Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஹித் சர்மாவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும்; பார்த்திவ் படேலுக்கு இழைத்த துரோகமும்!

Featured Replies

ரோஹித் சர்மாவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும்; பார்த்திவ் படேலுக்கு இழைத்த துரோகமும்!

 

 
rohit%20sharma%20parthiv%20patel

ரோஹித் சர்மா, பார்த்திவ் படேல்.   -  கோப்புப் படம். | கே.ஆர்.தீபக்.

துணைக்கண்டபிட்ச், இந்திய ரக பிட்ச் என்றெல்லாம் வர்ணனையிலும் ஊடகங்களிலும் செஞ்சூரியன் பிட்சைப் பற்றிக் கூறுவது சரியென்றாலும்  ஃபானி டிவில்லியர்ஸ் கூறியது போல் இந்தப் பிட்சில் பந்தின் வேகம் கூடிவிட்டது என்பதும் டுபிளெசிஸ் கூறியது போல் பிட்சில் பந்துகள் எழுச்சியும், தாழ்ச்சியும் பெறும் என்று டாஸின் போது கூறியதும் உண்மையாகியுள்ளது.

மார்க்ரம், ஆம்லாவை பும்ரா தனது ‘ஷூட்டர்கள்’ (தாழ்வாக வரும் பந்துகள்) மூலம் வீழ்த்த, ரபாடா வீசிய அதே ரகப் பந்துக்கு முரளி விஜய்யும், என்ஜீடி பந்துக்கு விராட் கோலியும் இரையானார்கள். ஷார்ட் ஆஃப் லெந்த் பந்துக்கு கிரீசிலிருந்தே பந்தை பஞ்ச் செய்ய முயன்றார் விஜய், மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

கே.எல்.ராகுலின் வலி நிறைந்த இன்னிங்ஸை என்ஜீடி முடிவுக்குக் கொண்டு வந்தார். 29 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே லெந்துக்கு சற்று குறைவாக பிட்ச் ஆகி வந்த பந்தை என்ன செய்ய முயன்றார் என்று தெரியவில்லை, ஆனால் ஆடாமல் விட்டிருக்க வேண்டும், கட்டாகவும் இல்லாமல் பஞ்ச் ஆகவும் இல்லாமல் ஏதோ ஒன்றைச் செய்ய பேக்வர்ட் பாயிண்ட் பீல்டர் மஹராஜ் கேட்சுக்காக நகர வேண்டிய தேவையும் ஏற்படவில்லை.

விராட் கோலி 5 ரன்கள் எடுத்திருந்த போது என்ஜீடி சற்றே வைட் ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை ஷார்ட் ஆஃப் குட் லெந்தில் பிட்ச் செய்து உள்ளே ஸ்விங் செய்தார், கோலி எம்பினார், பந்து கால்காப்பைத் தாக்கியது. நேராக வாங்கினார், கிட்டத்தட்ட மார்க்ரம் அவுட் ஆனது போல்தான், ஆனால் கேப்டனாயிற்றே, இந்தியாவின் சிறந்த வீரரும் கூட, ரிவியூ செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? ரிவியூ செய்தார், எல்.பி.உறுதி செய்யப்பட்டது. மிடில் ஸ்டம்பைத் தாக்கும் ஒரு பந்துக்கு ரிவியூ செய்வதென்றால், அது ஒரு நாடகமாக்க முயற்சி என்றுதான் கூற வேண்டியுள்ளது.

விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் ரோஹித் சர்மாவையே இறக்கியிருக்க வேண்டும். ஆனால் இறக்கவில்லை ஏன்? இது ஒரு மிகப்பெரிய கேள்வி. அந்தத் தருணத்தில் அவரை இறக்கி அவுட் ஆகி விடக்கூடாது என்று பாதுகாப்பதற்குரிய பொக்கிஷ வீரரா என்ன ரோஹித் சர்மா? இல்லை இன்று வந்து அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வார் என்ற உத்தரவாதம் இருக்கிறதா? எதற்காக அவருக்குப் பதிலாக பார்த்திவ் படேலை இறக்க வேண்டும்?

