Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காக்கா!

Featured Replies

 

காக்கா!

 

 

 
 
 
பெரியவர் அண்ணாமலையின், 60ம் கல்யாணத்தை, மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர், அவரது குடும்பத்தினர். அதற்கு காரணமில்லாமல் இல்லை.

ஊரின் பெரும்புள்ளி, அண்ணாமலை; அவரது மகள் அமெரிக்காவிலும், மகன் கனடாவிலும் இருந்தனர். பிள்ளைகள் பக்கத்தில் இல்லாதது, உள்ளூர அவருக்கு கவலை தான். ஆனாலும், அதை வெளிக்காட்டி, தன் கம்பீரத்தை குறைத்துக் கொள்ள மாட்டார். ஆனால், அவர் மனைவியோ, மனதில் பட்டதை சொல்லி, 'அந்த நாள்ல, எங்கய்யா, ஆயிரம், ரெண்டாயிரம் ஏக்கர்ன்னு சொத்தை சேர்த்து வச்சாரு... ஆனா, என்னைய படிக்க வைக்கல. அது, என் மனசுக்குள்ள பெரிய கொறையா மண்டிக் கிடந்ததால, புள்ளைங்கள பெரிய படிப்பா படிக்க வச்சேன்; என்ன பிரயோஜனம்...' என, மன வருத்தத்தை சொல்லி, 'முணுக்'கென்று மூக்கை சிந்துவாள். இவர்களுடைய இந்த மன வருத்தத்தை பார்த்து, அவருடைய பங்காளி ராமய்யா, தன் மகன் காளிமுத்துவை கூட்டி வந்து, அவர் முன் நிறுத்தினார்.
காளிமுத்து கொஞ்சம் மந்த சுபாவம்; அதற்காக கெட்டிக்காரத்தனம் இல்லை என்று சொல்லி விட முடியாது. சூது, வாது இல்லாத பிள்ளை!
'என்ன ராமய்யா... உன் புள்ளையோட வந்திருக்க... என்ன விசேஷம்...' வெற்றிலை சீவலை வாயில் குதப்பியபடி அன்பாய் கேட்டார், அண்ணாமலை.
'என்னண்ணே இப்படி கேட்டுடீங்க... ஆறு வத்துனா, மீனு செத்து போகும். குடும்பத்துல மூத்தவுங்க நீங்க மனக் கஷ்டப்படயில, நான் எப்படி சந்தோஷமா இருக்கிறது...' என்றார்.


புரியாமல் பார்த்தார், அண்ணாமலை.
'புள்ளைங்க எல்லாம் வெளிநாடு போயாச்சு... நீங்களும், மதனியும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துட்டு, எம்புட்டு நாளைக்கு கிடப்பீங்க... அதான், இந்தப் பய குடும்பத்தோட இங்க வந்து இருக்கட்டும்...' என்று கூறி, மகனை மனசார ஒப்புவித்து போனார்.
அண்ணாமலைக்கும் அவர் மனைவிக்கும் மனுஷ மக்களின் துணை அவ்வளவு தேவையாக இருந்தது. காளிமுத்துவுக்கு அப்போது தான் கல்யாணமான புதுசு... அவனும், அவன் மனைவி ஒய்யாம்மாளும், அண்ணாமலையின் வீட்டுக்கு குடித்தனம் வந்தபின் தான், மூன்று பிள்ளைகளைப் பெற்று வரப்பும், வயலுமாய் பிணைந்து போயினர்.
அண்ணாமலையின் பிள்ளைகள் இந்த, 12 ஆண்டுகளில், நான்கைந்து முறை வந்து போனதோடு சரி... அதுவும் தாய், தகப்பனை காளிமுத்து குடும்பம் பார்த்துக் கொள்வதால், பெற்றோர் பற்றிய சிந்தனையே அவர்களுக்கு அற்றுப் போனது.
மனசு வெறுத்துப் போன அண்ணாமலை, தன் சொத்துகளைப் பிரிக்கப் போவதாய் பிள்ளைகளுக்கு போனில் தகவல் சொல்ல, எங்கே சொத்துகளை காளிமுத்து என்ற காக்காவிற்கு அப்பா எழுதி வைத்து விடுவாரோ என்று பதறி, அவரது, 60ம் கல்யாணத்தை நடத்துகிற சாக்கில், ஓடிவந்தனர்.
விழாக்கோலம் பூண்டிருந்தது, வீடு. 20 ஆண்டுகளுக்கு பின் அவர் வீட்டில் நடக்கும் நல்ல காரியம் என்பதால், ஊரும், உறவும், உற்றாரும், நண்பர்களும் என்று வீடு, அல்லோகல்லோலப்பட்டது.

