Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞாயிறு அரங்கம்: எங்கே போயின அந்த பேனர்கள்?

Featured Replies

ஞாயிறு அரங்கம்: எங்கே போயின அந்த பேனர்கள்?

 

 
22chdasnayakan-poster1

டும் பசிகொண்ட கிழவனைப் போல, காலம் பலவற்றை உண்டு செரித்துவிடுகிறது. அவற்றில் அது அதிகமும் தின்றது கலைகளைத்தான். சினிமா துணி பேனர் வரையும் கலை அவற்றில் ஒன்று. சரியாக 17 வருடங்களுக்கு முன்புவரை திரையரங்குகளின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் துணி பேனர்களில், அடர் வண்ண ஓவியங்களாகச் சிரித்தனர் நம் அபிமான நட்சத்திரங்கள். இந்தத் துணி பேனர்கள் காணாமல்போனதன் பின்னணியில், டிஜிட்டல் பிரிண்டிங் எனும் கள்வன் ஒளிந்திருக்கிறான். லாகவமாக நறுக்கப்பட்ட மர ஃபிளைவுட்களில் 30 அடி முதல் 100 அடி உயரம் வரை வரையப்படும் கட்-அவுட்களில் விஸ்வரூபம் காட்டி நிற்கும் சூப்பர் ஸ்டார்களின் தயவில் துணி பேனரில் பயன்படுத்தப்பட்ட அடர் வண்ணங்கள், தங்கள் கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கின்றன. ஓவியக் கலையை முறையாகக் கற்றுக்கொள்ளாமலேயே அனுபவம் தந்த பாடத்தில் படித்து, அச்சுப்பிசகாமல் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் எனக் கடந்த 4 தலைமுறை நடிகர்களைக் கண்ணை மூடிக்கொண்டு வரையும் பேனர் ஓவியர்கள், தற்போது ‘ஃபிளக்ஸ்’ பேனரை வடிவமைக்கும் டிசைனர்களாக மாறிவிட்டார்கள். வயிற்றுப் பாட்டுக்கான போராட்டத்தில் கற்ற கலையை மறக்கச் செய்து விடுகிறது நவீனம். இப்படி நாம் இழந்துவிடுகிற பலவற்றையும் கடந்த காலத்தைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

22chdasaravindan%20movie%20panner
    சென்னைக்கு வெளியே தமிழகத்தின் மற்ற நகரங்களில் பேனர், கட்-அவுட் கலாச்சாரம் எப்படியிருந்தது? “ஒரு கட்டத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களே பேனர் செலவுகளை ஏத்துக்க ஆரம்பிச்சதும் தஞ்சை, திருச்சி, கோவை, மதுரை மாதிரியான பெரிய ஊர்களில் இருந்த ஓவியர்களே பேனர், கட்-அவுட் வரையுறதுல கில்லாடிகளா மாறினாங்க. பேனர்ல ஒவ்வொரு நட்சத்திரத்தையும் வரையுறதுல ஒவ்வொரு ஓவியருமே திறமையானவங்களா இருப்பாங்க. எல்லாருமே சிவாஜி, எம்.ஜி.ஆர், கலைஞரை ஈஸியா வரையக் கத்து வெச்சிருப்பாங்க. இவங்கள யாரு நல்லா வரையுறதுங்கிறதுல ஒரு பெரிய போட்டியே இருக்கும். மொக்கயா வரைஞ்சுட்டா ஓட்டி எடுத்துடுவாங்க. நாயகன் கமல், பாட்ஷா ரஜினியை வரையுறதுலயும் பெரிய போட்டியே நடக்கும்.
 

மறைந்துபோன எத்தனையோ விஷயங்களைக் கதைக் களமாகக் கொண்டு தனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திய தமிழ் சினிமா, துணி பேனர்களின் காலத்தை யும் ஒரு திரைப்படத்தில் நினைவேந்தியது. கடந்த மார்ச் மாதம் வெளியான ‘எங்கிட்ட மோதாதே’ படம், துணியில் வரையப்படும் சினிமா பேனர்கள், பிளைவுட்களில் வரையப்படும் கட்-அவுட்களின் காலத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது.

