Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம்: அறம்

Featured Replies

சினிமா விமர்சனம்: அறம்

நயன்தாரா

தமிழில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு வெளிவரும் படங்கள் பொதுவாக வெற்றிபெறுவதில்லை. நயன்தாரா நடித்த மாயா, அனுஷ்கா நடித்த அருந்ததி, ரித்திகா சிங் நடித்த இறுதிச் சுற்று, ஜோதிகா நடித்த மொழி ஆகிய படங்கள் விதிவிலக்குகள். கோபி நயினார் இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்த விதிவிலக்குகளின் வரிசையில் சேரக்கூடும்.

குடிநீர் பிரச்சனை ஒரு உலகளாவிய பிரச்சனையாக உருவெடுக்கும் நேரத்தில் அதன் தொடர்ச்சியாக உருவாகக்கூடிய வெவ்வேறு பிரச்சனைகளும் முக்கியமானவை. அதில் ஒரு பிரச்சனையை கையில் எடுத்து, ஒரு விறுவிறு த்ரில்லராக சொல்லியிருக்கிறார் கோபி நயினார்.

   
திரைப்படம் அறம்
   
நடிகர்கள் நயன்தாரா, சுனு லட்சுமி, வேலு ராமமூர்த்தி, ராமச்சந்திரன் துரைராஜ்
   
இசை ஜிப்ரான்
   
ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ்
   
இயக்கம் கோபி நயினார்

ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அருகில் உள்ள ஒரு எல்லைப்புற கிராமம். குடிநீரே கிடைக்காத அந்தக் கிராமத்தில் அன்றாட வாழ்க்கைக்கே போராடி வருகிறது சுமதியின் (சுனு லட்சுமி) குடும்பம். காட்டு வேலைக்குச் செல்லும்போது தன் நான்கு வயது மகள் தன்ஷிகாவையும் உடனழைத்துச் செல்கிறாள் சுமதி. எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தை, அங்கு தோண்டப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்துவிடுகிறது.

இந்தக் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட நேரடியாக களத்திற்கு வருகிறார் மாவட்ட ஆட்சியர் மதிவதனி (நயன்தாரா). அதிகாரவர்க்கம், பொதுமக்கள், அரசியல்வாதிகளிடமிருந்து வரும் அழுத்தங்களை மீறி அந்தக் குழந்தையை மாவட்ட ஆட்சியரால் மீட்க முடிகிறதா என்பதே மீதிக் கதை.

அரசியல்வாதிகள் சொல்வதைக்கேட்காமல், தன்னிச்சையாக குழந்தையை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டதால் மதிவதனி இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரணையை எதிர்கொள்வதாகத் தொடங்கும் படம், அந்த விசாரணையின் வழியாக பின்னோக்கி பயணம் செய்கிறது.

 

நயன்தாரா

எல்லையோர கிராமங்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சனையையும் ஏழ்மையையும் பின்னணியாக வைத்து மெல்ல மெல்ல தீவிரமடையும் படம், குழந்தை ஆழ்துளைக் குழிக்குள் விழும்போது ஒரு த்ரில்லராக உருவெடுக்கிறது. அந்த நொடியிலிருந்து படம் முடிவடையும்வரை, சீட் நுனியில் உட்காரவைக்கிறது திரைக்கதை.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தைகள் விழுந்தால் என்னவெல்லாம் நடக்கும், மீட்பதில் இருக்கும் பிரச்சனைகள் என ஒவ்வொன்றையும் துல்லியமாக கண் முன் கொண்டுவருகிறார் இயக்குனர்.

திரைக்கதை படத்தின் முக்கியமான பலம் என்றால், நயன்தாரா இன்னொரு பலம். தமிழில் தற்போது நடித்துவரும் வேறு யாரையும் இந்தப் பாத்திரத்தில் பொருத்திப்பார்க்க முடியாது. ஒட்டுமொத்தப் படத்திலும் அவருக்கு இரண்டே ஆடைகள்தான். அவருடைய முகபாவங்கள் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டுகின்றன.

அடுத்ததாக இந்தப் படத்தில் ஆச்சரியப்படுத்துபவர்கள், சுமதியாக நடித்திருக்கும் சுனு லட்சுமியும் தன்ஷிகாவாக நடித்திருக்கும் குழந்தையும். சுனு லட்சுமி தமிழில் ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு பெரும் கவனத்தைப் பெற்றுத்தரக்கூடும்.