அதுவும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு சஹாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளபடியால் தினேஷ் கார்த்திக் அழைக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்த பிறகு, ஒரு கடும் நெருக்கடியான தருணத்தில், அதுவும் அவர் கேட்ச்களைக் கோட்டை விட்டு மனதளவில் மிகவும் பலவீனமாக இருக்கும் போது, சவால் அளிக்கும் பந்து வீச்சுக்கு எதிராக என்ன அடிப்படையில் பார்த்திவ் படேல் இறக்கப்படுகிறார் என்பதுதான் கேள்வி. தன் விக்கெட் கீப்பிங் சரியில்லை என்ற காரணத்தினால் தினேஷ் கார்த்திக் அழைக்கப்பட்டுள்ளார் என்று வேதனையுடன் இருக்கும் பார்த்திவ் படேலை இன்னும் மோசமாகச் சித்தரிக்க ஒரு நெருக்கடியான சூழலில் பேட்டிங்கில் இறக்கிவிடுவது உத்தி அல்ல அரசியல்.

இது உண்மையில் இரட்டை அராஜகப் போக்கு என்றே படுகிறது. காரணம் ஒன்று ரோஹித் சர்மா என்ற மண்குதிரையை பாதுகாப்பதுடன், பார்த்திவ் படேலுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும். இதைத்தான் விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் பார்த்திவ் படேலுக்குச் செய்துள்ளனர். நிச்சயம் ரஹானே இருந்திருந்தால் அவரை இறக்கியிருப்பார்கள், பார்த்திவ் படேலை இறக்கியிருக்க மாட்டார்கள். அப்போது, ரஹானே சிறந்த வீரர்தானே, சவாலை சமாளிப்பார் என்று இறக்கினோம் என்றும் வீரர்களை நாங்கள் பாதுகாக்கிறோம், அவர்கள் திறமையை மதிக்கிறோம் வெற்றி தோல்வி பிரச்சினையல்ல என்று வானாளவிய பேட்டி ஒன்றை கொடுத்து அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்து விடுவார்கள். ஆனால் விஷயம் அதுவல்ல, தனக்கு அடுத்தபடியாக யார் போட்டியாளராக இருக்கிறாரோ அவரை எப்படியாவது எழும்பவிடாமல் செய்து விட வேண்டும் என்பதே மனித இயல்பு என்று வர்ணிக்கப்படும் அதிகார மோகம்.

ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சலாவில் கடைசி டெஸ்ட் போட்டி நடக்கும் போது விராட் கோலியை காயத்துடன் ஆட பயிற்சியாளர் கும்ப்ளே அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது, ரஹானேவை கேப்டனாக நியமித்து ரஹானே போட்டியையும் வெற்றி பெற்று விட்டார். மேலும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் விராட் கோலியின் ஆக்ரோஷ அணுகுமுறைக்கும் ரஹானேயின் ஆக்ரோஷ அணுகுமுறைக்குமான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி, கோலியின் கள சேஷ்டைகளை விட ரஹானேயின் ஆட்ட ரீதியான ஆக்ரோஷத்தை வரவேற்றிருந்தனர். இதையெல்லாம் கோலி கவனிக்காமலா இருந்திருப்பார்? இதன் தொடர்ச்சிதான் ‘வெளியில் உருவாக்கப்படும் கருத்துகளுக்கெல்லாம் நாங்கள் இசைய மாட்டோம்’ என்று ரஹானே தேர்வின்மை பற்றி பேட்டி கொடுத்தார் விராட் கோலி. இதே அராஜகப்போக்குதான் புவனேஷ்வர் குமாரை நீக்கியதிலும் வெளிப்பட்டது. ஒவ்வொன்றும் தனித்தனியானதல்ல, ஒவ்வொன்றுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருக்கிறது.

