Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கௌரி லங்கேஷ்: இந்துத்துவா காவுகொண்ட இன்னோர் இன்னுயிர்

Featured Replies

கௌரி லங்கேஷ்: இந்துத்துவா காவுகொண்ட இன்னோர் இன்னுயிர்
 

கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளவியலாத ஆற்றாமை, கருத்துகளை வன்முறையால் எதிர்கொள்கிறது. அது கருத்துரைப்போரைக் கொல்கிறது. கருத்துரைப்போரைக் கொல்வதன் மூலம், கருத்துகளைக் கொல்லலாம் என, அது மடத்தனமாக நம்புகிறது. அந்த மடமை, மக்களை என்றென்றும் முட்டாள்களாக்கலாம் எனவும் நினைக்கிறது. அதன் மடச் செயல்கள் திட்டமின்றி நடப்பனவல்ல. அவை திட்டமிட்டே அரங்கேறுகின்றன; ஆனால், என்றென்றைக்குமல்ல.  

இந்திய மூத்த ஊடகவியலாளரும் மனித உரிமைப் போராளியும் இந்து அடிப்படைவாதத்தை தயவுதாட்சன்யமின்றி விமர்சித்து வந்தவருமாக கௌரி லங்கேஷ், கர்நாடகத்தில் கடந்தவாரம், அவரது வீட்டு வாசலில் வைத்து, சுட்டுக்கொல்லப்பட்டார்.   

இந்திய ஜனநாயகத்தின் நிர்வாணம் மீண்டும் தன்னைப் புலப்படுத்தியது. மோடி தலைமை தாங்கும் பாரதிய ஜனதா அரசாங்கம், கட்டமைக்க விரும்பும் இந்துத்துவ இந்தியாவுக்கும் வரலாற்றுத் திரிப்புக்கும் எதிராகக் கருத்துரைப்போரையும் ஆய்வாளர்களையும் தொடர்ந்து கொன்றுவருகிறது. அவ் வரிசையில் அண்மையில் பறிக்கப்பட்ட உயிர் கௌரி லங்கேஷுடையது.  

image_318ed82157.jpg

வாழ்நாள் முழுதும் அடக்குமுறைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்த கௌரி லங்கேஷ், கர்நாடகத்தின் கலகக்குரல். அவர் இந்துத்துவாவின் கோரமுகத்தைத் தோலுரிப்பதிலும் அதற்கெதிராகவும் தொடர்ந்து போராடினார்.   

பிராமணிய மடங்களும் சாதிய -சனாதனச் சடங்குகளும் நிறைந்த கர்நாடகத்தில், தனது கவிதைகள், நாடகங்கள் மூலம் சீர்திருத்தக் கருத்துகளை விதைத்த புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பி. லங்கேஷ், கௌரி லங்கேஷின் தந்தை.   

அவர், கர்நாடக முற்போக்கு இயக்கத்தில் மிக முக்கியமான ஆளுமையாக இருந்தவருமாவார். சமூகநீதியை நிலைநாட்ட ‘லங்கேஷ் பத்திரிகை’ என்ற வார இதழைத் தொடங்கி, விளம்பரங்கள் இல்லாமல் விநியோகத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு, அப்பத்திரிகையைத் தொடர்ந்து நடாத்தினார். விளம்பரங்களைப் பெறுவது ஈற்றில், பத்திரிகையை பல்தேசியக் கம்பெனிகளின் நலன்களுக்கேற்றதாக மாற்றும் என அவர் உறுதியாக நம்பினார். 2000 ஆம் ஆண்டில் அவரது மறைவைத் தொடர்ந்து கௌரி லங்கேஷ் பத்திரிகையை நடத்தி வருகிறார்.   

கௌரி லங்கேஷ், ஓர் ஊடகவியலாளர் என்பதற்காகவும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் அதன் காவிப்படையான ‘சங் பரிவார்’க்கும் எதிராக எழுதுவதற்காகவும் மட்டுமே கொல்லப்படவில்லை.   

