Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

” கம்யூனிஸம்... கட்டுக்கோப்பு... 23 நிமிட உரை!” - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்

Featured Replies

” கம்யூனிஸம்... கட்டுக்கோப்பு... 23 நிமிட உரை!” - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்- தொடர் -1

 
 

thanioruvan_06534.jpg

Chennai: 

சீனா என்றவுடன் உங்களுக்குச் சட்டென்று என்னென்ன விஷயங்கள் நினைவுக்கு வரும்..?  மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, அண்டை நாடுகளின் எல்லையில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்து வம்புக்கு இழுக்கும் அதன் முரட்டுத்தனமான ராணுவம், அரசையும் ஆள்பவர்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத ஒடுக்குமுறை அரசாங்கம், உள்நாட்டில் நடக்கும் நல்லது கெட்டது வெளியில் கசிந்துவிடாதபடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் ஊடகங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை எனப் பெரும்பாலும் நெகட்டிவ் சமாசாரங்கள்தானே..? ஆனால், மேற்கூறிய அத்தனை நெகட்டிவ் சமாசாரங்களையும் தனக்கான பாசிட்டிவான விஷயமாக மாற்றிக்கொண்ட சீனாவை, இன்னும் 30 ஆண்டுகளில் உலகின் வல்லரசாக்கிவிட வேண்டும் எனத் துடியாய்த் துடிக்கிறார் அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங். 

 

இது, சாத்தியமா என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ... இல்லையோ... சர்வதேச அரசியல் ஆய்வாளர்களும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் 'அது சாத்தியம்தான்' எனத் தலையை ஆட்டுகின்றனர். அதற்கான முக்கியக் காரணமாக, அவர்கள் சுட்டிக்காட்டுவது சீன அதிபர் ஜி ஜின்பிங், மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவியில்  நீடிக்கும் வகையில் அந்த நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதையும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சாசனத்தில் அவரது சித்தாந்தம் இடம் பெற்றுவிட்டதையும்தான். அந்த அளவுக்கு இன்றைய தேதிக்கு உலகின் மிக அதிகாரம்படைத்த தலைவராக விஸ்வரூபமெடுத்து நிற்கத் தொடங்கியிருக்கிறார் ஜின்பிங்.

ஜிங்பிங்

சீனாவில் வழக்கமாகச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி, அக்கட்சியின் 19-வது தேசிய மாநாடு சென்ற (அக்டோபர்) மாதம் 17-ம் தேதி தொடங்கி ஒரு வாரகாலம் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில்தான், 'அரசியல், பொருளாதாரம், ராணுவம், சுற்றுச்சூழல் என முக்கிய சமாசாரங்கள் அனைத்திலும் உலகை வழிநடத்தும் வல்லமைமிக்க நாடாகச் சீனா உருவெடுக்க இதுவே தருணம்' என்று அறிவித்து, இதுநாள்வரை உலக 'டான்' ஆக... ஸாரி வல்லரசாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவை அசால்ட்டாகத் தட்டிவிட்டுச் செல்லும்விதமான திட்டங்களையும் அறிவிப்புகளையும் ஜின்பிங் வெளியிட்டதை வெலவெலத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இதர நாட்டுத் தலைவர்களும்.

ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்தே அந்த நாட்டுக்குச் சனி பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதிபர் பதவிக்கு வரும் முன்பும், வந்த பின்பும் ட்ரம்ப் வெளியிட்ட கோக்குமாக்கான அறிவிப்புகளுக்கும் திட்டங்களுக்கும் உள்நாட்டிலேயே ஏகத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்ப... உலக நாடுகள் மற்றும் தலைவர்கள் மத்தியில் இதுநாள்வரை அமெரிக்காவுக்கு இருந்துவந்த மதிப்பு மெள்ளமெள்ளக் குறைந்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான், ஈராக் என உலகின் பல இடங்களில் மூக்கை நுழைத்ததனால் ஏற்பட்ட பிரச்னைகள், பொருளாதார இழப்புகள் போன்ற காரணங்களால் இப்போதைக்கு உள்நாட்டு விவகாரங்களில் மட்டும் அதிகக் கவனம் செலுத்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துவிட்டார். இந்தச் சூழலில் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அதிபர் ஜின்பிங், தன்னை ஒரு சிறந்த உலகத் தலைவராகவும், சீனாவை ஒரு பொறுப்புமிக்க உலகின் வல்லரசு நாடாகவும் காட்டுவதற்கான பிம்பங்களை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டார். 

ட்ரம்ப் - ஜின்பிங்

ட்ரம்ப் - ஜின்பிங்

இதுநாள்வரை, அமெரிக்க அதிபருக்கு அடுத்தபடியாக ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளும், அவற்றின் தலைவர்களும்தான் உலகின் வசீகரத்தைப் பெற்றிருந்தனர். ட்ரம்ப்புக்குத்தான் 'கட்டம்' சரியாக இல்லையென்றால், ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டனின் தெரசா மே போன்ற தலைவர்களுக்கும் உள்நாட்டிலேயே எதிர்ப்பு. அவ்வளவு ஏன்..? அமெரிக்காவுக்குக் கடும் சவால் விடுத்துக்கொண்டிருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும்கூட, சீன அதிபர் ஜின்பிங்குக்கு இருக்கும் அளவுக்கான அரசியல் அதிகார ஸ்திரத்தன்மை மற்றும் (நாட்டின்) பொருளாதாரப் பாதுகாப்பு நிலைமை இல்லை. எனவேதான், போட்டியாளரே இல்லாமல் உலகின் சர்வவல்லமை மிக்கத் தலைவராகக் கிடுகிடுவென வளர்ந்துகொண்டிருக்கிறார் ஜின்பிங். 

சீனாவில் பல கட்சி ஜனநாயகமெல்லாம் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆள முடியும். எனவே, அந்த நாட்டில் ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த நாட்டு மக்களால் மட்டுமல்ல; இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளாலும் பார்க்கப்படும். அப்படித்தான் கடந்த அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடும் உலகின் கவனத்தை ஈர்த்தது. 

கம்யூனிஸப் பாதையிலிருந்து விலகல் இல்லை!

இம்மாநாட்டில் மூன்று மணி நேரம் 23 நிமிடங்களுக்கு உரையாற்றிய ஜின்பிங், "இந்தப் புது யுகத்தில் சீனப் பண்புகளோடு கூடிய சோஷலிசம், நாட்டை உலகில் பெரிய சக்தியாக்கி இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகச் சோர்வடையாமல் மேற்கொண்ட போராட்டத்தினால்தான் சீனா, உலக அரங்கில் இன்று உறுதியுடன் மிக உயரத்தில் வளர்ந்து நிற்கிறது. அரசியல், பொருளாதாரம், ராணுவம் மற்றும் சுற்றுச்சூழல் என முக்கியப் பிரச்னைகளில் உலகை வழிநடத்திச் செல்லும் ஒரு வலிமைமிக்க சக்தியாக சீனா தன்னை மாற்றிக்கொள்வதற்கான சரியான தருணம் இது. சீனாவின் வளர்ச்சியில் இது ஒரு புதிய வரலாற்று திருப்புமுனை" என்று சொல்லி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான கட்சியின் முன்னுரிமை செயல் திட்டங்களை வெளியிட்டார்.

இதில் முக்கியமாகச் சீனாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், உலக நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமான நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட ஜின்பிங், உலகத்துடனான தன் கதவுகளைச் சீனா மூடிக்கொள்ளாது என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தடைகளைக் குறைப்பது உள்ளிட்ட மேலதிக பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். 

மேலும், சீனாவின் தற்போதைய ஒட்டுமொத்த அரசியலமைப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்று கூறிய அவர், மற்ற நாடுகளின் அரசியலமைப்பை இயந்திரத்தனமாகச் சீனாவும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று சொன்னதோடு, சீனா தொடர்ந்து இதே கட்டுக்கோப்பான கம்யூனிஸப் பாதையிலேயே செல்லும் என்பதையும், ஜனநாயக முறையிலான அரசியலமைப்பை இப்போதைக்கு நினைத்தே பார்க்க முடியாது என்பதைச் சீன மக்களுக்கு மட்டுமல்ல, உலகுக்குமே தனது உரைமூலம் திட்டவட்டமாக உணர்த்திவிட்டு அமர்ந்தார். 

சீன கம்யூனிஸ மாநாட்டில்...

அரசியல் சாசனத்தில் ஜின்பிங் சித்தாந்தம்! 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சீனக் கம்யூனிஸ கட்சியின் 19-வது மாநாடு,  அக்டோபர் 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளன்று ஜின்பிங் மேலும் ஐந்து ஆண்டுகள் சீன அதிபர் பதவியில் நீடிக்கும் வகையில், கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டு, ஜின்பிங்கின் 'புதிய சகாப்தத்துக்கான சீனப் பண்பு நலன்களுடனான சோஷலிசம்' என்னும் சித்தாந்தம் சேர்க்கப்பட்டது.

சீனக் கம்யூனிஸ மாநாட்டில்...

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சாசனத்தில் ஜின்பிங்கின் பெயரும், அவரது சித்தாந்தமும் இடம்பெற்றுவிட்டதால் அவர், கட்சியின் நிறுவனரான மாசேதுங், அவரைப் பின்தொடர்ந்து வந்த டெங் ஜியாவோபிங் ஆகியோரின் வரிசையில் இடம்பிடித்து விட்டார்.

இதனிடையே, அடுத்த ஐந்தாண்டுகளுக்குக் கட்சியை வழிநடத்திச் செல்வதற்குப் புதிதாக ஒரு மத்தியக் குழுவை இம்மாநாடு தேர்வு செய்துள்ளது. இந்தக் குழு, கட்சியின் அரசியல் விவகாரக் குழுவைத் தேர்வு செய்யும். இந்த அரசியல் விவகாரக் குழுதான், ஆளும் கவுன்சிலின் அதிகாரமிக்க அமைப்பாக இருக்கும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார வரிசையில் முதலிடத்தை அதிபர் ஜின்பிங்கும், இரண்டாம் இடத்தைப் பிரதமர் லீ கெகியாங்கும் வகிப்பார்கள்.

தற்போது முடிவடைந்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநாட்டின் போக்கு, முடிவுகள், அதிபரின் செல்வாக்கு ஆகியவை குறித்தும், இது உலகச் சந்தையிலும், சர்வதேச அரசியலிலும் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் உலக அளவில் பேசத் தொடங்கிவிட்டனர். கட்சியின் உயர் அமைப்பான அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) இனி ஜின்பிங்கின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால், அவர் தன்னிகரில்லாத் தலைவராக அதிகாரம் பெற்றுள்ளதாகவே உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தன் நாட்டுக்கும், உலகுக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை ஜின்பிங் தொடங்கி வைத்துள்ளதாகவும், உலக அரசியல் விவகாரங்களைத் தீர்மானிக்கும் சக்தியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைவர் ஜின்பிங்கும் பார்க்கப்படுவதாகவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

 

சீன ராணுவம்

சீன ராணுவம்

இப்படி இன்று சீனாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட தனி ஒருவனாகத்  தன்னை வளர்த்துக்கொண்டுள்ள ஜின்பிங், எப்படி அரசியலுக்குள் நுழைந்தார், எப்படித்  தன்னை இந்த அளவுக்கு வளர்த்துக்கொண்டார், இந்த வளர்ச்சி அவருக்கு எப்படிச் சாத்தியமானது, அவர் அதிபரான பின்னர் சீனா விஸ்வரூபம் எடுப்பது எப்படி போன்றவற்றைத் தெரிந்துகொள்ளும் முன்னர், ஜின்பிங்குக்கு முந்தைய தலைவர்களின் காலத்தில் சீனா எத்தகைய நிலைமையில் இருந்தது, தன் நாட்டில் நடக்கும் விஷயங்கள் வெளியில் தெரிந்துவிடாதபடிக்குச் சீனா ஏன் தனக்கு இரும்புத் திரை போட்டுக்கொண்டுள்ளது, சீனாவின் இரும்புத் திரைக்குக் காரணமான கம்யூனிஸம் அந்த நாட்டில் எப்படி, எதனால் வலுவாக வேர்விட்டது, அதற்கு முன்னர் புரட்சிப் போராட்டங்கள் வெடித்து கம்யூனிஸம் தோன்றக் காரணமான மன்னராட்சி சீனாவில் எவ்வாறு முடிவுக்கு வந்தது, அதற்குக் காரணமான தலைவர்கள் யார் யார், இன்னமும் ஏன் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையைச் சீனா விடாமல் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறது, திபெத் தலைவர் தலாய் லாமாவை ஏன் சீனா அப்படி வெறுக்கிறது, 1989-ம் ஆண்டு ஜனநாயகம் கோரி மாணவர்கள் நடத்திய தியான்மென் சதுக்கப் போராட்டத்தைச் சீன அரசு எப்படி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது, அந்த நிகழ்வுக்குப் பிறகு சீன மக்களுக்கு ஜனநாயகம் கோரும் எண்ணமே எட்டிப்பார்க்க விடாதபடிக்குச் சீன அரசு எத்தகைய கெடுபிடிகளை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது போன்றவற்றை வரும் அத்தியாயங்களில் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்....

https://www.vikatan.com/news/world/108073-xi-jinpings-new-era-of-oneman-rule-in-china.html

  • தொடங்கியவர்

ஜின்பிங்கை செதுக்கிய கலாசார புரட்சி!- ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் ( தொடர் -2 )

 

thanioruvan2_12194.jpg


ன்னும் 30 ஆண்டுகளில் சீனாவை உலகின் வல்லரசாக்கிவிடும் நோக்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஆட்சியிலும் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்துள்ள அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கின்  தந்தையும் ஓர் அரசியல்வாதிதான் என்பதால், அரசியல் என்பது அவரது ரத்தத்தில் ஊறிய அம்சமாகவே மாறிவிட்டது. ஆனாலும், 1968 ல் நிகழ்ந்த சீன கலாசார புரட்சியைத் தொடர்ந்து ஜின்பிங்கிற்கு ஏற்பட்ட அனுபவமே அவரை எதிர்காலத்தில் ஒரு மாபெரும் அரசியல் தலைவராக உருவாகும் அளவுக்கு செதுக்கியது. 

 

தந்தை ஷி ஷோங்குன் மற்றும் தாயார் குய் ஷிங்ன் - க்கு 1953, ஜூன் மாதம் 15-ம் தேதியில் பிறந்த ஜின்பிங், இளமைப்பருவம்   சாதாரணமாகத்தான் கடந்தது.  அதுவும் தந்தை செல்வாக்குப் பெற்ற ஓர் அரசியல்வாதி, மாகாண ஆளுநர் என்று பதவி வகித்த நிலையில் ஜின்பிங்குக்கு, வசதியான நகர்ப்புற வாழ்க்கை அமைந்தது. ஆனால் அது அதிக நாட்கள் நீடிக்கவில்லை.  15 வயதிலேயே கிராமப்புறத்தில் ஓர் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால் உண்மை அதுதான். 

ஜின்பிங்கின் தந்தை ஆட்சி அதிகாரத்தில் பதவி வகித்தபோதிலும், அவர் கட்சி மற்றும் ஆட்சியின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் விமர்சிக்கத் தயங்கியதே இல்லை. குறிப்பாக 1966 - 76 வரை சீனாவில் நிகழ்ந்த கலாசார புரட்சியின்போதும், அதற்கு முன்னரும் அரசின் செயல்பாடுகளை மிகக்கடுமையாக விமர்சித்த ஷி ஷோங்குன், கட்சியிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து அவர் சிறையிலடைக்கப்பட்ட நிலையில்,ஜின் பிங்கின் குடும்பம் மிகவும் அவமதிப்புக்குள்ளாகி சிதறடிக்கப்பட்டது. அவரது சகோதரிகளில் ஒருவர் மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூட கூறப்பட்டது. இந்த களேபரங்களால் அதுநாள் வரை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றுகொண்டிருந்த ஜின்பிங்கின் இளைமைப்பருவம் சூறாவளியைச் சந்தித்தது. 

ஜின்பிங்கைச் செதுக்கிய கலாசார புரட்சி

இந்த நிலையில், 1968-ம் ஆண்டு சீன கலாசார புரட்சிக்கு வித்திட்ட மா சேதுங், நாட்டின் இளைஞர்கள் நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குச் சென்று வாழவேண்டும் என்றும், அங்கு வாழ்ந்து வரும் விவசாய மக்களின் கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனால் ஆயிரக்கணக்கான இளம்வயதினரின் பள்ளிப்படிப்புக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அவர்கள் கிராமப்புறங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படித்தான் ஜின்பிங்கும் அவரது தந்தையால் ஷான்க்ஸி மாகாணத்துக்கு 1969 - ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவர், சுமார் ஆறாண்டுகள் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். இரவுத் தூக்கத்துக்குக் கயிற்று கட்டில் கூட கிடையாது. அங்குள்ள குகை ஒன்றில் செங்கற்களால் அமைக்கப்பட்ட மேடை போன்ற ஒன்றைத்தான் கட்டிலாக பாவித்து, பூச்சிக்கடியிலும் கொசுக்கடியிலும் தூங்கி எழுந்தார். 

கலாசார புரட்சியின்போது...

இதுகுறித்து அந்த காலகட்டத்தில் ஜின்பிங்குடன் குகையில் தங்கியிருந்த அவரது கூட்டாளி லூ ஹவுஷெங் குறிப்பிடுகையில், " அந்த நேரத்தில் எங்களுக்குச் சாப்பிட கிடைத்ததெல்லாம் கஞ்சியும், மூலிகைகளும், ஆவியில் வேகவைக்கப்பட்ட ரொட்டியும்தான். உங்களுக்கு பசியாக இருக்கிறது என்றால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. வயிறு நிரம்புகிறதா என்றுமட்டும்தான் பார்க்க வேண்டும்.

மனம் கவர்ந்த மா சேதுங், மார்க்ஸ் தத்துவங்கள்

அத்தகைய சிரமமான சூழலுக்கு மத்தியிலும் ஜின்பிங், அந்தக் குகையில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பெரும் வேட்கையுடன் புத்தகங்களையும் செய்தித் தாள்களையும் வாசித்துக்கொண்டிருப்பார். கூடவே அவரது விரலிடுக்கில் விடாமல் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும். ஒரு செயின் ஸ்மோக்கர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவர் சிகரெட்டுகளை ஊதித்தள்ளிக்கொண்டிருப்பார். அதே சமயம், தான் படிக்கும் புத்தகம், பத்திரிகைகளில் மா சேதுங் சொன்னதாக வந்திருக்கும் முக்கியமான அவரது மேற்கோள்களையும், அவர் ஆற்றும் பணிகள் குறித்தும் எங்களுக்கு சத்தமாக வாசித்துக் காண்பிப்பார். மார்க்ஸ் தத்துவக் கொள்கைகளை கற்பதில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 

mao_marx_12546.jpg

மிகவும் சீரியஸான ஆள் ஜின்பிங்; ஹ்யூமர் சென்ஸெல்லாம் கிடையாது. நாங்கள் சக தோழர்களுடன் 'சீட்டு' விளையாடுவோம், அரட்டையடிப்போம், விளையாடுவதற்கு எங்கள் வயதையொத்த பையன்களைத் தேடிச் செல்வோம். கூடவே 'கேர்ள் ஃபிரெண்ட்' கிடைக்காதா என்றும் தேடுவோம். ஆனால் இவை எதிலும் அவர் ஆர்வம் காட்டமாட்டார்" என்று ஜின்பிங்கின் இளம் வயது ஃப்ளாஷ்பேக்கைச் சொல்கிறார். 

இனிமையை தொலைத்த இளம்வயது

ஜின்பிங் இளம் வயதுக்கே உரிய கேளிக்கைகளில் வேண்டுமானால் ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக 18 வயதிலேயே தனது அரசியல் வாழ்க்கைக்குத் தயாராகி விட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இளையோர் அணியில் சேர்ந்த அவர், கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினராக பல முறை முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரது தந்தையின் கடந்த கால அரசியல் செயல்பாடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற காரணங்களினால் அவரது உறுப்பினர் விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் ஜின்பிங்கின் விடாமுயற்சி காரணமாக அவரது 21-வது வயதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினராக வெற்றிகரமாக சேர்ந்தார்.  

விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலைபார்க்க 1969-ம் ஆண்டு கிராமத்துக்கு அனுப்பப்பட்ட ஜின்பிங், அங்கு சுமார் ஆறாண்டு காலம் அந்த வேலையை மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செய்தார். அந்த காலகட்டத்தில் சீன கிராமப்புற வாழ்க்கை என்பது மிகவும் கடினமான ஒன்று. மின்சாரமோ, மோட்டார் வாகனமோ, எந்திரக் கருவிகளோ கிடையாது. ஆனாலும் அந்தச் சூழ்நிலையில், அந்த பருவத்திலேயே அணைகள் கட்டவும் சாலைகளைச் செப்பனிடவும் கற்றுக்கொண்டார் ஜின்பிங். கூடவே உள்ளூர் விவசாயிகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டார். இவையெல்லாம்தான் ஜின்பிங்கை பின்னாளில் ஒரு வலிமை மிக்க தலைவராக உருவாகவும், கட்சியில் உயர்ந்த பதவிகளை எட்டுவதற்கும் உதவியது எனலாம். 

விவசாய கூலியாக ஜின்பிங்...

