Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேபாளம்: இடதுசாரிகளின் தருணம்

Featured Replies

நேபாளம்: இடதுசாரிகளின் தருணம்
 

மக்களின் விருப்பங்களுக்கு எல்லா வேளைகளிலும் தடை போடவியலாது. ஆட்சியாளர்கள் விரும்பாவிட்டாலும் அதிகாரிகள் விரும்பாவிட்டாலும் அண்டைநாடுகள் விரும்பாவிட்டாலும் மக்களின் விருப்பத்துக்கு எதிரான போக்கு என்றென்றைக்குமானதல்ல.   

image_9dabe9eb90.jpg

மக்கள் தங்களுக்கு வேண்டியதைப் பல்வேறு வழிகளில் பெற்றுக் கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் சாம, பேத, தான, தண்ட ஆகிய அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள்.

இதனால்தான் ‘மக்கள்தான் தீர்மானகரமான சக்தி’ என்ற விளாடிமிர் லெனினின் சொற்கள் புகழ்பெற்றவை. மக்கள் ஒரு செய்தியைச் சொல்ல விளைகின்றபோது, அது எப்போதும் வலுவான சக்தியாகவே இருக்கும்.   

அண்மையில், நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களுக்கான தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டுப் பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியானது, நேபாள அரசியலில் மட்டுமன்றி, ஆசிய அரசியல் சூழலில் கவனிப்புக்குள்ளாகிய ஒரு நிகழ்வாகியுள்ளது.   

நேபாள நாடாளுமன்றம் மற்றும் ஏழு மாகாணங்களின் பேரவைகளுக்கு கடந்த நவம்பர் 26 மற்றும் டிசெம்பர் ஏழாம் திகதிகளில் தேர்தல் நடந்தது.  

275 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 165 பேர் தேர்தல் மூலமும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தலில், ஆளும் நேபாளி காங்கிரஸ், மாதேசி கட்சிகள் இணைந்து ஓரணியாகவும், நேபாள கம்யூனிஸ்ட் ஐக்கிய மாவோயிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் மையம், அடங்கிய இடதுசாரி கூட்டணி எதிரணியாகவும் போட்டியிட்டன. எதிர்கட்சியான இடதுசாரிக் கூட்டணி 113 இடங்களில் வென்று அமோக வெற்றிபெற்றது.   

இதில் முன்னாள் பிரதமர் கே.பி.ஒளி தலைலையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 80 இடங்களிலும், மற்றொரு முன்னாள் பிரதமர் பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) 36 இடங்களிலும் வெற்றி பெற்றது.  

 கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆட்சியை பிடித்த ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி, 23 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியைத் தழுவியது.   
இப்போது மொத்தமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 123 இடங்களையும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) 53 இடங்களையும் பெற்றுள்ளன. இதன்மூலம் இடதுசாரிக் கூட்டணி நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுக்குக் கிட்டிய பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.  

 இதேவேளை மாகாணங்களுக்கான தேர்தலில் ஏழில் ஆறு மாகாணங்களை இடதுசாரிக் கூட்டணி, அமோக பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் அண்டை நாடுகளில் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தியா விரும்பிய தேர்தல் முடிவாக இம்முடிவுகள் அமையவில்லை.   

இந்த வெற்றியின் முக்கியத்துவத்தை அறிவதற்கு நேபாளத்தின் கடந்தகாலத்தை மீட்டுப்பார்ப்பது முக்கியமானது. சீனாவை வட எல்லையாகவும் ஏனைய அனைத்துப் பக்கங்களாலும் இந்தியாவை எல்லையாகக் கொண்ட, நிலத்தால் சூழப்பட்ட நேபாளத்தின் சனத்தொகை 29 மில்லியன். 42 சதவீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கிறார்கள். கல்வியறிவு 48 சதவீதமாகும். 102 இனக்குழுமங்களையும் 93 மொழிகளையும் கொண்ட நேபாளத்தில் 80 சதவீதமானவர்க் இந்துக்கள், 11 சதவீதமானவர்கள் பௌத்தர்.   

