையும், அதே கண்ணதாசன் காமராஜரை ‘சோஷலிச விரோதி’ என்றதையும் காலத்தின் விளையாட்டென்று அவர் கருதியிருக்கலாம்.

கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நிகழ்ந்த உறவையும் பிணக்கையும் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் நடுவிலே இருந்த முரண்பாட்டையும் அருகிலிருந்து பார்க்கக்கூடிய அசந்தர்ப்பம் சின்னக்குத்தூசிக்குக் கிடைத்திருக்கிறது. மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் அவ்வப்போது அலசி ஆராய்ந்துவந்த சின்னக் குத்தூசி, ஒரே நிலையில் தன்னை இருத்திக்கொள்ள திராவிடத்தைக் கொழுக் கொம்பாகப் பற்றியிருக்கிறார். இல்லையென்றால், அவருமே ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை’ என்ற வழமையான சமரசத்திற்கு ஆட்பட நேர்ந்திருக்கும். சின்னக்குத்தூசியின் சலனமற்ற மனநிலை சகல நிலைகளையும் தாண்டி மேலெழும்பும் சக்தியைக் கொடுத்திருக்கிறது.

தம்முடைய தடத்தை அழித்துக்கொண்டு சமூகப் பாதையில் பயணிப்பவர்கள் இன்றைக்கு எத்தனைபேர் என்பது கேள்விக்குறி. பல பத்தாண்டுகளில் ஒரு துருவத்திலிருந்து இன்னொரு துருவத்திற்கு நகர்ந்துவிடுபவர்கள் உண்டு. ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டாக தன்னை அறிவித்துக்கொண்ட எழுத்தாளர் ஜெயகாந்தன், கம்யூனிஸ்ட்டுகள் அப்போது தீவிரமாக எதிர்த்துவந்த காங்கிரஸில் போய்ச் சேர்ந்தார். சுதந்திரச் சிந்தனையுடைய அவர் அதற்கான காரணங்களையும் நியாயங்களையும் பல மேடைகளில் விளக்கியிருக்கிறார். கூடுதலாக ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்னும் நூலில் எழுதியுமிருக்கிறார்.

ஆனாலும்கூட, அவரை அணுகுவதில் பலருக்கும் சிரமம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வார் எனத் தெரியாததால் பெரிய பெரிய அரசியல் தலைவர்கள்கூட அவரிடம் ஜாக்கிரதையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். அப்படியான ஜெயகாந்தனிடம் சின்னக்குத்தூசி அறிமுகமான விதம் சுவாரஸ்யமானது. ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்குமுன்பு, அப்போதைய திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அமைந்திருந்த ‘ஸ்டார் பிரசுரம்’ அலுவலகத்தில் ஜெயகாந்தன் இருந்திருக்கிறார். அச்சாக இருந்த தன்னுடைய நாவலுக்கு மெய்ப்புத் திருத்திக்கொண்டிருந்த அவரிடமே, “ஜெயகாந்தனைச் சந்திக்க வேண்டும்...” என்றிருக்கிறார் சின்னக்குத்தூசி. சற்றே மிடுக்கான தோரணையில் தலை நிமிர்ந்திருக்கிறார், ஜெயகாந்தன்.

வந்திருப்பவர் யாரென்று தெரியாததாலும், மெய்ப்பு திருத்தும் பணியை முடிக்காததாலும் கோபத்துடன், “நான்தான் ஜெயகாந்தன். என்னவேண்டும்..?” என்று கேட்டிருக்கிறார். உடனே சின்னக்குத்தூசி, ‘‘அப்பாத்துரையாருக்காக நன்றி சொல்ல வந்தேன்...” என்றிருக்கிறார். “அப்பாத்துரையாருக்கு நன்றி சொல்ல ஏன் என்னிடம் வந்தீர்கள்..?” என்கிறார் ஜெயகாந்தன்.“தமிழ் எழுத்தாளர் சங்கத் தேர்தலில் ‘பன்மொழிப் புலவர்’ கா.அப்பாத்துரையார் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற பிரபல விமர்சகர் க.நா.சுப்ரமணியமே ஜெயிப்பார் என்றே திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நாங்களும் நினைத்திருந்தோம். ஆனால், நீங்களும் அத்தேர்தலில் போட்டியிட்டதால் வாக்குகள் பிரிபட்டு, ஒரு வாக்கில் அப்பாத்துரையார் ஜெயித்திருக்கிறார்.

நீங்கள் போட்டியிடாது போயிருந்தால் எங்களுக்குத் தோல்வியே கிடைத்திருக்கும். எனவேதான், அப்பாத்துரையாரின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்த உங்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறேன்...” என்றதும் ஜெயகாந்தன் குஷியாகி மெய்ப்பு திருத்தும் பணியை அப்படியே விட்டுவிட்டு, “காஃபி குடிக்கப் போவோமா...” என்று சின்னக்குத்தூசியுடன் கிளம்பியிருக்கிறார். அதன்பின் ‘வைத்தா அய்யர்’ கடையில் கதம்ப பஜ்ஜியைப் பற்றியும் ஓலை பக்கோடாவைப் பற்றியும் இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்ததைச் சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.

ஜெயகாந்தனின் அறிமுகத்திற்குப் பிறகுதான் சின்னக்குத்தூசி ‘சொல்லின் செல்வர்’ ஈ.வெ.கி.சம்பத் நடத்தி வந்த ‘தமிழ்ச்செய்தி’யில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஜெயகாந்தனின் சிபாரிசினால் என்று புரிந்துகொள்ள வேண்டாம். ‘தமிழ்ச்செய்தி’யில் வேலைக்குச் சேர்ந்ததால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயகாந்தனைச் சந்திக்கும் வாய்ப்பு சின்னக்குத்தூசிக்கு அடிக்கடி கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தனின் மடத்தையும் அம்மடத்திற்கு வரும் ஆளுமைகளையும் சின்னக்குத்தூசி ‘சத்தியத்துக்கு ஞானபீடம்’ எனும் கட்டுரையில் விவரித்திருக்கிறார். பழகப் பழக ஜெயகாந்தனும் சின்னக்குத்தூசியும் நெருங்கிய தோழர்களாக மாறியிருக்கிறார்கள்.

“பிராமணர் பிராமணரல்லாதார் பிரச்னையை எல்லாம் என்னிடம் கொண்டு வராதீர்கள்...” என்று தொடக்கத்தில் சின்னக் குத்தூசியைக் கடிந்துகொண்ட ஜெயகாந்தன், ஒரு கட்டத்தில் அவரது அழைப்பை ஏற்று தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அதுவரை அரசியல் கட்சி மேடைகளில் ஜெயகாந்தன் கலந்துகொண்டதில்லை. அரசியல் பேசும் இலக்கியவாதியாக இருந்திருக்கிறாரே தவிர, அரசியல் கட்சி மேடையில், அதுவும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியிருக்கவில்லை. காமராஜரின் வேண்டுகோளுக்கிணங்க ஜெயகாந்தனை அழைக்கச் சொன்னது ஈ.வெ.கி.சம்பத் என்பதுகூட ஜெயகாந்தனுக்கே பின்னால்தான் தெரிந்திருக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்டு ஒருவரை அணுகவும், அவருடைய நன்மதிப்பைப் பெறவும் சின்னக் குத்தூசி முயன்றதில்லை.

இயல்பாகவே அவரை எவருக்கும் பிடித்திருக்கிறது. பிறர் மனம் கோணாமல் நடந்துகொள்வது அவர் இயல்புகளில் ஒன்று. இரத்த உறவென்று சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாத நிலையில், வயது வித்தியாசமில்லாமல் பலரும் அவரைக் கொண்டாடியது அந்த இயல்பால்தான். ஒரு மகனுக்கும் மேலாக அவரைக் கவனித்துக்கொண்ட அண்ணன் ‘நக்கீரன்’ கோபால், சின்னக்குத்தூசியின் கைபிடித்து நடந்தவர். உடல் உபாதையில் துடித்தழுத வேளையிலெல்லாம் அவருக்கு ஆறுதல் சொல்லவும், அவர் வலியை தமதாக்கிக் கொள்ளவும் ஏராளமான பத்திரிகையாளர்கள் சின்னக்குத்தூசியைச் சூழ்ந்திருந்தார்கள். உடன் இருப்பவர்களுக்கு தொந்தரவு தருவதாக நினைத்துக்கொண்டு, தன்னைக் கருணைக்கொலை செய்துவிடச் சொல்லி அவர் கெஞ்சியதை, பிரதிபா லெனினும், ஜெயசுதா காமராஜும் தங்கள் அஞ்சலிக் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்கள்.

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் அவர் பற்றிய நினைவுகளைப் பகிரும்பொழுது, “அவர் மட்டும் சார்பு நிலை இல்லாத பத்திரிகையாளராய் இருந்திருப்பாரேயானால் இந்த நாடும் தன்னைப்போன்ற பத்திரிகையாளர்களும் கூடுதலாகப் பலனடைந்திருப்போம். சார்பு நிலை காரணமாக அவர் பேசாமல் தவிர்த்த உண்மைகள், கருத்துகள், சம்பவங்கள் விலைமதிப்பற்றவை...” என்றிருக்கிறார். அது அவருடைய ஆதங்கம் மட்டுமில்லை. சின்னக்குத்தூசியை இன்னமுமே தங்கள் இதயத்தில் சுமந்துகொண்டிருக்கும் பலபேருடைய ஆதங்கமும் அதுதான். நடுநிலை என்பதில் நம்பிக்கையில்லாத யாரையும் காலம் கடைசியில் கொண்டுவந்து நிறுத்தும் இடம் இதுதானோ? ஒவ்வொரு துறையிலும் ஒருசிலரே விமர்சனமாகவும் உதாரணமாகவும் மாறுகிறார்கள்.

சின்னச் சின்ன சமரசங்கள் செய்தாவது வாழ்வை நடத்தும் கட்டாயத்திலிருக்கும் நமக்கு, ஒருவர் இறுதிவரை சமரசமில்லாமல் வைராக்கியத்தோடு வாழ்ந்தார் என்பதைக் கேட்க ஆச்சர்யம் ஏற்படுகிறது. ‘எல்லாமே மாறுதலுக்குட்பட்டதுதான்’ என மார்க்சியவாதிகள் கூறினாலும், அறமும் விழுமியங்களும் மாறுவதேயில்லை. அறத்துடன் வாழ்ந்து மறைந்த சின்னக்குத்தூசி கருத்துகளால் விமர்சிக்கப்பட்டாலும், காலங்களால் கெளரவிக்கவேபடுவார். இப்பொழுதும் சின்னக்குத்தூசி வசித்து வந்த திருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரத் தெருவைக் கடந்து செல்கையில், ஒரு மாபெரும் இயக்கத்தின் நினைவுத் தடத்தைப் பார்க்கமுடிகிறது. தடங்கள் அங்கேயே நின்றுவிடுகின்றன. கால்களே பயணிக்கின்றன.
 

(பேசலாம்...)

http://www.kungumam.co.in

  • 2 weeks later...
Posted

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 63

தனிநபரைப் போற்றுவதோ அல்லது ஒருவரை முன்வைத்து முழக்கங்களை எழுப்புவதோ இடதுசாரிகளுக்கு ஏற்புடையதல்ல. எதையும் கொள்கை அடிப்படையில் அணுகிப் பார்ப்பவர்களே அவர்கள். தனிநபர் சாகசங்களை நம்பியோ, தற்குறித்தனமான வாக்குறுதிகளை வழங்கியோ தங்களை உயர்த்திக்கொள்ள அவர்கள் உத்தேசிப்பதில்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற, கற்பனை பிம்பங்களைக் காட்டவோ கட்டியமைக்கவோ எண்ணுவதில்லை. அவர்களைப் பொதுச்சமூகம் எப்படி வேண்டுமானாலும் புரிந்து வைத்திருக்கலாம். அதிகாரத்தைக் கைப்பற்றும் அக்கறையில்லாதவர்கள் என்றோ, பதவிக்கு வரவே லாயக்கில்லாதவர்கள் என்றோ விமர்சிக்கவும் செய்யலாம்.
26.jpg
ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் ஓரத்தில் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்களுக்கு மட்டுமே போராட்ட வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியிருக்கிறது. இலட்சிய வாழ்வின் இலட்சணங்களைப் பெற்றிருக்கும் அவர்களின் தகுதி குறித்தும், திறமை குறித்தும் சந்தேகிக்க இடமே இல்லை. தற்போதைய தமிழ்நில இடதுசாரிகளின் ஒற்றை உதாரணம்,  இரா.நல்லகண்ணு. தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடிய ஒருவர், கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை அம்சங்களையும் கருத்திற்கொண்டு செயல்படுவதில் இடதுசாரிகளுக்கு நிகர் இடதுசாரிகளே. கூட்டுத் தலைமையின் கீழ் செயல்படும் அவர்கள் ஒழுக்கம், நேர்மை, எளிமை, சுயசார்பற்ற தன்மை என பல விஷயங்களை எப்படிப்பட்ட இக்கட்டிலும் விட்டுக்கொடுப்பதில்லை.

ஒருவகையில் அதுவே அவர்களின் அடையாளம். பணமே பிரதானம் என்றாகிவிட்ட இன்றைய அரசியல் சூழலிலும், உண்டியல் குலுக்கி கட்சிக்கான நிதியைத் திரட்டுபவர்கள் அவர்களே. கார்ப்பரேட்டுகளின் நன்கொடையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றிவிடத் துடிக்கும் எத்தனையோ கட்சிகளுக்கு மத்தியில், இன்னமும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கற்பிப்பவர்களாக காம்ரேடுகள் மட்டுமே இருக்கிறார்கள். போராடுவதே வாழ்வென்று புரிந்து, அதற்கேற்ப நாட்களை நகர்த்திச் செல்லாமல், வாழ்வையே போராட்டமாக்கிக் கொள்ள அவர்கள் தயங்கியதுமில்லை; தயங்கப் போவதுமில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் ‘கணையாழி’யில் உதவி ஆசிரியனாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன்.

ஏதோ ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு, இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வத்தை மேம்படுத்த முனைந்திருந்த தருணம் அது. ‘கணையாழி’யில் சேரும்வரை ‘ராஜிரிஷி’ எனும் அரசியல் வார ஏட்டில் செய்திக் கட்டுரைகளை எழுதுபவனாக இருந்தேன். ஒரு கவிஞனாக அரசியல் பத்திரிகையில் என்னுடைய இடமென்பது எனக்கே திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை. என் இயல்புக்கும் தகுதிக்கும் ‘கணையாழி’யே வழியமைத்தது. இலக்கியப் புரிதல்களைத் தீவிரமாக்கிக் கொள்ளவும் என்னை நானே கண்டடைந்து கொள்ளவும் ‘கணையாழி’ செய்த உதவியை காலம் உள்ளளவும் மறப்பதற்கில்லை. மாத இதழ் என்பதால் வேலை அதிகமில்லை.

‘கணையாழி’க்கு வரக்கூடிய கதை, கவிதை, கட்டுரைகளை வாசித்து, பிரசுரத்திற்கு ஏற்புடையதைத் தேர்ந்தெடுக்கும் பணியே என்னுடையது. தேர்ந்தெடுத்த படைப்புகளை ‘கணையாழி’யின் ஆலோசனைக் குழுவிலிருக்கும் ஒருவரிடமோ இருவரிடமோ காட்டி ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறப்பட்ட படைப்புகளை வடிவமைத்து, மெய்ப்புத் திருத்தி அச்சுக்கு அனுப்புவதோடு என் வேலை முடிந்துவிடும். அதன்பின், அதை சந்தாதாரர்களுக்கும் கடைகளுக்கும் விநியோகிக்கும் பொறுப்பை மேலாளர் விஸ்வநாதன் கவனித்துக் கொள்வார். விஸ்வநாதன், ‘சுபமங்களா’வில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அவ்வப்போது ‘சுபமங்களா’வின் ஆசிரியராயிருந்த கோமல் சுவாமிநாதன் பற்றியும் இன்னபிற படைப்பாளர்கள் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டதைத் தனிப் புத்தகமாக எழுதலாம்.

படைப்பாளர்களின் மனதையும் குணத்தையும் அறிந்து வைத்திருந்த விஸ்வநாதன், மாதத்தின் இறுதி நாட்களில் மட்டுமே அலுவலகம் வருவார். மெய்ப்புத் திருத்தும் பணியில் எனக்கு உதவியாயிருந்த சேது அலுவலகம் வருவதில்லை. அலுவலகப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த குமாரும் நானும் மட்டுமே தினசரி ‘கணையாழி’ இருக்கையில் அமர்ந்திருப்போம். முதலிரு மாதங்களிலேயே ‘கணையாழி’யின் வேலைத் தன்மை விளங்கிவிட்டது. எந்தத் தேதிவரை படைப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம், எதிலிருந்து எதுவரை வடிவமைப்பு, மெய்ப்புத்திருத்த எத்தனை நாள், அச்சகப் பணிக்கான அவகாசம் எவ்வளவு என எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செயல்படுவதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. தலையங்கமும் கடைசிப் பக்கமும் வந்துவிட்டால் இதழ் தயாராகிவிடும். எழுத்தாளர் சுஜாதா கடைசிப் பக்கத்தை எழுதிவந்தார்.
26a.jpg
திரைப்படங்களுக்குக் கதை வசனமும், வெகுசன இதழ்களில் தொடர் கட்டுரைகளும் எழுதிவந்த அவர், அத்தனை பரபரப்பிலும் ‘கணையாழி’க்கு எழுதுவதைப் பிரத்யேகமாக வைத்திருந்தார். ‘கணையாழி’ அலுவலகத்திற்கு அருகில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லம்’ அமைந்திருந்தது. அங்கிருந்து வெளிவந்த ‘தாமரை’ இதழை அண்ணன் கவிதாபாரதி கவனித்துவந்தார். இடதுசாரி பத்திரிகையான ‘தாமரை’யும், வலதுசாரி சிந்தனைகளை அனுமதித்த ‘கணையாழி’யும் அருகருகே இருந்தாலும், அவை இரண்டும் தத்தமது நிலைகளிலிருந்து இடம்பெயர எண்ணியதில்லை.

இரண்டு பத்திரிகைகளுக்கும் முகப்பைத் தயாரித்துத் தருபவராக ஓவியர் மருது இருந்துவந்தார். நானும் கவிதாபாரதியும் ஒரே வாகனத்தில் கிளம்பிப்போய் ‘கணையாழி’க்கும், ‘தாமரை’க்கும் மருது வரைந்து வைத்திருக்கும் முகப்பு அட்டைகளை வாங்கி வந்திருக்கிறோம். என் கவிதைகள் ‘தாமரை’யிலும், கவிதாபாரதியின் கவிதைகள் ‘கணையாழி’லும் பிரசுரமாகியுள்ளன. ஒத்த கருத்துடைய இரண்டு பேரும் பணி நிமித்தம் வெவ்வேறு பத்திரிகைகளைக் கவனிக்க நேர்ந்தது. இரண்டுபேரும் இணைந்தே செயலாற்றிய அக்காலங்களில், அன்பையும் நட்பையும் பகிர்ந்துகொள்ளும் இடமாக ‘பாலன் இல்லம்’ இருந்தது. எங்களுக்கு எழும் இலக்கிய மற்றும் அரசியல் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவராக தோழர் நல்லகண்ணு இருந்தார்.

தமிழக அரசியலில் நேர்மைக்கும் தூய்மைக்கும் உதாரணமாகக் காட்ட, நல்லகண்ணுவைத் தவிர ஒருவருமில்லை. என் வாழ்வில் அற்புதமான தரிசனங்களையும் தருணங்களையும் கொண்ட நாட்கள் அவை. இலக்கியமென்பது நுகர்வல்ல. அரசியலென்று அறிந்துகொள்ள, காலம் வழங்கிய சந்தர்ப்பம் என்றே அந்நாட்களைக் கருதுகிறேன். ‘கணையாழி’யில் வேலை செய்கிறேன் என்பதைவிட, நல்லகண்ணுவை தினமும் சந்தித்து உரையாடுகிறேன் என்பதே மகிழ்வைக் கொடுத்தது. அப்போது ‘போத்தியம்மன்’ என்னும் தலைப்பில் என்னுடைய கவிதை ஒன்று ‘தாமரை’யில் வெளிவந்திருந்தது. அதைப் படித்திருந்த நல்லகண்ணு, “நெல்லைச் சீமையிலுள்ள சிறுதெய்வம் குறித்து, தஞ்சை மாவட்டத்து ஆசாமியான உங்களுக்கு எப்படித் தெரியும்..?” எனக் கேட்டார்.

