Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிமை- வித்யாசுப்பிரமணியம்

Featured Replies

வலிமை (கலைமகளில் வெளியான முத்திரைச்  சிறுகதை) நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.

வீடு முழுக்க அம்மாவின் வாசனை நிறைந்திருந்தது. காற்று, தண்ணீர், தோட்டத்து மண், அடுப்பில் எரியும் நெருப்பு, முற்றத்து ஆகாசம் எல்லாவற்றிலும் அவளது மணமும், ஓசையும், வெம்மையும், குளுமையும்  நிறைந்திருந்தது. அம்மாதான் அமிர்தாவின் வாழ்க்கை. அவள் மட்டும்  இல்லை என்றால் இந்நேரம் வேறு எப்படியோ இருந்திருக்கும். அம்மாவின் திடமும், மன உறுதியும், எண்ணங்களும், துணிச்சலும் காலத்தைக் கடந்தவை. வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்தித்தவள். தனக்கென்று சீரிய சிந்தனைகள் கொண்டவள். தன் நியாயமான தீர்மானங்களிலிருந்து அவள் ஒரு போதும் பின் வாங்கியதில்லை.
 
அம்மா தன் வாசத்தை வீட்டில் நிரப்பி விட்டு ஊருக்குச் சென்றிருக்கிறாள். இருபத்தி நான்கு வருஷம் தான் திரும்பிக் கூடப் பார்க்க விரும்பாத ஊருக்குச் சென்றிருக்கிறாள். அதுவும் யாரைப் பிரிந்து இருபத்த்தி நான்கு  ஆண்டுகளுக்கு முன் வந்தாளோ அவரைக் காணச் சென்றிருக்கிறாள். அம்மா விசித்திரமானவள். அவள் சிந்தனைகள் புதிரானவை. 
 
பதினேழு வயதில் அவளுக்குத் திருமணம். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் கருவிலேயே கலைந்தன. ஆண் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த குடும்பத்திற்கு இது அதிர்ச்சியாக இருந்தது. மூன்றாவது முறை அவள் கருவுற்ற போது அவளைக் கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டது அவள் புகுந்த வீடு. பாதாமும், குங்குமப் பூவும் கலந்த பாலும், பழங்களும் தினமும் கொடுத்து அன்பைப் பொழிந்தார்கள். பிரசவ தேதிக்கு இரண்டு நாள் முன்பு வலி எடுத்து அழகான பெண் குழந்தை பிறந்தது. பெண் பிறந்ததில் சற்று ஏமாற்றம்தான் என்றாலும், சரி அடுத்தது பிள்ளை பிறந்து விடும் என்ற நம்பிக்கையில் எல்லோரும் சகஜமாகவே இருந்தார்கள். குழந்தையைக் கொஞ்சினார்கள். அமிர்தவல்லி என்று பெயர்  சூட்டி, சீராட்டி...எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 

அமிர்தா பிறந்த பத்தாவது மாதம் அம்மாவுக்கு சற்றே உடல் நலம் குன்ற, பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு கர்ப்பப்பையில் வளர்ந்திருந்த கட்டி ஒன்று புற்று நோய்க்கட்டியாக இருப்பதாகக் கூறி கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதும் புகுந்த வீடு வேறு முகத்தைக் காட்டத் தொடங்கியது. 

இனி ஆண் வாரிசுக்கு வழியில்லை என்ற நிலையில் அப்பாவுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பது என்று முடிவாயிற்று. அப்பாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அம்மா ஒரு முடிவெடுத்தாள். தன் துணிமணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள். கழுத்தில் திருமாங்கல்யத்தோடு தொங்கிய மஞ்சள் சரடைக் கழற்றி புருஷனிடம் கொடுத்து விட்டு அமிர்தாவைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள். அவர்கள் அதிர்ந்தார்கள். அவளை எங்க தூக்கிட்டு போற என்ற கேள்வி அப்பா வாயிலிருந்து எழும்ப, அப்பாவின் அம்மா அவரைக் கண்களால் அடக்கினாள். பெண் குழந்தைடா! உனக்கெதுக்கு பாரம்? போகட்டும் விடு என்றாள். அம்மா புன்னகைத்தபடி படியிறங்கினாள்.  நேராகப் பிறந்த வீடு வந்தாள். விஷயத்தைச் சொன்னாள்.  அவர்கள் அழுதார்கள்.
  