இதுபற்றி ஜின்பிங் பின்னர் குறிப்பிட்டபோது, " சிறுவயதில் அந்த விவசாயிகளிடம் நான் கற்றுக்கொண்ட யோசனைகளும், பண்புகளும், விவசாய கிராமத்தின் குகைகளில் நான் வாழ்ந்த வாழ்க்கையும்தான் இன்றைய என் வளர்ச்சிக்குக் காரணம். நான் எப்போதுமே இந்த மஞ்சள் தேசத்தின் ( மஞ்சள் நதி) மகனாக இருப்பேன். நான் எனது இதயத்தை 'லியான்ஜியாஹி'யிலேயே  ( ஜின் விவசாயக் கூலியாக வேலைபார்த்த கிராமம்) விட்டுவிட்டேன். அதுதான் என்னை உருவாக்கியது.எனது 15 வயதில் நான் அந்தக் கிராமத்துக்கு வந்தபோது நான் மிகவும் குழப்பமும் கவலையும் அடைந்திருந்தேன். ஆனால் 22 -வது வயதில் நான் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறியபோது எனது வாழ்க்கை லட்சியங்கள் மிகவும் உறுதியுடன் இருந்தன. எனது மனது முழுவதும் தன்னம்பிக்கை நிரம்பியிருந்தது" எனத் தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு அந்தக் கிராமப்புற விவசாயி கூலி வாழ்க்கை அவரை செம்மைப்படுத்தியிருந்தது. அநேகமாக உலக அளவில் இன்று தலைமை அதிகாரப் பதவியில் இருக்கும் தலைவர்கள் யாரும் ஜின்பிங்கின் இந்த சிறுவயது வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே.

ஆறாண்டு கால கிராமப்புற வாழ்க்கையை முடித்துக்கொண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினராக நகரத்துக்குத் திரும்பிய ஜின்பிங்குக்கு,  கட்சியின் கிளைச் செயலாளர்  பதவி வழங்கப்பட்டது. இந்தச் சமயத்தில் ஜின்பிங்கின் தந்தை மரணமடைந்த நிலையில், தனது 22-வது வயதில் பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஸின்ஹுவா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.  1979-ம் ஆண்டில் அந்தப்  படிப்பை முடித்த பின்னர், அப்போதைய சீன துணை அதிபர் ஜெங் பியாவூக்குக் காரியதரிசியாகப் பணியாற்றினார். 

தலைமைப் பதவியை நோக்கி...

அப்போதிருந்து ஜின்பிங்கின் அரசியல் கிராப் கிடுகிடுவென ஏறத்தொடங்கியது. இதற்கிடையே 'மனிதப்பண்புகள் மற்றும் சமூக விஞ்ஞானம்' என்ற துறையில் முதுகலை பட்டப்படிப்பைப் பயின்று, சட்டப்படிப்பும் பயின்ற ஜின்பிங், எண்ணற்ற ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதினார். 1979 - 1982-ம் ஆண்டு காலகட்டத்தில் சீனத் துணை பிரதமராக பதவி வகித்ததன் மூலம் ராணுவத்தின் மத்திய கட்டளையதிகாரம் கொண்டவராக, ராணுவத்தைக் கையாளும் அதிமுக்கிய அனுபவத்தைப் பெற்றார். இந்த காலகட்டத்தில்தான், பிரிட்டனுக்கான சீனத் தூதரக அதிகாரியின் மகளான கீ லிங்லிங்கை திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்தார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிந்தது. 

xi_don_12484.jpg

அதனைத் தொடர்ந்து 1983 - 2007 வரை நான்கு மாகாணங்களில் அடுத்தடுத்து ஆளுநராக பதவி வகித்தார். இந்தப் பதவி காலத்தில்  ஊழலுக்கு எதிராக புதிய பிரசாரம் மேற்கொள்ளுதல்,  வியாபார பொருளாதார மீள்உருவாக்கம், ஆட்சிக்கான ஒரு திறந்த அணுகுமுறை போன்றவற்றை  உள்ளடக்கி, சீனாவின் புதிய கொள்கை (neologism) அல்லது சீனாவின் கனவு (Chinese Dream) என்ற கொள்கையின் கீழான புதிய சீன தேசத்தை உருவாக்கும் லட்சியத்தை அப்போதே தனக்குள் உருவாக்கிக்கொண்டார்.  அமெரிக்காவுக்கும் ஒருமுறை சென்று திரும்பிய ஜின்பிங், அங்கு விவசாயம் மற்றும் சுற்றுலா குறித்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு திரும்பினார். ( இதற்கிடையே 1987 ல் நாட்டுப்புறப் பாடகியான பெங் லியுயானைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜி மிங்ஷே என்ற மகளும் உள்ளார்.) 

இந்த நிலையில் 2007-ம் ஆண்டு சீனாவில் வெடித்த ஓய்வூதிய ஊழல் விவகாரம், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் கலகத்தை ஏற்படுத்திய நிலையில்,  கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜின்பிங் அறிவிக்கப்பட்டார். இது ஜின்பிங்கின் அரசியல் வாழ்க்கையில் அவரை மேலும் ஒருபடி உயர்த்தியது. பின்னர் அதே ஆண்டிலேயே கட்சியின் மைய அதிகாரக் குழுவான பொலிட் பீரோ நிலைக்குழுவின் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போதைய அதிபர் ஹூ ஜின்டாவோவுக்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக வரக்கூடியவர்களாக யூகிக்கப்பட்ட நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். இந்த நிலையில், 2008 ல் சீன துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2008 ல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த பதவி காலத்தில் ஜின்பிங், சீனாவுக்கான அயலுறவுகளை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து 2010 ல் மத்திய ராணுவ கமிஷனின் துணைத் தலைவர் என்ற அதிகாரமிக்கப் பதவியில் அமர்த்தப்பட்டார். அதன்பின்னர் 2012 ல் கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹூ ஜின்டோவுக்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து 2013 மார்ச் 13 ல் சீன அதிபராக பதவியேற்று, உலகின் கவனத்தை சீனாவின் பக்கம் திருப்பத் தொடங்கினார் ஜின்பிங்...

ஜின்பிங் ஆட்சி காலத்தில் சீனா விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது எப்படி என்பதை 3-வது அத்தியாயத்தில் பார்க்கலாம்...

============================================================================================================================

ஆதி சீனாவும் அதன் முதல் தேர்தலும்...

உலகிலேயே மிகப்பெரிய நாடான  சீனா, பழமை வாய்ந்த நாகரிகத்துக்குச் சொந்தமானது.  அதன் வரலாறு இந்தியாவைப் போலவே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது.  இந்தியாவில் அசோக மன்னரின் ஆட்சி தோன்றுவதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு சின்வம்சம் சீனாவில் ஆட்சிக்கு வந்தது. இந்த 'சின்' என்பதிலிருந்துதான் சீனா என்ற பெயரே உருவானது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அதற்கடுத்து வந்த ஹான் வம்சத்தினர் நானூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அப்போதுதான் புத்த மதம் சீனாவிற்கு வந்தது. அந்த காலத்தில்தான் மர எழுத்து கட்டைகளைக் கொண்டு அச்சுக்கலை முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹான் வம்ச காலத்தில்தான் அரசாங்கப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பது அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஹான் வம்ச வீழ்ச்சிக்குப் பிறகு மூன்று ராஜ்ஜியங்களாகப் பிளவுபட்ட சீனா, ஏழாம் நூற்றாண்டில் டாங் வம்சத்தின் ஆட்சியில் ஒன்றிணைக்கப்பட்டது. இது சீனாவின் பொற்காலம் என்று குறிக்கப்படுகிறது. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிலேயே உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை சீனா எட்டியிருந்தது.

china_ancient_12252.jpg

வேட்டையாடுதலையும் காடுகளில் கிடைத்த காய் கனிகளைச் சேகரித்து உண்பதையுமே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்த ஆதி சீனர்கள், இப்பொழுதும் சீனாவின் பிரதான உணவாகத் திகழும் அரிசிக்கான நெற் பயிரை  கி.மு. 5000-ம் ஆண்டு வாக்கிலேயே பயிரிடத் தொடங்கிவிட்டனர். தெற்கு சீனாவில் நெல் பயிரிடப்பட்டதென்றால், தெற்கு சீனப் பகுதிகளில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. கூடவே நாய்களும் பன்றிகளும் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டன. கி.மு. 3000 -ம் ஆண்டு வாக்கில் தெற்கு சீனப் பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்புகள் தொடங்கின. அதன் பின்னர் கி.மு. 3000 - கி.மு. 2,300 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் சீனாவில் குதிரைகள் அறிமுகமாகின. 

சீன பெருநிலப்பரப்பில் சீன குடியரசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் ஜப்பானிய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டு இன்றை அபிவிருத்திகளை பெற்றுள்ளது. சீன உள்நாட்டு யுத்தம் 1950 இல் முடிவடையும் போது சீன கம்யூனிசக் கட்சி சீன பெருநிலப்பரப்பின் பெரும் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 1928 முதல் சீன குடியரசானது சீனத் தேசியக் கட்சியால் சர்வாதிகார முறையில் ஆளப்பட்டது. 1950 மற்றும் 1960 இல் இந்த கட்சி ஊழல்களை குறைத்து பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன் காரணமாக நாட்டில் யுத்த அபாயமும் குழப்பநிலையும் தொடர்ந்த போதும் பொருளாதாரம் மிக வளர்ச்சி கண்டது. 1980 மற்றும் 1990 இல் சீன குடியரசான ஜனநாயக முறைக்கு மாறுவதற்கான தொடர்ந்த ஈடுபாடு காரணமாக அரசியல் புது வடிவைக் கண்டது.

இதன் படி 1996 ல் சீன அரசு முதலாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தியது. இக்காலப்பகுதிக்கு முன்னர் வேறுபட்ட தேர்தல் முறைகள் இடம்பெற்ற போதும், குடியரசு சீனாவின் முதலாவது தேர்தல் 1996 ல் இடம்பெற்று அதன்பின்னர் பதவியேற்புகள் இடம்பெற்று சீன நாடு அபிவிருத்தி பாதையில் முன்னேற்றம் காணத்தொடங்கியது. 

(தொடரும்)

https://www.vikatan.com/news/world/109280-cultural-revolution-shaped-xi-jinping-jinxingping-series-2.html

  • தொடங்கியவர்

கனவு காண்... ஊழலை ஒழி... மக்களிடம் செல்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் (தொடர்-3)

 
 

thanioruvan3_12558.jpg

 

 

 

“எது நமக்குத் தேவையோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். லட்சக்கணக்கான ஊழல் அதிகாரிகளை நாம் தண்டிக்காமல் போனால் 130 கோடி சீன மக்களை நாம் தண்டித்தவர்களாகி விடுவோம்" - ஐந்தாண்டுகளுக்கு முன் சீன அதிபராக பதவியேற்றவுடன் ஊழலுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றிய ஜின்பிங் சொன்னது இது.

அரசு மட்டத்தில் மேலிருந்து கீழ் வரை புரையோடிப்போய் இருந்த ஊழலைக் கண்டு அதிர்ந்த ஜின்பிங், கட்சியிலும் ஆட்சியிலும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் மேற்கொண்ட ஊழலுக்கு எதிரான பிரசாரம் மற்றும் நடவடிக்கைகள் கட்சியிலும் மக்களிடத்திலும் மிகுந்த வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதில் பல்வேறு ஊழல் தலைவர்கள் சிக்கி நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். தொழில்துறை, ஊடகத் துறை, ராணுவம் மற்றும் ரகசிய சேவைத் துறைகளில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 2014 -ம் ஆண்டில் மட்டும் 70,000 க்கும் அதிகமான அதிகாரிகள் ஊழல் தடுப்பு ஏஜென்சியின் நடவடிக்கைக்கு உள்ளாகினர். 2015 ல் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அடியாழம் வரை ஊடுருவியுள்ள ஊழலால் கட்சிக்கும் தேசத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜின்பிங் கருதியதாலேயே ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் மிகக்கடுமை காட்டினார்.

ஜின்பிங்கின் கனவு

முன்னதாக தாம் அதிபராக பதவியேற்றதுமே ஒரு பெரிய வாக்குறுதியை நாட்டு மக்களுக்கு அளித்தார் ஜின்பிங்." சீன அதிகாரத்துக்குப் புத்துயிர் அளித்து, தேசத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்க தொடர்ந்து போராடப்போகிறேன். இந்த மாபெரும் பொறுப்பு சீன மக்களின் நலனுக்காவே" எனக்கூறி, அது தொடர்பான தனது 'சீனக் கனவை' வெளியிட்டார்.

வலுவான தலைமையுடன் வரலாற்று சிறப்புமிக்க உயரத்தைத் தொடவேண்டும் என்பதுதான் ஜின்பிங்கின் குறிக்கோளாக இருந்தது. அதற்கேற்ப ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் ஜின்பிங் கடைப்பிடித்தக் கொள்கைகள் சீனாவை பல்வேறு வகைகளில் மாற்றியது. இதில் குறிப்பிடத்தக்க தனித்துவமான ஒன்றைக் குறிப்பிட வேண்டுமெனில் அது சீன அரசியல் அமைப்புக்குள் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் குவித்ததுதான். ராணுவ மத்திய ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட அரசின் முதல் மூன்று உயரதிகாரத்தின் தலைமைப்பதவிகளை சீன அதிபர் வைத்திருப்பது அந்த நாட்டின் மரபு. இவை தவிர்த்து, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான பிரச்னைகளை தலைமையேற்று கையாள்வதற்காக, 2013 மற்றும் 2014 -ம் ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கமிட்டிகளுக்கு, அதுவரை தலைவர்களாக இருந்தவர்களை அப்பதவியிலிருந்து அகற்றிவிட்டு, ஜின்பிங்கே தலைவராக அமர்ந்துகொண்டார்.

சீன கனவை வெளியிட்ட ஜின்பிங்...

இது ஒருபுறமிருக்க, அதிகாரக் குவிப்பின் மேலும் ஒரு அம்சமாக சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கட்சியின் சித்தாந்தத்தை வலுவாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம், புதுமையான சிந்தனையுடன் கூடிய மார்க்சிஸ்ட் கொள்கைகளைப் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் பின்பற்றுமாறு பலமுறை வலியுறுத்தினார். மேலும், கம்யூனிஸ சித்தாந்தங்களிலும், சோஷியலிசத்துடன் கூடிய சீன குணாதிசயங்களிலும் ஆழமான நம்பிக்கை வைக்குமாறும் ஜின்பிங் அவர்களைக் கேட்டுக்கொண்டார். அரசு தரப்பிலும் கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் மேற்கத்திய சித்தாந்தத்துக்குப் பதிலாக சீன அதாவது, மார்க்ஸிய சித்தாந்தங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக அவற்றின் மீதான தனது பிடியை ஜின்பிங் தலைமையிலான அரசு இறுக்கியது.

சீறிப்பாய்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள்

மேலும், அரசின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஆலோசனைக் குழுவில் சீனாவின் குணாதிசயங்களுடன் கூடிய புதிய வகையிலான சிந்தனையாளர்கள் குழுவை 2015, ஜனவரியில் அமைத்தார் ஜின்பிங். அதே மாதத்திலேயே, மேற்கத்திய பண்புகளை ஊக்குவிக்கும் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை விமர்சிக்கும் பாடப்புத்தகங்களுக்கு சீனாவின் கல்வி அமைச்சர் தடைவிதித்தார்.

அதுமட்டுமல்லாமல், சீன கம்யூனிஸ்ட் கட்சி வகுத்தளித்த அரசியல் கோட்பாடுகளை சீன சிவில் சமூகத்தில் வலுப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதனால் சிவில் சமூகத்தின் பல மட்டங்களில் அரசின் தணிக்கை நடவடிக்கைகள் அதிகரித்தன. ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் கடுமையாகின. சுருக்கமாக சொல்வதானால் சீன சிவில் சமூகத்தின் பல்வேறு அம்சங்களில் அரசின் பிடி இறுகின. ஜின்பிங்கின் இந்த சீன கம்யூனிஸ சித்தாந்தம் மற்றும் தேசியவாதம் ஆகிய இரண்டுமே 2012-ல் அவர் கொண்டிருந்த 'சீனாவின் கனவு' தொடர்பான விஷயங்களே.

ஜின்பிங்கின் இந்த ''சீன கனவு" மக்களைக் கவர்ந்து அவர்களிடையே நம்பிக்கையை விதைத்தது. கடந்த பல தசாப்தங்களாக ஏற்பட்ட வேகமான வளர்ச்சி சீனாவில் மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்கியிருந்தது. பகுத்தறிவற்ற பொருளாதார கட்டமைப்பு, சமூக சமத்துவத்தில் காணப்பட்ட மிகப்பெரிய இடைவெளி, குறைந்துபோன சமூக நீதி, சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்ற சவால்களை ஜின்பிங் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. இந்த சவால்களையெல்லாம் எதிர்கொள்ள ஒரே வழி வேகமான சீர்திருத்தங்கள்தான் என ஜின்பிங் நம்பினார். சிறப்பான பொருளாதார செயல்பாடுதான் ஒரு நல்ல நிர்வாகத்துக்கான முக்கிய அளவுகோல் என்பதால், வளர்ச்சியைத் தக்கவைப்பதே ஜின்பிங்கின் முன்னுரிமையாக இருந்தது.

china_industries_12586.jpg

ஜின்பிங்கின் மிக முக்கியமான சீர்திருத்தம் என்பது அரசாங்கத்தையும் சந்தையையும் மறுவரையறை செய்வதாக இருந்தது. இது திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து விலகிச்செல்லும் ஒரு முக்கியமான முடிவாக இருந்தது. சீர்திருத்தம்மீது முழுக்கவனத்தையும் செலுத்துவது என்பது வளங்கள் ஒதுக்கீட்டில் சந்தை சக்திகளை முக்கிய பங்காற்ற அனுமதிக்கும் செயலாகவே இருந்தது. இதுஒருபுறமிருக்க ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் விதமாக வறுமையை ஒழிப்பதற்கு ஜின்பிங் முன்னுரிமை அளித்தார். இது தொடர்பான பணிகளில் உண்மையாக உழைக்குமாறு அரசு நிர்வாகிகளை வலியுறுத்தி வந்த ஜின்பிங், இது விஷயத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற சாமான்ய மக்களிடம் செல்லுமாறும் அவர்களை அறிவுறுத்தினார்.

மக்கள் நாயகன்

இவ்வாறு மக்கள் நலன் சார்ந்து ஜின்பிங் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் சீன மக்களிடம் வெகுவாக வரவேற்பை பெற்று, அவரை ஒரு மக்கள் நாயகனாக்கின.

வேலையிலிருந்து ஓய்வுபெற்று பென்ஷனில் காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பவர்கள் கூட ஜின்பிங் ஆட்சியை வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களது பென்சன் தொகை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சாங்கிங் என்ற பகுதியைச் சேர்ந்த டாங் என்ற 61 வயது நபர் 2013-ம் ஆண்டு வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது அவரது மாத ஓய்வூதியம் 1000 யுவானாக இருந்த நிலையில், தற்போது அது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு, 3,000 யுவானாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

“நான் கடந்த சில தினங்களாக ஜப்பானில் இருந்தேன். அதற்குச் சில நாள்களுக்கு முன்னர் ஷாங்காய் நகரில் இருந்தேன். கடந்த காலங்களில் இதையெல்லாம் நான் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது" என்று தனது ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட்டதால் தம்மால் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்று வர முடிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் டாங், " ஜின்பிங் தொடர்ந்து இவ்வாறு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்" என்கிறார்.

china_crowd_12065.jpg

டாங்கைப்போன்றுதான் சீனர்கள் பலரும் ஜின்பிங்கின் ஆட்சியையும் அவரது கொள்கைகளையும் குறிப்பாக, ஊழலுக்கு எதிரான அவரது நடவடிக்கைகளை வெகுவாகப் புகழ்கின்றனர்.

ஜின்பிங்கின் ஆட்சியில் பொது நிர்வாகம் மிகத் திறமையுடன் நிர்வகிக்கப்படுவதாக பாராட்டுகிறார் சுற்றுலா ஏற்பாட்டாளரான லீ லாங். "கடந்த காலங்களில் அரசு அதிகாரிகளில் பலர் மக்களுக்குச் சேவையாற்றுவதைக் காட்டிலும் அதிகமான நேரம் செல்போனில் விளையாண்டு கொண்டிருப்பார்கள் அல்லது புகைப்பிடிக்கச் சென்று நேரத்தைக் கழிப்பார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. எல்லாமே மாறிவிட்டது" என்கிறார் லீ.

தைவான், தென் சீன கடல் விவகாரங்கள், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி ஜின்பிங் வெளியிட்ட தொலைநோக்குத் திட்டங்கள் சீனர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் லீ, " சீனா குறித்த ஜின்பிங்கின் கனவு, இதுவரை அவர் செய்து காட்டியுள்ள சாதனைகள் போன்றவை என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இனிமேல் சீனாவால் முடியாதது எதுவுமே இல்லை என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியுள்ளது" என்றும் கூறுகிறார்.