இடதுசாரிகள் கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர்கள். ஆனாலும், நல்லகண்ணு சிறுதெய்வங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தது திகைப்பூட்டியது. அந்த சந்திப்பில் அவர், ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ நாவலை வாசித்துக் கொண்டிருந்தார். சில பக்கங்கள் மட்டுமே ‘விஷ்ணுபுர’த்தை வாசித்திருந்த என்னிடம், ‘‘முழுதாக நாவலை வாசித்ததும் சொல்லுங்கள். விவாதிக்கலாம்...” என்றார். என் வயதையோ வாசிப்பையோ முக்கியமாகக் கருதாமல், என்னுடன் விவாதிக்க விரும்பிய அவர், அதன்பின் எத்தனையோ நாவல்கள் குறித்தும் உலக இலக்கியங்கள் குறித்தும் விவாதித்திருக்கிறார். விவாதமென்றால் இரண்டுபேரால் நடத்தப்படுவது. உண்மையில், அவருடன் நான் எதையுமே விவாதித்ததில்லை. தவிர, அவருடன் விவாதிக்கும் அளவுக்கான அறிவை அப்போது நான் பெற்றிருக்கவில்லை.

எனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே அவருடன் பேசியிருக்கிறேன். என் பேச்சில் தவறிருந்தால் அவர் திருத்துவார். ஒரு விஷயத்தை அவர் சொல்லத் தொடங்கினால் அதில் விவாதிக்கவே ஒன்றுமிருக்காது. அத்தனை தெளிவுடனும் அத்தனை சிரத்தையுடனும் அதை அவரே விளக்கிவிடுவார். விவாதிக்கவே தேவையில்லாதபடி பேசும் முறையே அவருடையது. எளிய உவமைகளால் வரலாற்றையும் இலக்கியத்தையும் புரியவைக்கும் சாமர்த்தியம் அவரிடம் உண்டு.‘‘எது மக்களுக்கானதாக அமைகிறதோ அதுவே இலக்கியமென்றும், மக்கள் இலக்கியத்தை நோக்கி நகர்வதே படைப்பாளிகளின் தகுதியென்றும்...’’ அவர் சொல்லாமல் இருந்திருந்தால், நானுமே செளந்தர்ய உபாசகர்களின் சங்கத்தில் சங்கமித்திருப்பேன்.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாலும் அவர் இன்று கொண்டாடப்படுவதற்கு அதுவே காரணம். யாரையும் நேசத்துடன் ஏந்திக்கொள்ளும் அவருடைய புன்னகையில், களங்கமோ கறைகளோ இருந்ததில்லை. தெளிந்த நீரோடையின் மேல் நின்று பார்க்கையில், உருண்டோடும் கூழாங்கற்கள் தெரிவதுபோல, நிதானத்துடன் அவர் உதிர்க்கும் சொற்களில் காரல்மார்க்ஸும் ஜீவானந்தமும் கண்முன்னே தெரிவார்கள். உடலாலும் மனதாலும் தியாகத் தழும்புகளைத் தாங்கிய அவர், சுதந்திர இந்தியக் கனவுகளுடன் பொதுவாழ்வுக்கு வந்தவர். ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே தேச விடுதலைக்கு உழைக்க வேண்டுமெனும் உறுதியைப் பெற்றிருக்கிறார்.

தேசபக்தி நூல்களில் ஈடுபாடு காட்டிவந்த அவருக்கு, மார்க்சிய நூல்களை அறிமுகப்படுத்தியவர் அவருடைய இந்தி ஆசிரியர் சு.பலவேசம் செட்டியார். அவரே, நல்லகண்ணுவின் அனைத்திந்தியப் பற்றை அகில உலகப் பற்றாக மாற்றியவர். ‘கலைத் தொண்டர் கழகம்’ என்னும் பெயரில் சமூக, கலை, இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த நல்லகண்ணுவை, பொதுவுடமை சிந்தனைக்கு உந்தித் தள்ளியதில் புத்தகங்கள் பெரும் பங்காற்றியுள்ளன நூல்களின் வாயிலாக இடதுசாரிப் பற்றாளராக மாறிய நல்லகண்ணு, கல்லூரிக் காலங்களில் இடதுசாரித் தலைவர்களுடன் பழகியிருக்கிறார்.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in/

Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

 

 

யுகபாரதி - 64

சமூக மாற்றத்திற்காகத் தங்களை வருத்திக் கொள்ளும் இடதுசாரித் தலைவர்களைப் பார்க்கும் தோறும், தானும் அவர்களைப்போல ஆகவேண்டுமென நல்லகண்ணு எண்ணியிருக்கிறார். அதன் விளைவாக, முதல் முதலாக ஸ்ரீவைகுண்டத்தில் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையில் இணைந்திருக்கிறார். தமிழகத்தின் தென்கோடியில் இருந்த ஓர் ஊரின் கிளைச் செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கிய அவர், நான்குமுறை தொடர்ச்சியாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பை வகித்திருக்கிறார். தகுதியால் பொறுப்புக்கு வந்த அவர், தன்னுடைய செயல்களால் அப்பொறுப்புக்கு ஏற்படுத்திக் கொடுத்த கெளரவத்தால் இன்றளவும் மதிக்கப்படுகிறார்.
10.jpg
கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன விதிகளுக்கு உட்பட்டு வாழ்வதே சிரமம் எனும் பட்சத்தில், தன்னை வருத்தி அவர் அடைந்த உயரமென்பது வேறு எவரும் எட்ட முடியாதது. சாதி, மதம், பணம், சந்தர்ப்பவாதம் என்று தறிகெட்டுப்போன இன்றைய தேர்தல் அரசியலுக்கு, நல்லகண்ணுவின் தியாக வாழ்வைத் திரும்பிப்பார்க்கவும் நேரமில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது. இப்பொழுதும் நம்முடைய ஊடகங்கள் தோழர் நல்லகண்ணுவை தோற்றுவிட்ட அரசியல் ஆளுமையாகக் காட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றன. அவர் எங்கேயும் எப்போதும் தோற்கவில்லை. தவிர, அவருடைய அரசியல் நெறிகள் ஒருபோதும் அஸ்தமனமாகக்கூடியதும் அல்ல.

தனிநபரைப் போற்றுவதோ அவரை முன்வைத்து முழக்கங்களை எழுப்புவதோ இடதுசாரிகளுக்கு வழக்கமில்லை. என்றாலும், நல்லகண்ணுவை சொல்ல வேண்டியதும் அவரை முன்வைத்து விவாதங்களை எழுப்புவதும் அவசியமே. தனிநபர் துதியாக அதை எடுத்துக்கொள்ளாமல், ஓர் இடதுசாரியின் பண்பு நலன்களைச் சீர்தூக்கிப் பார்ப்பது காலத்தின் தேவையாகிறது. பணமும் படாடோபமுமே அரசியல் என்பதாகப் போய்க்கொண்டிருக்கும் இக்காலத்திய அறப் பிறழ்வுகளை அறிந்துகொள்வதற்கு, நல்லகண்ணு போன்றோரின் வாழ்க்கைப் பதிவுகள் அவசியமானவை. அவை நேர்மறை அரசியலின் நியாயங்களைப் பேசக்கூடியவை. இடதுசாரிகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், கொள்கை சார்ந்ததாக இருக்கிறதே ஒழிய, ஒருபோதும் அது அவர்களின் நேர்மையைப் பரிசோதிப்பதாக இருந்ததில்லை.
10a.jpg
அவதூறுகளையும் பொய்ப் பிரசாரங்களையும் அவர்களுக்கு எதிராகப் பரப்பி வருபவர்கள்கூட இத்தனை ஆண்டுகளில் ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத இடதுசாரிகளின் கை சுத்தத்தில் கறையோ குறையோ கண்டதில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் வந்த காங்கிரஸின் முதல் குறிக்கோள் கம்யூனிஸ்ட்டுகளை அடக்கி, ஒடுக்கி, அழிப்பதாக இருந்திருக்கிறது. பொய்வழக்குகளைப் போட்டு உள்ளே தள்ளுவது, கிடைத்தவர்களைத் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்குவது, சிறையிலிட்டுச் சித்ரவதை செய்வது, சிறைக் கொட்டடியிலேயே சிலரைக் கொன்றுவிடுவது எனத் தீர்மானித்த காங்கிரஸின் தொடர் கொடுமைகளுக்குக் கம்யூனிஸ்ட்டுகள் பலியான அக்காலத்தில், தோழர் ஜீவானந்தத்தின் புரட்சிகர பேச்சுகளால் நல்லகண்ணு ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

ஜீவாவின் இலக்கியப் பேச்சுகளால் கம்பனும் பாரதியும் புதிய கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தேசம் விடுதலை அடைந்துவிட்டால் சுபிட்சம் வந்துவிடுமென்று எண்ணிய கம்யூனிஸ்ட்டுகளுக்கு, காங்கிரஸின் இந்த அடாத செயல்கள் அதிருப்தியையே தந்திருக்கின்றன. சென்னை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு, நெல்லை சதி வழக்கு, ராமநாதபுரம் சதி வழக்கு என வழக்குக்குமேல் வழக்காகப் போட்டு கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்கிய காங்கிரஸ், ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்தது. ஆங்கிலேய ஆட்சியை அப்பறப்படுத்த தங்களுக்குச் சமமாக உழைத்த கம்யூனிஸ்ட்டுகளைக் காங்கிரஸ் விரோதிகளாகப் பார்த்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள், தேசத் துரோகச் செயல்களில் ஈடுபடுவதாகவும் மக்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டுவதாகவும் காங்கிரஸின் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் வதந்திகளைப் பரப்பியிருக்கிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்களுக்குச் சங்கம் ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களின் உரிமைக்குப் போராடிய கம்யூனிஸ்ட்டுகளைக் காங்கிரஸுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், மக்களோ அலை அலையாக கம்யூனிஸ்ட்டுகளின் பின்னே அணிதிரண்டிருக்கிறார்கள். அதிகாரத்திலிருந்த காங்கிரஸுக்கு இந்த அணிசேர்க்கை அச்சத்தை உண்டாக்க, தீவிர வேட்டையில் ஈடுபட்டிருக்கிறது. 1948ல் காங்கிரஸ் பிறப்பித்த தடை உத்தரவை அடுத்து, ஓராண்டுகாலம் நல்லகண்ணுவும் தலைமறைவாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். நாங்குனேரி தாலுக்காவில் புலியூர்க்குறிச்சி எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகத் தங்கியிருந்த நல்லகண்ணுவை, காங்கிரஸ் அரசு கைதுசெய்து, கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

உண்மையை வரவழைக்க விசாரணை எனும் பெயரில் நல்லகண்ணுவின் மீசையை ஒரு காவல்துறை ஆய்வாளர் சிகரெட்டால் பொசுக்கியிருக்கிறார். அன்றுமுதல், ‘‘இனி மீசையே வைப்பதில்லை...’’ என முடிவெடுத்த நல்லகண்ணு, புரட்சிகர வாழ்விலிருந்து பின் வாங்கவோ அச்சுறுத்தலுக்குப் பயந்து கம்யூனிஸ்ட்டுகளைக் காட்டிக்கொடுக்கவோ நினைக்கவில்லை. அவரைக் கைது செய்து சிறையில் அடைத்த காங்கிரஸ் அரசு, கைது செய்யும்போது நல்லகண்ணு வெடிகுண்டு வைத்திருந்ததாகப் பொய்வழக்குப் போட்டு நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறது. அரசின் நீதி, போராளிகள் பக்கம் ஒருபோதும் சாய்ந்ததில்லை என்பதால், அரசின் விருப்பப்படியே ஆயுள் தண்டனையை நல்லகண்ணு பெற்றிருக்கிறார்.

ஏழாண்டுகால சிறைவாழ்வுக்குப் பின் வெளியே வந்த அவர், அதிக ஈடுபாட்டுடன் கட்சிப் பணியைத் தொடர்ந்திருக்கிறார். அதன்பின்னும், வீரம் செறிந்த அவர் எத்தனையோ போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்தியிருக்கிறார். சிறை அவருடைய போராடும் வெறியை அதிகரிக்கச் செய்ததே தவிர, மட்டுப்படுத்தவில்லை. ஏனெனில், ஆர்வ மிகுதியில் அவர் போராடக் கிளம்பவில்லை. அர்த்தத்தோடும் ஆத்ம சுத்தியோடுமே அவருடைய இலட்சியப் பயணம் தொடங்கியிருக்கிறது. அவர், தலைமை தாங்கி நடத்திய பல போராட்டங்கள் கோரிக்கைகளை வென்றிருக்கின்றன. விவசாயப் போராட்டத்திலிருந்து அணு உலை எதிர்ப்புப் போராட்டம் வரை, தயக்கமில்லாமல் மக்களுடன் களத்தில் நிற்கும் அவருடைய போராட்டக் குணத்தைப் பிரதிபலிக்கும் சம்பவங்கள் அநேகமுண்டு.

குறிப்பாக, ஆதிக்க சக்திகளை அசைக்க தலித்துகளுக்கும் பெண்களுக்கும் ஆதரவாக நடந்த ஸ்ரீவைகுண்ட கோட்டைத் தகர்ப்பு போராட்டத்தைச் சொல்லலாம். ‘‘அதுவே தோழர் நல்லகண்ணு முன்நின்று வெற்றிபெற்ற, சாதித்த முதல் களப்போராட்டம்...’’ என எழுத்தாளர் பொன்னீலன் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். கோட்டைகள் என்றால் மன்னர்கள் வாழும் இடமென்று அர்த்தமல்ல. கோட்டைப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் குலப்பெண்களை யார் கண்ணிலும் படாமல் பாதுகாக்க கட்டிய கோட்டை ஒன்று ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்திருக்கிறது. சுமார் 450 அடி சுற்றளவும் 10 அடி உயரமும் கொண்ட அக்கோட்டை மண்ணால் கட்டப்பட்டது. மூன்று நூற்றாண்டுகளாக அக்கோட்டையைப் பராமரித்து, தங்கள் குலப்பெண்கள் வெளியுலகையோ வெய்யிலையோ பார்க்காதவாறு ஆண் ஆதிக்கச் சமூகம் அடிமைப்படுத்தியிருக்கிறது.

கோட்டையைச் செப்பனிட ஆண்டுதோறும் தலித்துகள் அழைக்கப்பட்டாலும், அப்பணியில் ஈடுபடுபவர்களுக்குக் குறைந்த கூலியே கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே தீண்டாமைக் கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, கொதிப்படைந்த தலித்துகள், ஒருகட்டத்தில் பலநூறு ஆண்டுகளாக நிலவி வரும் ஆதிக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த எண்ணியிருக்கிறார்கள். கூலி உயர்வுக்கென்று தொடங்கிய அப்போராட்டம், கோட்டைப் பிள்ளைமார் சமூகப் பெண்களை விடுவிக்கும் போராட்டமாகவும் மாறியிருக்கிறது.

வாழவல்லான் ந.ஜெயபாண்டியன், சிவகளை கந்தப்பா செட்டியார் உள்ளிட்டோரின் உறுதுணையுடன் பெரும் எழுச்சியோடு நடந்த அப்போராட்டம், மக்கள் மத்தியில் புரட்சிகர நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. கடும் சாதீயக் கட்டுமானத்தையும் நிலப்பிரபுத்துவ நடைமுறையையும் தகர்க்க எண்ணிய நல்லகண்ணு, பெருந்திரளான மக்களுடன் கோட்டையைத் தகர்த்தெறிந்திருக்கிறார். சொந்த சாதி அபிமானத்தை விட்டொழித்து, தலித்துகளுக்காகப் போராடிய அவரை, கட்சித் தோழர்களில் சிலர் தலித்தென்றே நினைத்துமிருக்கிறார்கள். பாவனையில், பழக்கத்தில் எங்கேயும் அவரிடம் சாதியின் சாயலைப் பார்க்கமுடியாது. 1999ல் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப் போனபோது நிகழ்ந்த கொடூர சம்பவம் நினைவுக்கு வருகிறது.
 

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்

http://kungumam.co.in

  • 2 weeks later...
Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

 

 

யுகபாரதி - 65

தாமிரபரணிக் கரையில் அமைந்திருந்த ஆட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் நெருங்கக் கூட அனுமதிக்காத அன்றைய அரசு, பலரை படுகாயப்படுத்தியதுடன் பதினேழு பேரை சுட்டுக்கொன்றது. அந்தக் கோர சம்பவத்தை எதிர்த்து தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ இன்னும் ஒருபடி மேலே போய், கொடூரத்தைக் கண்டித்து ஒலிநாடா ஒன்றை வெளியிட விரும்பியது. பாடல்களை எழுதித்தரும்படி என்னிடமும் கேட்கப்பட்டது. ‘மனுநீதி சோழன் ஆட்சி / மக்கி மக்கி இத்துப்போச்சு / மனு கொடுக்கப் போன பசு / மணி விழுந்து செத்துப் போச்சு...’ என்று நான் எழுதிக்கொடுத்தேன். நண்பர் இலக்கியன் அப்பாடலுக்கான இசையை அமைத்திருந்தார்.
3.jpg
தேர்க் காலில் அடிபட்ட கன்றுக்காக  நீதிகேட்ட பசுவின் கதையைக் குறியீடாக வைத்து, நான் எழுதிய அப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. தேர்தல் சமயமென்பதால் பிரசாரக் கூட்டங்களில் தொடர்ந்து ஒலித்த அப்பாடலைக் கேட்ட நல்லகண்ணு, தனிப்பட்ட முறையில் என் எழுத்திலிருந்த கோபத்தை உணர்ந்து பாராட்டினார். அதுமுதல் என் எழுத்து முயற்சிகள் எதுவானாலும், கவனித்து கருத்துகளைச் சொல்லுவார். ஆழ்ந்த இலக்கியப் பரிச்சயமுடைய அவர், சொற்களுக்கு இடையேயுள்ள மெளனங்களையும் புரிந்துகொள்பவர். அதிகாலையிலேயே பத்திரிகைகளை வாசித்து, அதில் என் பெயர் வந்திருந்தால் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தைத் தெரிவிப்பார்.

எனக்கு மட்டுமல்ல, என்போன்ற பல இளம் படைப்பாளர்கள் அவருடைய வாழ்த்துகளால் வளர்ந்திருக்கிறார்கள். ‘வணக்கம் காம்ரேட்’ என்றொரு கவிதை. அக்கவிதையில் இடதுசாரிகளின் புரட்சிகர எண்ணங்களை எள்ளலுடன் எழுதிவிட்டேன்.‘புரட்சி வரும்’ என்கிற கம்யூனிஸ்ட்டுகளின் முழக்கத்திற்கும், ‘ஏசு வருகிறார்’ என்கிற கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதுபோல அமைந்த கவிதை அது. இடதுசாரிகளை விமர்சித்த அக்கவிதை, அப்போதைய என்னுடைய அரசியல் போதாமையினால் எழுதப்பட்டது. சொன்ன தேதியில் வருவதற்குப் புரட்சி ஒன்றும் பால்பாக்கெட் இல்லையென்பது அந்நாளில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

‘‘இருபத்தி இரண்டாவது நாள் அடை வைத்த முட்டை குஞ்சு பொறிக்கவில்லையென்றால், அது கூமுட்டை...’’ என்பதாக விமர்சித்த நான், எதார்த்தத்தை எழுதுகிறேன் என்னும் பேரில் எதை எதையோ எழுதியிருக்கிறேன். இடதுசாரி குடும்பப் பின்னணியுடைய நானே, கம்யூனிஸ்ட்டுகளை அவ்வாறு எழுதியது நல்லகண்ணுவுக்கு அதிருப்தியைத் தந்திருக்கிறது. ஆனால், அதை அவர் வெகுகாலம்வரை வெளிப்படுத்தவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல, சரியான தடத்தையும் புரிதலையும் நான் அடைந்த பிறகே, உள்ளத்தில் இருந்ததை மெலிதாக உணர்த்தினார்.

சமூகத்தில் நிகழும் எந்தப் பிரச்னைக்கும் குரல் கொடுக்காமல், எல்லாப் பிரச்னைகளுக்கும் களத்தில் நின்று போராடுபவர்களைக் கிண்டலடித்துக் கவிதை எழுதியது இரக்கமற்ற செயலென்று இப்போது படுகிறது. மாற்றுக்கருத்தே ஆனாலும், அதை அக்கறையுடன் எதிர்கொள்பவர்களைக் காயப்படுத்திய என்செயல் கண்டிக்கத்தக்கது. தோழர் நல்லகண்ணு ஒரே வார்த்தையில் என் கவிதைக்கும் அறியாமைக்கும் பதிலடியைத் தந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை. எதிர் முகாமிற்குப் போன எனக்கு எப்போது முதிர்ச்சி வருகிறதோ, அப்போது சொல்லிக் கொள்ளலாம் என்றே இருந்திருக்கிறார். காலம் சிலவற்றை மாற்றும்.
3a.jpg
மாற்றாத பட்சத்தில் பார்த்துக்கொள்ளலாம் எனவும் எண்ணியிருக்கலாம். மார்க்சியம் என்பது படிப்பல்ல. படிப்பினால் வரும் அறிவுமல்ல. அது ஒரு பக்குவம். அந்தப் பக்குவத்தைப் பெற, இருப்பதை எல்லாம் இழக்கவேண்டும். இல்லாதவர்களின் கண்களிலிருந்து உலகத்தை அளக்க வேண்டும். வயதினால் வருவதே பக்குவமென்று பலபேர் நினைத்திருக்கிறோம். உண்மையில், கொள்கையாலும் கொண்டிருக்கும் நம்பிக்கையாலும் விளைவதே அது.‘வணக்கம் காம்ரேட்’ கவிதைக்கு மறுப்புக் கட்டுரை எழுத எத்தனையோ முறை நினைத்ததாகவும், ‘‘நாமே நம்முடைய பிள்ளைக்கு மறுப்பு எழுதுவதா..?’’எனத் தயங்கியதாகவும் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, என் நூல் வெளியீட்டில் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

நீண்ட காத்திருப்பு. ஆனாலும், அவருடைய நம்பிக்கை என் விஷயத்திலும் நல்ல பலனையே தந்திருக்கிறது. உடனே அவர் தன்னுடைய மறுப்பையோ விமர்சனத்தையோ தெரிவித்திருந்தால், அப்போதிருந்த என் மனநிலை அதை ஏற்றிருக்க வாய்ப்பில்லை. நூல் வெளியீட்டில் பேசிய அவர் “இனி மறுப்பே எழுதவேண்டியதில்லை. சரியான திசைக்கு வந்துவிட்டீர்கள்...” என மகிழ்ச்சியைத் தெரிவித்தார். பதினேழு ஆண்டுகள் கழித்து அவரிடமிருந்து அப்படி ஒரு வார்த்தை வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அரங்கே கைதட்டி ஆரவாரம் செய்த நொடியில், குற்றமிழைத்த நான் குறுகுறுப்பை அடைய நேர்ந்தது.

