Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்காணல்: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல்: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன்.

( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். ஒன்பது நாவல்கள் உட்பட பதினேழு நூல்களின் படைப்பாளி. அவரது நண்பரும் முதுகலை மாணவருமான அரவிந்த (தமிழ்நாடு) னின் மின்னூல் மூலமான கேள்விகளுக்கு அளித்த நேர்காணல் இது.)

 

கேள்வி 1: தமிழின் முக்கியமான ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டுள்ளீர்கள். இந்நிலையில் அண்மையில் உங்கள் 'கலிங்கு' நாவல் வெளிவந்திருக்கிறது. வடிவம், உள்ளடக்கம், அதன் சமூகச் செயற்பாடுகள் சார்ந்து நவீன நாவலின்மேல் காத்திரமான கேள்விகள் உருவாகியுள்ள இன்றைய நிலையில், பொதுவாக நாவல்களைப் பற்றியும் குறிப்பாக உங்களது முக்கியமான நாவல்கள்பற்றியுமே இந்நேர்காணலில் முக்கியப்படுத்த எண்ணியிருக்கிறோம். உங்களது முக்கியமான நாவல்கள்பற்றிப் பேசுவதற்கு முன்பாக உங்கள் முதல் நாவல்பற்றிய எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?

பதில்: இந்த வித்தியாசமான ஆரம்பம் எனக்குப் பிடித்திருக்கிறது. பள்ளியில் வினாக்களுக்கான விடையெழுதுதல், தமிழ்ப் பாடத்தில் கட்டுரை மற்றும் சுருக்கம் எழுதுதலுமான கல்வி சார்ந்த பயிற்சிகளுடனும், தன் சிறிய வாசிப்பு  அனுபவத்தோடும் தனது உணர்வுகளையும் கருத்துக்களையும் இலக்கியமாய் முன்வைக்க வரும் ஒரு இளம் படைப்பாளிக்கு அந்தப் படைப்பில் இறங்கும் தருணமே பயிற்சியின் கணமாகவும் அமைந்துவிடுகின்றது. யாரும் நாவலெழுத, சிறுகதையெழுத பயிற்சியெடுத்துக்கொண்டு வருவதில்லை. அந்த வகையில் ஒரு முதல் படைப்பு அந்தநேரத்துக்கு ஒரு திருப்தியைக் கொண்டிருந்திருப்பினும் காலப்போக்கில் அப்படைப்பில் ஒரு போதாமையை  படைப்பாளியே உணரக்கூடிய சந்தர்ப்பம் விளைய நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. 1986இல் வெளிவந்த எனது முதல் நாவலான 'உயிர்ப் பயணம்', அது வெளிவந்த காலத்தில் என்னைப்போலவே எனது வாசக நண்பர்களையும் திருப்திப்படுத்தியிருந்ததை இப்போது என்னால் நினைவுகொள்ள முடிகிறது.

ஆனால் இன்றைக்கு அந்த நாவலின் பலஹீனமும் குறைகளும் எனது அவதானத்துக்கும் வருகின்றன.

இதுபற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவேண்டுமென நினைக்கிறேன். படைப்பாக்க கணத்துக்கு முன்பாக மனம் ஓரளவு தயார்நிலையை அடைந்திருக்கிறதென்றாலும், யாரும் ஒரு சிறுகதையை ஒரு நாவலை எழுதி எழுதிப் பயிற்சியெடுப்பதில்லை.  எழுதுகிற கணமே பயிற்சியின் கணமாகவும் அமைந்துவிடுகிறது. அது முன்னனுமானம் செய்யாத கருத்து வெளிப்பாட்டையும் கலை நேர்த்தியையும் கொண்டிருக்க முடியுமாயினும் அது அப்படைப்பாளியளவில் முதல் படைப்புத்தான். ஆண்டுகள் பலவற்றின் பின்பாக ஒரு அனுபவ முதிர்நிலையில் அப் படைப்பாளிக்கு மட்டுமாவது அதன் பலஹீனம் தெரியவரவே செய்யும். 

ஒரு முதல் நாவலானது பெரும்பாலும் படைப்பாளியின் சுயம் சார்ந்த அனுபவங்களின்மேல் கட்டுமானமாகின்றதெனச் சொல்லப்படுகிறது. ஆனால் 'உயிர்ப் பயண'த்தின் மய்யக் கரு உண்மையில் பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தியிலிருந்து என்னால் வகிர்ந்தெடுக்கப்பட்டதே. அதில் நான் கொண்டுவந்திருந்த கிராமங்கள் எனது சொந்த,  அயல் கிராமங்களாக இருந்தனவென்பதைத் தவிர சுயம் சார்ந்த அனுபவங்களேதும் அதில் பதிவாகவில்லை. மட்டுமில்லை. தனியே வாசிப்பு அனுபவத்தோடு மட்டும் வந்து நான் நாவலெழுத ஆரம்பித்த காலமாகவும் அது இருந்தவகையில், புனைவுக்கும் யதார்த்தத்துக்குமிடையிலான ஊடாட்டமுள்ளதாகவோ, மண்வாசனை செறிந்த உரையாடல்களுடனானதாகவோ அந்நாவல் அமைய வாய்ப்பில்லாது போய்விட்டது. அது இலக்கியப் போக்குகள் அதன் தன்மைகள் சார்ந்து அதுவரை கொண்டிருந்த தேர்வில் நான் தடுமாறும் காலமாகவும் இருந்திருந்ததை இப்போது நினைக்கமுடிகிறது. 

