Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா?

Featured Replies

 

ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா?

Wazeem.jpg

 

இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்து வாழும் பலர் அந்நாடுகளில் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் புரிந்து வருவதை ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி கேள்வியுற்றுள்ளோம். கல்வி, வியாபாரம் போன்ற துறைகளில் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த பலர் முன்னேற்றம் கண்டு உலகின் முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர். அதேபோல அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையிலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் சர்வதேச அரங்கில் இலங்கையின் நாமத்தை ஜொலிக்கச் செய்து வருகின்றமையையும் காணமுடிகின்றது.

விளையாட்டுக்கு இன, மதம், மொழி வேறுபாடு இல்லை என்பது போல நாடு, வலயம், கண்டம் என்ற வேறுபாடும் கிடையாது. திறமையானவர்களுக்கு எங்கு சென்றாலும் சாதனை படைக்கலாம் என்ற வாசகத்தை சான்று பகரும் வகையில் இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவரும், இலங்கை சார்பாக ஐரோப்பிய நாடுகளில் தொழில்சார் கால்பந்து போட்டிகளில் விளையாடி வருனின்ற முதல் வீரராகவும் விளங்குகின்ற ஜேர்மன் நாட்டில் உள்ளூர் கால்பந்து அரங்கில் பிரபல்யம் பெற்ற நட்சத்திரமாகத் திகழும் இலங்கையைச் சேர்ந்த வசீம் ராசிக்கின் கால்பந்து வாழ்க்கையைப் பற்றி இங்கு அலசி ஆராயவுள்ளோம்.

 

 

குருதலாவ புனித தோமஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை மேற்கொண்டு இலங்கை தேசிய ஹொக்கி அணியின் உப தலைவராக இருந்த வசீமின் தந்தையான ஜமால் ராசிக், ஐரோப்பிய நாடொன்றுக்குச் சென்று தொழில் புரிய வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நனவாக்கும் வகையில் 1971ஆம் ஆண்டு ஜேர்மனுக்குச் சென்றார். அங்கு ஒரு சாதாரண வாகன சாரதியாக பணிபுரிந்த அவர், பின்னர் வெளிநாட்டு தூதரகமொன்றில் பாதுகாப்பு அதிகாரியாகவும் கடமைபுரிந்தார். இந்நிலையில் 1993ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த ஜமால் ராசிக், 1994ஆம் ஆண்டு தனது மனைவியுடன் பேர்லினில் குடியேறினார். இந்த காலப்பகுதியில் குழந்தை வசீமும் இவ் உலகுக்கு காலடி எடுத்து வைத்தார்.

கால்பந்தை உயிரிலும் மேலாக மதிக்கின்ற, கால்பந்து விளையாட்டை மிகவும் நேசிக்கின்ற ஒருவராக இருந்த ஜமால் ராசிக், தன்னால் விளையாட முடியாமல் போன கால்பந்து விளையாட்டை தனது மகன் வசீமுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும், அவரை எப்படியாவது கால்பந்து விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும், உலகின் புகழ்மிக்க நட்சத்திர கால்பந்து வீரராக அவரை உருவாக்க வேண்டும் என்ற பல கனவுகளுடன் வசீமின் சிறுபராயத்தை கால்பந்து விளையாட்டுடன் இணைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

இதன் முதல் படியாக 1998ஆம் ஆண்டு நடைபெற்ற உலக் கிண்ண கால்பந்து போட்டிகளை பார்க்கச் செய்து கால்பந்து மீதான வசீமின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும் நோக்கில் தொலைக்காட்சிப் பெட்டியொன்றை வாங்கிக் கொடுத்தார். மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தனது குடும்ப வாழ்க்கையை கொண்டு சென்ற ஜமால் ராசிக், சிறுவனாக இருந்த வசீமை பேர்லின் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகின்ற கால்பந்து போட்டிகளை நேரில் சென்று பார்ப்பதற்காக தவறாமல் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன் பிரதிபலனாக, தனது எட்டு வயதில் கால்பந்து விளையாட்டை ஆரம்பித்த வசீம், இன்று ஜேர்மன் நாட்டில் நட்சத்திர தொழில்முறை கால்பந்து வீரராக ஜொலித்துக்கொண்டு இருக்கின்றார்.

