Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா பாதி... கருணாநிதி பாதி..! - இது தினகரன் ஸ்டைல்?

Featured Replies

ஜெயலலிதா பாதி... கருணாநிதி பாதி..! - இது தினகரன் ஸ்டைல்?

 

 
dinakaranjpg

டிடிவி தினகரன் | கோப்புப் படம்.

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது சத்திய வார்த்தை. மழைக்கு மட்டுமில்லை. இடி, மின்னல், புயல் என சகலத்துக்கும் பொருந்தும். இவற்றுக்கு மட்டுமா? தேர்தல் தொடங்கி, பிரச்சாரம் நடந்து, வெற்றியும் அறிவிக்கப்பட்டுவிட்ட ஆர்.கே.நகர் அதகளம்... அரசியல் அரங்கில்... புதிய அத்தியாயங்களை எழுதும் போல் தெரிகிறது. இதோ... ரிசல்ட் வந்த மறுநாளே... அதிமுகவினர் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வனின் கட்சிப் பதவிகளைப் பறித்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்.

’என்னப்பா இது... இரட்டை இலை நமக்குக் கிடைச்சும் எதுவுமே நடக்கலையே... கனியலையே...’ என்கிறார்கள் அதிமுகவினர்.

‘கரெக்ட்டா... மக்கள் ஓட்டுப் போட ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலதான், 2ஜி வழக்குல குற்றவாளிகள் இல்லைன்னு தீர்ப்பு வந்துச்சு. ஆனாலும் டெபாசிட் கூட வாங்கமுடியலியே...’ என்று அலுத்துக் கொள்கிறார்கள் திமுகவினர்.

‘குஜராத்லயும் திரும்பவும் நம்ம ஆட்சிதான். எல்லாமே மோடி போட்ட பிரச்சார பிளான் தான். ஆனா, நோட்டாவை விட நமக்கு ஓட்டு கம்மிங்கறதை ஜீரணிக்கவே முடியலியே...’ என்று தவிக்கிறார்கள் பாஜகவினர்.

‘பாருய்யா... இரட்டை இலை இல்ல. போன முறை பிரபலப்படுத்திய தொப்பியும் தரல. வழக்கெல்லாம் இன்னும் நிலுவைலதான் இருக்கு. சமீபகாலங்கள்ல, எல்லாமே தோல்வி முகம்தான். ஆனாலும் சுயேச்சையா நின்னு, குக்கர் சின்னத்துல நின்னு, ஜெயிச்சிட்டாரே தினகரன்’ என சொல்லிச் சொல்லி ஆச்சரியப்படுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அரசியல் விமர்சகர்கள், கட்சியினர், ஊடகவியல் நண்பர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்.கே.நகர் பொதுமக்கள் எனப் பலரிடம் பேசியதில்... தினகரன் ஜெயித்ததற்குப் பின்னே உள்ள காரணங்களை ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது.

03CHRGNGJAYANTHITTV

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அதிமுக (அம்மா) துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.   -  படம்: க.ஸ்ரீபரத்

 

‘என்ன... பணம்தானே...’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. அந்தப் பக்கமும் ஆறாயிரம் வரை கொடுக்கப்பட்டிருப்பதை, தேர்தல் சமயத்தில் வலம் வந்தபோது பார்க்கமுடிந்தது. ஆக, பணம் என்பதைக் கடந்து சில விஷயங்களை ஆராய வேண்டியதாகவே படுகிறது, இந்தத் தேர்தலும் வெற்றியும்!

ஜெ.வியூகம்!

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுகவை இரும்பு, எஃகுக் கோட்டையாக உருவாக்கி, தி.மு.க.வையும் ஆனானப்பட்ட கருணாநிதியையும் எதிர்த்துக் களமாடி, வெற்றி பெற்ற வரலாறும் அதற்குப் பின்னேயுள்ள வியூகங்களும் வியக்கச் செய்பவை. இங்கே, இந்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் அத்தனை வியூகங்களும் கொண்டு தினகரன் சந்தித்தார். அவரின் அபிமானிகளும் ஆதரவாளர்களும் சந்தித்தனர்.

இங்கே இன்னொரு உண்மையும் வெளிப்படுகிறது. ஒருவேளை... ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் இல்லாதிருந்தால், இந்தியாவின் மூன்றாவது கட்சி எனும் பெயரெடுக்கும் அளவுக்கு அதிமுக வளர்ந்திருக்குமா என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதாவது இத்தனை அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்கள் அனைத்துமே சசிகலா மற்றும் சொந்தங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ எனும் சந்தேகம் ஆர்.கே.நகர் தேர்தலின் மூலம் இன்னும் உறுதிப்படுகிறது.

அட்டாக்... அட்டாக்... அட்டாக்!

