Jump to content

அப்பாவின் சுதந்திரம்


Recommended Posts

பதியப்பட்டது

அப்பாவின் சுதந்திரம்

 

 
kdr4

மாடியிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டேயிருந்தான் இவன். மூன்றாவது மாடியிலிருந்து தரைதளத்திற்கு அப்பா இறங்கி வந்து விட்டாரா என்பது வரை பார்ப்பது வழக்கம். படிகளில் தடுமாறி விடக்கூடாதே என்ற பயம். ""நானே போய்க்கிறேன்...எனக்கென்ன பயம்'' - சொல்லிக்கொண்டே இறங்கி விட்டார். எதற்கும் ஆள் துணை நிற்பதோ, முட்டுக் கொடுப்பதோ அப்பாவுக்குப் பிடிக்காது. தனித்து இயங்குவதில்  ஓர் அதீத தைரியம். அதோடு யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என்கிற நல்லெண்ணம். 

 அந்தக் காலனியில் வீடு பார்த்துக் குடியிருக்க வேண்டும் என்பது இவனது வெகுநாள் ஆசை. போகும் போதும் வரும்போதும் அந்தக் குடியிருப்புவாசிகள் நடமாடுவதில் இருக்கும் ஓர் ஆசுவாசமும், சந்தோஷமும்,  சுதந்திரமும், அமைதியும், உள்ளேயே அமைந்த சிறிய அனுமார் கோயிலும்... அங்கேயே ஆணியடித்தாற்போல் அமர்ந்திருக்கும் தூய காவி அணிந்த பண்டாரங்களும், பக்தி ரசம் சொட்டும் பாடல்களும்... காலை மாலைகளில் காதுக்கு இதமாய் ஒலிக்கும் மந்திர கோஷங்களும் சூழலை இதமாக்கும் அடர்ந்த மரங்களும்... படிந்திருக்கும் அடர்த்தியான  நிழலும், அங்கங்கே நின்று சாவகாசமாய்ப் பேசிக் கொண்டிருப்பவர்களையும் நினைக்கையில் இவனுக்குள் பொறாமை கிளர்ந்தெழும். தனக்குத் தெரிய எத்தனை வருஷங்களாக அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்? ஆரம்பத்திலேயே தெரியாமல் போயிற்றே? இடம் தேர்வு செய்து அங்கே வீடு வாங்கியவர்கள் கொடுத்து வைத்த ஆத்மாக்கள்...அதில் ஒரு குச்சிலையேனும் கைப்பற்றியாகவேணும். அங்கு குடியிருப்பதே ஒரு கெளரவம். 

 அவனையறியாமலே அந்த இடத்தின் மீது ஓர் ஏக்கம் படிந்து போனதை அறையில் படுத்திருந்த  அந்த ஞாயிற்றுக் கிழமையின் உறக்கம் வராத இரவினில் வந்து கலைத்தவர் மேன்சனின் பொறுப்பாளர் விக்டர் விஸ்வாசம். மேனாள் மிலிட்டரி மேஜர் ஜெனரல். 

 ""என்னா ஒரு விஷயம்னா... எனக்குப் பொருந்துறாப்புல நிர்வாகப் பிரிவுக்கு விருப்பம் கொடுத்து மாறிக்கிட்டேன். அட்மினிஸ்ட்ரேஷனைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டேன் நான்... கைல துப்பாக்கி தூக்குற அவசியம் வந்ததில்லை... ஆனாலும் என் முன்னாடி அத்தனபேரும் நின்னு  சல்யூட் அடிக்கிற தேவையை மட்டும் கடைசி வரைக்கும் விட்டுக் கொடுத்ததில்ல. ஒருத்தரும் என்கிட்ட  வந்து குறைன்னு நிற்கக் கூடாது... அந்த அளவுக்குப் பெர்ஃபெக்டா வச்சிருந்தேன். கமான்டோஸ் அத்தனை பேருக்கும் என் மேலே அவ்வளவு மரியாதை... அவங்க தேவை என்னன்னு பார்த்துப் பார்த்துச் செய்திடுவேன்... ஃபர்ஸ்ட் டென் கிலோ மீட்டர்ஸ் ரேடியஸ்ல  எங்க ட்ரூப் இருந்ததால... சண்டைன்னு வந்திடுச்சின்னா முதல்ல எங்களுக்குத்தான் அழைப்பு வரும்... அந்த மாதிரிச் சமயங்கள்ல நான்தான் அவங்க எல்லாருக்கும் கியாரண்டி... அது ஒரு பொற்காலம்...'' 

சொல்ல ஆரம்பித்தார் என்றால் பழைய இனிய நினைவுகளில் மூழ்கிவிடுவார் விஸ்வாசம். பெயருக்கேற்றாற்போல் தேசத்திற்கானது இந்த உடல் பொருள் ஆவி என்று இன்றும் உயிர் மூச்சாய்த்  தெரிவித்துக் கொண்டேயிருப்பது அவர் வழக்கம். 

