Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்

Featured Replies

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்

 

 
dk4

பிறக்கும்பொழுது பூமியில் தன் இடத்தை அறிந்துகொள்ள முடியாத மனிதன் இறக்கும்பொழுதும் செல்லும் இடத்தைக் கணிக்க முடியாதவனாக இருக்கிறான்.

""கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்'' என்பதற்கு ஏற்றார்போல சொர்க்கம்,  நரகம் என்பது எல்லாம் கண்டு வந்து சொன்னவர் என்று எவரும் இலர் என்பதே உண்மை.

இப்படிப்பட்ட ஆரம்பமும், முடிவும் அறிய முடியாத உலக வாழ்க்கையில் அடுத்த  கணம் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாத நிலையில் மனிதர்கள் எதிர்கொள்ளும், வேதனைகளும், சோதனைகளும் ஓய்வில்லாத அலைகளுக்கு  ஒப்பாக இருக்கிறது. இன்பம் என்பது எட்டிப்பார்த்துவிட்டு போகும் வானவில்லாக இருக்கிறது.

மனிதன் தன்னுடைய சோர்வைத் தீர்த்துக்கொள்ள, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள, பயத்திலிருந்து விடுபட்டு மன அமைதியுடன் வாழ, பெற்ற இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள விழாக்களை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தான்.

மனிதனை கீழே விழாமல் மீண்டும் புதுத் தெம்போடு வாழ வைத்த விழாக்கள் "திருவிழாக்கள்' ஆயின.

dk3.jpg"மகர சங்கராந்தி'  என்று வட இந்தியாவிலும், பொங்கல் பண்டிகை என்று தென் இந்தியாவிலும் கொண்டாடப்படும் பண்டிகைக்கு முதல் நாள் நாம்  "போகி'  என்று கொண்டாடி பழைய சாமான்களை ஒதுக்கி எரிப்பது, கடந்துபோன கசப்பான சம்பவங்களைப் புறம்தள்ளி, புதிய வாழ்க்கையை உற்சாகத்துடன் எதிர்கொள்ள நம்மைத் தயாராகிக் கொள்வதாக இருக்கிறது.

ஆதிமனிதன் எதனால் இயற்கையை வணங்க ஆரம்பித்தான்?  பஞ்சபூதங்களின் வெளிப்பாடுகள் அவனை வாழவும் வைத்தது, அழிக்கவும் செய்தது. வாழ வைத்த பொழுது அவற்றைக் கொண்டாடி மகிழ்ந்தான். அழித்தபொழுது பயத்தினால் அவற்றை வணங்கினான். பல திருவிழாக்கள் மூலம் பெற்ற நன்மைகளுக்காக தான் உருவகப்படுத்திய தெய்வங்களைப் போற்றி மகிழ்ந்தான், அருள் வேண்டியும்  விழா எடுத்தான். பயம் தெளிந்து தெய்வம் காப்பாற்றும் என்ற தன்னம்பிக்கை பெறவும் விழா எடுத்தான்.
சங்க காலத்தில் இருந்தே திருவிழாக்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. அதில் "இந்திர விழா'  என்பது மிக விமரிசையாக இருபத்து எட்டு (28) நாள்கள் கொண்டாடப்பட்டதாக சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காப்பியங்கள் எடுத்துரைக்கின்றன.

மனிதனுக்கு உணவு ஒன்றே எல்லாத் தேவைகளிலும் அதி முக்கியமானது. அதிக விளைச்சல் இருந்தால்தான்,  வயிறு நிறைய உணவு கிடைக்கும். குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். ஆரோக்கியமான சமுதாயத்திடம் இருந்துதான் கலைகள் பிறக்கும், தொழில்கள் பெருகும், செல்வம் கொழிக்கும்.

மணிமேகலை காப்பியத்தின்படி ஒரு சமயம் சோழநாட்டில் பெரும் வறட்சியும், பஞ்சமும் தலை விரித்தாடியது. அந்தச் சமயத்தில், அகஸ்திய முனிவர் சோழ நாட்டின் அரசனால்  "தொடித்தோட் செம்பியனிடம்'  இந்திரனுக்கு விழா எடுக்கக் கூறினாராம். மழைக் கடவுளான இந்திரனும் இந்த விழாவால் மனம் மகிழ்ந்து, பெரும் மழையை ஏற்படுத்த நாட்டில் பஞ்சம் நீங்கியதாம்.

தொடித்தோட் செம்பியனின் வழித்தோன்றல்கள் அனைவரும் இந்திர விழா எடுத்ததால் தேசம் செழிப்புற்று விளங்கியிருந்ததாம்.
தண்டோரா போட்டு இந்திர விழாவின் தொடக்க நாளை அறிவிக்க, மக்கள் தெருக்களையும், வீடுகளையும் சுத்தம் செய்து, பிறகு வீடுகளை மிக நேர்த்தியாக அலங்கரிப்பார்கள். நாட்டின் தலைசிறந்த அதிகாரிகள் மன்னருக்குப் பரிசுப் பொருள்களை வழங்கி அவரும், அவருடைய குடிமக்களும் நல்வாழ்வு வாழ வாழ்த்துவார்களாம். கவிஞர்களும், பாணர்களும் தொழில், உணவு சம்பந்தமான விழாக்களும் உலக அரங்கில் அரங்கேறுகின்றன. சென்னையில் மார்கழி மாதத்தில் நடைபெறும் இசை விழாவுக்கு உலகின் பல பாகங்களில் இருந்து இசைப்பிரியர்கள் வந்து குவிகிறார்கள். உணவு விழா என்றால் அமெரிக்காவின் தேசிய வேர்க்கடலை, கேல்வே நாட்டின்ஆயிஸ்டர் விழா, ஜெர்மனியின் அக்டோபர் பெஸ்ட் என்கின்ற "பியர் விழா'  இது உலக விழாக்களில் தலையானதாக போற்றப்படுகிறது.  "கேன்ஸ்'  திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.

திருவிழாக்களில் கலந்துகொள்வது என்றால் எனக்கு பால் பாயசம் சாப்பிடுவதுபோல இனிக்கும். இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் செல்லும் பொழுதும், வெளிநாடுகளுக்கு பயணப்படும்போதும் அங்கே முக்கியமான திருவிழாக்கள் நடக்கும் நாள்களைக் கணக்கிட்டு அந்தச் சமயத்தில் அங்கே இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். திருவிழாவுக்காகவே மக்கள் அணியும் பிரத்தியேக உடைகள், உணவு வகைகள், கலை நிகழ்ச்சிகள், கடை விரிக்கப்பட்டிருக்கும் கலைப் பொருள்கள், அப்பப்பா "எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்று மனம் குதியாட்டம் போடும்.

