Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய ஈழப் பாடல்கள் குறித்த ஒரு நோக்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய ஈழப் பாடல்கள் குறித்த ஒரு நோக்கு.

பிரபாகரன் ஒருமனிதனின் உயிரல்ல‌
தமிழ் ஈழத்தின் உயிரடா
பிரபாகரன் ஒரு மனிதனின் பெயரல்ல‌
ஒரு காலத்தின் பெயரடா
இது பிரபாகரன் காலம்
அவனால் பிறந்தது தமிழீழம்.

ஈழ விடுதலைப் பாடல்களில் தனக்கு என்று தனித்துவக்குரல் கொண்டு விளங்கும் பாசறைப்பாவாணர் தேனிசை செல்லப்பா பாடிய பாடலிது. புலிகளின் தலைவர் பற்றி அதிக பாடல்களை யார் பாடியிருக்கின்றார்? எனும் கேள்விக்கு தேனிசை செல்லப்பா என்பதே விடை எனச்சொல்லுமளவுக்கு அவரது பாடல்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. இப்பாடலுக்கு இளங்கோ செல்லப்பா இசை வழங்க உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் பாடலை எழுதியிருந்தார்.

ஈழ விடுதலைப் பாடல்களில் தேனிசை செல்லப்பா இந்தியாவில் இருந்து செல்வாக்கு செலுத்திய சமநேரத்தில் ஈழத்தில் இருந்து செல்வாக்கு செலுத்தியவர்களில் மறைந்த ஈழப்பாடகர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்கள் முதன்மையானவர். இது எஸ்.ஜீ.சாந்தன் அவர்கள் பாடிய பாடல்களில் ஒன்று.

ஆழக்கடலெங்கும் சோழமகாராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று
தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்
ஏறி நடக்கின்றான் இன்று
காலை விடிந்ததென்று பாடு _‍ சங்க‌
காலம் திரும்பியது ஆடு

இப்பாடலை வார்த்தவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள். கண்ணன் இசையில் எஸ்.ஜீ.சாந்தன் அவர்கள் பாடினார். இங்கு தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் சங்ககாலத்தைமீண்டும் தோற்றுவித்ததாக போற்றப்படுகின்றார். பாடலின் சரணத்தில் இப்படியும் ஒரு வரிகளுண்டு.

எட்டுத்திசை யாவும் தொட்டுப்பெருஞ்சோழன்
ஏறி கடல் வென்றதுண்டு
அவன் விட்ட இடமெங்கும்
வென்று வருகின்றான்
வேங்கைக் இன்று.

பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் எழுத, சிறீகுகன் இசையில், வானோசை ஒலிப்பேழைக்காக எஸ்.ஜீ.சாந்தன் அவர்கள் பாடிய 
பிரபாகரன் எங்கள் தலைமை
வையவரலாற்றிலே இவனாற்றல் புதுமை

எனும் பாடலும் பிரபாகரன் அவர்கள் பற்றிய பாடலில் பிரபலமான ஒன்றுதான்.

ஈழவிடுதலைப் போராட்ட பாடல்களில் சிறுவர் பாடல்களில் குட்டிக்கண்ணன் பெயர் சொல்லத்தக்கவர். பின்னாளில் இவர் மாவீரர் ஆனார். போர்க்கால தெருக்கூத்துக்களில் அதிகம் மக்களுக்கு அறிமுகமானவர். குட்டிக்கண்ணன் பாடிய பிரபாகரன் அவர்கள் பற்றிய‌ இப்பாடல் மக்கள் மத்தியில் அதிகப்பிரபலமானது.

எங்கள் அண்ணன் பிரபாகரன்
தமிழ் ஈழம்தந்த கருணாகரன்
எங்கும் புகழ் படைத்தானவன்
எங்கள் இன்னல்களை துடைத்தானவன்

தமிழீழ இசைக்குழுவின் இசையில் உருவான இப்பாடலை முல்லைச்செல்வன் எழுதியிருந்தார். அப்பாடலில் சரணம் ஒன்று இப்படி அமைகின்றது.

சத்தியத்தை மதித்தானவன்
தமிழ் தாயகத்தை துதித்தானவன்
முத்தமிழை வளர்த்தானவன் ‍_ வீர‌
முத்திரையை பதித்தானவன்.

புலிகளின் தலைவருக்கென்றே தனித்துவமான பாடல்கள் இருந்தபோதிலும் பிற பாடல்களிலும் அவரை இணைத்து அதிக பாடல்கள் வெளிவந்ததுண்டு. 1993இல் ஈருடக வழி முறைமையின் ஊடே பூநகரி பெருந்தளத்தினை 'தவளை' நடவடிக்கை மூலம் புலிகள் கைப்பற்றிய பின்னர் வெளிவந்த 'சங்கு முழங்கடா தமிழா, இந்தச் சாதனை பாடடா கவிஞா' பாடலில் பிரபாகரன் அவர்கள் இவ்விதம் விளிக்கப்படுகின்றார்.

சிங்களம் இங்கினி பொங்குமா -வந்தினி
செந்தமிழ் ஈழத்தில் தங்குமா -இனி
தங்குலமை இங்கு தோற்குமா -கரி
காலனின் சேனைகள் தோற்குமா -புது
விந்தைகள் ஆயிரம் சேர்ந்ததடா -புலி
வீரத்தின் வேரினில் பூத்ததடா -எங்கள்
பொங்கிடும் பூமியைப் பாடுவோம் -பிர
பாகரன் காலமென்றாடுவோம்.

'பிரபாகரன் காலம்' என அவர் பாடப்பட்டார். கண்ணன் இசைக்கு புதுவை இரத்தினதுரை எழுதிய பாடலிது. எஸ்.ஜீ.சாந்தன் உள்ளிட்டோர் பாடலைப் பாடினர்.