""என்ன ராஜாத்தம்பி... எல்லாரும் சுருண்டு இழுத்துக் கொறட்டை விடுற நேரத்துல இப்டிக் கொட்டக் கொட்ட உட்கார்ந்திருக்கீக... என்னாடா... இந்தப் பையன் ரூம்ல மட்டும் இந்நேரத்துல லைட் எரியுதேன்னுல்ல ஓடியாறேன்...''
""தூக்கம் வரலை... மேஜர்... என்னவோ மனசைப் போட்டு உழட்டுது''

""ஊர் நெனப்பு வந்திடுச்சாக்கும்... விட்டுத் தள்ளுங்க... அதான் பெரியண்ணன்ட்ட இருந்துக்கிறோம்னு போயிட்டாகள்ல. பெத்தவங்களுக்கு மூத்தவன்ட்ட இருந்தாத்தான் மனசு நெறயுமாக்கும்... என்னாதான் நீங்க ஓடி ஓடிச் செய்தாலும்....அதுல திருப்தி வராது. அதான் கெüம்பிட்டாக. சீக்கிரம் கல்யாணம் பண்ணப் போறீகள்ல...பெறவு என்ன? கவலைய விடுங்க... ஒய்ப்ஃபை கூட்டிக்கிட்டு... இங்கயே வந்திடுங்க''

""அப்டித்தான் ஜி... அதுபத்தித்தான் யோசிச்சிட்டு இருந்தேன்...உங்க கிட்டக் கேட்கணும்னு...''

""என்னா செய்யணும் சொல்லுங்க....உங்களுக்கில்லாததா...செய்திடுவோம்...''
""நம்ப வைகைக் காலனில எனக்கு ஒரு வீடு பார்க்கணும் ஜி...யாரையாச்சும் தெரியுமா உங்களுக்கு...?''

""ஆத்தாடீ...அவ்விடமா...? எடம் கிடைக்கிறது படு கிராக்கியாச்சே....ரொம்ப ஆச்சாரமா இருக்கிற ஆளுகளாச்சே''

""அதான் ஜி....எனக்கு எப்டியாச்சும் அங்க ஒரு வீடு பார்த்துக் கொடுத்திடுங்களேன்... ரொம்ப ஆசையா இருக்கு... அங்க மட்டும் குடி போயிட்டேன்னு வச்சுக்குங்க... நாளப் பின்ன நான் சொந்தமா வீடு கட்டினாக் கூட, கட்டின வீட்டை வாடகைக்குத்தான் விடுவனேயொழிய... அந்தக் காலனி வீட்டை மாத்த மாட்டேன்... அம்புட்டு ஆசை அந்த எடத்து மேலே... தெய்வீகமா நிறைஞ்சு வழியுது... எனக்காகச் செய்யுங்களேன்... வாடகை எம்புட்டானாலும் பரவால்ல...'' 

""அடேங்கப்பா... இப்பத்தான் நிச்சயம் ஆகியிருக்கு....அதுக்குள்ளேயும் இவ்வளவு வேகமா....? அங்க குடிபோயி கற்பனைல பிள்ளையே பெத்துடுவீக போல்ருக்கே...''

""என்னா ஜி....ஒரு நல்ல, கண்ணியமான, கெüரவமான  ஏரியாவுல போய் குடியிருக்கணும்னு நினைக்கிறது தப்பா....என் ஒய்ஃப்புக்கு என் மேலே ஒரு மதிப்பும், மரியாதையும் வரவேணாமா....? அவள ஒரு நல்ல எடத்துல பாதுகாப்பா குடி வைக்க வேணாமா?'' 

""ஓ.கே...மிஸ்டர் ராஜாராமன்....செய்துட்டாப் போச்சு....அங்கே வெங்கட்ராம்ஜின்னு ஒருத்தர் இருக்கிறாரு....அவர்ட்டக் கேட்டுப் பார்க்கிறேன்... அவர்தான் இன்சார்ஜ்... அவர் மனசு வச்சா நிச்சயம் இடம் படியும்....கவலைய விடுங்க...நானாச்சு அதுக்குப் பொறுப்பு... இப்ப லைட்டை அணைச்சுட்டுப் படுங்க...மணி ஒண்ணாவப் போவுது'' சொல்லிவிட்டு எழுந்து கிளம்பினார்.

வந்ததும் வராததுமாக அப்பாவே சில பணிகளை எடுத்துக் கொண்டதுதான் ஆச்சரியம். ரொம்ப நாளாய் அங்கேயே இருப்பதுபோல் இயல்பாக ஆரம்பித்து விட்டார்.  அங்கு வரணும் என்று அப்பா சொல்லுவார் என எதிர்பார்க்கவேயில்லை. கிடைத்ததே மூன்றாவது மாடிதான். முன்னமே தெரிந்திருந்தால் தரை தளத்திற்கு முயன்றிருக்கலாம். கிடைக்காதுதான். ரகசியமாய் ஒருவருக்கொருவர் சொல்லி வைத்துக் கொள்கிறார்கள். அத்தனை டிமான்ட். கேட்டால் உறவினர் என்று வேறு சொல்கிறார்கள். எப்படி நம்புவது? மூன்றாவது மாடியைப் பற்றி அப்பா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவருக்கு வைகை காலனி என்றாலே சொர்க்கம்தான். மீதிக் காலத்தை அங்கேயே தனியே கழிக்கிறேன் என்றாலும் சரிதான் என்பார். 