இந்தப் படத்தில் தீயணைப்புத் துறை அதிகாரியாக வருபவர்கள், அரசு அதிகாரிகளாக வருபவர்கள் ஏற்கனவே பல படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டியவர்கள்தான். ஆனால், அவர்கள் இனி இந்தப் படத்தின் பாத்திரங்களாகவே நினைவுக்கு வருவார்கள்.

அறம்

இம்மாதிரி ஒரு மீட்பு நடவடிக்கையை ஒளிப்பதிவுசெய்வது அவ்வளவு சாதாரணமானதில்லை. பெரும்கூட்டம், பெரிய பள்ளங்களைத் தோண்டுவது என நிஜமாகவே ஒரு மீட்பு நடவடிக்கையை கண்முன் நிறுத்துகிறது ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு. ஜிப்ரானின் இசை படத்தின் பதற்றத்தைக் கூட்டுகிறது.

ஆனால், படத்தில் சில பலவீனமான அம்சங்களும் இருக்கின்றன. இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்தையும் தண்ணீர் பிரச்சனையையும் எதிர் எதிர் திசையில் நிறுத்தி படம் முழுக்க கேள்வியெழுப்பப்படுகிறது. விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப முடியும் இந்தியாவால் ஏன், தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியவில்லை, குழிக்குள் விழுந்த குழந்தையை ஏன் தீர்க்க முடியவில்லை என்ற கேள்விகளை படத்தில் வரும் பாத்திரங்களும் தொலைக்காட்சி விவாதங்களும் எழுப்புகின்றன.

இது குடிநீர் பிரச்சனைக்கு உண்மையிலேயே செய்யப்பட வேண்டிய தீர்விலிருந்து கவனத்தை திசைதிருப்பக்கூடும்.

குழிக்குள் விழும் குழந்தை - அதை மீட்கும் ஆட்சித் தலைவர் என்று படம் இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. அதற்குப் பின்னணியில் அரசியலை வைக்கும்போது, தீர்வையும் தெளிவாக இயக்குனர் முன்வைத்திருக்க வேண்டும். இதில் வரும் தீர்வுகள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில தீர்வுகளை ஞாபகப்படுத்துகின்றன.

படத்தின் வரும் தொலைக்காட்சி விவாதக் காட்சிகள் படத்தின் வேகத்தை, திடீர் திடீரென மட்டுப்படுத்தி படம் ஏற்படுத்தும் தாக்கத்தை குலைக்கின்றன. அந்தக் காட்சிகள் இல்லாமலிருந்தால் படம் இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும்.

இதையெல்லாம் மீறி, ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி இந்தத் திரைப்படம்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-41939935

  • தொடங்கியவர்

வாழ்த்துகள் கோபி நயினார்... வொண்டர்ஃபுல் நயன்தாரா! - ‘அறம்’ விமர்சனம்

 
Chennai: 

அறம் - ஆழ்துளைக் கிணற்றுக் கல்லாய் கிடக்கும் அதிகார வர்க்கத்தின்மீது இறங்கும் ஆணி.

ஒருபக்கம், மினரல் வாட்டரை கேன் கேனாக குடித்துக் களிக்கும் மாடர்ன் இந்தியா, மறுபக்கம் ஒரு மடக்குத் தண்ணீருக்காக பல மைல்கள் நடக்கும் புறக்கணிக்கப்பட்டவர்களின் இந்தியா. முன்னவர்களுக்குப் பின்னவர்கள் இருப்பது பற்றிய பிரக்ஞையே இல்லை. அப்படி மறந்துபோன மக்களின் ஆன்மாவாக ஒலிக்கும் குரலே 'அறம்'. 

 

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில், ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பும் ராக்கெட் கனல்கள் தெறித்துவிழும் தூரத்தில் இருக்கும் கிராமம் காட்டூர். வியர்வைகூட துளிர்த்த உடனே வறண்டுபோகும் அளவுக்கு வறட்சி அங்கே தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல்கள் நடக்கவேண்டிய நிலை. ஆனாலும், இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள் ராமசந்திரன் துரைராஜ் - சுனு லஷ்மி தம்பதியினர். ஒருநாள், சுனு விறகு வெட்டப் போகும்போது, எதிர்பாராதவிதமாக அவரின் நான்கு வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுகிறது. குழந்தையை மீட்க முயற்சிக்கும் மாவட்ட ஆட்சியரான நயன்தாரா, துணிந்து சில முடிவுகளை எடுக்கிறார். அந்த முயற்சிகள் பலனளித்ததா? பிஞ்சுக் குழந்தை உயிரோடு மீண்டதா, பிரச்னைகளுக்குப் பின்னால் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் நோக்கம் என்ன என்பதுதான் கதை.