இந்தியாவில் உள்ள மொத்தம் 29 மாநிலங்களில் 22 முக்கிய மொழிகளும், இவை தவிர 720 வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. இவ்வளவு வேற்றுமையில் ஒற்றுமை எப்படி சாத்தியப்படுகிறது? பலவிதமான திருவிழாக்கள் மாநிலங்கள்தோறும் நடைபெறுவதுடன் அதில் எல்லாவிதமான மக்களும் "நான் இந்தியன்' என்ற உணர்வோடு கலந்துகொள்வதால் கலாசாரப் பரிமாற்றம் நடைபெறுகிறது. கொண்டாட்டத்தில் மக்கள் ஒருங்கிணைகிறார்கள், கைகோர்த்துக் கொள்கிறார்கள், நடனமாடுகிறார்கள், உண்ணுகிறார்கள், ஒருவருடைய  பாரம்பரியத்தை மற்றவர் மதிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பிணைப்பில் மலருவதுதான் வேற்றுமையில் ஒற்றுமை.
இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் நான் சென்று களித்த திருவிழாக்களையும் அதில் பெற்ற அனுபவங்களையும் இனிவரும் வாரங்களில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

http://www.dinamani.com

தொடரும்.....

  • தொடங்கியவர்

அகமதாபாத் காத்தாடி திருவிழா -

சாந்தகுமாரி சிவகடாட்சம்

 

 
sk18


நல்லவனுக்கு மட்டும்தான் 
வாழ்க்கை திருவிழாவாகிறது.
- ரால்ப் வால்டோ எமர்சன் (Ralp Waldo Emerson)
எனக்கு ஐந்து வயதானபோது இரவு வேளையில் வானத்தில் கண்சிமிட்டும் விண்மீன்களை பார்ப்பது எல்லையில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதே உணர்வை பகல் வேளையில் பலவிதமான வண்ணக் காத்தாடிகள் வானத்தில் பறக்கும்போது என்னுள் பெற்றேன்.
நான் சிறுமியாக இருந்த காலகட்டத்தில் காத்தாடிகளை பறக்க விடுவதற்கு எந்த விதமான தடையும் இல்லாமல் இருந்தது. கோடை விடுமுறை வந்துவிட்டால் போதும் சிறுவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி காத்தாடிகளை வானில் பறக்கவிடுவார்கள். பொது மைதானங்களும், வீட்டின் மொட்டை மாடிகளும் காத்தாடிகளை பறக்கவிடும் அரங்கங்கள் ஆகிவிடும். சிறுவர்கள் எப்பொழுதும் இரு குழுக்களாக பிரிந்துவிடுவார்கள். அதில் ஒன்றுக்கு என் அண்ணன் தலைமை வகிப்பான்.
கடைகளுக்குச் சென்று, விதவிதமான வண்ணங்களும், அமைப்புகளையும் கொண்ட காத்தாடிகளை வாங்கி வருவார்கள். பிறகு "மாஞ்சா'வை தயாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதற்காக ஒரு மறைவிடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். நான் பெண்பிள்ளை என்பதால் என்னை காத்தாடியை பறக்க விட அனுமதிக்க மாட்டார்கள். மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதற்குப் பிறகு, என்னை பறக்கும் காத்தாடியின் கயிற்றைப் பிடித்துக்கொள்ள மட்டும் அனுமதிப்பார்கள்.
"இது ஆண்களுக்கான விளையாட்டு, போய் உன் பொம்மைகளுடன் விளையாடு' என்று விரட்டுவார்கள். ஆனால் காத்தாடியை ஒரு சிறுவன் கைகளில் பிடித்துக்கொண்டு எம்பிக் குதித்து வானத்தை நோக்கி பறக்கவிட முயல, அது அவனுக்கு போக்கு காட்டி, பிறகு ஒரு வழியாக கயிற்றைப் பிடித்திருப்பவனின், இழுப்புக்கு அடிபணிந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு மேலே எழும்பும் அழகைப் பார்க்க கண்கோடி வேண்டும் என்று எனக்குத் தோன்றும்.
மாஞ்சாவை செய்யும்போது மட்டும், என் அண்ணனும் அவனுடைய நண்பர்களும் என்னுடைய உதவியை வேண்டுவார்கள். "சாந்தி போய் தண்ணீரைக் கொண்டு வா', "அம்மாவிடம் கேட்டு கொஞ்சம் மைதா மாவை எடுத்து வா', என்று அவர்கள் ஏவும் வேலைகளை சிரமேற்கொண்டு, சந்தோஷமாக செய்வேன். 
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் "வஞ்சரம்" என்ற ஒட்டுப்பசையைப் போட்டு, அதில் மைதா மாவையும் பொடியாக அரைக்கப்பட்ட கண்ணாடித் துகள்களையும் போட்டு கலக்குவார்கள். பிறகு சுடுமாவு என்று அழைக்கப்படுகின்ற அலுமினியம் ஆக்ஸைடையும், இரும்புத் துகள்களையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிய கலவையில் பச்சை அல்லது பிங்க் வண்ணப்பொடியை இட்டு கலக்கினால் மாஞ்சா ரெடியாகிவிடும்.
இந்தக் கலவை குளிர்ந்ததும் அதை எடுத்து காத்தாடியைப் பறக்கவிடுவதற்காக வாங்கிய கயிற்றில் சமமாகத் தடவுவார்கள். ஆஹா! மாஞ்சா கயிறு தயாராகிவிட்டது. இப்பொழுது இரண்டு குழுக்களாக சிறுவர்கள் பிரிந்துவிடுவார்கள். ஒரு குழு காத்தாடியைப் பறக்கவிட, மற்றொரு குழு தங்களின் காத்தாடியில் கயிற்றால் முதல் குழுவின் காத்தாடியின் கயிற்றை அறுக்க முற்படும். அதேபோல முதல் குழுவும் இரண்டாம் குழுவின் காத்தாடியின் கயிற்றை அறுக்கப் போராடும். 
என்னுடைய அண்ணன், எதிர் குழுவின் காத்தாடியின் கயிற்றை அறுத்துவிட்டால் நான் குதிப்பேன், கைகளைத் தட்டி மகிழ்வேன். வெற்றி பெற்றவரின் காத்தாடி வானத்தில் தலைநிமிர்ந்து பறக்க, வெட்டுப்பட்ட காத்தாடியைப் பிடிக்க சிறுவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள்.
2012-ஆம் ஆண்டு அகமதாபாத்தின் ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் நின்றுகொண்டு வானத்தில் வெட்டுப்பட்டு விழுந்துகொண்டிருந்த ஒன்று அல்லது நூற்றுக்கணக்கான விதவிதமான காத்தாடிகளைப் பார்த்து நான் குதூகலத்தோடு குதித்து கைதட்டிக் கொண்டிருந்தேன், சிறுமியாக இல்லை யுவதியாக.
குஜராத்தில் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், எண்ணிக்கை 200-ஐத் தொட்டுவிடுமாம். "சர்வதேச காத்தாடித் திருவிழா' முதன்மையான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த விழா, குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் வருடம்தோறும் ஜனவரி மாதத்தில் "சங்கராந்தி'க்கு, மூன்று நாட்களுக்கு முன்னால் கொண்டாடப்படுகிறது. "அது என்ன சங்கராந்தி?'' என்ற கேள்விக்கு, "நம்ம ஊர் பொங்கல் பண்டிகையைத்தான், வடஇந்தியாவில் "சங்கராந்தி' என்று அழைக்கிறார்கள்'. அகமதாபாத்தில், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற ரீதியில் ஒரே பயணத்தில் சர்வதேச காத்தாடி திருவிழாவையும், சங்கராந்தியின்போது பொதுமக்கள் ஆயிரக்கணக்கான வண்ணக் காத்தாடிகளை வானில் பறக்கவிடுவதையும் பார்க்க ஆவல் கொண்டு காத்தாடி பிரியையாகிய நான் என் கணவருடன் 2012-இல் அகமதாபாத்துக்கு சென்றேன். 
ஏர்போர்ட்டிலிருந்து, எங்களுடைய ஹோட்டலுக்குச் செல்லும் வழியெல்லாம் திரும்பிய திசைகளில் எல்லாம், காத்தாடிகளை விற்கும் கடைகளே கண்களில் பட்டது. தீபாவளி சமயத்தில் புற்றீசல்களாக முளைத்தெழும், பட்டாசுக் கடைகளை ஒத்து இருந்தன இந்தக் கடைகள். இதைத் தவிர மர உருளைகளில் சுற்றப்பட்டிருந்த மாஞ்சா கயிறுகள், வண்ணங்களில் இத்தனை வகை இருக்கின்றனவா என்று திகைக்க வைத்தன.
கைகளில் கொத்துக் கொத்தாக காத்தாடிகளைப் பிடித்தபடி மக்கள் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். "ஒருவருக்கு ஏன் இத்தனை காத்தாடிகள்?'' என்று கார் ஓட்டுநரைக் கேட்டேன்.
"மேடம், சங்கராந்தி அன்றைக்கு அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கி இரவு எட்டு மணி வரை காத்தாடிகளை பறக்கவிடுவோம். ஒரு காத்தாடி வெட்டுப்பட்டால் மற்றொன்று என்று ஒவ்வொரு குடும்பமும் 100 காத்தாடிகளுக்கு குறையாமல் பறக்கவிடும்'' என்றாரே பார்க்கணும்!
"உண்மையாகவா'' என்று நம்ப முடியாமல் கேட்டேன். ஆனால் அன்று மாலை நடந்தது என்ன?
- தொடரும்

