Jump to content

மாசு


Recommended Posts

பதியப்பட்டது

மாசு

 

 
kadhir6

எனக்கு இன்றைக்கு பள்ளிக்குக் கிளம்பவே மனம் இல்லை.
என்னமோ மிகவும் பாரமாகத்தான் இருந்தது. நினைவெல்லாம் மதுவைச் சுற்றியே இருந்தது. ஆனால் கால்கள் மட்டும் பழக்க தோஷத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றன.
இன்று உடலுறுப்பு பற்றி ஸ்கூலில், பாடம் நடத்த வேண்டும். எந்த மெட்டீரியலும் தயார் செய்து கொள்ளவில்லை. 
பஸ் வந்து நின்றது. 
அவசர அவசரமாய் ஏறிய எனக்கு நல்ல வேளை உட்கார இடம் கிடைத்தது. 
கொஞ்ச நேரம் டெக்ஸ்ட் புக்கைப் புரட்டினால், இன்று எடுக்கப் போகும் புது பாடத்தின் மெட்டிரியல்களைக் கொஞ்சம் சேகரித்துக் கொள்ளலாம்.
புத்தகத்தைப் புரட்டி, அதற்கான பக்கத்தையும் எடுத்துப் பிரித்துக் கொண்டேன்.
ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு படங்கள் வரையப்பட்டு, அவயங்கள் குறிக்கப்பட்டு தெளிவாக எழுதியிருந்தது.
முக்கியமாக நோட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் எதுவும் இல்லாமல் இருந்ததே நிம்மதியாக இருந்தது. 
"மது ஏன் என்னிடம் அப்படி பேசினாள்?' என்று எனக்குப் புரியவில்லை.
எத்தனை துடுக்குத்தனமான வார்த்தை. ஒரு தாயிடம் பேசும் பேச்சா அது?
தன் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு நல்லது, கெட்டதை ஒரு தாய்தானே அவர்களுக்கு உணர்த்தி, புரிய வைக்க முடியும்?
என் கடமையைத்தானே நான் செய்தேன்?
அதை நான் சொல்லவில்லை என்றால், என்னுடைய வளர்ப்பில் குறைதானே சொல்வார்கள்?
அடுத்தவர்களுக்காக இல்லை. என் மனசாட்சிக்கே நான் செய்வது சரியா, தப்பா என்று புரிய வேண்டாமா?
""மேடம். நீங்க இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு. என்ன யோசனையில இருக்கீங்க?'' 
கண்டக்டரின் குரல் கேட்டு இயல்பிற்குத் திரும்பினேன்.
இந்த வாரம் முழுவதும் செகண்ட் ஷிப்ட்டில் வேலை செய்து கொண்டிருப்பவராகையால், நான் இறங்கும் இடத்தை சரியாக நடத்துநர் உணர்ந்திருந்தார்.
தலைக்குள் ஏதோ தொழிற்சாலை வேலை செய்வது போல் உணர்ந்தேன்.
ஸ்டாஃப் ரூமிற்குள் வந்தவள், சோற்று மூட்டையை வைத்துவிட்டு ஹாண்ட்பேக்கையும் டேபிள் மேல் வைத்தேன்.
""வசந்தா. இன்னிக்கு ஃபர்ஸ்ட் பீரியட் உங்களுக்கு ஃபிரீ பீரியட்தானே. நான் ஹெச்.எம்.கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கிக்கறேன். என் கிளாûஸ கொஞ்சம் அட்டெண்ட் பண்ணிக்கிறீங்களா?''
""அதனால் என்ன? நானும் நேத்திக்கு ஒரு போர்ஷன் அன்ஃபினிஷ்ட் ஆகத்தான் வைத்துவிட்டு வந்தேன். அதை கம்ப்ளீட் பண்ணிக்கிறேன். டோண்ட் ஒர்ரி. ஆமா... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்புக்கு என்ன?''
என் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே நபர். சக ஆசிரியை. ஆனால் இப்பொழுது அவளிடம் எதுவும் பேச சந்தர்ப்பம் இல்லை.
""தாங்க்ஸ் வசந்தா'' என்று கூறியவள் மேஜையின் மேல் தலையைச் சாய்த்துக் கொண்டு கவிழ்ந்தேன். மீண்டும் காலையில் நடந்த சம்பாஷணையே மனதைப் பிசைந்தது.

