Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

``குவியும் மக்கள்... வலுக்கும் எதிர்ப்பு.. மற்றொரு மெரினா ஆகிறதா ஸ்டெர்லைட்!?’’ #BanSterlite

Featured Replies

``குவியும் மக்கள்... வலுக்கும் எதிர்ப்பு.. மற்றொரு மெரினா ஆகிறதா ஸ்டெர்லைட்!?’’ #BanSterlite

 

நியூட்ரினோ

``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் மீண்டும் வெடித்துள்ள நிலையில், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பது, தமிழகத்தை மத்திய அரசு மேலும் புறக்கணிக்கக்கூடிய செயல். தமிழகத்துக்கு  ஆட்கொல்லி திட்டங்களைத் தருவதுதான் மத்திய  அரசின் பரிசு'' என்று தி.மு.க. செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரின் பேட்டி...

 

``நியூட்ரினோ திட்டத்தை நீங்கள் எதிர்ப்பது ஏன்..?''

``காந்தத் தூண்டுதலால் துகள்களை ஆய்வுசெய்யும் பொருட்டு அண்ட வெளியில் சக்தி மிகுந்த கதிரலைகள் உருவாகும். அதை உருவாக்க 1000 டன் ஜெலட்டின் வெடிமருந்துகளை 800 நாள்களுக்கு வெடிக்கச் செய்து 11,25,000 பாறைகளுடன் மலைகளும் தகர்க்கப்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்துடன், கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் சேர்ந்து பாதிக்கப்படும். பூமியே சிதறுண்டுவிடுவது போன்ற விளைவுகள் ஏற்படுமென்ற அச்சம் உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான திட்டம் தமிழகத்திற்கு தேவைதானா...? இதுமட்டுமல்ல, ஆபத்தை விளைவிக்கும் பல திட்டங்களை, குப்பைக் கூளம் போல தமிழகத்தில் மத்திய அரசு திணிக்கிறது. இது என்ன நியாயம்? 

நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதோடு, அந்தத் திட்டத்திற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்ற கொடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காவிரியில் தண்ணீர் தர கர்நாடகம் மறுக்கிறது. மத்திய அரசும் கர்நாடக அரசோடு சேர்ந்து கொண்டு தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது. இந்நிலையில் முல்லைப்பெரியாறிலிருந்து நாளொன்றுக்கு மூன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவது தமிழகத்தை மேலும் வஞ்சிப்பதாகும். இத்தகைய துரோகத்தை மன்னிக்க முடியுமா?" 

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

``ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி மீண்டும் வெடித்துள்ளதே..?''

``தூத்துக்குடி நகரை தூசி, விஷக்குடியாக ஆக்குகின்ற ஸ்டெர்லைட் ஆலையை அங்கிருந்து விரட்ட மக்கள் திரண்டுவிட்டனர். மெரினா கடற்கரையில் மக்கள் குவிந்ததுபோல தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் ஆர்ப்பரித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலம் மாம்பழம் விளையும் பூமியான ரத்தினகிரியிலிருந்து விரட்டப்பட்டு, கேரளாவில் அனுமதி கிடைக்காமல் தூத்துக்குடிக்கு இடம் பெயர்ந்தது. ஆரம்பகட்டத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டமும், மறியலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்களும் என்று வைகோ-வுடன் இணைந்து கடமையாற்றியவன். இந்த தாமிர விஷவாயு கக்கும் ஆலைகள் அதிகமாக மக்கள் நடமாட்டம் இல்லாத தென்அமெரிக்காவின் சிலி போன்ற நாடுகளில்தான் உள்ளன. மக்கள் நெருக்கம் கொண்ட  தூத்துக்குடி நகரில் இதை அமைக்கும் போதே எதிர்ப்புக்காட்டிய போது பலரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதனால்தான் இன்றைக்குப் பெரும் கேடுகள் அந்த ஆலை மூலம் அரங்கேறிவிட்டன. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், கொங்கு மண்டலத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், தெற்கே சாத்தான்குளம் வரை பதிக்கும் திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம், நெடுவாசல் மீத்தேன் திட்டம் என இந்தியாவில் நஞ்சைக் கக்கும் ஆலைகளை தமிழகத்தில் நிறுவ தமிழகம் என்ன புறக்கணிக்கப்பட்ட மண்ணா? இவ்வாறு பல உயிர்க்கொல்லி ஆலைகளை, தமிழகத்திற்கு தள்ளி விடுகிறது மத்திய அரசு''.