aramm-stills-photos-pictures-04_18084_11

ஆழ்துளைக் கிணற்று அவலங்களை வைத்து கதை பின்னியதில் ஸ்கோர் செய்யும் இயக்குநர் கோபி நயினார், அதில் பொருத்தமான நடிகர்களை நடிக்கவைத்ததன்மூலம் சிக்ஸர் அடிக்கிறார். இதுவரை துணை நடிகராக வலம் வந்த ராமசந்திரனுக்கு, இதில் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் கனமான பாத்திரம். அசராமல் தூக்கிச் சுமக்கிறார். அவருக்கு சளைக்காமல் நடித்திருக்கிறார் சுனு லஷ்மி. ஒன்றிரண்டு காட்சிகளே வந்தாலும் பழனி பட்டாளம் பேசும் வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகின்றன.

நயன்தாரா, ஹீரோவை துரத்திக் காதலிக்கும் காட்சிகள், ஜிகுஜிகு ஆடைகள் போன்றவற்றிலிருந்து பெரிய பிரேக் அவருக்கும் நமக்கும். ஹீரோக்கள் அரசியல் பேசும் காலத்தில், ஹீரோயினையும் அரசியல் பேசவைத்த இயக்குநர் கோபி நயினாருக்கு சல்யூட். அவர் உருவாக்கிய கேரக்டருக்கு, கச்சிதமாக உயிர் பாய்ச்சியிருக்கிறார் நயன்தாரா. அவர் கரியரில் மிக முக்கியமான படம் இது.  கடமையைச் செய்யவிடாமல் தடுத்த எம்.எல்.ஏ-வை முறைத்துவிட்டு கெத்தாக நடப்பது, குழந்தையை கேமராவின் வழி பார்க்கும்போதெல்லாம் இயலாமையில் புழுங்குவது என அசரடிக்கிறார். அதுவும் க்ளைமேக்ஸில் மொத்தக் கூட்டத்திலிருந்தும் பிரிந்து, தனியாக வெடித்துக் கதறும்போது... க்ளாஸ். இனியும் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் என்ன செய்தீர்கள் என நயனை யாரும் கேள்வி கேட்க முடியாது.

கதை, திரைக்கதையில் மட்டுமல்ல, காட்சி அமைப்பிலும் அத்தனை இயல்பைக் கூட்டுகிறார் இயக்குநர். குறிப்பாக, உச்சி வெயிலில் பிளாட்டுகளுக்கு கற்கள் நடும் இடம். ‘இந்த இடமே எவ்ளோ பசுமையா இருந்தது’ எனப் பேசிக்கொள்ளும் பெயின்டர்கள். ‘இருக்கிற எல்லா மரங்களையும் அழிச்சு கதவு, ஜன்னல் செஞ்சுட்டு வீட்டுக்குள்ள காத்து வரலைனு பொலம்புறானுங்க’ எனப் பேசும் வசனம் அழகு.

அறம்

வாழ்வாதாரத்துக்கு தண்ணீரே இல்லாத கிராமத்துக்கு அருகே, இந்திய அரசு விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துகிறது. ராக்கெட் எதற்காக செலுத்தப்படுகிறது என்கிற நோக்கம் தெரியவில்லை என்றாலும், ‘அது, நம்ம நாட்டிற்குப் பெருமைதானே… அதுக்காக சாமி கும்பிடுவோம்’ என வெள்ளந்திப் பேச்சு பேசும் மனிதர்கள். அந்த மக்களுக்குத் தண்ணீர் வழங்காமல்தான், பக்கத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் தண்ணீர் லாரி சென்றுகொண்டிருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு அரசு காட்டும் கரிசனம் இதுதான் என்பதைப் பொட்டில் அடித்துக் கடக்கிறது அந்தத் தண்ணீர் லாரி.

