Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கி.பி. அரவிந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு. கி.பி. அரவிந்தன் அவர்கள் புலம் பெயர்ந்து பிரான்சில் வாழும் ஓர் முன்னாள் ஈழப் போராளி. சமுகம், இலக்கியம் போன்ற தளங்களில் தன்னை ஈடுபடுத்தி வருபவர். வஜ்ரம் என்ற இதழுக்காக அவரை நேர்காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக இங்கு தருகிறேன்.

kipi01yc4.jpg

கி.பி. அரவிந்தன்

முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள், நீங்கள் எப்போதிலிருந்து பொது வாழ்வில் உங்களை ஈடுபடுத்தி வருகின்றீர்கள்.

1972 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதியை நான் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதற்கு மூன்று நாள்கள் கழித்து 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப் பட்ட நாளை அன்றைய தமிழ் மக்களின் தலைவர்கள் ஒரு கரி நாளாக கொள்வதென முடிவு செய்தார்கள். ஏனெனில் அந்த அரசியலமைப்பில் தமிழர்களின் உரிமைகள் உள்வாங்கப்படவில்லை. நாங்கள் மிகவும் இளைஞர்களாக இருந்த அன்றைய காலத்தில அந்த அரசியலமைப்பையும் அதன் வழியாகப் பிரகடனப் படுத்தப்பட்ட குடியரசுநாளையும் எதிர்த்து போராடி கைது செய்யப்பட்டோம். அதாவது குடியரசுநாளுக்கு முதலே மே 19 ஆம் நாள் முதன் முதலாக கைது செய்யப் பட்ட முதல் மூன்று இளைஞர்களுள் நானும் ஒருவன். அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு பணிகளை செய்து வருகிறேன். யாழ்ப்பாணச் சிறையில் இருந்திருக்கிறேன் வெலிக்கடைச் சிறையில் வாழ்ந்திருக்கிறேன், சென்னை மத்திய சிறையில் வாழ்திருக்கிறேன். பல்வேறு இயக்கப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். எரிமலை, வழிகாட்டி, தர்க்கீகம், ஈழம், பொதுமை, பாலம், ஈழமுரசு(பாரிஸ்) போன்ற பல பத்திரிகைகளில் பணியாற்றி இருக்கிறேன். மௌனம் என்னும் காலாண்டு இலக்கிய இதழை நடாத்தியிருக்கிறேன். மற்றப் பதிவுகளைச் செல்லப் போனால் இனியொரு வைகறை, முகம்கொள், கனவின் மீதி, ஆகிய மூன்று தொகுப்புகளாக எனது கவிதைகளை வெளியிட்டிருக்கிறேன். திரு.பி.ஏ.காதர் எழுதிய சுயம் நிர்ணயம் உரிமை என்னும் அரசியல் தத்துவார்த்த நூலொன்றையும், பிரான்சில் உள்ள எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து பாரிஸ் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பொன்றையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். ஐந்து வருடங்களுக்கு மேலாக இலக்கியரீதியான சமூகரீதியான அக்கறையுடன் அப்பால் தமிழ் என்ற இணையத் தளத்தை நடத்தி வருகிறேன். அண்மையில் அதன் சார்பில் பரதேசிகளின் பாடல்கள்; என்று கவிஞர்களின் பெயர்கள் இல்லாமல் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறேன். சுனாமியின் பின்விளைவுகளை, அரசியல்ரீதியாக பொருளாதாரரீதியாக பல்வேறு இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளைத் தொகுத்து உள்முகம் என்ற தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். இவற்றைவிட வானொலிகள், தொலைக் காட்சிகள் போன்றவற்றில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறேன். பொதுவாக, சமூக ஆர்வம் கொண்ட, இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு மனிதனாக வாழ்ந்து வருகிறேன். தொடர்ந்தும் இந்த வகையான பணிகளிலேயே செல்லலாம் என்றும் இருக்கிறேன்

ஈரோஸ் இயக்கத்தைத் தோற்றுவித்த திரு. ரத்தினசபாபதி அவர்களின் இழப்பு நிச்சயமாக உங்களைப் பாதித்திருக்கும். நீங்களும் அவர் தோற்றுவித்த ஈரோஸ் இயக்கத்தில் இருந்திருக்கின்றீர்கள். அவரைப் பற்றியும் அவருடனான உங்களின் அனுபவத்தையும் சற்று பகிர்ந்து கொள்ளுங்கள்.

