Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“அதிகாரங்களை மத்தியில் தம்வசப்படுத்தி அவற்றை நம்மூடாக நடைமுறைப்படுத்துகிறார்கள்”….

Featured Replies

“அதிகாரங்களை மத்தியில் தம்வசப்படுத்தி அவற்றை நம்மூடாக நடைமுறைப்படுத்துகிறார்கள்”….

Wicki_CI.jpg

முதலாவது வடக்குமாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்ட உரையில் விக்கி……

முதலாவது வடக்கு மாகாணசபையின்
112வது அமர்வு
12ஃ12ஃ2017 அன்று காலை 9.30 மணிக்கு
மாகாண பேரவைச் சபா மண்டபத்தில்
முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும்
2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்
அறிமுகவுரை

கௌரவஅவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே,

கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே!

இது எமது முதலாவது வடக்குமாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்டம்.

எமது சபை பல நெருக்கடிகளைச் சந்தித்து அதன் ஐந்தாவது வருடத்தை எட்டியுள்ளது. ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்டத்தை நானே தொடர்ந்து சமர்ப்பிக்க முடிந்துள்ளதையிட்டு இறைவனுக்கு எனது வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந் நாட்டின் ஒன்பது மாகாண சபைகள் அனைத்திலுங் கடைசியாகப் பதவியேற்ற மாகாண சபையே எமதாகும். அதன் இது வரையிலான பதவிக்காலத்தையும் முன்னின்று வழிநடத்திய எமது அவைத்தலைவர் பாராட்டுக்குரியவர். அவரின் விருப்பு வெறுப்புக்கள் எம்மைப் பெரிதும் சில வேளைகளில் பாதித்திருக்கலாம். ஆனால் அவரின் அனுபவமும் நிர்வாக நடைமுறையும் இந்த நான்கு வருடங்களில் பளிச்செனக் காணக் கூடியதாக அமைந்திருந்தன.

எமது ஐந்தாவது வரவு செலவுத் திட்டத்தை விதிமுறையாகச் சமர்ப்பிப்பதற்கு முன் அறிமுகவுரையாக சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

எமது அபிவிருத்தியைப் பற்றிப் பேசும் போது பலர் வருமானந்தரும் பாரிய பொருளாதார செயற்றிட்டங்களையே பொதுவாக நோக்குகின்றனர். பொருளாதார அபிவிருத்தி அத்தியாவசியமானதொன்று என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால் அதனை எவ்வாறு பெறப் போகின்றோம் என்பதை நாங்கள் ஆய்ந்துணர வேண்டும். எமது பொருளாதார விருத்திக்கு இடம் கொடுக்க முன்வருபவர்கள் எம்மிடம் இருந்து எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை நாம் கணிக்க வேண்டும். முக்கியமாக மத்திய அரசாங்கம் எந்த அடிப்படையில் எமக்கு உதவிகள் வழங்க முன்வருகின்றது? இன்றிருக்கும் பாராளுமன்றத்தில் எனக்குத் தெரிந்தவர்களும் என் கல்லூரியின் பழைய மாணவர்களும் கணிசமானவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் இருந்து உதவிகளைப் பெற எமக்கு அதிகம் சிரமம் இருக்கத்தேவையில்லை. ஆனால் அவர்கள் எவ்வாறு எமது வடமாகாணத்தை நோக்குகின்றார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது எமக்கு ஏதேனும் நன்மைகள் பெற்றுக் கொடுக்கும் போது எமது பிரதேசத்தை வளப்படுத்த வேண்டும், விருத்தி செய்ய வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்பதிலும் பார்க்க தமக்கு அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். இதன் காரணத்தினால் எமக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டுள்ள விடயங்களையும் மாவட்ட செயலாளர்கள் ஊடாகவே நடைமுறைப்படுத்தப் பார்க்கின்றார்கள். ஆயினும் மாகாணசபை உத்தியோகத்தர்கள் மூலமே அவை செயற்படுத்தப்படுகின்றன. இவை எமக்குரிய விடயங்கள் என்பதை ஏற்றுள்ளதால்த்தான் எம்மைக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்றார்கள். ஆனால் எம்மிடந் தந்து அவற்றை நடைமுறைப்படுத்தாது மாவட்ட செயலாளர்களின் தயவையே நாடுகின்றார்கள். தாமே எமக்கு வளங்களை வழங்கியதாகப் பின்னர் தம்பட்டம் அடிக்கின்றார்கள். அதாவது உலக நாடுகள் தரும் நிதியை எம் அலுவலர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்றார்கள். ஆனால் இடையில் தம்மையும் மத்தியின் அலுவலர்களையும் உள் நுழைக்கின்றார்கள் அரசியல் நன்மைகளுக்காக.

