Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரெய்னாவுக்கு 'எஸ்'... அஷ்வினுக்கு 'நோ'... சி.எஸ்.கே முதல் மும்பை இந்தியன்ஸ் வரை யாரை ரீடெய்ன் செய்யலாம்? #IPL2018 #CSK

Featured Replies

ரெய்னாவுக்கு 'எஸ்'... அஷ்வினுக்கு 'நோ'... சி.எஸ்.கே முதல் மும்பை இந்தியன்ஸ் வரை யாரை ரீடெய்ன் செய்யலாம்? #IPL2018 #CSK

 
 
Chennai: 

'தி பாய்ஸ் ஆர் பேக்' பி.ஜி.எம்தான் இப்போது வைரல். சென்னை சூப்பர் கிங்ஸின் கம்பேக் கிரிக்கெட் ரசிகர்களின் எனர்ஜியை அதிகரித்துள்ளது. நேற்று கூடிய ஐ.பி.எல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அதனால் தோனி, மீண்டும் மஞ்சள் ஜெர்சி அணிந்து, சேப்பாக்கத்தில் வலம் வருவது உறுதியாகிவிட்டது. வேறு யாரையெல்லாம் சென்னை தக்கவைத்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும். மற்ற அணிகள் யாரையெல்லாம் தக்கவைத்துக்கொள்வார்கள்? #IPL2018

Player retention-யைப் பொறுத்தவரையில், சில விதிமுறைகள் இருக்கிறது. ஒவ்வொரு அணியும் 5 வீரர்கள்வரை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அவற்றுள் 2 மட்டுமே வெளிநாட்டு வீரர்களாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் 3 வீரர்கள்வரை மட்டுமே நேரடியாகத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்திய அணியில் விளையாடிய வீரர்கள் அதிகபட்சம் 3 பேர் இருக்கலாம். மற்ற 2 வீரர்களை 'Right to match' முறை மூலம் ஏலத்தின்போது தக்கவைத்துக்கொள்ளலாம். ஒரு அணி மூன்றுக்கும் குறைவான வீரர்களையே தக்கவைத்திருந்தால்,  'Right to match' கார்டை மூன்று முறை வரை பயன்படுத்தலாம். 

 

#IPL2018

ஏலத்தின்போது ஒவ்வொரு அணியும் 80 கோடி செலவு செய்ய அனுமதிக்கப்படும். அணிகள் வீரர்களைத் தக்கவைத்திருந்தால், அதற்கான தொகை அந்த 80 கோடியிலிருந்து குறைக்கப்படும். தக்கவைக்கப்படும் முதல் வீரருக்கு 12.5 கோடியும், இரண்டாவது வீரருக்கு 8.5 கோடியும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு அணி 3 வீரர்களை நேரடியாகத் தக்கவைக்க 33 கோடிவரை செலவிடலாம். இந்திய அணியில் விளையாடாத ஓர் உள்ளூர் வீரரைத் தக்கவைக்க 3 கோடி ரூபாய் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், எல்லா அணிகளும் நட்சத்திர வீரர்களையே தக்கவைத்துக்கொள்ள விரும்பும். 

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, இதுவரை ஐ.பி.எல் அணிகள் எப்படி ரீடெய்ன் செய்துள்ளன என்பதையும் அலசி எழுதியுள்ளோம். அதுமட்டுமின்றி, எந்த வீரர்களைத் தக்கவைப்பது அணிக்கு நன்மை என்று பார்ப்பதும் அவசியம். எந்தந்த அணிகள், யாரைத் தக்கவைக்கலாம்? பார்ப்போம்...

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை அணியில் இந்திய நட்சத்திரங்கள் ஏராளம். முன்பெல்லாம், மலிங்கா, பொல்லார்டு போன்ற வெளிநாட்டு வீரர்களால்தான் வெற்றிபெறும். இப்போதெல்லாம் இந்திய வீரர்கள்தான் அணியின் மேட்ச் வின்னர்கள். கேப்டன் ரோஹித் ஷர்மா, இப்போது இந்திய அணியின் துணைக் கேப்டன். இலங்கை தொடருக்கு கேப்டனும் ஆகிவிட்டார். அவர் default சாய்ஸ். அவரோடு ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பூம்ரா ஆகியோரையும் தக்கவைத்துக்கொள்வார்கள். டி-20 ஸ்பெஷலிஸ்ட்களான இருவரும் நிச்சயம் பெரும் தொகைக்கு ஏலம் போவார்கள். ஹர்திக் ஏலத்தொகையில் புதிய சாதனைகூடப் படைக்கலாம். அதனால் அவர்களை ஏலத்துக்கு விடுவது புத்திசாலித்தனம் அல்ல. என்வே ரீடெய்ன் செய்வதற்கான 3 ஆப்ஷன்கள் இவர்களாகத்தான் இருப்பர்.  