இன்று, இந்துத்துவா கட்டமைக்க விரும்பும் இந்து இராச்சியத்தியத்தின் மையம்,இந்தியாவின் மேற்கில் மூன்று நூற்றாண்டுகால முகாலய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த சத்ரபதி சிவாஜிக்கு, இந்துத்துவச் சாயம் பூசி, வரலாற்றைத் திரித்து, இந்தியாவை இந்துத்துவ அரசாக நிலைமாற்றம் செய்ய, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் என்பன தீவிரமாகச் செயல்படுகின்றன.   

இந்தியா, இந்து ஆட்சியாளர்கள் நிறுவிய பேரரசு என்பதை மையப்படுத்த, இந்தியாவின் பெரும் பகுதியை, மூன்று நூற்றாண்டுகளாக ஆண்ட, முகலாய சாம்ராச்சிய வரலாறு பற்றிய பாடங்களை, மகாராஷ்டிர அரசாங்கம் மாநிலப் பாடசாலைப் புத்தகங்களில் இருந்து அகற்றிவிட்டது.  

 ‘இந்து ஆட்சியாளர்கள்’ என்பதற்கு உதாரணமாகப் புத்தகத்தில் மையப்படுத்தப்படுபவர் இந்து மன்னரான சத்ரபதி சிவாஜி. வட இந்தியாவின் பெரும்பாலான கட்டடங்களும், நினைவுச் சின்னங்களும் முகலாயர் காலத்தவை.   

சுமார் 300 ஆண்டுகள் நீடித்த முகலாய ஆட்சி, இந்திய வரலாற்றில் தவிர்க்கமுடியாத முக்கிய பகுதியாகும். 17 ஆம் நூற்றாண்டில் முகலாயரை வென்ற சிவாஜி, மராட்டிய சாம்ராச்சியத்தை நிறுவினார்.   

வரலாற்றுத் திரிபுகளின் மூலம் சிவாஜி இன்று இந்து அவதார புருஷனாக, சிவனனினதும் விஷ்ணுவினதும் அவதாரமாக்கப்பட்டிருக்கிறார். இந்துப் பெண் தெய்வமான பவானியின் அருள் பெற்ற அவருக்கு, பவானி பரிசளித்த மந்திரசக்தி கொண்ட ஒரு வாளின் துணையோடு, முஸ்லிம் மன்னர்களை அழித்தார் என்றும், அவர் பறக்கும் சக்தி பெற்றிருந்தார் என்றும், திடீரெனத் தோன்றி, முஸ்லிம்களைக் கொன்று, திடீரென மறைவார் என்றும், மானமுள்ள ஒவ்வொரு இந்துவும் சிவாஜியைப்போல் இருந்து, முஸ்லிம்களைக் கொன்றொழிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது.  

மேற்படி வரலாற்றுத் திரிப்பைக் கட்டமைத்த பொய்களை, மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே, தனது நூலின் மூலம் வெளிப்படுத்தினார். அவரது ‘சிவாஜி கோன் ஹோட்டா?’ நூல், மராத்தியில் வெளியானவுடனேயே இரண்டு இலட்சம் பிரதிகள் விலைபோயின. பிற இந்திய மொழிகளில் இந்நூலின் பிரதிகள் 50 இலட்சத்துக்கும் மேல் விற்பனையாகியுள்ளன.  

 ‘மாவீரன் சிவாஜி காவித் தலைவனல்ல; காவியத் தலைவன்’ என்ற தலைப்பில் இந்நூல் தமிழாக்கப்பட்டுள்ளது. பன்சாரே தனது நூலில், பல விடயங்களை ஆதாரங்களுடன் நிறுவுகிறார். சிவாஜி பற்றி இந்துத்துவா கட்டமைக்கும் பிம்பத்தை நொருக்கிய அவை, இந்துத்துவா ஆதரவாளர்களுக்கு உவப்பானவையல்ல.   

சிவாஜி மத வெறியரல்ல எனவும், அவரது படையில் முக்கிய தளபதிகளாக இப்ராஹிம் கான், தௌலத் கான், மெஹ்டர், காசி ஹைதர், சித்தி ஹிலால், ஷாமா கான் போன்ற முஸ்லிம்களும் அவருடன் ஏராளமான முஸ்லிம் படைவீரர்களும் இருந்தனர் என, பன்சாரே ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுகிறார்.   