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் -  ஸ்பெயின் தக்காளி திருவிழா!

 

 
sk2

உலகின் பல நாடுகளைச் சுற்றி வந்திருக்கிறேன். பல வகையான உணவு வகைகளை உண்டு மகிழ்ந்திருக்கிறேன். மிகச் சுவையாக உள்ளது என்று நான் கணித்த உணவுகளில் எல்லாம் கட்டாயமாக தக்காளிகள் சேர்க்கப்பட்டிருக்கும். நம் நாட்டிலும் தக்காளி சேர்க்காத உணவு வகைகளே இல்லை என்று 
சொல்லலாம்.


"நான் தொட்டதும் தக்காளியாய் சிவந்துவிட்டதே உன் கன்னங்கள்' என்று ஆண்கள் சிலாகிக்க, தக்காளிச் சட்டினி, தக்காளி குழம்பு, தக்காளி சாதம், கெச்சப் என்று பெண்கள் கணவர்களுக்கு ஆக்கிப் பரிமாற, தக்காளியின் ஆதிக்கம் உலகெங்கிலும் பரவிக்கிடக்கிறது. தக்காளி இல்லாத உணவு எனக்கு சுவைப்பதே இல்லை.

தக்காளிகள் பிறந்த இடம் தென் அமெரிக்காவாக இருக்கிறது. பிப்லாஸ் என்கிற அமெரிக்க இந்தியர்கள் கி.மு.500-இல் முதல்முதலாக தக்காளியை அறுவடை செய்திருக்கிறார்கள். தக்காளியின் பளபளப்பையும், ஆழ்ந்த சிகப்பு நிறத்தையும் பார்த்து அதில் விஷத்தன்மை இருக்குமோ என்று பயந்து சாப்பிட மறுத்தவர்கள் பின்பு அதன் சுவை உணர்ந்து பயிரிட ஆரம்பித்தார்கள். பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீஸியர்கள் தக்காளியை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினர்.

இவ்வளவு பாரம்பரியம் மிக்க தக்காளிகளைக் கொண்டு ஒரு பெரிய திருவிழாவே நடக்கிறது. இந்த உலகப் புகழ் வாய்ந்த தக்காளி திருவிழா எங்கே நடக்கிறது என்ற கேள்விக்கு, ஸ்பெயின் நாடு என்பது பதிலாக இருக்கிறது. மொத்தம் 100 டன் எடையுள்ள தக்காளிகள் நசுக்கப்பட்டு உலகெங்கிலும் வந்து கூடியிருக்கும் சுமார் 75,000 மக்கள் மீது வீசி எறியப்படுகிறது. தக்காளி திருவிழாவை நேரில் கண்டுகளிக்க விரும்புவர்கள் வாருங்கள் போவோம், ஸ்பெயின் நாட்டில் உள்ள வெலன்சியா நகரத்தில் சிறிய ஊரான பூனலுக்கு (ஆன்ய்ர்ப்). ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன்கிழமையில் பூனல் நகரம் திருவிழாக்கோலம் பூண்டுவிடும், ஏனெனில் அன்றுதான் தக்காளி திருவிழா அரங்கேறும். 

இந்த திருவிழாவுக்கு போவதற்கு முன் அதனுடைய தோற்றம் ஏற்பட காரணமாக இருந்தது எது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறதுதானே!

1945ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமை பூனல் ஊரை சார்ந்த மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு உரிய கடமைகளை ஆற்றுவதில் ஆழ்ந்திருந்தார்கள். ஒரு இடத்தில் ஊர்வலம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஜைஜான்டஸ் (Gigantes), கேபிஜூடோ (Cabezudo) என்ன முழிக்கிறீங்க? நம்ம ஊரு திருவிழாக்களிலே ஆண் பூதம், பெண் பூதம் என்று வேடம் கட்டி செல்வார்களே அப்படித்தான் சிலர் சென்று கொண்டிருந்தார்கள்.

அங்கே தெருவோரமாக கூடி இருந்த இளைஞர்களுக்கு இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள ஆசை. அவர்கள் அப்படி செய்ய முயன்றபொழுது ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கிறது. கோபம் கொண்ட இளைஞர்கள் பக்கத்தில் இருந்த காய்கறி கடைகளில் இருந்து, பழங்களை எடுத்து வீசி இருக்கிறார்கள். இதில் தக்காளிப் பழங்களே பிரதானமாக விளங்கி இருக்கிறது. 

இளைஞர்கள் வீசிய தக்காளிகளைக் கேச் பிடித்து ஊர்வலக்காரர்கள் அதை இளைஞர்கள் மீது வீச, கைகலப்பு ஏற்பட்டு பிறகு காவல்துறையினர் வந்து எல்லோரையும் கைது செய்து அமைதியை நிலைநிறுத்தி இருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 

அடுத்த வருடம் அதே நாளில் கிராமத்து இளைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி தங்கள் வீடுகளிலிருந்து கூடைகளில் தக்காளிப் பழங்களைக் கொண்டு வந்து ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொள்ள, முதலில் கோபப்பட்ட ஊர் ஜனங்கள் பிறகு அதையே ஒரு விழாவாக்கி ஆனந்தப்பட்டனர்.

இதுதான் (கஹ பர்ம்ஹற்ண்ய்ஹ) "லா டொமடீனா' என்று அழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டின் இந்த தக்காளி திருவிழா பிறந்த கதை.

