Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குஜராத் கள நிலவரம் - ராகுல் 2.0 vs மோடி 2.0.. வைப்ரன்டாக இருக்கிறதா குஜராத்? #GujaratElection2017

Featured Replies

குஜராத் கள நிலவரம் - ராகுல் 2.0 vs மோடி 2.0.. வைப்ரன்டாக இருக்கிறதா குஜராத்? #GujaratElection2017

 

குஜராத் கள நிலவரம்

2014-ம் வருட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், 13 வருடங்களாகத் தனது ஆட்சியின் கீழ் இருந்த குஜராத் மாநிலத்துடைய வளர்ச்சியைக் காண்பித்து தனக்கான வாக்குவங்கிகளை வலுப்படுத்தினார் மோடி. ’குஜராத் மாடல்’ போல இந்தியாவையும் வைப்ரன்டாக மாற்றுவேன் என்றார். அதுவே அவரை உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் 14-வது பிரதமராகவும் ஆக்கியது. இன்று குஜராத்தின் தேர்தல் முடிவுகள்தான் மோடி மீண்டும் பிரதமராவதையும், பி.ஜே.பி மற்ற மாநிலங்களில் சந்திக்கும் தேர்தலின் முடிவுகளையும் நிர்ணயிக்கும் ஆணிவேராக இருக்கப்போகிறது. மோடி நாட்டையே விற்றுவிடுவார் என குற்றம் சாட்டுகிறார் ராகுல்காந்தி. ’நான் டீ விற்றவன்...அதற்காக நாட்டை விற்க மாட்டேன்’ என்கிறார் மோடி. 

 

பிரிட்டிஷ் ஆட்சியில் மூன்று மாகாணங்கள் ஆங்கிலேயர்களுக்கு பெரிதும் உதவிகரமானதாக இருந்தன. சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை மையமாக கொண்டிருந்தது. வங்காள மாகாணத்தில் தங்களுக்கான பாதுகாப்பு தளவாடங்களை அமைத்துக்கொண்டனர். மும்பை மாகாணம்.... தொழில் வளர்ச்சிக்கும் வர்த்தகத்துக்குமான இடமாக அமைத்துக்கொண்டனர். அந்த மாகாணம்தான் இன்றைய மஹாராஷ்டிரா. 1960-ம் ஆண்டு குஜராத், மஹாராஷ்டிராவிலிருந்து தனிமாநிலமாக பிரிந்தது,

மோடி

தனி மாநிலம் ஆனதிலிருந்து 1990 வரை குஜராத் காங்கிரஸின் கூடாரம். 1990-க்குப் பின் குஜராத்தை காங்கிரஸ் மட்டுமல்ல எந்த கட்சியாலும் பி.ஜே.பியிடமிருந்து கைப்பற்றமுடியாத சூழல் உருவானது. குஜராத், இந்தியாவின் வணிகர்கள் வாழும் ஊர். சூரத் ஆடைகளின் நகரம். மக்கள் தொகையில் இந்தியாவின் 9-வது பெரிய மாநிலம், 6.1 கோடி மக்கள், 79 சதவிகித படிப்பறிவு கொண்ட மாநிலம். இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் குஜராத் இரண்டாவது மிகப்பெரிய தொழில்துறை வளர்ச்சி உள்ள மாநிலமாக உள்ளது. இந்திய ஜி.டி.பி-யில் அதிக பங்களிப்பு அளிக்கும் மாநிலங்களில் குஜராத்துக்கு நான்காவது இடம். தனிநபர் வருமானத்தில் இந்திய அளவில் குஜராத் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

ராகுல்காந்தி

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் தற்போது எதற்கு என்று யோசிக்கிறீர்களா?. மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பிரம்மாஸ்திரங்களாக காங்கிரஸுக்கும், பிஜேபிக்கும் இத்தனை ஆண்டுகளாக தேர்தல் அறிக்கையும், தேசிய திட்டங்களுமே இருந்து வந்தன. இந்தியா ஒளிர்கிறது என்றார் வாஜ்பாய்.  வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவேன் என்றார் சோனியா, வென்றார் ஆனால், மன்மோகன் சிங்கை செயல் பிரதமராக்கினார். இந்த க்ளிஷேக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மோடி. வைப்ரன்ட் குஜராத் என்றார். குஜராத்தைப் போல் இந்தியாவை மாற்றுவேன் என்றார். இந்தியாவில் பி.ஜே.பி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை மாற்றி குஜராத்போல் இந்தியாவை மோடி மாற்றுவார் என்று மக்கள் மனதில் பதிய வைத்தார். குஜராத் அரசியல்தான் இந்தியாவின் மத்திய அரசை முடிவு செய்தது. அந்த குஜராத்துக்கு இப்போது மீண்டும் தேர்தல். மோடி விட்டுச் சென்ற குஜராத் இன்னமும் வைப்ரன்டாகவே இருக்கிறதா? குஜராத் மாடல் என்ன ஆனது என்ற கேள்விகளையெல்லாம் தாங்கி குஜராத் 2017-ம் ஆண்டு தேர்தலை எதிர் கொள்ளப்போகிறது. 