 

‘வணங்காமுடி’க்கு வானுயுர கட்-அவுட்

“அன்றைக்கு சென்னை அண்ணாசாலையில் சில இடங்களில் எப்பவும் டிராஃபிக் ஜாம்தான். ஆனந்த் தியேட்டர் எதிர்ப்புறம், இப்போ காலி இடமா கிடக்கிற சபையர் தியேட்டர் எதிர்ப்புறம், புகாரி ஹோட்டல் எதிர்ப்புறம் என இந்த மூன்று இடங்களில் வைக்கப்படும் சினிமா பேனர்களையும் கட்-அவுட்களையும் மக்கள் வாயப் பிளந்துகிட்டு வேடிக்கை பார்க்காமல் அந்த இடத்தைக் கடந்துபோக மாட்டாங்க. அதனால எப்பவும் அங்க டிராஃபிக் ஜாம்தான். அதேபோல சென்னையில அன்றைக்கு முக்கியமான எல்லா தியேட்டர் வாசல்லயும் 20 X 40 அளவுல பேனர் சுண்டி இழுக்கும், ‘படகோட்டி’ எம்.ஜி.ஆரையும் சரோஜா தேவியையும் பேனர்ல அவ்வளவு பெரிய உருவமா ‘ப்ளோரசன்ட்’ கலர்ஸ்ல பார்த்துட்டு, மந்திரிச்சு விட்ட மாதிரி திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வருவாங்க. நடிகர் திலகம் இன்னும் ஸ்பெஷல். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ சிவாஜி கையில வாளைப் பிடிச்சுக்கிட்டு நிக்கிற பேனரா இருக்கட்டும், கோட் சூட் போட்டு, கையில மதுக் கோப்பையை ஏந்தி நிற்கிற ‘வசந்த மாளிகை’ சிவாஜியா இருக்கட்டும், ஒரு பேனர் ஆர்ட்டிஸ்ட் காட்டுற திறமை அந்தப் படம் ஓடி முடியிற வரைக்கும் தியேட்டர் வாசல்ல கம்பீரமா இருக்கும்.

‘வணங்காமுடி’ படத்துக்காக அந்தப் படம் ரிலீஸ் ஆன 1957-ல் சென்னை சித்ரா தியேட்டர் வாசல்ல சிவாஜிக்கு 80 அடி கட்-அவுட்டை அப்பா நிர்மாணித்தது அப்போ பத்திரிகைகள்ல பரபரப்பான செய்தி. அதுக்கு அப்புறம் கட்-அவுட் பேனர் வைக்கிறதுல பெரிய போட்டியே உருவாகியிருக்கு. எங்க அப்பா, சிவாஜியோட தீவிரமான ரசிகர். சிவாஜிக்கும் அவர் நடிச்சு வெளியாகிற படங்களுக்கும் சினிமா பேனர், கட்- அவுட் வரையணும்னா அதுக்கு அப்பா நடத்திட்டு வந்த மோகன் ஆர்ட்ஸ்தான் அத்தாரிட்டி.

22chdasKASI%20MOVIE%20PANNER
 

“எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், விஜய்காந்த் படங்களுக்குன்னு தனித்தனியா பேனர்கள் வரையுற பட்டறைங்க இருந்தது. சென்னையப் பொறுத்தவரைக்கும் மோகன் ஆர்ட்ஸ், பாபா ஆர்ட்ஸ், ஸ்வாமி ஆர்ட்ஸ், ஃபாய் ஆர்ட்ஸ், சந்திரன் ஆர்ட்ஸ், ஜெயராம் ஆர்ட்ஸ், ஜே.பி.கிருஷ்ணா, டிடி ஆர்ட்ஸ், ஜெயா ஆர்ட்ஸ், பெல்ஸ் ஆர்ட்ஸ் என்று கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் ஏரியால மட்டுமே 100-க்கும் மேல சினிமா பேனர் வரையுற ஓவியப் பட்டறைகள் இருந்துச்சு. இப்ப இதுல 25 பட்டறை கள் ஃப்ளெக்ஸ் பிரிண்டிங் தொழிலுக்கு மாறிவிட்டன. மத்தவங்க, ஃப்ளெக்ஸை ஏத்துக்க மனமில்லாம, இந்தத் தொழிலை விட்டே போயிட்டாங்க. நாங்களும் ஃப்ளெக்ஸ் தொழிலுக்கு மாறிட்டோம். 12 வருஷத்துக்கு முன்னாடி ஃப்ளெக்ஸ் அறிமுகமான புதுசுல, ஒரு சதுர அடியோட விலை 280 ரூபாயா இருந்தது. ஆனா இப்போ ஒரு சதுர அடி 5 ரூபாய்க்குக்கூட கிடைக்கிறது” என்கிறார், புகழ்பெற்ற மோகன் ஆர்ட்ஸைத் தொடங்கி நடத்திய கே.மோகன கிருஷ்ணனின் மகன்களில் ஒருவரான 65 வயது ஹரிநாத் குமார்.

