Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பாய்: செங்கடலை போர்த்திய விவசாயிகள்

Featured Replies

மும்பாய்: செங்கடலை போர்த்திய விவசாயிகள்
 

அரசாங்கங்கள் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத போது, மக்கள் அடுத்த தேர்தல்கள் வரை பொறுத்திருப்பதில்லை. உழைக்கும் மக்களின் கோரிக்கைகள், அவர்களது ‘வாழ்வா சாவா’ என்கிற பிரச்சினை. அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள், அடுத்த தேர்தல் வரை பொறுத்திருக்க இயலாது. போராடுவதே ஒரேவழி என்று மக்கள் நன்கறிவர். அவ்வாறு, அவர்கள் போராடும் போது, அரசாங்கம் ஸ்தம்பிக்கும்; நிலை தடுமாறும்; அவதூறு பரப்பும்; தேசத் துரோகிகள் எனப் பட்டம் சூட்டும். இவற்றால் போராடுவோர் துவண்டுவிடுவதில்லை.  

image_1f5890710a.jpg

கடந்த திங்கட்கிழமை (12) இந்தியாவின் மும்பாய் நகரையே விவசாயிகளின் போராட்டம் உலுக்கியது. இந்தப் போராட்டம் சொல்லுகிற செய்தியும் செய்து காட்டியுள்ள விதமும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவன. அதற்கு எதிரான எதிர்வினைகளுடனான பொதுப்புத்தி மனோநிலை, மத்தியதர வர்க்கத்தின் அலட்சியத்தை எடுத்துக்காட்டுவன.

 மகாராஷ்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தின், நாசிக் நகரில் இருந்து மார்ச் ஆறாம் திகதி,  30,000 விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, மும்பாய் நகரை நோக்கி, நீண்ட நடைபயணத்தைத் தொடங்கினர். 

அப்பயணத்தில் வழிவழியே, ஏனைய விவசாயிகளும் இணைந்து கொள்ள, 60,000 பேர் திரண்டிருந்தனர். 180 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து, ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பாயை வந்தடைந்தனர். 40 பாகை செல்சியஸ் வெய்யிலில் கால்களில் செருப்பு எதுவுமின்றி, பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் இடைவிடாது 180 கிலோ மீ‌ற்றர் தூரத்தை நடந்தே கடந்திருக்கிறார்கள் என்றால், இந்த அருஞ்செயலை என்னவென்று சொல்வது. 

இன்னொரு விவசாயிகளின் போராட்டம் எனக் கடந்து போகவியலாத அளவுக்கு இந்தியாவின் வர்த்தகத் தலைநகரையே உலுக்கியிருந்தது இவ்விவசாயிகளின் எழுச்சி. சிவப்புக் கொடிகளைக் கைகளில் ஏந்தி, சிவப்புத் தொப்பிகளை அணிந்து, மக்கள் நடந்து வந்தது, இந்தியாவின் வர்த்தகத் தலைநகரை செங்கடல் போர்த்தியது போல இருந்தது என்று எழுதுகிறார் ஒருவர்.

இந்தியாவில் விவசாயிகள், நீண்டகாலமாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறார்கள். பருவநிலை மாற்றங்களின் விளைவால் ஏற்பட்டுள்ள வரட்சி, தொடர்மழை, வெள்ளப்பெருக்கு என்பன விவசாயிகளுக்கு பாரிய சவாலாகியுள்ளன. அதேவேளை, அரசாங்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஒரு தொகுதியினராக விவசாயிகள் இருந்து வருகிறார்கள். 

இந்தியா, திறந்த பொருளாதாரத்தை ஏற்று அறிமுகப்படுத்திய முதல் 10 ஆண்டுகளில் (1991 முதல் 2001) ஒன்றரைக் கோடி விவசாயிகள் இல்லாமல் போயுள்ளார்கள் என, இந்திய மத்திய திட்ட ஆணைக்குழுவின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி நடுவக பணியகத்தின்’ ((Institute of Applied Manpower research) அறிக்கை தெரிவிக்கிறது. அதே அறிக்கை, அடுத்த பத்தாண்டுகளில், மேலும் 77 இலட்சம் விவசாயிகள் விவசாயத்தில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபடுவதற்கு முந்தைய பத்தாண்டுகளில் (1981 முதல் 1991 வரை) விவசாயிகளின் தொகை 9.2 கோடியிலிருந்து 11 கோடியாக உயர்ந்திருந்தது.  
இதே இருபதாண்டு காலப்பகுதியில் 270,940 விவாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இதன்படி சராசரியாக நாளொன்றுக்கு 37 விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். உலகமயமாக்கலும் திறந்த சந்தைப் பொருளாதாரமும் இந்தியாவுக்கு அளித்த பரிசுகள் இவை.

கடந்த பத்தாண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. குறைந்தபட்சம் நிலம் வைத்து நேரடியான விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் தற்கொலைகளை மட்டுமே விவசாயிகளின் தற்கொலைகள் என்று மாநில குற்றப்பதிவு ஆணையகம் கணக்குக் காட்டுகிறது. விவசாய தொழிலாளிகள் மற்றும் விவசாயம் சார்ந்த உப தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் தற்கொலைகளை கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான விவசாயிகளின் தற்கொலைகள் மகாராஷ்ர மாநிலத்திலேயே நடக்கினறன. 