பிரபாகரன் அவர்கள் பற்றிய பாடல்களில் இப்பாடலும் அதிக செல்வாக்குப் பெற்றது. முனிவர்களும், தலைவர்களுமே கடவுளர்களாக தமிழினத்தில் கொள்ளப்பட்டனர் என்பதை பிரபாகரன் அவர்களும் ஏற்றுக்கொண்டமைக்கு இப்படல் சான்று. எனவே மெய்யான கடவுள் என பிரபாகரன் அவர்கள் யாரை ஏற்றுக்கொண்டார் என்பது வெளிப்படா ஒன்று. ஆயினும் முருகனை அவர் எவ்விதம் நோக்கினார் என்பதை இப்பாடல் மூலம் புரியலாம். புலிகளின் எப்பாடலும் தலைவர் பிரபாகரன் அவர்களின் பார்வையின் பின்னரே வெளிவரும். முருகன் கோயில்கள் தாராளமாக இருக்கும் ஈழத்தில் இப்பாடலை பிரபாகரன் அவர்கள் அனுமதித்ததன் மூலம் முருகன் என்பவர் தமிழினத்தின் மூத்தகுடி என்றும், போரிட்டு காத்தவர் என்பது புலனாகின்றது. 'ஒளிமுகம் தோறும் புலிமுகம்' இறுவெட்டில் அறிவுமதி பாடலினை எழுத, தமிழகத்தில் புகழ்பெற்ற நித்யசிறீ பாடலைப் பாடினார்.

எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்(2)
கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த
பகை முடித்து புகழ் படைத்த பகுறுளியாற்றின்
பண்மலை அடுக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்
முருகனுக்கே அவன் நிகரானவன்

இப்பாடலின் முதற்சரணம் இவ்விதம் அமைகின்றது.

வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்
வேல் எடுத்தே அவன் பகை முடித்தான்
தமிழ் பகை முடித்தான்
பழம் தமிழ் பகை முடித்தான்
துவக்கெடுத்தான் இவன் துவக்கெடுத்தான்
துவக்கெடுத்தே இவன் துவக்கி வைத்தான்
படை துவக்கி வைத்தான்
புலிப்படை துவக்கி வைத்தான்.

ஈழப்போராட்டகால பிரபாகரன் அவர்கள் பற்றிய பாடல்களில் 'ராஜகோபுரம் எங்கள் தலைவன்' பாடல் அதிகமாகப் பேசப்பட்டது. புலம்பெயர் தேசங்களிலும், தாயகத்திலும் நடனத்திற்காக இப்பாடலை அநேகர் உபயோகித்தனர். அன்ரனி எழுதிய பாடலை கோவை கமலா பாடியிருந்தார். இளங்கோ செல்லப்பா இசையூட்டி இருந்தார்.

ராஜகோபுரம் எங்கள் தலைவன்
பாரெங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
தடைநீக்கி வழிகாட்டும் தலைவன்
வந்த பகைவென்று முடிகொண்ட தலைவன்

ஈழவிடுதலைப் போராட்ட பாடல்களில் கோவை கமலா பாடிய அந்த இரண்டு பாடல்களை ஒத்த குரலில் இதுவரை யாரும் பாடியதில்லை. இப்படலின் சரணங்களில் ஒன்று இதோ.

குளிரான இளங்காலை என நிறைந்தவனே
நெருப்பாகி பகைவரின் குகை எரித்தவனே
ஓயாது உழைத்திடும் அலையாகும் கடலே
தமிழீழம் தனைநோக்கி விரைகின்ற படகே

இந்த தருணத்திலேயே கோவை கமலா பாடிய பிரபலமான இன்னொரு பாடலையும் காணலாம். காசி ஆனந்தன் வரிகளுக்கு இளங்கோ செல்லப்பா இசை கொடுக்க கோவை கமலா பாடுகின்றார்.

நேற்று ஒரு கரிகாலன்
எங்கள் மன்னன்
இன்று ஒரு கரிகாலன்
எங்கள் அண்ணன்.
இருவருக்கும் ஒரேகுடி தமிழ்க்குடி
இருவருக்கும் ஒரேகொடி புலிகொடி

இப்பாடலின் உச்சரிப்பு கோவை கமலா அவர்களுக்கே சொந்தமான ஒன்று. யார் கோவை கமலா. பாடலின் முதற்சரணமிது.

மன்னன் கரிகாலன் அன்னை
தமிழகம் காத்தான்
அன்ணன் கரிகாலன் 
தமிழ் ஈழம் காத்தான்
புலிகளின் தலைவரை ஏவுகணையாக ஒப்பிட்டு வெளிவந்த பாடலிது. 'ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்' பாடலின் சரணம் இது. பாடல்:காசி ஆனந்தன், பாடியவர்:தேனிசை செல்லப்பா, இசை:இளங்கோ செல்லப்பா.

மண்ணை மறவா என் தலைவன்
அவன் எங்கள்
மண்ணில் வேரூன்றி நின்ற பனை
அன்னை மண்பறிக்கும் மாற்றார் எதிரிலவன்
அனலை பொழிகின்ற ஏவுகணை.

சுவர்ணலதா பாடிய இப்பாடலும் அநேகமாக பேசப்பட்ட பாடல்களில் ஒன்று. சுவர்ணலதா அவர்கள் 'தாலாட்டு பாடமாட்டேன்' எனும் பாடலையும் பாடியவர். 'இது புலிகளின் காலம்' தொகுப்பில் தேனிசை செல்லப்பா இசையில், காசி ஆனந்தன் வரிகளை சுவர்ணலதா பாடியிருக்கின்றார். பல்லவி இதுதான்.