 

பெட்டியுடன் பயணித்த பேனர்கள்

“பட ரிலீஸ் தேதி உறுதியானதும் 10 நாட்களுக்கு முன்னாடியே தயாரிப்பாளர் பேனர் ஆர்டர் கொடுத்துடுவார். எத்தனை படப் பெட்டிகள் வெளியூர் போகுதோ அத்தனை பேனர்கள் எங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். இரவு, பகலா ஆர்ட்டிஸ்ட் வரைவாங்க. பேனர் நல்லா காய்ந்ததும் பேனர்களை மூங்கில் குச்சிகள்ல ரோல்மாதிரி சுத்தி, பேக் பண்ணி, தியேட்டர் அட்ரஸ் லிஸ்ட் போட்டு வெளியூர் பஸ்ல, மாவட்ட வாரியா அனுப்பிடுவோம். அடுத்த வெள்ளிப் பட ரிலீஸ்னா 4 நாள் முன்னாடியே தியேட்டர்ல பேனரைக் கட்டிடுவாங்க. சென்னைய பொறுத்தவரைக்கும் நாங்களே தியேட்டருக்குப் போய் கார்பெண்டர்களை வெச்சு சட்டம் அடிச்சு பேனரைக் கட்டுவோம். பல தியேட்டர்கள்ல நிரந்தரமா இரும்புல சட்டம் ஃபிக்ஸ் பண்ணி வெச்சிருப்பாங்க. அதுல இழுத்துப் பிடிச்சு சுருக்கம் இல்லாமக் கட்டிட்டு வந்துட வேண்டியதுதான். தியேட்டர் வாசல்ல வைக்கப்படுற துணி பேனர்கள் சினிமாவை ஒரு கொண்டாட்டமா மாத்தின காலம் அது” என்று வியந்துபோகிறார் ஹரிநாத் குமார்.

 

பேனரும் கட்-அவுட்டும் இணைந்த கலவை

22chdasguru%20sisyan
 

கட்-அவுட் முறையுடன் 3டி தோற்றம் கொண்டதாக வெளிப்புற சினிமா விளம்பரங்களை மாற்றிக் காட்டி புதுமை செய்தவர் ஓவியர் ஜே.பி.கிருஷ்ணா. 90-களில் அண்ணா சாலையில் இவரது கை வண்ணத்தில் உருவான 3டி பேனர் கட்- அவுட்கள் மிகப் பிரபலம்.

“நேதாஜி இயக்கத்துல விஜயகாந்த் நடிச்ச படம் ‘சொல்வதெல்லாம் உண்மை’. அந்தப் படத்துக்குத்தான் முதன்முதலில் பேனர் வேலை. அதன் பிறகு, விஜயகாந்த் நடிக்கிற எல்லாப் படங்களுக்கும் நான்தான் வரையணும்னு அவர் சொல்லிட்டார்.

