Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரமுத்து,ஆண்டாள் - ஜெயமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து,ஆண்டாள்

ஜெயமோகன்

andal

 

வைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த ஒரு விவாதத்தில் இருப்பதனால் புறக்கணித்துச் செல்வது எவ்வகையிலும் முறையாகாது.

ஆண்டாள் குறித்து மிகமிகக்குறைவான சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெரியாழ்வார் பாடல்களில் இருக்கும் சிலவரிகள். அவை அவர் பெரியாழ்வாரின் மகள் என்றும் பெருமாளுக்குத் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தார் என்றும் மட்டுமே காட்டுகின்றன. அவர் குறித்த புராணம் அவ்வரிகளிலிருந்து உருவாகி வந்திருக்கலாம்.

இவற்றிலிருந்து ஆண்டாளின் சாதி குறித்து எதையும் நாம் ஊகிக்க முடியாது. ஆகவே அதுகுறித்த ஊகங்கள் எல்லாமே தனிநபரின் சமூகப்பார்வை சார்ந்தவை மட்டுமே. மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் அவர்களை ஒட்டி எழுதும்  டி.செல்வராஜ், சோலை சுந்தரப்பெருமாள் போன்ற சிலரும் பக்தி இயக்கக் காலகட்டத்தை சமூக மோதல்களின் காலகட்டமாக காண விழைகிறார்கள். ஆகவே அனைத்து இடங்களிலும் மேல்கீழ்சாதி, வர்க்கப்பிரிவினை சார்ந்த மோதல்களைக் கண்டடைகிறார்கள். அதன் விளைவாகவே எளிதாக ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம் என்பதுபோன்ற ஊகங்களைச் சென்றடைகிறார்கள்

நான் பக்தி காலகட்டத்தை மாபெரும் ஒருங்கிணைப்பின் காலகட்டம் என நினைப்பவன். இந்துமதம் உருவாகத் தொடங்கிய காலம் முதலே நிகழ்ந்துவரும் தொகுப்பு – ஒருங்கிணைப்பு முறைமை அதன் உச்சத்தை அடைந்தது பக்தி இயக்கத்தின்போதுதான். ஆகவே முரண்பாட்டை கண்டுபிடிக்கும் நோக்கை நிராகரிக்கிறேன். ஆனால் அதைச் சொல்பவர்களின் தரப்பைப் புரிந்துகொண்டு, அதற்கும் கருத்துவிவாதத்தில் ஓர் இடமுண்டு என எடுத்துக்கொண்டு மறுக்கிறேன்.

இரண்டு வினாக்கள் உள்ளன. ஒன்று, ஆண்டாள் பாடல்களிலுள்ள பாலியல்கூறுகளும், ஆண்டாளின் கதையும் ஒருவகை பாலியல்சுதந்திரத்திற்கான குரல்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? ஆண்டாளை அக்கால சாதிய,ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானவராக கட்டமைக்கமுடியுமா?

இல்லை என்பதே என் புரிதல். ஆண்டாளின் கதை என்பது சங்ககாலம் முதல் தமிழ்மண்ணில் இருந்துவந்த நப்பின்னை என்னும் தொன்மக் கதாபாத்திரத்தின் இன்னொருவடிவம் மட்டுமே. தொன்மங்கள் எப்போதும் ஒரு தொடர்ச்சியிலேயே உள்ளன. சிறிய மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைமாந்தர்களாக வெளிப்படுகின்றன. ஆண்டாளின் கதையை மீராபாய் வரை சிறிய மாறுதல்களுடன் காணமுடியும்.

ஆகவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் பெரியாழ்வார் கவிதைகளை விட உணர்வுநிலை, மொழியாட்சி இரண்டிலும் மிக உச்சத்தில் நிற்பவை ஆண்டாளின் கவிதைகள் என்பதனால் அது ஏற்கத்தக்கது அல்ல

ஆண்டாளின் கவிதைகளிலுள்ள பாலியல்கூறுகளை மீறல் என்று சொல்லமுடியுமா? தமிழிலும் வடமொழியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைசார்ந்த அழகியல்தான் ஆண்டாளிடம் வெளிப்படுகிறது. தமிழின் நீண்ட அகத்துறைப்பாடல்களின் மரபில் ஆண்டாளை மிகச்சரியாகப் பொருத்தலாம். ஆண்டாளுடையது எவ்வகையிலும் மீறலோ மிகையோ அல்ல. முற்றிலும் மரபுசார்ந்த மனநிலையே ஆகும்.

கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தும் தன்னிலை என்பது அக்கவிதைக்குள் திகழும் ஒரு உருவகம் மட்டுமே. மரபான சொற்களில் சொல்லப்போனால் ஒரு ஃபாவம். அதை அவருடைய நேரடி உணர்வுவெளிப்பாடு என்று கொள்வதைப்போல கவிதைநிராகரிப்பு வேறில்லை. இது இன்றைய நவீனக்கவிதைக்கும் பொருந்தும். கவிதை என்பது அக்கவிஞரின் உச்சகட்ட உணர்வுநிலை ஒன்றை மட்டுமே காட்டுகிறது, அவருடைய ஆளுமையை அல்ல.ஐம்பதாண்டுகளாக நவீனக்கவிதைக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கருத்து இது.

அதேசமயம் ஆண்டாள் உட்பட பெண்பால் புலவர்கள் அனைவரையும் தமிழ்ச்சூழலில் பெண்களின் இடம்சார்ந்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதும் மதிப்பிடுவதும் எல்லாம் இயல்வதே. பெண்ணியல்பு எப்படி அவற்றில் வெளிப்படுகிறது என விமர்சகர்கள் கூறலாம். புதிய அவதானிப்புகள் எழலாம்.நவீன இலக்கிய ஆய்வின் வழிமுறை அது. அந்தக்கருத்துக்கள் அக்கவிஞர்களின் கவிதைகள் இயங்கும் ஆழ்நிலையை உள்வாங்கி செய்யப்பட்டவை என்றால் இலக்கிய உலகில் ஏற்கப்படும். வெறும் சமூகவியல் அரசியல் ஊகங்கள் என்றால் உரிய எள்ளலுடன் கடந்துசெல்லப்படும்.

பக்திக்குள் பல்வேறு வகையில் வெளிப்படும் அகத்துறை உணர்வுநிலைகளை காமம் என வகைப்படுத்திப் புரிந்துகொள்வது போல அபத்தமான  வாசிப்பு பிறிதில்லை. இது ஆண்டாளுக்கு மட்டும் அல்ல நம்மாழ்வாருக்கும் ஜெயதேவருக்கும் பொருந்துவதே. செயின்ட் ஜானின் இறைக்காதல்நிலை சார்ந்த பாடல்களுக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபின் மனோன்மணிப் பாடல்களுக்கும் பொருந்துவதே

கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்

ஆனால், இது சமகாலத்தின் ஒரு போக்கு. கவிதையை, வரலாற்றை எளிய உலகியல்சூத்திரங்களால், அன்றாட அரசியலால், மேலோட்டமான கொள்கைகளால் வகுத்துக்கொள்ள முயல்வது. இவர்களின் முன் கவிதை ஒருவகை சிறுமைகொள்கிறது. இங்கே கவிதையை அறிந்தவர்கள் எல்லா நிலையிலும் அதற்கு எதிராகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான இலக்கியவாதிகளின் ஒவ்வாமை என்பது இந்த சிறுபோக்கிற்கு எதிரானதுதான். வைரமுத்துவை ஞானபீடத்திற்குப் பரிந்துரை கடிதம் அளித்த தமிழகத்துப் பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கு இந்த எதிர்ப்பைப் புரிந்துகொள்ள இயலாது.

