Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானே ஆலோசனை வழங்கினேன் : பிணைமுறி குறித்த ஆணைக்குழுவில் பிரதமர் சாட்சியம்

Featured Replies

நானே ஆலோசனை வழங்கினேன் : பிணைமுறி குறித்த ஆணைக்குழுவில் பிரதமர் சாட்சியம்

2-51da56827e94fd1ad0e1d57d2762c9721fd8443e.jpg

 

 

  • அர்ஜுன மகேந்திரனை நியமிக்க முன் மருமகன் அலோசியஸை பதவி விலகுமாறு கூறினேன்
  • பெரும் தொகை நிதித் தேவை ஏற்பட்டமைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தமும் காரணம் 
  • தெளிவான சட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தேன்
  • குறைந்த வட்டி வீதத்தில் கேள்விப் பத்திரத்தை முன்வைக்க ஆலோசனை வழங்கவில்லை

(எம்.எப்.எம்.பஸீர்)

 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை அப்பதவிக்கு நியமிக்கும் போது அவ ரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அறிவித்தேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

இதன்போது அலோசியஸ் தனக்கு சொந்தமான பங்குகளை விற்க சிறிது கால அவகாசம் கோரிய போதும், அதன் பின்னர் அவர் அந் நிறுவனத்தில் இருந்து விலகினாரா அல்லது அதனோடு தொடர்புடைய மற்றொரு நிறுவனத்தில் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தாரா என்பது குறித்து எனக்கு தெரியாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாட்சியமளித்தார்.

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிணை முறி குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவித்தல் பிரகாரம் அவர் அங்கு பிரசன்னமாகி சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

காலை 10 மணிக்கு ஆரம்பமான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் நடவடிக்கைகளின் போது, பிரதமரின் சாட்சிப் பதிவானது 10.15 மணிக்கு ஆரம்பமானது. பிரதமர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசாவின் அறிவுறுத்தல் பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜராகியிருந்தார்.

கடந்த 2015 பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதியர்சர் கே.டி.சித்ரசிறியின் தலைமையில் நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் பிரதமரிடம் சாட்சிப் பதிவுகளை ஆரம்பித்தனர்.

உயர் நீதிமன்ற நீதியர்சர் கே.டி.சித்ரசிறி, நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு பிரதமர் இதன்போது சாட்சிக் கூன்டில் நின்று சாட்சியமளித்தார்.

சாட்சியத்தை பதிவு செய்ய முன்னர், ஆணைக் குழுவின் தலைவர் நீதியரசர் கே.டி.சித்ரசிறி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தாமாக சாட்சியம் வழங்க முன்வந்தமை தொடர்பில் அவருக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் ஆணைக் குழுவின் கோரிக்கைக்கு அமைய பிரதமர் தொடர்பில் குறுக்கு விசாரணை செய்ய சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய நேரடியாக ஆஜரானமை தொடர்பில் அவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் பின்வருமாறு அறிவித்தார்.

"மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் பதிலளிக்க முதலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 28 கேள்விகள் அடங்கிய கேள்விக் கொத்தை இந்த ஆணைக் குழு அனுப்பியது. அதற்கான பதிலை சத்தியக் கடதாசி ஊடாக பிரதமர் எமக்கு அனுப்பியிருந்தார். மேலும் 33 கேள்விகளுக்கு பிரதமரிடம் பதில் அறிய வேண்டும் எனக் கூறி இந்த பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் தப்புல டி. லிவேரா விண்ணப்பித்தார்.

எனினும் அதில் 13 கேள்விகளை கேட்க நாம் அனுமதிக்கவில்லை. 20 கேள்விகளுக்கு பதிலளிக்க கூறி நாம் மீள கேள்விக் கொத்தை அனுப்பினோம். அதற்கான பதிலும் சத்தியக் கடதாசியுடன் கிடைக்கப் பெற்றுள்ளது. இந் நிலையில் எழுத்து மூலம் வழங்கிய விடயங்கள் தொடர்பில் சில தெளிவுபடுத்தல்கள் வாய்மொழி மூலம் அவசியமாகிறது. அது தொடர்பிலேயே பிரதமர் ரணில் இங்கு ஆஜராகியுள்ளார் என அறிவித்தார்.