இந்தியாவில், நகர்புறம் சாரா மக்கள் தொகையில், 70 சதவீதம் பேரின் வாழ்வாதாரம் விவசாயத்திலேயே தங்கியுள்ளது. மொத்த இந்தியாவின் உழைப்பாளர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் விவசாயத்தையே நம்பியிருக்கிறார்கள். விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில்  ஏழாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இருந்தபோதும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கங்கள் தொடர்ச்சியாகவே விவசாயிகளைப் புறக்கணித்து வந்துள்ளன. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு,   விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம்; விவசாய விளை பொருட்களுக்குக் கட்டுப்படியான விலையை நிர்ணயிப்போம்; விவசாயிகளின் தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை பா.ஜ.க அளித்தது. 
ஆனால், அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில விவசாயிகள், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில், பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். வேலை நிறுத்ததிலும் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய அரசாங்கம், கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தது. ஆனால் அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. 

இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் திரண்ட விவசாயிகள், வீரம்செறிந்த  போராட்டத்துக்கான முதல் அடியை எடுத்து வைத்தனர். 

விவசாயிகளது பேரணி தொடங்கியது முதல், வழியெங்கும் விவசாயிகளுக்குப் பல்வேறு தரப்பு மக்களும் ஆதரவளித்தனர். தங்களால் முடிந்த உணவு, தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை விவசாயிகளுக்குச் செய்தனர். 

ஞாயிறன்று விவசாயிகளின் பேரணி மும்பையை வந்தடைந்து, திங்களன்று காலை சட்டமன்றத்தை முற்றுகையிடுவது என்பதில் விவசாயிகள் உறுதிகாட்டினர். அதேவேளை திங்களன்று காலை மாணவர்களுக்குப் பரீட்சை தினம் என்பதால், அவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில், காலை 11 மணிக்கு மேல், மும்பை ஆசாத் மைதானத்தில் இருந்து, சட்டமன்ற வளாகத்தை நோக்கிச் சென்று முற்றுகையிடுவது என அறிவித்தனர்.

image_2710a31948.jpg

திங்களன்று, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அஜித்நாவ்லே தலைமையில், 20 பேர் கொண்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் மகாராஷ்ர முதலமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில், முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், விவசாயிகள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். 

அப்போது, விவசாயிகள் வழக்கம்போல், “வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்க முடியாது. ஏற்கெனவே, இதுபோன்று விவசாயிகளுக்கு அளித்த எந்த உறுதிமொழியையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. ஆகவே, எழுத்து பூர்வமாக இந்தக் கோரிக்கைகளை ஏற்கிறோம். அப்படியானால், மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்” எனத் தெரிவித்தனர்.

வேறு வழியின்றி, முதலமைச்சர் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். மேலும், நடைபயணமாக வந்திருக்கும் விவசாயிகளை, அவரவர் ஊருக்குத் திரும்ப, அரசாங்கம் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்கப்பட்டது. 

‘கொடுத்த உறுதிமொழியின்படி, அரசாங்கம்  கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், இதைவிடப்  பன்மடங்கு விவசாயிகளோடு நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்’ எனத் தீர்மானித்த விவசாயிகள், தங்கள் முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர்.

இதேவேளை, மகாராஷ்ர மாநில அரசாங்கம், விவசாயிகளின் பேரணி தொடங்கிய நாள்முதல், இப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் செயலில் இறங்கியது. முதலமைச்சர் பட்நாவிஸ், “வந்திருப்பவர்கள் விவசாயிகள் அல்ல; இவர்கள் அனைவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்” என்று முதலில் தெரிவித்திருந்தார். 

இதேவேளை, பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரான பூணம் மகாஜன், “போராடுபவர்கள் மாவோயிஸ்ட்கள்” எனவும் “பயங்கரவாதிகளைக் கவனிக்க வேண்டிய முறையில் கவனிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார். 
ஆறுநாட்கள் இடைவிடாது நடந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் விவசாய விளை பொருட்களுக்கு, கட்டுப்படியான விலையை உத்தரவாதப்படுத்துமாறு கோருகிறார்கள்.  

வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கியுள்ள கடனைத் தள்ளுபடி செய் என்கிறார்கள். 
வன உரிமைச் சட்டத்தின்படி, வனப்பகுதியில் காலம் காலமாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளை, வெளியேற்றக்கூடாது. அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு அரசாங்கமே விலையை நிர்ணயம் செய்யவேண்டும்.

விவசாயிகளின் விளைபொருட்களை, அரசாங்கமே நேரடியாகக் கொள்முதல் செய்யவேண்டும். இவைதான் விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்தன. அதேபோல, விவசாயத்துக்கான தேசிய அளவிலான ஆணையகத்தின் பரிந்துரைகளைகளையும் நடைமுறைப்படுத்துமாறு கோருகிறார்கள். 

விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்து அறிவதற்காக, 2004 ஆம் ஆண்டு விவசாயத்துக்கான தேசிய ஆணைக்குழு டொக்டர் எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, விவசாயத்துக்காக அமைக்கப்பட்ட முதலாவது ஆணைக்குழு இதுவாகும். 

இவ்வாணைக்குழுவின் அறிக்கை, பத்துப் பிரதான பரிந்துரைகளைச் செய்தது. அதன்படி, பயிர் மற்றும் கால்நடை சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு, நிலச் சீர்திருத்தம் என்பது மிகவும் அவசியமானது என்றும் பிரதான விவசாய நிலம் மற்றும் வனப்பகுதிகள் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக பெருநிறுவனங்களுக்கு திசைதிருப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, இயற்கை இடர் காலங்களில், விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு காப்புறுதி வசதிகள், சுகாதார, மருத்துவ வசதிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. 

இதேவேளை, விவசாயிகளின் கடன்தள்ளுபடிக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இது இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும். கடன் வாங்கியோர் கடன்களைக் கட்டியே ஆக வேண்டும். என்று பலர் இணையவெளிகளில் கருத்துத் தெரிவித்து வருவதோடு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வருகிறார்கள். 

இந்திய மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, பிரதான தொழில் துறைகளுக்கு (விவசாயம் உட்பட) வழங்கப்பட்டுள்ள கடனின் அளவு 992,400 கோடி இந்திய ரூபாய்கள். அதில் அறவிடமுடியாக்கடன் ஆறு சதவீதம் மட்டுமே. அதேவேளை பிரதானமற்ற தொழிற்றுறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் 26,800,000 கோடி இந்திய ரூபாய்கள். அதில் அறவிடமுடியாக்கடன் 21 சதவீதமாகும். 

விவசாயிகளினால் திருப்பிச் செலுத்த முடியாதுள்ள மொத்தக் கடன் 59,000 கோடி. ஆனால், விஜய் மல்லையா வேண்டுமென்று செலுத்தாமல் விட்ட கடன்தொகை 56,621 கோடி. 

அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த பஞ்சாப் வங்கியின் நீரவ் மோடி மோசடித்தொகை 11,500 கோடி இதேபோல, கோடிக்கணக்கில் கடன் செலுத்தாமல் வங்குரோத்தானதாக அறிவித்த நிறுவனங்கள் பல. செலுத்தக்கூடிய வசதிகள் இருந்தும் திட்டமிட்டு வங்கிக்கடன்களைச் செலுத்தாத பெருவியாபாரிகள் 9,063 பேர் என இந்திய மத்திய வங்கி அறிவித்துள்ளது. இவர்களிடமிருந்து பெறப்படவேண்டிய அறவிடமுடியாக் கடன் மட்டும் 110,050 கோடி. 

இதிலே கவனிக்க வேண்டியது யாதெனில், விவசாயம் இந்தியாவின் பிரதானமான தொழிற்றுறையாக, வாழ்வாதாரமாக இருக்கின்றபோதும், அவற்றுக்கு வழங்கப்படும் கடன்களின் அளவு மிகக்குறைவானது. பிரதானமற்ற தொழிற்றுறைகளுக்கே வங்கிகள் கடன்களை வழங்குகின்றன. 

விவசாயிகள் காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள், வங்கிகள் நியாய விலையில் அன்றி அதிகவட்டிக்கே விவசாயிகளுக்குக் கடன் வழங்குகிறன. தனது உற்பத்திப் பொருட்களுக்கான நியாய விலை இன்மையால், அடிமாட்டு விலைக்குத் தனது உற்பத்திகளை விற்க விவசாயி தள்ளப்படுகிறான். பல்தேசியக் கம்பெனிகள் அவனது நிலத்தையும் உற்பத்தியையும் கபளீகரஞ் செய்கின்றன. 

இத்தனை நெருக்கடிகளினால் தான், விவசாயிகளினால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடிவதில்லை. அதனாலேயே கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோருகிறார்கள். 

ஆயிரங்களில் கடன்வாங்கி, மழைபொய்த்து, நியாய விலை கிடைக்காத விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதுதான், இந்தியப் பொருளாதாரத்துக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தப் போகிறதா?  
இந்தவாரம், மும்பாயைச் சிவக்க வைத்த போராட்டம், மகாராஷ்ர மாநில அரசாங்கத்தை மண்டியிட வைத்துள்ளது. இது போராடும், உழைக்கும் மக்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. 

விவசாயிகளே, எந்தவொரு விவசாய மையப் பொருளாதார நாட்டினதும் உயிர்நாடிகள். அவர்களைப் புறந்தள்ளிவிட்டு, இயற்கை விவசாயம் ஒழிக்கப்பட்ட ஒருநாளில், மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உண்டபடி, நோயாளர்களாய் எமது எதிர்கால சந்ததி இருப்பதற்கு, நாம் அனுமதிக்கப் போகிறோமோ என்பதை நாம் எல்லோரும் எமக்குள் கேட்டாக வேண்டும். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மும்பாய்-செங்கடலை-போர்த்திய-விவசாயிகள்/91-212708

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.