என்மீது அவருக்கிருந்த மெல்லிய அதிருப்தியைக்கூட வெளிப்படுத்தாமல், அதே புன்னகையுடனும் அதே அன்புடனும் அவரால் எப்படி பழக முடிந்தது என்பதுதான் ஆச்சர்யம். கருப்பு அவர் வண்ணமானாலும், சிவப்பே சித்தாந்தமென பல சந்தர்ப்பங்களில் உணர்த்தியிருக்கிறார். ‘கணையாழி’யில் பணியாற்றிக்கொண்டே அவரிடம் தினமும் பாடம் கேட்கப் போய்விடுவேன். ஒருநாள் இருநாள் அல்ல, ஆறு ஆண்டுகள். ஒவ்வொரு நாளும் பாலன் இல்லத்தில் அமைந்திருந்த நூலகத்தில் கழிந்த தருணங்கள் மறக்கமுடியாதவை. கட்சித் தோழர்களுக்கு பாலன் இல்லத்திலேயே மதிய உணவைச் சமைப்பார்கள்.

வரிசையாக ஒவ்வொருவரும் நின்று, உணவைத் தாமே எடுத்துத் தட்டில் போட்டுக்கொள்ள வேண்டும். பல நாள் அந்த வரிசையில்  கடைசி ஆளாக தோழர் நல்லகண்ணு நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஓர் அகில இந்தியக் கட்சியின் மாநிலச் செயலாளர் என்னும் எண்ணமே அவரிடம் இருந்ததில்லை. அதே வரிசையில் தோழர் கே.டி.கே.தங்கமணியும், சி.மகேந்திரனும், ஏ.கே.கோபுவும் இன்ன பிறரும் நின்றிருக்கிறார்கள். ‘இலட்சியவாதம் பொய்த்துவிட்டது, இனி இடதுசாரிகள் எழவே வாய்ப்பில்லை...’ என்பவர்களுக்கு இந்தக் காட்சியைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.

பாலன் இல்ல நூலகத்தில், பழந்தமிழ் இலக்கிய நூல்கள் இருந்தன. தொ.மு.சி.ரகுநாதனின் ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற நூலை அங்கிருந்தே நான் வாசித்தேன். வானமாமலை தொகுத்த ‘நாட்டார் பாடல் தொகுப்பு’, ‘மார்ச்சிய, பெளத்த தத்துவ நூல்கள்’ என எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ நூல்கள் அங்கிருந்தன. வாசித்த நூல்களில் எழும் சந்தேகங்களைத் தீர்க்க முன்னறையில் தோழர் நல்லகண்ணு அமர்ந்திருப்பார். எது குறித்தும் அவரிடம் இயல்பாகக் கேட்கலாம். இளவயது முதலே பாரதி என்றால் அவருக்கு உயிர். பாரதி மணி மண்டபம் கட்ட நிதி திரட்டிக் கொடுத்தவர்களில் அவர் முக்கியமானவர்.

பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியர்களாக இருப்பவர்கள், கட்சி தரும் சொற்ப பணத்தில்தான் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும். வருமானத்திற்கு வேறு வழியில்லை. ஊர்தோறும் கட்சித் தோழர்கள் வசூலித்துத் தரும் பணத்தில்தான் அவர்கள் வண்டி ஓடும். அதிலும் மிச்சம் பிடித்து, வெளியூரிலிருந்து வரும் கட்சித் தோழர் களின் வழிச்செலவுக்கு பணம் கொடுப்பவரே நல்லகண்ணு. ஒருமுறை மணப்பாறையில், ஆர்வமுடைய கட்சித் தோழர்கள் பொதுக்கூட்டத்திற்கு நல்லகண்ணுவை அழைத்திருக்கிறார்கள். போனால், ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. வீதியெங்கும் குழல் விளக்குகள். அலங்கரிக்கப்பட்ட மேடை, தர்பார் நாற்காலி என தடபுடலாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

தலைவரை மகிழ்விக்க கட்சித் தொண்டர்கள் இப்படியெல்லாம் செய்வது வழக்கம்தான். ஆனால், தோழருக்கோ முகம் சுருங்கிவிட்டது. “நாட்டுக் கஷ்டத்தை இத்தனை விளக்குப் போட்டா விளக்குவது...” எனக் கேட்டிருக்கிறார். “ஆதாயத்துக்காக செய்யப்படும் அரசியலுக்குத்தான் விளம்பரம் தேவை. நாமோ, அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்வுக்குப் போராடுபவர்கள். இதற்கு செலவழித்த காசை கட்சி நிதியாகக் கொடுத்திருந்தால் தேர்தல் செலவுக்கு ஆகியிருக்குமே...” எனவும் சொல்லியிருக்கிறார். பட்டினப்பாக்கத்தில் இருந்து ‘பாலன் இல்லம்’ அமைந்திருந்த தியாகராய நகருக்கு, கட்சி கொடுத்த வாகனத்தில் வந்துகொண்டிருந்த அவர், திருமுல்லைவாயிலுக்கு குடிபெயர்ந்ததும் பெட்ரோல் செலவு அதிகமாகும் எனச்சொல்லி,

மாநகரப் பேருந்தைப் பயன்படுத்தியதை நானறிவேன். கட்சிதானே பெட்ரோலுக்குச் செலவழிக்கிறது, நமக்கென்ன கவலை? என அவர் இருந்துவிடவில்லை. ஏழை எளிய மக்கள் வசூலித்துத் தரும் பணத்தின் மதிப்பையும், அதன் வியர்வை வாசத்தையும் விளங்கிக்கொண்டவரே நல்லகண்ணு. அகில இந்தியாவிலும் நல்லகண்ணுவைத் தவிர, மகளின் திருமணத்திற்கு ஐநூறு ரூபாயோடு போன ஒரு கட்சித் தலைவரைக் காட்டுவதற்கு வழியில்லை. கூட்டம் நடத்திய கட்சித் தோழர்களின் சிரமத்தை உணர்ந்து, விடுதிகளில் தங்காமல், பேருந்து நிலையத்திலேயே படுத்துறங்கிய அவரையே, வியாபார ஊடகங்கள் தோற்ற அரசியல் ஆளுமையாகச் சித்திரிக்கின்றன.
 

(பேசலாம்...)

http://www.kungumam.co.in

  • 2 weeks later...
Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

யுகபாரதி - 66

நல்லகண்ணுவின் நெடிய அரசியல் வாழ்வில், எத்தனையோ கட்சித் தோழர்களுக்கு அவர் தலைமையில் திருமணம் நடந்திருக்கிறது. தஞ்சை மாவட்டத்தைச்  சேர்ந்த கட்சித்தோழர் ஒருவர், தன் மகளின் திருமணத்தை அவரின் தலைமையில் நடத்த பிடிவாதம் பிடித்திருக்கிறார். “கட்சிப் பணிகள் அதிகமிருந்ததால் வேறு  யாரையாவது தலைமை தாங்க அழையுங்களேன்...” என்றிருக்கிறார் நல்லகண்ணு. தோழரோ விடுவதாயில்லை. காத்திருந்து தேதி வாங்கி திருமணத்தை  நடத்தியிருக்கிறார். அத்திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு, வற்புறுத்திய தோழரிடம், “கட்சியில் பலபேர் இருக்கையில், நானே வரவேண்டுமென ஏன்  வற்புறுத்தினீர்கள்..?” எனக் கேட்டிருக்கிறார்.
9.jpg
“அது வந்து தோழர்... என் மகளின் திருமணம், ஒரு தலித் தலைவர் தலைமையில்தான் நடக்கவேண்டும் என எண்ணினேன். அதனால்தான் உங்களை விடாமல்  வற்புறுத்தினேன்...” என்றிருக்கிறார் அத்தோழர். இடதுசாரிகள் சாதி பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும், எந்த சாதியையும் அவர்களுக்குத் தாழ்வாகப் பார்க்கத்  தெரியாது. எந்த மாவட்டத்தில் எந்த சமூகம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கும்  பழக்கமும் இடதுசாரிகளின் மரபில்லை. யாராயிருந்தாலும் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு, மக்களை வழிநடத்தும் ஆளுமை பெற்றிருந்தால் போதும்.

சாதி என்பது தமிழ் மண்ணுக்கே உரிய மோசமான குணக்கேடு. இந்தக் குணக்கேட்டைஇடதுசாரிகளிலும் ஒருசிலர் கொண்டிருப்பது நல்லகண்ணுவுக்குக்  கவலையளித்திருக்கிறது. என்றாலும், திருமணத்திற்கு வற்புறுத்தி அழைத்த அத்தோழர், என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று நல்லகண்ணு விசாரிக்கவில்லை.  “அப்படியா சேதி...” என்று சிரித்துவிட்டு அவரைக் கடந்திருக்கிறார். “தவறாக நினைத்து அழைத்துவிட்டீர்களே...” என்றோ, “நான் தலித்தில்லையே...” என்றோ  அவர் சொல்லவில்லை. தன்னைத் தலித்தாக நம்பி, தலைமையேற்க அழைத்ததற்கு மகிழ்ந்திருக்கிறார்.

தலித்துகள் தலைமைக்கு வரவேண்டுமென பள்ளிப் பருவம் முதற்கொண்டு பாடுபடுபவரே நல்லகண்ணு. உலகமகா யுத்தத்தின்போது உணவுக் கமிட்டி ஒன்றை  அரசு அமைத்திருக்கிறது. அந்தக் கமிட்டியில் வசதி படைத்த மிராசுதாரர்களுடன் பள்ளி மாணவராயிருந்த நல்லகண்ணுவும், பெரியகுடும்பன் என்ற தாழ்த்தப்பட்ட தோழரும் இருந்திருக்கிறார்கள். தங்களுக்குச் சமமாக தாழ்த்தப்பட்ட பெரியகுடும்பன் அமர்வதை விரும்பாத மிராசுதாரர்கள், கமிட்டி கூட்டத்திற்குப்  பெரிய குடும்பனை அழைக்காமல் தவிர்த்திருக்கிறார்கள். கமிட்டியில் கலந்துகொண்டதாக கையொப்பத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, பெரிய குடும்பனை  ஒதுக்கியிருக்கிறார்கள்.
9a.jpg
கண்ணெதிரே நடந்த சாதிய கொடுமையைப் பொறுக்காத நல்லகண்ணு, அந்த வயதிலேயே அவர்களுடன் சண்டையிட்டு, பெரிய குடும்பனை அழைத்துப்போய்  கமிட்டிக் கூட்டத்தில் அமர வைத்திருக்கிறார். பெரிய குடும்பன் சமமாக அமர்ந்த ஒரே காரணத்திற்காக கமிட்டி கலைக்கப்பட்டிருக்கிறது. தன்னை யார், எப்படி  கருதுகிறார்கள் என்பது பற்றிய அக்கறையின்றி, சக மனிதன் மீது அன்பு செலுத்தும் குணம் நல்லகண்ணுவினுடையது. சுயமரியாதை முறைப்படிதான் என்னுடைய திருமணமும் நடந்தது. திருமணத்திற்கு யார் தலைமை என்றதும், அப்பாவிடம் நான் சட்டென்று சொன்ன பெயர் நல்லகண்ணு.

அப்பா மார்க்சிஸ்ட் கட்சியில் பொறுப்பிலிருந்தாலும், என் விருப்பத்தை தட்டிக்கழிக்காமல் ஏற்றுக்கொண்டார். மார்க்சிஸ்ட்டான அவர், இந்திய கம்யூனிஸ்ட்டான  நல்லகண்ணுவை தயக்கமில்லாமல் தலைமையேற்க அனுமதித்தது வியப்பல்ல. தோழர் நல்லகண்ணுவை அழைக்க, நானும் அறிவுமதி அண்ணனும்  போயிருந்தோம். “நாங்கள் அழைக்க வந்தது உங்களை அல்ல; அம்மாவை...” என்றதும் நல்லகண்ணு அதிர்ந்து சிரித்தார். “அவர்களை எந்த விழாவுக்கும்  அழைத்துப் போனதில்லையே, வருவார்களா? தெரியாதே...” என்றவர், “இரண்டொரு நாளில் கேட்டுவிட்டு சொல்கிறேன்...” என்று வழியனுப்பினார்.

சொன்னதுபோலவே இரண்டாவது நாளில், “யார் திருமணத்திற்கும் வராதவர்கள், உங்கள் திருமணத்திற்கு என்றதும் முந்திக்கொண்டு கிளம்புகிறார்கள்...” என்று  மீண்டுமொரு அதிர்ந்த சிரிப்புடன் முகமளித்தார். ரஞ்சிதம் அம்மாளை அழைக்கப் போகும்வரை இதுதான் அவர்கள் இணைந்து கலந்து கொள்ளும் முதல்  திருமணவிழாவென்று எனக்கோ, அண்ணன் அறிவுமதிக்கோ தெரியாது. “முதல் முறையாக ஒங்க திருமணத்துக்குத்தான் ஒண்ணா வந்து வாழ்த்துறோம்...” என்று  அவர் பெருமிதத்துடன் சொன்ன காட்சி, நெஞ்சில் படமாக ஓடுகிறது.

என் திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் இருவரும் இணைந்து வேறொரு திருமணத்திற்கு செல்லவில்லை என்பதையும், நூல் வெளியீட்டில்தான் நல்லகண்ணு  வெளிப்படுத்தினார். ரஞ்சிதம் அம்மாவுடன் இணைந்து அவர் கலந்துகொண்ட ஒரே திருமணம் என்னுடையதே என்ற செய்தியை, வெறும் செய்தியாக  எடுத்துக்கொள்ள இயலவில்லை. மணமேடையில் நான், “தாலி கட்ட மாட்டேன். பெரியவர்கள் முன்னிலையில், உறுதிமொழியை மட்டுந்தான் வாசிப்பேன்...”  என்றேன். தலைமை தாங்கிய நல்லகண்ணு, “நீங்கள் முற்போக்கு குடும்பத்தைச் சேர்ந்ததால் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், பெண் வீட்டார் அப்படியில்லையே.  தாலி, இத்யாதிமீது நம்பிக்கைகள் உடையவர்களாயிற்றே.

உங்கள் விருப்பத்திற்குச் செய்வது சரியா..?” என்றார். அப்போதுதான் எனக்கு என் தவறு புரிந்தது. பெண் வீட்டைக் கலந்துகொள்ளாமல் முடிவெடுப்பதும்  ஆதிக்கமே என்றவர், என் நெற்றியிலும் என் மனைவி நெற்றியிலும் பொட்டிட்டு வாழ்த்தினார். ரஞ்சிதம் அம்மாள், ஊரிலிருந்து பிரத்யேகமாக எடுத்து வந்திருந்த  குங்குமக் கவரைக் கொடுத்து ஆசீர்வதித்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த என் மனைவி, அன்றுமுதல் அப்பா என்று அழைப்பது நல்லகண்ணுவைத்தான்.  வீட்டில் ஒருவராக மாறிவிடக் கூடிய அவர், ரஞ்சிதம் அம்மாளின் பூர்வீக வீட்டை விற்றுத்தான் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்.

தோழர் நல்லகண்ணுவின் எளிமையைப் பாராட்டாதவர்கள் இல்லை. கொள்கைப் பிடிப்பிலும், கோட்பாட்டு அறிவிலும், தலைமைப் பண்பிலும் தனித்து விளங்கும்  அவரை, எளிமையின் அடையாளமாக மட்டுமே உயர்த்திப் பார்ப்பது ஏன்? விளங்கவில்லை. இந்திய அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், எத்தனையோ  தலைவர்கள் எளிமையில் சிறந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் இருந்தது, எப்படிப்பட்ட எளிமை என்பதுதான் கேள்வி. காமராஜரும் கக்கனும் கடைப்பிடித்த  எளிமை வேறு.

ஜீவானந்தமும் நல்லகண்ணுவும் வரித்துக்கொண்ட எளிமை வேறு. காமராஜரும் கக்கனும் மந்திரி சபையில் இருந்தும் எளிமையாக இருந்ததாக நிறுப்பவர்கள்,  அதே தராசில்தான் ஜீவாவையும் நல்லகண்ணுவையும் அளக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆட்சியில் இருந்தவர்களும் ஆட்சிக்கு எதிராகப்  போராடுகிறவர்களும் ஒரே மாதிரிதான் என்பதுகூட மேம்போக்கான பார்வையே. வேண்டுமானால், இருந்ததைக் கொடுக்க அவர்களும், இழந்ததை மீட்க இவர்களும் எளிமையைக் கைக்கொண்டதாக கருதிக்கொள்ளலாம். தினம் ஒரு போராட்டம், வருடத்தில் சிலநாள் சிறை என்னும் நடைமுறைக்கு தன்னை  தயார்படுத்திக்கொண்ட நல்லகண்ணு, சிறையிலிருந்து எழுதிய கட்டுரைகளை இளமை மணியன் தொகுத்து புத்தகமாக்கியிருக்கிறார்.

‘சமுதாய நீரோட்டம்’, ‘சிறையிலிருந்து ஓர் இசை’ எனும் தலைப்புகளில் வெளிவந்துள்ள அந்நூல்களில் பல முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  அவை தமிழகத்தில் அவ்வப்போது நடந்த போராட்டக் குறிப்புகளில்லை. வரலாற்றையும் இலக்கியத்தையும் நடைமுறை வாழ்வையும் கலந்துகட்டி எழுதப்பட்ட  கருத்துக் குவியல்கள். அஜாய்குமார்கோஷ், அம்பேத்கர், திரு.வி.க, ஹோ-சி-மின், ஜீவா ஆகியோரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளை அந்நூல்களில்  தந்திருக்கிறார். ‘வேதம் பரப்பிய பாதுஷா’ என்றொரு கட்டுரை.

இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் இன்று தொடுத்து வரும் தாக்குதலுக்கெல்லாம் பதிலாக அக்கட்டுரை அமைந்துள்ளது. ஒளரங்கசீப்பின் மூத்த  அண்ணன் தாரா ஷிக்கோ காசி மண்டலத்தை ஆட்சி செய்தபோது, அவரைச் சந்தித்த குமரகுருபரர் சைவ சித்தாந்தத்தையும் மத நல்லிணக்கத்தையும் விளக்கிப்  பேசியதை அக்கட்டுரையில் விவரித்திருக்கிறார். குமரகுருபரரின் தத்துவச் சிறப்பையும் விவாதத் திறனையும் கேட்ட தாரா ஷிக்கோ அனைத்து மதத்தினரையும்  அழைத்து மாநாடு நடத்தியிருக்கிறார். மட்டுமல்ல, காசியில் குமாரசாமி மடத்தை நிறுவ நில மானியமும் நன்கொடையும் வழங்கியிருக்கிறார்.