வைகோ நடைபயணம்

``உயிர் குடிக்கும் நச்சு ஆலைகளுக்கு எதிரான தங்களின் சட்டப்போராட்டங்கள் குறித்து சொல்லுங்களேன்?''

``ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இருபத்தைந்து ஆண்டுகளாக வைகோவுடன் இணைந்து களப்பணியாற்றி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன். இன்றைக்குத் தூத்துக்குடி மக்களே வெகுண்டெழுந்துள்ளனர். கூடங்குளம் அணுமின் திட்டத்தை அறிவித்தவுடன் அது மிகவும் ஆபத்தானது என்று 1989- ம் ஆண்டிலேயே வழக்குத் தொடுத்தவன் நான். இரண்டாவது முறையாக கூடங்குளம் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன் (வழக்கு எண் / WP No. 22771 of 2011). 

எங்கள் கரிசல் பகுதியில் ராஜபாளையத்திலுள்ள தமிழ்நாடு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு, குடிநீர் வசதியில்லாமல், மக்களுக்கு சுவாசநோய், புற்றுநோய் என 1970-களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, சட்டப்பேரவைத் துணைத் தலைவரும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான பெ. சீனிவாசன், அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த சிவகாசி வி.ஜெயலட்சுமி போன்றோர் போராடி எந்தவிதத் தீர்வும் எட்டப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு (வழக்கு எண். 10589/1986) தாக்கல் செய்து அதன்படி, உயர்நீதிமன்ற உத்தரவைப் பெற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பலகோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் கருவிகளும் பொருத்தப்பட்டன. அப்போதே ஆலையினை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு அரசு யோசித்தபொழுது 1986-ல் என்னுடைய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் ஆலையினை விற்கமுடியாமல் போனது. மேலும், 2015ம் ஆண்டு (WP No. 4696 of 2015) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கின் தீர்ப்பின்படி 80 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டு, தமிழக அரசு ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தியது. சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புஉணர்வு இல்லாத காலத்திலேயே இதுபோன்ற வழக்குகளை நான் தொடுத்துள்ளேன்.

கேரளாவின் மருத்துவக் கழிவுகள், குப்பைகளை தமிழக எல்லைப் பகுதிகளான பாலக்காடு, நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் குமரி மாவட்டத்தின் எல்லைகளில் லாரிகளில் கொண்டுவந்து கொட்டும் பிரச்னையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இப்போது, அந்தப் பிரச்னை குறித்த விழிப்புஉணர்வு எல்லை மாவட்ட மக்களிடையே அதிக அளவில் ஏற்பட்டுள்ளது''.

கெயில் குழாய்

``தமிழகம் இப்போது எதிர்நோக்கும் ஆபத்தான திட்டங்கள் என்னென்ன..?''

``தமிழகத்தின் கெயில் குழாய்கள் பதிப்பு கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் திருத்தணி அருகே இருந்து மதுரை வரை பதிக்கும் பணிகளும், கடலூர் முதல் சேலம் வரை பதிக்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. விவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கிணறுகளை தமிழகத்தில் பல பகுதிகளில் தோண்டும் திட்டமும் உள்ளன. ஏற்கெனவே, இது நடைமுறைக்கு வந்துவிட்டது. முன்பு, இறால் பண்ணைகளும் விவசாய நிலங்களை களர் நிலங்களாக்கின. விவசாய நிலங்களில் மின்சாரக் கடத்தி கோபுரங்களை அமைத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இம்மாதிரி ஆலைகளால் ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் இருக்கும் தண்ணீர் ஒரு பக்கம் மாசடைகின்றது. இன்னொரு பக்கம் தொற்று வியாதிகள் பரவுகின்றன 'அரியலூர் சிமென்ட் தொழிற்சாலை, மதுரை பொய்கைக் கரைப்பட்டியிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலை, தூத்துக்குடி சிப்காட், கடலூர் சிப்காட், திருப்பூர் பின்னலாடை - நொய்யலாற்றின் மரணம், சேலம் கஞ்சமலை தாது கம்பெனி, மேட்டூர் அனல்மின் நிலையம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், கெயில் திட்டம், திருவண்ணாமலை - ஜிண்டால் தாது கம்பெனி (இன்னும் தொடங்கப்படவில்லை), ஊட்டி ஸ்டெர்லிங் ஆலை, கொடைக்கானல் பாதரச (மெர்குரி) தொழிற்சாலை...' என்று பல திட்டங்களைச் சொல்லலாம்''.

``தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்கிறீர்களா..?''

 

``தமிழகத்திற்கு பலனளிக்க வேண்டிய சேது சமுத்திரத் திட்டத்தின் கதி என்ன ஆனது? ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அதை இழுத்து மூடி விட்டார்கள். தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்ததால், தமிழக மீனவர்களின் நிம்மதி தொலைந்தது. 1959-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சேலத்தில் 1982-ம் ஆண்டு நிறுவப்பட்ட சேலம் இரும்பாலை தற்போது முடக்கப்படுகிறது. ஊட்டியில் முக்கியமாக இயங்கிவந்த இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலையை மூடி நைனிடாலுக்கு மத்திய அரசு அனுப்பிவிட்டது. ஆனால், பல்வேறு ஆபத்தான நஞ்சைக் கக்கும், சுற்றுச் சூழுலுக்குத் தீங்கிழைக்கும் தொழிற்சாலைகளையே தமிழகத்துகு அனுப்பி வைக்கிறது. தமிழகத்திற்குத் தேவையான, ஆக்கபூர்வமான திட்டங்களை முடக்கிவிட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய, மக்கள் விரோத திட்டங்களுக்குத் தாராளமாக அனுமதியை வழங்குவதுதான் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் பரிசு''.

https://www.vikatan.com/news/coverstory/120401-advocate-ksradhakrishnan-views-on-neutrino-and-sterlite-copper-plant-bansterlite.html

  • தொடங்கியவர்

தீவிரமாகும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள்: அரசியல் கலப்பின்றி தூத்துக்குடி மக்களின் எழுச்சி

 

28TIRAJSTERLITEVILLAGE

குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள்.   -  படம்: என்.ராஜேஷ்.

28TIJOYSTERLITE%20COLLEGE

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்ட மாணவிகள்.   -  படங்கள்: என்.ராஜேஷ்.

28TIJOYSTERLITE%20COPPER

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் இந்தியாவின் முன்னணி தாமிர உற்பத்தி ஆலையான ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்.   -  படம்: என்.ராஜேஷ்

28TIJOYSTERLITE%20KRISHNAMOORTHY

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி   -  THE HINDU

28TIJOYSTERLITE%20Kumareddiyarpuram

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த 44 நாட்களாக மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தை நடத்திவரும் பொதுமக்கள்.   -  படங்கள்: என்.ராஜேஷ்

28TIJOYSTERLITE%20Porattam

தூத்துக்குடியில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் மில்லர்புரத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்துக்கு தன்னெழுச்சியாக சாலையில் திரண்ட உள்ளூர் மக்கள்.

28TIRAJSTERLITEPROTEST

குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அ.குமரெட்டியாபுரம் கிராமத்தினர்.   -  படங்கள்: என்.ராஜேஷ்.

28TIRAJSTERLITEPROTEST01
28TIRAJSTERLITEPROTEST02
28TIRAJSTERLITEVILLAGE

குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள்.   -  படம்: என்.ராஜேஷ்.

28TIJOYSTERLITE%20COLLEGE

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்ட மாணவிகள்.   -  படங்கள்: என்.ராஜேஷ்.

வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கம் ஸ்டெர்லைட் காப் பர் நிறுவனம். தூத்துக் குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலை கடந்த 1994-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996 முதல் உற்பத்தியை தொடங்கியது.

