Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் கட்சிகளின் உத்திகளுக்குள் அமிழும் உள்ளூராட்சி

Featured Replies

அரசியல் கட்சிகளின் உத்திகளுக்குள் அமிழும் உள்ளூராட்சி
 
 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2018 அறிவிக்கப்பட்டு, பெப்ரவரி மாதம் 10ஆம்திகதி வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல்த் திருகுதாளங்களும் திருவிழாக்களும் களைகட்டத் தொடங்கிவிட்டன.  

அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களும் ஒரே தடவையில் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சட்டங்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் இம்முறை தேர்தல் நடைபெறுகிறது. 

இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில், 25 சதவீதம் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறுவது முக்கியமானதாகும்.

இன்னொரு முக்கியமான விடயமாக இருப்பது, வட்டாரத் தேர்தல் முறையும் விகிதாசாரத் தேர்தல் முறையும் இணைந்ததொரு வாக்கெடுப்பு முறையாகும்.  

வட்டாரங்கள் அதிகரிக்கப்பட்டு வட்டாரங்கள் 60 சதவீதமாகவும் விகிதாசாரத் தெரிவு 40 சதவீதமாகவும் கொண்டே, இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இதிலுள்ள சந்தேகமும் விமர்சனமும் விகிதாசாரத் தெரிவிலேயே இருக்கிறது. 

வட்டாரங்களில் நேரடியாகக் கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தெரிவுகள் நடைபெற்றுவிடும். ஆனால், விகிதாசாரத் தெரிவு கட்சிகளின் அல்லது சுயேட்சைக்குழுக்களின் செயலாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக அமையும்.  

இந்தமுறை, உட்கட்சிப் பூசல்களுக்கும்  ஊழல்களுக்கும் காரணமாக அமையலாம் என்பதுதான் இந்தக் குழப்பமாகும். இந்த முறைமையானது ஒரு வகையில், போனஸ் அல்லது தேசியப்பட்டியல் என்கிற வகைக்குள்ளேயே இருக்கப்போகிறது. இந்தத் தெரிவானது, செயற்படக்கூடிய திறமையாளர்ளுக்காக தெரிவாக இருப்பது சிறப்பாகும். இதை நோக்கமாகக் கொண்டே இத்தகைய முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது.  

அரசியல்வாதிகளினால் தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகளை  நடைமுறைப்படுத்துவதே மக்களின் ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதாக இருக்கும். இவ்வாறாக வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றத் தவறுகின்றமை, மிகப்பெரிய குற்றமாகக் கூடக் கொள்ளப்படலாம்.

இவ்வாறு தவறிழைக்கப்படுகின்றமையானது, மக்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்குவதாக இருக்கும். இதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மக்கள், தமது எதிர்ப்புகளைத் தெரிவிக்க முனைவார்கள். இதனால், மக்களைத் தெளிவுபடுத்தும் வகையிலான செயற்திட்ட‍ங்கள் கட்சிகளால் மேற்கொள்ளப்படவும் வேண்டுமாக  இருக்கும்.  

இலங்கையின் உள்ளூராட்சி சபை என்பது, இலங்கையின் நாடாளுமன்றம், மாகாண சபை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சிநிர்வாக அமைப்பாகும். 

முன்னைய காலங்களில், நகரசபை, பட்டினசபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர், 1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி, இலங்கையில் மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள், மற்றும் கிராம அபிவிருத்திச் சபைகள் என்ற நான்கு வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன.  

இலங்கையில், மாநகர சபைகளின் எண்ணிக்கை - 23, நகர சபைகளின் எண்ணிக்கை - 41, பிரதேச சபைகளின் எண்ணிக்கை - 271, இலங்கையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை - 38,259 ஆகும்.  

நீண்ட வரலாற்றையுடைய உள்ளூராட்சி முறைபற்றி, இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம், உள்ளூர் நிர்வாகம் ‘நாகர குட்டிக’ என அழைக்கப்படும் நகரத் தலைவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது. இது தவிர, ‘கம்சபா’ என அழைக்கப்பட்டு வந்த கிராமச் சபைகளும் இருந்துள்ளன. 

கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத் தலைவர்களின் கீழ் அமைந்த இச்சபைகளுக்கு, சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் உரிமைகள் இருந்துள்ளன. அக்காலத்துக் கிராம சபைகள், முக்கியமாக வேளாண்மை தொடர்பான பொறுப்புகளையே கவனித்து வந்ததுடன், அவை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டும்.  

இதுஇவ்வாறிருக்க, நாடு பூராகவும் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தமிழர்களைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களே பெரும்பாலும் கூடிய கவனத்துடனான பார்வையைப் பெற்றிருக்கின்றன.   

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணி என்ற பெயருடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.டிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனப் பலவேறு கட்சிகள், இது தவிரவும் பிரதான கட்சிகளின் ஆதரவுடனும்  ஆதரவு இல்லாமலும் சுயேட்சைக்குழுக்கள் எனப் பலவும் தேர்தல் களத்தில் நிற்கின்றன.  