இந்தத் தகவல்களை அக்கட்டுரையில் பகிர்ந்துகொள்ளும் நல்லகண்ணு, கட்டுரையின் இறுதியில், “வரலாற்றில் இரு பக்கங்கள் உள்ளன. இந்துக்களுக்கு எதிரான  முகலாய மன்னர்கள் சிலரின் நடவடிக்கைகளுக்கு பழிவாங்க முயற்சித்தால் மனிதகுல வரலாற்றில் ரத்தக் களரிதான் மிஞ்சும்...” என்றிருக்கிறார்.  ஒளரங்கசீப்பையும் தாரா ஷிக்கோவையும் வேதம் பரப்பிய பாதுஷாக்களாக சொல்லிவந்த அவர், ஏனைய முகலாய பாதுஷாக்கள் இந்துமத எதிர்ப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டதை ஆதரித்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in

Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

யுகபாரதி - 67

காசியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பனிரெண்டாவது மாநாடு நடந்தபோது அதில் கலந்துகொண்ட நல்லகண்ணு, கட்சிப் பணிக்கு இடையிலேயும் காசியில் பாரதி  வாழ்ந்த பகுதியைப் போய்ப் பார்த்திருக்கிறார். ‘காசியில் பாரதி தரிசனம்’ எனும் கட்டுரையில் பாரதியின் சித்திரத்தைப் புதுவிதமாகத் தீட்டியிருக்கிறார்.  இலக்கியத்தையும் வரலாற்றையும் இணைத்து எழுதும் வழக்கம் ஜீவாவிடமிருந்து அவருக்கு வந்திருக்கலாம். தெளிவுற தெரியாத எதைப்பற்றியும் அவர்  எழுதுவதில்லை. தோழர் பாலனுக்கும் பேத்தி சண்முகபாரதிக்கும் அவர் எழுதியுள்ள உருக்கமான கடித வரிகள் கண்ணீரைத் தருவன.
2.jpg
கடவுள் மறுப்புக் கொள்கையுடைய அவர், தமிழகத்திலுள்ள பல கோயில்களின் ஸ்தல புராணங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். சைவ,  வைணவ பெயர்களின் வழியே அவ்வூரின் தோற்றத்தை அவரால் யூகிக்க முடிந்திருக்கிறது. ஒருமுறை தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்திற்குச் சென்றபோது  ‘முனியோதனம்’ என்ற சொல்லைக் கேட்டிருக்கிறார். திருக்கண்ணபுரம் கோயிலில் இரவு பூசை முடித்துக் கொடுக்கப்படும் பொங்கலின் பெயரே  ‘முனியோதனம்’.

தோழர் ஒருவர் மூலம் ‘முனியோதனத்’தைத் தெரிந்துகொண்ட அவர், திருக்கண்ணபுரம் ஆழ்வார்கள் ஸ்தலமாயிற்றே, அங்கே எப்படி ‘முனி’ என்ற சைவப்  பெயர் வருமென்று ஆராய்ந்திருக்கிறார். வீரசோழ பூபாலன் எனும் சோழமன்னன் ஆண்டு வந்த காலத்தில் திருக்கண்ணபுரம் உள்ளிட்ட இருபது ஊர்களுக்குத்  தண்டல் வசூலிக்கும் பணியை முனியன் என்பவன் பார்த்து வந்திருக்கிறான். முனியன், கோதிலன். அதாவது குணம் உள்ளவன். மன்னனுக்கும் மக்களுக்கும்  விசுவாசமாயிருந்த முனியன், துளசிமாலையும் பூமாலையும் சாத்தி கண்ணபுர பெருமாளுக்குக் கடமையாற்றியிருக்கிறான்.
2a.jpg
சைவனான அவன், ஒருகட்டத்தில் வைணவ பக்தனாக மாறிவிடுகிறான். தண்டல் வசூலித்து வந்த முனியன், அப்பகுதியில் ஏற்பட்ட விவசாயப் பஞ்சத்தை  அடுத்து, மன்னனுக்குச் செலுத்த வேண்டிய வசூல் பணத்தை மக்களுக்குச் செலவழித்திருக்கிறான். மக்களிடத்தில் செல்வாக்கையும் நற்பெயரையும் பெற்ற  முனியனை, அவ்வூரில் இருந்த பணக்காரர்களுக்குப் பிடிக்காமல் போகிறது. மக்கள் செல்வாக்கை மன்னனே அடைந்தாலும், பணக்காரர்களுக்குப்  பிடிக்காதென்பதுதானே வரலாறு. இது ஒருபுறமிருக்க, பெயரும் புகழும் ஓங்கிய திருக்கண்ணபுர பெருமாள் கோயிலில் பணிபுரிய தேவதாசிகள்  அமர்த்தப்படுகிறார்கள்.

மாடவீதியில் குடியிருந்து கோயில் பணிகளைக் கவனிக்க வந்த தேவதாசிகளை, ஆதிக்கக்காரர்கள் தங்கள் ஆசைநாயகிகளாக ஆக்கியிருக்கிறார்கள்.
அந்தச் சூழலில், முனியனுக்கும் ஒரு பெண்மீது காதல் வந்துவிடுகிறது. தண்டல் வசூலிப்பவனுக்குக் காதலா? ஆத்திரமடைந்த ஆதிக்கக்காரர்கள், மன்னனிடம்  முனியனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிவிடுகின்றனர். எந்த மன்னன் எளியவனின் காதலுக்கு மதிப்பளித்திருக்கிறான்? நியாயத்தைக்  கேட்டிருக்கிறான்? பணக்காரர்கள் பக்கமிருந்த வீரசோழ மன்னனும், ஆதிக்கக்காரர்களின் வார்த்தைகளைக் கேட்டு, முனியனின் ஒற்றைக் காலை மடக்கிக்கட்டி,  வெய்யிலில் நிற்கவைத்து, நெற்றியில் கல்லேற்றியிருக்கிறான்.

கிட்டியால் உடலை நெரித்து, குறடுகளால் தொடைகளை இறுக்கி துன்புறுத்தியிருக்கிறான். வசூல் பணத்தை மன்னன் அனுமதியில்லாமல் செலவழித்த  குற்றத்தைவிட, தன்னைவிட தாழ்ந்த ஒருவன் காதலித்தான் என்பதே கடும் குற்றமாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. காதலன் துயருற்ற சேதி கேட்ட காதலி, உள்நிறை  அன்பு பூண்டு உறுபொருள் கொடுத்த காதலனுக்காக பெருமாளிடம் வேண்டியிருக்கிறாள். “சீதையையும் திரெளபதையையும் காத்த பெருமாளே, என்னையும்  காப்பாற்று...” என்று இறைஞ்சியிருக்கிறாள்.“வேசி என என்னை விட்டுவிடாதே.

அவ்வாறு நீ என்னை விட்டுவிட்டால், தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்...” என்றும் எச்சரித்திருக்கிறாள். காதலியின் வேண்டுதலைப்  பொருட்படுத்திய பெருமாள், மன்னனின் கனவில் தோன்றி முனியனை விடுவிக்கச் சொல்லியிருக்கிறார். தீக்குளிக்க இருந்த காதலியிடம் காதலனை ஒப்படைத்த  மன்னன், ஊர்க்காவலர்கள் முன்னிலையில் முனியனின் காலில் விழுந்து வணங்கியிருக்கிறான். இது நடந்தது நள்ளிரவில். மறுநாள் காலை அந்தணர் ஒருவர்,  மூலவருக்கு அர்ச்சனை செய்ய கருவறைக்குள் நுழைத்திருக்கிறார். அப்போது பார்த்தால் பெருமாள் மேனி முழுதும் பொங்கல் சிதறியிருக்கிறது.

அந்தப் பொங்கலின் பெயரே ‘முனியோதனம்’ என அக்கட்டுரையை நல்லகண்ணு முடித்திருந்தால், அதிலொன்றும் சிறப்பில்லை. இந்தக் கதையைச்  சொல்லிவிட்டு, “பக்தி இலக்கியங்களிலும் மக்கள் இயக்கங்கள் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன...” என்கிறார். ‘‘மக்கள் செல்வாக்கும் காதலும் பெற்ற  ஒருவனுக்கு, தெய்வமே துணையிருக்கும்...’’ என்று கதைக்குப் புது விளக்கம் தரும் இடத்தில்தான் நல்லகண்ணு மிளிர்கிறார். ஒரு சொல்லுக்குப் பின்னே உள்ள  கதையை ஆராய்ந்து, அக்கதையைப் புரட்சிகர சிந்தனைக்கு மடைமாற்றும் ஆற்றல் அவரது தனித்துவம்.

பக்தி இலக்கியங்கள் புரட்சிகர எண்ணங்களுக்கு மாறுபாடு உடையன என விட்டுவிடாமல், அதிலிருந்தும் மக்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டலாம் என்பதே  அவருடைய எழுத்துமுறை. பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி என்று நீளும் வரிசையில், இடதுசாரிக் கவிஞராக அறியப்பட்ட தமிழ்ஒளி, போதிய அளவு  போற்றப்படவில்லை எனும் வருத்தம் நல்லகண்ணுவுக்கு உண்டு. “சரித்திரத்தை மாற்றியது மனித சக்தி, சாத்திரத்தை மாற்றியது மனித சக்தி...” என்று  நிலவில் மனிதன் கால்வைத்த செய்தியறிந்து, கவிதை எழுதியவர் தமிழ்ஒளி. அவரின் படைப்புகளை ஆவணப்படுத்தியதில் பேராசிரியர் செ.து.சஞ்சீவிக்கு பெரும்  பாத்தியமுண்டு.

பேராசிரியர் சஞ்சீவி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபொழுது, பட்டுக்கோட்டை அறக்கட்டளை சார்பாக ஒரு விழாவை ஏற்பாடு  செய்திருக்கிறார். ‘பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’ எனும் தலைப்பில் நல்லகண்ணு அவ்விழாவில் பேசியிருக்கிறார்.‘‘முதல் பாவலர் தமிழ்ஒளி,  இரண்டாவது பாவலர் திருமூர்த்தி, மூன்றாவது பாவலர் வரதராஜன்...’’ என்பதாக அமைந்த அப்பேச்சில், இலக்கியத்தை எந்த அளவுகோலால் தான் அளக்கிறேன்  என்பதையும் தெரிவித்திருக்கிறார். அதேபோல, தமிழ்ஒளிக்கு சஞ்சீவி எடுத்த வைரவிழாவிலும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்.

அவ்விழாவில். பேராசிரியர் இளவரசு, ‘‘தமிழ் ஒளியை இடதுசாரிகளே மறந்துவிட்டார்கள்...’’ எனும் பொருள்படும்படி பேசியிருக்கிறார். தலித் என்பதனால்  தமிழ்ஒளி மறக்கடிக்கப்பட்டதாக, அவ்விழாவில் வேறொருவர் பேசியிருக்கிறார். உண்மையில், ஆதாரமில்லாமல் சொல்லப்படும் இப்படியான குற்றச்சாட்டுகளை  அவ்விழாவிலேயே மறுத்த நல்லகண்ணு, மிக நீண்ட உரையை ஆற்றியிருக்கிறார். தமிழ் அறிஞர்களும் ஆய்வாளர்களும் நிறைந்த அவ்வரங்கில் கையில்  குறிப்பேதும் இல்லாமல் நினைவிலிருந்தே பல பாடல்களைச் சொல்லியிருக்கிறார்.

ஆழ்ந்து படித்திராமல், மனனம் செய்திராமல் அப்படியான உரையை நிகழ்த்துவது சாத்தியமில்லை. ‘‘வர்க்கப் போராட்டமும் வர்ணாசிரமப் போராட்டமும் சம  அளவில் நிகழ்த்தப்பட வேண்டும்...’’ எனக் குறிப்பிட்டு, இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் இடதுசாரிகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அவ்விழாவில்  புரிய வைத்திருக்கிறார். “பெரியார் பக்தி இலக்கியத்தை மறுத்தபோதும், ஜீவா அவ்விலக்கியத்தில் இருந்த நயங்களை சொல்லத் தயங்கவில்லையே...” என்பது  குறிப்பிடத்தக்கது. இலக்கிய அவதூறுகளால் இடதுசாரிகளைக் காயப்படுத்த யார் துணிந்தாலும், அதை நல்லகண்ணு பொறுத்துக் கொண்டதில்லை.

கலை இலக்கிய மேடைகளில், கருத்துக்கு எதிர்க்கருத்து வைக்கக்கூடிய தரவுகளோடுதான் அவர் எப்போதும் இருந்துவருகிறார். தயாரித்துக் கொண்டுபோய் பேசும்  வழக்கம் அவரிடமில்லை. அனுபவத்திலிருந்தும் ஆழ்ந்த வாசிப்பிலிருந்தும் பதிலளித்து, எந்த மேடையையும் தனதாக்கிவிடும் தனித்துவம் அவருடையது.  எனவேதான், எளிமை மட்டுமே அவர் அடையாளம் என்று சொல்வதை ஏற்க முடியாமல் போகிறது. திராவிட இயக்கத்தையும் பொதுவுடமை இயக்கத்தையும்  புரிந்த கொள்ளாத தமிழறிஞர்கள் சிலர், அவை இரண்டுக்கும் சிண்டு முடியும் வேலையைத் தொடர்ந்து செய்திருக்கிறார்கள்.

‘‘‘சோறா? மானமா?’ என்று வந்தால் பொதுவுடமைக்காரர்கள் சோற்றையும் திராவிட இயக்கத்தவர்கள் மானத்தையும் முதன்மையாகக் கொள்வார்கள்...’’ என  அமைச்சர் தமிழ்ககுடிமகன் ஒருமுறை பேசியிருக்கிறார்.‘‘இரண்டுமே முக்கியம்...’’ என்று விளக்கமளித்த நல்லகண்ணு, “சோற்றுக்காக மானத்தையும்,  மானத்துக்காக சோற்றையும் இழக்கவேண்டியதில்லை...” என்றிருக்கிறார். “மானமே முக்கியமென்பவர்கள் சாப்பிடவே மாட்டார்களா..?” என்ற கேள்வியில்  அரங்கம் அதிர்ந்திருக்கிறது. மூலதன மீட்பும் மூடத்தன எதிர்ப்பும் ஒருங்கே நடைபெற்றால்தான் மக்கள் நல்வாழ்வு பெறுவார்களே அன்றி,

ஒன்றை விடுத்து ஒன்றை முதன்மைப்படுத்துவதால் இரண்டுமே வீணாகும் என்பதே அவர் எண்ணம். அறுபதுகளில் வெளிவந்த ‘சாந்தி’ பத்திரிகையில்  நல்லகண்ணு பல அற்புதமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆண்டான் கவிராயன் எனும் பெயரில் வசைகவி ஒருவன் அக்காலத்தில் வாழ்ந்து  வந்திருக்கிறான். தன் தோதுக்கு வராத எவர்மீதும் வசைபாடுவதை வழக்கமாக வைத்திருந்த அந்த கவிராயனின் வார்த்தைகள் அப்படியே பலிப்பதாக ஐதீகமும்  இருந்திருக்கிறது. பலித்ததோ இல்லையோ, மக்களைப் பயமுறுத்தி, ஆண்டான் கவிராயன் ராஜவாழ்வை வாழ்ந்திருக்கிறான்.

எந்த ஊருக்குப் போனாலும், அந்த ஊரிலுள்ள சாதிக் கட்டுமானத்தை வசைபாடிவந்த அவன், தன் பசிக்கு உணவிடாதவர்களை உண்டு இல்லை என்று  பண்ணியிருக்கிறான். ஏழைக்கு உணவிட எண்ணாதவர்கள், கோயிலிலும் பூசையிலும் செலுத்திவரும் கவனத்தைக் கேள்வி கேட்டிருக்கிறான். ஒருகட்டத்தில்  பெருமாளையும் முருகனையுமே வசைபாடிய அவனை, நல்லகண்ணு பார்த்தவிதம் பரவசத்தில் ஆழ்த்துவிடுகிறது. கவிராயனின் பாடல்களைச் சொல்லி, கீழே  அதன் விளக்கத்தையும் தந்திருக்கிறார். ஆண்டாளைப் பேசிய கவிராயர் ஒருவரின் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,

ஆண்டான் கவிராயனின் வசைப்பாடல் விளக்கங்கள் ஏனோ நினைவுக்கு வந்தன. பொதுவாகக் கவிஞர்களே முற்காலங்களில் வசைபாடும் வல்லமை  படைத்தவர்கள். ஆனால், தற்போதோ கவிஞர்களை வசைபாடி, அரசியல் ஆதாயங்களைத் தேட மத அமைப்புகள் முயன்று வருகின்றன. ஒருவரின் தகுதியையும்  திறமையையும் பிறப்பை வைத்து அளவிடுவது சமூக நீதிக்கு எதிரானது எனும்போது, ஆண்டாளின் பிறப்பு குறித்து ஆராய்ச்சி செய்வதும் அநாவசியம் என்றே  தோன்றுகிறது. தோழர் நல்லகண்ணுவிற்கு இரண்டு மகள்கள். ஒருவரின் பெயர் ஆண்டாள். இன்னொருவர் பெயர் காசிபாரதி.
 

(பேசலாம்...) 

http://kungumam.co.in

Posted

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 68

நெல்லைப் பகுதியில் 1995ல் நடந்த சாதிக் கலவரத்தை விட்டுவிட்டு நல்லகண்ணுவின் நிதானத்தை நினைத்துப் பார்க்க முடியாது. அந்தக் கொடூரக் கலவரத்தில்தான், இடதுசாரி போராளியான தன் மாமனார் அ.க.அன்னசாமியை அவர் இழக்க நேர்ந்தது. வெட்டுப்பட்டு சரிந்த அன்னசாமி, யார் வெட்டினார்களோ அவர்களுக்காகப் பாடுபட்டவர். சாதி இழிவை நீக்கவும் சமத்துவத்தைப் பேணவும் முனைந்த அவரை, கலவரக் கத்திகள் கண்டந்துண்டமாக்கின. அந்த நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் “நம்மிடம் நல்லிணக்கம் வேண்டும். பழிவெறியோ, பகைவெறியோ நம் இலட்சியங்களை சின்னாபின்னமாக்கிவிடும்.
4.jpg
சகோதர உறவுகளைப் பேணுங்கள். அன்பைப் பெருக்கி சாந்தம் அடையுங்கள்...” என்றவர்தான் நல்லகண்ணு. “இத்தனை ஆண்டுகளாக உங்களுக்காக உழைத்தவரை உணர்ந்துகொள்ளாமல் வெட்டிச் சாய்த்துவிட்டீர்களே பாவிகளே...” என வெகுண்டு எழவில்லை. துக்கத்திலும் கோபத்திலும் நிதானமிழக்காத அவர், ‘தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு’, ‘விடுதலைப் போரில் விடிவெள்ளிகள்’, ‘கங்கை காவிரி இணைப்பு’, ‘பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’, ‘கிழக்கு ஜெர்மனியில் கண்டதும் கேட்டதும்’, ‘சமுதாய நீரோட்டம்’, ‘விவசாயிகளின் பேரெழுச்சி’ ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.

ஒரு சிறுகதையும் சில கவிதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம் ‘டாலர் தேசத்து அனுபவங்கள்’ எனும் அவருடைய அமெரிக்கப் பயணக் கட்டுரை நூலும் குறிப்பிடத்தக்கது. அடிநாள் தொட்டே அமெரிக்க எதிர்ப்பாளரான அவர், அந்த மண்ணில் பார்த்த காட்சிகளையும் கட்டடங்களையும் வியப்பில்லாமல் விவரித்திருக்கிறார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருபது நாட்கள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்பயணத்தில் நிகழ்ந்த சம்பவங்களை எல்லாம் உணர்வு பூர்வமாக அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘பீப்பிள்ஸ் வேர்ல்டு’ அச்சடிக்கப்படும் சிகாகோ நகரில் நின்று, மே தின தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
4a.jpg
அட்லாண்டாவில் அமைந்துள்ள மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவிடத்திற்குச் சென்ற அவர், கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தை நினைத்துக்கொண்டே அவ்விடத்தில் நின்றதாகத் தெரிவித்திருக்கிறார். நூலின் இறுதியில், ‘நான் ஒரு கனவு கண்டேன்’ என்னும் தலைப்பில் அமைந்த மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற சொற்பொழிவையும் இணைத்திருக்கிறார். “ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்ந்து நிற்கும், ஒவ்வொரு மலையும் குன்றும் பள்ளமாக்கப்பட்டுவிடும் என்று நான் கனவு கண்டேன்.  கரடுமுரடான இடங்கள் சமதளமாகவும் வளைந்து காணப்படும் இடங்கள் நேரானதாகவும் ஆக்கப்பட்டுவிடுமென்று நான் கனவு கண்டேன்...” என்பதாகப் போகும் அச்சொற்பொழிவு, விடுதலைக் கனவுடைய எவரையும் ஈர்த்துவிடக் கூடியது.

ஒருபக்கம், வாஷிங்டன் நதிக்கரையில் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு முழு உருவச்சிலை. இன்னொரு பக்கம், வியட்நாம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் படைவீரர்களின் சாகசத்தைப் பாராட்டிய வாசகங்கள். ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டது. ஏனெனில், அப்பாவி வியட்நாம் போராளிகளைக் கொன்று குவிக்க, அமெரிக்கா படையனுப்பியதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தவர் மார்ட்டின் லூதர் கிங். ஆனால், அவருக்கும் சிலையை நிறுவிவிட்டு, அவர் எதிர்த்த அமெரிக்க படைவீரர்களையும் அமெரிக்கா சிறப்பித்திருப்பதை நல்லகண்ணு அந்நூலில் விமர்சித்திருக்கிறார்.‘‘முரண்பாடுகளின் முழுவடிவம் அமெரிக்கா என்பதைப் புரிந்துகொள்ள, இது ஒன்றே போதும்...’’ என்றிருக்கிறார்.

