Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தின் ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான திரு சத்தியசிலன் அவர்களின் நேர்காணல்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தின் ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான திரு சத்தியசிலன் அவர்களின் நேர்காணல்.

ஈழப் போராட்ட வரலாற்றில் திரு சத்தியசீலன் அவர்களை யாரும் மறந்துவிட முடியாது. அறவழிப் போராட்டங்கள் தோல்வியடைந்ததை அடுத்து அன்றைய இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போது இவர் தோற்றுவித்த தமிழ் மாணவர் பேரவைதான் ஊன்றுகோலாக விளங்கியது. தற்போது வெண்புறா என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். வஜ்ரம் என்ற இதழுக்காக அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக இங்கு தருகிறேன்.

நீங்கள் தோற்றுவித்த தமிழ் மாணவர் பேரவை ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய அமைப்பு. ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்த அமைப்பு என்றுகூட சொல்லலாம். அதைத் தோற்றுவித்ததற்கான அடிப்படைக் காரணம் என்ன?

1970 ஆம் ஆண்டு சிறிலங்கா தலைமை அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்காவால் கல்வித்துறையில் தரப்படுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது சிங்கள மாணவர்களுக்கு குறைந்த புள்ளிகள் அடிப்படையிலும் தமிழ் மாணவர்களுக்கு கூடிய புள்ளிகள் அடிப்படையிலும் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டது. இதனால் பல்கலைக்கழகத்தில் நுழையும் தமிழ்மாணவர்களின் தொகை குறைகிறது. திறமையின் அடிப்படையில் இல்லாமல் இனவாத அடிப்படையில் அந்த சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இதை எதிர்த்துதான் நான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். அப்போது பல அரசியல் கட்சிகள் இருந்தன. தமிழரசுக் கட்சி இருந்தது, தமிழ்க் காங்கிரஸ் இருந்தது, இடதுசாரிக் கட்சிகள் இருந்தன, ஆனால் அரசியல் கலப்பில்லாமல் இவர்களின் உதவியை நாடாமல் முதன் முதலாக மாணவர்கள் பொங்கி எழுந்து 1970 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி யாழ் முற்றவெளியை நேக்கி மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தி எங்களின் எதிர்ப்பைக் காட்டினோம்.

உங்களின் தொடக்ககால செயற்பாடுகள் எப்படி இருந்தன?

நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பு தமிழ் இளைஞன் என்ற மாதாந்த இதழை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அதில் A Level மாணவர்களுக்கு பரீட்சைக்கான கட்டுரைகளை அங்கு இருந்த விரிவுரையாளர்களிடம் பதிவு செய்து நாங்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கத் தொடங்கினோம். அந்த தமிழ் இளைஞர் அமைப்பில் பலர் இருந்தார்கள், அதில் நானும் ஒருவன். அதன் கடைசி இதழ் ஏப்ரல்-மே இதழாக வெளிவருகிறது. அதன் முதல் பக்கத்தில் 1970 ஆம் ஆண்டுத் தேர்தல் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்று ஒரு அரசியல் திறனாய்வுக் கட்டுரையை நான் எழுதியிருந்தேன். ஐந்து வருடமாக வந்து கொண்டிருந்த அந்த இதழ், அந்த இதழோடு நின்று விட்டது. நானும் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறி விட்டேன். அப்போது தமிழரசுக் கட்சி நடத்திய போராட்டங்கள் தமிழர்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருந்தாலும் சலுகைகளை பெறும் விதமாக அமைந்திருந்தனவே தவிர உரிமைப் போராக அமையவில்லை. நாங்கள் தொடர்ந்து சிங்கள அரசிடம் இருந்து சலுகைகளைப் பெறும் இனமாக இருக்க முடியாது. தமிழரசுக் கட்சியினர் தொடக்க காலத்தில் நல்ல போராட்டங்களை நடத்தியிருந்தார்கள் ஆனால் 1965 ஆம் ஆண்டு மாவட்ட சபை தருகிறோம் என்றவுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்கின்றார்கள். அப்போது வாலிப முன்னனி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சி இளைஞர்கள் இவர்களின் போக்கு பிடிக்காததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்தார்கள். இவர்களுக்கு எங்கு போவது என்று தெரியாது. இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன். தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் அதற்கு கியூபா போன்ற நாடுகள் விடுதலையடைந்தது போல் ஆரம்பத்தில் கொரில்லா யுத்தம்தான் சரியானது என்பதை எல்லாப் பாடசாலைகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு விளங்கப் படுத்தி பேசத் தொடங்கினேன். அப்போது தமிழரசுக் கட்சி, சுயாட்சிக்கழகம், தமிழ்க் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் போன்றவற்றில் இருந்த வாலிப முன்னணி இளைஞர்கள் என்னுடன் வந்து இணைந்தார்கள். அப்படி இணைந்தவர்தான் தம்பி பிரபா. அப்போது அவர் சிதம்பராக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