தமிழீழம் காக்கும் காவலரன்
தலைவன் எங்கள் பிரபாகரன்
காலம்நம் கையில் தந்த ஒளிவிளக்கு
தமிழ் மானமெதிலும் தலைவன் என்றுமுழக்கு

அப்பாடலின் சரணமொன்று இவ்விதம் இருக்கின்றது.

மகளிர் ஆடவர் பேதம் தொலைத்தான்
மங்கையரை களம் வாவென்றழைத்தான்
பகைவர் கண்டஞ்சும் படையொன்று படைத்தான்
பாரில் நிகரில்லா தலைவனாய் கிடைத்தான்

'செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு' பாடல் புகழ் ரி.எல்.மகாராஜன் அவர்கள் பல ஈழப்பாடல்கள் பாடியுள்ளார். பிரபாகரன் அவர்கள் பற்றி இவர் பாடிய பாடலிது.

பிரபாகரன் வழி நில்லு
பகை பிளக்கும் புலிவீரன்
வழிநின்று வெல்லு

மேல்வந்தது பல்லவியாம். இது சரணங்களில் ஒன்று.

பாய்கின்ற பொறிக்கனல் விழி கொண்டவன்
பைந்தமிழ் இனம்வாழ வழிகண்டவன்
தாய்மண்ணின் விடுதலை கொடிகொண்டவன்
தமிழ்மக்கள் நெஞ்சத்தில் குடிகொண்டவன்.

புலிகளின் மாவீரர்களுக்கான தினத்தில் ஒலிக்கும் துயிலும் இல்லப் பாடலில் தொகையறாவில் சபதம் ஏற்கையிலும் புலிகள் தலைவர் இவ்விதம் இடம்பெறுகின்றார். புதுவை இரத்தினதுரை வரிகளை, கண்ணன் இசையில் வர்ணராமேஸ்வரன் குழுவினர் பாடியுள்ளனர். இப்பபாடலே மாவீரர் நாளில் துயிலும் இல்லத்தில் ஒலிக்கும் உணர்வுப் பாடலாகும்.

மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை 
முடிசூடும் தமிழ் மீது உறுதி. 
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் 
வரலாறு மீதிலும் உறுதி. 
விழிமூடி, இங்கே துயில்கின்ற வேங்கை 
வீரர்கள் மீதிலும் உறுதி. 
இழிவாக வாழோம், தமிழீழப் போரில் 
இனிமேலும் ஓயோம் உறுதி.

இப்பாடலில் பிரபாகரன் எனும் பெயர் பாவிக்கப்படவில்லை. ஆயினும் இச்சந்ததிக்கு அவர்தான் என்பது தெளிவாகும். ஆவணங்கள் தொலைந்து ஆயிரம் ஆண்டுகள் செல்ல இப்பாடல் மட்டுமே யார்க்கேனும் கிட்டின் யார் அந்தத் தலைவன் என யாரேனும் தேடலாம். இவைதான் நடக்கும் என்றல்ல. இவையும் நடக்கும். ஏனெனில் போர்முடிந்து நூறாண்டுகள்கூட கழியவில்லை. எம்மிடம் போர்க்காலத்தின் அநேக பாடல் ஆவணங்கள் பிற குறிப்புகள் இல்லை. யாரேனும் இரகசியமாக வைத்திருப்பின் பலனேது. மேற்படி துயிலும் இல்லப் பாடலில் பிரபாகரன் அவர்கள் மீண்டும் சரணத்தில் இவ்விதம் சொல்லப்படுகின்றார்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

புலிகள் தமிழீழ தேசியக் கொடியென அறிவித்த கொடிக்கான கொடிவணக்கப் பாடலான 'ஏறுது பார் கொடி ஏறுதுபார்' பாடலிலும் 'பிர பாகரன் என்றிடும் காவிய நாயகன் போற்ரிடும் கொடியிது' எனும் வரிகள் உண்டு. இப்பாடலும் புதுவை இரத்தினதுரையால் எழுதப்பட்டது.

தமிழகப் பாடகர் மனோ மற்றும் வாணிஜெயராம் இணைந்து பாடிய 'தென்னங்கீற்றில் தென்றல்வந்து மோதும்' பாடலில் பிரபாகரன் இவ்விதம் சொல்லப்படுகின்றார். சரணத்தில் ஒன்றிது. வரிகள்:புதுவை இரத்தினதுரை.

தங்கமேனி நொந்து ஈழ‌
தாய் அழுகின்றாள்_ எம்
தலைவன் இந்த நிலையைப் பார்த்து
தானுருகின்றான்.
எந்தன்மேனி சாகும்_ இல்லை
எதிரி ஆவி போகும்
எதிரி ஆவி போகும்_தமிழ்
ஈழம் வந்து சேரும்.

பல்வேறு உணர்வுசார்ந்த பாடல்களிலும் பிரபாகரன் அவர்களுக்கான பங்கினை அநேக கவிஞர்கள் கொடுத்தனர். 'தமிழீழ மகளிர் இசைக்குழுவின் இசையில் வெளியான 'வெஞ்சமரின் வரிகள்' இறுவெட்டில் புதுவை இரத்தினதுரை எழுத, நிரோஜன் பாடிய 'காவலரன்மீது காவலிருக்கின்ற ஆசைமகளே..' பாடலில் தலைவர் பிரபாகரன் அவர்கள் இவ்விதம் காட்டப்படுகின்றார். பாடலின் சரணமிது.

