Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆரின் புதுக்கட்சியும்... லதா அளித்த பயிற்சியும்! - லக லக லக லக... லதா!

Featured Replies

எம்.ஜி.ஆரின் புதுக்கட்சியும்... லதா அளித்த பயிற்சியும்! - லக லக லக லக... லதா! பகுதி-1

 
 

லதா

ரசியல் பரமபதத்தில் எந்த தாயம் போட்டால் ஏணி வரும் என்ன விழுந்தால் பாம்பு வரும் என யாராலும் சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கியதும் பெண்கள் மத்தியில் கட்சியைக் கொண்டு செல்ல நினைத்தார். அப்போது அவர் மனத்தில் இருந்தவர் அப்போது அவருடன் பல படங்களில் நடித்துவந்த லதா. ஆனால் தாயக் கட்டைகளின் உருட்டலில் லதாவுக்கான இடம் அரசியலில் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது இளைஞர்களின் அமோக ஆதரவு அவருக்கு இருந்தது. ஆனால், பெண்கள் தம் ஆதரவை எம்.ஜி.ஆருக்கு வெளிப்படையாகக் காட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தனர். வீட்டில் ஆண்களுக்கு கட்டுப்பட்டிருந்த பெண்களின் ஆதரவு தனக்கு ஓட்டுகளாக மாறி ஓட்டுப்பெட்டியில் விழுந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும் என்பதை நன்கு உணர்ந்த எம்,ஜி.ஆர் பெண்களிடம் தனக்கிருந்த ஆதரவை வாக்குகளாக மாற்ற அவர்களை துணிச்சல் உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். அ.தி.மு.க-வுக்குத்தான் எங்கள் ஆதரவு என்று பெண்கள் துணிந்து சொல்லும்வகையில் எம்.ஜி.ஆர் லதாவின் கதாபாத்திரத்தை முன்மாதிரி கதாபாத்திரமாக்கி அதன் மூலமாக பெண்களுக்குத் துணிச்சலை ஊட்டினார். படங்களில் லதாவின் கேரக்டர்கள் தம் மனதில் பட்டதை வெடுக்கென பேசும்படி அமைக்கப்பட்டன. அது எம்.ஜி.ஆரின் ரசிகைகளுக்குப் பிடித்திருந்தது.

லதா

எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதில் பெண்களுக்கு இருந்த உறுதியை வீட்டில் உள்ள மாற்றுக்கருத்துடைய ஆண்களால் சிதைக்க முடியவில்லை. இதனால் கிராமங்களில் பஞ்சாயத்துகள் நடந்தன.. ஊர்மக்கள் தம்பதிகளின் பிணக்குகளைத் தீர்த்து வைத்தன. கணவனுக்குப் பிடித்த நடிகரே தனக்கும் பிடிக்க வேண்டும் என்பதே அன்றைய பல குடும்ப கோர்ட் பிரச்னையாக இருந்தது. தங்களின் விருப்பு வெறுப்புகளை எம்.ஜி.ஆர் ரசிகைகள் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை. சிலர் குடும்பச் சூழ்நிலை கருதி வெளிப்படுத்தாமல் இருந்தார்களே தவிர மாற்றிக்கொள்ளவில்லை. அதே சமயம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தாங்கள் திருமணம் செய்துவந்த பெண்களை எம்.ஜி.ஆர் ரசிகைகளாக மாற்ற முயன்றனர். இதுவும் நடந்தது. தான் ரசிக்காத ஒரு ஆணை எப்படி தன் மனைவி ரசிக்கலாம் என்ற ஆணாதிக்க உணர்வே இதற்கு அடிப்படை காரணம் ஆகும்.

லதா

எம்.ஜி.ஆரைப் பிடிக்காத ரசிகன் வேறு மாதிரி பேசினான். ஜெயகாந்தன் எழுதிய ‘சினிமாவுக்கு போன சித்தாளு’ கதையில் வரும் கணவன் தன் மனைவியின் எம்.ஜி.ஆர் ரசனையைப் பார்த்து ‘‘அவன் பொட்டம்மே... நான் சீமான் மே’’ என்று ஒப்பிட்டுப் பேசி அவளைக் கண்டிப்பான். ஆனாலும் எம்.ஜி.ஆர் பெண்கள் மத்தியில் மாபெரும் ஓட்டு வங்கியாக மாறினார் என்பதே உண்மை.

அண்ணா தி.மு.க ஆரம்பித்தபின் அவர் நடித்த படங்களில் பெரும்பான்மையானவற்றில் அவர் லதாவையே கதாநாயகி ஆக்கினார். தன் படத்தைப் பார்க்கும் தன் ரசிகைகள் துணிந்து தன் கட்சியின் கொள்கை, தி.மு.க-வின் ஆட்சியில் பரவியிருந்த ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஆகியவற்றைப் பற்றி பிறரிடம் துணிந்து விவாதிக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்க லதாவின் கதாபாத்திரத்தை எம்.ஜி.ஆர் திறமையாகப் பயன்படுத்தினார். அதை ஓர் உளவியல்ரீதியான பயிற்சி என்றுதான் சொல்ல வேண்டும். திரும்பத் திரும்ப அவர் பெண்கள் கதாபாத்திரங்களை ஒரே மாதிரிதான் சித்திரித்தார்.

லதா

எம்.ஜி.ஆர் மக்கள் புரட்சி மூலமாக ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதாகக் காட்டிய நாடோடி மன்னன், அரச கட்டளை, நம் நாடு ஆகிய படங்களில் பானுமதி, சரோஜாதேவி, ஜெயலலிதா போன்ற கதாநாயகிகளை துணிச்சல் மிக்க  பெண்களாகவே படைத்தார். அவர்கள் அநியாயம் செய்யும் ஆண்களைத் தட்டிக் கேட்டனர். திரையில் எம்.ஜி.ஆர் தொடங்கிய அறப்போருக்கு உறுதுணையாய் இருந்தனர். தனிக் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர், தன் படங்களில் லதாவை பிரசார நோக்கில் பயன்படுத்தினார். முந்தைய படங்களைவிட இந்த உளவியல் முயற்சி அதிகமாகவே இருந்தது. தி.மு.க-வினரை சாமான்யப் பெண்கள் எதிர்த்துப் பேசவும் தேர்தலில் அவர்களுக்கு எதிர்த்து வாக்களிக்கவும் எம்.ஜி.ஆரை நேரடியாக ஆதரிக்கவும் லதாவைக் காட்டி அவர்களைப் பழக்கினார் என்றே சொல்லலாம். திரைப்படங்களில் லதா தி.மு.க எதிர்ப்பு அல்லது வில்லனை எதிர்த்து எம்.ஜி.ஆரை ஆதரித்துப் பேசும்போது பெண்களும் அதை அமோதித்துக் கூடவே பேசினர்.