ஒருவரைத் தொடர்ந்து அட்டாக் செய்து அடக்கிப் பார்க்கும் போது, ஒருகட்டத்தில் மக்களிடம் ஓர் அனுதாபமோ அல்லது ஈர்ப்போ அல்லது அபிமானமோ வந்துவிட வாய்ப்பு உண்டு என்பதே யதார்த்தம். முதல் முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த கட்டத்தில், அவர் மீதும் அவரின் செயல்கள் மீதும் கோபம். விளைவு... திமுகவை ஜெயிக்க வைத்தார்கள். ஆட்சிக்கு வந்த திமுகவும் நன்றாகவே செயல்பட்டாலும் அடுத்த தேர்தலில் ஜெ... ஜெயித்தார். காரணம்... மக்கள் மன்னித்தார்கள்.

ஒருபக்கம் வழக்குகள், இன்னொரு பக்கம் மத்திய அரசின் கிடுக்கிப்பிடிகள், இந்தப் பக்கம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு கட்சியில் இருந்து விலக்கிவைத்த நிலைமை, மீண்டும் தொப்பிச் சின்னம் கூடாது என்பதில் உறுதியாக இருந்த தேர்தல் ஆணையம், தொகுதியில் மாநிலப் போலீசே நடத்திய ராணுவக் கட்டுப்பாடுகள் என எல்லாமாகச் சேர்ந்து அவர் செய்த தவறுகளையும் செய்ததாகச் சொல்லும் தவறுகளையும் கடந்து மக்களுக்கு ஓர் அனுதாபம் ஏற்பட்டதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

பணம் தந்தாலும் ஓட்டு குக்கருக்குத்தான்!

அந்தப் பக்கமிருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை யார் பார்த்தார்களோ இல்லையோ தொகுதி மக்கள் கூர்ந்து கவனித்தார்கள். ‘இன்னாபா இது. போலீஸே பாதுகாப்பு கொடுக்குது. யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்கோ’ எனும் மிரட்சி மக்களிடம் இருந்தது. இந்தப் பக்கம் வாங்கு. பாவம் தனியா அந்தப் புள்ளைய உட்டுட்டாங்களே...’ என்று குக்கருக்குக் குத்தினார்கள் வாக்குகளை! சொல்லப்போனால், தொப்பி(!)க்குப் போடலாம் என நினைத்த ஓட்டுகள் இவை. நாலாபக்கமும் இருந்து போடப்பட்ட தினகரனுக்கான முட்டுக்கட்டைகளே, அவருக்கான படிக்கட்டுகளாக மாறியிருக்கின்றன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கட்சி சார்பற்ற ஓட்டு எப்படி?

முன்பெல்லாம் இரண்டு விஷயங்களைச் சொல்லுவார்கள். ஒன்று... இரட்டை இலையை யாராலயும் அசைக்கமுடியாது. அடுத்தது... திமுகவுக்கு விழவேண்டிய ஓட்டு, சிந்தாம சிதறாம திமுகவுக்குக் கிடைச்சே தீரும்! ஆனால் இந்த இரண்டுமே இந்தத் தேர்தலில் மாறியிருக்கின்றன. அவ்வளவு பலம் வாய்ந்தவரா தினகரன்?

அப்படியில்லை... காலமும் சூழலும் அப்படி பலம் பொருந்தியவராக ஆக்கியிருக்கிறது. சாலை வசதி தொடங்கி விவசாயம், கல்வி என பல பிரச்சினைகளில் இந்த ஆட்சியின் ‘கோமா’ நிலை, மக்களை கோபப்பட வைத்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கிட்டத்தட்ட இந்தத் தேர்தலை, அந்த எதிர்ப்பை ஆட்சியாளர்களுக்குக் காட்டும் விதமாகவோ அல்லது ஆட்சியாளர்களுக்குக் கிடுக்கிப்பிடி போடுவதற்கு தினகரனை கொம்புசீவி விட்டால்தான் நடக்கும் என்று மக்கள் நினைத்தார்களோ..! அதனால் திமுகவுக்கு விழவேண்டிய ஓட்டுகள் கூட, குக்கருக்குள் விழுந்து நிரம்பின.

அதனால்தான் ஜெயலலிதா இங்கே காட்டிய ஓட்டு வித்தியாசத்தை விட, தினகரன் சுமார் அதைத் தாண்டி அதாவது நாற்பதாயிரத்துச் சொச்ச ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். வெல்லவைக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.

திமுக ஆட்டத்துக்கே இல்லை!