இந்நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தினேஷ் கார்த்திக்கை அழைத்து விட்டு, ஏற்கெனவே நொந்து நூலாகியிருக்கும் பார்த்திவ் படேலை மேலும் மனதளவில் காயடிக்க நெருக்கடியான ஒரு தருணத்தில் இறக்கி விடுவது என்பது பார்த்திவ் படேலுக்கு உளவியல் ரீதியாகச் செய்யும் வன்முறையாகும்.

ஆகவே இவர்களுக்கு வெற்றி பெறுவது குறிக்கோளோ, நோக்கமோ அல்ல, கிரிக்கெட் வரலாற்று எழுத்தாளரும் உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்தவருமான ராமச்சந்திர குஹா கூறியது போல் ‘சூப்பர் ஸ்டார்’ கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும், இதில் இன்னும் விசேஷமாக மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மாவை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கமும் கலந்திருக்கலாம் என்ற ஐயமே எழுகிறது.

இது போன்ற அணுகுமுறை இருக்கும் வரை எந்தத் திறமையுடைய புது வீரர்களும் அணியில் வந்து முன்னேறி விட முடியாது. மணீஷ் பாண்டேயை, தினேஷ் கார்த்திக்கை ஒருநாள் போட்டிகளில் இப்படியாகச் செய்ததையும் நிரூபிக்க முடியும். ஷ்ரேயஸ் ஐயரை தூக்கிவிடுவதையும் இந்தப் பார்வையில் பார்க்க முடியும். அமித் மிஸ்ராவை காரணமில்லாமல் ஒதுக்கி, ரவீந்திர ஜடேஜாவைத் தூக்கிப் பிடிக்கும் போக்கையும், இன்னும் பலவற்றையும் இதே சட்டகத்தில் வைத்துப் பார்க்க முடியும். உண்மையில் இந்தத் தென் ஆப்பிர்க்க தொடருக்கு குல்தீப் யாதவ்வைத்தான் ஜடேஜாவுக்குப் பதிலாக தேர்வு செய்திருக்க வேண்டும். ஏன் தேர்வு செய்யவில்லை? தரம்சலாவில் வேகப்பந்துக்கு ஓரளவுக்குச் சாதகமான பிட்சில் முதல் நாளே 4 விக்கெட்டுகளை தன் அறிமுக டெஸ்டில் கைப்பற்றியது இந்திய வெற்றியைத் தீர்மானித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஹானேயை அணியில் எடுக்காமல் அதற்கு அபத்த வியாக்கியானம் அளித்தது, அபாரமாகப் பங்களிப்புச் செய்யும் புவனேஷ்வர் குமாரைக் காரணமில்லாமல் உட்கார வைத்து விட்டு, பிட்ச் பற்றி சரியான கணிப்பில்லாமல் கூடுதல் பவுன்ஸுக்காக இஷாந்த் ஷர்மாவை எடுத்தோம் என்பது, நேற்று ரோஹித் சர்மாவைப் பாதுகாக்க பார்த்திவ் படேலை நெருக்கடியான தருணத்தில் இறக்கி அவருக்கு உளவியல் ரீதியான நெருக்கடியைக் கொடுத்தது என்று விராட் கோலி, ரவிசாஸ்திரி அதிகார இணை பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் ஏராளம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/article22455074.ece

  • தொடங்கியவர்

`எந்த 11 பேரை வைத்து விளையாடலாம் என நீங்களே சொல்லுங்கள்!' - பத்திரிகையாளரிடம் சீறிய கோலி

 
 

தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா தோல்வியடைந்தது. இதனால், மூன்று போட்டிகள்கொண்ட தொடரையும் 2-0 என்ற ரீதியில் இழந்தது இந்திய அணி. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய புவ்னேஷ்வர் குமார், இரண்டாவது போட்டியில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக இஷாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், துணை கேப்டன் ரஹானே, தொடரில் ஒரு போட்டியைக்கூட இன்னும் விளையாடவில்லை. இந்நிலையில், அணியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால் என்ன பயன் என்று கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