 ""குடித்தனம் வைக்க அங்கயா  எடம் பார்த்திருக்கே...பேஷ்...பேஷ்...'' என்றவர் இப்படி ஒரு விருப்பத்தை மனதில் வைத்திருப்பார் என்று தெரியாது. அண்ணாவின் ஃபோன்தான் அதை உறுதிப்படுத்தியது. 

""ராஜா...நான் ராமண்ணா பேசறேன்... அப்பா நாளைக்கு வைகைல கிளம்பி அங்க வர்றார்... ஜங்ஷன் போய் அழைச்சிண்டு வந்திடு...  சரியா... ? கொஞ்ச நாளைக்கு அங்க இருப்பார் போலிருக்கு... நீ அந்தக் காலனில வீடு பார்த்திருக்கேன்னு சேதி கேட்டதும் ஆள் தயாராயாச்சு... வந்ததுலேர்ந்தே மனசு இங்கே இல்லன்னு வச்சுக்கோ... இப்போ இது ஒரு பலமான சாக்காச்சு... கிளம்பிட்டார்''

ஒரே ஆச்சரியம். முன் தகவல் எதுவும் இல்லாமல் சடனாக அப்படிப் புறப்பட்டு வருவது அவருக்கான உரிமையைப் பறைசாற்றுவதாகவே இருந்தது. எட்டு மணி நேரம் உட்கார்ந்தே வர வேண்டுமே என்பதை நினைத்தபோது அப்பாவின் அவசரமும், விருப்பமும்தான் முன்னே நின்றது. ஜங்ஷனிலிருந்து டாக்சியில் ஏறமாட்டார். பஸ் போதும் என்பார். விடக்கூடாது. உடம்பு புண்ணாகி வந்திருப்பார். ஆட்டோவிலாவது கொண்டு வந்து ஆளை இறக்கியாக வேண்டும். 

""என் பிள்ளை.... அங்கிருக்கான்... அவன்ட்டப் போறதுக்கும் வர்றதுக்கும் நான் அனுமதி வாங்கணுமா என்ன? நினைச்சா நினைச்ச எடத்துக்குக் கிளம்பிப் போவேன், இருப்பேன், வருவேன்...அது என் இஷ்டம்....யார்ட்ட முன்கூட்டி சொல்லணும்,  பர்மிஷன் கேட்கணும்...? நீ இங்க கிட... நான் ஜாலியா போய்ட்டு வர்றேன்...'' அடேயப்பா... எத்தனை துள்ளல்...

""உங்களை யாரு போக வேண்டாம்னு சொன்னா? நல்லா சந்தோஷமாப் போயிட்டு வாங்கோ... எனக்கு இங்க இருந்தாப் போரும்....வர்றேன்னு ஒரு சேதி சொல்றதுல என்ன தப்பு? நீ சொல்லிடுப்பா ராமா....அவர் எப்பவும் அப்டித்தான்....ஜாலியாப் போறாராம்... பேச்சைப்பாரு... வயசு திரும்பறது''. 

 

அப்பாவுக்கு இளம் பிராயத்திலிருந்தே இவனிடம் தனிப் பிரியம். ""ரமணீஸ்வரா...'' என்றுதான் அழைப்பார். அவராகக் கண்டு பிடித்த பெயர் அது. அருகில் படுக்க வைத்துக் கொள்வார். ராத்திரி அணைத்துக் கொண்டு தூங்குவார். அப்பாவின் மணம் இன்றும் இவன் நாசியில். 

அப்பா பால் வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். சுற்றிலும் பார்வை படர்ந்திருந்தது. என்னென்ன கடைகள் புதிதாய் வந்திருக்கின்றன? புதிய கட்டடங்கள் எவை... அந்த ரூட்டில் பஸ்கள் என்ன எண்களில்  ஓடுகின்றன... அந்தக் காபிப் பொடிக் கடைக்காரர் இருக்கிறாரா... என்று ஒவ்வொன்றையும் நுணுக்கமாய் ஆராய்வார். அவர் அப்பாவின் நண்பர். பொன்னகரத்தில் இருக்கையில் சாயங்காலம் அங்கு சென்று அவரோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார். காபிப் பொடி வாங்கப் போய் வயதொத்த அந்த கடைக்காரர் பழக்கமாகிவிட்டது. அவருக்கும் அப்பாவைப் பிடித்துப் போனது. யாருக்குத்தான் பிடிக்காது. அங்கு உட்கார்ந்து கொண்டு விற்பனைக்கு உதவுவதும், வேடிக்கை பார்த்துக் கொண்டே பேசியவாறு பொழுதைக் கழிப்பதும் அந்த நண்பர் கொடுத்த இடம். நெஞ்சத்து அக நக நட்பதான நட்பு அவருடையது. 