மற்றொருபக்கம்... விவசாயிகளை குஜராத் அரசு கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்கிறார் ராகுல். ’குஜராத்தின் மகன் நான் அவர்கள் என்னை நிராகரிக்க மாட்டார்கள்’ என்கிறார் மோடி. இருகட்சிகளும்,  குஜராத் முதல்வர் சிம்மாசனத்துக்கான தங்களது வாய்ப்புக்காக இப்படி மாறி மாறி வழிதேடிக் கொண்டிருக்கின்றன. 

குஜராத் தேர்தல்

13 வருடங்களாக மோடியையும், 27 வருடங்களாக பி.ஜே.பியையும் விரும்பிய குஜராத் மக்களின் மனநிலையில் இப்போது மாற்றம் வருமா? என்ற எதிர்பார்ப்பில் தீவிரமாக களமிறங்கி வேலைசெய்கிறது காங்கிரஸ். மோடிக்கு இன்னமும் குஜராத் செல்வாக்கான மாநிலம் தான் என்று நிரூபிக்க, பி.ஜே.பி தரப்பினர் குஜராத் முழுவதும் ’நேரு குடும்பம் ஆன்டி குஜராத் கொள்கை உடையது’ என்று கூறிவருகிறார்கள்.

தண்ணீருக்காக நீண்ட தொலைவு பயணித்த மக்களுக்கு இன்று வீட்டில் தண்ணீர் கிடைத்திருக்கிறது என்று டெல்லியில் கெஜ்ரிவால் அடித்த அதே தேர்தல் ஸ்டன்ட்டை மக்கள் மனதில் வேரூன்ற வைக்கிறது பிஜேபி. பட்டேல் சமூகத்தை கவரும் நோக்கில் அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்தப் பட்டியலில் நிதின் பட்டேல் பெயர் பிரதானமாக இருக்கிறது. 

வைப்ரன்டாக இருக்கிறதா குஜராத்?

பி.ஜே.பி வைப்ரன்ட் குஜராத்தின் 8-வது மாநாட்டை ஜனவரியில் நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் அவர்கள் குஜராத்துக்காக முன்னிறுத்தும் காரணங்கள்... 2000 படுக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை, இந்தியாவின் மொத்த கார்கோ வர்த்தகத்தில் 40 சதவிகிதம் குஜராத் வசமுள்ளது, இந்தியாவின் டாப் 15 சுகாதாரமான நகரங்களில் மூன்று குஜராத்தில் உள்ளது, இந்தியாவின் முதல் தனியார் துறைமுகம் குஜராத்தில்தான் உள்ளது என்று பட்டியலிட்டு மார்தட்டிக் கொள்கிறது. 

மோடி

வளர்ச்சி பற்றி அவர்கள் பட்டியலிடும் அதே சமயம் வழக்குகள் பற்றி மௌனம் காத்துவருகிறார்கள். வளர்ச்சியின் எண்ணிக்கை அளவுக்கு அங்கே பி.ஜே.பியினர் மீது வழக்குகளும் பதியப்பட்டிருக்கிறது.  அப்படி அண்மையான வழக்குகளில் ஒன்றான, அமித்ஷா மகன் ஜெய்ஷா வழக்கிலும், போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டிலும் பிரதமர் ஏன் மெளனம் காக்கிறார் என கேள்வி எழுப்புகிறார் ராகுல். பிரசாரத்தில் நிறைய கோவில்களுக்குச் செல்லும் ராகுலை இந்துவே இல்லை என விமர்சிக்கிறார் சுப்ரமணிய சுவாமி.  இப்படி குஜராத் தேர்தல் பரபரப்பின் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.