கோலி

 
 

நேற்று, இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் கோலி. அப்போது பத்திரிகையாளர் ஒருவர், `இந்திய அணி அதன் சிறந்த 11 பேருடன் இரண்டாவது டெஸ்ட்டில் இறங்கியதா' என்று கேட்க, `ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து எந்த 11 பேர் விளையாடுவார்கள் என்று நாங்கள் முடிவு செய்வதில்லை. ஆனால், எங்களின் சிறந்த 11 பேரை வைத்து களமிறங்கியிருக்கலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால், நீங்களே எங்களின் சிறந்த 11 பேர் யார் என்று சொல்லுங்கள். அவர்களை வைத்து களமிறங்குகிறோம். இந்தத் தோல்வி, எங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது. ஆனால், ஆட்டத்துக்கு முன் ஒரு முடிவை எடுத்தோமேயானால், அதை முழுமையாக நாங்கள் நம்புவோம். அணியில் ஒரு புதுமையான விஷயத்தை நாங்கள் செய்து, அது சரியாக செயல்படவில்லை என்றால், கண்டிப்பாக அதன்மீது கேள்விகள் எழுப்பப்படும் என்பது எங்களுக்குத் தெரியும். அது, எங்களுக்கு பழகிவிட்டது. எனவே, ஒரு அணியாக மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுகுறித்து நாங்கள் செவி மடுக்கப்போவதில்லை' என்றார் கோபத்துடன். 

https://www.vikatan.com/news/sports/113861-you-tell-me-the-best-xi-and-well-play-that-kohli-to-journalist.html

  • தொடங்கியவர்

பிரஸ் மீட்டில் நடந்தது என்ன... நிருபர்களிடம் கோலி கொந்தளித்தது ஏன்?! #SAvsIND

 
 

“உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வந்திருக்கிறேன். உங்களுடன் சண்டை போட அல்ல..!’’ - விராட் கோலியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

முதன்முறையாக, தோல்வி வதைக்கிறது; தலை உருள்கிறது; `Skipper of a series - losing side’ முத்திரை குத்தப்படுகிறது; ஒருவன் தன் முடிவை தவறு என்கிறான்...  அதுவும் கூட்டம் போட்டுச் சொல்கிறான்; ஆளாளுக்குக் கேள்வி எழுப்புகிறார்கள், எல்லாமே ஒரு மாதிரியான  கேள்விகள்... பதில் சொல்ல விரும்பாத கேள்விகள். ஆனால், பதில் சொல்லியாக வேண்டும். கோபம் வருகிறது. ஆக்ரோஷக்காரனுக்குக் கோபம் இயல்பு. விராட் கோலி ஆக்ரோஷக்காரர். பட்பட்டென வெடிக்கிறார். நிருபர்களும் விடவில்லை. வாக்குவாதம் நடக்கிறது. பிரஸ்மீட்டில் இது அபூர்வம். ஏனெனில்...

 