அடுத்து ஒருங்கியல் அதிகாரங்களையும் (Concurrent Powers) அவர்களே தாம் நினைத்தவாறு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தவே விழைகின்றார்கள். உதாரணத்திற்கு பிரதமர் எமது தீவுப் பகுதிமுன்னேற்றத்திற்கென ஒரு பொருளாதாரத் திட்டத்தை வகுத்துள்ளார். அதுபற்றி எமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எமதுகருத்துக்களும் உள்ளேற்கப்படவில்லை. பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வர முன்னர் செயற்பட்டவாறே இப்பொழுதும் செயற்பட்டு வருகின்றார்கள். காணிகள் சம்பந்தமாக வனத்திணைக்களம் ஊடாக தமது உள்ளீடுகளைச் செய்கின்றார்கள். எம் மக்கள் பல காலம் இருந்து மரங்களையும் வளர்த்துவிட்டு போர்க் காலங்களில் இடம்பெயர்ந்து சென்று திரும்பி வந்த போது அவர்களின் காணிகளை வனத்திணைக்களம் கையேற்றுள்ளது. எம்மவர் நட்ட மரங்களைக் காட்டியே இவை வனத்திற்குரிய காணிகள் என்று உரிமை கோருகின்றார்கள். தான் தோன்றித் தனமாக வனத் திணைக்களம் நடந்து கொள்கின்றது. விரைவில் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கின்றேன். நேற்றைய தினம் எனக்குக் கிடைத்த தகவல்படி கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் 08.03.2017ந் திகதிய வர்த்தமானியில் எம்முடன் தொடர்பு கொள்ளாமல் நீர்வாழ் உயிரினச் செய்கைக்காக கரையோர ஃஉவர் நீர்ப் பிரதேசங்கள் வடமாகாணத்தில் பிரகடனப்படுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 535 ஹெக்டயரும் தீவகத்துடன் சேர்ந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் 4560 ஹெக்டயரும் மன்னார் மாவட்டத்தில் 2193 ஹெக்டயரும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்விடங்களில் பாரம்பரியமாக கடல் அட்டை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் எம் மக்களை விரட்டிவிட்டு ஒரு கம்பனியைக் கொண்டுவந்து கடல் அட்டை வியாபாரத்தில் ஈடுபடுத்துவதே அவர்களின் எண்ணம். தான் தோன்றித் தனமாக தங்கள் வருமானத்தை ஈட்ட எம்மைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள்.

என்னிலும் பார்க்கக் கூடிய வயதுடைய ஒரு அமைச்சர், பலவருடங்களாக எனக்குத் தெரிந்த ஒருவர்,தாம் வடமாகாணத்தில் செய்ய விழையும் பொருளாதார விருத்திக்கு முதலமைச்சர் தடையாக உள்ளார் என்று அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிப்படையாகக் கூறியிருந்தார். அதன் பின் பாராளுமன்ற பிரகாரத்தினுள் அண்மையில் நான் சென்றிருந்த போது என்னை விட்டுக் கலைத்து வந்து சுற்றியுள்ள யாவர்க்கும் ‘நாங்கள் எவ்வளவு காலத்து நண்பர்கள்’ என்று கூறிவிட்டு தாம் வடமாகாணத்தில் செய்யும் அபிவிருத்திகளுக்கு என்னை உதவி செய்யுமாறு கோரினார். ‘அதற்கென்ன கேளுங்கள். சட்ட திட்டங்களுக்கேற்ப எமது வழிமுறைகளுக்கேற்ப உங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்கின்றோம்’ என்றேன். வன்னியின் பறவைகள் – சரணாலயத்தில் பாரிய விடுதி கட்டுவது, 500ஏக்கர்-600 ஏக்கர் வன்னிநிலத்தில் திறந்த விலங்கு காட்சிச்சாலையொன்றை அமைப்பது போன்ற செயற்றிட்டங்கள் தான் அவரின் குறிக்கோள். அதாவது எமது வன்னிநிலப் பறவைகளையும், விலங்குகளையும் பார்க்க வெளியில் இருந்து வருவோர் சொகுசாக வந்திருந்து பார்த்துச்செல்ல உதவியளிக்கும்நடவடிக்கை எடுக்கவே அவர் முனைந்துள்ளார். அவ்வாறான குறிக்கோள்களுக்கு நாம் ஆராயாமல் இடங் கொடுத்தால் பறவைகளின்சுதந்திரமான இயல்பான வருகையில் இடையூறு ஏற்படும் என்று நினைக்கின்றேன். திறந்த விலங்குக் காட்சிச் சாலை அமைத்தால் அண்டிய பகுதிகளில் வாழும் கிராமத்தவர்களின் வாழ்க்கையில் விலங்குகளின் பாதிப்பு அதிகமாகிவிடும், அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.காசொன்றே கரிசனையாக மத்தியினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவன. இந் நடவடிக்கையினால் எமது உள்ளூர் வளங்களையும் இயற்கை சமநிலையையும் பேணுவதைக் கவனத்திற்கெடுக்காது வருமானம் ஈட்டுவதை மட்டுமே மத்திய அரசு குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந் நடவடிக்கையினால் உள்ளூர் மாகாண ஆட்சியின் கைதளர்ந்து விடும். எனவேஇவை சம்பந்தமாக நாங்கள் மிகவும் அவதானத்துடன் கடமையாற்றி வருகின்றோம்.

இன்னொருவர் எமக்கு உலக ரீதியில் மதிப்பைக் கொண்டுவரக் கூடிய மைதானம் ஒன்றை மகிழ்வாக மில்லியன்கள் செலவில் உருவாக்கித் தருவதாகக் கூறினார். வெளிப்படைத்தன்மையுடன் எமது வடமாகாண நிர்வாகத்தின் பங்களிப்புடன் எம்மைப் பங்குதாரர்களாக ஏற்று இதைச் செய்ய நாம் விரும்புகின்றோம் என்றேன். அவர் பின் வாங்கிவிட்டார். வெளிப்படைத் தன்மையில்லாமல் கூறு விலைகளை சர்வதேச அரங்கில் கோராமல் அவர் தாம் நினைத்தவர்களுடன் மைதானம் அமைக்கும் உடன்படிக்கைகளை எழுதவிட்டால் நாம் அதில் இருந்து விடுபட்டுப் போவோம்! எல்லாம் மத்தி மயம் ஆகிவிடும். நண்பருக்கு மட்டும் நல்ல நன்மை கிடைக்கும்!

