Jump to content

அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை


Recommended Posts

பதியப்பட்டது

அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை

லக்ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம்

 

த்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு... வெறுப்பு... வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது இருந்த அதே வெறுப்பு, அவருக்கும் அவன் மீதும், அவன் அம்மாவின் மீதும் இருந்தது. அம்மா, ஒரு பூஞ்சை; சிறு வயதிலிருந்தே உழைக்கப் பழகியவள். கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையங்களும், இந்த ஜென்மத்தில் துடைத்தெடுக்க முடியாத தனிமை உணர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருக்கும். தனிமை அடர்ந்த முகம், சக மனிதனுக்கு எப்போதும் அந்நியமான ஒன்றுதான். அப்பா, அவளுடன் நடந்த திருமணத்தை ஒரு துர்சகுனமாகவோ அல்லது விபத்தாகவோதான் நினைத்திருக்கக் கூடும். ஆனாலும், அம்மா அவரை நேசித்தாள். கோடானுகோடி இந்தியப் பெண்களைப் போலவே எல்லா துரதிர்ஷ்டமான காயங்களுக்குப் பின்னும்கூட அவரை நேசித்தாள்.

'நீ ஏம்மா இப்பிடி இருக்க? அந்த ஆள் இத்தனை கொடுமை பண்ணியும் அவனுக்காக சாமிகிட்ட வேண்டிக்கிற... ச்சை!' - ராம் எத்தனையோ முறை திட்டியிருக்கிறான். அம்மா, அமைதியாக அவனைக் கடந்துபோவாள் அல்லது சின்னதாகச் சிரிப்பாள்.

அவளுக்கு 'இளமை’ என்று தனியாக ஒரு காலம் இல்லை. பெரியம்மா, அவளைப் பார்க்க வரும்போதெல்லாம் சொல்லும், 'எங்க வாழ்க்கை எப்பிடியோ ஒருவழியாச் சரியாகிடுச்சு. ஒரு காலம் இல்லாட்டியும் இன்னொரு காலம் நீ நல்லா இருப்பேனுதான் காலம்பூரா சாமியைக் கும்பிடுறோம். இன்னும் உன் கருமாயம் தீரலையேடி!' எனும் பெரியம்மாவுக்கு எல்லாவற்றுக்கும் அழுகைதான்.

p78c.jpg

அம்மா அப்படி இல்லை. அவள் எதற்கும் அழுதவள் அல்ல. ராமுக்கு விவரம் தெரிந்து, ஒரே ஒருமுறை மட்டுமே அம்மா அழுதிருக்கிறாள். அதுவும் மிகச் சில நிமிடங்கள். லாரியில் லோடு ஏத்திச் சென்றிருந்த அப்பா வடக்கே சூரத்துக்கு அந்தப் பக்கமாக ஏதோ ஒரு கிராமத்தில் விபத்துக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்ற தகவல் வந்த இரவில் அழுதாள். இத்தனைக்கும் அப்பா இந்தக் குடும்பமே வேண்டாம் என எப்போதோ விட்டுவிட்டுப் போயிருந்தார். ஆனாலும் அம்மா அவரை மறக்கவில்லை.

ஊரில் இருக்கும் நாட்களில் குடித்தார் என்றால், அப்பாவின் பொழுதுபோக்கு அம்மாவைத் தேடி வந்து அடிப்பதுதான். அவள் வேலை செய்கிற இடங்களைத் தேடி வந்து அங்கும்கூட அடிப்பார். அவள் எதற்குமே பதில் சொல்ல மாட்டாள்.

'இந்தச் சனியனை என்னைக்கு என் தலையில கட்டினாய்ங்களோ அன்னைல இருந்து என் வாழ்க்கை நாசமாப்போச்சு. த்தூ... உனக்கெல்லாம் ஒரு சாவு வராதாடி!' - காறித் துப்புவதைக்கூட அவள் கடந்து போகப் பழகியிருந்தாள். அரிதாக சிலமுறை அவளும் பதிலுக்குப் பதில் பேசுவது உண்டு. ஆனால், அது ஆவேசமாகவோ கதறலாகவோ இருக்காது. ஓர் எளிய முனகல் அல்லது சினுங்கல் என்ற அளவில்தான் இருக்கும்.