முந்தி இரவென்ன பகலும் தனியாகப் 
போகத் துணை தேடும் மகளே
போகத் துணை தேடும் மகளே-இன்று
குண்டு மழைக்குள்ளே நின்று பகை தன்னை
வென்று வருகின்றாய் மகளே,
வென்று வருகின்றாய் மகளே!

தலைவன் தந்தானே வீரம்,
அதைத் தாங்கி மண் நிற்கும் நேரம்
கவலை எனக்கில்லை மகளே
உனைக் காணவரலாமா மகளே???

மகளிருக்கு வீரத்தினை பிரபாகரன் அளித்ததாக பாடல் சொல்லிப்போனது.

ஈழவிடுதலைப் பாடல்களில் பெண் பாடகிகளில் மணிமொழி குறிப்பிடத்தக்க பங்கினை வகித்தவர். விழித்தெழுவோம் ஒலிநாடாவில் (அக்காலம் இறுவெட்டு இல்லை) கண்ணன் இசையில் தமிழவள் எழுதிய இப்பாடலை மணிமொழி பாடியிருந்தார்.

மாசற்ற நெஞ்சத்தைக் கொண்டவன்_தமிழ்
மானத்தை உயிராய் கொண்டவன்
வீசிடும் புயலாய் ஆகுவான்_ பகை
வீழ்த்தியே பாடல் பாடுவான்.

இப்பாடல் பிரபாகரன் அவர்களுக்கான தனிப்பாடலாம்.

தமிழகப் பாடகர் மாணிக்கம் விநாயகம் அவர்கள் பாடிய 'வான்வெளியில் புலிகள்படை சிறகு விரித்தது' பாடலில் பிரபாகரன் இவ்விதம் பாடப்பட்டார். 'சிறகு விரித்த புலிகள்' இறுவெட்டில் காசி ஆனந்தன் அவர்கள் எழுத ரி.எல்.மகாராஜன் இசை வழங்கி இருந்தார். மாணிக்கவிநாயகம் பாடிய‌ அப்பாடலின் சரணமொன்று.

ஈழமண்ணில் நேற்றுவரை எதிரியின் மேய்ச்சல்
எதிரி வானில் இன்று கண்டோம்
புலிகளின் பாய்ச்சல்
நாளும் வலிமை சேர்க்கும் எங்கள்
தலைவனின் ஆற்றல்
நானிலத்தை அதிரவைக்கும் அவனது ஆற்றல்.

பிரபாகரன் அவர்கள் 'அண்ணன்' எனும் சொல்லில் நிறைய இடங்களில் அடையாளப்படுத்தப்பட்டு பாடப்பட்டார். 'கரும்புலிகள்' பாடற்தொகுப்பில் பார்வதி சிவபாதம் மற்றும் குமாரசாமி இணைந்து பாடிய 'போரம்மா உனையன்றி யாரம்மா' பாடலில் பிரபாகரன் அவர்கள் இவ்விதம் காட்டப்படுகின்றார்.

அண்ணன் சொன்ன வேதம்கேட்டு
விண்ணைக்கூட மண்ணில்வீழ்த்தி
ஆடும் கரும் புலிகள் அம்மா போரம்மா
ஆடும் கரும் புலிகள் அம்மா

இப்பாடல்மூலம் கரும்புலிகள் பிரபாகரன் அவர்களில் கொண்டிருந்த நம்பிக்கைத்தன்மை புலப்பட்டது. கரும்புலிகளின் பாடல்களை உள்ளடக்கிய 'தேசத்தின் புயல்கள், பாகம் 2' ஒலிப்பேழையில் மாவீரர் மேஜர் மாதவன் அவர்கள் பாடிய இப்பாடலானது கரும்புலிகள் அணி பிரபாகரன் அவர்களால் பராமரிக்கப்படுவதை வெளிப்படுத்துகிறது. மாவீரர் மேஜர் மாதவன் அவர்கள் 'வெண்ணிலவே வா பூந்தென்றல் வா, மாவீரனை தினம்பாடவா' பாடலையும் பாடியவராவார். பாடல் இதோ.

கரிகாலன் வளர்க்கின்ற கண்மணிகள்
எங்கள் காலிடை பகைசிறு மின்மினிகள்
தெளிவாகத் தெரியுதே எம்மிலக்கு
ஈழத்திசையாவும் ஏற்றுவோம் ஒளிவிளக்கு

கரிகாலன் என்று பிரபாகரன் அவர்கள் சொல்லப்பட்டிருக்கும் கரும்புலிகள் பாடலது.

பிரபாகரன் அவர்கள் பற்றிய பாடலில் தமிழக சினிமாப்பாடல் புகழ் ஜெயச்சந்திரன் பாடிய பாடலுக்கென்று பலத்த ஆதரவு உண்டு. இந்தியா, புலிகள் போர் முடிந்த நாட்களில் அதிகம் பேசப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. 'களத்தில் கேட்கும் கானங்கள்' பாடற்தொகுப்பில், தேவேந்திரன் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய பாடலின் சரணமிது. வரிகள்: புதுவை இரத்தினதுரை.

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே_மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே_எம்
மன்ன‌வன் பிறந்தான் ஈழத்திலே

'ராசாத்தி உன்னை கணாத நெஞ்சு' போன்ற பிரபலமான பாடல்களைப் பாடிய ஜெயச்சந்திரன் அவர்கள் பல ஈழப்போராட்ட பாடல்களையும் பாடியிருக்கின்றார்.

புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களுக்கு தமிழ் உலகில் பேர்பெற்றவர். அவர் பாடிய பிரபாகரன் அவர்கள் பற்றிய பாடலிது.