முஸ்லிம் மன்னர்களும் இந்துகளை எதிரிகளாகக் கொள்ளவில்லை; அவர்களும் இந்துத் தளபதிகளைக் கொண்டிருந்தனர். சிவாஜியின் தந்தையான ஷாஹாஜி, முகலாய மன்னர் அடில் ஷாவின் ஓர் அதிகாரியாக இருந்தார். சிவாஜியின் தாத்தாவும் அம் மன்னரிடம் பணி செய்தார். அக்பரின் படையிலும், ஒளரங்கசீப் படையிலும், நான்கில் ஒரு பகுதியினர் இந்துக்களாவர்.   

ஒளரங்கசீப்பின் தக்காண (தென்) பிராந்திய ஆளுநர் ஜஸ்வந்த் சிங் ஓர் இந்து, அவரது முதலமைச்சர் ரகுநாத் தாஸும் ஓர் இந்து என்ற உண்மைகளை கோவிந்த் பன்சாரே மிக எளிதாக மக்களிடம் கொண்டுசென்றார். அதன் மூலம், இந்து - முஸ்லிம் என்ற காரணத்துக்காக மன்னர்கள் சண்டையிடவில்லை; அவர்கள் அதிகாரத்துக்காகவும் பிரதேசத்துக்காகவும் போரிட்டார்கள். மதத்தின் பேரால் படையெடுக்கவில்லை; இந்துவோ, முஸ்லிமோ பலமானவர்களையும், நம்பிக்கைக்குரியவர்களையும் கொண்டு, தமது பேரரசுகளைக் கட்டினார்கள் எனும் உண்மைகள் மக்களை அடையத் தொடங்கின. அது, மதவெறியர்களுக்குச் சினமூட்டியது.  

அதேவேளை, சிவாஜியின் நற்பண்புகளை பன்சாரே மெச்சினார். சிவாஜியின் படை, விவசாயிகளையும் சாதாரண குடிமக்களையும் கொண்டது. அவர்கள் போரிட்டார்கள்; போரில்லாத காலங்களில் கமம் செய்தார்கள்; அல்லது உழைத்தார்கள். இவ்வாறு படையைச் சமூகப் பொறுப்புமிக்கதாக வைத்திருந்ததால், அவர்கள் போரில் பெண்களைக் கண்ணியமாக நடத்துவோராக இருந்தார்கள். நடத்தை மீறினோர் தளபதிகளாயிருந்தாலும் கை, கால் துண்டித்துத் தண்டிக்கப்பட்டார்கள்.  

 சிவாஜி, ஆட்சியிலிருந்த பாரசிக மொழியை விலக்கி, மராத்தியை ஆட்சி மொழியாக்கினார். அந்நியப் பொருட்கள் மீது கடுமையான வரி விதித்து, தேசியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றினார். எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயிகளின் மொத்த உழைப்பையும் உறிஞ்சும் வரிவிதிப்பை ஒழித்து, உற்பத்திக்கேற்ற வரியைத் தானியமாகப் பெற்றார். அதிகளவு நிலத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாறு, விவசாயிகளுக்குத் தாராளமான நீண்டகாலக் கடன் வழங்கினார். இவ்வாறான உண்மைகளையும் பன்சாரே தரவுகளுடன் வெளிப்படுத்தினார்.   

2015 பெப்ரவரியில், காலை வேளையில் வீதியில், மனைவியுடன் உலாவச் சென்றபோது, 82 வயதான கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டார். சிவாஜி பற்றிய புத்தகத்தை வெளியிடவுள்ளார் என அறிந்து, அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘எமக்கெதிராக இயங்கினால், நரேந்திர தபோல்கர் போல் சுட்டுக்கொல்லப்படுவாய்’ என எச்சரிக்கப்பட்டிருந்தது.  

உலகமயமாக்கலின் துணையுடன், இந்தியாவில் பிள்ளையார் சிலைகளை பால்குடிக்கச் செய்த வேளை, மகாராஷ்டிரப் பகுத்தறிவாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர், தான் 1989 இல் நிறுவிய ‘அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி’ எனும் மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தின் மூலம், பல போலிச் சாமியார்களையும் பாபாக்களையும் மந்திரவாதிகளையும் மக்களிடம் அம்பலப்படுத்தியவராவார்.   

