Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தை ஏமாளியாக்க இலங்கை அரசு எத்தனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தை ஏமாளியாக்க இலங்கை அரசு எத்தனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங் களில் மஹிந்தர் அரசின் கொடூரங்கள் சர்வதேச மட் டத்தில் அம்பலமாகத் தொடங்கியிருப்பதை அடுத்து அவற்றை சமாளிக்கும் பதில் நடவடிக்கைகளை அரசும் சர்வதேச மட்டத்தில் எடுத்திருக்கின்றது. பொய்களால் உண்மைகளுக்குச் சமாதி கட்டி, தனது அபத்த நடவடிக்கைகளுக்கு அர்த்தமும் நியாயமும் கற்பிக்கும் பிரசாரத்தை அரச இயந்திரம் முடுக்கிவிட்டிருக்கின்றது.

ஆனால், விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சியினால் பூமிப்பந்து பூகோளக் கிராமமாகச் சுருங்கி, உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவம் பற்றிய தகவல் உலகின் மற்றொரு மூலைக்கு அடுத்த கணத்தில் எட்டிவிடும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பம் விருத்தியடைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் மனித உரிமைககளை நடைமுறைப்படுத்தும் விடயத்தைக் கண்காணிக்கும் பொறுப்புடைய சர்வதேச அமைப்புகள், இலங்கையில் நேரடியாகவும், தனது நம்பகத் தன்மையுடைய முகவர்கள் மூலமாகவும் பிரசன்னமாகியிருந்து இலங்கை நிலைவரத்தை ஊன்றிக் கண்காணித்து வருகையில் அரசுக் கட்டமைப்பு என்ற தனது வலுவையும் பலத்தையும் வைத்துக்கொண்டு இலங்கை அரச நிர்வாகம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தனது கெட்டபெயரை சமாளிப்பதற்காக எடுக்கும் பதில் நடவடிக்கைகள் கோயபலஸ் பாணி பிரசாரம் வெற்றியளிப்பது பெரும்பாலும் துர்லபமே. அதுவே இப்போது வெளிப்படையாகத் தோற்ற ஆரம்பித்திருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடுதல், ஆட்களைக் காணாமற் போகச் செய்தல், மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் இராணுவ அடக்குமுறைகள் படையினர் புரியும் கொடூர அட்டூழியங்கள், அவற்றுக்கு ஆதரவும் தலையசைப்பும் வழங்கும் அரசின் மெத்தனப் போக்கு, அரசுத் தலைமையின் ஊழல் மோசடி நடவடிக்கைகள், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற இன்னோரன்ன அத்துமீறல்களை வெளியே தெரியாமல் அமுக்குவதற்கான முதற் செயற்பாடாக அவை பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தும் ஊடகங்களின் வாய்க்கு அச்சுறுத்தல் மூலமும் ஏனைய வழிகளில் இடைஞ்சல்களை ஏற்படுத்துவதன் மூலமும் பூட்டுப்போட எத்தனிக்கின்றது அரசுத் தலைமை.

ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதில் தொடங்கி ஊடகங்களுக்கான மூலப்பொருள்களைக் கிடைக்கவிடாமல் தடைசெய்து அவற்றின் வங்கிக் கணக்குகளை முடக்கி அவற்றுக்கு "இயற்கைச் சாவு" போன்ற நிலைமை ஏற்படுத்துவது வரை இந்தக் கைங்கரியம் பல்வேறு மட்டங்களில் அரங்கேற்றப்படுகின்றது. அரசின் இந்தச் செயற்பாட்டை பல்வேறு சர்வதேச ஊடக அமைப்புகள் வன்மையாகக் கண்டித் திருக்கின்றன. இந்த வரிசையில் கடைசி அறிவிப்பு சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பிடம் இருந்து வந்திருக்கின்றது.

இதேசமயம் ஊடகங்களுக்கு எதிராக ஊடக சுதந்திரத்துக்கு எதிராக அரச நிர்வாகம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் அராஜகத்தை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தும் ஓர் அறிக்கையை இது தொடர்பான அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும் ஆரம்பித்திருக்கின்றது.

