Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்' என்ற இயக்கத்தை அறிவித்தார் தினகரன்!

Featured Replies

'அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்' என்ற இயக்கத்தை அறிவித்தார் தினகரன்!

#TTVDinakaran #LiveUpdates

*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இனி எந்த தேர்தல் வந்தாலும் இந்த பெயருடனும், இந்த கொடியுடனும் மட்டுமே செயல்படும். இந்த இயக்கம் தமிழக மக்கள் விரும்பாத எந்த திட்டதையும் தமிழகத்தில்  செயக்படுத்த அனுமதிக்காது

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்

 

* தனது இயக்கத்தின் பெயரை அறிவித்தார் தினகரன்.  “அம்மா மக்கள் முனேற்ற கழகம்” என்ற பெயரையும் கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியில் ஜெயலலிதா உருவம் பதித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

* பேசத்துவங்கினார் தினகரன். துரோகிகள் அளித்த மனுவால் நமது வெற்றி சின்னமான அதிமுக சின்னத்தையும், கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. அதன் பிறகு ஆர்.கே நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு உங்கள் வீட்டுப்பிள்ளையான நான் திமுகவின் டெபாசீட்டை இழக்க செய்தேன் என கூறினார்.

* தற்போது மேடையில் பேச உள்ளார் டிடிவி தினகரன்.  அவருக்கு வீர வேலை வழங்கினார் வெற்றிவேல். இது தமிழகத்தின் நலன் காக்க வழங்கபடுவதாக கூறினார்.

* நான் யார் தலையில் கைவைக்கிரேனோ அவர் மடிய வேண்டும் என சிவனிடம் வரம் பெற்ற அரகன், இறுதியில் சிவன் தலையிலேயே கைவைத்தது போல் உள்ளது ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-ன் செயல். தினகரன் இல்லையென்றால் இப்போது அந்த இருவரும் இல்லை  எனக்கூறி  தங்க தமிழ்செல்வன் தனது உரையை முடித்தார்.

* தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் மேடையில் பேசி வருகிறார். அதிமுக-வை வழிநடத்தக்கூடிய தகுதி தினகரனுக்கு மட்டுமே உள்ளது. உள்ளாட்சி தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ வந்தால் தினகரன் மட்டுமே வெற்றி பெறுவார். டெல்லி உயட்நீதிமன்றம் கூறி தான் இந்த இயக்கம் துவங்கபடுகிறது.

* 'வாங்கய்யா வாத்தியாரய்யா' பாடல், பின்னணியில் ஒலிக்க மேடைக்கு வந்தார் தினகரன்.

மதுரை அருகே உள்ள மேலூரில், இன்று டி.டி.வி. தினகரன் தொடங்க உள்ள புதிய அமைப்பின் தொடக்க நிகழ்ச்சி, சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.

தினகரன்

பட்ஜெட் வாசிக்கும் முன், புதிய இயக்கத்தைத் தொடங்குவதுபோல நிகழ்ச்சி நிரலைத் தயார்செய்துள்ளார்கள். நேற்று மாலை முதல் மேலூர் அழகர் கோயில் சாலையிலுள்ள விழா பந்தலில் தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். இரவு முழுவதும் அந்த வட்டாரமே 'ஜேஜே' என்றிருந்தது.

மதுரை டு மேலூர் நான்கு வழிச்சாலையின் இரு பக்கமும், கொட்டாம்பட்டியிலிருந்து, திருப்பத்தூர், சிவகங்கையிலிருந்து மேலூர் வருகிற அனைத்து சாலைகளின் இருபுறமும் டி.டி.வி-யை வரவேற்று பேனர்கள் வைத்திருக்கிறார்கள்.  இடைவெளி இல்லாமல் தென்னை ஓலைத் தோரணங்கள், கட்சிக் கொடிகள் கட்டியுள்ளனர். வெளிமாவட்ட ஆதரவாளர்கள்,  ஏரியாவிலுள்ள அனைத்து தங்கும் விடுதியிலும், திருமண மண்டபங்களிலும் தங்கியுள்ளனர். விடுதிகள் கிடைக்காததால், பலர் விழா பந்தலிலும், வாகனங்களிலும் தங்கினார்கள்.

