Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசை - அரசியல் - பாட்டு

Featured Replies

இசை - அரசியல் - பாட்டு

-பேராசிரியர் க. பூரணச்சந்திரன்

இசை மொழி கடந்தது

1840-களில் முதன்முதல் தமிழிசை இயக்கம் உருவானபோது, நிறையப்பேர் அதை எதிர்த்தார்கள். அவர்களது `ஆர்க்யுமென்ட்' இது இசைக்கு பாஷை எதற்கு? `ஸ்ருதி மாதா, லய பிதா' (இசைக்கு ஸ்வரங்களே தாய், தாளமே தந்தை). அப்படியிருக்கும்போது தமிழில் பாடினால் என்ன, தெலுங்கில் பாடினால் என்ன, இந்தியில் பாடினால் என்ன? இதற்கு தமிழிசை இயக்கக்காரர்களும், தமிழிசை இயக்கத்தை ஆதரித்த கல்கி, இராஜாஜி போன்றவர்களும் என்னென்ன வாதங்களை எதிராக வைத்தார்கள் என்பதற்குள் நாம் போகவேண்டாம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்போம். சரி, ஐயா, இசைக்கு பாஷை இல்லை என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படியானால் தெலுங்கில் தான் பாடுவோம் என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள்? தமிழிலும் - அல்லது தமிழ்நாட்டில் தமிழ் முதன்மையான மொழி என்றால், தமிழில் மட்டும் - பாடினால் என்ன? உடனே சொல்லிவிடுவார்கள் - தமிழில் பாட்டுகளே இல்லை என்று. இப்போது இப்படிச் சொல்பவர்களுக்கு ஒரே ஒரு விடை - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், `தமிழிசைக் களஞ்சியம்' என்ற பெரியலும் `தமிழிசைப் பாடல்கள்' என்ற பெயரிலும் ஏராளமாகப் பாட்டுகளைத் தொகுத்து (பெரும்பாலும் பக்திப்பாட்டுகள்தான் ! தண்டபாணி தேசிகர், சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்கள் பேராசிரியர்களாக இருந்த இடமல்லவா!)

இவையொருபுறம் இருக்கட்டும், இவற்றின் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? பழங்காலத்திலிருந்தே தமிழில் இசை இருந்தது. அதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. பரிபாட்டுகளும், சிலப்பதிகாரக் கானல்வரி, வேட்டுவரி, குன்றக்குரவை போன்ற பாட்டுகளும் இதற்கு ஏராளமான சான்றுகளை அளித்திருக்கின்றன. தேவார மூவர், நாலாயிர ஆழ்வார் பாட்டுகளில் அக்காலத்தில் வழங்கிய பிரபலமான இராகங்கள் (பழந்தமிழில் `பண்கள்') ஏறத்தாழ 150-க்கும் மேல் கிடைக்கின்றன.