‘ஆள்துளைக் கிணறு’ என்ற சிறிய களத்தை வைத்துக் கடல் அளவு கேள்விகளை எழுப்புகிறார், இயக்குநர். அதிகாரம், அரசு அதிகாரியான நயன்தாராவிடம் கேள்வி கேட்கிறது. அப்பாவி மக்கள், அதிகாரத்திடம் தங்களுடைய உரிமைக்காக, உயிருக்காக கேள்வி கேட்கிறார்கள். அரசு அதிகாரியான நயன்தாரா, சக அதிகாரிகளிடம் அதிகாரத்தை மீறிச் செயல்படுவதைக் குறித்து கேள்விகளைக் கேட்கிறார். படத்தின் இடையே வரும் தொலைக்காட்சி விவாத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள், மேல்தட்டு சமூகத்தை நோக்கி கேள்விகளை முன்வைக்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் அத்தனை கேள்விகளும் ஒட்டுமொத்த அரசியலை நோக்கியதாக இருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. 'களவாணி', 'வாகை சூட வா' என கிராமத்துக் களங்களில் விளையாடிப் பழக்கப்பட்ட ஓம்பிரகாஷ், இதில் டபுள் செஞ்சுரி அடிக்கிறார். ஒவ்வொருமுறையும் கேமரா, ஆழ்துளைக் கிணற்றின் இருட்டில் இறங்கும்போதும் நம்மையே கயிற்றைக் கட்டி இறக்குவதுபோல அடிவயிறு கவ்வுகிறது. நீரின்றிக் காய்ந்து வறண்ட நிலப்பகுதியையும், அந்நிலத்தின் மக்களையும் ஒருவித இருள் சூழ்ந்த ஒளியில் படமாக்கியிருக்கும் ஓம்பிரகாஷின் உழைப்பு அபாரம். ஓம்பிரகாஷின் ஒவ்வொரு ஷாட்டும் நம்மையும் படத்தில் ஒரு பங்கேற்பாளராக மாற்றியிருக்கிறது… அவ்வளவு மெனக்கெடல்.  முன் பின் எனப் பயணிக்கும் திரைக்கதை என்பதால், ரூபனின் எடிட்டிங்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அறம்

அரசியல்தான் இப்படத்தின் ஆணிவேராக இருந்தாலும், ‘எமோஷனல் திரில்லர்’ ஜானரைப் புகுத்தி, அதில் பதறவைக்கும் ஒரு அழுத்தமான சம்பவத்தைச் சொல்லி கதை நகர்த்துகிறார், இயக்குநர். இதுவே, இப்படத்தை வெறும் பிரசாரப் படமாக இல்லாமல், அனைவருக்குமான படமாக மாற்றுகிறது. முதல் அரை மணிநேரம் இலக்கே இல்லாமல் பயணிக்கும் திரைக்கதையில், லேசாக நாடகத்தனம் தெரிகிறது. அதன்பின் ஒரு கு(ழி)வியில் மையம்கொள்ளும் திரைக்கதை விறுவிறு வேகம் பிடிக்கிறது. பின்னணி இசையிலும் பாடலிலும் உருக்குகிறார் ஜிப்ரான். ‘தோரணம் ஆயிரம்…’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே ஹிட். அதைக் கதையோடும் காட்சி அமைப்புகளோடும் பார்க்கும்போது இன்னும் பரிதவிப்பு கூடுகிறது.

குழியில் கிடக்கும் தங்கள் குழந்தையைப் பார்த்துப் பரிதவிக்கும் பெற்றோரின் கண்ணீரை அவ்வளவு சாதாரணமாகக் கடக்க முடியவில்லை. 90 அடிக்கும் அதிகமான ஆழத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தை, தன் பெற்றோரிடம் பேச முயற்சிக்கும் இடமும், நயன்தாராவுக்கும் அந்தக் குழந்தைக்குமான உரையாடலையும் கணத்த இதயத்தோடுதான் கடக்கவேண்டியிருக்கிறது. ‘ஜட்டியில கொக்கி மாட்டி இழுத்துடலாம் மேடம்’ எனத் தீயணைப்புத்துறை அதிகாரி சொல்ல, ‘வேணாம்யா… அது 10 ரூபாய்க்கு வாங்குன ஜட்டி சாமி’ எனக் கதறும் தாயைப் பார்க்கும்போது கண்ணீர் முட்டுகிறது. படம் முழுக்க பரிதவிப்புகளை உணர்வு மாறாமல் கடத்திய அளவிற்கு, வசனங்களும் பாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தவிர, படத்தில் இருக்கும் அனைவருமே கருத்து சொல்லிக்கொண்டிருப்பதும், தொலைக்காட்சி விவாதக் காட்சிகள் துருத்திக்கொண்டு தெரிவதும் கொஞ்சம் நெருடல்!