“நா உங்களுக்கு பாரமா இருக்க மாட்டேன். ஆனா உங்க உதவி எனக்கு தேவைப்படுது. நா படிச்ச படிப்புக்கு என்ன வேலை கிடைக்குதோ அதைத் தேடிக்கற வரை உங்க கூட இருக்க அனுமதி கொடுங்க. ஊர்ல நாலு பேர் என்னை வாழாவெட்டின்னு சொல்லுவாங்க. அதைப்பத்தி நீங்களும் கவலைப் படாதீங்க. நானும் சட்டை பண்ண மாட்டேன். அப்டி சொல்ற யாரும் எனக்கு உதவியா ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடப்போறதில்லை. பிரிவுன்றது நா என் சுய நினைவோட எவ்வித தயக்கமும் இல்லாம எடுத்த தீர்மானம். பெண் என்பவள் ஆண் விருப்பப்படும் குழந்தையைப் பெற்றுக் கொடுக்கற வெறும் இயந்திரம் இல்ல. கருப்பை நீக்கப்பட்ட பெண், மாற்று குறைந்தவளா என்ன? என் மதிப்பு எனக்குத் தெரியும். நா வாழ்ந்து காட்டறேன். என் காலில் நான் சுயமா நிற்கும் வரை உங்க கையை எனக்கு ஆதரவா கொடுங்க. என் குழந்தையை உங்ககிட்ட விட்டுட்டுதான் நா வேலைக்கு போகணும்.” அம்மாவைப் பெற்றவள் அவளை அணைத்துக் கொண்டாள். 

அமிர்தா, தாத்தா பாட்டியின் பொறுப்பில் இருக்க, அம்மா ஒரு தனியார் நிறுவனம் மூலம் தொலைபேசி சுத்தம் செய்யும் வேலை ஒன்று தேடிக் கொண்டாள். ஒரு தொலைபேசி சுத்தம் செய்து வாசனை திரவியம் அதில் பூசினால் ஐந்து ரூபாய் கிடைக்கும். அப்போதெல்லாம்  அரசாங்க தொலைபேசிகள்தான். ஒரு நாளைக்கு காலையிலிருந்து மாலை வரை முப்பதிலிருந்து நாற்பது தொலைபேசிக் கருவிகள் வரை சுத்தம் செய்வாள். சில நாள் இருபதுக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருக்கும். ஆனாலும் ஒரு அரசு ஊழியரின் மாதாந்திர ஊதியத்திற்கு நிகராக அவளும் சம்பாதித்தாள். சுயமாய் நிற்பதற்கான முதலடி இதுதான். 

வருமானத்தில் சிக்கனச் செலவு போக அம்மா அப்பாவுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்து மிச்சத்தை சேமித்தாள்.  இந்தப் பணி அவளுக்கு வாழ்க்கையின் அடுத்த படியில் கால் வைக்க உதவி செய்தது. பெரிய பெரிய நிறுவனங்களுக்கு தொலைபேசி சுத்தம் செய்யச் சென்றதால், பல நல்லோர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களில் ஒருவர் உனக்கு தட்டச்சும் சுருக்கெழுத்தும் தெரியுமா என்று கேட்க, தட்டச்சு ஹையர் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் சார். சுருக்கெழுத்து தெரியும். ஆனால் தேர்வு எழுதுவதற்குள் திருமணமாகி விட்டது என்றாள்.

 
“பரவாயில்லை. உனக்கு ஆறுமாதம் அவகாசம் தருகிறேன். சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்று வா. எனது நிறுவனத்தில் நல்ல ஊதியத்தோடு உனக்கு வேலை நிச்சயம் என்று நம்பிக்கை கொடுத்தார். அவள் அடுத்த இரண்டாம்  நாளிலிருந்து அருகிலிருந்த ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்ந்தாள். ஏற்கனவே சுருக்கெழுத்து தெரியும் என்பதால் பயிற்சி சுலபமாகவே இருந்தது. கற்றுக் கொடுப்பவரே வியக்கும் வண்ணம் நேரடியாக இன்டெர் எழுதி தேர்ச்சி பெற்றாள்.  சான்றிதழ் கிடைத்ததும் அதை எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தாள். அவர் தான் வாக்களித்தபடி அவளுக்கு வேலை கொடுத்தார். 

இப்படித்தான் அவளது வளர்ச்சி ஏறுமுகமாக இருந்தது.  அவள் சுயம்புவாய் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டாள். கடின  உழைப்பையும், நேர்மையையும் தவிர வேறொன்றும் தெரியாது அவளுக்கு. அலுவலக நேரம் போக அவளது நேரம் அமிர்தாவோடு மட்டும்தான். பெண்ணிடம் நிறைய பேசுவாள். அப்பா பற்றிய பேச்சு வந்த  போது, தான் ஏன் வீட்டை விட்டு வெளியில் அவளை அழைத்துக் கொண்டு வந்தேன் என்பதை எதையும் மறைக்காமல் அவளிடம் கூறினாள். 