அதனால் அன்றைக்கு எண்ணியிருந்ததுபோல அதை ஒரு நாவலாக இன்று என்னால் கொண்டுவிட முடியாதிருக்கிறது. முக்கியமான சில நாவல்கள்பற்றி தீர்க்கமான விமர்சனங்களையும், வியாசங்களையும் மிகவும் பிரக்ஞையோடு எழுதியிருக்கிறேனென்கிற வகையில், எனது சொந்த நாவலான 'உயிர்ப் பயணம்'பற்றிய மதிப்பீட்டில் நான் தயக்கம் காட்டிவிடக்கூடாது. அதை ஒரு நெடுங்கதையாகவோ குறுநாவலாகவோதான் இன்றைக்கு என்னால் கருத முடிகிறது. எனது நூல்களின் பட்டியலில் அது நாவலாகவே இன்றும் குறிப்பிடப்பட்டு வந்துகொண்டிருப்பினும் அதை இனிமேல் குறுநாவலாக வகைப்படுத்துவதே சரியாக இருக்கும்.

 

கேள்வி 2: படைப்பாளியே தன் படைப்புகள்பற்றி இவ்வாறாக மனம் திறந்து முன்வைக்கும் மதிப்பீடுகள் தமிழ்ச் சூழலில் மிகவும் குறைவு. அந்த நாவல் அல்லது நீங்கள் இப்போது குறிப்பிடுவது மாதிரி குறுநாவல் உங்களது முதல் பெரும்படைப்பாக   இருக்கிற வகையில் என்ன மாதிரியான அனுபவங்களை அது உங்களுக்குக் கொடுத்துள்ளதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: 'உயிர்ப் பயண'த்தின் பிரதி நீண்ட காலமாக என் கைவசமிருந்திருக்கவில்லை. அது என் கைவசமாகிறபோது ஒரு கால் நூற்றாண்டு கழிந்திருந்தது. உடனடியாக வாசித்துப் பார்த்திருந்தேன். அதிலிருந்த 'முதல்' என்ற அம்சம் அப்போதும் ஒருவகையான மனக் கிளர்வை ஏற்படுத்தியதெனினும், அதுவரை வெளியான எனது நாவல்களை வைத்துப் பார்த்தாலுமே அது பலஹீனமானவொரு நாவல் என்பதை மட்டுமல்ல, அப் பலஹீனத்தின் காரணங்களையும் என்னால் புரிய முடிந்தது.

அது, அதுவரை எனது சிறுகதைகளிலிருந்த தீவிரமான சமூகப் பார்வையைக் கொண்டிருக்காததை ஒரு சாதகமான அம்சமாகக் கருதுகிறவேளையில், அதீத உணர்வுச் செறிவுள்ள பாத்திரங்களைக் கொண்டதாகி, இலட்சியவாத உரையாடல்கள் உள்ளதாகவும் ஆகியிருந்தது. நாவலுக்கு அந்தத் தன்மை பேரிடர் விளைப்பது. மேலும் அது நாவலுக்கிருக்கவேண்டிய பல்பரிமாண உள்ளடுக்குகள் அற்று ஒற்றைப் பரிமாணத்தில் கட்டுமானமும் ஆகியிருந்தது. உரையாடற் சிக்கனத்திலும் போதிய கவனத்தை நான் காட்டியிருக்கவில்லை. இவை அந்த நாவல்மூலமே நான்  பெற்றுக்கொண்ட அனுபவங்கள்தான்.

 

கேள்வி 3: உங்களது இரண்டாவது நாவல் எது? அது உங்களுக்கு பூரணமான திருப்தியை இன்றைய வாசிப்பில் அளிக்கிறதா?

பதில்: எனது இரண்டாவது நாவல் 'விதி'. நெய்வேலி வேர்கள் அமைப்பினரால் தொண்ணூறுகளில் வெளியிடப்பெற்றது. பரவலாக வாசகர்களினதும் விமர்சகர்களினதும் கவனத்தைப் பெற்ற நாவல் அது. எடுத்துக்கொண்ட பொருளை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்புலத்தில், சரியாகச் சொன்னால் 1983இன் இனக் கலவர காலத்தின் பின்னணியில், வைத்து, வடக்கின் காந்தீயக் குடியேற்றத்திலிருந்த மலையக மக்களின் வாழ்வு சிதைந்த வரலாற்றை மிக நேர்த்தியாக 'விதி' எழுதியிருந்தது. அவர்களின் புலம் பெயர்வு, வாழ்வவலம் போன்றவை மிகவும் அற்புதமாக அதில் பதிவாகியிருப்பதாக அது இன்றும் சொல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறது. 'தொண்ணூறுகளில் தமிழ் நாவல்கள்' என்ற நூலில் தொண்ணூறுகளில் வெளிவந்த குறிப்பிடத் தகுந்த நாவல்களில் ஒன்றாக கோவை ஞானியாலும் அது தேர்வாகியிருக்கிறது. 'விதி' ஓரளவு எனக்கு நிறைவைத் தந்த நாவல்தான். ஆனாலும் அதன் இரண்டாம் பதிப்பு 2009இல் வெளிவந்தபோது நாவலின் போக்கிலுள்ள தளர்வினைப் போக்கும் வகையில் மீண்டுமொரு செம்மையாக்கத்தை நான் அதில் செய்திருந்தேன். இப்போது இன்னும் சிறப்பானதாகவே அது எனக்குத் தோன்றிக்கொண்டு இருக்கிறது.

ஆங்கிலத்தில் editing எனச் சொல்லப்படும் இந்த செம்மையாக்க முறைமை குறித்து தமிழ்ப் படைப்புலகத்தில், பதிப்புலகிலும்தான், பெரிய பிரக்ஞை நீண்டகாலமாக இருந்திருக்கவில்லை. அது ஒரு பதிப்பக கவனமாக மேற்குலகில் இருந்துகொண்டு இருந்தபோது, தமிழ்ப் பரப்பில்  படைப்பாளியின் கவனமாகவும் அவனது தனிப்பட்ட செம்மையாக்க முயற்சியாகவுமே அது குறைவுபட்டு நின்றிருந்தது. 