இந்தியாவில் உள்ள முன்னணி தாமிர உருக்காலையான இந்த ஆலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து தாமிர தாதுவை இறக்குமதி செய்து, அதனை உருக்கி தாமிரம் பிரித்தெடுக்கப்படு கிறது. ஆலையின் முக்கிய உற்பத்தி பொருட்கள் தாமிர காத்தோடு (cathode) மற்றும் தாமிர கம்பிகள் ஆகும். ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமி ரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தாமிரத்தை தவிர இணை பொருட்களான கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஜிப்சம் போன்றவையும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. நாட் டின் தாமிர தேவையில் பெரும் பகுதியை ஸ்டெர் லைட் நிறுவனம் பூர்த்தி செய்கிறது.

இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எனக் கூறி ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த எதிர்ப்புகளை அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் முறியடித்து ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது.

 

ஆலை விரிவாக்கம்

தாமிரத்தின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஆலையை விரிவாக்கம் செய்ய ஸ்டெர்லைட் நிறுவனம் முடிவு செய்தது. கூடுதலாக, ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஆலையை நிறுவ முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த விரிவாக்கத்துக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் முறையாக பெற்றுவிட்டதாக ஸ்டெர்லைட் நிறுவனம் கூறுகிறது.

ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள், ‘ஏற்கெனவே உள்ள ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆலை விரிவாக்கத்தால் பாதிப்பு மேலும் இரு மடங்கு அதிகரிக்கும். இதனால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்’ எனக் கூறி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

அரசியல் கட்சிகள் ஆதரவு

ஆலைக்கு அருகிலிருக்கும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 44-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஊரில் உள்ள வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பந்தல் போடக்கூட போலீ ஸார் அனுமதி மறுப்பதாக கூறி திறந்தவெளியில் அமர்ந்து இரவு பகலாக அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நேற்று முன்தினம் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட பல் வேறு தரப்பினர் ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை கைவிடக் கோரியும், ஏற்கெனவே உள்ள ஆலையை மூடக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாமக தலைவர் ஜி.கே. மணி நேற்று கிராம மக்களை சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களும் தற்போது பங்கேற்றுள்ளனர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். நேற்று, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் கோரம்பள்ளம் அரசு ஐடிஐ மாணவர் கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தி வரும் எம்.கிருஷ்ணமூர்த்தி `தி இந்து’ நாளிதழிடம் கூறிய தாவது:

ஸ்டெர்லைட் ஆலை நீர், நிலம், காற்று, நிலத்தடி நீர், கடல்வளம் என அனைத்தையும் மாசுபடுத்தி வருவதால், மக்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். இந்த ஆலை யால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று, நீர், நிலத்தடி நீர், நிலத்தில் ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருப்பதாக அரசு நிறுவனங்களே தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளன. புற்றுநோய், தோல் நோய், மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு நோய்களால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு புள்ளி விவரங்களிலேயே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆபத்துகள் தொடர் பாக ஆவணப்பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆலை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கையில் உள்ள தகவல் கள் அனைத்தும் பொய்யானவை. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 70 சதவீதம் வேலைவாய்ப்பு என்பதும் பொய். இங்கு பணிபுரிபவர்கள் 80 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பொருளாதார வளர்ச்சி என்பதும் ஏமாற்று வேலை.

 

சந்ததியை காக்க போராட்டம்

எனவே, தங்கள் உயிரைக் காக்க, எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க மக்கள் போராடுகிறார்கள். குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடங்கிய இப்போராட்டம் தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தை அடுத்தக் கட்டமாக மாநிலம் தழுவிய அளவில் கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும், ஆலையின் பாதிப்பு குறித்த தொழில்நுட்ப தகவல்களை சேகரித்து வருகிறோம். அதனை விரைவில் வெளியிடுவோம். ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு எம்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆலை நிர்வாகம் முழுமையாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டெர் லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கம்: ஆலை விரிவாக்கத்துக்கு தேவையான அனுமதிகளையும் முறையாக பெற்றுள்ளோம். சுற்றுப்புற பகுதிகளின் வளர்ச்சி மற்றும் அப்பகுதி மக்களின் நலனே எங்களது பிரதான நோக்கம். ஸ்டெர் லைட் ஆலையில் இருந்து எந்த கழிவுகளும் வெளியேற்றப்படுவதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் கழிவுகளை மறுசுழற்சி செய்து இணை பொருட் கள் தயாரிக்கிறோம். மேலும், நிலத் தடி நீரையோ, தாமிரபரணி ஆற்று தண்ணீரையோ பயன்படுத்தப் போவதில்லை. முற்றிலும் கடல்நீரை குடிநீராக்கியே பயன் படுத்தவுள்ளோம்.