படங்களில் லதாவின் நேரடி பங்களிப்பு 

லதாவை எம்.ஜி.ஆர் தன் ரசிகைகளுக்கு கட்சி பற்றி பேசவும் விவாதிக்கவும் பயிற்சியளிக்கும் நோக்கில் நடனம் வசனம் போன்றவற்றை சிறப்பாக அமைத்தார். அவற்றின் செயல்பாட்டு வீச்சுக்கு ஒரு எடுத்துக்காட்டை காண்போம். 

‘உரிமைக்குரல்’ படத்தில் ‘‘ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா’’  என்ற பாட்டில் ஓடிவந்த படியே வீடு வீடாகச் சென்று ஆண்களைக் கேலி செய்து ஆடிப்பாடுவார். அவரது ஒவ்வொரு அசைவும் ஒரு நடன ஸ்டெப்பாக இருக்கும். 

அந்தக்கால ஆம்பளங்க போர் புரிவாங்க 

இளிச்சவாயன் பட்டம் வேறு வாங்கிவிட்டீங்க   

என்று பாடி முன்பிருந்த ஆண்கள் வீரர்கள்; இப்போது இருப்பவர்கள் கோழைகள்; அதனால் பெண்களாகிய நாங்கள் கெட்டவை அழிக்க நல்லவனை ஆதரித்து இணைந்து போராடுகிறோம் என்று பாட்டு மூலமாகத்  தெரிவிப்பார். ஆண்களே வில்லனை கெட்டவனை எதிர்க்கும் செயல்பாட்டில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறீர்களே இது நியாயமா அறப்போர் நடத்தும் எம்.ஜி.ஆருடன் நீங்கள் இணைந்து நின்று அவருக்குத் தோள் கொடுக்க வேண்டாமா என்று கேட்பதாக இப்பாட்டும் டான்சும் அமைந்திருக்கும். எம்.ஜி.ஆர் பின்னால் நாம் அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தை லதா இந்த பாட்டு மூலமாக நேரடியாகச் சொல்லிவிடுவார்.

அண்ணா தி.மு.க ஆரம்பித்த பிறகு எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக வரும் நம்பியார் நிஜத்தில் தி.மு.கவைச் சேர்ந்த ஒருவரையோ அல்லது தி.மு.க கட்சியையோ பிரதிபலித்தார். அவர் செய்யும் அட்டூழியங்களைக் கண்டு மக்கள் கொதித்துப் போய் அவரைத் தண்டிக்க வேண்டும்; அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருத்தை மக்கள் மனதில் விதைக்க வேன்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார்.

‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் லதாவின் அரசியல் ஊக்கமளிப்பு பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அவர் தமிழ்நாட்டு பெண்குலத்தைப் பிரதிபிம்பமாக வந்தார். இப்படத்தில் தஞ்சையைச் சேர்ந்த சோழ மன்னனிடம் இருந்து பாண்டியநாட்டை மீட்கும் விடுதலைப் போரில் பாண்டிய இளவரசனான எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக நிற்கும் கதாபாத்திரத்தில் லதா நடித்தார். சோழ நாட்டு இளவரசன் நம்பியார் என்பது கலைஞர் கருணாநிதியையும் மதுரை என்பது தமிழ்நாட்டு மக்களையும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் [எம்.ஜி.ஆர்] என்பது அ.தி.மு.க-வையும் குறித்தது. 

லதா தன்னை பலவந்தப்படுத்தும் நம்பியாரிடம் ‘‘கொஞ்சம் பொறுத்திரு; இன்னும் கொஞ்ச நாளில் உன் அதிகாரம் பஞ்சாய்ப் பறக்கும், நீ ஒரு கொள்ளைக்காரன்’’ என்று வீர வசனம் பேசுவது விரைவில் ‘‘தேர்தல் வரும். அப்போது தி.மு.க தோற்றுப் போகும்; தி.மு.க ஒரு ஊழல் அரசு’’ என்று சொல்லும்வகையில் அமைந்தது.

அவர் ஆட்சிக்கு வந்ததும் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்ததும் அரசு அலுவலகம் அரசு பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்களைத் தாய்க்குலம் என்றே  ஆண்கள் குறிப்பிடும்படியான காலகட்டமும் வந்தது. 

அவர் பெண்கள்மீது காட்டிய அக்கறை அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஒரு பொதுக்கூட்டத்தில் ‘‘கணவர் சொன்னால்கூட கேட்க மாட்டார்கள்; நான் சொன்னால் பெண்கள் கேட்பார்கள்’’ என்று அவர் தமிழ்நாட்டுப் பெண்களைப் பற்றி பகிரங்கமாகக் கூறும் அளவுக்குப் போனது. அன்றைய பெண்கள் அந்த வாக்குமூலத்துக்குக் கொதித்தெழவில்லை. மாறாக லதாவாக இருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

 

(தொடரும்)

https://www.vikatan.com/news/coverstory/113225-the-story-of-admk-latha-and-mgr-series-part-1.html

  • தொடங்கியவர்

எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு! - லக லக லக லக... லதா! பகுதி-2

 
 

லதா

ழு சகோதரர்களோடு பிறந்த லதா முதல் வரிசை மாணவியாக இருந்தபோதும் அவருக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவரது பெரியம்மா கமலா தெலுங்கு நடிகையாக இருந்து பின்பு இந்தியிலும் நடித்தார். மராட்டியர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நடிப்பதை விட்டுவிட்டார். நடிகர் தேவ் ஆனந்தின் முதல் ஹீரோயின் அவர்தான். இவருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, இவர் தங்கை மகள் லதாவை தன் சொந்தப் பெண் போல கவனித்துக்கொண்டார். ‘‘தான் திரையுலகில் ஜொலிக்க அவரது பெரியம்மாவே இன்ஸ்பிரேஷனாக இருந்தார்’’ என்கிறார் லதா. கமலா தன் செல்லப் பெண்ணாகக் கருதிய லதாவுக்குத் தன் வீட்டில் கிருஷ்ண குமார் என்ற ஆசிரியரை வைத்து கதக் நாட்டியத்தைக் கற்றுக்கொடுத்தார்.