உங்கள் கொரில்லா யுத்தத்தின் தாக்குதல்கள் எப்படி அமைந்தன?

Molotov Cocktail என்ற பெட்ரோல் பொம்பை தயாரித்தோம். அப்போது Readers Digest என்ற புத்தகத்தில் 'The Paris Burning ' என்ற கட்டுரை வெளிவந்திருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியப் படைகள் பாரிசுக்குள் நுழையும்போது பிரான்ஸ் மக்கள் அவர்களை நோக்கி அந்த பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தினார்கள்.. அது ஒரு ரஷ்யப் பெயர் 'Molotov' என்ற ரஷ்யரால் அது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது புற்றீசல்கள்போல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயங்கள் தமிழர் தாயகத்தில் தொடங்கப் படுகின்றன. நாங்கள் அதனை சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளின் காரியாலயங்களை நோக்கி பயன் படுத்தினோம். நான் நேரடியாகப் பங்கெடுத்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் அல்பிரட் துரையப்பா மீதான தாக்குதல். ஆனால் அந்த இலக்கு தவறி விட்டது. என்னுடன் தியாகி சிவகுமாரனும் கூட இருந்தார். இவரும் ஒரு முக்கியமான ஈழப் போராளி. இதற்காக சிவகுமாரன் கைது செய்யப்படுகிறார் நான் தலைமறைவாகி செயல்படுகிறேன். அதற்குப் பின் தேடுதல் வேட்டை தீவிரமாகியதும் நான் இரகசிய வழிமுறையில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச் செல்கிறேன்.

தமிழ் நாட்டில் நீங்கள் தந்தை பெரியாரை சந்தித்து பேசியிருக்கிறீர்கள். உங்களின் ஆயுதப் போராட்டத்திற்கு அவர் ஆதரவு தந்திருந்தாரா?

நான் தமிழ் நாட்டில் தங்கி பிரச்சாரத்தை மேற்கொண்ட போது. நானும் மகா உத்தமனும் ஞானம் என்பவரும் தமிழ் நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து ஆதரவு பெறுவதற்காக பெரியர் ஈ.வே.ரா., ஜி.டி. நாயுடு, கி.ஆ.பெ. விசுவநாதம், மா.பொ.சி. இந்த நால்வரையும் சந்திப்பதற்காக புறப்பட்டோம். 1971 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாங்கள் பெரியாரைச் சந்தித்தோம். அப்போது பெரியார் உடல் நலமில்லாமல் திருச்சியில் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்து எங்களின் போராட்டத்தை விளக்கினோம். அப்போது அவர் சிங்களவன் பெரிய பெரிய டாங்கிகள் பீரங்கிகளால் உங்கள் எல்லாரையும் நசுக்கிப் போடுவானே என்று கவலைப்பட்டுக் கூற, நாங்கள் இல்லை ஐயா அதையும் எதிர்த்து நாங்கள் உறுதியாகப் போராடுவேம் என்றோம். அவர் உடனே நீங்கள் உங்கள் போராட்டத்தை விளக்கி எனக்கு எழுதித் தாருங்கள் நான் விடுதலையில் போட்டுவிடுகிறேன் என்றார். நான் அந்த இடத்தில் வைத்தே, தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் அதை இலங்கையில் அமைக்க முடியும் அந்த நாட்டை அமைப்பதற்காக நாங்கள் சிங்கள அரசை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போராடப் போகின்றோம் அதற்கு உங்கள் ஆதரவு தேவை என எழுதிக் கொடுத்தேன். அவரும் செய்வதைக் கவனமாகச் செய்யுங்கள் என புத்திமதி கூறினார். பெரியார் எங்களுக்கு ஆதரவு தந்தது நல்ல சந்தோஷம். சொன்னது போல் நான் எழுதிய அந்தக் கட்டுரையை அவர் தனது விடுதலையில் பிரசுரித்தார். பிறகு நாங்கள் தொழில் மேதை ஜி.டி. நாயுடுவை கோவையில் சந்தித்தோம். எங்களின் போராட்டத்தை அவருக்கு விளக்கும் போது தனது விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு எங்களைக் கூட்டிக் கொண்டு போய்த் தனது கண்டுபிடிப்புக்களை காட்டினார். நாங்கள் அவருடன் ஈழப்பேராட்டம் பற்றி கலந்துரையாடும் போது, எங்களுக்கு வாக்கிடாக்கிகள் தேவையாக இருந்தது நாங்கள் அதைக் கேட்டபோது அவரும் செய்துதர சம்மதித்தார். அதற்குமுன் நீங்கள் எல்லோரிடமும் ஆதரவைப் பெறவேண்டும் என்று கூறி எங்களை வாழ்த்தியனுப்பினார். கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எங்களை நல்ல முறையில் வரவேற்றார். ம.பொ.சி. யைச் சந்திக்கும்போது அவர் எங்களை ஆதரிக்கவில்லை நீங்கள் சின்னப் பொடியன்கள் போய் படிக்கிற வேலையைப் பாருங்கள் என்றார். நாங்கள் ம.பொ.சி யைப் பற்றி கேள்விப் பட்டது வேறு. அவர் நடந்து கொண்டது வேறு விதமாக இருந்தது.