உலகின் ஒரேயோர் இந்து இராஜ்ஜியமாகவும் முடியாட்சியாகவும் திகழ்ந்து வந்த நேபாளத்தின் முடியாட்சிக்கும் இந்து இராஜ்ஜியத்துக்கும், மக்களின் யுத்தத்தின் நீண்ட விளைவால் நேபாள மாவோவாதிகள் முடிவு கட்டினார்கள். 239 ஆண்டுகளாக நிலைத்த மன்னராட்சி, 2007ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.   

1950களில் இருந்து சர்வதேச அபிவிருத்தி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தும் நேபாளத்தில் அவற்றின் பயனுள்ள தடயமெதையும் காணமுடியாது. குடிநீர், மின்சார, நெடுஞ்சாலை, போக்குவரத்து வசதிகள் அரிதாகவேயுள்ளன. தலைநகர் காத்மண்டுவுக்கு வெளியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே நேபாளம் இருக்கிறது. உலகின் மிக வறுமையான 50 நாடுகளில் நேபாளமும் ஒன்று.   

1990 வரை அரசாங்கம் முற்றுமுழுதாக அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1990இல் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் விளைவாக அரசர் பீரேந்திரா, நாடாளுமன்ற முடியாட்சியை ஏற்றுக்கொண்டார்.   

இதன்படி அரசுத் தலைவராக மன்னரும் அரசாங்கத்தின் தலைவராக பிரதம மந்திரியும் இருப்பர். ஆயினும் ஆட்சி திருப்தியானதாக அமையவில்லை. 2007 டிசெம்பரில் மன்னாராட்சி நீக்கப்பட்டு, நேபாளம் சமஷ்டிக் குடியரசாகியதில் பிரதான பங்கு நேபாள மாஓவாதிகளைச் சாரும்.   

நேபாளம், தென்னாசியாவின் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள நாடாக இருப்பதற்கான காரணங்கள் பல. அவற்றுக்குள் நிலவுடமைச் சமூகத்துக்குப் பாதுகாவலாய் இருந்த முடியாட்சியினது பங்கு பெரியது. நேபாளத்தில் மன்னராட்சியின் வரலாறு முடிவுக்கு வந்தது மக்கள் போராட்டத்தின் விளைவாலேயேகும்.   

அந்த முடியாட்சி, ஒரு பயங்கரமான கொடுங்கோன்மையாக நடந்து கொண்டபோது கூட, அதை ஆதரித்து வந்தவர்கள் இருக்கிறார்கள். மன்னராட்சியிலிருந்தான நேபாளத்தின் விடுதலையின் பயனை, மக்கள் அனுபவிக்காமல் தடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் மும்முரமாயிருந்தன.   

அமெரிக்கா வெளிவெளியாகவே மன்னராட்சியை ஆதரித்தது. மன்னராட்சி தடுமாறித் தத்தளித்த நிலையில், அமெரிக்காவின் தென்னாசிய அலுவல்களுக்கான செயலாளர் றிச்சட் பௌச்சர், நேபாள இராணுவத் தலைமையுடன் கலந்தாலோசனைகளை நடத்தினார்.   

இதன்மூலம் மன்னராட்சிக்கான அமெரிக்காவின் நேரடி ஆதரவையும் விருப்பையும் தெரிவித்தார். ஆனால், நேபாள மக்களின் போராட்டம் இதை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றது.  

நேபாளத்தின் மிகப்பெரிய சமூகமாற்றம் 1996 ஆம் ஆண்டு நேபாள மாஓவாதிகளால் தொடக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்ட மக்கள் யுத்தத்தின் விளைவிலானவை.  