அம்மா, அவமானங்களைச் சகித்துக்கொள்வதை ராம் வெறுத்தான். இதனாலேயே அப்பாவை அதீதமாக வெறுத்தான். தான் அப்படி வெறுப்பதற்கான நியாயமான காரணங்கள் இருப்பதாக நம்பவும் செய்தான்.

ஜெனியைக் காதலிக்கத் தொடங்கிய பிறகான இந்தக் கொஞ்ச நாளில், ராமுக்கு அந்த மனிதரின் மேல் முதல் முறையாக வெறுப்புக்கு மாறாக சின்னதோர் அனுதாபமே மிஞ்சி நிற்கிறது. இத்தனை ஆண்டுகள் வாழ்க்கை மீது இருந்த ஆவேசமான நம்பிக்கைகள் அவ்வளவும் சிதறிப்போய், தன்னை மிகவும் இலகுவான மனிதனாக உணர்ந்தான். எல்லோருக்கும் தன்னால் புன்னகையைப் பரிசளிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. ஒருவகையில் இந்தக் கனிவுக்குக் காரணம், ஜெனிதான்.

விவரம் தெரிந்த நாளிலிருந்து ஒரு புருஷன் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு, அவனுக்கு முன்னால் இருந்த ஒரே உதாரணம் அப்பாதான். ஒரு மனைவி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அம்மாதான். அம்மா, இந்த உலகில் இருக்கும் எல்லோரையும்விட மேன்மையானவள். ஆனால், அவள் தன்னை அவமானங்களுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டதன் மூலம் தன் மகனிடத்திலேயே அந்தரங்கமாக வெறுக்கப்பட்டாள். தன் மனைவி, இப்படியான ஒரு பெண்ணாக, அவமானங்களைச் சகித்துக்கொள்கிறவளாக இருக்கக் கூடாது என்பதில் எப்போதும் ராம் உறுதியாக இருந்தான். மிகவும் மோசமான புருஷனாகவும் அப்பாவாகவும் இருந்த தன் அப்பாவைப் போல் இல்லாமல், தன் மொத்தக் காதலையும் நேசத்தையும் மனைவியிடம் கொட்டித்தீர்க்க விரும்பும் எளிய மனிதனாக வாழ்வதே தன் வாழ்வின் ஆகச்சிறந்த லட்சியம் என, தன்னை வகுத்துக்கொண்டிருந்தான்.

p78b.jpgஅப்பாவுக்கு, இந்தத் தேசத்தின் எல்லா சாலைகளும் தெரியும். 'அநேக நிலங்களையும் மனிதர்களையும் பார்த்த ஒரு மனிதன், மனதளவில் துறவியாக இருப்பான். அவனிடம் வேறு யாரிடமும் இல்லாத சாந்தமும் நிதானமும் இருக்கும்’ என, யார்யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறான். ஆனால், அப்பாவிடம் அப்படியான எதுவும் இல்லை. அவரின் வாழ்க்கை, இதுவரையிலும் இப்போதும் ஆவேசங்களால் ஆனதாகவே இருக்கிறது. 'தனது ஆவேசம் அவ்வளவும் அவரிடம் இருந்து தனக்கு வந்ததுதானோ?!’ - தன்னைப் பற்றி நிதானமாக யோசிக்கையில் அவனுக்குப் புரிந்தது. அவனிடம் பழகத் தொடங்கிய ஒரு நாளில், அவனுக்கு அதைப் புரியவைத்தவள் ஜெனிதான்.

ன்று ஜெனி வந்து சேர்வதற்கு சில நிமிடங்கள் தாமதமானதால் கொஞ்சம் கோபமாகவே அவளைப் பேசிவிட்டான். ஆனால் ஜெனி, எப்போதும் போல் சிரித்தாள். அவளது சிரிப்பு அலாதியானது. தன் முன் இருப்பவர்களை மிக எளிதில் வீழ்த்தி விடுவாள். அதற்கு, பேச வேண்டும் என்பதுகூட இல்லை. ஒரு பரிகாசம் போதும். 'உங்க அப்பா ஆவேசமான வர்னு சொல்றியே ராம், நீ மட்டும் என்னவாம்..?'

