Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்முறையாக குரங்குகளை குளோனிங் செய்த விஞ்ஞானிகள்...அடுத்த இலக்கு மனிதன்?!

Featured Replies

முதல்முறையாக குரங்குகளை குளோனிங் செய்த விஞ்ஞானிகள்...அடுத்த இலக்கு மனிதன்?!

 
 

நாட்டை நிர்மூலமாக்கும் அணுஆயுதங்கள், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மனிதனை பறக்க வைத்த விமானங்கள், பூமியைத் தாண்டி நிலவில் மனிதனை களமிறக்கிய விண்கலன்கள், திறமைக்கு சவால்விட்ட கணினிகள் என 20-ம் நூற்றாண்டு சாட்சியாக நின்ற அறிவியல் பாய்ச்சல்கள் ஏராளம். இவற்றுள் ஆக்கசக்திகளும் உண்டு; அழிவு சக்திகளும் உண்டு. ஆனால் 1997, பிப்ரவரி 22-ம் தேதி கிடைத்த அந்த ஒரு செய்தி மானுட சமுதாயத்திற்கே விநோதமானது. அந்த நாளில் வெளியான அந்த கண்டுபிடிப்பு ஆக்கமா அல்லது அழிவா எனத் தெரியாமலே குழம்பினர் அறிவியலாளர்கள். இதனை எப்படி கையாளப்போகிறோம் என்றே தெரியாமல் விழித்தன உலக நாடுகளின் அரசுகள். இப்படி விஞ்ஞான உலகத்தை புரட்டிப்போட்ட அந்த தொழில்நுட்பத்தின் பெயர் குளோனிங்.

குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட குரங்குகள்

 

டாலி...டாலி...

ஆவணங்களை நகலெடுக்கும் ஜெராக்ஸ் இயந்திரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். 1949-ம் ஆண்டு முதல் இந்த ஜெராக்ஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. நம் ஆவணங்களை நகலெடுக்கும் வித்தையை இந்த இயந்திரங்கள் செய்தன. ஆனால் விஞ்ஞானிகளோ உயிரினங்களையே நகலெடுக்கும் வித்தையைச் செய்தனர். அப்படி ஆரம்பித்ததுதான் குளோனிங். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் முதன்முதலாக பிறந்த உயிரினம்தான் டாலி; ஓர் அழகான செம்மறிஆடு. குளோனிங் மூலமாக டாலி பிறந்தது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது 1977, பிப்ரவரி 22 அன்று; அப்போதுதான் குளோனிங் என்ற பெயரையே பலரும் கேள்விப்பட்டனர். ஆனால், டாலி அதற்கு ஓராண்டு முன்னராக 1996-ம் ஆண்டு ஜூலை மாதமே பிறந்துவிட்டது. காப்புரிமை தொடர்பான பணிகள் நடந்துகொண்டிருந்ததால்தான் இந்த தாமதம்.

இந்த செய்தி வெளிவந்ததுமே பரபரத்தன ஊடகங்கள். உடனே டாலி பல தொலைக்காட்சிகளில் முக்கியச் செய்தியானது; செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தியானது; நாளிதழ்களில் விவாத கட்டுரைகளானது. அறிவியலாளர்கள் இதன் சாதக பாதக அம்சங்களை அலசத்தொடங்கினர். "இது மனிதகுலத்தின் மகத்தான பாய்ச்சல், உலகில் அழிந்துவரும் இனங்களைக்கூட இனிமேல் குளோனிங் மூலம் காப்பாற்றிவிடலாம்" என்றனர் சிலர். "இது இயற்கைக்கு எதிரானது, மனிதனையும் குளோனிங் செய்தால் மனித இனத்திற்கே ஆபத்தாக முடியும்" என்றனர் பலர். உலக நாடுகள் விழித்துக்கொண்டன. தங்கள் நாட்டு நிர்வாக மன்றங்களில் விவாதங்கள் நடத்தின. சட்டம் இயற்றின. இறுதியில் உலக நாடுகள், முக்கிய அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் அனைத்துமே மனிதனில் குளோனிங் செய்வதற்கு தடைவிதித்தன. அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக விலங்குகளில் குளோனிங் செய்வதையும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை மட்டும் அனுமதித்தன. 