அதன் பின்னர் கேள்விகளைத் தொடுத்து சாட்சிப் பதிவை ஆரம்பித்தார். குறிப்பாக ஆணைக் குழுவின் நீதியரசர்கள் முதல் கேள்விக் கொத்தில் வழங்கப்ப்ட்ட 28 கேள்விகளில் 5 ,10,12,13 ஆம் வினாக்கள் உள்ளிட்ட வினாக்களையும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களையும் மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டன.

பிணை முறி தொடர்பில் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தான் தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயார் என பிரதமர் ரணில் கூறியிருந்த நிலையிலேயே சாட்சிப் பதிவுகள் நேற்று இடம்பெற்றன. சாட்சிக் கூண்டில் சத்தியப் பிரமாணம் செய்தபின்னர் நீதியர்சர்களின் கேள்விக்கு பதிலளித்து ரணில் சாட்சியமளிக்கையில்

 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை அப்பதவிக்கு நியமிக்கும் போது அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நான் அவ்விருவருக்கும் அறிவித்தேன். அலோசியஸ் தனக்கு சொந்தமான பங்குகளை விற்க சிறிது கால அவகாசம் கோரிய போதும், அதன் பின்னர் அவர் அந் நிறுவனத்தில் இருந்து விலகினாரா அல்லது அதனோடு தொடர்புடைய மற்றொரு நிறுவனத்தில் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தாரா என்பது குறித்து எனக்கு தெரியாது அவர் விலகியிருப்பார் என்றே தான் நம்பினேன் என்று தெரிவித்தார்.

கேள்வி குறித்த பிணைமுறி விநியோகத்திற்கு முன்னர் தனியார் முதலீட்டு ஏல முறைமை நிறுத்தப்பட்டிருந்தது ஏன் ?

பதில் அந்த முறைமையில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருந்தது. அதனால்தான் பிணைமுறி ஏல முறைமைக்கு நாம் மாற்றியமைத்தோம். மத்திய வங்கியின் அதிகாரங்கள் தன்னிச்சையாக காணப்பட்டமையாலும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புகூற வேண்டிய நிறுவனமாக மத்திய வங்கியை மாற்றவேண்டிருந்தது. அத்தோடு சட்டமா அதிபரின் அதிகாரமும் பலப்படுத்தப்பட வேண்டும். .

கேள்வி பொது கட்டுப்பாட்டு ஏல முறைமை தொடர்பில் வழிநடத்தல்களை யார் கொடுத்தது?

பதில் நான்தான் கொடுத்தேன். அரச கொள்கை திட்டங்களின்படியும் சட்டத்திட்டங்களின் படியும் செயற்படுவார் என்ற வகையிலேயே ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். இது தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பொதுக் கடன் திணைக்களத்துக்கு மட்டுமன்றி அரசு என்ற ரீதியில் கொள்கைகள் தொடர்பில் முடிவெடுக்க அமைச்சரவைக்கும் அரசுக்கும் அதிகாரம் உள்ளது என்று பிரதமர் சாட்சியமளித்தார்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் அரசுக்கு நிதிப்பற்றாக்குறை காணப்பட்டமை மற்றும் 10 பில்லியன் ரூபா பிணை முறியூடாக ஈட்ட தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விளக்கம் கோரப்ப்ட்டது.

அதற்கு பதிலளிக்க பிரதமர் குறிப்பிடுகையில்

 அரசில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டிருந்தமையினால் அதற்கான நிதியை ஏலத்தின் மூலம் பெற தீர்மானித்தோம். இது தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு ஆலோசனை வழங்கியிருந்தேன். ஆனால் நிதிகூற்று மற்றும் மத்திய வங்கி நிதி விவகாரங்களில் எனக்கு அனுபவம் இல்லாததால் அந்த பொறுப்பு அர்ஜுன மகேந்திரனிடமே வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த பாரிய நிதி தேவைக்கு அதுமட்டும் காரணமாக இருக்கவில்லை.