22chdasJPKRISHNA%20ARTIST

ஜே.பி.கிருஷ்ணா

ஒருநாள் இயக்குநர், நடிகர் பார்த்திபன் சார், எங்க ஆபீஸைத் தேடிக் கண்டுபிடிச்சி வந்துட்டார். எனக்கு ஆச்சரியம் தாங்கல. ஓடிப்போய் அவரை வரவேற்று கைகுலுக்கி ‘உங்க படங்களுக்கு மட்டுமில்ல, புதுமையான உங்க விளம்பர உத்திகளுக்கும் ஐடியாக்களும் நான் பெரிய ரசிகன்’ என்றேன். அவரோ ‘நான் மனசார ஒண்ணு சொல்றேன். உங்க ஓவியங்களுக்கும் தமிழ் லெட்டர்ஸுக்கும் கட்-அவுட்களுக்கும் நான் தீவிர ரசிகன் சார்’னு சொன்னார். ஒரு ஓவியனா எனக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரம் அது. அவர்தான் ‘சினிமா பேனரையும் கட்-அவுட்டையும் கலந்து ஏன் நாம புதுசா ட்ரை பண்ணக் கூடாது’ன்னு கேட்டார். அவர் தந்த ஆதரவு மூலம் பேனர், கட்- அவுட் இரண்டையும் கலந்து, 3டி தன்மையோட கட்-அவுட்ல ஜிம்மிக்ஸ் செய்ய ஆரம்பித்தோம். அதுக்கு மிகப் பெரிய வரவேற்பு. பார்த்திபன் சார் படங்களுக்கு 3டி பேனர் வைக்க அப்பவே லட்சக்கணக்குல செலவுசெய்வார். அவர் கொடுக்குற ஐடியாக்கள் அவ்வளவு அருமையா இருக்கும். அவரோட ‘உள்ளே வெளியே’ படத்துக்கு அண்ணா சாலையில நாங்க வெச்ச பேனர், பத்திரிகைகள்ல செய்தி ஆகிடுச்சு. அந்த 3டி கட்-அவுட் பேனரை நேரா பார்த்தீங்கன்னா, பார்த்திபன் ஜெயில்ல இருக்கிற மாதிரி தெரியும். அதே பேனரை இடதுபக்கம் ஒரு நூறடி தள்ளிப்போய்ப் பார்த்தீங்கன்னா, ஒரு பார்த்திபன் தெரிவார். வலது பக்கம் போய்ப் பார்த்தால், இன்னொரு பார்த்திபன் தெரிவார். இதை வேடிக்கை பார்க்கிறேன்ற பேர்ல பைக், ஸ்கூட்டர்ல போன பல பேர் கீழ விழுந்து புகார் ஆகிடுச்சு. அந்த அளவுக்கு அந்த பேனர் எனக்குப் பேர் வாங்கிக் கொடுத்துடுச்சு. அதுக்கு அப்புறம் மணிரத்னம், ஷங்கர் படங்களுக்கு இதே பாணியில 3டி கட்- அவுட் பேனர் பண்ண ஆரம்பிச்சேன்.

“இன்னொரு அனுபவம் மறக்க முடியாதது. இயக்குநர் சசியோட முதல் படம் ‘சொல்லாமலே’. ஒரு ஓவியனோட காதல் கதை. அந்தப் படத்துக்கு அண்ணா சாலையில ஒரு 3டி கட்- அவுட் பேனர் வெச்சோம். ஒரு ஓவியர் தன்னோட உதவியாளர்களோட சாரம் கட்டி, அதுல பெயிண்ட் வாளிகளைக் கட்டித் தொங்கவிட்டுக்கிட்டு வரையுற மாதிரி 3டி எஃபெக்ட்ஸ்ல செஞ்சோம். இரவோட இரவா இதை ஃபிக்ஸ் பண்ணிட்டோம். மறுநாள் காலையில அதைப் பார்த்த மக்கள், பெயிண்டருங்க ஏதோ விளம்பரத்துக்குப் படம் வரையுற வேலை நடக்குதுன்னு நினைச்சிட்டுப் போனாங்க. 4 நாளுக்கு அப்பறமும் அந்த ஆளுங்க அப்படியே அசையாம இருந்ததும்தான் புரிஞ்சுது இது கட்-அவுட்டுன்னு. ‘சொல்லாமலே’ கட்-அவுட் பத்தி பல பத்திரிகைகள்ல நியூஸ் வந்துச்சு” என்று பேனர் கட்- அவுட் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் ஜே.பி.கிருஷ்ணா.

 

ரஜினி - கமல் வரைவதில் போட்டி

22chdasvisualdasan%20artist

விசுவல்தாசன்

சென்னைக்கு வெளியே தமிழகத்தின் மற்ற நகரங்களில் பேனர், கட்-அவுட் கலாச்சாரம் எப்படியிருந்தது? “ஒரு கட்டத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களே பேனர் செலவுகளை ஏத்துக்க ஆரம்பிச்சதும் தஞ்சை, திருச்சி, கோவை, மதுரை மாதிரியான பெரிய ஊர்களில் இருந்த ஓவியர்களே பேனர், கட்-அவுட் வரையுறதுல கில்லாடிகளா மாறினாங்க. பேனர்ல ஒவ்வொரு நட்சத்திரத்தையும் வரையுறதுல ஒவ்வொரு ஓவியருமே திறமையானவங்களா இருப்பாங்க. எல்லாருமே சிவாஜி, எம்.ஜி.ஆர், கலைஞரை ஈஸியா வரையக் கத்து வெச்சிருப்பாங்க. இவங்கள யாரு நல்லா வரையுறதுங்கிறதுல ஒரு பெரிய போட்டியே இருக்கும். மொக்கயா வரைஞ்சுட்டா ஓட்டி எடுத்துடுவாங்க. நாயகன் கமல், பாட்ஷா ரஜினியை வரையுறதுலயும் பெரிய போட்டியே நடக்கும்.