'விதி' பொறுத்து அதன் முதல் பதிப்பிலேயே நான் போதுமான கவனத்தைச் செலுத்தியிருந்தேன். எனினும், இரண்டாம் பததிப்பின்போதுகூட ஒரு செம்மையாக்கத்துக்கு அதில் அவசியமிருந்தது கண்டு முனைப்பானவொரு மறு செம்மையாக்கத்தைச் செய்தேன். ஒரு மூன்றாம் பதிப்பு வெளிவரும் பட்சத்திலும் இச்செம்மையாக்கத்தில் நான் கவனம் குறைத்துவிட மாட்டேன். இதற்கு மட்டுமல்ல, எந்த எனது நாவலிலும் அந்த எனது கவனம் குறைந்துவிடாதே இருக்கும்.

முதன்மையாக ஒரு தீவிர வாசகனாக இருக்கும் நான், தொடர்ந்த எனது படைப்பாக்க முயற்சிகளில் புதிய தளங்களைக் கண்டடைகிற அதேவேளையில், அவ்வாசிப்பினூடாக புதிதாக என்னை வார்த்தும் கொள்கிறேன். அதனால் எனது எந்தப் படைப்பையுமே இன்றைய வாசிப்பில் பூரணமானதென என்னால் சொல்லிவிட முடியாதிருக்கிறது. நான் வளர்ந்துகொண்டே இருக்கிறேன் என்பதன் அடையாளமும் இதுதான். இதனால் என் படைப்புகள் குறைபாடுகளுடையன என நான் சொல்வதாக அர்த்தம் கொண்டுவிடக்கூடாது. எந்தவொரு படைப்பாளியின் படைப்பும் கொண்டிருக்கக்கூடிய செழுமைக் குறைபாடுதான் இதுவும். கருத்து சீணமாகி படைப்பு காலத்தில் நீர்த்துப்போகாதவரை அதைச் செம்மைப்படுத்தி மீள்பிரசுரங்களாகக் கொண்டுவருவது தேவையெனவே நான் நினைக்கிறேன். ஆயினும் ஒரு படைப்பினை அது தோன்றிய காலக் களத்தில் வைத்து நோக்கவேண்டுமென்று நான் எப்போதும் சொல்லிவருவதின் காரணமே செம்மையாக்கம் பெறாத படைப்புகளும் அதனதனளவில் முக்கியமானவையாக இலக்கிய வரலாற்றில் இருக்கும் என்பதனாலேயே. 

அதுபோல காலத்தை மீறி என்றும் புதுமை கொண்டிருக்கும், எக்காலத்திற்கும் பொருத்தமான இலக்கியங்களும் இல்லாமலில்லை. சம்பத்தின் 'இடைவெளி', சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', ஜானகிராமனின் 'மரப்பசு' 'அம்மா வந்தாள்', க.நா.சு.வின் 'ஒருநாள்' போன்றவை அவ்வாறானவை. தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஸ்ரின் பேர்க், அகமத் தன்பினார் போன்றவர்களின் படைப்புகளும் உலக இலக்கியத்தில் முக்கியமானவை. இவ்வாறான, இவற்றினும் மேம்பட்ட படைப்புத்தானே ஒரு படைப்பாளியின் கனவாக இருக்கமுடியும்?

மேலும், நாவலிலக்கியம் தோன்றிய காலத்திலிருந்ததான அமைப்பில் இன்றைக்கு அதன் வடிவம் இல்லை. அது அமைப்பியலின் வருகையோடு உருமாற்றம் கொள்ளத் துவங்கி பின்நவீனத்துவ காலத்தோடு தன் வழித்தடத்தை பெரும்பாலும் மாற்றிவிட்டிருக்கிறது. ரமேஷ் பிரேம், எம்.சுரேஷ், தமிழவன் போன்றோரின் சில நாவல்கள் இந்த எல்லையைத் தொட முயன்றிருந்தன. ஆயினும் தமிழ் நாவல், ஏன் உலக நாவல்கள்கூட, இந்த தடத்திலிருந்து பின் – யதார்த்த வாதத்தையும், மாயா யதார்த்த வாதத்தையும் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த வடிவ, கருப்பொருள் விஷயங்கள் இன்று நாவல்களில் மிகமுக்கியமானவையாகப் படுகின்றன. பேசாப்பொருளை பேசும் களமாக நாவல் உலகம் ஆகியிருக்கிறது. ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இவற்றின் கரிசனமின்றி இன்றைக்கு ஒரு படைபாளி நாவல் படைப்பது சாத்தியமில்லை.

 

கேள்வி 4: இவை உங்கள் பிற்கால நாவல்களில் வெகுவாகக் கவனம்பெற்றன எனக் கொள்ளலாமா?

பதில்: அது ஒருவகையில் அப்படித்தான். அப்போதும் வெகு கவனம் பெற்றனவெனச் சொல்லமாட்டேன்.

அது ஒரு படிமுறையான வளர்ச்சியாக இருந்தது. அப்படித்தான் இருக்கவும் முடியும். நான் மிக நவீனமான ஒரு நாவல் படைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாவலைக் கட்டமைப்பதென்பது எனக்கு உடன்பாடானதல்ல. அவற்றின் கரிசனமின்றி நான் படைப்பு முயற்சியில் இறங்கியதில்லையென்பதைச் சொன்னாலும், அவ்வாறெல்லாம் ஒரு பாய்ச்சலாக என் படைப்பு முறையை என்னால் மாற்ற முடிந்ததில்லை. இலக்கிய வடிவத்தின் இந்தக் கரிசனமானது எனது எல்லா நாவல்களிலும் இருந்தபோலவே, அவற்றின் உத்தியிலும், சொல்லும் முறையிலும், மொழிநடையிலும்கூட மாற்றங்களைக் கொண்டிருந்தன. இவை எல்லாம் சேர்ந்தே ஒரு நாவலைச் சிறந்த படைப்பாக ஆக்குகின்றன.