பிள்ளையார் சிலை பால் குடிக்காது; பேய்,பிசாசு என்று எதுவும் கிடையாது என்று ஊரூராகப் பிரசாரம் செய்த அவர், ‘சாதனா’ என்ற மூடநம்பிக்கை எதிர்ப்புப் பத்திரிகையையும் தொடர்ந்து நடத்தினார். மூட நம்பிக்கைகளுக்கும் போலிச் சாமியார்களுக்கும் எதிரான ஒரு சட்டத்தைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கட்டாயத்தை, மாநில அரசுக்கு ஏற்படுத்துமாறு பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.   

மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடிய தபோல்கர், மூட நம்பிக்கை எதிர்ப்பில் மட்டுமின்றி, நாசிக் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் ஆதிக்க சாதி பஞ்சாயத்துகளின் அநீதியான தீர்ப்புகளையும் அவர்கள் நடத்தும் கௌரவக் கொலைகளையும் எதிர்த்துத் தொடர்ந்து போராடி வந்தார். 2013 ஓகஸ்ட்டில் அவரும் வீதியில், நடைப்பயிற்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.   

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே வரிசையில் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்தவர், சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பழைமையான கன்னட இலக்கியங்களின் ஆய்வறிஞர், கல்வெட்டு அறிஞர் எனப் பன்முகத் தன்மை கொண்டவருமான 
எம்.எம்.கல்புர்கி. 2015 ஓகஸ்டில் மாணவர்கள் என்று வீட்டுக்கு வந்த இருவரால், இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.   

கர்நாடகத்தில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் உருவாக்கிய லிங்காயத்து மதக் கொள்கை என்பது, இந்து மதத்தின் கொள்கைக்கும் வழிபாட்டு முறைக்கும் முற்றிலும் முரணானதும் சிவ வழிபாட்டுக்கும் வைஷ்ணவ வழிபாட்டுக்கும் மாறாக, இந்துமதத்திலிருந்து வேறுபட்ட தன்மைகளுடன் தன்னை வடிவமைத்தது.   

சமூகச் சீர்திருத்தவாதியான பசவர், வேதங்களையும் சாதி முறையையும் மறுத்தார். லிங்காயத்தில் அனைவரும் சமம் என அறிவித்தார். இவ்வாறு இந்துமதத்திலிருந்து முற்றிலிலும் வேறுபட்ட நம்பிக்கையை அவர் உருவாக்கினார்.   

பசவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இந்துகள் அவரது மதத்தில் இணைந்தனர். அதன் வழி சாதியப்படியில் மேல்நிலையினருக்கும் தாழ்நிலையினருக்கும் திருமண உறவும் நிலவியது. காலப்போக்கில் இந்த இந்துகள் வேதங்களையும் உபநிடதங்களையும் லிங்காயத்தில் மெதுமெதுவாகப் புகுத்தி, அதை வீரசைவம் என அழைக்கலாயினர். 

பின்னர், லிங்காயத்தும் வீரசைவமும் ஒன்றே என்று சொல்லி, பசவரையும் லிங்காயத்துகளையும் இந்துமதம் உட்செரித்தது. இந்து சாதி அமைப்பை எதிர்த்து உருவான லிங்காயத்துகள் பின்னாளில் பார்ப்பனியத்துடன் இணைந்து, தாழ்த்தப்பட்டோரை மிருகத்தனமாக ஒடுக்கும் ஆதிக்க சாதியாயினர்.  

பசவரின் லிங்காயத்து என்பது, இந்துமதத்தின் வேதங்களையும் சாதியமைப்பு முறையையும் நிராகரித்ததையும் பசவர் ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்டவராகவும் உருவ வழிபாட்டை நிராகரித்தவராக இருந்ததையும், அவரது கொள்கைகளை ஏற்று அவரது புதிய மதத்தில் இணைந்தவர்களே லிங்காயத்துகள் என்பதையும் கல்புர்கி, ‘மார்கா’ எனும் தனது ஆய்வு நூலில் நிரூபித்துளார். பசவரின் ‘வசனா’ எனும் இசைக்கவிதைகளை ஆராய்ந்த கல்புர்கி, லிங்காயத்துகளின் இன்னொரு மதத் தலைவரான சென்னபசவர், தாழ்த்தப்பட்டவருக்கும் பசவரின் சகோதரிக்கும் பிறந்தவர் என்றும் கூறினார்.

