Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்த்திகை தீபத் திருநாளில் பொரி பொரித்து வழிபடுவது ஏன்? #Tiruvannamalai

Featured Replies

கார்த்திகை தீபத் திருநாளில் பொரி பொரித்து வழிபடுவது ஏன்? #Tiruvannamalai

மிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் பிணைந்து, ஆதிகாலம் தொட்டே தமிழ்க் குடும்பங்களின் மங்கலப்பொருளாக கருதப்பட்டுவருவது தீபம் (விளக்கு). ஒளியோடு தொடர்புடைய இந்த விழாவை, திருஞானசம்பந்தர் `விளக்கீடு’ என்னும் பெயரால் சுட்டிக்காட்டுகிறார். தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற திருவிழாக்களுள் கார்த்திகை தீபம் ஒன்றாகும். முன்னோர்கள் ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் முதலிய இயற்கையை வழிபட்டதை தமிழ் இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. இதன் வளர்ச்சியாக, ஒளியைக் கண்டு வணங்குதல் என்பது பாரெங்கும் பரவலாகக் காணலாகும் வழக்கம். 

கார்த்திகை

 
 

“நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட...’, `கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே….’ ஆகிய வரிகளின் மூலம் வீடுகளும் தெருக்களும் விளக்குகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. பன்னிரு தமிழ் மாதங்களுள் ஒன்று கார்த்திகை, இந்த மாதத்தில் பெளர்ணமி, கார்த்திகை நட்சத்திரத்துடன் வருகின்ற நாளைதான் நாம் கார்த்திகை தீபமாகக் கொண்டாடுகின்றோம். கார்த்திகை என்பதற்கு `அழல்’, `எரி’, `ஆரல்’ போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம். கார்த்திகை தீபம் என்றவுடன் நம் அனைவரின் கண்முன்னே வலம்வரும் காட்சி, திருவண்ணாமலை தீபம் என்றால் அது மிகையில்லை.

விழா பிறந்த கதை:

முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவனுக்கு கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி என்று மூன்று புதல்வர்கள் இருந்தனர். `திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் இந்த மூவரும் பிரம்மனை நோக்கித் தவம்புரிந்தனர். பிரம்மனிடம் சாகா வரம் தரும்படி வேண்டினர். `சிவபெருமானைத் தவிர அனைவரும் ஒருநாள் இறந்தே தீர வேண்டும். எனவே, சாகா வரம் கிடைக்காது’ என்றார் பிரம்மா. `அப்படியானால் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று நகரங்களும், அவை நாங்கள் விரும்பியபடி பறக்கவும், வேண்டிய இடத்தில் இறக்கவும் வேண்டும், சிவபெருமான் நேரில் வந்து அழித்தாலொழிய, வேறு எவராலும் அழியக் கூடாது’ என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றனர். முப்புரங்களைப் பெற்றதால், அவர்களின் கர்வம் தலைக்கேறியது. திரிபுரங்களைக்கொண்டு நாடு, நகரம், பயிர், வயல், கோபுரம்... என்று பாராமல் அனைத்தையும் அழித்தனர். மக்களும் தேவர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் இன்னல்களைக் களைவதன்பொருட்டு, பூமியை ரதமாகவும், சந்திரனை தேர்ச் சக்கரமாகவும், நான்மறைகளைக் குதிரைகளாகவும், மேரு மலையை வில்லாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார் ஈசன். திரிபுரத்தை நோக்கி, தம் வில்லை வளைத்து நாணை ஏற்றினார். ஆனால், கணையைத் தொடுக்காமல், பார்த்துவிட்டு புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்த மாத்திரத்தில், முப்புரங்கள் தழலென எரிந்து சாம்பலாயின. அரக்கர்களும் கார்த்திகைப் பெளர்ணமி அன்று மடிந்தனர். இதனையறிந்த தேவர்களும் மக்களும் மகிழ்ந்தனர். அந்த நாளே திருகார்த்திகை தீப நாளாகும்.

திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை தீபத்திரு விழா, பதினேழு நாள்கள் நிகழ்ச்சிகளைக் கொண்டது. முதல் மூன்று நாள்கள் திருவண்ணாமலையின் காவல்தெய்வம் துர்க்கையம்மன் திருவிழாவும், கோயில் உள்ள காவல்தெய்வமான பிடாரியம்மனை, திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டுவதும், விநாயகரை வணங்கி, துன்பங்கள் களைந்து, விழா சிறப்புற வேண்டுவதும், இதுவே முதல் மூன்று நாள்கள் விழாவின் உட்பொருள். இந்த மூன்று நாள்கள் விழாவின்போது துர்க்கை, பிடாரி, விநாயகர் ஆகியோரின் திருவீதிஉலா நடைபெறுகிறது. கொடியேற்றம் திருவிழா நடைபெறுவதற்கு மங்கல ஆரம்பமாகும். அருணாச்சலேசுவரர் ஆலயத்தில் வருடத்துக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறுகிறது. அவை தீபத் திருவிழா, தட்சாயண புண்ணியகாலம், உத்தராயணப் புண்ணியக்காலம் மற்றும் ஆடிப்பூரம் ஆகியவை.

முதல் நாள் விழா:

அழியும் தன்மைகொண்ட உடலைப் போற்றி பேணிகாத்து, நாள்களை வீணாகக் கழிக்காமல், உடலின் போலித் தன்மையை அறிந்து, நினைவில் கொண்டு, இறைவனை வேண்டி அறியாமையை நீக்கியருள வேண்டும் என்பதை அறிவுறுத்தும்விதமாக, அதாவது `நிலையாமை’ என்னும் தத்துவத்தை உணர்த்துவதே முதல் நாள் விழா.

இரண்டாம் நாள் விழா:

மனித உடல் ஐம்புலன்களின் தன்மையோடு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றோடு, `தான்’ என்னும் அகந்தையையும் கொண்டது. ஆன்மாவுக்கு வடிவமாக இறைவன் கொடுத்த உடலும் மனமும் உண்மைத் தன்மை அற்றவையே என்பதைப் புரிந்துகொண்டு, உலக மாயையிலிருந்து விடுபடுதல் இரண்டாம் நாள் விழாவின் நோக்கம்.

மூன்றாம் நாள் விழா:

மூவகைப் பற்றுகளான மண், பொன், பெண்ணாசை ஆகியவற்றை நீக்க வேண்டும் என்பதுதான் இந்த விழாவின் உட்பொருள். உலகிலுள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் காரணமாக அமைவது இந்த மூன்று காரணிகளே. எனவே, இந்த மூன்று காரணிகளின் மீதுள்ள பற்றை நீக்கினால், மிகச் சிறப்பான நல்வாழ்வு அமையும் என்னும் எண்ணத்தை ஆழமாக, வலிமையாக விளக்கும் தன்மைகொண்டது மூன்றாம் நாள் விழா.

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத்திருவிழா

நான்காம் நாள் விழா:

ஆன்மா, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய தோற்றங்களை நீக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்வதாக அமைகிறது. இந்த நான்கினது கூறுகளால் மனமானது ஆசைவழிபட்டுத் துன்பங்களை இன்பம் என நினைத்து, கடவுளை அடைதலை முக்கிய நோக்கமாகக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் பிறவி எய்தி உழல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது நான்காம் நாள் விழாவின் நோக்கம்.

ஐந்தாம் நாள் விழா: 

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பூதங்களும், சாக்கியம் முதலான ஐந்து தவத்தையும், ஆணவம், கன்மம், மாயை, வயிந்தவம், திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் அகல, இறைவனை வேண்டுவது இந்த ஐந்தாம் நாள் விழாவின் நோக்கம். மனத்தின்கண் உள்ள மாசுகளை நீக்கினால், மலங்கள் விலகி, உள்ளம் இறைவனை நாடும் என்பதை உட்பொருளாகக்கொண்டது.

ஆறாம் நாள் விழா:

காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் உட்பகையாறும், கலாத்துவா முதலான ஆறு அத்துவாக்களும், இருத்தல் என்னும் கன்ம மல குணம் ஆறும் நிலையற்றவை என்று உணர்ந்து நீக்குவதால், இறைஞானம் பெற்று உய்வதே ஆறாம் நாள் விழாவின் நோக்கமாகும். இந்நாளில் ஆலயத்திலுள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களின் செப்புப்படிமங்கள், சின்னக்கடைத்தெருவில் உள்ள அறுபத்து மூவர் மண்டபத்தில் மண்டகப்படி நிகழ்த்தப்படுகிறது.