wazim.jpgசிறுவயது முதல் பாடசாலை மட்டத்தில் கால்பந்து விளையாட்டில் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வந்த வசீம், தனது 16ஆவது வயதில் அதாவது 2010ஆம் ஆண்டு ஜேர்மன் தேசிய கனிஷ்ட அணியில் விளையாடும் அரிய வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். எனினும் ஜேர்மன் அணிக்கு தெரிவு செய்வதற்காக 2 கட்டங்களாக நடாத்தப்பட்ட பயிற்சிப் போட்டியின் 2ஆவது போட்டியில் வசீம் துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளானார். எதிரணியில் விளையாடிய துருக்கி நாட்டைச் சேர்ந்தவரும், தற்போது லிவர்பூல் கழகத்துக்காக விளையாடி வருகின்ற எம்ரகான், வசீமினால் எடுத்துச் சென்ற பந்தை தடுத்து நிறுத்துவதற்காக முறையற்ற விதத்தில் அவரை வீழ்த்த முற்பட்ட போதே அவர் உபாதைக்குள்ளானார். இதனால் தோள்பட்டை மற்றும் கால்களில் பலத்த உபாதைக்குள்ளான வசீம், சுமார் 4 மாதங்களாக கால்பந்து விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். இதன் காரணமாக ஜேர்மன் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை வசீம் துரதிஷ்டவசமாக இறுதிக் கட்டத்தில் தவறவிட்டார்.

 

 

இதனையடுத்து, உயர்தரம் படித்துக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் ஜேர்மனியில் உள்ள ஹம்பெர்க், ஒல்ட் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட முன்னணி கழகங்கள் வசீமை ஒப்பந்தம் செய்ய முந்தியடித்தாலும், பெற்றோரின் வேண்டுகோளுக்கு அமைய அவ்அழைப்புக்களை அவர் மறுத்தார். எனினும், பிற்காலத்தில் ஜேர்மனியில் உள்ள கழகங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முடிவுசெய்தார்.

இந்நிலையில், வசீம் தனது தொழில்முறை கால்பந்து விளையாட்டை ஜேர்மனியின் பிரபல கால்பந்து கழகமான யூனியன் பேர்லீன் கழகத்தில் ஆரம்பித்தார். 2011 முதல் 2015 வரை அக்கழகத்துக்காக வசீம் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், இடைநடுவில் ஏற்பட்ட உபாதைகள் காரணமாக அவரால் எதிர்பார்த்த அளவு சோபிக்க முடியாமல் போனது.

ஆனாலும், அக்கழகத்துக்காக 2012 – 2013 பருவகாலத்தில் 6 கோல்களையும், 2013 – 2014 பருவகாலத்தில் 6 கோல்களையும் பெற்றுக்கொண்டதுடன், 2014 – 2015 பருவகாலத்தில் 5 கோல்களையும் பெற்றுக்கொண்டார்.

cbw.jpgஇதனையடுத்து அவர் ஜேர்மனியின் மிகவும் பழமையான கழகங்களில் ஒன்றான மங்தபேர்க் கால்பந்து கழகத்தில் 2 வருடங்களுக்காக ஒப்பந்தம் (2015 ஜுலை முதல்) செய்துகொண்டார். எனினும், இவ்வருடம் ஜுலை மாதம் அக்கழகத்துக்காக விளையாடிய அவர், 32 போட்டிகளில் விளையாடி 3 கோல்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