2003இல் இலங்கையில் பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடாக வந்தது எனது 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' நாவல். 1800களின் ஆரம்பத்திலிருந்து ஒரு சமூகத்தின் கதையைச் சொல்லத் துவங்கி, அதன் வளர்ச்சி பெருக்கம் காரணமாய் அது விரிந்து விரிந்து புதிய குடியேற்றங்களைத் தேடி நகர்கிற 1970களில் இனங்களின் முறுகல் நிலையாக அது எவ்வாறு ஆகிறதென்பதை ஒரு மார்க்சீயப் பார்வையுடன் கலாபூர்வமான நாவலாக்கியிருக்கின்றேன். சுமார் இருநூற்றைம்பதாண்டுக் காலக் களத்தில் ஒரு சமூகத்தின் வளர்ச்சி எழுச்சி தேய்வின் கதையையும்,  இலங்கை இனப் போராட்டத்தின் முதன்மையான காரணத்தையும் மிக இறுக்கமான மொழியில் சொன்ன தமிழ் நாவல் அது. 

2004இல் வெளிவந்தது 'கதா காலம்'. மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தின் கதையை வைசம்பாயனன் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு உரைநடைகாரர்கள் ஈறான கதைசொல்லிகளின் மூலமாகவே கதையை நாவல் வடிவில் விரியவைத்த படைப்பு அது. 

'கனவுச் சிறை' தமிழ் நாவல் பரப்பில் மிகுந்த கவனத்தைப் பெற்ற பிரதி. இருபத்தோராண்டுக் காலக் களத்தில் இரண்டிரண்டாய்க் கொண்ட பதினொரு பகுதியில் ஐந்து பாகங்களாய் வெளிவந்து இலங்கை அரசியல் பின்னணியில் தேசமளாவிச் சென்ற அகதிகளின் கதையை உரைத்த நாவல். 1250 டெமி பக்கங்கள் அளவான அந்த நாவல் செம்பதிப்பாக காலச்சுவட்டால் 2014இல் வெளியிடப்பட்டபோது 1000 றோயல் அளவான பக்கங்களைக் கொண்டிருந்து சுமார் 200 பக்கங்களை செம்மைப்படுத்தலில் இழந்து மேலும் இறுக்கம் கொண்டது. நேர்கோட்டில் யதார்த்த வகைக் கதையாடலாக நாவல் விரிந்திருந்தும் அது ஒற்றைப்படை ஆண்டுகளின் நிகழ்வுகளை இரட்டைப்படை ஆண்டுகளின் காலப் பிரிப்பில் சொல்லி ஒரு பின்னோக்குப் பார்வையை நாவல் நீளத்துக்கும் கொண்டிருந்து வடிவ சோதனை செய்த நாவலாகவும் அது இருந்தது.

'கந்தில் பாவை' இருநூறாண்டுக் கதையை இரண்டாயிரத்தின் இரண்டாம் தசாப்தத்தின் ஆரம்பத்திலிருந்து துவங்கி, கிறித்தவம் இலங்கையில் பரவ ஆரம்பித்த பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை பின்னோக்கி நகர்த்திச் சென்று கதை சொல்லலில் ஒரு புதிய முயற்சியை தமிழ் நாவல் பரப்பில் தொடக்கிவைத்தது.

இவையெல்லாம் என் வாசிப்பினதும், எழுத்து முயற்சிகளினதும் அனுபவத்தில் அடைந்தவையே. நாவல்பற்றி விமர்சகர்கள் கூறியவற்றிலிருந்தும், நவீன தமிழ் எழுத்தாளர்களின் படைப்பிலிருந்தும் நான் பெரும்பாலும் கவனம் பிசகியதில்லை.

 

கேள்வி 5: அமைப்பியல் தோன்றிய காலத்தில் மேற்கிலே அறிஞர் ஒருவர் சொன்ன  சொலவடையொன்று பெருவழக்கிலிருந்தது. வாசகர்களுக்காக எழுதுதல், படைப்பாளிகளுக்காக எழுதுதல், விமர்சகர்களுக்காக எழுதுதலென அது எழுத்தின் தன்மையையும் நோக்கத்தையும் வகைப்படுத்தியிருந்தது. அச் சொலவடை மனத்தில் வந்த இந்தத் தருணத்தில் அதை ஒரு கேள்வியாக்கி, நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்ளென உங்களைக் கேட்டால் என்ன பதிலைச் சொல்வீர்கள்?

பதில்: இதுவொன்றும் சிக்கலான கேள்வியில்லை. ஆனால் விளக்கமாகச் சொல்லாவிட்டால் சிக்கலானதாக விடை தோன்றக்கூடும். ஆயினும் சுருக்கமாகவே சொல்ல முயல்வேன்.

படைப்பாக்கம் எப்போதும் சுயத்தின் எழுச்சியில் தோன்றுவதானாலும் அது சுயத்துக்கானதல்ல. படைப்பு தனக்கான வாசகனை ரசிகனை நிர்ப்பந்தமாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறது. வாசகனை அடைகிறவரை படைப்பில் பூரணமில்லை. இன்னொரு மொழியில் இதைச் சொன்னால், படைப்பின் தரம் குறித்த வாசக அபிப்பிராயத்தை படைப்பு மௌனமாக யாசித்துக்கொண்டே இருக்கிறது. அது அதே படைப்பினை மறுபதிப்புவரை எதுவும் செய்துவிடுவதில்லைதான். ஆனால் அதன் அங்கமாகாதிருந்துகொண்டே படைப்பின் இறுதி நிலையாய் அது விளங்குகிறது.