ஏழாம் நாள் விழா:

அருணாசலேசுவரர் ஆலயத்தில் இந்நாளில் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. குற்றங்களைக் களைந்து, மனதினைத் தூய்மைப்படுத்தும்விதமாக ஏழாம் நாள் விழா கொண்டாடப்படுகிறது. தேரில் அமர்ந்த இறைவன் உயிரையும், தேரிலுள்ள சங்கிலிகள் மனித மூச்சுக் காற்றையும் குறிக்கின்றன. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், எந்தவொரு காரியத்தையும் சாதிக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களைத் தேரோட்டம் விளக்குகிறது. காலையில் தேர் வலம் வருவதற்கு தேரில் ஏற்றப்பட்ட திருவுருவங்கள், இரவு தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்புதலோடு ஏழாம் நாள் விழா நிறைவடைகிறது.

திருவண்ணாமலை கொடிமரம்

எட்டாம் நாள் விழா: 

முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடைமை, இயல்பாகவே பாசங்களை நீக்குதல், தன்வயத்தனாதல், பேரருள் உடைமை... முதலான எட்டும் இறைவனுக்குரிய குணங்கள். இந்த எட்டுக் குணங்களையும் இறைவன் ஆன்மாக்களுக்கு அருளல் வேண்டி எட்டாம் நாள் விழா நடத்தப்படுகிறது. இத்தகைய குணங்களை உலக உயிர்கள் பெறுவதால், அவற்றின் தீய குணங்கள் நீங்கி, நற்குணங்கள் நிலைக்கும் என்று கற்பிக்கப்படுகிறது. மாலையில் தீபம் ஏற்றுவதற்காகச் சேகரிக்கப்பட்ட காடாத் திரிகளுக்குச் சம்பந்த விநாயகர் சந்நிதியில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

ஒன்பதாம் நாள் விழா:

மூவகை வடிவங்களும், மூவகைத் தொழில்களும், மூவகை இடங்களில் உறைதலும் ஆகிய ஒன்பது நிலைகளும் நீங்கப் பெறல் என்பதைக் குறிப்பதே ஒன்பதாம் நாள் விழாவின் நோக்கம். மனித மனம் ஆசைவயப்படுதல் நிலையில் அனைத்தையும் துறந்து, உலக மாயைகளிலிருந்து வெளியேறி நற்கதி அடைவதே இந்த விழாவின் உட்பொருள். ஆறு மணியளவில் கொப்பரைக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, அந்தக் கொப்பரையின் இருபுறமும் மரம்வைத்துக் கட்டி, பக்தர்கள் பக்தியுடன் மலைக்குச் சுமந்து செல்கிறார்கள்.

பத்தாம் நாள் விழா:

ஒன்பது நாள்கள் திருவிழாவில் உயிர்களின் மலங்கள் நீங்கிட வேண்டி, மீண்டும் பிறவாத உயிர்நிலையான `வீடுபேறு’ என்னும் பேரின்பத்தைத் தந்தருள்வது பத்தாம் நாள் விழா கொண்டாட்டத்தின் உட்பொருள் உண்மை. அண்ணாமலையானை வணங்கிய பின், பர்வதராசகுல மரபினர் தீபமேற்றப்பெற்ற நெருப்பைப் பானையில் வைத்து, அது அணையாதவாறு மலைக்குக் கொண்டு செல்கின்றனர். அதிர்வேட்டுகளின் சத்தம் வானைப் பிளக்க, தீப்பந்த வளையங்கள் மலையை நோக்கிக் காட்டப்பட, பரணி தீபத்திலிருந்து நெருப்பைப் பெற்றுச் சென்ற பர்வதராசகுல பரம்பரையினர் மலை மேல் தீபம் ஏற்றுகின்றனர்.