உலகமயமாக்கல் மூலம் உலக ஆதிக்கத்தைக் கைப்பற்றும் சூழ்ச்சிகளை வரலாற்றுப் பின்னணியுடன் உள்வாங்கிக் கொண்ட அவர், ஓர் இடத்தில்கூட அமெரிக்காவை அந்நூலில் பிரமிக்கவில்லை.‘அழகர்சாமியின் குதிரை’ எனும் தலைப்பில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதிய கதை, அதே தலைப்பில் சுசீந்திரனால் படமாக்கப்பட்டது. மூட நம்பிக்கையால் எளிய மனிதன் ஒருவன், என்னவித பாடுகளுக்கு உள்ளாகிறான் என்பதே கதையின் சாரம். அப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவரும் நிலையில், அதைத் தோழர் நல்லகண்ணு பார்த்து கருத்துத் தெரிவிக்க வேண்டுமென்று படக்குழுவினர் விரும்பினர். தோழரைத் தொடர்பு கொண்டு நான்தான் பிரத்யேகக் காட்சிக்கு அழைத்துப்போனேன்.

அப்படத்தைப் பார்த்த அவர், “மூட நம்பிக்கையைவிட, எளிய மக்களின் சூழ்ச்சிகளே பிரதானப்பட்டுவிட்டது...” என்றார். ஒரு கதையையோ ஒரு திரைப்படத்தையோ பார்த்துவிட்டு அவர் உதிர்க்கும் சொற்கள், நெஞ்சின் அடியாழத்திலிருந்து பிறப்பவை. ராஜுமுருகனின் ‘ஜோக்கர்’ பற்றி அவர் ஆற்றிய உரையும் அத்தகையதே. முற்போக்கு படைப்பாளரும் திரை எழுத்தாளருமான கே.ஏ.அப்பாஸைப் பற்றி அவ்விழாவில் நினைவுகூர்ந்தார்.‘‘எதார்த்த படங்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘இதைத்தானே தினமும் தெருவில் பார்க்கிறோம். இதை திரையில் வேறு பார்க்க வேண்டுமா?’ என்று தோன்றும்.

ஆனால், என் இளவயதில் அப்பாஸின் படங்களையும் நாவல்களையும் படித்த பிறகுதான் மக்கள் பிரச்னைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இப்படியான படங்களும் படைப்புகளும் தேவை என்பதை உணர்ந்தேன்...” என்றார். சேர்ந்து செய்ய வேண்டியதை தனித்தும், தனித்துச் செய்ய வேண்டியதை சேர்ந்தும் செய்யக்கூடிய சமூகமாக இந்திய சமூகம் இருப்பதை நேரு தன் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’வில் எழுதியிருக்கிறார். அதைக் குறிப்பிட்டுப் பேசிய நல்லகண்ணு, ‘‘இயற்கைக் கடனைக் கழிக்கக்கூட வசதிசெய்து தராத நாடு ஒரு நாடா...’’ எனவும் குரல் உயர்த்தினார். தனித்துச் செல்ல வேண்டிய கழிப்பிடத்திற்கும் வசதியில்லாததால், நம்முடைய கிராமப் பெண்கள் காட்டுக்கும் மேட்டுக்கும் கூட்டாகச் செல்லவேண்டிய நிலையை நேருவின் மேற்கோளில் கொண்டுவந்து முடித்தார்.

தீவிர வாசிப்பு பழக்கமுடைய நல்லகண்ணு பல நூல்களுக்கு முன்னுரைகளும் அணிந்துரைகளும் எழுதியிருக்கிறார். குறிப்பாக, ‘வீரத் தியாகி தூக்குமேடை பாலு’ என்னும் ஐ.மாயாண்டி பாரதியின் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை கவனத்துக்குரியது. ஐம்பதுகளில் காங்கிரஸ் அரசால் கைது செய்யப்பட்ட தோழர் பாலு, மக்களை நேசித்த ஒரே குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டிருக்கிறார். பஞ்சாலைத் தொழிலாளியான பாலு, வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்துகொண்டதனால் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். நீக்கப்பட்ட அவர் சிறிது காலம் கழித்து, காவல்துறையில் பணிக்குச் சேர்கிறார்.

பணியில் சேர்ந்த அவர், தெலங்கானாவில் விவசாயிகளை ஒடுக்குவதற்கு அரசால் அனுப்பப்படுகிறார். அடிப்படையில் கம்யூனிஸ்ட்டான பாலு காவல்துறையின் கொலைவெறிச் செயல்களுக்கு உடன்பட மறுக்கிறார். அரசு வேலையில் இருந்துகொண்டே, அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொய்வழக்கில் கைது செய்யப்படுகிறார். ஒரு குற்றமும் இழைக்காத அவருக்கு, நீதிமன்றம் மரணதண்டனையைத் தீர்ப்பாக வழங்குகிறது. ‘‘விவசாயிகளைச் சுட மறுத்ததற்காக தனக்கு மரணதண்டனை விதித்தாலும், மகிழ்ச்சியே...’’ என்ற பாலு சிறையில் இருந்தபோது அதே சிறையில் நல்லகண்ணுவும் இருந்திருக்கிறார்.

தூக்கிலிடப்படும் நாளில் கூட அச்சமோ துக்கமோ இல்லாமல், அனைவருடனும் சகஜமான மனநிலையில் இருந்த பாலுவின் நினைவுகளை நல்லகண்ணு உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார். முன்னுரையிலேயே முழு புத்தகத்தையும் படித்த நிறைவு வந்துவிடுகிறது. மதில் சுவருக்கு அப்பால் தூக்கிலிடப்பட்ட பாலு, “புரட்சி ஓங்குக, செங்கொடி வாழ்க...” என முழக்கமிட்டபடியே மரித்திருக்கிறார். மதில் சுவருக்கு எதிரே இருந்த தோழர் நல்லகண்ணு உள்ளிட்ட தோழர்கள், “தோழர் பாலு நாமம் வாழ்க, புரட்சி ஓங்குக...” என வீரவணக்கம் செலுத்தியிருக்கிறார்கள். நினைத்தாலே நெஞ்சு கனத்துவிடும் அச்சம்பவத்தையும்,

உணர்வு உந்த எழுதிய மாயாண்டி பாரதியின் தியாக வாழ்வையும், அம்முன்னுரையில் நல்லகண்ணு பகிர்ந்திருக்கிறார். இடதுசாரிகள் இத்தனை ஆண்டுகளாக இந்த மண்ணை உழுது, நட்ட புரட்சிப் பயிர் முளைக்கவில்லையே என்கிற மாயத் தோற்றத்தை ஊடகங்களும் சமூக வலைத் தளங்களும் உண்டாக்கி வருகின்றன. ஆறுகள் பாழ்பட்டுவிட்டன. நீர் ஆதாரங்கள் நிலைகுலைந்து கிடக்கின்றன. கனிம வளம், காட்டுவளம், மலை வளம் எல்லாமும் தனியார் நிறுவனங்களின் ஏகபோக சுரண்டலுக்கு ஆளும் அரசுகளால் கிரயம் செய்து தரப்பட்டுவிட்டன. கூடங்குளமும் கதிராமங்கலமும் நெடுவாசலும் மக்களைப் பீதி கொள்ள வைத்திருக்கின்றன.

இந்த நிலைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டு, கடந்த எண்பது ஆண்டுகளாய் பொதுவாழ்வுக்கென்று வாழ்வை ஒப்புக்கொடுத்து நல்லகண்ணு போராடி வருகிறார். இந்தப் போராட்ட வாழ்வுக்கு நடுவில், மகளுடைய காதுகுத்து நிகழ்வுக்குக்கூட அவரால் கவரிங் தோடுதான் வாங்கிக்கொண்டு போக முடிந்திருக்கிறது. பொருளாதார ரீதியில் அவருக்கு எதையாவது செய்ய வேண்டுமென விரும்பிய கட்சித் தோழர்கள், அவரது 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒருகோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்திருக்கிறார்கள். வெகு விமர்சையாக நடந்த அவ்விழாவில், பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ள மேடையேறிய நல்லகண்ணு,

அதே மேடையிலேயே அப்பணத்தை கட்சிக்கான வளர்ச்சி நிதியாக வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, துண்டை உதறி தோளில் போட்டபடி கீழே இறங்கியிருக்கிறார். அதைவிட, “இவ்வளவு ரூபாயை வைத்துக்கொண்டு நானென்ன செய்யப் போகிறேன்...’’ என்றதுதான் விசேஷம். தமிழக அரசு அவருக்கு ‘அம்பேத்கர் விருது’ வழங்கி, ஒரு லட்சம் ரூபாயைப் பரிசளித்தபோதும் அதே கதைதான். பரிசுத் தொகையை இரண்டாகப் பிரித்து, ஒரு பங்கை கட்சிக்கும் இன்னொரு பங்கை விவசாய சங்கத்திற்கும் வழங்கியிருக்கிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை வெகுகாலத்திற்கு முன்பே ஆரம்பித்தவர் நல்லகண்ணுதான். எதற்கும் ஒரு விலையுண்டு என்று தத்துவம் பேசுபவர்கள், அவருடைய வாழ்வை அறிய நேர்ந்தால் அவ்விதம் சொல்லத் தயங்குவர். இலட்சியத்தில் நம்பிக்கையும் பற்றும் உடையவர்கள் நல்லகண்ணுவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்ட அவர் எழுதிய ஒரு கட்டுரை, குற்றால அருவிக்கு அருகே அமையவிருந்த ரேஸ் கோர்ஸ் முயற்சியைத் தடுத்திருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் நடைபெற்றுவந்த மணற்கொள்ளையைத் தடுக்க, அவரே மதுரை உயர்நீதிமன்றத்தில் வாதாடி தடை வாங்கியிருக்கிறார்.

இன்னமும் அவருடைய போராட்ட இதயத்தின் வீரியம் குறையவில்லை. மதவாதத்திற்கு எதிராகவும் மக்கள் பிரச்சனைகளுக்கு ஆதரவாகவும் களத்தில் நிற்கிறார். அதிகாரக் கண்களுக்கு அவர் சாதாரணமானவர். ஊடகங்களுக்கு எளிமையானவர். ஊழல் அரசியல்வாதிகளுக்குப் பிழைக்கத் தெரியாதவர். இயற்கையைச் சுரண்டுபவர்களுக்கு எதிரானவர். எவருடைய கண்களிலிருந்து பார்த்தாலும், ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் மட்டுமே அவர் தோழர். வேட்பாளராகத் தோற்றிருக்கலாம். ஒருபோதும் தோழராக அவர் தோற்பதில்லை.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in/

  • 2 weeks later...
Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

 

 

யுகபாரதி - 69

மிகை உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு தங்கள் இயல்பை தொலைத்து விடுபவர்களே படைப்பாளிகள். சமயத்தில், அந்த  மிகை உணர்ச்சிகளே அவர்களைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன. சராசரியிலிருந்து  தங்களை வேறுபடுத்திக்காட்ட  மிகை உணர்ச்சிகள் பயன்பட்டாலும், அளவுக்கு மீறிப் போகும்போது அவ்வுணர்ச்சிகள் ரசிக்கப்படுவதில்லை.

அதிலும் கவிஞர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. எதையுமே அவர்கள் கொஞ்சம் அதிகமாகப் பார்த்துப்  பழகியவர்கள். இயல்புக்கு மீறிய சிந்தனையிலும் கற்பனையிலும் சதா உழலும் அவர்கள், தங்கள் படைப்பூக்க சக்தியை  மிகையுணர்ச்சிகளிலிருந்தே பெறுவதாக நம்புகிறார்கள்.
2.jpg
இதிலிருந்து தம்மை விடுவித்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கவிதை எழுதி வருபவர் ஈரோடு தமிழன்பன்.  திராவிட முகாமைச் சேர்ந்த தமிழன்பனை, மார்க்சிய அறிஞரான கலாநிதி க.கைலாசபதி கொண்டாடியிருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்கத்தின் பிரதான கொள்கைகளையும் பொதுவுடமைக் கருத்துகளையும் தம் கவிதைகளில்  ஒருசேரக் கொணர்ந்த தமிழன்பன், பாரதிதாசனையும் பாப்லோ நெருடாவையும் இரு கண்களாக ஏற்றுக்கொண்டவர். நெருடா மார்க்சியத்தை முன் நிறுத்தியவர். பாரதிதாசனோ தமிழியக்கத்தைப் பின் பற்றியவர். இரண்டு பெரும்  பாதைகளின் வழியே நடந்த பயணம்தான் தமிழன்பனுடையது.

எழுத்துமுறையில் பாரதிதாசனையும் சிந்தனைமுறையில் பாப்லோ நெருடாவையும் பின் பற்றிய தமிழன்பன், தமிழின்  தொடர்ச்சியை உணர்ந்தவர் மட்டுமல்ல; அதை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப்போகவும் உழைத்திருப்பவர். மேலெழுந்தவாரியாக அவருடைய கவிதைகளை வாசிப்பவர்கள் இந்த நுட்பத்தை விளங்கிக்கொள்வதில் தோற்றுவிடுவர்.  ஆனால், அவருடைய கவிதைகளை ஆழ்ந்து வாசித்து மதிப்புரை எழுதியிருக்கும் கா.சிவத்தம்பியும், கோவை ஞானியும்  தமிழன்பனின் தகுதியை உயர்த்தியே சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் இருவருமே மார்க்சியத்திலும் தமிழிலக்கியத்திலும் கரைகண்டவர்கள் என்பதை நான் சொல்ல  வேண்டியதில்லை. அவர்கள் இருவருடைய கணிப்பிலும் தமிழன்பன், தமிழின் முக்கியக் கவியாக அடையாளப்  படுத்தப்பட்டிருக்கிறார்.தொண்ணூறுகளில் தீவிரமாக எழுதத் தொடங்கிய எனக்கு, தமிழன்பனின் கவிதைகளே பற்றி  ஏறும் சாரமாகப் பயன்பட்டன. மரபாயினும் புதிதாயினும் தனக்கென தனியான அடையாளத்துடன் எழுதக்
கூடியவரே அவர்.
2a.jpg
படிமத்திற்குள் படிமம் என்பதாக அவர் கவிதைகளை எழுதிச்செல்லும் விதம் அசாத்தியமானது. ஓர் எளிய வாசகனுக்கு முதல் வாசிப்பிலேயே புரிந்துவிடக் கூடியதாக அவர் கவிதைகள் இருந்ததில்லை. இரண்டாவது மூன்றாவது வாசிப்பில்தான் அவர் கவிதைகளுக்குள் நுழைய முடியும். வாசிப்பவனின் தயவையும்  பங்களிப்பையும் கோரிப் பெறுபவை அவருடைய கவிதைகள்.

நான் சொல்வது, ஆரம்பகாலங்களில் வெளிவந்த அவருடைய கவிதைகளைப் பற்றியே. பின்னால் வெளிவந்த கவிதைகளில் பலவும் நேரடித் தன்மையைக் கொண்டுள்ளன.‘மின்மினிக் காடு’, ‘சூரியப் பிறைகள்’, ‘மழை மொக்குகள்’,  ‘கவின்குறு நூறு’ ஆகிய நூல்களில் அவர் கவிதைகளை நேர்கோட்டுக்குக்கொண்டு வந்திருக்கிறார்.

‘‘ஓட்டுப்போட்டுவிட்டு திரும்பி வந்த பிணம் திடுக்கிட்டது, தனது கல்லறையில் வேறொரு பிணம்...” எனவும்,  ‘‘சிறைக்கம்பிகளுக்கு நிறம்பூசும் நிலா, பாதங்களில் பகலுக்கு விலங்கு...’’ எனவும், ‘‘கோளக்கொல்லை  பொம்மைக்குக் கோபம், குருவிக் குல்லாயில் முட்டையிட்டபோது...” எனவும், படிமங்களாலேயே கவிதையை  வளர்த்துக்கொண்டு போன அவர், ஒருகட்டத்தில் “யார் உடைத்தாலும் / யாழ் உடைந்துவிடும் / ஆனால், யார்  மீட்டினாலும் யாழ் இசைதருமா..?’’ என்று எளிமையாகவும் எழுதியிருக்கிறார்.

எளிமையென்பது வாசிப்பவரின் அறிவுமட்டத்தைச் சார்ந்ததுதான். எந்த அளவுக்கு ஒருவர் வாசித்திருக்கிறாரோ அந்த  அளவுக்கே அவரால் ஒரு கருத்தையோ படைப்பையோ புரிந்துகொள்ளமுடியும். வாசிக்க வாசிக்க சிக்கலான  விஷயங்கள்கூட சிரமமில்லாமல் புரிந்துவிடும். வெளிப்படை அல்லது நேரடித் தன்மையுடன் ஒரு கவிதை  இருக்கவேண்டும் என்றோ இருக்கக் கூடாதென்றோ படைப்பாளனின் சுதந்திரத்தில் நாம் தலையிடமுடியாது.

இருந்தபோதிலும், பெருவாரி யானவர்களுக்குப் புரியாமல் போகுமெனில், அப்படைப்பினால் அல்லது அக்கருத்தினால்  என்ன பயன் என்பதைக் கேட்காமல் இருப்பதும் முறையல்ல.அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து கவிதையெழுதுவதில் அலுப்போ சலிப்போ இல்லாமல் இயங்கிவரும் தமிழன்பன், கவிதைகளை வெவ்வேறு வடிவங்களில்  எழுதிக் காட்டுபவர்.

“பத்தாவது முறையும் / பாதம் தடுக்கி விழுந்தவனை / பூமித்தாய் முத்தமிட்டுச் சொன்னாள் / ஒன்பதுமுறை  எழுந்தவனில்லையா நீ...” என்னும் கவிதையைக் கேட்டிராதவர்கள் குறைவு.தன்னம்பிக்கை பேச்சாளர்கள் தவறாமல்  மேடைதோறும் மேற்கோள் காட்டும் இக்கவிதையை அவரவர் வசதிக்கேற்ப யார் யாரோ எழுதியதாகச் சொல்வதுண்டு.  எந்த இடத்திலும் இது என்னுடையதாயிற்றே என்று உரிமை கொண்டாடும் வழக்கம் தமிழன்பனிடம் இருந்ததில்லை.

தமிழில் மிக அதிகமான கவிதைகளை எழுதியவரும், எவ்வளவு எழுதியும் எழுத்தின் மீதுள்ள விருப்பத்தைக் குறைத்துக்  கொள்ளாதவரும் அவரென்றால் மறுப்பதற்கில்லை.நிறைய எழுதும்போது ஒரே மாதிரியான படிமங்களும் குறியீடுகளும்  நம்மையுமறியாமல் வந்துவிடும்.நிலவைப் பற்றி எழுதுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். எத்தனைமுறை நிலவை  எழுத முடியும்? நிலவின் தன்மைக்கு முரணாகவும் எழுத முடியாது. ஒரே நபர் ஒவ்வொருமுறையும் நிலவை  எழுதுகிறபோது வெவ்வேறு மாதிரியும் எழுத வேண்டும்.

இந்த சவாலைச் சாமர்த்தியமாகக் கடந்தவர் தமிழன்பன். நிலா நிழல், நிலவின் ஒளி, நிலாச் சும்மாடு, நிலவின் கரை,  நிலவின் தறி என்பதாக வார்த்தைகளைப் பிரயோகித்து கூறியது கூறலைத் தவிர்த்துவிடுவார். இயற்கையைப்  பாடுபொருளாகக் கொள்ளும்போது, இப்படியான சிக்கல் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால், அதை அவர்கள் எப்படித்  தாண்டுகிறார்கள் என்பதில்தான் வித்தையிருக்கிறது.

எண்ணிய சிந்தனையை வெளிப்படுத்தும்போது உரிய படிமத்தையோ உரிய குறியீட்டையோ கொள்ளவில்லையெனில்,  சிந்தனை மாறுபட்டுவிடும். சிந்தனையையும் சொல்லவேண்டும். அதே சமயம், அது ஒரே மாதிரியும் இருக்கக்கூடாது.ஒரு சில ஆண்டுகள் தீவிரமாக இயங்கிவிட்டு, பின் கவிதைகளே எழுதாமல் பலர் போவதற்கான காரணம் இதுதான்.  ‘சொல் புதிது, பொருள் புதிது...’ என்று பாரதி சும்மா சொல்லவில்லை. எதைச் சொன்னாலும் புதிது தேவை. புதிது  இருந்தால்தான் கவனிக்கப்படும்.

‘அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’ என்னும் தலைப்பில் 1982ல் வெளிவந்த தமிழன்பனின் கவிதை நூலுக்குக்  கிடைத்த வரவேற்பு, தமிழ்க் கவிதைகளின் சொல்நெறியையே மாற்றியது.நா.காமராசனின் ‘கருப்பு மலர்கள்’,  மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’, மீராவின் ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ ஆகிய நூல்கள்  புதுக்கவிதைகள் மீது தமிழறிஞர்கள் கொண்டிருந்த தயக்கத்தை உடைத்தெறிந்தன.

“வாழும் மனிதனுக்குக் குடிசையில்லை / மாண்டு போனவர்க்கு மண்டபங்கள்...” என்பது உரைநடையை உடைத்துப்  போட்டதுபோலத் தோன்றலாம். ஆனால், அப்படியொரு மொழியமைப்புக்குள் கவிதையைக் கொண்டுவர நெடுங்காலம் பிடித்தது.இலக்கணச் சட்டகத்திற்குள்ளேயே இயங்கிவந்த தமிழ்க் கவிதை மரபை, அவ்வளவு எளிதாக உதற  முடியாத சூழலே வெகுகாலம்வரை நிலவியது. எதுகையும் மோனையும் இல்லாமல் எழுதுவது கவிதையில்லை என்று  சொல்லக்கூடியவர்களிடம்தான் அன்றைய இலக்கியத் தராசுகள் இருந்தன.

