Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் திரிசங்கு நிலை

Featured Replies

மைத்திரியின் திரிசங்கு நிலை
 

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான குழுவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவுக்கும் இடையில், ஒற்றுமையை ஏற்படுத்தப் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அவை வெற்றிபெறும் சாத்தியக்கூறுகள் மிகவும் அரிதாகவே இருக்கின்றன.  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து, அவரது தலைமையை ஏற்றிருந்த பலர், அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாகினர். 

அதன்பின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளிலும், இதேபோல் இரு சாராரையும் இணைக்க வேண்டும் என்று சிலர் கூறி வந்தனர்.   

உண்மையிலேயே, அப்போது மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கே அவ்வாறானதோர் ஒற்றுமை அவசியமாக இருந்தது. மஹிந்தவின் குடும்பத்தினர் உட்பட முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, அவர்கள் அப்போது ஒற்றுமையை வலியுறுத்தினர்.   

இப்போது நிலைமை மாறியுள்ளது. ஒற்றுமை என்ற விடயத்தில் இரு சாராரும், தாம் வகித்த பாத்திரங்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது, ஒற்றுமையை நாடி, மைத்திரியின் ஆட்கள் மஹிந்தவிடம் கையேந்தும் நிலைமையையே காண்கிறோம்.  

ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய வர்த்தமானியை எதிர்த்து, வழக்கொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், சில உள்ளூராட்சி மன்றங்களிலேனும் தேர்தல்களை நடத்துவதென தேர்தல்கள் ஆணைக்குழு, கடந்த சனிக்கிழமை அறிவித்தது.   

இந்த நிலையில், ஸ்ரீ ல.சு.கவின் பெரும்பான்மையான கீழ் மட்ட உறுப்பினர்களின் ஆதரவு, மஹிந்தவுக்கே கிடைக்கும் என்ற அறிகுறிகள் தான் தென்படுகின்றன. எனவே, மைத்திரியின் ஆதரவாளர்கள் ஒரு வித பாதுகாப்பற்ற மற்றும் பாதிக்கப்படக் கூடிய நிலையை உணரத் தொடங்கியுள்ளனர். ஆகவே, அவர்கள் ஒற்றுமையை நாடி, மஹிந்தவின் பின்னால் அலைவதைப் புரிந்து கொள்ளலாம்.   

அவர்கள் இந்த விடயத்தில், மைத்திரியின் மீதும் நெருக்குவாரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஒற்றுமைக்கான அவர்களது முயற்சிகளை பெயருக்காகவேனும் ஆதரிக்க வேண்டிய நிலை மைத்திரிக்கு ஏற்பட்டுள்ளது.  

அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சில ஸ்ரீ ல.சு.கட்சிக்காரர்கள், மஹிந்தவிடமோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமோ நட்பு வார்த்தைகளை எதிர்பார்த்துப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரத்ன, விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.   
சுசில் பிரேமஜயந்த, அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தாலும் மஹிந்த ஆதரவாளராகவே இருக்கிறார். அவர் அதைப் பல வழிகளில் வௌிகாட்டியும் வருகிறார்.   

அண்மையில் அவர், மஹிந்தவைச் சந்திக்க சென்றிருந்தார். அப்போது மஹிந்தவின் ஆதரவிலான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கூடியிருந்தது. பிரேமஜயந்த அந்தக் கூட்டத்துக்கே சென்று, ஸ்ரீ ல.சு.கவின் இரு அணிகளும் கூட்டாகத் தேர்தல்களில் போட்டியிட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததாகவும் செய்தி அறிக்கைகள் கூறின.   

இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும் அனுமதி வழங்கியிருந்ததாகவே அச்செய்தி அறிக்கைகள் மேலும் கூறுகின்றன. ஆனால், பிரேமஜயந்தவின் தூது வெற்றிபெறவில்லை.  

ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான மேல் மாகாண சபையின் முதலமைச்சர் இசுர தேவப்பிரியவும் இது போன்றதொரு முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இவரும், ஒன்றிணைந்த எதிரணியின் உத்தியோகபூர்வத் தலைவரான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவும் மஹரகமவைச் சேர்ந்தவர்கள்.   

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, மஹரகம பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கூட்டாகப் போட்டியிடும் ஆலோசனையை இசுர, தினேஷுக்குச் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கிறார். ஆனால், தினேஷ் அதை நிராகரித்துள்ளார்.  

அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, கடந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, ஓர் உவமையைக் கூறி, மஹிந்தவின் ஆதரவாளர்களின் கோபத்துக்கு ஆளானவர். “தந்தை இறந்தால், இறந்தவர் தந்தை என்பதற்காக, அவரது பூதவுடலைத் தொடர்ந்து வீட்டில் வைத்திருப்பதில்லை” எனக் கூறிவிட்டு, அவர் மைத்திரியின் அரசாங்கத்தில் சேர்ந்தார். அவரும் அண்மையில், “நாம் மஹிந்தவுடனேயே தேர்தலுக்கு வருவோம்” எனக் கூறியிருந்தார்.   

இந்த நிலையில்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைத் தாமதப்படுத்த, மைத்திரி குழு முயற்சி செய்வதாகவும் அக்குழுவினரே தொகுதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர் என்றும் அதன் மூலமும் அவர்கள் தேர்தலைத் தாமதப்படுத்த முயன்றுள்ளனர் என்றும் தகவல்கள் பரவியிருக்கின்றன.   

அது உண்மையாக இருந்தாலும், கட்டுக் கதையாக இருந்தாலும் மைத்திரி குழுவின் தற்போதைய நிலைக்கு, அச்செய்தி பொருந்துகிறது.   

ஒற்றுமையின் மூலம் தமக்கு எதிரான ஊழல் வழக்குகளைத் தடுத்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி காணவே, தொடர்ந்தும் ஸ்ரீ ல.சு.கவில் இருப்பதில் பயனில்லை எனக் கண்ட மஹிந்த அணியினர், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு இருந்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற அரசியல் கட்சியை, அதன் தலைவர்களிடம் இரவல் பெற்று, முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை அதன் தவிசாளராக நியமித்து, அரசியல் தனிக் குடித்தனம் செய்யும் ஏற்பாடுகளைத் தயார்படுத்தி வைத்துள்ளனர். எனவே, இப்போது அவர்கள் தொடர்ந்தும் ஸ்ரீ ல.சு.கவின் ஒற்றுமையை விரும்பவில்லை.  

எனவே, அவர்கள் ஒற்றுமையைக் கேட்டுத் தம் பின்னால் வரும் ஸ்ரீ ல.சு.க அமைச்சர்களிடம் உறுதியாக, ஓர் ஆலோசனையை முன்வைக்கிறார்கள். ஸ்ரீ ல.சு.கவின் இரண்டு அணிகளும் ஒன்று சேர வேண்டுமானால், தற்போது அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ ல.சு.க அணியினர், ஐக்கிய தேசியக் கட்சியுடனான தமது தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த ஆலோசனையாகும்.   

இது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அணியினால் இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிபந்தனையல்ல. அது, அரசியல் ரீதியாக மட்டுமல்லாது, தனிப்பட்ட ரீதியிலும் தற்கொலைக்குச் சமம் என்பதை அவர்கள் அறிவார்கள்.   

இந்த நிபந்தனையை நிறைவேற்றி, மைத்திரி அணி, மஹிந்த அணியோடு இணைந்தால்,
 ஸ்ரீ ல.சு.கவுக்குள் மஹிந்தவின் கையே ஓங்கியிருக்கும். ஏனெனில், அக்கட்சியின் அடி மட்ட உறுப்பினர்களில் மிகச் சிறியதொரு பிரிவினர் மட்டுமே, ஜனாதிபதியுடன் இருக்கிறார்கள். கட்சியின் பெரும்பான்மை ஆதரவு மஹிந்தவுக்கு இருப்பதனால், கட்சிக்குள் அவர் இட்டதே சட்டமாகும்.   

மறுபுறத்தில், மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் இடைநிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால நிர்ப்பந்திக்கப்படுவார்.   

அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அவ்வாறு ஒன்றிணைந்த ஸ்ரீ ல.சு.க பெரும்பான்மையான மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றினால், அடுத்த பொதுத் தேர்தலிலும் அக்கட்சியே அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது.   

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ ல.சு.க முதலிடத்துக்கு வந்தால், ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்த பக்கம் தாவக்கூடும். சிலவேளை, மஹிந்த முன்னர் செய்ததைப் போல், விலை கொடுத்து அவர்களை வாங்கவும் கூடும். அதனால், சிலவேளை அரசாங்க அதிகாரமும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னரே, ஸ்ரீ ல.சு.கவிடம் சென்றடையலாம்; மஹிந்த பிரதமராகலாம். தற்போதைய தேர்தல் நெருக்குதலினால் இரண்டு அணிகளின் ஒற்றுமையை விரும்புவதைப் போல், மைத்திரி நடந்து கொண்டாலும், மஹிந்த பிரதமராகும் நிலையை அவர் விரும்புவாரா?  