லீயைப் போன்றே மா ஷி என்ற 32 வயதாகும் திட்ட அதிகாரி, " தொழில்நுட்பவியலில் ஜின்பிங் அரசு காட்டி வரும் அக்கறை காரணமாக பணமில்லா பரிவர்த்தனைகள் போன்ற நவீன டெக்னாலஜிகளைப் பயன்படுத்துவதில் சீனா உலக அரங்கில் முன்னோக்கிச் செல்கிறது " என்று பாராட்டுத் தெரிவிக்கிறார்.

china_people_12425.jpg

"அதிபர் ஜின்பிங் இந்த தேசத்தை மேலும் அதிகமான ஸ்திரத்தன்மையுடன் கூடிய நாடாக மாற்றியுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் எங்களது வாழ்க்கைத்தரம் பெருமளவு மேம்பட்டுள்ளது" என்கிறார் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர்.

"நான் ஹாங்ஷாவூ பகுதியைச் சேர்ந்தவன். ஜின்பிங் ஆட்சிக்கு வந்தபிறகு அரசின் கொள்கைகளில் மேற்கொண்ட மாற்றங்களால் ஜேக் மா, அலிபாபா மற்றும் தாபோ போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்கள் சீன மக்களின் வாழ்க்கையையே மாற்றி அவர்களுக்கு நிறைய செளகரியங்களை ஏற்படுத்தித் தந்துள்ளன. இந்த நிறுவனங்களின் வளர்ச்சியை சாத்தியமாக்கியது அவற்றுக்கு ஆதரவாக அமைந்த அரசின் கொள்கைகள்தான்" என்கிறார் தனியார் நிறுவனமொன்றின் தலைமை நிர்வாக அதிகாரியான 38 வயதான ஷாங் ஹூ.

காத்திருக்கும் சவால்கள்...

இவ்வாறு அரசு நிர்வாகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தான் செயல்படுத்த நினைத்த முக்கிய சீர்திருத்தங்களை ஜின்பிங் வெற்றிகரமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ள போதிலும், அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. குறிப்பாக அதிகார குவிப்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் சட்டவிதிகளை மீறி பயன்படுத்தப்படும் அதிகாரம், பேச்சு சுதந்திரம், கருத்துரிமை இல்லாதது போன்றவற்றுக்கு எதிராக ஜின்பிங்குக்கு உள்நாட்டில் எதிர்ப்பு என்றால், 'பாகிஸ்தானை தனது காலனி நாடாக ஆக்கிவிடுமோ சீனா?' என்று பாகிஸ்தானியர்கள் அச்சம் தெரிவிக்கிற சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம், ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘ஒரு சூழல் - ஒரு பாதை’ திட்டத்தைச் செயல்படுத்த சீனா திட்டமிடுவது, உலக அரங்கில் அமெரிக்க அதிபரைவிட தம்மைச் செல்வாக்கு மிக்க நபர் என்ற பிம்பத்தை உருவாக்க திட்டமிடுவது, எல்லையில் அவ்வப்போது இந்தியாவைச் சீண்டுவது போன்றவையெல்லாம் உலக அரங்கில் ஜின்பிங்குக்கு எதிர்ப்புகளையும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அவற்றையும் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.


சீனாவைச் சிதறடித்த ஓபியம் போர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் சீன பேரரசுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நடந்த ஓபியம் போருக்கு (1839–42) நவீன சீன வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. உலகின் பல நாடுகள் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த சமயம் அது.

இந்த நிலையில் தங்கள் தேவைக்காக தேயிலை, பட்டு, பீங்கான் பாத்திரங்கள் போன்ற பொருள்களை சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்தன. அதேசமயம், தன்னிறைவாக இருந்ததால் ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சீனா இறக்குமதி செய்யவில்லை. இதனால், சீனா பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டது.

இதைக்கண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் பொறுமினர். இதையடுத்து, தந்திரமான ஒரு யோசனையை பிரிட்டன் கையாண்டது. அதாவது, சீனாவில் போதைப்பொருளை விற்பதன் மூலம், இளைஞர்களை பாழாக்கி பொருளாதாரத்தைக் கைப்பற்றலாம் என்பது பிரிட்டனின் திட்டம்.

பிரிட்டனின் திட்டத்துக்குத் தோதாக அதுநாள் வரைக்கும் ஓபியத்தை (அபின்) சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த சீன மக்கள், போதைக்காக பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக சீன இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதால், சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சீனாவில் போதைப் பொருளை இறக்குமதி செய்தது. இதனால் பிரிட்டனின் வியாபாரம் அமோகமாக நடந்தது. இந்த நிலையில் போதைப்பொருள் பழக்கத்தால், சீனாவில் பல சீர்கேடுகள் தலைதூக்கின. இதனால் அதிர்ச்சியடைந்த கிங் சீனப்பேரரசு (Qing Dynasty), இங்கிலாந்தின் போதைப்பொருள் இறக்குமதியைத் தடை செய்தது. எனினும், அரசின் தடையை மீறி, சீனக் கடைத்தெருக்களில், அபின் மலிவாக கிடைத்தது. சீனாவின் மக்கள் வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகி, எதிர்காலமே கேள்விக்குறியானது.

ஓபியம் போர்

இதையடுத்து, மன்னர் டாவோகுவாங் (Daoguang) போதைப்பொருளைப் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக, கடும் நடவடிக்கைகள் எடுத்தார். தடையை மீறிய பிரிட்டன் வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு, சிறைக்குள் தள்ளப்பட்டனர். அபின் ஏற்றி வந்த கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டன் அரசு, கிழக்கத்தியக் கம்பெனி படைகள் மூலம், சீனாவின் மீது போர் தொடுத்தது.

முதலாம் ஓபியம் போர் 1839 - 1842 - ம் ஆண்டு வரை நடந்தது. இந்தப்போர் முதலாம் ஆங்கிலோ – சீனப் போர் என்றும் அழைக்கப்பட்டது. இந்தப் போரில், பிரிட்டன் வெற்றி பெற்றது. பிரிட்டனின் வெற்றியால், சீனாவில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாகக் கிடைக்க, மக்கள் மயக்கத்திலேயே உருண்டு எழுந்தனர்.

இரண்டாம் அபின் போர் 1856 - 1860- ம் ஆண்டு வரை நடந்தது. இதிலும் பிரிட்டன் வெற்றி பெற்றது. வேறு வழியில்லாமல், பிரிட்டனுடன் சமாதான உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் நிலைக்கு சீனாவின் கிங் பேரரசு தள்ளப்பட்டது.

பிரிட்டன் படைகள் கவுலூன் தீபகற்பம் மற்றும் கல்லுடைப்பான் தீவு வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டன. ஹாங்காங் தீவும் பிரிட்டன் படைவசம் சென்றது. ஹாங்காங், பிரிட்டனின் ஒரு குடியேற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. சீனாவால் எரிக்கப்பட்ட அபினுக்கு சீனாவிடமிருந்து நஷ்ட ஈடும் பெறப்பட்டது.

இந்தப் போர்களில், சீனாவுக்கு ஏற்பட்ட தோல்வியும், பிரிட்டனுக்கு சாதகமாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், கிங் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாகின. கூடவே வலிமையான சீன நாகரிகம் சிதையத் தொடங்கி, அரச வம்சத்துக்கு எதிராக, பொதுமக்கள் கிளர்ச்சி செய்வதற்கு இந்தப் போர்கள் முக்கிய காரணங்களாக அமைந்தன.

https://www.vikatan.com/news/world/109950-xi-jinping-and-his-chinese-dream.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கர்த்தரை மற... கம்யூனிஸத்தைத் துதி! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் (தொடர்-4)

 
 

Banner_4_12180.jpg

 

 
 

சீனாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள வறிய கிராமம் அது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வாழும் இந்தக் கிராமத்தில் அரசு சார்பில் நிவாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய  அரசு அதிகாரிகள் குழு ஒன்று அங்கு வந்தது. வந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். பல இடங்களில் இயேசு கிறிஸ்துவின் உருவப்படங்கள் அந்த ஏழைகளை நோக்கி, “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று சொல்வதுபோல் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தன. தங்களின் வறுமைக்கு இயேசு ஏதாவது வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்களிடம் வந்த அரசு அதிகாரிகள், “உங்களது கஷ்டங்கள் தீர வேண்டுமானால் இனிமேல் நீங்கள் கர்த்தரை நம்பாதீர்கள்; அதற்குப் பதிலாக கம்யூனிஸ்ட் கட்சி மீதும் அதிபர் ஜின்பிங் மீதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்துவதோடு மட்டுமல்லாது, வீடுகளிலும் வீதிகளிலும் இயேசு கிறிஸ்துவின் உருவப்படங்களுக்குப் பதிலாக ஜின்பிங்கின் படங்களை வைக்குமாறு வலியுறுத்துகின்றனர். 

வேறு வழியில்லாமல் அவர்களும் அதற்கு ஒப்புக்கொள்கின்றனர். இது, ஜின்பிங் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளில் ஒன்று. 

'உலக வல்லரசு' என்ற ஒற்றை இலக்குடன் சீனாவை முன்னேற்றத் துடிக்கும் அந்த நாட்டு அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு,  நிர்வாகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தான் நினைத்த முக்கிய சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ள போதிலும்,  அதிகார குவிப்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் காணப்படும் சட்டவிதி  மீறல்கள், பேச்சு சுதந்திரம், கருத்துரிமை இல்லாதது போன்ற அம்சங்களோடு மனித உரிமைகள் நசுக்கப்படுவது, சிவில் சமூகத்தின் மீது காட்டப்படும் கெடுபிடிகள், தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படுவது, ஊடக சுதந்திரமின்மை, தேசியவாதம் போன்றவை காரணமாக இந்த ஆட்சியில் சீன மக்கள் மிகவும் அடக்குமுறைக்கு ஆளாகிவிட்டதாக கொதிக்கின்றனர் சீன மனித உரிமை ஆர்வலர்கள். குறிப்பாக, கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தினரின் நிலை பரிதாபமாக உள்ளது. 

கர்த்தரின் மீது கொண்டுள்ள இவர்களது விசுவாசத்தை அப்படியே கம்யூனிஸ்ட் கட்சி மீது திருப்ப வேண்டும் என்று கங்ஙணம் கட்டிக்கொண்டு பல்வேறு அரசு குழுக்கள் களத்தில் இறக்கிவிடப்படப்பட்டுள்ளன.  ஹுவாங்ஜின்பு என்ற நகரப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைக்காக வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து, வறுமை ஒழிப்புக்காக ஜின்பிங் அரசு வகுத்துள்ள கொள்கைகளையும் திட்டங்களையும் எடுத்துச் சொல்லி, அவை எவ்வாறு அவர்களது வறுமையைப் போக்க உள்ளது என்று அவர்களை வஞ்சனையில்லாமல் கற்பனைக் கனவுகளில் மிதக்க வைத்து,  மெள்ள மெள்ள அவர்களது மனதைக் கரைக்கின்றனர் அக்குழுவினர். அதே சமயம் அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் பொருள்கள் தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இறுதியில், அவர்களது மத நம்பிக்கையை  மெள்ள மெள்ள கம்யூனிஸ்ட் கட்சி மீது திருப்பச் செய்வதில் அரசு அதிகாரிகள் வெற்றிபெறத் தொடங்குகின்றனர். 

கர்த்தரை மற... கம்யூனிஸத்தைத் துதி! 

சீனாவில் மாவோக்குப் பின்னர், அவரைப்போன்றே வலிமைமிக்கத் தலைவராக உருவெடுத்துள்ள ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, வருகிற 2020-ம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவித்து,  அதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு சீனாவில் கடந்த பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு எந்தவித பலனையும் அளிக்கவில்லை; அவர்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ள நிலையில், இந்த வறுமை ஒழிப்பு நடவடிக்கை மூலம் அவர்களை தங்கள் பக்கம் ஒருங்கிணைக்க முடியும் என கணக்குப் போடுகிறது கம்யூனிஸ்ட் கட்சி.

அதன் காரணமாகவே வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ளூர் அரசு நிர்வாகங்கள் இரண்டு மடங்கு முயற்சிகளை மேற்கொள்கிறது. வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளினால் பயன்பெறும் அந்தக் கிராமப்புற கிறிஸ்தவ பயனாளிகளிடம், அவர்களது இல்லங்களில் உள்ள இயேசு கிறிஸ்துவின் உருவப்படங்கள், சிலுவைகள், நற்செய்தி வாசகங்கள் போன்றவற்றை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக - மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ காலத்தில் சீனர்களின் இல்லங்களில் அவரது உருவப்படங்கள் நீக்கமற இடம்பெற்றிருந்ததுபோன்று - அதிபர் ஜின்பிங்கின் உருவப்படங்களை வைக்குமாறு அறிவுறுத்துகின்றனர். "கர்த்தரை மற... கம்யூனிஸத்தைத் துதி!" என்பது புதிய வேதவாக்காக சொல்லப்படுகிறது.

jesus_with_jinping_12239.jpg

இதன்மூலம் நாத்திக கட்சியான கம்யூனிஸ்ட், கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட கிராமப்புற ஏழை மக்களிடமும், வளர்ச்சியடைந்த நகர்ப்புற மக்களிடமும் கம்யூனிஸத்தைப் பரவலாக்குவதில் கடும் முயற்சிகளை மேற்கொள்கிறது. இத்தகைய தொடர் பிரசாரங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான கிராம மக்கள், தங்களது வீடுகளில் இடம்பெற்றிருந்த மத வாசகங்கள், ஓவியங்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அதிபர் ஜின்பிங்கின் உருவப்படத்தை மாட்டத் தொடங்கி உள்ளனர். 

இவை ஒருபுறமிருக்க, அரசின் ஜெகஜ்ஜால பிரசாரங்களுக்கெல்லாம் மயங்காமல் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணியாமல், கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து தேவாலயங்களுக்கு வந்துகொண்டுதான் உள்ளனர். அதேப்போன்று ஆங்காங்கே கிறிஸ்தவ பாதிரிமார்களின் வீடுகளிலும் பிரார்த்தனைகளும் பைபிள் உபதேசங்களும் தொடரத்தான் செய்கின்றன. 

தேவாலயங்களுக்கு கெடுபிடி

இதனால் தேவாலயங்களையும், வீடுகளில் பிரசங்கங்கள் செய்வோரையும் குறிவைத்து அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் கெடுபிடிகளும் தீவிரமாகி உள்ளன. இதிலிருந்து தப்புவதற்காக "வீடுகளில்" நடத்தப்படும் பிரசங்கக் கூட்டம் அதிகம் பேரைக் கொண்டிராமல் நான்கைந்து பேர்களைக் கொண்ட சிறிய குழுக்களாக மாற்றி நடத்தப்படுகின்றன. 

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஷுஹாய் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான எனோச். வாரா வாரம் தேவாலயத்துக்குச் செல்லும் வழக்கமுடையவர். வீட்டிலும் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். வீட்டுச் சுவரில் பெயர்ப் பலகையோடு, சிலுவைச் சின்னமும் பதிக்கப்பட்டிருக்கும். வீட்டு வரவேற்பறையில், வருபவர்கள் அமர இருக்கைகள் வரிசையாக போடப்பட்டிருக்கும். தற்போது அரசின் கெடுபிடிகள் காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் தேவாலயத்துக்குச் செல்வதை நிறுத்திவிட்டார் எனோச். ஆனால் வீட்டில் மட்டும் பிரார்த்தனைக் கூட்டத்தைத் தொடர்கிறார். அதுவும் எப்படி? வீட்டுச் சுவரில் பதிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையையும் சிலுவைச் சின்னத்தையும் அகற்றிவிட்டு. 

மேலும், வீட்டு வரவேற்பறையில் வரிசையாக போடப்பட்டிருந்த இருக்கைகளுக்குப் பதிலாக இரண்டு மூன்று சோபாக்கள் வட்ட வரிசையில் போடப்பட்டுள்ளன. அவற்றில் அமர்ந்துதான் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது ஏதோ உறவினர்களோ அல்லது நண்பர்களோ அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் தோற்றத்தைக் கொடுக்கும். “இவையெல்லாம் அரசுக்கு உளவு சொல்லும் உளவாளிகளிடமிருந்தும் போலீஸிடமிருந்தும் தப்புவதற்காகத்தான்" என்கிறார் எனோச். 

churches_12056.jpg

சீனாவில் தற்போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும் "வீட்டுத் தேவாலயங்களின்" எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மத பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில் அரசு தரப்பில் விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகளும், தேவாலயங்களைக் கட்டாயப்படுத்தி மூடச் செய்வதும் சிறுபான்மையினரிடத்தில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கூட்டமாக கூடுவதற்குக் கூட காட்டப்படும் கெடுபிடிகள் அவர்களிடையே அடக்குமுறையாக பார்க்கப்படுகின்றன. 

“மத விவகாரங்கள் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்பட்ட புதிய ஒழுங்குமுறை விதிகள், கட்டுப்பாடுகள், விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் கடுமையான தண்டனை போன்றவை ஆங்காங்கே எஞ்சியிருக்கும் தேவாலயங்களுக்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்துள்ளதால், அவையும் காலப்போக்கில் மூடப்பட்டுவிடும் என நான் அச்சப்படுகிறேன்” என்று கூறுகிறார் எனோச் மேலும். கணினி தொழில்நுட்ப வல்லுனரான இவர், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

கிறிஸ்தவத்தின் புராட்டஸ்டன்ட் அமைப்பு சீனாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மத அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. சீன மக்களில் சுமார் 9 கோடி முதல் 11 கோடிப் பேர் இந்த மத அமைப்பை பின்பற்றுபவர்களாக உள்ளனர் என்றும், இவர்களில் 3 கோடிப் பேர் மட்டும் அரசின் அதிகாரபூர்வ தேவாலயங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றும், மற்றவர்கள் தொழிற்சாலை கட்டடங்களிலும் வீட்டின் வரவேற்பறைகளிலும் செயல்படும் விதிமுறைகளை மீறி பதிவு செய்யப்படாத தேவாலயங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றும் கூறுகிறார் பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியரான யாங் ஃபெங்காங். 

மத நிகழ்ச்சிகளுக்கு மறுப்பு! 

“இதுவரைக்கும் குடும்பத்தினர் ஒன்றுகூடல் பாணியில் நடத்தப்பட்டு வந்த பிரார்த்தனைக் கூடங்கள் அரசால் சகித்துக்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், மத விவகாரங்கள் தொடர்பான ஒழுங்கு முறை விதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் அமலுக்கு வந்துவிட்டதால் நிலைமை முன்போல் இனி இருக்காது" என்கிறார் யாங். 

உதாரணத்துக்கு, அரசின் ஒப்புதலைப் பெறாமல் மத நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கான அபராதம் ஒரு லட்சம் யுவானிலிருந்து மூன்று லட்சம் யுவானாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய விதிமுறைகளின்படி அங்கீகாரம் பெறாத மத குழுக்கள் நன்கொடைகள் பெறுவதும், இணைய தளம் மூலமாக மதத் தகவல்களை அளிப்பது அல்லது அவர்களது மத நம்பிக்கைகள் தொடர்பான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளன.

bible_12339.jpg

“இந்த அபராதங்கள் நிச்சயமாக ஏராளமான தேவாலயங்களின் செயல்பாடுகளை முடக்கிவிடுவதோடு,  லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களின்  மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்திவிடும்” என்கிறார் மேரிலாண்டில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேர்ஸ்டென் வேலா. 

தேவாலயங்களுக்கு எதிராக அரசு தரப்பு மேற்கொண்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் 2012 முதல் 2016-ம் ஆண்டு வரை பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு சீனாவில் இயங்கும் கிறிஸ்தவ உதவிக்குழு ஒன்று. 2015-ல் 500-க்கும் அதிகமான தேவாலய தலைவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அதுவே 2016 -ல் 600-க்கும் அதிகமாக சென்றதாகவும், பல தேவாலயங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கிருந்த சிலுவைச் சின்னங்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாகவும் அந்தக் குழு மேலும் கூறியுள்ளது. 

கம்யூனிஸத்தை நம்புவோர் ரட்சிக்கப்படுவார்கள்! 

இந்த நிலையில் தங்களது நடவடிக்கைகளை நியாப்படுத்தும் சீன அரசு அதிகாரிகள், “பல ஏழைக்குடும்பங்கள் ஏழ்மை நிலைக்குச் சென்றதற்கு அந்த குடும்ப உறுப்பினர்களிடையே காணப்படும் உடல் நலக்குறைவுதான் காரணம். அதற்காக உரிய சிகிச்சை எடுக்காமல் இயேசு கிறிஸ்து தங்களது நோயைக் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதனால்தான் நாங்கள் அவர்களைச் சந்தித்து நோய் என்பது உடல் சார்ந்தது என்றும், அதற்கு சிகிச்சை எடுத்தால்தான் குணமாகும் என்றும் அறிவுறுத்தி, அவர்களுக்கு உண்மையிலேயே உதவக்கூடியவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரும், அதிபர் ஜின்பிங்கும்தான் என்றும் புரிய வைக்கிறோம்" என்கிறார்கள். 

ஹுவாங்ஜின்பு மாகாணத்தின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைக்கான பொறுப்பாளரான கி யான், " பெரும்பாலான கிராமப்புற மக்கள் அப்பாவிகளாக உள்ளனர். 'கடவுள்தான் தங்களது மீட்பர்' என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் எங்களது தொண்டர்கள் அவர்களிடம் சென்று யதார்த்தத்தை எடுத்துரைத்து விளக்கிய பின்னர், அவர்கள் தங்களது தவறுகளை உணர்ந்துகொண்டனர். இனிமேல் உதவி தேவையென்றால் இயேசு கிறிஸ்துவுக்குப் பதிலாக கம்யூனிஸ்ட் கட்சியை நம்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அரசு தரப்பில் அதிபர் ஜின்பிங்கின் உருவப்படங்கள் ஆயிரக்கணக்கில் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அதைத் தங்களது வீட்டுச் சுவர்களில் தொங்கவிட்டுள்ளனர்" என்று கூறுகிறார்.