அதேவேளை அது வாசகப் பரப்பின் ஒரு குறிப்பிட்ட தளத்தை நோக்கியே எழுதப்படுகிறதென்பதும் நிஜம். படைப்புக் கணத்தில் வாசகன்பற்றிய கவனம் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட தள வாசகர்களுக்கானதாகவே படைப்பு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. சங்க காலத்தில் சபையிலிருந்த சங்கப் புலவர்கள் முக்கியமானவர்களாய் இருந்தார்களெனில், இடைக்காலத்தில் அது செல்வந்தர்கள் கல்விமான்களாக இருந்ததெனக் கொள்ளமுடியும். பிற்காலத்தில் கல்விப் பரம்பல் புதிய ஒரு வாசக வட்டத்தை உருவாக்கி எழுத்தெல்லாம் தனக்கெனக் கேட்டது. அப்போது அதற்கனுசரணையான படைப்புகள் உருவாகின. அது நீர்த்துப்போன நடையென்றும், உள் அசைவியக்கம் அற்றதென்றும் சொல்லப்பட்டது. அது தெளிவடைந்தபோது எழுத்து… இலக்கியம்… தீவிர வாசகனுக்கானதென ஆனது.

மக்களைவிட்டு இலக்கியம் விலகிவிட்டதென்ற புலம்பலுக்கு அவசியமற்றதாய் இன்றைய நவீன காலம் உருவாகியிருக்கிறது. கல்வி ஒரு தடையாக இன்று வாசிப்புக்கு இருக்கவில்லை. வாசகனின் நுகர்வுத் தன்மையே முதன்மைக் காரணியாய் இலக்கியத்தின் போக்கையும் தன்மையையும் தீர்மானிக்கிறது.

ஆரம்பத்தில் வாசக அபிப்பிராயத்தின் கவனமும், விருப்பமும் எனக்கு இருந்ததென்பதை நான் மறைக்கத் தேவையில்லை. ஆனால் ஒரு நீண்ட ஐம்பது வருஷ கால எனது படைப்பு வாழ்க்கையில் அது காலத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து மாறவே நேர்ந்தது. இலக்கியமென்றால் என்ன, அது எவ்வாறு படைக்கப்படுகிறதென்ற வழிமுறைகள் தெரிந்துகொண்டு (தெரிந்துகொண்டு வருவது தவறெனச் சொல்லவில்லை) எனது இலக்கியப் பிரவேசம் இருக்கவில்லை. உந்துவிசையில் உள்ளியக்கமாய் படைப்பு வெளிப்பட்ட தருணம் அது.

இரண்டு மூன்று பக்க கட்டுரைகளை எழுதி மூன்று நான்கு பிழைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சக மாணவர் மத்தியில், இருபது ஒற்றைக் கொப்பியில் முப்பது முப்பத்திரண்டு பக்கங்களுக்கு அதே தலைப்பிலான கட்டுரையை எழுதி ஐம்பது அறுபது பிழைகளைப் பெற்றுக்கொண்டிருந்த நிலைமையிலேயே எனது பள்ளிக் காலம் முழுவதும் இருந்துவந்தது. அப்போது மேதாவியும், பி.எஸ்.ஆரும் வாசித்துக்கொண்டிருந்த வாசக சமூகமே என்னைச் சூழவும் இருந்தது. பேச்செல்லாம் நச்சுப் பாவை தொடர் துப்பறியும் நவீனமாக இருந்த நிலையில் மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன் போன்றோரது வாசிப்புடன் எழுத வந்தவன் நான். எனது எழுத்தும் போக்கும், நோக்கமும் அப்போது அப்படித்தான் இருந்திருக்கும். இருந்திருக்க முடியும். 

ஆனால் நான் மாறினேன். நீண்டதும் தீவிரமானதுமான வாசிப்புகளின் மூலம் மாறினேன். புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், கு.அழகிரிசாமியும், ஜானகிராமனும் அறிமுகமாகிறபோது அந்த மாற்றம் தன்னை என்னில் ஊன்றத் தொடங்குகிறது. இதன் அர்த்தம் வாசிப்பை என் தேர்விலிருந்தல்ல, எனக்குள்ள வாய்ப்பிலிருந்தே நான் அடைந்துகொண்டிருந்தேன் என்பதே. 

பின்னர்தான் தெரிந்தது வாசக உலகம் பல தளங்களை தனித்தனிக் கோளங்களாய்க் கொண்டிருக்கிறதென்பது. அப்போது என் குறி வெகுஜன வாசகப் பரப்பிலிருந்து தீவிர வாசகப் பரப்பாக மாறுகிறது. அதுவே எனது படைப்புகளின் இலக்காகவும் பின்னர் பரிமாணம் பெறுகிறது. 

அப்போதும் விமர்சன உலக அக்கறை என்னில் இருக்கவே செய்தது. ஏனெனில் அந்த விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். 

என் வளர்ச்சியின் படிகள் இவை. இவையே எப்படைப்பாளியின் படிகளாகவும் இருக்கமுடியும். இல்லை, எனக்கு 'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி' என்பதுபோல் எடுத்த எடுப்பிலேயே தீவிரமாய் எழுத வந்ததென யாராவது கூறின் அவரை நாம் புரிந்துகொள்ளலாம்.

 

கேள்வி 6: உங்களின் படைப்புக்களில் முக்கியமானவையாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

பதில்: எல்லாப் பிள்ளைகளுமே ஒரு தாய்க்கு ஒருபோலவேயென்ற மொக்கையான பதிலைச் சொல்லி தப்பித்துவிட எனக்கு எண்ணமில்லை. எனது இரண்டாவது நாவல் முதலாவதைவிட சிறப்பானதாகவே இருந்தது. எனது ஒன்பதாவது நாவலான 'கலிங்கு' வரைக்கும் இவ்வாறாகவே நான் உணர்ந்துகொண்டிருந்தேன். ஆனால் இன்றைக்கு நிலைபெற்றிருக்கும் எனது சிறந்த நாவல்கள் இந்த வரிசையில் அமைந்திருக்கவில்லை என்பதை நான் அழுத்தமாய்ச் சொல்லவே வேண்டும். 