1978 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆண்டுவரை அவருடன் நெருக்கமாக ஒன்றாக இருக்கவும் வாழவும் சிந்திக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 1938ம் ஆண்டில் இணுவிலில் பிறந்த அவர் இளவயதிலேயே தன்னை ஓர் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் அடையாளப்படுத்திக்கொண்டவர். அவ்வேளையில் அவர் இணுவைமாறன் என்ற புனைபெயரில் தமிழரசுக் கட்சி வெளியீடான சுதந்திரன் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார். 70களின் தொடக்கத்தில் இலண்டனுக்கு சென்ற இவர் உலக அரசியல் போக்குகளினால் ஈர்க்கப்பட்டு அங்கு இயங்கி வந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களுடன் அறிமுகங்களை ஏற்படுத்திக்கொண்டார். அவ்வகையில் அப்போது சிறுபான்மை வெள்ளையரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த சிம்பாவேயில,; அப்போது அதன் பெயர் ரொடீசியா அரசியல் மாற்றம் கோரிய சாணு அமைப்பினருடனும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடனும், ஆபிரிக்க தேசிய காங்கிரசுடனும் தொடர்புகளை பேணினார். இவ்வியக்கங்களின் தொடர்புகளால் இலங்கைத் தமிழரினதும் அரசியலிலும் இவ்வகை மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு ஈழமாணவர் பொதுமன்றம் என்ற மாணவர் அமைப்பை 1976ல் இலண்டனில் தொடக்கினார். அதன் தொடக்க நிகழ்வில் சாணு அமைப்பின் மாணவர் பிரிவின் பிரதிநிதியை கலந்துகொள்ளச் செய்தார். அதேபோல் பாலஸ்தீன இயக்கத்தின் இலண்டன் பிரதிநிதியுடனான நட்பு இவருக்கு ஈரோஸ் என்னும் ஈழப்புரட்சி அமைப்பினை நிறுவுவதற்கு ஊக்கியாக இருந்தது. அதன்படி ஈரோசின் பல உறுப்பினர்களும் வேறு ஈழப்போராளிகளும் பாலஸ்தீனத்தில் பயிற்சிபெற வாய்ப்பளித்தார். இந்த போராட்ட அமைப்புகளுடனான தொடர்புகள் தொடக்ககால ஈழப்போராளிகளுக்கு சர்வதேச அரசியல் அறிவையும் இராணுவ அறிவையும் வளர்த்துக்கொள்ள உதவின. இரத்தினசபாபதி அவர்களின் பத்திரிகைத் துறை அனுபவம் இலண்டன் பத்திரிகையாளருடனான உறவுகளையும் மேம்படுத்த உதவின. இந்த வகையில் முக்கிய பத்திரிகையாளர்களை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசியல் நிலவரங்களைப் பற்றி இலண்டன் பத்திரிகைகளில் எழுத வைத்தார். குறிப்பாக இலங்கைத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களான மலையகத் தமிழர்களின் அவலத்தை உலகறியச் செய்வதில் பங்காற்றினார். ஈரோஸ் என்னும் அமைப்புக்கு ஊடாக ஈழப்போராட்டத்திற்கு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கி உள்ளார். இவரது சிந்தனைகள் ஈழவர் இடர்தீர.. என்னும் கட்டுரைத் தொகுதியாக வெளிவந்திருந்தது. மலையக மக்கள் பற்றிய சிந்தனையை ஈழப்போராட்டத்தினுள் உட்செலுத்தியதிலும், உலக விடுதலை இயங்கள் பலவற்றின் பட்டறிவை ஈழப்போராட்டம் பெற்றுக் கொள்வதிலும், ஈழப்போராட்டத்தை சர்வதேச கவனத்திற்கு எடுத்துச் செல்வதிலும், இந்துமாக் கடலில் இலங்கைத் தீவினதும் குறிப்பாக இலங்கைத் தமிழரினதும் முக்கியத்துவத்தை ஈழப்போராளிகளுக்கு புரியவைப்பதிலும் அவர் கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதாரச் சுரண்டல்கள் மற்றும் உலகமயமாக்கல் தனியார்மயமாக்கல் போன்றவை தேசிய இனமக்களின் வாழ்வியல் நலங்களை அச்சுறுத்தி வரும் இன்றைய காலச்சூழலில் அவற்றை விட்டு விலகுவதும் முடியாமல் இருக்கிறது. இது பற்றி உங்களின் கருத்து என்ன?

