Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடு

Featured Replies

தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடு

தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடுபடத்தின் காப்புரிமைPADMAVATI

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மாவதி திரைப்படம் வட இந்தியாவில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்ததையடுத்து, படத்தின் வெளியீடு தேதிஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தி திரைப்படம் 'பத்மாவதி' டிசம்பர் 1 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால் இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கிய கர்னி சேனா அமைப்பினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கி அவரின் சட்டையைக் கிழித்தனர்.

கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம் என்று கடந்த வாரம் வியாழன்று கூறியிருந்தார்.

தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடுபடத்தின் காப்புரிமைPADMAVATI

சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அம்மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு அத்திரைப்படம் அந்த நாளில் வெளியிடப்படக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளது.

தொடர் எதிர்ப்புகளின் விளைவாக பத்மாவதி திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான வியகாம்18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்திருந்தது.

தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடுபடத்தின் காப்புரிமைTWITTER

இச்சூழலில், ஹரியானா மாநில பா.ஜ.கவின் மூத்த ஊடக ஒருங்கிணைப்பாளரான சுராஜ் பல் அமு, தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைகளை துண்டிப்பவருக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சுராஜ் பல் அமுவின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பெண்களுக்கான தேசிய ஆணையம், சுராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஹரியானா மாநில டி.ஜி.பிக்கு கடிதம் ஒன்றை எடுத்தியுள்ளது.

''உயிரோடு இருக்கும்போது எரிக்கப்படுவதின் உணர்வு எப்படியிருக்கும் என்பதை தீபிகா தெரிந்துகொள்ள வேண்டும். தீபிகாவை உயிரோடு எரிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்'' என்று அகில பாரதா சத்திரிய மகாசபையின் இளைஞர் அணியின் தலைவர் புவனேஷ்வர் சிங் அறிவித்துள்ளார்.

பத்மாவதி திரைப்படத்தை தயாரிக்க முதலீடு செய்யப்பட்ட பணம் மத்திய கிழக்கிலிருந்து தாவூத்தால் அனுப்பப்பட்ட பணம் என்று கூறி கர்னி சேனாவின் தலைவர் லோகேந்திர சிங் கல்வி புதிய பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42049618

  • தொடங்கியவர்

பத்மாவதி திரைப்பட பிரச்சனையின் முழுப் பின்னணி

தீபகா படுகோனேபடத்தின் காப்புரிமைAFP Image captionதீபகா படுகோனே

வலதுசாரி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், சாதிய குழுக்களும் நாடெங்கும் பத்மாவதி திரைப்பட வெளியீட்டுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இதன்காரணமாக, அத்திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த பிரச்சனை? ஏன் அவர்கள் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். சுதா ஜி திலக் விளக்குகிறார்.

ஏன் இந்த சர்ச்சை?

14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜபுத்திர சாதியை சேர்ந்த இந்து ராணி பத்மாவதி மற்றும் முஸ்லீம் அரசர் அலாவுதீன் கில்ஜி குறித்த கதைதான் இந்த திரைப்படம்.

சஞ்சய் லீலா பன்சாலியால் எடுக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் நாங்கள் மிகவும் மதிக்கும் பத்மாவதியை தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். அவருக்கும் அலாவுதின் கில்ஜிக்கும் காதல் இருந்ததுபோல காட்சிகளும் இடம்பெற்றுள்ளன என்று இந்து குழுக்கள் மற்றும் ராஜபுத்திர சாதியைச் சேர்ந்தவர்களும் குற்றம் சுமத்துகிறார்கள்.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர், இதனை மறுத்துள்ளார்.

பத்மாவதி என்பவர் வரலாற்றில் உண்மையாக வாழ்ந்தவர் இல்லை. அந்த கதாபாத்திரம் ஒரு புனைவு. அந்த புனைவு கவிதை வடிவத்தில் எழுதப்பட்டு இருந்தது.

அதனை எழுதியவர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞரான மாலிக் முகமது ஜயசி.