தினகரன்
 

தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பலாஜி உட்பட அனைத்து நிர்வாகிகளும் மேடைக்கு வந்துவிட்டார்கள். தங்க தமிழ்செல்வன் மேடைக்கு வந்ததும் விசில் சத்தமும் கை தட்டலும் பறந்தது. திருவிழாவுக்கு வருவதுபோல ஆதரவாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில், டி.டி.வி. தினகரன் மேடைக்கு வந்ததும் கட்சிப் பெயர் அறிவிக்கப்படும்.

https://www.vikatan.com/news/tamilnadu/119223-ttv-dinakaran-to-launch-his-political-party-today.html

  • தொடங்கியவர்

தினகரன் தனிக்கட்சி ஏன்... எதற்கு... எப்படி?

 

டி.டி.வி. தினகரன்

“ ‘தனக்கென ஒரு தனிக்கட்சி’ என்பது காலத்தின் கட்டாயம் மட்டும் அல்ல; அரசியல் எதிரிகளை எதிர்க்கவும், அ.தி.மு.க-வில் உள்ளவர்களை மடக்கவும், தங்களை வெளியேற்றிய அ.தி.மு.க-வை முழுமையாக வளைக்கவும், மன்னார்குடி குடும்பத்துக்குள், தனக்கெதிராக நடக்கும் உள்ளடி வேலைகளை முறிக்கவும் தனிகட்சி அவசியம்!” என்ற கணக்கில் இருந்தார் தினகரன். அந்தக் கணக்கின் தீர்வுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்!

 

சட்டங்கள் மட்டும் காரணம் அல்ல! 

தமிழகம் எந்த நேரத்தில் எந்தத் தேர்தலைச் சந்திக்கும் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருமா... அல்லது சட்டமன்றத் தேர்தல் முதலில் வருமா? என்பதில் எந்தத் தெளிவும் யாருக்கும் இல்லை. ஆனால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் வரும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதனால், எந்தத் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க ஒரு கட்சி வேண்டும் தினகரனுக்கு. அதனால், அதை ஆரம்பித்தே தீரவேண்டிய கட்டயாத்தில் இருக்கிறார் அவர். அதோடு, இவற்றை எல்லாம் தாண்டிய சில காரணங்களும், தினகரனின் தனிக்கட்சிக்கு இருக்கின்றன.  

தாக்குப் பிடிக்க தனிக்கட்சி அவசியம்! 

டி.டி.வி. தினகரன்

எடப்பாடி, ஓ.பி.எஸ் அணிகளுக்குள் உள்ளுக்குள் வெட்டுக்குத்து நடப்பதைப்போல் ஒரு தோற்றம் தெரிகிறது. ஆனால், அவர்கள் இணைந்து நடத்தும் ஆட்சி சலனமில்லாமல் நடக்கிறது. இந்த ஆட்சிக்கு டெல்லியின் ஆதரவும், நீதிமன்றங்களில் வசமாகச் சிக்கிக் கொண்ட வழக்குகளும் சாதகம் செய்கின்றன. ‘ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என தி.மு.க தொடர்ந்த வழக்கு, ‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது’ என்று தொடரப்பட்ட வழக்கு, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னால்தான், ஆட்சி கலையுமா... தொடருமா... என்பதில்  உத்தேசமாகக்கூட ஒரு முடிவுக்கு வரமுடியும்! இந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அந்தப் பரீட்சையில் வெற்றிகரமாக தப்பிப் பிழைக்கவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாய்ப்பும் இருக்கிறது. அது அரிதிலும் அரிதான நிகழ்வு என்றாலும், அவர் அதிகாரத்தில் இருப்பதால், அதைச் சாதிக்கவும் முடியும். அப்படி நடந்துவிட்டால், அது தினகரனுக்கு மிகப்பெரிய பின்னடைவாக போய்விடும். அதன்பிறகும் கட்சியும் இல்லாமல், சின்னமும் இல்லாமல் தினகரன் காலம் தள்ள முடியாது. எனவே, தேர்தலைச் சந்திப்பதற்கு மட்டும் அல்ல... நடப்பு அரசியல் சாத்திய அசாத்தியங்களை எதிர்கொள்வதற்காகவே அவருக்கு தனிக்கட்சி அவசியம். 

குழுவின் தலைவனா... கட்சியின் தலைவரா? 

நீதிமன்றத்தின் தீர்ப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு என எல்லாம் தினகரனுக்குச் சாதகமாக நிகழ்ந்து, ஆட்சி கலைந்தால், அ.தி.மு.க கலகலத்துவிடும் என்பது நிதர்சனம். அடுத்தநொடியே,  இன்றைய  அ.தி.மு.க-வில் எடப்பாடிக்கு விசுவாசமாக இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் கொத்துக்கொத்தாக தினகரன் பக்கம் வந்துவிடுவார்கள்; அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் தினகரன் பக்கம் அதிகமாக வந்துசேர்வதால் மட்டுமே, அ.தி.மு.க-வும் இரட்டை இலையும் தினகரன் வசமாகிவிடாது! 