மேலும், எங்களுக்கு தேவையான மின்சாரத்தை எங்களது அனல்மின் நிலையத்தில் இருந்தே பெற்றுக் கொள்வோம். 4 மடங்கு உற்பத்தி திறன் கொண்டதாக விரிவாக்கம் செய் யப் போவதாக கூறுவது வதந்தி. தற்போது, 4 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 4 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படவுள்ளது. மேலும், ஆலையில் 70 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பணியாற்றுகின்றனர். விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 2 ஆயிரம் பேர் நேரடியாகவும் 20 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை பெறுவார்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆன் லைன் மூலம் 24 மணி நேரமும் நேரடியாக கண்காணிக்கிறது. எனவே, எந்தவித விதிமீறலுக்கும் வாய்ப்பில்லை. மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் நோய் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. வேண்டுமென்றே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

 

அதிமுக எம்எல்ஏ எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக ஆளும் கட்சி எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநா தன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நோக்கம் ஸ்டெர்லைட் போன்ற ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகள் இருக்கக் கூடாது என்பதுதான். எனவே, ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளை உடனடியாக மூட வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட் ஆலை யை தடை செய்து, விரிவாக்க பணி யை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர் பாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேற்று கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்பது தவறான கருத்து. இந்த ஆலை புதிதாக நிறுவப்படவில்லை. ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. தற்போது விரிவாக்கம் செய்வதில் தங்களுக்கு பிரச்சினை இருப்பதாக கூறி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்கள் போராடி வருகின்றனர். இதனை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

ஆலை நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கை பெறப்பட்டு, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அரசு நிச்சயம் நல்ல தீர்வை ஏற்படுத்தும். மாநில அரசின் கருத்தை கேட்டு இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மத்திய அரசு நேரடியாக அனுமதி அளித்துள்ளது. இதில் மாநில அரசின் பங்கு இல்லை. அதேநேரத்தில் திட்டத்தை அமல்படுத்துகின்ற நேரத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் நிச்சயமாக அதனை எதிர்த்து, அந்த திட்டம் வராமல் இருப்பதற்கான பணிகளை மாநில அரசு செய்யும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

ஸ்டெர்லைட் மட்டும் ஏன்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்ல, மேலும் சில மோசமான அபாயகரமான ரசாயன ஆலைகளும் செயல்படுகின்றன. தூத்துக்குடியை சுற்றி சுமார் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றாலும் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மட்டும் போராட்டம் வெடித்திருப்பது ஏன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுதொடர்பாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “எந்த அபாயகரமான தொழிற்சாலைகளும் தூத்துக்குடியில் இருக் கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. ஆனால், உச்சக்கட்ட பாதிப்பு ஸ்டெர்லைட் ஆலையால் தான் ஏற்படுகிறது என்பதால் அதற்கு எதிராக முதலில் களம் இறங்கி யுள்ளோம்” என்று பதில் அளித்தார்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article23370286.ece

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம் உருவெடுத்தது ஏன்? #GroundReport

 

மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டமும் பொதுக்கூட்டமும், கடந்த 20 ஆண்டுகளாக அந்த ஆலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம். தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு இந்தப் போராட்டம் உருவெடுத்தது ஏன்?

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தாமிரத் தாதிலிருந்து தூய தாமிரத்தைப் பிரித்து கம்பிகளாக மாற்றுவது, அதன் துணைப் பொருட்களான அமிலத்தை பிரித்தெடுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டுவருகிறது.