அவனுக்குப் பதில் சொல்ல நா எழவில்லை.

'தன் புருஷனுக்காக காலம் முழுக்கக் காத்திருந்த அம்மாவுக்குப் பொறந்தவன் நீ. உன்னால நீ நேசிக்கிற பொண்ணுக்காக 10 நிமிஷம் காத்திருக்க முடியலல்ல... உங்க அப்பாவுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?'

'இல்ல ஜெனி... நீ முன்னாடியே கொஞ்சம் லேட் ஆகும்னு சொல்லி இருந்தா... சின்ன வேலை இருந்துச்சு, அதை முடிச்சிட்டு வந்திருப்பேன்!'

ஜெனி, அதற்கும் சிரிக்கவே செய்தாள்.

'ம்ம்ம்... எல்லோருக்கும் வேலை இருக்கத்தான் செய்யிது ராம். நீ உங்க அம்மாவோட வாழ்க்கையில இருந்தும், உன் வாழ்க்கையில இருந்தும் எதையுமே கத்துக்கலை. உனக்கு வாழ்க்கையோட வலிகள் அவ்வளவும் ஆவேசத்தைக் கத்துக்கொடுத்த அளவுக்கு நிதானத்தைக் கத்துக் கொடுக்கலை.'

ராம், தலையைக் குனிந்து அவளைப் பார்க்க முடியாதவனாக நின்றிருந்தான். அவளுக்கு, கொஞ்சம் கூட அவன் மீது கோபம் இல்லை. தலையைத் தூக்கிப் பார்த்தாள். இப்போதும் அவள் முகத்தில் அதே புன்னகை. அவனால் அதை அவ்வளவு சாதாரணமாக எதிர்கொள்ள முடியவில்லை.

'ப்ளீஸ்... வேணும்னா செருப்பால ரெண்டு அடி அடிச்சிடு. இந்த மாதிரி சிரிக்காத... ப்ளீஸ்.'

'ஏன் ராம்? இந்தச் சிரிப்புப் பிடிச்சிருக்குனுதானே என்னைக் காதலிக்கிறதாச் சொன்ன. இப்ப என்ன?'

'இல்ல... அப்போ அதுல ஒரு சிநேகம் இருந்துச்சு.'

'இதுலேயும் சிநேகம் இருக்கு ராம். உங்க அப்பா குடிக்கிறப்ப எல்லாம் ஆவேசம் வந்து உங்க

அம்மாவைத் திட்டுவார்னு சொன்னியே, ஏன்னு தெரியுமா?''

ராம், 'தெரியாது’ எனத் தலையாட்டினான்.

'உங்க அம்மாவோட புன்னகைக்கு முன்னால உங்க அப்பாவோட ஆவேசம் ஒண்ணுமே இல்லை. அவர் அதுல ஒவ்வொரு தடவையும் தோத்துப்போயி அவமானப்படறதாலதான் அவர் கோவம் குறையாமயே இருந்திருக்கு. பதிலுக்குப் பதில் ஆவேசமாச் சண்டை போடுறது மட்டும் இல்ல ராம்... 'நீ என் நிதானத்துக்கு முன்னால ஒண்ணுமே இல்லடா’னு சொல்றதும் ஒருவித எதிர்ப்புதான்.'

அந்த மாலையில்தான், 'இனி என்றென்றைக்கும் ஜெனியுடனே வாழ்வது’ என முடிவு எடுத்தான். அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். மன்னிப்புக் கேட்டான். பதிலுக்கு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். இத்தனை அழகான மன்னிப்பை காதலியிடம் இருந்து மட்டும்தான் பெற முடியும் எனப் பூரித்தான்.

'மன்னிப்புக் கேட்கிறப்போ மட்டும்தான் ஆம்பளைங்ககிட்ட அற்புதமான ஒரு சாந்தம் இருக்கு ராம். தன்னோட ஆம்பளத் தனத்தை விட்டுட்டு ஒருத்தன் யார் முன்னால நிக்கிறானோ அவங்களுக்கு உண்மையா இருப்பான். நீ எனக்கு உண்மையா இருக்க ராம்!'