ஆகவே தான் நாங்கள் பொருளாதார ரீதியாகப் பலர் கொண்டுவரும் செயற்றிட்டங்களை மிகவும் கவனமாகப் பரிசீலித்து சாத்தியமான போது எமது அனுசரணையை வழங்குகின்றோம். எமது அனுசரணை சில விடயங்களைப் பொறுத்த வரையில்கிடைக்கவில்லை என்றவுடன் வடமாகாணப் பொருளாதார விருத்தியில் எமக்கு உடன்பாடில்லை, வந்தவற்;றை எடுத்தெறிகின்றோம் என்று கூறுகின்றார்கள். அவர்களிடம் இருந்து பணம் பெற்று, தரகர் தட்சணை பெற்று, செயற்றிட்டங்களை உள்ளே ஏற்றுக் கொண்ட காலமும் இருந்தது. அதையே பலர் இன்னும் எதிர்பார்க்கின்றார்கள். எம்மால் முடியாதென்றவுடன் மத்தியுடன் பேசி அல்லது ஆளுநருடன் பேசி காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கின்றார்கள். எமக்கு எமது பொருளாதார விருத்தியில் ஈடுபாடில்லை என்று கதை கட்டி விடுகின்றார்கள்.

எமக்கு எமது மாகாண மக்களின் வருங்காலமே முக்கியம். அவர்களின் வாழ்வாதாரங்களை நீடித்து நிலைபெறச் செய்ய ஆவன செய்வதும் அதற்காக வழியமைப்பதுமே எமது குறிக்கோள்.’பணம் வந்தால்ப் போதும்’ என்ற அடிப்படையில் நன்மைகளைப் பெறுவதை நாம் ஏற்க மறுக்கின்றோம். வருமானமே வரப்பிரசாதம் என்ற கொள்கை எமது வாழ்க்கை முறையை மாற்றிவிடும். சுற்றுச் சூழலைப் பாதித்து விடும்.எமது தனித்துவத்தை நாம் தொலைத்துவிடுவோம்.தனிப்பட்ட நன்மைகளைச் சிலர் பெறலாம். ஆனால் எமது ஒட்டுமொத்த வருங்காலம் பாதிப்படையும்.

சுற்றுலா பெயரைச் சொல்லி இன்று தெற்கில் சில இடங்கள் எந்த நிலையை அடைந்துள்ளன என்பதை நாம் அறிவோம். அந்த நிலை எமக்கும் வர வேண்டுமா?எமது கலாசாரம், பண்பாடு, விழுமியங்களைக்காற்றோடு பறக்க விட்டு நாம் காசுக்காகப் பறக்க வேண்டும் என்று எம்மவர் எண்ணுகின்றார்களா? கலாசாரம் தேவையில்லை, பண்பாடுகள் தேவையில்லை, எமது பாரம்பரியங்கள் தேவையில்லை, விழுமியங்கள் தேவையில்லை பணம் ஒன்றே முக்கியம் என்று எமது உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றுவார்களானால் தெற்கில் உள்ளோரைப் பிடித்து அங்கிருக்கும்அவர்களுக்குத் தேவையான செயற்பாடுகளையும், செயற்றிட்டங்களையும் இங்கு நிறைவேற்றத் தயார். ஆனால் அதனால் எமது தனித்துவம் பறி போய்விடும். தாயகம் அழிந்துவிடும்.நாங்கள் மாகாண ரீதியாகப் பெரும்பான்மையினரின் ஒரு அலகாகி விடுவோம்.அந்தக் கட்டத்தில் அதனைத் தடுக்கஎமக்கிருக்கும் தற்போதைய அதிகாரங்கள் போதுமானதாகாது என்பதை மனதில் வைத்திருங்கள்.தெற்கை எதிர்பார்த்தே எமது வாழ்க்கை முறை அமையும்.அதையே மத்தி விரும்புகின்றது. தமது கட்டுப்பாட்டுக்குள் நாம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றது. அதிகாரப் பகிர்வு கூட பெரும்பான்மையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டே எம்மால் அனுபவிக்கப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள்.

ஆகவே பாரிய செயற்றிட்டங்களை நாம் இயற்றவில்லை, பொருளாதார ரீதியாக முன்னேறவில்லை என்பவர்கள் அரசியல் ரீதியாக எமக்குத் தகுந்த அதிகாரங்கள் கிடைக்கும் வரை சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டுகின்றேன். எனினும் பின்வரும் செயற்றிட்டங்களில் நாம் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.

1. பளையில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. அதன் கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு (CSR) கிடைத்து வருகின்றது.
2. தனங்கிளப்பு உப்பளத் தொழிற்சாலை விரைவில் அமுல்ப்படுத்தப்பட இருக்கின்றது.

3. ஓமானிய கம்பெனியின் பழங்களும் மரக்கறிகளும் ஏற்றுமதிக்காகப் பயிரிடப்படுவதற்கான திட்டம் பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொழும்பில் இருந்து காணி ஆணையாளரின் காணி விடுவிப்பு அனுமதியை எதிர்பார்த்திருக்கின்றோம். இந்தச் செயல்த்திட்டத்தால் சுமார் 300 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

4. பொன்னாலை சூரிய மின்னுற்பத்தித் திட்டத்தின் கீழ் பொன்னாலையில் 2 மெகாவாற் சூரியமின் உற்பத்தி கருத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை 10 மெகாவாற்றுக்கு மாற்றுமாறு கேட்டதை பல்கலைக்கழக பொறியியற் பீட பேராசிரியர், இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள், சுற்றுச் சூழல் அதிகார சபையினது மாவட்ட அதிகாரிகள் மற்றும் எமது மாகாண சபை அதிகாரிகள் கூடி ஆராய்ந்து 2 மெகாவாட் மின் உற்பத்திக்கு 12 ஏக்கர்களை விடுவிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 10 மெகாவாட் மின்னுற்பத்திக்கு 60 ஏக்கர் காணி வழங்குவதிலும், Pழறநச டுiநெ இணைப்பை சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது சம்பந்தமாகவும் சில இடர்ப்பாடுகள் எழுந்துள்ளன. ஆனால் இரண்டில் ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு சூரிய மின்னுற்பத்தி நடைமுறைப்படுத்தப்படும்.