Mumbai Indians

'Right to match' கார்டு மூலம் பொல்லார்டை மும்பை வாங்கக்கூடும். 10 சீசன்களிலும் அந்த அணிக்காக ஆடிய ஒரே வீரர் ஹர்பஜன். ஆனால், போன சீசனில் அவ்வப்போது ஓரங்கட்டப்பட்டார். அதனால் தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை. மலிங்கா, பட்லர் போன்றவர்கள் போன சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை. ஏற்கெனவே 3 இந்திய வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டதால், இனி இன்னொரு இந்திய வீரரைத் தக்கவைக்க முடியாது. எனவே இரண்டாவது  'Right to match' கார்டு குரூனல் பாண்டியாவுக்குப் பயன்படுத்தப்படலாம். ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு நல்ல கிராக்கி இருக்கும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

வீரர்களைத் தக்கவைக்கும் முடிவுக்கு கொல்கத்தாவுடன் சேர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தது பஞ்சாப் அணி. எப்போதுமே அவர்கள் இந்த முறையை விரும்பியதில்லை. கடந்தமுறைகூட மனன் வோஹ்ராவை மட்டுமே தக்கவைத்தனர். ஆனாலும், மேக்ஸ்வெல், மில்லர் போன்ற பெரிய பெயர்கள் இருப்பதால் அவர்களை தக்கவைக்கக்கூடும். இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே சாத்தியம் என்பதால், ஸ்டோய்னிஸ் ரிலீஸ் செய்யப்படலாம். ப்ரீத்தி ஜிந்தாவின் ஃபேவரைட் சான் மார்ஷ்-க்கு அவ்வளவு பெரிய தொகை வொர்த் இல்லை. ஆனாலும், அவர் ஏலத்தில் பஞ்சாப் அணியால் வாங்கப்படுவார் என்பது உலகறியும்!

Kings XI Punjab

இந்திய வீரர்களில் அக்சர் பட்டேல் மட்டுமே தக்கவைத்துக்கொள்ளப்படக்கூடியவர். ஆனால், அவருக்கும் அது பெரிய தொகை. எனவே Right to match கார்டு மூலம் அவர் வாங்கப்படலாம். கிங்ஸ் லெவன் அணி ஒரு வீரரைக்கூட தக்கவைக்காமல் இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். முரளி விஜய், சஹா என யாரும் சோபிக்காததால், புதிய அணி உருவாக்கவே நினைப்பார்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

இவர்களுக்கும் இந்த ஃபார்மெட் பிடிக்கவில்லை. ஆனால், தக்கவைத்துக்கொள்ளத் தகுதியான வீரர்கள் இருக்கிறார்கள். ஓராண்டு தடைக்குப்பின் திரும்பும் ரஸ்ஸல் அணியின் ட்ரம்ப் கார்டாக இருப்பார். அவர் தக்கவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இரண்டாவது வெளிநாட்டு வீரராக சுனில் நரேன், மோர்னே மோர்கல், ஷகிப் என நிறைய ஆப்ஷன்கள். ஆனால், கிறிஸ் லின் தேர்வு செய்யப்படுவதே புத்திசாலித்தனம். மிகச்சிறந்த டி-20 பேட்ஸ்மேன். காயங்கள் மட்டும் இல்லையெனில் டேவிட் வார்னர் போன்று அச்சுறுத்தல் அளிக்கக்கூடியவர்.

KKR

மூன்றாவது வீரராக மனீஷ் பாண்டே. வயது, திறமை அனைத்தும் உள்ளன. அவரே சரியான சாய்ஸாக இருப்பார். Right to match கார்டை குல்தீப், உத்தப்பா, உமேஷ் யாதவ் ஆகியோருக்குப் பயன்படுத்தலாம். கம்பீர்...? வயதாகிவிட்ட ஒரே காரணத்துக்காக தாதாவையே கழட்டிவிட்டவர்கள். ரீடெய்ன் செய்து பெரிய தொகை கொடுக்கவேண்டியதில்லை. 36 வயதாகிவிட்டதால், ஏலத்தில் குறைந்த தொகைக்கே எடுக்கப்படுவார். வேண்டுமானால், Right to match கார்டு பயன்படுத்தலாம். அதற்கே தேவை ஏற்படாது. Base price-க்கு வாங்கப்பட வாய்ப்பு அதிகம். வாங்கப்படாமலும் போகக்கூடும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் தக்கவைக்கப்படுவார்கள் என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்ததே. பேட்டிங்கில் பலமாக இருந்தாலும், பௌலிங் சொதப்பல்தான் ஆர்.சி.பியை கடைசி வரை பாதித்தது. அதனால், இந்த முறை பௌலிங் யூனிட்டுக்கு முக்கியத்துவம் தரப்படலாம். மூன்றாவது ஆப்ஷனாக சாஹல் அல்லது ஸ்டார்க் டிக் செய்யப்படலாம். தக்கவைக்கப்பட்டவர் அல்லாமல் மற்றவர் Right to match கார்டு மூலம் வாங்கப்படுவது பௌலிங்கை பலப்படுத்தும்.