 

குஜராத்தில் வெற்றியை தக்க வைக்குமா பிஜேபி, ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்து அடுத்த முறையும் பிரதமராகலாம் என்ற மோடியின் கனவை களைத்துப்பார்க்குமா காங்கிரஸ் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் குஜராத் தேர்தல் முடிவுகளில் இருக்கிறது. இரு கட்சிகளின் பலம், தேர்தலில் யார் கில்லி, வைப்ரன்ட் குஜராத் கைகொடுக்குமா, உண்மையிலேயே பி.ஜே.பி.யினர் சொல்வதுபோல் குஜராத் வைப்ரன்ட் தானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை வரும் பகுதிகளில் பார்ப்போம். 

https://www.vikatan.com/news/coverstory/109452-gujarat-election-2017-will-modi-magic-lead-bjp.html

  • தொடங்கியவர்

குஜராத் கள நிலவரம் - மோடி...பூகம்பத்தின் மீது கட்டப்பட்ட ஹீரோயிசம்! பகுதி 2 #GujaratElections2017

 
 

மோடி

Chennai: 

ந்தத் தொடரின் இரண்டாம் பகுதியைத் தொடங்குவதற்கு முன்பு நான் உங்களுக்கு ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்த நினைக்கிறேன். வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் எழுதிய 'கஜினி முகம்மது சோமநாதா படையெடுப்பு - வரலாற்றின் பல குரல்கள்' என்னும் புத்தகம்தான் அது. புத்தகத்தின் ஓர் இடத்தில், ''சிக்கலான வரலாற்று நிகழ்வுகளில் ஒரு சம்பவம் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நினைவுகூரப்படுவதில் அரசியல் செயல்படுவதுபோலவே, அந்தச் சம்பவம் தொடர்பான மற்ற அம்சங்களை மறப்பதிலும் அரசியல் செயல்படுகிறது'' என்று குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர். 

 
 

அதாவது, கஜினி முகம்மது ஏன் சோமநாதா ஆலயத்தின் மீது படையெடுத்தார்? இந்துக்களின் விக்கிரக வழிபாடு பிடிக்காததினாலா அல்லது அரேபியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 'மனத்' என்னும் தெய்வம் அங்கு வழிபடப்பட்டதினாலா அல்லது கொள்ளையில் கிடைக்கும் செல்வத்தின் காரணத்தினாலா அல்லது அரபு வணிகர்கள் மேற்க்கிந்திய எல்லை வழியாகக் குதிரை வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார்கள். அது, கஜ்னவி என்னும் நகரின் வழியாக இந்தியாவுக்கு ஏற்றுமதியான குதிரை வணிகத்தைப் பாதித்துக் கொண்டிருந்தது (1960-க்கு முன்பு ஒருங்கிணைந்த மகாராஷ்டிர பிரதேசமாக இருந்தபோது இந்திய வணிக எல்லையாக அந்தப் பகுதி இருந்தது என முந்தையப் பகுதியில் குறிப்பிட்டு இருந்தோம்). அதைக் களைவதற்காக அவர் போர் செய்தாரா அல்லது மேலே சொன்ன அத்தனையுமே காரணமா? இப்படிச் சோமநாதா கோயில் படையெடுப்பின்மீது பல கோணங்களிலான காரணங்களை வரலாற்றுரீதியாக அலசுகிறார் ரொமிலா. கஜினி படையெடுத்தபோது, சோமநாதா உண்மையிலேயே கோயிலாக இருந்ததா என்ற கேள்வியையும் ஓர் இடத்தில் முன்வைத்து அந்தக் கேள்வி ஏன் எழுகிறது என்பது தொடர்பான ஆதாரங்களையும் முன்வைக்கிறார்.

சோமநாதா கோயில்

தற்கால குஜராத் மாநிலத்தின் தேர்தல் களேபரச் சூழலை இப்போது கவனிப்போம். அண்மையில் சோமநாதா கோயிலுக்கு விசிட் செய்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கிருந்த பதிவுப் புத்தகத்தில் தன்னை 'non-hindu' என்று குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. பி.ஜே.பி-யின் தேசியத் தகவல்தொடர்புத் துறைத் தலைவர் அமித் மாளவியா அதைப் பற்றித் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.'' 'கோயில் பதிவில் தன்னை இந்துமதம் அல்லாதவர்’ என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, தனது தேர்தல் அஃபிடவிட்டுகளில் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று குறிப்பிட்டிருக்கிறாரே? அப்படியென்றால், தங்களது கடவுள் நம்பிக்கை பற்றிய பொய்யான தகவல்களை ராகுல் காந்தி தரப்பினர் உருவாக்கி வருகிறார்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது முதல் பத்தியில் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஆம், ‘சிக்கலான வரலாற்றில் ஒரு சம்பவம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு நினைவுகூரப்படுவதில்தான் அரசியல் செயல்படுகிறது’.