5. பளையில் 1 மெகாவாட் சூரிய மின்னுற்பத்திக்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு(CSR)பற்றிய அறிக்கை பெற்றபின் அனுமதி வழங்கப்படும்.

6. பூநகரி முழங்காவில் பகுதியில் விவசாயப் பண்ணை அமைக்க 25 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் வாழும் சுமார் 250 விவசாயக் குடும்பங்கள் இதனால்ப் பயனடைவார்கள்.

7. கிளிநொச்சி கரும்புத் தோட்டக் காணியில் கரும்பு உற்பத்திக்குப் பதிலாக விவசாயக் கால்நடைப் பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பண்ணை தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றது என அறியப்படுகின்றது.

8. நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டத்திற்கான திட்ட முன் மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான 32 ஏக்கர் காணி மாதகல், கேரதீவு, மயிலிட்டி பகுதிகளில் அடையாளம் காணப்பட்டு வருகின்றது. விரைவில் அறிக்கைகள் பெற்ற பின் நடைமுறைக்கு வரும்.
9. திண்மக் கழிவு முகாமைத்துவ முன்னோடித் திட்டம் பற்றிய திட்ட முன் மொழிவு கிடைத்து உரிய பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடாத்தப்பட்டு நொதிய ஆய்வுகூட பரிசோதனைக்கு விடப்பட்டுள்ளது. நொதியத்தின் மூலம் (நுணெலஅநள) கழிவுகளை மிக விரைவில் உக்கச் செய்வதே இதன் குறிக்கோள். ஆய்வுகூட பரிசோதனைகள் சாதகமாய் அமைந்தால் திண்மக் கழிவு அகற்றல் மிக விரைவில் குறைந்த செலவில் நடைபெறும்.

10. வடமராட்சியில் உடுப்பிட்டியில் ஆடைத் தொழிற்சாலை கனடா வாழ் புலம் பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்டு எம்முடன் கூட்டு அடிப்படையில் நடாத்தி வரப்படுகின்றது. இப் பகுதியில் உள்ள வேலையில்லாத இளம் பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில்த்தான் எமது நிதிக்கூற்றைச் சமர்ப்பிக்க முன்னர்; வடக்கு மாகாணசபையின் 2018ம் ஆண்டுக்கான ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் பற்றிய சில விபரங்களை இச் சபை முன் சமர்ப்பிக்க முனைகின்றேன்.

பல்வேறு இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றம், தொடர்ந்த இராணுவப் பிரசன்னம்,தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளில் பெரும்பான்மையினரின் அரச குடியேற்றங்கள் போன்ற பல்வேறு சவால்கள் ஊடாக நீண்ட கால இலக்குடன் கூடிய நிலையான அபிவிருத்தியை நோக்கியே நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதில் எமது உறுப்பினர்களுக்கு சந்தேகம் தேவையில்லை.

வடமாகாண மக்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்கி எமது மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்து தேசிய ரீதியில் எமது மாகாணம் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கியுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். இம் மாகாணமானது 2016ம் ஆண்டின்மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2 சதவிகிதப் பங்களிப்பினை பதிவு செய்துள்ளது. குறித்த 4.2 சதவிகிதப் பங்களிப்பில்எமது விவசாயத் துறையானது 12.6 சதவிகித பங்களிப்பினையும், கைத்தொழில்த் துறையானது 24.6 சதவிகித பங்களிப்பினையும், சேவைத் துறையானது 54.4 சதவிகித பங்களிப்பினையும்,ஏனையவை 8.4 சதவிகிதப் பங்களிப்பினையும்வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சுற்றுலா உணவகங்கள் கைத்தொழில்த் துறையினுள் அடங்குவன. கல்விக் கூடங்கள், வைத்தியசாலைகள் போன்றவை சேவைத் துறையினுள் அடங்குவன.

2017ம் ஆண்டின் விபரங்கள் இன்னமும் தயார்ப்படுத்தப்படவில்லை.ஆனால் அரசாங்கத்தின்தேசிய கொள்கை பிரகடனத்திற்கமைவாக 2017 ம் ஆண்டு வறுமை ஒழிப்பு ஆண்டாகவும் 2018ம் ஆண்டானது தேசிய உணவு உற்பத்தி வருடமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 2018 ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தினூடாக அரச, தனியார்துறைகளில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய செயற்றிட்டங்கள் மற்றும் வருமான வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய துறைகளில் முதலீடுகளை ஊக்குவித்தல், மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கக்கூடிய வகையிலான பெறுமதிசேர் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளூடாக வருமானத்தினை அதிகரிக்கச் செய்தல் மற்றும் கிராமிய சமூகப் பொருளாதார உட்கட்டமைப்புக்களை விருத்தி செய்தல் போன்றவற்றினூடாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எமது மாகாணம் அதிகரித்த பங்களிப்பினை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திக்கான இலக்குகள் துறைசார் ரீதியாக இனங்காணப்பட்டுள்ளன. எமது தனித்துவத்தைப் பேணிக் கொண்டு முழுநாட்டின் அபிவிருத்தியில் பங்கேற்பதிலே நாம் கண்ணுங் கருத்துமாக உள்ளோம்.