கடைசியாக, ஆண்டாளை ஏன் தேவதாசி என ஊகிக்கக் கூடாது? அவ்வாறு ஓர் ஊகம் ஓர் அறிஞருக்கு இருக்கும் என்றால் அது ஒரு தரப்பு. மறுக்கப்பட வேண்டியது. தேவதாசி என்பது அன்றைய சமூகப்படிநிலையில் தாழ்ந்த ஒன்று அல்ல. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மணந்து பட்டத்தரசியாக்கிய பெண்மணி கூட தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என ஆய்வாளர் சொல்வதுண்டு. அது எவ்வகையிலும் ஆண்டாளை இழிவுசெய்வதல்ல. மெய்யாகவே தேவதாசி என்றாலும் அவர் கவிதைக்கு அணுவிடையும் குறைவு வருவதுமில்லை. தேவதேவன் சொல்வதுபோல உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என்பதற்காக உலகியலைக்கொண்டு கவிதையை மதிப்பிடுவது பெரும்பிழை

ஆனால் அவ்வாறு ஆண்டாளின் ஆளுமையை, வாழ்க்கையை வகுத்துக்கொள்வது ஆண்டாளின் கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்வுநிலைகளையும் கண்டிப்பாக இழிவுசெய்வதே. ஆண்டாளின் கவிதைகளில் உள்ள காதல்பித்து நிலையை தேவதாசியின் வாழ்க்கைப்பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது அக்கவிதையை கீழ்மைப்படுத்திப் புரிந்துகொள்வதேயாகும். தேவதாசி வாழ்க்கையின் இயல்பான அம்சமாக அந்தக் காதல்வரிகளை கொண்டாலும் சரி, அவ்வாழ்க்கையை மீறும்பொருட்டு எழுதப்பட்டவையாகக் கொண்டாலும் சரி

ஆண்டாளின் மிகச்சிறந்த வாசகரான ஜெயகாந்தன் ஓர் உரையாடலில் கூறினார், ஆண்டாள் பாடும் அந்நிலை உடலில் அமைதல் அல்ல, உடலை உதறிச்செல்லுதல் என. ‘உடல்துறப்பே மெய்மைக்கான வழி’ என் அவர் கூறியதை நினைவுகூர்கிறேன். உடலெனும் காமத்தை அல்ல, உடலை எரித்து மெய்ப்பொருளாகிய எல்லையின்மையைத் தழுவும் விழைவையே அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அதிலுள்ள மீப்பெரும் தாபம் என்பது எந்த  மெய்யுசாவியும் கொள்ளும் பரிதவிப்புதான். இங்கு இவ்வாறு அமைந்தபடி எங்கும் எவ்விதமும் உள்ள முழுமையை அடைவதற்கான எழுகையும் ஏக்கமும்..  காதல்பித்து என்பது அதன் மொழிபுமுறை. அது மிகமிகத் தொன்மையான ஒரு ஃபாவநிலையும்கூட  .

வைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே. இதே உளநிலையுடன் அவர் பிரமிளையோ தேவதேவனையோ அணுகியிருந்தாலும் அது இதேபோல கண்டிக்கப்படவேண்டிய பெரும்பிழையே. ‘மன்னிக்கவும் வைரமுத்து, உங்களுக்குரிய இடமல்ல இது’ என்பதே அவருக்குரிய பதில்.

ஆனால், இதையொட்டி வைரமுத்து மீது பொழியப்படும் வசைகளும் அவர் எதிர்கொள்ளும் மிரட்டல்களும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. இங்குள்ள மதவாதிகள் சிலர் அவர்கள் எப்படி மதஇலக்கியத்தை அணுகுகிறார்களோ அப்படித்தான் அத்தனைபேரும் அணுகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் உணர்வுகள் புண்படுகின்றன என்றும் கொள்ளும் ஆவேசமும் அதன்பொருட்டு வெளிப்படுத்தும் ஆபாசமான வசைகளும் மிகமிக ஆபத்தானவை. எதிர்காலத்தில் இங்கே சுதந்திர சிந்தனையே சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்குபவை.

ஏனென்றால் இங்குள்ள இலக்கியங்களில் பெரும்பகுதி மதம்சார்ந்த இலக்கியமே. இங்குள்ள வரலாறு பெரும்பகுதி மதம்சார்ந்ததே. மதத்தை இவர்கள் வரையறைசெய்துள்ளபடியே அனைவரும் அணுகவேண்டுமென இவர்கள் சொல்வார்கள் என்றால் அதன்பின் இங்கே சிந்தனையே இருக்கமுடியாது. இவர்கள் இங்கே கொண்டுவர எண்ணுவது தாலிபானிய அரசியலை என்றால் அதை எதிர்த்து கடந்தே ஆகவேண்டும்.

ஆண்டாள் உட்பட இந்துமதநூல்கள் இலக்கியப் படைப்புகளும்கூடத்தான். ஆண்டாள் தமிழிலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.மதத்தின் திருவுரு மட்டும் அல்ல.அழகியல்சார்ந்து இலக்கணம் சார்ந்து, வாழ்க்கைநோக்கு சார்ந்து அவருடைய பாடல்கள் இலக்கியச்சுவைஞர்களாலும் அறிஞர்களாலும் பலகோணங்களில் ஆராயப்படும். நாளை உருவாகிவரும் பலவகையான இலக்கியக்கோட்பாடுகள் அவர் படைப்புகள் மேல் போடப்பட்டு ஆராயப்படும். வெவ்வேறு கணிப்புகளும் ஊகங்களும் முன்வைக்கப்படும். வெவ்வேறு உலகப்படைப்புகளுடன் ஒப்பிடப்படும். கம்பராமாயணம் போன்ற அத்தனை நூல்களும் அவ்வாறுதான் வாசிக்கப்பட்டன, வாசிக்கவும்படும்.

மதநம்பிக்கையாளர்கள் அவற்றை மதநோக்கில் வாசிக்கலாம். ஓர் அறிவுத்தரப்பு என்னும் நிலையில் நின்று பிற தரப்புகளை முழுமூச்சாக எதிர்க்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் பிறர் அவ்வாறு வாசிப்பது தங்கள் மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என தெருவிலிறங்கி வசைபாடுவார்கள் என்றால் அவர்கள் வாழ்வது நாகரீக உலகில், ஜனநாயகத்தில் என்று அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இந்தியாவில் வேறெங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மரபும்,செவ்விலக்கியங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்த ஆய்வுநோக்கும் இல்லாமல் வெறும் காழ்ப்பைக்கொட்டும் அணுகுமுறைகள் இங்கே ஓங்கி ஒலித்தன, ஒலிக்கின்றன. இவர்கள் நாவில் இந்துமதத்தின் பெருங்கவிஞர்களும் ஞானிகளும் இழிவுபடுத்தப்படாத நாளே இல்லை. அதற்கு எதிர்வினையாகவே இன்று இந்த மறுபக்க மூர்க்கம் உருவாகி வந்துள்ளது.