பிரபாகரன் பேரைச்சொல்லி
மீசையை முறுக்கு
பிரபாகரன் தாண்டா எங்கள்
விடுதலை நெருப்பு

அவன் உடையொரு அழகு 
அவன் நடையொருஅழகு 
அவன் தொடையொரு அழகு
அவன் பேச்சொரு அழகு
கண் வீச்சொரு அழகு
அவன் சிரிப்பொரு அழகு
அவன் சிந்தனை அழகு

ஈழப்பாடல்களில் தனக்கான‌ இடத்தினை தக்கவைத்துக்கொண்ட பாடகர் திருமலைச்சந்திரன் அவர்கள் பாடிய இப்பாடல் பிரபாகரன் அவர்கள் குறித்து இவ்விதம் சொல்கின்றது.

பிரபாகரன் போடும் கணக்கு_என்றும்
பிழைத்ததில்லை தெரியாதா உனக்கு
குறிதவறாதடா அவன் விடும் அம்பு_வெற்றி
கொடி நாட்டுவான்நாளை நம்படா நம்பு

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் போராளிகளுக்கு தாயானவர் எனும் பொருள்படவும் பாடல்கள் உலாவந்திருக்கின்றன. ஈழவிடுதலைப் பாடல்களில் அதிகமாக பேசப்பட்ட பாடல்களில் ஒன்றான 'களத்திலிருந்து அம்மாவுக்கு கடிதம் எழுதுறேன்' பாடலில்
இவ்விடயம் உண்டு. செம்பருதி எழுதி இசைப்பிரியன் இசையில் வசீகரன் பாடிய பாடலில் இவ்விதம் பிரபாகரன் அவர்கள் சொல்லப்படுகின்றார். சரணங்களில் ஒன்று.

உடலாலே தானம்மா பிரிவாகிப்போனோம்
உணர்வாலே நாமென்றும் ஒன்றாக ஆனோம்
துயரோடு எனைஎன்ணி ஏங்காதே அம்மா
அண்ணன் அன்பாக அரவணைக்கும்
உனைப்போன்ற தாயம்மா

செம்பருதி பின்னாட்களில் கலைப்பரிதி எனும் பெயரில் பாடல்கள் எழுதியுள்ளார். இசைப்பிரியன், செம்பருதி, வீரா, வசீகரன் கூட்டாக பல பாடல்கள் வெளிவந்துள்ளன. இசைப்பிரியன் இசையில் செம்பருதி எழுத குட்டிக்கண்ணன் பாடிய இப்பாடலில் பிரபாகரன் அவர்கள் 'அண்ணன்' என்று இடம்பெறுகின்றார்.

சிட்டுக்குருவி மெட்டுப்போட்டு
பாட்டுப் பாடுது 
அது வென்றுவந்த புலிவீரர்களை
வாழ்த்திப் பாடுது
எட்டுத் திக்கும் அண்ணன் வீரம்
சொல்லிப் பாடுது
அது கிட்டுது ஈழம் என்று
சொல்லி கத்திப்பாடுது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களே தமிழர் வரலாற்றில் வான் படையணியை முதலில் உருவாக்கியவர் எனும் விடயத்தையும் புலவர்கள் சொல்லாமல் இல்லை. இளங்கோ செல்லப்பா இசையில் 'ஒரு தலைவனின் வரவு' இறுவெட்டில் காசி ஆனந்தன் வரியில் உலாவந்த 'ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம், எங்கள் தலைவன் பிறந்தான், எங்கள் பகைவன் ஓடிப்பறந்தான்' எனும் பாடலின் சரணத்தில் அவ்விடயம் இருகின்றது. பாடலை பாசறைப்பாவாணர் தேனிசை செல்லப்பா பாடியுள்ளார்.

மானத்தமிழ் மாந்தர் மறவர் வரலாற்றில்
வான்படை கண்ட முதல்தமிழன்
தானைத்தலைவன் உலகெங்கும் வாழ்தமிழர்
தாகம்தீர்க்க வந்த தனித்தலைவன்

பிரபாகரன் காலம் தந்த கொடை_அவன்
பிறந்தான் பிறந்தது புலிகள்படை

ரி.எல் மகாராஜன் இசையமைத்துப் பாடிய‌ 'வான்படைகண்ட முதற்தமிழன் 
பிரபாகரன் புகழ்பாடு'
மானமே வாழ்வாய் ஆனஎம் தலைவன்
படையில் இணைந்து போராடு' எனும் பாடலும் வான்படை கண்ட முதற்தமிழனாக பிரபாகரன் அவர்களை சுட்டியது.

தமிழகப் பாடகர் மதுபாலகிருஸ்ணன் அவர்கள் 'ஈழச்சூரியன்' இறுவெட்டிற்காக இப்பாடலை பாடினார். அதில் பிரபாகரன் அவர்கள் இவ்விதம் சொல்லப்படுகின்றார்.

தலைவன் பிறந்த கார்த்திகையே
தமிழர் நிமிர்ந்த கார்த்திகையே
காவியம் எழுதும் கார்த்திகையே
உந்தன் காலடி தொழுதோம் கார்த்திகையே

பிரபாகரன் அவர்கள் அநேக பாடல்களில் மாமன் எனும் உறவு முறை சொல்லியும் பாடப்பட்டார். கரும்புலிகள் இசைநாடாவில் வர்ணராமேஸ்வரன் பாடிய 'தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா' பாடலில் 'மாமன்' எனும் பொருள்பட இப்படி சொல்லப்படுகின்றார்.

நாளையிந்த நாட்டை ஆளும் சின்னப்பூக்களே
நீங்கள் நம்பவேண்டும் நாளைதமிழ் ஈழமென்றுமே
நீங்கள் வாழ வேண்டுமென்றே
நான் வெடிக்கின்றேன்
மாமன் நெஞ்சில் உள்ள கனவுகளைத்தான் படிக்கின்றேன்

என பாடல் தொடர்கின்றது. கரும்புலி ஒருவர் பாடுவதான பாடல் அது.