ராகுல்

''டீ விற்றவர் தலைவரான கதை!”

மோடி

தேர்தல் பிரசாரத்துக்காகக் குஜராத் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ஒருவரின் பிறப்பும் குடும்ப வரலாறும், அவர் எழுதிய ஒரு வார்த்தையின் வழியாக விவாதத்துக்குள்ளாகும்போது 13 வருடங்களாக அந்த மாநிலத்தை ஆட்சி செய்து பின்னர் நாட்டின் பிரதமராக உருவான ஒருவரின் வரலாறு, குஜராத் தேர்தல் களநிலவரத்தைப் பற்றிப் பேசும்போது முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒன்றாகிறது. ஒரு சாதாரண டீ விற்பவர் எப்படி அரசியல் தலைவராக முடிந்தது, எப்படி முதலமைச்சரானார், எப்படி அவர் பதிமூன்று வருடங்கள் தொடர்ந்து அங்கே ஆட்சி செய்தார், மாநிலத்தில் அவர் கொடுத்த அந்த 'ஆட்சி மாதிரி’தான் அவரைத் நாட்டின் தலைவராக்கியதா என்பதைத் தேர்தல் நெருங்கும் இந்தச் சமயத்தில் பார்க்கவேண்டியது அவசியம். 

விதைகளில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யும் வணிகத்தைதான் குஜராத்தின் மோத்  சமுதாயம் மேற்கொண்டிருந்தது. அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 'மோடி' என்று அழைக்கப்பட்டார்கள். பின்னாளில், எண்ணெய் மட்டுமல்லாமல் பல்வேறு வணிகங்களை அந்தச் சமுதாயத்தினர் மேற்கொண்டுவந்தனர். அவர்களில் ஒருவரான, தேநீர் விற்பனைக் கடை ஒன்றை நடத்திவந்த தாமோதர்தாஸ் மோடி என்பவருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர்தான் மோடி. தொடக்கத்தில் தன் தந்தையுடன் ‘ டீ’ விற்ற மோடிக்கு 1970-களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததன் வழியாகத்தான் அரசியல் பிரவேசத்துக்கான வாய்ப்பும் அமைந்தது. 70-களில், குறிப்பாக 1975 - 76 காலகட்டத்தில் குஜராத்தில் பாபுபாய் ஜஷ்பாய்கீழ் அமைந்த ஜனதா மோர்சா கட்சியின் ஆட்சியில்தான் அந்த மாநிலம் அதிகபட்சமாக 28 சதவிகிதம் மொத்த வளர்ச்சியை அடைந்தது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் குஜராத் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறி இருந்தார் மோடி. அவரது முக்கியத்துவத்தை அறுதியிட்டுச் சொல்லவேண்டும் என்றால்,  அதே காலகட்டத்தில்தான் மத்தியில் இந்திரா காந்தி அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியிருந்தது. அந்தச் சூழலில் ஆர்.எஸ்.எஸ் மறைந்திருக்கச் சொல்லி பணித்த தன்னுடைய முக்கியமான உறுப்பினர்களில் நரேந்திர மோடியும் ஒருவர்.பிறகு 1985-ல் அதே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் பி.ஜே.பி-யில் சேர்த்துவிடப்பட்டது, அதற்கு அடுத்த 16 வருடங்களில் குஜராத் பி.ஜே.பி-யின் பொதுச் செயலாளர் ஆனது. பிறகு, 2001-ல் குஜராத்தில் அப்போது ஆட்சியில் முதல்வராக இருந்த கேஷுபாய் பட்டேலின் உடல்நலக் குறைவு காரணமாக முதல்வராக நியமிக்கப்பட்டார் மோடி. அதற்கடுத்து, 2002 முதல் மே 2014 வரை அந்த மாநிலத்தின் முதல்வராகத் தொடர்ந்து 13 வருடங்கள் பதவி வகித்தார்.

பூகம்பத்தின்மீது கட்டப்பட்ட ஹீரோயிஸம்!