எல்லா விடயங்களும் ஆவணமாக இருப்பதில்லை. அரசின் செலவை தீர்மானிப்பது வரவு செலவுத் திட்டமாகும். அதன்படி குறித்த ஆண்டுக் குரிய வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை குறைவாக இருக்க வேண்டும் என்பது நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் நிபந்தனையாகும். அதன்படி இந்த பிணை விநியோகத்தில் அதிக நிதி தேவைப்பட அதுவும் காரணமாகும் என்று சாட்சியமளித்த பிரதமர் ரணில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்புடைய இரு ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.

 இதன்போது அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு இடையிலான உறவு தொடர்பில் சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவும் பிரதமர் ரணிலிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அர்ஜுன மகேந்திரனுக்கு இடையிலான தொடர்பு குறித்து முதலில் அவதானம் செலுத்தியது தானே என பதிலளித்தார். முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ஒருவரின் சகோதரி ஒருவரும் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தில் இருந்து விலகி தனது மெண்டிஸ் சாராய நிறுவனத்தில் தான் கடமையாற்றுவதாக அர்ஜுன் அலோசியஸ் என்னை சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார். வேறு ஒரு விடயம் தொடர்பிலான் அந்த விருந்துபசாரத்தில் விதவிதமான மது இருந்ததை அவதானித்த போது நான் அதனை முற்றாக நம்பினேன் என்று இதன்போது ரணில் விக்ரமசிங்க நகைச்சுவையா க தெரிவித்தார்.

இதன்போது சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் இடம்பெற்ற தினத்தன்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்படுத்திய அழைப்புக்கள் குறித்தும் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விகரமசிங்க, முதலில் பிணை முறி விநியோகம் இடம்பெற்றதாகவும் பின்னர் அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் தெளிவுபடுத்தி அழைப்பை ஏற்படுத்தியிருந்ததாகவும் கூறினார்.

அத்துடன் தான் ஒரு போதும் நேரடியாக தொலைபேசிக்கு பதிலளிப்பதில்லை எனவும், தனது உதவியாளர் கொண்டுவந்து தந்த பின்னரேயே பதிலளிப்பதாகவும் பிரதமர் ஆணைக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

 இதனையடுத்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அரச வங்கிகளுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கேள்வி மனுக்களை முன்வைக்க வழங்கிய ஆலோசனை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் தான் அவ்வாறு ஆலோசனை வழங்கவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் மற்றொரு கேள்வியை முன்வைத்த சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய பிணை முறி விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானத்த அளுத்கமகே பாராளுமன்றில் முன்வைத்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரினார். அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குத் தொடர்வது தொடர்பிலான விடயங்கள் உங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடமே உள்ளன என நகைச் சுவை கலந்து சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் பிரதமரிடம் மேலதிக கேள்விகள் இல்லை என தெரிவித்ததை அடுத்து பிரதமருடைய சாட்சிப் பதிவுகள் ஒரு மணி நேரத்தின் பின்னர் நிறைவுக்கு வந்தன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-21#page-1

  • தொடங்கியவர்
'மகேந்திரனை நம்பினேன்'
 

image_da0a9fd5c0.jpg
-ஷெஹான் சாமிக சில்வா, யொஹான் பெரேரா, ஹபீல் பாரிஸ்

திறைசேரிப் பிணைமுறிகளை வழங்கும் போது, பொது ஏலம் மூலம் வழங்குமாறு, மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்குப் பணிப்பரை விடுத்ததாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனினும் அதை அமுல்படுத்தும் போது, பொருத்தமான கொள்கைச் செயற்பாடுகளை அவர் பின்பற்றுவாரென எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டார்.

திறைசேரிப் பிணைமுறி தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னர் நேற்று (20) ஆஜராகிச் சாட்சியமளித்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அநேகமான அமைச்சர்கள் புடைசூழ, பிணைமுறி ஆணைக்குழு முன்னர், பிரதமர் சாட்சியமளித்தார்.