இன்று ஆண்டாள் குறித்த ஒரு போகிறபோக்கிலான குறிப்பு வரும்போது ஓரளவு சமநிலை கொண்டவர்கள்கூட ஏன் பதைப்படைகிறார்கள் என்றால் இந்த ஒற்றைவரி தற்குறிகளான தமிழ் அரசியல்பேச்சாளர்களின் வாயில் எப்படி முடைநாற்றமெடுத்து வெளிவரும் என்பதற்கான அனுபவப்புரிதல் அவர்களுக்கு உள்ளது என்பதனால்தான். இப்போதே இணையத்தில் நாம் காண்பது அந்தக் கீழ்மையைத்தான். ஆனால் அதற்கு எதிர்வினையாக எழும் குரல்களில் உள்ள கீழ்மை மேலும் குமட்டல் ஏற்படுத்துகிறது. இக்குரல் இந்துக்களுடையதல்ல, இந்து மெய்மரபின் தரப்பும் அல்ல. முதல்தரப்பைப்போலவே இதுவும் தெருமுனை அரசியலின் ஓசை மட்டுமே.

இருதரப்பிலிருந்தும் எழும் வெறுப்புக்கூச்சல்களுக்கு நடுவே நின்றுகொண்டு பேசவேண்டியிருக்கிறது. ஒருபக்கம் கருத்துரிமையை ஒடுக்கும் மதம்சார்ந்த இறுக்கத்திற்கு எதிராக. கூடவே மரபையும் அறிவியக்கத்தையும் சிறுமைசெய்யும் அரசியல்கீழ்மைக்கு எதிராக. இன்றுமுதன்மையாகக் கண்டிக்கவேண்டியது வைரமுத்துவுக்கு எதிராகச் சொல்லப்படும் கீழ்த்தரமான வசைகளையே.

http://www.jeyamohan.in/105607#.WlsPAWKnyaM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து

ஜெயமோகன்

vairamuthu1xx

 

எனக்கு வரும் கடிதங்களில் பலர் வைரமுத்து குறித்து வசைபாடி எழுதித்தள்ளுகிறார்கள். முகநூலில் பகிரப்படும் வைரமுத்து குறித்த வசைகளை எனக்கு வெட்டி அனுப்புகிறார்கள். நான் வைரமுத்து ஞானபீடம் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளைக்குறித்து எழுதியமையால் இந்த வசைகளுடன் இணைந்துகொள்வேன் என நினைக்கிறார்கள்.

தெள்ளத்தெளிவாகவே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நான் எழுதியது இலக்கியவிவகாரம். இதில் மதவெறியர்கள், அரசியல்வெறியர்கள், சாதிவெறியர்களுக்கு இடமில்லை. இவர்கள் இன்று வைரமுத்துவைப்பற்றி எழுதியிருப்பவை கீழ்மை நிறைந்தவை. எந்த நிதானமுள்ள இந்துவும், இந்தியனும்  நாணத்தக்கவை. வைரமுத்து கூறிய கருத்து கண்டிக்கப்படவேண்டியதென்றால் அதை கருத்துத் தளத்தில் கடுமையாக மறுக்கலாம், வசைபாடுவது கீழ்மை. தெய்வத்தமிழ் என தமிழை இறைவடிவாகக் கொண்டாடிய மரபில் வந்த எவரும் கவிஞனுக்கு எதிராகக் கீழ்மையைக் கொட்டமாட்டார்கள்.

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்து அவர் சார்ந்த திராவிட இயக்கமும், இந்திய இடதுசாரிகளும் கடந்த ஐம்பதாண்டுக்காலமாக இங்கே உருவாக்கி வரும் ’இந்தியமரபைச் சிறுமைசெய்வதே முற்போக்கு’ என்று நம்பும் தரப்பிலிருந்து எழுவது. இத்தகைய இழிவுரைகளுக்கு பலநூறு உதாரணங்கள் இங்குண்டு. இன்றுதான் இதற்கு எதிர்ப்பு உருவாகிவருகிறது. இவையே சுதந்திர அறிவியக்கம் என்று இங்கே பரவலாக நம்பப்பட்டுவந்த காலம் முதல் தனித்தகுரலாக நின்று அவற்றை எதிர்த்துவந்தவன் நான். இன்றும் என் நிலைபாடு அதுவே.

வைரமுத்துவின் பிழை என்பது நம் சூழலில் புழக்கம் கொண்டுள்ள நஞ்சூட்டப்பட்ட கருத்தை இயல்பான முற்போக்குக் கருத்தாக எண்ணி முன்வைத்த அசட்டுத்தனம் மட்டுமே. அவரைக் கண்டிக்கவும் எதிர்ப்புரை முன்வைக்கவும் உரிமை மட்டுமல்ல பொறுப்பும் இங்குள்ள மெய்நாடும் சிந்தனையாளர்களுக்கு உண்டு. ஆனால் அது வசைபாடுவதும் வெறுப்பைக்கக்குவதும் அல்ல.

வைரமுத்து மீது எனக்கு  தனிப்பட்ட காழ்ப்பு என ஏதுமில்லை. அதை அவருக்கும் அவருக்கும் எனக்குமான பொதுநண்பர்களுக்கும் எப்போதும் தெளிவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன். நானும் அவரும் ஒரே காலகட்டத்தில் தமிழிலக்கியத்தில் செயல்படுபவர்கள் என்பதனால் அது இன்றியமையாததாகிறது. .எந்தவகையான வெறுப்புடனும் விலக்கத்துடனும் சொல்லப்படுவதல்ல என் கருத்து.கூடுமானவரை தன் ரசனைக்கு உண்மையாக இருக்கவேண்டும் என விழையும் விமர்சகனின் மதிப்பீடு மட்டுமே

அவரைத்தான் நான் தனிப்பட்டமுறையில் நவீனத் தமிழின் மிகச்சிறந்த பாடலாசிரியர் என நினைக்கிறேன். ஆம், கண்ணதாசனைவிடவும். அதற்கான என் விமர்சனக் காரணங்களை முன்னரே எழுதிவிட்டேன்.பாடல் என்பது எடுத்தாள்கைக் கவிதை. [Applied Poetry] ஏற்கனவே மொழியில் உள்ள கவித்துவத்தை மெட்டுக்கு இணங்க அமைப்பது. ஒருவகை மொழித்தொழில்நுட்பம். மரபுத்தேர்ச்சியும் இசையமைவும் கொண்ட உள்ளம் அதற்குத்தேவை. புதுக்கவிதையின் விந்தையான சொல்லாட்சிகளையும் நாட்டாரியலின் அரிய சொல்லாட்சிகளையும் திரைப்பாடல்களில் சரியாக அமைத்த வைரமுத்துவின் சாதனைக்கு நிகராக இந்திய அளவிலேயே மிகச்சிலர்தான் உள்ளனர். அவருடைய விரிவான மரபிலக்கிய ஞானமும் நவீனக்கவிதை வாசிப்பும் அதற்கு அடித்தளம்.

அதேசமயம் கவிஞர் என்னும் வகையில் அவருடைய இடம் பலபடிகள் கீழானது. அவர் வானம்பாடிக் கவிமரபிலிருந்து எழுந்தவர். கவிதையை நேரடிப்பிரகடனமாகக் கருதியவர்கள் அவர்கள். வைரமுத்து அந்த அழகியலுடன் திராவிட இயக்க மேடைப்பேச்சுக்கான அடுக்குச்சொல்லாட்சிகளையும் இணைத்துக்கொண்டவர். ஆகவே மேலும் கீழே சென்றவர். நல்ல கவிதை கவிதைவாசகனுடன் நிகழும் உரையாடல். வைரமுத்துவின் கவிதை எளிய ரசிகர்களை நோக்கிய ஒரு மேடைநிகழ்வு. அனைவருமறிந்த கருத்துக்களை அனைவருக்கும் உகக்கும் மொழியில் சொல்லும் முயற்சி அது. இன்றைய காலகட்டத்தின் கவிஞர்களின் நூறுபேரின் பட்டியலில்கூட வைரமுத்துவை நல்ல கவிதைவிமர்சகன் சேர்க்கமாட்டான்

வைரமுத்து பாடலாசிரியர் என்பதே அவர் கவிஞராக ஆவதற்கான தடையாகவும் அமைகிறது. கவிதை நேரடியாகவே கவிஞனின் உளத்தூண்டலில் இருந்து பிறக்கிறது. முன்பில்லாத தன்மையே அதன் முதன்மைத் தகுதி. பாடல்களுக்கு இவ்வியல்புகள் தடைகள். ஆகவேதான் தமிழின் நல்ல கவிஞர் பலரும் பாடலாசிரியர்கள் அல்ல. பாடலும் கவிதையாகலாம், ஆனால் நல்ல இசைப்பாடல் நல்ல விதையாகவேண்டியதில்லை.