ஸ்பெயின் நாட்டின் இந்த தக்காளி திருவிழாவை நேரில் காணவேண்டும் என்ற ஆசை நீரு பூத்த நெருப்பாக என் நெஞ்சில் இருந்தது. "ஜிந்தகி நா மிலிகி தோபாரா' என்ற படத்தில், ஹிர்த்திக் ரோஷனும், கைத்ரீனா கைய்ஃப்பும், தக்காளி திருவிழாவில் கலந்துகொண்டு, கூழாக்கப்பட்டு ஆறாக ஓடும் தக்காளிச் சாற்றில் உருண்டு, புரண்டு டூயட் பாடியதைப் பார்த்தபொழுது என்னுள் துளிர்விட்ட ஆசை அது!

ஒருமுறை, ஐரோப்பிய இருதய கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக என் கணவர் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணப்பட்டார். பார்சிலோனா நகரத்தில் அந்த கருத்தரங்கு நடக்க இருந்தது. நானும் என் கணவருடன் சென்றேன். கருத்தரங்கம் முடிந்தவுடன் நானும் என் கணவரும் ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான வெலன்ஸியாவுக்கு (யஹப்ங்ய்ஸ்ரீண்ஹ) சென்றோம். அந்த நகரத்திற்கு அருகேதான் பூனல் கிராமம் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு இரண்டு தினத்திற்கு முன்னால் வெலன்சியாவுக்கு செல்ல முடிந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கருத்தரங்கம் நடந்த மாதம் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரமாக இருந்ததால் என்னுடைய நீண்டநாள் கனவு நிறைவேற ஏதுவாக இருந்தது.

அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு பூனல் செல்லும் பேருந்தில் ஏறினோம். பேருந்து நிலையத்தில் கூட்டம் பொங்கி வழிந்துக் கொண்டிருந்தது. வயது வித்தியாசம் இல்லாமல் பெருசுகள் முதல் சிறுசுகள் வரை தக்காளி திருவிழாவுக்கு வந்திருந்தனர். என் கண்களுக்கு இளவட்டங்களும், காதல் ஜோடிகளுமே அதிகமாகத் தென்பட்டனர்.
பூனலை அடைந்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத, நினைக்க நினைக்க மலைக்க வைக்கும் அனுபவங்களோடு திரும்பினோம்.

என்ன மாதிரியான அனுபவங்கள்... அடுத்த வாரம் பார்ப்போமா!

தொடரும்

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

பூடான் நிமலங் திருவிழா - சாந்தகுமாரி சிவகடாட்சம்  

 

 
sk13

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்-
பூடானுக்கு வான்வழியாக அழைத்துச்செல்லும் "டிரக் ஏர்'க்கு (Druck Air) சொந்தமான விமானத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். ஜன்னல் வழியாகத் தெரிந்த, பனிக்குல்லாக்களை அணிந்தாற்போல வரிசைக்கட்டி நின்ற இமயமலைத் தொடர்கள், என் சிந்தையைக் கவர்ந்தன. என் மனம் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தது. கண்டுகொண்டிருந்த காட்சிகளுக்காக மட்டும் அல்லாமல், பூடான் நாட்டில் நடைபெற இருக்கிற நிமலங் திருவிழாவில் கலந்துகொள்ளப் போவதும், அதனால் பெறப்போகும் அனுபவங்களும்தான் என் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.
பூடான் இமயமலைத் தொடரின் கிழக்கு மூலையில் உள்ளது. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் அமைந்திருக்கிறது. "இடியாய் முழங்கும் டிராகனின் நிலம்' என்று அழைக்கப்படுகின்ற பூடான், உல்லாசப் பயணிகளுக்காக தன் கதவுகளைத் திறந்துவிட்டது 1970}இல்தான் என்பது, தன்னுடைய தனித்தன்மையையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பதற்காகத்தான் என்றால் மிகையாகாது.
உலகிலேயே, மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பூடான் எட்டாவது இடத்தையும், ஆசியாவிலேயே மகிழ்ச்சியான நாடு என்பதில் முதலிடத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
பூடான் தலைநகரமான (Thimpu) திம்புவில் இரண்டு நாட்கள் தங்கி, சுற்றிப் பார்த்தபொழுது மக்களின் மகிழ்ச்சிக்கான காரணம் புரிந்துபோனது. பூடான் நாட்டில் ஐம்பது சதவீதத்துக்கு மேல் தேசியப் பூங்காக்கள் நிறைந்திருப்பதினால், எங்கு நோக்கினும் இயற்கைக் காட்சிகள், சுத்தமான காற்று, காசுக்காக இயங்காமல் மனசாட்சிக்காக செயல்படும் மக்கள்! இங்கே வானுயர்ந்த மால்கள் இல்லை, 1999}இல் தான் தொலைக்காட்சி, இண்டர்நெட் செயல்படத் தொடங்கியது. வேண்டிய அளவுக்கு மட்டுமே இவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. டிராபிக் லைட்டுகளுக்குக்கூட இங்கே வேலையில்லை, வாகன ஓட்டிகளுக்கு தங்களுடைய நிலைப்பாடு தெரிவதினால் அத்துமீறல்களுக்கு இடமில்லை, காதைப் பிளக்கும் ஹாரன்களுக்கு வேலையும் இல்லை, உல்லாசப் பயணிகளை ஏமாற்றும் அவசியம் இல்லை. வேண்டிய அளவுக்கு சம்பாதித்து, பெளத்த மதம் காட்டும் நல்வழியில் நடந்து, மகிழ்ச்சியுடன் வாழும் பூடான் மக்கள் கொண்டாடும் நிமலங் திருவிழாவில் கலந்துகொள்ள அது நடைபெறும் கிராமமான (Bumthang) பூம்தாங்கை நோக்கி காரில் பயணித்தேன்.