""மது, நேத்து ராத்திரி பன்னிரெண்டு மணி வரைக்கும் யார்கிட்ட குசுகுசுன்னு பேசிக்கிட்டிருந்த?''
""என் ஃபிரண்ட். என்னோட க்ளாஸ்மேட். நேத்திக்கு அவள் காலேஜுக்கு வரலை. அதனால என்ன நடந்ததுன்னு கேட்டுக்கிட்டிருந்தா?''
""நேத்துக்கு அவள் வரலை சரி. தினமுமே யாராவது வர மாட்டாங்களா? அப்படி என்னதான் பேசுவ ராத்திரி நேரத்துல? கொஞ்சம் கூட நல்லா இல்ல. நானும் கேக்கக்கூடாது கேக்கக்கூடாதுன்னு பொறுமையா போயிட்டிருக்கேன்''.
""இத பாருமா... உன் சந்தேகத்துக்கெல்லாம் நான் ஆளில்லை. ஒரு காலேஜ் போற பொண்ணுக்கு நூறு விஷயங்கள் இருக்கும். அதெல்லாம் உனக்கு புரியாது''.
""எனக்குப் புரிய வேண்டாம். உனக்கு செய்யறது நல்லதா, கெட்டதா என்று புரிஞ்சால் போதும்''.
""உனக்கு நான் ஏதோ ஆம்பிளைகிட்ட பேசறதா நினைப்பு. ஒன்னு பண்ணு. இந்தியாவை சோமாலியாவாக நெனச்சுக்க. "க்ளிட்டோரியஸ்'-ஐ வேணா சர்ஜரி பண்ணி ரிமூவ் பண்ணிடு. நான் தப்பே பண்ணாமல் நல்ல பொண்ணா உன் மனசு போல இருப்பேன்''.
அப்பொழுது எனக்கு அர்த்தம் புரிந்தும், புரியாதவள் போல்,
""எக்கேடோ கெட்டு ஒழி'' என்று கூறிவிட்டு மெüனமாக இருந்துவிட்டேன்.

 