ஒரு சமயம் சர்ச் வாசலில் நின்று கொண்டிருந்தார் அப்பா. உள்ளே பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. ""எவ்வளவு நேரம்ப்பா...வாங்க போகலாம்'' என்ற போது ""கொஞ்சம் இரு....ஜெபம் முடியட்டும்'' என்றார். என்ன ஒரு லயிப்பு? ""எல்லா சாமியும் ஒண்ணுதாம்ப்பா'' என்பார். மனதில் எளிமை கொண்டவனுக்கு  வித்தியாசங்கள் வேறுபாடுகள் கிடையாதுதான். மேலும் அப்பா எந்த சுயநலமும் இல்லாதவர். எங்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். 
""காலம்பற என்னை எழுப்பு....நான் போயிட்டு வர்றேன்...இந்தப் பக்கம் ஞானஒளிவுபுரம் வரைக்கும் நீளக்க நடக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்... அந்தக் கடைசி அரசரடி வரைக்கும் போயிட்டு திரும்பைல வாங்கிண்டு வந்திடுவேன்... வசந்தம் ஸ்டோர்ஸ் வாசல்ல இருக்கிற டெப்போதானே... எனக்குத் தெரியும்... நாம பொன்னகரத்துல இருக்கைலயும் அங்கதானே வாங்குவோம்...அந்தப் பக்கத்துக்கும் அதுதானே கிட்டக்க இருக்கிற பால் பூத்... டெப்போ நம்பரச் சொல்லித்தானே பால்கார்டே வாங்குவோம்...'' என்று சொல்லிவிட்டு படுக்கை அருகே துணிப்பையையும், பால் கார்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்.  அப்போதே தயாராகிவிட்டார்தான். அவர் வந்ததில் அவ்வளவு திருப்தி இவனுக்கு. 

 அப்பாவின் தேவைகள் மிக மிகக் குறைவு. இது வேணும், அது வேணும் என்று என்றுமே கேட்டதில்லை. நாமாக வாங்கி வைப்பதை, கொடுப்பதை திருப்தியோடு பெற்றுக் கொள்வார். அவருக்கென்று ஏதேனும் எதிர்பார்ப்பு இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.  இருக்கும் ஒரு கதர்ச் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவார். அது பொருத்தமாய் இருக்கிறதா, தொள...தொளவென்று தொங்குகிறதா...என்பதெல்லாம் கணக்கில்லை. உடம்பை மறைக்க ஒரு துணி...அவ்வளவே...வெறும் துண்டோடு இருந்தவர்தான் அப்பா. வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லிச் சொல்லி ஆளைப் பிடித்து நிறுத்தி... வீட்டோடு இருக்க ஆரம்பித்த பின்னாடிதான் இந்தச் சட்டை முளைத்தது. 

""டீ  ஷர்ட் வாங்கித் தர்றேம்ப்பா...குளிருக்கு அடக்கமா இருக்கும். அழகாவும் இருக்கும்....போட்டுக்குங்கோ - அண்ணா சொல்லத்தான் செய்தான்.

""இந்த வயசுல எனக்கு என்ன அழகு வேண்டிக் கிடக்கு...அதெல்லாம் நீங்க போட்டுக்கிறது... நான் மாட்டிண்டு அலைய முடியுமா? சிரிப்பா எல்லாரும்...எனக்கு ஒரு கதர்ச்சட்டை வாங்கு...அது போரும்...''

கதர்ச்சட்டை என்று அப்பா சொன்னதுதான் ஆச்சரியம். வெகு நாளாய் மனதில் இருக்கும் ஆசையாய் அது இருக்குமோ? சொந்த ஊரில் இருக்கையில் அம்மா ராட்டையில் நூல் நூற்று, சிட்டம் போட்டு, கதர்க் கடையில் கொடுத்து அப்பாவுக்குப் போர்த்திக் கொள்ளத் துண்டு வாங்கித் தருவாள். வெளியே காசு கொடுத்து வாங்கியதாகச் சரித்திரமில்லை. இருக்கும் ரெண்டு துண்டில் ஒன்று கிழிய, அம்மா சிட்டம் தயாரித்து ரெடியாய் வைத்திருக்க. காலமும் நேரமும் மிகச் சரியாய்ப் பொருந்தி வரும். புதுத் துண்டை அப்படி  விரித்து உதறி, பின்பக்கமாய் வீசி முதுகில் போர்த்தும் அந்த வேளை, தோள் கண்டேன் தோளே கண்டேன் என்று அந்தத் துணி அப்பாவின் நிமிர்ந்த புஜங்கள் கொண்ட பரந்த முதுகில் அப்படிப் பொருந்தி உட்கார்ந்து கொள்ளும்.   