கோலி

விளையாட்டு உலகில் பிரஸ்மீட்கள் சுவாரஸ்யமானவை. அதிலும், போட்டி முடிந்த பிறகு நடக்கும் போஸ்ட் மேட்ச் கான்ஃப்ரென்ஸ்கள் கவனிக்கவேண்டியவை. கால்பந்து உலகில் மான்செஸ்டர் யுனைடெட் மேனஜேர் ஜோஸே மொரினியோ, பிரஸ்மீட்டில் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மீம் மெட்டீரியல். ஸோ... பார்த்துப் பேச வேண்டும். வெற்றி பெற்ற கேப்டனுக்கு, போஸ்ட் மேட்ச் கான்ஃப்ரென்ஸ் பெரும்பாலும் பிரச்னையில்லை. ஒரே டெம்பிளேட். ஆட்ட நாயகனைப் புகழ்வது... அணியைப் புகழ்வது. தோல்வியடைந்த கேப்டனுக்கு அப்படியல்ல; What went wrong-ல் ஆரம்பித்து, `நீங்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள்?' என நோண்டி நொங்கெடுப்பார்கள். Form out ஆன சீனியர் பிளேயரிடம் `எப்போது ஓய்வு?’ என மறைமுகமாகக் கேள்வி எழும். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொல்ல வேண்டும். ஓய்வு குறித்த ஆஸ்திரேலிய நிருபரின் கேள்விக்கு தோனி பாணியில் பதில் சொன்னால், ரகளையாக இருக்கும். பொறுமையிழந்தால்  இப்படித்தான்... மறுநாள் மேட்ச் ரிப்போர்ட்டைவிட பிரஸ் கான்ஃப்ரென்ஸ் மேட்டர் விஸ்வரூபம் எடுத்து நிற்கும். 

அரிதினும் அரிதாகவே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வாக்குவாதம் நடக்கும். அதுவும் கிரிக்கெட்  பிரஸ்மீட்களில் வாக்குவாதம் அபூர்வம். ஏனெனில், பிரஸ்மீட்டின்போது யார் கேள்வி கேட்க வேண்டும், எத்தனை கேள்விகள் கேட்கப்பட வேண்டும், பிரஸ்மீட் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பதை அந்த அணியின் மீடியா மேனேஜர்தான் முடிவுசெய்கிறார். பிரஸ்மீட்டில் குவிந்திருக்கும் எல்லா நிருபர்களுக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைக்காது. அதுவும் வெளிநாட்டு நிருபர்களும் அமர்ந்திருக்கும் டெஸ்ட் மேட்ச்சில், ஒரே நபருக்கு இரண்டாவது கேள்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால், செலிபிரிட்டியுடன் வாக்குவாதம் நடத்துவதற்கும் வாய்ப்பில்லை; மறுகேள்விக்கும் இடமில்லை. 

விராட் கோலி

கேப்டன், கோச், ஆட்ட நாயகன் இவர்களில் யாரேனும் வந்து அமர்ந்தவுடன், கேள்வி கேட்கும் நிருபர் முன்கூட்டியே கையை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு நிருபரும் கேள்விகளுடன் தத்தமது கையை உயர்த்துவர். யார் முதலில் கை தூக்கியது என வரிசைப்படுத்துவது மீடியா மேனேஜரின் வேலை. எல்லாவற்றையும் மெளனமாகப் பார்த்துவிட்டு, கடைசியில் அவர் விரும்பும் நிருபர்களை மட்டுமே கேள்வி கேட்க அனுமதிப்பார். `ஏன் என்னை கேள்வி கேட்க அனுமதிக்கவில்லை?’ என அவரிடம் சண்டைபோடவும் முடியாது. ஆக, கேட்பது ஒரு கேள்வியாக இருந்தாலும் அதை நறுக்கென கேட்க வேண்டும். அது சுருக்கென தைக்க வேண்டும். செஞ்சுரியன் டெஸ்ட் முடிந்ததும் அப்படியொரு கேள்வியைக் கேட்டார் நிருபர் சேதன் நருலா.

இவர், இந்திய கிரிக்கெட் நிருபர்கள் வட்டாரத்தில்  மிகப் பிரபலம். இளைஞர்தான் எனினும் 50 டெஸ்ட் மேட்ச்களை நேரில் சென்று கவர்செய்தவர். இந்திய அணியின் ஒவ்வொரு வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்திலும் தவறாது இடம்பிடிப்பவர். விவகாரம் இல்லாத ஆள் என்பதால்தான், அவரை முதல் கேள்வி கேட்க அனுமதித்தார் இந்திய அணியின் மீடியா மேனேஜர். அவரும் இந்திய கிரிக்கெட் ரசிகன் மனதில் இருக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார். மகாபாரத கிளைக்கதைகள்போல நீண்டது அந்தக் கேள்வி. ஒரு கேள்விக்குள்தான் எத்தனை எத்தனை கிளைக் கேள்விகள்!