China_cpm_12249.jpg

 

அவர் இவ்வாறு கூறுகிறபோதிலும் அண்டை நகரமான யுகான் என்ற நகரைச் சேர்ந்த லியூ என்பவர் கூறுவது வேறு விதமாக உள்ளது. "கிறிஸ்தவர்கள் யாருக்கும் இயேசுவின் படங்களை அகற்றுவதில் விருப்பமே இல்லை.  அவர்கள் மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டுள்ளனர். ஆனால் வேறு வழியில்லை. அரசு அதிகாரிகள் சொல்கிறபடி கேட்காவிட்டால், வறுமை ஒழிப்பு நிவாரண உதவி எங்களுக்கு கிடைக்காது" என்கிறார் லியூ. 

ஆனால் இதனை மறுக்கும் கி யான், "அவர்களை வீட்டின் மையப்பகுதியில் உள்ள மதம் சம்பந்தமான படங்களைத்தான் அகற்றுமாறு சொல்கிறோம். வீட்டின் மற்ற அறைகளில் அவற்றை வைத்துக்கொள்ள தடையேதும் இல்லை. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். நாங்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது கட்சி அவர்களுக்கு அளிக்கும் உதவியையும் தயவையும் மறந்துவிடக் கூடாது என்பதைத்தான். அவர்களது மத நம்பிக்கையின் மீது பற்று வைக்க அவர்களுக்கு இன்னமும் சுதந்திரம் உள்ளது; கூடவே எங்கள் கட்சி மீதும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பதைத்தான்" என்கிறார்.  

ஒன்றின் மீதான நம்பிக்கையும் பற்றும் இயல்பாக வரவேண்டுமேயொழிய கட்டாயப்படுத்தி வரவழைப்பது, சீனாவை உலகின் வல்லரசாக்கும் கனவுக்குப் பெருமை சேர்க்குமா என்பதை ஜின்பிங்தான் சொல்ல வேண்டும். 

                                                                                              தொடரும்...

-------------------------------------------

சீனாவில் புத்த மதம் பரவியது எப்படி? 

bhuddha_12054.jpg

உலகின் மூன்று பெரிய மதங்களில் புத்தமதமும் ஒன்று. புத்தரின் போதனைகளின் அடிப்படையில்தான் புத்தமதம் தோன்றியது. புத்தமதம் இந்தியாவில் தோன்றினாலும் படிப்படியாக இலங்கை, திபெத், சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசியாவின் பிற நாடுகளில் பரவியது. 

முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு காலகட்டங்களில்தான் பட்டுப் பாதை வழியாக  இந்த மதம் சீனாவுக்கு முதலில் வந்தது. பல்வேறு வணிகப்பொருட்களுடன் இந்தியாவிலிருந்து பட்டுப் பாதை வழியாக வந்த வணிகர்களுடன் பயணித்த புத்த துறவிகள், தாங்கள் வந்த வழியெங்கும் புத்தமதத்தைப் பரப்பியபடி வந்தனர். அந்த வகையில் மத்தியக் கிழக்கு, இந்தியா, மத்திய ஆசியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தக போக்குவரத்துக்கும், கலாசார பரிவர்த்தனைக்கும் பட்டுப்பாதை முக்கியப் பங்காற்றியது. இதன் விளைவாக, பிற்பாடு வந்த காலக்கட்டங்களில் சீனர்களின் வாழ்க்கை, கலாசாரம் போன்றவற்றில் புத்தமதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

கன்ஃபூசியனிஸம் சீனாவில் ஆதிக்கம் செலுத்திய கொள்கை. புத்தயிஸத்துக்கும் கன்ஃபூசியனிஸத்துக்கும் இடையே நிலவிய முரண்பாடுகளால் புத்தமதம் சீனாவில் பரவுவதில் ஏராளமான தடைகளைச் சந்திக்க வேண்டியதிருந்தது. இதனிடையே சீனாவின் மற்றொரு பெரிய மதமாக விளங்கிய டாவோயிஸம், புத்தயிஸத்திலிருந்து சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. டாவோயிஸம் இயற்கையுடன் இணக்கமாக இருக்க வலியுறுத்திய அதேசமயம், புத்தயிஸம் மனிதனின் உள்மன கட்டுப்பாட்டை வலியுறுத்தியது. 

இத்தகைய நிலையில், சீன சூழலுக்கு ஏற்ப தாக்குப்பிடிக்க ஏதுவாக, முன்னோர் வழிபாடு மற்றும் சீனாவின் படிநிலை அமைப்புகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக புத்தயிஸம் சீன வாழ்க்கை வழிமுறைகளைத் தழுவிக்கொண்டது. இதன்மூலம் புத்தமதம் சீன கலை, கலாச்சார சிந்தனைகளை படிப்படியாக ஏற்றுக்கொண்டு நாடு முழுவதும் பரவியது. 

இன்னொரு வரலாற்றுத் தகவலும் உண்டு. ஹன் வம்சம் சீனாவில் ஆட்சி புரிந்த காலத்தில் ஹான் பேரரசர் மிங்கின் கனவில் புத்தர் தோன்றினார். அதற்கு அடுத்த தினமே பேரரசர் மிங், தன் அதிகாரிகளை அழைத்து தனது கனவில் தோன்றிய உருவம் என்ன என்பதையும், அது எதற்காக தோன்றியது என்பதையும் அறிய மேற்கு பகுதிக்கு, அதாவது பட்டுப்பாதை பகுதிக்குச் சென்று பார்வையிட்டு வருமாறு உத்தரவு பிறப்பித்தார். அதனை ஏற்று அதிகாரிகளும் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு புத்தத் துறவிகள் இரண்டு வெள்ளைக் குதிரைகளில் வந்துகொண்டிருந்தார்கள். மேலும், அந்த புத்தத் துறவிகளிடம் புத்தரின் உருவப்படங்கள் இருந்ததோடு, குதிரைகளும் புத்தரின் தத்துவங்களால் நிரம்பி வழிந்தன. இதனையடுத்து அந்த புத்த துறவிகளை வணங்கி வழிபட்ட அதிகாரிகள், அவர்களை தங்களுடன் வருமாறு கூறி, சீனாவின் தலைநகருக்கு அழைத்துச் சென்று பேரரசர் மிங் முன் கொண்டுவந்து நிறுத்தினர். 

 

வெள்ளை குதிரைக் கோயில்

அவர்களிடம் இருந்த புத்தரின் உருவப்படங்களைப் பார்த்த பேரரசர் மிங், தான் கனவில் கண்டது அந்த உருவத்தைத்தான் என்று உணர்ந்து கொண்டாராம். இதனையடுத்து அவர் அந்த துறவிகளிடம் புத்தரின் தத்துவங்களையும் போதனைகளையும் சீன மொழியில் மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவர்கள் அந்தப் பணிகளை செய்யும்போது தங்குவதற்காக புத்தர் கோயில் ஒன்றையும் கட்டினார். அந்தக் கோயில் பின்னர், (புத்தரின் போதனைகளைச் சுமந்துவந்த இரண்டு வெள்ளைக் குதிரைகளையும் கவுரவிக்கும் விதமாக) வெள்ளை குதிரைக்  கோயில்  என்று அழைக்கப்பட்டது. 

அதற்குப் பின்னர் இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹன் வம்சம் சிதைந்துபோன நிலையிலும், புத்தமதம் மீதான ஆர்வம் சீனாவில் தொடர்ந்தது. பல்வேறு புத்தத் துறவிகளாலும் மேதைகளாலும் புத்தரின் போதனைகள் சீன மொழியில் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டன. இதனாலேயே புத்தமதம் சீனாவில் தொடர்ந்து பரவி, இன்றளவும் நீடிக்கிறது. 

https://www.vikatan.com/news/world/110662-china-tells-christians-to-replace-images-of-jesus-with-communist-president-xi-jinping.html

  • தொடங்கியவர்

கம்யூனிஸ்ட்களிடம் அடிபணிந்த சீன இராணுவம்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் : பகுதி 5

 
 

thanioruvan_5_15180.jpg


ரும் 2050-ம் ஆண்டுக்குள் சீனாவை உலகின் வல்லராசாக்க வேண்டும் என நினைக்கும் அந்நாட்டு அதிபர் ஜின்பிங், தனது நாட்டு ராணுவத்திடம் எதிர்பார்ப்பது இரண்டே இரண்டு விஷயங்கள்தான். ஒன்று, கம்யூனிஸ்ட் கட்சிக்கு கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசமாக இருப்பது மற்றொன்று  நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு உலகத் தரம் வாய்ந்த ராணுவமாக திகழ வேண்டும் என்பதுதான். 

 

அது 2015-ம் ஆண்டு. மங்கோலியாவில் உள்ள ஜூரிஹீ என்ற இடத்தில் அமைந்துள்ள சீன ராணுவ தளம். சீன ராணுவ வீரர்கள் இரண்டு படையணியினராக பிரிக்கப்பட்டிருந்தனர். ஒரு வார  காலம் நடந்த பயிற்சியில் இரண்டு படை அணியினரும் தங்களுக்கு இடையே மோதல் ஒத்திகையை அரங்கேற்றினர். இரண்டு அணிகளுக்குமே நவீன ஆயுதங்களும், கவச வாகனங்களும் அளிக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு அணி சீன ராணுவத்தின் வழக்கமான PLA ( people's Liberation Army ) எனப்படும் செஞ்சேனை அல்லது மக்கள் விடுதலை ராணுவம். மற்றொரு அணி ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட OPFOR ( The Blue opposing forces brigade ) எனப்படும் நீலப் படையணி. இந்த அணியினர் அமெரிக்க ராணுவப் பாணியில் போரிடும் வல்லமைப்படைத்தவர்கள். அதாவது, எதிர்காலத்தில் அமெரிக்காவை எதிர்த்துப் போரிடும் நிலைமை வந்தால் அதனைச் சமாளிக்கும் வகையில் பயிற்சி கொடுக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டது இந்த நீலப் படையணி.  


நீலப்படை 

இந்த நிலையில் இந்த இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற பயிற்சி மோதலில் செஞ்சேனையினர் தோற்கடிக்கப்பட்டனர். " மோதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே நாங்கள் விமானத் தாக்குதலுக்கு உள்ளானோம். எதிரிப்  படையின் செயற்கைக் கோள் எங்களை உளவு பார்த்தது. கூடவே எங்கள் கணினிகள் சைபர் தாக்குதலுக்கும் உள்ளானது.... வெளிப்படையாக சொல்வதானால், தாக்குதல் இந்த அளவுக்கு கடுமையாக இருக்கும் என நான் நினைத்தே பார்க்கவில்லை. நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்றுதான் முதலில் நினைத்தோம். உண்மையான தரத்திலான போர் பயிற்சியை நாங்கள் எடுத்துக்கொள்ளாததே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது" என்று விசும்பியபடியே சொன்னார் செஞ்சேனை தளபதியான  வாங் ஜிகியாங். இது, இந்த மோதல் கதையின் ஒரு அத்தியாம்தான். கடந்த 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளுக்கு இடையே இவ்விரு அணிகளுக்கும் இடையே வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மோதலில் நீலப்படையணி 32 முறை வெற்றிபெற்று, ஒரே ஒரு முறை மட்டுமே செஞ்சேனை அணியிடம் தோல்வியடைந்தது. 

pla_tank_15394.jpg

செஞ்சேனை அணியின் இந்த மோசமான தோல்வியைக் கண்டபின்னரே அதிபரும் ராணுவ தலைமை கமாண்டருமான  ஜின்பிங், சீன ராணுவத்தை ஒட்டுமொத்தமாக சீரமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். உலகின் மிகப்பெரிய ராணுவமாக சீன ராணுவம் திகழ்ந்தாலும் அது அடுத்த முப்பதாண்டுகளுக்குள் உலகத்தரம் வாய்ந்த சிறந்த போர் படையாக உருவெடுக்க வேண்டும் என்பதில் ஜின்பிங் தீவிரமாக உள்ளார். அந்த எண்ணத்துடன்தான் , 2015 செப்டம்பர் மாதம், ராணுவத்தை முற்றிலும் சீரமைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்   ஜின்பிங். 3 லட்சம் துருப்புகள் குறைப்பு,  அமெரிக்க பாணியில் ராணுவ - சிவிலியன் ஒருங்கிணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் ஜின்பிங். இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது மாநாட்டில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய ஜின்பிங், சீன ராணுவத்துக்கு மூன்று இலக்குகளை வெளியிட்டார்: 2020 -க்குள், ராணுவத்தின் அடிப்படை விஷயங்களை இயந்திரமயமாக்கி, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைதல் மற்றும் வியூக திறனை மேம்படுத்திக்கொள்ளுதல், 2035-க்குள் ராணுவத்தை நவீன பாதுகாப்புப் படையாக மாற்றுதல், 2050-க்குள் உலகத் தரம் வாய்ந்த ராணுவமாக உருவாகுதல். 

சீன ராணுவத்தை சீர்திருத்த வேண்டும் என ஜின் விரும்புவதற்கு சொல்லப்படும் காரணங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று,  அமெரிக்க ராணுவம் உட்பட எந்த ஒரு உலக நாட்டு ராணுவத்துடனும் போரிட்டு வெல்லக்கூடிய அளவுக்கு சீன ராணுவத்தை சர்வதேச தரத்துக்கு நவீனமயமாக்குவது. இரண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரத்தை தன்னிடம் குவித்துக் கொள்வது. இருப்பினும் ஜின்பிங்கின் சீன ராணுவ சீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிபெறுவது என்பது, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அவரது அதிகாரம் எந்த அளவுக்கு உச்சம் பெறுகிறது என்பதைப் பொறுத்து அமையும். கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாட்டில் ஜின்பிங் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்து வெளிப்பட்டபோதிலும், கட்சியில் செல்வாக்குமிக்க போட்டிக் குழுவான ஜியாங் ஜெமின் தலைமையிலான அணியினரிடமிருந்து ஜின்பிங்குக்கு இன்னமும் எதிர்ப்பு தொடரத்தான் செய்கிறது.  இதுதவிர ஜின்பிங் மேற்கொண்ட ஊழல் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு அதிருப்திக்குள்ளான கட்சியின் உயர்மட்ட பதவிகளில் இருந்த 64 பேர்களில் பெரும்பாலானோர் ஜியாங் அணியினருடன் கைகோத்து உள்ளனர். இது தவிர, ஜியாங் அணியில் சேராவிட்டாலும் ஜின்பிங் மீது அதிருப்தி கொண்ட மூத்த ராணுவ தலைவர்கள் பலர் இன்னமும் ஜின்பிங் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. 


 அமெரிக்க படைக்கு நிகராக...

 ஜின்பிங்கின் சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டுமானால் சீன ராணுவம் நவீன போர் படையாக உருவெடுக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( ஜிடிபி) 3.3 சதவீதத்தை ராணுவ பராமரிப்பு மற்றும் முன்னேற்ற செலவினங்களுக்காக ஒதுக்குகிறது. ( கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 611 பில்லியன் டாலர்களை ஒதுக்கியது ) 10 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள், 6,800 அணு ஆயுத போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான நவீன போர்த் தளவாடங்கள்,  13 லட்சம் வீரர்கள், உயர் தரத்திலான ராணுவப் பயிற்சி, இரண்டாம் உலகப் போரிலிருந்து உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போரில் பங்கேற்ற அனுபவம் என வலிமையுடன் திகழ்கிறது அமெரிக்க ராணுவம். 

PLA_tank_a_15457.jpg

இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்துக்கு ஈடாக சீன ராணுவத்தை தரம் உயர்த்த வேண்டுமானால் சீனாவும் தனது ராணுவச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ( கடந்த 2016-ம் ஆண்டில் 216 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.)  ஆனால், சீன ராணுவத்துக்கு ஆண்டு பட்ஜெட்டில் அந்த நாட்டின் ஜிடிபி-யில் 1.9 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. மற்ற வளர்ந்த நாடுகளின் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில் இது நிச்சயம் குறைவுதான் என சீன பாதுகாப்புத் துறை அமைச்சகமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில்தான், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 -ம் தேதியன்று ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் படையினர் மத்தியில் பேசிய ஜின்பிங், 2050-க்குள் சீன ராணுவம் உலகத்தரம் வாய்ந்த படையாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 

மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய ராணுவ கமிஷன் , சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைத் தூக்கிப்பிடிக்கும் வலிமை மிக்க ராணுவத்தை  உருவாக்கி உள்ளதாகவும், இது அரசு ராணுவத்தைக் ( மக்கள் விடுதலை ராணுவம் ) காட்டிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதே சமயம் 2020-க்குள் மக்கள் விடுதலை ராணுவம் முழு அளவில் இயந்திரமயமாக்கப்பட்டுவிடும் என்றும், 2050-க்குள் ஆயுதப்படைகளும் தேசிய ராணுவமும் முற்றிலும் நவீனமயமாகிவிடும் என்றும்  அவர் கூறினார். 

கம்யூனிஸ்ட் பிடியில் ராணுவம்

சீனாவின் ஆட்சியமைப்பில் வியப்பான விஷயங்களில்  ஒன்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று ஒரு ராணுவம்  இருப்பது. அதாவது அரசு ராணுவம், கட்சி ராணுவம் என்று இரண்டு பிரிவுகள். அரசின் வசமுள்ள தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு குறைவான அதிகாரங்கள்தான். கட்சி ராணுவத்துக்குத்தான் அதிக அதிகாரம் மற்றும் செல்வாக்கு. இந்த ராணுவம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் மிகுந்த விசுவாசமாக இருக்கும். அதிபர் ஜின்பிங் எதிர்பார்ப்பதும் அதையேத்தான். அதே சமயம், மக்கள் விடுதலை ராணுவத்தினர் கட்சி ராணுவத்துக்கு விசுவாசமாகவும், கீழ்ப்படிந்தும் நடக்க வேண்டும் என்றும் ஜின்பிங் வலியுறுத்தி உள்ளார். 

சீனாவைப் பொறுத்தமட்டில் ராணுவம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவரிடம்தான் உண்மையான அதிகாரம்  இருக்கும். இதற்கு கடந்த கால சிறந்த உதாரணமாக  சீனாவின் மாபெரும் தலைவர்களாக போற்றப்படும் மாவோ மற்றும் டெங் ஜியோ  பிங் ஆகியோரைக் குறிப்பிடலாம். மாவோவைப் பொறுத்தவரை இறக்கும் வரை அவர்தான் ராணுவத் தலைவராக  இருந்தார்.

pla_flag_15259.jpg

டெங்கைப் பொறுத்தவரை அவருக்கு அடுத்து பதவிக்கு வர உள்ளவராக ஜியாங் ஜெமின் தேர்ந்தெடுக்கப்பட்ட  பின்னர் ஓராண்டு கழித்து, அதாவது 1990-ம் ஆண்டு ராணுவத் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தார். ஆனால் ஜியாங்,  ராணுவத் தலைவர் பதவியின் அதிகாரத்தையும் மதிப்பையும் உணர்ந்திருந்ததால், தனக்கு அடுத்து பதவியேற்க இருப்பவர்  ஹூ ஜின்டாவோதான் என்று நிச்சயமான நிலையிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய  இரண்டாண்டுகள் வரை ராணுவத் தலைவர் பதவியைக் கைவிடவில்லை.அடுத்ததாக ஹூ ஜின்டாவோ கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் நேரம் வந்தபோது, ஜியாங்கைப்  போன்றே ராணுவத்தின் மத்திய கமிஷன் தலைவர் பதவியை ஜின்டோவோ தன்னிடமே வைத்திருப்பார் என்று சீன  மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அனைத்து பதவிகளிலிருந்தும் விலகி மக்களை  ஆச்சரியப்படுத்தினார். ஜின்டாவோவின் இந்த முடிவை ஒரு நல்ல அரசியல் முன்னேற்றத்துக்கான அறிகுறி என்றும், இது சீராக  வரையறுக்கப்பட்ட ஒரு அதிகார மாற்றத்துக்கான நடவடிக்கை என்றும் பலரும் பாராட்டினார்கள். 

ஆனால் இப்போதைய அதிபரும் ராணுவத் தலைவருமான ஜின்பிங்கோ ' நான் வேற மாதிரி' என்று சொல்லுகிற மாதிரி, சீனாவை புத்தாக்கம் செய்ய வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றிட தனக்கு பத்தாண்டு  அதிகாரம்கூட போதாது என்று சொல்கிறார். ஜின்பிங்கின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தின்போது ராணுவத்தைத்  தேசியமாக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டபோது அதை அவர் முற்றிலும் நிராகரித்தார். ராணுவத்  தலைமைப் பதவி கம்யூனிஸ்ட் கட்சியிடம்தான் இருக்க வேண்டும் என்றும், ராணுவம் கட்சிக்கு விசுவாசமாக  இருப்பதோடு, கட்சியிடமிருந்து வரும் உத்தரவை மட்டுமே ஏற்று அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் ஜின்பிங்  திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

" ஜின்பிங் தற்போது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், சீன அதிபர் ஆகியவற்றுடன் தேச பாதுகாப்பு கமிஷன் மற்றும்  ராணுவத்தின் மத்திய கமிஷன் ஆகியவற்றின் தலைவராகவும் உள்ளார். ராணுவம் மற்றும் காவல்துறை ஆகியவற்றைக்  கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஜின்பிங் வைத்திருக்கும் வரை அவர் தொடர்ந்து சீனா மட்டுமல்லாது உலக அளவிலும்  வலிமைமிக்கத் தலைவராக  நீடிப்பார்" என்கிறார் ஹாங்காங்கில் உள்ள சீன பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் வில்லி லேம். 