கருப்பை என்றால் என்னம்மா? என்று கேட்ட மகளுக்கு அது பற்றியும் விளக்கினாள். என் கருப்பையில்தான் நீ வளர்ந்தாய். என் தொப்புள்கொடி மூலம் உனக்கான உணவு கிடைத்தது. நீ பிறந்ததும் தொப்புள்கொடி அறுக்கப் பட்டு நீ என்னிலிருந்து விடுவிக்கப் பட்டாய், உனக்கும் கருப்பை உள்ளது. பெண்ணின் பெருமையே உயிரை உருவாக்குதல்தான் என்றாலும் நாம் வெறும் கருப்பை மாத்திரம் அல்ல என்றாள்.
  
பெண் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு இன்னும் நிறைய கேள்விகள் கேட்டாள்.
 
“இன்னொரு திருமணம் செய்து கொண்ட அப்பாவை எப்படி சும்மா விட்டாய்? குறைந்தபட்சம் ஜீவனாம்சமாவது வாங்கிக் கொண்டிருக்கலாமே”

“ஆண் குழந்தை வேண்டும் என்று நினைக்கும் ஒரு சராசரி ஆண் குணம் கொண்டவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதைக் கூட இழிவாக நினைத்தேன். ஒரு வகையில் நான் அவரை இதன் மூலம் உதாசீனம் செய்தேன் எனவும் கொள்ளலாம்.”

“அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததா?”

“தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.”

“ஒருவேளை என்னை உன்னிடம் கொடுக்க அவர்கள் மறுத்திருந்தால்?

“நிச்சயம் சம்மதித்திருக்க மாட்டேன். சட்டரீதியாகப் போராடி உன்னைப் பெற்றிருப்பேன்.”

“அவ்ளோ அன்பாம்மா என் மேல?

“அன்பு மட்டும் இல்ல. அக்கறையும் கவலையும் இருந்தது. அங்கேயே நான் உன்னை விட்டு விட்டு வந்திருந்தால் உன்னை இன்னொரு கருப்பை சுமக்கும் யந்திரமாக மட்டுமே வளர்த்திருப்பார்கள். ஓரளவுக்கு படிக்க வைத்து உரிய வயது வந்ததும் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய கடனாக மட்டுமே உன்னை அவர்கள் நினைத்திருப்பார்கள். நீ பெண்குழந்தை என்பதால்தானே, நான் உன்னோடு வெளியேறியதைக் கூடத் தடுக்கவில்லை?  எனவே அதற்காக சந்தோஷப்படு. பெண் என்பவள் பெரும் சக்தி. அவள் பல்வேறு பொறுப்புக்களை வகிக்க வேண்டியவள். வாழ்வில் பல்வேறு பாத்திரங்களை ஏற்க வேண்டியவள். சகிப்புத் தன்மை வேண்டும்தான். ஆனால் அதற்காக சுயத்தை இழந்துவிடக் கூடாது"
  
இப்படிக் கற்றுக் கொடுத்த அம்மாவின் உழைப்பில்தான் அவள் பொறியியல் படிப்பும், அதைத் தொடர்ந்து எம்பிஏவும் முடித்து ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அம்மா இப்போது, தான் வேலை பார்த்த கம்பெனியின் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறாள். இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவாள். இந்நிலையில்தான் ஒருநாள் அம்மாவிடம் அமிர்தா கேட்டாள். 

“திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு அவசியம்தானாம்மா?”
 
“என்னைப் பொறுத்தவரை நல்ல கணவன் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையா இன்னும் மகிழ்ச்சி! பெண் என்பவள் யாரையேனும் சார்த்துதான் வாழ வேண்டும் என்று சொல்லி சொல்லி பெண் இனத்தை இந்தச் சமூகம்  பலவீனம் கொண்டவள் என்று முத்திரை குத்தி வைத்திருக்கிறது. உண்மையில் நம்மால் சுயமாக இயங்க முடியும். நம் வலிமை  தெரிந்ததால்தான் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் நம்மைக் கட்டுப் படுத்துகிறார்கள். ஒன்று அன்பால் அடக்கி வைப்பார்கள். அல்லது அதிகாரத்தால், அல்லது பயமுறுத்தி கட்டுப்படுத்துவார்கள். 