கோலி

நிருபர்: கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் துணைக்கண்ட ஆடுகளங்களில் விளையாடியிருக்கிறீர்கள். அதுபோன்ற ஆடுகளங்களில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பது உங்களுக்கு நன்கு பரிச்சயம். செஞ்சுரியன் பிட்ச் துணைக்கண்ட ஆடுகளங்களைப்போல இருப்பதாக இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களுமே சொன்னார்கள். அப்படி இருந்தும் வெற்றிபெற முடியவில்லை. இந்தத் தோல்வி எப்படி வதைக்கிறது? ஒருவேளை நீங்கள் பெஸ்ட் லெவனைத் தேர்வுசெய்திருந்தால் வெற்றிபெற்றிருக்கலாமோ?

கேள்வியை முடிக்கும் முன்...

கோலி: பெஸ்ட் லெவன் எது?

நிருபர்: இந்த அணிதான் உங்கள் பெஸ்ட் லெவனா?

கோலி: ஒருவேளை நாங்கள் வெற்றிபெற்றிருந்தால், இந்த அணிதான் பெஸ்ட் லெவனா?

நிருபர்: மீண்டும் சொல்கிறேன்... இது துணைக் கண்டத்தில் உள்ள பிட்ச் போல இருக்கிறது.

கோலி: வெற்றி - தோல்வியைப் பொறுத்து நாங்கள் பிளேயிங் லெவனைத் தேர்வுசெய்வதில்லை.

நிருபர்:  என் கேள்வி, பிட்ச்சைப் பற்றியது...

கோலி: ஆனால், நீங்கள்தான் சொன்னீர்கள்... பெஸ்ட் லெவனோடு விளையாடியிருக்கலாம் என்று. ஆக, பெஸ்ட் லெவன் எது என நீங்கள் சொல்லுங்கள். அவர்களை வைத்து நாங்கள் ஆடுகிறோம். இந்தத் தோல்வி நிச்சயம் வருத்தம்தான். ஆனால், எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடாவிட்டால், `உனக்கு சர்வதேசப் போட்டியில் விளையாடத் தகுதியில்லை’ எனச் சொல்லிவிட முடியாது. ஏன்... சிறந்த பிளேயிங் லெவனைக்கொண்டிருந்தும் இந்தியாவில் தோல்வியடைந்ததில்லையா? விளையாடுவது யாராக இருந்தாலும் களத்தில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மற்றவர்களின் கருத்து என்னை பாதிக்காது.

தென்னாப்பிரிக்கா

ஆரம்பத்திலேயே சூடேற்றிவிட்டதால், அடுத்தடுத்த கேள்விகள் எல்லாம் கொஞ்சம் ஃபார்மலாகவே இருந்தன. கடைசி நேரத்தில் மீண்டும் ஒரு கேள்வி கொதிக்கவைத்தது. இந்தமுறை அந்தக் கேள்வியைக் கேட்டது தென்னாப்பிரிக்க நிருபர்.

நிருபர்: ஒரு அணியாக சிறப்பாகச் செயல்பட முடியவில்லை என்று சொன்னீர்கள். அணியை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதுதான் அதன் காரணமா? நீங்கள் 30-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் பிளேயிங் லெவனை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். டெஸ்ட் மேட்ச்சில் வெற்றிபெற கன்சிஸ்டன்சி அவசியம். அது உங்களுக்குப் பின்னடைவாக இருப்பதுபோல் தெரிகிறது. இருந்தும், அணியை மாற்றிக்கொண்டே இருப்பேன் என சொல்கிறீர்கள். பிறகு எப்படி டெஸ்ட் மேட்ச்சில் பாசிட்டிவான முடிவை எதிர்பார்க்க முடியும்?