உரைநடையாசிரியர் என்னும் நிலையிலும் வைரமுத்துவுக்கு தமிழ் புத்திலக்கியச் சூழலில் குறிப்பிடத்தக்க இடமில்லை. அவருடைய உரைநடை செயற்கையான சொல்லாட்சிகளால் ஆனது. அவர் அவருக்கு முந்தைய திராவிட மேடைப்பேச்சுக்களில் இருந்து பெற்றுக்கொண்டது அது. அவருடைய புனைகதைகள் செயற்கையான தருணங்களைப் புனைந்து வழக்கமான ’அரசியல்சரி’ கொண்ட கருத்துக்களை முன்வைப்பவை. அவர் எழுதிய நூல்களில் கள்ளிக்காட்டு இதிகாசம் மட்டுமே ஓரளவேனும் குறிப்பிடத்தக்கது. அவர் வளர்ந்த சூழலின் வாழ்க்கையின் சித்திரம் அதிலுள்ளது. இளமையில் அவர் பெற்றுக்கொண்ட நுண்தகவல்களின் தொகை என்பதனாலும் அது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதிலுள்ள பேயத்தேவர் தமிழிலக்கியத்தின் நல்ல கதாபாத்திரங்களில் ஒன்று.

ஓர் ஆளுமை என்றவகையில் அவர்மேல் எனக்குள்ள மதிப்பையும் விமர்சனத்தையும் பதிவுசெய்ய விரும்புகிறேன். முதிராஅகவை இளைஞர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னுதாரணமே. முக்கியமாக அவரிடம் எதிர்மறைக்கூறுகள் இல்லை. சோர்வூட்டும் உளநிலை இல்லை. ஊக்கமும் நன்னம்பிக்கையும் அளிக்கும் அவருடைய கவிதைகளால் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றபலரை நான் அறிவேன்.

அவருடைய வெற்றித்தமிழர் பேரவை என்னும் அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்புவரை இளைஞர்களை இலக்கியத்திற்குள் ஈர்க்கும் பணியைச் செய்துள்ளது. இன்று சிறந்த வாசகர்களாக, அவரைக் கடந்து வந்துள்ள பலர் அங்கிருந்து எழுந்தவர்கள்.

அதேசமயம் தொடர்ச்சியான அரசியல் தூண்டில்கள் வழியாக அவர் விருதுகளையும் அங்கீகாரங்களையும் நோக்கிச் செல்வது அவருடைய ஆளுமைக்கு இழுக்கு. அவர் பேசும் இலட்சியவாதத்திற்கு எவ்வகையிலும் இசைவதல்ல அது.

மொத்தமாக, அவரை ஓர்இலக்கியவாதியாக ஏற்க எனக்குத் தயக்கமில்லை. தனிமனிதராக மதிப்பும் உண்டு. ஆனால் இலக்கியமதிப்பீட்டில் அவர் முக்கியமான கவிஞரோ குறிப்பிடத்தக்க புனைகதைப்படைப்பாளியோ அல்ல

வைரமுத்து சாகித்ய அக்காதமி பெற்றபோது நான் இக்கருத்துக்களை விரிவாக விவாதித்து அவர் விருதுபெற்றமைக்கான கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தேன். அவருடைய நண்பர்களும் என் நண்பர்களுமான மரபின்மைந்தன் முத்தையா போன்ற பலர் எனக்கு எதிர்ப்பை விரிவாக பதிவுசெய்திருந்தனர். இது ஓர் இலக்கியவிவாதம். அவரவர் தரப்பை முடிந்தவரை முன்வைக்கவேண்டியதுதான். முற்றாக எது சரியானதென்று எவரும் இப்போது சொல்லிவிடமுடியாது என்னும் தன்னுணர்வு அனைவருக்கும் இருக்கும்.

வைரமுத்து தமிழிலக்கியத்தில் செயல்படும் கவிஞர், ஆனால் தமிழிலக்கியத்தின் முகம் என காட்டப்படும் தகுதிகொண்டவர் அல்ல. இவ்வேறுபாட்டையே நான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறேன். இப்போது சூழல் மிகக்கலவையாக ஆகிவிட்டிருக்கிறது. ஒருவரிகூட வாசிக்கும் வழக்கமில்லாதவர்கள் இலக்கியக்கருத்துக்களைச் சொல்லும்களமாக குமுகஊடகங்கள் ஆகிவிட்டிருக்கின்றன. ஆகவே வெறுப்பும் காழ்ப்பும் உச்சஎதிர்நிலைகளும் மட்டுமே காணக்கிடைக்கின்றன. எத்தனைமுறை சொன்னாலும் ஓங்கி ஒலிக்கும் மொண்ணைக்குரல்களையும்  வெறுப்புகளையுமே முதலில் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆயினும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான். இந்தக்குப்பைப்புயலைக் கடந்து நல்ல வாசகர் செவிகொள்ளக்கூடும் என நம்புவதனால்.

 

http://www.jeyamohan.in/105728#.WlsPyWKnyaO

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது?

28.jpgபெருந்தேவி

சில கடவுள் ஆளுமைகள் தொன்மத்துக்கும் வரலாற்றுக்குமான இடையரங்கில் நிற்பவை. அவ்வகையில் ஆண்டாள், ராமன் போன்ற கடவுளர்களிடமிருந்து வேறுபடுபவள். எனவே, ஆண்டாளின் பிறப்பு போன்றவற்றைப் பற்றிப் பொது அரங்கில் யார் பேசினாலும் குறைந்தபட்சத் தரவுகளை முன்வைக்க வேண்டும். இந்தத் தரவுகள் வாய்வழி வரலாறுகளாகக்கூட இருக்கலாம். ஆனால், தரவுகள் சுட்டப்படுவது இன்றியமையாதது.

அடுத்து, தேவதாசிகள் போன்ற குறிப்பிட்ட வகைமையினரைப் பற்றிப் பேசும்போது, வரலாற்றின் நெடிய பக்கங்களில் இந்த வகைமை ஒவ்வோர் இடத்திலும் காலகட்டத்திலும் எவ்வாறு பொருள்கொள்ளப்பட்டது என்ற பரந்த புரிதல் வேண்டும். இந்தியாவின் எல்லா இடங்களிலும் தேவதாசிகள் சம்பந்தப்பட்ட உள்ளூர் மரபுகளோ அல்லது இவர்கள் பெற்றிருந்த சமூக, பண்பாட்டு இடமோ ஒன்றே போன்றதாக இல்லை. கோயில் நடனக்காரர்கள் என்று சமயத்தோடு மாத்திரமே இவர்களின் சமூக, பண்பாட்டு இருப்பைத் தொடர்புறுத்தி எழுதுவது என்பது குறைந்துபட்ட புரிதலாகும்.