 

எம்.ஜி.ஆர் லதா1

தனக்கு சினிமா சான்ஸ் கிடைத்ததே ஒரு சினிமா கதைப் போலத்தான் என்பதை விவரித்தார் லதா. ‘‘என் பள்ளிக்கூடத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன். பள்ளி விழாவைப் படம் எடுத்த புகைப்படக்காரர் அடுத்து நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் நடித்த மேடை நாடகத்தையும் படம் எடுத்தார். தான் எடுத்த படங்களை மனோகரிடம் காட்டினார். அப்போது இந்தப் பள்ளிவிழா படங்களும் அவற்றோடு கலந்திருந்தன. அவற்றையும் பார்த்த மனோகர் ஒரு பெண்ணின் படத்தைப் பார்த்துவிட்டு ‘எம்.ஜி.ஆர் வெளிநாடுகளில் எடுக்கப்போகும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு ஒரு புதுமுகம் தேடி வருகிறார். இந்தப் பெண்ணின் படத்தை அவரிடம் காட்டுவோம்’ எனச் சொல்லியிருக்கிறார். சரியென்று புகைப்படக்காரரும் ஒப்புக்கொண்டார்.

எம்.ஜி.ஆரிடம் பள்ளிவிழாவில் எடுக்கப்பட்ட படங்களை மனோகர் காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆர், ‘இந்தப் பெண்ணின் முகம் சினிமாவுக்கு ஏற்றதாக உள்ளது. அவள் அம்மாவிடம் அனுமதி கேட்டு வாருங்கள்’ என்றார். இன்னொரு விஷயம் அப்போது என் பெயர் நளினி. சினிமாவுக்கு வந்த பின்தான் லதா ஆனேன். பள்ளியில் நளினி யார் என விசாரித்து வீட்டுக்கே வந்துவிட்டனர். மனோகர், என் அம்மாவைப் பார்த்து எம்.ஜி.ஆர் தன் படத்தில் நளினியை நடிக்க வைக்க விரும்புவதாகச் சொன்னதும் அந்த அம்மா, ‘வேண்டாம் சார். ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கிறாள். ஸ்கூல்கூட முடிக்கவில்லை. அவள் அப்பா ராமநாதபுரத்து ராஜா. அவளை சினிமாவில்விட எனக்கு விருப்பமில்லை’’ என்றார். 

அருகில் நின்ற என்னைப் பார்த்து, ‘என்னம்மா உனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமா’ என்று மனோகர் கேட்டதும் ‘ஓ சரி’ என்று சொன்னேன். பெரியம்மாவின் செல்லப்பெண் என்பதால் எனக்குக் கலையார்வம் இருந்தது. மனோகர் அம்மாவிடம் ‘சரி அம்மா... நீங்களே எம்.ஜி.ஆரிடம் வந்து உங்கள் எண்ணத்தை சொல்லிவிடுங்கள்’ என்றார்.

மறுநாள் நானும் அம்மாவும் மதியம் எம்.ஜி.ஆர் ஆஃபீஸுக்கு வந்தோம். அப்போது எம்.ஜி.ஆரும் இயக்குநர் ப.நீலகண்டனும் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ‘வாங்க, உட்காருங்கள்.. சாப்பிடுங்கள்’ என்றார் எம்.ஜி.ஆர். ‘இல்லை... நாங்கள் சாப்பிட்டுத்தான் வந்தோம்’ என்றோம். ‘சரி. பாயசம் சாப்பிடுங்கள்’ என்றார் எம் ஜி ஆர். கீழே அமரப் போனதும் ‘வேண்டாம் சாப்பாடுதான் சாப்பிடவில்லையே; கீழே உட்காரவேண்டாம். சோஃபாவில் உட்காருங்கள்’ என்றார். 

எம்.ஜி.ஆர் சாப்பிட்டு முடித்ததும் ‘உங்கள் மகளை நான் கவனமாகப் பார்த்துக்கொள்வேன். உங்கள் ராஜ குடும்பத்தின் பாரம்பர்யத்துக்கு எந்தவோர் இழுக்கும் வராமல் பார்த்துக்கொள்கிறேன். நடிக்க அனுமதியுங்கள்’ என்றார். நளினி என்ற பெயரில் அப்போது ஒரு நடிகை இருந்ததால் எம்.ஜி.ஆர் என் பெயரை மாற்ற விரும்பினார். என்னை வீட்டில் லல்லி என்றே அழைத்தனர். எம்.ஜி.ஆர் லல்லியை லதா ஆக்கினார்.’’ சுவாரஸ்யமாக விவரித்தார் லதா.

லதா

எம்.ஜி.ஆர் லதாவின் அம்மாவிடம் ‘‘லதாவுடன் ஐந்து வருடத்துக்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம்’’ என்றார். எதற்கு இந்த ஒப்பந்தம்? என்று நளினியின் அம்மா கேட்டார். ‘‘நாங்கள் ஒரு கதாநாயகியை கஷ்டப்பட்டு பல்வேறு பயிற்சிகளை அளித்து உருவாக்குகிறோம். பிறகு அவர்களின் கால்ஷீட்டுக்கு நாங்கள் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. அதனால் ஐந்து வருடத்துக்கு ஒப்பந்தம் செய்கிறோம். அவர் எங்கள் கம்பெனி படங்களில் மட்டும் நடிக்க வேண்டும். பிறகு ஒப்பந்த காலம் முடிந்ததும் வெளி கம்பெனி படங்களில் நடிக்கலாம்’’ என்றார். ஒப்பந்தம் கையெழுத்தானது.