'நட்சத்திர யன்னலில் வானம் எட்டிப் பார்க்குது; புகழ் சுனந்தா உள்ளிட்டோர் இணைந்து பாடிய பாடலிது. 'ஈழச்சூரியன்' இறுவெட்டில் இடம்பெற்ற பாடலிது.

கருணையே உருவமாய் எங்கள்
தலைவர் இருந்தாரே
கண்களின் இமைகளாய் எம்மை
காத்து வந்தாரே
அன்பு நெஞ்சம் கொண்ட‌
அவர்போல யாருமில்லை
அவர் களம்கண்ட வீரத்தைப்போல‌
போருமில்லை.

 

மாவீரர் மேஜர் சிட்டு பாடிய பாடல்கள் ஈழவிடுதலைப் பாடல்களில் தனித்துவமானவை. அவரின் குரலும் தனித்துவமானது. சந்திரிகா அரசுடன் பேச்சுவார்த்தை முறியவே மீள்போர் மூன்றாம் கட்ட ஈழப்போராக தொடங்கியபோது, புலிகள் ரணசுறு, சூரையா எனும் கப்பல்கள்மீது திருகோண்மலையில் தாக்குதல் தொடுத்தபின்னர் அதில் மரணித்த கடற்கரும்புலிகளான மேஜர் தணிகைமாறன்,
மேஜர் கதிரவன், மேஜர் மதுசா, கப்டன் சாந்தா ஆகியோருக்கான பாடலில் பிரபாகரன் அவர்களின் உளநிலை காட்டப்படும் வரிகள் இவை. பாடலை புதுவை இரத்தினதுரை எழுதியிருக்கிறார். 'விழியில் சொரியும் அருவிகள், எமை விட்டுப் பிரிந்தன குருவிகள்' பாடலில் வரும் சரணமிது.

வேகமுடன் பெருங்கோபமுடன் பகை
வீழும் வெடியெனவானீர்
பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்
ஈரம் கசிந்திடப் போனீர்
விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி
வேகத்தில் கப்பல் விரிந்தது

ஆளனிகளை பலப்படுத்துவதற்கான பிரச்சாரப் பாடல்களிலும் பிரபாகரன் அவர்கள் சொல்லப்பட்டிருக்கின்றார். அவர் நம்பிக்கையானவர். அவரின் பின்னே சேருங்கள் எனும் அடிப்படையில் அவை சொல்லப்பட்டன. முல்லைச்செல்வன் எழுத தமிழீழ இசைக்குழு இசையில் இன்பநாயகி பாடிய 'தம்பியரே தங்கையரே நீங்கள் சிந்திக்கும் நேரமில்லை' பாடலில் பிரபாகரன் அவர்கள் சொல்லப்படும் வரிகளிவை.


தங்கத் தலைவனின் பாதையிலே
தாயக பூமியை மீட்டிடுவோம்
எங்கும் உரிமைப் புரட்சி வெடித்திட
ஈழச் சுதந்திரம் காத்திடுவோம்
மங்கள கீதம் நம் மண்ணில் ஒலித்திட
மாறா உறுதியில் நாமும் போராடிட

இதுபோலவே குட்டிக்கண்ணன் பாடிய ஆளணி இணைப்புப் பாடலான 'ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி' பாடலில் பிரபாகரன் அவர்கள் இவ்விதம் சொல்லப்பட்டார்.

எங்கள் வேங்கைத் தலைவன் தானே
எங்களுக்கு வழிகாட்டி
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடுவோம் தீ மூட்டி
பொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு
புனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு

ஈழப்போராட்டப் பாடல்களில் சந்திரமோகன் பாடிய பாடல்கள் தனித்துவமானவையே. இவருக்கான தனித்துவக் குரலினை கொண்டு இயங்கிய இவர் இப்போதும் பாடி வருகின்றார். சந்திரமோகன் அவர்கள் மாவீரர் இசையரசன் அவர்களுடன் இணைந்தும் பாடல்கள் பாடியுள்ளார். அதில் பிரபாகரன் அவர்கள் குறித்த இப்பாடலும் அடக்கம். இப்பாடலை சந்திரமோகன் மற்றும் மாவீரர் இசையரசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

விடிகாலை வேளையிலே 
தலையாட்டும் சின்னப்பூவே
தமிழீழத் தலைவன் பேரை
சொல்லிப்புட்டாயே.
அழகான வானவில்லே
அசைந்தோடும் மேகத்திலே
இசையான பாடலொன்றை எழுதிவைத்தாயோ.
எங்கள் தமிழீழத் தாயவளின்
இனிய வரம்
எம்மை உருவாக்கிய தலைவனது
பிறந்த தினம்
எங்கள்மேல் இன்பமழை பொழிந்துவரும்
நல்ல சந்தோச காற்றில்கூட‌
வாழ்த்துவரும்.

மாவீரர் இசையரசன் அவர்கள் மறைந்த எஸ்.ஜீ.சாந்தன் அவர்களின் புதல்வன் ஆவார். இவரும் ஈழவிடுதலைப் போராட்டப் பாடல்களில் தனக்கென ஒரு பக்கத்தினை பதித்தவர்.

சுவிட்சர்லாந்து இசைப்பறவை கரோலின் ஆகியோர் குழுவினராக பாடிய இப்பாடல் 'இது புலிகள் பிறந்த மண்'
இறுவெட்டில் சிறீவிஜய் எழுதியது. முகிலரசன் இசை அமைத்துள்ளார்.