வழியில் கடல் மட்டத்திலிருந்து 10,200 அடி உயரத்தில் இருக்கும் 'டச்சுலா பாஸை'க் (Duchula pass) கடந்தோம். இங்கே ஒரு சிறிய குன்றின் மீது கட்டப்பட்டிருந்த 108 ஸ்தூபிகள் கண்களுக்கு விருந்தளித்தன. ஏழு மணி நேரம் காரில் பயணப்பட்டு பூம்தாங்கை அடைந்தோம்.
நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் கனிமங்கள் அடங்கிய கற்களை, நெருப்பில் சுட்டு பிறகு அதைத் தண்ணீரில் போட்டு, அதனால் சூடான தண்ணீரில் மூழ்கி குளிக்கும் வசதி இருக்கிறது என்று அறிந்து அப்படி குளிக்க முடிவு செய்தோம். இந்த அருமையான "ஹாட் ஸ்டோன் பாத்' எனக்கும், என் கணவருக்கும் பயணக் களைப்பை நீக்கிப் புத்துணர்வைத் தந்தது.
நாங்கள் பூடானில் கழித்த பத்து நாட்களுக்கும், எங்களை நிழல் போலத் தொடர்ந்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, தக்க நேரத்தில் உணவு அளித்து கண்ணின் இமையாக செயல்பட்ட வழிகாட்டி (Tenzin) டென்ஜீனையும், ஓட்டுநர் (Lhamo) லாமோவையும் வாழ்நாளில் மறக்கமுடியாது.
நிமலங் திருவிழாவுக்கான காலைப் பொழுது ரம்மியமாக விடிந்தது.
"என்ன, (Tshechu) செசுவுக்கு கிளம்பலாமா?'' என்றார் டென்ஜின்.
"என்னது செசுவா!... அப்படியென்றால்...'' என்று புருவங்களை உயர்த்தினேன்.
"செசுவென்றால் பூடான் மக்களின் வருடாந்திர மதத்திருவிழா என்று பொருள். இது பூடானின் ஒவ்வொரு மாவட்டம்தோறும் ஒவ்வொரு மாதத்தின் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. இன்று பூம்தாங்கில் ஜூன் மாதத்தில் கொண்டாடப்படும் நிமலங் திருவிழாவைப் பார்க்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். 
இன்று நாம் இப்பகுதியில் உள்ள மடாலயத்திற்கு செல்லப்போகிறோம். அங்கேதான் எங்களுடைய குரு (Rinpache) ரின்பாச்சுக்கு மரியாதை செய்யும் விதமாகக் கொண்டாடப்படும் நிமலங் திருவிழா நடக்கிறது''.
"டென்ஜின், யார் இந்த ரின்பாச்?'' என்று ஆவலோடு கேட்டேன்.
ஒரு விநாடி டென்ஜின் கண்களை மூடிக்கொண்டார். அவர் முகம் முழுவதும் பரவசம் பரவியது. "வாருங்கள் காரில். மடாலயத்திற்கு செல்வதற்கு ஒரு மணி நேரமாகும். அப்பொழுது ரின்பாச்சைப் பற்றிய முழு விபரத்தையும் சொல்லுகிறேன். 
ரின்பாச்சை நாங்கள் குரு பத்ம சம்பவா என்றும் அழைப்போம். எங்களுக்கு இவர் இரண்டாவது புத்தர். இவரைப் போற்றும் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருக்கும் நீங்கள் இருவரும் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறீர்கள். நிமலங் திருவிழாவில் பங்கு பெறுவோர்கள் தங்கள் பாவங்களைத் தொலைத்து, நற்கதிக்கு செல்ல வழிவகுத்துக் கொள்கின்றனர்''.
கார் வேகம் பிடித்து ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் காட்சி அளித்த இயற்கை அன்னையின் வெளிப்பாடுகள் மனதைக் கவ்வினாலும் மனம் ரின்பாச் குருவைப் பற்றி அறிந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டியது.
என் எண்ணத்தைப் படம் பிடித்தவர் போல டென்ஜின் பேசத் தொடங்கினார். "நிமலங் திருவிழாவில் அரங்கேறும் நிகழ்ச்சிகளையும், நடனங்களையும், சடங்குகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் எங்கள் குரு ரின்பாச்சைப் பற்றி அறிந்திருந்தால் மட்டுமே முடியும்.
புத்தரின் அந்திமக் காலம், இன்னும் சிறிது நேரத்தில் உயிர் பிரியப்போகிறது. அவரைச் சுற்றி நின்ற சீடர்கள் வருத்தம் மிகுதியால் அழுது கொண்டிருந்தனர். அப்பொழுது புத்தர் சொன்னார், "அழாதீர்கள், இன்று நான் இறந்தபின் சரியாக பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து "தனகோசா" என்கின்ற ஏரியில் மிதக்கும் தாமரை ஒன்றில் நான் மீண்டும் ஜனிப்பேன்' என்று சொல்லி மறைந்தார்.
அதேபோல தாமரையில், ஆண், பெண் அணுக்களின் சேர்க்கை இல்லாமல் பிறந்தவர்தான் பத்ம ஜெகனியான குரு பத்ம சம்பவா. 
தன்னுடைய ஒரே மகனை இழந்த இந்தரபோடி என்கின்ற அரசர் இந்த குழந்தைக்கு ரின்பாச் என்று பெயர் சூட்டி வளர்த்தார். 
திருமணம் முடிந்த பின்பு, குடும்ப வாழ்வைத் துறந்து ரின்பாச் துறவறத்தைத் தழுவினார். பல இறைசக்தி நிறைந்த குருமார்களுக்கு சீடராக இருந்து பணி பல புரிந்து, தியானம் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெற்று தன்னுடைய உருவத்தைப் பல நிலைகளில் மாற்றி அமைத்துக் கொள்ளும் சக்தியைப் பெற்றார்.
எட்டு விதமான வெளிப்பாடுகளை எடுத்து பெளத்த மதத்தையும், அதனுடைய கோட்பாடுகளையும் அவர் போதிக்கத் தொடங்கியது, எங்கு தெரியுமா?'' என்று டென்ஜின் நிறுத்த, நான் அவரின் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக காத்திருந்த அந்த நொடிகள்...
(தொடரும்)