 10 ஆண்டுகள் நிகழ்ந்த மக்கள் யுத்தத்தின் விளைவால் நேபாள மாஓவாதிகளால் சமூகரீதியான மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது. ‘மக்கள் யுத்தம்’ வெற்றிகரமாக முன்னேற உதவிய காரணிகளை கீழ்க் கண்டவாறு வகைப்படுத்தவியலும்.   

 நிலப்பிரபுத்துவத்தால் ஒடுக்கப்பட்டிருந்த விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்தனர். ஏனைய ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரும் பெண்களும் இளையோரும் போராட்டக்களத்தில் முன்னின்றமையும் அது ஒரு முழுமையான விடுதலைப் போராட்டமாக விருத்திபெற உதவியது.  

image_f211a006b2.jpg

 போராட்டம் பரந்துபட்ட ஐக்கியத்தை வலியுறுத்தி எல்லா மக்களையும் ஒன்று படுத்தியமை, மக்களின் தொடர்ச்சியான நிபந்தனையற்ற ஆதரவை உறுதிசெய்தது.   

 மக்கள் யுத்தம், வெறும் ஆயுதப் போராட்டமாகவன்றிக் காணிச் சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, இனச் சமத்துவம் போன்றவை சார்ந்த பல நடவடிக்கைகளையும் மக்களின் கூட்டு முயற்சியால் ஒரு நெடுஞ்சாலை உட்பட்ட நிர்மாண வேலைகளையும் முன்னெடுத்தது.   

 விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஆட்சி, நிர்வாக, நீதி மாற்றமைப்புக்களை உருவாக்கி சமாந்தரமான அரசாங்கத்தை நடாத்தியமை. 

மக்களின் யுத்தத்தால் பல பிரதேசங்கள் கட்சியினதும் விடுதலைப் படைகளினதும் கட்டுப்பாட்டுள் வந்தன.  

 அப்பிரதேசங்களில் நிலச் சீர்திருத்தத்தின் மூலம் விவசாயிகளுக்கும் நிலமற்றோருக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு அபிவிருத்தி வேலைகளும் கல்வி, சுகாதாரம் உட்பட்ட சமூக பண்பாட்டுப் பணிகளும் திட்டமிட்ட புதிய வழிகளில் மேற்கொள்ளப்பட்டன.   

குறிப்பாக, சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிராகரிக்கப்பட்டுச் சமத்துவநிலை வலியுறுத்தப்பட்டது. தேசிய இனங்களின் தனித்துவங்கள் பேணப்பட்டன.  

2006 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவானபோது, மாஓவாதிகள் 80 சதவீதமான நேபாளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 2005 இல் மன்னர் கயனேந்திரா முழு அரசாங்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தததால், கட்சி அரசியல் முடக்கப்பட்ட நிலையில், மாஓவாதிகளே அரசியல் செயற்பாட்டுக்கான சூழலையும் இடத்தையும் உருவாக்கி, ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் மக்களை அணிதிரட்டினார்கள்.  

 மக்கள் ஐக்கியத்தை உருவாக்கிப் போராடிய மாஓவாதிகளின் செயற்பாடுகளே நேபாளத்தில் ஜனநாயக மீட்புக்கான மூல காரணியாக அமைந்தன.   

மாஓவாதிகளின் பிரதான முன்நிபந்தனை ‘மன்னராட்சியை ஒழித்துப் புதிய குடியரசை உருவாக்குவது’. ஆனால், மக்கள் நல நோக்கில், பேச்சு வார்த்தைகளின் போது அரசியல் நிர்ணய சபையின் ஊடாக அதைச் செயற்படுத்த உடன்பட்டார்கள்.   

அதற்காகப் பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்து, பலகட்சி ஜனநாயக முறையில் செயற்படவும் அவர்கள் முன்வந்தார்கள்.   

நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின் உருவான, நேபாள சமாதான உடன்படிக்கையைக் கண்காணிக்க ஜ.நா அழைக்கப்பட்டது. இராணுவமும் போராளிகளும் சம அளவான ஆயுதங்களைப் பூட்டி வைப்பதென்றும் இரு தரப்பினரும் தத்தமது கூடாரங்களில் இருப்பதென்றும் அவற்றை ஜ.நா கண்காணிக்கும் என்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப் படுத்தும் வழிமுறைகள் ஒழுங்காக வகுக்கப் பட்டிருந்தன.  

நேபாள சமாதான உடன்படிக்கையில் மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் உட்பட்ட சகல உரிமைகளும் இடம் பெற்றமையே அதன் மிக முக்கியமான அம்சமாகும்.   
குறிப்பாகத், தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக உரிமைகளும் பால் சமத்துவத்தைப் பேணும் வழிமுறைகளும் அதில் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன. மக்கள் நலன் சார்ந்த அம்சங்கள் யாவும், அதில் உறுதிசெய்யப்பட்டிருந்தன.   

உடன்படிக்கையில் ஏற்கப்பட்டபடி மன்னராட்சியை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற, பாரம்பரிய நாடாளுமன்றக் கட்சிகள் மறுத்தபோது பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து, தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் விளைவாக நாடாளுமன்றம் விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி, அரசியல் நிர்ணய சபை மூலம் மன்னராட்சியை ஒழிப்பதற்கான சட்டமூலத்தையும் நிறைவேற்ற வழிசெய்தமையானது மாஓவாதிகளின் முக்கியமான பங்களிப்பாகும்.   

அமெரிக்க, மேற்குலகு சாராது, இந்தியாவின் ஆதரவு இன்றி, சீனாவின் அரவணைப்புப் பெறாது, முற்றிலும் நேபாள மக்களின் மீது நம்பிக்கை வைத்தே அங்கு விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது.   

image_b38ae977de.jpg

சோவியத் ஒன்றியத்தி லும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் வீழ்ச்சி கண்ட சூழலில், சீனாவில் சோசலிசப் பாதையில் விலகல் ஏற்பட்ட நிலையில், மாக்சிசமும் சோசலிசமும் மரித்துவிட்டதாக ஊடகங்கள் ஊளையிட்டு வந்த சூழலிலேயே, இமயமலை உச்சியில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்க விட்ட பெருமை நேபாள மாவோவாதிகளைச் சாரும்.   

தென்னாசியக் கம்யூனிஸ்டுகளும் புரட்சிகர மக்களும் விடுதலைக்காக முயன்று வரும் மக்களும் நேபாளத்தின் செங்கொடிகளால் உற்சாகமும் உறுதியும் பெற்றனர் என்பது உண்மை. பல ஆயிரம் கம்யூனிஸ்ட்டுகளாலும் போராடிய மக்களாலும் அர்ப்பணிக்கப்பட்ட உயிர்த் தியாகத்தால் அங்கு செங்கொடிகள் உயர்ந்து நின்றன.   

நேபாளத்தின் விடுதலைப் போராட்டம் சமகால விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னுதாரணம் காட்டி நிற்கின்றது. ஆயுதத்தால் சாதித்ததை அமைதிமுறையில் சாதிக்க நேபாள மாஓவாதிகளால் முடியவில்லை.  

 2007இல் எட்டப்பட்ட சமாதான உடன்படிக்கையின் விளைவால் நடைபெற்ற அரசமைப்புச் சபைக்கான தேர்தலில் வெற்றி பெற்று மாஓவாதிகள் ஆட்சியமைத்த போதும், அவர்களால் ஆட்சியைக் கொண்டு செல்ல இயலவில்லை.   

பொருளாதார நெருக்குவாரங்களினாலும் மாதேசி இனக்குழுக்களைத் தூண்டி புதிய அரசமைப்பை நடைமுறைப்படுத்த இயலாமல் செய்ததன் ஊடும் இந்தியா மாஓவாதிகளின் ஆட்சியை இல்லாமல் செய்தது.   