எனினும், குறித்த ஒப்பந்தம் நிறைவடைய முன்னர் இங்கிலாந்து, டென்மார்க், ஒல்லாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் மலேஷியா ஆகிய உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வசீமுக்கு அழைப்புகள் வரத் தொடங்கியது. எனினும், தனது பெற்றோர் மற்றும் முகாமையாளரின் அறிவுறுத்தலுக்கமைய அவர் இன்னும் சில வருடங்கள் ஜேர்மனியில் விளையாடுவதற்கு தீர்மானித்தார். இதனையடுத்து ஜேர்மனியின் 6ஆவது மிகச் சிறிய நகரங்களில் ஒன்றான துருங்கியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற ஏர்பேர்ட் கழகத்துடன் வசீம் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இந்நிலையில், வசீமின் தந்தையின் நெருங்கிய நண்பரில் ஒருவரான அப் கண்ட்ரி லயன்ஸ் கழகத்தின் பயிற்றுவிப்பாளராகவும், இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றிய தேவ சகாயனின் முயற்சியினால் இலங்கை தேசிய அணியுடன் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு வசீமுக்கு கிடைத்தது. இதன்படி, கடந்த வருடம் விடுமுறைக்காக இலங்கைக்கு வருகை தந்த வசீம், இலங்கை தேசிய அணியுடன் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபட்டார்.

இதன்போது கால்பந்து சம்மேளனத்தைச் சேர்ந்த அதிகாரியொருவரினால், சாப் கால்பந்து (SAFF) தொடரில் தேசிய அணியில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என வசீமின் தந்தை எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

wazeem-father.jpgஇந்நிலையில் வசீம் ராசிக்கின் கால்பந்து வாழ்க்கையின் வெற்றி குறித்து அவருடைய தந்தை ஜமால் ராசிக் கருத்து வெளியிடுகையில், ”சிறுவயது முதல் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வமுடைய வீரராக திகழ்ந்து வந்த வசீம், தற்போது ஜேர்மன் நாட்டின் நட்சத்திர வீரராக ஜொலித்துக் கொண்டிருக்கின்றார். எனது மகனின் திறமை குறித்து உண்மையில் பெருமையடைகிறேன். அது மட்டுமல்லாது விரைவில் இலங்கை அணிக்காக அவர் விளையாட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். அதற்காக பல்வேறு வழிகளில் நான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனினும் இதுவரை அதற்கான எந்தவொரு பிரதிபலன்களும் கிடைக்கவில்லை. எனினும், எனது மகன் ஜேர்மனியில் கால்பந்து விளையாட்டில் சாதித்தது போல, நிச்சயம் இலங்கை அணிக்கும் திரும்பி பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுப்பார்” என உறுதியுடன் தெரிவித்தார்.

 

இதேவேளை, ஜேர்மன் நாட்டு மக்களது அபிமானத்துக்குரிய வீரராக விளங்குகின்ற வசீம் ராஸிக், ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலையும் இங்கு பிரசுரிக்கின்றோம்.

கேள்விஉங்களுடைய கால்பந்து வாழ்க்கையின் ஆரம்பத்தைப் பற்றி சொல்லுங்கள்?

பதில் – எனது தந்தை சிறுவயது முதல் கால்பந்து பிரியராக இருந்தார். இதன் காரணமாக என்னை சிறுவயது முதல் கால்பந்து விளையாட்டிற்காக ஈடுபடுத்தினார். நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தை ஒரு சாரதியாக தொழில் புரிந்தாலும், கஷ்டத்துக்கு மத்தியிலும் பணத்தை செலவழித்து ஜேர்மனியில் நடக்கின்ற அனைத்து கால்பந்து போட்டிகளையும் பார்ப்பதற்கு அழைத்துச் செல்வார்.