எடுத்துக்கொண்ட பொருளால், அவற்றை விளக்கிய கலாபூர்வமான தன்மைகளால், காலத்துக்கும் நீண்டு நிற்கும் அகப் பார்வையினால் அந்த வரிசை குளம்பிவிடுகிறது. 'விதி'க்குப் பின் 'கனவுச் சிறை', 'கதா காலம்', 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'லங்காபுரம்', 'கந்தில் பாவை', 'கலிங்கு' என அவையவையும் வெளிவந்த ஆண்டுக் கணக்கைவிட்டு விலகி வரிசை புதிதாக அமைகிறது.

இவற்றிலும் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'கனவுச்சிறை', 'கலிங்கு' ஆகியவற்றை வேறொரு காரணம் குறித்து முதன்மையாகச் சொல்ல எனக்கு விருப்பம். இவை முன் தீர்மானமின்றியும், முன் பின்னான காலங்களில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் உள்ளுயிராக ஓடிய காலத்தைக் கவனமெடுக்கிறபோது ஆங்கில முறையில் Trilogy எனப்படுகிற வகையில் அமைந்து முந்நாவல் வரிசையாக அவை வருகின்றன. 

'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' பதினெட்டாம் நூற்றாண்டில் புதிதாக அமையும் ஒரு சமுதாயம் வளர்ந்து பெருகி புதிய குடியேற்றங்களை அமைக்கும் காலத்தில் எவ்வாறு வேலையின்மை, குடும்ப வாழ்வுக்கு போதிய வெளியின்மை போன்ற காரணங்களின் நிர்ப்பந்தத்தில் சிதறி புதிய குடியேற்றங்களாக அமைகிறபோது, இதே காரண நிர்ப்பந்தங்களில் புதிய குடியேற்றங்களைக் காணும் இனங்களுடன் எவ்வாறு பொதுப் பிரச்னைகளாக, முரண்களாக அவை வெடிக்கின்றன என்பதை நாவல் வெளிப்படுத்தி நிற்கிறது. 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' உண்மையில் தமிழ்-சிங்கள யுத்தத்தின் முதலாவது அத்தியாயம் (The First Chapter of the War) என்ற அர்த்தத்திலில்லை, யுத்தத்திற்குக் காரணமாயமைந்த முதன்மைக் காரணி (The Prime Course Behind the War) என்ற அர்த்தத்திலேயே அதில் பயில்வாகியிருக்கிறது. 

2003இல் வெளிவந்த இந்நாவலை Trilogy யின் முதலாவது நாவலாகக் கொண்டால், இதன் தொடர்ச்சியாக யுத்தம் தொடங்கிய எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து 2001இல் சமாதான காலம் தொடங்கும்வரையான காலக்களத்தில் யுத்தத்தின் அவலத்தையும், அதன் காரணமாக புலம்பெயரும் பெரும் ஜனத் திரளையும், அதன் அவலத்தையும், தஞ்சமடைந்த புதிய நிலங்களில் அது எதிர்கொள்ளும் வாழ்முறையால் விளையும் கலாசார சீரழிவுகளையும் விபரிக்கிறது 'கனவுச் சிறை'.

மூன்றாவது பகுதியான நாவல்தான் அண்மையில் வடலி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் 'கலிங்கு'. அது சமாதன காலம் சிதறத் தொடங்கும் 2003இலிருந்து 2015வரையான காலக் களத்தில் விரிந்து செல்கிறது. களமும் தனியே இலங்கையாக அமைந்து, இலங்கை இறுதி யுத்தத்தின் அழிவு அவலங்களை வெளிப்பட பேசுகிறது.

மொத்தமாகப் பார்க்கையில் யுத்தம் தொடங்குவதற்கு சற்று முன்பின்னான காலமே… இம் மூன்று நாவல்களினதும் மூலாதாரமாகின்றது. நீளும் காலத்தில் முந்திய பாத்திரங்களின் மீளுகையும் மூன்றாம் பகுதியான 'கலிங்கு' நாவலில் நிகழ்கிறது. 

முன்னனுமானத்துடன் இந்நாவல்கள் எழுதப்படவில்லைத்தான். எனினும், தீர்க்கமான எண்ணத்துடன் எழுதப்பட்டவைபோல் வடிவெடுத்திருக்கின்றன. இது தமிழ் நாவல் பரப்பில் முக்கியமான நிகழ்வு. இதுபற்றிய பிரஸ்தாபங்கள் புறத்திலும் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல சகுனம்.

 

கேள்வி 7: இக்காலத்தில் நீங்கள் முக்கியமானவையாகக் கருதிய நாவல்கள் எவை?

பதில்: நிறைய இருக்கின்றன. உரையாடல்களிலும் நண்பர்களின் பரிந்துரையிலும் அறியவந்த நாவல்களை மிக ஆர்வமாக, ஆழமாக தேடித் தேடி வாசித்திருக்கிறேன். இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவது பொருத்தம் கருதித்தான். ஒரு புலம்பெயர் படைப்பாளியாகிய எனக்கு வாசிப்பு ஒரு சுமையாக ஆகியிருக்கிறது. பிறர் குறிப்பிடுவதுபோல் நேரமின்மையென்ற காரணத்தை நிச்சயமாக நான் சொல்லமாட்டேன். ஒரு புலம்பெயர் படைப்பாளிக்கு மூன்று திசை நாவல்களையும் வாசிக்கிற நிர்ப்பந்தம் இருக்கிறது. புலம்பெயர் தேசங்களிலிருந்தும், ஈழம் மற்றும் மலேஷியா சிங்கப்பூர் முதலிய நாடுகளிலிருந்தும், தமிழகத்திலிருந்துமாய் இம் முத்தரப்பிலிருந்தும் வரும் படைப்புகளைத் தெரிந்திருப்பதோடு முக்கியமான படைப்புக்களை வாசித்திருக்கவும் வேண்டியிருப்பதான சுமைதான் அது. 