ஆனால்2016 ம் ஆண்டு நாட்டின் மொத்த வேலையற்றோர் தொகை 4.4 சதவிகிதமாக காணப்படுகையில் வடமாகாணம் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுமிடத்து ஆகக் கூடுதலான வேலையற்றோர் தொகையாக 6.3சதவிகிதத்தினைப்பதிவு செய்துள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன். மேலும் இலங்கையின் வறுமை நிலையினை நோக்கும் போது தலைக்குரிய வறுமைச்சுட்டி 4.1சதவிகிதமாகக் காணப்பட்டபோதும் வடமாகாணத்திற்கான தலைக்குரிய வறுமைச்சுட்டியானது ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடப்படுமிடத்து ஆகக் கூடுதலான வறுமைச்சுட்டி 7.7சதவிகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் வறுமை நிலையினை நோக்கும் போது 2016ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் வறுமை அதிகூடிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் அதாவது 18.2சதவிகித வறுமைக்குறிகாட்டியை பதிவு செய்து முதலாவது நிலையிலும். .முல்லைத்தீவு மாவட்டம் 12.7சதவிகிதம்பதிவு செய்து இரண்டாவது நிலையிலும் யாழ்ப்பாண மாவட்டம் 7.7சதவிகிதத்தினை பதிவு செய்து 5வது இடத்திலும் காணப்படுகின்றன. வறுமை கூடிய மாவட்டமாக இருந்த முல்லைத்தீவுவறுமையின் தாக்கம் குறைவடைந்து எமது காலத்தில் இரண்டாம் இடத்திற்கு பின்னேறியமை வரவேற்கத்தக்கது.எனினும் கிளிநொச்சி மாவட்டம் கூடிய கவனிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எனவே வட மாகாணத்தின் பல்வேறு துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடியதாக அரச தனியார் கூட்டு முதலீடுகளை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதும், சிறிய நடுத்தர தொழில் முயற்சிகளுக்கூடாக மக்களின் வருமானத்தினை அதிகரிக்கச்செய்வதும் இவ்வரவு செலவுத் திட்டத்தினூடாக அடையப்படவேண்டிய இலக்குகளாக உள்ளன.

வட மாகாணம் தனது உள்ளக வள வாய்ப்புக்கள் ஊடாக வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், மக்களுக்கான வருமான மட்டத்தினை அதிகரிக்கச்செய்தல், கிராமிய பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்தல், மாகாண மட்டத்தில் உணவுப்பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், சிறிய நடுத்தர விவசாயிகள் மற்றும் முயற்சியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஊக்குவித்தல், சிறிய நடுத்தர முயற்சியாளர்களது திறன்களை விருத்தி செய்தல்,சுற்றுலா கைத்தொழிலை ஊக்குவித்தல்,வறுமைத்தணிப்பு திட்டங்களை அமுலாக்குதல், போதைப்பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்,சிறுநீரக நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குதல்,போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றது. மற்றும் மனிதவள மேம்பாட்டினை நோக்காகக்கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு பொருத்தமான அபிவிருத்தித்திட்டங்கள் போன்ற முக்கியமான விடயங்களில் 2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்த முனைந்துள்ளது.

மேலும் 70ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக 2030ஆம் ஆண்டில் அடைய எதிர்பார்க்கப்படும் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளையும்(ளுனுபு) கவனத்திற்கொண்டு எமது அபிவிருத்திப் பாதையை நோக்கி நாம் பயணிக்கத் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். மத்திய அரசாங்கமும் அதற்கனுசரணையாகச் செயற்பட முன்வரும் என்று எதிர்பார்க்கின்றோம்.

வடமாகாணத்தின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதிமிக்கதாகவும், வினைத்திறனுடையதாகவும் செயற்படுத்துவதற்கு ஆளணிகள் இன்றியமையாததாகும். வடமாகாணத்திற்கு தேவைப்படும் ஆளணிகள் தொடர்பாக சேவைப்பிரமாணக்குறிப்புக்களைத் தயாரித்து மாகாண சபைக்குட்பட்ட வெற்றிடங்களை முறையே நிரப்புவது இன்றியமையாததாகும். அந்த வகையில் அடையாளப்படுத்தப்பட்ட வெற்றிடங்கள் பல்வேறு பதவிநிலைகளிலும் நிரப்பப்பட்டுள்ளன.இதேவேளை மத்திய அரசின் கீழ்வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. எனவே 2018ம் ஆண்டு மத்திய-மாகாண அரசுகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது இன்றியமையாததாகும்.

விவசாயத்துறை

வடமாகாணத்தின் முக்கிய துறைகளை கவனத்திற்கொள்ளும்போது விவசாயத்துறையில் நெற்செய்கை, உப உணவுப் பயிர்ச் செய்கை மற்றும் பழமரச் செய்கை ஆகியவற்றில்; அதிகளவு வெளியீட்டுத்தன்மையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தரமான உயர்ந்த இனவிதை வகைகள், நவீன தொழிநுட்ப வசதிகள், காலத்தின் தேவைக்கேற்ப விவசாயிகள், விவசாயத்துறை அலுவலர்களிற்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் உட்கட்டுமான வசதிகளின் விருத்தி ஆகியவற்றின் மூலம் 2017 ம் ஆண்டில் குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.அத்துடன் உவர் நிலங்களில் நெற் செய்கையை ஊக்குவித்தல், நெல்லின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், சேதன நெற் செய்கையை ஊக்குவித்தல் மற்றும் தரமான விதை நெல் உற்பத்தி ஆகிய செயற்பாடுகளும் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு உதவியளித்துள்ளன. இவற்றை விட வீட்டுத் தோட்ட செயல்திட்டத்தின் மூலம் வறிய விவசாயக் குடும்பங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு செயற்றிட்டங்களும் அமுலாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் பல்வேறு நன்மைகளைப் பெற்றுள்ளனர்.