சங்க கால விறலியர், பரவையார் போன்ற பக்திக் காலகட்டப் பெண்டிர், சோழர்கள் காலத் தளிச்சேரி பெண்டுகள், இவர்களும் இவர்களொத்தவர்களும் சம்பந்தப்பட்ட பல்வேறு வகையிலான கோயில், அரண்மனை உட்பட்ட பொதுவெளி இயக்கங்களும் பங்களிப்புகளும், பின்னர் தேவதாசி – நடனப் பெண்டிர் அடையாளத்தில் நாயக்கர் காலகட்டத்தில் ஒருங்கிணைந்தது என்ற கருத்து தற்போது வரலாறு, மானுடவியல் ஆய்வுகளில் வலுப்பெற்றிருக்கிறது. தவிர காலனிய நவீனத்தில் முன்மொழியப்பட்ட ‘நாகரிகம்’ குறித்த சொல்லாடல், ‘ஒழுக்கம்’ பற்றிய பார்வை, சமூகச் சீர்திருத்த விவாதங்கள் போன்றவையும், இன்று நாம் புரிந்துகொண்டிருக்கிற தேவதாசி என்ற அடையாளத்தை உருவாக்கியிருக்கின்றன, பாதித்திருக்கின்றன. தேவதாசிகளைப் பற்றிப் பேசும்போது இவற்றையெல்லாம் மனதில்கொள்வது முக்கியம்.

போகிற போக்கில் சொல்லிவிடலாமா?

கவிஞர் வைரமுத்துவுக்கு அவர் ஆண்டாள் பற்றிப் பகிர்ந்த கருத்துகளை முன்வைக்க எல்லா உரிமையும் உண்டு, அவரை அச்சுறுத்தும் முகமாக விடுக்கப்படும் பாஜக ஆதரவாளர்களின் வன்முறைப் பேச்சுகள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. இதை உரக்கக் கூறிவிட்டே மேலே தொடர்கிறேன். வைரமுத்து தன் உரையில் ஆய்வாளர் ஒருவரைச் சுட்டி ஆண்டாளை தேவதாசி என்பதுபோல அறிவிக்கிறார். இந்த ஆய்வாளர் அமெரிக்கரா, இந்தியரா என்ற தேசிய அடையாளம் எனக்கு முக்கியமல்ல. வைரமுத்துவின் அந்தச் சுட்டுதல் தகவல் பிழையோடு செய்யப்பட்டது என்பதோடு, இப்படி ஒரு சில வரிகளில், மகாகவி ஒருத்தியின் அடையாளத்தைப் போகிற போக்கில் அறிவிப்பது கற்றார் செயலாக எனக்குத் தோன்றவில்லை. ஆண்டாள் தன் பாடலில் தன்னைப் ‘பட்டர்பிரான் கோதை’ என்றே அறிமுகப்படுத்திக்கொள்கிறாள் பிரதி வழியில் வருகிற அந்தச் சுய அறிமுகக் குறிப்பை விளிக்காமல் எந்த ஆய்வாளர் / பாடலாசிரியரும் வேறு யூகத்தை முன்வைக்க முடியுமா? முடியுமென்றால் அந்த யூகத்துக்கு ஆன்மிக உரைகளிலோ ஆன்மிகம் நீங்கிய உரைகளிலோ என்ன பெறுமதி இருக்க முடியும்?

மேலும் இசை, ஓவியம், நடனம் உள்ளிட்டத் தமிழ்க் கலைகளை வளர்த்ததிலும் அதன்மூலம் தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்றியதிலும் தேவதாசிகளுக்கு இணை கிடையாது. அப்படியிருக்க, தேவதாசி மரபில் ஆண்டாள் தன்னை வைத்துப் பாடல் எழுதியிருந்தால் ஆண்டாளுக்கு அது பெருமை சேர்ப்பதே.

ஆனால், அத்தகைய அடையாளத்தைப் பிறர் யூகித்துச் சொல்வதில் பிரச்னையிருக்கிறது.

‘குலமகள்’ என்பவர் யார்?

வைரமுத்து இவ்வாறு கூறியிருக்கிறார்: “அவள் பிறப்பு குறித்து ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாக அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.”

இதில். ‘அந்தணரே’யில் உள்ள ஏகாரத்தைக் கவனியுங்கள். அந்த ஏகாரம் சாதி உள்ளிட்ட சமூகக் கட்டுமானங்களில் மயங்கியிருக்கிற ஏகாரம். அடுத்து அந்த ‘குலமகள்’ பதம். ‘குலமகள்’ என்கிற பயன்பாட்டுக்கு உள்ளார்ந்த பண்பாட்டுப் பொருள் மற்றும் மதிப்பு உள்ளது. சிலப்பதிகாரம், வெற்றிவேற்கையிலிருந்து தொடங்கி இன்றுவரை குலமகள் என்கிற கருத்தாக்கத்துக்கு எதிராக வைக்கப்படுவது யார் என்று தமிழறிந்தவர்களுக்குத் தெரியும். வெளிப்படையாக வைக்கப்படுகிற வார்த்தைகள் மட்டுமல்ல, சுட்டி விடப்படுகிற மௌனங்களும் இலக்கிய, பண்பாட்டு வரலாறுகளுக்குள் பொதிந்தவையே. என்னைப் பொறுத்தவரை வைரமுத்துவின் யூகம் இதனாலேயே ஆண் மையம் சார்ந்தது; ஆகவே, விமர்சிக்கப்பட வேண்டியது.

பொருள் மயக்கத்துக்கு இடம் தரலாகாது

ஆண்டாள் விலைமகள் என்றால் மதிக்க மாட்டீர்களா என்றால் என் பதில், நிச்சயமாக எந்தக் குறையுமில்லாமல் மதிப்பேன். ஆனால், இந்த ஆண்மையச் சமூகத்தில் ஒரு பெண் தன்னை தேவதாசி என்றோ, அதிலிருந்து மாறுபட்ட அர்த்தத்தில் விலைமகள் என்றோ அழைத்துக்கொள்வது வேறு, ஓர் ஆண் இருபொருள் மயங்க அவளை அப்படி விளிப்பது வேறு. ஆண்மையச் சமூகத்திலிருந்தபடி அதை எல்லாவிதத்திலும் போற்றிப் பாதுகாக்கிற, அதிலிருந்து மேலாண்மையை, சுகபோகங்களைப் பெறுகிற ஆண், ஒரு பெண்ணை, அவள் கவிஞராக இல்லாவிட்டாலும் தெய்வமாக இல்லாவிட்டாலும்கூட இவ்வகையில் பொருள்மயங்க அழைப்பது சரியல்ல.

கடுமையாக மறுக்கப்பட வேண்டிய, தொடர்புடைய இன்னொரு பால்பாகுபாட்டுக் கருத்தாக்கமும் இதில் உள்ளது. பாலியல் சொல் விடுதலையைப் பேசுபவள் என்பதாலேயே ஆண்டாளைக் ‘குலமகள்’ அல்லாத அடையாளத்தோடு வைத்து உரைப்பது. இதன் வெளிப்படையான அர்த்தம், காமத்தை எழுதுபவர்கள் குலமகளாக இருக்க முடியாது என்பதுதான். எழுத்திலிருந்து குல அடையாளத்தைத் தேடிப் பார்க்கும் மரபார்ந்த சொல்லாடல் இது. தன் பாலியலையும் பாலியல் விடுதலையையும் ஒரு பெண் கொண்டாடிப் பேசுவது வேறு, ஒரு பெண்ணின் எழுத்து வெளிப்பாட்டிலிருந்து அவள் பிறப்பை இவ்விதமாக அனுமானிப்பது வேறு. பழைமைவாத மதிப்பீட்டு மனோநிலையிலிருந்து வைரமுத்து செய்தது இதைத்தான். இவ்வகையான அனுமானம் திண்ணை வம்பளப்பாக, வெற்றுப் பரவசமாக மிஞ்சுமே அன்றிப் பெண்களின் பாலியல் விடுதலைக்கு எவ்வகையிலும் சிறு துரும்பையும் கிள்ளிப் போடாது.