பொதுச் சுகாதாரம், திண்மக் கழிவகற்றல், கிராமிய பாதைகள் அமைத்தலும் பராமரித்தலும், வடிகாலமைத்தலும் பராமரித்தலும் தெருக்களுக்கு வெளிச்சம் தருதல், சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும், விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், இடுகாடுகள் சுடுகாடுகளைப் பராமரித்தலும் , நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பொது மலசல கூடங்களை அமைத்தலும் பராமரித்தலும், கிராமிய நீர் விநியோகம், பொது நீராடல் நிலையங்களை அமைத்தலும் பராமரித்தலும், முன்பள்ளிகளை உருவாக்குதலும் பராமரித்தலும், தாய் சேய் நலப்பணி, பொதுக் கட்டடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும், தொற்று நோய் தடுத்தல், திடீர் அனர்த்த முன்னாயத்தமும் செயற்பாடுகளும், பெண்கள் அபிவிருத்தி, கிராமிய மின்சாரம் வழங்குதல், வீடமைப்புத் திட்டங்கள், கல்வித் தளபாடங்கள் , அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல், கால்நடைப் பண்ணைகளை நடாத்துதல் , அறநெறிப் பாடசாலைகளை ஏற்பாடு செய்தல், கிராம அபிவிருத்திச் சங்கங்களை ஸ்தாபித்தலும் வழிநடத்துதலும், தீயணைப்பு சேவைகள், சமய விழாக்களை ஏற்பாடு செய்தல், வறியோருக்கு நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள், மக்களுக்கு வழங்கும் சேவைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பாகும்.  

இவற்றை மீறித் தேர்தல் என்பது எதிர்ப்பும் கைகலப்பும், கலகலப்பும், வீண் பேச்சுகளும் பிரசாரங்களுமாகவே இருக்கின்றது என்பது நிதர்சனமானது. இந்த நடைமுறையிலிருந்து விலகி, மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதானதாகவே இருக்க வேண்டும் என்பதே எல்லோருடையதும் எதிர்பார்ப்பாகும்.  

இருந்தாலும், ஒவ்வொரு கட்சியினுடைய தேர்தல் பிரசாரங்களும் ஏதோ நாட்டில், புரையோடிப் போயுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தையும், தீர்த்து வைத்துவிடும் என்பது போன்றதொரு மாயையைத்தான் உருவாக்கி வருகிறது.  

தமிழர் தரப்பினுடைய பிரசாரங்களில் பெரும்பாலும் முனைப்புப் பெற்று இருக்கிற பிரசாரக்கருத்து, ஒழுக்கமான கட்டுக்கோப்பான சர்வதேமே வியந்து பார்த்த, விடுதலைப் போராட்டதை மௌனிக்கச் செய்வதற்கு, பல்வேறு வழிகளிலும் துணைகளைத் தேடி அழித்தே விட்டனர்; மாறிமாறி வந்த சிங்களத் தேசியக் கட்சிகள், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றத்தருவதாகக் கூறி, தமிழ் மக்களை ஏமாற்றி, அரசியல் செய்தவர்கள், அரசியல் தேவைக்காக சிறுபான்மை மக்களைப் பகடைக்காய்களாக மாற்றி, சூதாட்ட அரசியல் செய்தவர்கள், இப்போது எமது மக்களிடம் வந்து வாக்குகளை கேட்பதற்கு யோக்கியதையற்றவர்கள் என்பதாகவே அமைந்திருக்கிறது.  

நாட்டிலுள்ள பெரும்தேசியக் கட்சிகள், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், பல இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த காலங்களிலும் இதன் காரணமாகவே, எமது இளைஞர்களின் ஆயுதமேந்திய போராட்டங்களும் நடந்தன.  

உள்ளூர் அதிகார சபைகள், உள்ளூராட்சி அலகுகள் அடிமட்டம் முதல் மக்களைப் பங்குபற்றச் செய்கின்ற ஒன்றாகும். இருக்கின்ற அல்லது கிடைக்கின்ற ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்பது கட்டாயமாகும்.  

உண்மையைச் சொல்லப்போனால், கடந்த பல தசாப்தகாலமாக எந்த விதமான சுதந்திரமும் இன்றி, ஏதோ ஒரு வகை, பலவகை அடக்குமுறைகளுடன் இருந்து வந்த நிலை இப்போதில்லை. அதனால் உருவாகியிருக்கிற ஜனநாயகச்சூழல் பெரும்பாலான கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் உள்ளூராட்சித் தேர்தலுக்குள் கொண்டு வந்திருக்கிறது. இது மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என நீளத்தான் போகிறது.  

அரசியலில் உட்கட்சி ஜனநாயகம், மக்கள் ஜனநாயகம் என்பவையெல்லாம் மிகவும் முக்கியமானவை. இப்போது ஏற்பட்டிருக்கிற இந்த ஜனநாயகச்சூழல் பல அரசியல் கட்சிகளாலும், அரசியல்வாதிகளாலும் சகித்துக்கொள்ள, ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாகக் கூட மாறியிருக்கிற சூழலையும் காண முடிகிறது.  