கோலி: 34 டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் எத்தனை போட்டிகளில் வென்றுள்ளோம்?

நிருபர்: எத்தனை போட்டிகளில் நீங்கள் பிளேயிங் லெவனை மாற்றியுள்ளீர்கள்?

கோலி:  எத்தனை போட்டிகளில் வென்றுள்ளோம்? சொல்லுங்கள்... எத்தனை போட்டிகளில் வென்றுள்ளோம்? 21 வெற்றிகள். இரண்டு தோல்விகள். எத்தனை போட்டி டிரா? 

(உண்மையில் கேப்டனாக கோலி 20 போட்டிகளில் வெற்றி, ஐந்தில் தோல்வியடைந்துள்ளார்.)

நிருபர்: அதில் இந்தியாவில் வென்றது எத்தனை?

கோலி: அதெல்லாம் ஒரு விஷயமா? எங்கு விளையாடினாலும் சிறப்பாக விளையாட முயல்கிறோம். நான் இங்கே உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வந்திருக்கிறேன்; சண்டைபோட அல்ல.

இந்த பிரஸ் கான்ஃப்ரென்ஸில் பல கேள்விகள் கேட்கப்பட்டன என்றாலும், கோலி டென்ஷனானது இந்த இரு கேள்விகளுக்கு மட்டுமே. இரண்டுமே நியாயமான கேள்விகள். அந்த இரு நிருபர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகனின் கேள்விகளும் அவையே. 

இந்திய அணி

தென்னாப்பிரிக்காவில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், `ரஹானேவை எடுக்க வேண்டும்’ என்று. கோலி கடைசிவரை கேட்கவே இல்லை. இன்ஃபார்மை கணக்கில்கொண்டு ரோஹித்தைத் தேர்வுசெய்ததாக கோலி சொன்ன காரணம்  ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், அந்நிய மண்ணில் அதுவும் டெஸ்ட்டில் ரோஹித் அப்படியொன்றும் பெரிதாகச் சாதிக்கவில்லை. தென்னாப்பிரிக்கா ஒன்றும் இலங்கை அல்ல. பிலாண்டர், மோர்கல், ரபாடா எல்லாம் லக்மல், காமேஜ் அல்ல. அது இருக்கட்டும்.

ரஹானே ஏன் அவசியம்? செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் ரோஹித் - பார்த்திவ் படேல் பார்ட்னர்ஷிப். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேசப் போட்டியில் டெஸ்ட் ஆடுகிறார் பார்த்திவ். அதுவும் நான்காவது இன்னிங்ஸில் இலக்கை நோக்கிய ஆட்டம். டென்ஷன். எதிர்முனையில் இருந்த ரோஹித்துக்கும் நெருக்கடி. இந்த நேரத்தில் ரஹானே போன்ற ஒரு அனுபவ வீரர் இருந்தால், பார்த்தீவ் படேலும் தன் இயல்பான ஆட்டத்தை ஆடியிருக்க முடியும். இது ஒரு உதாரணம்தான். 

விராட் கோலி

ரஹானே ஏன் முக்கியம் என்பதை கோலியே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என எல்லா இடங்களிலும் தென்னாப்பிரிக்கா பக்கா. குறிப்பாக, ஃபீல்டிங்கில் இந்தியாவைவிட தென்னாப்பிரிக்கா ஒரு படி மேல். இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித்தை டி வில்லியர்ஸ் கேட்ச் செய்த விதமும், பார்த்திவ் படேலை மோர்கல் கேட்ச் பிடித்த விதமுமே அதற்குச் சான்று. ஆனால் இந்தியாவோ, ஸ்லிப்பில் கேட்ச்சை விட்டுக்கொண்டே இருந்தது. ஏன், விராட் கோலியே ஸ்லிப்பில் கேட்ச்சை விட்டார், இல்லையா?! ரஹானே ஸ்லிப்பில் கேட்ச் விடுவது அபூர்வம்.