முடிவு செய்ய வேண்டியது பெண்தான்

வெகுகாலம் முன்னர் என் நெருங்கிய நண்பர் என்னிடம் ஒருமுறை கேட்டார். பாலியல் வன்புணர்வைச் சில்லுமூக்கு உடைவு போல ஒரு பெண் பார்க்க வேண்டும். ஆனால், ஏன் அப்படிப் பார்ப்பதில்லை என்று. அதை எப்படிப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது அவளே. அதை அவள் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆண் தன்னிலை நிலையிலிருந்து ஆலோசனையாகச் சொல்வதுகூடத் தவறு என்று நான் அவரிடம் சொன்னேன்.

மேலே குறிப்பிட்டிருக்கிற பெண் அடையாளச் சொல்லாடலும் இதைப் போலத்தான். பொறுப்போடும் கவனத்தோடும் அணுக வேண்டிய ‘தேவதாசி’ போன்ற பண்பாட்டு இடையீடுகள் மிகுந்த பாலின வகைமையை, ஒரு சில வாக்கியங்களில் ஏனோதானோவென்று பொருள்மயங்கச் சொல்லிவிட்டு, அது பெருமைக்குரிய அடையாளம்தானே என்று கூறுவதில் நியாயமில்லை. பெண் பாலினம் சார்ந்த விவகாரங்களில் போதிய பொறுப்பும் கவனமும் இன்றி இப்படியாக ஓர் ஆண் கூற்று வெளிவரும்போது, பாலின ஒடுக்குமுறைக்கு அது ஆதரவாக இருக்கக்கூடிய அபாயமுண்டு.

இந்தப் பதிவை நான் எழுதுவதற்கு முக்கியக் காரணம் ஆண்டாள் ஒரு பெண் கவிஞர் என்பதால். நான் பெண் கவிஞர் என்று அறியப்பட விரும்பாவிட்டாலும் சகோதரித்துவ ஒன்றிப்பை பெண் கவிஞர்களோடு உணரும் சில தருணங்களும் எனக்கு உண்டு என்பதால்.

வன்மத்தைக் கையிலெடுக்க சாக்கை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பாஜக தரப்புக்கு வைரமுத்து தேவையில்லாமல் ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டார் என்கிற மனவருத்தத்தையும் இங்கே நான் பதிவு செய்யத்தான் வேண்டும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கவிஞர், எழுத்தாளர். ஆறு கவிதை நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.)

 

https://minnambalam.com/k/2018/01/13/28

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழை ஆண்டாள் ( முழு கட்டுரை) - கவிஞர் வைரமுத்து

62424728.jpg

 

மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் - விலங்குகள் - பறவைகள் - தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது.

 

புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

 

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. 

தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது;

தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; 

இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; 

கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. 

தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது. 

 

"இன்னுமா உறக்கம்! 

எல்லே இளங்கிளியே! 

எழுந்து வா வெளியே' என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. 

 

"மார்கழி நீராட வாரீரோ மங்கையரே' என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது.

 

அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். 

இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. 

 

இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.

 

பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.

 

கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு. 

"எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.

 

"நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால், 

திங்கள் மும்மாரி பெய்யும்; 

 

நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்; 

 

வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும், 

ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்' 

- இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.

 

வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது 

அல்லது 

திருப்பாவை செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.

 

இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது. 

 

அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.

 

சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.

 

கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற "மெய்ஞ்ஞானம்' வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.

 

யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி - விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் - காருண்யம் - சௌலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுற முடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது.

 

எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள்.

 

எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள்.

 

"இறை நேயம் என்பதே சாதி என்னும் மம்மர் அறுக்கும் மருந்து' என்று நாயன்மார்களைப் போலவே ஆழ்வார்களும் நம்பினார்கள்.

 

"இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்' -என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்ததென்று சங்கூதினார்.

 

வர்க்கபேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை.

 

இறைவன்முன் எல்லாரும் சமம் என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது; 

கொண்டு செலுத்தியது.

 

வைணவம் என்னும் திருமாலியம் தமிழர்க்குப் புதியதன்று.

 

"மாயோன் மேய காடுறை உலகமும்' என்ற வரையறை தொல்காப்பியத்திலே சுட்டப்பெறுகிறது. 

 

கண்ணன் பலராமன் என்ற தொன்மங்கள் புறநானூற்றிலேயே புழங்கி வந்திருக்கின்றன.

 

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், 

பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்த காட்சி கண்ட காரிக்கண்ணனார் -

பால்நிற உருவிற் பனைக்கொடி யோனும்

நீல்நிற உருவின் நேமியோனுமென்று

இருபெருந் தெய்வமும் 

உடன்நின் றாங்கு

உருகெழு தோற்றம் (புறம் 58) 

- என்று பாடுகிறார்.

 

கண்ணனும் பலராமனும் இணைந்திருந்த தோற்றம்போல் சோழனையும் பாண்டியனையும் காட்சிப்படுத்துகிற காரிக்கண்ணனார், தெளிந்த சொல்லாட்சியில் 

"தெய்வம்' என்கிறார். 

 

சங்க இலக்கியத்தில் தெய்வமென்று கொண்டாடப்பட்டவர்கள் ஏழாம் நூற்றாண்டில் கடவுள் உயரத்தில் காட்சி தருகிறார்கள்.

தெய்வம் - கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடுண்டு. தெய்வம் என்பது பழம்பொருள்; 

பழகிய பொருள். 

கடவுள் என்பது பரம்பொருள்; 

பழகாத பொருள்.

 

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வத்துள் வைக்கப்படலாம்'. தெய்வம் என்பது வழித்துணைப் பொருள்;

 

கடவுள் என்பது வழிபடுபொருள். 

அது எட்ட முடியாதது. 

எல்லார்க்கும் வாய்க்காதது. 

அந்த எட்ட முடியாத கடவுளையும் எட்டமுடியும்; 

கணவனாகவே கைத்தலம் பற்ற முடியும். 

 

இடையறாது நினைந்து காதலுற்றுக் கனிவதொன்றே கடவுளை எட்டும் வழி என்று குறியீட்டு முறையில் சொன்ன கோட்பாடுதான் ஆண்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது.

 

பிறப்பு முதல் சீரங்கத்து மாயனோடு மாயமான நாள் வரையிலான ஆண்டாளின் வாழ்வில் உயிருள்ள சில கேள்விகள் ஊடாடுகின்றன. 

ஆண்டாள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?

அடுத்த வினா. ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது?

 

குரு பரம்பரைக் குறிப்புகள் கொண்டு கி.பி 776 என்று கணிக்கிறார் சாமிக்கண்ணுப்பிள்ளை. 

 

"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று' என்ற திருப்பாவை வரிகொண்டு 

கி.பி 731 டிசம்பர் 18 என்று கணிக்கிறார்கள் வானூல் அறிஞர்கள்.

 

ஆழ்வார்களின் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்த மு.ராகவையங்காரின் கூற்று மெய்யாயின் ஆண்டாளின் காலம் 8ஆம் நூற்றாண்டின் மையம் என்று கொள்வதில் ஐயம் இல்லை.

