ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தால் சர்ச்சை – தமிழ் சினிமா கலைஞர்கள் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மீனாட்சிசுந்தரம் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், அவர் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள், குறிப்பிட்ட சில விஷயங்கள் சில நாட்களாக விவாதப் பொருளாகி இருக்கின்றன. ''பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா?'' என நேர்காணல் எடுத்த ஹரூண் ரஷீத் கேட்டார். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ''நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது. இது ஒருவேளை வகுப்புவாத விஷயமாகவும் இருந்திருக்கலாம். என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது'' என்றார். மேலும் 'சாவா' படம் பற்றி பேசுகையில், "அது பிளவுபடுத்தும் படம்தான். அதன் மூலம் அப்படம் பணம் ஈட்டியதாக நினைக்கிறேன். ஆனால், அதன் மையக்கருத்து வீரத்தைப் பற்றியது என நினைக்கிறேன்" என்றார். முழு பேட்டி பல விஷயங்களை விரிவாகச் சொல்லியிருந்தாலும், இப்படிப்பட்ட அவரின் சில கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பின. ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்கு பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் எதிர்வினையாற்றினர். ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து தான் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ மூலமாக விளக்கம் அளித்தார். தான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை என்றும், இந்தியா எப்போதுமே தனது வீடு, ஆசிரியர் மற்றும் மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் கோபம் தனது தந்தையின் பேட்டி, அவர் மீதான விமர்சனங்கள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகளும், இசையமைப்பாளர், பாடகியுமான கதீஜா, "தான் உணர்ந்த ஒரு விஷயத்தை அவர் பேசி இருக்கிறார். அது அவரது உரிமை. உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம், ஆனால், அவர் பேசவே கூடாது என அவரது உரிமையை மறுக்கக் கூடாது. உலகளவில் மதிக்கப்படும் ஒரு கலைஞனை அவமானம் என சொல்வது, நம்பிக்கை மீது கேள்வி எழுப்புவது எல்லாம் விமர்சனம் அல்ல. இதெல்லாம் வெறுப்பு பேச்சு" என சமூக ஊடகங்களில் கூறியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சாவா படம் பற்றி பேசுகையில், "அது பிளவுபடுத்தும் படம்தான். அதன்மூலம் அப்படம் பணம் ஈட்டியதாக நான் நினைக்கிறேன்" என்றார் ஏ.ஆர்.ரஹ்மான் 'அமீர் கான், ஷாருக்கான், இப்போது ஏ.ஆர்.ரஹ்மான்' இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 14 ஆண்டுகளுக்கு மேல் உதவியாளராக பணியாற்றியவரும், தற்போது இசையமைப்பாளராக இருப்பவருமான தாஜ்நுார் பிபிசி தமிழிடம், ''முந்தைய காலங்களில் இப்படிப்பட்ட அழுத்தம் இல்லை. இப்போது இருப்பதாக தோன்றுகிறது. உண்மையை சொன்னால் அவர் மட்டுமல்ல, அப்படிப்பட்ட பாகுபாட்டை பலரும் அனுபவிக்கிறார்கள்.'' என்றார் ''இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது கொடுத்தவருக்கே இப்படிப்பட்ட நிலை என்று சொல்லும் அளவுக்கு எதிர்தரப்பின் தாக்கம் அதிகரித்திருக்கிறது" என்றார். மேலும், "பாலிவுட்டில் அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் இல்லையா? 'அவர்கள் கொடிகட்டி பறக்கவில்லையா' என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கும் பிரச்னைகள் இருக்கின்றன. அது பல நேரங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. இத்தனை நாட்கள் ஏ.ஆர்.ரஹ்மான் எதையும் வெளியில் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் சொல்லியிருக்கிறார்'' என்கிறார் தாஜ்நுார். பட மூலாதாரம்,Getty Images 'இசைக் கச்சேரிகளில் கவனம் செலுத்துகிறார்' இசையமைப்பாளரும், பாஜக நிர்வாகியுமான தீனா பிபிசி தமிழிடம், ''சினிமாவில் மாற்றங்கள் வரும். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வந்த மாற்றம் ஒரு காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவுக்கும் வந்தது. புதியவர்கள் வரவால் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதற்காக யாருடைய திறமையையும் குறை சொல்ல முடியாது. இன்றைக்கு இசையமைப்பாளர்கள் சினிமா தவிர பல விஷயங்களில் புகழ், பணத்தை சம்பாதிக்கிறார்கள். சமீபகாலமாக ஏ.