அறம்

 

தாங்கள் முன்பு விளையாடித் திரிந்த மைதானங்களிலேயே இப்போது நினைவுகளை அசைபோட்டபடி கட்டட வேலைகள் பார்ப்பது, க்ளைமாக்ஸில் மொத்தக் கிராமமும் உணர்ச்சிப்பெருக்கில் இருக்கும்போது, தூரத்தில் கங்குகளைக் கக்கியபடி ஏவுகணை சீறுவது என இரண்டு வெவ்வேறு உலகங்களை இணைக்கும் புள்ளிகள், படத்தில் நிறையவே இருக்கின்றன. அதிகம் பேசப்படாத அந்த இரண்டாம் உலகத்தின், புறக்கணிக்கப்படவர்களின் தேசத்தை கண் முன் நிறுத்தியதற்காகவே வாழ்த்துகளை வாரிக் குவிக்கலாம் இயக்குநர் கோபிக்கு. படம் எழுப்பும் பல கேள்விகளில் முக்கியமான கேள்வி, ‘பல கோடிகள் செலவுசெய்து ராக்கெட் அனுப்பும் இந்திய அரசு, ஆள்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளைக் காப்பாற்ற என்ன வைத்திருக்கிறது?’ இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல, படம் எழுப்பிய நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கும் பதில் வேண்டும் என்பதால், இந்த ‘அறம்’ சமூகத்தின் தேவையாக இருக்கிறது.

https://cinema.vikatan.com/movie-review/107493-aramm-movie-review.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ‘அறம்’ நயன்தாரா- ஆளுமை!

 

 
nayantharajpg

திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘அறம்’ படத்தின் மூலம் தன்னை அடுத்த பரிமாணத்துக்கு நகர்த்தி இருக்கிறார் நயன்தாரா. படத்தில் அவரின் ஆளுமையைப் பற்றிய கருத்துகள் நெட்டிசன்கள் மத்தியில் உலா வரும் நிலையில், அவற்றின் தொகுப்பு இந்த நெட்டிசன் நோட்ஸில்...

Murugan

மக்கள்தான் அரசாங்கம் என நான் நினைக்கிறேன். - மதிவதனி, மாவட்ட ஆட்சியர்.

#அறம் #நயன்தாரா

Rajah Rajeshware Rajeshware

"கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்..." நயன்தாரா டூ 'அறம்' நயன்தாரா.... வாட் எ சேஞ்ச்? அமேசிங்!

RAMKIJ @ramkij

அரசியலுக்கு வருவதென்று முடிவெடுத்துவிட்டார்... நயன்தாரா! அப்படின்னு இந்நேரம் ஆரம்பிச்சுருப்பாங்களே!

Jackie Sekar

தமிழில் ஒரு உலக சினிமா அறம்...

இந்தப் படத்துக்காகவே நயனைக் காதலிக்கலாம்.. அந்த அளவுக்கு பின்னி இருக்கின்றார்.. இந்த படத்தில் நயன் நடிக்கவில்லை என்றால் இந்த திரைப்படம் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக்காது என்பதே உண்மை. அது மட்டுமல்ல டாக்குமென்ட்ரி முத்திரை குத்தி இருப்பார்கள்.

Divya Bharathi

பெண்ணை ஆளுமையாக முன்னிறுத்தும் இது போன்ற சினிமா போஸ்டர்களை பார்க்க தான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. எத்தனை ஆண்டு கால கனவிது.....! #கெத்து #நயன்தாரா.

nayanjpg1
 

Marasamy

முன்னேறி அடிக்கிறதுதான் வீரம். தலைவி நயன்தாரா - #அறம்

Mukil Thangam

நயன்தாரா நாள்.

C P Senthil Kumar

நயன்தாராவின் கெத்து நடிப்பு ,பரபரப்பான இசை, சமூக அக்கறையுடன் கூடிய நச் வசனங்கள் அடிபொலி #Aramm

கரிகாலன்

நியாய உணர்ச்சியும் மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என்கிற அற உள்ளமும் படைத்த ஆட்சியர் மதிவதனி (நயன்). திரையில் தண்ணீர் அரசியலின் பின்னாலிருக்கும் வணிக அரசியலை, பாமரரும் உணர வைக்கும் காட்சிகளில் பின்னியெடுத்திருக்கிறார் நயன்தாரா.

Dr Aarif @Aarifunnoor

அடுத்து நம்ம முதலமைச்சர் பட்டியல்ல நயன்தாராதான் #அறம்.

அலார்ட்_ஆறுமுகம் MBA @taraoffcl

நயன்தாராவோடு சேர்ந்து நானும் முகத்தை மூடிக் கொண்டு அழுதுவிட்டென் கிளைமேக்சில்... #அறம்

RamKumar @ramk8059

நயன்தாரா - வேற லெவல் நடிப்பு,என்ன வசனம்..? மரண மாஸ் கெத்து.