 


வந்தவர்கள் அனைவரையும் பார்த்துப் பார்த்து கவனித்தனர், காளிமுத்துவும் ஒய்யாம்மாளும்!
அத்துடன், 'காக்கா... தோப்புல இருந்து தேங்காய் வந்திருக்கு; இறக்கு...'
'காக்கா... உன் பொண்டாட்டி எங்கடா... அம்மாவுக்கு போட்டுக்க நகையெல்லாம் வேணும்; எடுத்து குடுக்கச் சொல்லு...'
'காக்கா... எப்படா ஐயாவுக்கு மாத்திரை தரணும்...' என்று ஒவ்வொன்றுக்கும் காளிமுத்துவையும், அவன் பொண்டாட்டியும் கேட்டு செய்ய வேண்டி இருக்கவே, அது, அண்ணாமலையின் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை. தங்களுக்கான அங்கீகாரம் தொலைந்தது போல் எண்ணினர்.
அதற்கேற்றாற் போல், அண்ணாமலையின் மகன் வழி பேத்தி ரியா, ''ஏன் மம்மி, எனக்கென்னவோ இந்த காக்கா, நம்ம தாத்தாவையும், பாட்டியையும் கைக்குள்ள போட்டு, சொத்தை எல்லாம் கொண்டு போகப் பாக்குதுன்னு தோணுது,'' என்றாள்.
''அதெப்படி நடக்கும்... நம்ப சொத்து மதிப்பு, எத்தனை கோடி தேறும்ன்னு எங்கப்பாவுக்கே தெரியாது. அதை அவ்வளவு சீக்கிரமா கை நழுவ விட்டுட முடியுமா?'' என்றாள் அண்ணாமலையின் மகள்.
எல்லாரும் சொத்துக்காகத் தான் வந்திருக்கின்றனர் என்பது பெரியவருக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும், அவரது பிள்ளைகள் ஆச்சே... எப்படி குறை சொல்ல முடியும்... இதில், மகன் வயிற்று பேத்தி ரியா மீது, மகள் வயிற்று பேரனுக்கு காதல். அத்தனை சொத்துகளும் தன்னிடமே வந்து சேர்ந்து விடும் என்பதில், அண்ணாமலையின் மகளுக்கு ரொம்ப சந்தோஷம்.
மாலையில், எல்லாரும் ஹாலில் அமர்ந்திருந்த போது,''அம்மா... எதுக்கு தாத்தா - பாட்டிக்கு, 60 வயசுல கல்யாணம்...'' என்று கேட்டு சிரித்த ரியாவை, அன்பாக பார்த்த ஒய்யாம்மாள், ''அப்படி இல்லடி தங்கம்... அறுபதாம் கல்யாணம் பண்ண, ஒரு ஐதீகம் இருக்கு... கல்யாணம் பண்ற தம்பதியோட புள்ளைங்க, கல்யாண வயசுல இருக்கிற புள்ளைங்களுக்கு, தாய், தகப்பனா இருப்பாங்க... தங்களுடைய தாய், தகப்பனுக்கு கல்யாண ஏற்பாடு செய்றது மூலமா, தன் புள்ளைங்களுக்கு எப்படி கல்யாணம் செய்யணும்ங்கிறத கத்துக்க இதுவொரு ஒத்திகை,'' என்றாள்.