உலகமயமாதல் என்பது பல்வேறு தளங்களில் விவாதிக்கப் பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் உலகமயமாதல் என்பதே ஒரு உலகளாவிய பிரச்சனையாகவும் மாறிக்கொண்டு வருகிறது. எங்களைப் போன்ற தேசிய இனங்களைப் பாதிக்கும் பிரச்சனையாக இருக்கிறது. அதே நேரம் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளை பாதிக்கும் பிரச்சனையாகவும் இருக்கிறது. உலகை முழுமையாக ஆட்கொள்ள முயலவது ஒரு சில சக்திகளின் நோக்கமாக இருக்கிறது. நாங்கள் மார்க்சியத் தத்துவத்திலிருந்து பார்க்காமல் பொதுவாகப் பார்த்தாலே இது வந்து உலகத்தை முழுமையாக உறிஞ்ச விரும்புகிற சில ஆதிக்கவாதிகளின் வெளிப்பாடக இருக்கிறது. ஒரு சிலர் அதனால் உலகத்திற்கு நன்மை கிடைக்கப் போவதாகவும் நினைக்கிறார்கள், ஆனால் உலகமயமாக்கல் என்பது உலகத்தையே ஒரு கிராமமாக நினைத்து பல தேசியங்களின் பொருளாதார வளங்களைச் சிதைக்கிறது. நெல் உற்பத்தி செய்கிறவன் நெல்லையே உற்பத்தி செய்யவேண்டும் என்றும் தேயிலை உற்பத்தி செய்கிறவன் அதையே உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் இது நெல் தேசம் இது தேயிலை தேசம் என்றும் இருக்கும். நீங்கள் ஏந்தப் பக்கமும் திரும்பி பார்க்க முடியாமல் இருக்கும் அளவிற்கு ஒரு அழுத்தத்தை தருவதுதான் இந்த உலகமயமாதல் சக்திகளின் நோக்கம். தேசியத்தின் மீது அழுத்தப்படும் நுகத்தடியாக இருக்கிறது. தங்களின் உற்பத்திகளைக் கொண்டு பலவிதமாக உற்பத்தி செய்து கொண்டிருக்கிற ஏனைய சமூகங்களின் உற்பத்திகளை சிதைக்கிறதாகவும் அது அமைகிறது. முக்கியமாக விவசாயத்தையும் கால்நடை உற்பத்தியையம் சரியாக பாதிக்கின்றன. கால்நடைகளின் இறைச்சிகளை அவர்களின் விலைக்கு விற்காததால் கால்நடைகளின் உற்பத்தியாளர்கள் அந்தத் தொழிலை விட்டு வேறு துறைகளுக்கு செல்வதும் நடக்கின்றன. பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய இனங்களின் பண்பாடுகள், மரபுகள் அழிக்கப் பட்டு வருவது ஐரோப்பிய வட்டத்திலும் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகின்றது. மொழிகளின் தனித் தன்மைகள் அழிக்கப்பட்டு உலகத்துக்கு ஒரு மொழி போன்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இயற்கையான உற்பத்தி உறவுகளை இந்த உலகமயமாக்கல் முழுமையாக பாதிக்கிறது. உலகத்தை ழுழுமையாகச் சுரண்டி ஏப்பம் விடும் முயற்சியாக இது அமைகிறது. இவைகளெல்லாம் இன்றைக்கு தேசிய இன ஒருமைக்காகவும் தேசிய இன விடுதலைக்காகவும் போராடும் எங்களைப் போன்ற இனங்களுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக இருக்கின்றன. நிச்சயமாக நாங்கள் இவைகளை எதிர்த்து அல்லது தாண்டிச் செல்ல வேண்டிய வழிமுறைகைளை, திட்டங்களை வகுத்தாக வேண்டும்.