தொடரும்...

=====================================================================================================

சீனாவின் கறுப்பு அத்தியாயம் 

சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளும் அரசியல் கொள்கைகளும் தோற்றுப்போய்விட்டதாக கூறி 1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 -ம் தேதி அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. தலைநகர்  பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தங்கள் கோரி இப்போராட்டத்தை நடத்தினர். 
இப்போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றபோதிலும், மாணவர்களும் கல்வியாளர்களுமே  பெருமளவில் திரண்டனர். மாணவர்களின் இந்த எழுச்சியைப் பார்த்து அப்போதைய கம்யூனிஸ அரசு மிரண்டுபோனது.

தியான்மென் சதுக்கப் போராட்டம்

தியான்மென் சதுக்கத்தில் மட்டுமல்லாது ஷாங்காய் போன்ற பல்வேறு சீன நகரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தின் ஒரு அம்சமாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் மே 13-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினர். இதனையடுத்து 19-ம் தேதியன்று கட்சித் தலைவர்கள் மாணவர்களைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மாணவர்கள் எதிரபார்த்திருந்த நிலையில், ராணுவச் சட்டத்தைப் பிறப்பித்து போராட்டக்காரர்களை ஒடுக்க பீரங்கிகளில் ராணுவத்தை அனுப்பி வைத்தது அரசு. 
இதனால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது. மாணவர்களுடன் இணைந்து மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடினர். ஆனாலும் அசைந்து கொடுக்காத அரசு, போராட்டக்காரர்களை ஒடுக்க ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அனுப்பி வைத்தது. பீரங்கிகளில் வந்த ராணுவத்தினர் கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மற்றும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுத்தள்ளியது. குண்டடிபட்டும், ராணுவ வாகனங்களில் நசுங்கியும் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.  

ராணுவத்தின் அடக்குமுறையால் ஜூன் 4 -ம் தேதியோடு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது அதிகாரபூர்வமாக தெரியவராத நிலையில், சீன அரசு ஆவணங்களின் படி 200 முதல் 300 பேர் வரை உயிரிழந்ததாகவும்,  நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்ட தகவலின்படி 300 முதல் 800  பேர் வரையிலும், சீன மாணவர்களின் சங்கங்களின் படி 2,000 முதல் 3,000 பேர் வரையிலும் உயிரிழந்ததாக தகவல்கள் உள்ளன.  

இந்த வன்முறைக்கு பிறகு போராட்டத்தில் தொடர்புடைய ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, சிறையில் சித்ரவதை செய்ததாகவும், நியாயமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு பலருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.  ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. சீன அரசின் கறுப்பு அத்தியாயமாக பார்க்கப்படும் இந்த வன்முறைக்கும் ஊடகம் மீதான தடை க்கும் பல்வேறு உலக நாடுகள் கண்டனம்  தெரிவித்தன.

https://www.vikatan.com/news/world/111352-xi-jinping-demands-loyalty-from-pla.html

  • தொடங்கியவர்

வீழ்த்த நினைத்து வீழ்ந்து கிடக்கும் ட்ரம்ப்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.. பகுதி -6

 
 

thani_6_15008.jpg

 

 

“சீனா நமக்கு ஒரு தந்திரமிக்க போட்டியாளராகவும் நமது வேலைவாய்ப்புகளைத் திருடிக்கொள்ளும் நாடாகவும் உள்ளது. சீனாவுடன் நான் வர்த்தக யுத்தம் நடத்துவேன். சீனாவுடன் நாம் எவ்வித வர்த்தக உறவும் வைத்துக்கொள்ளாமல் இருந்தால், நம்மால் ஏராளமான டாலர்களைச் சேமிக்க முடியும். " - இது கடந்த 2010-ம் ஆண்டில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சொன்னது. 

அதன்பின்னர் 2011 -ல், "சீனா அமெரிக்காவைத் தோற்கடித்து அதனைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகிறது" என ட்விட்டரில்  குறிப்பிட்டிருந்தார். 2016 மே மாதம் நடைபெற்ற பிரசார கூட்டம்  ஒன்றில், சீனா பின்பற்றும் வர்த்தக நடைமுறைகள் குறித்துப்  பேசுகையில், சீனா எங்கள் தேசத்தை பலாத்காரம் செய்வதை அனுமதிக்க முடியாது" என்றார் ட்ரம்ப். 

இவையெல்லாம், கடந்த காலத்தில் சீனா குறித்த ட்ரம்பின் பார்வை எப்படி இருந்தது என்பதற்கான சான்றுகள்.

ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்தே சீனா குறித்த அவரது பார்வையே மாறிப்போனது. அதிலும், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது  மாநாட்டில் சீன அதிபராக ஜின்பிங் மீண்டும் ஐந்தாண்டு காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், கட்சியில் அவர் ஏற்படுத்திக் கொண்ட அதிகாரக் குவிப்பும், அதனைத் தொடர்ந்து இன்னும் 30 ஆண்டுகளில் சீனாவை உலக வல்லரசாக ஆக்கப்போவதாக அவர் வெளியிட்ட அறிவிப்பும், ஜின்பிங்கை உலகின் அதிகாரம்மிக்க தலைவராக காட்டியது.

கூடவே, உலகின் அதிகாரம் மிக்க தலைவராக இதுவரை பார்க்கப்பட்டு வந்த அமெரிக்க அதிபரைக் காட்டிலும், ஜின்பிங் செல்வாக்கு மிக்க  தலைவராக உருவெடுத்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் எழுதித்தள்ளியதைப் பார்த்து நியாயமாக ட்ரம்புக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனாலும் என்ன செய்ய... கோபத்தையும் எரிச்சலையும் மனதில் அடக்கிக்கொண்டு, “நீங்கள் அசாதாரணமான உயரத்தை அடைந்துள்ளீர்கள்” என ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டுத் தெரிவித்ததோடு, வடகொரியா விவகாரம் மற்றும் இருதரப்பு வர்த்தக விவகாரங்கள் குறித்தும் பேசியதாக ட்ரம்ப் ட்விட்டரில்  குறிப்பிட்டிருந்தார்.

trump_congra_xi_15359.jpg

ட்ரம்பின் இந்த அந்தர் பல்டியைப் பார்த்து அப்போதே உலக  நாடுகள் மூக்கில் விரல் வைத்தன. ஆனால் ஆச்சர்யம் அதோடு  நிற்கவில்லை. கடந்த நவம்பர் மாதம் சீனாவுக்கு முதன்முறையாக விசிட் அடித்த ட்ரம்ப், எதிர்காலத்தில் பெய்ஜிங்குக்கும் வாஷிங்டனுக்கும் இடையே மிக நெருங்கிய உறவு ஏற்படும் என்ற எண்ணம் ஏற்படும் விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். 

“வருகிற நாள்களில் அமெரிக்கா - சீனா இடையே இன்னும் வலுவான நட்புறவு ஏற்படும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடமளிக்க பசிபிக் பெருங்கடலில் போதுமான இடம் உள்ளது"  என்று பெய்ஜிங்கில் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசியதைப் பார்த்து உலக நாடுகள் வாயடைத்துப் போய்விட்டன.

பகையும் நீயே... சொந்தமும் நீயே!

அரசியல்வாதிகள் அடிக்கடி தங்களது கொள்கைகளை மாற்றிக்கொள்வது வாடிக்கைதான் என்றாலும், அது பெரும்பாலும்  உள்ளூர் அரசியல் மட்டத்தில்தான் காணப்படும். சர்வதேச விவகாரங்களில் சற்று யோசித்துதான் செயல்படுவார்கள். ஆனால் சீனா விவகாரத்தில் ட்ரம்ப்பிடம் காணப்பட்ட இந்த மாற்றம் சீனாவாலேயே நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது.

ஏனெனில், மேலே குறிப்பிட்டபடி ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது மேற்கொண்ட பிரசாரத்தின்போது சீனாவைக்  கடுமையாகத் தாக்கிப் பேசினார். சீனாவின் இறக்குமதி பொருள்களால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை பெருமளவில்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான அமெரிக்கர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுவதாகவும், எனவே தாம் ஆட்சிக்கு வந்தால் சீனா மற்றும் மெக்சிகன் இறக்குமதி பொருள்களுக்கான வரியை முறையே 45 மற்றும் 35 சதவீதமாக உயர்த்துவேன் என்றும்  அறிவித்திருந்தார். 

ஆனால், அப்படி வரியை உயர்த்தினால் அமெரிக்காவுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்படும் என அந்த நாட்டுப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தனர். "சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மற்றும் சேவைகளில் 25 சதவீதம் சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்குத்தான் செல்கின்றன. இந்த நிலையில், அந்த இரண்டு நாடுகளும் இதற்குப் பதிலடியாக அமெரிக்கப்  பொருள்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது உள்ளிட்ட வர்த்தகத் தடைகளை ஏற்படுத்தினால், இருதரப்புக்குமிடையே முழு  அளவில் வர்த்தகப் போர் வெடிக்கும். இதனால், 2019-ல் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டு, அதன் பொருளாதார வளர்ச்சி -0.1 என்ற சதவீதத்துக்கு அதலபாதாளத்துக்குச் செல்லக்கூடும். மேலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.7 சதவிகிதம் அதிகரித்து சுமார் 40 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கக்கூடும்" என்று அவர்கள் எச்சரித்தனர்.

இத்தகைய சூழலில்தான் தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், தேர்தல் பிரசாரத்தில் கூறியதுபோன்று இதுவரை சீனப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 45 சதவீதமாக உயர்த்தவும் இல்லை, சீனாவுக்கு எதிராக முக்கிய வர்த்தகக் கொள்கை எதையும் அமல்படுத்தவும் இல்லை. அதேபோன்று தென் சீனக் கடலில் சீனாவுக்கு எதிரான ஆக்ரோஷமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. கூடவே,  மாதம் ஓர் ஏவுகணையைத் தயாரித்து அமெரிக்காவைப் பீதியடைய வைத்துக்கொண்டிருக்கும் வடகொரியாவுடன் தொடர்ந்து வர்த்தக மற்றும் தூதரக உறவுகளைப் பராமரித்து வருவதற்காக சீனாவைத் தண்டித்துவிடவும் இல்லை.

ட்ரம்பின் இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம் வடகொரியா மீது அவர் முழு கவனமும் திரும்பியிருப்பதுதான் காரணம் என்கின்றனர் சீனா மற்றும் அமெரிக்க அயலுறவுக் கொள்கைகளை அலசி ஆராயும் நிபுணர்கள்.

jin_-_trump_b_15457.jpg

“சீனாவுடனான தற்போதைய வர்த்தக மற்றும் பொருளாதரப் பிரச்னைகளைத் தற்காலிகமாக ஒதுக்கிவைத்துவிட்டு வடகொரியாவுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வைப்பதில் அதிக  கவனம் செலுத்த வேண்டும்" என ட்ரம்ப் கருதுகிறார். அதுமட்டுமல்ல, சர்வதேச அளவில் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துகிற ஒரு தேசத்தின் வலுவான மற்றும் அதிகாரமிக்கத் தலைவராக ஜின்பிங் திகழ்வதால், அவரைப் புகழ்ந்தும் அவருடன் தாமே முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தவும் வேண்டிய அவசியம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு  ஏற்பட்டுள்ளது" என்று கூறுகிறார் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் சர்வதேச விவகாரங்கள் குறித்த ஆய்வுப் பேராசிரியர் பால் மஸ்கிரேவ்.

ஆனால், இந்த நிலைமை எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் அல்லது இதனால் அமெரிக்காவுக்கு ஏதாவது நன்மை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்புவரை சீனாவை மிகக்கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப்புக்கு, தற்போது சீனாவுடனான உறவு இதற்கு முந்தைய அமெரிக்க அதிபர்களைக் காட்டிலும் மிக நன்றாகவே இருப்பதாகத் தெரிகிறது.

சீனா என்ன நினைக்கிறது? 

அதே சமயம் சீனாவின் கண்ணோட்டம் வேறாக இருக்கிறது. “எங்கள் மீதான ட்ரம்ப்பின் இந்த மென்மையான போக்கு தொடர்ந்து நீடிக்குமா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் ட்ரம்ப்பின் மனநிலை ஸ்திரமானது இல்லை. எந்த ஒரு நிகழ்வும் சீனா மீதும் அதன் அதிபர் ஜின்பிங்கின் மீதும் ட்ரம்ப்புக்கு வெறுப்பை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. இதைச் சீனாவும் உணர்ந்துதான் உள்ளது. ஆனால், அதுவரைக்கும் அந்த நட்புறவை நீடிக்கச் செய்யலாம். அந்த வகையில் இதற்கான முழு பெருமையும் ஜின்பிங்கையே சேரும். பதவிக்கு வரும் முன்னர் வரைக்கும் சீனாவைக் கரித்துக்கொட்டிக் கொண்டிருந்த ஒருவரை நேசக்கரம் நீட்டச் செய்தது ஜின்பிங்கின் சாதுரியம். அவர் என்ன விரும்பினாரோ அதை ஒரு வருடத்துக்கும் குறைவான நாள்களுக்குள் சாதித்துக் காட்டியுள்ளார். அப்படியானால் எதிர்காலம் சீனாவுக்கு எவற்றையெல்லாம் கொண்டுவரும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்..." என்கிறார் சீன அயலுறவு அமைச்சக அதிகாரி ஒருவர். 

================================================================================================

தென் சீனக்கடலிலும் மூக்குடைப்பட்ட அமெரிக்கா!

இயற்கை எரிவாயு, எண்ணெய் வளமிக்க தென் சீனக் கடல் பகுதி வழியாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான வர்த்தகப் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் புருனே உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உரிமை கொண்டாடுவதால் இந்த நாடுகளுக்கும் சீனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. 

சீனாவின் இந்த அடாவடி குறித்து சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் வழக்குத் தொடர்ந்த நிலையில், " தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் உரிமை கொண்டாட சீனாவுக்கு சட்ட ரீதியாக எவ்வித முகாந்திரமும் இல்லை" எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ஆனாலும், சீனா அதனை பொருட்படுத்தாமல் தென் சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டு,  
அங்கு செயற்கை தீவுகளை ஏற்படுத்தி, அதில் விமானப் படை தளத்தையும் அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அமெரிக்கா, தென் சீனக் கடல், சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று வாதிட்டு வருகிறது.  

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம், சீன ராணுவம் உருவாக்கியுள்ள செயற்கை தீவுகளுக்கு அருகில் சுமார் 12 கடல் மைல் தொலைவில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டதையடுத்து, சீனா ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றது. 

south_china_island_15476.jpg

"சர்வதேச கடல் எல்லையை சீனா மதிக்கிறது. அதே நேரம் சீன எல்லைக்குள் யாரும் நுழைய முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தென் சீனக் கடலில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அத்துமீறினால் கடல், வான் வழியாகப் போர் தொடுப்போம்" என்று சீன கடற்படை தளபதி அட்மிரல் வூ செங்கி எச்சரிக்கை விடுத்தார். 

இந்த மோதல்களுக்கு இடையேதான், சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்த பிலிப்பைன்ஸை சீனா சத்தமில்லாமல் சரிக்கட்டி விட்டது. ஜின்பிங் தலைமையிலான சீன அரசு எத்தகைய சாம தான பேத தண்டத்தை பயன்படுத்தியதோ, தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடன் ஒத்துழைக்கும் கொள்கையைப் பின்பற்றப்போவதாக அறிவித்துவிட்டது. அதேபோன்றுதான் வியட்நாம் உள்ளிட்ட  இதரக் குட்டி ( தென்கிழக்கு ஆசிய) நாடுகளையும்,  தெற்குச் சீனக்கடல் பகுதியைச் சுற்றி எங்குமே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறப்பண பணி எதையும் செய்ய முடியாதவாறு முடக்கிவிடுவோம் என்று சீனா விடுத்த மிரட்டலால் தங்களது பொருளாதாரம் பாதிக்கப்படுமே என்ற அச்சத்தில் அந்த நாடுகளும் அடிபணிந்து விட்டன.  

இது அமெரிக்காவின் முகத்தில் கரியைப் பூசிய கதையாகி விட்டது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதியன்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளின் பிரதிநிதிகளும் கூடி சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை சீனாவும், இதர தென் கிழக்கு ஆசிய நாடுகளும் மதித்து நடக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. ஆனால் புகார் கொடுத்தவனே கேசை வாபஸ் வாங்கியதுபோல வழக்குத் தொடுத்த நாடே சமரசமாகப் போவதாக அறிவித்துவிட்ட பிறகு அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை? சரியான மூக்குடைப்பு. 

கூடவே, " இது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான விவகாரம். எங்கள் பிரச்னைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அந்நியர்கள் யாரும் தலையிட வேண்டாம்" என அமெரிக்காவுக்கு சீன அயலுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை வேறு விடுத்துள்ளது. யானை இளைத்தால் எலியும் எட்டி உதைக்கும் என்பது இதுதானோ!

================================================================================================

 

அமெரிக்காவையே அசைத்துப் பார்க்கிற சீனா, அண்டை நாடான இந்தியாவுடன் மட்டும் அடங்கிப் போகுமா என்ன...? ஜின்பிங் அதிபரான பின்னர் பாகிஸ்தானைப் பகடைக் காயாக வைத்துக்கொண்டு இந்தியாவிடம் வம்புக்கு இழுக்கும் சீனாவின் சீண்டல்கள், இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதல்கள் குறித்து வரும் அத்தியாயங்களில்.... பார்க்கலாம்...! 

https://www.vikatan.com/news/world/111984-extraordinary-rise-trump-kowtows-to-kingpin-xi-jinping.html

  • தொடங்கியவர்

சீனத் தொல்லைக்கு நேருவின் வரலாற்றுத் தவறு காரணமா? - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.. பகுதி -7

 

thani_oruvan_13437.jpg

வீழ்த்த நினைத்து வீழ்ந்து கிடக்கும் ட்ரம்ப்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.. பகுதி -6

 

டந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 - வது மாநாட்டில், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட  ஜின்பிங், அடுத்த 30 ஆண்டுகளுக்குள் சீனாவை உலக  வல்லரசாக ஆக்க வேண்டும் என்ற தனது கனவை வெளியிட்டு, அதற்கான இலக்கை நோக்கி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். இதன்மூலம், சீனாவின் மாபெரும் தலைவர்களாகப் போற்றப்படும் மாவோ மற்றும் டெங் ஜியோ பிங் வரிசையில் சீனாவின் வல்லமைமிக்க தலைவராக ஜின்பிங் விஸ்வரூபம் எடுத்து நிற்பதோடு, உலகத் தலைவனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறார்.

வழக்கமாக புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க கூட்டப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், அதிபராக ஒருவர்  தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கட்சியின் பொலிட்பீரோ நிலைக்கமிட்டியின் ஏழு உறுப்பினர்களில் ஒருவர் அடுத்த  அதிபராக அடையாளம் காணப்பட்டு, அப்பதவிக்குத் தயாராவதற்கு ஏதுவாக அவருக்குச் சில பொறுப்புகள் கொடுக்கப்படும். ஆனால், இந்த முறை அப்படி யாரும் அடையாளம் காணப்படவில்லை என்பதால், மூன்றாவது முறையாகவும் ( 2022 - 2027 ஆண்டுகளுக்கும்)  அதிபராக பதவி வகிக்கும் அளவுக்கு ஜின்பிங் தன்னை கட்சியில் பலப்படுத்திக் கொண்டு விட்டதாகவும், 2022 க்குப் பின்னரும் அவர்தான் அதிபர் பதவியில் தொடரப் போகிறார் என்றும் கூறுகிறார்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியினர். 

ஜின்பிங் இப்படி தொடர்ந்து அதிபர் பதவியில் நீடிக்க வேண்டும் என விரும்புவதற்கு முக்கிய காரணம்,  தனது உலக வல்லரசு கனவை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்காகத்தான் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.   

போர் அச்சத்தை ஏற்படுத்திய டோக்லாம் மோதல் 

இத்தகைய பலம் வாய்ந்த அண்டை நாட்டு அதிபராக ஜின்பிங் இருக்கும் சூழலில்தான், சீனாவுடன் ஆண்டாண்டு காலமாக தொடரும் பல்வேறு பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது இந்தியா. அதிலும், 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் டோக்லாம் எல்லை பிரச்னையை மையமாக வைத்து இந்தியாவும் சீனாவும் படை குவிப்பில் ஈடுபட்டபோது, கிட்டத்தட்ட எங்கே இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுவிடுமோ என்ற பதைபதைப்பு ஏற்பட்டதென்னவோ நிஜம். அந்த அளவுக்கு இந்தியாவும் சீனாவும் பகையுணர்வுடன் முறைத்துக் கொண்டு நின்றன. 

அதுகுறித்த ஒரு சின்ன நினைவூட்டல் இங்கே...