“அப்படியானால் பெண்ணுக்கு இந்த உலகில் பாதுகாப்பு குறைவு என்பதெல்லாம்?”

“பாதுகாப்பு குறைவுதான். அதனால்தான் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறேன்.”

“எப்படி?”

“யாரையும் எளிதில் நம்பாதே. எப்போதும் எவர் மீதும் ஒரு மெல்லிய சந்தேகத்திரை இருப்பது நல்லது. கல்வி ஒரு பலம். சுய சம்பாத்தியம் மற்றொரு பலம். சுதந்திரம் என்ற பெயரில்  ஆடைக் குறைப்பும், ஆண் நண்பர்களோடு ஊர் சுற்றுவதும் நிச்சயம் பாதுகாப்பல்ல. நாகரீகச் சிந்தனைகள் நம் மனதில்தான் பெருக வேண்டுமே தவிர நடத்தையில் அல்ல. எப்போது ஆடையால் மூட ஆரம்பித்தோமோ அப்போதே பாதுகாப்புக்கு உத்தரவாதம் குறைந்து விட்டது. எப்போது வீட்டைப் பூட்ட ஆரம்பித்தோமோ அப்போதே திருடர்கள் தோன்றி விட்டார்கள். எனவே உறக்கத்திலும் விழிப்போடு இருக்க வேண்டியவள்தான் பெண்.  நம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கற்கத்தான் வேண்டும். எதிராளியின் கண்களை வைத்து அவனை எடை போடக் கற்க வேண்டும். கவலைப் பட வேண்டாம், உலகத்தில் நல்லவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டறியவும் கற்க வேண்டும்”

அமிர்தா அம்மாவை வியப்போடு பார்த்தாள் அவளுடைய சிந்தனைகளும், மன உறுதியும் தனக்கும் இருக்க வேண்டும் என்று விரும்பினாள்.  இப்டிப்பட்ட ஒரு மனைவியை இழந்து விட்ட அப்பாவை நினைத்து அவளுக்கு பரிதாபம்தான் ஏற்பட்டது. 

"ஒருவேளை அப்பா மனம் மாறி அல்லது மனம் திருந்தி உன்னை அழைத்தால் போவாயா அம்மா?"

‘விடுபட்ட வெள்ளரிக் காயில், காம்பின் தடம் கூட இருப்பதில்லை” அம்மா சிரித்தாள்.
 
“அப்படியானால் ஒரு பெண்ணுக்கு ஆண் தேவை இல்லை என்று நினைக்கிறாயா?”

“நீயே சொல்லி விட்டாய் ஆண் என்று. வாழ்க்கைக்கு ஆண் துணை  தேவைதான். ஆனால் அரைகுறைகள் தேவையில்லை. விந்துக்களை வெளிப்படுத்துபவன் மட்டுமே ஆண் அல்ல. ஆண்மை என்பது வேறு. உனக்கொரு பூரணமான ஆண்மகன் கிடைக்கட்டும். உன் வாழ்க்கை இனிதாகட்டும்

“அமிர்தா அம்மாவை அணைத்துக் கொண்டாள். “நான் ஆசீர்வதிக்கப் பட்டவள்மா. இப்படி மனம் விட்டுப் பேசும் ஒரு அம்மா எல்லாருக்கும் கிடைத்து விட மாட்டாள்"
.
“உன்னைத் தன்னில் பாதியாக நினைக்கும் ஒரு ஆண் உனக்குத் துணையாய்க் கிடைக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. 

“அந்த ஆண் உன்னையும் தன் தாயாக ஏற்க முன் வர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை”.
 
அம்மா சிரித்தாள். “என்னைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும். அதுசரி  உன் துணையை நான் தேட வேண்டுமா? நீயே தேடிக் கொண்டு வருவாயா?"

“ஒரு லவ் புரோபோசல் வந்திருக்கு. இன்னும் கன்ஸிடர் பண்ணலை.”

“யாரு?”

என்னோட எம்பிஏ படிச்சவன். நா இன்னும் பதில் சொல்லலை. உன் அளவுக்கு ஒருவரை ஜட்ஜ் பண்ற அனுபவம் எனக்கில்லை. ஒரு ஃபிரண்டா நினைச்சு அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். நீ ஸ்கான் பண்ணிச் சொல்லு அவன் எப்டின்னு. நீ ஓகேன்னு சொன்னா அவன் புரோபோசலைக் கன்சிடர் பண்றேன்.  இல்லன்னா ஃபிரண்டாவே நினைச்சுக்கறேன்.
 