லிங்காயத்துகளின் இந்துவாதலைத் தொடர்ந்து விமர்சித்த கல்புர்கி, கர்நாடகத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றுவதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.   
கல்புர்கியைத் தொடர்ந்து லிங்காயத்துகள் எவ்வாறு இந்துமதத்தினுள் பகுதியாக்கப்பட்டார்கள். வீரசைவம் வேறு, லிங்காயத்துகள் வேறு என்பதை ஆதாரங்களுடன் எழுதியவர் கௌரி லங்கேஷ். இவரின் இப் பக்கத்தை ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடிக்கின்றன. இந்துத்துவாவுக்கு எதிராகக் கருத்துரைத்தமைக்காகவே அவர் கொல்லப்பட்டார் என்ற பொய்யை ஊடகங்கள் பரப்புகின்றன.   

லிங்காயத்துகள் எவ்வாறு வீரசைவத்திலிருந்து வேறுபடுகிறார்கள் என்பதைப் பற்றிய நீண்ட கட்டுரையொன்றை ஓகஸ்ட் எட்டாம் திகதி, கௌரி லங்கேஷ் ஆதாரபூர்வமாக எழுதியிருந்தார்.   

கல்புர்கி, கௌரி லங்கேஷ் கொலைகளுக்கு நெருங்கிய தொடர்புண்டு. இருவரும் லிங்கயாத்துகளைத் தனி மதப்பிரிவாக அங்கிகரிக்கச் சொன்னதோடு, அதற்கு ஆதாரங்களைத் திரட்டி முன்வைத்தவர்கள். கர்நாடக லிங்காயத்துகள் தாங்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவல்ல என்பதால் தங்களைத் தனி மதமாக அங்கிகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தை ஆதரிக்கின்றனர். இக் கோரிக்கை கர்நாடகத்தில் பா.ஜ.கவின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது.   

கர்நாடகத்தில் லிங்காயத்துகள் ஏறக்குறைய 19 சதவீதம் ஆவர். 224 சட்டபேரவைத் தொகுதிகளில் 110 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வல்லோராக உள்ளனர். இவ்வளவு காலமும் இவர்களை இந்துக்களாக அடையாளம் கண்டதன் பயனை பா.ஜ.க அனுபவித்து வந்தது. லிங்காயத்துகளின் இப் புதிய கோரிக்கையும் அதன் கருத்தியலும் வரலாற்றுத் தகவல்களும் இந்துத்துவாவுக்கு மிகப் பெரிய சவாலாயுள்ளது. இதனாலேயே கல்புர்கியைத் தொடர்ந்து கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டார்.   

இக்கொலை, இத்தோடு தொடங்கவும் இல்லை; இத்தோடு முடிவதும் இல்லை. இந்துத்துவ இந்தியாவை எப்படியாவது கட்டமைக்கக் கங்கணம் கட்டியுள்ள இந்துத்துவக் கும்பலின் துப்பாக்கிகளில் இன்னும் மீதமுள்ள தோட்டாக்கள், நாளை இன்னுமொருவரைக் கொல்லக் காத்திருக்கின்றன.   

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள, ஒருவருக்குத் தான் கடைபிடிக்கும் சித்தாந்தத்தில் ஆழ்ந்த அறிவு வேண்டும். ஆனால், இந்துத்துவக் கும்பலுக்கு அத்தகைய சித்தாந்த புலமை இல்லை. அது எப்போதும் தனது கருத்தை அடாவடித்தனமாகத் திணிக்க முயல்கிறது.  

 அடாவடித்தனம் பலனற்றுத் தோற்கும்போது, மாற்றுக் கருத்தை எதிர்கொள்ளத் திராணியற்றுத் துப்பாக்கியைத் தூக்குகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது ஜனநாயகம் என்றால் துப்பாக்கிகளைத் துப்பாக்கிகளால் எதிர்கொள்வதும் ஜனநாயகமே. ஒருவர் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என எதிரியே தீர்மானிக்கிறான். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கௌரி-லங்கேஷ்-இந்துத்துவா-காவுகொண்ட-இன்னோர்-இன்னுயிர்/91-203767

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.