ஆர்.ரஹ்மான் கவனம் உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துவதில் இருக்கிறது. அதனால் பட வாய்ப்புகள் குறைந்திருக்கலாம்.'' என்றார் ''மும்பையில் இன்னும் ஷாருக்கான், அமீர்கான் முன்னணியில் இருக்கிறார்களே? ஏ.ஆர்.ரஹ்மானை மட்டும் எப்படி புறக்கணிக்க முடியும்? அவர் மீது இந்திய மக்களுக்கு தனி மரியாதை, மதிப்பு உண்டு. அவரின் வெளிநாட்டு பயணம், நேரமின்மை காரணமாக சில விஷயங்கள் நடந்திருக்கலாம்.'' "அவர் இசைக்கு எப்போதும் 'மவுசு' உண்டு. அவர் இசை மக்கள் மனதில் இருக்கும்" என்கிறார் தினா. ''ஒவ்வொரு காலகட்டத்திலும் புதியவர்கள் வருவார்கள். இவ்வளவு ஏன், ஏ.ஆர்.ரஹ்மானே ராமாயணம் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அது, அவருக்கும் பெருமை. அவருக்கு வேலை குறையவில்லை. அடுத்த பெரிய வேலை வந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்'' என்கிறார் தீனா பட மூலாதாரம்,x படக்குறிப்பு,"ஏ.ஆர்.ரஹ்மான் கவனம் உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துவதில் இருக்கிறது. அதனால் பட வாய்ப்புகள் குறைந்திருக்கலாம்" என்கிறார் தீனா 'களங்கம் தரும்' பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பிபிசி தமிழிடம் கூறுகையில் , 'பொதுவாக, 'கலை மக்களுக்காகவே' என்றும் 'கலை கலைக்காகவே' என்றும் இருவேறு தரப்பு உண்டு. முதலாளியம் வல்லாண்மை செய்யத் தொடங்கிய நொடியில் இருந்து இவை இரண்டையும் கடந்து 'கலை லாபத்திற்காகவே' என்ற நிலை உருவாகி ஆதிக்கம் செய்து வருவதைப் பார்க்கிறோம்.'' என்றார் ''இப்படியான சூழலில், தனது கலையை ஒரு கலைஞன் லாபமாக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்படுகிறான். காலப்போக்கில் கலை என்பது பண்டம் என்ற நிலை மாறி கலைஞனே பண்டமாக உருவெடுக்கும் சூழ்நிலை வந்தது.'' என்றார் ''பெருங்கலைஞர்களுக்கு உலகமெங்கும் நடக்கும் ஒன்றுதான் இது. ஒரு கலைஞன் விலக்கப்படுவது அவனது கீழ்மையினால் என்றால் அது அறம் சார்ந்தது. ஆனால், பல்வேறு நுண்மையான நச்சுக் காரணங்களால் ஒரு கலைஞன் புறக்கணிக்கப்படுவது அல்லது ஒதுக்கப்படுவது கலைக்கு மட்டுமல்ல தேசத்திற்கே களங்கம் தரும்.'' என்கிறார் கார்த்திக் நேத்தா. '10 ஆண்டுகளாக இந்திய சினிமா மாறுகிறது' இயக்குனர் அமீரிடம் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் பேசினார் என்று கேட்பதை விட, எதற்காக பேசினார் என்பதை நாம் யோசிக்க வேண்டும். ஆஸ்கர் விருதை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்தவர் இப்படி பேச காரணம் என்ன?'' என கேள்வி எழுப்பினர். ''இப்போது பாலிவுட்டில், மற்ற மொழிகளில் வேறு வகை படங்கள் அதிகம் வருகின்றன. 'பத்மாவத்' வருகிறது, 'காஷ்மீர் ஃபைல்ஸ்' வருகிறது. 'கேரளா ஸ்டோரி' வருகிறது. நம்பிநாராயணன் கதை வருகிறது. கேரளா ஸ்டோரி பற்றி, கர்நாடக தேர்தலில் பேசுகிறார்கள். சினிமா வேறு மாதிரி ஆகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நடக்கின்றன. இவ்வளவு ஏன், ரஹ்மானே சாவா படத்துக்கு இசையமைக்கிறார். பின்னர், பல விஷயங்களை உணர்ந்துகொள்கிறார்.'' என்கிறார் அமீர். ''அந்த பேட்டியில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை உன்னிப்பாக கேளுங்கள். இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத பண்பாளர் இப்படி பேச வேண்டிய தேவை என்ன? அதைப் புரிந்துகொள்ளுங்கள்." என்று கூறினார் அமீர். பட மூலாதாரம்,Getty Images 'கலை மீது பூசப்படும் சாயம் நாட்டுக்கே கேடு' பிபிசி தமிழிடம் பேசிய நடிகரும், இயக்குனரும் திமுகவை சேர்ந்தவருமான போஸ் வெங்கட், "கலைத்துறையில் சாதி, மதம், அரசியல், அதிகாரம் நுழைவது என்பது பஞ்சுகூடத்தில் தீ வைப்பது போல. ஒரு கலைஞனின் பேச்சும், படைப்பும் சுயநலமற்றது, அது அடர்ந்த காட்டில் மெல்லிய தென்றல் போன்றது. அதை, அதன் போக்கில் விடுவது சமூகத்திற்கு நல்லது . அதன் மீது பூசப்படும் சாயம் கலைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கேடு'' என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89qq2gg1dzo
By
ஏராளன் · 2 hours ago 2 hr
Archived
This topic is now archived and is closed to further replies.