“எப்பவும் நானே வழிகாட்டிக் கொண்டிருக்க முடியுமா? நல்ல முடிவுகளை நீயே எடுப்பதுதான் எப்பவும் உனக்கு நல்லது.
 
“அப்டியா சொல்ற?”

“அவனைப் பத்தி உன் அபிப்ராயம் என்னன்னு முதல்ல யோசி. அதுக்கப்பறம் நானும் அவனைப் பார்க்கறேன். நம்ம எண்ணங்கள் ஒத்துப் போகுதான்னு பார்ப்போம்.” அம்மா சிரித்தாள்.

அப்போது அழைப்பு மணி ஒலித்தது.. அமிர்தா கீழே இறங்கிச் சென்று  யாரென்று பார்த்தாள்.
 
“அம்மா இருக்காங்களா? என்று கேட்டது நடுத்தர வயது கடந்த ஒரு பெண்மணி.

“நீங்க?”

"அவங்களோட பால்ய தோழி. வைஷ்ணவின்னு சொன்னா தெரியும்".
 
அமிர்தா உள்ளே போய் அம்மாவிடம் அந்தப் பெயரைச் சொன்னதும் அம்மா வியப்போடு மாடியிலிருந்து இறங்கி வந்தாள். அந்தப் பெண்மணியை அணைத்துக் கொண்டாள்.
 
“எப்டி இருக்க வைஷு?”

“நா நல்லார்க்கேன். நீ எப்டி இருக்க? எப்டி இவ்ளோ அழகா இளமையா இருக்க இன்னும்?"

அம்மா சிரித்தாள். "உள்ள வா முதல்ல? என்னை எப்டி கண்டுபிடிச்சு வந்த?"

“அந்தக் கதையைக் கடைசில சொல்றேன். உன்னை நான் மறுபடியும் சந்திப்பேன்னு நினைக்கவேயில்லை தெரியுமோ? ரெண்டு  பேரும் ஒண்ணா படிச்சோம், ஒண்ணா வளர்ந்தோம். அடுத்தடுத்து கல்யாணமாச்சு. கொஞ்ச வருஷம் கழிச்சு மதுரைக்கு மீனாட்சியை தரிசிக்கப் போனப்போ உன் வீட்டுக்குப் போயிருந்தேன். நீ வீட்டை விட்டு ஓடிப்போயட்டதா சொன்னாங்க. என்னால நம்ப முடியல. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? அங்க இன்னொரு பெண்ணோட திருமணக் கோலத்துல உன் புருஷன்! எனக்கு ஒன்றும் புரியல. யாருகிட்ட என்ன கேட்பதுன்னு புரியாத நிலையில் என் கணவருக்கு டெல்லிக்கு மாறுதலாச்சு. நாலு வருஷம் முந்திதான் நாங்க சென்னைக்கு வந்தோம். போன மாதம் மறுபடியும் மதுரைக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற்றச் சென்றிருந்தோம். உன்னைப் பத்தி ஏதாவது தகவல் கிடைக்காதான்னு ஒரு ஆதங்கத்தோட மறுபடியும் உங்க வீட்டுக்குப் போனேன். 

வீடு இருளடைஞ்சு கிடந்துது. நா உன் தோழின்னு சொன்னேன். நா ஏற்கனவே வந்துட்டுப் போன தோழின்னு அவங்களுக்கு நினைவில்ல. இம்முறை நா உன் தோழின்னு சொன்னதும் அவங்க அழுதாங்க. நாங்க உன் சிநேகிதிக்கு பெரிய அநியாயம் செய்துட்டோம். அதோட பலனை இப்போ அனுபவிக்கறோம்னாங்க. எனக்கு ஒன்றும் புரியலை. அப்பறம் அவங்களே விவரமா சொன்னாங்க.
 