மகராசா உன்னை மீண்டும்
காண கண்கள் ஏங்குதே
வருவாயோ நீயும் இங்கே
அப்பா நானும் பாடுறேன்
எங்கே நீ போனாயோ சொல்
உனைத்தேடி உயிர்போகுதே
உன்போல் ஒரு தலைவன் இன்றி
தேசம் தடுமாறுதே.

இசைப்பறவை கரோலின் அவர்கள் இப்போதும் தாயக விடுதலைப் பாடல்கள் பாடி வருகின்றார்.

சாதனைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் புலிகளின் தலைவர் பற்றி இவ்விதம் பாடியுள்ளார். புரட்சி எழுதிய‌ வரிகளில் தமிழக இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் வெளியான எல்லாளன் நடவடிக்கையில் மரணித்த கரும்புலிகளுக்கான பாடலில் இவ்விதம் வரும் வரிகளில் பிரபாகரன் அவர்கள் சொல்லப்படுவது இப்படி அமைகின்றது. இப்பாடலானது அநுராதபுரம் வான்படைத்தளத்தில் மரணித்த கரும்புலிகள் தமது தாயக எல்லைகடந்து சென்றபோது எழுந்த அவர்களின் உணர்வாக அமைகின்றது. பல்லவியில் வரும் சில வரிகளிவை.

உடல்பட்ட கஸ்ரங்கள் உங்களை நினைக்கையிலே
ஓடிப்போகுதே தலைவா
உடலது வெடித்து பகைவளம் எரித்து
வெற்றிகள் அனுப்புவோம் தலைவா

'புயல் அடித்த‌ தேசம்' இறுவெட்டில் சாணக்கியன் இசையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய வரிகள் இவை. இவை தலைவர் பிரபாகரனின் மனவெளிப்பாடான வரிகள் என சொல்லப்பட்டது.

பொங்கி எழுகின்ற கடலலையே
புதிய வழிகாட்டும் கதிரொளியே
ஏந்துங்கள் கையில் ஒளிவீசும் கொடியை
வாழ்த்துங்கள் நாளும்
வளம் என்றும் பெறவே.

தம்பி எனும் பொருள்படவும் பிரபாகரன் அவர்கள் பர்றி பாடல்கள் பலவுண்டு. இது பிரபாகரன் காலம் இறுவெட்டில் காசி ஆனந்தன் வரிகளில் தேனிசை செல்லப்பா பாடிய இப்பாடலில் குறித்த சொல்லுண்டு. இது பல்லவி.

தம்பி இருக்கிறான்
நம்பி இருக்கிறேன்

இது போலவே ஆனையிறவு பாடல்களில் 'ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா' பாடலில் தம்பி என காட்டப்படுகின்றார். புதுவை இரத்தினதுரை வரிகளில், கண்ணன் இசையில் எஸ்.ஜீ.சாந்தன், ஜெயா சுகுமார் ஆகியோர் பாடிய பாடலில் இவ்வரிகள் இதோ.

இந்தியாவுக் கோடிப்போனா நந்தலாலா -இப்போ
இஸ்ரவேலுக்கு ஓடுறாவாம் நந்தலாலா
எங்கு ஓடிப்போயும் என்ன நந்தலாலா -எங்கள்
தம்பி தானே வெல்லப்போறான் நந்தலாலா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்களே இப்பாடலில் அதிகம் சொல்லப்பட்டவர்.

அனைத்துலகத் தொடர்பகப் போராளி சாரங்கள் எழுதிய 'எங்கள் அண்ணன் கரிகாலன், அவன் செந்தமிழின் பெருவீரன்' பாடலும் அதிகம் பேசப்பட்ட ஒன்று. குறித்த பாடலில் பிரபாகரன் 'ஈழத்தமிழர் வாழ்வில் தினமும் வந்து உணர்வை ஊட்டும் நாட்காடி' என்றும் சொல்லப்பட்டார்.

ஈழப்பாடல்களில் இன்னொரு தனித்துவக்குரல் பாடகர் செங்கதிர். அநேக பாடல்களை தன்குரலில் அளித்தவர். அவர் எழுதி, இசையமைத்துப் பாடிய இப்பாடலில் பிரபாகரன் அவர்கள் இவ்விதம் சொல்லப்படுகின்றார். பல்லவி இது.

வண்ணமயில் நீயாட‌
வரிப்புலி நான்பாட‌
வைரவிழா காணுமெங்கள் தலைவனை வாழ்த்த.
வண்ணத்தமிழ் சொல் எடுத்து
கவி தொடுத்திடு
அவன் வரும்பாதை எங்கும்மலர்
தூவி வாழ்த்திடு

ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் மேடைகளில் எல்லாம் அநேகர் விரும்பிப் பாடிய பாடல்களில் இப்பாடலும் ஒன்று. காசி ஆனந்தன் எழுத, தேனிசை செல்லப்பா இசை அமைத்துப்பாடிய இப்பாடலின் பல்லவி இது.

மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம்
பிரபாகரன் பக்கம்.
மக்கள்படை என்றைக்கும்
அவன் பக்கம்தான் நிற்கும்(2)

இப்பாடலின் பல்லவிக்கு முன்னே வரும் தொகையறா இது.

எங்கள் தலைவன் பிரபாகரன் என்று 
முழங்கு சங்கே முழங்கு
அவன் பொங்கி எழுந்தான் பொடிப்பொடியாகி
உடைந்ததுபார் கைவிலங்கு(2)

கவிஞர் அறிவுமதி எழுதி லாவன்யா பாடிய இப்பாடலும் பிரபாகரன் அவர்கள் குறித்த பாடல்களில் பேசப்பட்ட ஒன்று.