திருவண்ணாமலை தீபம்

இறைவன், உலக மக்களுக்கு ஒளி வடிவில் காட்சிதருகிறார். மலை மேல் ஏற்றப்பட்ட மகா தீபம் பதினோரு நாள்கள் எரிகிறது. தீபம் எரியும் கொப்பரை ஆறடி உயரம் கொண்டது. சுமார் 3,000 கிலோ நெய், 1,000 மீட்டர் துணி நாடா, ஐந்து கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. ஐம்பூதங்களில் ஒன்றான ஜோதி (அக்னி) வடிவாக எழுந்தருளி உலக உயிர்களைக் காக்கும் தத்துவத்தைத் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் பின்வரும் மூன்று நாள்களில் பராசக்தி அம்மன் தெப்பத்திருவிழா, சுப்பிரமணியன் தெப்பத்திருவிழா, சண்டிகேசுவரர் தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பான முறையில் நடத்தப்படுகின்றன. இறுதி நான்கு நாள்கள் இறையுருவங்களைப் புனித நீராட்டும் விழாக்களாக நடைபெறுகின்றன. கார்த்திகை தீபம் ஏற்றுவதால், பல அற்புத நன்மைகள் நடைபெறும் என்று நமது புராண, இதிகாசங்களின் வழி அறிய முடிகிறது. 

`ஒருமுறை அம்பிகை தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள, கார்த்திகை தீபம் ஏற்றிவைத்து, விரதமிருந்து, சிவபெருமானின் பேரருளால் தோஷத்தைப் போக்கிக்கொண்டாள்’ என்று தேவி புராணம் கூறுகிறது. திரிசங்கு, கிருத்திகை விரதம் கடைபிடித்து பேரரசனானான். பகீரதன், கார்த்திகை விரதம் கடைப்பிடித்து, தான் இழந்த நாட்டை மீண்டும் திரும்பப் பெற்றான். 

திருவண்ணாமலை கோயில்

`திருவண்ணாமலைத் தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது.

`கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி

மலைநுனியிற் காட்ட நிற்போம்….

வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிபிணியில்
லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்
தவிரும் அது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம்’

தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை ஜோதி வடிவில் காட்சி கொடுக்க வேண்ட, `கார்த்திகை மாதம், கார்த்திகை தினத்தன்று மலை உச்சியில், நான் ஜோதி மயமாக காட்சியளிப்பேன்’ என்றும், `இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும், தீப தரிசனத்தைக் கண்டவர்களின் குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளி, மறைந்தார். 

திருவண்ணாமலை கோயில்

மேன்மையான கார்த்திகைப் பண்டிகையை மன மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி, பொரி பொரித்து வழிபடுவது சிறப்பு. அன்புக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம். அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞானத்தைத் தரவல்ல கார்த்திகை தீபத் திருவிழாவினை வீடுகளில் தீபம் ஏற்றியும், கோயில்களில் தீபம் ஏற்றியும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து நாம் கொண்டாடி, இறைவனின் இறையருளைப் பெற வேண்டுவோம். திருவண்ணாமலையில் தீப தரிசனத்தைக் கண்ட பிறகே, அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றப்படுகிறது. 

கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காலம் கார்காலம். இந்தக் காலத்தில் நடைபெறும் இந்த விழா, கார்காலத்தை முடித்துவைக்கும் விழாவாகவும் அமைகிறது. அறிவியல் நோக்கில் உற்றுநோக்கினால், பல பயன்களை உள்ளடக்கியதை அறியலாம். கார்த்திகை தீபத் திருவிழா வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தருகிறது. மேலும் விளக்கிலிருந்து கிளம்பி வான மண்டலத்தில் பரவும் கார்பன் வாயு மழை மேகங்களைக் கலைத்து, மழை பெய்வதைத் தடுக்கும் தன்மை வாய்ந்தது. 

 

திருவிழாக்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், நல்வாழ்வு வாழும் முறைகளையும், அறத்தையும் போதிப்பதாக உள்ளதை அருணாசலேசுவரர் ஆலய விழா உணர்த்துகிறது. இறைவன் தொடக்கமும் முடிவுமின்றி, தானே எல்லாவற்றையும் படைத்து, காத்து, ஒடுக்கி மீண்டும் படைத்து ஒளியாக நிற்கும் தத்துவத்தை திருவண்ணாமலைத் தலத்தில் ஏற்றப்படும் பரணிதீபம் உட்பொருளாகக் கொண்டிருக்கிறது. 

https://www.vikatan.com/news/spirituality/109494-history-of-tiruvannamalai-karthikai-deepam.html

  • தொடங்கியவர்

திருக்கார்த்திகை நாளில்... 'மாவளி' சுற்றியிருக்கிறீர்களா?