தன்னை இத்தனை வருடங்களில் இத்தனை தீவிரமாக எந்தப் பெண்ணும் புரிந்துகொண்டது இல்லை என்ற நிஜம், அவனை ஆறுதல்படுத்தியது. ஒரே ஒருமுறை தன் அப்பா தன் அம்மாவின் முன்னால் இப்படி ஒரு மன்னிப்பைக் கேட்டு நின்றிருந்தால், இதுமாதிரி ஆயிரம் முத்தங்களை அவருக்கு அம்மா தந்திருப்பாள். அவள், தன் வாழ்க்கை முழுக்கக் காத்துக்கொண்டு நின்றதும் அப்படியான ஒன்றுக்குத்தான். தன்னுடைய எந்தத் தவறுக்கும் எப்போதும் யாரிடமும் மன்னிப்புக் கேட்காதவன், தன் மரணத்துக்குப் பின்னாலும் அதன் துயரத்தைத் தூக்கிக்கொண்டு அலைகிறவனாகத்தான் இருக்கிறான். அப்பா, குறைந்தபட்சம் தன் மரணத்துக்கு முன்பாகவேனும் அதைப் புரிந்துகொள்வார் என அவன் நம்பினான்.

ம்மா, இப்போதும் வேலைக்குப் போகிறாள். அவளுக்கு சக மனிதர்களின் மீது எப்போதும் வெறுப்போ, புகார்களோ இருந்தது இல்லை. எல்லோரையும் முழுமனதோடு நேசித்தாள்; ஏற்றுக்கொண்டாள். ராம், முதல் தடவையாக ஜெனியை அம்மாவிடம் காட்டியபோது, அவன் எதுவும் சொல்வதற்கு முன்பாகவே அம்மாவுக்குப் புரிந்திருந்தது. தான் நேசிக்கும் பெண்ணுக்கு முன்பாக ஆண் எப்போதும் இயல்பாக இருக்க முடிந்தது இல்லை. அம்மா, அவனது தயக்கத்தை ரசித்தாள். ஜெனியை அணைத்துக்கொண்டு முத்தமிட் டவள், தேநீர் கொடுத்தாள். ஒரு தேநீர், அபூர்வமாகத்தான் பல்வேறு சுவை கொண்டதாக இருக்கும். அதற்கு, தேநீர் குடிக்கும் நேரமும், கொடுப்பவர் யார் என்பதும் முக்கியமானது. அந்தத் தேநீர், ஜெனிக்கு அபூர்வமானது.

'உங்க பையனை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு விரும்பறேம்மா!'

ராமுக்குப் பதற்றமாக இருந்தது. தான் சொல்வதற்கு முன்னால் இவள் ஏன் அவசரப்பட்டாள்? அம்மாவின் மீது பயம் என்று எதுவும் இல்லை. ஆனால், அவள் என்ன நினைத்துக்கொள்வாளோ புரிந்துகொள்ள முடியாமல்போகுமோ... எனத் தயங்கினான். ஆனால், ஜெனி, சொல்லாமல் போயிருந்தால்கூட அம்மா கேட்டிருப்பாள்.

அம்மா, அவளை நிதானமாகப் பார்த்துவிட்டு, 'உங்க அம்மா-அப்பாகிட்ட சொல்லிட்டியா பாப்பா?'

அவள் 'இல்லை’ எனத் தலையாட்டிவிட்டு, 'முதல்ல உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு! அதான் நானே வம்பா கூட வந்தேன். உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?'

அம்மா சிரித்தாள். எழுந்து உள்ளே போனவள், சாமி படத்துக்கு முன்னால் வைத்திருந்த குங்கும டப்பாவையும், கொஞ்சம் மல்லிகைப் பூவையும் எடுத்து வந்தாள். ஜெனியின் நெற்றியில் பொட்டு வைத்துவிட்டவள், பூவை அவள் கையில் கொடுத்து, 'இனிமே இது உன் வீடு. நீ எப்ப வேணும்னாலும் வரலாம். சீக்கிரமா அம்மா அப்பாகிட்ட சொல்லிடு!'