உலகம் புகழும், ஆப்பிரிக்க மாடல் அழகியான "வாரிஸ் டைரி'யின் வாழ்க்கைக் குறிப்பைப் படித்திருக்கிறேன்.
பெண்மையின் குறியீடான "க்ளிட்டோரியஸ்' என்னும் உறுப்பை சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் ஐந்து முதல் பத்து வயது வரை இருக்கும் பெண் குழந்தைகளுக்கு எடுத்து விடுவார்களாம். உணர்ச்சிகளுக்கு அடிகோலும் அவ்வுறுப்பு அகற்றப்பட்டபின், பெண்களுக்கு உணர்ச்சி காரணமாகத் தவறு செய்யும் எண்ணம் உண்டாகாதாம். உறுப்பை எடுத்த பின் போடப்படும் தையலை, திருமணத்திற்கு முன்புதான் மீண்டும் பிரித்து விடுவார்களாம்.
எவ்வளவு ஈஸியாக வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டாள். ஆப்பிரிக்க நாடுகளில் வேண்டுமானால் "க்ளிட்டோரியஸ்' சிதைவு என்பதைப் புனிதச்சடங்காக ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தியாவில் பெண்களுக்கு "சுன்னத்' செய்யும் வழக்கம் இல்லையே!
எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... பெற்றவளிடம் பேசும் பேச்சா அது?
ஏன் இந்நாளில் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் எதை சொன்னாலும் ஆர்க்யூ செய்கிறார்கள் என்று புரியவில்லை.
""மைதிலி... ஃபர்ஸ்ட் அவர் முடிஞ்சிடுச்சு. அடுத்த அவரும் உங்களுதுதான். எனக்கு செகண்ட் அவர் க்ளாஸ் இருக்கு. அதனால் நான் கிளம்பறேன்''
வசந்தா மிஸ் குரல் கேட்டபிறகு தான் நான் நிதானத்திற்கு வந்தேன். 
ஒரு மடக்கு தண்ணீரை வாயில் விட்டுக் கொப்பளித்து அப்படியே விழுங்கினேன். 
சயின்ஸ் புத்தகம் சகிதம் கிளாஸ் ரூமிற்குள் நுழைந்தேன்.
""ஸ்டூடண்ட்ஸ். டேக் பேஜ் நம்பர் தர்ட்டிடூ'' என்று கூறிவிட்டு பாடம் எடுக்கத் தொடங்கினேன். 
ஆண் உறுப்பைப் பற்றிக் கூறிமுடிக்கும்வரை வகுப்பில் எந்த சலனமும் இல்லை. இரு பாலரும் அமைதியுடனேயே கேட்டுக் கொண்டார்கள்.
""அடுத்து பெண்ணின் உறுப்பு'' என்று ஆரம்பித்தவுடனேயே ஆண் பிள்ளைகள் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களின் விழிகளில் ஏதோ ஒரு வகையான ஆர்வம் தெரிந்தது.
பெண் பிள்ளைகள் தலையைக் கவிழ்ந்து கொண்டார்கள். அவர்கள் ஆண்கள் பக்கம் திரும்பாமலே ஒருவருக்கொருவர் சங்கேதமாக எதையோ பரிமாறிக் கொண்டார்கள். 
எனக்கே கொஞ்சம் தர்மசங்கடமான நிலைதான். வேகமாக பாடம் நடத்தினேன். 
""மிஸ்... எப்படி குழந்தை பிறக்குது?''
""மிஸ் எங்க அக்கா கூட வயசுக்கு வந்திட்டான்னு சொல்றாங்க. எப்படி மிஸ்?''
""மிஸ் அப்படினா கல்யாணம் பண்ணலைன்னா குழந்தை பிறக்காது இல்ல மிஸ்''
""மிஸ், இந்த சம்பத்தைப் பாருங்க மிஸ். அசிங்கமா பேசறான்?''
என்னமோ தெரியவில்லை. இந்த ஆண் வாரிசுகளே பெண்களின் தொடைகளுக்கிடையில் ஒரு மர்ம தேசமே அடங்கி இருக்கிறாற்போல் நினைத்துக் கொள்கிறார்கள்.
அதைப் பற்றி பேசுவதிலும், "விட்' அடிப்பதிலும் அவர்களுக்கு அலாதியான சந்தோஷம்.
நல்லவேளையாக இரண்டாவது அவரும் முடிந்தது.
இன்னும் இரண்டு நாட்களுக்கு ஒன்பதாம் வகுப்பு சயின்ஸ் கிளாஸ் கிடையாது.
கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளலாம்.
லஞ்ச் அவரில் வசந்தாவிடம் நடந்ததைக் கூறினேன்.
""நீங்க மனச போட்டு ரொம்ப குழப்பிக்கிறீங்க மைதிலி. உங்க பெண் மதுமதி நீங்க பயப்படுற அளவு தப்பு செய்யற பெண்ணா தெரியல. நல்லதனமா அவகிட்ட பேசிப் பாருங்க. அவ ஆங்கிளில் நின்று பாருங்க''
வசந்தா கூறியதுபோல் இன்று இரவு மதுவிடம் தன்மையாகப் பேசி பார்க்க வேண்டும்.

 

 