RCB

இன்னொரு Right to match கார்டை, கே.எல்.ராகுல் அல்லது கேதார் ஜாதவுக்குப் பயன்படுத்தலாம். ராகுல் எந்த இடத்திலும் ஆடக்கூடியவர் என்பதாலும், அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடியவர் என்பதாலும், அவருக்கே பயன்படுத்துவார்கள். கெய்ல், வாட்சன்...போதும் ஆர்.சி.பி. இனியாவது திருந்துங்க!

டெல்லி டேர்டெவில்ஸ்:

இளம் அணியாக வலம்வர நினைத்து பெரிய தோல்வி கண்டனர். டி காக், ஸ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர், சாம்சன், ரிசப் பன்ட் எனப் பல நம்பிக்கை நட்சத்திரங்கள். ஆனால், அவர்களுக்குப் பெரிய தொகை கொடுப்பது ஏலத்தில் பின்னடைவைத்தரும். வேண்டுமானால், கிறிஸ் மோரிசை மட்டும் தக்கவைக்கலாம். கடந்த ஏலத்திலேயே 7 கோடிக்குப் போனவர். பெரும்பாலும் யாரையும் தக்கவைக்காமல் போக வாய்ப்புண்டு.

DD

மோரிஸையும் தக்கவைக்காத பட்சத்தில் Right to match கார்டை 3 முறை பயன்படுத்தலாம். அதன்மூலம், அவரை வாங்க முற்படலாம். மற்ற இரண்டையும் ரிசப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், டி காக் ஆகியோரில் இருவரை வாங்கப் பயன்படுத்தலாம். நாயர் டி-20 ஃபார்மட்டில் எந்த அளவுக்கு ஜொலிப்பார் என்பது கேள்விக்குறியே. அதனால், ரிஸ்க் எடுப்பது நல்லதல்ல.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர், ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் என 3 மேட்ச் வின்னர்களும் கட்டாயம் தக்கவைக்கப்படுவார்கள். வார்னர் இருப்பதால் Right to match கார்டின்மூலம் ஒரு வெளிநாட்டு வீரரைத்தான் வாங்க முடியும். வில்லியம்சன், முஸ்தாஃபிசுர் போன்ற வீரர்கள் இருந்தாலும், அதை 19 வயது ரஷித் கானுக்காகப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். கடந்த சீசனில் 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார் இந்த ஆஃப்கானிஸ்தான் இளைஞர். அனைத்து அணிகளும் நிச்சயம் போட்டி போடுவார்கள். அதனால் அவரை மடக்கிவிட சன்ரைசர்ஸ் மும்முரம் காட்டவேண்டும்.

SRH

யுவராஜ் சிங்கின் வாய்ப்பு எல்லா இடத்திலும் மங்கிவிட்டது. இந்த ஐ.பி.எல் தொடரிலும் அது தொடரலாம். சன்ரைசர்ஸ் அணி, அவரைப் பயன்படுத்தாது என்றே தோன்றுகிறது. அதனால், இரண்டாவது Right to match கார்டை, கடந்த சீசனில் கலக்கிய சித்தார்த் கௌல், முகம்மது சிராஜ் அல்லது தமிழக ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் யாருக்கேனும் பயன்படுத்தலாம். 

ராஜஸ்தான் ராயல்ஸ்:

மீண்டும் திரும்பும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரீடெய்ன் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. 2015-ம் ஆண்டு அணியில் இருந்த வீரர்களை அவர்களும் சென்னையும் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் கடந்த ஆண்டு வேறு அணியில் ஆடாதவர்களாக இருக்கவேண்டும். உதாரணமாக, சஞ்சு சாம்சன் 2015-ல் ராஜஸ்தான் அணிக்காக ஆடினார். ஆனால், அந்த அணி தடைசெய்யப்பட்ட காலத்தில், அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிவிட்டார். அவரை டெல்லி அணி தக்கவைக்கலாம். ஆனால், ராஜஸ்தான் அணியால் முடியாது. சென்னை அணிக்கும் இதேதான். புனே சூப்பர்ஜெயின்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் ஆடிய வீரர்களை வேண்டுமானால் அவர்கள் தக்கவைத்துக்கொள்ளலாம். 