சாதியச் சிக்கல்கள் தமிழகத்திலும் தேசிய இனப் பிரச்சனை ஈழத்திலும் கொழுந்து விட்டு எரியும்போது இன்றைய கொம்யூனிஸ்ட்வாதிகள் வர்க்கப் பிரச்சனையை முக்கியமாகக் கருதுகின்றனர். நீங்களும் ஒரு பொதுவுடமைவாதி என்கிற வகையில் இன்றைய பொதுவுடமைக் கட்சிகளின் நிலை பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

நான் பொதுவுடமை அடிப்படைவாதியல்ல. நீங்கள் சொல்லும் கொம்யூனிசத்திலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். எந்த மாற்றத்தையும் விரும்பாதவர்கள் அவர்கள். நான் கொம்யூனிசக் கருத்துக்களில் அதன் தத்துவங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளவன். ஈழத்தை எடுத்துக் கொண்டால் கொம்யூனிசக் கட்சிகளால் ஏற்பட்ட தாக்கங்கள் உண்மையில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவை. எங்களின் மரபுகளை இந்த இயக்கங்கள் புறக்கணிக்கத் தொடங்கியாதால் தொடக்கத்தில் ஆதாரவைப் பெற்ற இந்த இயக்கங்கள் பிறகு ஒரு இறக்கத்தை பெறத் தொடங்கின. இலங்கையில் மார்க்சியம் என்று பேசிய இவர்கள் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனையை விளங்கிக் கொள்ள தவறிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இன்றும் இருக்கிறது. அதே வேளையில் தமிழ் மக்களிடையே இருந்த அக முரண்பாடுகளை களைவதில் இந்த இயக்கங்களின் பணிகள் சிறப்பாக இருந்தன என்பதை மறந்துவிட முடியாது. உதாரணமாக இன்றைக்கு தமிழக இலக்கியங்களில் தலித் இலக்கியங்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றன. இவைகள் 1990 இல் இருந்துதான் பெரிதாகப் பேசப் பட்டு வருகின்றன. ஆனால் ஈழத்தில் 1960 களிலே அந்தத் தன்மைகள் அது பற்றிய இலக்கியங்கள் தோற்றம் பெற்று விட்டன. இவை தோற்றம் பெறுவதற்கு பொதுவுடமைக் கட்சிகள் மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கின்றன என்பது என்னுடய வலுவான கருத்தாக இருக்கிறது. இந்த இயக்கங்கள் ஏற்படுத்திய சாதியத்திற்கு எதிரான முனைப்பும், போராட்டமும் கூர்மைப் படுத்தலும் அந்தப் போராட்டங்களுக்குப் பயன் படுத்திய உத்திகளும், முறைகளும் கூட எங்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்திருக்கின்றன.

அடிப்படைவாதம் எதிலுமே கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அந்த வகையில் தமிழ்த் தேசியத்தை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் காலம் காலமாக தமிழர் பண்பாடு என்ற பெயரில் பின்பற்றி வரும் சில மரபுகள் பகுத்தறிவுக்கு முரணாக உள்ளதைப் பார்த்து வருகிறேன். குறிப்பாக பிற்போக்குத்தனமான சில மரபுகள் பெண்களின் மீது திணிக்கப்படுகின்றன. மரபுகள் நாகரிகத்திற்கு ஏற்றவாறு மாற்றம் பெறுவதுதானே வளர்ச்சியை நோக்கிய பாதை! அந்த வகையில் பழைய மரபுகளை இன்னமும் நாங்கள் கட்டிக் காக்க வேண்டுமா?

