Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த ஆட்டம் யாருக்காக..?

Featured Replies

இந்த ஆட்டம் யாருக்காக..?

 

 
USA-CONGRESSTILLERSON-CHINA

“அமைதி வழிகளில் சற்றும் அக்கறையில்லாத, வலுவான, யோக்கியமற்ற எதிரி (நாடு), தொடர்ந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது; பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகள் குறித்து நாம் விவாதித்துக் கொண்டு இருக்கும்போதே, வட கிழக்கில் மேலும் புதிதாக ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. இதுதான் அவர்கள் அமைதி ஏற்படுத்தும் விதம்.” (வானொலியில் ஜவகர்லால் நேரு – 22 அக்டோபர் 1962)

உலக அமைதிக்கு உழைத்த, உண்மையான ஜனநாயகவாதி - ஜவகர்லால் நேரு. அவரையே, ‘யோக்கியமற்ற எதிரி’ என்று கடும் சொற்களைப் பேச வைத்த பெருமை கொண்டது – சீனா! அந்நிய எல்லைகளின் மீது அத்துமீறல், அண்டை நாட்டுப் பகுதியை ஆக்கிரமித்தல்.. என்று கடந்த 60 ஆண்டுகளாகவே, சீனாவின் வெளியுறவுக் கொள்கை, பிராந்திய அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகவே உள்ளது.

‘பசிபிக் பெருங்கடல் பகுதி வரை விரிவடைவதே எங்களின் நீண்ட கால இலக்கு’ என்று பட்டவர்த்தனமாகப் பிரகனம் செய்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங். 1950-களில் தொடங்கியது சீனாவின் ஆயுதப் பெருக்க நடவடிக்கை. தனது கையில் அணு ஆயுதம் இருந்தால், பேரம் பேசும் வலிமை கூடும் என்று முடிவு செய்தார் மா சே துங். 1958-ல், யுரேனியம் செறிவூட்டும் இரண்டு ஆலைகளை நிறுவினார். அணு ஆயுதத் தயாரிப்பில் உதவ, சோவியத் யூனியன் முன் வந்தது.

சீனாவின் அணு ஆயுத முனைப்புக்கு அமெரிக்காவின் ஜான் ஃப் கென்னடி, பல வகையிலும் முட்டுக்கட்டை போட்டுப் பார்த்தார். 1960-ல் அணு ஆயுதத் தயாரிப்புக்கு சோவியத் யூனியன் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார் நிகிதா குருஷேவ். இருப்பினும் சீனாவின் முயற்சி தொடர்ந்தது. 1964-ல், முதன் முறையாக அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

அடுத்த சுமார் 30 ஆண்டுகளில், 40-க்கும் மேற்பட்ட முறை, சோதனை நடத்தியது சீனா. தற்போது சீனா வசம், 200 முதல் 400 வரை அணுகுண்டுகள் இருக்கலாம் என்று அதிகாரபூர்வமற்ற இணையங்கள் தெரிவிக்கின்றன.

1967லேயே ஹைட்ரஜன் குண்டு வெடித்துப் பார்த்தது சீனா. தொடர்ந்து, ‘உயிரி ஆயுதங்கள்’, ‘ரசாயன ஆயுதங்கள்’ என்று எதையும் விட்டு வைக்காமல், வகை வகையாய்த் தயாரித்துக் குவித்தது. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் சீன ஏவுகணைகள் 14,000 கி.மீ. வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டவை. சீனா – அமெரிக்கா இடையே உள்ள தூரம் – 11,640 கி.மீ. கடந்த ஆண்டு மட்டும், சீனாவின் பாதுகாப்பு செலவு, 146 பில்லியன் டாலர்கள் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இது, கூடிக் கொண்டே போகிறது.

இதேபோல், அதிகமாகிக் கொண்டே போகிற இன்னொன்றும் உண்டு. உலகம் முழுதும், பசி, பட்டினி, சண்டை, கலவரம் காரணமாக உயிர் இழப்போரின் எண்ணிக்கை. இது குறித்துப் பிறகு பார்ப்போம். இப்போதைக்கு, சீனாவின் பார்வை கடல் பரப்பின் மீதுதான் குத்திட்டு இருக்கிறது.

தென் சீனக் கடல்!

- தொடரும்

http://tamil.thehindu.com/world/article22402297.ece

  • தொடங்கியவர்

இந்த ஆட்டம் யாருக்காக…?