மோடி

இத்தனைக்கும் அதே காலகட்டத்தில்தான் அங்கே பெருங்கலவரமும் வெடித்தது, பி.ஜே.பி தரப்பின்மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆனால், கலவரத்துக்குப் பிறகான 2002-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அங்கே பி.ஜே.பி வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கை 127... அதற்கடுத்து 2007 மற்றும் 2012-ம் வருடங்களில் பி.ஜே.பி வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கை முறையே 117 மற்றும் 116. காங்கிரஸ் தரப்பு முறையே 59 மற்றும் 60 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 

பெரும் வணிக மையமாக இருந்த குஜராத்தில் 2001-ல் ஏற்பட்ட பூகம்பத்தால், பொருளாதாரரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீட்டுக்கொண்டுவர அப்போது ஒரு தலைமைத் தேவையாக இருந்தது. கேஷுபாய் பட்டேலின் வயோதிகம் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. காங்கிரஸ் முன்னிறுத்திய அஸ்வின் மேத்தா மற்றும் சங்கர் சிங் வகேலா போன்றவர்களின் பிம்பம் அங்கே மக்களிடம் அவ்வளவு பிரபலமாகவும் இல்லை. இந்தச் சூழலில்தான் மோடி அந்த எதிர்பார்ப்பை நிரப்பத் தொடங்கினார். 2002-ம் வருடத் தேர்தல் சமயத்தில் ஓர் ஆங்கில இதழ் தனது கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிடுகிறது, “மோடிக்கு பக்கபலமாக இருப்பது அவரது பேச்சுதான். 1990-களில் தேசிய அரசியலில் பலவகையில் பரிமளித்த பி.ஜே.பி-க்கு உறுதுணையாக இருந்தது அவர் எழுதிக்கொடுத்த வாசகங்கள்தான்'’ என்று குறிப்பிட்டிருந்தது.

 அந்த இதழ் குறிப்பிட்டிருந்ததுபோலவே பி.ஜே.பி-க்கான மோடியின் தேவை என்பது 90-களிலேயே உருவாகியிருந்தது. 2002-ம் ஆண்டு தேர்தல் பிரசாரங்களின்போது, ‘அந்நிய தேசத்தைச் சேர்ந்த ஒருவரை நம் நாட்டின் மகளாக ஏற்றுக்கொண்ட மக்கள், இங்கேயே பிறந்து வளர்ந்த என்னைத் தங்களது மகனாக ஏற்றுக்கொள்ளமாட்டார்களா’ என்பது போன்ற உணர்வுமிக்க வாசகங்களைத் தனது பேச்சுகளில் பயன்படுத்தத் தொடங்கினார். வைப்ரண்ட் குஜராத் என்பதைவிட வைப்ரண்ட் மோடிதான் பி.ஜே.பி-யின் அத்தியாவசியமாக இருந்தது.

 இதோ 2017-ம் வருடத் தேர்தல்... ‘என்னை மகனாக ஏற்றுக்கொண்டவர்கள் என்னைக் கைவிடமாட்டார்கள்’ என தனது கட்சிக்காகக் குஜராத்தில் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார் பிரதமரான மோடி. மகனாக அந்த மாநிலம் ஏற்றுக்கொண்டுவிட்டதா, அப்படி ஏற்றுக்கொள்ளும் வகையில் தனது பிறந்த மண்ணின் வளர்ச்சிக்கு உண்மையிலேயே உறுதுணையாக இருந்தாரா? 

(களம் விரியும்..)

https://www.vikatan.com/news/coverstory/109562-raise-of-modi-in-gujarat-gujaratelections2017.html

  • தொடங்கியவர்

குஜராத் கள நிலவரம் - 13 வருட மோடி ஆட்சியில் வளர்ந்தது பா.ஜ.க-வா குஜராத்தா? #GujaratElections2017

 
 
 

 

குஜராத்

1990-ம் ஆண்டு 67 சீட்டுகளைப் பிடித்து குஜராத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தது பா.ஜ.க. அதேபோல் 2002-ம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதிகபட்சமாக ஒரே தேர்தலில் 127 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. குஜராத்தை 90க்குப் பிறகு யாருக்கும் விட்டுத்தரவில்லை பா.ஜ.க. எப்படியெல்லாம் இந்தத் தேர்தலிகளில் பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் மாறியுள்ளது. ராகுல் காந்தியைப் பார்த்து நான் குஜராத்தின் மகன் என பெருமையாகச் சொல்லும் நரேந்திர மோடியின் வாக்கு வங்கி வளர்ந்துள்ளதா.. என்பதைக் கடந்த 15 வருட தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