நானும் எவ்லோவோ கன்ட்ரோல் பண்ணி பாத்தும் முடியலை கண்ணுல தானா தண்ணி வருது.

@ananthtwits

தலைவி வர்ற எல்லா சீன்க்கும் தியேட்டர்ல பயங்கரமான ரெஸ்பான்ஸ்..

நயன்தாரா - தி ஒன் அண்ட் ஒன்லி லேடி சூப்பர் ஸ்டார் பார் எவர்!

தேவ. பழனியப்பன் @DevaPalaniappan

நயன்தாரா இப்படி ஒரு படத்தை தேர்வு செய்து நடித்தமைக்கும், அதில் உணர்ச்சி பொங்க நடித்த திறமைக்கும் பாராட்டு. மேலும் இப்படியான படைப்புகள் வருவதற்கு அறம் ஒரு ஆரம்பப் புள்ளி.

ShootThaKuruvi @ShotDKuruvi

தமிழகத்திற்கு தேவை நயன்தாரா மாதிரியான நிர்வாகத்திறன் மிக்க, மக்களுக்காக உழைக்கும் எண்ணம்கொண்ட ஆட்சியர். #Nayan4CM #Aramm #அறம்

ராஜா.வே @Raja_Anjalai

தலைவி, தலைவி தான்.., அறம் வேற லெவல். #நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார்.

அருண் பகத்

நயன்தாராவுக்கு இது career best படம். தமிழின் மிக முக்கிய சினிமா 'அறம்' - தவறாமல் பாருங்கள்.

nayan

Ramesh Vijay KG @itz_me_ramesh

ரஜினி வர்றார், கமல் வர்றார், விஜய் வர்றார்னு சொன்னாங்க...

அடப்போங்கய்யா... எங்க தங்கத்தாரகை நயன் களத்துல எறங்கிடுச்சியா... #vote49thara

பின்குறிப்பு: தலைவிய அழவிடாதீங்கப்பா, ஒரு மாதிரி ஆகுது!

Doss ramasamy @DossRamasamy

அறம்... தமிழ் சினிமா பெருமை கொள்ளும் ஒரு படைப்பு.

கோபி நயினார் அண்ணனுக்கு மரியாதையான வணக்கம், இப்படி ஒரு சினிமாவை தேர்ந்தெடுத்து நடித்த நயன்தாராவுக்கு பெருமையான வணக்கம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/article20192518.ece

 

 

நெட்டிசன் நோட்ஸ்: 'அறம்'- வெல்லட்டும்!

 

 
arammjpg

நயன்தாரா நடிப்பில் கோபி நயினாரின் இயக்கத்தில் தண்ணீர்ப் பிரச்சினைகளை அதன் வேர் வரை அலசி இருக்கும் படம் 'அறம்'. சமூக வலைதளங்களிலும் சினிமா உலகிலும் 'அறம்' பெரிதும் பேசப்பட்டு வரும் நிலையில், படம் குறித்த நெட்டிசன்களின் கருத்து உங்களுக்காக...

Raja Sundararajan

தாகத்துக்கு தண்ணீர் கேட்ட இடத்தில், 'ஸாப்ட் ட்ரிங்ஸ்' தரவா என்னும் ஒற்றை வசனம் குடிநீர்க் கொள்ளையைச் சட்டென உணர்த்திவிடுகிறது.

நயனைப்போல நல்ல கலெக்டர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அறம் என்பது ராக்கெட்டுக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்கும் பொது. இதை அறியாத நிர்வாகத்தால் ஒரு பயனும் இல்லை நாட்டுக்கு. நமக்கும்.

Kavitha Bharathy

அறம் வெல்லும் அஞ்சற்க.. வாழ்த்துகள் தோழர் கோபி..

கரிகாலன்

பார்ப்பது திரைப்படம் எனத் தெரிந்தும் அச்சமும் பதற்றமும் கண்ணீரும் கையறு நிலையுமென உணர்வுக் கொந்தளிப்பை அளிக்கிறது அறம். மிக முக்கியமான தீவிர அரசியலைப் பேசுகிற படம். தமிழ் திரைக்கு அற்புதமான புது இயக்குநர். #அறம்.. வெல்லட்டும்!