 

 
southchina2958272f

உலக அரசியல் – விநோதமானது; மிகவும் சிக்கலானதும்கூட. பல்வேறு பிணக்குகள், பலநூறு கணக்குகள் – ஒன்றுக்கொன்று இறுகப் பின்னிப் பிணைந்து இருக்கிற களம் இது. இரு தினங்களுக்கு முன், வட கொரியாவுடன் பேச்சு நடத்தத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். உண்மையில், சர்வதேசப் பிரச்சினைகளில் எதுவுமே, ‘திடீர்’ என்று நிகழ்வது இல்லை. வார்த்தைப் போர் தீவிரம் அடைந்து கொண்டு வரும் வேளையில், பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா பேச என்ன காரணம்…? பார்ப்போம். அதற்கு முன்னதாக..

ஒரு நாடு, அணு ஆயுதம் வைத்து இருப்பதால், யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் 24-வது மண்டலக் கூட்டம், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 2017 ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்றது. இதில் வட கொரியாவின் அணு ஆயுதம், ஏவுகணை சோதனை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப் பட்டது.

இந்த கூட்டத்தில் தென் சீனக் கடல்தான், முக்கிய விவாதப் பொருளாக இருந்திருக்க வேண்டும். அதனைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்தது – வட கொரியாவின் அணு ஆயுத சோதனை. இதைத்தான் சீனா விரும்பியது.

மண்டலம் முழுவதும் ஒருவித பதற்ற நிலை தொற்றிக் கொள்ள வேண்டும்; தென் சீனக் கடல் பகுதியில் தனது ஆக்கிரமிப்பு திட்டங்களுக்கான எதிர்ப்பை விஞ்சியதாக அது இருத்தல் வேண்டும். அப்படியே நடந்தும் விட்டது. ஒரு வித அச்சத்தை, பாதுகாப்பற்ற சூழலை ஆசிய மண்டலத்தில் உருவாக்குவதன் மூலம், தன்னை எதிர்க்கும் சிறிய நாடுகளின் கவனத்தைச் சிதறடிக்க முடியும் என்கிற சீனாவின் கணக்கு, கச்சிதமாக அரங்கேறியது.

ஆனாலும் தென் சீனக் கடல் பிரச்சினையை, ‘ஆசியன்’ அமைப்பு, அப்படியே விட்டுவிடவில்லை. இப்பகுதியில் பிற நாட்டு எல்லைகளின் மீது சீனா கோரும் உரிமைகள் கூட்டத்தில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன.

சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியாஉள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான தென் சீனக் கடல், ஓர் ஆண்டில், 3-5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு, வணிகப் பொருட்கள் பயணிக்கிற கடல் மார்க்கம். கடல் வளங்களும் பெட்ரோலியப் படிமங்களும் நிறைந்து இருக்கிற மண்டலம். இந்தப் பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடுகிறது சீனா.

தென் சீனக் கடலின் டோங்ஷா, ஸீஷா, சோங்க்ஷா, நான்ஷா தீவுகளின் மீது சீனா உரிமை கொண்டாடுகிறது. இதை எதிர்த்து நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தில் 2013-ல் பிலிப்பைன்ஸ் முறையிட்டது.

2016 ஜூலை 12 அன்று, மத்தியஸ்த நீதிமன்றம், பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது. இந்த தீவுகளின் மீது ‘வரலாற்று உரிமை’ எதுவும் சீனாவுக்கு இல்லை என்றும் கூறி விட்டது. இதற்கு அடுத்த நாள், 2016 ஜூலை 13, ‘ஆச்சரியமான’ ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட்டது சீனா!

 

தொடரும்..

http://tamil.thehindu.com/world/article22409821.ece

  • தொடங்கியவர்

இந்த ஆட்டம் யாருக்காக...?

 

 
20INTHVLRCHINAFLAGjpg

‘வெள்ளைஅறிக்கை' என் பது ஓர் அரசு வெளியிடும் அதிகாரபூர்வ அறிக்கைகளில் மிகவும் 'புனிதம்' ஆனது. காரணம், இது முழுக்க உண்மைகளை மட்டுமே கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை. இப்படி ஓர் அறிக்கையை சீன அரசு, தென் சீனக் கடல் பிரச்சினையில் வெளியிட்டது.