பிரதமரின் சாட்சித்தின் போது, முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கும் அவரது மருமகனான அர்ஜுன் அலோசியஸுக்கும் இடையிலான தொடர்பு, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான சொகுசு வீட்டுச் சர்ச்சை, மத்திய வங்கி நடவடிக்கைகளில் பிரதமரின் தலையீடு ஆகிய விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. சுமார் 40 நிமிடங்கள், அவரது சாட்சியமளிப்பு நீடித்தது.

ஆணைக்குழு நடவடிக்கைகளின் ஆரம்பத்தில், பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு தொகுதி வினாக்கள் தொடர்பாக, ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் கே.டி. சித்திரசிறி வெளிப்படுத்தினார். இதன்படி, ஆணைக்குழுவின் ஆணையாளர்களால் முன்வைக்கப்பட்ட 28 வினாக்களும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட 20 வினாக்களுக்கும், பிரதமர் பதிலளித்திருந்தார் எனக் குறிப்பிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காலை 10.25 மணியளவில், ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டிருந்த வினாக்களை, நீதியரசர் சத்திரசிறி எழுப்பினார். பிரதமரால் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த பதில்களில் மேலதிக விளக்கங்களைப் பெறுவதற்காக, இவ்வினாக்கள் எழுப்பப்பட்டன.

அதன்போது இடம்பெற்ற சில முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் பின்வருமாறு:

நீதியரசர் சித்திரசிறி: ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட வினா இலக்கங்கள் 5 (1), (2)இன்படி, அர்ஜுன் அலோசியஸ், 2014ஆம் ஆண்டிலும் ஜனவரி 2015இன் சில காலங்களிலும் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவர் எனவும் பங்குதாரர் எனவும், பின்னர் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் ஜனவரி 16, 2015இன் பின்னர் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்தார் எனவும், ஜனவரி 2015இன் பின்னரும், பேர்பெச்சுல் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் (பேர்பெச்சுவல் கப்பிற்றல் ஹோல்டிங்ஸ், பெர்பெச்சுவல் கப்பிற்றல் தனியார் நிறுவனம்) பணிப்பாளர்களுள் ஒருவராக இருந்தாரெனத் தெரியுமெனவும் கேட்கப்பட்டிருந்தது.

அவ்வினாக்களுக்கான உங்கள் பதில்களில், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவராக அலோசியஸ் இருந்தாரென அறிவீர்களெனவும், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திலிருந்து அலோசியஸ் விலக வேண்டுமெனவும், நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், நிறுவனத்தின் பங்குகளை அவர் கலைத்துவிட வேண்டுமெனவும், அர்ஜுன மகேந்திரனிடம் கூறினீர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதே விடயத்தை, அலோசியஸிடமும் கூறினீர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

மேலதிகமாக, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளில் அலோசியஸ் எந்தப் பங்கையும் வகிக்க மாட்டாரெனவும், மகேந்திரனால் வழங்கப்பட்ட இந்த உறுதிமொழியை நம்பினீர்களெனவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இப்போது எமக்குத் தேவையான விளக்கங்கள் என்னவெனில், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களாக பேர்பெச்சுவல் கப்பிற்றல் தனியார் நிறுவனமும் பேர்பெச்சுவல் கப்பிற்றல் தனியார் நிறுவனமும் இருந்தன என்பதை அறிவீர்களா?
பிரதமர்: இல்லை, இந்நிறுவனங்களின் ஹோல்டிங் கட்டமைப்புத் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை.

நீதியரசர் சித்திரசிறி: இந்த ஹோல்டிங் நிறுவனங்களில், ஜனவரி 2015க்குப் பின்னரும், அலோசியஸ், பணிப்பாளர்களுள் ஒருவராகவும் பங்குதாரராகவும் இருந்தாரென நீங்கள் அறிவீர்களா?
 