“என் பையன் சிறுநீரகம் செயல்படாம இருக்கான். பிழைப்பானா மாட்டானான்னு தெரியாம நாங்க துடியா துடிச்சுக்கிட்டு இருக்கோம். சாகறதுக்குள்ள பத்மாகிட்ட மன்னிப்பு கேக்கணும்னு நினைக்கறான். அவ எங்க இருக்கான்னு தெரியல. ஒரு ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு, அவ  கருப்பையை எடுத்துட்ட ஒரே காரணத்துக்காக அவளை அனுப்பினதுக்குத் தண்டனையா, அடுத்து கட்டிக்கிட்ட பெண்ணுக்கு கருப்பை இருந்தும் குழந்தை பாக்கியம் இல்ல. அப்பவும் திருந்தாம, மூணாவதா ஒரு பெண்ணை அவனுக்குக் கட்டி வைக்கணும்னு கூட நினைச்சோம். ஆனா ரெண்டாவதா வந்தவ பத்மா மாதிரி ஒதுங்கிப் போக முடியாதுன்னுட்டா. என் பையனும் சம்மதிக்கல. நா இப்டியே இருந்துடறேன் விட்ருங்கன்னான். கொஞ்சமாவா பாவம் பண்ணினோம். பத்மா இருந்திருந்தா ஒரு பெண் குழந்தையாவது வீட்ல இருந்திருக்கும். இப்போ வெறும் சூன்யம்தான் நிறைஞ்சிருக்குன்னாங்க. வருத்தப் படாதீங்கம்மான்னு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். "

அம்மாவின் முகம் இறுகிப் போயிருந்தது. அமிர்தாவை நிமிர்ந்து பார்த்தாள். 
“நா ஊருக்குப் போகணும். அவரைப் பார்க்கணும் என்றாள். அமிர்தா திகைத்தாள். 

“அம்மா அவரை எதுக்கு? இத்தனை காலம் வேண்டாம்னுதானே இருந்தோம். இப்போ எதுக்கு? நீ போறதுல எனக்கு இஷ்டம் இல்லம்மா.”

“சௌகர்யப் படலைன்னு விலகி வந்தேன். புருஷனா நினைச்சு போகலை. கஷ்டப் படும் ஒரு மனிதனுக்கு ஆறுதல் சொல்லப் போவதில் ஒண்ணும் தப்பில்லையே. தவிர நாம யாரையும் பழிவாங்கவோ, அவங்க கஷ்டத்தை நினைத்து சந்தோஷப் படவோ பிறக்கலை. எந்த நிலையிலும் நம்ம சுயத்தை எப்டி இழக்கக் கூடாதோ அதே மாதிரி மனித நேயத்தையும் இழக்கக் கூடாது. உடனே எனக்கு ஒரு பிளைட் டிக்கெட் போடு. சரியா?"
அம்மா சொல்ல. அமிர்தா எதுவும் பேசாது உடனே தன் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
 
“வைஷு ரொம்ப நன்றிடி.  நீ உன் விலாசமும் மொபைல் நம்பரும் கொடுத்துட்டு போ. நான் ஊர்லேர்ந்து வந்ததும் வரேன். நாம்ப நிறைய பேசணும்”.

“உனக்கு ஆட்சேபணை இல்லன்னா நானும் உன் கூட வரவா பத்மா? வைஷு கேட்டதும் “அமிர்தா ரெண்டு டிக்கெட்டா போடு” என்றாள்.

“ரொம்பக் காலம் கழிச்சுப் பாக்கறேனா? உன்கூட இருக்கணும்னு ஒரு ஆசை.” 

“எனக்கும்தான்”

மறுநாள் அம்மா கிளம்பி, தோழியை அழைத்துக் கொண்டு செல்ல வீடு வெறிச்சென்று ஆகி விட்டது போலிருந்தது. அமிர்தா சுற்றி சுற்றி வந்தாள். வீடு முழுக்க அம்மாவின் வாசம். 

ஐந்து நாட்களாகியும் அம்மாவிடமிருந்து போன் எதுவும் வரவில்லை. இவள் பண்ணினாலும் தொடர்பு கிடைக்காமல் அவளது போன் அணைத்து வைக்கப் பட்டிருந்தது. அமிர்தா வைஷ்ணவி ஆண்ட்டியின் நம்பருக்கு டயல் செய்து பார்த்தாள். பல முறை முயற்சித்த பிறகு ஒரு வழியாக வைஷு ஆண்ட்டி போனை எடுத்தாள்.

“ஆண்ட்டி நா அமிர்தா...அம்மா ஏன் போனை எடுக்காம அணைச்சு வெச்சிருக்காங்க?”

“கவலைப் படாதே அமிர்தா. அம்மா நல்லார்க்காங்க. ஒரு அரைமணியில் நானே உன்னைத் தொடர்பு கொள்கிறேன் சரியா?"

“அங்க என்ன நடக்குது ஆண்ட்டி? அம்மாவை அவங்க மதிச்சு பேசினாங்களா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே? எனக்கு கவலையா இருக்கு”

“எல்லா விஷயமும் நா சொல்றேன் அமிர்தா. நீ கவலைப்படாம இரு”

கவலைப்படாமல் இரு என்று சொன்னாலும் கவலையோடுதான் போனை வைத்தாள் அவள். அரைமணி நேரம் யுகமாக நகர்ந்தது.
செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அரைமணி நேரம் முடியும்  போது அது ஒளிர்ந்தது. டக்கென எடுத்தாள்.
 