மரபுகளைப் பற்றி பேசும்போது எங்களின் நோக்கம் மரபுகளை அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதும் அல்ல இருப்பதை அப்படியே தொடர்வது என்பதும் அல்ல. சமூக ஓட்டத்துடன் அன்றைக்கு இருந்த மரபுகளில் இருந்து அவற்றைப் புதுப்பித்தல். எங்களுடைய வேர்களை நாங்கள் சரியான முறையில் அடையாளங் கண வேண்டும். இதுதான் முக்கியமான அம்சம். உதாரணமாக எங்களின் பொங்கல் பண்டிகையை எடுத்துக் கொண்டால் அது வேறு திசையில் போக முற்படும்போது அதை மீட்டெடுத்து அதைக் காலத்திற்கு ஏற்ற முறையில் கொண்டாடடுவது நல்ல விடயம்தானே. நீங்கள் குறிப்பிடும் பெண்ணியக் கருத்துக்களை எடுத்துக் கொண்டால் இது போன்று திணிப்புக்கள் உலகம் முழுவதும் இருக்கிறது. ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வரும்போதே பெண்களுக்கு வாக்குரிமை வந்து விட்டது. பிரான்சில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகுதான் பெண்களுக்கு வாக்குரிமையே வருகிறது. எங்களுடைய மரபுகளில் மாற்றங்கள் வரவேண்டும் என்பது நல்லதுதான் ஆனால் எங்களிடம் மட்டும்தான் பிற்போக்குத்தனங்கள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பாரிசில் இந்த ஆண்டு பொங்கல் விழா முதன் முறையாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு இருக்கிறது. அந்த விழா ஏற்பாட்டாளர்களில் நீங்களும் ஒருவர் என்ற முறையில் அந்த விழா பற்றிச் சொல்லுங்கள்.

இப்படி ஒரு பொங்கல் விழா செய்ய வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்ட எங்களைப் போன்றவர்களின் நீண்ட நாளைய கனவு. இப்படி ஒரு பொங்கல் விழா செய்ய வேண்டும் என்பதை 1992 ஆம் ஆண்டிலேயே இங்குள்ள இதழ்களில் நான் எழுதியிருக்கிறேன். உண்மையில் இது எங்களின் நீண்ட நாள் கனவு, ஏனென்றால் வெய்யிலில் நிற்கும் போதுதான் நிழலின் அருமை தெரியும். நாங்கள் ஈழத்திலே இருக்கும் போது இது பெரிதாக தெரியவில்லை ஆனால் இங்கு, ஒரு புலம் பெயர்ந்த சமூகத்தில் வாழும் போது, எங்களுக்கு சில கேள்விகள் எழுகின்றன நாங்கள் யார் ? ஒவ்வொரு இனமும் தங்களுக்கு உரிய தேசிய நாள் என்று ஒரு நாளைக் கொண்டாடும்போது நாங்கள் தேசிய நாள் என்று எதைக் கொண்டாடுவது, எங்களின் பண்பாட்டு நாள் எது? மதத்தில் வேறாக இருந்தாலும் தமிழ் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமே அந்தப் பண்பாடு எது? தீபாவளியா நத்தாரா ஹஜ்ஜா எது? அனைத்து மதத்தினரும் ஒன்றாகக் கொண்டாடக் கூடிய விழா எது? அப்படிப் பார்க்கும் போது இந்தப் பொங்கல் மட்டும்தான் வருகிறது. பொங்கல் திருநாள் அடிப்படையிலே உழைப்பைப் பற்றி பேசுது. அடுத்து நன்றி தெரிவிக்கும் விழாவாக இருக்கிறது. அதில் அறிவியலும் இருக்கிறது. சூரிய ஒளி படமால் எந்தப் பயிரும் விளையாது. எனவே அந்த நாளை நாங்கள் ஏன் ஒரு தேசிய நாளாகக் கொண்டாடக் கூடாது!. அது மட்டுமல்ல அது சம்பந்தமாக எங்களுக்கு ஒரு வரலாறும் இருக்கிறது அந்நியர் ஆட்சிக் காலத்தில் பல தமிழர்கள் இந்தியவிலிருந்து இலங்கையிலிருந்து பல நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த வகையில் இந்தியவிலிருந்து மலேசியாவிற்கு கொண்டு செல்லப் பட்ட தமிழர்கள், 1958 ஆம் ஆண்டளவில் இந்தப் பொங்கல் நாளை தங்கள் தேசிய நாளாக அடையாளம் காட்டினார்கள். ஆதற்குப் பின் தமிழ்நாட்டு அரசு அதை ஏற்று பொங்கலை தமிழர் திருநாளாக அறிவித்தது. எனவே இவற்றை எல்லாம் நாங்கள் கருத்தில் கொண்டு இந்த 2007 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை மிகப் பெரிதாக அனைத்து தமிழர்களையும் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் பாண்டிச்சேரித் தமிழர்கள், மொரிசியஸ் தமிழர்கள், ரியூனியன் தமிழர்கள், மார்ரினித் தமிழர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து உலகத் தமிழர்களின் நாளாக நாங்கள் இந்த முறை கொண்டாடினோம். இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக நாங்கள் குழந்தைகளுக்கு அகரம் எழுதுதலைத் தெடங்கினோம். இந்த நாளை ஏடு தொடக்கும் நாளாகவும் இனி வரும் காலங்களில் கொண்டாடப் போகிறோம்.