புதுக்கவிதையும் சிறுகதையும் வாசிப்புத் தளத்தில் கொண்டிருந்த இடத்தை தொண்ணூறுகளின் பின் நாவல் சுவீகரித்திருக்கிறதெனச் சொன்னால் மிகையில்லை. இதன் கணிசமான பங்கை மொழிபெயர்ப்புகளின் மூலமாக வந்த நாவல்கள் செய்தவையெனச் சொல்லத் தேவையில்லை. அச்சக தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதன் மீதிப் பங்கை ஆற்றியது. தொண்ணூறுகளின் இந்த வளர்ச்சி அபரிமிதமாக இன்று வளர்ந்து பதிப்பு முயற்சிகளில் பெரும்பங்கை நுட்பமாகக் கையாள்கிறது. ஒரு வகையில் இலக்கியத்தில் இன்று படைப்பாளியைவிட பதிப்பகத்திற்கு இருக்கும் செல்வாக்கு அல்லது அதிகாரம் இதன் காரணமாகவே ஏற்பட்டதென்று நிச்சயமாகச் சொல்லமுடியும். பெரும் படைப்புகளின் அச்சாக்கத்திற்கு இது திறந்துவிட்ட வாசல்வழி நிறைய தமிழ் நாவல்கள் வெளிவந்தன; வெளிவருகின்றன. கவிதை சிறுகதைப் படைப்பாளிகளும்கூட நாவல்கள் நோக்கி நகர்ந்தனர்.

நாவல்கள் தொகையில் பெருகின. தமக்கென வாசக வட்டங்களைக் கொண்டன. தம் இருப்பைத் தக்கவைக்க புதிய புதிய உத்திகளை நாடின. மேற்குலகில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழுலகைத் தாமதமாக வந்து சேர்ந்திருப்பினும், அது வந்து சேர்ந்தவுடனேயே மாற்றங்கள் சுவறத் தொடங்கின. படைப்பிலக்கியமென்றாலே நாவல்தான் என்னுமளவிற்கு அவை பல்கிப் பெருகி அடையாளமாயின. இது மேற்குலகில் நிகழ்ந்த வண்ணமே நிகழ்ந்தது. யேசுவையும் மரணத்தையும், யேசுவையும் மகதலேனாவின் உறவையும், யேசுவையும் அவரது உயிர்த்தெழலையும் அவைபற்றிய ஆய்வுகளிலிருந்து நாவல்கள் எழுந்தன. ஒரு அதிர்ச்சி மதிப்புடன் இலக்கியமாக அவை தம்மை முன்னிறுத்தின. தீவிர இலக்கியத்தின் இடத்தை இவ்வகை அதிர்ச்சி மதிப்பும் உடனடிப் பரவசமும் விளைகக்கக்கூடிய நாவல்கள் பெற்றன.

இது தமிழிலும் சரி, மேற்குலகிலும் சரி சீரிய நலனைச் செய்துவிடாது. இப்புரிதல் மேற்குலகில் இருக்குமளவுக்கு தமிழுலகில் இல்லாதது இன்னும் மோசமான விளைச்சலையே இங்கு தருவதாயிருக்கும்.

எவ்வாறோ பதிப்பகங்களின் அசுரப் பசி தீர்வதாயிருக்கிறது. மேற்குலக நாடுகளின் அல்லது பிற மொழிகளின் இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் வாசிக்கும் தீவிர வாசகன் அதே வாசிப்பின் பரவசத்தை தமிழ் நாவல்களில் தேடி விரக்தி அடைகிறான். இது தமிழ்நாவல் படைப்பாளிக்கு ஒரு சவாலாக இருக்கிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ளும் நாவல்கள் வெளிவரவில்லையென நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஆனால் அவை குறிப்பிடும்படியான அளவில் இருக்கவில்லை.

புலம்பெயர் சமூகத்திடமிருந்து 'வெள்ளாவி', 'லண்டன்காரர்', 'லெனின் சின்னத்தம்பி' போன்றவற்றையும் (பிரக்ஞைபூர்வமாகவே எனது நாவல்களை இங்கு தவிர்த்திருக்கின்றேன்), ஈழப் பரப்பிலிருந்து  'இந்த வனத்துக்குள்'ளையும் இத் தொடரில் சுட்டிக்காட்ட முடியும். 'இந்த வனத்துக்குள்' நிறைந்த செழுமைப்பாட்டுக் குறைகளைக் கொண்ட நாவலேயெனினும் அது கொண்ட பொருளும் அதன் எடுத்துரைப்பும் கையாண்ட மொழிநடையும் ஈழத்தில் அடையப்பட்ட மிகவும் காத்திரமான நாவலுக்கு உதாரணமாக அதை ஆக்கியிருக்கின்றன. ஈழத்தில் மறைந்துவரும் தெலுங்கு சமூகத்தின் வாழ்க்கையை போரின் மெல்லிய பின்னணியில் அது மிக அழகாகக் காட்டியிருந்தது.

இன்னும் காத்திரமான நாவல்கள் ஈழத்திலிருந்து வரும் சாத்தியத்தை முன்னறிவிப்புச் செய்யும்விதமான இலக்கிய எழுச்சி சமீப காலத்தில் அங்கு உண்டாகியிருப்பதை இனங்காண முடிகிறது.