டோகா லா எல்லை

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கும் பூடான் நாட்டுக்கும் இடையே இருக்கும் ஒரு சிறிய பள்ளத்தாக்குப் பகுதி  சீனாவுக்குச் சொந்தம். இங்கு உள்ள டோக்லாம் பீடபூமியில், தங்கள் நாட்டின் எல்லையோரமாக இருக்கும் டோகா  லா என்ற ராணுவ முகாமுக்கு சாலை அமைத்தது சீனா. தங்கள் ராணுவ முகாமுக்கு சீனா சாலை அமைத்தது  பிரச்னை இல்லை; ஆனால்,  மலைப்பாங்கான தங்கள் நாட்டுப்பகுதியில் ரோடு போடுவது சாத்தியமில்லை  என்பதால், அதை பூடான் நாட்டு வழியாகப் போட்டதுதான் பிரச்னை ஏற்பட வழிவகுத்தது. பூடானுக்கும்  இந்தியாவுக்கும் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இருப்பதை சுட்டிக்காட்டி, இந்திய ராணுவத்தினர் அங்கு போய்  எதிர்ப்புத் தெரிவித்து, ரோடு போடும் பணியை நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த சீன ராணுவம், டோகா லா எல்லையில் இருந்த இரண்டு இந்திய ராணுவ முகாம்களைத்  தாக்கி அழித்தது. அங்கு எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவம் வர முயன்றபோது, இந்திய  ராணுவத்தினர் மனிதச்சங்கிலி போல கைகோத்து நின்று தடுத்தனர். இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர்  தள்ளிக்கொண்டனர். ஆயுத தாக்குதல் இல்லாத சண்டைபோல அது இருந்தது. அங்கு இந்திய ராணுவம் எல்லை  தாண்டி ஊடுருவி இருப்பதாகக் குற்றம் சாட்டும் சீனா, இந்தியர்கள் திரும்பிப் போக வேண்டும் என்றது. 

இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் இரண்டு நாட்கள் பயணமாக சிக்கிம் சென்று நிலைமையைக் கண்காணிக்க,  இன்னொரு பக்கம் சீன ராணுவம், திபெத் எல்லையில் போர்ப்பயிற்சி மேற்கொண்டது.  

கூடவே 1962-ம் ஆண்டு போரில் வாங்கிய அடியை இந்தியா மறந்துவிட்டதா, அதனை நினைத்துப் பார்த்து, இந்தியா  பாடங்கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூற... பதிலுக்கு இந்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, "1962- ம் ஆண்டில் இருந்த நிலை வேறு என்று குறிப்பிட்டுள்ளார். 2017-ல் இருக்கும் இந்தியா,1962- ம் ஆண்டில் இருந்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்டது"  பதிலடி கொடுத்தார். அதன் பின்னர் ஒரு வழியாக இருதரப்பு பேச்சு வார்த்தைக்குப் பின்னர் பிரச்னை முடிவுக்கு வந்தது.  

பிடிவாத ஜின்பிங்... தீராத பிரச்னைகள் 

காஷ்மீரை மையமாக வைத்து பாகிஸ்தானால் இந்தியாவுக்குத் தீரா தலைவலி என்றால், சீனா உடனான  பிரச்னைகள் எனப் பட்டியலிட்டால், டோக்லாம் பிரச்னையைத் தவிர்த்து,  அருணாச்சலப் பிரதேசத்துக்கு  உரிமை  கொண்டாடுவது, சிக்கிமிலும் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுவது, தலாய் லாமா மற்றும் திபெத் பிரச்னை,   இந்தியப் பெருங்கடலைச் சுற்றி துறைமுகங்கள், கடற்படைத் தளங்களை அமைப்பது, பிரம்மபுத்திரா நதி நீரைப்  பங்கிட்டுக்கொள்வதில் நீடிக்கும் பிரச்னை, அணு எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகளில் இந்தியா உறுப்பினர்  ஆவதைத் தொடர்ந்து தடுத்து வருவது, இந்தியாவில் தீவிரவாதத்தைத் தூண்டி விடும் பாகிஸ்தானைத் தொடர்ந்து  ஆதரிப்பது மற்றும் ஜெய்ஷ்  இ மொகமத் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா. மூலம்  பொருளாதார தடை விதிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது மற்றும்  பாகிஸ்தானுடன் தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் எல்லையையொட்டிய சில பகுதிகளின் வழியாக CPEC எனப்படும் சீன- பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதை திட்டத்தைச் செயல்படுத்தி இந்தியாவின் இறையாண்மையில் தலையிடுவது எனக் குறைந்தது பத்து பிரச்னைகளையாவது பட்டியலிடலாம். 

ஜின்பிங்

இந்த பிரச்னைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன என்றபோதிலும், தென் சீனக் கடல் விவகாரம், தலாய்  லாமா, டோக்லாம், அருணாச்சல பிரதேச பிரச்னைகள் மற்றும் மசூத் அசார் போன்ற பாகிஸ்தான் தீவிரவாத தலைவர்களை ஆதரிப்பது போன்றவற்றில் ஜின்பிங்கின் பிடிவாதமான நிலைப்பாடு, இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளை வகுப்பவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. 

கவலையில் மேற்குலக நாடுகள்

இது ஒருபுறமிருக்க அமெரிக்காவை அசால்ட்டாக அப்புறப்படுத்திவிட்டு, 2050 ல்  உலக வல்லரசாக்கிவிட வேண்டும்  என்ற எண்ணத்தில் சீனா தன்னை மிக வசதியான நிலைக்கு உயர்த்திக் கொண்டிருப்பதும், அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவைப் பொருளாதார ரீதியாக சீனா முந்திவிடலாம் என்ற நிலை உருவாகிக் கொண்டிருப்பதும் பல  மேற்குலக நாடுகளை மிகுந்த கவலைக் கொள்ள வைத்துள்ளன. கடந்த முறை உலக வல்லரசு என்ற பட்டத்தை  அமெரிக்காவிடமிருந்து தட்டிப் பறிக்கப் போட்டி போட்டதும் சோவியத் யூனியன் என்ற கம்யூனிஸ்ட் தேசம்தான். சுமார் 45 ஆண்டு காலம் மேற்குலக நாடுகள் அந்த பனிப்போரை எதிர்கொண்டன. இந்நிலையில், இதோ ஜின்பிங் தலைமையிலான இன்னொரு கம்யூனிஸ தேசத்திலிருந்து  அமெரிக்கா உள்ளிட்ட அதே மேற்குலக நாடுகள் அதே அச்சுறுத்தலை எதிர்கொண்டு நிற்கின்றன. 

சீனாவும் இரண்டு உண்மைகளும்

இத்தகைய சூழலில், அண்மையில் டோக்லாமை அடிப்படையாக வைத்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே  ஏற்பட்ட மோதல் இரண்டு உண்மைகளை வெளிப்படுத்தியது. ஒன்று, நிலத்தை ஆக்கிரமிக்கும் குணம் சீனாவின்  அடிப்படையான குணாதிசயங்களில் ஒன்றாகிவிட்டது. அது நிலமோ அல்லது கடலோ, அந்தப் பகுதி கிடைக்கும் வரை இன்னொரு நாட்டின் பகுதியில் ஊடுருவுவதை அது தொடரத்தான் செய்யும். இரண்டு, சீனா அப்படி ஆக்கிரமிக்கும்போது அதனை எதிர்த்தால் டோக்லாமில் செய்தது போன்று பின்வாங்கும். ஆனால், அதற்கு அர்த்தம்  சீனா மீண்டும் அதனைச் செய்ய முயற்சிக்காது என்ற அர்த்தமல்ல; மீண்டும் அதைத் தொடரத்தான் செய்யும்.  

ராணுவ ஊடுருவல் மூலமாக தைவானை பல ஆண்டுகளாக சீனா அச்சுறுத்தி வருகிறதே தவிர, பெரிய அளவில்  எதையும் செய்யவில்லை. அதேப்போன்றுதான் ஹாங்காங்கில் தங்களுக்கு உண்மையான ஜனநாயகம் மற்றும்  சுயாட்சி கோரி அங்குள்ள மக்கள் நடத்திய போராட்டத்தை நசுக்கப் பார்த்தது. ஆனால் பொதுமக்களின் கடுமையான  எதிர்ப்பு காரணமாக அதிலிருந்து பின்வாங்கியது. (பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த, உலகின் முக்கிய வர்த்தக  நகரான ஹாங்காங், 1997-ம் ஆண்டு சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்து 'ஒரு நாடு இரு ஆட்சியமைப்பு'  என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங், சீனாவின் ஆளுமைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.) இருப்பினும்  இவ்விரு பிரதேசங்களிலும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளையும், அது தொடர்பான  நடவடிக்கைகளையும் அது நிறுத்தவில்லை.

அதேப்போன்றுதான் டோக்லாமில் இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக சீன ராணுவம் தனது சாலை அமைக்கும்  பணியை தற்காலிகமாக கைவிட்டதே தவிர, எதிர்காலத்தில் சாலை அமைக்க மாட்டோம் என்ற உத்தரவாதம்  எதையும் தரவில்லை.  டோக்லாம் மோதலை பொறுத்தவரை முதல் சுற்றில் இந்தியா  வெற்றிப்  பெற்றுவிட்டதாகவும், 1962 ல் நடந்த போரினால் ஏற்பட்ட அவமானத்தை, டோக்லாமில் சீன ராணுவத்தைத்  துணிவுடன் நேருக்கு நேர் நின்று 'வருவதை எதிர்கொள்ள தயார்' என்பதுபோன்று எதிர்த்ததன் மூலம் இந்தியா  ஓரளவுக்கு துடைத்துவிட்டதாகவும் சீனா கருதுகிறது. 

'நேரு செய்த வரலாற்றுத் தவறு' 

இந்நிலையில், “டோக்லாமில் காட்டிய இந்த எதிர்ப்பையும் துணிச்சலையும் 1950-ம் ஆண்டு, இந்தியாவின் அண்டை  நாடாக விளங்கிய திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது காட்டியிருந்தால், இத்தனை ஆண்டு காலம் இந்திய  நிலப்பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பை அவ்வப்போது எதிர்கொண்டிருந்திருக்க வேண்டிய அவசியம்  இருந்திருக்காது. ஆனால், அதனை அப்போதைய பிரதமர் நேரு செய்யத் தவறி,  திபெத்துக்குள் சீன படையெடுப்பை  வேடிக்கைப் பார்த்த வரலாற்றுத் தவறு ஒன்றை இழைத்துவிட்டார்" என்கிறார் பிரபல பொருளாதார வல்லுநர்  பிரசென்ஜித் கே பாசு. இவர், தான் எழுதியுள்ள 'Asia Reborn: A Continent Rises from the Rages  of Colonialism and War to a New Dynamism' என்ற புத்தகத்தில் ஆசியாவின் கடந்த கால மற்றும்  நிகழ் கால வரலாற்றுச் சம்பவங்கள் குறித்தும், எதிர்கால நிகழ்வுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஆழமான  மாற்று கோணத்தில் அலசியுள்ளார். 

மாவோ உடன் நேரு

குறிப்பாக, இந்தியாவின் திபெத் கொள்கை குறித்து அவர் கூறுகையில், “ஜவஹர்லால் நேரு ஒரு  புத்திசாலித்தனமான வரலாற்று ஆசிரியர் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆட்சி நிர்வாகத்தில் அவர் ஒரு  அப்பாவியாகவே இருந்துள்ளார் என்பது அதிர்ச்சிகரமான விஷயம்தான். ஆட்சி நிர்வாகத்தில் அவர் மேற்கொண்ட  அணுகுமுறையும், கடைப்பிடித்த அயலுறவுக் கொள்கையும் அவரது வரலாற்று அறிவுக்கு முற்றிலும்  வேறுபட்டதாகவே இருந்தது. ஆனால் நேரு தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார்  படேலின் பார்வை வேறாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்புக்கும் எதிர்கால நலனுக்கும் திபெத் நமது முக்கிய  நட்பு நாடாகத் திகழும் என்றும், எனவே திபெத்தை சீனா ஆக்கிரமிப்பதை தூதரக ரீதியாகவோ அல்லது ராணுவ  நடவடிக்கை மூலமாகவோ தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் நேரு அதனைக்  கேட்கவில்லை. இத்தனைக்கும் அப்போது திபெத்தில் இந்தியாவையும் சேர்த்து நான்கு நாடுகள் மட்டுமே தங்களது  தூதரகங்களை அமைத்திருந்தன. சீனாவுக்குத் தூதரகம் இல்லை. இந்த நிலையில் சீனாவின் இந்த திபெத் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை பெரும்பாலான உலக நாடுகள் ஆதரிக்கவில்லை. எனவே, இந்தியா அப்போது  சீனாவின் அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால், மற்ற உலக நாடுகளும் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும். சீனாவும் திபெத்திலிருந்து பின்வாங்கியிருக்கும் என்பதோடு, பிற்காலத்தில் இந்தியப்  பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் அல்லது ஊடுருவும் எண்ணமும் சீனாவுக்கு வந்திருக்காது. ஆனால், அதைச்  செய்யாமல்போன இந்த வரலாற்று தவறுதான் கடந்த பல தசாப்தங்களாக சீனாவை இந்தியாவிடம் ஒரு ரவுடி தேசமாக நடந்துகொள்ள வைத்தது. 

இருப்பினும் தற்போது டோக்லாம் ஆக்கிரமிப்பில் சீனாவுக்கு இந்தியா காட்டிய எதிர்ப்பு, அப்போதைய வரலாற்று  தவற்றைச் சரி செய்யும் நடவடிக்கையின் ஒரு தொடக்கமாக பார்க்கலாம்" என்கிறார். 

இருப்பினும் தீவிரவாதத்தால் சின்னாபின்னமாகி பொருளாதாரத்திலும் கீழே விழுந்து கிடக்கும் அண்டை நாடான  பாகிஸ்தானே அவ்வப்போது இந்தியாவுக்கு போர் சவால் விட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னும் சில  தசாப்தங்களில் உலக வல்லரசாக ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும்  சீனா, நிச்சயம் டோக்லாம் பின்னடைவுக்குப் பழிவாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் அது எப்போது, எங்கே, எப்படி நிகழும் என்பது ஜின்பிங்கின் முடிவைப் பொறுத்தே அமையும். எனவே,  இந்தியாவும் எதையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்க வேண்டும். 

=================================================================

தலாய்லாமா: சீனாவின் நெருஞ்சி முள்

சீனாவில் ஏற்பட்ட கலாசார புரட்சியைத் தொடர்ந்து 1949 -ம் ஆண்டு அக்டோபர் மாதம்  சீன கம்யூனிஸத் தலைவர் மா சே துங் தலைமையிலான கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. புதிய சீன அரசாங்கம் சீனாவின் எல்லைகளை விரிவுபடுத்தத் தொடங்கியபோது, 'சீனா கண்காணிக்க வேண்டும்' என்று ஆங்கிலேயர் ஒப்படைத்திருந்த பகுதிகளை சீனாவிற்கு உட்பட்ட பகுதி என சீனா பகிரங்கமாக அறிவித்தது. 1950 அக்டோபர் மாதம் சீனப்படைகள் திபெத்திற்குள் புகுந்தன. திபெத்தின் தலைநகர் லாஸாவிற்க்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் சீனா தனது படைகளை நிறுத்தியது. அப்போழுது 16 வயது நிரம்பிய தலாய் லாமா, சீனப்படையை எதிர்க்குமாறு தனது படைகளுக்கு ஆணையிட, திபெத்தியர்களும் ஆவேசத்துடன் போரிட்டனர். ஆனால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனப் படையுடன் 10,000 த்துக்கும் குறைவான நவீன ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் திபெத்தியர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

dalai_lama_600_13144.jpg

இதன் காரணமாக திபெத் அரசு சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டது. எனவே, சீன அரசின் மேலாதிக்கம் திபெத்தின் மீது இருக்கவேண்டும் என்ற ஒப்பந்தம், சீனாவின் பயமுறுத்துதல் பேரில் கையொப்பமானது. அந்த ஷரத்தின் படி, சீனா திபெத்தின் மத விவகாரங்களிலோ உள்நாட்டு ஆட்சியிலோ தலையிடாது. ஆனால், திபெத்தின் உள் நாட்டு விவகாரங்களிலும் முழுமையான குறுக்கீடுகளுடனும் சீனப் படைகள் திபெத்தில் முழுமையாக இறங்கியது. இதை அடுத்து திபெத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. ஆங்காகே சீன ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். கலவரத்தை நிறுத்த ஆணையிடுமாறு சீனா, தலாய் லாமாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் தலாய் லாமா 'இது சுதந்திர போராட்டம்' என அறிவிக்க,  அவரைச் சிறைப்பிடிக்கும் நோக்கத்துடன் தலைநகர் லாஸாவில் முகாமிட்டிருந்த சீன ராணுவம் அரண்மனையைக் கைபற்றி லாமாவை பிடிக்கும் யோசனையுடன் 1959 -ம் ஆண்டு மார்ச் 17 -ம் தேதி அரண்மனைமீது கடுமையான பீரங்கி தாக்குதல் நடத்தியது. 

ஆனால், அதற்கு முன்னதாகவே தலாய் லாமா,  சாதாரண அரண்மனை சிப்பாய் போல் வேடமிட்டு அரண்மனையின் ரகசிய வழியாக வெளியேறி, 31 நாட்கள் பயணம் செய்து  இந்தியா வந்து சேர்ந்தார். அவருக்கு இந்தியா தஞ்சமளித்து அரவணைத்துக் கொண்டது. 

இதனையடுத்து, “தலாய் லாமாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று இந்தியாவிடம் சீனா கோரியது. ஆனால் அதற்கு நேரு மறுத்துவிட்டார். இதனால், இந்தியா மீது சீனா ஆத்திரம் அடைந்து, 1962 செப்டம்பர் மாதத்தில் இந்தியா மீது படையெடுத்தது. லடாக் பகுதியிலும், வடகிழக்கு எல்லைப் பகுதியிலும் நடந்த போரில், இந்தியாவின் சில பகுதிகளை சீனா கைப்பற்றிக்கொண்டது. சீனாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்தன. அதனால், சீனப்படைகள் வாபஸ் ஆயின. திபெத், சீனாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. 

இந்நிலையில் தலாய் லாமா, இந்தியாவில் தற்போது இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இருந்து செயல்படுகிறார். 

===================================================================

 

ஜின்பிங் வருவார்....

https://www.vikatan.com/news/coverstory/112563-nehrus-historical-error-leads-beijing-to-control-the-indiachina-narrative-for-decades.html

  • தொடங்கியவர்

சீனாவின் பிடியில் இலங்கைத் துறைமுகம்: பட்டுப் பாதையா... படையெடுக்கும் பாதையா? - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் ( பகுதி - 8)

 

ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.

 

 

 

ரே ஒரு பாதையை உருவாக்குவதன்மூலம், ஒரு தேசம் உலகின் வல்லரசு ஆகிவிட முடியுமா? ஜின்பிங் தலைமையிலான சீன அரசு அப்படித்தான் நம்புகிறது. கூடவே  அந்தப் பாதையை பாகிஸ்தான் மற்றும் இலங்கை துறைமுகங்களுடன் இணைப்பதன் மூலம் இந்தியாவின் புழக்கடைக்கே வந்து நின்று அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. 

அருணாச்சல பிரதேசம் உள்பட ஏற்கெனவே சீனாவுடன் இந்தியாவுக்கு இருந்து வரும் எல்லைத் தகராறு உள்ளிட்ட தாவாக்களின் உச்சமாக டோக்லாம் பிரச்னை, கடந்த ஆண்டு ஜூலையில் வெடித்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுவிடுமோ என்ற அளவுக்கு நிலைமை மோசமானதையும், இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்ததையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதே சமயம், சீனா இப்போதைக்கு அமைதியாக பின்வாங்கினாலும், டோக்லாமிலோ அல்லது அருணாச்சலப் பிரதேசத்திலோ மீண்டும் தனது அத்துமீறலைத் தொடரக்கூடும் என்றும், அது சீனாவின் குணாதிசயங்களில் ஒன்றாகிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தோம். நாம் சொன்னபடியே கடந்தவாரம் அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட நிலையில், இந்திய ராணுவத்தின் கடும் எதிர்ப்புக் காரணமாக பின்வாங்கினர். 

இத்தகைய சூழலில்தான் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் விதமாக, சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை’ பொருளாதார வழித்தட திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஓர் அம்சமாக இலங்கையின் அம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்பதைவிட திட்டமிட்டு கைப்பற்றிவிட்டது சீனா என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த அம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவின் கைகளுக்குச் சென்றதன் மூலம் இந்தியக் கடல் பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

 சீனா வசமான அம்பாந்தோட்டை துறைமுகம்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், அவரது சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை நகரில் மிகப் பெரிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக இலங்கை அரசு சீனாவிடம் பெருந்தொகையைக் கடனாக வாங்கி, கடந்த 2008-ம் ஆண்டு அந்தத் துறைமுகத்தை அமைக்கும் பணிகளைத் தொடங்கியது. பிறகு துறைமுகத்தின் கொள்திறன் மேலும் அதிகரிக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், எதிர்பார்த்தபடி வர்த்தக நடவடிக்கைகள் எதுவும் நடக்காததால், இலங்கை துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டு, சீனாவுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் சுமை அதிகரித்தது. துறைமுகம் அமைத்ததில் சீனாவுக்கு 800 கோடி டாலர் கடன் பாக்கி இருப்பதாக அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயகே கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.

ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.

இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்காக இலங்கை அரசு வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு சீனா நெருக்கடி கொடுத்தது. இலங்கையால் இந்தக் கடனை அவ்வளவு சுலபத்தில் திருப்பித் தர முடியாது என்று நன்கு தெரிந்தேதான் இலங்கைக்கு அவ்வளவு பெரிய தொகையை இலங்கைக்கு சீனா கடனாகக் கொடுத்தது. எதிர்பார்த்தபடியே அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை விழிப்பிதுங்கியது.

இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனா சென்றபோது, கடன் தொகைக்குப் பதிலாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவிகித பங்குகளைத் திருப்பித் தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், துறைமுகத்தை சீன நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகை விட இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.

இதன் மூலம், துறைமுகத்தின் உரிமை இலங்கை துறைமுகப் பொறுப்புக் கழகத்திடம் இருந்தாலும், அதன் மீதான முழு கட்டுப்பாடும் சீன நிறுவனங்களிடம் வரும் நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இதனையடுத்து சீன நிறுவனத்துக்கு அளித்த 80 சதவிகித பங்குகளை 70 சதவிகிதமாகக் குறைத்துக் கொண்டது இலங்கை அரசு. இதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டதையடுத்து கடந்த 2017 டிசம்பர் 9-ம் தேதியன்று, சீனாவின் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகச் சேவை நிறுவனங்களிடம் அந்தத் துறைமுகத்தை இலங்கைத் துறைமுகப் பொறுப்புக் கழகம் முறைப்படி ஒப்படைத்தது. இதையடுத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வர்த்தக மண்டலங்கள் அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்தன.

ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.

இந்த நடவடிக்கை மூலம், துறைமுகத்துக்காக வாங்கிய கடனை சீனாவுக்குத் திருப்பியளிக்கத் தொடங்கியுள்ளதாகவும், அந்தத் துறைமுகத்தால் பொருளாதார மேம்பாடும், சுற்றுலா வளர்ச்சியும் ஏற்படும் என்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மக்களின்  எதிர்ப்பு...

ஆனால், மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, அம்பாந்தோட்டை துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக அம்பாந்தோட்டையையொட்டியுள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடம் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும், வெளியேற்றப்படுபவர்களுக்கு மாற்று இடம் தரப்படும் என்றும் தகவல் வெளியானதால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த ஆவேசமடைந்தனர். 


போராட்டம்

இத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலைக்கிடையே, இம்மாதம் 7-ம் தேதியன்று அம்பாந்தோட்டை தொழில் மண்டல அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இலங்கைப் பிரதமர் ரணில் உரையாற்றுவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு அருகே மோதல் வெடித்தது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்த பிக்குகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து புத்த பிக்குகளையும் கிராம மக்களையும் அரசு ஆதரவாளர்கள் தாக்கினார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கினார்கள். இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்களை விரட்ட முயன்றனர். இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். போராட்டத்தின்போது, அம்பாந்தோட்டைப் பிரதேசத்தை சீனக் காலனியாக மாற்றுவதற்காக தங்களை வெளியேற்ற அரசு முயல்வதாக கிராம மக்கள்  குற்றம் சாட்டினர்.

சீனா

இந்த மோதலுக்கு இடையே, திட்டமிட்டபடி இந்த முதலீட்டு திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அரசு நிலங்கள் மட்டுமே இந்தத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படுமென்றும், இந்த அபிவிருத்தி திட்டத்துக்காக தென் மாகாணத்தில் 1235 ஏக்கர் நிலம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்களின் வீடுகள் மற்றும் புத்த விஹாரைகள் உடைக்கப்பட மாட்டாதென்றும் கூறினார். ஆனாலும் பிரதமரின் வாக்குறுதி எந்த அளவுக்கு உண்மை என்பது வரும் நாள்களில் நிலம் கையகப்படுத்தப்படும்போது தெரியவரும். 

பட்டுப் பாதையா... படையெடுக்கும் பாதையா? 

அம்பாந்தோட்ட துறைமுகம் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில், சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள சாலைகளையும் துறைமுகங்களையும் இணைக்கும் வகையில், புதிய பட்டுப் பாதை என்று அழைக்கப்படும் புதிய வழிகளை உருவாக்கும் முயற்சியில் சீனா தற்போது ஈடுபட்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலை நோக்கியபடி அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் புதிய பட்டுப் பாதை திட்டத்துக்கு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அதைவிட சீனா அந்தத் துறைமுகத்தைத் தனது கடற்படைத்தளமாகப் பயன்படுத்தக்கூடும் என்று இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டபோதிலும், அப்படியெல்லாம் அமையவிட மாட்டோம் என்று இலங்கை அரசு மறுக்கிறது. ஆனால், இந்திய எல்லைப் பகுதிகள், டோக்லாம் போன்ற பகுதிகளில் சீனா மேற்கொண்ட அத்துமீறல், திபெத், ஹாங்காங், தென்சீனக் கடல் போன்ற இடங்களில் சீனா நடந்துகொண்ட விதம் போன்றவற்றை அறிந்த யாரும், எதிர்காலத்தில் சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனது கடற்படைத்தளத்தை அமைக்காது என உறுதியாகச் சொல்ல மாட்டார்கள். 

சீனா

ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்ட எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே மோதல்போக்கு வெடித்த சூழ்நிலையில், தனது இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொழும்பு துறைமுகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது சீனா. இது, அப்போது இந்தியாவுக்கு சீனா விடுத்த மறைமுக மிரட்டலாகவே கருதப்பட்டது. 

அதே சமயம் அந்தத் துறைமுகம் வர்த்தகப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். சீனா கடற்படைத் தளம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். ஆனால், " இலங்கை அவ்வாறு அனுமதிக்க மாட்டோம் என மறுத்தாலும், சீனாவின் முதலீடும், அதன் மூலமாகக் கிடைக்கும் வளர்ச்சியும் இலங்கைக்குத் தேவையாக உள்ளது. இலங்கை இனி தன்னை மட்டுமே நம்பி வளர்ச்சியை எட்டிப் பிடிக்க முடியாது. அதற்குப் பொருளாதார சீர்திருத்தமும், அந்நிய முதலீட்டைத் தாராளமாக திறந்துவிடுவதற்கான கொள்கை மாற்றமும், அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும் இலங்கைக்குத் தேவையாக உள்ளது. தற்போதைய சீன முதலீடு மூலம் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் ஷென்சென் பொருளாதார வலயத்தைப் போன்று நல்ல வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கான விலையைக் கொடுக்கவும் அது தயாராகவே இருக்க வேண்டும். உலக வல்லரசாகப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கும் சீனா, அங்கு கடற்படை தளம் அமைத்தால் அதனை எதிர்த்து இலங்கையால் எதுவும் செய்ய முடியாது. 

கடனில் சிக்கவைக்கும் ராஜதந்திரம்

அம்பாந்தோட்டை துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலம் அமைக்கும் திட்டத்துக்கான செலவு இலங்கையைச் சேர்ந்ததுதான் என்றாலும் அத்திட்டத்துக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் சீன நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்படும். இதன்மூலம் இத்திட்டத்தின் பெரும்பாலான தொகை சீனாவுக்கே திரும்ப வந்துவிடும். மேலும் சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் மட்டுமல்ல, அதனைச் சுற்றியுள்ள சுமார் 2000 ஏக்கர் நிலமும் சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை சீனா நிச்சயம் அதனை தன் ராணுவத் தளமாக மாற்றிக்கொள்ளும். இதன்மூலம் இலங்கையின் இறையாண்மை மிகப்பெரிய கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அதே சமயம் சீனாவின் இந்தக் கடன் கொடுத்து கவிழ்க்கும் திட்டத்தை 'கடனில் சிக்கவைக்கும் ராஜதந்திரம்' ( Debt Trap Diplomacy ) என்றும் சர்வதேசக் கொள்கை வகுப்பாளர்கள் கூறுவார்கள் " என்கிறார் சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கடல் பாதுகாப்பு நிபுணரும் பேராசிரியருமான கால்லின் ஹோ. 

debt_policy_13407.jpg

" இதுநாள் வரை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள்தாம் பல, ஏழை எளிய நாடுகளிடம் இந்தக் கடனில் சிக்க வைக்கும் கொள்கையைப் பயன்படுத்தி அந்த நாடுகளின் வளங்களைச் சூறையாடி வந்தன. தற்போது சீனா அந்தப் பாதையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இப்போது வரை இந்தியாவை தனது நட்பு நாடாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இலங்கைதான் சீனா உடனான உறவை எந்த அளவுக்கு வளர்த்துக்கொள்வது, தனது பிரதேசத்தில் அதன் இருப்பை எவ்வளவு அனுமதிப்பது என்பதை தனது நாட்டு மக்களின் எதிர்ப்பையும் கவனத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். அதே சமயம், இலங்கையில் இனி சீனாவின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது என்பதையும் இந்தியா உணர்ந்துள்ளது" என்கிறார் சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளர் ராஜீவ் ரஞ்சன். 

ஆக மொத்தத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கால்பதித்ததன் மூலம் சீனா, இந்தியாவின் புழக்கடையில் வந்து குத்தவைத்து அமர்ந்து கொண்டுவிட்டது. இதனால், நிலப்பகுதி வழியாக இந்தியாவை இதுவரை சீண்டிக்கொண்டிருந்த சீனா, இனிமேல் கடல் மார்க்கமாகவும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். எனவே, சீனாவின் சீண்டல்களை ராணுவ ரீதியாகவும் ராஜ்ஜிய ரீதியாகவும் எதிர்கொள்ள இந்தியா தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியதான்! 

ஜின்பிங் வருவார்...

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அது என்ன பட்டுப் பாதை பொருளாதார வழித்தட திட்டம்? 

உலகின் எந்த மூலைக்குப் போனாலும், எந்த வணிக வளாகத்துக்குப் போனாலும், அது சீனாவில் தயாரான பொருள்களால் நிரம்பி வழியும். ஆனாலும், சீனாவுக்கு இது போதவில்லை. சுமார் 55 பில்லியன் டாலர்கள் மதிப்பில், பாகிஸ்தானுடன் இணைந்து சீனா -பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC - China-Pakistan economic corridor) என்ற திட்டத்தை மேற்கொண்டுவருகிறது சீனா. இதைத் தொடர்ந்து, ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் சீனா உருவாக்கியிருப்பது, One Belt-One Road (OBOR) எனப்படும் ' ஒரு சூழல் - ஒரு பாதை' என்ற திட்டம். பண்டைக்காலத்தில் ・பட்டுப்பாதை・என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளையும் ஆசியாவையும் இணைக்கும் வணிகப்பாதை ஒன்று இருந்தது. அதை மீண்டும் உருவாக்குவதுதான், புதிய பட்டுப் பாதை・(New Silk road) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தத் திட்டம்.

silk_road_map_13565.jpg

இது தொடர்பான மாநாட்டை, பெய்ஜிங்கில் கடந்த ஆண்டு மே 14, 15 தேதிகளில் சீனா நடத்தியது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதுதவிர அமெரிக்கா உள்பட 130-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் பாதை செல்வது பிரச்னைக்குரிய வழியில்! பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள நம் காஷ்மீரில் உள்ள கில்கிட் - பல்டிஸ்தான் வழியாக இந்தப் பாதை செல்கிறது. நமக்குச் சொந்தமான ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்க, அந்த நாட்டோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அங்கு சீனா சாலை அமைக்கிறது. இதில் எப்படி இந்தியா பங்கேற்க முடியும்? 

ஆனால், எப்படியாவது இந்தியாவைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. ஆனாலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்தத் திட்டத்தால் உலகளாவிய அளவில் சீனாவின் பொருளாதார, வணிக ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதால் ஏற்கெனவே அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பும் புறக்கணிப்பும், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதை சீனா, பாகிஸ்தான் தலைவர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையிலேயே வெளிப்படுத்தினர். மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய சீன அதிபர் ஷி ஜின் பிங், “இது இந்த நூற்றாண்டின் முக்கியமான திட்டம். இது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பயனளிக்கும்’’ என்றார். ஆனால் சீனாவின் இந்தத் திட்டம் அதன் ஆதிக்கத்துக்கு வழிவகுப்பதாகவே உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

https://www.vikatan.com/news/world/113286-sri-lanka-struggling-with-debt-hands-a-hambantota-port-to-china.html

  • தொடங்கியவர்

சீனா Vs பாகிஸ்தான்: நட்பா... நயவஞ்சகமா? ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 9

 
 

thani_oruvan_9_14046.jpg

 

 

ன்னும் 30 ஆண்டுகளுக்குள் சீனாவை உலக  வல்லரசாக்கப் போவதாக அந்த நாட்டு அதிபர் ஜின்பிங் எந்த நேரத்தில் அறிவித்தாரோ, சூழ்நிலையும் நிகழ்வுகளும் அவருக்குச் சாதகமாகவே நடந்துகொண்டிருக்கின்றன.

இதோ அமெரிக்காவுடனான ராணுவ உறவை முறித்துக்கொண்டதோடு மட்டுமல்லாது,  இனிமேல் இருதரப்பு  வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீனாவின் யுவானை பாகிஸ்தான் பொதுத் துறை நிறுவனங்களும், தனியார்  நிறுவனங்களும் தாராளமாக பயன்படுத்தலாம் என பாகிஸ்தான்  ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

கடுகடுத்த ட்ரம்ப்… உறவை முறித்த பாகிஸ்தான்

எல்லாம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த ஜனவரி 1-ம் தேதி போட்ட ஒரு ட்விட்டர் ஸ்டேட்டஸ்தான் இதற்குக் காரணம். 

“ ‘தீவிரவாத ஒழிப்பு' என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளைப் பெற்றுப் பயனடைந்து வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக 33 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு நிதியாக அளித்துள்ளோம். ஆனால், அவர்கள் திருப்பிக் கொடுக்காது, பொய்யும் துரோகமும் செய்துவருகின்றனர்.

trump_14310.jpg

அமெரிக்கத் தலைவர்களை பாகிஸ்தான் அரசு முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு இருப்பிடமளித்து, அவர்களை வளர்க்கும் செயலை பாகிஸ்தான் செய்துவருகிறது. இனியும் இதை அனுமதிக்க மாட்டோம்" என்று ட்ரம்ப் அந்த ட்வீட்டில் கொந்தளித்த நிலையில், அடுத்த அதிரடியாக பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிதி விடுவிக்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்தார்.

முட்டுக் கொடுத்த சீனா

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தினாலும், அந்த நாடு வழக்கம்போல தனது 'கெத்தை' விட்டுவிடாமல், மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டதோடு, அமெரிக்காவுடனான ராணுவ மற்றும் உளவுத்துறை  ஒத்துழைப்பை தற்காலிகமாக முறிப்பதாகவும் தெரிவித்தது.

நீண்ட காலமாக சீனா இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ட்ரம்ப்பின் ட்வீட்டுக்கு உடனடியாக ரியாக்‌ஷன் காட்டிய சீனா, தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் பல தியாகங்களைச் செய்துள்ளதாகவும், தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மிகப்பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் முட்டுக்கொடுத்து உலக அரங்கில் பாகிஸ்தானைத் தாங்கிப் பிடித்தது.

“இமயமலையைவிட உயர்ந்தது, கடலைவிட ஆழமானது, இரும்பைவிட வலிமையானது, தேனைவிட இனிப்பானது” -  இப்படித்தான் சீனாவுடனான தங்கள் நாட்டு உறவை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் குறிப்பிட்டு வந்தார்கள்; இப்போதும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

Nawas_-_jinping_14246.jpg

நட்பா… நயவஞ்சகமா?

இத்தகைய சூழலில் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள கசப்பு உணர்வு, பாகிஸ்தானைத் தானாகவே அமெரிக்காவுக்கு வேண்டாத சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கி இன்னும் நெருங்க வைத்துள்ளது. ஏற்கெனவே சீனா - பாகிஸ்தான் இடையே நெருக்கமான உறவு இருந்து வரும் நிலையில், இனி இந்த உறவு மேலும் வலுப்பெறும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம் பாகிஸ்தானின் இந்த அமெரிக்க வெறுப்பு காரணமாக மேலும் மேலும் பயனடையப்போவது சீனாதான் என்றும், ஏற்கெனவே பட்டுப் பாதை பொருளாதார வழித் தட திட்டத்தின் ஒரு அம்சமாக சுமார் 55 மில்லிய டாலர் மதிப்பில் சீன - பாகிஸ்தான் பொருளாதார வழித் தட திட்டத்தைச் செயல்படுத்துவதாகக் கூறி பாகிஸ்தானில் கால் பதித்துள்ள சீனாவால், தங்கள் நாடு சீனாவின் காலனி நாடாகிவிடும் என்று பாகிஸ்தானில் ஆங்காங்கே குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

‘‘இந்தத் திட்டம், பாகிஸ்தானை பெரும் சமூக - பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிடும். சீனாவின் காலனி நாடாக பாகிஸ்தானை ஆக்கிவிடும். சீனாவுக்குத்தான் இந்தத் திட்டத்தின் முழுப் பலனும் கிடைக்கும்’’ என்று பாகிஸ்தான் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக, இத்திட்டத்தின் முழு வரைவில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ‘‘அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு, பாகிஸ்தானில்  எத்தகைய நடவடிக்கைகளுக்கு சீனா முன்னுரிமை அளிக்கப்போகிறது என்ற விவரங்கள் திட்ட வரைவில் பக்காவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கும்போது சீனாவின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று அவர்கள்  கூறுகின்றனர்.

‘பயிர்கள் சாகுபடிக்கான வெவ்வேறு வகையான விதைகள் உற்பத்தி முதல் நீர்ப்பாசன தொழில்நுட்பம் வரையிலான வேளாண் பணிகளை ‘செயல்படுத்திக் காட்டும் திட்டம்’ என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர்  விவசாய நிலங்கள், சீன நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படும். ‘சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு’ என்ற பெயரில் பெஷாவர் தொடங்கி கராச்சி வரை சாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட்கள் என பல இடங்களில் 24 மணி நேர வீடியோ கேமரா பதிவுகளுடன் கூடிய கண்காணிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். சீன கலாசாரத்தைப் பாகிஸ்தானில் பரவலாக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளை சீன தொலைக்காட்சிகளுடன் இணைந்து பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப ஏதுவாக, நாடு முழுமைக்கும் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் வசதி பாகிஸ்தானில் ஏற்படுத்தப்படும் என்பது உட்பட பல திட்டங்கள் அதில் இடம் பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட இந்தத் திட்டம் முழுக்கவே, ‘பாகிஸ்தானை சீனா எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும்’  என்பதாகவே இருக்கிறது.

cpec_cave_14161.jpg

பாகிஸ்தானுக்குப் பயன் இல்லையா?

சரி, இந்தத் திட்டத்தினால் பாகிஸ்தானுக்கு சிறிதும் பலன் இல்லையா என்று கேட்டால்,  இந்தத் திட்டம் மூலம் வரும் சீன முதலீடுகளால்,  பாகிஸ்தானின் பொருளாதாரம் புத்துயிர் பெறும். அதே சமயம், சீனாவிலிருந்து கொண்டுவரப்படும் சரக்குகளை எந்த  அளவுக்கு தனது தொழில் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்கிறது என்பதைப் பொறுத்தே அதன்  பொருளாதார வளர்ச்சி அமையும் என்று கூறுகிறார்கள் அந்த நாட்டு பொருளாதார வல்லுநர்கள்.

இதனிடையே, ‘‘ஆரம்பத்தில், பாகிஸ்தானுக்குள் செய்யப்படும் அபரிமிதமான அந்நிய முதலீடுகளால், கிடைக்கிற  பொருளாதார முன்னேற்றம் நல்ல பலன்களை அளிக்கும். ஆனால், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர்,  அதில் கிடைக்கும் லாபத்தை அந்நிய முதலீட்டாளர்கள் எடுத்துச் சென்றுவிடுவர். அத்துடன் இத்திட்டத்துக்காக வாங்கிய  கடனையும் திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது, அது பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்’’ என  சர்வதேச நிதியம் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சீனர்கள் வருவதற்கு விசா போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை; ஆனால், பாகிஸ்தானியர்கள் இப்படி சீனாவுக்குள் நுழைய முடியாது. இந்தமாதிரி எல்லா வகையிலும் சீனாவுக்கு சாதகமாகவும், பாகிஸ்தானுக்கு பாதகமாகவும் இருக்கிறது இந்தத் திட்டம்.

பாகிஸ்தானில் சீன ராணுவத் தளம்

இத்தகைய சூழ்நிலையில்தான், பாகிஸ்தானில் இந்தப் பொருளாதார வழித்தட திட்டம் தொடங்கும் பாதை அமைந்துள்ள குவாடர் துறைமுகம் அருகே, பாகிஸ்தான் – ஈரான் எல்லையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ள ஜிவானி என்ற இடத்தில் சீனா எதிர்காலத்தில் தனது ராணுவத் தளத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த இடம் CPEC பொருளாதார வழித்தட திட்டத்தின் பாகிஸ்தானின் முகப்பு இடமான குவாடர் துறைமுகத்திலிருந்து 90 கி.மீ. தொலைவில்தான் அமைந்துள்ளது.