2018ம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி வருடமாக பிரகடனப்படுத்தப்பட்டதற்கமைவாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் உள்வாங்கி உற்பத்தி அதிகரிப்பினூடாக விவசாயிகளின் வருமானத்தினை அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கூடுதலான பங்களிப்பினை வடமாகாணத்தின் விவசாயத்துறையானது செலுத்தும் என எதிர்பார்க்கின்றோம்.
கால்நடை அபிவிருத்தித் துறை

வடக்கு மாகாணத்தில் கால்நடை அபிவிருத்தியை பொறுத்தளவில் 2017 மிகவும் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கிராமமட்ட மக்களால் அதிகம் விரும்பப்படும் வாழ்வாதார துறையாக கால்நடை உற்பத்தித்துறை உருவாகிவருகின்றது. முக்கியமாக இத்துறையானது 2017 இல் காணப்பட்ட வரட்சி நிலைமையிலும் பால், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பைக் காட்டியுள்ளது.குறிப்பாக 2016ம் ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டின் நாளாந்த பாலுற்பத்தி ஏறத்தாழ 25,000 லீட்டர்களினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு பால் விற்பனை மூலமாக மட்டும் ரூபா 2,450 மில்லியன் வருவாய் பண்ணையாளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

2018 ம் ஆண்டுக்கான வடக்குமாகாண இலக்குகளாக நாளொன்றுக்கு பாலுற்பத்தி 130,000 லீட்டர்களாகவும், முட்டை உற்பத்தியினை 100,000 முட்டைகளாகவும் இறைச்சி உற்பத்தியினை 35,000 கி.கி ஆகவும் உயர்த்தும் முகமாக பல்வேறு அபிவிருத்திநடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

2018ம் ஆண்டு கால்நடை உற்பத்திகள் மூலமான பண்ணையாளர்களின் வருவாயினை மேலும் 15 சதவிகிதம் அதிகரிப்பதற்கு ஏதுவாக கால்நடை உற்பத்திகளை இறக்குமதி செய்வதனை இயன்றளவுக்கு குறைத்துக்கொள்ளும் வகையிலும் அதிகளவில் வர்த்தக ரீதியிலான கால்நடை பண்ணைகளை உருவாக்கும் வகையிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

நீர்ப்பாசனத் துறை

விவசாயம் மற்றும் கால்நடை ஆகிய துறைகளை மேலும் வலுவூட்டக்கூடிய வகையில் நடுத்தர மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் அபிவிருத்தியும் முக்கிய பங்காற்றுவதை இவ்விடத்தில் கூறிவைக்க வேண்டியுள்ளது. வட மாகாண சபையின் ஆளுகைக்குட்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் 45 நடுத்தர நீர்ப்பாசன குளங்களும் 09 பெரிய நீர்ப்பாசன குளங்களுமாக 70,181 ஏக்கர் கொண்ட 54 நீர்ப்பாசன குளங்களும் 20,000 ஏக்கர் கொண்ட உப்பாறு, ஆனையிறவு, மற்றும் வடமராட்சி ஆகிய 3 நன்னீர் ஏரித் திட்டங்களும் 34 உவர்நீர்த்தடுப்பு அணைகளும் (7,220 ஏக்கர் கொண்டது) மற்றும் 2,000 ஏக்கர் கொண்ட வழுக்கையாறுத் திட்டமுமாக அனைத்துத் திட்டங்களும் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 2017ம் ஆண்டில் உள்ளுர் நிதியீட்டத்தின் ஊடாகவும் வெளிநாட்டு நிதியீட்டத்தினூடாகவும் பல்வேறு நீர்;ப்பாசன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாயப் பயிர்பரவலாக்கம், உற்பத்தி விரிவாக்கம் மற்றும் விலங்கு வேளாண்மை அபிவிருத்தி என்பன மேம்படுத்தப்பட்டு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் பெரிய நீர்ப்பாசனத் திட்டமான இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம்,முத்தையன்கட்டு நீர்ப்பாசனத் திட்டம், வடமராட்சி நீரேரரியினை நன்னீர் ஏரியாக மாற்றுந் திட்டம், தொண்டைமானாறு தடுப்பணைபோன்றவையும் விவசாய மற்றும் கால்நடைத்துறைகளை மேம்படுத்துவதற்கான சிறப்பான திட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். எதிர்காலத்திலும் இவை அனைத்தும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக அமையும் என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை.

கல்வித் துறை

வடமாகாணத்தில் கல்வித்துறையினை நோக்கும் போது பல்வேறு நிதிமூலங்களூடாக உட்கட்டுமான வசதிகள்,நவீன தொழிநுட்ப வசதிகளை உட்புகுத்தல், தளபாடங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்களுக்கான கல்வித்துறைசார் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் குறிப்பிடத்தக்களவில் ஆசிரியர் பற்றாக்குறையும் வருடாந்தம் நிவர்த்தி செய்யப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. எனினும்; வடமாகாணத்தின் கல்வி நிலையினை ஏனைய மாகாணங்களுடன் ஒப்படும் போது அதிக கவனம்செலுத்த வேண்டிய தேவைப்பாடு இன்றியமையாததாகவுள்ளது.அதற்கான நடவடிக்கைகளைத் தற்போது எடுத்து வருகின்றோம்.