1998-ம் ஆண்டு பா.ஜ.க-வின் வெற்றி சதவிகிதம் என்பது குஜராத்தில் 44.8 சதவிகிதம்தான். 2002-ம் ஆண்டு மோடி முதல் முதலாக முதல்வராகும்போது இந்த விகிதம் 49.9 சதவிகிதமாக மாறுகிறது. இந்த 5 சதவிகித அதிகரிப்புதான் பா.ஜ.கவை குஜராத்தின் அசைக்க முடியாத கட்சியாக பா.ஜ.க-வை வளர்த்தெடுக்கிறது. அதன்பின் தனது ஓட்டு வாரியான வெற்றி விகிதத்தை 49 சதவிகிதத்துக்கு மேலாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க. 

2012-ம் ஆண்டு மோடி முதல்வரானபோது பெற்ற வாக்குகளைவிட 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 15 சதவிகித வாக்குகளை பெற்றது பா.ஜ.க. 2012-ம் ஆண்டு பா.ஜ.க-வின் வாக்குவங்கி 91 லட்சம் ஆனால், 2014-ம் ஆண்டோ வாக்குவங்கி 1 கோடியே 5 லட்சம். இந்த புள்ளிவிவரங்கள் குஜராத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளதையே காட்டுகிறது. இதெல்லாம் ஒரு கட்சியின் வளர்ச்சி. ஆனால், மாநிலத்தின் நிலை என்ன உண்மையாலுமே மாநிலம் வளர்ந்துள்ளதா என்றால் அது பதில் தெரியாத கேள்வியாகதான் உள்ளது. 

குஜராத் தேர்தல்

வைப்ரன்ட் குஜராத் என தேடித்தேடி எந்த விஷயங்களில் உயர் தரவரிசையில் இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்கிறதோ, இந்த விஷயங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 27 ஆண்டுகள் குஜராத்தை ஆள்பவர்கள். 

கடந்த அக்டோபர் மாதம் 3 நாள்களில் 18 குழந்தைகள் குஜராத் மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர். இந்தியாவில் உள்ள எடைகுறைவு கொண்ட சரியான ஊட்டச்சத்து கிடைக்காத மாநிலங்களில் மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 25-வது இடம் குஜராத்துக்குதான். 

எடை குறைவான குழந்தைகளின் தேசிய சராசரியே 35 சதவிகிதம்தான். குஜராத்தின் சதவிகிதமோ 39. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இந்திய நகரங்களில் டாப் 10 இடங்களில் குஜராத்தின் நகரங்களும் உள்ளன. ஆள் கடத்தலில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது குஜராத். ஆசிட் வீச்சு குற்றங்களில் தேசிய தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளது. 

வடக்கு கோட்புரா பகுதியில் தான் நானோ தொழிற்சாலை நிறுவப்பட்டு இந்தியாவின் விலைகுறைந்த கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அங்குள்ள மக்கள் தினசரி தண்ணீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பிரதான குற்றச்சாட்டாக முன் வைக்கிறார்கள். அடிப்படைத் தேவைகள் கிடைப்பதில்லை என்கிறார்கள். 100 ஆண்டு பழைமையான பகுதி இது. ஆனால், இன்று குஜராத் வரைபடத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே இது உள்ளது.

மோடி

இந்தியாவின் சொகுசுப் பயணத்தை உறுதி செய்யும் இந்தப் பகுதியின் அடிப்படைத் தகுதி கேள்விக்குறி. மொத்தத்தில் குஜராத்தின் வளர்ச்சி என்பது குஜராத் மக்களின் வளர்ச்சியாக இல்லை. முதலாளிகளின் வளர்ச்சியாக இருக்கிறது என்பதுதான் உண்மை. 

இந்தியாவில் குறைந்த வேலைவாய்ப்பின்மை கொண்ட மாநிலம் என்று குஜராத்தை முன்னிலைப்படுத்துபவர்கள். நானோ தொழிற்சாலை அமைந்துள்ள அதிக பேருக்கு வேலைகிடைக்கும் என்று கூறப்பட்ட இடத்தில் 2ல் ஒரு இளைஞன் வேலைவாய்ப்பின்றி இருப்பது சோகம். கள்ளச்சந்தையில் மது விற்பனை தலைவிரித்தாடுகிறது. 