Chandru

பொழுது போக்குவதற்காக மட்டுமே சினிமா அல்ல, அவ்வப்போது மக்களின் பிரச்சனைகளை ‘பொட்டிலடித்தாற்போல்’ பேசுவதும் சினிமாதான் என்பதை அழுத்தமாக ‘அறம்’ மூலம் நிரூபித்திருக்கிறார் கோபி நயினார்.

கிடைக்கும் இடங்களிலெல்லாம் வசனங்களால் இன்றைய அரசியல், அதிகார வர்க்கங்களின் போலி முகத்திரையை கிழிக்க முயன்றிருக்கிறார் கோபி. அறம்... அவசியம் பார்க்க வேண்டிய படம்!

Kalpana Pandarinathan

அறம், அழவைக்கும்: ஆழமாகச் சிந்திக்க வைக்கும்; எளிய மக்களின் வாழ்க்கையை நெஞ்சில் அறைந்து உணர்ந்து உறையவைக்கும். மக்களுக்கான சினிமா அறம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உடன் நடித்த கலைஞர்கள் அனைவரும் நெஞ்சில் நிற்கிறார்கள். அன்றாடக் கூலிகளின் வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். நயன்தாராவின் வேறொரு முகம் இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. வாழ்த்துகள். #அறம் வெல்லும்.

Jeyanthan Jesudoss

# அறம்.. அபூர்வம்.

பல ஆயிரம் அடி ஆழத்தில் மீத்தேனும் நிலக்கரியும் இருந்தால் அதை எடுக்கத் தொழில்நுட்பம் வைத்திருக்கும் ஆளும் அரசியல்வாதிகளின் தூர்ந்துபோன மனதைத் தூர் அள்ளியிருக்கிறார் ‘அறம்’ கோபி. இன்னும் பல ‘புறக்கணிக்கப்பட்ட இந்தியா’க்களை மீட்டெடுப்பார் என நம்புவோம்!

முடிந்தால் நம் ஆட்சியாளர்களை ஒரு திருமண மண்டபத்துக்குள் அடைத்துவைத்து அறம் படத்தை அவர்களுக்கு திரையிடுங்கள்.

Arun Chandhiran

#அறம் -தமிழ் சினிமாவின் தரம், இந்திய சினிமாவிற்கு வரம்!

S Ganeshkumar

'அறம்' படத்தை கொண்டாடித் தீர்ப்பதே அறம்!

சிறந்த படத்தைக் கொடுத்துள்ள ஒட்டுமொத்த அறம் படக் குழுவுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்!

Saraa Subramaniam

'சமூக - அரசியலை துளியும் உறுத்தாமல் பேசும் அறம், ஆரம்பம் முதல் இறுதி வரை உணர்வுபூர்வ சிலிர்ப்பனுபவத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்தும்.

#அறம்_காண_விரும்பு.

Murugan Manthiram

இதுவரை நான் பார்த்த தமிழ் படங்களில் நயன்தாரா போல இத்தனை திடமாக தெளிவாக துல்லியமாக எந்த நடிகையும் அரசியல் பேசவில்லை. #அறம் #ஆளுமை #நயன்தாரா

அலார்ட்_ஆறுமுகம் MBA @taraoffcl

அறம் - ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை பலி....என்று செய்தியாய் பார்த்து கடந்து சென்றவர்களுக்கு, அதன் பின் இருக்கும் வலிகளையும் , வேதனைகளையும் , சூழ்ச்சிகளையும் தெளிவாய் வெளிக்காட்டிவிட்ட படம் #அறம்.

Bramma Nathan

அறம். தமிழ் சினிமாவில் இதுவரை தொட்டிராத கரு. பார்த்திராத காட்சிகள். உணரப்படாத உணர்ச்சிகள். எளிய மக்களின் ஓங்கியக் குரலாக, நீண்ட நாள் தவமாக உயர்ந்து நிற்கும் உன்னத படைப்பு. அடிப்படை அரசியலை, மிகச் சரியான தருணத்தில் நடுப்பொட்டில் அறைந்து, உயர்ந்து நிற்கிறது அறம்.

அதனினும் உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் கோபி நய்யனார். ஜிப்ரானும் ஓம்பிரகாஷும் பிரம்மாண்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். ராமசந்திரன் துரைராஜ், சுனு லட்சுமி, காக்கா முட்டை சிறுவர்கள், சிறுமி, அற்புத நடிப்பு. வேறென்ன? நயன்தாராவின் பாதையில் அழுத்தமான மைல்கல்...

பிரியா @devil_girlpriya

தண்ணீர் ஒரு நாட்டின் வெள்ளை இரத்தம்- அறம் இயக்குனர் #கோபிநயினார்.