அதேபோல சென்னையவிட வெளியூர் ஆர்ட்டிஸ்ட்டுங்கதான் கதாநாயகிகளுக்கு பேனர்ல முக்கியத்துவம் கொடுத்து வரைவாங்க. ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, தொடங்கி ரம்யா கிருஷ்ணன் வரைக்கும் அந்தந்தப் படத்துல நட்சத்திரங்களோட கெட்-அப் எப்படி இருக்குமோ அதே துல்லியத் தோடு வரைவாங்க” என்கிறார் தஞ்சை ஓவியரான விசுவல்தாசன்.

 

மூளைக்கு வேலை

“ஃபிளைவுட் இல்லாமல் எப்படி கட்-அவுட் வரைய முடியாதோ அப்படித்தான் ‘பவுடர் கலர்ஸ்’ இல்லாமல் பேனர்கள் வரைய முடியாது. காட்டன் துணில காடா துணிதான் நாங்க பேனருக்குப் பயன்படுத்துவோம். காடா துணியில பல வெரைட்டி இருக்கு. அது நல்ல திக்கா இருக்க 60 கவுண்ட் காடா துணிதான் பேனருக்குச் சரியா இருக்கும். அதோட ‘சாக்’ பவுடர், வஜ்ஜிரம் கலந்து பேனருக்கு அடிப்போம். அது உலர்ந்ததும் அதுக்கு மேல பிரைமர் அடிப்போம். அதுவும் உலர்ந்ததும் ‘லேண்டர்ன் புரஜெக்டர்’ செட் பண்ணி, அதுல போட்டோவோட நெகட்டிவைச் சொருகி, தேவையான அளவுக்கு போகஸ் பண்ணி உருவம் பேனர்ல விழுந்ததும், பென்சில் ஸ்கெட் பண்ணிடுவோம். சினிமா பேனர் என்றாலே 20 x 10 அளவுதான் ரெகுலர் சைஸ். பவுடர் கலர்ஸ் கூட ‘லின்ஸ்டு’ ஆயில் கலந்து, அதை பெயிண்ட்டா மாத்துவோம்.

பேசிக் கலர்ஸ் ரெடி பண்ணிட்டு, அதுக்கப்புறம் என்ன கலர் தேவையோ அதை மிக்ஸ் பண்ணிக்கிட்டதும் வேலை தொடங்கிடும். லேண்டன் புரஜெக்டர் இல்லாமல் கட்டம் போட்டு வரையுறவங்க, ஃப்ரீ ஹேண்ட் ஸ்கெட்ச் போடுறவங்கன்னு திறமையான ஓவியர்களும் உண்டு. பல லட்சங்கள் விலைக்கு விற்கிற ஒரு ஓவியருக்கு எவ்வளவு மூளை உழைப்பு இருக்குமோ அதே அளவு ஒரு பேனர் ஓவியரும் வேலை செய்யணும்.

ரசிகர்களை ஈர்க்கிற மாதிரியான வண்ணங்களக் கொண்டுவரணும். லைட் அண்ட் ஷேடு காட்டணும், எழுத்து கச்சிதமா இருக்கணும். மூளைக்கு மட்டுமில்ல, உடம்புக்கும் கடுமையான உழைப்புதான். ஒரு நாளைக்கு ஒரு ஓவியர் அதிகபட்சம் 2 பேனர் வரையலாம். 20 x100 கட்- அவுட் என்றால், அதை உருவாக்கக் குறைஞ்சது 10 நாட்கள் ஆகும். ‘கபாலி’ ரிலீஸ் சமயத்துல திருச்சியில ரசிகர்கள் வெச்ச 100 அடி கட் -அவுட் ரொம்ப பேசப்பட்டுச்சு. முட்டி வரைக்கும் ஒரு பகுதி, இடுப்பு வரைக்கும் ஒரு பகுதி, கழுத்து வரைக்கும் ஒரு பகுதி, தலை ஒரு பகுதின்னு தனித்தனியா வரைஞ்சு சாரம் கட்டி, அதுல கட் -அவுட்டை நிறுத்தணும். இது லேசுப்பட்ட காரியம் இல்ல. இந்த மாதிரி எந்த ரிஸ்க்குமே இல்லாம மிக மலிவா போனதுனாலதான் பேனரோட இடத்தை ஃப்ளெக்ஸ் கபளீகரம் பண்ணிடுச்சு” என்கிறார் ஓவியர் விசுவல்தாசன்.