“மஹிந்த பிரதமரானால், அவருக்கு ஜனாதிபதிப் பதவி, ஒரு தோட்டாவின் தொலைவிலேயே இருக்கும்” என மைத்திரி கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கூறியிருந்தார். அதாவது, மஹிந்த பிரதமரானால், தமக்கு உயிராபத்து ஏற்படும் என்றே அவர் சூசகமாகக் கூறியிருக்கிறார். அதன் பின்னர், மஹிந்த ஜனாதிபதியாவார் என்பதே அவரது கூற்றின் கருத்தாகும்.   

அதற்கு ஒருவர், இரண்டு முறை தான் ஜனாதிபதியாகலாம் என்று கூறும் 19 ஆவது அரசமைப்புத் திருத்தம் இடமளிக்குமா என்ற கேள்வி இங்கே எழுகிறது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில், மக்கள் பிரதிநிதிகள் விலைபோன வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது.   

மில்லியன் தொகைப் பணம் கொடுத்துக் கொள்வனவு செய்யப்பட்ட ஐ.தே.க 
எம்.பிகளைப் பாவித்து, கடந்த அரசாங்கம் 18 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டது என்பது தெரிவிக்கப்படும் வரலாறு. எனவே, அந்த வரலாறு மீட்கப்படலாம் என்பதையே, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், மைத்திரி கூறியிருக்கிறார்.   

ஜனாதிபதி மைத்திரி ஓய்வு பெற்ற பின், தேர்தல் மூலம் மஹிந்த பிரதமரானாலும் இதேபோல் அவர் மீண்டும் ஜனாதிபதியாக முற்படலாம். அதன் பின்னர் தாம் பழிவாங்கப்பட மாட்டோம் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் மைத்திரிக்கு இல்லை.   
“நான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்திருந்தால், இப்போது ஆறடி நிலத்தடியில்தான் இருப்பேன்” எனக் கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த உடன் மைத்திரி கூறியிருந்தார். எனவே, மஹிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வரும் எதையும் மைத்திரி செய்வார் என நம்ப முடியாது.   

அமைச்சர் பிரேமஜயந்த, மஹிந்தவைச் சந்தித்த ஓரிரு நாட்களில், ஐ.தே.க தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரமவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிமும் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றிருந்தனர். “நீங்கள் மஹிந்தவுடன் கூட்டு சேரப் போகிறீர்களா?” என, அப்போது ஐ.தே.க அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் வினவியிருக்கின்றனர்.   

அதற்கு ஜனாதிபதி, தாம் அணிந்திருந்த சாரத்தைக் காட்டி, “இந்தச் சாரத்தை உடுத்துக் கொண்டு என்னால் அதைச் செய்ய முடியுமா?” எனக் கேட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், பிரேமஜயந்த, மைத்திரியின் விருப்பத்துடனேயே மஹிந்தவைச் சந்திக்கச் சென்றுள்ளார்.  

மஹிந்தவுடனான ஒற்றுமைக்காக நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, அந்த ஒற்றுமைக்கு எதிராகவும் கருத்து வெளியிடும் மைத்திரி, ஏதாவது ஒரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு, அவ்வாறு செய்கிறாரா அல்லது ஏதோ அந்தந்த நேரத்துக்குச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதைச் செய்து கொண்டு இருக்கிறாரா என்பது பின்னர் தான் தெரியவரும். சிலவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தெரியவரும்.  
மஹிந்தவுடனான மைத்திரியின் உறவு இவ்வாறு இருக்க, தம்மோடு இணைந்து அரசாங்கத்தை நடாத்தி வரும் ஐ.தே.கவுடனான அவரது உறவும் அவ்வளவு நேர்த்தியானது என்று கூற முடியாது. அந்த உறவும் பல அதிர்வுகளைச் சந்தித்த வண்ணமே முன்னோக்கிச் செல்கிறது.   

அந்த அதிர்வுகளின் வெளிப்பாடாகவே, கடந்த வாரம் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனாசிங்க நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டை கருதலாம்.   

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்ததையிட்டுத் தாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி, ஏமாற்றமடைந்திருப்பதாக, அந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது சேனாசிங்க கூறினார்.  

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்களைப் பற்றி விசாரணை நடத்த, ஏன் ஜனாதிபதி ஆணைக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.  

ஆனால், இதற்கு ஜனாதிபதியும் நிக்கரவெட்டியவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போது, பதிலளித்து இருந்தார். “இடத்தை, நேரத்தை அறியாது சிலர் உரையாற்றுகிறார்கள். கண்டபடி பேசிவிட்டு, பின்னர் அழ வேண்டாம்” என அவர் பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார்.   