DirectorNavaneethaKrishnan @dirnavaneetkris

மிகச் சரியான நேரத்தில் மிகவும் தேவையான ஒரு கதையை எடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்ததற்கு நன்றி. அறம் - கூர்மை!

திவாகரன் @divakarantmr

அறம்- மாற்றத்தை விரும்பும் சமூகப் பார்வை கொண்ட அதிகாரிக்கும் - எதுவும் மாறக்கூடாது என மார்தட்டும் ஒரு கூட்டத்திற்குமான அறப்போர்.,

meenakshisundaram @meenadmr

நயன்தாரா இதுவரை நடித்த படங்களில் பெஸ்ட் எனலாம். இயக்குனர் கோபி ஆழமான சமூக பிரச்னையைச் தொட்டிருக்கிறார். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பலரை தோலுரிக்கிறார். அறம்...சிறந்த தமிழ் படைப்பு.

Niyas Ahmed

விபரம் தெரிந்த நாளிலிருந்து 'அறம்' இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதில்லை!

இன்னும் இன்னும் கொண்டாடுவோம்!

Murugan

அறம் பார்த்தலே அறம்!

Nanda Periyasami

அறம்... பதை பதைக்க வைக்கும் முக்கியமான தமிழ் சினிமா ...நொடிக்கு நொடி பதட்டமாக... உண்மைக்கு நெருக்கமாக... அழுத்தமாக... நம்மை அந்த இடத்திற்கே அழைத்து சென்றிருக்கிறார்கள். தவிர்க்க முடியாத தமிழ் சினிமா.

Arun Bhagath

அறம் - செவ்வணக்கங்கள் தோழர் இயக்குனர் கோபி நயினார். மக்கள் சினிமாவை வெறும் பிரச்சாரமாக இல்லாமல், கச்சிதமான திரைக்கதையுடன் கொடுத்துள்ளீர்கள் . தமிழின் முக்கிய சினிமாக்களில் ஒன்று அறம்.

Ganeshan Gurunathan

வெறுமனே அறம் பற்றி, அதன் வழியான கோபங்களை வெளிப்படுத்தும் அதேவேளையில், அரசியலில் இதை எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.

இதன் வழியாக, யாரெல்லாம் வேறுவித அரசியல் கூட்டுக்கு தயாராகிறார்கள், அவர்கள் நிகழ்த்த இருக்கும் அரசியல் மாற்றங்கள் எவை என்பதையும் கவனியுங்கள்.

வெறுமனே, அப்பாவித்தனமாக அறம் மட்டும் பேசாமல், அரசியலையும் கவனியுங்கள்.

Anthanan Shanmugam

அறம் - படம் துவங்கிய இருபதாவது நிமிஷத்தில் ஆரம்பிக்கிற நடுக்கம் உடலெங்கும் பரவி ஒவ்வொரு நரம்பாக ஊடுருவி மண்டைக்குள் இறங்குகிறது. ஒரு கட்டத்தில் திரையை நோக்குகிற தைரியம் இல்லாமல் நான் சீட்டுக்கு கீழே குனிந்து கொண்டது என் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதுவரை நடக்காதது.

இதுநாள் வரை ஆழ்துளைக் கிணற்றுக்குள் கிடந்த கோபி நைனார் என்ற படைப்பாளி ‘அறம்’ மூலம் மீட்கப்பட்டிருக்கிறார். மீட்டெடுத்த கலெக்டர் நயன்தாராவுக்கு நல்ல சினிமா ரசிகர்கள் கடமைப்பட்டவர்கள்!

http://tamil.thehindu.com/opinion/blogs/article20185598.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
அறம் திருடப்பட்டது?
 

image_07b9cf1f83.jpg

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, பாராட்டு பெற்றத் திரைப்படம் அறம். கோபி நயினார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

“அறம் திரைப்படம், என்னுடைய பரிவாரா என்றத் திரைப்படத்தின் கதை. அதைத் திருடி படமாக்கிவிட்டனர். இதற்கு இழப்பீடாக, 20 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என்று, கர்நாடகாவை சேர்ந்த தயாரிப்பாளர் மனோஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கெனவே மெட்ராஸ், கத்தி ஆகிய திரைப்படங்கள், தனது கதைகள் என புகார் கூறியவர் கோபி. இப்போது அவரது படத்துக்கே அது போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளமை, சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.tamilmirror.lk/cinema/அறம்-திருடப்பட்டது/54-207872

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.