இதில் பல ஆச்சரியங்கள். அறிக்கையின் தலைப்பே திகைப்பு ஊட்டுகிறது. சற்றே நீளமானது - ‘தென் சீனக் கடலில் சீனா - பிலிப்பைன்ஸ் இடையி லான சச்சரவை, பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்கிற தனது நிலைப்பாட்டை, சீனா தொடர்ந்து பின்பற்றுகிறது’. சீனாவின் ‘தன்மை’க்கு இது மிகவும் வித்தியாச மானது.

இதே பிரச்சினையில் 2014-ல் வெளியிட்ட ‘நிலை அறிக்கை’, மிரட்டல் தொனியில் இருந்தது. பல உண்மைகளை காரசாரமாக முன் வைத்தது. எல்லைப் பிரச்சினையில் எப்போதும், எல்லாரோடும், ‘இது எங்களுக்கே சொந்தம்’ என்று ஆணித்தரமாக வாதாடுவதுதான் சீனாவின் ‘ஸ்டைல்’.

முதன்முறையாக, நாசூக்கான அணுகுமுறையைத் தாங்கி வந்தது வெள்ளை அறிக்கை. இதன் 131-வது ஷரத்தை படிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. எல்லையைச் சுற்றியுள்ள தனது அண்டை நாட்டாருடனான உறவு பற்றி விவரிக்கிறது. ‘சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட நாளில் இருந்து, சமத்துவ உணர்வு மற்றும் பரஸ்பர புரிதல் அடிப்படையில், எல்லை உடன் படிக்கைகளை எட்டி இருக்கிறது; இதற்கேற்றவாறு, சீன எல்லைகளில் 90% மறுவரையறை செய்யப்பட்டது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனாவின் நாணயம், எல்லோரும் அறிந்த ஒன்று. ‘எதுவாக இருந்தாலும்’ எங்களுக்குள் சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்கிறோம் என்பதுதான் இந்த அறிக்கையின் சாராம்சம். இதற்காக 142 குறிப்புகளுடன், நீதிமன்ற வாதம் போல பல வரலாற்று விவரங்களை முன் வைக்கிறது. இந்த அளவுக்கு சீனா ‘இறங்கி வர’ என்ன காரணம்...? பசிபிக் பெருங்கடல் வரை தனது ஆதிக்கத்தை விரிவடையச் செய்வதே லட்சியம் என்று வெளிப்படையாக தெரிவிக்கிற ஒரு வல்லரசு, ‘எல்லார்க்கும் நல்லவனாய்’ காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது...? வடகொரியா, அணு ஆயுத வல்லமை கொண்ட நாடாக வளர்வதிலும், பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாட்டுடன் மென்மைப் போக்கைக் கடைப்பிடிப்பதிலும், சீனாவின் ராஜதந்திரம் நன்றாகவே வேலை செய்கிறது. எல்லா தருணங்களிலும் தன்னுடன் நின்று நியாயத்துக்காக போராடுகிற ஒரு நல்ல துணைவன், சீனாவுக்கு இன்றுவரை வாய்க்கவே இல்லை.

என்னதான் வடகொரியாவை தூக்கிப் பிடிக்கிற வேலையைச் செய்தாலும், சர்வதேச அரங்கில், தன் மீது படிந்துள்ள சந்தேகப் பார்வை மேலும் மேலும் படரவே செய்கிறது என்பதை சீனா நன்கு உணர்ந்து இருக்கிறது. போதாக்குறைக்கு, தனது பிராந்தியத்தில் உள்ள மற்றொரு நாடு, வலுவான சக்தியாக வளர்ந்து நிற்பதும் நிலைமையை சிக்கல் ஆக்கு கிறது. உண்மைதான்.

தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு கனவு நிறைவேறுவதற்கான சாத்தியம் இல்லை. அதற்கான பல காரணங்களில் ஒன்று.... ஜப்பான்!

 

(தொடரும்)

http://tamil.thehindu.com/world/article22417513.ece

  • தொடங்கியவர்

இந்த ஆட்டம் யாருக்காக…?

 

 
china%20nuclear%20power

அணு ஆயுதங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் தகுதி, 2 நாடுகளுக்கு இருக்கிறது. ஒன்று - இந்தியா. மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்... என்று அடுக்கடுக்காய் பல தலைவர்கள் அமைதிக்கு ஆதரவாக, ஆயுதப் பரவலாக்கலை எதிர்த்துப் பேசிய, பணியாற்றிய வரலாறு இந்தியாவுக்கு உண்டு.