 

 
maavalijpg

கார்த்திகை தீப நன்னாளில், கோயில்களில் தீபமேற்றுவார்கள். வீட்டு பூஜையறை துவங்கி, வாசல், மாடிப்படிப் பகுதிகள், என வரிசைக் கட்டி தீப ஒளி ஜொலிப்பதே பேரழகு. இப்படி வீடும் கோயிலும் ஒளிமயமானதாக இருக்க... தெருவில் சிறுவர்களும் சிறுமிகளும் மாவளி சுற்றி விளையாடுவார்கள். இதிலென்ன ஆச்சரியம் தெரியுமா... இந்த மாவளியிலிருந்தும் வட்டமாக ஒளிச் சுடர் பிரகாசித்துச் சுற்றும்.

நீங்கள், உங்கள் சிறுவயதில் மாவளி சுற்றியிருக்கிறீர்களா?

கார்த்திகைத் தீப நாளில் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும், ஞாபகம் இருக்கிறதுதானே? இன்றைக்கு உள்ள சிறுவர்களுக்கு இந்த விளையாட்டெல்லாம் தெரியாது. அதாவது, பனம் பூளையை அதாவது, பனம் பூக்கள் மலரும் காம்பு. இதை நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள்.

பிறகு, அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டிக் கட்டுவார்கள். அடுத்து, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவார்கள். . பிறகு அதை உறியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள்.

இதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடினால் எப்படி இருக்குமோ... அப்படியாகக் காட்சி தரும்.

அப்போது மாவளியோ மாவளி என்று சத்தமிடுவர் சிறுவர்களும் சிறுமிகளும்!

வீடு, கோயில். வீதி என எல்லா இடங்களிலும் ஒளி வடிவில் நீக்கமற நிறைந்து, ஈசன் அருள்கிறான் என்பதாக ஐதீகம்!

http://tamil.thehindu.com/society/spirituality/article21241103.ece

 

 

கார்த்திகை தீபத்துக்கு பசுநெய் கொடுங்களேன்! உங்கள் வம்சம் தழைக்க வாழ்வீர்கள்!

 

 
karthigai%20tv%20malaijpg

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், திருக் கார்த்திகை தீபத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த நாளில், மலையில் தீபம் ஏற்றப்படும். மனிதனாகப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையேனும் திருக்கார்த்திகை தீப விழாவை கண்ணாரத் தரிசித்தால், மோட்சம் நிச்சயம் ; இன்னொரு பிறவி இல்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

மகாதீபத்திற்கென்றே, செப்பினால் ஆன கொப்பரை ஒன்றினைப் பயன்படுத்துகிறார்கள் அப்போது. இந்த கொப்பரை நாலரை முதல் ஐந்து அடி உயரமானது. மேலே 4 அடி அகலமும் அடிப்பாகம் 2 அடி அகலமும் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு தீபத்திருநாளிற்கும் இதில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. விளக்கினை போல் எண்ணெய் ஊற்றி திரியிட்டு ஏற்றுவதல்ல மகாதீபம். காடா துணி என்ற ஒரு வகைத் துணி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2000 மீட்டர் காடா துணி வாங்கப்படுகிறது என்கிறார்கள். மேலும் பக்தர்கள் கொடுக்கும் துணியும் பயன்படுத்தப்படும். சில சமயங்களில் அதுவும் கூட பத்தாமல் போய்விடுமாம்.

மகாதீபம்... தூய பசுநெய்யினால் ஏற்றப்படுகிறது. நெய், ஆவின் போன்ற அரசு பால் நிறுவனத் தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. சுமாராக 350 லிட்டர் நெய் கோயில் சார்பாக வாங்கு கிறார்கள். மேலும் பக்தர்கள் காணிக்கையாகத் தரும் பசுநெய், கணக்குவழக்கில்லாமல் வந்து குவிந்துவிடும்.

முந்தைய காலங்களில் அதிக நெய் வரத்து இல்லாததால் 3 நாட்கள் மட்டுமே தீபம் எரியவிட்டிருந்தார்கள். இப்போது அதிக அளவில் நெய் கிடைப்பதால் 11 நாட்கள் தீபம் ஒளிர்வதாகச் சொல்லிப் பூரிக்கிறார்கள் கோயிலின் ஆச்சார்யர்கள்.