அந்த கவிதை, அலாவுதீன் கில்ஜியால் கணவன் கொல்லப்பட்ட பிறகு சதி என்று அழைக்கப்படும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த பத்மாவதியின் நல்லொழுக்கத்தை போற்றி புகழ்ந்து அவதி மொழியில் எழுதப்பட்டு இருந்தது.

கைம்பெண்கள் கணவர் இறந்தவுடன், அவர் எரிக்கப்பட்ட அதே சிதையில் தானும் விழுந்து மரணிப்பதுதான் 'சதி'. இந்த வழக்கமானது 700 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபுத்திரர்களால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

பத்மாவதி கதாபாத்திரமே ஒரு புனைவு என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.படத்தின் காப்புரிமைVIACOM18 MOTION PICTURES Image captionபத்மாவதி கதாபாத்திரமே ஒரு புனைவு என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

போரில் தமது கணவர்கள் தோற்றுவிட்டால், எதிரி படைகளால் தங்கள் மானத்திற்கு எந்த இழுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராஜபுத்திர பெண்கள் இந்த பழக்கத்தை மேற்கொண்டனர். சில ஆண்டுகளுக்குப் பின், பதிபக்தியாக இது பார்க்கப்பட்டது. இந்தியச் சீர்திருத்தவாதிகளின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்த்து, பிரிட்டன் ஆட்சியாளர்கள் இந்த பழக்கத்தை தடை செய்தனர்.

பத்மாவதியை சுற்றிச்சுழலும் இந்த நாட்டார் கதை சர்ச்சைக்குரிய ஒன்று என்று விவரிக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அவர்களின் கருத்து, பத்மாவதி குறித்த அந்த நாட்டார் கதை சதியை புனிதப்படுத்துகிறது.

ராஜபுத்திரர்கள் மத்தியில் இன்றும் பத்மாவதி தெய்வமாக வணங்கப்படுவதைதான் இந்தப் போராட்டங்கள் காட்டுகின்றன.

வலதுசாரி இந்துகுழுக்கள் இந்த படத்தை எதிர்ப்பது ஏன்?

இந்த படத்தில் முஸ்லிம் அரசனான கில்ஜி தன் கனவில், பத்மாவதியுடன் காதல் செய்வதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று வதந்தி பரவி இருக்கிறது. இது பலரை கோபப்படுத்தி உள்ளது. பல அமைப்புகள் படத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். அதில் செல்வாக்கற்ற சாதிய அமைப்பான ராஜபுத்திர கார்னிக் சேனாவும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பு இந்த படத்திற்கு தடை கோருகிறது.

கடந்தவாரம் இந்த அமைப்பு, திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று, படப்பிடிப்புக்கு இடையூறு செய்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில், இதே அமைப்புதான், படத்தின் இயக்குனர் பன்சாலியை அறைந்தது.

இந்த படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்ட திரையரங்குகளை தாக்கியதோடு நில்லாமல், ராமாயணத்தில் சூர்பனகையின் மூக்கு அறுக்கப்பட்டது போல பத்மாவதியாக நடிக்கும் படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்றும் மிரட்டியது.

இந்த அமைப்பு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களான ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் ஆர்ப்பாட்டம் செய்தது.

ராஜபுத்திர சமூகத்தினர் பன்சாலியின் உருவபொம்மையை எரித்தனர். இந்த படத்திற்கு தடை வேண்டும் என்றனர்.

படத்திற்கு எதிராக போராடி வருபவர்கள்.படத்தின் காப்புரிமைREUTERS Image captionபடத்திற்கு எதிராக போராடி வருபவர்கள்.

யாருடைய மனமும் புண்படாதவாரு அந்த படத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்வரை இப்படத்தை வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே.

பா.ஜ.கவின் உள்ளூர் தலைவர் பன்சாலி மற்றும் தீபிகாவின் தலையை வெட்டி வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.

ராஜஸ்தானை சேர்ந்த முன்னாள் அரச வம்சத்தினர், இந்த படத்தின் வெளியீட்டை தடை செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார்கள். அதில் ஒருவரான மகேந்திர சிங், இது ஒரு கலை, வரலாற்று மோசடி என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் வரும் கனவு காட்சியில் பத்மாவதி மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் எல்லோரும் வைக்கும் குற்றச்சாட்டு.