புதுக்கவிதைகள் என்றால் தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்றும் இலக்கணம் தெரியாதவர்கள் எழுதும் தளர்ந்த கவிதைகள்  என்றும் புரிந்து வைத்திருந்த இலக்கிய உலகுக்கு, தமிழன்பன் போன்றோர் புதுக்கவிதை எழுத வந்தபிறகே, எது கவிதை  என்னும் தெளிவு ஏற்பட்டது.இன்றைக்கு வேண்டுமானால், நவீன கவிஞர்களாக தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள், புதுக்கவிதைகளைக்  கிண்டலடிக்கலாம். வார்த்தைகளை மடக்கிப்போட்டால் கவிதையா? எனக் கேட்கலாம். வெற்றுக் கூச்சலும் பிரச்சார நெடியுமா கவிதை என்று விமர்சிக்கலாம்.

ஆனால், ஆரம்பகாலங்களில் புதுக்கவிதை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெரும்பாடுபட்டிருக்கிறது. பாரதிதாசனின்  சீடராகத் தன்னை அறிவித்துக்கொண்ட தமிழன்பன், புதுக்கவிதையின் சகல தன்மைகளையும் உள்வாங்கி  வெளிப்படுத்தியவிதம் மேலோட்டமானதில்லை. எல்லோரும் புதுக்கவிதைக்கு வந்துவிட்டார்கள். அதனால், நானும்  வருகிறேன் என்று அவர் புதுக்கவிதையை எழுதவில்லை. புதுக்கவிதையை ஏற்பதற்கு முன், உலகக் கவிதைகளின், கவிஞர்களின் போக்கையும் உற்றுணர்ந்தே எழுத வந்திருக்கிறார்.

மரபுக்கவிதை, புதுக்கவிதை என்பதோடு நின்றுகொண்டிருந்த தமிழுக்கு, ஹைக்கூவையும் சென்ரியூவையும்  கொண்டுவந்ததில் அவருடைய பங்கும் இருக்கிறது. கவிக்கோ அப்துல்ரகுமான், ஹைக்கூவை கலையழகுடன்  அறிமுகப்படுத்தினார் எனில், அதை சமூக நோக்குடன் எழுதலாமென எழுதிக்காட்டி ஆச்சர்யப்படுத்தியவர் தமிழன்பன்.“கோடித்துணியை / வெட்டியான் உருவியதும் / குப்புறத் திரும்பிக்கொண்டது பிணம்...” எனவும், “ஆகாயமும் அழகு /  பூமியும் அழகு / ஆம் என் கையில் ரொட்டித்துண்டு...” எனவும் அவர் எழுதும்வரை ஹைக்கூவில் இப்படியும்  சிந்திக்கலாம் என்பதை தமிழ்க் கவிதையுலகம் அறிந்திருக்கவில்லை.

ஹைக்கூவின் இலக்கணத்திற்கு ஏற்ப மேற்கூறியவை இருக்கின்றனவா என்பதைத் தாண்டி, ஹைக்கூவைத்  தமிழ்ப்படுத்தியவர் அவரே. ஒருவரியில் ‘ஆத்திச்சூடி’, இருவரியில் ‘திருக்குறள்’, மூன்றுவரியில் ‘பழமொழிகள்’,  நான்குவரியில் ‘நாலடியார்’, ஐந்து வரியில் ‘ஐங்குறுநூறு’ என வரிகளைக் கணக்கிட்டு எழுதிப்பார்த்த சமூகம்  நம்முடையது. அப்படியிருந்தும், ஜப்பானிய ஹைக்கூவை வரவேற்கவே செய்திருக்கிறோம். எழுத்துருக்களைச்  சீர்திருத்தியது போலவே கவிதைகளின் வடிவங்களையும் சீர்திருத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறோம்.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in/

Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

யுகபாரதி-70

ஜப்பானியர்களின் நில, உள தன்மைக்கேற்ப இருந்த ஹைக்கூ வடிவத்தை தமிழ்ப்படுத்தியதில் தமிழன்பன் வெளிப்படுகிறார். ஒன்றை அப்படியே  ஏற்பது வேறு. அதை நமக்கேற்ப மாற்றி, பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது வேறு. ஹைக்கூவைப் போலவே ஜப்பானியர்களின் இன்னொரு கவிதை  வடிவமான சென்ரியூவையும் தமிழன்பனே முதல் முதலாக தமிழில் எழுதிக்காட்டியவர். இயற்கையிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிப் படிமங்களை  மெய்யியல் உணர்வோடு வெளிப்படுத்தும் குறுங்கவிதைகளே ‘சென்ரியூ’. சமூகம் குறித்தும் அரசியல் குறித்தும் அங்கத, நகைச்சுவை உணர்வுடன்  வெளிப்படும் சென்ரியூவில் ஹைக்கூவின் அடர்த்தியைப் பார்க்கமுடியாது.
2.jpg
ஹைக்கூவைவிட சென்ரியூக்கள் செறிவு குறைவானவை. ஒரு தேநீர்க்கடையிலும் மதுபானக்கூடத்திலும் எளிய மனிதர்கள், தமக்குத் தாமே  களிப்பூட்டிக்கொள்ளும் முறையில் சொல்லப்படும் சென்ரியூக்களில் அர்த்தத்தையும் கவித்துவத்தையும் எதிர்பார்க்க இயலாதுதான். என்றாலும்,  எவ்வடிவையும் தமிழுக்குக் கொண்டுவரும் ஆர்வத்துடன் தமிழன்பன் இயங்கியிருக்கிறார். முக்கிய கவிஞர் அறைகூவலாக முதல் வரியை  கேள்விபோல முன் வைக்க, பின்வருபவர்கள் அவ்வரிகளை நிறைவு செய்வதே சென்ரியூக்களின் சிறப்பு. மிகுதியும் உரையாடல் தொனியில்  அமையப்பெறும் சென்ரியூவின் இறுதி வாக்கியம், ஒரு சிரிப்பை வரவழைக்கவேண்டும் என்பது விதி.
2a.jpg
இந்த விதியைப் பின்பற்றி, “பக்தர்களிடம் / கடவுள் கேட்ட வரம் / அரசியலுக்கு இழுக்காதீர்கள்...” என்பதாக தமிழன்பன் ‘ஒரு வண்டி நிறைய  சென்ரியூ’ என்னும் நூலில் எழுதியிருக்கிறார். நடப்புச் சூழலை உள்வாங்கி எந்த வடிவத்திலும் கவிதை செய்யும் மொழித்திறம் அவருக்குண்டு. ‘‘மொழி  வளம் இருக்கிறது என்பதற்காக எதைக் கவிதையாக எழுதுவது என்பதில் தேர்வுநிலை இல்லாமல் செயல்படுவதாக...’’ தமிழன்பன் கவிதைகளை  மதிப்பீடு செய்த க.பஞ்சாங்கம் குறைப்பட்டிருக்கிறார். அவரே இன்னொரு இடத்தில், ‘‘தொடர்ந்து எழுதுவதன்மூலம் கவிதையின் தரத்தையும்  தேடலையும் காப்பாற்றி வருவதால் தமிழன்பன் இந்த நூற்றாண்டின் கவிஞன்...’’ என்பதை நிரூபித்திருப்பதாகவும் வியந்திருக்கிறார்.

கடவுளையும் மதத்தையும் இணைத்து அரசியல் செய்யும்போக்கிற்கு எதிரான கவிதைகளைத் தமிழில் அதிகமும் எழுதியவர் தமிழன்பன். ஆன்மிக  அரசியல் போன்ற பதங்கள் கவனத்துக்கும் விவாதத்திற்கும் வந்திருக்கும் இச்சூழலில் நவீன சென்ரியூக்கள் பிறக்கக்கூடும். ஈரோட்டை அடுத்த சென்னி  மலையில் பிறந்த ஜெகதீசன், தமிழன்பன் ஆனதும் பாரதிதாசனுடன் கொண்ட பற்றினால் கவிதைக்குள் வந்ததும் அறியக்கூடியது. ஆனால், இதுவரை  அறுபதுக்கும் மேலான நூல்களை எழுதியிருக்கிறார் என்னும் தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்? ‘வணக்கம் வள்ளுவ’ என்ற கவிதை நூலுக்கு  ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றிருக்கிறார்.

காட்சி ஊடகங்கள் பரவலாகாத எண்பதுகளில், சென்னைத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும் பதினாறு ஆண்டுகள் இருந்திருக்கிறார்.  செய்திகள் முடிவடைந்தன என்பதை மாற்றி, ‘செய்திகள் நிறைவடைந்தன’ எனச் சொல்லும் வழக்கத்தை அவரே ஏற்படுத்தினார். முடிவுக்கும்  நிறைவுக்கும் உள்ள வித்யாசத்தை ஊடகங்களுக்குக் கற்பித்த அவர், புதுக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராகவும் பணி புரிந்திருக்கிறார். கவிஞர்  இன்குலாப்புடன் அணுக்கமும் இணக்கமும் காட்டிய தமிழன்பன், திராவிடக் கருத்தியலை வரித்துக்கொண்டவர். ஆயினும், சர்வதேச பார்வையுடைய  கவிஞரென்றே அறியப்பட்டிருக்கிறார். 1990ம் ஆண்டு பிப்ரவரி 25ல் சென்னை பெரியார் திடலில் தமிழ்த்தேச தன்னுரிமை மாநாடு நடந்தது.

அம்மாநாட்டிற்குத் தஞ்சையிலிருந்து கிளம்பிய பேருந்தில் அப்பாவுடன் தொற்றிக்கொண்ட எனக்கு, செய்தி வாசிக்கும் ஒருவர் கவிதை வாசிக்கப்  போகிறார் என்னும் செய்தியே மகிழ்வூட்டியது. தமிழன்பனும் அண்ணன் அறிவுமதியும் அம்மாநாட்டில் கவிதை வாசித்தார்கள். அரங்க  கவிதையென்றால் எப்படி அமைய வேண்டும் என்பதை அப்போதுதான் அறிந்துகொண்டேன். வெறும் கைத்தட்டலுக்காக கவிதைகளை வாசிக்காமல்,  அவர்கள் இருவரும் கருத்துச் செறிவுடன் அரசியல் கவிதையை எழுதியிருந்தார்கள். மாநிலங்களுக்கான சுயாட்சியை மறுக்கும் மத்திய அரசு குறித்து  கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவர்களுடைய கவிதைகள் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கின.

அப்போது ரஷ்ய ஒன்றியத்திலிருந்து அஜர்பைஜான் பிரிந்த நேரம். அதை மையமாக வைத்து “அஜர்பைஜான் நெருப்பு / அசோகச் சக்கரத்தை  விசாரிக்கும்...” என்பதாக தமிழன்பன் கவிதை எழுதியிருந்தார். நடந்தது என்ன தெரியுமா? அஜர்பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தை விசாரித்ததோ  இல்லையோ, இப்படியொரு கவிதையை வாசித்த தமிழன்பன், காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். விசாரணை முடிவில், மத்திய அரசின்  கட்டுப்பாட்டிலுள்ள தொலைக்காட்சியில் செய்திவாசிக்கும் ஒருவர், மத்திய அரசையே அச்சுறுத்தும் விதமாக கவிதை வாசிப்பதா? என்று செய்தி  வாசிக்கும் பணியிலிருந்து தமிழன்பன் விடுவிக்கப்பட்டார்.

உச்சரிப்பு சுத்தத்துடன் செய்தி வாசித்த ஒருவர், உண்மையை வாசித்ததற்காக விலக்கப்பட்ட விநோதக் கதை இதுதான். இக் கைங்கர்யத்திற்கு  திரைக்கதையை எழுதியதில் ‘துக்ளக்’ சோவின் பங்கு முக்கியமானது. திராவிட இயக்கச் சார்புடைய தமிழன்பன், கவியரங்க மேடைகளைப்  புதுக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர். ‘Oral Poetry’ என்னும் வகைப்பாட்டை மிகத் துல்லியமாக விளங்கிக்கொண்டு, அதற்கேற்ப பல முன்மாதிரிக்  கவிதைகளைத் தந்திருக்கிறார். ‘வார்த்தைகள் கேட்ட வரம்’ என்னும் தலைப்பில் தமிழன்பனின் கவியரங்கக் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  அரங்கத்தின் மனநிலையை உணர்ந்து கவிதைகளை எழுதக்கூடிய தமிழன்பன், ஓரிரு திரைப்படங்களுக்குப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

பாலச்சந்தரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’யிலும், ஹரிகரனின் ‘ஏழாவது மனிதனி’லும் அவருடைய இசைப் பாட்டுகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து  திரைப்பாடல் எழுதுவதில் விருப்பம் இல்லை என்று வெளிப்படுத்திய பிறகும்கூட அவரைத் திரைப்பாடல் எழுதவைக்க பலரும் முயன்றிருக்கிறார்கள்.  தன்னை ஸ்தாபித்துக் கொள்வதில் பிரியமில்லாத அவர், திரை வெளிச்சத்திலிருந்தும் விலகி இருக்கவே விரும்பியிருக்கிறார். பல ஆண்டுகள்  பாரதிதாசனுடன் பழகியிருப்பதால், திரைத்துறை நல்ல கவிஞர்களை என்ன பாடு படுத்தும் என்பதைக் கேட்டறிந்திருப்பாரோ என்னவோ. இப்போதும்  அவர் என்னுடன் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் கவிதைகளை விட்டுவிடாதீர்கள் என்பதைச் சொல்லாமல் உரையாடலை முடிப்பதில்லை.

மேடையில் அவர் வாசித்த கவிதை கேட்டு எழுதவந்த நான், அவருடைய தலைமையில் பல கவியரங்குகளில் பங்கு கொண்டிருக்கிறேன். அரங்கத்தை தயார் செய்து, இளம் கவிஞர்களை அறிமுகப்படுத்துவதில் அவருக்கிருக்கும் ஆர்வத்தை அளவிட வழியில்லை. அடுத்த தலைமுறையிடம்  காலத்தையும் கவிதைகளையும் ஒப்படைக்க அவர் இன்னமும் உழைத்துவருகிறார். இப்போது எழுதிவரும் பல இளம் கவிஞர்களின் படைப்புகள்  குறித்து நேர்ப்பேச்சில் என்னிடம் தெரிவித்திருக்கிறார். எதார்த்த நிலையிலிருந்து அரசியலை எப்படி அணுக வேண்டும் என்பதையும் உலகின் பல  பகுதிகளில் நிலவிவரும் கவிதைக் கோட்பாடுகளையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

எது கவிதை என்பதைத் தெளிந்துகொள்ள அவர் எழுதிய ‘சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்’ எனும் கட்டுரை நூல் முதன்மையானது. அக்காலத்தில்  விரிந்த இலக்கியப் பார்வையுடன் வெளிவந்த ஒரே நூல் அதுவே. நீண்ட வாசிப்பின் பின்புலத்திலிருந்து, உலகக் கவிஞர்களை அந்நூலில் படம்  பிடித்திருப்பார். மொழிபெயர்ப்பின் வழியே நல்ல கவிதைகளையும் அந்நூலில் பகிர்ந்திருக்கிறார். ஆங்கிலப் புலமை அல்லாத ஒருவர், உலகக்  கவிதைகளை உணர்ந்துகொள்ள ஏற்றவகையில் எழுதப்பட்ட அந்நூல், இளம் கவிஞர்களை எளிதாக ஈர்த்துவிடக்கூடியது. வால்ட் விட்மன் முதல்  செங்கோர் வரையுள்ள பதினெட்டு கவிஞர்கள் குறித்த அறிமுகத்தை வழங்கிய அந்நூலைப் பின்பற்றி பல நூல்கள் வந்துவிட்டன.

ஆயினும்கூட, அவருடைய மொழிபெயர்ப்புக்கும் தகவல் திரட்டலுக்கும் பக்கத்தில் கூட பிந்தைய நூல்கள் வரவில்லை என்பது என் எண்ணம்.  தமிழன்பன், பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயத்திற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் நவீன இலக்கியத்தையும் பயின்றுவருபவர். யாப்பு மரபை  விடுவித்துக்கொண்ட தமிழ், ஷேக்ஸ்பியரிடமிருந்து ‘சானட்’ என்னும் வகையை எடுத்துக்கொண்டது. பரிதிமாற்கலைஞர் போன்றவர்கள் அவ்வகையைப்  பின்பற்றி எழுதியதாக தகவல் இருக்கிறது. அதேபோல, ‘லிமிரிக்’ என்றழைக்கப்படும் ஆங்கில கவிதை வடிவத்தை ஐந்து வரிகளில் இலங்கையைச்  சேர்ந்த மஹாகவியும், தமிழகத்தைச் சேர்ந்த கோவேந்தனும் முயன்றிருக்கிறார்கள்.

ஹைக்கூவையும் லிமிரிக்கையும் இணைத்து ‘லிமிரைக்கூ’ என்னும் புதிய வடிவத்தை தமிழன்பன் உருவாக்கியிருக்கிறார். ஹைக்கூவில் பயின்றுவரும்  மூன்று வரிகளைக் கணக்கிட்டுக்கொண்டு, லிமிரிக்கில் பயின்றுவரும் இயைபுத்தொடையையும் இணைத்து லிமிரைக்கூவை அவர்  எழுதிக்காட்டியிருக்கிறார். “பறவையோடு சேர்ந்து பற/சிறகுகள் தேவையில்லை/ மனிதன் என்பதை நீ மற...” பற, மற என்பதே இயைபுத்தொடையின்  அழகு. ‘சென்னிமலை கிளியோபாத்ராக்கள்’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள தொகுப்பில் அதிகமான லிமிரைக்கூக்கள் இடம்பெற்றுள்ளன.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in/

  • 2 weeks later...
Posted

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி-71

சிலவகைப் பொருட்களை இன்னின்ன யாப்பில்தான் பாடவேண்டும் என்கிற மரபு நம்மிடமுண்டு. கட்டளைக் கலித்துறை போன்று வார்த்தைகளைக்  கணக்கிட்டு எழுதும் வழக்கத்தைக் கொண்டவர்களே நாம். ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று வகைக்குஒன்றை வடிவமைத்து, அதற்கான  இலக்கணத்தையும் வரையறுத்திருக்கிறோம். ஆனால், இன்று அதையெல்லாம் விட்டுவிட்டு, எளிய வகையில் எழுதும் சூழலைப் புதுக்கவிதைகள்  உருவாக்கியுள்ளன. எழுதுகிறவனுக்குக் கடினம் என்பதைவிட, வாசிப்பவனுக்குக் கடினமில்லாமல் இருக்க வேண்டும் என்னும் கருத்து முந்திவிட்டது.
ஏற்கனவே ‘குறும்பா’ என்னும் வடிவம் நம்மிடம் இருந்ததுதான்.
10.jpg
என்றாலும், அதை குறும்பா என்று காசி ஆனந்தன் போன்றோர் குறிப்பிடுவதில்லை. ‘நறுக்குகள்’, ‘பொழிச்சல்கள்’ என்று புதுப்பெயரில் அழைக்கிறார்கள்.  ஹைக்கூ, சென்ரியூ, லிமிரைக்கூ என்று பலவிதமான வடிவங்களில் எழுதினாலும் அவையெல்லாம் கவிதையென்னும் வகைக்குள் வருகிறதா?  என்பதுதான் கேள்வியே. எது கவிதை என்பதிலிருந்து, எதுவும் கவிதை என்னும் நிலைக்கு வந்திருக்கிறோம். வரலாற்றுப் போக்கில் நாம்  இவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருப்பது தவிர்க்க முடியாததே. சமூக வலைத்தளங்களின் பெருக்கத்திற்குப் பிறகு, இன்னும் புதுப்புது வடிவங்களைத்  தமிழ்க்கவிதைகள் தரித்துக்கொள்ளக்கூடும்.

பாப்லோ நெருடாவின் ‘The Book of Questions’ஐ அடிப்படையாகக் கொண்டு, தமிழன்பன் எழுதியுள்ள ‘கனா காணும் வினாக்கள்’ என்னும் நூல்  கவனத்துக்குரியது. முழுக்க முழுக்க கேள்விகளாலேயே அமைந்த நூல் அது. கேள்விகளின் வழியே கவித்துவ தருணங்களை உருவாக்கி,  அக்கேள்விகளுக்கான பதிலை மெய்யியலில் முன்வைத்திருக்கிறார். “நாணய ஓசையில் / நனைந்துகொண்டிருப்பவனுக்கு / ஈர மழையிடம் / என்ன  செய்தி இருக்கும்..?” எனவும், “பருத்தி பூப்பதற்கு முன் / சூரியனின் ஒரு யோசனையாக / இருந்திருக்குமோ..?” எனவும் அவர் எழுப்பியிருக்கும்  கேள்விகள் சுவாரஸ்யமானவை.

