Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவை ஆட்டிப்படைக்கும் சிறீநீரக நோய்த்தாக்கம்!

Featured Replies

Vavu-2.jpg?w=620

தமிழ் மக்களைக் கடந்த 30 வருடங்களாக காவுகொண்ட யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களை நோய்கள் ஆட்கொண்டுள்ளமை அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்றது. மனித சமூகத்தில் பல்வேறு நோய்கள் காலத்திற்கு காலம் தாக்கம் செலுத்தி வரும் நிலையில், நோய்த் தாக்கத்திற்கான காரணிகள் கண்டறியப்படாமலேயே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், சிறுநீரக நோய் என்பது வவுனியா மாவட்டத்தை ஆட்டிப்படைக்கும் பூதாகாரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

நிலத்தடி நீர் மாசடைகின்ற காரணத்தினால் அதனைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு சிறுநீரக நோய்த்தாக்கம் அதிகளவில் உள்ளதாக கருதப்பட்ட போதிலும், இந்த நோய்க்கான காரணங்கள் இதுவரை சரியான முறையில் கண்டறியப்படவில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக காணப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை கல்சியம் அதிகளவாக உள்ள நிலத்தடி நீர் என்ற காரணம் கொல்லப்பட்டாலும் மறுபுறம் விவசாயிகளை அதிகமாக ஆட்கொள்ளும் நோயாக சிறுநீரக நோய் பார்க்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் கடும் வெயிலில் தொடர்ச்சியாக பணியாற்றும் அதேவேளை, அவர்கள் தினமும் அருந்தும் நீரின் அளவு குறைவாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதுவும் இந்த நோய் அதிகரிப்பிற்கு ஒரு காரணமாக கூறப்படுவதோடு, இதற்கும் அப்பால் வவுனியா மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உள்ள பல்வேறான இரசாயன கூறுகளின் விளைவே இந் நோய்த்தாக்கத்திற்கு காரணமாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறான சூழலில், வவுனியாவில் செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவு அதிகளவான சிறுநீரக நோயாளர்களைக் கொண்ட பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் தட்டான்குளம் என்ற பிரதேசத்தில் அரசசார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டனர்.

இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட போது சிறுநீரக நோய்த்தாக்கம் ஏதுமின்றி காணப்பட்ட இக் கிராம மக்கள், நிலத்தடி நீரை பருகத் தொடங்க மெதுமெதுவாக சிறுநீரக நோய்த்தாக்கத்திற்கும் ஆளாகத் தொடங்கியுள்ளனர்.

இதனால் இன்று 135 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் சுமார் 100 பேர் வரையில் சிறுநீரக நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அண்மையில் ஓரிருவர் இறந்துள்ளதுடன் பலர் இந்நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் அதன் தாக்கம் தொடர்பாக பல தரப்பினருடனும் கலந்துரையாடிய நிலையில் குறித்த நோயை தடுப்பதற்கான வழிமுறைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தரான எஸ்.ஸ்ரீனிவாசனிடம் வினவியபோது,

சிறுநீரக நோய் தொடர்பாக வவுனியா மாவட்டம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் பிரதேசமாக மாறியுள்ளது. ஸ்ரீலங்காவில் சிறுநீரக நோய்த்தாக்கம் அதிகளவில் உள்ள மாவட்டங்களின் வரிசையில் அநுராதபுரம், பொலநறுவை வவுனியா மாவட்டங்கள் காணப்படுகின்றன.

நாளாந்தம் அதிகளவானோர் சிறுநீரக நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கான காரணங்கள் பலவாறாக கூறப்படும் நிலையிலும் சரியான காரணம் நிபுணர்களால் அடையாளப்படுத்தப்படாத நிலையில் அதிகளவான நோயாளர்கள் இந்நோய்க்கான கொடுப்பனவை பெறுவதற்காக நாளாந்தம் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

இது இந்த மாவட்டத்தில் சிறுநீரக நோய்த்தாக்கத்தின் வீச்சை எடுத்துக்காட்டுகின்றது. சிறுநீரக நோய்த்தாக்கம் உள்ளவர்களுக்கான கொடுப்பனவுகள் இரண்டு விதமாக வழங்கப்படுகின்றன. மத்திய அரசினால் வழங்கப்படுகின்ற 3000 ரூபா கொடுப்பனவு மற்றையது வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற 1000 தொடக்கம் 1500 வரையான கொடுப்பனவுகள்.
வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளில் வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 1795 வரையான நோயாளர்கள் பெறுகின்றனர். இவர்களில் வவுனியா நகரில் 1052 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 63 பேரும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 209 பேரும், செட்டிகுளம் பிரதேசத்தில் 471 பேரும் இந்தக் கொடுப்பனவைப் பெறுகின்றனர்.