இதுவரை முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடும் 977 வேட்பாளர்களில் 198 பேர் 5 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ள கோடீஸ்வரர்கள். இதில் அதிகப்பட்சமாக 72 பேர் பா.ஜ.க-வினர். 60 பேர் காங்கிரஸ்காரர்கள். குஜராத்தில் பா.ஜ.க வளர்கிறது. மக்கள் வளர்கிறார்களா, மோடி குஜராத்தைக் காட்டி இந்தியாவின் பிரதமராகிறார். அவரை பிரதமராக்கிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லையே என்ற விஷயங்கள் தொடர்ந்து தீராத பிரச்னையாக உள்ளன. அமித் ஷா, மோடி என குஜராத்தை பா.ஜ.க-வின் தேசிய முகங்கள் ஆக்கிரமித்து வருகின்றன. 

குஜராத் மாடல்தான் இந்தியாவுக்கு பிரதமரை தந்தது என்றால், குஜராத்தான் இப்போது இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்குமா.. காங்கிரஸ் - பா.ஜ.க-வின் பலம் - பலவீனம் என்ன என்பதை அடுத்து பார்ப்போம்.

(களம் விரியும்..)

https://www.vikatan.com/news/coverstory/109701-gujarat-election-2017-is-gujarat-really-a-vibrant-state-gujaratelections2017.html

  • தொடங்கியவர்

பி.ஜே.பி-யை கலக்கத்தில் ஆழ்த்திய கருத்துக்கணிப்பு! - குஜராத் கள நிலவரம் #GujaratElections2017

 
 

ஒகி புயல் பாதிப்பு

ரபரப்பாக சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தில் 'ஒகி' புயல் தாக்கத்தால், ஓரிரு இடங்களில் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

 

'ஒகி' புயல் செவ்வாய்க்கிழமை வரை குஜராத் மாநிலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தநிலை இன்று மாறிவிட்டது. சூரத் கடல் பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் புயல் சின்னம் வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. அகமதாபாத் வானிலை ஆய்வு மையம் இதனை உறுதிசெய்துள்ளது. அதிவேகத்தில் வீசிய காற்று மற்றும் கடல்பகுதியின் மேற்பரப்பில் குளிர்ந்த சூழ்நிலை போன்ற சாதகமற்ற நிலைமை காரணமாக ஒகி புயல் வலுவிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரத் மற்றும் வடக்கு குஜராத்தின் சில பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஒகி புயல் வலுவிழந்துள்ள போதிலும், வடக்கு மகாராஷ்டிரா - தெற்கு குஜராத் கடல் பகுதியில் இன்றிரவுவாக்கில் கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக, கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, குஜராத்தில் மோசமான வானிலை காரணமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) ரத்து செய்யப்பட்டது. மோர்பி, துங்கிராத், சுரேந்திர நகர் உள்ளிட்ட இடங்களில் ராகுல் பிரசாரம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புயல் அச்சுறுத்தலால் அப்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் அவர் தன் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

குஜராத் தேர்தல் - பி.ஜே.பி. பிரசாரம்

இதேபோல் சூரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டது. பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மேற்கொள்ளவிருந்த பிரசாரப் பேரணிகளும் புயல் அச்சுறுத்தலால் ரத்துசெய்யப்பட்டன. குஜராத் சட்டசபைத் தேர்தல் காங்கிரஸுக்கும், பி.ஜே.பி-க்கும் இடையேயான போட்டி என்பதை விடவும், குஜராத் மக்களின் எதிர்காலத்தைப் பற்றியது என்று ராகுல் காந்தி ஏற்கெனவே தன் பிரசாரத்தின்போது தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திஇந்நிலையில், குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்து அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கும், பி.ஜே.பி-க்கும் ஏறக்குறைய சமபலம் வாய்ந்ததாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பி.ஜே.பி. கூடாரத்தை மேலும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தேர்தல் பிரசார உத்தியை வேறுவகையில் மாற்றி, பிரசார பேரணியை மேலும் தீவிரப்படுத்த பி.ஜே.பி. முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அக்கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அடுத்த ஓரிரு நாளில் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கவிருக்கும் ராகுல் காந்திக்கு, குஜராத் தேர்தல் மிகுந்த சவால் நிறைந்த ஒன்றாகவே அமைந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே ராகுல்காந்தி, குஜராத்தின் பல்வேறு நகரங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குஜராத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருக்கும்பட்சத்தில், அது ராகுலுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசாக அமையும். ஆனால், பி.ஜே.பியோ இந்தத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக, நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை பிரசாரக் களத்தில் இறக்கி விட்டுள்ளது. 