படத்தில் அப்படியான காட்சிகளே இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறார் பன்சாலி.

ஆனால், அவருடைய மறுப்பு செவிடன் காதில் ஊதிய சங்குப்போலதான் இருக்கிறது. தங்கள் ராணியின் புனிதத்தை காக்க விரும்புவார்கள் யாரும் இதை காதில் வாங்கவில்லை.

அதே நேரம், பலர் சமூக ஊடகங்களில் தீபிகாவுக்கும், அந்த படத்தின் இயக்குனர் பன்சாலிக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைக்கு எதிராக தங்கள் அதிர்ச்சியினை பகிர்ந்துள்ளனர்.

வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

வரலாற்றாசிரியர்கள், படத்தின் இயக்குனர் மற்றும் குழுவினருக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்களுக்கு எதிராக தம் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

அலைகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப், பத்மாவதி உண்மையான கதாபாத்திரம் அல்ல, அது கற்பனை பாத்திரம் என்றுள்ளார்.

அதேநேரம் தாராளவாதிகள், படத்தின் முன்னோட்டத்தில் அலாவுதீன் கில்ஜியை இறைச்சி உண்ணும் முரடனாக திரித்துக் காட்டியிருப்பதாக குற்றம்கூறுகின்றனர்.

பத்மாவதி திரைப்படத்தில் ஒரு காட்சிபடத்தின் காப்புரிமைVIACOM18 MOTION PICTURES Image captionபத்மாவதி திரைப்படத்தில் ஒரு காட்சி

எழுத்தாளர் தேவ்தத் பட்நாயக், பன்சாலி சதியை புனிதப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

என்ன அடுத்து?

டிசம்பர் 1 வெளியிடப்படுவதாக இருந்த இந்த திரைப்படம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று படத்தை தயாரிக்கும் வியாகாம் 18 ஊடக நிறுவனம் கூறியுள்ளது. பாஜக அரசும், அது ஆளும் மாநிலங்களும் படத்துக்குப் பாதுகாப்பு தரத் தவறியிருப்பதாக நடிகை ஷபானா ஆஸ்மி குற்றம்சாட்டியுள்ளார்.

ட்வின்கில் கண்ணா தனது ட்விட்டர் பதிவில், இந்த படம் பெரும் வெற்றி பெரும் அதுதான் இந்த படத்தை எதிர்ப்பவர்களுக்கு உண்மையான பதிலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/india-42069261

  • தொடங்கியவர்

யார் இந்த பத்மாவதி? ஏன் இவ்வளவு சர்ச்சை? 10 முக்கிய தகவல்கள்

 

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தி திரைப்படமான 'பத்மாவதி' வெளிவருவதற்கு முன்பே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது.

யார் இந்த பத்மாவதி? ஏன் இவ்வளவு பிரச்சனை? 10 முக்கிய தகவல் Image captionராணி பத்மாவதியின் கணவராக ஷாகித் கபூர் நடித்துள்ளார்

அந்தப் படம் வெளியாவதைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜபுத்திரர்களின் அமைப்புகளும், பல வலதுசாரி அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் போராட்டமும் நடத்துகின்றன.

அதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பிற்கு என்ன காரணம், பத்மாவதி எனும் ராணிக்கு வரலாறு என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