சொல்லப்போனால் இதுதான் இப்போது மக்களின் மனநிலை. அதுவும் ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டுமான நிலைப்பாடு! பல ஆண்டுகளாக அதிமுகவே தொடர்ந்து ஜெயித்து வரும் தொகுதி என்பது ஒருபக்கம். இரட்டை இலை, தொப்பி, குக்கர் என்றெல்லாம் நடந்த கூத்துகளும் குழப்பங்களும் இன்னொருபக்கம்.

இதற்கெல்லாம் முடிவு வேண்டுமெனில், ஒன்றுபட்ட அதிமுக வேண்டும். இதுவரை ஜெயலலிதாவுடனேயே இருந்த தினகரனுக்கா, அவர்களை வளர்த்தவர்களையே முட்டிப் பதம் பார்த்த ஓபிஎஸ், இபிஎஸ்க்கா? ஒவ்வொரு அமைச்சர்களும் அவர்களின் கம்பர், சேக்கிழார், தெர்மாக்கோல் என உளறல் பேச்சுகளும் நடவடிக்கைகளும் ஏதோவொரு கோபத்துக்கு மக்களைத் தள்ளியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இதில், திமுக மீது தற்போது எந்தக் கோபமும் இல்லை. அதேநேரம் இப்போது திமுக ஜெயித்தால் கூட, ஜெயிக்க வைத்தால் கூட, சட்டசபையில் ஏதும் நிகழப்போவதில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆக, ஏதோ நிகழவேண்டும் எனும் பிரேக்கிங் நியூஸ் பரபரப்பில், படபடத்துக் கிடக்கிறார்கள் மக்களும்!

சுயேச்சையா தினகரன்?

 

dinakaran%20ttvjpg

தினகரன் | கோப்புப் படம்: ஆர்.அஸ்வின்

 

கட்சி இல்லை. அமைப்பு மாதிரியான எந்த அடையாளமும் இல்லை. தனியே சின்னம் இல்லை. அப்படியெனில் சுயேச்சைதான். ஆனால் மக்கள் அப்படி சுயேச்சையாகப் பார்க்கவே இல்லை என்கிறார்கள். தினகரனின் இத்தனை வருட அரசியல் பாப்புலாரிட்டியும் சசிகலாவின் உறவு என்கிற அடையாளமும் எம்.பி.யாக இருந்தவர் எனும் கவுரவமும் தாண்டி, ஜெயலலிதா மரணம், சசிகலா சிறைக்குப் பிறகு து.பொ.செ. பதவியும் இன்னொரு லேண்ட்மார்க்காகி விட, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகான இடைத்தேர்தலில் அவரே வேட்பாளராக, இன்னும் எகிறிவிட்டது பாப்புலாரிட்டி என்கிறார்கள் இந்தத் தொகுதி மக்கள்!

வெற்றி ஏற்படுத்திய கிலி!

வெற்றிவேல் வெளியிட்ட திடீர் வீடியோவைச் சொல்லவில்லை. அந்த வீடியோ, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தாரின் மீதான சந்தேகங்களைத் துடைத்த மாதிரி தெரியவில்லை. வழக்கம் போல், டாக்டர் பீலே மாதிரியானவர்களின் விளக்கங்கள் எப்படி சந்தேகத்தை வலுப்படுத்தியதோ.. .இந்த வீடியோவும் அந்த ரகம்தான் என்பது மக்களின் கருத்து! அதேபோல், வீடியோவால் தினகரனுக்கு ஓட்டும் விழவில்லை. அதன் மீதான சந்தேகத்தால் மதுசூதனுக்கும் ஓட்டு போய்விடவில்லை.

அனைத்தையும் தாண்டிக் கிடைத்த தினகரன் வெற்றி... எடப்பாடி தரப்புக்குள் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூரில் இருந்து ஒரு எம்.பி. போய்ப் பார்த்ததும் இன்னும் எகிறத் தொடங்கிவிட்டது ‘லப்டப்’!

நிதானம், பொறுமை, சிரிப்பு!

மக்களிடம் கேட்டதற்கு, தினகரனின் ப்ளஸ் பாயிண்டுகளாக இதைத்தான் சொல்லுகிறார்கள். ‘அந்தப் புள்ள இவ்ளோ நிதானமா, பக்குவமாச் சொல்லுது’ என்கிறார்கள். ‘யாரையும் அடாவடியாப் பேசலை. கவுரவக் குறைச்சலா பேசலை. சிரிச்ச முகத்தோட, பொறுமையா, மரியாதையா பேசுறது பிடிச்சிருக்கு’ என்கிறார்கள்.

உடல்மொழி எனும் பாடி லாங்வேஜ், வசனம் எனப்படுகிற டயலாக் டெலிவரி என்பவை சினிமாவுக்கு மட்டுமின்றி அரசியலுக்கும் வாழ்க்கைக்குமே தேவை என்பதையே இது காட்டுகிறது. உணர்த்துகிறது.