சுகாதாரத் துறை

சுகாதாரத்துறையும் வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகின்றது. 2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தினூடாக வைத்தியசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், கிராமிய சுகாதார நிலையங்களின் அபிவிருத்தி, மருத்துவர்கள்மற்றும் தாதிகளுக்கான விடுதிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களுக்கான உட்கட்டுமான அபிவிருத்திகள், மருத்துவ உபகரணங்கள் , நோய் தடுப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இம்மாகாணத்தின் சுகாதாரக்குறிகாட்டிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.எதிர்காலத்தில் வடமாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாட்டினை தொடர்ச்சியாகப்பேணும் வகையில் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவன. எனினும் டெங்கு நோய்த் தடுப்பு மிக முக்கியமான ஒரு விடயமாகப் பரிணமித்துள்ளது. அதன் பரவலைக் கட்டுப்படுத்த யாவரும் சேர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.

வீதி அபிவிருத்தித் துறை

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியளிப்புக்களுக்கூடாக வட மாகாணத்தின் வீதி அபிவிருத்திச்செயற்பாடுகளும் கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இருப்பினும் வடமாகாணத்தில் காணப்படும் ஊ மற்றும் னு தரத்திலான 1,500 கிலோ மீற்றர் வரையான வீதிகள் புனரமைக்க வேண்டியிருப்பதுடன் 8,000 கிலோ மீற்றர் வரையான கிராமிய வீதிகளும் புனரமைக்கப்படவேண்டியுள்ளது. 2018 ம் ஆண்டு வீதி அபிவிருத்திப் பணிகள், கிராமியப்பாலங்கள் அமைத்தல் போன்றவற்றிற்கான முதலீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை, வீடமைப்புத் துறை
சுற்றுலாத்துறை, வீடமைப்பு போன்றவற்றுக்கான அதிக தேவைப்பாடுகள் காணப்படினும் எமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிமூலம் சிறிய அளவிலதான தேவைப்பாட்டினையே எம்மால் பூர்த்தி செய்ய முடிகின்றது. இவற்றிற்காக இனங்காட்டப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
நேரங்கருதி மேற்படி துறைகள் உள்ளடக்கிய முதலமைச்சரின் அமைச்சு பற்றி இத்தருணத்தில் குறிப்பிடாது விடுகின்றேன். அதன் பாதீட்டு விவாதம் இன்று நடைபெற இருக்கின்றது. எமது அமைச்சின் வரவு செலவுத் திட்டம் அப்போது ஆராயப்படும். எனினும் எமது அமைச்சுக்கள் அண்மையில் தேசிய ரீதியாகப் பெற்ற சில விருதுகள்பற்றி சுருக்கமாகக் கூற விரும்புகின்றேன்.

நிதி முகாமைத்துவத்தின் செயலாற்றுகை மதிப்பீடு

எமது வடமாகாண சபையின் கீழ் செயற்படுகின்ற இரண்டு அமைச்சுக்கள், மற்றும் 05 திணைக்களங்கள், மற்றும் 05 உள்ளுராட்சி சபைகள் அண்மையில் பாராளுமன்ற பொது கணக்குகள் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய மயப்படுத்தப்பட்ட கணனி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிதி முகாமைத்துவத்தில் அதிஉயர் செயற்திறனை வெளிப்படுத்தியமைக்காக மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களினால் தங்க விருதுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் பாதீட்டின் அதன் வினைத்திறனான நடைமுறைப்படுத்தலினாலேயே (நுககநஉவiஎந iஅpடநஅநவெயவழைn) உரிய தரப்பினர்களுக்கு பலா பலன்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். எனவே செயலாற்றுகை குறிகாட்டிகளை திறம்படக் கணித்து அந் நியமங்களுக்கேற்ப அதனை அடைவதனை நோக்காகக் கொண்டு செயற்படவேண்டியுள்ளது. இந்த வகையில் எமது வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் முன்மாதிரியாக திகழ்ந்ததையிட்டு பாராட்டுவதுடன் ஏனைய திணைக்களங்களும் அமைச்சுக்களும் உயர் செயற்திறனை வெளிப்படுத்தி நிதி முகாமைத்துவத்தினையும் அதன் வகை சொல்லும் பொறுப்பினையும் (யுஉஉழரவெயடிடைவைல) செவ்வனே நிறைவேற்ற வேண்டிய நிலையில் அவை உள்ளன என்பது வெள்ளிடைமலை.

நாடளாவிய ரீதியில் 831 நிறுவனங்களது 2015ம் ஆண்டுக்கான செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுள் அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய 81 நிறுவனங்களுள் எமது வடமாகாணசபையின் கீழ் தங்க விருதுகளைப் பெற்ற அமைச்சுக்கள் திணைக்களங்கள் விபரம் முறையே பின்வருமாறு.

1. முதலமைச்சரின் அமைச்சு
2. சுகாதார அமைச்சு
3. பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி
4. சுகாதார சேவைகள் நிறுவனம்
5. கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
6. நீர்ப்பாசனத் திணைக்களம்
7. வீதி அபிவிருத்தித் திணைக்களம்
பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட பிரதேச சபைகள்
1. நல்லூர்ப் பிரதேச சபை,
2. பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபை
3. கரைத்துரைப்பற்று பிரதேசசபை
4. மன்னார் பிரதேசசபை
5. வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேசசபை

சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்த அலுவலர்களின் அர்ப்பணிப்புள்ள சேவை காரணமாகவே இது சாத்தியமானது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் எமது பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அடுத்து 2018ம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக் கூற்றை சமர்ப்பிக்கின்றேன்.