தமிழிசை கர்னாடக இசையான வரலாறு

பழங்காலத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்படுகின்ற யாழ் என்ற இசைக்கருவி (சகோட யாழ், செங்கோட்டி யாழ், மகர யாழ் என்றெல்லாம் அதில் பல்வகை) காணாமலே போயிற்று. சிலர் அது தற்போதைய வீணையாக உருமாறிவிட்டது என்கிறார்கள். இது ஒரு புறமிருக்க, பக்திக்காலம் வரை பிரபலமாக இருந்த தமிழ் இசை, எப்படி கர்நாடக இசையாக மாறியது? பிற்காலப் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னால், தமிழகம் விஜயநகர ஆட்சிக்குள்ளாயிற்று. சிலகாலம் நேரான விஜயநகர ஆட்சிக்குப் பிறகு அவர்களது பிரதிநிதிகளான நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டது. விஜயநகர வம்சம், அரவீடு வம்சம், சாளுவ வம்சம் என்ற தெலுங்கர்களையும் கன்னடர்களையும் ஆட்சியாளர்களாகக் கொண்டது. இது அன்றி செஞ்சி, தஞ்சை போன்ற இடங்களில் மராட்டிய ஆட்சி வேறு. இதற்கும் மேலாக வடதமிழ் நாட்டில் முகலாய ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளாக உருதுபேசும் `நவாப்பு'களின் ஆட்சி. ஆங்கிலேயர் வந்து ஒன்றுபடுத்தும் வரை ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற அந்நிய மொழியினரின் ஆட்சி தமிழ் மக்களின் சுதந்திர உணர்வையும், விரத்தையும், அவர்களது கலைகளையும், கலாச்சாரத்தையும் அழித்துவிட்டது. தெலுங்கு நாயக்கர்கள் தெலுங்கு இசையையும், கர்நாடக விஜயநகர ஆட்சியாளர்கள் கன்னட இசையையும் ஆதரிப்பதுதானே இயல்பாக நடைபெறக் கூடியது? அதுதான் நடந்தது. வேங்கட மகி, சாரங்கதேவர் போன்ற கன்னட இசையாசிரியர்கள், தமிழ் இசையை `கர்நாடக' இசையாக உருமாற்றி அமைத்தார்கள். அதைக் கற்றுக் கொள்வதிலும் சம்பிரதாயங்களை ஏற்படுத்தினார்கள். சங்கராபரணம், ஹரிகாம்போதி என்று இன்று வழங்கப்படும் இராக அடிப்படையில் தமிழிசை பயிற்றுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை ஒரே சீராக `மாயமாளவ கௌளை' என்னும் ராக அடிப்படையில் பயிற்றுவிக்க ஸ்வரவாணி (சரளி) வரிசைகளெல்லாம் ஏற்படுத்தி, சீர்படுத்தி அமைத்தவர்கள் இவர்களே. இதற்கு அனுசரணையாகக் கீதங்கள், வர்ணங்கள், கீர்த்தனைகள் போன்றவற்றை இயற்றி ஆரம்பித்து வைத்தார் புரந்தரதாசர். இப்படி இவர்களது முயற்சிகளும் இவற்றிற்கு கன்னட தெலுங்க ஆட்சியாளர்களின் ஆதரவும் ஆட்சிக்கு வால்பிடிப்போரின் பயிற்சிகளும் என தமிழிசை முற்றிலும் `கர்நாடக' (கன்னட-தெலுங்கு) இசை ஆகிவிட்டது. இதற்கு ஏற்றார் போல் தெலுங்கு கன்னட பார்ப்பனர்கள் பலர் தமிழகத்தில் அரசின் ஆதரவை ஒட்டிக் குடியேறினர். அந்த வம்சாவளியில் வந்து, திருவையாற்றில் வாழ்ந்து வந்த `தியாகப் பிரம்மம்' தான் ஒரேயடியாகத் தமிழிசையை ஒழித்துக்கட்டி தெலுங்கை மட்டும் வாழ வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார். முத்துஸ்வாமி தீட்சிதர் சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் இயற்றினாலும், ஸ்வாதித் திருநாள் மலையாளத்தில் பாட்டுகள் பாடினாலும், தியாகராஜரின் செல்வாக்கை எவரும் மிஞ்சமுடியாமல் போய்விட்டது. இதற்கிடையில் தான் பல தமிழ்க் கீர்த்தனை முயற்சிகள், இந்து சமயக் கீர்த்தனைகள் மட்டும் ஏன், கிறித்தவ சமய கீர்த்தனைகளும் வேண்டுமே என்று தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் போன்ற சிலர் முயற்சி செய்தார்கள். பிரதாப முதலியார் சரித்திரம் எழுதி நாவல் உலகத்தைத் திறந்துவிட்ட மயூரம் வேதநாயகம் பிள்ளை `சர்வசமயக் கீர்த்தனைகள்' எழுதினார். ஆனால் இவையாவும் பாடுவாரின்றிப் பரணில் கிடக்கின்றன.