Zhong Zhong and Hua Hua

இப்படி பிறந்ததுமே சர்ச்சை குட்டியானது டாலி. இதனால் மிக விரைவில் உலகெங்கும் பிரபலமடைந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக 7 வயதை எட்டுவதற்கு முன்பாகவே மரணமடைந்தது. ஒரு செம்மறி ஆட்டின் சராசரி ஆயுட்காலம் 12 ஆண்டுகள். ஆனால், டாலி பாதியிலேயே இறந்தது. எனவே மீண்டும் குளோனிங்கின் தீமைகள் குறித்தும், அதன் உடல்நிலை குறித்தும் சர்ச்சைகள் உலா வரத்தொடங்கின. "நுரையீரல் தொடர்பான குறைபாட்டால்தான் இறந்தது" என இதற்கு விளக்கமளித்தனர் விஞ்ஞானிகள். இந்நிலையில் தற்போது மீண்டும் குளோனிங் குறித்தும், அதன் ஆபத்துகள் குறித்தும் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. இந்தமுறை சர்ச்சைகளுக்கு காரணம் இரண்டு குரங்கு குட்டிகள்.

குளோனிங்கின் அடுத்த அத்தியாயம்

சைனீஸ் அகாடெமி ஆப் சைன்சஸ் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கடந்த புதன்கிழமை அன்று ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்தான் குரங்குகள் குளோன் செய்யப்பட்டிருக்கும் இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது. மகாக் வகை குரங்குகளான இவற்றின் பெயர் சோங் சோங் மற்றும் ஹுவா ஹுவா. இவற்றின் வயது முறையே 8 மற்றும் 6 வாரங்கள். இப்படி விலங்குகளை குளோனிங் மூலம் உருவாக்குவது என்பது புதிய விஷயம் கிடையாது.  நாய், பன்றி, பூனை என இதுவரைக்கும் 20-க்கும் மேற்பட்ட விலங்குகள் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த இரண்டு மகாக் வகை குரங்குகள் மட்டும் இவற்றில் இருந்து ரொம்பவே ஸ்பெஷல். காரணம் இவை பிரைமேட்டுகள். 

உயிரினங்களின் வகைப்பாட்டியலில் பல்வேறு வகைப்பாட்டு பிரிவுகள் இருக்கின்றன. அதில் ஒரு விலங்கின பிரிவுதான் பிரைமேட்டுகள் என்பவை. பொதுவாக மரங்களின் மீது தங்கி வாழும் அனைத்து பாலூட்டிகளும் பிரைமேட்டுகள்தான். அதில்தான் குரங்கினங்களும் அடங்கும். மற்ற உயிரினங்களை விடவும் இந்த பிரைமேட்டுகளை குளோனிங் செய்வது மிகவும் சிக்கலானது. எனவேதான் இதற்கு முன்புவரை எந்த பிரைமேட்டுகளும் வெற்றிகரமாக குளோனிங் செய்யப்பட்டதில்லை. அந்தக் குறையை தீர்த்துவைத்துள்ளது சீன விஞ்ஞானிகளின் இந்த முயற்சி. இதில் சொல்லவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் மனிதனும் ஒரு பிரைமேட்தான்! அதனால்தான் இந்தச் செய்தி மீண்டும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனை விஞ்ஞான ரீதியாக புரிந்துகொள்வதற்கு முன்பு குளோனிங் குறித்த விஞ்ஞான ரீதியான விஷயங்களை பார்த்துவிடுவோம். 

Cloned monkeys

இரட்டையர்கள் Vs குளோனிங்

இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுமே தன் இனத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களை விடவும் வேறுபட்டதுதான். மனித இனமும் அப்படித்தான். ஆனால், இதற்கு விதிவிலக்காக இருப்பவர்கள் இரட்டையர்கள். இவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான உருவமைப்பை கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் கருப்பையில் இயற்கையாக நடக்கும் உயிரியல் மாற்றங்கள். இதனை செயற்கையாக செய்வதன் மூலமாக பிரைமேட்டுகளை குளோனிங் செய்யலாம் என்று 1999-ம் ஆண்டு ரீசஸ் குரங்கில் முயற்சி செய்தார்கள். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. ஆனால், இது முழுமையான குளோனிங் கிடையாது. காரணம், இந்தமுறையில் உருவாகும் குரங்குகள் அவற்றின் தாய் விலங்கு மாதிரி அச்சு அசலாக இருக்காது. ஆனால், தற்போது சீன விஞ்ஞானிகள் செய்துள்ள குளோனிங், நிஜமான குளோனிங். இதற்காக இவர்கள் பயன்படுத்தியிருக்கும் முறை Somatic cell nuclear transfer. 1996-ம் ஆண்டு டாலியையும் இந்த முறையில்தான் குளோனிங் செய்தார்கள். 