 கீழே எட்டிப் பார்த்தான். யாருடனோ நின்று பேசிக் கொண்டிருந்தார். முதன் முறையாய் நோக்குபவர்கள் அவரோடு பேசாமல் நகர முடியாது. ஏதோ ஒன்று அவரிடம் ஈர்க்கிறது. யாரிடம் பேசினாலும் பெரியவர்கள், சின்னவர்கள் என்று பாராமல் பணிவோடும், அடக்கத்தோடும், புன்னகையோடும் அபிப்பிராயங்களைப் பக்குவமாய் முன் வைப்பவர் அப்பா. எதிர்க்கருத்துக்கள் இருந்தாலும் எதிர்வினையாற்றாதவர். அப்படியானவர்களைத்தான் இந்த உலகம் விரும்புகிறது. அந்த முதிர்ச்சி அப்பாவிடம் தென்படும்.

""நீ எதாச்சும் மறுத்துச் சொல்லிப் பாரு...அடுத்தாப்ல உன்னோட யாரும் பேச வரமாட்டா... மனுஷாளோட குணமே அப்டித்தான்... நன்னாப் பழகினப்புறம் லேசுபாசா சொன்னம்னா ஏத்துப்பா... அதுவரை பொறுத்துக்கத்தான் வேணும்... அப்பத்தான் நம்மளச் சுத்தி நாலு பேர் இருப்பா... மனுஷன்னா அவனுக்கு நாலு பேர் கண்டிப்பா வேணும்... ஆளுக்கு ஆள் கருத்து மாறத்தான் செய்யும்...அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு?'' என்று ரொம்ப சிம்பிளாகச் சொல்லி விடுவார். அவருக்குப் பகையென்றோ, சண்டை என்றோ ஒராள் இந்த உலகத்தில் கிடையாதுதான். இறைவன் படைப்பிலான அத்தனையையும் நேசிக்கும் இனிய மனப்பான்மை எங்கிருந்து அப்பாவுக்குள் வந்து படிந்தது என்பது புரியாத புதிர். 

அவரின் பார்வை அனுமார் கோயிலின் பண்டாரங்களின் பக்கம் நின்று நிலைத்திருப்பதை உணர முடிந்தது. முன்பு இங்கிருந்தபோது...அது அண்ணா இங்கு பணியாற்றிய காலம்....ஒரு முறை பழனி கோயிலுக்குச் சென்ற வேளையில், படியேறுகையில் பார்த்த ராமையாவைக் கண்டு பாதி வழியிலேயே அப்பா நின்று விட்டதும், "நீங்க தரிசனத்துக்குப் போங்கோ...நான் பின்னாடி வர்றேன் என்று அவரோடு பேச உட்கார்ந்து விட்டதும், ""கோயிலுக்கு வந்துட்டு இப்டி கண்ணுல பட்டவரோ டெல்லாம் உறவாடிண்டிருக்காரே'' என்று அம்மா கோபம் கொண்டதும், ""என்னய்யா இப்டி வந்து கிடக்கீரு?'' என்று கேட்ட மாத்திரத்தில், ""சாமி....நல்லாயிருக்கீகளா?'' என்று கண்டு கொண்ட அவன் ரெண்டு கையையும் விரித்துத் தூக்க அதை அப்படியே அப்பா ஆதரவாய் அணைத்து வாங்கிக் கொண்ட அந்த மெய் சிலிர்க்கும் காட்சி....யாருக்குத்தான் மறக்கும்...?  

  ராமையா ஊரில் பால் ஊற்றும் கோவாப்ரேடிவ் பால் பண்ணை வெண்டர். தினசரி வண்டியெடுக்கும்போதும் அலுப்புத்தான் அவருக்கு. கருத்த தேகத்தில், பரந்த முகத்தின் அகன்ற நெற்றியில் பளபளக்கும் திருநீறு. நடுவில் ரூபாய் அளவுக்கு உருண்டு திரண்டிருக்கும் சந்தனமும் அதன் மேலாய்ப் பதித்த அடர்த்தியான குங்குமமும். இத்தனைக்கும் ராமையா கட்டை பிரம்மச்சாரி... அதெல்லாம் கணக்குக் கிடையாது அவருக்கு. உச்ச பட்சக் கடவுள் பக்தி. மாடுகள் அத்தனையும் கறந்து முடித்தபிறகு...கேனில் ஊற்றி, வரிசைப்படுத்தி நிறுத்தி, அவற்றுக்கும் பட்டையிட்டு, பொட்டிட்டு, விடிகாலை பூஜை முடிந்த பிறகுதான் உள் விநியோகம் மற்றும் வெளி விநியோகம்.  கிணி....கிணி....கிணி....கிணி....என்று பால் வண்டி ரவுன்ட்சுக்குக் கிளம்பும்போது மணி ஆறைத் தொட்டிருக்கும். அதற்குள் பால் வண்டி வரல்லயே...பால் வண்டி வரல்லயே...என்று அக்ரஹாரமே வாசல் தெளித்துக் கோலத்தைப் போட்டு விட்டு ஒரு வாய் காபிக்குத் தவித்து நிற்கும்....!