இசை வேளாளர்களின் பங்களிப்பு

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். தமிழிசை பார்ப்பனர்களுக்குரிய இசையாகவே என்றைக்கும் இருந்தது இல்லை. பழங்காலத்திலிருந்து தமிழிசையைக் காப்பாற்றி வந்தவர்கள் இசை வேளாளர்கள், ஓதுவார்கள், தம்பிரான்கள் போன்றவர்கள்தான். ஆனால் பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்தது, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டது. இசை வேளாளர்கள், நாதசுரம்-தவில் என்னும் கடினமான கருவிகளுக்கென்றே ஒதுக்கப்பட்டார்கள். `மங்களமாக' அவர்களுக்குத் திருமணப் பந்தலில் மட்டும் இடம் வழங்கப்பட்டுவிட்டது. தஞ்சை நால்வர் எனப்படும் பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேல் ஆகியோர் அறிமுகப்படுத்திய வயலின், கர்நாடகக் கச்சேரிகளுக்கு முக்கியமானதாயிற்று. அதிகமான உழைப்பு தேவைப்படாத வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களைப் பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டார்கள். வாய்ப்பாட்டில் அவர்களுக்கு மூன்று ஸ்தாயிகளிலும் உச்சம்வரை எட்டி மூச்சடக்கிப் பாடமுடியாவில்லை என்றாலும், பிறரை கர்நாடக வாய்ப்பாட்டுப் பக்கமே வரவிடாமல் செய்தார்கள். மதுரையில் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற இசைப்பள்ளியில் ஒரு கிறிஸ்தவப் பெண் பயிலப் போனபோது `உனக்கும் கர்நாடக இசைக்கும் என்ன சம்பந்தம்? போய்வா' என்று அனுப்பியது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளம். தண்டபாணி தேசிகர், கே.பி. சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன். . . இவர்கள் போன்று தமிழ்ச் சொற்களைத் தெளிவாக உச்சரித்து ஓங்கிய குரலில் பாடுவோரை பலருக்குப் பிடிப்பதேயில்லை.

கர்னாடக இசையும் இந்துஸ்தானி இசையும்

அதே சமயம், மதுரை மணி ஐயர் போன்றவர்கள்-குரல்வளம் இல்லையென்றாலும், வெறும் "டெக்னிக்குகள்" மூலமாகவே புகழ்பெற்றார்கள். உண்மையில் தமிழ்நாட்டுப் பாப்பனர்களுக்கு, தங்கள் குரலை வளப்படுத்தி மிகச் சிறப்பாகப் பாடவேண்டுமென்ற எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை. அதற்கான முயற்சிகளையும் அவர்கள் எடுத்துக் கொண்டதில்லை. இந்துஸ்தானி சங்கீதத்தில் குரல்வளத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், கர்நாடக இசையில் ஒருபோதும் அளிக்கப்பட்டதில்லை. இதற்கும் சாதி ஆதிக்கமே முக்கிய காரணம். இந்துஸ்தானி இசையைப் பார்ப்பனர்கள் மட்டும் வளர்க்கவில்லை, அது வெறும் `இந்து' இசையாகவோ, "பக்தி" இசையாகவோ மட்டுமில்லை-முஸ்லீம்கள் அதை வளர்த்ததில் முன் நிற்கிறார்கள். தென்னகத்திலோ கர்நாடக இசையை ஒரு சாதியினர் தங்களது கையகப்படுத்திக் கொண்டார்கள்.

தமிழிசைப் பாரம்பரிய ஆய்வு

இதெல்லாம் போக, இன்று செய்யவேண்டியது என்ன? ஏன் என்றால் வரலாற்று நிகழ்ச்சிகளை-தேர்ந்துவிட்டவைகளை இனி மாற்றமுடியாது; இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்வதே தக்கது. மேற்கண்ட செய்திகள் சொல்லப்பட்ட காரணம், ஒரு சாதியின் மீது துவேஷம் உண்டாக்குவதாக அல்ல. நமது பாரம்பரியம் ஏன் அற்றுப் போயிற்று என்பதை உணர்ந்து கொள்வதற்காகத்தான். தமிழ்ப்பாரம்பரியத்தை உயிர்ப்பிக்க வேண்டித்தான் தமிழிசை இயக்கம் தோன்றிற்று. இதற்கு ஒர நல்ல கோட்பாட்டு அடித்தளம் அமைத்துத் தந்தவர்கள் இருவர்-ஒருவர், "கர்ணாமிர்த சாகரம்" என்னும் இசையிலக்கண நூலை எழுதிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்! இன்னொருவர் யாழ் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் செய்து `யாழ்நூல்' எழுதிய இலங்கை மயில்வாகனரான விபுலாநந்த சுவாமிகள். இவர்களது இசை ஆராய்ச்சிப் பாரம்பரியத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல குடந்தை சுந்தரேசன், மதுரை வீ.ப.கா. சுந்தரம் முதலியோர் முயன்றாலும் அதிக பலனளிக்கவில்லை. இன்று, தமிழிசை இயக்கமும் பார்ப்பனச் சார்புடையதாகிவிட்டது என்ற குரல் ஒலிக்கிறது. வேறு எப்படியிருக்க முடியும்? தமிழிசை இயக்கம், தமிழ்ப்பாட்டுகள் பாடவேண்டும், என்பதில் அக்கறை செலுத்தியதே அன்றி, அதன் உள்ளடக்கத்திலே மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கவில்லை. பக்திப்பாட்டுகள்தான், தெலுங்கில் பாடப்படுவதற்குப் பதிலாக தமிழில் பாடப்படவேண்டும் என்பதுதானே அவர்களது முயற்சி? பக்தி மரபு பெரும்பான்மையும் பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்ட ஒன்றாதலின், வேறெப்படி அமைய முடியும்? தமிழில் சித்தர்கள் மரபும், பார்ப்பனீயத்தை எதிர்த்த வள்ளலார் போன்றோரின் மரபும் தான் அவர்கள் சுவீகரித்தது.