மற்றொரு நாடு – ஜப்பான். 1945-ல் அணுகுண்டு தாக்குதலை எதிர்கொண்ட நாடு. 72 ஆண்டுகளுக்குப் பிறகும், அணுக் கதிர்வீச்சின் பாதிப்புகளில் இருந்து வெளிவர முடியாமல் இன்னமும் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

அரசுப் பணி நியமனத்தில், ‘கருணை அடிப்படையில் சேர்ப்பது’ என்ற வழக்கம் உண்டு. பணியின் போது அரசுப் பணியாளர் தவறி விட்டால், அவரது வாரிசுக்கு, கருணை அடிப்படையில், பணி தருவது.

சர்வதேச சமூகம் உண்மையிலேயே நாகரிகமான ஒன்றாக இருந்து இருக்குமானால், ஆயுதப் பெருக்கம், குறிப்பாக, அணு ஆயுதக் குவிப்புக்கு எதிராக, வலுவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்க வேண்டும். அதன் தலைமைப் பொறுப்பை, ஜப்பானுக்கு தந்திருக்க வேண்டும்.

உலக அமைதி, மனித உரிமைகள் என்று வாய் கிழியப் பேசும் எல்லாருக்கும், ஹிரோஷிமா தாக்குதலின்போது, அழுதபடி ஓடி வருகிற சிறுமியின் புகைப்படம் மட்டும்தான் வேண்டும். மற்றபடி இவர்களில் பெரும்பாலானோர், ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கிறவர்கள்.

உலக மக்களிடையே, ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முழு ஆதரவு கிட்டாமல் போவதற்கான காரணமே, எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துகிற ஆயுதப் போராட்டம்தான்.

இஸ்லாத்தின் பேரில் பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ள எந்தக் குழுவுக்கும் இஸ்லாமிய நாட்டு மக்களேகூட, ஆதரவு தருவதில்லையே. காரணம், மக்கள் நாடுவது அமைதியை. வன்முறையை வன்முறையால் வெல்ல முடியாது.

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, வடகொரியா, ஈரான், இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் நிழல் யுத்தம் நடத்து கிறார்கள்.

1945-க்கு முன்பும் அதற்குப் பின்னரும்கூட, ஆக்கிரமிப்பு போர் நடத்துவதில் ஜப்பான் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனாலும், ஜப்பானை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கிறது சீனா. இரு நாடுகளுக்கு இடையே என்னதான் பிரச்சினை?

‘கிழக்கு சீனக் கடல்’தான். ஜப்பானுக்குத் தென்மேற்கே, தைவானுக்கு வட கிழக்கே, கிழக்கு சீனக் கடலில் உள்ளது – ‘சென்காக்கு’ என்றழைக்கப்படும், எட்டு மிகச் சிறிய தீவுகள் கொண்ட பகுதி. 18-ம் நூற்றாண்டு இறுதியில், இந்தத் தீவுகளில் ஆய்வுகளை மேற்கொண்டது ஜப்பான். மனித வசிப்போ, ஆள் நடமாட்டமோ இல்லாத பகுதி இது என்பதை உறுதி செய்து கொண்டது. தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான், தனது எல்லைகளில் பலவற்றை விட்டுக் கொடுத்து, ‘சான் பிரான்சிஸ்கோ’ உடன்படிக்கையை எட்டியது. 1951-ல் இந்த உடன்படிக்கை ஏற்பட்டாலும், ஜப்பான் ‘கண்டுபிடித்த’ தீவுக் கூட்டம் அடுத்த 20 ஆண்டுகள் வரை, அமெரிக்க மேற்பார்வை யின் கீழ்தான் இருந்தது. 1971-ல், இதை மீண்டும் ஜப்பானுக்கே தந்துவிட்டது அமெரிக்கா.

எல்லாமே சுமூகமாக நடந்து முடிந்து விட்டது. 1970-களில் கிழக்கு சீனக் கடலில், ஜப்பானுக்கு சொந்தமான ‘சென்காக்கு’ தீவுக் கூட்டத்தை ஒட்டியும், அதைச் சுற்றியும், அளப்பரிய எண்ணெய் வளம் நிறைந்து இருப்பது தெரிந்தது. இதனால்தான் வந்தது ஆபத்து.