RR

இப்படிப் பார்க்கையில் ராயல்ஸ் அணிக்கு எஞ்சியிருப்பவர்கள் ரஹானே, ஃபால்க்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வெகுசிலரே. ஃபால்க்னர் அவுட் ஆஃப் பார்ம். கண்டிப்பாக அவர் எடுக்கப்படுவது சந்தேகமே. ரஹானே - ராஜஸ்தான் அணியின் தூண். நிச்சயம் அவரை தக்கவைப்பதில் விருப்பம் காட்டுவார்கள். இரண்டாவது வீரராக ஸ்மித்துக்கு 8.5 கோடி அதிகம். எனவே, அவரை ஏலத்தில் விட்டு Right to match மூலம் திரும்பப் பெறலாம். இன்னொரு Right to match வாய்ப்பை தவால் குல்கர்னிக்குப் பயன்படுத்தலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐ.பி.எல் சிங்கங்கள் மீண்டும் வந்துவிட்டன. கம்பேக்கில் கலக்கக் காத்திருக்கிறது சி.எஸ்.கே. தோனி என்ற பெயர் இல்லாமல் சி.எஸ்.கே முழுமை பெறாது. அந்தப் பெயரை ஐ.பி.எல் நிர்வாகமே ஆட்டோமேடிக்காக டிக் செய்துவிடும். அடுத்தது ரெய்னா. இருவரும் நிச்சயம் லிஸ்டில் இருப்பார்கள். மூன்றாவது ஆப்ஷன் யார் என்பதில்தான் மிகப்பெரிய கேள்வி எழுகிறது. அஷ்வின் வேண்டும் என்று பலரும் நினைக்கலாம். சிலர் ஜடேஜா, பிராவோ என ஆல்ரவுண்டர்களுக்கு சப்போர்ட் செய்யலாம். பிராவோவை தேர்வு செய்வதுதான் அணிக்கு நல்லது. பிராவோ மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்பதால், அணி நிர்வாகமும் அவரை தக்கவைக்கவே விரும்பும். 

CSK

இரண்டு Right to match வாய்ப்புகள் யாருக்குப் பயன்படுத்தலாம்? டுபிளஸ்ஸிஸ் இப்போதெல்லாம் பெரிய அளவில் சோபிப்பதில்லை. டுவைன் ஸ்மித் - ரிஸ்க் எடுக்கவேண்டும். மெக்குல்லம் - சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், இன்னமும் அவரால் பௌலர்களை அலறவிடும் இன்னிங்ஸ்கள் ஆடமுடியும். ஃபீல்டிங்கிலும் மிகப்பெரிய பலம். ஏற்கெனவே, இப்படியொரு சூழலில் சென்னை அணி மைக் ஹஸ்ஸியை வாங்கியுள்ளது. அதனால், இம்முறை மெக்குல்லம் வாங்கப்படலாம். அஷ்வினா? ஜடேஜாவா? பௌலராக, அஷ்வினைவிட வாஷிங்டன் சுந்தர் நல்ல ஆப்ஷன். அதனால் அவரை முயற்சி செய்யலாம். பேட்டிங்கிலும் அணிக்குப் பலம் சேர்ப்பார். ஆக, இரண்டாவது Right to match கார்டு ஜடேஜாவை சென்னைக்கு அழைத்துவர உதவும்.

 

இவை, நமது எதிர்பார்ப்பும், இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கணிப்பும்தான். ஒவ்வொரு அணியும் இப்படியே முடிவு எடுக்குமா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. பல முக்கிய வீரர்கள் புறக்கணிக்கப்படலாம். உலகறியாத பல இளம் வீரர்கள் கோடிகளில் ஏலம் போகலாம். விளையாட்டு உலகின் சிறப்பே சர்ப்ரைஸ்கள்தானே. அதிலும், ஐ.பி.எல் வேறு லெவல் சர்ப்ரைஸ்கள் கொடுக்கும் தொடர். எது வேண்டுமானாலும் நடக்கலாம்!

https://www.vikatan.com/news/sports/110056-ipl-teams-might-retain-these-players.html

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

ஐபிஎல் அணிகள் யாரைத் தக்கவைத்துக்கொள்ளும்? யாரை வெளியேற்றும்?