 

கேள்வி 8: ஈழத்தில் காத்திரமான நாவல்கள் தோன்றுவதற்கு இதுவரையில்லாத சாத்தியங்கள் இப்போது அங்கு தோன்றியுள்ளதாகக் கூறுகின்றீர்களா?

பதில்: நிச்சயமாக. பதிப்பு முயற்சிகளின் ஆரம்ப காலத்தில் ஈய எழுத்துக் கொள்வனவிலிருந்த சிரமமும், அச்சுக் கோர்ப்பதற்கான மனித வலு அரிதாக  இருந்ததும் பதிப்பாக்கத்தில் இலங்கையை பின்னோக்கி நகர்த்திவிட்டிருந்தன. ஆனால் இன்றைய கணினி யுகத்தில், அச்சுருவாக்கத்தின் நவீன இயந்திர வருகையோடு இன்று எந்த நாட்டுக்கும் தரம் குறையாத புத்தகவாக்கத்தை இலங்கையிலும் நிகழ்த்தவியலும். மேலும் இலக்கியத்துக்கான கச்சாப் பொருளும் இலங்கையில் குறைந்திருக்கவில்லை. சொல்லப்போனால் புலம்பெயர் தேசங்களில் உருவாகும் போரிலக்கிய வகைமையின் வீறு கொண்ட ஆக்கங்கள் அங்கிருந்துதான் உருவாகமுடியும். 

2018ஆம் ஆண்டு பெப்ரவரியில் வன்னியில் நிகழ்ந்த ஒரு இலக்கியச் சந்திப்பின்போது அங்கு கூடிய நண்பர்களைக் கேட்டேன், 'போரிலக்கியத்தின் உண்மையான படைப்பு இங்கேதான் உருவாகவேண்டிய நிலையிருந்தும், ஏற்படும் கால தாமதம் எதனாலானது?' என. அதற்கு அவர்கள், இன்னும் தங்களை அழுத்திக்கொண்டிருக்கும் யுத்த அழிவுகளைக் காரணமாகச் சொன்னார்கள்; இன்னும் சமூகத்தில் இறுகியிருக்கும் வல்விதிகளைச் சொன்னார்கள். அப்போதே எண்ணினேன், அது அவ்வாறிருக்க நிறைந்த சாத்தியமிருக்கிறதுதானென்று. ஒரு யுத்தத்தின் அழிவுகள் நினைவில் பாரமாய் நெடுங்காலம் அழுத்தக்கூடியவை. அவர்கள் அதிலிருந்து மீள்கிறபோது காத்திரமான இலக்கியங்கள் அங்கே தோன்றும்.

 

கேள்வி 9: யுத்த அழிவின் பாரம், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்னை, மனிதாயத அழிவுகள், நவீனத்தின் பண்பாட்டு நெருக்கடிகள் காலப்போக்கில் குறையவோ மறையவோ செய்கிறபோது நல்ல படைப்புகள் இலங்கையில் வெளிவருமென்கிறீர்கள்?

பதில்: அப்படித்தான். இலங்கை யுத்தத்தில் விளைந்த அனர்த்தம் யாராலென்று ஆராய்வது பொருத்தமில்லையென்றால், வானத்திலிருந்து என இந்த இடத்தில் சொல்லிவிட விரும்புகிறேன். படைப்பாளியாய் எனது அரசியலை எங்கும் எவருக்கும் மறைக்க எனக்கு அவசியமில்லையெனனினும் அதை என் படைப்புகளிலிருந்துதான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த என் படைப்பிலும் எனது அரசியலை அவசியத்துக்கு மேல் நான் அடக்கிவைத்ததில்லை. 'கலிங்கு' நாவல் அதை நிச்சயமாகப் பேசுகிறது. படைப்பிலிருந்தே என்னை அறியுங்கள். 

இலங்கையில் உன்னதமான படைப்புகள் உருவாகும் காலம் நிஜமாக வருமெனினும், படைப்பாளிகளின் இலக்கிய கவனத்தை அது பூரணமாக யாசிக்கிறது. இலங்கைத் தமிழ் இலக்கியமென்பது மொத்த தமிழிலக்கியத்தில் கலக்கும் ஒரு கிளை நதியென்பதின் பிரக்ஞை இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிக்கு மாறாதிருக்கவேண்டும். வாழ்வு, வளம், தர்க்கம், சிந்தனை, வரலாறுகளில் இலங்கை தனித்துவமானதென்பதும், அதற்கான இலக்கியப் போக்கு தனியானதென்பதும் இலக்கியக் கட்டளைகள். இன்றைக்கு ஐக்கிய அமெரிக்க இலக்கியம், அவுஸ்திரேலிய இலக்கியம், ஆங்கில (இங்கிலாந்து) இலக்கியமென ஆங்கிலம் பேசும் நாடுகளின் இலக்கியங்கள் அனைத்தும் ஆங்கில இலக்கியமென பொதுப்பெயர் கொண்டிருப்பினும் தனித்தனியாகவேதான் இருக்கின்றன. இது இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நினைவிலிருப்பது என்றும் அவசியமென நினைக்கின்றேன். அப்போது ஈழத் தமிழிலக்கியத்தின் சுடர் விரிப்பு கண்ணில் தெரியும். 

00000 

 (ஞானம் மே 2018)

 

http://devakanthan.blogspot.co.uk/2018/05/216-2018.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவருடைய ஒரு நூல் கூட வாசித்ததில்லை 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2018 at 8:39 PM, ரதி said:

நான் இவருடைய ஒரு நூல் கூட வாசித்ததில்லை 
 

நான் இரண்டு நாவல்கள்  வாங்கிவைத்துள்ளேன். எப்படியும் சில வருடங்களுக்குள் படித்துவிடுவேன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.