ராமுக்கு வியப்பாக இருந்தது. அம்மா அவளின் சாதி, குடும்பம் எதையும் விசாரிக்கவில்லை. ஆனால் ஏற்றுக்கொண்டாள்.

அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான் ராம். அவள் எதுவுமே பேசாமல் உள்ளே போய்விட்டாள். மௌனத்தையும் புன்னகையையும் தவிர, ஆகச்சிறந்த பதில் அந்த நேரத்தில் அவளிடம் இல்லை.

அதன்பிறகு எல்லாமே ராம் விருப்பப்படிதான் நடந்தன. ஜெனிதான் அவனிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள்.

p78a.jpg'நல்லவரோ கெட்டவரோ, உங்க அப்பாவை நம்ம கல்யாணத் துக்குக் கூப்பிடணும் ராம்!'

முதல் தடவை அவள் சொன்ன போது அவனுக்குக் கோபம் வந்தது, காட்டிக்கொள்ளாமல், 'வேணாம் ஜெனி. எனக்கு அதுல விருப்பம் இல்லை. அந்த ஆள் 'அப்பா’னு வந்து நின்னா, நான் என்னை புழு மாதிரி ஃபீல் பண்ணுவேன்.'

அவள் அப்படிச் சொல்வதைக் கொஞ்ச நாட்கள் விட்டிருந்தாள். பின்பு மீண்டும் சொன்னபோது, முன்னைவிடவும் அழுத்தமாகச் சொன்னாள். அவனால் பதில் சொல்லவும் முடியவில்லை; அவளைக் கோபித்துக்கொள்ளவும் முடியவில்லை. கடைசியாக ஒப்புக்கொண்டான். ஜெனியும் அவனோடு வருவதாக அடம் பிடித்தாள். இருவருமாகச் சேர்ந்து அவருக்குப் அழைப்பிதழ் கொடுக்கக் கிளம்பினார்கள்.

அப்பா, அவன் ஊரில் இருந்து 40 கிலோமீட்டர் தள்ளி சிவகாசியில் இருந்தார். நீண்ட காலம் ஆகிப்போனது, அவர் பற்றிய செய்திகளை இவன் கேள்விப்பட்டு.

''சொந்த மகனோட கல்யாணத்துக்கு அப்பாவுக்கு இன்விட்டேஷன் கொடுக்கப்போற துயரம் என்னைத் தவிர வேற யாருக்கும் நடக்கக் கூடாது ஜெனி.' - பேருந்தில் அவள் தோள்களில் சாய்ந்துகொண்டான். அவள் புன்னகைத்தபடியே அவன் தலை கோதிவிட்டாள்.

சிவகாசியில் சித்துராஜபுரம் தாண்டி சிறிய காலனியில் இருந்தது அவர் வீடு. இவர்கள் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போய்ச் சேர்ந்தபோது, வெயில் ஊரை உக்கிரமாக எரித்துக்கொண்டிருந்தது. வெயில், அந்த ஊரின் பிரத்யேக அடையாளம். கதவு, திறந்தே கிடந்தது. துருப்பிடித்த தகரக் கதவு. அவர்கள் போனபோது அவர் வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டில் இருந்தவரிடம் விசாரித்தான்.

''கடைக்குப் போயிருப்பாரு. செத்த இருங்க வர்ற நேரம்தான்' அவன், வாசலிலேயே உட்கார்ந்தான்.

அப்பாவைப் பற்றி அவனுக்குள் இந்த நொடி வரை இருந்த பிம்பம் எல்லாம், எப்போதும் குடி போதையில் அம்மாவையும் தன்னையும் அடிப்பதையே தன் வாழ்வின் பெரும் பாக்கியமாக நினைத்த ஒரு கொடூர மிருகம். அவ்வளவுதான். வெயிலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திணறினான். தூரத்தில் கானல் நீரினூடாக ஒருவர் இந்த வீட்டை நோக்கி நடந்து வருவதைப் பார்த்ததும் இவனுக்கு ஒரு மாதிரியாகப் புரிந்தது. அவர்தான். வயதாகி விட்டாலும் அந்த உடலில் இன்னும் அதே திமிரும் கொழுப்பும் இருப்பதற்கான நடை.