 

 
dhoni8181

 

எதிர்வரும் ஐபிஎல் போட்டியில், ஓர் அணி, தன்னிடம் இருக்கும் வீரர்களில் 5 பேரை ஏலமின்றி தக்கவைத்துக் கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் முடிவு செய்துள்ளது பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. 

நாளை (ஜனவரி 4) ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை, யார் யாரைத் தக்கவைத்துகொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளன என்பது அறிவிக்கப்படும். அதேபோல எந்தெந்த நட்சத்திர வீரர்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளது என்பதும் நாளை தெரியவரும். இந்நிகழ்வு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.

புதிய விதிமுறையின்படி ஒவ்வொரு அணியும் 3 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம். இரு வீரர்களை ரைட் டூ மேட்ச் முறையில் (ஆர்டிஎம்) ஏலத்தில் தேர்வு செய்துகொள்ளலாம். இது, தடைக்காலம்
முடிந்து 2018-ஆம் ஆண்டு சீசனில் போட்டிக்குத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேரில் அதிகபட்சமாக மூன்று இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். அதேபோல சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத இரு இந்திய வீரர்களை மட்டுமே
தக்கவைத்துக்கொள்ளலாம்.

இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் வசம் இருந்த வீரர்களை ஏலமின்றி தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

புணே, குஜராத் அணிகளில் விளையாடிய வீரர்களில் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், ஸ்மித், மெக்குல்லம், டுபிளெஸ்ஸி போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றார்கள். எனவே இந்த வீரர்களைத் தேர்வு செய்ய சென்னை, ராஜஸ்தான் அணிகள் மிகுந்த ஆர்வம் செலுத்தும்.

jadeja.jpg

மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொண்டால் ஓர் ஐபிஎல் அணி வசம் உள்ள ரூ. 80 கோடியில் ரூ. 33 கோடி செலவாகிவிடும். மீதமுள்ள தொகையைக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்கவேண்டும். இரு வீரர்களை ரைட் டூ மேட்ச் கார்ட் வழியாகத் தேர்வு செய்யலாம். 

சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள் இருவரை மட்டும் தக்கவைத்துக்கொண்டால் முதலில் தேர்வாகும் வீரருக்கு ரூ. 12.5 கோடி சம்பளம் வழங்கப்படவேண்டும். அடுத்துத் தேர்வாகும் வீரருக்கு ரூ. 8.5
கோடி. சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள் மூன்று பேரைத் தக்கவைத்துக்கொண்டால் முதல் வீரருக்கு ரூ. 15 கோடியும், 2-வது வீரருக்கு ரூ. 11 கோடியும் 3-வது வீரருக்கு ரூ. 7 கோடியும் சம்பளமாக
வழங்கப்படவேண்டும்.  

*

சென்னை சூப்பர் கிங்ஸ் 

தக்கவைத்துக்கொண்டும் ஏலத்தில் மீதமுள்ள இரு வீரர்களைத் தேர்வு செய்யவும் வாய்ப்புள்ள வீரர்கள் -  

தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, டுபிளெஸ்ஸி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு விளையாட வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எம்.எஸ்.தோனி, ரெய்னா ஆகியோரைத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் இயக்குநர் ஜார்ஜ் ஜான் ஒரு பேட்டியில் கூறியதாவது: தோனி, ரெய்னா ஆகிய இருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளோம். மூன்றாவது வீரர் குறித்த முடிவை இனிமேல்தான் எடுக்கவேண்டும். ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 4-ம் தேதிக்குள் வழங்கவேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. டிவைன் பிராவோ, மெக்குல்லம், டுபிளெஸ்ஸி, ஆண்ட்ரூ டை போன்ற வீரர்களும் எங்கள் பரிசீலனையில் உள்ளார்கள். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் போட்டியை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு வருகிறோம் என அவர் பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில் மூன்றாவது வீரராக ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராவோ, டுபிளெஸ்ஸி ஆகிய இருவரையும் ஏலத்தில் ரைட் டூ மேட்ச் கார்டு (ஆர்டிஎம்) வழியாகத் தேர்வு செய்துகொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின், வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் தேர்வு செய்யவும் சென்னை அணி ஆர்வம் காட்டும் எனத் தெரிகிறது. 

ipl9090.jpg

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா, கிருனால் பாண்டியா, பொலார்ட், பூம்ரா