(தொடரும்)

http://tamil.thehindu.com/world/article22427148.ece

  • தொடங்கியவர்

இந்த ஆட்டம் யாருக்காக…?

 

 
north%20koreajpg

உலக அரங்கில் இரண்டு தலைவர்கள், மெல்ல வளர்ந்து கொண்டு வருகிறார்கள். ஒருவர் – சவுதி அரேபியாவின் முகமது பின் சல்மான். மற்றவர் – ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே. இரு வாரங்களுக்கு முன்பு, வட கொரியப் பிரசினை தீவிரத்தின் உச்சியை எட்டியபோதுஉலகம் அரண்டு போனது உண்மை.ஆனால், நிதானத்துடன் காய் நகர்த்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததில் பெரும் பங்கு, அபேவையே சேரும்.

சீனா, வட கொரியாவுடன் ஜப்பானுக்கு முழு உடன்பாடு ஏற்பட்டுவிடவில்லை. காரணம், கடந்த கால கசப்பான அனுபவங்கள். 1970-களில் ‘சென்காக்கு’ தீவைச் சுற்றி, எண்ணெய் வளம் இருப்பது தெரிந்தவுடன் சீனாவும் தைவானும்அந்தப் பகுதியை உரிமை கொண்டாடின.

ராணுவ பலம் மிக்க வல்லரசு என்பதால் சீனா, எதற்கும் அஞ்சாமல், அத்துமீறலில் இறங்கியது. ரஷ்யாவும் இந்த சச்சரவில் களம் இறங்கியது.

அதனால்தான், இப்பகுதியின் மீது ஓர் ஆண்டுக்கு, சராசரியாக, சுமார் 1200 வான்வழி அத்து மீறல்கள் நிகழ்கின்றன. இவற்றில் சுமார் 75% சீனா நடத்துவது. மீதம் 25%...? ரஷ்யாவின் கைங்கரியம். இது, ஜப்பான் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.

எப்போது இந்தப் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்தது? 2012-ம் ஆண்டு, ‘சென்காக்கு’ தீவுப் பகுதியை, தேசிய மயமாக்கி அறிவித்தது ஜப்பான் அரசு. இதற்கு எதிராக சீன நாட்டில் பொதுமக்கள், கிளர்ந்து எழுந்தனர்.

தனது நாட்டு மக்களின் ‘இயற்கையான’ உணர்வுகளுக்கு மதிப்பளித்து, 2013-ல், ‘டயாயு’ தீவுப் பகுதியை, தனது பாதுகாப்பு அடையாள மண்டலமாக அறிவித்தது சீன அரசு. கடற்படையின் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது.

2017 மே மாதம். ‘சென்காக்கு’ (சீனாவின் ‘டயாயு’) ஆளில்லா தீவுப் பகுதியின் மீது, ஆளில்லா விமானத்தை (‘ட்ரோன்’) பறக்க விட்டது சீனா. பதிலடி கொடுக்கத் தயார் ஆனது ஜப்பான். கிழக்கு சீனக் கடலில் போர் மேகங்கள் சூழ்ந்தன. நல்ல வேளையாக, நேரடி சண்டை எதிலும் ஈடுபடாமல், அமைதி காத்தது ஜப்பான்.

இந்த நிலையில்தான், ஷின்சோ அபே, பிரமாதமான ஒரு முடிவெடுத்தார். இதன் விளைவாக முளைத்ததுதான், இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத, வட கொரியா – தென் கொரியா பேச்சு வார்த்தை. தன்னால்தான் இது சாத்தியம் ஆயிற்று என்று ‘கேமரா’ முன் நின்று கொண்டு, சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ட்ரம்ப்.

ஆனால் இதனை சாத்தியம் ஆக்கியது – ஷின்சோ அபே – ஜி ஜின்பிங் சந்திப்பு!

 

தொடரும்..

http://tamil.thehindu.com/world/article22435003.ece

  • தொடங்கியவர்

இந்த ஆட்டம் யாருக்காக…?

 

 

அமெரிக்கா – வட கொரியா இடையில்தான் பிரச்சினை. இதில், சீனா – ஜப்பான் – தைவான் ஏன் வர வேண்டும்…? அதுதான் சர்வதேச சிக்கல்களுக்கு எல்லாம் காரணம். கடந்த சில பத்தாண்டுகளில், எல்லா நாட்டுப் பிரசினைகளிலும், தானாக வலிய உள்ளே நுழைவதை வல்லரசுகள் வழக்கமாகக் கொண்டு உள்ளன.