நல்ல விடயம், இதற்கு முன் ஏடு தொடக்குதல் விஜயதசமி என்ற பெயரில் மதம் சார்ந்து இருந்தது

தமிழனுக்கும் மதத்திற்கும் என்னய்யா சம்பந்தம்? நீங்கள் சைவக் கோயிலில் போய் ஏடு தொடக்கினால் கிறிஸ்தவக் தமிழ்க் குழந்தைகளுக்கும் இஸ்லாமியத் தமிழ்க் குழந்தைகளுக்கு எப்படி வாய்ப்பு ஏற்படும் அந்தக் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கத் தேவையில்லையா? எனவே நாங்கள் இதை ஒரு பொதுப் பண்பாடாக மாற்றினோம் இதைத்தான் நான் மரபை புதுப்பித்தல் என்றேன். அத்துடன் தமிழ்ச் சான்றோர்கள் தொடங்கி வைக்கட்டும் ஏட்டை. சாமியார்களும் குருமார்களும் எங்களுக்கு தேவையில்லை. இதில் கலந்து கொண்டவர்கள் மிக நன்றாக இருந்ததாகச் சொன்னது எங்களுக்கு நல்ல மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இதை இன்னும் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறோம்.

நீங்களும் ஒரு பெரியாரிஸ்ட் அந்த வகையில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் தமிழகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியது போல், நீங்கள் அங்கு இருந்த காலங்களில் கடல் கடந்த ஈழத்தில் எந்த வகையான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன?

நிச்சயமாக ஏற்படுத்தியிருந்தன. ஏன்னுடைய தந்தையார் ஒரு பெரியாரிஸ்ட் அவரிடமிருந்துதான் அந்தக் கருத்துக்களை நான் பெற்றேன். பெரியாரின் தத்துவங்கள் ஒரு இயக்கமாக மாறி அங்கு செயற்படவில்லை ஆனால் தாக்கங்களை நிச்சயமாக ஏற்படுத்தியிருந்தன. பெரியாருடைய சிந்தனைகள் ஈழத்தில் அரசியல் சமூக மாற்றத்திற்கு ஓரளவிற்கு உழைத்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. பெரியார் மானிப்பாய் மகளிர் கல்லுர்ரியில் உரையாற்றியிருக்கிறார் அவருடைய பேச்சைக் கேட்ட ஒரு அம்மா பொட்டு வைக்காமல் பூ வைக்காமல் வாழ்ந்து வந்தது எனக்குத் தெரியும்

Edited by இளங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.