எங்கிருந்தாலும் எங்களின் இதயம்
உங்களுக்காக துடிக்கும்
எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி
உங்களைவந்து நனைக்கும்
இது தாயின் உயிர்மீது
செய்கின்ற சத்தியம்.
தமிழ் ஈழம் உன்னாலே
காண்பது நிச்சயம்.

ஈழப்போராட்டப் பாடல்களில் பெரும்பங்கினை வகித்த ஜெயா சுகுமார் அவர்கள் அவர்கள் பாடிய இப்பாடலில் தென்தமிழீழம் என புலிகள் வகுத்த பகுதியை பிரபாகரன் அவர்கள் ஆளுகை செய்வார் எனும் பொருள்விளங்க இப்பாடல் அமைகின்றது. தமிழீழ இசைக்குழு இசையமைத்த இப்பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பட்டது.

தென்தமிழீழமும் எங்களின் கையிலே
வந்திடும் காலம் வெகு காலமல்ல‌
எங்கள் அண்ணனின் சேனைகள்
அள்ளியெம் கையிலே
தந்திடும் நாள் கணநாளுமல்ல.

பிரபாகரன் அவர்கள் பற்றியது மட்டுமான அநேக பாடல்களை தேனிசை செல்லப்பா அவர்கள் பாடியதாக முன்னே வகையறுத்தோம். கீழே தேனிசை செல்லப்பா பாடிய பாடல்கள் சிலவற்றில் மேலும் காணுவோம்.

இளங்கோ செல்லப்பா இசையில் 'இது நெருப்பின் குரல்' இறுவெட்டில் காசி ஆனந்தன் வரிகளில் தேனிசை செல்லப்பா பாடிய
பாடலிது.

பிரபாகரன் என்று பெயர்வை
வை..வை..
உன்பிள்ளைக்கும் அவன்பெயர்
வையடா வை..வை..

மேற்பாடலின் சரணம் ஒன்று இவ்விதம் அமைகின்றது.

எழுதமிழ் ஈழத்தில் 
உயிர்வாழும் உன்பிள்ளை
இயங்கட்டும் விடுதலைப் புலியாய்
உலகத்தின் மூலையில் 
உன்பிள்ளை வாழ்ந்தாலும்
உலவட்டும் கடுஞ்சூறாவளியாய்..

இதே இறுவெட்டில் இன்னொரு பாடல் இது.

பிரபாகரன் படை வெல்லும்_அவன்
பெருவெரிச் செய்தியை வரலாறு சொல்லும்.

'இருப்பாய் தமிழா நெருப்பாய்' பாடற்தொகுப்பில் தேனிசை செல்லப்பா இசையமைத்து தானே பாடிய இப்பாடலும் பிரபலமானது. வரிகள்:காசி ஆனந்தன்.

பிரபாகரன் நினைத்தது நடக்கும்_அவன்
புலிப்படை நெருப்பாற்றை நீந்தி கடக்கும்
வரலாற்றில் இது அவன்காலம்
வரிப்புலி எழுந்தான் எழுந்தது ஈழம்

தேனிசை செல்லப்பா இப்பாடலும் பிரபகரன் அவர்கள் பற்றிய பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று.

பிரபாகரன் எங்கள் வழிகாட்டி
தமிழர் தாய்மண்ணைக் காக்கின்றான்
தமிழ்மானம் நிலைநாட்டி.

போராட்ட காலத்தில் மட்டுமன்றி இந்த நாட்களிலும் பிரபாகரன் அவர்கள் பற்றிய பாடல்கள் வெளிவருகின்றன. இன்று வெளிவந்த இப்பாடலையும் இணைக்கின்றோம். ஜேர்மனி ஈழப்பிரியன் எழுத, இளங்கோ செல்லப்பா இசையில் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடலின் பல்லவி இது.

ஈழச்சூரியன் பிறந்தான்_தமிழர்
இன்னல் யாவையும் துடைத்தான்
உலகத்தமிழர்கள் தலைகள் நிமிரவே
தலைவனாக இவன் எழுந்தான்
எங்கள் தேசம் மலரவே நிமிர்ந்தான்
பாசத்தலைவனாய் தமிழர் நெஞ்சங்கள்
எங்குமே இவன் நிறைந்தான்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய அநேக பாடல்கள் உள. ஆயினும் யாவையும் பதிவுசெய்ய முகநூற்பதிவு போதாது. இந்த மற்றும் கடந்த நூற்றாண்டுகளில் வாழும் காலத்தில் அதிகமாக பாடலில் வைக்கப்பட்ட ஒருவர் வே.பிரபாகரன் அவர்களே. வேறு நாட்டுத்தலைவர்கள் அவ்விதம் வைக்கப்படவில்லை. எனவே அவ்வித ஒருவர் பற்றிய பாடல்களின் ஒரு நோக்கு இது. இந்நோக்கு நூறு வீதமானது அல்ல. வரும் காலங்களில் ஈழப்பாடல்கள் பற்றி பெரியதொரு தொகுப்பினை ஆற்ற எண்ணுகிறோம்.

இது காசி ஆனந்தன் வரிகளில், தேனிசை செல்லப்பா இசையமைத்துப் பாடிய 'மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம் பிரபாகரன் பக்கம்' பாடலின் சரணமொன்று.

அவன் வாழும் காலத்தில்தான்
தமிழ் ஈழம் பிறக்கும்
ஆளும் தமிழர் கொடியொன்று
உலகத்திலே பறக்கும்.

எழுத்து: புரட்சி

 

https://www.facebook.com/puratchi2100?hc_ref=ARRUH8LLOS67fAbZek3YVgLsaDjVMhMxqLo1jw5Y-3y8ZQ84w00y0cD0RV5rIhM1q5g

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.