இன்று தமிழிசை எப்படி இருக்க வேண்டும் அல்லது மாற வேண்டும்? சமூகம் தமிழ்ப்பாட்டுகளில் இடம்பெறவில்லை. சமூக உள்ளடக்கம் இன்றைக்குத் தமிழ் இசையில் அடிப்படையாகத் தேவை. பக்தி மட்டும் இருந்தால் போதாது. பக்திப் பாடல்களே இன்றைக்கும், என்றைக்கும் தேவையெனப் பாடிக் கொள்பவர்கள் பாடிக்கொள்ளட்டும். இசை பெரும்பாலானவர்களைச் சேர வேண்டும் என்றால் வெறும் பக்தி உள்ளடக்கம் மட்டும் போதாது. அதில் சமூக உள்ளடக்கம்-அன்றாட வாழ்க்கையில் மக்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள், கசப்புகள், மகிழ்ச்சிகள் அத்தனையும் இடம்பெற வேண்டும். நாற்பதுகளின் இறுதி, ஐம்பதுகளின் தொடக்கத்தில் வெளியான திரைப்படப்பாடல்களும், தேசியப் போராட்டத்திற்கு உதவிய நாடகப் பாடல்களும் நமக்கு ஓரளவு நல்ல நம்பிக்கையைத் தந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வருகை ஒரு மகிழ்ச்சியை அளித்தது. அதற்கு முன்னரே ஜீவாவின் பாடல்கள், தொ.மு.சி. ரகுநாதனின் பாடல்கள், கே.சி.எஸ். அருணாச்சலத்தின் ("கவிதை என் கைவாள்") பாடல்கள் எனப் பொதுவுடைமை இயக்கம் சார்ந்தோரின் பாடல்கள் இருந்தன-பரவலாக அவை பாடப்படாவிட்டாலும்கூட.

திரையுலக வாய்ப்பும் வீண் கனவானது

திரைப்படம் என்ற வெகுஜனச்சாதனம், விரைவில் கனவுகளை உற்பத்தி செய்ய மட்டுமே பாட்டுகளைக் கைவசப்படுத்திக் கொண்டது. கண்ணதாசன், வாலி தொடங்கி இன்றைய `கவிப்பேரரசர்' வரை பலரும் கனவுகளை மட்டுமே உற்பத்தி செய்யவும் அதன் மூலமாகக் கோடிக்கோடியாய்ப் பணம் குவிக்கவும் போய்விட்டார்கள். வெறும் உடலிச்சையை வெளிப்படுத்துவது மட்டுமே பாட்டுகளின் சேவை என்பது போல சினிமாத்துறை இன்று ஆகிவிட்டது. எனவே இனிமேல் திரைப்படத்தை நம்பிப் புண்ணியமில்லை.

1920-30கள் போல இன்றைக்கு நாடகப் பாட்டுகள் இயற்றப்படவோ பிரபலமாகவோ வழியில்லை-நாடகமே அழிந்துபோகும் நிலையில்தான் இருக்கிறது. நாடகப் பாட்டுகளுக்கு இன்று பயனிருக்காது.