கடவுள், சாதி, மதம் ஆகியவற்றை மறுக்கக் கூடியவராக இருந்தும்கூட, ஒரு கவிஞனாக மெய்யியலிலிருந்து அவரால் விடுபடமுடியல்லை. கடவுள்  என்கிற கருத்தாக்கம் முதலில் அற இயலுக்கும் அதன் பிறகு ஆன்மிகத்திற்கும் இட்டுச்செல்லும். ஆன்மிகத்தை அடைந்தவுடன் கடவுள் சிந்தனை  எத்தகைய விளைவைத் தரும் என்பது விவாதத்துக்குரியது. உலகக் கவிஞர்கள் பலரும் கடவுளை மறுத்திருக்கிறார்கள். ஆனாலும், மெய்யியலை  அவர்கள் தொடாமல் இல்லை. தமிழன்பனும் மெய்யியல் கவிதைகளை எழுதியிருக்கிறார். ‘ஜென்’ மெய்யியலை சமதர்மத்தின் குறியீடாகக்  கண்டிருக்கிறார்.

மகேந்திரநாத் குப்தா எழுதிய ‘எம்’ என்ற தலைப்பிலான இராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாற்று நூலை தன்னைக் கவர்ந்த நூல்களில் ஒன்றாகத்  தெரிவித்திருக்கிறார். ‘‘தான் என்பதைக் கடந்த ஆன்மிகவாதிகள்மீது தனக்கு அபிமானம் உண்டு...’’ என்று கூறும் அவர், கடவுள் என்னும்  கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டவரல்ல. ஆன்மிகம் வேறு, கடவுள் வேறு என்பதன் பின்னணியில்தான் அவருடைய மெய்யியல் கவிதைகள்  எழுதப்பட்டுள்ளன. ஆன்மிகவாதியான தன் உடன் பிறந்த அண்ணன் தங்க வேலுவின் மறைவை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள ‘தத்துபித்துவம்’ என்னும்  நூல் அதற்கான சாட்சியைப் பகிர்கிறது.

‘‘ஒரு சித்தரைப்போல தத்துவ தரிசனம் பெற்றிருந்த அண்ணனுக்காக தமிழன்பன் எழுதிய ‘தத்துபித்துவம்’, வாழ்வியல் அனுபவங்களையும் வாழ்வியல்  தேடல்களையும் குறிக்கோளாகக் கொண்ட பயணம்...” என்பதாக கலாநிதி நா.சுப்ரமணியன் ஆய்வுரை வழங்கியிருக்கிறார். மூடநம்பிக்கைகளின்  பாற்படாத ஓர் ஆன்மிகவாதியாக இருந்த அண்ணன், சித்து முயற்சிகள், விவாதங்களில் ஈடுபட்டதை அந்நூலில் நினைவுகூர்ந்துள்ள தமிழன்பன்,  ‘போகர் ஏழாயிரம்’ என்னும் நூல், அண்ணனின் சாய்வு நாற்காலிக்கு அருகே இருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். முன்முடிவுகள் எதுவும் இல்லாமல்  ஒன்றை அணுகி, அதன்மூலம் கிடைக்கும் அனுபவங்களைக் கவிதையாக்குவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.

தமிழ் இலக்கியக் கல்வி புலத்திலிருந்து படைப்பாளிகளாக வருபவர்களிடம் ஒருவிதமான பண்டிதத்துவம் வெளிப்படுவதுண்டு. எதார்த்த நிலையில்  படைப்புகளை எதிர்கொள்ளாத அவர்களின் எழுத்துகளில் இலக்கணச் சுத்தமிருந்தாலும், இலக்கிய அனுபவமென்பது சற்று குறைந்தே காணப்படும்.  அந்தக் குறைகளைக் களைந்த ஒருவராகத் தமிழன்பனைக் கருதலாம். பாரதிதாசனின் தமிழியக்க சிந்தனைகளை உள்வாங்கியபோதிலும் கூட,  தமிழையும் இலக்கியத்தையும் மொழி கடந்த அனுபவங்களாக மாற்றுவதிலேயே அவர் குறியாய் இருந்திருக்கிறார்; இருந்து வருகிறார். ‘பாரதிதாசனுடன்  பத்து ஆண்டுகள்’ எனும் நூலில், பாரதிதாசனுக்கும் தனக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களை, சம்பவங்களை விவரித்திருக்கிறார்.
10a.jpg
தன்னுடன் பயின்ற பள்ளித் தோழர் மணியின் வேண்டுகோளுக்கு இணங்க, ‘நெஞ்சில் நிழல்’ என்னும் நாவலை எழுதியதாக அந்நூலில்  குறிப்பிட்டிருக்கிறார். ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம் வெளிவந்திருந்த சமயத்தில், அதன் பாதிப்பில் எழுதப்பட்ட அந்நாவல் மூலம் திரைத்துறைக்குள்  நுழையலாம் எனும் திட்டமும் அவருக்கு இருந்திருக்கிறது. கவிஞராக அறியப்பட்டுள்ள தமிழன்பன் முதலில் எழுதியது நாவலே என்பது பலர் அறிந்த  தகவல். காண்டேகரையும், மு.வரதராசனையும் வாசித்திருந்த உத்வேகம், நாவல் முயற்சிக்கு அவரை இட்டுச் சென்றிருக்கிறது.

திரைத்துறைமீது தனக்குப் பெரிய ஆவலோ ஆசையோ இல்லை என்றபோதிலும், நண்பனின் விருப்பத்திற்காக எழுதப்பட்ட அந்நாவலை பாரதிதாசன்  பாராட்டியிருக்கிறார். கையெழுத்துப் பிரதியாயிருந்த அந்நாவலை வாசித்துவிட்டு, அதை அச்சாக்க வேண்டுமென விரும்பி, ‘பாரி’ நிலையத்தாரிடம்  தமிழன்பனை நேரில் அழைத்துப்போய் பாரதிதாசனே பரிந்துரையும் செய்திருக்கிறார். அந்தச் சந்திப்பில், “லட்ச ரூபாயை பரிசுத் தொகையாகக் கொண்ட  ‘ஞானபீடம்’ தங்களுக்குக் கிடைக்க இருக்கிறது...” என்னும் தகவலை, பாரி நிலையத்தார் பாரதிதாசனிடம் பகிர்ந்திருக்கிறார்கள்.

அதுகுறித்து பெரிதாக உணர்ச்சியை வெளிப்படுத்தாத பாரதிதாசன், “ஒருவேளை அவர்கள் சொல்வதுபோல லட்ச ரூபாய் பரிசாகக் கிடைத்தால், உடனே  ஒரு அச்சு எந்திரம் வாங்கி, இந்நாவலை நாமே அச்சிட்டுவிடலாம்...” எனத் தெரிவித்திருக்கிறார். இளம் படைப்பாளர்களை வளர்த்தெடுப்பதில்  பாரதிதாசனுக்கு இருந்த ஆர்வத்தை இதன்மூலம் அறியலாம். அதே நேரத்தில், பாரதிதாசனின் இதயத்தை ஈர்க்கும் அளவுக்கு தமிழன்பனின் நாவலும்  இருந்திருக்கிறது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். ‘ஞான பீட’ விருதுக்கான பரிந்துரைக் குழுவில் இப்போது போலவே அப்போதும் அரசியல்  விளையாடி இருக்கிறது.

விருதுகள் யாருக்குத் தரப்படவேண்டும் என்பதைவிட, யாருக்குத் தந்துவிடக்கூடாது என்பதில்தான் பரிந்துரைக் குழுக்கள் கவனம் கொள்கின்றன.  குழுவில் நடுவர்களாக தொ.பொ.மீ, பெரியசாமித் தூரன், சா.கணேசன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். மூவருமே பாரதிதாசனை முன்மொழிந்தும்,  அவ்வாண்டு அவ்விருதை மலையாளக் கவி சங்கர குரூப் பெற்றிருக்கிறார். பாரதிதாசனை முன்மொழிந்த  மூவரும்  இராஜாஜியை இது சம்பந்தமாக  சந்தித்தபோது, “நாமக்கல் கவிஞரை பரிந்துரை செய்திருக்கலாமே...” எனச் சொல்லியிருக்கிறார். “பாரதிதாசன் மலைபோல் உயர்ந்து நிற்கிறார்.

அவரைப் புறக்கணித்துவிட்டு வேறு எவரையும் எங்களால் பரிசுக்கு உரியவராகப் பரிந்துரைக்க முடியவில்லை...” என்று மூவரும்  பதிலளித்திருக்கிறார்கள். நாமக்கல் கவிஞரைப் பரிந்துரை செய்திருக்கலாமே என்று இராஜாஜி சொன்னது, அவருடைய விருப்பமே தவிர,  கட்டளையில்லை. காந்தீயக் கவிஞராகவும் தேசீயக் கவிஞராகவும் அடையாளப்பட்டிருந்த நாமக்கல் கவிஞரை நினைவூட்டியதால், பாரதிதாசன்மீது  இராஜாஜிக்கு மதிப்போ மரியாதையோ இல்லையென்று சொல்வதற்கில்லை. இதுகுறித்து தமிழன்பன் பல மேடைகளில் விளக்கியிருக்கிறார்.

என்றாலும், தமிழன்பனின் கூற்றில் இராஜாஜிமீது தவறான எண்ணம் ஏற்பட்டுவிடுமோ? என்னும் ஐயத்தை கவிஞர் முருகுசுந்தரம் கிளப்பியிருக்கிறார்.  உடனே நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த சா.கணேசனிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதுவிஷயமாக சா.கணேசன், முருகுசுந்தரத்திற்கு எழுதிய  கடிதத்தில், “இராஜாஜி எவ்விதத்திலும் முடிவில் தலையிடவில்லை. பரிந்துரையைப் பற்றி நாங்கள் கூறியதைக் கேட்ட இராஜாஜி, முடிவு  சரியானதே...” என்று சொன்னதாக அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.  மேலும், “கொள்கைக் கோலை வைத்து கவிதையை அளக்காத எங்கள் முடிவே  நன்றென்று...” இராஜாஜி சொன்னதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in/

Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

யுகபாரதி- 72

ஈரோட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சா.கணேசன் பேசியதைக் கொண்டே தமிழன்பன், ‘பாரதிதாசனுக்கு ஏன் ஞானபீடம் வழங்கப்படவில்லை’  என்னும் கட்டுரையை எழுதினார். என்றாலும், மேடையில் பேசிய சா.கணேசன், திராவிட இயக்கத்தவர்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே  இதுவொரு பிரச்சனையாகி விடுமோ... என்றெண்ணி பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்.
3.jpg
அரசியல் இல்லாமல் எழுத்தில்லை. எழுத்துகளில் உள்ள அரசியலைக் காட்டிலும், எழுத்தாளர்கள், கவிஞர்கள் நேரடி அரசியலை எதிர்கொள்ளும்  சிக்கல் இருக்கிறதே, அதுதான் ஒருவருக்கு விருதையும் இன்னொருவருக்கு ஆதங்கத்தையும் தருகிறது. நடந்த நிகழ்வுகளை எழுதும்போதுகூட  நாகரீகத்தைக் கடைப்பிடிக்கும் தமிழன்பனை அந்நூலில் அறியலாம். சா.கணேசன் கருத்தை மாற்றிக்கொண்டார் என்பதைச் சொல்லும்போது, “சமூகச்  சூழல்களை அறிபவர்கள் எளிதாக இதைப் புரிந்துகொள்ளலாம்...” எனத் தாண்டியிருக்கிறார். பாரதிதாசனுக்கு ‘ஞானபீடம்’ வழங்கப்படாமல் போனதற்கு  இராஜாஜியே காரணம் என்று அவர் எங்கேயும் எழுதவில்லை.

காங்கிரஸை திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திராவிட இயக்கத்தை காங்கிரஸைச் சார்ந்தவர்களும் எவ்விதத்தில் எதிர்கொண்டனர் என்பதை  இரண்டே வாக்கியத்தில் முடித்திருப்பார். கொள்கைக்கோலை வைத்தே இலக்கியங்கள் அளக்கப்படுகின்றன. இல்லையென்று ஒப்புக்குத்  தெரிவித்தாலும், ‘சாகித்ய அகாடமி’ விருது விஷயத்தில் தமிழன்பனுக்கும் அதுவே நடந்தது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்திற்கு  அதீத பங்களிப்பு செய்திருக்கும் அவருடைய ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் நூலுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது அறிவிக்கப்பட்டது.

விருது அறிவிக்கப்பட்ட உடனேயே ‘சோ கால்டு’ விமர்சனக் கும்பல்கள், காழ்ப்புணர்வுடன் கருத்துகளை தத்தமது சிற்றிதழ்களில் வெளியிட்டன.  மாற்றுக்கருத்துகளை மட்டையடியாகத் தருவதில் அப்படி என்னதான் சிற்றிதழ் சிகாமணிகளுக்கு விருப்பமோ தெரியவில்லை. பாரதியின் கவிதைப்  போக்கிற்கு மாற்றாக எழுதத் தொடங்கிய அவர்கள், ஒரு கட்டத்தில் பாரதியே ஆகச் சிறந்த கவியென்று ஒப்புக்கொண்டார்கள். சமூக அரசியல்  கருத்தாக்கங்களை எழுதுபவர்கள், படைப்பாளர்களே இல்லை என்னும் போக்கு, தற்போது தமிழில் குறைந்திருக்கிறது.

அல்லது குறைந்தது போன்ற தோற்றம் தெரிகிறது. சமூக ஊடகங்களின் வளர்ச்சியினால் சிற்றிதழ்களுக்கு மவுசு குறைந்திருப்பது  வரவேற்கத்தக்கதல்ல. தமிழன்பனுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தவுடன், அவரையும் அவருடைய ‘வணக்கம் வள்ளுவ’ நூலையும்  வாசித்தறியாத பலபேருடைய வயிற்றெரிச்சலை நானறிவேன். தமிழின் தொடர்ச்சியை இடையறாமல் காப்பாற்றிவரும் அவருக்கு நவீனமாக சிந்திக்கத்  தெரியவில்லை என்பது அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று. வள்ளுவரை எழுதினால் நவீனமில்லை என்பதுதான் அவர்கள் கண்டுபிடித்த  புதுமை. வடிவங்களிலும் இலக்கிய வகைமைகளிலும் பல புதுமைகளை உருவாக்க அவர் உழைத்திருக்கிறார்.

திராவிட இயக்கச் சார்பை  ஆரம்ப நாளில் இருந்தே கொண்டுள்ள அவர், தமிழ்ச் சமூகத்தின் நில மற்றும் குண வரையறைகளை நன்கு உணர்ந்தவர்.  சங்க காலம் தொட்டு இன்று வரை மருவிவரும் கவிதைப் போக்குகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்தும் வந்திருக்கிறார். இருந்தபோதிலும்,  எழுதியுள்ள எத்தனையோ நூல்களில் ஒன்றைக்கூட படிக்காத அவர்கள், விருதோடு அவரையும் விமர்சித்தது வியப்பில்லை. அவர்கள் எழுப்பிய  கேள்விகளில் ஒன்றுகூட நியாயமான கேள்வி இல்லை. பழமைக்கும் புதுமைக்குமான இணைப்புப் பாலமே அவரென்பதை அறியாத அவர்கள்,  அழுக்கேறும் கறைகளை அவர்மீது பூசினார்கள்.

ஒருவர் பேராசிரியராகவும், பொது வெளியில் அறியப்பட்டவராகவும் இருப்பதே விருது பெறுவதற்குரிய தகுதியின்மை என்று கருதினால், அதற்குமேல்  சொல்வதற்கு ஒன்றுமில்லை. ‘பாரதிதாசனுடன் பத்து ஆண்டுகள்’ என்னும் நூலில், பாரதியைத் திரைப்படமாக எடுக்க பாரதிதாசன் பட்ட பாடுகளைப்  பட்டியலிட்டிருக்கிறார். பல பேரிடம் நன்கொடை பெற்றேனும், பாரதியின் வாழ்வை திரைப்படமாக எடுத்துவிடும் ஆர்வம் பாரதிதாசனுக்கு  இருந்திருக்கிறது. பாரதிதாசனின் ஆர்வத்தை ஈடேற்ற தமிழன்பனும் பல பேரைச் சந்தித்து, அம்முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.  இரவு பகலாக பாரதி தாசன், பாரதி குறித்து எழுதிய திரையாக்கத்தின் அருமை பெருமைகளை அவர் சொல்லக் கேட்பது தனி அனுபவம்.

தமிழன்பனுக்கு பாரதிதாசன் எழுதிய கடிதங்களில், பெரியார் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தம் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  பெரியாரின் நிழலாக இருந்துவந்த பாரதிதாசன், ‘‘பெண் விடுதலையையும் சாதி மறுப்பையும் பாரதியிடமிருந்தே கற்றேன்...’’ எனத் தமிழன்பனிடமும்  தெரிவித்திருக்கிறார். பாரதி, பாரதிதாசன் என்னும் வரிசையில் அடுத்து வரக்கூடிய பெயர் தமிழன்பன் என்பதை அவரை முழுமையாக வாசிக்காதவர்கள்  ஏற்றுக்கொள்ளத் தயங்குவர். தமிழன்பனே ஒரு கூட்டத்தில், “பாரதிதாசனைத் தொடர்ந்து சுரதாவும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்  வருகிறார்கள்...” என்றிருக்கிறார்.

பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் என்பதாக ஒரு பட்டியலைத் தயாரித்து, அதற்குப் பின் யாரென்னும் சர்ச்சை இன்னொருபுறத்தில் ஓடிக்  கொண்டிருக்கிறது. “பாரதிக்குப் பிறகு தமிழ்க் கவிதை அவ்வளவாக வளர்ந்துவிடவில்லை என்று நான் கருதிக்கொண்டிருந்தேன். தமிழன்பனைப்  படித்தபிறகு என் கருத்தை மாற்றிக்கொண்டேன்...” என எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியிருக்கிறார். “பாரதிதாசனுக்குப் பிறகு தமிழ்ஒளியை அல்லவா  ஜெயகாந்தன் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லாமல், தமிழன்பனைச் சொல்லியிருக்கிறார் என்றால், அதிலே ஏதோ அரசியல் இருக்கிறது...” எனச்  சொல்கிறவர்களும் உண்டுதான்.
3a.jpg
தமிழ்ஒளியைத் தவிர்ப்பதற்காக தமிழன்பனைச் சொல்வதோ, தமிழன்பனைப் புகழ்வதால் தமிழ்ஒளி தவிர்க்கப்படுவார் என்பதோ குறுகிய வாதம்.  யாராலும் யாரும் தவிர்க்கப்படுவதில்லை. ஒருவர் மீது நமக்குள்ள பற்றை வெளிப்படுத்திக்கொள்ள இன்னொருவரைத் தவிர்க்கிறோம். அல்லது அந்த  இன்னொருவர் நம்முடைய யோசனைக்கே வராததால் இப்படி வெளிப்படுத்திவிடுகிறோம் எனவும் வைத்துக்கொள்ளலாம். தமிழன்பனைப்  பொறுத்தவரையில், தெளிந்த நீரோடையைப்போல் பயணித்துக்கொண்டிருப்பவர். விமர்சனக் கற்களால் சலனத்திற்கோ சஞ்சலத்திற்கோ உட்படாதவாறு,  ஒரு துறவு மனநிலையில் எழுதி வருபவர்.

அவருடைய ஆக்கங்களை ஆய்வுசெய்து பலபேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பரிசுகள், பாராட்டுகள், விருதுகள் என்பதைத் தாண்டிய  அவருடைய பாய்ச்சலில் அறுபது கவிதை நூல்கள், இருபத்தைந்து உரைநடை நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழுக்குக்  கிடைத்திருக்கின்றன. இத்தனை நூல்களிலிருந்தும் அவர் தனக்கான இடத்தைக் கோரிப் பெறக்கூடிய செயலில் ஈடுபட்டதே இல்லை. சிறிய  அளவிலான கூட்டத்தில் தன் நூலை வெளியிட்டுவிட்டு, அடுத்த நூலுக்கான ஆயத்தங்களில் ஈடுபடப்போய்விடுகிறார்.

ஓரிரு நூல்கள் வெளிவந்த உடனேயே, “தமிழுக்குச் சோறும் குழம்பும் தானே போடுகிறேன்...” என்று முஷ்டி உயர்த்தும் முழக்கங்களை சிலர்போல்  அவர் எழுப்பியதில்லை. தமிழன்பனே அசலான தமிழ் கஜல்களை எழுதிக் காட்டியவர். கஜலை தமிழுக்கு அறிமுகம் செய்த அப்துல்ரகுமான், அதன்  புறக்கட்டமைப்பைவிட அகப் பரிமாணத்தையே அதிகமும் கவனத்தில் எடுத்துக்கொண்டார். கஜலின் தன்மையை உணர்ந்துகொள்ள அப்துல்ரகுமான்  உதவினார் என்றால், அதை இலக்கண சுத்தத்துடன் எழுதிப்பழக தமிழன்பனே உதவியிருக்கிறார்.