வித்தியாச பேட்டிகள்!

எல்லோரிடமும் குறிப்பாக அரசியல்வாதிகளிடம் சில டெம்ப்ளேட் பதில்கள் இருக்கும். 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்தபோது, அதிமுகவினரும் பாஜகவினரும் அடுத்த கோர்ட் இருக்கு. அங்கே பாருங்கா... அங்கே பாப்போம் என்றார்கள். தினகரனிடம் இருந்து வந்த பதில்... பரவாயில்லை... இதை எதுவுமாகவே நான் பார்க்கவில்லை. அவர்களுக்கு என் வாழ்த்துகள்! இந்த பதிலைக் கேட்டு மக்கள் மட்டுமல்லாமல் திமுகவினரே ஆடித்தான் போனார்கள்.

இது கருணாநிதி ஸ்டைல்!

ஜெயலலிதாவின் வியூகம் என்றே வைத்துக் கொள்வோம். ஏனெனில் நமக்கெல்லாம் இரும்புமனுஷியாகத்தான் தெரியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆக தேர்தலும் தேர்தல் களமும் களமாடிய விதமும் மக்களை ஈர்த்த விஷயங்களும் வியூகங்கள். இது ஜெ... ஸ்டைல்!

ஆனால் அந்த ஸ்டைலுக்குள் தினகரன் இன்னொரு ஸ்டைலையும் புகுத்தியிருப்பதாகவே விமர்சகர்கள் பார்க்கிறார்கள். எந்தக் கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்வார் திமுக தலைவர் கருணாநிதி. கேள்விகள் எவ்வளவு வீரியமாக இருந்தாலும் அதை தன் காமெடியாலும் கிண்டலாலும் தவிடுபொடியாக்கிவிடுவார் கருணாநிதி.

ஆக, ஜெயலலிதா பாதி... கருணாநிதி பாதி. கலந்து செய்த கலவை நான் என்று இந்தத் தேர்தல் மூலம் மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் தினகரன்.

எது எப்படியோ... தினகரன் வெற்றி, மாநில அரசை மட்டுமல்ல... மத்திய அரசையே யோசிக்க வைத்திருக்கிறது.

யார்கண்டது... பிரேக்கிங்கே இல்லாமல், இனி பிரேக்கிங் நியூஸ் வந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் ஊடகவியல் நண்பர்கள்!

தலைமை இல்லாத வெற்றிடம் இங்கே... அதற்கு விடை தேடும் ஆரம்பம்தான் இந்தத் தேர்தலும் முடிவுமா?

அந்த வெற்றிடத்தை நிரப்புவது யார்?

http://tamil.thehindu.com/tamilnadu/article22275844.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஆர்.கே. நகர் ஆரவாரம்: அரியாசனத்துக்கு அச்சாரமா?

 
ஆர்.கே. நகர் ஆரவாரம்: அரியாசனத்துக்கு அச்சாரமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றிருப்பது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதைவிட அ.இ.அ.தி.மு.கவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்; ஓர் இடைத்தேர்தல் பொதுவான அரசியல் போக்கை முடிவு செய்யக் கூடியதல்ல.

இடைத்தேர்தல்களில் வெற்றிபெறும் ஆளும் கட்சி பெரும்பாலும் பொதுத்தேர்தலில் அந்த சாதனையை நிகழ்த்துவது இல்லை என்பது கடந்த கால் நூற்றாண்டு வரலாறு

தினகரன் சுயேச்சை என்றாலும் அதிமுகவின் ஒரு பிரிவின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும்

ஆட்சியும், இரட்டை இலையும் தங்கள் பக்கம் இருந்தும் 40707 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்றுள்ளது; தினகரன் வெற்றி சாதாரணமான நிகழ்வல்ல; அது சாதனைதான்; இதன் மூலம், எதிர்காலத்தில் அ.இ.அ.திமுகவுக்குள் யார் கை ஓங்குகிறது என்பதை கவனிக்க நேர்கிறது

தினகரனால் தான் தேர்தல் வெற்றியை ஈட்ட முடியும் என அ இ அதிமுக தொண்டர்கள் கருதுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; இதனால் அக்கட்சியில் உள்ள சிலர் தினகரன் அணி பக்கம் தாவக்கூடும்.