 

deepavali%20wraper

‘ தி இந்து’ தீபாவளி மலர்-2017ல் வெளியான கட்டுரை விலை: ரூ.140

2008-ல் தடை

பேனர் மற்றும் கட்-அவுட் கையால் வரையும் கலையாக இருந்ததால் அதில் இருந்த கலைவண்ணம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. தமிழகத்தின் 4 முக்கிய மாநகரங்களில் கடந்த 2005-ல் முதன்முதலில் ஒரு இந்திய பன்னாட்டு சிகரெட் நிறுவனம் 40x100 என்ற அளவில் ஃப்ளெக்ஸ் விளம்பரம் அமைத்ததும், திரையுலகினர் அதன்பால் ஈர்க்கப்பட்டனர். 2006 முதலே சினிமா பேனர்கள் தங்கள் இடத்தை இழக்கத் தொடங்கினாலும் கடந்த 2008-ல் ஹோர்டிங்குகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அந்தத் தடையும் ஃப்ளெக்ஸ் பேனர்களின் டிஜிட்டல் பிரிண்டிங் துல்லியமும் விலை மலிவும் துணி பேனர்களை விரட்டி அடித்துவிட்டன. ஆனால், நமது பக்கத்து நாடான வங்காள தேசம், திரைப்படங்களுக்கு இன்னும் துணி பேனர் விளம்பரங்களைப் பயன்படுத்திவருவது ஆச்சரியமான ஒன்று

ஹாலிவுட்டிலிருந்து இறக்குமதி

கறுப்பு - வெள்ளையாக இருந்த சினிமாவில், தங்கள் அபிமான நட்சத்திரங்களை மக்கள் வண்ணமாகப் பார்க்க ஆசைப்பட்டதன் விளைவாக, ஹாலிவுட்டில் உருவானவைதான் கையால் வரையப்பட்ட சினிமா சுவரொட்டிகள். கறுப்பு -வெள்ளைப் படங்களில் நடித்திருக்கும் நட்சத்திரங்களின் முகங்களை குளோஸ் - அப் போர்ட்ரெய்ட் வண்ண ஓவியங்களாக வரைந்து, திரையரங்கின் வாசலில் வைத்து விளம்பரம் செய்யும் உத்தி, திரைப்படம் பேசத் தொடங்கியபோதே ஹாலிவுட்டில் தொடங்கிவிட்டது. ‘விண்டோ கார்ட்ஸ்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த வண்ணச் சுவரொட்டிகளே பின்னர் துணிகளில் வரைந்து திரையரங்கிலும் பொது இடங்களிலும் வைக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. இப்படி வரையப்படும் சுவரொட்டிகளில் அடர்த்தியான வண்ணங்களைப் பயன்படுத்தும் பாணியும் ஹாலிவுட்டிலிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. ஹாலிவுட்டிலிருந்து கதைகளையும் உத்திகளையும் கடன் வாங்கிக்கொண்ட இந்திய சினிமா, வண்ணத் துணி பேனர்களையும் தனது கறுப்பு - வெள்ளைப் படங்களுக்கு விளம்பர சாதனமாகப் பயன்படுத்திக்கொண்டது. துணிகளில் வரையப்படும் வண்ண சினிமா பேனர்களை 40-களிலேயே அதிகம் பயன்படுத்தியது வங்க, மராத்தி, இந்தி சினிமாக்கள்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, முதலில் கறுப்பு - வெள்ளை சுவரொட்டிகள், இரண்டு வண்ணச் சுவரொட்டிகள் என்று தொடங்கிய பின்னர், தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ படத்தில் தொடங்கி வண்ணச் சுவரொட்டிகள், வண்ணப் பாட்டுப் புத்தகங்கள் அச்சிடுவது வழக்கத்துக்கு வந்திருக்கிறது. இப்படி அச்சிடப்பட்ட சினிமா சுவரொட்டிகள் அனைத்தும் முதலில் நீர்வண்ணத்தின் மூலம் வரையப்பட்டு, பின்னர் பிளாக் முறையிலும் லித்தோ முறையிலும் அச்சிடப்பட்டிருக்கின்றன. கையால் வரையப்படும் சுவரொட்டிகள், துணிகளுக்கு இடம்பெயர்ந்து பேனர்களாக அவை புகழ்பெறத் தொடங்கியது எம்.ஜி.ஆரும் சிவாஜியும் புகழ்பெற்று விளங்கிய 60-களின் இறுதியில்.

http://tamil.thehindu.com/opinion/columns/article19900590.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.