முறையாக அ.தி.மு.க-வில் பொதுக்குழு கூட வேண்டும்; அதில் பெரும்பான்மையாக தினகரனுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற வேண்டும் என ஏகப்பட்ட சிக்கல்கள் அதில் இருக்கின்றன. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம், இப்போதும் மதுசூதனனிடம்தான் இருக்கிறது; அவர் தினகரனுக்கு ஆதரவாக, பொதுக்குழுவை கூட்டுவாரா? அப்படிக் கூட்டினாலும், தினகரனிடம் கட்சியை ஒப்படைக்க ஏகமனதாக அங்கு தீர்மானம் நிறைவேறிவிடுமா? அதற்கு இமாலயத் தடைகளை ஏற்படுத்த, அந்தக் கட்சியில் இன்னும் நிறையப்பேர் இருக்கின்றனர். இந்தத் தடைகள் அனைத்தையும் உடைத்து, அ.தி.மு.க-வில் தினகரன் மீண்டும் அதிகாரத்துக்கு வருவது, இப்போதைக்கு நடக்கக்கூடிய காரியம் அல்ல; அதற்கான வேலைகளை பொறுமையாகச் செய்வதற்கு தனக்கு பலமான பிடிமானம் வேண்டும். ‘தினகரன் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார் என்றோ.., இணைத்துக் கொள்ளப்பட்டார் என்றோ...’ இருப்பதைவிட, தினகரன் கட்சி- அ.தி.மு.க இணைப்பு என்று இருக்க வேண்டும் எனக் கணக்குப்போடுகிறார் தினகரன். எடப்பாடியின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, அ.தி.மு.க-வில் அதுபோன்ற கோரிக்கையை வலுவாக எழுப்ப ‘ஸ்லீப்பர் செல்கள்’ தயாராக உள்ளனர்; ஆட்சி கவிழ்ந்தால் அந்தக் கோரிக்கை தானாக எழுந்துவிடும் என்றும் தினகரன் எதிர்பார்க்கிறார். அதுபோல, ஆட்சி கவிழ்ந்ததும், அ.தி.மு.க-வில் இருந்து தன்னிடம் வர நினைப்பவர்கள்கூட, ‘நாம் தனியாளாக இருந்தால் யோசிப்பார்கள்’. ஆனால், கட்சியாக இருந்தால், தைரியமாக முன்வருவார்கள் என்றும் கணக்குப்போட்டு வைத்துள்ளார். மேலும், கட்சி என ஒன்று உருவாக்கி பலப்படுத்தி வைத்திருந்தால், தன் கட்சியோடு அ.தி.மு.க-வை இணைப்பதற்கு நிபந்தனைகளை கறாராக விதிக்க முடியும். தனியாளாக இருந்தால்,  நிபந்தனைகளை கறாராக விதிக்க முடியாது. தன்னை நம்பி தற்போது இருப்பவர்களுக்கும் ஒன்றும் பெரிதாகச் செய்ய முடியாது. அதுபோல, இரண்டு கட்சிகளின் இணைப்பு பற்றிப் பேச்சுவார்த்தை உருவாகும் சமயத்தில், தினகரனின் நிபந்தனைகள் படி, அதைச் சாத்தியப்படுத்தலாம். குழுவின் தலைவன் தினகரன் என்பதைவிட, கட்சியின் தலைவனாக இருந்து, அ.தி.மு.க-வை வளைப்பதே சரியான வேலை என நினைக்கிறார் தினகரன். அப்படி நடந்தால் மட்டுமே, அங்கு தினகரனுக்கு பிரச்னை இல்லாமல் எதிர்காலம் இருக்கும். ஒருவேளை குழுவின் தலைவனாக மட்டும் இருந்துவிட்டு, தனியாகப்போய் அ.தி.மு.க-வில் இணைந்தால், அங்கே அவருக்கு குடைச்சல் கொடுக்க ஆளாளுக்கு அதிகாரம் வைத்துள்ளனர்கள். மதுசூதனன் திடீரென முரண்டு பிடிக்கலாம்; எடப்பாடி மீண்டும் தண்ணி கட்டலாம்; ஓ.பி.எஸ் மீண்டும் வேதாளமாக மாறலாம்; இப்படி ஆயிரம் பிரச்னைகள். 