தினமும் பள்ளிக்கூடத்துக்கு வருவது போல லதா காலை ஒன்பது மணிக்குப் பயிற்சிக்கு வந்துவிடுவார். அங்கு வசனப் பயிற்சி அளிக்க பழம்பெரும் நடிகை ஜி.சகுந்தலா இருப்பார். டி.சம்பந்தம் இருப்பார். அவரும் நாடக அனுபவம் உடையவர். பரத நாட்டியப்பயிற்சி அளிக்க தண்டாயுதபாணி பிள்ளை வந்தார். சினிமாவுக்கான டான்ஸ் பயிற்சி அளிக்க புலியூர் சரோஜா இருந்தார். இன்னும் பல டான்ஸ் மாஸ்டர்கள் பயிற்சியளித்தனர். இது போன்ற பயிற்சிதான் முன்பு மஞ்சுளாவுக்கும் அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தை நட்சத்திரமாக இருந்து எம்.ஜி.ஆரின் படக் கம்பெனியில் தன் பதினாறு வயதில் ஒப்பந்தமான மஞ்சுளா பதினெட்டு வயது ஆனதும் தன்னை எந்த ஒப்பந்தமும் கட்டுப்படுத்தாது என்று சொல்லி வேறு கம்பெனி படங்களில் நடிக்கப் போய்விட்டார். இது எம்.ஜி.ஆருக்கு ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது. ஆனால் லதா விஷயத்தில் அப்படியிருக்கவில்லை. லதா கடைசி வரை அவரது சொல்படி கேட்கும் பள்ளி மாணவி போலவே நடந்துகொண்டார். இன்றும் ‘எம்.ஜி.ஆரால்தான் எனக்கு இந்தப் புகழும் பேரும் செல்வமும் கிடைத்திருக்கிறது’ என்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்.

வசனப் பயிற்சி அளித்த ஜி சகுந்தலா பற்றி இங்கு விரிவாகச் சொல்ல வேண்டும். ஏனென்றால் எப்படிப்பட்ட பயிற்சியாளரை எம்.ஜி.ஆர் லதாவுக்கு நியமித்தார் என்பது தெரிய வேண்டும் அல்லவா. ஜி.சகுந்தலா எம்.ஜி.ஆரின் நாடக மன்றத்தில் இடிந்த கோபுரம் [இன்பக்கனவு] நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தவர். பின்பு மந்திரிகுமாரி படம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும் கலைஞர் வசனத்திலும் எடுக்கப்பட்ட போது வசனம் நன்றாகப் பேச தெரிந்தவர் என்பதால் ஜி.சகுந்தலா சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 

தன் கடைசிப் படமான இதயவீணையில் எம்.ஜி.ஆருக்குத் தாயாக நடித்தார்.

ஜி.சகுந்தலா பழைய படங்களில் தான் பேசிய வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் லதாவிடம் பேசிக் காட்டி அதைப் போல லதாவும் பேசுவதற்குப் பயிற்சி அளிப்பார். லதாவுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும்; பள்ளியிலும் அவருக்கு செகண்ட் லாங்குவேஜ் தமிழ்தான்; வீட்டிலும் அவர் பேசுவது தமிழே; என்றாலும் இவையெல்லாம் சினிமாவில் பேசுவதற்குரிய தகுதிகள் ஆகாது. சினிமாவில் ஒரு சொல் உதிர்த்தாலும் அதில் ஓர் உணர்ச்சி பொதிந்திருக்க வேண்டும். எனவே அவருக்கு ஜி சகுந்தலா தமிழ் பேசப் பயிற்சியளித்தார்.

லதாவுக்கு நடிப்பும் சொல்லித் தரப்பட்டது. வசனம் பேசும்போதும் அவர் தன் கை கால்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும். அடுத்தவர் வசனம் பேசும்போது எப்படி அதற்கு ரெஸ்பாண்ட் செய்ய வேண்டும். முகபாவம் எப்படி இருக்க வேண்டும் என்றும் டி சம்பந்தமும் ஜி சகுந்தலாவும் லதாவுக்குச் சொல்லிக் கொடுத்தனர். கேமராவுக்கு முன் நிற்பது நகர்வது அடுத்தவர் நடிக்கும்போது அவருக்கு இடையூறு இல்லாமல் இருப்பது லைட்டை முகத்தில் வாங்கி நடிப்பது நிழல் விழாமல் நடிப்பது போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பு நடந்தபோது அதனை லதா வந்து பார்க்கும்படி எம்.ஜி.ஆர் ஏற்பாடு செய்திருந்தார். இதனால் லதாவுக்கு ‘ஆன் த ஸ்பாட் ஸ்டடி’ அனுபவமும் கிடைத்தது.

லதா பார்க்கச் சிறிய பெண்ணாக இருந்ததால் அவரது எடையை அதிகரிக்க வேண்டி அவருக்கு தினமும் ஐஸ் கிரீம், பாசந்தி, அல்வா என்று சிறப்பு உணவு அடிக்கடி வழங்கப்பட்டது. பின்பு அவர் சற்று உடல் எடை கூடினார். ‘‘எனக்கு மேட்சாக நீ தெரிய வேண்டும் இப்படி  ஒல்லியாக இருக்கக் கூடாது’’ என்று அறிவுறித்திய எம்.ஜி.ஆர் அவரை நன்கு சாப்பிட வைத்தார். இதனால் லதாவுக்கு மெள்ள மெள்ள  சினிமா நடிகைக்குரிய உடல் வனப்பும் அழகும் கவர்ச்சியும் தோற்றப்பொலிவும் உண்டாயிற்று. பராசக்தி படம் எடுத்தபோது கூட சிவாஜி கணேசன் எடை குறைந்து கன்னத்தில் சதை இல்லாமல் வற்றலாக இருக்கிறார் என்று ஏ.வி.எம் கருதியதால் அவருக்கு மூன்று மாதம் கம்பெனியில் நல்ல சாப்பாடு கொடுத்து உடம்பைத் தேற்றி எடையை அதிகரித்து தோற்றப்பொலிவை கூட்டினர். 