தமிழ் மக்களுக்கென மொழி, கலாசாரம், பண்பாடு, கட்சி என்பவையெல்லாம் கட்சி, தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராட்டம் சார்ந்ததாகவும் வளர்த்தெடுக்கப்பட்டதாகிப்போனது. ஆனால், இன்றைய ஜனநாயகச்சூழலானது, அதைச் சற்று மாற்றி, யாரும் தமக்கு விருப்பமான கட்சியில், தமக்கு விரும்பிய அரசியலில் ஈடுபட முடியும் என்ற நிலைமையை உருவாக்கி விட்டிருக்கி‌றது.  

சோரம் போகாத கட்சியிலுள்ளவர்கள், கொள்கையுடன் செயற்படுபவர்கள், இலஞ்ச ஊழலில் அகப்படாதவர்கள், மக்களின் உரிமையையும் அபிவிருத்தியையும் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் என்ற தொனிப்பு தமிழ் அரசியல் வாதிகள் மத்தியில் இருந்தாலும் அதையும் தாண்டிய அரசியல் எதிர்பார்ப்பும், அரசியல் ஆர்வமும் மாறுபாடுகளைக் கொண்டு வராமலில்லை.  

இந்த அளவில் முக்கியம் பெறுகிற 25 வீதப் பெண்கள் பிரதிநிதித்துவம் இன்றைய நிலையில் பெரியதொரு வாய்ப்பாகவும் இருக்கிறது. 

விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஊக்குவிப்பின் ஊடாக அனைத்துக் கட்சிகளிலும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண்கள் கடந்த வாரத்தில் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.  

image_dad53ba94b.jpgimage_ffe05fc7ce.jpg

அதன்படி, பெண்களினது தேர்தல் நோக்கங்களாக உள்ளூராட்சி மன்றங்களின் சகல சேவைகளையும் சமூகத்தின் சகல தரப்பினரும் பெறக் கூடியதாக, ஒவ்வொரு குடிமகனின் திட்டமிடலையும் பங்கேற்பையும் பங்களிப்பையும் அமுல்படுத்தலையும், கண்காணிப்பையும் மக்களுக்கான சேவைகளில் உறுதிப்படுத்துவோம். இன, மத, மொழி பேதமின்றி எந்தக் கட்சியில் பெண் போட்டியிட்டாலும் அவளுக்கான முழுமையான ஆதரவை மக்களுடன் இணைந்து வழங்குவோம். தேர்தல் வன்முறைகளையும், அரசியல் பழிவாங்கல்களையும் சமூகத்தில் அடியோடு இல்லாதொழித்து, புதியதொரு வன்முறையற்ற அரசியல் பண்பாட்டை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அமைந்திருக்கிறது.  
நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 52 சதவீதம் இருக்கின்ற பெண்களில் வாக்களிக்கும் சனத்தொகையில் 56 சதவீதம் பெண்களாவர். இந்தநிலையில் கடந்த காலங்களில் பெண்ணுக்கொரு வாக்களித்து, அவளது வெற்றிக்கு வாய்ப்பளிக்காத ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் உணர்ந்து, பெண்களை நேரடி வேட்பாளராக உள்வாங்கிய கட்சிகளுக்கும் கூடுதலான பெண்களை உள்வாங்கிய கட்சிகளுக்கும் தனது மனப்பாங்கினை மாற்றி, பெண்களின் புதிய அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், இம்முறை பெண்களின் வெற்றிக்காகப் போராட வழிசமைக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய வேண்டுகோளாக இருக்கிறது.  

வடக்கு, கிழக்குக்குள்ளும் வெளியிலும் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற அடிப்படையில், பாதிப்புக்குள்ளான பெண்கள், தங்கள் பாதிப்புகளிலிருந்து மீண்டுவர அவர்களுக்கான வாழ்வாதார மற்றும் தொழில்நுட்ப ஆற்றல், தகைமை மற்றும் தலைமைத்துவம் பெறவும், அவர்களுக்கான ஒளிமயமான வாழ்வுக்கு கட்டியம் கூறவும் பெண்கள் உள்ளூராட்சித் தேர்தலில் தலைமைத்துவங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது.  

இந்தளவில்தான் மக்களைக் குழப்பிக் கொண்டேயிருக்கும் அரசியல் கட்சிகளின் கொள்கை சார் பிரசாரங்கள் பெப்ரவரி ஏழாம் திகதியுடன் ஓய்வுக்கு வரப்போகிறது. அந்த ஓய்வு மக்களுக்கு, ஒரு தெளிவைக் கொடுத்து, திறமையானதும் நேர்மையானதும் சரியானதுமான உள்ளூராட்சி அலகுகளை உருவாக்கிக் கொடுக்கும் என்று நம்புவோமாக.    

  •  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-கட்சிகளின்-உத்திகளுக்குள்-அமிழும்-உள்ளூராட்சி/91-210616

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.