“சொல்லுங்க ஆண்ட்டி”

“நா சொல்வதை நீ அமைதியா கேக்கணும் அமிர்தா. சட்டுனு உணர்ச்சி வசப்பட வேண்டாம் சரியா?”

“நீங்க பீடிகை போடறதைப் பார்த்தாலே எனக்கு பயம்மார்க்கே. என்ன விஷயம் ஆண்ட்டி?’

‘ஒரு முறை இவங்களை எல்லாம் பார்த்து ஆறுதல் சொல்லி ஏதேனும் பண  உதவியோ அல்லது மற்ற உதவியோ தேவையான்னு கேக்கத்தான் பத்மா இங்க வந்தா. ஆனா இங்க வந்த கொஞ்ச நேரத்துல, அவளோட ஒரு சிறுநீரகத்தையே அவருக்குக் கொடுத்து உதவ முடியும்னு தெரிஞ்சப்பறம் அவ கொஞ்சமும் தயங்கலை. உடனே தன்னை பரிசோதிக்கச் சொன்னா. எல்லாம் சரியாக இருக்குன்னு தெரிஞ்சப்பறம், நேற்று காலையில் அறுவை சிகிச்சை நடந்துது. இப்போ ரெண்டு பேரும் நல்லார்க்காங்க. நான்தான் அம்மாவைப் பக்கத்துல இருந்து கவனிச்சுக்கறேன். நீ எந்தக் கவலையும் பட வேண்டாம் சரியா?”

அமிர்தா திகைப்பில் வாயடைத்துப் போனாள். ஒரு பக்கம் கண்கள் கலங்க, மறுபக்கம் வாய் குழற, தடுமாறினாள்.
 
“நா உடனே கிளம்பி வரேன் ஆண்ட்டி..எனக்கு அம்மாவைப் பார்க்கணும் எந்த ஆஸ்பத்திரி சொல்லுங்க? என்றாள் சற்று சுதாரித்துக் கொண்டு. பிறகு போனை வைத்தவள் வேறு ஒரு நம்பருக்குத் தொடர்பு கொண்டாள்.
 
“ஹரீஷ் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். நா ரொம்ப படபடப்பா இருக்கேன். எனக்குத் துணையா என் கூட நீ மதுரைக்கு வரணும். முடியுமா?”

“என்னாச்சு அமிர்தா? எனி பிராப்ளம்?”

“போற வழில சொல்றேன். நா உடனே பிளைட் டிக்கெட் கிடைக்குதான்னு பாக்கறேன். நீ கிளம்பி வா”

அவர்கள் சென்ற போது அம்மா நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள். வைஷ்ணவி ஆண்ட்டி மருத்துவரைப் பார்க்கப் போயிருப்பதாக அங்கிருந்த செவிலி கூறினாள். “இங்க என் ஸ்கூல் மேட் ஒருத்தன் டாக்டரா இருக்கான். நா போய் அவனைத் தேடறேன்” என்றபடி ஹரீஷ் சென்ற சற்று நேரத்தில் வந்தாள் வைஷ்ணவி ஆண்ட்டி.

“எல்லாம் நார்மலா இருக்கு அமிர்தா. உங்கம்மாவை நினைச்சு நீ பெருமைப் படணும்.  இன்னும் நாலஞ்சு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லி இருக்கார் டாக்டர். என் உயிர்த் தோழியை கண்ணுக்கு கண்ணா நா பார்த்துக்கறேன். நீ கவலைப்படாம ஊருக்குப் போ சரியா?"
 
“இல்ல ஆண்ட்டி நானும் இங்க இருக்கேன். லீவு சொல்லிட்டுதான் வந்திருக்கேன்.”

“அவர்கள் பேசும் போதே பத்மாவிடம் அசைவு தெரிந்தது. அமிர்தாவைப் பார்த்ததும் வியப்போடு சிரித்தாள். “நீ எப்போ வந்த?”

“இப்பதான் வந்தேன். என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் நீ? உனக்கு ஏதாவது ஆகியிருந்தா?"

“ஒண்ணும் ஆகாது. நல்லதுதானே செய்யறோம். நீ எப்டி வந்த?”

“பிளைட்ல. என் பிரண்டோட வந்தேன்.”

“யார் அந்த ஃபிரண்டா?”