இந்த நெருக்கடியை சமாளிக்க அஇஅதிமுக சமரசம் செய்துகொள்ள முன்வரலாம் அல்லது நிர்வாகத்தில் கவனம் செலுத்தி மக்களின் ஆதரவை பெற முயற்சிக்கலாம். அப்படி செய்தால் அஇஅதிமுக என்றும் தினகரன் அணி என்றும் இரு பிரிவுகள் இருப்பது உறுதியாகிவிடும். அதனால், இரு தரப்பு வாக்கு வங்கியிலும் சேதாரம் ஏற்படும்

தினகரன் வெற்றி காரணமாக பாரதிய ஜனதா தமிழக அரசியலில் பின்பற்றி வந்த உத்தியை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது; இரு தரப்பையும் ஒன்றாக சேர்த்தோ அல்லது தினகரனை பலவீனபடுத்தியோ ஆளும் அரசை தன் பக்கம் வைத்துக்கொள்ள பாரதிய ஜனதா முயற்சிக்கும். அ.இ.அ.தி.மு.க செல்வாக்கு மட்டுப்பட்டுவிட்டால் தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும். திமுக வெற்றி பெறுவதும் பாஜகவுக்கு எதிராக போய் முடியும்.

பல நெருக்கடிகளை தாண்டி தினகரன் வெற்றி பெற்றிருப்பது குறித்து 1972 திண்டுக்கல் இடைத்தேர்தல், 1989 மதுரை கிழக்கு, மருங்காபுரி தேர்தலோடு ஒப்பிட்டு சில அரசியல் நோக்கர்கள் பேசுகின்றனர்.

ஆர்.கே. நகர் ஆரவாரம்: அரியாசனத்துக்கு அச்சாரமா?படத்தின் காப்புரிமைTWITTER

அதிமுக பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் நட்சத்திர செல்வாக்கை நம்பி இருந்தது; அதேபோல் மக்களை ஈர்க்க எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவை பயன்படுத்தினார். அவர்களை போல் ஈர்ப்புசக்திகொண்ட தலைவர் அல்ல தினகரன்; ஆனால், அவரது பேச்சுத்திறன் ஊடகவியலாளர்களின் கேள்விகளை கையாளும் லாவகம் அவருக்கு மதிப்பை பெற்றுத்தந்தது; இதைக்கொண்டு ஆளுமைமிக்க பெரிய தலைவராக அவர் வளர்ந்துவிட்டார் என கணிக்க இயலாது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன; மத்திய அரசின் மீதான கோபத்தை பிரதிபலிக்கக்கூடிய தலைவராக தினகரனை ஆ.கே.நகர் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என மதிப்பிடுவது மிகையான ஒன்று. அதிமுக தற்போது ஒரு வாக்குக்கு ரூ.6,000 தந்ததாகவும் தினகரன் தரப்பு ஒரு தொகையை தருவோம் என வாக்குறுதி தந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

இச்சூழலில் பணநாயகம் வென்றது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வர்ணிக்கிறார். பண விநியோகம் என்ற விஷச்சுழலில் தமிழக அரசியல் சிக்கி தேர்தல்கள் கேலிக்கூத்தாக ஆக்கப்பட்டுவிட்டன. "இது திமுகவின் தோல்வியல்ல, தேர்தல் ஆணையத்தின் மாபெரும் தோல்வி" என்கிறார் மு.க.ஸ்டாலின்.

பணம் எங்கிருந்து வந்தது?

இந்தத் தேர்தலில் திமுக பண விநியோகம் செய்யவில்லை. எனினும் சில காலமாக அதிமுகவும் திமுகவும் மாறி மாறி வாக்காளர்களை விலைக்கு வாங்கி வந்துள்ளனர். இந்தப் பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது என்பதுதான் முக்கிய கேள்வி. அந்தப் பணம் ஊழலில் கிடைத்த பணம் என்பது மக்களுக்கு தெரியும். எந்த உறுத்தலும் இல்லாமல் மக்கள் அதை வாங்குகின்ற நிலையில் இருப்பதுதான் பெரிய அவலம்.

ஆர்.கே. நகர் ஆரவாரம்: அரியாசனத்துக்கு அச்சாரமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தத் தேர்தலில் திமுகவும் தினகரனும் ரகசிய உடன்பாடு செய்துக்கொண்டனர் என ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கூட்டறிக்கை குற்றம் சாட்டுகிறது. நேரடி உடன்பாடில்லை என்றாலும் திமுக இத்தேர்தலை ஏன் ஒரு கவுரவ பிரச்னையாக கருதவில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது?

ஜெயலலிதா உயிரோடு இல்லாத காலத்தில் கூட - பிளவுபட்ட அதிமுகவுடன் மோதி மு.க.ஸ்டாலினால் ஒரு இடைத்தேர்தலில் வெற்றியை ஈட்ட முடியவில்லை என்ற செய்தி சாதாரண மக்கள் மத்தியில் திமுக குறித்த மரியாதையை குலைக்கும்.

உட்கட்சி பிரச்னையில் அதிமுகவுக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்கான தேர்தல் இது. இந்தத் தேர்தல் முடிவை வைத்து தினகரன் தலைமைக்கு மக்கள் அங்கீகாரம் என்ற முடிவுக்கு வர இயலாது.