நேபாள அலுவல்களில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. தனக்குப் பாதகமில்லாத ஆட்சியொன்றை நேபாளத்தில் எப்போதும் தக்கவைப்பதில் இந்தியா குறியாக இருந்துள்ளது.   

இந்தியா மன்னராட்சிக்கு மிகவும் உடந்தையாயிருந்தது. 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘அரண்மனைப் படுகொலை’யில் இந்தியாவின் பங்கு பற்றிப் பேசப்பட்டமை நினைவிலிருத்தத்தக்கது.   

முழு அதிகாரங்களையும் மன்னர் கயானேந்திரர 1-2-2005 அன்று தனதாக்கிய பின்பும், இந்தியா அவருக்கு ஆதரவாயிருந்தது. மன்னராட்சிக்கு எதிரான வெகுசன இயக்கம் வலுவடைந்த பின்பும் மன்னராட்சியின் கீழான நாடாளுமன்ற சனநாயகம் என்ற நிலைப்பாட்டையே இந்தியா ஆதரித்தது.   

மன்னராட்சி நாடாளுமன்ற சனநாயகத்தை மீட்க மறுத்தால், மாஓவாதிகள் தலைமையிலான ஒரு மக்கள் குடியரசு உருவாகும் என்ற சூழ்நிலையிலேயே இந்திய ஆளும் நிறுவனம் மாற்று வழிகளைத் தேடியது. இறுதியில் மாஓவாதிகளின் ஆட்சியைக் கவிழ்த்து, தனக்கு வாய்ப்பான நேபாள காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவதை உறுதிப்படுத்தியது.   

இருந்தபோதும், கடந்த தசாப்தத்தில் ஒரு நிலையான ஆட்சியை நிறுவ முடியவில்லை. அதேபோல புதிய அரசமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தேர்தல்களையும் நடாத்த முடியவில்லை.  

 ஆனால், இவ்வருடம் உள்ளூராட்சி, மாகாண மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இது நேபாள ஜனநாயகத்தின் வெற்றி. இப்போது உருவாகியுள்ள இடதுசாரிக் கூட்டணியின் பெரும்பான்மை அரசாங்கம் நிலையான ஆட்சியை வழங்குவதற்கான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது.   

நேபாள அரசியல் வரலாற்றில் எதிரெதிர் நிலைப்பாடுகளில் இருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஆகியன இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளன. இவ்வெற்றி மக்கள் மத்தியில் இடதுசாரிகளுக்கு உள்ள ஆதரவை கோடிட்டுக் காட்டுகிறது.   

அதேவேளை ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, மக்கள் யுத்தத்தில் ஈடுபட்டு அதில் வெற்றிகொண்ட மாஓவாதிகள், இன்று பலவாகப் பிரிவடைந்துள்ளன. இது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. 

அதேவேளை, போர்க்களத்தில் இருந்து தேர்தல் களத்துக்கான நிலைமாற்றம் இலகுவானதல்ல என்பதை நேபாள மாஓவாதிகளின் உதாரணம் இன்னொருமுறை காட்டி நிற்கிறது.   

நேபாள மக்கள் மீண்டும் ஒருமுறை மாற்றத்தில் நம்பிக்கை வைத்து இடதுசாரிகளுக்கு வாக்களித்துள்ளார்கள். இந்தியா என்கிற பெரிய அண்ணணுடன் எப்படி மல்லுக்கட்டுவது என்பதே புதிய ஆட்சியாளர்களின் மிகப்பெரிய சவால். 

இப்புதிரை விடுவிக்காதவரை நேபாளத்தின் உய்வு சாத்தியமில்லை. 
நாடுகளின் தலைவிதியை சில தருணங்கள் தீர்மானிக்கின்றன. அவ்வாறானதொரு தருணத்தை நேபாளம் இப்போது காண்கிறது.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நேபாளம்-இடதுசாரிகளின்-தருணம்/91-209229

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.