ஏனக்கு 8 வயதாக இருக்கும் போது நான் பேர்லினின் உள்ள ரெட் ரைஸ் நொய்கன் என்ற சிறிய கால்பந்து கழகத்துடன் இணைந்து ஒரு சீசனுக்காக மட்டும் விளையாடியிருந்தேன். அதன்பிறகு 9 வயது முதல் 16 வயது வரை தஸ்மானியா பெர்லின் கழகத்திற்காக விளையாடினேன். இதன்போது பேர்லினின் தெரிவுசெய்யப்பட்ட கால்பந்து அணிக்காக தெரிவாகியிருந்ததுடன், ஜேர்மனியில் வருடாந்தம் நடைபெறும் 16 மாநிலங்கள் பங்கேற்கின்ற கால்பந்து போட்டியில் பேர்லின் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினேன். இதில் திறமைகளை வெளிப்படுத்திய காரணத்தால் ஜேர்மனியின் தேசிய கனிஷ்ட அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியது.

இதனையடுத்து 2011ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பிபா உலகக் கிண்ண போட்டிகளை இலக்காகக் கொண்டு பேர்லினில் பயிற்சி முகாமொன்று இடம்பெற்றது. இதன்போது நான் துரதிஷ்டவசமாக தோள்பட்டை முறிவுக்குள்ளாகினேன். இதனால் ஜேர்மனியின் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிட்டது.

கேள்விஉங்களது தொழில்முறை கால்பந்து விளையாட்டின் பிரவேசத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில் – உயர்தரம் படித்துக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் ஜேர்மனியில் உள்ள ஹம்பெர்க், ஒல்ட் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட முன்னணி கழகங்களிலிருந்து எனக்கு அழைப்புகள் கிடைத்தன. இதனையடுத்து ஜேர்மனியின் பிரபல கால்பந்து கழகமான யூனியன் பேர்லீன் கழகத்துடன் 4 வருடங்கள் ஒப்பந்தம் செய்தேன். எனினும் லீக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் முழங்கால் உபாதைக்குள்ளாகி 10 மாதங்கள் ஓய்வில் இருந்தேன்.

ஆனால் 2014ஆம் ஆண்டு கார்ல்ஸ் ருஹேல் அணியுடனான போட்டியில் முதற்தடவையாகக் களமிறங்கினேன். எனினும் குறித்த போட்டியில் 60ஆவது நிமிடத்துக்குப் பிறகுதான் எனக்கு விளையாடும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் அக்கழகத்துக்காக விளையாடிய 2ஆவது போட்டியில் தான் எனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் முதலாவது கோலையும் பெற்றுக்கொண்டேன்.

இதன்பிறகு குறித்த கழகத்துடனான ஒப்பந்தம் நிறைவுக்கு வந்த நிலையில், எனக்கு பல உள்ளூர் மற்றும் வெளியூர் கழகங்களிலிருந்து அழைப்புக்கள் கிடைத்தன. இதனையடுத்து பெற்றோரின் அனுமதியுடன் ஜேர்மனியின் மிகவும் பழமையான கழகங்களில் ஒன்றான மங்தபேர்க் கால்பந்து கழகத்தில் 2 வருடங்களுக்காக ஒப்பந்தம் (2015 ஜுலை முதல்) செய்துகொண்டேன்.

 

 

எனது வாழ்க்கையில் பேர்லினை விட்டு வெளியூர் அணிக்காக விளையாடிய முதல் சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது. அத்துடன், குறித்த ஒப்பந்தம் நிறைவடைய முன்னர் இங்கிலாந்து, டென்மார்க், ஒல்லாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் மலேஷியா ஆகிய உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் எனக்கு அழைப்புகள் வரத் தொடங்கியது. எனினும், எனது பெற்றோர் மற்றும் முகாமையாளரின் அறிவுறுத்தலுக்கமைய இன்னும் சில வருடங்கள் ஜேர்மனியில் விளையாடுவதற்கு தீர்மானித்து. ஜேர்மனியின் பிரவு 3 (டிவிஷன் 3) அணியான ஏர்பேர்ட் கழகத்துடன் கடந்த ஜுலை மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டேன். அத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன் எனது 50ஆவது தொழில்முறை கால்பந்து போட்டியிலும் விளையாடியிருந்தேன்.