மன்னார்குடி குடும்பத்தில் இருந்து விடுதலை! 

டி.டி.வி. தினகரன்

தனியாளாகப் போராடிக் கொண்டிருக்கும் தினகரனுக்கு, டெல்லி பி.ஜே.பி, இ.பி.எஸ்-ஓ.பி.எஸ், தங்கமணி-வேலுமணி டீம் கொடுக்கும் தொந்தரவுகளுக்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல மன்னார்குடி குடும்பம் கொடுக்கும் குடைச்சல். 

திவாகரன் இப்போதும் தனி ஆவர்த்தனம் செய்கிறார். அவர், எடப்பாடியோடு நல்ல தொடர்பில் இருக்கிறார். அதைப்பயன்படுத்தி அவ்வப்போது, தினகரனுக்கு செக் வைத்துக கொண்டிருக்கிறார். இதை இல்லை என்று திவாகரன் மறுக்க முடியாது; தினகரன் ஒதுக்க முடியாது. இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் திஹார் சிறைக்குப் போனதும், அடுத்த மாநிலச் செயலாளர் டாக்டர் வெங்கடேஷ்தான் என்று அவருடைய மாமனார் பாஸ்கர் கோமளவிலாஸ் கல்யாண மஹாலில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துவிட்டார்; பிறகு அது நடக்கவில்லை என்பது வேறுவிஷயம்! இளவரசியின் வாரிசுகளில் கிருஷ்ணப்பிரியாவின் தினகரன் எதிர்ப்பு என்பது வெளிப்படையானது. அதில் மறைக்க ஒன்றும் இல்லை. விவேக்கின் உள்ளடி வேலைகளையும் தினகரன் உணராமல் இல்லை. இந்தத் தொல்லைகளில் இருந்து முற்றிலும் விடுபடவும், இந்தத் தொல்லைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டவும் தனிக்கட்சி மட்டும்தான் ஒரே தீர்வு என்று நினைக்கிறார் தினகரன்.  ஆட்சி கவிழ்ந்த பிறகு கலகலத்துப் போகப்போகிற அ.தி.மு.க-வில் மீண்டும் மன்னார்குடி குடும்பம் ஆதிக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அந்தச் சூழலில், தினகரன் தனியாளாக உள்ளே போனால், அந்தக் குடும்பத்தின் குத்தல்களும், குடைச்சல்களும் தொடரத்தான் செய்யும். அவர்களை பாம்பென்று அடிக்கவும் முடியாது! பழுதென்று ஒதுக்கவும் முடியாது! ஆனால், தனிக்கட்சி ஒன்றைத் தினகரன் தொடங்கிவிட்டால், அதில் சசிகலா உள்பட மன்னார்குடி குடும்பத்துக்கு எந்தப் பாத்தியதையும் இருக்க முடியாது. அதற்கு தினகரன் மட்டும்தான் தலைவன். தங்கதமிழ்ச் செல்வனும், வெற்றிவேல் உள்ளிட்ட இன்றைய தினகரன் ஆதரவாளர்கள் மட்டும்தான் தளபதிகள். எதிர்காலத்தில், அ.தி.மு.க-வோடு தினகரனின் கட்சி இணைந்தாலும், அல்லது அ.தி.மு.க-தினகரன் கட்சியோடு வந்து இணைந்தாலும், அதற்குள் மன்னார்குடி குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதையும் கணக்குப்போட்டுத்தான் தனிக்கட்சியைத் தொடங்கி உள்ளார  தினகரன்!

https://www.vikatan.com/news/tamilnadu/119241-reason-behind-dinakarans-new-party.html

  • தொடங்கியவர்

ஆர். கே.. நகர் ஃபார்முலாவை மட்டுமே நம்புகிறாரா தினகரன்?

 
டிடிவி தினகரன்

தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, டிடிவி தினகரன் தனக்கான தனிக்குடும்பத்தை ஆரம்பித்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற புதிய பெயருடன் ஜெயலலிதாவின் உருவத்தாங்கியக் கொடியுடன், ஏற்கனவே வென்றெடுத்த சின்னமான குக்கரின் விசிலுடன், மதுரை மேலூரில் அமர்க்களமாகத் தன் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் தினகரன்.

தற்காலிகமானதா தினகரன் கட்சி?

இது தமிழக அரசியலில் என்ன விளைவை ஏற்படுத்தும்? தினகரனே கூறியபடி, அனைவரும் எதிர்ப்பார்க்கும் வகையில், இந்தத் தனிக்குடும்பம் தற்காலிகமானது என்பதுதான் உண்மை.