  • மாலிக் முகமது ஜெயசி எனும் இஸ்லாமிய சூஃபி கவிஞர் மத்திய இந்தியாவில் பேசப்படும், தற்போது இந்தியின் ஒரு அங்கமாகக் கருதப்படும் 'அவதி' மொழியில், 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'பத்மாவத்' எனும் கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
  • தற்போதைய ராஜஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் மேவார் சாம்ராஜ்யத்தின் ராணி பத்மாவதி, ராஜபுத்திர மன்னர் ரத்ன சிம்மாவின் மனைவி என்று ராஜபுத்திரர்கள் கூறுகின்றனர். வாய் வழி வரலாற்றில் அவர் ரத்தன் சிங் என்று அறியப்படுகிறார்.
யார் இந்த பத்மாவதி? ஏன் இவ்வளவு பிரச்சனை? 10 முக்கிய தகவல்
  • ரத்தன் சிங் போரில் கொல்லப்பட்டபின், ராணி பத்மாவதியை அடைவதற்காக டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி மேவார் சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய சித்தோர்கார் மீது படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து தப்பிக்க பத்மாவதி தனது கணவனின் சிதையில் உடன் கட்டை ஏறியதாக ராஜபுத்திரர்கள் நம்புகின்றனர்.
  • அவருடன் பல ராஜபுத்திர பெண்கள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொளுத்திக்கொண்டு இறந்ததாக ராஜஸ்தானில் ஒரு வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது.
  • அலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மாவதிக்கு இடையே உறவு இருந்ததாக தவறான செய்தி இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும், ராணி பத்மாவதியை தெய்வமாக வணங்கும் ராஜபுத்திரர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
அலாவுதீன் கில்ஜியாக நடித்துள்ளார் ரன்வீர் சிங் Image captionஅலாவுதீன் கில்ஜியாக நடித்துள்ளார் ரன்வீர் சிங்
  • பத்மாவதி கற்பனை பாத்திரம்தான், அவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • கடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கிய கர்னி சேனா அமைப்பினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கி அவரின் சட்டையைக் கிழித்தனர்.
  • கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா, சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம் என்று வியாழன்று கூறியிருந்தார்.
ரன்வீர் மற்றும் தீபிகா நடித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரன்வீர் மற்றும் தீபிகா நடித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய "கோலியோன் கீ ராஸ்லீலா ராம்லீலா" படமும் பெரும் சர்ச்சைக்கு உள்ளது.
  • சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.
  • யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அம்மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு அத்திரைப்படம் அந்த நாளில் வெளியிடப்படக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள, ராஜபுத்திர மன்னர்களின் தலைநகராக விளங்கிய சித்தோர்கர் கோட்டை உள்பட பிற மாநிலங்களிலும் இந்தத் திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42025636

  • கருத்துக்கள உறவுகள்

படம் வெளியாகும்போது 
இந்தியாவில் இருப்பது தீபிகாவுக்கு அவ்வளவு 
பாதுகாப்பு போல தெரியவில்லை.

எனது வாசல் கதவு தீபிகாவுக்கு
திறப்பதட்காக எப்போதும் காத்திருக்கிறது 
ஒரு கொஞ்ச நாள் இந்த கொதி  நிலை 
அடங்கும் வரை என்றாலும் பாதுகாப்பு 
கருதி தீபிகா எனது வீட்டில் வந்து தங்கி கொள்ளலாம். 

அதனால் எனக்கு  வரும் அவ்சவ்காரியங்கள் இடையூறுகளை 
நான் பெரிதுபடுத்த போவதில்லை என்பதையும் 
தெரிவித்து கொள்கிறேன் 

  • தொடங்கியவர்

"தீபிகாவின் உடலைவிட உயிருக்கு மதிப்பளிக்கிறேன்" - பத்மாவதி படத்திற்கு கமல் ஆதரவு

கமல்படத்தின் காப்புரிமைNOAH SEELAM

பத்மாவதி படத்தில் நடித்ததற்காக பல்வேறு ராஜபுத்திரர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகளிடமிருந்து தொடர்ச்சியான கொலை மிரட்டல்களை பெற்றுவரும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தி திரைப்படமான 'பத்மாவதி' வெளிவருவதற்கு முன்பே கடுமையான எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது.

குறிப்பாக, இதில் கதாநாயகியாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனுக்கு எதிராக பல்வேறு விதமான கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன.