 

பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி?

 

மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது. 

பெருமாள் திருப்பெயரைப் பெரியாழ்வார் பாடக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை பெருமானுக்குப் பிச்சி ஆகிறாள்; 

 

தெய்வக் காதலில் திளைக்கிறாள்.

தன் உடலென்ற அழகும் உயிரென்ற பொருளும் கண்ணனுக்கு மட்டுமே காணிக்கை என்று கருதுகிறாள். வடபெருங்கோயிலான் ஆகிய வடபத்ரசாயிக்குப் பெரியாழ்வார் தொடுத்துவைத்த துய்ய மலர் மாலைகளைத் தனக்குத்தானே சூடிச்சூடிச் சுகப்படுகிறாள். பெரியாழ்வார் திகைக்கிறார்.

 

அவர் தேகத் திசுக்கள் தனித்தனியே துடிக்கின்றன. 

எல்லை மீறிய செயல் இதுவென்று உள்ளம் உடைகிறார்.

 

அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணக்கடவுள் 

"அவள் சூடிக்கொடுத்த மாலைகளைச் சூடுவதே சுகம்' என்று சொல்லி மறைகிறார்.

 

கோதையின் பெருமை கண்டு பித்துப்பிடித்து நிற்கிறார் பெரியாழ்வார்.

மகள் மங்கைப் பருவமுறுகிறாள். எடுத்து வளர்த்த பிறை பாற்கடல் குளித்தெழுந்து பௌர்ணமியாய் நிற்கிறது. 

 

மகளுக்கு மணாளன் தேட எத்தனிக்கும்போதுதான் இன்னோர் எதிர்வினை நிகழ்கிறது. 

"மானிடன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதா? மாட்டேன் தந்தையே!' 

என்று நீட்டோலை வாசிக்கிறாள் கிடந்த திருக்கோலத்தின்மீது படர்ந்த நெஞ்சினள்.

 

"உன்னித்தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்கிறாள். "மாலிருஞ்சோலை 

 

எம் மாயற்கல்லால் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன்' 

என்று உறுதி உரைக்கிறாள்.

 

தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது. 

இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படிச் சாத்தியம்? இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?

ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார்.

 

ஆனால் மொழியின் குழைவிலும், தமிழின் அழகிலும், உணர்ச்சியின் நெகிழ்விலும், 

உரிமையின் தொனியிலும் ஆணாழ்வார்களை விடவும், பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே! யாது காரணம்?

 

"தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே' 

என்ற குலசேகர ஆழ்வார் குரலில், 

ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு

 

ஞானத் தமிழ் புரிந்த நான்

என்ற பூதத்தாழ்வார் பாசுரத்தில் ஒரு தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய் நிற்கிறது.

 

வண்டூர் உறையும் பெருமாளுக்குக் குருகினங்களைத் தூதுவிடும் நம்மாழ்வாரின் நாயகன் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை. திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது. 

 

ஆனால் ஆண்டாள் உணர்ச்சி என்பது வெள்ளம்; 

மலை உச்சியிலிருந்து பள்ளம் தேடித் தாவும் வெள்ளம்.

 

அது கட்டற்ற காட்டாறு. 

இதனால்தான் வைணவ ஆச்சாரியார்கள் 

"ஆழ்வார்களின் பக்திநெறி மேட்டுமடை ஒக்கும்; 

ஆண்டாளுடையதோ பள்ளத்துமடை ஒக்கும்' 

என்று திளைத்துத் தெளிந்து தெரிவிக்கிறார்கள்.

ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது. ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுவது. ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையன.

 

ஒருத்தியால் பாடப்பெற்றதென்றாலும் திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் அடிப்படை வேறுபாடு ஒன்றுண்டு. 

நாச்சியார் திருமொழி காதல் லயத்தில் கனன்ற பாடல்கள்.

 

அவை பெரும்பாலும் தன்னுணர்ச்சியில் விளைந்தவை. திருப்பாவையோ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பொது உணர்ச்சியில் பூத்தவை.

 

"மல்லாண்ட திண்டோள் மணிவண்ணனுக்கென்றே சில்லாண்டு வளர்ந்த செல்வி கண்ணனையே கணவனாய் வரிப்பேன்' 

என்று கனவு கண்டாள். 

 

"அவரைப் பிராயம் தொட்டு ஆர்த்தெழுந்த தடமுலைகள் துவரைப் பிரானுக்கே' என்று காதல் வஞ்சினம் கண்டாள். 

அவன் தோள்சேர என்ன வழி என்று எண்ணிக்கிடந்தவள் ஆயர்மங்கையர் கைக்கொள்ளும் பாவை நோன்புற்றாள். அவளுக்குத் திருவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆயிற்று. 

 

தன்னையும் தம் தோழியரையும் ஆயர் பாவையர் ஆக்கினள். வடபெருங்கோயிலான் திருக்கோயிலே நந்தகோபன் குடிலாயிற்று.

 

கல்லான கடவுளே கண்ணனாகினான். அகமும் புறமும் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ளக் கடவுளை ஓர் ஊடகமாய்க் கைக்கொள்கிறார்கள் ஆயர்குலத்துத் தாயர்கொழுந்துகள்.

 

"நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டுநாம் முடியோம்; 

செய்யா தனசெய்யோம்; 

தீக்குறளை சென்றோதோம்' 

-என்று பெண்மைக்கெல்லாம் பொதுவாகத் தன்மைப் பன்மையில் பாடிக்கொள்கிறாள்.

 

ஆனால் திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்?

 

கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?

 

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

என்ற சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்து மீறலா?

 

உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள். 

 

"குத்துவிளக்கு என்பது குரு உபதேசம். கோட்டுக்கால் என்பன நான்கு புருஷார்த்தங்கள். 

மெத்தென்ற பஞ்சசயனமாவது 

தேவ, திர்யக், மனுஷ்ய, ஸ்தாவர, அப்ராண ரூபமான ஜீவர்கள்.

 

மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன்'

 

என்று பிரபந்த ரட்சையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும் அதை நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது.

 

இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து.

கோட்டுக்கால் என்பது யானைத் தந்தத்தால் நிறுத்திய கட்டில்கால். பஞ்ச சயனம் என்பது 

 

அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிற்றூவி என்ற ஐந்தும். தான் வாய் வைக்கும் இடம் இந்த ஐந்தும் கடந்த மேன்மை கொண்டதாய்த் திகழ வேண்டுமென்று அந்த ஆறாம் பொருளைக் கண்ணன் கண்டடைகிறான் என்று கொள்வது கவிதை நயம்.

 

"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக்' கனாக்காணும் கோதையாள் பாசுரத்தில் தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது. கொழுந்தமிழும் - செழுந்தமிழும், பழந்தமிழும் - இளந்தமிழும் வசந்த காலக் கிளைகளில் கொழுந்தெழுந்து வருவதுபோல் குழைந்தெழுந்து வருகின்றன. 

 

மறுபடியும் ஒருபடி மேலேறுகிறாள் ஆண்டாள். 

கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விழைகிறாள். 

எவரிடம் கேட்பது?

 

அவனோடு உறவாடிய உயர்திணைப் பெண்கள் உண்மை சொல்லார். 

ஆகவே அவன் இதழோடு உறவாடிய அஃறிணைப் பொருள் ஒன்றை அவாவுகிறாள். 

 

அதுதான் அவன் ஊதுகின்ற வெண்சங்காகிய பாஞ்ச சன்யம்.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

 

ஆண்டாள் பாடல்களின் உச்சம் என்று சொல்லலாம் இந்தப் பரவசப் பாசுரத்தை.