சமூக அனுபவமும் பாடப்பட வேண்டும்

`கலைக்காவிரி' போன்ற கிறித்தவ கலைத் தொடர்பு நிறுவனங்கள், பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து தமிழிசை-நடனம்-நாடகம் ஆகியவற்றை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அவை பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற பட்டங்களையும் வழங்கவேண்டியே பாடங்களை வகுத்ததால் பார்ப்பன ரீதியிலேயே பாடம் கற்பித்து, இதே கீர்த்தனைகள், அவற்றிற்குரிய நாட்டியங்கள் எனக்காலம் போய்க் கொண்டிருக்கிறது.

மறுபுறம் நாட்டுப்புறம் நாட்டுப்புறப்பாடல்கள் யாவும் `பிசினஸ்' ஆக்கப்பட்டுவிட்டன. இன்றைக்கு நடனப் பாடலும் ஏற்றப்பாடலும் பாடுவோரைக் காண்பது கிராமங்களிலேயே கடினம். காரணம், சமூக மாற்றம், ஏற்றம் இல்லாதபோது ஏற்றப்பாட்டு எப்படி வரும்? பம்புசெட்டுப் பாட்டா பாடமுடியும்? வண்டியோட்டுக் கொண்டு தெம்மாங்கு பாடியவர்கள் மணிக்கு எண்பது கி.மீ. வேகத்தில் செல்லும் பஸ்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு என்ன செய்வது? ஆகவே பழங்கால நாட்டுப்புறக் கலைகளைக் காப்பாற்றுகிறேன், ஆதரிக்கிறேன், வளர்க்கிறேன், அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு நாட்டுப்புறத்துறைகள் பல்கலைக்கழகங்களில் உருவாயின. அவற்றில் பாடம் நடத்திய பேராசிரியர்களும் `ஆராய்ச்சி பண்ணியவர்களும்' அவற்றைப் பற்றி பேசுவதைவிட (குரல்வளமிருந்தால்) பாடி ஆடிக்காட்டினால் (நவநீதகிருஷ்ணன் ஜோடியினர், புஷ்பவனம் போன்று) நல்ல காசு கிடைக்கும் என்பதை உணர்ந்துவிட்டார்கள். அதைவிட இளையராஜா போன்றவர்கள் இந்த மெட்டுக்களை சினிமா மெட்டுக்களாக்கிக் கொண்டு, பாடல்வரிகளை மட்டும் சினிமாவுக்கேற்றாற்போல் மாற்றிக்கொண்டு இருபத்தைந்தாண்டுகளாகப் பிழைப்பு நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், அரசு அங்கீகாரம், பாராட்டு, பட்டங்கள், பணம் என்று எல்லாவற்றையும் அடைந்தார்கள். இனிமேல் நாட்டுப்புற பாட்டுகளையும் நம்பிப் பயனில்லை.

அப்படியானால் என்னதான் செய்வது?