பிரதமர்: இல்லை, அதை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அலோசியஸ் என்னிடம், இந்த ஹோல்டிங் பங்குகளை, நல்ல விலையில் விற்பதற்குச் சிறிது காலம் தேவையெனக் குறிப்பிட்டிருந்தார். ஒன்று அல்லது இரண்டு பார்ட்டிகளில் நான் அவரைச் சந்தித்திருந்தேன். மென்டிஸ் டிஸ்டில்லரீஸில் தனது கவனத்தைச் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

நீதியரசர் சத்திரசிறி: ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட 10ஆவது வினாவில், நேரடி வைப்பு முறையை உடனடியாக நிறுத்துமாறு, பெப்ரவரி 24, 2015இல், மகேந்திரனுக்கு உத்தரவிட்டீர்களா எனக் கேட்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம், வெளிப்படைத் தன்மை அற்றது எனவும் சந்தை வாய்ப்புகளை இது ஒடுக்கியது என நீங்கள் கருதியதாலும், பொது ஏல முறையில் திறைசேரிப் பிணைமுறிகளைப் பெறுவதற்கு விரும்பினீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

11ஆவது வினாவில், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்பட, தேவையான நடைமுறைகளை மகேந்திரன் பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
தற்போது எமக்குத் தேவையான விளக்கம் என்னவெனில், நிதிச் சட்டத்தின்படி, மத்திய வங்கியின் கொள்கைகள், நடவடிக்கைகள் தொடர்பானவற்றைத் தீர்மானிக்கும் ஒரே அதிகாரம், மத்திய வங்கி நிதிச் சபையிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும், நிதிச் சட்டத்தின்படி, மத்திய வங்கியின் கண்காணிப்பு ஆணைக்குழுவுக்கான அதிகாரங்கள், நிதிச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதையும் அறிவீர்களா?

பிரதமர்: அவை தொடர்பில் நான் அறிவேன். ஆனால், அரசாங்கத்தின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் கொள்கைகளைத் தீர்மானிப்பது, அரசாங்கமோ அல்லது அமைச்சரவை அமைச்சர்களோ தான் என்ற, அரசமைப்பின் படி நாங்கள் செயற்பட்டோம். அது, அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இரண்டாவதாக, அரசமைப்பின்படி, அரசைக் கட்டுப்படுத்துவது, நாடாளுமன்றம் ஆகும். ஆகவே இலங்கை மத்திய வங்கி, நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்காமல் செயற்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. எனவே, அனைத்து அமைப்புகளும் நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டுமென்பதோடு, கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்கள் பலமாக்கப்பட வேண்டும்.

நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன: மகேந்திரனுக்கு நீங்கள் பணிப்புரையை வழங்கிய பின்னர், அந்தப் பணிப்புரையை அமுல்படுத்துவது, இந்த நிறுவனத்தின் (இலங்கை மத்திய வங்கி) நடைமுறைகளுக்கு ஏற்ப நடைபெறுமென எதிர்பார்த்தீர்களா?

பிரதமர்: ஆம், அவர் (மகேந்திரன்) கலந்துரையாடியிருப்பார். ஆனால், நிதிச் சபையில் 3 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் திறைசேரிச் செயலாளர் உட்பட இருவர் அங்கு காணப்பட்டனர். நிதிச் சபையில் அவர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என எனக்குத் தெரியாது. ஆனால், அந்த 3 உறுப்பினர்களும் கூட்டங்களில் கலந்து கொண்டமையால், அதை அறிவார்கள். அதற்கு மேலதிகமாக, நிறுவனங்களை நான் நுண் முகாமை செய்வதில்லை.

நீதியரசர் பிரசன்ன: ஆகவே, அவ்வாறான முடிவொன்று எடுக்கப்படும் போது, மத்திய வங்கியில் வழமையாக முன்னெடுக்கப்படும் நடைமுறைகள் பின்பற்றப்படுமென நீங்கள் எதிர்பார்ப்பீர்களா?

பிரதமர்: ஆம், நான் எதிர்பார்ப்பேன்.

நீதியரசர் சித்திரசிறி: நிதிச் சட்டத்தின்படி, மத்திய வங்கி ஆளுநரின் பிரதான கடமையென்பது, நிதிச் சபையின் முடிவுகளையும் ஏனைய விடயங்களையும் அமுல்படுத்துவது தான் என அறிந்திருந்தீர்களா?