கொப்பரையில் பசுநெய்யில் ஊறவைத்த காடாதுணியை அடைத்து அதன் மேல் சூடம் வைத்து மகாதீபத்தை ஏற்றுகிறார்கள். பக்தர்கள் நெய் காணிக்கை அளிக்க சீட்டுத் தருகிறார்கள். நம் இஷ்டப்படி எவ்வளவு நெய் வேண்டுமானாலும் வழங்கலாம். நேரடியாக நெய்யாகவும் வழங்கலாம். பசுநெய் அளித்த ஒவ்வொருவருக்கும் தீபம் முடிந்த பின், அண்ணாமலையாரின் மகாதீபப் பிரசாதமாக கொப்பரையில் சேர்ந்த மை தருகிறார்கள். இது திருஷ்டி முதலானவற்றை நீக்கவல்லது என்பதாக ஐதீகம்.

மகாதீபத்தைக் கண்டாலே புண்ணியம் நம்மைத் தேடி வரும் என்றால் அதனை ஏற்றுபவர் உண்மையில் எவ்வளவு பாக்கியசாலி. நாம் நினைப்பது போல் நினைத்தவரெல்லாம் தீபமேற்ற முடியாது. காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கார்த்திகை மகாதீபமேற்ற பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அடிப்படையில் மீனவ குலத்தை சார்ந்த இவர்கள், பர்வத மகாராஜாவின் வம்சாவளியில் வந்ததல் பர்வதராஜகுலத்தினர் என அழைக்கப்படுகின்றனர்.

அதிலும் திருவண்ணாமலையைப் பிறப்பிடமாக கொண்ட இந்தக் குலத்தினர் மட்டுமே தீபமேற்ற வேண்டுமென்பது புராணகாலத்து சம்பிரதாயம்.

திருக்கார்த்திகை தீபத்திருநாள் முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கும் தினமும் மாலை இவர்கள் கொப்பரையை சுத்தம் செய்து மீண்டும் நெய் மற்றும் துணி வைத்து தீபமேற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் கொப்பரையில் இருக்கும் மையினை சேகரிக்கிறார்கள்.

இத்தனை சிறப்பாக திகழும் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் இன்னுமோர் விசேஷம், அர்த்தநாரி தாண்டவமாடுதல். தீபத்திருநாளன்று திருவண்ணாமலையில் மட்டுமே நடக்கும் வைபவம் இது!

இதோ... 2ம் தேதி திருக்கார்த்திகை தீபம். அருகில் உள்ள சிவாலயங்களுக்கு, உங்களால் முடிந்த பசுநெய்யை வழங்குங்கள். கார்த்திகை தீபம் சுடர்விட்டுப் பிரகாசிப்பது போல், நீங்களும் உங்கள் சந்ததியும் பிரகாசமாக வாழ்வீர்கள் என்பது உறுதி!

http://tamil.thehindu.com/society/spirituality/article21218883.ece

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா ….

 
DSC_8055-1024x683.jpg
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக இன்று மாலை நடைபெற்றது. மாலை 04.45 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையை அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராக உள் வீதியுலா வந்த முருகப் பெருமான் திருக்கைலாய வாகனத்தில் ஆரோகணித்ததும், சொக்க பாணைக்கு தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து முருகப் பெருமான் திருக்கைலாய வாகனத்தில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்கினார்.
 
படங்கள் ஐ.சிவசாந்தன்
DSC_8036-683x1024.jpgDSC_8043-1024x683.jpgDSC_8055-1-1024x683.jpgDSC_8065-683x1024.jpgDSC_8074-683x1024.jpgDSC_8106-1024x683.jpgDSC_8109-1024x683.jpgDSC_8111-1024x683.jpgDSC_8114-1024x683.jpgDSC_8118-1024x683.jpgDSC_8125-1024x683.jpgDSC_8132-1024x683.jpgDSC_8139-683x1024.jpgDSC_8145-683x1024.jpgDSC_8149-1024x683.jpgDSC_8160-683x1024.jpgDSC_8166-683x1024.jpgDSC_8179-683x1024.jpgDSC_8182-1024x683.jpgDSC_8188-1024x683.jpgDSC_8197-1024x683.jpgDSC_8199-1024x683.jpg

http://globaltamilnews.net/archives/52734

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.