 

தவிர, அந்தத் தென்னாப்பிரிக்கா நிருபர் சொன்ன மற்றொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. வீம்புக்கென ஒவ்வொரு டெஸ்ட்டிலும் பிளேயிங் லெவனை மாற்றிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. இந்திய அணி, இந்த ஆண்டு முழுவதும் அதிக வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளவிருக்கிறது. எனவே, கோலி தன் தவறுகளைச் சரிசெய்யாதபட்சத்தில், ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு நிருபருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், பிரஸ்மீட்டுக்குச் செல்வது சண்டைபோட அல்ல; வாக்குவாதம் நடத்த அல்ல; நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல!

https://www.vikatan.com/news/sports/113908-kohli-argument-with-reporter-in-press-meet.html

  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்கா அணி பற்றிய கோலியின் கருத்துக்கு டுபிளெசிஸ் பதிலடி

 

 
duplesisjpg

தெ.ஆ. கேப்டன் டுபிளெசிஸ்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

செஞ்சூரியன் மைதானத்தில் தோல்வி தழுவி தொடரை இழந்த பிறகு பொறிபறக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது நிதானமிழந்து தென் ஆப்பிரிக்க அணியின் இந்தியப் பயணம் குறித்த கருத்தைத் தெரிவிக்க அதற்கு தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா எவ்வளவு போட்டிகளில் இந்தியாவில் வெற்றிக்கு அருகில் வந்துள்ளனர் என்று கோலி கூறும்போது பின்னறையில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் இருந்தார்.

கோலிக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் கூறியது:

உள்நாடு அல்லாத வெளிநாடுகளில் எங்கள் வெற்றி விகிதம் உலகிலேயே சிறந்தது, ஏனெனில் நாங்கள் சீரியசாகவே சிறப்பான கிரிக்கெட்டை ஆடியுள்ளோம். ஆனால் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகள் சில வேளைகளில் தீவிரமாக உள்ளது. நான் இப்படிப் பார்க்கிறேன், இந்திய அணியின் ஸ்பின்னர்கள் எங்கள் ஸ்பின்னர்களை விட அபாரமாகத் திகழ்ந்த சூழ்நிலையில் கூட இந்திய பேட்ஸ்மென்கள் திணறியுள்ளனர். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியுமே 3 நாட்களில் முடிந்தது. ஒரேயொரு சதம் மட்டுமே என்று நினைக்கிறேன். (டெல்லியில் அஜிங்கிய ரஹானே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார்).

இந்தத் தொடரில் கடினமான சில தருணங்கள் இருந்தன, ஆனால் வீரர்கள் ரன்கள் எடுத்தனர், விக்கெட்டுகள் விழுந்தன. எனவே பந்துக்கும் பேட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இப்படியிருந்தாலே அது நல்ல பிட்ச். ஆனால் பிட்ச் ஸ்விங் பந்துகளுக்கு மட்டுமே, அல்லது ஸ்பின் பந்துகளுக்கு மட்டுமே சாதகமாக இருந்து பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்தினால் அப்படிப்பட்ட பிட்ச்கள் அதீதமானவை என்று கூறலாம். 5 நாட்களோ. நான்கு நாட்களோ, கிரிக்கெட்டின் அனைத்து காரணிகளும் நமக்கு கிடைத்தால் அது நல்லது. நியூலேண்ட்சில் முதல் நாள் காலை கடினமாக இருந்தது பிறகு எளிதானது கடைசியில் கடினமானது. பந்துக்கும் மட்டைக்கும் கடும் போட்டி நிலவ வேண்டும், அதில் வெற்றி பெற போராட வேண்டும்.

கடந்த இந்தியத் தொடரிலிருந்து நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டோம், அடுத்த முறை அங்கு ஆடும்போது நாங்கள் கடந்த முறையை விட நல்ல போட்டியளிப்போம்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.

http://tamil.thehindu.com/news/article22464255.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.