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

ரின்பாச்சை நினைவு கூரும் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்  

 

 
sk14


சில நொடிகள் நிறுத்தி பிறகு டென்ஜின் சொன்னார், "ரின்பாச் இந்தியாவில் இருந்து கொண்டுதான் பெளத்த மதத்திற்கு எதிரான சக்திகளை வீழ்த்தி, பிறகு அது செழித்தோங்க வழி செய்தார்''.

"பிறகு எப்பொழுது ரின்பாச் பூடானுக்கு வந்தார்?'' என்றேன். 
கி.பி.746-இல் அப்பொழுது பூடானை ஆண்ட மன்னர் சென்ட கைப் (Sendha Gyap) உயிரைக் காப்பதற்காக வரவழைக்கப்பட்டார்.
பிளாஸ்கில் கொண்டு வந்திருந்த சூடான டீயை காகித டம்ளர்களில் ஊற்றி எங்களுக்கு கொடுத்துவிட்டு டென்ஜின் தொடர்ந்தார்.
"சென்டகைப்புக்கும், நோச்சி (Naoche) என்கின்ற அரசருக்கும் இடையே போர் மூண்டது. இதில் சென்டகைப்பின் மகன் கொல்லப்பட்டான். இதனால் கடுங்கோபமுற்ற சென்டகைப் பூம்தாங்கின் காவல் தெய்வமான செல்கிங் கர்போவின் (Shelging Karpo) கோயில்களை எல்லாம் அழித்துவிட, பதிலுக்கு செல்கிங் கர்போ, அரசர் தன் சக்தியை இழக்கும்படி செய்து அவரைப் படுக்கையில் தள்ளியது.
இவையெல்லாம் நடக்கும்பொழுது ரின்பாச் நேபாளத்தில் தியானத்தில் இருந்தார். வேண்டிக் கேட்டுக்கொண்டதினால் கருட உருவம் எடுத்து வந்து செல்கிங் கர்போவை அடக்கி, அரசர் சென்டகைப்பிடம் இருந்து பறித்த உயிர் சக்தியை மீண்டும், அவருக்கு கிடைக்க வழி செய்தார்.
பழையபடி நல்ல தேக ஆரோக்கியத்தை அடைந்த சென்டகைப், ரின்பாச் குருவிற்கு செலுத்தும் நன்றிக்கடனாக, பெüத்த சமயத்தை பூடானில் பரப்ப ஆவன செய்தார்''.
"முடிவில் ரின்பாச் என்ன ஆனார்?'' 
என்றேன். 
"குரு ரின்பாச்சின் பிறப்பைப் போலவே முடிவும் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. பூடான் நாட்டிற்கு ரின்பாச் மூன்று முறை வந்து சென்றிருக்கிறார். இன்றளவும் பேரோ (டஹழ்ர்) பள்ளத்தாக்கில் இருந்து 3000 அடி உயரத்தில் டைகர் நெஸ்ட் என்கின்ற மடாலயம் இருக்கிறது. இங்கு ரின்பாச், புலியின் மீது அமர்ந்தபடி பறந்து வந்திருக்கிறார். மொத்தமாக மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள், மூன்று நாட்கள் இங்கே தவம் புரிந்திருக்கிறார். இன்றும் எங்கள் புராணங்கள் ரின்பாச் உயிருடன் தென்மேற்கு திசையில் வாழ்ந்து வருவதாகவும், கெட்ட சக்திகளை அழித்து வருவதாகவும் நம்புகிறார்கள்'' என்று டென்ஜின் சொல்லி முடிக்கவும், நிமலங் திருவிழா நடைபெறும் மடாலயத்திற்கு நாங்கள் சென்று சேரவும் சரியாக இருந்தது.
மடாலயத்தின் மிகப்பெரிய முற்றத்தில் ஆயிரக்கணக்கான பூடான் மக்கள் குழுமியிருந்தனர். புடவை கட்டிக்கொண்டு வந்திருந்த என்னை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்த வண்ணம் இருந்தனர். சில வெளிநாட்டுப் பயணிகளும் கண்களில் பட்டனர். 
கையில் கொண்டு வந்திருந்த வீடியோ கேமராக்கள் மூலம் நடக்கும் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
திடீர் என்று முரசுகள் முழங்கும் சத்தம் கேட்டது. இந்த நிமலங் விழாவுக்காகவே தயாரிக்கப்பட்ட கண்கவர் ஆடைகளை அணிந்தபடி ஆண்கள் ஜால்ராக்களைத் தட்டிக்கொண்டும், முரசுகளை அடித்துக் கொண்டும், கொம்புகளை வாயில் வைத்து ஊதிக் கொண்டும் வந்தனர். அவர்களுக்கு பின்னால் விதவிதமான முகமூடிகளை அணிந்த வண்ணம் வந்த ஆடவர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து அசந்து போனேன்.
சுழன்று, தாவிக்குதித்து, கழுத்து ரப்பரினால் ஆனதா என்ற பிரமிப்பை ஏற்படுத்திய வண்ணம் எல்லாத் திசைகளிலும் கழுத்தைச் சுழற்றி ஆடி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
நிமலங் திருவிழா, ரின்பாச் குருவின் பெருமைகளை நினைவு கூர்ந்து, அவருக்கு மரியாதை செய்வதற்காக நடத்தப்படுகிறது. சென்டகைப் மன்னன் ஆரோக்கியத்தை மீட்டு எடுப்பதற்காக ரின்பாச் தன்னை எட்டு விதமாக வெளிப்படுத்தி, எட்டு விதமான நடனங்களை ஆடி கெட்ட ஆவிகளை விரட்டி, உள்ளூர் கடவுளை அடக்கியதைப் போற்றும் வண்ணம் இந்த நடனங்கள் ஆடப்படுகின்றன.
பூடான் மக்களை, பெüத்த மதத்திற்கு மாற்றும்பொழுதும் ரின்பாச் பல சடங்குகளைச் செய்வார். மந்திரங்களைச் சொல்லிய பிறகு நடனம் புரிவாராம். ஆகையால் நிமலங் திருவிழாவில் நடனமே பிரதானமாக இருக்கிறது. விதவிதமான கதாபாத்திரங்களைச் சுட்டிக்காட்ட, பல வகையான முகமூடிகளை நடனக்காரர்கள் அணிகிறார்கள்.
நான்கு நாட்கள் நடக்கின்ற விழாவில் நான்கு மான்கள் நடனம், ஹீரோக்களின் நடனம், கிடார், கருப்பு தொப்பி, முரசு நடனங்கள் என்று பல வகையான நடனங்கள் ஆடப்படுகின்றன. நடுநடுவே கோமாளிகள் போல வேடம் போட்டவர் வந்து செய்கின்ற சேஷ்டைகளை மக்களும், குழந்தைகளும் வெகுவாக ரசித்து கைதட்டினர்.
நடுவில் வரும் இடைவெளியின்போது வந்திருந்த அத்தனை பேருக்கும் சூடான டீயும், அரிசி மாவினால் ஆன தின்பண்டங்களையும் வழங்கினர். இந்த சமயத்தில், இளம் பெண்கள், நாட்டுப்புற நடனங்களை ஆடி மகிழ்வித்தனர்.
சுற்றிலும் கண்களை சுழலவிட்டேன். ஆண்கள் கோ (Gho) என்கின்ற முழங்கால் வரை நீள்கின்ற கட்டாயமாக்கப் பட்டிருக்கின்ற தேசிய உடையிலும், பெண்கள் கணுக்கால் வரை நீள்கின்ற கிரா (Kira) என்று அழைக்கப்படுகின்ற உடையிலும் வலம் வந்துகொண்டிருந்தனர். கண்களைப் பறிக்கும் வண்ணத்துடன், கைகளினால் நெய்யப்பட்ட அந்த உடையின் அழகில் மயங்கி அதை வாங்க ஆசைப்பட்டேன். ஒரு கிராவின் விலை 40,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை ஆகும் என்பதை அறிந்து மலைத்தேன்.
நிமலங் திருவிழாவின் கடைசி நாள். அரசு நிர்வாக அலுவலகமாகவும், கோயிலாகவும் திகழும் கட்டடத்தை ஜாங் (Dzong) என்று பூடானியர்கள் அழைக்கிறார்கள். அந்த ஜாங்கை சென்று அடைந்தோம். கடந்த நாட்களை விட இன்று, அங்கே மிக அதிக அளவில் மக்கள் குழுமியிருந்தனர். வருடத்திற்கு ஒருமுறை சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி பகல் பதினொன்று மணிவரை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சுமார் 30/45 மீட்டர் அகலமும் நீளமும் கொண்ட, மிக பழமையான ரின்பாச் குருவின் உருவத்தைக் கொண்ட ஓவியம் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
நீண்டு சென்ற வரிசையில் நானும் என் கணவரும் நின்றோம். எங்கள் முறை வந்தது. பத்மாசனம் போட்டு அமர்ந்திருந்த குரு ரின்பாச்சின் முகத்தில்தான் எவ்வளவு தெய்வீகத் தன்மை, கண்கள் கருணையைப் பொழிந்துகொண்டிருந்தது. அவரைச் சுற்றி அவருடைய சீடர்கள் நின்றிருந்தனர். இந்த சுருளில் இருந்த ரின்பாச்சின் உருவம் வெர்மலின் இங்க் மற்றும் தங்கம் மற்றும் கனிமங்கள், காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றையும் கொண்டு வரையப்பட்டு காலங்களைக் கடந்து உயிர்ப்புடன் இருந்தது.
இங்கேயும் ரின்பாச்சையைப் பெருமைப்படுத்தும் நடனங்கள் ஆடப்பட்டன. அவர் தீய சக்திகளை அடிப்பதாகக் காட்டும் நடனம் முடியும்பொழுது ரின்பாச்சின் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மக்கள் வெள்ளம் குருவிடம் ஆசிர்வாதம் வாங்க புறப்பட, நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம்.
நிமலங் திருவிழா பெளத்த மதத்தைப் பெருமைப்படுத்துவதுடன், பூடான் மக்களின் வாழ்க்கை முறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
பூடான் என்ற சொர்க்க பூமியில் நடைபெறும் நிமலங் திருவிழா வாழ்நாளில் மறக்கமுடியாத திருவிழாவாக என் நெஞ்சில் பதிந்துபோனது.
(தொடரும்)

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 8: கோவா கார்னிவெல்! 