கேள்விகால்பந்து வாழ்க்கையில் நீங்கள் இதுவரை பெற்ற விருதுகள் மற்றும் கோல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

பதில் – ஜேர்மனியில் கால்பந்து பிரபல விளையாட்டாக இருக்கின்றது. பழமைவாய்ந்த பல்வேறு கழகங்கள் காணப்படுவதுடன், அக் கழகங்களில் ஒப்பந்தமாகி விளையாடுவதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆனாலும் விருதுகள் வழங்கப்படுவது அரிதாக உள்ளது. எனினும் பேர்லினின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை மாத்திரம் நான் பெற்றுக்கொண்டுள்ளேன்.

அடுத்தது என்னுடைய தொழில்முறை கால்பந்து விளையாட்டை ஆரம்பித்த காலத்தில் இருந்து பல உபாதைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. இதனால் எதிர்பார்த்தளவு கோல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. எனவே, இதுவரை 20க்கும் குறைவான கோல்களையே பெற்றுக் கொள்ள முடிந்தது.

கேள்விமுன்கள வீரராக நீங்கள் இதுவரை பெற்ற சிவப்பு, மஞ்சள் அட்டைகளைப் பெற்றதுண்டா?

புதில் – நான் வெளியில் அமைதியான மனிதராக இருந்தாலும், மைதானத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக விளையாடுவேன். இதன் காரணமாக ஒரு சில சந்தர்ப்பங்களில் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகளைப் பெற்றுள்ளேன். எனவே எனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் இதுவரை 12 மஞ்சள் அட்டைகளையும், 2 சிவப்பு அட்டைகளையும் பெற்றுள்ளேன்.

கேள்விஇலங்கை தேசிய அணிக்காக விளையாடுவதற்கு எதிர்பார்ப்பு இருக்கவில்லையா?

புதில் –  உண்மையில் மற்ற வீரர்களைப் போல எனக்கும் தாய் நாட்டுக்காக விளையாட வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் சரியான முறையில் அமையவில்லை. எனினும், தாய் நாட்டுக்காக விளையாடினால் ஐரோப்பிய கால்பந்து கழகங்களில் விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதுடன், கால்பந்து வாழ்க்கையில் நல்லதொரு நிலைக்கு செல்ல முடியும் என ஜேர்மனியிலுள்ள எனது சக நண்பர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

 

 

அதேபோல அவர்களும் தமது நாட்டுக்காக விளையாடி வருகின்றனர். எனவே அவர்களைப் போல எனக்கும் தாய் நாட்டுக்காக விளையாட வேண்டும், உலக வரைபடத்தில் சிறியதொரு நாடாக இருக்கின்ற இலங்கைக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும், நாட்டுக்காக குறைந்தபட்சம் ஆசிய கிண்ண கால்பந்து போட்டியிலாவது விளையாடி வெற்றியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு இதுவரை நனவாகவில்லை. அதற்கான முயற்சிகளை எனது தந்தை சகல வழிகளிலும் மேற்கொண்டு வந்தாலும், அந்த முயற்சி இதுவரை வெற்றியைக் கொடுக்கவில்லை.

Wazeem-with-national-flag-1.jpgகேள்விஇலங்கை தேசிய கால்பந்து அணியில் உங்களுக்கு விளையாடுவதற்கு அழைப்பு கிடைத்ததாக கேள்வியுற்றோம். அது பற்றிச் சொல்லுங்கள்?

புதில் – கடந்த 2014ஆம் ஆண்டு நான் எனது குடும்பத்தாருடன் இலங்கை வந்திருந்தேன். அப்போது எனது தந்தையின் நண்பரும் பிரபல பயிற்றுவிப்பாளருமான தேவ சகாயனின் முயற்சியனால் இலங்கை தேசிய அணியுடன் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. குறிப்பாக கடந்த வருடம் நான் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது தேவ சகாயன் எம்மை தொடர்புகொண்டு, கொழும்பில் தேசிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாமொன்று நடைபெறுவதாகவும், அதில் இணைந்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். அதன்படி நான் கொழும்புக்கு வந்து தேசிய அணி வீரர்களுடன் இணைந்து குறித்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டேன்.