ரோஹித் சர்மா, பாண்டியா, கிருனால் பாண்டியா ஆகிய மூவரையும் தக்கவைத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. குருனால் பாண்டியா இன்னும் இந்திய அணியில் விளையாடாததால் அவரை மூன்றாவது வீரராக ரூ. 7 கோடிக்குப் பதிலாக ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்துகொள்ளலாம். பொலார்ட், பூம்ரா ஆகிய இருவரையும் ஏலத்தில் ஆர்டிஎம் முறையில் தேர்வு செய்துகொள்ள மும்பை அணி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், யூசுப் பதான்

ரஸல், நரைன் ஆகிய இரு வீரர்களையும் தக்கவைத்துக்கொண்டு இதர மூன்று பேரை ஏலத்தில் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012, 2014-ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணியை ஐபிஎல் சாம்பியன் ஆக்கிய கெளதம் கம்பீர், இந்தமுறை ஏலத்தில் குறைந்த தொகையில் தேர்வாகவே வாய்ப்புண்டு. 

 

இதுவரை கொல்கத்தா அணி நிர்வாகம் என்னிடம் பேசவில்லை. கேகேஆர் அணியில்தான் நான் நீடிப்பேனா எனத் தெரியவில்லை. வேறு அணியில் விளையாடவும் தயாராக உள்ளேன். கேகேஆர் அணிக்காக நான் முடிந்ததைச் செய்துவிட்டேன். வேறு அணியில் விளையாடுவதில் தவறில்லை என்று ஆச்சர்யப்படும் விதத்தில் பேட்டியளித்துள்ளார் கம்பீர். 

36 வயதாகிவிட்டதாலும் தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகாத காரணத்தாலும் கம்பீரை அதிக விலை கொடுத்து வாங்க கேகேஆர் அணி தயாராக இல்லை என்று தெரிகிறது. இந்த வருட ஏலத்தில் கம்பீரின் தேர்வு அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும்.

gayle_kohli1.jpg

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி, டிவில்லியர்ஸ், சாஹல், ராகுல், சர்பராஸ் கான்.

முதலில் இந்த ஐந்து பேரைத் தேர்வு செய்துவிட்டு கிறிஸ் கெய்லை ஏலத்தில் குறைந்த தொகைக்குத் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி நல்ல ஃபார்மில் இருக்கும் சாஹல், ராகுல், சர்பராஸ் கான் ஆகியோரைத் தேர்வு செய்யும் மனநிலையில் உள்ளது ஆர்சிபி நிர்வாகம். அல்லது சர்பராஸ் கானுக்குப் பதிலாக கெதர் ஜாதவைத் தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரஹானே, ஸ்மித்

இந்த இருவரையும் ரைட் டூ மேட்ச் கார்டு வழியாகத் தேர்வு செய்ய ராஜஸ்தான் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 2015-ல் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஷேன் வாட்சன், கிறிஸ் மாரிஸ், சஞ்சு சாம்சன், டிம் செளதி, கருண் நாயர், பென் கட்டிங் ஆகியோர் வேறு அணிகளுக்குச் சென்றுள்ளதால் அவர்களை மீண்டும் தேர்வு செய்யமுடியாமல் தவிக்கிறது ராஜஸ்தான். இதனால் இந்த வருடம் ஒரு புதிய ராஜஸ்தான் அணியை எதிர்பார்க்கலாம்.   

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர், புவனேஸ்வர் குமார், ரஷித் கான், ஷிகர் தவன், விஜய் சங்கர்.

முதல் மூன்று பேரைத் தக்கவைத்துக்கொண்டு இதர இருவரை ஏலத்தில் ரைட் டூ மேட்ச் கார்டு மூலமாகத் தேர்வு செய்யலாம். ஷிகர் தவன், விஜய் சங்கர் தவிர கேன் வில்லியம்சனை ஏலத்தில் தேர்வு செய்யவும் சன்ரைசர்ஸ் ஆர்வமாக இருக்கும். எந்த ஐந்து பேரைத் தேர்வு செய்யவேண்டும் என்கிற குழப்பம் இல்லாத அணிகளில் இதுவும் ஒன்று. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

டேவிட் மில்லர், மேக்ஸ்வெல், அக்‌ஷர் படேல். 

கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் இருமுறை மட்டுமே பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது பஞ்சாப் அணி. எனவே யாரையும் தக்கவைத்துக்கொள்ளாமல் இந்த மூவரையும் ஆர்டிஎம் முறையில் தேர்வு
செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. 

தில்லி டேர்டெவில்ஸ்

கிறிஸ் மாரிஸ், ரிஷப் பந்த், குயிண்டன் டி காக், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன்.