இரவு சாப்பாடு முடிந்தது. இருவருமே பேசவில்லை.
மதுமிதா ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். இப்பொழுது அவள் போனில் இல்லை. ""மது... அம்மா மேல கோவமா? காலையிலே ஒரே டென்ஷன். ஸ்கூல்ல வேற கொஞ்சம் கெடுபிடி ஜாஸ்தியா இருக்கு. அதான் நான் ஏதோ பேசிட்டேன்.''
""சாரிம்மா. நான்தான் உங்கிட்ட தப்பா பேசிட்டேன். எனக்கு காலேஜில ப்ராஜக்ட் காம்படிஷன். சிறந்த ப்ராஜக்ட் சப்மிட் பண்றவங்களுக்கு ஸ்பெஷல் அவார்ட் தர போறாங்களாம். அத எப்படி பண்றது, யார்கிட்ட ஹெல்ப் கேப்பது போன்ற ஒரே டென்ஷன். நீ உன் கடமையத் தான் செய்தம்மா. ஆனால் நான்தான் துடுக்குத்தனமா நடந்துக்கிட்டேன்''
""அப்படியா கண்ணே. உனக்கு என்ன ஹெல்ப் தேவைப்படுதுன்னு சொல்லு.''
""நீங்க அந்த காலத்துல வீட்டு விலக்காகும் பொழுது என்னம்மா உபயோகம் பண்ணினீங்க? துணிதானே.''
""ஆமாம்மா. அதை ஏன் கேக்கற? அப்போவெல்லாம் துணியைத்தான் மடிச்சு மடிச்சு வைச்சுக்குவோம். அத தோய்ச்சு எடுத்து காயப்போட்டு கையை கழுவினா கூட அந்த வீச்ச நாத்தம் உவ்வே...''
உடம்பே சிலிர்த்துக் கொண்டேன். ""இப்பொழுது நினைத்தாலும் குமட்டிக் கொண்டு வருகிறது.''
""சரி. அதுக்கு முன்னாடி?''
""அது என்னமோ எனக்குத் தெரியாது. ஆனா என் ஃபிரண்ட் ஒருத்தி கிராமத்திலிருந்து வருவா. அவளோட பாட்டி, துணிக்கு மேலே களிமண்ணை வச்சு, அதுக்கு மேல ஒரு துணியை வச்சுப்பாங்களாம். ஏன்னா அது ஈரத்தை உறிஞ்சுறதில்லையா? சரி இப்ப எதுக்கு அதெல்லாம். இப்பதான் சானிட்டரி நாப்கின் இருக்குல்லே. நீ ஏன் கவலைப்படறே?''
""சானிட்டரி நாப்கின் என்பதால்தான் கவலையா இருக்கும்மா. என் ஃபிரண்ட் ஒருத்திக்கு "சர்விகல் கான்சர்' வந்திருக்கும்மா! அதற்குக் காரணம் மென்ஸ்ட்ருவல் டைமில் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின் அப்படீன்னு சொல்லியிருக்காங்க.''
எனக்கு தலையைச் சுற்றியது. சானிட்டரி நாப்கின் உபயோகப்படுத்தினால் ப்ராப்ளமா?
""என்னடி சொல்றே?'' என்றேன் பதட்டத்துடன்.
""ஆமாம்மா சொல்றேன் கேட்டுக்கோ. ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட செல்லுலோஸ் கான்சரை உண்டாக்குகிறதாம். இதுல இராசயனக் கலவை இருப்பதால நிறைய தொற்றுநோய் வருகிறதாம். இந்தப் பேடில் உபயோகப்படுத்தப்படும் வாசனையைத் தரும் நுண்பொருளால் பெண்களுக்கு மலட்டு தன்மையும், பிறக்கும் குழந்தைகள் பிறவிக் கோளாறோடும் பிறக்கிறதாம்.''
""என்னடி என்னென்னமோ பேசற. பயமா இருக்கு. எங்க காலம் ஓடிப் போயிடுச்சு. உங்களையும் தங்களுக்கு அடுத்து வரப் போகும் சந்ததிகளை நினைச்சாலே பயமா இருக்கு''
""அம்மா நான் இன்னும் முடிக்கல. இப்போ ஸ்கூல், காலேஜ் போற பெண்கள் இந்த மாதிரி அசெüகர்யமான நாட்களில் தேவைப்படும் பொழுது பாத்ரூமுக்குப் போக முடியல. அந்த மாதிரி சமயத்தில நாலு மணி நேரத்துக்கு மேலே சானிட்டரி பேட் மாத்தலைன்னா "டாக்ஸிக் ஷாக் சின்ட்ரம்' என்பது தாக்கி, சில சமயங்களில் அப்பெண்ணுக்கு மரணம் கூட நேரிடலாம் அப்படீன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க''. 