இதன்போது கால்பந்து சம்மேளனத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் என்னை சந்தித்து, சாப் கால்பந்து தொடரில் தேசிய அணியில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை எவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

கேள்விகுறித்த பயிற்சி முகாமில் தேசிய அணியில் இடம்பெற்றிருந்த இலங்கை வீரர்களின் திறமைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் – மைதானத்திற்குள் நுழைந்த போது எனக்கு மிகச் சிறந்த முறையில் வரவேற்பளித்திருந்தார்கள். அணியில் இருந்த அனைவரும் உண்மையில் திறமையானவர்கள். ஆனால் இங்கு நடைபெறுகின்ற லீக் போட்டிகளில் உள்நாட்டு வீரர்களைப் போல அதிகமான வெளிநாட்டு வீரர்களுக்கும் சந்தர்ப்பம் அளித்தால் உள்நாட்டு வீரர்களின் திறமைகளை இன்னும் அதிகரிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் ஜேர்மனியைப் பொறுத்தவரையில் குளிர்த்தன்மை கூடிய காலநிலை காணப்படுகின்றது. ஆனால், இலங்கையில் அவ்வாறு இல்லை. எனவே காலநிலையும் வீரர்களின் திறமையை கணிப்பிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, அதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கினால் இலங்கையிலுள்ள வீரர்களுக்கு இன்னும் சிறப்பாக விளையாட முடியும்.

கேள்விஉங்களுடைய 2 சகோதரர்களும் கால்பந்து விளையாட்டில் அதிக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் பற்றிச் சொல்லுங்கள்?

புதில் – எனக்கு முர்சித் மற்றும் முஸாகிர் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் என்னைவிட திறமை மிக்கவர்கள். ஆனால் முர்சித் கால்பந்து விளையாடினாலும் கல்விக்குத்தான் முக்கியம் கொடுத்து வருகின்றார். அதேபோல 2ஆவது சகோதரரான முஸாகிர், விக்டோரியா பெலின் கால்பந்து கழகத்துடன் இணைந்து விளையாடி வருகின்றார்.

 

கேள்விகல்வியையும், விளையாட்டையும் சரி சமமாக கொண்டு செல்ல முடிந்ததா?

பதில் – மிகவும் கஷ்டமான கேள்வி. சிறு வயது முதல் எனது தந்தை கால்பந்து விளையாட்டுக்கு அழைத்துச் சென்றாலும், எனது தாய் எப்போதும் படிக்கும் படி சொல்லிக் கொண்டு இருப்பார். ஆனாலும் கல்விக்கும், விளையாட்டுக்கும் உரிய கவனத்தை செலுத்த முடியாமல் போனது. அதுமட்டுமல்லாது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்றுக்கொள்வதற்காக தனியார் வகுப்புக்களுக்குச் சென்றதுடன், இலங்கையிலிருந்து புத்தகங்களையும் கொண்டு வந்து கொடுப்பதற்கும் எனது பெற்றோர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனால் எனக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை பேச முடியும். அத்துடன் நான் சாதாரண தரம் வரை பேர்லினில் உள்ள முதற்தர பாடசாலைகளில் ஒன்றான பீன்ட்ரிக் ஏபார்ட் பாடசாலையில் கல்வி கற்றேன். ஆனால் அங்கு உயர்தரத்தில் கல்வி கற்க ஆரம்பித்தாலும், கால்பந்து விளையாட்டையா அல்லது படிப்பையா தொடர்ந்து மேற்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்க நேரிட்டது.

எனவே படிப்புக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கின்ற எனது தாயின் பேச்சுக்கு மதிப்பளித்து என்னுடைய கால்பந்து எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பெஷ்ஷோ என்ற மிகவும் பிரபலமான விளையாட்டு பாடசாலையொன்றில் இணைந்துகொண்டு உயர்தரத்தையும் முடித்தேன். தற்போது பல்கலைக்கழகத்துத் தெரவாகியுள்ள நிலையில், கால்பந்து விளையாட்டுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வருகின்றேன்.