இந்தியாவின், குறிப்பாக ஜவகர்லால் நேரு, இந்திரா, மொரார்ஜி, வாஜ்பாய் போன்ற இந்தியப் பிரதமர்களின், ஆகச் சிறந்த ஆளுமை, இங்குதான் வெளிப்பட்டது. உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள், கொள்கை வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும், இந்திய இறையாண்மையைக் கட்டிக் காப்பதில், மேற்சொன்ன தலைவர்களிடம், அபாரமான மன உறுதி இருந்தது. இத்தனை தெளிவான சிந்தனை, அணுகுமுறை – துரதிருஷ்டவசமாக, பல நாடுகளில் காண முடிவதில்லை. இதனைத் தமக்கு சாதகம் ஆக்கிக் கொண்டு, பகடை ஆடுகின்றன வல்லரசுகள்.

ஈரான், இராக், குவைத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர்….. வல்லரசுகள் குறி வைத்திருக்கிற நாடுகளின் பட்டியல் வெகு நீளமானது. இந்தப் பட்டியலில் வசமாக சிக்கிக் கொண்டவைதாம் – தென் கொரியா மற்றும் வட கொரியா. இந்த உண்மையை, வேறு எவரையும் விட, நன்கு அறிந்து வைத்து இருக்கிறார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

அதனால் சாதுர்யமான ராஜதந்திர நடவடிக்கையில் இறங்கினார் அபே. கிழக்கு சீனக் கடற்பகுதியில் நிலைமை மோசமாக இருந்தபோதே, 2014 நவம்பரில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, சீனத் தலைநகரில் சந்தித்து பேசினார் அபே.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2017 நவம்பர் 11 அன்று, வியட்னாமில், அபே - ஜின்பிங் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். இதற்கு ஒரு வாரம் முன்னதாக சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் வந்தார். அவருடன் ‘கோல்ஃப்’ விளையாடி தனிப்பட்ட உறவை வலுப்படுத்திக் கொண்டார்.

வியட்னாம் சந்திப்பு, சீனா – ஜப்பான் இடையே ஓர் இனிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றார் ஜின்பிங். ஆனாலும், அவரது பேச்சில், சீனாவுக்கே உரித்தான எகாதிபத்திய தொனி ஒலிக்கவே செய்தது. சீனா- ஜப்பான் இடையில் உள்ள பிரச்சினைகளே அதில் தலை தூக்கி இருந்தது. ஆனால் அபேவின் அணுகுமுறை, உலக நாடுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சீனா எழுப்பிய சச்சரவுப் பகுதிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து, தென் கொரியா – வட கொரியா இடையே பேச்சுவார்த்தை நடை பெற வேண்டும்; வட கொரியப் பிரச்சினையில் சீனாவின் அணுகுமுறை பொறுப்புள்ளதாக இருக்க வேண்டும் என்பதை நாசூக்காக நன்கு வெளிப்படுத்தினார்.

‘வட கொரியா - தென் கொரியா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிப் போய் இருந்த, நேரடிப் பேச்சுவார்த்தை, மீண்டும் தொடங்க வேண்டும்; அதற்கு சீனா முன்நின்று முயற்சி எடுக்க வேண்டும்’ என்பதே அபேவின் தீர்மானமான இலக்காக இருந்தது. விரைவிலேயே, அபேவின் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது.

தொடரும்..

http://tamil.thehindu.com/world/article22438359.ece

  • தொடங்கியவர்

இந்த ஆட்டம் யாருக்காக…?

 

 
99431834gettyimages-633867318jpg

ஒலிம்பிக் வளையங்கள் பனிக்கட்டியால் செய்யப்பட்டுள்ளன. இடம் - பியோங்சாங், வடகொரியா   -  Getty Images

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான்…. இந்த நாடுகளுக்கு எல்லாம் ஒரு பொதுவான களம் இருக்கிறது. மிகத் தீவிரமாக இவர்கள் ‘சண்டை’ இட்டுப் புகழ் பெறும் களம் அது. ‘ஒலிம்பிக்’!