ஒன்று, கர்நாடக இசைக்கும் நமக்கும் தொடர்பில்லை என்று கைகழுவி விட்டுவிடக்கூடாது, அப்படிச் செய்வது நமது முக்கியமான கலைப் பாரம்பரியத்தை (ஏதோ ஒருசாதி அதைக்கைப்பற்றிக் கொண்டது என்பதற்காக) புறக்கணிப்பதாகிவிடும். மேலும், யார் வளர்த்தாலும் சரி, கர்நாடக இசை பலகாலமான பயிற்சி, பாடல்கள் மூலமாக-வேறு வேலையின்றி அந்தக் கலையில் மட்டுமே ஈடுபட்ட பலர் சாதனைகள் மூலமாக-மெருகேற்றப்பட்டது. ஆகவே கர்நாடக இசையில் நிறையத் தமிழ்ப்பாட்டுகள்-இன்றைய சமூக உள்ளடக்கதோடு கூடியவை-இயற்றிப் பாடப்படவேண்டும். நாட்டுப்புற மெட்டுகள், இன்று நமக்கு கிடைத்துள்ளவற்றையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை தமிழிசை விழாக்கள் மூலமாகவும் தமிழிசைக் கச்சேரிகள் மூலமாகவும் செய்யவேண்டும். இந்தவகையில் `தமிழ் மக்கள் இசைவிழா' போன்றவை (மக்கள் இலக்கியக் கழகத்தினரால் தஞ்சையில் ஏழாம் ஆண்டாக) இவ்வாண்டும் இது கொண்டாடப்படவேண்டும். இந்த விழாக்களில் தமிழ் பக்திப் பாடல்களும் கூட அவையும் நமது பாரம்பரியத்தையும் சேர்ந்தவை-என்பதால்-இடம்பெறவேண்டும். ஏனென்றால் இன்றைக்கும் நமது மக்களில் பெரும்பாலோர்க்கு பக்தியில் நம்பிக்கை இருக்கிறது. ஆகவே அதைப் புறக்கணித்துப் பயனில்லை. வெறும் `புரட்சிகரமான உள்ளடக்கம், பார்ப்பனியப் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரானபோர்' ஆகியவற்றைக் கைவிட்டு அனைத்து மனிதர்களும்-இன்னும் கேட்டால் தமிழ்ப்பாட்டு மட்டுமே பாடவிரும்பும் பார்ப்பனர்கள் உட்படப்பங்கேற்கும் அமைப்புகள் நமக்கு வேண்டும். முதலில் பிரச்சாரமாகக் கூட அமையட்டும், பரவாயில்லை. காலப்போக்கில் பிரச்சார நோக்கமின்றி, மக்களது உண்மையான அனுபவங்களை வெளிப்படுத்தும் சமூகத்தன்மை கொண்ட பாடல்கள் வரக்கூடும். இவையும் எல்லாத்தரப்பு மக்களின் அனுபவங்களையும் பேசுபவையாக அமையவேண்டும். `இந்துத்துவத்தை' - `பார்ப்பன ஆதிக்கத்தை' எதிர்க்கிறோம் என்று சொல்லும் கிறித்துவ, முஸ்லிம் மக்கள் இவற்றில் மிக எளிதாக இணைந்து பணியாற்றலாம். இப்படி ஒரு பெரிய இயக்கமாகத் தமிழிசை இயக்கம் மாறினால், தமிழர்களது கர்நாடக இசையும் நாட்டுப்புற இசையும் இணையாக மக்களின் இசையாக மாறி எதிர்காலத்தில் வளரும்.

கர்நாடக இசையைச் சொல்லித்தாருங்கள். சரளி வரிசை, தாட்டு வரிசை முடிந்து கீதங்களுக்குப் போகும் போது, `லம்போதர லகுமிகரா' என்று புரந்தரதாசரது கீதத்தைப் பாடாமல் பாரதி அல்லது பாரதிதாசன் போன்றோரது கீதங்களையோ அல்லது சமூக உள்ளடக்கம் கொண்ட வேறு ஏதேனும் தமிழ்க் கீதத்தையோ பாடச்சொல்லித் தாருங்கள்! இதைத்தான் `கலைக்காவிரி' போன்ற கல்லூரிகள் செய்யும் என்று எதிர்பார்த்தோம், அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது. ஆங்கும் இந்த மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்யலாம். முதலில் எந்த நல்ல செயலுக்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். அதற்காக அஞ்சிவிடலாமா?

இல்லையென்றால், தமிழிசை என்ற ஒன்று இல்லை, தமிழ்நாட்டில் ஒரு சிறுபான்மையினர் பாடி வெளிநாடுகளுக்குக்கூட ஏற்றுமதி செய்யும் கர்நாடக இசை என்ற ஒன்று உண்டு, அல்லது பெரும்பான்மையோர் ரசிக்கும் சினிமாப்பாட்டுகள் உண்டு. இவை மட்டுமே உண்டு என்ற நிலைதான் உருவாகும். தமிழ்மக்கள் ஓரளவேனும் விழிப்போடிருப்பதைத்தான் `தமிழ் மக்கள் இசைவிழா' போன்ற நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. ஆனாலும் இன்னும் பரவலான முயற்சிகள் இத்துறையில் தேவை. வெறும் `அமெச்சூர்' முயற்சிகள் போதாது, இன்றைய வெகுஜனச் சாதனங்களான தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் ஒலிப்பேழைத்துறை போன்றவை அமெச்சூர் முயற்சிகளுக்காக இயங்குபவை அல்ல. நல்ல தேர்ந்த திறமைசாலியான பாடலாசிரியர்களும், தேர்ந்த திறமைசாலியான இசைக்கலைஞர்களும் இணைந்து தமிழ்ப்பாட்டுகளைச் சமூக மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தினால்தான் தமிழ் இசையில் ஒரு மறுமலர்ச்சி என்பது இனி சாத்தியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.