இன்னும் ஐந்தாண்டுகளில் நிறைவேற்றி முடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிற இந்த CPEC திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஆண்டுக்கு சுமார் 13 மில்லியன் டன் சரக்குகளை இந்த குவாடர் துறைமுகம் கையாளும் என்றும், அதுவே 2030 வாக்கில் சுமார் 400 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் அளவுக்குக் கையாளும் என்றும், இந்தத் துறைமுகத்திலிருந்து மத்திய ஆசியா மற்றும் மேற்கு சீனாவுக்கு சரக்குகள் எடுத்துச் செல்வது எளிதாக அமைந்து விடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

gwadar_port_14054.jpg

எனவே, இந்தத் துறைமுகம் சீனாவைப் பொறுத்தவரை மிகுந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்பதால்தான், அதன் அருகே உள்ள ஜிவானியில் தனது ராணுவ தளத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.

சரக்குகளை எடுத்துச் செல்லும்  சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துக்கு இந்தியா உள்ளிட்ட எந்த ஒரு அண்டை நாடுகளினாலும் அச்சுறுத்தல் வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த பாதை நெடுக பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து சீன ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இதன் ஒரு அம்சமாகவே ஜிவானியில் சீன – பாகிஸ்தான் கூட்டுக் கடற்படை மற்றும் விமானப்படைத் தளங்களை அமைத்து ஒன்றாக பயிற்சியில் ஈடுபடவும் சீன ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2017 நவம்பர் மாதம் பாகிஸ்தான் படையினருக்கு சீன ராணுவம் சிறப்பு பயிற்சி ஒன்றை அளித்ததாக சேனல் 7 என்ற பாகிஸ்தானின் உருது சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்   

ஏற்கெனவே ‘பட்டுப் பாதை’ திட்டத்தின் ஒரு அம்சமாக இலங்கையின் அம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனா வளைத்துப் போட்டது  எப்படி என்பதையும், அந்த துறைமுகம் சீனாவுக்கு 99 வருட  குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டதன் மூலம் இந்திய பாதுகாப்புக்கு அது எப்படி அச்சுறுத்தலாக மாறி உள்ளது என்பதையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். தற்போது குவாடர் துறைமுகம் அருகே சீனா ராணுவத் தளம் அமைக்கத் திட்டமிடுவதும், CPEC திட்டத்தை இந்தியா - பாகிஸ்தான்  இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் உள்ள கில்கிட் - பல்டிஸ்தான் வழியாக இந்தப் பாதையைக் கொண்டு செல்வதும்  நிச்சயம் இந்தியாவுக்குக் கூடுதல் அச்சுறுத்தலாகவே அமையும்.  

அதே சமயம் பாகிஸ்தான் – அமெரிக்கா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலும், சீனா உலக அரங்கில் ஒரு சர்வதேச சக்தியாக மாறுவதை அமெரிக்கா  விரும்பவில்லை என்பதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்பதால், சீனாவும் பாகிஸ்தானும் சற்று எச்சரிக்கையுடன்தான் இந்தியாவிடம் நடந்துகொள்ளும் என்பதுதான் இதில் கிடைத்துள்ள ஒரே ஆறுதல்!

=========================================================================

 

CPEC  திட்டம்:  முக்கிய அம்சங்கள்

எனப்படும் ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் சீனா உருவாக்கி இருப்பது, One Belt-One Road (OBOR) எனப்படும் ‘ஒரு சூழல் - ஒரு பாதை’ என்ற திட்டம். பண்டைக்காலத்தில் ‘பட்டுப்பாதை’ என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளையும் ஆசியாவையும் இணைக்கும் வணிகப்பாதை ஒன்று இருந்தது. அதை மீண்டும் உருவாக்குவதுதான், ‘புதிய பட்டுப் பாதை’ (New Silk road) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தின் ஒரு அம்சமாகவே பாகிஸ்தானுடன் இணைந்து CPEC (China Pakistan Economic Corridor) எனப்படும்  சீன - பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது.

* உட்கட்டமைப்பு மற்றும் மின் திட்டங்கள் என சுமார் 55 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நிறைவடைந்தால் அது மேற்கு சீனாவையும் தெற்கு பாகிஸ்தானையும் இணைக்கும் சுமார் 3,000 கி.மீ. தூர சாலைகளையும், ரயில்வே பாதைகளையும், பைப் லைன்களையும் கொண்டிருக்கும்.

cpec_road_14537.jpg

* இந்தப் பொருளாதார வழித்தடம், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பிரிவினை முழக்கங்களை எழுப்புகின்ற பலுச்சிஸ்தான் மாகாணத்தின் வழியாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்னைக்குரிய இடமாக உள்ள கில்கிட்- பல்டிஸ்தான் வழியாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகவும் அமைக்கப்படுகிறது.

* இந்தத் திட்டத்தினால் தங்கள் பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதாகவும், இந்தத் திட்டத்தின்  பணிகளுக்கு சீன பணியாளர்களே பெருமளவில் அமர்த்தப்படுவதால் தங்களது வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாகவும், தங்களது நிலங்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் வலுக்கட்டாயமாக CPEC  திட்டத்துக்காக கையகப்படுத்தப்படுவதாகவும் கில்கிட் - பல்டிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பலுச்சிஸ்தான் மாகாண மக்கள் சீனா மற்றும் பாகிஸ்தான் அரசுகள்மீது கோபத்துடன் உள்ளனர்.

* CPEC  திட்டப் பணிகளின் வளர்ச்சியை இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து சாட்டிலைட் உதவியுடன் சீனாவும் பாகிஸ்தானும் கண்காணிக்கத் தொடங்கும்.

========================================================================================

 

ஜின்பிங் வருவார்...

https://www.vikatan.com/news/world/113873-after-cpec-chinas-great-game-move-to-build-military-base-in-pakistan.html

  • தொடங்கியவர்

வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10

 
 

thanioruvan_10_16476.jpg

 

 

ந்தத் தொடரின் கடைசி அத்தியாயத்தில் நுழைந்திருக்கிறோம். கடந்த அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாட்டில் ஜின்பிங், சீன அதிபராக மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையின்போது, இன்னும் 30 ஆண்டுகளில் சீனாவை உலகின் வல்லரசாக்கிவிட வேண்டும் என்ற அவரது கனவை வெளியிட்டு, அதற்கான செயல்திட்டங்களை அறிவித்ததையும், தமது கனவை நனவாக்கும் நோக்கத்துடன் ஜின்பிங் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், அவரது கனவுக்கேற்ப சர்வதேச அரங்கிலும் (அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகளின் மத்தியில் செல்வாக்கு இழந்து நிற்பதோடு, சொந்த நாட்டிலேயே பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டு தவித்து வருவது உள்பட) பல்வேறு நிகழ்வுகள் ஜின்பிங்குக்குச் சாதகமாக நடந்து வருவதையும் விரிவாகப் பார்த்தோம். 

2017-ன் ரன்னர் அப்

அதிலும், கடந்த 2017-ம் ஆண்டைப் பொறுத்தமட்டில் ஜின்பிங்குக்கு மிகவும் அதிர்ஷ்டமான, அவர் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக அமைந்தது என்றே கூறலாம். உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலும், குறிப்பாக வடகொரியா போன்ற சர்வதேச பிரச்னைகளின் போக்கைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட தனி ஒருவனாக வளர்ந்து நிற்கிறார் ஜின்பிங். அந்த அளவுக்கு சர்வதேச அளவில் ஜின்பிங்கின் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்தியது. இதனால்தானோ என்னவோ பிரபல அமெரிக்க பத்திரிகையான 'டைம்' 2017-ன் ரன்னர் அப் ( Runner-up ) ஆக ஜின்பிங்கை அறிவித்துள்ளது.  

இத்தனை செல்வாக்கு மற்றும் சாதகமான அம்சங்கள் பல காணப்பட்டபோதிலும், ஜின்பிங்கின் கனவு நிறைவேற அவருக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. போதாதற்கு இப்போதைக்கு ட்ரம்ப்பால் அமெரிக்காவின் செல்வாக்கு உலக அரங்கில் சற்று சரிந்திருந்தாலும், 'உலக வல்லரசு' என்ற கெத்தை அமெரிக்கர்கள் அவ்வளவு சீக்கிரம் இழந்துவிட மாட்டார்கள் என்றும், ட்ரம்ப் மட்டுமே அமெரிக்கா அல்ல; விரைவிலேயே நிலைமை மாறும் என்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் சொல்லி வருகின்றன.

jinpin_clabs_16023.jpg

காத்திருக்கும் சவால்கள் 

இந்த நிலையில், சீனாவை உலக வல்லரசாக உருவாக்க முயலும் ஜின்பிங்குக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் இருக்கும் முக்கியமான சவால்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...

2010-ம் ஆண்டிலிருந்து சீரான வளர்ச்சியிலிருந்த சீனாவின் பொருளாதாரம், கடந்த ஆண்டில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. இந்த ஆண்டும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிவைச் சந்திக்கலாம் என்றும், அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்தால் அது சீனாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். " அநேகமாக 2018-ல் ஜின்பிங்குக்கு மிகப்பெரிய சவால் எது என்றால், பொருளாதாரப் பிரச்னைகளுக்கிடையே மக்களிடையே இருக்கும் தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதுதான். நடுத்தர வர்க்க மக்களிடமிருந்து எந்த மாதிரியான எதிர்ப்புக் கிளம்பி வரும் என்பதை பார்க்க நானும் ஆவலாகவே இருக்கிறேன்" என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சீன மையத்தின் தலைவர் ஷூஸன் ஷிர்க். இது தவிர காற்று மாசு, கல்வித் தரம் மற்றும் இணையதள தணிக்கை உள்ளிட்ட விவகாரங்களும் சீன நடுத்தர வர்க்க மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும்.

விரட்டியடிக்கப்படும் இடம்பெயர் தொழிலாளர்கள்...

நடுத்தர வர்க்க மக்களின் கதை இதுவென்றால், நகரங்களுக்கு இடம்பெயர்ந்த கிராமப்புற மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. கடந்த அக்டோபரில் ஜின்பிங் சீனாவின் வல்லமைமிக்க தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டதிலிருந்தே பல்வேறு சமூகப் பிரச்னைகள் சீனாவில் வரிசை கட்டின. குறிப்பாக அரசின் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, மீண்டும் கிராமங்களுக்கே துரத்தியடிக்கப்பட்டனர். நகரின் குறுகலான கட்டடங்களில் நெரிசலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஏழை கிராமப்புறத் தொழிலாளர்கள், 'நகரமயமாக்கல்' என்ற பெயரில் குளிரும் பனியும் வாட்டியெடுத்த அந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவர்களின் சொந்த கிராமங்களுக்கே விரட்டியடிக்கப்பட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த நெரிசல் மிகுந்த அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு தங்கியிருந்த 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். போதாதா அரசுக்குக் காரணம் சொல்ல? 'உயிர் பாதுகாப்பு நடவடிக்கை' என்ற பெயரில் இந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நகரங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அரசைப் பொறுத்தவரை அவர்கள் குறைந்த கூலிக்குக் கிடைத்த மற்றும் பயன்படுத்திவிட்டு தூர எறிந்துவிடக்கூடிய ஒரு பொருளாகவே பார்க்கப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கை ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு ஒரு களங்கமாகவே பார்க்கப்படுகிறது. 

migrant_workers_16024.jpg

தலைநகர் பெய்ஜிங்கில் இதுபோன்று கிராமப்புற தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டுகளிலும் இதுபோன்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். குறைந்த கூலிக்கு வேலையாள் தேவை என்றால் அவர்களை அனுமதிப்பதும், வேலை முடிந்ததும் அவர்களைத் துரத்தியடிப்பதும் ஆண்டாண்டு காலமாக நடப்பதுதான். 

அதே சமயம், சீனப் பொருளாதார வளர்ச்சியில் இவர்களது உழைப்பும் பங்கும் இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் இணைய வர்த்தகத் தொழில் சீனாவில் உச்சத்தில் இருந்த நிலையில், அந்தத் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளைக் கொண்டு செல்லுதல், வாகனம் ஓட்டுதல், பொருள்கள் டெலிவரி போன்ற சேவைப் பணிகளுக்கு இந்தப் புலம்பெயர்ந்த கிராமப்புறத் தொழிலாளர்கள்தான் குறைந்த கூலிக்குப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் சீனாவின் வல்லமைமிக்கத் தலைவராக ஜின்பிங் உருவெடுத்துள்ள நிலையில், அவரது ஆட்சியில் தங்களது வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால், தற்போதைய உலகின் எந்த ஒரு தலைவர் இதுபோன்று கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது அக்கறை கொள்கிறார்? இதில் ஜிங்பிங் மட்டும் விதிவிலக்கா என்ன? இதோ தூக்கியெறியப்படும் பேப்பர் டீ கப் போன்று இந்தத் தொழிலாளர்களும் விரட்டியடிக்கப்படுகின்றனர். 

அதிகரிக்கும் கிராம/நகர வருமான இடைவெளி

சீனாவைப் பொறுத்தமட்டில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையேயான வருமான வித்தியாசத்தின் இடைவெளியும், வாழ்க்கைத்தர சமமின்மையும் மிக நீண்டதாக உள்ளது. " சீன கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழை விவசாயி ஒருவரின் ஓராண்டு வருமானம் முழுவதையும் கொடுத்தால் கூட அவரால் ஒரு நவீன ஐபோனை வாங்க முடியாது. அதுவே சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் தனது நாய்க்கு உணவுக்காகச் செலவிடப்படும் தொகையில் 8 ஐபோன்களை வாங்கமுடியும். அந்த அளவுக்குப் பணக்காரர்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் இடையேயான வருமான இடைவெளி அகண்டு காணப்படுகிறது. இது நல்லதுக்கல்ல. இந்த வருமான இடைவெளியும் துரத்தியடிக்கப்படும் கிராமப்புற மக்களின் கோபமும் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக சீனாவை உலக வல்லரசாக்கும் ஜின்பிங்கின் கனவுக்கு எதிராக மாறிவிடும் அபாயம் உள்ளது" என எச்சரிக்கிறார் பிரபல சீன அரசியல் விமர்சகரான ஜியாஜியா லீ. 

வடகொரியாவால் தலைவலி

2017-ம் ஆண்டைப் பொறுத்தவரை சீனாவின் அயலுறவுக் கொள்கை என்பது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கொண்டதாகவே அமைந்தது. ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததாக ஆகட்டும், அதேபோன்று மியான்மர் மற்றும் பங்காளதேஷுக்கும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கூட மத்தியஸ்தம் செய்ய வந்ததாகட்டும் சீனாவின் அயலுறவுக் கொள்கை பிற நாடுகளுக்கு ஆத்திரமூட்டக் கூடியதாகவே அமைந்தது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு அடிநாதமாக இருந்தது பட்டுப் பாதை பொருளாதாரத் திட்டம் மற்றும் சீன- பாகிஸ்தான் பொருளாதர வழித் தடப் பாதையை அடிப்படையாகக் கொண்ட அதன் எதிர்காலப் பொருளாதர வளர்ச்சிக் கண்ணோட்டம்தான்.

Kim_jong_600_16242.jpg

அதே சமயம் இதுபோன்ற விஷயத்தில், அதாவது மத்தியஸ்தம் செய்வதில் அதற்கு உள்ள அனுபவமின்மை, எதிர்காலத்தில் சீனாவுக்கு உலக அரங்கில் எந்த அளவுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது தவிர்த்து அண்டை நாடான இந்தியாவுடன் அவ்வப்போது எல்லைத் தகராறில் ஈடுபடுவதும் சீனாவை ஒரு பொறுப்பான நாடாக உலக அரங்கில் காட்டத் தவறுகிறது. மேலும், பட்டுப்பாதை திட்டத்தைக் காரணம் காட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் சீன திட்டங்களுக்கு உள்ளூரில் கிளம்பும் எதிர்ப்பு போன்றவற்றையும் ஜின்பிங் எதிர்காலத்தில் சமாளித்தாக வேண்டும். 

இவையெல்லாவற்றையும்விட, ஜின்பிங்குக்கு இப்பொழுதும் இருக்கிற மிகப்பெரிய அயலுறவுக் கொள்கை தலைவலி என்னவென்றால் அது, அதன் புற வாசலில் இருக்கும் வடகொரியாதான். அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங், அவ்வபோது அமெரிக்காவைத் தாக்கப்போவதாக மிரட்டுவதும், அவ்வப்போது அணு ஏவுகணைச் சோதனை நடத்துவதும் அமெரிக்காவை கடுமையாக ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. எனவே, தொடர்ந்து எரிச்சலூட்டிக் கொண்டிருக்கும் கிம் ஜாங்கைத் தட்டி வைக்க போர் ஒன்றுதான் தீர்வு என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அவ்வப்போது மிரட்டுவதால், சீனாவை உலக வல்லரசாக்கும் முனைப்பில் இருக்கும் ஜின்பிங்குக்கு, அப்படி ஓர் போர் மூண்டுவிடாதபடிக்குத் தடுக்கும் பொறுப்பும், அண்டை நாடு என்ற அடிப்படையில் கடமையும் இருக்கிறது. இந்த நிலையில் ஜின்பிங் இதை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்று உலக நாடுகள் மிக உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. 

அச்சுறுத்தும் அமெரிக்கா

இவை தவிர அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் ஏற்கெனவே முட்டல் மோதல் நிலவுகிற நிலையில் ஃபுளோரிடா, ஹம்பர்க் மற்றும் பெய்ஜிங்கில் அடுத்தடுத்து ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும், கடந்த டிசம்பரில் "ஜின்பிங் ஒரு சீர்திருத்தவாதி" என்று ட்ரம்ப் புகழ்ந்ததும் தற்காலிகமாக அந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Drump_threaten_16284.jpg

அதே சமயம் 2018-ம் அப்படியே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் வடகொரியாவின் மிரட்டல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் அளவை அமெரிக்கா மேலும் குறைக்கலாம். மேலும் அறிவு சார்ந்த சொத்து விதிகளை மீறியதாக (intellectual property violations) சீனா மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா நடத்தி வரும் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது  சீனா மீது பெரும் பொருளாதார அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு வழிவகுத்துவிடும். அப்படி ஒன்று நிகழ்ந்தால், அது ஜின்பிங்கின் 'உலக வல்லரசு' கனவுக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும்.  

மாறுவாரா ஜின்பிங்?

" சீனா பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட 40-வது ஆண்டாக 2018 மலர்ந்திருக்கிறது. கடந்த அக்டோபரில் ஜின்பிங், சீனாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்களுக்கான உரிமை வரம்புகளை தளர்த்துவது உள்ளிட்ட பல்வேறு தாராளமயமாக்கல் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். ஜின்பிங்கின் முதல் ஐந்தாண்டு பதவி காலத்தில், அவர் சந்தை சீர்திருத்தவாதியா அல்லது பொருளாதார தேசியவாதியா என்ற விவாதம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சீனாவின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்திருக்கும் இந்தத் தருணத்தில் உலகின்  மிகப்பெரிய இரண்டாவது பொருளாதார நாடான சீனா, எந்த அளவுக்குத் தனது கதவுகளைத் திறக்கப்போகிறது என்பதைக் காட்ட வேண்டிய சூழலும், அதனால் சீனாவுக்கு எத்தகைய பலன் அல்லது பாதகம் என்பதைக் கணித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஜின்பிங்குக்கு ஏற்பட்டுள்ளது.  

xi_don_16536.jpg

இந்தப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் சீனாவை இன்னும் திறன்மிக்க நாடாக உருவாக்கப்போகிறதா அல்லது புதைகுழியில் தள்ளிவிடுமா என்பதை வருங்காலங்களில் பார்த்துவிடலாம்" என்கிறார் பிரபல சீனப் பொருளாதார ஆராய்ச்சியாளரான டிரே மெக்ஆர்வர். 

" கடந்த அக்டோபரில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டைத் தொடர்ந்து ஜின்பிங் என்ற ஒற்றை மனிதரின் அதிகாரத்தின் கீழ் ஆளப்படும் நிலைமைக்கு சீனா மாறியிருப்பதன் மூலம், பழைய தலைவர் மாவோ அத்தியாயத்துக்கு சீனா திரும்பி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றைய உலகத்தில் எந்த ஒரு நாடும் மாவோ காலத்து அரசியலோ ஆட்சி முறையோ சரிப்பட்டு வராது என்பதால், ஜின்பிங் தன்னையும் தனது ஆட்சி செய்யும் முறையையும் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்"  என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மையத்தின் உறுப்பினரும் அரசியல் ஆலோசகருமான டெர்வின் பெரைரா. 

சீனா வேறு ஜின்பிங் வேறு அல்ல. அப்படியிருக்கையில் 2017-ன் ரன்னர் அப் ( Runner-up ) ஆக ஜின்பிங்கை  டைம் பத்திரிகை புகழ்ந்துள்ள நிலையில், 2050-ல் சீனா உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என ஜின்பிங் விரும்பினால், முதலில் அவர் தன்னை ஓர் உலகத் தலைவருக்கான தகுதியுடையவராக மாற்றிக்கொள்வதோடு, சீனா மீதான 'ஆக்கிரமிப்பு நாடு' என்ற முத்திரையை அகற்றும் அளவுக்குப் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.

மாறுவாரா ஜின்பிங்...? 

இத்தொடர் இத்துடன் நிறைவுற்றது.  

https://www.vikatan.com/news/world/114450-chinese-dreamkey-challenges-await-for-xi-jinping.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.