காணொளி காரணமா?

ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டார்கள் என துண்டுப் பிரசுரம் மூலம் அதிமுக செய்த பிரசாரத்திற்கு பதிலடியாக ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டது. இதைப் பார்த்து தினகரன் சசிகலா தரப்பு மீது அனுதாபம் திரும்பியதா?

இந்த வீடியோவும் ஓரளவுக்குதான் செல்வாக்கு செலுத்தியிருக்க முடியும். மக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் மீதான மதிப்பு குறைந்து வருகிறது. இந்த அதிருப்தியை திமுக அறுவடை செய்யாமல் விட்டுக்கொடுத்ததா அல்லது விலகிச்சென்றதா?

திமுகவுக்கு மெகாக்கூட்டணி இருந்தும் டெபாசிட் இழக்கும் நிலை என்றால் திமுகவின் மெத்தனம் எனச் சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

பாஜகவின் கரு.நாகராஜன் நோட்டா வாக்குகளை விட குறைவான வாக்குகள் (1,417) பெற்றுள்ளார். இதற்கு மாறாக, நாம் தமிழர் கட்சி 3,860 வாக்குகள் பெற்றுள்ளது.

தமிழகத்தின் உணர்வுகளை மதித்து பாஜக செயல்படவில்லையா? அதுமட்டுமின்றி பாஜக ஆதரவு நிலையெடுத்த அதிமுகவுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டினார்கள் என்பது சரியா? ஆர்.கே.நகர் தேர்தல் என்பதால் ஜெயலலிதாவின் வாரிசு தினகரன் என்று முடிவாகியிருக்கிறதா? மக்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்துதான் வாக்களித்தார்களா?

ஓர் இடைத்தேர்தலைக் கொண்டு ஒட்டுமொத்த அரசியல் போக்கை எடைபோடுவது சரியல்ல.. இந்த கழுத்தறுக்கும் கடும் போட்டியில் எந்தெந்த நடிகர்கள் இனி அரசியல் களம் புக துணிவார்கள்?

அந்த நிலைமைகள், அவர்களின் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு பின்புதான் தமிழக அரசியல் தேர் ஒரு நிலைக்கு வந்து நிற்கும்.

http://www.bbc.com/tamil/india-42477222

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை வழிநடத்தும் வாய்ப்பை ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு வழங்கி உள்ளார்கள்: தினகரன் பேட்டி

 

 
download%2010

ஜெயலலிதா, டிடிவி தினகரன்   -  கோப்புப் படம்

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக என்ன ஆகுமோ என்பதற்கு மக்கள் எனக்கு அளித்த பேராதரவு மூலம் கட்சி ஆட்சியை நடத்தும் பொறுப்பை எனக்கு வழங்கி உள்ளார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அடையாரில் அவர் இல்லம் முன்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இரண்டு முகம் என்கிறார் ஓபிஎஸ் ஆமாம் அன்பானவர்களுக்கு அன்பான முகமும் துரோகிகளுக்கு ருத்ரதாண்டவமும் காட்டுகிறேம். ஏன் தோல்வி பயத்தால் உடனடியாக கட்சிக் கூட்டத்தை கூட்டுகின்றனர். உண்மையான தொண்டர்கள் என் பக்கம் வாருங்கள். எத்தனைப்பேர் கட்சிக்குள் கட்சி பெயர் சின்னம் என்ற மாயையில் சிக்கி இருப்பவர்கள் அங்கிருக்கிறார்கள்.

உண்மையில் கட்சி முக்கியம் பதவியை விட கட்சி முக்கியம் என்று நினைப்பபவர்களும் அதிமுகவில் இருக்கிறார்கள். அவர்கள் என் வெற்றியை பற்றி யோசிப்பார்கள். ஜெயலலிதா இல்லை இனி ஆட்சிக்கு வர முடியாது, இருக்கும் வரை பதவியை அனுபவித்து விட்டுச்செல்லலாம் என்று நினைப்பபவர்கள் எண்ணத்தை ஆர்.கே.நகர் பொய்பித்துவிட்டது.

கட்சியை நிச்சயம் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுச்செல்ல ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு வாய்ப்பை வழங்கி உள்ளார்கள். ஒரு பூத் அல்ல, அனைத்து பூத்களிலும், அனைத்து ரவுண்டுகளிலும் லீடிங் கொடுத்து மக்கள் வெல்ல வைக்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயமா!

நான் ஆரம்பம் முதலே அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று தெரிவித்தேன் அதுதானே நடந்தது. 20 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கியதாக சொல்கிறார்கள். 20 ரூபாய் கொடுத்து பின்னர் பணம் தருகிறேன் என்றால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? அவ்வளவு நம்பிக்கை என் மீது மக்களுக்கு இருந்தால் நான் ஏன் 20 ரூபாய் தந்திருக்க வேண்டும்? சும்மாவே ஓட்டு கேட்டிருக்கலாமே.