இந்த ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக்கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாகவே போராடிவருகின்றனர்.

இந்த நிலையில், தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்ட மேலும் ஒரு ஆலையை அருகில் உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை ஸ்டெர்லைட் காப்பர் மேற்கொண்டுள்ளது.

இந்த தகவல் அருகில் உள்ள கிராமங்களில் பரவியதும், அவர்கள் அதனை எதிர்த்து போராட்டத்தைத் துவங்கத் திட்டமிட்டனர். பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து அ. குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களுமாக சுமார் 300 பேர் திரண்டு எம்.ஜி.ஆர். பூங்கா முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார்-ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், போராட்டத்தை கைவிட மறுத்த பொதுமக்கள், அந்தப் பூங்காவில் குடியேற முயன்றனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த 271 பேரை காவல்துறை கைதுசெய்து பிறகு விடுவித்தது. 8 பேர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.

"அந்தப் போராட்டத்தைக் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் கையாண்ட விதம் பெரும் கோபத்தை எங்களிடம் தூண்டியது" என்கிறார்கள் அ. குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்தவர்கள்.

"எங்கள் தொழிற்சாலையால் புற்றுநோய் ஏற்படவில்லை"

இதற்குப் பிறகு, அ. குமரெட்டியாபுரத்திலேயே ஒரு வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து தொடர் போராட்டத்தை நடத்த ஆரம்பித்தனர். அந்தத் தொடர் போராட்டம் தற்போதுவரை 45 நாட்களையும் கடந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான் மார்ச் 9ஆம் தேதியன்று தூத்துக்குடியில் ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்குக் காவல்துறை அனுமதி மறுக்கவே போராட்டக்காரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதற்கிடையில், மார்ச் 17ஆம் தேதியன்று போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கோரி மீண்டும் காவல்துறையையும் அணுகினர்.

மார்ச் 14ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது. ஆனால், 17ஆம் தேதி மிக அருகில் இருந்ததால், இந்தப் பொதுக்கூட்டத்தை மார்ச் 24ஆம் தேதிக்கு போராட்டக்காரர்கள் தள்ளிவைத்தனர்.

இருந்தபோதும், இந்தப் போராட்டத்தை நடத்த காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்ததாக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழிடம் குற்றம்சாட்டினார். "ஊர்வலம் நடத்தக்கூடாது, வாகனங்களில் ஆட்களை அழைத்துவரக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்தது காவல்துறை. ஆனால், நீதிமன்ற உத்தரவில் அப்படியேதும் இருக்கவில்லை" என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

ஸ்டெர்லைட்: தமிழகத்தை உலுக்கிய ஒரு போராட்டத்தின் கதை

இதையடுத்து, மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி நகரில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. முந்தைய போராட்டங்களைப் போல அல்லாமல் இந்த முறை வணிகர் சங்கங்களைச் சேர்ந்தவர்களிடமும் சென்று போராட்டக்காரர்கள் ஆதரவு கோரினர்.

"தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டங்களில் பொதுவாக வணிகர் சங்கங்கள் பங்கேற்பதில்லை. இந்தத் தொழிற்சாலைக்கு எதிராக இப்பகுதி மக்கள் நீண்ட காலமாகப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். ஆகையால், இந்தப் போராட்டங்களில் பங்கேற்க வேண்டுமென முடிவுசெய்தோம்" என்கிறார் வணிகர் சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த ராஜா.

இதையடுத்து போராட்டம் நடக்கும் தினத்தன்று, தூத்துக்குடி, ஸ்ரீ வைகுண்டம், புதியமுத்தூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் கடைகளை முழுமையாக மூடுவது என்று முடிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு, உப்பு உற்பத்தியாளர்கள், தூத்துக்குடி வர்த்தகர் சங்கம், ஆட்டோ ரிக்ஷா யூனியன்களும் இதில் பங்கேற்க முடிவுசெய்தனர்.