ஒரு ஆட்டை குளோனிங் செய்ய வேண்டுமென்றால் முதலில் அதன் உடல் செல்களை சேகரிப்பார்கள். பின்னர் வேறொரு ஆட்டிலிருந்து கருமுட்டைகளை எடுத்து, அதற்குள் இருக்கும் டி.என்.ஏ.வை நீக்கிவிடுவார்கள். பின்னர் அந்த கருமுட்டைக்குள் குளோனிங் செய்யப்பட வேண்டிய ஆட்டின் செல்லை உள்ளே செலுத்துவார்கள். அதனை வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி தூண்டுவார்கள். பின்னர் இந்த கருமுட்டையை கருவுறச் செய்வார்கள். பின்னர் கருவுற்ற இந்த முட்டையை இன்னொரு பெண் ஆட்டின் கருப்பைக்குள் வைத்துவிடுவார்கள். அந்த ஆடு இயற்கையாக கருவுற்று பின்னர் ஒரு ஆட்டை பிரசவிக்கும். அந்த ஆடுதான் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட ஆடு. இந்தமுறையை பிரைமேட்டுகளில் மேற்கொள்வது என்பது எளிதான விஷயமல்ல; எனவேதான் இத்தனை ஆண்டுகள் பிடித்தன. தற்போது சீன விஞ்ஞானிகள் பிரைமேட்டுகளில் ஒன்றான குரங்குகளில் வெற்றிகரமாக குளோனிங் செய்திருப்பதன் மூலம், குளோனிங் வரலாற்றில் புதிய அத்தியாத்தையே எழுதிவிட்டனர்.

குரங்குகள்

அடுத்து மனிதனா?

இப்போதைக்கு இல்லை எனலாம். மனிதனில் குளோனிங் செய்வதற்காக விதிக்கப்பட்ட சட்டரீதியான தடைகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுமட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் இன்னும் இதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என்கின்றனர் மரபியல் நிபுணர்கள். தற்போது குளோனிங் மூலம் உருவாக்கப்படும் விலங்குகளின் முக்கியமான பயன் மருத்துவ ஆராய்ச்சிகள்தான். 

மனிதர்களுக்காக உருவாக்கப்படும் மருந்துகள் அனைத்துமே முதலில் விலங்குகளில்தான் சோதனை செய்யப்படுகின்றன. இது பயனளிக்கும் விஷயம் என்றாலும், இதிலிருக்கும் சிக்கல்களில் ஒன்று, முடிவுகளை அறிந்துகொள்ள நீண்டநாள் தேவைப்படுவது. உதாரணமாக 10 குரங்குகளை சோதனைக்காக எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு குரங்கிலும் ஒவ்வொரு மாதிரியாக ஆராய்ச்சி முடிவு கிடைக்கும். எனவே பல்வேறு முறை சோதனை செய்யவேண்டும். ஆனால், குளோனிங் மூலம் தயாரிக்கப்பட்ட, ஒத்த இயல்புடைய 10 குரங்குகள் என்றால் முடிவுகளை துல்லியமாக நம்மால் எளிதாகப் பெறமுடியும். இதனால் மரபணு தொடர்பான நோய்களுக்கு விரைவாக தீர்வுகளைக் கண்டறிய முடியும். ஆனால், மனிதனை குளோனிங் செய்வதால் என்ன நன்மை ஏற்படும்? இதுவரைக்கும் தீமைகளை மட்டும்தான் பட்டியலிடுகிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கான தேவையும் இல்லை. எனவே குளோனிங் மனிதன் உருவாக இன்னொரு யுகமே கூட தேவைப்படலாம்**

(**Conditions Apply)

https://www.vikatan.com/news/miscellaneous/114664-scientists-successfully-created-cloned-monkeys.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.