 


படிக்காத ஒருத்தி, படித்தவர்களுக்கு விளக்கம் சொன்னது அண்ணாமலையின் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை. அதனால், 'உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கு மிசஸ் காக்கா...' என்று சொல்லி, உரக்க சிரித்தனர்.
காக்காவையும், அவன் பொண்டாட்டியையும் நக்கல் பேசி சிரிப்பது தான், அவர்களுக்கு அங்கிருந்த ஒரே பொழுதுபோக்கு!
காளிமுத்து அட்டை கரி நிறம் என்பதால், அவனை காக்கா என்றனர்.
வெளிநாட்டில் போய் இரவல் நிறம் வாங்கி வந்திருந்த அவர்களுக்கு, இந்த பெயர் சொல்லி அழைப்பதில் ஒரு உற்சாகம்!
அத்துடன், காளிமுத்து தங்களுடைய அப்பாவை காக்கா பிடித்து, சொத்துகளை கொண்டு போகப் பார்க்கிறான் என்ற பொருளை அவனுக்கு உணர்த்தவும், அவனை, காக்கா என்று கூப்பிட்டனர்.
'இதப் பாருக்கா... இன்னும் ஒரு வாரம் நமக்கு டயம் இருக்கு; உங்க அப்பாகிட்ட சொத்துகளை பத்தி பேசி முடிவு எடுங்க...' என்று அடிக்கடி, அண்ணாமலையின் மகளிடம் உசுப்பிக் கொண்டே இருந்தாள், அண்ணாமலையின் மருமகள்.
இது, அண்ணாமலைக்கு தெரியாமல் இல்லை. சொத்துகளைப் பிரிக்கும் முன், தம்பி மகனை அழைத்து, 'உனக்கு என்ன வேணுமோ கேளு; உனக்கு தந்தது போகத் தான், இவங்களுக்கு...' என்று அவர் சொல்ல, நெகிழ்ந்து போனான், காளிமுத்து.
'கடைசி மட்டும் உங்ககூட இருக்கணும் பெரியப்பா... உங்க ரெண்டு பேர் காலத்துக்குப் பின் உழவு மாடு, தொழுவத்து பசு எல்லாத்தையும் எனக்கு தந்தாப் போதும்...' என்றான்.

 


'எதுக்கு அதை கேட்கிறான்...' என்று, எல்லாரும் புரியாமல் பார்த்தனர்.
'ஏண்டாப்பா... போயும் போயும் மாடுகள கேட்கிறே...' என்றாள், அண்ணாமலையின் மனைவி.
'அதுகளும் எனக்கு புள்ளைங்க தான்... அதுகள விட்டுட்டு போக முடியாது. சொத்து சுகமில்லாம எங்கப்பா, என்னை இங்க வந்து விட்டுட்டு போகல... அது, எல்லாத்தையும் தாண்டியது அவருடைய பாசம்...' என்றான்.
இந்த காலத்துல காசு பணத்திற்கு ஆசைப்படாத அவனுடைய மனசைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்பட்டாலும், 'நான் நம்பல... அவன், முடிஞ்சளவு நடிச்சு, காசு தேத்தி இருப்பான்...' என்றாள், மருமகள்.
பெரியவருக்கு பெருமையாய் இருந்தது. 'இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்...' என்று தனக்குள் பாடிக் கொண்டார். ஆனாலும், தன் பிள்ளைகள் சுயநலமாய் மாறிப் போனதை விட, அவர்களின் கலாசாரத்தை நினைத்து மிகவும் வேதனைப்பட்டார்.
ஊரில் கவுரவமான குடும்பமா கருதப்படும் அவர் வீட்டுப் பெண்கள், நாகரிகம் என்ற பெயரில் உடலை எடுப்பாக காட்டும் இறுக்கமான உடையணிந்து சுற்ற, ஆண்களோ, டவுசரை போட்டு தொடை தெரிய சுற்றினர்.
இதை விடக் கொடுமை, சிறுசுகள் ரெண்டும் திருமணம் பேசிய கையோடு, பெரியவர், சிறியவர் வித்தியாசமின்றி, எல்லாரும் முன், இங்கீதம் இல்லாமல் கட்டிக் கொள்வதும், முத்தம் தருவதையும் கண்டு அதிர்ந்து போனார், அண்ணாமலை. புத்தி சொன்னால், கேட்கும் ரகமுமில்லை.
தன் மனத்துயரை தன் மனைவியிடம் சொல்ல, அவள் வழியாக ஒய்யாம்மாளுக்கு பயணப்பட்டு, காக்காவிடம் வந்து சேர்ந்தது.
பெரியப்பாவின் துயரம் அவனையும் பிடித்து ஆட்டியது.