இதேசமயம், தமிழர் தாயகப் பகுதிகள் மீது வலிந்த தாக்குதல்களை வேண்டுமென்றே பெரும்மெடுப்பில் ஆரம்பித்து பல லட்சம் மக்களை பேரிடருக்குள்ளும், பேரவலத்துக்குள்ளும் ஆழ்த்தியிருக்கும் அரசு , இடம் பெயர்ந்த அகதிகள் விடயத்தில் கொடுமையாகவும், மோசமாகவும், பொறுப்பற்ற முறையிலும், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகளுக்கு மாறாகவும் செயற்படுகின்றமை குறித்து பல சர்வதேச அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பியிருக்கின்றன.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம், லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவை இவ்விடயத்தில் முனைப்பாகவும் விரைந்தும் செயற்பட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இதேசமயம், ஆட்கடத்தல், அச்சுறுத்திக் கப்பம் பெறல், ஆட்களைக் காணாமற்போகச் செய்தல், படுகொலைகள் போன்ற "அரச பயங்கரவாத" நடவடிக்கை கள் குறித்து தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் ஆழமாக ஊடுருவி ஆராயப்படுகின்றது.

சர்வதேச மட்டத்தில் பல உண்மைகள் அம்பலமாகி, இலங்கை நிலைமை வெட்டவெளிச்சமாகத் தொடங்கியிருப்பதை அடுத்து, வழமைபோல முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் தனது பகீரதப் பிரயத்தன நடவடிக்கைகள் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்களைச் சமாளிப்பதில் தீவிரம் காட்டுகின்றது இலங்கை அரசு.

ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை நிலைமை தொடர்பாக பெரிய பொய்க்குண்டு ஒன்றை தூக்கிப் போட்டிருக்கின்றது இலங்கை.

தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலும் ஆட்கடத்தல்கள் பெரும் கொடூரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை தொடர்பாக உள்ளூரில் வெளியாகும் புள்ளிவிவரங்களும் தகவல்களும் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. கடத்தப்பட்டோரில் கணிசமானோர் படுகொலை செய்யப்பட்டு வீதிகளிலும் ஆங்காங்கேயும் சடலங்களாகப் போடப்படுகின்றார்கள். பலரின் கதி என்னவென்றே தெரியவில்லை. உற்றாரும், உறவினர்களும், குடும்பத்தவர்களும் கதிகலங்கிப் போயிருக்கின்றார்கள்.

ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் விளக்கமளித்த ஜெனிவாவுக்கான இலங்கைத் தூதுவரான சரளா பெர்னாண்டோ அம்மையாரோ, இலங்கையில் ஆட்கடத்தல்கள் தொடர்பாகச் செயப்பட்ட முறைப்பாடுகளில் அனேகமானவை சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டன என்று கதை அவிழ்த்து விட்டு, பலரையும் அதிர்ச்சிக்குள்ளும் வியப்புக்குள்ளும் ஆழ்த்தியிருக்கின்றார்.

மனித உரிமைகள் விடயத்தில் மிக மோசமாக நடந்து கொண்டுவிட்டு, அதை சமாளிப்பதற்கு இவ்வாறு சர்வதேசத்துக்கு கதைவிடும் இலங்கை அரசு சர்வதேசம் அதை நம்பிவிட்டதாகக் கருதித் தீக்கோழி போல திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான். சர்வதேசம் அவ்வளவு தூரத்துக்கு ஏமாளித்தனமானது அல்ல என்பதே உண்மை.

-உதயன்

சர்வதேசமென்ன இலங்கையின் தலையாட்டி பொம்மைகளா?

சர்வதேசத்திற்கு இலங்கை சம்பந்தப்பட்ட அனைத்துச்

செய்திகளும் உடனுக்குடன் கிடைக்கின்றன. அவர்களுக்கு

விடுதலைப்புலிகள் பற்றிய சரியான செய்திகளை சர்வதேசத்தி

ற்குப் பிழையாகக் கொடுப்பதன் மூலந்தான் ஏமாற்ற முயல்கி

ன்றதெனலாம். மற்றப்படி இலங்கையரசினர் புத்திசாலித்தன

முள்ளவர்களாகவோ சர்வதேசம் ஏமாற்றப்படுவதாகவோ

எனக்குத் தோன்றவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.