தண்டாயுதபாணி பிள்ளை பரத நாட்டியம் கற்றுக்கொடுத்து அரங்கேற்றமும் நடைபெற்றது. அதிமுக கட்சி தொடங்கியபோது எம்.ஜி.ஆர் லதாவிடம், ‘‘நீ கட்சிக்கு என்ன செய்ய போகிறாய்’’ என்று கேட்டார் பிறகு ‘‘நீ நாட்டிய நாடகம் நடத்து’’ என்றார். சகுந்தலை நாடகத்தை லதா நாட்டியமாக மேடையில் அரங்கேற்றினார். திருச்சி கோவை பவானி மதுரை ஆகிய ஊர்களில் இந்த நாட்டிய நாடகத்தை  நடத்தி அதிமுக கட்சிக்காக முப்பத்தைந்து லட்சம் ரூபாய் நிதி திரட்டிக்கொடுத்தார். எம்.ஜி.ஆரால் ஒரு நடிகையாக வார்த்து எடுக்கப்பட்ட லதா தொடர்ந்து அ.தி.மு.க கட்சிக்கும் தொண்டாற்றும் வகையில் அந்தப் பயிற்சிகள் அவருக்கு உறுதியான அஸ்திவாரத்தை அமைத்துத் தந்தன.

https://www.vikatan.com/news/miscellaneous/113439-the-story-of-admk-mgr-and-latha-series-part-2.html

  • தொடங்கியவர்

“எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டபோது நடந்த அந்தச் சம்பவம்...!” - லக லக லக லக... லதா! பகுதி-3

 
 

லதா

அரசியல் எனக்குப் புதிதல்ல'' என ஆரம்பித்தார் லதா. எம்.ஜி.ஆர் காலத்தில் அரசியலில் ஈடுபாடு காட்டியதைச் சொல்லவில்லை அவர்.

 

''நான் ஒரு மந்திரி குமாரி என்பது பலருக்குத் தெரியாது. என் தந்தை ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி தமிழ்நாட்டில் ராஜாஜி அமைச்சரவையிலும் காமராஜர் அமைச்சரவையிலும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.

நாகநாத சேதுபதி என்றும் ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி என்றும் அழைக்கப்பட்ட இராமநாதபுரத்து ராஜா 1909ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 9ஆம் நாள் பிறந்தார். தன் இருபதாவது வயதில் ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யப் பெற்றார். ஆங்கில வழிக்கல்வி பெற்ற இவர் சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.  இவர் சிறு வயதினராக இருந்ததால் இவரால் ராஜபரிபாலனம் செய்ய இயலாது எனக் கிழக்கிந்திய கம்பெனி முடிவு செய்து இவர் சமஸ்தானத்துக்கு கோர்ட் ஆஃப் வார்ட்ஸ் என்ற ஒரு நியமன் அதிகாரியை நியமித்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தம் இளவயதில் ஜஸ்டிஸ் கட்சியில் தீவிரமாக இருந்த என் தந்தை இந்தியா சுதந்திரமடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1951 முதல் 1967 வரை தொடர்ந்து மூன்று சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். எனவே அரசியலில் ஈடுபடுவது என் குடும்பத்துக்குப் புதிது அல்ல. அதிமுக கட்சி எம்.ஜி.ஆரால் 1972இல் ஆரம்பிக்கப்பட்ட போது நடிகையாக இரண்டு வருடங்கள் கூட ஆகவில்லை எனினும் எம்.ஜி.ஆர் மீது கொண்ட அபிமானத்தால் என்னை மூன்றாவது பெண் உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அக்கட்சிக்குக் கலைச் சேவை செய்து 35 இலட்சம் நிதி திரட்டி கொடுத்தேன். தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு இன்று வரை அதிமுக-வின் வெற்றிக்காகப் பாடுபட்டேன்.

என் தந்தை மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவருக்கு கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. ஐரோப்பிய கிரிக்கெட் அணியை எதிர்த்து இந்திய அணி சார்பில் விளையாடினார். சென்னை கிரிக்கெட் குழுவிலிருந்து 1941, 9142, 9143, 9144 ஆகிய வருடங்களில் நடந்த போட்டிகளில் விளையாடினார். 

அவர்  ஒரு குதிரைப் பந்தய பிரியரும்கூட. குதிரைப் பந்தயத்தில் தன் குதிரைகளை ஓட விடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கல்கத்தாவில் சுமார் ஐம்பது பந்தயக் குதிரைகளை வைத்து வளர்த்து வந்தார். இவற்றின் வெற்றியில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டினார். இவரது பெயரில் ஷண்முக சேதுபதி வெற்றிக் கோப்பை பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரைகளுக்கு வழங்கப்படுகிறது. 

லதா

என் தந்தை உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இவருக்கு அடுத்த அறையில் குண்டு சுடப்பட்ட எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்றார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பிரியம் வைத்திருந்தனர். ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி தேற்றுவர். ஆனால் என் தந்தையார் 1967 ஆம் ஆண்டு மார்ச் நான்காம் நாள் இயற்கை எய்தினார்.'' எனத் தன் அரசியல் முன் கதையைச் சொன்னார் லதா.

எம்.ஜி.ஆர் லதாவை நடிக்க அழைத்த போது அவர் அம்மாவிடம் உங்கள் கணவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் நானிருந்த அறைக்கு அடுத்த அறையில்தான் இருந்தார். அவரது மதிப்பும் மரியாதையும் கௌரவமும் நான் நேரில் கண்டவன். சினிமா உலகில் அவர் மகளுக்கு எந்தக் கௌரவக் குறைவும் ஏற்படாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வாக்குறுதியளித்தார். 

லதா நடித்த 'வட்டத்துக்குள் சதுரம்' படம் கிட்டத்தட்ட இவர் சொந்தக் குடும்பக்கதையைச் சொல்கிறது என்றார் இவரது மாமா மகள். லதாவின் பாசம் வெளியுலகிலும் விரிவடைந்து அவருடைய நட்பு வட்டத்தை விரிவாக்கியது. 

பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த லதா எந்தச் சூழ்நிலையிலும் தன் குடும்ப கௌரவத்தை விட்டுக்கொடுப்பதில்லை. மிகவும்  பதவிசாக நடந்துகொள்ளும் லதா  நல்ல குடும்பத் தலைவியாகவும் இருக்கிறார். அவர் கணவர் சபாபதி சிங்கப்பூரில் உணவுப்பொருள் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளார் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் என இரு மகன்கள் இருவரும்  லண்டனில் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில்  பட்டப்படிப்பு முடித்துவிட்டு தங்கள் அங்கிள் சபா ப்ப்பெட்ஸ் ஏற்றுமதி தொழிலை கவனித்துக்கொள்கின்றனர்.

தொடரும்...

https://www.vikatan.com/news/tamilnadu/113774-latha-mgr-and-the-history-of-aiadmk.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

”எம்.ஜி.ஆரைத் தூக்கிடலாமா?” - லக லக லக லக... லதா! பகுதி-4

 
 

‘‘பதினைந்து வயதில் சினிமாவில் நடிப்பதற்கான பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாள் எம்.ஜி.ஆர், ‘அசோகன் ஒரு படம் எடுக்கிறார் அதில் நீயும் ஒரு ஹீரோயின்’ என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சி. முதலில் ஒப்பந்தமானது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு என்றாலும் அதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே இன்னொரு படத்தில் நடிக்கப் போகிறேன் என்பது மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. 

எம்.ஜி.ஆர்

 

எனக்கு சோப்ரா மாஸ்டர், கோபாலகிருஷ்ணன் மாஸ்டர், புலியூர் சரோஜா மற்றும் ரகு மாஸ்டர் எனப் பலரும் சினிமா டான்ஸ் பயிற்சி அளித்திருந்தனர். அது தவிர, நான் பரதமும் கதக்கும் முறையாகப் பயின்றேன். இந்நிலையில் எனக்கு அசோகன் தயாரித்த ‘நேற்று இன்று நாளை’ படத்தில் ஒரு இசை நாடகத்தில் நடிப்பதற்கான முதல் காட்சி படமாக்கப்பட இருந்தது. 

சத்யா ஸ்டுடியோவில் முதல் நாள் முதல் காட்சி. மேக்கப்புடன் தயாராக இருந்தேன். அன்றுதான் அசோகனின் அமல்ராஜ் பிக்சர்சின் நேற்று இன்று நாளை படப்பிடிப்பு தொடக்கவிழா. எம் ஜி ஆர் பொதுவாக அவரது படத் தொடக்க விழா அன்று ஒரு பாடல் காட்சியுடன் தான் ஆரம்பிப்பார். இது அவரிடம் இருந்த ஒரு பழக்கம். அன்று அவரைச் சுற்றி ஏராளமானோர் இருந்தனர். அவர் அதிமுக கட்சி ஆரம்பித்த பிறகு அவரைப் பார்க்க எந்நேரமும் சத்யா ஸ்டுடியோவுக்கு ரசிகர்களும் கட்சிக்காரர்களும் வந்தவண்ணம் இருந்தனர். 

முதல் ஷாட். நான் ஒரு படிக்கட்டில் இறங்கி வர வேண்டும், அப்போது ரோமியோ என்ற வரிக்கு வாயசைத்துப் பாடியபடி வர வேண்டும். ‘டேக்’ என்று இயக்குநர் ப.நீலகண்டன் சொன்னதும் லதா படியிலிருந்து இறங்கி வந்தேன். அவர் கீழே வந்ததும்

இயக்குநர், ‘லதா  என்னம்மா கிழே தேடிட்டு வந்தீங்க’ என்றார். 

நான் படிகளைப் பார்த்துக்கொண்டு நடந்ததைத்தான் இயக்குநர் அப்படிச் சொன்னார். எனக்குச் சோகமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் தன் கட்சிக்கார்களிடம் பேசிக்கொண்டிருந்த போதும் இந்தச் சம்பவத்தை கவனித்தார்.

எம்.ஜி.ஆர், லதா

ஸ்டுடியோ சூழ்நிலையும் இயக்குநரின் பேச்சும் எனக்குச் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை எம்.ஜி.ஆர் புரிந்துகொண்டார். லதாவிடம் ‘என்னம்மா பயமா இருக்குதா’ என்றார் ‘ஆமாம்’ என்றேன். எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆர், ‘ஹீரோவை மாத்திடலாமா?’ என்றார். எனக்கு குபுக்கென்று சிரிப்புவந்துவிட்டது. எம்.ஜி.ஆர் தான் ஹீரோ’’ என எம்.ஜி.ஆரின் கலகலப்பான இயல்பை விவரிக்கிறார் லதா. 

லதா ரோமியோ என்று அழைத்தபடி படிக்கட்டில் இறங்கி வரவும் எம்.ஜி.ஆர் ஜூலியட் என்று அவரை வரவேற்று அணைத்துக்கொண்ட காட்சி ஒரு மேடை நாடகத்தின் முதல் காட்சி ஆகும். இந்த இசை நாடகம் படத்தில் எம்.ஜி.ஆர் தான் வாழும் சேரியில் மக்களுக்காக சில  நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கில் நிதி திரட்ட நடத்தப்பட்டது. ஐயாயிரம் ரூபாய்க்கு டிக்கட் விற்கப்பட்டதாகப் படத்தில் எம்.ஜி.ஆர் மஞ்சுளாவிடம் சொல்வார்.

நேற்று இன்று நாளை படத்தில் லதா கதை ஒரு தனி கிளைக்கதையாக சேர்க்கப்பட்டிருக்கும். அவர் ஒரு திரைப்பட நடிகை. அவர் அப்பா கொலைகாரன்.. அம்மா பேராசைக்காரி. ஆனால் குப்பையில் கிடந்த குண்டுமணியாக [ எம்.ஜி.ஆர் சொல்லும் வசனம்] லதா மட்டும் அன்பும் இரக்கமும் கொண்ட பெண்ணாக இருப்பார். பொதுநலத்தொண்டனான எம்.ஜி.ஆரை ஒருதலையாகக் காதலிப்பார். பின் எம்.ஜி.ஆர் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பது தெரிந்ததும் கன்னியாஸ்திரியாகப் போய்விடுவார். அவர் பல சிறுவர்கள் பின்தொடர கன்னியாஸ்திரி உடையில் நடந்து செல்வார். கிறிஸ்தவ மடத்தில் குழந்தைகளுக்கான கல்வித்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்பது நமக்குப் புரியும். 

