Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த முதல்வரும் விக்னேஸ்வரன்தானா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முதல்வரும் விக்னேஸ்வரன்தானா?

யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜனின் பிரியாவிடை விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது. இதில் வழமைபோல் அரசியல் தலைவர்களும் ஏனைய பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர். இதன்போது நடராஜன் தெரிவித்திருந்த ஒரு அபிப்பிராயம் அங்கிருந்த கூட்டமைப்பின் தலைவர்கள் உட்பட ஏனையவர்கள் மத்தியிலும் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபம் அடுத்த ஆண்டு நிறைவடையும், அதன் திறப்பு விழாவின் போது பார்வையாளர் வரிசையில் நானும் இருப்பேன். அப்போதும் வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்களே அதனை திறந்து வைப்பார் என்று நடராஜன் கூறிய விடயம்தான் மேற்படி முணுமுணுப்பிற்கு காரணம்.

பொதுவாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கூறும் ஒவ்வொரு விடயமும் அரசியல் கண்கொண்டே பார்க்கப்படுவதுண்டு. இது தனது பதவிக் காலம் முடிவடைந்து செல்லும் ஒரு துணைத் தூதுவரின் தனிப்பட்ட அபிப்பிராயமா அல்லது ஏதேனும் உள்நோக்கம் கொண்ட கூற்றா? நடராஜனின் அபிப்பிராயம் தொடர்பில் முணுமுணுத்துக் கொண்டவர்கள் மத்தியில் இருந்த கேள்வி இதுதான். அரசியலில் எதுவும் நடக்கலாம். அந்த வகையில் நடராஜனின் கூற்றும் உண்மையாகலாம். ஆனால் அதனை ஏன் நடராஜன் கூறுகின்றார் என்பதுதான் விடயம். இன்றைய நிலையில் விக்னேஸ்வரனை தவிர்த்து கூட்டமைப்பால் வேறு ஒருவரை முதல்வராக முன்நிறுத்த முடியாது என்னும் கணிப்பில் அதனை கூறியிருக்கலாம் அல்லது விக்னேஸ்வரன் தனித்து நின்றாலும் அவர்தான் முதல்வர் என்னும் கண்ணோட்டத்திலும் அதனை தெரிவித்திருக்கலாம். இதன் ஊடாக சம்பந்தன் தரப்பினருக்கு ஒரு செய்தியும் இருக்கலாம். 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் வடக்கு மாகாண சபை கலைகிறது. இந்த நிலையில் தொடர்ந்தும் விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கு முதலமைச்சராக இருக்க விரும்பினால் அவர் தொடர்ந்தும் முதலமைச்சராக இருப்பதில் எந்தவொரு சிக்கலும் இருக்கப் போவதில்லை. ஆனால் அவர் தொடர்ந்தும் கூட்டமைப்பின் முதலமைச்சராக இருப்பாரா அல்லது அவரிடம் வேறு ஏதேனும் தெரிவு இருக்குமா என்பதுதான் இங்குள்ள கேள்வி. முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தலைமையினது அரசியல் முடிவுகள் தொடர்பில் முக்கியமாக சம்பந்தன்-சுமந்திரன் தரப்பின் அரசியல் அணுகுமுறைகள் தொடர்பில் முரண்பாடுடையவராகவே இருந்து வருகிறார். ஒரு உபாயமற்று அரசாங்க நிகழ்ச்சிநிரலுடன் ஒத்துப்போகும் கூட்டமைப்பின் அணுகுமுறை பாதகமான விளைவுகளேயே தரும் என்பதை அவர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கிறார். கூட்டமைப்பின் தலைமையின் முடிவுகளுக்கு மாறாகவே இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். சம்பந்தன்- சுமந்திரனது முடிவுகளுக்கு மறாகவே வடக்கு மாகாண சபையின் ஊழல் விவகாரத்தை கையாண்டிருந்தார்.

கூட்டமைப்பின் தலைமையோ விக்னேஸ்வரனது ஆலோசனைகளை சாதகமாக பரிசீலிப்பதற்கு மாறாக அவரை ஒரு எதிரி போல் நடத்த முற்பட்டது. அவரை இரவோடு இரவாக பதவியிலிருந்து அகற்ற முற்பட்டது. உண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்கு வங்கி கணிசமாக வீழ்சியடைந்ததற்கு மேற்படி விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழரசு கட்சியின் நடவடிக்கைகளும் ஒரு முக்கிய காரணம். விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அணுகுமுறைகள் தொடர்பில் முன்வைத்து வந்த விமர்சனங்களின் நியாயத்தை ஏற்றுக் கொண்டமையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் குறிப்பிடத்தகு வெற்றியின் காரணம்.

விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் வெளிப்படுத்தி வரும் உறுதியான நிலைப்பாடுகள் அவரை ஒரு ஜனவசியம் மிக்க தலைவராக மாற்றியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அவர் பங்குபற்கும் நிகழ்வுகளில் அவர் பேசிய பின்னர் மக்கள் எழுந்து சென்று விடுகின்றனர். தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வுகளுக்கு வரும் மக்கள் கூட்டம் என்பது உண்மையில் விக்னேஸ்வரனுக்காக வரும் சனக் கூட்டம்தான். இவ்வாறானதொரு பின்புலத்தில் அவர் தொடர்ந்தும் முதல்வராக இருக்க விரும்புவாராயின் அதனை கூட்டமைப்பின் தலைமையால் நிராகரிக்க முடியாது. ஒருவேளை அவரை கூட்டமைப்பு உதறித் தள்ளினாலும் கூட அவரால் தனித்து நிற்க முடியும். ஒருவேளை விக்னேஸ்வரன் தனித்து நிற்க முடிவெடுத்தால் அதனை சம்பந்தன் தரப்பினால் எதிர்கொள்ளவும் முடியாது. தமிழரசு கட்சியின் ஒரு பகுதி உயர்மட்டத்தினர் வடக்கின் அடுத்த முதல்வராக மாவை சேனாதிராஜாவை கொண்டு வரவேண்டுமென்று வாதிட்டு வருகின்றனர். அவ்வாறானவர்கள் ஏற்கனவே அதனை பகிரங்க தளங்களிலும் பேசியுமிருக்கின்றனர். அவர்களின் நோக்கம் வேறு. மாவையை வடக்கு மாகாண சபைக்குள் முடக்கிவிட்டால் தாங்கள் கட்சியின் தலைமையை கைப்பற்றலாம் என்று அவர்கள் கணக்குப் போடுகின்றனர். ஒரு புறம் விக்னேஸ்வரனும் மறுபுறம் மாவை சேனாதியும் நிற்பார்களானால் அது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமாக அமையும். இவ்வாறானதொரு நிலைமையை சம்பந்தன் விரும்புவாரா?

கூட்டமைப்பின், முக்கியமாக தமிழரசு கட்சியின் செல்வாக்கு சரிந்து செல்கின்ற சூழலில், விக்னேஸ்வரனை வெளியில் விடுவதால் ஏற்படப் போகும் சாதக பாதங்களை சம்பந்தன் கணக்குப் போடுவரானால், விக்னேஸ்வரனை தொடர்ந்தும் உள்ளுக்குள் வைத்துக் கொள்ளும் வழிவகைகள் தொடர்பில் அவர் ஆராயக் கூடும். ஆனால் கூட்டமைப்பின் நிழல் தலைவரான சுமந்திரன் அதனை விரும்பப் போவதில்லை. இதுவரை விக்னேஸ்வரன் தொடர்பான விடயங்களில் சுமந்திரனின் தீர்மானங்களே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இனியும் அது தொடருமாயின் விக்னேஸ்வரனை வெளியில் போடுவது தொடர்பிலேயே தமிழரசு கட்சியினர் உறுதியாக இருப்பர்.

தற்போதைய நிலையில் விக்னேஸ்வரனுக்கென்று எந்தவொரு கட்சியும் இல்லை. அவர் இணையக் கூடிய கட்சி என்றும் எதனையும் கூறவும் முடியாது. இந்த நிலையில் அவருக்கென்று இருக்கும் ஒரேயொரு அமைப்பு தமிழ் மக்கள் பேரவை மட்டும்தான். அவர் எனக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றின் போதும், பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக வளர்த்தெடுப்பது பற்றியே பேசியிருந்தார். பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் விக்னேஸ்வரன் ஒரு வலுவான குரலாக தொடர வேண்டுமாயின் அதற்கு அரசியல் அதிகாரம் தேவை.

இதுவரை நீதியரசர் விக்னேஸ்வரனின் முகத்தை அவர் வகித்து வரும் வடக்கு முதலமைச்சர் என்னும் பதவியிலிருந்து பிரித்து நோக்க முடியாது. மாகாண சபைக்கு எந்தளவு அதிகாரம் இருக்கின்றது என்பதற்கு அப்பால் வடக்கு முதலமைச்சர் என்னும் பதவி நிலை, சில சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் தலைமையை மேவியும் இயங்கும் ஆற்றல் கொண்டது. எனவே அவ்வாறானதொரு பதவி நிலையில் விக்னேஸ்வரன் இருப்பது அவசியம் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. தற்போதைய நிலையில் அவருக்கு நிகராக ஒருவரை அந்த கதிரையில் சிந்திக்கவும் முடியாத நிலையும் காணப்படுகிறது.

 

ஆட்சிமாற்றம் இலங்கையின் அரசியலை அதிகமும் பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளின் காய் நகர்த்தல்களின் தொட்டிலாக மாற்றியிருக்கிறது. அந்தத் தொட்டிலின் சுகமான அசைவில் இயங்க விரும்புவர்களையே அந்த சக்திகள் விரும்பும். அதற்கு மாறாக இயங்க முற்படுவர்கள் அவ்வாறான சக்திகளின் பகையினை சம்பாதித்துக் கொள்ள நேரிடும். பலம்பொருந்திய சக்திகளிடம் பொதுவாக இரண்டு தெரிவுகளே உண்டு. ஒன்றில் தங்களின் நலனுக்காக ஒரு அமைப்பை போசித்து வளர்ப்பது அல்லது இருப்பவற்றை சிதைத்து தங்களுக்குத் தேவையான ஒன்றை ஆக்குவது. இந்த நிலைமைகளை சரியாக புரிந்து கொண்டு செயற்படாது விட்டால் எந்தவொரு அமைப்பும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப சீவிப்பது கடினமான ஒன்று – உண்மையில் முடியாத ஒன்று. தமிழ் அரசியல் சக்திகள் இந்த நிலைமைகளை துல்லியமாக கணித்து செயற்படாது விட்டால், இந்த நிலைமைகளால் தமிழ் கட்சிகளும் பாதிப்படைய நேரிடும்.  

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=e09e604f-ecd7-4e53-a11b-091b0bd6c3de

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.