பழனிச்சாமி-பன்னீர்செல்வம் அணியின் பதவிக்காலம் முடியும்போது அல்லது முடித்துவைக்கப்படும்போது, ஒன்று தினகரன் கட்சியில் பெரும்பாலான அதிமுகவினர் இணைவார்கள் அல்லது அதிமுகவே மீண்டும் தினகரன் வசம் வரும் என்பதே எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

டிடிவி தினகரன்

சசிகலாவின் மீள்வருகை நிகழும்போது, இந்த இடைக்காலத்து ஆட்டங்கள் எல்லாம் கனவாக முடிந்துபோயிருக்கும் என்றும் அதிமுக மீண்டும் ஒரே அணியாக எழுந்து நிற்கும் என்றும் பழைய ஜானகி vs ஜெயலலிதா காலத்துச் சண்டைகளை பார்த்தவர்கள் நம்புகிறார்கள்.

இந்தப் பொதுவான நம்பிக்கை நம்பத்தகுந்ததுதானா? வரலாறு என்ன குட்டையா, அதில் மீண்டும் மீண்டும் ஒரேயிடத்தில் சுற்றிவர? - இப்படியெல்லாம் கேள்வி எழுப்பிப் பார்த்தால், தினகரனின் இன்றைய நகர்வு குறித்து வேறு விதமாகவும் நாம் யோசிக்கலாம்.

தினகரன் தனிக்கட்சித் தொடங்கியது தவிர்க்கவியலாத ஒரு நிகழ்வு. உள்ளாட்சித் தேர்தலோ சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலோ நடந்தால் தனக்கு தனி அடையாளம் தேவைப்படும் என்பதை உணர்ந்தே தினகரன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஆனால், அடுத்து வரவுள்ள ஏதோ ஒரு தேர்தலுக்குள் தினகரன் அணியும் பழனி- பன்னீர் அணியும் ஏதோ ஒரு அண்டர்ஸ்டேண்டிங்குக்கு ஏன் வர முடியாதாம்? பாஜகவின் அழுத்தம் மட்டுமே காரணமா? - இன்று இந்த கேள்வி எழாமல் இல்லை.

திரண்ட கூட்டமா அல்லது திரட்டப்பட்டக் கூட்டமா?

மேலூரில் திரண்ட கூட்டம் குறித்து தினகரன் எதிர்ப்பாளர்கள் என்ன கருதினாலும், அது திரண்ட கூட்டமா அல்லது திரட்டப்பட்டக் கூட்டமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டாலும், தினகரன் மீது மக்களிடையே ஆதரவு இருக்கிறது என்பதில் மறுப்பில்லை. அதிமுகவை புதைகுழிக்குள் தள்ளிய பழனி-பன்னீர் அணியிடமிருந்து அக்கட்சியை மீட்டவராக தினகரன் ஹீரோவாக தோற்றமளிக்கிறார்.

பாஜகவின் நெருக்கடிக்கு பயப்படாதவராக, ரொம்பவும் அசால்ட்டாக மீடியாவை எதிர்கொள்பவராக அவர் ஸ்கோர் செய்கிறார். எந்த சசிகலாவை தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கம் வெறுத்ததோ அதே நடுத்தர வர்க்கம் தினகரனைக் கொண்டாடுகிறது. தினகரனின் தலைமைத்துவத் திறன்கள் பற்றி எதிர்க்கட்சிகளும் மீடியாவும்கூட மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

டிடிவி தினகரன்

ஆனால் தினகரன் குறித்த நேர்மறையான சித்திரத்தில் தற்போது கறை படிந்திருக்கிறது. எது தினகரனுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறதோ அதுவே - அந்த ஆர் கே நகர் வெற்றியே - அவருக்கு எதிரான விமர்சனமாகவும் மாறத் தொடங்கியுள்ளது. அந்த வெற்றி தினகரனின் மற்றொரு முகத்தையும் மக்களிடையே வெளிப்படுத்திவிட்டது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிற விஷயத்தில் அந்தத் தொகுதியினர் தற்காலிகமாக அது குறித்து மகிழ்ந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்ததாம் என்கிற அதே கேள்வி அதன் பிறகு தினகரனுக்கு எதிராக எழுப்பப்பட்டது. அந்தக் கேள்வித்திரையில் சசிகலாவின் முகம் மீண்டும் தோன்றி சங்கடப்படுத்துகிறது.