 

குஜராத்தில் டிசம்பர் 9-ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள 89 தொகுதிகளில் நாளை பிரசாரம் முடிவடைய உள்ளது. இரண்டாம்கட்டமாக 93 தொகுதிகளில் வரும் 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. குஜராத் மக்களின் தலையெழுத்து என்னவாகப் போகிறது என்பது அடுத்த ஒருவார காலத்திற்குள் முடிவாகி விடும்.

https://www.vikatan.com/news/india/109975-ockhi-cyclone-disturbs-election-campaigns-of-political-parties-in-gujarat.html

 

 

முடிந்திருக்கும் முதல்கட்டப் பிரசாரம்... மக்களின் மனநிலை என்ன? - குஜராத் கள நிலவரம் பகுதி 6 #GujaratElections2017

 
 
Chennai: 

குஜராத்தில் முதல்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள 89 தொகுதிகளில் பிரசாரம் முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, சூரத்தில் இன்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றி பி.ஜே.பி. வேட்பாளர்களுக்கு வாக்குசேகரித்தார்.

நாட்டின் வளர்ச்சியே பி.ஜே.பி-யின் நோக்கம் என்று அப்போது அவர் கூறினார். சூரத்தில் ஏற்கெனவே பிரதமர் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், புயல் பாதிப்பால் இரு தினங்களுக்கு முன் அவர் தன் பிரசாரத்தை ஒத்திவைத்திருந்த நிலையில், டிசம்பர் 7-ம் தேதி பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

 

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும், சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது என்றும், தன் முடிவுகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா முழுவதும் உள்ள 125 கோடி மக்கள்தான் தன் எஜமானர்கள் என்று தெரிவித்த பிரதமர், அவர்களுக்குப் பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

சூரத் மக்களுக்கு ஏற்கெனவே தொடர்ச்சியாக மின்சார இணைப்பு கிடைக்காத நிலை இருந்தது என்றும், பி.ஜே.பி. ஆட்சியில்தான் மின் இணைப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.

குஜராத் தேர்தல் - மோடி - ராகுல்

இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராஜ்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குஜராத்தில் உள்ள உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப பி.ஜே.பி. முயற்சி செய்கிறது என்று குற்றம்சாட்டினார். பி.ஜே.பி. அளித்த அட்சய தின வாக்குறுதி நாட்டின் எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்றார் அவர். குஜராத்தின் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் கட்சி விரிவான திட்டத்தைக் கொண்டுள்ளது என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க ஆக்கபூர்வமான தீர்வுகளை காங்கிரஸ் கட்சி தன்னகத்தே வைத்துள்ளது என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

முன்னாள், இந்நாள் பிரதமர்களின் பிரசாரத்திற்கு இடையே, குஜராத் தேர்தல் குறித்து, டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர். சர்வே நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில், மீண்டும் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், பி.ஜே.பி. எதிர்பார்ப்பது போன்று 150 இடங்களைப் பிடிப்பது கடினம் என்று அந்தக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 106 முதல் 116 தொகுதிகள் வரை பி.ஜே.பி. கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி தற்போதுள்ள எண்ணிக்கையை விடவும் சற்றே அதிகமாக, அதாவது 73 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்று அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. 

இந்தத் தகவல் பி.ஜே.பி-யினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காது என்ற தகவல் அக்கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 684 வாக்குச்சாவடிகள் அடங்கிய பகுதிகளில் ஆறாயிரம் பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே முதல்கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் படையினரும் போதிய அளவில் பணியமர்த்தப்பட்டு, வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறார்கள். 

 

தேர்தல் கருத்துக் கணிப்புகள் எதுவாக இருந்தாலும், வாக்காளர்கள் மனங்களில் என்ன இருக்கிறது என்பதை வாக்களிக்கவிருக்கும் அவர்கள் மட்டுமே அறிவர்.

https://www.vikatan.com/news/coverstory/110100-gujarat-congress-and-bjp-lock-horn-in-the-assembly-poll.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.