டி20-யில் அசத்தக்கூடிய கிறிஸ் மாரிஸ், ரிஷப் பந்த் ஆகியோரைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புண்டு. 3 இளம் வீரர்களான டி காக், ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோரை ஆர்டிஎம் முறையில் தேர்வு செய்யலாம். நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லை என்பதால் ஸ்டோக்ஸைப் பெரிய விலைக்கு ஏலத்தில் தேர்வு செய்யும் என நம்பப்படுகிறது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/03/ipl-player-retention-2018-all-you-need-to-know-2838136--2.html

  • தொடங்கியவர்

’ஐ.பி.எல்-லில் தக்கவைக்கும் 3 வீரர்கள்?’ - சி.எஸ்.கே கொடுத்த க்ளூ!

 

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கிறது. 

Dhoni_15014_15026.jpg

 

 

ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கின்றன. 

தடை முடிந்து ஐ.பி.எல். களத்துக்குத் திரும்பும் சி.எஸ்.கே. மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. அந்த இரு அணிகளிலும் விளையாடிய வீரர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த ஐ.பி.எல். தொடரில் மற்ற அணிகளுக்காக விளையாடி வந்தனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் பெரும்பாலானோர் நட்சத்திர வீரர்கள் என்பதால், அவர்களில் எந்த 3 பேரை அணி நிர்வாகம் தக்க வைக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்தது. 

 

CSK_Tweet_15196.jpg

அந்தக் கேள்விக்குக் க்ளூ கொடுக்கும் விதமாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் ’378’ என்ற எண்களைக் குறிக்கும் வகையில் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதை வைத்துப் பார்க்கும்போது ஜெர்சி எண் ’3’ கொண்ட சுரேஷ் ரெய்னா, ஜெர்சி எண் ‘7’ கொண்ட மகேந்திரசிங் தோனி மற்றும் ஜெர்சி எண் ‘8’ கொண்ட ரவீந்திர ஜடேஜா ஆகியோரையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ஐ.பி.எல். அணிகள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் பட்டியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட இருக்கிறது. 

 

https://www.vikatan.com/news/sports/112674-cks-hints-the-three-players-who-are-retained-today.html

  • தொடங்கியவர்

சிஎஸ்கே-யில் டோனி: எந்தெந்த அணி யார் யாரை தக்க வைத்துள்ளது- முழு விவரங்கள்

 

ஐபிஎல் 2018-க்கான சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துள்ளது. #IPL2018 #IPLRetention

 
சிஎஸ்கே-யில் டோனி: எந்தெந்த அணி யார் யாரை தக்க வைத்துள்ளது- முழு விவரங்கள்
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 லீக் தொடர் மாபெரும் வெற்றியை பெற்று சர்வதேச அளவில் முன்னணி தொடராக விளங்கி வருகிறது. ரசிகர்களின் பேராதரவோடு 10 ஆண்டுகளை சிறப்பாக முடித்துள்ளது. இந்த வருடம் 11-வது வருத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது. இதற்கு முன் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது.

தற்போது அனைத்து வீரர்களையும் மறு ஏலம் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டு பேரை ஏலத்தின்போது தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடவில்லை. இதனால் குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பங்கேற்றன. 2018 சீசனில் இந்த இரண்டு அணிகளும் பங்கேற்காது. வீரர்களின் ஏலம் வருகிற 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்கு முன் எந்தெந்த அணி யார் யாரை தக்கவைத்துள்ளது என்பதை இன்று மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அதிகாரப்பூர்வமாக தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.

குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் விளையாடியவர்களில் டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. டோனியை முதல் நபராகவும், ரெய்னாவை 2-வது நபராகவும், ஜடேஜாவை 3-வது நபராகவம் தக்கவைத்துக் கொண்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை மட்டும் தகவைத்துக் கொண்டுள்ளது. வேறு யாரையும் அந்த அணி தக்கவைக்கவில்லை.

201801042019471212_1_smith001-s._L_styvpf.jpg

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் நபராக விராட் கோலியையும், 2-வது நபராக டி வில்லியர்ஸையும், 3-வது நபராக இளம் வீரரான சர்பராஸ் கானையும் தக்கவைத்துள்ளது.

201801042019471212_2_7viratkohli-s._L_styvpf.jpg

மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரை தக்கவைத்துள்ளது.

201801042019471212_3_bumrah-sss._L_styvpf.jpg

டெல்லி அணி கிறிஸ் மோரிஸ், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது.

201801042019471212_4_panth-ss._L_styvpf.jpg

கொல்கத்தா சுனில் நரைன் மற்றும் அந்த்ரே ரஸல் ஆகியோரை தக்கவைத்துள்ளது. காம்பீரை தக்கவைக்கவில்லை.