""ராமையாவக் காணலியே...நீங்க பார்த்தேளா....பால் வண்டி இப்டிப் போச்சா...யாருக்குமே தெரிலயே...என்னாச்சு இன்னிக்கு...?'' 

""இல்ல மாமி...இன்னைக்கு ஈஸ்வரனாயிருக்கும்...அவன் எப்பவுமே கொஞ்சம் லேட்டாத்தான் வருவான்...''  தெரு வாசலில் வீட்டுக்கு வீடு முளைத்திருக்கும் முகங்கள். மணக்க மணக்க காபியை ஒரு வாய் ஊற்றவில்லையென்றால் அன்றைய பொழுதே விடிந்ததாக ஆகாது.... அவர்களுக்கு....

 

 

நா போகலய்யா...வேற யாரையாச்சும் அனுப்புங்க டிரிப்புக்கு. ஏறக்குறைய முன்னூறு வீடு அக்ரஹாரத்துல...குறைஞ்சது நூத்தம்பது லிட்டர் இருக்குதா...சொல்லுங்க...போறேன் ...ஏதோ நிரவி ஊத்தி, சமாளிச்சிட்டு வர்றேன்....இல்லன்னா ஆள விடுங்க...கேட்குற பாலைக் கொடுக்கலைனா...நாக்கப் பிடுங்கிக்கிற மாதிரிக் கேள்வி கேட்பாக.... நம்மால பதில் சொல்ல ஏலாது....கமுக்கமா வண்டிய நகத்துனா....அந்தப் பேச்சுப் பேசுறாக...மாமிகளச் சமாளிக்க முடில... ....வாங்கின கூப்பனுக்கே பால் தரமாட்டேன்னா எப்டின்னு கேட்குறா... நீங்களாயிருந்தா பதில் சொல்லிடுவீங்களா...? யாரையாச்சும் ஆள மாத்தி அனுப்புங்கங்கிறேன்...போயிட்டு வரட்டும்...அப்பத்தான என் அருமை தெரியும்...! நா ஒருத்தனே தெனம் படணும்னா இருக்கு ...? 

இப்படியே அலுத்துக் கொண்டு, அதோடு அதாய் வண்டியை நகர்த்தி வருவார் தெருவுக்குள். எந்தெந்த வீடுகளுக்கு எவ்வளவு பால் தேவை என்கிற கணக்கு அவர் மனத்தினில் படிந்திருக்கும். அளந்தும் நிரந்தும் ஊற்றி அனைவரையும் முடிந்த அளவு திருப்திப்படுத்தி, மூன்று தெருக்களையும் கடந்து வெற்றிகரமாக தேர் நிலைக்கு வருவதுபோல் மீண்டும் பண்ணைக்குள் வெறும் வண்டியாக நுழையும் பாங்கே தனி.   ""பால் வரத்தும், சப்ளையும் நாளுக்கு நாள் குறையத்தான் செய்தது. 

அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு...பத்துத் தேதில ஒரு அட்வான்சு... இருபதுக்கு மேல இன்னொண்ணு....இப்டி வாங்கிட்டேயிருந்தா...மாசங்கூடி சம்பளத்தன்னிக்கு என்னதான் கைல வரும்...? என்ன பெரிசா கொடுக்குறாக... தெருவுல ஏச்சு வேறே.... இது ஒரு பொழப்பா சாமி....என்னவோ ஆத்தமாட்டாம ஓடிட்டிருக்கு''  என்று குறைபட்டுக்கொண்டே திருப்தியில்லாமல் கழித்த ராமையா ஒரு கட்டத்தில் ஆளே இல்லாமல் போனார். 

""நீங்கென்னய்யா என்னை அனுப்பறது....நானே போறேன். இங்கருந்து எங்க போனாலும் நல்லாத்தான் இருப்பேன்''

நூறோ, இருநூறோ... என்ன கொடுத்தாரோ அப்பா... ராமையாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம்... ""இருங்க சாமி...காப்பி வாங்கியாரேன்'' என்று ஓட....எதில் வாங்கப் போகிறான்....ஒருவேளை அந்தத் திருவோட்டிலேயே வாங்கி வந்து விடுவானோ என்று பார்த்திருக்க...சூடு பொறுக்காமல்... சாமி... சாமி..