மார்ச் 24ஆம் தேதியன்று சிதம்பரம் நகர் பேருந்து நிலையம் அருகில் இந்தப் பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு வாகனத்தில் ஆட்கள் வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதால் வாகனங்கள் வெகுதூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டன.

அந்த வாகனங்களில் வந்தவர்கள், அதிலிருந்து இறங்கி பொதுக்கூட்ட மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். இதுதான் சிறு ஊர்வலங்களைப் போல காட்சியளித்தது.

மாலையில் பொதுக்கூட்டம் துவங்கியபோது சாலையே தெரியாத வண்ணம் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடியிருந்தனர். "இப்படி ஒரு கூட்டம் கூடுமென நாங்களே எதிர்பார்க்கவில்லை. இத்தனைக்கும் எந்த அரசியல்கட்சியும் இதில் பங்கேற்கவில்லை. பொதுமக்களும் வணிகர்களும் மட்டுமே இதில் பங்கேற்றனர்" என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

ஸ்டெர்லைட்

சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்திற்குப் பிறகுதான், ஊடகங்கள் இந்த விவகாரத்தைக் கவனிக்க ஆரம்பித்ததால், ஊடகங்கள் மீதும் இப்பகுதி பொதுமக்களுக்குக் கோபம் இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, பொதுக்கூட்டம் நடந்ததற்கு அடுத்த நாள், தூத்துக்குடியில் வெளியாகும் பல நாளிதழ்களில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கமளிக்கும் ஒரு விளம்பரமும் இடம்பெற்றது. இது ஊடகங்கள் மீதான கோபத்தை மேலும் அதிகரித்தது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும், குறிப்பாக நாளிதழ்களை வாங்கக்கூடாது என்றுகூறி பிரச்சாரங்கள் துவங்கப்பட்டிருக்கின்றன.

அ. குமெரெட்டியாபுரத்தில் போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில், இந்த போராட்டத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று கலந்துகொள்ளப்போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். அரசியல் கட்சிகள் பலவும் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளித்திருக்கின்றன.

1996ன் பிற்பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்ததிலிருந்தே சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இதனை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2013 மார்ச் 23ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்களுக்கு மூச்சுத் திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டது.

இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது. அப்போதும் போராட்டங்கள் நடைபெற்றன. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஒப்புதலையடுத்து மீண்டும் இந்தத் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தது.

தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்திருக்கும் இந்த ஸ்டெர்லைட் ஆலை, வருடத்திற்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் துணைப் பொருட்களாக கந்தக அமிலமும் பாஸ்போரிக் அமிலமும் உற்பத்தியாகின்றன. தொழிற்சாலைக்கு அருகிலேயே 160 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள அனல் மின் நிலையத்தையும் ஸ்டெர்லைட் இயக்கி வருகிறது.

http://www.bbc.com/tamil/india-43589942

  • தொடங்கியவர்

ஸ்டெர்லைட் போராட்டம்: குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் - கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

கமல்ஹாசன்படத்தின் காப்புரிமைTWITTER/MAIAMOFFICIAL

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக கடந்த நாற்பது நாட்களுக்கும் மேலாக அ.குமரெட்டியாபுரம் கிராம பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

இந்த ஆலை சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது. இந்த ஆலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது என்பது மக்களின் குற்றச்சாட்டு.

பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த கூட்டத்தில் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டனர் என்கின்றனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர்.

கமல்ஹாசன்படத்தின் காப்புரிமைTWITTER/MAIAMOFFICIAL

மக்கள் செய்வார்கள்

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன், "நான் ஓட்டுக்காக இங்கு வரவில்லை. நான் அரசியல்வாதியாகவோ அல்லது திரைப்பட நடிகனாகவோ இங்கு வரவில்லை. ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன்." என்றார்.

கமல்ஹாசன்படத்தின் காப்புரிமைTWITTER/MAIAMOFFICIAL

மேலும் அவர், "மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. என் குரல் எங்கெல்லாம் கேட்குமோ அங்கெல்லாம் இந்த பிரச்சனை குறித்து என் குரலை எழுப்புகிறேன்" என்றார்.

"மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும். குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள்" என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-43609854

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.