Plebiscite என்று சொல்லப்படுகிற சர்வஜன வாக்கெடுப்பு வழியாக பல நாடுகள் பிரிந்து சென்று தனியரசை அமைத்திருக்கின்றன. சென்ற ஆண்டு கூட சேர்பியாவிலிருந்து மொன்ரிநிக்ரோ பிரிந்திருக்கிறது. உலக நியதிக்கேற்ப தமிழர் தாயகத்தில் இதே போன்று ஒரு வாக்கெடுப்பு வைத்து தமிழீழத் தனியரசை நிறுவ முடியாதா?

உலக நியதிக்கேற்ப சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் அதற்கு தடையாக இருக்கிற காரணங்களைத்தான் நாங்கள் முதலில் பார்க்க வேண்டும். இலங்கை அரசு திட்டமிட்டு தமிழர் தாயகத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களை குடியேற்றி வைத்திருக்கிறது. கிழக்கு மாகணத்தில் முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கின்றார்கள். இவர்களின் வாக்குகள் அதற்கு எதிராகத்தான் இருக்கும். கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர்கள் தேர்வு செய்ததன் மூலம் தனி நாடுதான் தங்களுக்கு தேவை என்பதைக் காட்டிவிட்டார்கள். இதையேதான் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அவர்களால் தனியரசுத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிடும் வாக்கெடுப்பு என்பது தமிழர் நிலப் பகுதியை மையமாக வைத்துத்தான் நடத்தப்படவேண்டும். அப்படி நடத்தப்படும்போது தமிழீழத்தின் கிழக்கில் வாழும் சிங்களவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவார்கள், ஆனால் கொழும்பிலோ மலையகத்திலோ வாழும் தமிழர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படமாட்டார்கள்.

வடக்கு மாகணத்தை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக 90 விழுக்காட்டிற்கும் மேலான வாக்குகள் தமிழீழத் தனியரசுக்கு கிடைக்கும். கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள்தான் அதிகமாக வாழ்கிறார்கள் எனவே அங்கும் தனியரசு அமைப்பதற்கான வாக்குகள்தான் அதிகமாக வரும். எஞ்சியிருக்கிற திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில்தான் நீங்கள் குறிப்பிடும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். அதேநேரம் ஒட்டுமொத்தமாக தமிழர் தாயகம் என்று பார்க்கும்போது ஆதரவான வாக்குகள் அதிகமாக கிடைக்காதா?