ஒவ்வொரு நிதியாண்டினதும் வருடாந்த நிதிக்கூற்றானது1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாணசபைகள் சட்டத்திற்கு அமைவாக, சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுதல் வேண்டும். இதன் அடிப்படையில் இச்சபையில் 2018 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு நியதிச் சட்ட வரைவைவருடாந்த நிதிக் கூற்றுடன் சமர்ப்பிக்கின்றேன்.
2018 ஆம் நிதியாண்டிற்கான எமது மாகாணசபை செலவினங்களுக்காக நிதி ஆணைக்குழுவால் தேசிய பாதீட்டுத் திணைக்களத்திற்குச் சிபார்சு செய்யப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகை உள்ளடங்கலாக 2018 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றின் ஒதுக்கீட்டு தொகைகள் பின்வருமாறு:

01. மீண்டுவரும் செலவினங்கள் (ரூபா.22,910.93மில்லியன்)

அ) மீண்டுவரும் செலவினங்களுக்கான தொகைரூபா. இருபத்திரண்டாயிரத்து எழுநூற்று எழுபது தசம் ஒன்பது மூன்று மில்லியன் (ரூபா.22,770.93மில்லியன்) ஆகும்.இதில் மத்திய அரசால்

• தொகுதிக் கொடையாக ரூபா பதினெட்டாயிரத்து அறுநூற்று ஐம்பது தசம் ஒன்பது மூன்று மில்லியனும் (ரூபா.18,650.93மில்லியன்)

• மத்திய அரசு வருமானமாக ரூபா இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது மில்லியனும் (ரூபா.2,750மில்லியன்)

• மாகாணசபை வருமானமாக ரூபா எழுநூற்று ஐம்பது மில்லியனும் (ரூபா.750மில்லியன்) கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாற்றுவதற்கான

• முத்திரைத் தீர்வைக் கட்டணம் – ரூபா நாநூற்று எண்பது மில்லியன்; (ரூபா.480மில்லியன்)

• நீதிமன்ற தண்டப்பணம் – ரூபா நூற்று நாற்பது மில்லியன் (ரூபா.140 மில்லியன்)

ஆ) உள்ளூராட்சி மன்றங்களுக்கான முத்திரைத்தீர்வைக் கட்டண மீளளிப்பு (ரூபா.140 மில்லியன்)மேலும் 2017 ஆம் ஆண்டு வரை உள்ளூராட்சி மன்றங்களின் பொருட்டு சேகரிக்கப்பட்ட முத்திரைத் தீர்வைக் கட்டணத்தினை உரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு 2018 ஆம் ஆண்டில் மாற்றல் செய்வதற்கு நிதி ஆணைக்குழுவின் சிபார்சு ரூபா 480 மில்லியனுக்கு மேலதிகமாக ரூபா 140 மில்லியன் 2018 ம் ஆண்டு நிதிக்கூற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

02. மூலதனச் செலவினங்கள் (ரூபா.3,843.12 மில்லியன்)

அ. மூலதனச் செலவினங்களுக்கான தொகைரூபா மூவாயிரத்து எண்நூற்று இருபத்து மூன்று தசம் ஒன்று இரண்டு மில்லியன் ஆகும். (ரூபா.3,823.12 மில்லியன்) இதில்
• பிரமாண அடைப்படையிலான கொடை (ஊடீபு) – ரூபா ஐநூற்று ஐம்பத்தொன்று தசம் இரண்டு மில்லியன்(ரூபா.551.2 மில்லியன்)
• மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை (Pளுனுபு) – ரூபா இரண்டாயிரத்து எண்நூற்று இருபத்தொன்பது தசம் எட்டு ஏழு மில்லியன் (ரூபா.2,829.87 மில்லியன்)
• பாடசாலைக் கல்வியை ஓர் அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டம் (வுளுநுP)- ரூபா ஐம்பத்து ஐந்து மில்லியன் (ரூபா.55 மில்லியன்)
• சுகாதாரத் துறை அபிவிருத்திக் கருத்திட்டம் (ர்ளுனுP) – ரூபா முந்நூற்று இருபத்து நான்கு தசம் எட்டு மில்லியன் (ரூபா.324.80 மில்லியன்)

ஆ. வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூபா அறுபத்திரண்டு தசம் இரண்டு ஐந்து மில்லியன் (ரூபா.62.25 மில்லியன்)ஆகும்.இதில்

• வடக்கு வீதி இணைப்புத்திட்டம் (மேலதிக நிதியிடல்) – ரூபா பதினேழு தசம் இரண்டு ஐந்து மில்லியன் (ரூபா.17.25 மில்லியன்)
• பொதுக் கல்வி நவீனமயமாக்கல் கருத்திட்டம் – ரூபா நாற்பத்தைந்துமில்லியன் (ரூபா.45 மில்லியன்)
இ. காற்றாலைத் திட்டத்தின் படி விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு கொடை (ஊளுசுபு)ரூபா.20 மில்லியன் (ரூபா.20 மில்லியன்) 2018 ஆம் ஆண்டு செயற்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதிக்கூற்று 2018 இல் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும்,கிடைக்கப்பெற்ற மேற்படி ஒதுக்கீட்டுத் தொகைகளிற்கு அமைவாக மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ரீதியாக அவற்றின் முன்னுரிமைத் தேவைகளைப் பொறுத்து வருடாந்த நிதிக்கூற்று வரைவு தயாரிக்கப்பட்டு இச்சபை முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.
எனவே கௌரவ அவைத்தலைவர்; அவர்களே,
சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான வரைவு ஒதுக்கீட்டு நியதிச் சட்டம் மற்றும் வருடாந்த நிதிக்கூற்றை அங்கீகரித்து உதவுமாறு சபையினை மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்;னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/archives/54580

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.