 

 
gk5

கோவாவிற்கு பலமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும், "வா, வா' என்று இரு கரங்கள் நீட்டி அழைத்து கோவா, தன் பல புதிய அழகிய வெளிப்பாடுகளை எனக்குக் காட்டி மகிழ்விக்கிறது.

அரபிக் கடலோரமாக அமைந்த அழகிய கடற்கரைகள், ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள், முந்திரிக் காடுகள், சதுப்பு நிலங்கள், தேவாலயங்கள், கோயில்கள், உமிழ்நீரை அதிக அளவில் சுரக்க வைக்கும் கோவன் உணவு வகைகள், நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் வெளிநாட்டினர் என அதிர வைக்கும் இடம் கோவா.

ஆண்டுக்கு இருபது லட்சம் உல்லாசப் பயணிகள் வந்து போகும் இடமாக கோவா திகழ்கிறது. இதில் 12 லட்சம் பேர் வெளிநாட்டினர். ஏன் இப்படி தேன் அடையை சூழ்ந்துக் கொள்ளும்  தேனீக்களாக வெளிநாட்டினர் கோவாவிற்கு வருகின்றனர் என்பதற்கு 450 ஆண்டுகள் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், ஐரோப்பிய கலாசாரம் இன்றளவும் அங்கே அதிகமாக வேரூன்றி இருக்கிறது.

கோவா மக்கள் எப்போதும் இசையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். பாட்டு, நடனம் என்று தூள் கிளப்பி விடுவார்கள். சாதாரண ஹோட்டலில்கூட ஒரு ஸ்பானிஷ் கிடாராவது ஒலித்துக் கொண்டிருக்கும். இதைத் தவிர முந்திரி பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட லோக்கல் டிரிங்  பென்னி (டங்ய்ய்ஹ்) அங்கே ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோவா மக்கள் மகிழ்ச்சியின் பிறப்பிடமாகத் திகழ்கிறார்கள். பொன்னையே கொட்டிக் கொடுத்தாலும் பகல் இரண்டு மணிக்கு மேல் வியாபாரத்தில் ஈடுபட மாட்டார்கள்.

நல்ல பகல் உணவு, அருமையான பகல் தூக்கம். ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் பழக்கம் அங்கே வாழும் நாய்களையும், சிறிது காலம் தங்கிவிட்டுப் போகும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் தொற்றிக் கொண்டுள்ளது.

ஒருமுறை கோவாவிற்கு சென்றிருந்தபோது எங்களுடன் வந்த கைட் ஜோசப் சொன்னார், ""நீங்கள் அடுத்தமுறை வரும்பொழுது கட்டாயமாக எங்களுடைய கார்னிவெலில் கலந்துகொள்ளும் விதமாக உங்கள் பயணத்தை வடிவமையுங்கள்'' என்றார்.

"கரும்பு தின்னக் கூலியா!' என்று 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம், 5-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடக்க இருந்த கோவா கார்னிவெல் விழாவில் கலந்து கொள்வதற்காக என் கணவருடன் பயணப்பட்டேன்.

ஆதியில் கோவாவைப் படைத்தவர் "பரசுராமர்' என்று நம் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. நம்மை எல்லாம் காக்கும் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம்தான் பரசுராமர். கடவுள்களுக்கே மன அழுத்தம் அதிகமானால் புகலிடமாகத் தேடிவந்து தங்கிச் சென்றது கோவாதானாம். அதனால்தான் என்னவோ இன்றைக்கும் இயற்கை அழகை அள்ளித் தந்து இயந்திரமாகிப் போன மனிதனை தன் நிலைக்கு அழைத்து வந்து உற்சாகப்படுத்துகிறது.

இயற்கை அழகோடு, கார்னிவெல்லும் கைகோர்த்துக் கொண்டதால் என் நெஞ்சம் பலவிதமான எதிர்பார்ப்புகளால் நிரம்பி வழிந்தது. கோவாவில் எப்போதும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் கார்னிவெல், இம்முறை மார்ச் மாதத்தில் அரங்கேற இருந்தது. 

லென்ட் (lent) தொடங்குவதற்கு முன் நான்கு நாட்கள் இந்த வைபவம் நடைபெறுகிறது.

இயேசு கிறிஸ்து 40 நாள்கள் பாலைவனத்தில் விரதமிருந்து, சாத்தானின் சோதனைகளிலிருந்து விடுபட்டு மீண்ட அந்த நாள்களை கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதி தாங்களும் அவ்விதமே தீமைகளில் இருந்து விடுபட பிரார்த்தித்து விரதம் இருக்கிறார்கள்.

கார்னிவெல் என்றாலே "மாமிசத்தை ஒதுக்கு' என்று அர்த்தம். அதன்படி அந்த நாற்பது நாள்களும் மாமிசத்தை சாப்பிட மாட்டார்கள். கோவாவில் பல ஹோட்டல்களில் மீனை மட்டுமே சமைப்பார்களாம்.

இப்படிப்பட்ட விரதத்தை அனுஷ்டிப்பதற்கு முன்பு நான்கு நாள்கள் கும்மாளம் இட்டு மகிழ்கிறார்கள்.

கார்னிவெலின் அரசன் "மோமோ' (Momo) சொல்லும் வார்த்தைகள் என்ன தெரியுமா!

சாப்பிடு, குடி, கும்மாளம் அடி (Eat. drink, make merry). 
 
கோவாவில் பானாஜியில் (Panaji) நடைபெறும் கார்னிவெல் மிகவும் முக்கியமானது என்பதால் அங்கு சென்று தங்கினோம். ஏற்கெனவே எங்களுக்கு பழக்கப்பட்ட கைட் ஜோசப் வந்து எங்களை அழைத்துக் கொண்டு சென்றார்.

""ஜோசப், கார்னிவெல் கோவாவில் எப்போது தோன்றியது என்று சொல்ல முடியுமா?'' என்றேன்.

""மேடம், கோவா போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபொழுது அவர்களால் கார்னிவெல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் இந்த கார்னிவெலின் தோற்றம் 500 ஆண்டுகளாக இருக்கிறது.

முதன்முதலில் ரோமானியர்களும், கிரேக்கர்களும் இப்படிப்பட்ட கார்னிவெலைக் கொண்டாடினர். பிறகு ஸ்பானியர்களும், போர்ச்சுகீசியர்களும் (Colonies) தாங்கள் கைப்பிடித்து குடியேறிய பகுதிகளில் கார்னிவெலைக் கொண்டாட ஆரம்பித்தனர்.