எம் ஜி ஆர்

இவ்வாறாக எம்.ஜி.ஆர் தன் கொள்கைகளை திரையிலும் நிஜத்திலும் ஒன்று போலவே பின்பற்றினார். நேற்று இன்று நாளை படத்தை போலவே லதாவை கொண்டு நாட்டிய நாடகம் நடத்தி தன் கட்சிக்காக நிதி திரட்டினார். பின்னர் மற்றவர்களைக் கொண்டு நாடகம் நடத்தி தன் அரசுக்காகவும் நிதி திரட்டினார். உலகத் தமிழ் மாநாட்டில் பல திரைக்கலைஞர்கள் பங்கேற்கும்படி செய்தார். மக்களின் ஆதரவால் பேரும் புகழும் வருமானமும் பெறும் கலைஞர்கள் மக்களுக்குத் தொண்டு செய்ய கடமைப்பட்டுள்ளனர் என்பது எம்.ஜி.ஆரின் உறுதியான நம்பிக்கை ஆகும். எனவேதான் மக்கள்நலப் பணிகளில் ஈடுபடுவது போல மற்ற கலைஞர்களும் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்று அவர் கருதினார். அதற்கான வாய்ப்புகளை அவர் தனது ஆட்சியில் ஏற்படுத்திக் கொடுத்தார்.

நேற்று இன்று நாளை படத்தில் லதாவின் கதாபாத்திரம் மூலமாக தனிமனித வாழ்க்கை பிரச்னைக்கும் நாட்டின் நிதிப் பிரச்னைக்கும் தீர்வுகளைக் காட்டுகிறார். லதா என்ற கதாபாத்திரத்தின் உதவியால் அவர் இந்த இரண்டு விஷயங்களை எடுத்துரைக்கிறார். ஒன்று, பெண்கள் திருமணம் செய்து கொண்டு தன் பிள்ளைகளை வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்துகொண்டு கல்விக்கூடத்திலோ மருத்துவமனையிலோ மற்ற குழந்தைகளுக்கும் மக்களுக்கும் தொண்டாற்றும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவது கருத்து, எல்லாவற்றிற்கும் மாநில மத்திய அரசுகளையே நம்பிக்கொண்டும் குறைகூறிக்கொண்டும் இருப்பதை விட நம்மாலான அளவுக்கு நாமே சேர்ந்து சில முயற்சிகளை எடுத்து சில நிகழ்ச்சிகளை நடத்தி நம் வாழ்விடத்தை மேம்படுத்தலாம். இதை நாம் நம் நாட்டுக்குச் செய்யும் கடமையாகக் கருதவேண்டும். 

https://www.vikatan.com/news/india/114568-latha-and-the-history-of-aiadmk.html

  • தொடங்கியவர்

ரஜினி கட்சியில் சேர்வாரா லதா? - லக...லக...லக...லதா! பகுதி- 5

 
 

எம்.ஜி.ஆர் லதா

 

 


எம்.ஜி.ஆர் 1977-ல் முதலமைச்சர் ஆன பிறகு லதா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் எனத் தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ்த் திரையுலகில் டாப் ஸ்டார்களோடு ஜோடி சேர்ந்து தன் நடிப்பை தொடர்ந்தார். ரஜினிகாந்துடன் சங்கர் சலீம் சைமன் (1977), ஆயிரம் ஜென்மங்கள் (1978) ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால், இன்று வரை லதா என்றால் ரஜினிகாந்த் பெயரும் சேர்ந்தே சிந்தனைக்கு வருகிறது. லதா கமலுடன் தமிழில் ‘நீயா’ படத்திலும் மலையாளத்தில் ‘வயநாட்டு தம்பிரான்’ படத்தில் அவருடன் மேக்கப் இல்லாமலும் நடித்தார். சிவாஜி கணேசனுடன் ‘சிவகாமியின் செல்வன்’ என்ற படத்தில் மட்டும் நடித்தார். டாக்டர் சிவா மற்றும் ‘எமனுக்கு எமன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எம்.ஜி ஆருடனான இவரது ஒப்பந்தம் தொடர்ந்ததால் மஞ்சுளாவுக்குப் போயிற்று. 

ரஜினியுடன் முதல் நாள் நடித்த அனுபவத்தைச் சொல்கிறார் லதா. ‘‘ ‘சங்கர் சலீம் சைமன்’ படத்தில் நடிக்க ஸ்டுடியோவுக்கு வந்தேன். மேக்கப் போட்டுக்கொண்டிருந்தபோது டைரக்டர் மாதவன் உள்ளே வந்தார். ‘லதாம்மா ரஜினி உங்களுடன் நடிப்பதில் டென்ஷனாக இருக்கிறார்’ என்றார். ‘அப்படியா சரி நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு நேரே ரஜினியின் மேக்கப் ரூமுக்குப் போனேன். ‘ஹலோ ரஜினி நல்லா இருக்கீங்களா’ என்று அவருடன் கலகலப்பாகப் பேசத் தொடங்கினேன். ‘இவங்க ரொம்ப சாஃப்ட்... நாம நெனச்ச மாதிரி இல்ல’ என்று ரஜினி நிம்மதி பெருமூச்சு விட்டார். இப்படி ஆரம்பித்த எங்களின் நட்பு இன்று வீடு வரைக்கும் போய் விசேஷங்களில் கலந்துகொள்வது வரை வந்துவிட்டது’’ என்றார் லதா.