பிரதமர்: ஆம், நான் அறிந்திருந்தேன். அது, மீளக் கொண்டுவரப்பட வேண்டுமென நான் விரும்பினேன். ஏனெனில் முன்னைய அரசாங்கக் காலத்தில், நிதிச் சபையின்படி ஆளுநர் செயற்பட்டிருக்கவில்லை, மாறாக என்ன நடந்தது என்பது தான் நிதிச் சபைக்கு அறிவிக்கப்பட்டது. ஆகவே, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கேற்ப, சட்டத்தின்படி ஆளுநர் செயற்படுவது தொடர்பில் நாம் அர்ப்பணிப்புடன் காணப்பட்டோம். ஆனால், வட்டி வீதங்கள் அல்லது வேறு விடயங்களைத் தீர்மானிப்பதில் நாங்கள் தலையிடுவதில்லை.

நீதியரசர் சித்திரசிறி: பெப்ரவரி 26, 2015 அல்லது 27ஆம் திகதியில், மகேந்திரனை நீங்கள் தொடர்புகொண்டீர்களா என்ற 13ஆவது வினாவின்படி, வீதிச் செயற்றிட்டங்களுக்குத் தேவையான மேலதிக பணத்தைப் பெற முடியுமென, பெப்ரவரி 26, 2015ஆம் திகதி மாலையில், மகேந்திரன் உங்களிடம் தெரிவித்தார். பெப்ரவரி 27, 2015இல் நடைபெற்ற ஏலத்தின் பின்னர், 10.5 பில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளாரென அவர் கூறினாரெனவும் நீங்கள் கூறியுள்ளீர்கள்.
எமக்குத் தேவையான விளக்கம் என்னவெனில், பெப்ரவரி 27ஆம் திகதி நண்பகல் 12.39க்கு, மகேந்திரனின் தொலைபேசியிலிருந்து, ஓர் இலக்கத்துக்கு உங்களுக்கான அழைப்பு வந்தது எனவும், அதன் பின்னர் மகேந்திரனிடமிருந்து மேலும் 3 அழைப்புகள் கிடைத்தன எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த இலக்கத்தில் உங்களைத் தொடர்புகொள்ளலாமா?

பிரதமர்: ஆம். அந்த இலக்கத்தில் நான் தொடர்புகொள்ளப்பட்டேன். பல இலக்கங்களை நான் பயன்படுத்துகிறேன், ஆனால் அன்றைய தினத்தில் இந்த இலக்கத்தில் தான் தொடர்புகொள்ளக் கூடியதாக இருந்தது.

நீதியரசர் பிரசன்ன: அழைப்புகளுக்கு நீங்கள் பதிலளிப்பீர்களா?

பிரதமர்: நானாக அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை. எனது அலுவலக அறையில் நான் பணியாற்றுவதன் காரணமாக, வெளியில் யாராவது இருந்து, தொலைபேசியைச் சோதித்து, அதற்குப் பதிலளிப்பார்.

நீதியரசர் சித்திரசிறி: அந்த நான்கு அழைப்புகளினதும் விவரங்களை ஞாபகப்படுத்த முடியுமா?

பிரதமர்: முதலாவது அழைப்பில், கவலைப்பட வேண்டாமெனவும், தேவையான பணம் திரட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பின்னர் பிற்பகலில் ஓர் அழைப்பில், என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்களைத் தந்ததோடு, 10 பில்லியன் ரூபாயைத் திரட்டியுள்ளனர் என்று குறிப்பிட்டார். அந்த இரண்டு அழைப்புகளும் ஞாபகத்தில் உள்ளன. ஏனைய அழைப்புகள், வேறு விடயங்களுக்காக இருக்கலாம்.

இத்தோடு, நீதியரசர்களின் வினாக்கள் நிறைவுபெற்றன. சட்டமா அதிபரிடம் கேள்விகள் இருந்தால் கேட்க முடியுமென, ஆணையாளர்கள் குறிப்பிட்டனர்.