திங்கட்கிழமையன்று, ஹரியானா மாநில பா.ஜ.கவின் மூத்த ஊடக ஒருங்கிணைப்பாளரான சுராஜ் பல் அமு, தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைகளை துண்டிப்பவருக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல், "எனக்கு தீபிகாவின் தலையை (உயிரை) பாதுகாக்க வேண்டும். அவரின் உடலைவிட உயிருக்கு மதிப்பளிக்கிறேன்.அதைவிட அவரது சுதந்திரத்தை. அதை அவருக்கு கிடைப்பதற்கு மறுக்காதீர்கள்" என்று நடிகை தீபிகா படுகோனுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

 
 

I wantMs.Deepika's head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We've said enough. Listen Ma Bharat

 

"பல்வேறு அமைப்புகள் எனது படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எந்த விவாதத்திலும் தீவிரவாதம் என்பது துயரம் தரவல்லது. அறிவாற்றல் மிக்க இந்தியாவே விழித்தெழு. இது யோசிப்பதற்கான நேரம். நாம் போதுமான அளவிற்கு பேசிவிட்டோம். சொல்வதை கேள் என் பாரதத்தாயே" என்று இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்.

தொடர்ச்சியான கொலை மிரட்டல்கள்

தற்போதைய ராஜஸ்தான் அமைந்திருக்கும் மேவார் சாம்ராஜ்யத்தின் ராணி பத்மாவதி பற்றி மாலிக் முகமது ஜெயசி எனும் இஸ்லாமிய சூஃபி கவிஞர் 'அவதி' மொழியில், 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'பத்மாவத்' எனும் கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங், தீபிகா படுகோனேபடத்தின் காப்புரிமைPADMAVATI

பத்மாவதி படப்பிடிப்பின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே கர்னி சேனா என்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, கடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை தாக்கி அவரின் சட்டையையும் கிழித்தனர்.

தீபிகாவின் மூக்கை வெட்டி விடுவோம் என்று கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங்கும், அவரின் தலையை துண்டித்து கொண்டு வருபவருக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேசத்தின் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபையின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோமும், தீபிகாவை உயிரோடு எரிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அகில பாரதா சத்திரிய மகாசபையின் இளைஞர் அணியின் தலைவர் புவனேஷ்வர் சிங்கும் உள்ளிட்டோர் ஏற்கனவே கூறியுள்ளனர்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த இப்படத்தை, தயாரிப்பு நிறுவனமான வியாகாம்18, தொடர் எதிர்ப்புகளின் காரணமாக படத்தின் வெளியீட்டை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/india-42061472

  • தொடங்கியவர்

40 ஆண்டுகளுக்கு முன்பே ராணி பத்மினியாக தமிழில் வெளியான `பத்மாவதி'

98863532b38b46e7-a8d6-442b-a5ab-2dcae634

ராணி பத்மினி குறித்த சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி திரைப்படம், வட இந்தியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தாலும், 1963ல் தமிழில் இதே பின்னணி கதையோடு வெளிவந்த `சித்தூர் ராணி பத்மினி' திரைப்படம், சிறிய சலசலப்பைக்கூட ஏற்படுத்தவில்லை.

ராஜஸ்தானின் ராணி பத்மினியின் கதை இந்தியா முழுவதும் பிரபலமான ஒன்று என்றாலும் அதுவரை அந்தக் கதை தமிழில் வெளியாகியிருக்கவில்லை என்பதால், அந்தக் கதையை படமாக எடுக்க முடிவுசெய்தார் உமா பிக்சர்ஸின் ஆர்.எம். ராமநாதன். படத்தை சித்ரபு நாராயணமூர்த்தி இயக்கினார். கதை, திரைக்கதையை ஸ்ரீதரும் இளங்கோவனும் எழுதினர்.

சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எம்.என். நம்பியார், டி.எஸ். பாலையா, கே.ஏ. தங்கவேலு என அந்த காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகர்கள் பலரும் படத்தில் இருந்தனர். 1963 பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி சித்தூர் ராணி பத்மினி வெளியானது.

ராணி பத்மினி மீது தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி கொண்டிருந்த ஆசையே இந்தப் படத்தின் கதை. அந்த காலகட்டத்தில் அன்னிய ஆண்கள் முன்பாக பெண்கள் தோன்றுவது வழக்கமில்லையென்பதால், ராணி எப்போதும் பர்தாவுடனேயே இருப்பார்.