 


அன்று வெள்ளிக்கிழமை -
அண்ணாமலையின் வீட்டை ஒட்டி இருந்த அம்மன் கோவிலில் தீர்த்தவாரி... ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர் என்று ஜனங்கள் பெரியவர் வீட்டை கடந்து போய் கொண்டு இருக்க, சிறுசுகள் ரெண்டும் அரை குறை ஆடையுடன் அமர்ந்து, வேடிக்கை பார்த்தவாறு, சில்மிஷம் செய்தபடி இருந்தனர்.
அதுகளை கண்டிக்க வேண்டிய தாய், தகப்பனோ, அதைவிட பண்பாடற்ற உடை உடுத்தி, உச்சந்தலையில் கண்ணாடியை மாட்டி, கோவிலுக்கு செல்வோரை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.
பெரியவருக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அவர் ஒரு வார்த்தை சொல்லப் போனால், வீடே அல்லோகல்லோலப்படும்... தெரியாமலா சொன்னார்கள்... 'அம்பலத்தார் சொல்லுக்கு ஆனையே கட்டுப்படும்; ஆனா, அடுக்களையில் இருக்கிற பூனை மட்டும் ஒத்துக்காது'ன்னு!
சோளத்தட்டையோடு வீட்டிற்கு வந்த காக்கா, பெரியவரை பார்த்தான்; அவரின் முக வாட்டத்திற்கு காரணம் புரிந்தது.
''காக்கா, இதை எதுக்கு கொண்டு வந்திருக்கீங்க... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடவா?'' என்று கேட்டு, சோளத்தட்டையை இழுத்து கேலி செய்தாள், ரியா.
''ஏய் ரியா அவர் காக்கா... மாடு இல்ல; இதை சாப்பிட...'' அவளின் அத்தை மகன் சொல்ல, எல்லாரும் சிரித்தனர்.

 


''ஏன் காக்கா... உங்கள காக்கான்னு கூப்பிடறதுல உங்களுக்கு வருத்தம் இல்லயா?'' என்று கேட்டாள் ரியா.
''அட, எனக்கென்ன ரியா கண்ணு கோபம்... நான் காக்காவா இருக்கத் தான் பிரியப்படறேன்; ஏன் தெரியுமா... பறவைகளிலேயே காக்காவோட ஒற்றுமைய பத்தி மட்டும் தான் பேசுறாக. ஆனா, அதுககிட்ட அதை விட உயர்வான ஒரு குணம் இருக்கு; அது என்ன தெரியுமா... நீங்க எங்க போய் தேடினாலும், ரெண்டு காக்கா காதலிக்கிறத பாக்க முடியாது; அவ்வளவு கண்ணியமா தன் இனத்தை பெருக்கும்.
''எங்க தாத்தா சொல்வாரு... 'ஆம்பளைக்கு, பொம்பளையும், பொம்பளைக்கு, ஆம்பளையும் ஆண்டவன் படைச்சது தான்... அதுக்காக, அந்த அதிகாரம் ஏதோ நமக்கு மட்டும் தான் கிடைச்ச மாதிரி திரியக்கூடாது. கறி திங்கற மனுஷன், கழுத்துல எலும்பு மாலை போட்டுட்டு திரிஞ்சா நல்லாவா இருக்கும்'ப்பாரு... இது, அந்த ஜீவனுக்கு தெரிஞ்சிருக்குன்னா அது உசத்தியான பறவை தானே... என்னை நீங்க காக்கான்னு கூப்பிடறப்பத்தான் உண்மையாவே சந்தோஷமா இருக்கு,'' என்று சோளத் தட்டையால், 'சுறுக்'கென்று விளாசியது போல், பேசிவிட்டு போய் விட்டான்.


பெரியவருக்கு கண்ணில் நீர் ததும்பியது; தன்னை மட்டுமில்ல, தன் கருத்தையும் அவன் காப்பாற்றிய சந்தோஷம்!
அவன் எடுத்தெறிஞ்சு பேசியது வலித்தாலும், அதில் அவர்கள் எடுத்துக் கொள்ள விஷயமிருப்பதை உணர்ந்து, அமைதியாக இருந்தனர்.
அவர்கள் இறைக்கும் சோற்றுப் பருக்கைக்காக, திண்ணையில் நின்று கரைந்தபடி இருந்தது, காக்கா ஒன்று!

http://www.dinamalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.