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கின்றன. மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை அங்கு உள்ளது. இது சாத்தியப் படவேண்டும் என்றால் இராணுவம் வெளியேற வேண்டும். உலக நாடுகளின் மத்தியஸ்தத்துடன், ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது, சார்க் அமைப்பு இருக்கிறது. இவற்றின் உதவியுடன் எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் மக்கள் சுதந்திராமாக வாக்களித்தால் நிச்சயம் எங்களுக்கு ஆதரவாக அது அமையும். ஆனால் இதற்கு முன் உயர் பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்பட்டு இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் வெளியேற வேண்டும். ஜெனிவா முதலாவது மாநாட்டில் இதுதான் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இராணுவத்தினரின் அச்சுறுத்தல் கூடி நிலைமை மோசமாகி விட்டது. அனைத்துலக சமூகமும் அதில் அக்கறை காட்டவில்லை.

இலங்கையில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொண்டால் 95 வீதமானோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் ஆனால் அவர்கள் ஈழப்போராட்டத்தில் எந்த விதமான அக்கறையையும் காட்டவில்லை என்ற குற்றச் சாட்டு இருக்கிறது இது பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர்களும் தமிழர்கள்தான். அரேபியாவில் இருந்தோ பாரசீகத்தில் இருந்தோ வரவில்லை. தொடக்க காலத்தில் அவர்கள் தமிழர்களாக இருந்தவர்கள். ஆனால் மொழியைக் காட்டிலும் மதத்தில் தீவிரமாக இருக்கிறார்கள். அதைத் தமிழர்களுக்கு எதிராகவும் காட்டுகிறார்கள். அவர்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து வாழ்வதால் அவர்கள் தனி ஈழத்தை எதிர்க்கின்றார்கள். இதை சிங்களவர்கள் பயன் படுத்திக் கொண்டு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் சண்டையைத் தூண்டி விடுகிறார்கள். அவர்கள் சிங்களவர்களிடமிருந்து தங்களுக்கான சலுகைகளை எதிர்பார்கிறார்களே தவிர எங்களோடு இணைந்து செயற்பட முனைவதில்லை. நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்றால் தமிழீழம் மலரும்போது அவர்கள் தமிழீழத்தை விட்டு வெளியேறுவார்கள். அதே நேரம் இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் தமிழீழத்தை நோக்கி இடம் பெயர்வார்கள். வரலாற்றை நோக்கினால் நான் இரண்டு உதாரணங்களைச் சொல்லுவேன். 1830ஆம் ஆண்டு தமிழகத்திலுள்ள இராமநாதபுரத்தில் இருந்து தமிழர்கள் மலையகத்திற்கு பிரிட்டிஷாரால் தோட்டத் தொழில் செய்வதற்காக கொண்டு வரப்படுகின்றார்கள். அதற்குப் பின் 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வன்னிக்கு இடம் பெயர்கிறார்கள். இதே போன்று தமிழீழம் மலரும் போது மிகப் பெரிய இடப் பெயர்வுக்கு சாத்தியக் கூறுகள் உள்ளது. அது மலையகத் தமிழர்களின் இடப்பெயர்வாகத்தான் இருக்கும். அவர்கள் தமிழீழத்தை நோக்கி வருவார்கள். அது வேலை வாய்ப்பிற்காக அல்ல, தங்களைக் பாதுகாத்துக் கொள்வதற்காக.

அப்படி அவர்கள் வரும்போது எந்த வேறுபாடும் காட்டாமல் ஈழத்தமிழர்களால் நடத்தப் படுவார்களா?

நிச்சயமாக. அன்றைய காலத்தில்தான் வேறுபாடுகள் இருந்தன. யாழ்ப்பாண மக்களால் அவர்கள் பாதிக்கப் பட்டார்கள் அது உண்மையும்தான். யாழ்ப்பாணச் சமூகம் தமது வீட்டு வேலைக்காக கூட்டிக்கொண்டு போய் வேலைக்காரர்களாக வைத்திருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை. அவர்கள் சுதந்திரத்துடன் தமிழீழத்தில் வாழலாம். அவர்கள் அப்படி வரும்போது இன்றைய சமூக விஞ்ஞான வசதிக்கேற்ப அவர்களுக்கு வீட்டுவசதிகளும் தொழில் வசதிகளும் கல்வி வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அவர்கள் முழுமையாக வரவேற்கப்படுவார்கள்.