ஹீரோவான தினகரன்

பழனிச்சாமி அரசின் மிகமோசமான நிர்வாகமும் துரோகத்தனமும் பாஜகவைப் பார்த்து அவர்கள் அஞ்சி நடுங்குவதும்தான் இன்று தினகரனை ஹீரோவாக காட்ட உதவுகிறது. இல்லையென்றால், மக்கள் இரு அணிகளிடமிருந்தும் விலகி நிற்கவே விரும்புவார்கள்.

டிடிவி தினகரன்

ஆனால், தினகரனின் அரசியலை நாம் வேறு பல கோணங்களிலிருந்தும் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அரசியல் வெளி "காணாமல் போவது" என்பது இன்றைய காலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கே உதவும். பாஜகவும் சித்தாந்த அடிப்படை கைகூடாத இடங்களில் அரசியல் கொள்முதலில் ஈடுபடும் கட்சி என்பதால் - திரிபுராவில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரையும் விலைக்குவாங்கியதைப் போல - தமிழ்நாட்டில் அதிமுகவை அப்படியே விலைக்குவாங்கிவிடலாம் என்றே நினைத்தது.

பா.ஜ.கவின் திட்டத்தை முறியடித்த தினகரன்

நல்லவேளையாக தினகரனின் கலகம் பாஜகவின் அந்தத் திட்டத்தை முறியடித்துவிட்டது. சசிகலா அதிமுகவில் நீடிக்கவேக்கூடாது என்று பாஜக முடிவுசெய்திருந்தது. இடமளித்திருந்தால் சின்னம்மாவும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்திருப்பார் என்றாலும் பாஜக சசிகலாவின் தலைமையை ஒழிக்க நினைத்தற்கு மிகப்பெரிய காரணம், அப்போதுதான் அக்கட்சியை கரைக்கவோ அழிக்கவோ முடியும் என்பதுதான்.

ஆனால், பசி கொண்ட பாஜக அதிமுகவை விழுங்க நினைத்தபோது, அதில் பெரிய முள்ளாக இருந்தவர் தினகரன். இந்த வகையில் தமிழ்நாட்டில் பாஜகவின் பிளான்-ஏவை முறியடித்தார்.

டிடிவி தினகரன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பாஜகவின் நன்மதிப்பு குறைந்திருக்கிறது. இந்நிலையில், இனி, பழனி-பன்னீர் அணி பாஜகவோடு கைகோர்ப்பது கடினமே. கைகோர்த்தால் அது தற்கொலையே.

பாஜகவின் அனைத்திந்திய அரசியல் எதிர்காலம் சட்டென்று அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்தான், தினகரன் தனது கட்சியை ஆரம்பித்திருக்கிறார். இப்போதைக்கு அதிமுகவில் ஒங்கப் போகிற ஒரே கையாக தினகரன் கையாகத்தான் இருக்கும். ஆக, அதிமுகவை காப்பாற்றுகிற பணியில் தினகரன் வெற்றிபெறுகிறார் என்பதாகவே இன்றைய நிகழ்வுகளை மதிப்பிட வேண்டியிருக்கிறது.

ஆனால் இது மக்களுக்கு எத்தகைய நன்மைகளைப் புரியும்? இங்கேதான் இதுவரை தான் எந்த மாதிரியான தலைவர் அல்லது அரசியல்வாதி என்பதை தினகரன் நிரூபிக்கவில்லை. தமிழக மக்களின் முக்கியமான பிரச்சினைகளில் தீவிரமாக தலைகொடுக்காமல், மீடியாவையும் முன்னாள் சகாக்களையும் சமாளித்துவிட்டாலே போதும், ஆர் கே நகர் ஃபார்முலாவை நம்பினால் போதும் என்று தினகரன் நினைக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.

ஒருவேளை அப்படி அவர் நினைத்தால், தமிழகம் இன்று எதிர்கொள்ளும் பல சிக்கல்களை மனத்தில் வைத்துப் பார்க்கையில், அது தினகரனின் அரசியலை அவரது கட்சிக்குள்ளேயே முடக்கிவிட்டும். வெளியே அவரது தாக்கம் என்று எதுவும் இருக்காது. அப்படி நடந்தால், ஒருவேளை பழனி-பன்னீர் கூட்டணியை அவர் ஜெயித்தாலும்கூட, எதிர்காலத்தில் அவர் ஸ்டாலினோடு போட்டிபோட மாட்டார். ரஜினி, கமலோடுதான் போட்டிபோடுவார்.

http://www.bbc.com/tamil/india-43418408

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.