ஐ.தே.கவின் வாக்குப் பலத்திலேயே, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். எனவே, அவர் ஐ.தே.கவுக்குப் பாதகமான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என சேனாசிங்க கருதுகிறார் போலும். உண்மையிலேயே, ஐ.தே.கவைக் கூடுதலாகப் பாதிப்பது, பிணைமுறி விவகாரமா, அதைப் பற்றிய விசாரணையா என்பதை அவர் சிந்திக்க வேண்டும்.  

இந்த விடயத்தில், ஜனாதிபதியை அவர் குறை கூறுவது நியாயமில்லை. ஏனெனில், ஏற்கெனவே ‘கோப்’ எனப்படும் அரச நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழு, பிணைமுறி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்தநிலையில், எதிர்கட்சிகள் மேற்கொண்ட நெருக்குதலினாலேயே ஜனாதிபதி இந்த ஆணைக் குழுவை நியமித்தார்.  

அரசாங்கத்தில் இருக்கும் இரு கட்சிகளுக்கிடையிலான மற்றொரு பிணக்கைப் பற்றி, கடந்த 19 ஆம் திகதி ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை இழுத்தடிப்பதாகக் கூறி, அது தொடர்பாக விசாரணை நடத்துமாறு, அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவைப் பணித்திருந்தார். அதன்படி, பொலிஸ்மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்து இருந்தது.   

இதையறிந்த உடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த விசாரணையை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் திணைக்களத்தின் உயர் மட்டத்தில், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது நல்லதல்ல என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார்.   

ஆனால், ஐ.தே.க பின்வாங்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிலும், சட்டமா அதிபர் திணைக்களத்திலும் பாரியளவிலான மோசடிகள் தொடர்பான விசாரணைகள் தாமதமாவது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காகத் தமது மேலதிக செயலாளர் உட்பட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமித்தார்.   

அதற்குச் சில தினங்களுக்கு முன்னர், பாரியளவிலான மோசடிகள் தொடர்பான விசாரணைகளைத் தாமதப்படுத்துவதும் தடுப்பதும் போன்ற செயல்களில் ஐ.தே.க, அமைச்சர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டைப் பிரதமர் நிராகரித்திருந்தார்.   

முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு, எதிரான பாரியளவிலான மோசடிகள்  தொடர்பான விசாரணைகள் படிப்படியாகச் செயலிழந்து வருவதாக, ஜனாதிபதி கடந்த ஜூலை மாதத்திலும் ஐ.தே.கவுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டினார்.   

இது ஒரு வித்தியாசமான நிலைமை. பாரியளவிலான மோசடிகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்படுகின்றன என ஜனாதிபதி, ஐ.தே.கவைக் குற்றஞ்சாட்டுகிறார்.   
மறுபுறத்தில், அந்த விசாரணைகள் ஏன் தாமதமாகின்றன என்று ஐ.தே.க தலைவர்கள், விசேட பொலிஸ் குழுக்களையும் அதிகாரிகளின் குழுக்களையும் நியமித்து விசாரணை நடத்துகிறனர்.   

அவ்வாறாயின் இந்த விசாரணைகளுக்குத் தடைபோடுவது யார்? நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அது தெரியாவிட்டால், நாட்டை உண்மையிலேயே ஆள்வது யார் என்ற கேள்வி எழுகிறது.  

ஜனாதிபதியின் மனதில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றனவோ தெரியாது. ஆனால் அவர், ஸ்ரீ ல.சு.க தலைவர் என்ற வகையில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறார் என்பது மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஒருபுறம் மஹிந்தவுடன் கூட்டுச் சேருமாறு அவரது கட்சிக்காரர்கள் நெருக்குதலை மேற்கொள்கிறார்கள். மறுபுறத்தில், ஐ.தே.கவே அவரது சக்தி; அந்தச் சக்தி, மஹிந்தவுடன் கூட்டுச் சேர வேண்டாம் என்கிறது.   

கூட்டுச் சேராவிட்டால் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதியின் அணி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படும் அபாயமும் இருக்கிறது. மறுபுறத்தில், கூட்டுச் சேர்ந்தால் அதன் பயனை மஹிந்தவே அடைவார்.

தமது உயிருக்கும் அது ஆபத்தாகிவிடும் என்றும் மைத்திரிபால கருதுகிறார். எடுக்கும் முடிவை அவர் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் எடுக்கவும் வேண்டும்.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மைத்திரியின்-திரிசங்கு-நிலை/91-208096

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.