""மது, இனிமேல் பேட் வாங்க வேண்டாம். பழைய துணிக்கே மாறிடலாம். நான் ஒரு சயின்ஸ் டீச்சரா இருக்கவே லாயக்கில்லை. நாளைக்குக் கூட ஸ்கூலில் ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்காரங்க வந்து ஃபிரீயா சானிட்டரி நாப்கின் டிஸ்ட்ரிபியூட் பண்ணப் போறாங்களாம். நான் என் மாணவச் செல்வங்களிடம் சொல்லி வைக்க வேண்டும்.''
""இப்ப நீ சொன்னியே, பேட் இனிமேல் வேண்டாம்னு. அதற்கு மாற்றாக துணியிலேயே பேட் செஞ்சு, மீண்டும் உபயோகப்படுத்தற மாதிரி இன்னோவேட்டிவா செய்ய வேண்டும் என்றுதான், நானும் என் ஃபிரெண்ட்ஸýம் டிஸ்கஸ் பண்ணி இந்த ப்ராஜக்ட்டை எடுத்து இருக்கோம். அதற்காக சிலரிடம் உதவி கேட்டிருக்கோம். அந்த டிஸ்கஷன் தான் இரவில் நடந்துகிட்டிருக்கு. உனக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் வீட்டு வேலை, அடுத்த நாள் பாடம் நடத்த நோட்ஸ் எடுக்கிறது, இல்லைன்னா பேப்பர் கரெக்ஷன். இன்னைக்கு மாதிரி முதலிலேயே கேட்டிருந்தா, நானும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணியிருப்பேன். இரண்டு பேருக்குமே இன்னிக்குதான் டைம் அமைஞ்சுது.''
எனக்கு ஏதோ ஒரு உத்வேகம் பிறந்தது. கை நிறைய உப்பை எடுத்தேன். அவள் நெற்றியில் விபூதியை இட்டேன். உப்பு சுற்றி திருஷ்டி கழித்தேன்''.
மேலும் தொடர்ந்தாள் மது.
""அம்மா, ஒரு பொண்ணுக்கு மட்டும் இதைச் சொல்லலை. இந்த மண்ணிற்கும் நாம் எவ்வளவு துரோகம் செய்கிறோம் தெரியுமா? ஒரு பெண் அவள் வாழ்நாளில் சராசரியாக சுமார் பதினேழாயிரம் சானிட்டரி நாப்கினை உபயோகப் படுத்துகிறாள். அவை அத்தனையும் நிலத்தடி நீரை அசுத்தப்படுத்தி தொற்றினை வரவழைக்கிறது. அவை மண்ணோடு மக்கிப் போகும் கழிவும் அல்ல. அவைகளை மறுசுழற்சி செய்ய முடியாதாம். மழைநீரை பூமியில் சேர விடாமல் தடுக்கும் ஒரு உயிர்கொல்லி.இந்த உயிர்க்கொல்லிக்காக விளம்பரம் கொடுக்க நங்கையர்கள் முன்வரக் கூடாது. அவர்களை நான் வெறுக்கிறேன். நீ என்ன சொல்றம்மா?''
என் கண்மணியை வாரி அணைத்தேன். "ட்ரிங் ட்ரிங்' என்று போன் சிணுங்கியது. ""மது ஃபோன்... உன் ஃபிரெண்ட் போலிருக்கு. போய் அட்டெண்ட் பண்ணு.''
என்னுடைய வீடு எனக்கு ஸ்வாமிமலையானது. மதுவை மனதில் பீடத்தில் அமர்த்தினேன். நான் கைகட்டி வாய்பொத்தி உபதேசம் பெறும் மாணவியானேன். 
நிச்சயம் அவளின் இந்தத் தொலைதூரச் சிந்தனையும், பார்வையும் அவளுக்கு ஒரு நல்ல பேரை சமூகத்தில் முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு சேர்க்கும்.

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வித்தியாசமான சிந்தனையுடன் எழுதப்பட்ட கதை.பிரச்சனையையும் சொல்லி தீர்வையும் தருகின்ற இதுபோன்ற கதைகள் வருவது நன்று.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.