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய: மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் நியமிக்கப்பட்ட போது ஏற்பட்ட, நலமுரண் தொடர்பில் உங்களிடம் கேள்வியெழுப்பப்பட்டது. சத்தியக் கடதாசியின் 21ஆவது வினாவுக்கான உங்கள் பதிலில் நீங்கள், உங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பில், அர்ஜுன மகேந்திரன், சரியாகச் செயற்பட்டாரென நம்பியதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், பெப்ரவரி 27, 2015இல் நடைபெற்ற ஏலத்தின் பின்னரும், அதன் பின்னர் மார்ச் 21, 31ஆம் திகதிகளின் பின்னரும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜூன் 2016இல் நாடாளுமன்றத்தில் வைத்து, அறிக்கையொன்றை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, நலமுரண்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இருந்தன.
எந்தப் பின்னணியில் வைத்து, உங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் நம்பிக்கை வைத்தீர்கள்? இந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்ததா?

பிரதமர்: பெப்ரவரி மாத இறுதியில் நடந்தது. ஜனவரியில் நான் அவரோடு பேசினேன், அப்போது, பேர்பெச்சுவர் ட்ரெஷரீஸிலிருந்து அலோசியஸ் இராஜினாமா செய்கிறார் எனக் கூறப்பட்டது. அதை அவர் செய்திருந்தார். பணிப்பாளர் பதவியிலிருந்து அவர் விலகியிருந்தார். மென்டிஸ் டிஸ்டில்லரீஸை மேம்படுத்துவதில் தனது நேரத்தைச் செலவிடப் போகிறாரெனவும் கூறப்பட்டது. ஓரிரு உற்பத்திகளை என்னிடம் காட்டி, என்னுடன் உரையாடியிருந்தார். ஆனால் இது தொடர்பில் உரையாடியிருக்கவில்லை. ஆனால், இவ்வளவும் தான் எனக்குத் தெரிவித்தார். அவரிடம் பங்குகள் இருந்தன எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அர்ஜுன மகேந்திரனும் என்னிடம் இதே விடயத்தையே கூறினார்.

நலமுரண் என்பது, நான் ஆரம்பத்திலேயே எழுப்பிய விடயமாகும். ஏனெனில், முன்னாள் ஆளுநரின் சகோதரியும், பேர்பெச்சுவர் ட்ரெஷரீஸில் உறுப்பினராக இருந்தார். அதனால் நாம் தான், நலமுரண் எதுவும் இருக்கக்கூடாது எனவும் இராஜினாமா செய்யுமாறும் கூறினோம். இது நடந்த பின்னர், காமினி பிட்டிபன செயற்குழுவை நியமித்து, அக்குழு விசாரண செய்தது. ஆளுநர், விடுறையில் சென்றார். ஏதாவது பிழை நடந்திருந்தால், ஆளுநர் இராஜினாமா செய்திருக்க வேண்டும், ஆனால் அவருக்கெதிராக எதுவும் இருந்திருக்கவில்லை.

நிதியமைச்சர் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே எழுப்பிய விடயங்களும் காணப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எவற்றிலும், அப்படி ஏதும் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால் அமைச்சரிடம் (அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க) நான் கேட்டேன். அமைச்சர் இல்லை என்றார். அதை நான் ஏற்றுக் கொண்டேன்.

ஏனென்றால், மஹிந்தானந்த அளுத்கமகேக்கு எதிராக விசாரணையொன்று நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது, அதன் ஆவணம், உங்கள் திணைக்களத்துக்கு வந்துள்ளது. அவருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் (கேலியான குரலில்)

சட்டமா அதிபர்: ஆக, அர்ஜுன மகேந்திரன் வழங்கிய உறுதிமொழிகளைப் பின்பற்றினார் என்பது தொடர்பான விசேடமான தகவலேதும் இல்லை?