 

கண்ணன் வாய்வைத்த சங்கே சொல்! அவன் இதழில் கற்பூரம் மணக்குமா? தாமரையின் வாசம் வருமா? இனிக்குமா? அதன் சுவையென்ன? மணமென்ன? என்பது பொருள். 

 

"சங்கே நீ உப்புக்கடலில் பிறந்தாய். இனிக்கும் இடம் கிட்டிற்று உனக்கு. திருத்துழாய்ப் பாத்தியில் மணத்தோடு பிறந்தவள் நான். 

 

எனக்கேன் இக்கண்ணீர் உப்பு?' என்ற உள்ளார்ந்த தமிழ் நயம் இதில் ஊடாடிக் கிடக்கிறது. 

 

ஆண்டாள் இறைத்த நீர் கண்ணன் என்ற கழனி சேர்வதற்கு முன்னால் தமிழ் என்ற வாழையைத் தழைக்க வைத்திருக்கிறது.

 

"காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை' என்ற மரபு சங்க இலக்கியத்திலேயே மீறப்பட்டிருக்கிறது. 

 

"என் உயவுநோய் அறியாது இந்த ஊர் துஞ்சுகிறதே என் செய்குவேன்? முட்டிக்கொள்ளவோ எவரையேனும் தாக்கவோ வாய்விட்டுக் கதறவோ' என்ற பொருளில் இயங்கும் "முட்டுவேன்கொல், தாக்குவேன்கொல்' என்ற ஒளவையார் பாடல் அந்த மரபை உடைத்ததுதான்.

கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் பசுவின்பால் நிலத்தினிழிந்து வீணாவதுபோல் எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் பயன்படாமல் என் அழகைப் பசலை உண்டு போகிறதே என்ற பொருளில் எழுதப்பட்ட 

 

"கன்று முண்ணாது கலத்தினும் படாது' என்ற வெள்ளிவீதியார் பாடலும் மரபு மீறல்தான். 

 

ஆனால் மணமான பெண்களின் குரல்களாக அவை கேட்கின்றன. ஆண்டாளுடையது கன்னிக்குரல். அப்போதுதான் பூத்தெழுந்த மலரின் புதுக்குரல். 

 

"கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்' 

 

என்று பாயிட்டுச் சொல்லும் தனிமொழியை வாய்விட்டுப் பாடிய குரல் ஆண்டாளின் அகக்குரல். 

 

கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது. 

 

ஒரு மனிதனோடு எனக்கு மணவினை இல்லை என்று உறுதிப்பட்ட பெண்ணை என்செய்வது என்று பெரியாழ்வார் கலக்கமுற்றபோது, கண்ணன் அவர் கனவில் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறது. "ஆழ்வீர்! நின்மகளை யாமே மணக்கிறோம்; 

 

உங்கள் திருச்செல்வியை திருவரங்கம் அழைத்து வாரும்' 

என்று பெரியாழ்வார்க்கு ஆணையிட்ட பெருமாள், 

பாண்டிய மன்னன் வல்லப தேவன் கனவிலும் தோன்றித் "திருவில்லிப்புத்தூர் சென்று முத்துச்சிவிகை ஏற்றி ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வாரும்' 

என்று ஆணையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

பல்லியம் முழங்க மறையவர்கூடி வாழ்த்தொலி வழங்க, 

போகும் வழியெங்கும் பூச்சிதற, நாற்படையும் ஊர்ந்துவர, 

பேரங்கம் முழுக்க அழகுற்ற பெண்ணாள் சீரங்கம் வந்து சேருகிறாள். 

திருவரங்கக் கோயில் புகுந்து, 

வளர் தந்தையை வணங்கி வழிபட்டு, காதல் நடைநடந்து ஆதிசேடன் கடந்து, திருமால் திருவடி வருடி அவனோடு கலந்தாள்; 

ஐக்கியமுற்றாள். 

 

இங்கும் சில வினாக்கள் விளைகின்றன.

கடவுள் மனித வடிவில் வந்து மனிதப் பெண்ணை மணந்து போவது உண்டு; வள்ளியும் முருகனும் போல. 

 

மனித வடிவத்திலேயே கடவுள் காதல் உண்டு; 

கண்ணனும் ராதையும் போல. 

ஆனால் கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது.

ஆனால், 

அர்ச்சாவதாரமாகிய விக்கிரகத்தோடு குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா என்ற கேள்விக்கு விடைசொல்ல ஓர் ஆவணமும் இருக்கிறது.

 

"குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லியை அழகிய மணவாளப் பெருமாளுக்குத் திருமணம் செய்வித்துத் தமது சொத்தை ஸ்ரீதனமாகக் கொடுத்துத் திருமண்டபம் கட்டிய செய்தியும்' 

 

- என்ற குறிப்பு எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிப்பித்த 

"கோயிலொழுகு' நூலில் காணப்படுகிறது.

ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், 

 

ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள். 

 

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :

 

Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple. 

- பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்.

 

சமண - பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம். ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது. "எண்ணம் திண்ணியதாயின் எண்ணியதெய்துவாய்' என்ற நிபந்தனையற்ற நம்பிக்கையின் நிதர்சனமாக ஆண்டாளைப் புரிந்துகொள்ளலாம்.

 

"கண்ணன் புரிந்துகொள்ள முடியாத ஒரு கடவுள் தத்துவம். 

தன் காலத்திற்கு முன்கூட்டியே பிறந்துவிட்டவன் கண்ணன். 

இன்னும் சொல்லப் போனால் மிகமிக முன்கூட்டி. அதனால் அவனைப் புரிந்துகொள்வது வருங்காலத்தின் சாத்தியமே தவிர நிகழ்காலத்தினதன்று' 

என்ற ஓஷோவின் கூற்று உண்மையாயின் கண்ணனைப் புரிந்துகொண்ட இறந்த காலத்தின் எதிர்காலம் என்றே ஆண்டாளைச் சொல்லத் தோன்றுகிறது.

 

ஒன்றையே நினை 

- ஒருமுகப்படு 

- ஒப்புக்கொடு 

- நம்பு 

- கருதியதில் உறுதிகொள் 

- வினைப்படு

 

வெற்றியுறு என்ற தத்துவம் ஆண்டாளுக்கும் கண்ணனுக்கும் மட்டும் உரியதன்று. 

 

தலைவனுக்கும் தொண்டனுக்கும், நண்பனுக்கும் நண்பனுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், தந்தைக்கும் மகனுக்கும், சத்தியத்திற்கும் வாழ்வுக்கும் இதுவே உரியது.

 

எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும், மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்.

 

இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும், கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்த பிறகும் ஆண்டாள் அருளிச் 

செல்லும் அருஞ்செய்தி இதுதான்.

 

 

நன்றி - தினமணி

 

26239533_1607726319285993_7167375441526068238_n%2B%25281%2529.jpg

 

கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்து வெளியிட்ட "தினமணி" அறிக்கை

Capture%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25B0.JPG

 

 

நன்றி - தினமணி

 

http://www.penniyam.com/2018/01/blog-post_14.html?m=1

பகிர்வுக்கு நன்றி கிருபன். பொறுமையாக அனைத்து பதிவுகளையும் இன்று வாசிக்க முடிந்தது. வாசிக்க முடிந்ததாயினும் கிரகிக்க முடிந்தது பாதியளவு தான். மீண்டும் சில தடவைகள் இடையில் உள்ள சில பகுதிகளை வாசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ஞானியின் இறுதி செவ்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.