இதில் எண்ணிக்கையை விடுத்து விகிதாசாரத்தின் அடிப்படையில் பார்த்தால், செட்டிகுளம் பிரதேசத்தில் இருபதாயிரம் முதல் இருபத்தோராயிரம் வரையான மக்களைக் கொண்ட பிரதேசத்தில் 471 பேர் இக்கொடுப்பனவைப் பெறுகின்றார்கள் என்பது அதிகளவானவர்கள் இங்கு பாதிக்கப்பட்டுள்ளமையைக் காட்டுகின்றது. இது பாரதூரமான நிலையை காட்டுகின்றது என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக வவனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனிடம் வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடு தொடர்பாக வினவியபோது,

எதுவித காரணங்களும் இன்றி மக்களைப் பாதிப்படையச் செய்யும் நோயாக சிறுநீரக நோய்த்தாக்கம் வேகமாக பரவுவதை அண்மைக்காலமாக காணக்கூடியதாக உள்ளது. குடிநீராக பயன்படுத்தும் நீர் மாசடைவதனாலும் அதில் உள்ள சில உலோக பதார்த்தங்களின் மூலக்கூறுகள் இருப்பதன் காரணத்தாலும் சிறுநீரகம் பாதிக்கப்படுவதாக கருதப்படுகின்றது.

அத்துடன் விவசாயிகளை இந்நோய்த் தாக்கம் அதிகமாக பாதிக்க காரணமாக இருப்பது விவசாயிகள் அதிகளவான வெப்பத்தில் வேலை செய்கின்ற போதிலும் அவர்கள் அருந்தும் நீரின் அளவு குறைவாக காணப்படுகின்றது. ஆகவே விவசாயிகள் அதிகளவான நீரை பயன்படுத்த வேண்டும். அத்துடன் சுத்தமான நீரை பயன்படுத்துவது சாலச்சிறந்ததாக காணப்படும்.

சாதாரணமாக ஒரு மனிதர் குறைந்தது 2 லீற்றர் நீரையாவது பருகவேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீர் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதனை பருகலாம். இல்லையேல் தாம் வழமையாக பருகும் நீரையேனும் அதிகளவில் பருகி வந்தாலும் எமது உடலில் உள்ள நச்சுத் தன்மையான பெருட்கள் வெளியேற்றப்படும் பட்சத்தில் இந் நோய்த்தாக்கம் குறைவாக இருக்கும்.

இதேவேளை செட்டிகுளம் பிரதேசத்தில் அதிகளவானோர் சிறுநீரக நோய்த் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் வவுனியா தெற்கில் கலாபோகஸ்வெவ பகுதியில் இருந்தும் அதிகளவானோர் இந்நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சைக்காக வருகின்றனர்.

குறிப்பாக இம்மக்கள் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து இங்கு குடியேற்றப்பட்டிருந்தனர். அவர்கள் இங்கு குடியேறும்போது சிறுநீரக நோய்த்தாக்கம் இல்லாமலேயே வந்திருந்தனர். எனினும் தற்போது அவர்களில் அதிகளவானோர் இந்நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கான சிகிச்சை நிலையத்தில் சிறந்த வைத்திய சேவையை நாம் வழங்கி வருகின்றோம். இதற்கான தனியான பிரிவொன்றும் செயற்பட்டு வருவதுடன் 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இப்பிரிவில் தமது சிறுநீரக நிலை தொடர்பான பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துள்ள இந்த நோய்த்தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் வடமாகாண சபை உட்பட அனைவரதும் பங்களிப்பு தற்போது உள்ளதை விட மேலும் ஒரு மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்று வடமாகாண ஆளுநரின் செயலாளர் அ.பத்திநாதன் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் சிறுநீரக நோயாளிகள் அதிகரிக்க காரணமாகியுள்ள விவசாய இரசாயன உர வகைகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் பாவனை தொடர்பான கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களில் கடந்த 20 ஆண்டுகளாக மர்மமாக இருந்துவரும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மண்ணில் கலக்கும் இரசாயனப் பொருட்களே காரணம் என்று தமது ஆய்வுகள் உறுதிசெய்துள்ளதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நோயாளிகளின் அதிகரிப்புக்கு குடிநீர், உணவு, விவசாய இரசாயனம், மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் என்பன பிரதான காரணிகளாக அமைந்துள்ளதாக மருத்துவர்கள் சங்கம் தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளோ ஆக்கபூர்வமான செயற்பாட்டு திட்டங்களோ முன்னெடுக்கப்படவில்லை.

எனினும் வருமுன் காப்போம் செயற்றிட்டத்தை முன்னெடுத்து மக்களை சிறுநீரக நோய்த் தாக்கத்திலிருந்து மீட்டெடுக்க வடமாகாண சுகாதார அமைச்சு உட்பட இலங்கை சுகாதார அமைச்சும் விரைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 

தமிழ்லீடருக்காக வன்னிமகள்

http://tamilleader.org/?p=4364

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.