ரஜினி லதா

லதா வீட்டில் ரஜினி

சிங்கப்பூரில் லதா வீட்டுக்கு வருகை தந்த ரஜினி அவர் மகனிடம் தான் ஒரு காலத்தில் லதாவை நினைத்து பயந்த விஷயங்களைச் சொல்லி சிரித்திருக்கிறார். ‘நிவாஸ் அப்போ உங்கம்மா எம்.ஜி.ஆர் கதாநாயகி. அவர் முன்னாடி சிகரெட் பிடிக்கக் கூடாது, சிரிக்கக் கூடாது, கால்  மேலே கால் போட்டு உட்காரக் கூடாது’ என்று சொல்லி என்னை டென்ஷன் படுத்திட்டாங்கப்பா. நானும் ரொம்ப பயந்துட்டேன். ஆனால் நெஜத்துல அவுங்க அப்படி இல்ல’ என்றாராம். நிவாஸுக்கு அவர் அம்மா லதா வாழ்க்கையின் ரோல் மாடல் . அவர் அந்தளவுக்கு தன் அம்மாவை நேசிக்கிறார்.

ஆயிரம் ஜென்மங்கள் லதா

1978-ல் வெளிவந்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் லதாவுக்கு அண்ணனாக ரஜினிகாந்த் நடித்தார். லதாவின் உடலில் பத்மப்ரியாவின் ஆவி புகுந்து தங்கிவிட துடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த ஆவியைத் துரத்திவிட்டு தன் தங்கையை வாழவைக்கும் பாசம் மிக்க  அண்ணனாக ரஜினிகாந்த் நடித்தார். விஜயகுமார் லதாவுக்குக் கணவனாக நடித்தார். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே நல்ல பாசமும் அன்பும் வளர்ந்து வந்தது. அதை இட்டுக்கட்டி எழுதிய ஒரு பத்திரிகையாளரை ரஜினி உதைத்தார். பின்பு பத்திரிகையாளர்களை அழைத்து தன் திருமணத் தகவலைச் சொல்லிவிட்டு மறுநாள் காலையில் அவசரம் அவசரமாக திருப்பதிக்குப் போய் தன் காதலியான கல்லூரி மாணவி லதாவை மணந்துகொண்டார். இவர் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவியின் தங்கை ஆவார்.

லதா போனார்; மீண்டும் வந்தார்

1982 வரை திரையுலகில் நடித்து வந்த லதா பின்பு திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் தன் மகன்கள் கார்த்திக்  நிவாஸ் மற்றும் கணவர் சபாபதியுடன் வாழ்ந்து வந்தார். இடையில் லண்டனிலும் சில வருடங்கள் வசித்தார். அவர் மகன்கள் இலண்டனில் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டப்படிப்பு பயின்றனர். 1986-ல் லதாவின் அம்மா நோய்வாய்ப்பட்டார். அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். லதாவின் தங்கை திருமணம் ஆகாமல் இருந்தார். இந்நிலையில் லதாவின் தாயார் இயற்கை எய்தினார். லதாவுக்குத் தன் தாய்வீட்டு சுமையும் தோளில் ஏறியது. மீண்டும் 1992 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சித்தி, செல்வி, கஸ்தூரி, வள்ளி போன்ற சீரியல்களிலும் நடித்தார். 

லதாவுடன் லதா

புதுக்கட்சி தொடங்கும் ரஜினி

1991 முதல் அரசியலில் வாய்ஸ் கொடுத்து வந்த ரஜினிகாந்த் ஒருவழியாக இப்போது அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்டார். உடனே ஊடகங்கள் லதாவும் ரஜினிகாந்த் கட்சிக்கு வருவாரோ என்ற ஆவலை கிளப்பிவிட்டன. லதா அரசியலுக்குப் புதியவர் அல்ல. அவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு அதிமுக இரண்டாகப் பிரிந்து பின்பு ஜெ அணியில் அவருக்குப் பக்கபலமாக இருந்த  திருநாவுக்கரசு போன்றவர்கள் வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி தொடங்கினர். அப்போது லதா திருநாவுக்கரசின் கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்பு அக்கட்சி தன் தாய்க் கட்சியான அதிமுகவில் இணைந்ததும் லதா சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். பின்பு அவர் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களுள் ஒருவரானார். எனவே லதா ரஜினி கட்சியில் சேர்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ரஜினி கட்சியில் லதா சேர்வாரா?

லதாவிடம் போய் ரஜினி கட்சி ஆரம்பித்திருக்கிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர். அவர் அதற்கு கூலாக ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் அவருக்கு என் வாழ்த்துகள் என்றார். நீங்கள் அதிமுகவில் இருந்துகொண்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா என்று அடுத்த கொக்கியைப் போட்டனர். லதா, சிரித்துக்கொண்டே, ஒரு குடும்பத்தில் இருப்பவர் வெவ்வேறு கட்சியில் இருப்பதில்லையா? என்று பதில் கொக்கி போட்டார். அடுத்து நிருபர் ‘‘ரஜினி கட்சியில் நீங்கள் சேர்வீர்களா?’’ என்று கேட்டார். லதா ரஜினி இன்னும் கட்சி தொடங்கவேயில்லை. தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். பெறாத பிள்ளைக்குப் பேர் வைக்க சொல்கிறீர்களே என்று மடக்கினார். வேறு ஒருவர் இதே கேள்வியைக் கேட்டார். பத்திரிகைக்கு பேட்டியளிப்பதில் வித்தகியான லதா அப்போதும்  ‘போகாத ஊருக்கு வழி கேட்கிறீர்களே’’ என்று முற்றுப்புள்ளி வைத்தார். ஆக அன்று முதல் இன்று வரை எம்.ஜி.ஆரின் விசுவாசியாகவே லதா இருந்து வருகிறார். தன்னைத் திரையுலகில் ஆளாக்கிய எம்.ஜி.ஆரின் அதிமுக கட்சிக்குத் தன்னாலான உதவியை, கொள்கைப் பரப்பும் பணியைச் செய்ய லதா ஆர்வமாக இருக்கிறார். அவரது ஆர்வத்தை அதிமுக புரிந்து செயல்படுத்துமா அல்லது அவரை ரஜினி கமல் கட்சிகளுக்குத் தள்ளிவிடுமா என்பதை காலம்தான் கணிக்கும்.

(நிறைவு)

https://www.vikatan.com/news/tamilnadu/115173-will-latha-join-rajinis-political-party-mgr-latha-and-admk-series-part-5.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.