இந்தாங்க பிடிங்க...என்று கிளாûஸ ராமய்யா நீட்ட... தள்ளி நின்று காத்துக் கொண்டிருந்த வேளையில்...""உங்கப்பாவுக்கு ஒரு விவஸ்தையே கெடையாது... என்றும் கோயிலுக்கு வந்த வேளையில் வெறும் வயித்தோட போகாமே என்னெல்லாம் கேடு பண்றார்'' என்று அம்மா அலுத்துக் கொண்டதும்... ""உலகத்துல மனுஷாளோட அன்புக்கு மீறின விஷயம் எதுவுமே கிடையாதாக்கும்... இதுனால ஏதாவது பங்கம் வந்திடுத்துன்னு நீ நினைச்சேன்னா...நா சன்னதிக்குள்ளயே வரல்லை...போதுமா...?'' என்று அப்பா சொல்லியது கல்வெட்டுப் போல் மனதில் பதிந்துதான் கிடக்கிறது.  

இந்தா...பானும்மா...பாலை எடுத்துக்கோ....

எனக்கு ஒரு காபியை மட்டும் கலந்து கொடு....வாய்க்காலுக்குப் போயிட்டு வந்துடறேன்...''அதிர்ந்தாள் பானுமதி. ""அப்பா...அங்கெல்லாம் போய் குளிக்காதீங்கோ...அது தேங்கிக் கிடக்குற தண்ணி...ஓட்டமில்லே....சொரி வந்துடும்...'' மருமகப் பெண் அக்கறையோடு சொன்னதை உடனேயே மறுக்க வேண்டாம் என்று அமைதி காத்தார்  வெங்கடேசன். அங்கிருந்து பார்த்தால் ஆற்றில் தண்ணீர் தேங்கிக் கிடப்பதுபோல்தான் தெரியும். குறுக்கே தடுப்பணையிலிருந்து தண்ணீர் இடைவிடாது விழுந்து கொண்டிருக்கிறதென்றாலே ஓட்டமிருக்கிறது என்றுதானே பொருள். இல்லையென்றால் தேங்கித் தேங்கி குளம் ஆழமாகி விடுமே...! ...சின்னஞ் சிறுசுகள் தவ்வித் தவ்விக் குளிக்கும் காட்சி- அத்தனை ஆழமில்லாத இடத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை முதல் நாள் வெளியே போய்விட்டு கால் கை அலம்பிக் கொண்டு வந்தபோதே கூர்ந்து பார்த்து முடிவு செய்து கொண்டு விட்டார். ஓட்டமில்லையென்றால் சலவையாளர்கள் அங்கங்கே கல் பாவி துணிகளைத் துவைத்து அலச  முடியுமா? அப்போதே தினசரி அங்குதான் குளிப்பது என்று முடிவு செய்து கொண்டதும் அவருக்குள் நிகழ்ந்த இடவல மாற்றங்கள். 

அப்பாவிற்கு ஊரில் ஆற்றங்கரையில் குளித்து மகிழ்ந்த  அந்தப் பழைய நினைவுகள் இன்னும் மனதை விட்டகலாதிருக்கின்றன...என்பதை உணர்ந்த இவன் அவரிஷ்டம்போல் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டான். இடப்பக்கம் கொஞ்சமும், வலப் பக்கம் கொஞ்சமுமாக  ஆறு பிரிந்திருந்தது. மலைப் பகுதியில் மழை பெய்திருந்தால், அணையில் தண்ணீர் திறந்து விட்டால்தான் அதிக ஓட்டம் என்றாகிப் போனது. இருகரையும் அணைத்து வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடிய காலங்கள் அந்த மக்களின் மனங்களில் கனவாய்ப் போனது. 

""அடுத்தாப்ல எங்க கிளம்பிட்டேள் மாமா'' என்று காலனியில் நின்று கொண்டிருந்தவர்களில் ஒருத்தர் கேட்க... இதோ வந்துட்டேன் என்று  மொட்டையாய்ச் சொல்லி விட்டு அப்பா நகர்ந்தது... அவர்களுக்கும் தான் செல்லும் இடம் பிடிக்காமல் போகலாம் என்று முடிவு செய்து கொண்டதுபோல் தெரிந்தது.  அப்பாவின் எல்லாவிதத்திலுமான எளிமையும் நிதானமும்தான் அவரை நிம்மதியாய் இருக்க வைத்துக் கொண்டிருக்கிறது... தெளிந்த நீரோடை அவர்.

படித்துறையில் இறங்கி குளிக்கும் இடத்தை நோக்கிச் செல்வதை ஜன்னல் வழி பார்த்து உறுதி செய்து கொண்டு திரும்பியபோது, பானுமதி சொன்னாள்.

""அப்பா அவர் விருப்பம்போல இங்கயே... இருக்கர்தானா இருக்கட்டும்... எனக்கொண்ணும் சிரமமில்லை...'' 

""அதெப்படி...? அம்மாவை விட்டிட்டு எத்தனை நாளைக்கு இருப்பார்...?'' 

""அம்மாவையும் வரவழைச்சிடுவோம்... அவ்வளவுதானே... ? இங்கதான் மூணு ரூம் இருக்கே... இடம் வசதியாத்தானே கிடக்கு... அப்பா இங்க தொடர்ந்து இருந்தா அம்மா தானா வந்துட்டுப் போறா''  

""நீ சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு....அண்ணா ஒத்துக்கணுமே'' என்றான் இவன். 