காரணமே இல்லாமல் அவனுக்கு அடிவயிற்றில் ஒரு பயம் உருண்டது. அது, அவரைப் பார்க்கிறபோதெல்லாம் பால்யத்தில் பழக்கப்பட்டுவிட்ட பயம். அதிலிருந்து அவனால் ஒருபோதும் மீள முடியாது. எழுந்து அங்கிருந்து ஓடிவிடலாம் என நினைத்தான். ஜெனி, அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்தாள்.

அவரும் இவர்களைக் கவனித்திருக்க வேண்டும். ஆனால், நிதானமாகத்தான் வந்தார். ராமையும் ஜெனியையும் ஒருசில நொடிகள் பார்த்தவர், வீட்டுக்குள் போய் ஒரு சேரை எடுத்துவந்து வெளியில் போட்டு உட்கார்ந்தார்.

'என்ன விசேஷம்? கல்யாணமா?' - தனக்கு சம்பந்தமே இல்லாத யாரோ ஒருத்தரிடம் கேட்பது போல் கேட்டார்.

அவன் தன்னை அருவருப்பாக உணர்ந்தான். பதில் சொல்ல முடியவில்லை. ஜெனி எழுந்து பத்திரிகையை நீட்டினாள்.

'நான்தான் உங்க பையனைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். என் பேரு ஜெனி. வர டிசம்பர் 6-ம் தேதி எங்க கல்யாணம். நீங்க நிச்சயம் வரணும்' என்றாள் ஜெனி.

p78.jpgபத்திரிகையை வாங்கி நிதானமாகப் பார்த்தவர், இன்னாரின் மகன் ராம்குமார் என்று சில வரிகள் கவனித்துவிட்டு அவளைப் பார்த்தார். முகத்தில் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்த நரை தாடியை வருடிக்கொண்டவர், 'அப்பன்னு சொல்லிக்கிட்டு இவன் கல்யாணத்துல வந்து நிக்கிறதுக்கு எனக்கு பெருசா தகுதி ஒண்ணும் இல்லை. இவ்ளோ தூரம் மதிச்சுக் கூப்பிட்டதுல சந்தோஷம். ஆனா, என்னால கல்யாணத்துக்கு வர முடியாதும்மா!'

ஜெனி, அவரிடம் இந்தப் பதிலை முன்பே எதிர்பார்த்திருக்கலாம். ஆசீர்வாதம் வாங்குவ தற்காக அவர் கால்களில் விழுந்தாள்.

'நல்லாரும்மா... நல்லாரு!' அவருக்குப் பதற்றத்தில் வார்த்தைகள் தடுமாறின.

ஜெனி எழுந்து சிரித்தபடி, 'நீங்க எங்க கல்யாணத்துக்கு வர்றதைவிடவும் எங்களுக்கு கல்யாணம் நடக்கப்போறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுங்கிறதுதான் முக்கியம். அதுக்காகத்தான் இவ்வளவு தூரம் வந்தோம். நாங்க கிளம்பறோம்.'

திரும்பி ராமின் கைகளைப் பற்றிக்கொண்ட ஜெனி, அங்கிருந்து வேகமாக நடந்தாள். ராமுக்கு மனம் கொஞ்சம் கொஞ்சமாக இலகுவானது போல் இருந்தது. இத்தனை எளிதாக ஒரு விஷயத்தை எதிர்கொள்ள முடியுமா? அவன் ஜெனியையே பார்த்துக்கொண்டு நடந்தான். அவர்கள் போவதை கண்கள் விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்த ராமின் அப்பா, இன்னொரு முறை அழைப்பிதழில் ராமின் பெயருக்கு மேல் தன் பெயர் போட்டிருப்பதை ஒரு முறை ஆசையோடு தடவிப் பார்த்தார்.

(dedication ஜெனிக்கு...)

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பாக்களின் பாசத்தை யாரும் சரிவர புரிஞ்சு கொள்ளுறதே இல்லை. ஜெனி போன்றவர்களைத் தவிர.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.