“கஜலின் தொனி மாறுபடாமல், புறக்கட்டமைப்பையும் அகப்பரிமாணத்தையும் உருவாக்கிக் கொடுத்ததில் தமிழன்பனுக்குப் பெரும் பங்குண்டு...”  என்கிறார் ஏ.எஸ்.சஜ்ஜாத் புகாரி. பாரசீகக் கவிதை வடிவங்களே உருதுக் கவிதைகளுக்கு அடிப்படைகளாக அமைந்தன. கஜலின் மூலம்  பாரசீகமென்றாலும், அதை அரவணைத்துக்கொண்ட மொழியே உருது. கஜலில் மிக முக்கியமாகக் கருதப்படுவது, ‘காஃபியா’ என்னும் இயைபுத்  தொடையும் அதைத் தொடர்ந்துவரும் ‘ரதீஃப்’ எனும் சொற்றொடரோ அல்லது சொல்லோதான்.
 

(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்

http://kungumam.co.in

  • 2 weeks later...
Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

யுகபாரதி - 73

கஜல் என்றால் ‘மான்விழி’ என்று அர்த்தம். அதாவது, அழகை பிரதானப்படுத்துவதே கஜல். இயற்கையையும் காதலையும் பாடுவதே கஜலின் எல்லைகள். காதலி, கடவுள் என எதையெல்லாம் புனிதத்துவத்துடன் இணைக்க முடியுமோ அதையெல்லாம் கஜலில் பாடலாம்.
8.jpg
ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போய் இறுதியில் ஓர் உச்சத்தைத் தொடுவதே கஜலின் தன்மை. நம்முடைய சங்கப்பாடல்களில் இயற்கையைப் பாடும் வகை இருக்கிறது. ஆனால், அவை இசையுடன் இணைத்துப்பாடிய முறையில்லை. கஜல்கள் அந்தவிதத்தில்தான் நம்முடைய பாடல்களிலிருந்து வேறுபடுகின்றன. உருது கஜல்களைப் போல தமிழில் எழுத முடியாது என்றொரு எண்ணம் நம்மிடையே உண்டு. ஹிந்துஸ்தானிக்கு ஏற்ப எழுத நம்முடைய தமிழ் வளைந்து கொடுக்காது என்னும் தவறான புரிதலும் கூட சிலரிடத்தில் காணப்படுகிறது. உண்மையில், தமிழன்பன் இந்த எண்ணத்தை உடைக்கும் முயற்சியாகவே கஜல்களை தமிழில் ஆக்கி அளித்திருக்கிறார்.

தனக்குள்ள யாப்பு அறிவினாலும் மரபுப் பயிற்சினாலும் தமிழ் கஜல்களை உருவாக்கியிருக்கிறார். உருது அகாடமியின் துணைத் தலைவர் சஜ்ஜாத் புகாரியே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு என்பதுதான் அதில் விசேஷம். அசை, சீர், தளை, தொடை என்ற தமிழ் இலக்கணப் பயிற்சியை வைத்துக்கொண்டு, அதன் வழியே கஜல்களை எழுத முடியும் என நிரூபித்திருக்கிறார். புறத் தோற்றத்தில் எதுகை மோனை துள்ளல் சேர்த்து எழுதப்படாதபோது, அசல் கஜல்கள் உருவாக வாய்ப்பில்லை. உருது மொழிக்கேற்ப வடிவமைக்கப்பட்ட கஜல்களை, தமிழின் அளவுகோலுக்குத் தக்கவாறு மாற்றுவது தனிப்பெரும் ஆற்றல். வெறும் இலக்கியச் சுவையறிந்த ஒருவரால் இதைச் செய்துவிட முடியாது.

இலக்கணத்தைப் பிழையற பின்பற்றத் தெரிந்த ஒருவரால்தான் இத்தகைய  முயற்சிகளில் ஈடுபட முடியும். ‘கஜல் பிறைகள்’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள தமிழன்பனின் பாடல்களை இசையமைத்து, நூல் வெளியீட்டு விழாவில் அரங்கேற்ற நானும் இசையமைப்பாளர் டி.இமானும் முயன்றோம். என்றாலும், குறித்த நேரத்திற்குள் எங்களால் தயாராக முடியவில்லை. தொடர் பாடல் பதிவினால் அப்போது அம்முயற்சி தள்ளிவைக்கப்பட்டாலும், கூடிய வரையில் தமிழன்பனின் தமிழ் கஜல்களை இசையுடன் கேட்கும் வாய்ப்பிருக்கிறது. திரைப்பாடல் எழுதுவதில் அதிக விருப்பம் காட்டாத தமிழன்பன், கஜல்களை எழுதியிருக்கும் விதம் அசாத்தியமானது.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டை இசையமைத்த இமான், எங்கேயும் இசைக்கு நெருடலாக வார்த்தை இல்லையென்று வியந்ததை நானறிவேன். “நட்சத்திரக் கடிதத்தைப் பகலினிலே / யார் எடுத்துப் படிப்பார்? / தொட்டில் பாடலுக்கோர் மெட்டமைத்துச் செத்தவரா முடிப்பார்..?” என்று ஒரு கஜலின் இறுதியை எழுதியிருப்பார். அக்கஜலில் எல்லா வரிகளிலும் அழகு மிளிரும். “நிலாவட்டம் சாக்கடையில் என்றாலும் / யாரள்ளிக் குடிப்பார்? / கூழாங்கல் அடைகாத்து குஞ்சுகளைப் / பெற யாரே துடிப்பார்...” என அவர் அடுக்கிக்கொண்டே போகும் விதத்தில், நமக்குமே கஜல்களை எழுதிப்பார்க்கும் ஆர்வம் வந்துவிடுகிறது.

‘காஃபியா’வையும் ‘ரதீஃப்’பையும் கணக்கிட்டுக்கொண்டே எழுதப்படும் கஜலை, தமிழிலும் எழுத முடியும். ஒன்றைப்போல செய்து பார்த்தல் படைப்பாளிகளுக்கே உரிய ஆரம்ப குணம். அதிலும், தனித்து வெளிப்படும் ஆற்றலுடன் வெளிப்படுவது தமிழன்பனின் தனித்துவம். தொடக்கத்திலிருந்தே தமிழுக்கேற்ப ஒன்றைத் தயாரித்துத் தருவதில் தமிழன்பன் ஆர்வமுடையவர். ஆர்வத்தை சித்தியாக்கும்வரை அவர் ஓய்ந்ததில்லை. உருது மொழிக்கேயுரிய நளினமான பிரயோகங்களை, மெல்லின எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி எழுதும் முயற்சி சவால்கள் நிரம்பியது.
8a.jpg
ஒலிக் குறிப்புகளிலிருந்து இசையை உருவாக்குவதுபோல ‘காஃபியா’வையும் ‘ரதீஃப்’பையும் மெல்லின ஓசைகளாக அமைத்துக்கொள்வது, தமிழ் கஜல்களை வசீகரமுடையதாக்கும். அவர் தமிழிலிருந்துதான் சகலத்தையும் எழுதுவார்; அணுகுவார். தமிழின் தன்மைகளைப் புறக்கணிக்காமல் எழுதுவதே புதுமை என்னும் எண்ணம் அவரிடமுண்டு. எதையும் தமிழுக்குக் கொண்டுவருவதில் தீவிரம் காட்டுபவர். அதே சமயம், எது ஒன்றும் தமிழைக் காட்டிலும் சிறந்ததென்ற வாதத்தை அவர் வைத்ததாகத் தெரியவில்லை. நான் சொல்வது, தமிழில் இல்லாதது எதுவுமில்லை என்கிற பண்டித மனோபாவம் இல்லை. தமிழில், தமிழால் சகலமும் முடியும் என்கிற கம்பீரம் அல்லது நம்பிக்கை.

பிற மொழிகளில் எவை எவை உள்ளனவோ அவற்றையெல்லாம் தமிழ்ப்படுத்துவதிலும் அதன் வழியே தமிழை முன்னோக்கி நகர்த்துவதிலுமே அவருடைய விருப்பங்கள் விளைகின்றன. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவருடைய படைப்புகளை வாசித்து வருகிறேன். நேரடியாக பழகும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன். பத்திரிகையில் பணியாற்றியபோதும் சரி, திரைப் பாடலாசிரியனாக ஆகிவிட்ட இப்போதும் சரி, அவருடைய ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு நூலிலும் ஏதோ ஒரு புதிதை அறிமுகப்படுத்துபவராகவே இருந்து வருகிறார். அவர் தலைமையில் நடைபெற்ற பல அரங்குகளில் பங்கு பெற்றிருக்கிறேன். ஒரு மேடையில்கூட அவர், புதிய செய்திகளைப் பகிராமல் இருந்ததில்லை.

கவியரங்குகளில் தனக்குப் பின்னால் வரும் இளம் கவிஞர்களை தாய்மையுடன் தாங்கிக்கொள்வார். ஒருமுறை மணப்பாறையில் நிகழ்ந்த கவியரங்கில் கவிதைப்பித்தன், நான், கபிலன், இளங்கம்பன், சொற்கோ ஆகியோர் கலந்து கொண்டோம். மேடையில் நாங்கள் எல்லோரும் அமர்ந்த நிலையில் கவியரங்கம் விமரிசையாகத் தொடங்கியது. தலைமைக் கவிதையை தமிழன்பன் வாசிக்கத் தொடங்கினார். அரங்கம் கைதட்டி ஆரவாரம் செய்தது. அப்போது பார்த்தால், நாற்காலியிலிருந்து கபிலன் மயங்கிச் சரிகிறார். இரண்டு மூன்று நாட்களாக சரியான உறக்கமில்லாமல் பாடல் பதிவிலும் கூட்டங்களிலும் கலந்துகொள்ள நேர்ந்ததால் அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.

கபிலன் மயங்கிச் சரிந்த மாத்திரத்தில் விழாக் குழுவினர் பதறிவிட்டனர். கவிதை வாசித்துக் கொண்டிருந்த தமிழன்பனோ, அந்த வேளையிலும், அரங்கையும் கபிலனையும் ஒருசேர தாங்கிக் கொண்ட தருணத்தை மறப்பதற்கில்லை. மிகையுணர்ச்சிகளுக்கு ஆட்படாதவர் தமிழன்பன் என்று நான் முதல் பத்தியில் எழுதிய காரணம் அதுதான். அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கபிலன், திரும்பி வந்து தன் கவிதையை வாசிக்கும்வரை மேடையும் காத்திருந்தது. அவரை விட்டுவிட்டு அரங்கத்தை முடித்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், கபிலன் திரும்பி வந்து கவிதையை வாசித்தபிறகுதான் அரங்கை நிறைவு செய்தார். அவரை நம்பி எங்கேயும் போகலாம்.

மூன்று தலைமுறைகளாக கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் பழகிவரும் அவர், ஒரு சந்தர்ப்பத்தில் கூட யாரையும் குறைத்துச் சொல்லி நாங்கள் கேட்டதில்லை. கொள்கையளவில் அவருடன் மாறுபட்டவர்கள், வேறுபட்டவர்கள் பலருண்டு. திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை எழுதுபவர்களே ஆனாலும், அவர்கள் கருத்துகளில் எவை எவை தக்கனவோ அவற்றை ஏற்றுக்கொள்ள தயங்க மாட்டார். எழுத்திலும் இயல்பிலும் நிதானத்தை இழந்துவிடாத அவர், “எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால், யுகபாரதிக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பேன்...” என்றதும், “எனக்கு ஒரு மகள் இல்லையே என்ற வருத்தம் இப்போதுதான் வருகிறது...” என்றதும், என்மீது அவர் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in/

Posted

ஊஞ்சல் தேநீர்

 

 

யுகபாரதி - 74

சபையறிந்து பேசக்கூடியவரே தமிழன்பன். எந்த சபையானாலும், பேச்சைத் தயாரிக்காமல் வரமாட்டார். ஆனால், அவருடைய பேச்சுமுறை தயாரித்தது போலிருக்காது. நினைவுகளின் அடுக்கிலிருந்து சொல்வது போல்தான் இருக்கும். வருடங்களைச் சொல்வதானாலும் விஷயங்களை அடுக்குவதிலும்கூட ஒருவித நேர்த்தியைக் கடைப்பிடிப்பார்.
3.jpg
ஒருசில ஆண்டுகளுக்குமுன் திருச்சி லோகநாதன் ஏற்பாடு செய்த விழாவில் பேசிய அவர், “கவிதைகளால் எதையோ செய்துவிட முடியும் என்று நம்புகிற அரசியல்வாதிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி...” என்றிருக்கிறார். முன்னெப்போதோ அவருடைய கவிதை ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த வாழப்பாடி இராமமூர்த்தியை மேடையில் வைத்துக்கொண்டே, “கவிதைகளைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்..?” எனக் கேட்டிருக்கிறார். தன்னிடம் அபிப்ராய பேதமுடையவர்களைக் கூட, தன் பேச்சின் வழியே அரவணைத்துக்கொள்ளும் பண்பு அவருடையது.

இஸ்லாமிய இலக்கியக் கழக விழாவொன்றில் விவேகானந்தரைப் பற்றிப் பேசி, கைதட்டு வாங்க அவரால் முடியும். 1892ல் விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் ஒருவார காலம் சொற்பொழிவாற்றியிருக்கிறார். அவ்விழாவில் நாள் தவறாமல் கலந்துகொண்ட மனோன்மணியம் சுந்தரனார், விவேகானந்தரின் பேச்சில் ஈர்க்கப்பட்டிருக்கிறார். விவேகானந்தரின் சொற்பொழிவில் கட்டுண்ட சுந்தரனார், விவேகானந்தரை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்திருக்கிறார். விருந்தில் கலந்துகொண்ட விவேகானந்தர் என்ன காரணத்தினாலோ சுந்தரனாரைப் பார்த்து ஒரு சர்ச்சைக்குரிய கேள்வியைக் கேட்டுவிடுகிறார்.

சர்ச்சைக்குரிய கேள்வி என்றால் அது, துறவியின் வாயிலிருந்து வரக்கூடாத கேள்வி. சுந்தரனாரைப் பார்த்து விவேகானந்தர், “நீங்கள் என்ன கோத்திரம்..?” என்றதுதான் அக்கேள்வி. சாதி, மத, கோத்திர வேறுபாடுகளைக் கடந்த ஒருவரே துறவி என்னும் நிலையை எய்த முடியும். அதிலும், எல்லாவற்றையும் கடந்த முற்போக்கு மனமுடைய விவேகானந்தரிடமிருந்து அப்படியொரு கேள்வியை சுந்தரனார் எதிர்பார்க்கவில்லை.

எதிர்பார்க்காத இடத்திலிருந்து கேட்கக்கூடாத கேள்வி வந்த பிறகும், நிதானமிழக்காத சுந்தரனார் “தன்மானம் காக்கும் தென்னாட்டு திராவிட கோத்திரம்...” என்று பதிலளித்திருக்கிறார். ஆன்மிக குருவாக அறியப்படும் விவேகானந்தர், “அப்படியெல்லாம் சுந்தரனாரைக் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை...” என்று சிலர் வாதிடலாம். உண்மையில், கோத்திரம் அறியும் புத்தியுடன் விவேகானந்தர் இக்கேள்வியைக் கேட்கவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், அப்போதிருந்த காலச்சூழல் எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அக்கேள்வி ஏற்படுத்துகிறது.

இரண்டுபேருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மேதைகள். ஒருவருக்கு இன்னொருவரைத் தாழ்த்தும் எண்ணம் அறவே இருந்திருக்க வாய்ப்பில்லை. கால தேச வர்த்தமான இயல்புகளின்படியே அவரும் கேட்டிருக்கிறார், இவரும் பதிலளித்திருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய சுந்தரனாரின் வாழ்க்கைக் குறிப்பில் இச்செய்தி இடம்பெற்றிருக்கிறது. இச்சம்பவத்தை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில் குறிப்பிட்டுப் பேசிய தமிழன்பன், விவேகானந்தரையும் சுந்தரனாரையும் பேதமில்லாமல் பாராட்டி, ஒரு கருத்து எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை விளக்கியிருக்கிறார்.

1913ல் நோபல் பரிசு பெற்ற தாகூர், அப்பரிசைப் பெற்றுக்கொண்டு உரையாற்றியபோது, “இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள், திராவிடர்கள் வாழ்கிறார்கள்...” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மத அடிப்படையில் பலரும் வாழ்வதாகச் சொல்ல விரும்பிய தாகூர், தமிழர்களையும் திராவிடர்களையும் தனித்துக் கூறியதில் உள்ள புரிதலை தமிழன்பனின் வார்த்தையிலிருந்தே நான் தெரிந்துகொண்டேன்.

இத்தனைக்கும் “கவிதையே என்னுடைய சமயம்...” என்றவர்தான் தாகூர். தமிழர்களும் திராவிடர்களும் தனி சமயம் என்று தாகூர் சொல்லியிருப்பாரோ என்னவோ? தமிழன்பன், பாப்லோ நெருடாவை பாரதிதாசனுடன் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை ஒன்றுக்கு, கடும் எதிர்ப்பை ‘இந்தியா டுடே’ பத்திரிகை வெளியிட்டது. உலகக் கவிஞரை உள்ளூர் கவிஞருடன் ஒப்பிட்டுவிட்டதாகவும், பாப்லோ நெருடாவின் உயரத்தில் பாரதிதாசனா? என்பது போலவும் எழுதப்பட்ட அக்கட்டுரையின் இறுதியில், கவிதை குறித்து எதுவுமே தெரியாதவர் தமிழன்பன் என்று எழுதப்பட்டிருந்தது.

தமிழன்பனுக்கு எதுவும் தெரியாது என்பதல்ல கட்டுரையாளரின் பிரச்னை. பாரதிதாசனை பாப்லோ நெருடா அளவுக்கு உயர்த்துகிறாரே என்பதுதான் சம்பந்தப்பட்ட கட்டுரையாளரின் நமைச்சல். பாரதியை ஏற்றுக்கொள்பவர்கள் பாரதிதாசனை மறுப்பதும், பாரதிதாசனைப் பின்பற்றுகிறவர்கள் பாரதியை விமர்சிப்பதும் தொடர்ந்து வருவதைப்போலத்தான் இதுவும். உலகக் கவிஞர்கள் யாரோடும் தமிழ்க் கவிஞர்கள் சமத்து இல்லையென்கிற எண்ணம் ஒருசில பத்திரிகைக்காரர்களிடம் இருந்து வருகிறது. இதுகுறித்து நேரடியாகவே ஒருமுறை தமிழன்பனிடம் கேட்டிருக்கிறேன்.

‘‘பாரதியையும் பாரதிதாசனையும் ஒரே அளவுகோலால் அளப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்..?’’ என்றதற்கு, “ஒவ்வொரு கவிஞனுக்கும் மூன்று நிலைகள் உண்டு. முதல்நிலை, தனக்கு முன்னே இருப்பவரின் பாதிப்பில் எழுதுவது. இரண்டாவது நிலை, தனித்து எழுதுவது. அதாவது, தனித்தன்மையான எழுத்துமுறையை ஏற்படுத்துவது. மூன்றாவது நிலைதான் முக்கியமானது. அது, தனித்தன்மையுடன் எழுதும் தன்னைப்போல தனக்குப் பின்னால் வருபவர்களை எழுதத் தூண்டுவது. இந்த மூன்று நிலைகளையும் எவரெல்லாம் எட்டிப் பிடிக்கிறார்களோ, அவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்...” என்றார்.

“அளவுகோல்களை ஒரே மாதிரியாக வைத்துக்கொண்டால் எவரையும் சரியாக அளவிட முடியாது. காலமும் சூழலும் அரசியலும் என்ன அளவுகோல்களைத் தருகின்றனவோ அதை வைத்தே படைப்பாளிகள் அளக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, குழு வாதத்தை, குறுங்குழு வாதத்தை வைத்துக்கொண்டு அளந்தால், தமிழ்ப் படைப்பாளர்களில் ஒருவர்கூட தேறமாட்டார்கள்...” எனவும் தெளிவுபடுத்தினார்.

“முதல் நிலையில் பாரதிதாசன், பாரதியைப் போலவே எழுதிப் பழகினார். அடுத்தடுத்த நிலைகளில் கொள்கை சார்ந்தும் கோட்பாடு சார்ந்தும் அரசியல் சார்ந்தும் மாறுபடுகிறார். இந்த மாறுபாட்டை உள்வாங்கிக் கொள்ளாமல் பாரதியையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டு விமர்சிப்பது ஏற்புடையதல்ல...” என்பதே அவர் எப்போதும் சொல்வது. “ஒருவரை இன்னொருவருடன் பொருத்திப் பார்க்கலாம். ஆனால், அந்தப் பொருத்தப்பாட்டில் குறைகாண்பது முறையல்ல. ஒருவருக்கு ஒன்று வாய்த்திருக்கிறது என்றால் அது, அவருடைய ஆற்றலால் மட்டுமே விளைந்ததல்ல. காலத்தாலும் சூழலாலும் கிடைத்ததென்று எண்ணினால்தான் கணக்கு நேராகும்...” என்பதை பல மேடைகளில் வலியுறுத்தியிருக்கிறார்.

 

 

(பேசலாம்...)

http://kungumam.co.in/

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.