988635304bc73aa1-5b90-4d4a-81c0-57dcdef4

ஒரு கட்டத்தில் ராணியை தான் பார்க்காவிட்டால், ராஜ்ஜியத்தையே அழித்துவிடப் போவதாக அலாவுதீன் கில்ஜி மிரட்ட, ஒரு ஏற்பாட்டுக்கு வருகிறார் ராணா. அதாவது ராணியின் பிம்பம் தண்ணீரில் எதிரொலிக்கும்: அந்த பிம்பத்தை கண்ணாடியில் எதிரொலிக்கச் செய்து கில்ஜி பார்த்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் அலாவுதீனைக் கொல்வதற்கும் ராணா திட்டமிடுவார். ஆனால், மற்றொருவருக்கு முகத்தைக் காண்பிப்பதில் ராணிக்கு விருப்பமில்லை. பல்லாக்கில் அவரைத் தூக்கி செல்லும்போது, தீயில் விழுந்து உயிர் துறக்கிறார் ராணி பத்மினி.

இதில் ராணாவாக சிவாஜி கணேசனும் ராணி பத்மினியாக வைஜெயந்திமாலாவும் அலாவுதீன் கில்ஜியாக எம்.என். நம்பியாரும் நடித்திருந்தார்கள். வைஜெயந்திமாலா சிறப்பாக நடனம் ஆடுவார் என்பதால் படத்தில் பல நாட்டியக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தப் படம் வெற்றி பெறவில்லை. சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா போன்ற பெரிய நடிகர்கள் நடித்திருந்தும் ரசிகர்கள் இந்தப் படத்தை வரவேற்கவில்லை.

"இந்தப் படம் வந்ததே பலருக்கும் மறந்துபோய்விட்டது. யாருடைய நடிப்பும் மிகச் சிறப்பாக இருந்ததாகச் சொல்ல முடியாது. பாடல்களும் எடுபடவில்லை" என்று நினைவுகூர்கிறார் சென்னையைச் சேர்ந்த சினிமா வரலாற்றாசிரியரான ராண்டார் கை.

98863531a5d89929-e0de-4d36-b447-0770eedb

அந்த காலகட்டத்தில் இந்தியாவில் வேறெங்கும் ராணி பத்மினி குறித்து திரைப்படங்கள் வந்ததாகத் தெரியவில்லை என்கிறார் அவர்.

இந்தப் படம் சர்ச்சையை அல்ல, சிறிய சலசலப்பைக்கூட தமிழ்நாட்டில் ஏற்படுத்தவில்லை.

"1960களில் இந்து - முஸ்லிம் பிரிவினை என்பதே தென்னிந்தியாவில் பெரிதாகக் கிடையாது. அதுவும் ஒரு சினிமாவை வைத்தெல்லாம் இம்மாதிரியான மத ரீதியான சர்ச்சைகள் அப்போது ஏற்பட்டதில்லை" என்கிறார் எழுத்தாளரும் சினிமா வரலாற்றாசிரியருமான தியடோர் பாஸ்கரன்.

எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்தில் "எல்லோருக்கும் இடம்கொடுக்கும் அல்லாவே, எமாந்திட்டா போட்டிருவாங்க குல்லாவே" என்று சந்திரபாபு பாடுவதைப் போல இடம்பெற்றிருக்கும் பாடலைச் சுட்டிக்காட்டும் தியடோர் பாஸ்கரன், இப்போது அப்படி ஒரு பாடல் எந்தப் படத்திலும் இடம்பெற முடியாது என்கிறார்.

அந்த காலகட்டத்தில் செட்டியார், பிராமணர்கள் போன்ற சமூகத்தினரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து விமர்சித்துவந்தனர். அது பெரிய பிரச்சனையாக இல்லை என்கிறார் அவர்.

ஆனால், அதை கதையுடன் தற்போது ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள பத்மாவதி திரைப்படத்தின் கதைக்கு குறிப்பிட்ட பிரிவினர் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால், அப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்துக்கு, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றன.

http://tamil.thehindu.com/bbc-tamil/article20670490.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.