இப்போது கூட செயல்தலைவர் என்று ஒருவர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் நினைத்து விட்டார் வாக்குகள் அப்படியே இருக்கும் என்று, ஆனால்  காலம் மாற்றிவிடும். நான் 20 ரூபாய் கொடுத்து அப்புறம் தருகிறேன் என்று கடன் சொல்லி ஓட்டு கேட்டால் மக்கள் வாக்களிப்பார்களா? சுடச்சுட ரூ.6000 கேஷ் இருக்கிறது அதற்கு வாக்களிப்பார்களா?

நான் அப்போதே சொன்னேன். ரூ.120 கோடி கொடுத்துள்ளார்கள். இன்னும் கூட அதிகம் கேளுங்கள் உங்கள் பணம் தான் ஆனால் வாக்களிக்கும் போது யோசித்து போடுங்கள் என்று சொன்னேன். இந்த 20 ரூபாய் விவகாரத்துக்கு மீடியாக்கள் முற்றுப்புள்ளி வையுங்கள். நான் ஏமாற்றித்தான் ஓட்டு வாங்கினேன் என்று கூறுகிறார்கள். நான் ஏமாற்றியதாகவே வைத்துக்கொள்ளுங்கள் மக்கள் என்னிடம் ஏமாறத்தயாராக இருக்கிறார்கள் அவர்களிடம் ஏமாறத்தயாராக இல்லை என்றுத்தானே அர்த்தம்.

மக்களில் சிலர் இரக்கப்பட்டு வாக்களித்திருக்காவிட்டால் இவர்கள் டெபாசிட் போயிருக்கும். என் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்கள் விசாரிக்கட்டும். அதற்கு முன்னர் போலீஸை வைத்துக்கொண்டு ரூ.120 கோடி கொடுத்தார்களே அதை முதலில் தேர்தல் ஆணையம் விசாரிக்கட்டும்.

நான் பேப்பரில் எழுதிக்கொடுத்து அக்ரிமெண்ட் போட்டு கொடுத்தால் கூட மக்கள் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு பந்தம் ஜெயலலிதா மீதும், என் மீதும் இந்த தொகுதி மக்களுக்கு உள்ளது. மாயமான் என்கிறார் பன்னீர் செல்வம் நான் 99-ல் பாராளுமன்ற எம்பி ஆனபோது எங்கிருந்தார் கேளுங்கள். என்ன பொறுப்பிலிருந்தார் கேளுங்கள்.

அன்று வாக்கு எண்ணிக்கையின் போது என்ன நடந்தது?  போலீஸிடம் என்ன கட்டளை இட்டார்கள்? அதிக வாக்குகள் முன்னிலை வருகிறது அடித்து உடைக்கச்சொல்லி கட்டளை இட்டார்கள். மதுசூதனனுடன் இருக்கும் ராஜேஷின் ஆட்களுக்கு அந்த கட்டளை இடப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.

பிரவீன் நாயரே ஓடிப்போனார். நாங்கள் உடனடியாக மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தொடர்பு கொண்டு உடனடியாக இந்த பிரச்சனை தீரவில்லை என்றால் இப்போதே இந்த கணமே நீதிமன்றம் செல்வோம் என்றோம். உடனே அவர் தலையிட்டு நல்லபடியாக பிரச்சனை தீர்க்கப்பட்டது.

திமுகவும் நானும் கூட்டுச்சதி என்கிறார்கள். கேலிக்கூத்தாக இல்லையா? 70 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி பெரிய கூட்டணியுடன் நிற்பவர்கள் இப்படி வருவார்களா? திமுகவின் தலைமையின் தவறான கணக்கீடு காரணமாக அவர்கள் தோற்றார்கள். அவர்கள் கட்சி வாக்குகள் எனக்கு விழுந்திருக்கலாம்.

சசிகலா புஷ்பா சந்தித்தார், நீங்கள் அரசியலில் இல்லாத நேரத்தில் நான் கட்சிக்குள் வந்தேன். தற்போது உங்கள் செயல்பாடு, துணிச்சல் எனக்கு பிடித்துள்ளது. எதிர்காலத்தில் உங்கள் தலைமையின் கீழ் இணைந்து செயல்பட விரும்புகிறேன் என்றார். தவறுகளை விட்டு வருபவர்களை புறக்கணிக்க முடியாது. ஓபிஎஸ் சேவல் சின்னத்திற்கு எதிர்ப்பு காரணமாக சேவல் கழுத்தையே அறுத்தவர், வளர்மதி ஜெயலலிதாவை பேசாத பேச்சா? அவர்களை அரவணைத்து ஜெயலலிதா ஏற்றுகொள்ளவில்லையா? ஆகவே அதையெல்லாம் வைத்து பார்க்க முடியாது.

இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22277016.ece?homepage=true

  • தொடங்கியவர்

'எங்கள் இலக்கு எம்.எல்.ஏ. அல்ல!' - தினகரனின் அடுத்த மூவ்!

 
 

தினகரன்

ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற தினகரனின் அடுத்த இலக்கு முதல்வர் நாற்காலி என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அதற்காக ஸ்லீப்பர் செல்ஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

 

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றிவாகையைச் சூடியிருக்கிறார் சுயேச்சை வேட்பாளர் தினகரன். அவரது வெற்றி, அ.தி.மு.க. தலைமைக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. அதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விகுறித்து விவாதிக்கப்பட்டது. தினகரனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் நீக்கினர். அவர்களில் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, செய்தி தொடர்புக்  குழு உறுப்பினர் நாஞ்சில்சம்பத், மகளிரணி துணைச் செயலாளரும் செய்தி தொடர்புக்குழு உறுப்பினருமான சி.ஆர்.சரஸ்வதி ஆகிய 5 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பார்த்திபன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, தேனி மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆகிய 4 பேர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளை நீக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. 

தினகரன்

இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியால் உற்சாகத்துடன் இருக்கின்றனர் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள். அவர்களில் சிலரிடம் பேசினோம். 
"ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலம் எங்களது செல்வாக்கு நிரூபணமாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் சசிகலா, தினகரன்மீது சுமத்தப்பட்ட பழி, ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மூலம் துடைக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் யார் துரோகிகள்? என்பது தொண்டர்களுக்குத் தெரியும். நாங்கள் துரோகம் செய்திருந்தால் இந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட மதுசூதனனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

ஆர்.கே.நகரின் வெற்றியைப் பார்த்து பயந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தினகரனின் ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். எங்களை நீக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தவறுக்கு மேல் தவறுகளைச் செய்துவருகின்றனர். ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியில்கூட மீண்டும் வெற்றி பெற முடியாதவர்களால் எங்களை எதுவும் செய்யமுடியாது. மக்களின் ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது. ஆர்.கே.நகரில் வெற்றி குறித்த தகவலைக் கேள்விபட்ட சசிகலா, சந்தோஷத்திலிருக்கிறார். அவரை இன்னும் இரண்டு தினங்களில் தினகரன் சந்திக்கவுள்ளார்.

இதற்கிடையில், தினகரன் வெற்றிக்கு அ.தி.மு.க.வினரின் பங்கு அதிகம் உள்ளது. அவர்களுக்கு தினகரன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள்மீது ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினர் நடவடிக்கை எடுக்க முடியாத தர்மசங்கடத்தில் உள்ளனர். எங்களது இலக்கு எம்.எல்.ஏ. அல்ல. ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தினகரன் விரைவில் தமிழகத்தின் முதல்வர் அரியணையில் அமருவார். அதுதான் எங்களின் இலக்கு. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலாதான். சசிகலாவின் தயவால்தான் ஓ.பன்னீர்செல்வமும் முதல்வரானார்.

அ.தி.மு.க கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

 

கட்சிக்குத் துரோகம் செய்தவர்களுக்கு கல்தா கொடுக்கப்படவுள்ளது. கட்சியும் ஆட்சியும் இனி எங்கள் கையில். தினகரனை முதல்வராக்க எங்களது ஸ்லீப்பர் செல் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் தயாராகிவிட்டனர். தினகரன் வெற்றி பெற்றதும் அவர்கள் போனில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்கள் யார் என்று ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினருக்குத் தெரியும். இருப்பினும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. ஏற்கெனவே 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ததால் ஆட்சிக்கே சிக்கல் எழுந்தது. எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். 
18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு கிடைத்ததும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் எங்களது மெஜாரிட்டியை நிரூபிப்போம். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியின் கூடாரம் காலியாகிவிடும். எங்களது எதிரி தி.மு.க.தான். தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் வாரிசாகக் கருதி தினகரனை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவோம். தமிழகத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக ஆர்.கே.நகரை மாற்றுவோம். ஜெயலலிதா அறிவித்த திட்டங்களோடு, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவோம். அதற்கான ஏற்பாடுகளை தினகரன் செய்துவருகிறார். சசிகலாவைச் சந்தித்தப்பிறகு எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினருக்குக் கடும் அதிர்ச்சியாக இருக்கும்" என்றனர். 

https://www.vikatan.com/news/rk-nagar/111849-ttv-dinakarans-next-move.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.