இன அழிப்பின் கடைசிக் கட்டம் இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் கருத்துப் பரப்புரை மிகவும் பலவீனமாக இருக்கிறது. பேராசிரியர் கா. சிவத்தம்பி போன்றவர்கள் அதை சுட்டிக்காட்டியிருக்கிறார். நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் பங்களிப்பை சரிவர செய்து வருகிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல் கருத்துப் பரப்புரையை அவர்கள் சரி வர செய்வதில்லை. மேற்கத்தைய நாடுகளுக்கு தங்களின் பிரச்சனையை விளங்கப் படுத்துவது குறைவாக இருக்கிறது.. ஐரோப்பிய சமூகத்திடம் அவர்கள் தொடர்புகளை நல்ல முறையில் பேணி பரப்புரையை சிறப்பாகச் செய்யவேண்டும். அதற்கான முயற்சிகளில் நானும் இறங்கியிருக்கிறேன். அன்று தமிழ் மாணவர் பேரவையில் இருந்த பலர் இன்று இலண்டனில்தான் வாழ்கின்றார்கள். அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி இன்னும் சிறப்பாக கருத்துப் பரப்புரையை மேற்கொள்ள முனைந்து வருகிறேன்.

இங்கு சில தமிழர்கள் குறிப்பாக திரு தயா இடக்காடர், திருமதி சசிகலா சுரேஷ், திரு யோகன் யோகநாதன் போன்றவர்கள் அரசியலில் இறங்கி கவுன்சிலர்களாக வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கருத்துப் பரப்புயை தாங்கள் சார்த்துள்ள கட்சியின் வழியாக மேற்கொண்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படலாமல்லவா!

நிச்சயமாக, அவர்கள் அந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள் தொழிற்கடச்சியைச் சேர்ந்த ஹறட் தோமஸ், சதீஸ்கான் போன்ற எம்பீக்கள் மூலமாக பிரித்தானியப் பாராளுமன்றத்திலும் ரோபேட் எவன்ஸ் மூலம் ஜரோப்பிய பாராளுமன்றத்திலும் எமக்காக குரல்கொடுக்கச் செய்கின்றனர். இதனை மேலும் ஜரோப்பிய ரீதியாக பலமடையச் செய்வதே நோக்கமாகும். தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் இனவாத முகத்தை, இன அழிப்பை எடுத்து விளக்கி வருகிறார்கள்..

பொதுவாக மேற்குலக நாடுகள் சமஷ்டியைத்தான் வலியுறுத்துகின்றன. பிரிந்து சென்று தனியரசு அமைப்பதை நீங்கள் குறிப்பிடும் மேற்குலக பாராளுமன்ற உறுப்பினர்கள்; ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா?

அவர்கள் எமது தனியரசுக்கோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொண்டுள்ளார்கள் கொண்டிருக்கிறார்கள், சிங்களவர்களோடு இனியும் சேர்ந்து வாழ முடியாது என்ற யதார்த்த உண்மையை உணர்ந்திருக்கிறார்கள். சிங்கள அரசு ஒரு சமஷ்டி ஆட்சிக்குக்கூட தயாரில்லை. பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் வெண்புறா அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர். உங்கள் தொண்டு நிறுவனத்தின் பணிகளை விளக்கிக் கூறுவீர்களா?

தமிழீழத்திற்கு தேவையானவற்றைத்தான் வெண்புறா செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவுகிறது. கண்ணி வெடியை அகற்றுவதற்கும் கண்ணி வெடியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சைகளையும் செயற்கைகால் பொருத்துவதற்கு தேவையான பண உதவிகளையும் நாங்கள் இங்கிருந்து செய்து வருகின்றோம். கை கால்களை இழந்து ஏராளமான உறவுகள் அங்கே இருக்கின்றனர். ஒரு செயற்கை கால் செய்வதற்கு 125 பவுண்ட்ஸ் செலவாகிறது அதை நாங்கள் இங்கே திரட்டுகிறோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து நாங்கள் செயல்படுகிறோம். போரினால் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு வசதிகளையும் இருப்பிட வசதிகளையும் செய்து கொடுக்கின்றோம்.

Edited by வலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.