"மூத்தவன்ட்டத்தான் இருக்கணும்...அதான் நியாயம்...அதுதான் அவனுக்கும் பெருமை'' என்றுதானே கிளம்பிப் போனார்கள். அந்தத் தியரியை அத்தனை சீக்கிரத்தில் உடைத்து விட முடியுமா?' நினைத்துக் கொண்டே குளிக்கப் புறப்பட்டான் இவன். 

 அந்தக் காலங்களில் அம்மாவுக்கு இவன் ஒரு உதவியும் செய்ததில்லை. ஒரு கடைக்குப் போவதென்றாலும் கூட அவளேதான் கிளம்பிப் போவாள்.ஆபீஸ் போக, வர... இதைத்தவிர வேறு என்ன செய்தோம்... வாங்கும் சம்பளத்தை முழுதாய்க் கொடுத்தோம்... அது ஒன்றுதான்... அந்த புத்தி மட்டும் கரெக்டாக வேலை செய்தது. நல்லவேளை அதற்கும் கொணக்கு வந்துவிடவில்லைதான். அம்மா திரும்ப வந்தால் எதற்கும் நகர விடக் கூடாது. 

ஃபோன் பெல் அடித்தது. விரைந்து சென்று எடுத்தான். 

""நாந்தான் ராமண்ணா பேசறேன்...அப்பா நல்லாயிருக்காளா....? எப்ப அனுப்பறே...?'' 

எடுத்த எடுப்பில் வந்து விழுந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் ராஜாராமன். 

""அதுக்குள்ளேயுமா...?''- அவனை மீறி வந்த இந்த வார்த்தை இது. 

""அதுக்குள்ளேயுமான்னா...ஒரு மாசம் ஆகப் போறதே...  இங்க அம்மாவுக்கு என்னால பதில் சொல்ல முடில''

""என்னாச்சு....? அம்மா என்ன சொல்றா...?'' 

""நானும் அங்க போறேங்கிறா....? என்னோட இருக்கணும்னுதானே வந்தேள்னு சொல்லி நிறுத்தி வச்சிருக்கேன்....கேட்க மாட்டேங்கிறா... அப்பாவ தினசரி பார்த்துண்டிருந்தாத்தான் அம்மா ஆரோக்யமா இருப்பா... அது தெரியுமோன்னோ உனக்கு? அவர் கூட இருந்தாகணும்... அது பிரார்த்தனை மாதிரி''

""சரி...அப்ப அம்மாவயும் இங்க அனுப்பிச்சிடு... அவ்வளவுதானே''

""அது சரி...புது யோசனை சொல்றியாக்கும் நீ? எப்டித் தனியா அனுப்புறது?'' 

""அதெல்லாம் வந்துடுவா... வைகைலதானே... பாதுகாப்பா இருக்கும்... நான் ஸ்டேஷன் போய் கூட்டிண்டு வந்துக்கிறேன்''

""கேட்டுப் பார்க்கிறேன்... சரின்னா தகவல் சொல்றேன்... எதுக்கும் நீ அப்பாட்டையும் ஒரு வார்த்தை கேளு... அவர் ஓ.கே.ங்கிறாரா பார்ப்போம்... சரியா?  இப்ப உடனே கேட்காதே... சமயம் பார்த்துக் கேளு''

 

""சரிண்ணா''  அம்மாவும் வரப்போகும் விவரத்தை விக்டர் விஸ்வாசத்திடம் கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ரொம்பவும் சந்தோஷப்படுவார். ரெண்டு பேரையும் நமஸ்கரிச்சு ஆசீர்வாதம் வாங்கணும். ஏற்கனவே ஒருமுறை மனமுருகிச் சொல்லியிருக்கிறார். 

குளித்துவிட்டு, ஈர வேட்டியோடு கீழே கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வந்து, ஜபதபங்களை முடித்து அப்பா சாப்பாட்டுக்கு அமர்ந்த போது மெல்ல ஆரம்பித்தான். 

""அப்பா...அம்மாவும் இங்க வரப்போறா''

நிமிர்ந்து இவனைப் பார்த்தார். அந்தப் பார்வை என்னவோ சொல்லியது. ஒருவேளை இவனையே சந்தேகிக்கிறாரோ?  ரகசியமா ஏற்பாடு பண்ணிட்டானா? 

""போச்சு...கொஞ்ச நாளைக்கு சுதந்திரமா... நிம்மதியா இருக்கலாம்னு வந்தேன். அது பொறுக்கலியா அவளுக்கு... சேர்ந்திருந்தாத்தான் அந்த சுதந்திரத்துக்கு அர்த்தம் கிடைக்கும் போலிருக்கு... ....சரி...கிளம்பி வரச் சொல்லு.... விதி  யாரை விட்டுது?'' என்றார் அப்பா. 

உள்ளே அடுப்படியில் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் பானுமதி. 

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.