“ஆமாம்”
  
“ரொம்ப சந்தோஷம். எங்கே அவன்?”

இங்க ஒரு சிநேகிதரைப் பார்க்கப் போனான்”

“எப்டிம்மா உனக்கு மனசு வந்துது? சட்டுன்னு இப்டி ஒரு முடிவெடுத்திருக்க? இன்னும் ஒட்டிக்கிட்டு இருக்கற அன்பா இல்ல கருணையா?"

“அம்மா புன்னகைத்தாள். எப்டி வேணா வெச்சுக்கோ. அப்போ அவர் விரும்பினதைக் கொடுக்க என்னிடம் கருப்பை இல்லை. ஆனா இப்போ அவருக்கு வேண்டியதைக் கொடுக்க என்கிட்ட ஒன்றிற்கு இரண்டா கிட்னி இருக்கு. கொடுத்தேன்.”

அமிர்தா விழியகல அம்மாவைப் பார்த்தாள். கருணையும் சேர்ந்ததுதான் பெண்ணின் வலிமையோ? அன்பு, உறுதி, சுயம்,..! நிச்சயம் பெண் என்பவள் மாபெரும் சக்திதான். அவள் குனிந்து அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்ட நேரம் ஹரீஷ் உள்ளே நுழைந்தான். 

“இவன்தாம்மா நா சொன்ன அந்த பிரண்டு.”

அம்மா அவனை இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்தாள் புன்னகையுடன். பிறகு பெண்ணை அருகே அழைத்தாள். அவள் காதில், எனக்கு ஒகே என்றாள் 

"உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்.” அமிர்தா சிரித்தாள்.

“அம்மாவும் பெண்ணும் அப்டி என்ன குசுகுசுன்னு பேசிக்கறீங்க?” வைஷ்ணவி கேட்டாள்.

“அந்தப் பையனை இவளுக்குப் பிடிச்சிருக்காம். அவனுக்கும் இவளை...! என்றவள் பெண்ணின் பக்கம் திரும்பி, “அவங்க விலாசம் வாங்கிக்கோ அமிர்தா உடம்பு கொஞ்சம் சரியானதும் நானே போய்ப் பார்த்து பேசறேன்” என்றாள்

“அதுக்கெல்லாம் அவசியமே இல்ல. இப்பவே பேசலாம்” வைஷ்ணவி சொல்ல, அம்மா விழி சுருங்கப் பார்த்தாள்.

“அவன் என் பையன்தான். அவன் மொபைல்ல இருந்த உங்க ரெண்டு பேரோட  போட்டோவைப் பார்த்துதான் உன்னை நான் கண்டு பிடிச்சேன். உங்களைப் பத்தி அவன் கிட்ட விசாரிச்சேன். உன் ஃபேஸ்புக் பக்கத்துலேர்ந்து அதை டவுன்லோடு பண்ணி வெச்சுக்கிட்டு இருக்கான். உன் பெண்ணை அவன் நேசிக்கறான்னும் தெரிஞ்சுது. என் சந்தோஷத்துக்குக் கேக்கணுமா?. உடனடியா உங்க வீட்டுக்கு வந்தேன். அதுக்குள்ள இங்க வரா மாதிரி ஆகிப் போச்சு.. இவங்கப்பா கிட்டயும் விஷயத்தைச் சொல்லிட்டுதான் உன்கூட வந்தேன்” 

அமிர்தா மட்டுமல்ல அம்மாவும் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயிருந்தாள். 

“அம்மா நீ எப்பவும் என் கூட இருப்ப இல்ல? அமிர்தா திடீரென ஏதோ ஒரு கவலையோடு கேட்க,
 
“என்ன சந்தேகம் உனக்கு?. ஒரு உசிரைக் காப்பாத்த நினைச்சேனே தவிர ஒருநாளும் ஒட்டிக்கப் போறதில்ல. அந்த சந்தேகமே உனக்கு வேண்டாம். நா எப்போவும் உன் அம்மாவா மட்டும்தான் இருப்பேன் சரியா?” அம்மா புன்னகைத்தாள்.   
                              ************************

 

முகநூல் 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அசாத்தியமான கதை....இவ்வளவு நாள் எப்படி வாசிக்காமல் விட்டேன் என்றே தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போது படிக்க சொல்கிறார். முடிந்தால் நேரத்தை எடுத்து இந்தக் கதையைப் படிக்க வேண்டும்.....! tw_blush:

  • தொடங்கியவர்

நேரம் இருக்கும் போது படியுங்கள் 

இன்று இணைத்து இருப்பதும் நல்லகதை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.