2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில், மேற்சொன்ன 4 நாடுகளுமே முதல் 6 இடங்களுக்குள் உள்ளன. மொத்தம் இருந்த 307 தங்கப் பதக்கங்களில் 103 – இவர்கள் வசம்.

இந்தப் பின்னணியில்தான், ஜப்பான் பிரதமர் அபே முன் எடுத்த ராஜ தந்திர முயற்சிகள் கனிவதற்கு, நல்ல தருணம் தானாக அமைந்தது. இவ்வாண்டு பிப்ரவரி 9 முதல் 15 வரை, தென் கொரியாவில், பியோங் சாங் நகரில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இந்தப் போட்டிகள், பகையால் முட்டி மோதிக் கொள்ளும் கொரிய நாடுகளிடையே சமாதானத்தை ஏற்படுத்துகிற ஒரு வாய்ப்பாக ஏன் இருக்கக் கூடாது…? அபேவின் கணக்கு மிகச் சரியாக வேலை செய்தது. இரண்டு ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை ஏதும் இல்லாமல், தீவிர எதிரிகளாக இரண்டு நாட்டுத் தலைவர்களும் மாறி விட்ட நிலையில், எந்த அடிப்படையில் மீண்டும் சந்தித்துக் கொள்வது…?

தமக்குள் எவ்வளவு பகை, பொறாமை இருந்தாலும், ‘விளையாட்டு’ என்கிற பெயரில் உடன்பட்டுப் போனால், தம் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்கள். சம்பந்தப்பட்ட தலைவர்கள் இதனை உணர்ந்து கொண்டார்கள்.

ஜப்பானின் முன் முயற்சி, சீனாவின் அழுத்தம், சந்திப்புக்கான நல்வாய்ப்பாக குளிர்கால ஒலிம்பிக்….. தென் கொரியாவுடன் பேசவும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ளவும் தயார் என்று அறிவித்தார் கிம் ஜாங் உன்.

வட கொரியா – தென் கொரியா இடையிலான பேச்சுவார்த்தையை, வடகொரிய அரசு பத்திரிகை, ‘ரோடோங் சின்மன்’ வெகுவாகப் பாராட்டி இருக்கிறது. ‘இரு நாடுகளுக்கு இடையே, தீர்க்கப்பட முடியாத பிரச்சினை என்று எதுவுமே இல்லை’ என்றும் கூறுகிறது.

இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுப் போட்டிகளைத் தாண்டி, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் வட கொரியா கடந்த 14-ம் தேதி அறிவித்தது.

பொறுப்பான தலைவர் ஒருவர் இருந்து முயன்றால், எந்த சிக்கலுக்கும் நல்ல வழி காண முடியும் என்பதை அபே, உணர்த்தி இருக்கிறார். ஆனாலும், தன்னால்தான் இந்தப் பேச்சுவார்த்தை சாத்தியம் ஆனதாகவும், ‘பின்னால் இருந்து’ தான் கொடுத்த அழுத்தம்தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் தன்னைத்தானே பாராட்டி கொள்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்கா – வட கொரியப் பிரச்சினை, நீறு பூத்த நெருப்பு போல், தொடர்ந்து கனன்று கொண்டேதான் இருக்கும். அது, வல்லரசுகள் ஆடும் அகந்தைப் போரின் ஒரு காட்சி.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஒரு பக்கம்; மறுபுறம்…? வறுமை, பசி, நோய்கள்… இவற்றினூடே, துரத்தி அடிக்கும் அரசுகள், மறுக்கப்படும் வாழ்வுரிமை…. சொந்த வீடும், நாடும் இல்லாத லட்சக்கணக்கான அகதிகள்…. மற்றும், எதிர்காலம் எழுப்பும் வினாக்களுக்கு விடை தெரியாமல் வேதனையில் உழலும் வெகுஜனம். சாம்ராஜ்யங்களின் சரித்திர சாதனைகள் தொடர்கின்றன. காலடியில் மிதிபட்டு சத்தமின்றி சாகின்றன சாமான்ய சருகுகள்.

இந்த ஆட்டத்தைத் தடுத்து நிறுத்துகிற வல்லமை – சர்வதேச ஊடகங்களுக்கு மட்டுமே உண்டு. நம்புவோம் – எழுந்து நிற்கும்; எதிர்த்துக் கேட்கும் - ஊடக உலகம்.

(முற்றும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.