201801042019471212_5_narine-s._L_styvpf.jpg

ஐதராபாத் அணி வார்னர், புவனேஸ்வர் குமார் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

201801042019471212_6_warner-s._L_styvpf.jpg

பஞ்சாப் அணி அக்சார் பட்டேல்-ஐ மட்டுமே தக்கவைத்துள்ளது. #IPL2018 #IPL Retention, MS Dhoni, Virat Kohli

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/04201947/1138497/IPL-2018-Players-Retention-ms-dhoni-virat-Kohli-Full.vpf

  • தொடங்கியவர்

ஐபிஎல்: ஏமாற்றமடைந்த கெயில், கம்பீர், அஸ்வின்!

 

 
csk_ashwin

 

எதிர்வரும் ஐபிஎல் போட்டியில், ஓர் அணி, தன்னிடம் இருக்கும் வீரர்களில் 5 பேரை ஏலமின்றி தக்கவைத்துக் கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் முடிவு செய்தது. ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் (ரைட் டூ மேட்ச் முறையில்) தக்கவைக்கலாம். இது, தடைக்காலம் முடிந்து 2018-ஆம் ஆண்டு சீசனில் போட்டிக்குத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் வசம் இருந்த வீரர்களை ஏலமின்றி தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், ஒவ்வொரு அணியும் யார் யாரைத் தக்கவைத்து கொண்டுள்ளன என்கிற விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் இந்த சீசன் முதல் மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, எம்.எஸ்.தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோரை தனது அணியில் தக்க வைத்துக் கொண்டது.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ், சர்ஃப்ராஸ் கானை தக்க வைத்து, கிறிஸ் கெயிலை ஏலத்தில் விட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது கேப்டன் ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ராவை அணியில் தொடரச் செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், புவனேஸ்வர் குமார் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அக்ஸர் படேலை தன் வசம் வைத்துக் கொண்டது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி கிறிஸ் மோரிஸ், ரிஷப் பந்த், ஷரேயஸ் ஐயர் ஆகியோரை தக்க வைத்தது. அத்துடன்
ரிக்கி பான்டிங் பயிற்சியாளராக இருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கேப்டன் கெளதம் கம்பீரை ஏலத்தில் விடுவித்ததுடன், மேற்கிந்தியத் தீவுகளின் சுனில் நரைனை தக்கவைத்து, அன்ட்ரு ரஸலை ஏலத்தில் எடுத்தது.

கொல்கத்தா அணியின் அடையாளமாக உள்ள கம்பீரைத் தக்கவைக்காதது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இதன்மூலம் கம்பீரின் ஐபிஎல் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது. 

gambhir89.jpg

2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் கம்பீர். ஆனால் இந்தமுறை வேறு திட்டங்களுடன் களமிறங்கவுள்ளது கேகேஆர் அணி. கம்பீரைத் தக்கவைக்காமல் போனாலும் ஏலத்தில் குறைந்த தொகையில் எடுக்கவுள்ளார்களா என்பது இனிமேல் தான் தெரியவரும். இல்லையென்றால் தில்லி அணி கம்பீரைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல கேகேஆர் அணியின் சக்திமிக்க வீரரான யூசுப் பதானையும் தக்கவைக்காதது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சரியான ஃபார்மில் இல்லாததால் ஏலத்தில் குறைந்த தொகையில் தேர்வு செய்ய வாய்ப்புண்டு. 

பெங்களூர் அணிக்குப் பெரிய பலமாக இருந்த கிறிஸ் கெயிலுக்கும் இந்த ஏலம் ஏமாற்றமாக அமைந்துள்ளது. கடந்த ஐபிஎல்-லில் சரியாக விளையாடாமல் போனாலும் இதர டி20 லீக்குகளில் நன்றாக விளையாடி வருகிறார் கெய்ல். இந்த நிலையில் இவரைத் தவிர்த்துவிட்டு பெங்களூர் அணி இளம் வீரர் சர்ஃப்ராஸ் கானைத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதனால் அந்த அணி கெயிலைத் தவிர்க்கிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான விடை ஜனவரி 27- 28 தேதிகளில் நடைபெற்றவுள்ள ஏலத்தில்தான் தெரியவரும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்ததுபோல தோனி, ரெய்னா, ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளது. எனினும் அஸ்வினைத் தேர்வு செய்யாதது பலரையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. உள்ளூர் வீரர்களுக்கு சென்னை அணி முக்கியத்துவம் கொடுக்கும் என்பதால் ஏலத்தில் அஸ்வின், பிராவோ, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/05/chris-gayle-gautam-gambhir-amid-surprising-non-retentions-2839472.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.