பிரதமர்: என்னை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தினார் என்று என்னிடம் தகவல்கள் இருந்திருக்கவில்லை. பிட்டிபன ஆணைக்குழுவிடமும் அவ்வாறான தகவல் இருக்கவில்லை. கோப், சில கருத்துகளை வழங்கியிருந்தாலும், அவ்விடயத்தில் எதுவும் கண்டுபிடித்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

சட்டமா அதிபர்: இப்படியான கேள்விகள், குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்த பின்னணியில், இவ்விடயங்கள் எப்படிப் போகின்றன என ஆராயுமாறு, மகேந்திரனுக்குப் பணிப்பரை விடுக்க வேண்டுமென, எத்தருணத்திலாவது சிந்தித்தீர்களா?

பிரதமர்: பிட்டிப்பன செயற்குழு முடிவடைந்த பின்னர், என்ன செய்ய வேண்டுமென எனக்குச் சொல்லுமாறு, நாடாளுமன்றத்திடம் நான் கொடுத்தேன். ஆகவே, நாடாளுமன்றத்திடம் அது வந்த பின்னர், அதில் நான் தலையிட விரும்பவில்லை.

சட்டமா அதிபர்: அரச வங்கிகள் ஒன்றிணைந்து, 2016ஆம் ஆண்டு மார்ச் 29, 31ஆம் திகதிகளில் பிணைமுறி ஏலங்களில் குறைந்த நெகிழ் வீதத்தில் கோருமாறு எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக உங்களுக்கு எப்போதாவது தெரியப்படுத்தப்பட்டதா?

பிரதமர்: இல்லை. அவ்வாறான கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை. ஊக அடிப்படையிலான ஏலத்தில் ஈடுபட வேண்டாமெனவும் ஊக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறும், அரச வங்கிகளுக்குக் கூறப்பட்டது. அதைத் தாண்டி, சந்தைக்கு நேயமான முடிவுகளை எடுப்பதே எமது கொள்கையாக இருந்தது.

சட்டமா அதிபர்: 14ஆவது வினாவுக்கான உங்களது பதிலின்படி, சி.பி.ஆர். பெரேராவுடனும் இன்னோர் அதிகாரியுடனும் இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அக்கூட்டத்திலும் கூட, அவ்வாறான கொள்கை முடிவு அறிவிக்கப்படவில்லையா? இல்லாவிடின், அவ்வாறான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கவில்லையா?

பிரதமர்: இல்லை, நிதி விவகாரங்கள் தொடர்பாகவே நாங்கள் பேசினோம். வங்கிக் கண்காணிப்புப் பிரிவு பலவீனமாக இருப்பது பற்றிய ஒரு விடயமே காணப்பட்டது.

இதுதான் முதல் தடவை

பதவியிலிருக்கும் போது, பிரதமர் ஒருவர், ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரானமை இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு,  மத்திய வங்கி பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.

அந்த அறிவுறுத்தலுக்கு அமைய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்றுக்காலை 9:50க்கு ஆஜராகினார். சுமார் 1 மணி 45 நிமிடங்கள் ஆணைக்குழுவில் அவரிருந்தார்.

ஆணைக்குழுவின் நடவடிக்கைககள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகின. ஆரம்ப நடவடிக்கைகளை நிறைவடைந்ததன் பின்னர், பிரதமர் ரணிலிடம் தெளிவுப்படுத்திக்கொள்வதற்கான கேள்விகள், காலை 10:15க்கு கேட்பதற்கு ஆரம்பிக்கப்பட்டன.

பிரமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியன்று, ஆணைக்குழுவால் அனுப்பிவைக்கப்பட்ட 28 கேள்விகளுக்குக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்ட 20 கேள்விகளுக்குமான பதில்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சத்தியக்கடதாசியின் ஊடாக அனுப்பிவைத்திருந்தார்.

அந்தப் பதில்களுக்கான தெளிவுப்படுத்தல்களைக் கோருவதற்கே, பிரதமர் நேற்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவர், தன்னுடைய விளக்கங்களை வழங்கிவிட்டு, காலை 11:35 மணியளவில், ஆணைக்குழுவை விட்டு வெளியேறிவிட்டார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மகேந்திரனை-நம்பினேன்/150-207592

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.