கேள்விநீங்கள் மிகவும் சந்தோஷப்பட்ட நாள் எது?

பதில் – எனது தந்தையின் கனவை நிறைவேற்றிய நாள். அதாவது உபாதைக்குள்ளாகி 10 மாதகால இடைவெளியின் பிறகு எனது முதலாவது தொழில்சார் கால்பந்து போட்டியில் விளையாடிய நாள்.

கேள்விஉங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டியாக எதைச் சொல்வீர்கள்?

பதில் – 2015ஆம் ஆண்டு ஸ்டெக்கார்ட் கழகத்துக்கு எதிராக பெற்றுக்கொண்ட இரட்டை கோல்கள் தான் எனது மறக்கமுடியாத போட்டியாக அமைந்தது.

கேள்விசர்வதேச மட்டத்தில் அனுபவமிக்க வீரராக இளம் வீரர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

புதில் – கால்பந்து விளையாட்டுக்கு தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை இல்லாமல் ஒருபோதும் கால்பந்து விளையாட்டில் முன்னேற முடியாது. அதேபோல வாழ்க்கையில் எந்தவொரு வெற்றியும் அர்ப்பணிப்பு இல்லாமல் கிடைக்காது. கஷ்டப்பட்டால் மாத்திரமே வெற்றிபெற முடியும்.

கேள்விஉங்களுடைய எதிர்கால இலட்சியம் என்ன?

புதில் – முதலாவது இலங்கைக்காக விளையாட வேண்டும். எப்படியாவது சர்வதேச மட்ட வெற்றியொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய நாடுகளிவ் விளையாடி வருகின்ற ஒரேயொரு இலங்கை வீரர் என்ற வகையில் கால்பந்து விளையாட்டின் தாய் வீடு என்றழைக்கப்படுகின்ற இங்கிலாந்து கழகமொன்றுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது அடுத்த இலக்காகும். அதுவும் இங்கிலாந்தின் ஆர்செனல் கழகத்துக்கு விளையாடுவது எனது நீண்ட நாள் கனவாகும்.

வசீமின் இந்த வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அவரது பெற்றோர் முக்கிய காரணம் எனலாம். குருத்தலாவையிலிருந்து தொழில் நிமித்தமாக ஜேர்மனுக்கு புலம்பெயர்ந்த ஜமால் ராசிக், கஷ்டத்துக்கு மத்தியில் தனது 3 மகன்களுக்கும் கல்வியை மாத்திரம் வழங்காமல் விளையாட்டையும் புகட்டி சமூகத்துக்கு பயனுள்ள பிரஜைகளாக மாற்றிய பெருமையைப் பெற்றக்கொண்டார்.

இவ் உலகில் பிறந்து நோக்கத்தை மறந்து வாழ்க்கையை வீணடித்து விட்டு மரணிக்கின்ற அனைவருக்கும் ஜமால் ராசிக் போன்றோர் மிகச் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.

மறுபுறத்தில், தனது பெற்றோரின் கனவை நனவாக்கிய வசீம் ராசிக், இன்று தொழில்முறை கால்பந்து வீரராக திறமைக்கு ஏற்ற ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு ஜேர்மனியில் முன்னணி கழக மட்ட வீரராக ஜொலித்துக் கொண்டிருந்தாலும், அவருடைய அனுபவத்தை கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற இலங்கை பெற்றுக்கொள்வதில் அசமந்தப் போக்குடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமை கவலையளிக்கிறது.

அண்மைக் காலங்களில் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கை தேசிய அணியும் சரி, கனிஷ்ட அணிகளும் சரி சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றது.

எனவே, பின்னடைவை நோக்கி செல்கின்ற இந்நாட்டின் கால்பந்து விளையாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமாயின் இதுபோன்ற தீர்மானங்களை காலம் தாழ்த்தாது முன்னெடுக்க வேண்டும் என்பதே இந்நாட்டின் கால்பந்து விளையாட்டை நேசிக்கும் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.