நாங்கள் சென்ற காரை ஒர் இடத்தில் நிறுத்திவிட்டு, சாலைகளில் நடக்கத் தொடங்கினோம். சூரியன் அஸ்தமனம் முடிந்திருந்ததால் எங்கும் இருள் சூழத் தொடங்கி இருந்தது. சாலையின் இருபக்கங்களிலும் இருந்த கட்டடங்களிலும், வீடுகளிலும், வண்ண வண்ண மின்சார விளக்குகள் சரங்களாகத் தொங்கி அழகூட்டிக் கொண்டிருந்தன. தாற்காலிகக் கூடாரங்கள் காளான் செடிகளாய் ஆங்காங்கே முளைத்திருந்தன. அவைகளில் நாட்டுப்புற நடனங்களும், பாடல்களும் அரங்கேறி மக்களைக் குஷிப்படுத்திக் கொண்டிருந்தன. நெருப்பு வளையங்களைக் கொண்டு பலர் சாகசங்களை செய்ய, கழைக்கூத்தாடிகள் தங்கள் திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர். 

மற்றொரு புறம் ஜாஸ் இசைகளும், பேண்டின் முழக்கங்களும் கேட்க அங்கே ஆவலோடு சென்றோம். தெருக்களிலேயே மக்கள் கைகோர்த்து ஜாஸ் இசைக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தனர்.

கார்னிவெலின் கொண்டாட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன. ""சூப்பர்!'' என்றேன். ""இதுக்கே இப்படி மலைக்கிறீர்களே, நாளை மாலை நான்கு மணிக்கு பட்டோ பிரிட்ஜ் Patto Bridge) அருகே தொடங்க இருக்கும் கோவா கார்னிவெலின் ஊர்வலத்தைப் பார்த்தால் என்ன சொல்வீர்களோ'' என்றார் ஜோசப். 
பட்டோ பிரிட்ஜ் அருகே நடந்தது என்ன?

அடுத்த இதழில்...

http://www.dinamani.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 9: தைவான்லான்டர்ன் திருவிழா!

 

 
dk2b

மின்சாரத்தை பென்ஜமின் பிராங்லின் கண்டுபிடித்த பிறகு நான் பிறந்ததால், என் வாழ்நாட்கள் முழுவதிலும் மின்சார விளக்குகளே என்னை சூழ்ந்திருந்தன. ஆனால், கார்த்திகை தீபத்தின்பொழுது ஒளிவீசும் அகல் விளக்குகள், மின்சாரம் தடைப்படும்போது ஏற்றி வைக்கப்படும் சிம்னி விளக்குகள், நான் சிறுமியாக கலந்துகொண்ட மாப்பிள்ளை அழைப்பின்போது தலைகளில் பெட்ரோமாஸ் விளக்குகளை சுமந்து கொண்டு வருவார்கள். அந்த விளக்குகளின் ஒளி,  என் மனம் பலவிதமான விளக்குகளின் அழகில் மயங்கி கிடந்திருக்கிறது. 

இன்றைய காலகட்டத்தில் வானத்தில் மிதந்து, ஒளிவீசி, பார்ப்போரின் கண்களையும் உள்ளத்தையும் ஒருசேர கவரும் விளக்குகளை "சைனீஸ் லான்டர்ன்ஸ்' என்றும் "ஸ்கை லான்டர்ன்ஸ்' என்றும் அழைக்கிறார்கள். மூங்கில் சட்டங்களைச் சுற்றி எடை குறைந்த, மக்கும் தன்மையுடைய மெல்லிய தாள்களைக் கொண்டு சுற்றப்பட்ட விளக்கின் நடுவே சிறிய மெழுகினால் ஆன எரிபொருள் கலம் (fuel cell) இருக்கும், இதைப் பற்ற வைத்தால், விளக்கின் உள்ளே சூழ்ந்துகொள்ளும் சூடான காற்று அதை மேல்நோக்கி செல்லவைத்து இரவு வானத்தில் நட்சத்திரமாக மின்ன வைக்கும்.

இத்தகைய சைனீஸ் லான்டர்ன்களைக் கொண்டு வருடந்தோறும், தைவானில் உலகின் தலைசிறந்த திருவிழாக்களில் ஒன்றாகப் போற்றப்படும் லான்டர்ன் திருவிழா கொண்டாடப்படுகிறது. லூனார் நியூ இயரின் பதினைந்தாம் நாள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவின்போது தைவான் முழுவதிலும் மக்கள் ஒன்றாகக் கூடி பலவிதமான முறைகளில் இந்த திருவிழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். 

வடக்கு தைவானில் பிங்ஸியில் (pingxi) பிங்ஸி ஸ்கை லான்டர்ன் திருவிழா, மற்றும் டைபி (Taie) லான்டர்ன் திருவிழா என்றும் தெற்கு தைவானில் (taitung) டைடங் பாம்பிங் ஆப் மாஸ்டர் ஹேன்டன் திருவிழா, என்சுயி பிஹைவ் (Yanshui Beehive) திருவிழா என்றும் கொண்டாடுகிறார்கள். வடக்கில் கொண்டாடப்படும் திருவிழாவை லான்டர்ன்கள் ஆக்கிரமித்துக் கொள்ள, தெற்கு திருவிழாவை பட்டாசுகள் மட்டுமே ஆதிக்கம் செய்கின்றன.

2014-ஆம் ஆண்டு தைவானில் நடக்க இருந்த 25-ஆவது லான்டர்ன் திருவிழாவில் கலந்துகொண்ட பிறகு, அந்த நாட்டைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்து நானும் என் கணவரும் கிளம்பினோம். கிழக்கு ஆசியாவில் தென் சைனா கடலில், தைவான் ஒரு தீவாக மிதந்து கிடக்கிறது. எங்களை சுமந்து கொண்டு சென்ற கேதேபசிபிக் வான ஊர்தியில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கடல் நடுவே மிகப்பெரிய மீன் வடிவப் பாறை ஒன்று படுத்திருப்பது போல தைவான் காட்சி 
அளித்தது.

தைவானின் தலைநகரமான டைபியில் நாங்கள் ஏற்கெனவே புக் செய்திருந்த ஹோட்டலில் சென்று தங்கி சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு அந்த நகரத்தைச் சுற்றிப்பார்க்க கிளம்பினோம். வெளியே கனமழை பெய்யத் தொடங்கியிருந்தது. எலும்புவரை ஊடுருவிச் சென்ற குளிர்க்காற்று, இதைத் தவிர வெளியே சுத்தமாக ஜன நடமாட்டமே இல்லை. பிறகு விசாரித்ததில் தெரிந்தது தைவான் மக்களுக்கு மழை என்றாலே பெரும் பயமாம். சாதாரண தூறல் என்றால் கூட தலை பகுதிக்காக ஒரே ஒரு ஓட்டை போட்ட உடல் முழுவதும் மூடக்கூடிய அங்கியை மாட்டிக்கொண்டு வருகிறார்கள், பல தடவை பெய்த அமில மழைக்காகத்தான் இப்படிப்பட்ட பயம். 

மழை நின்றது. 2004-2010 முதல் உலகின் மிக உயர்ந்த கோபுரமாக புகழ்பெற்ற டைபி டவர் 101-ஐ பார்க்கச் சென்றோம். அதன் அழகில் மயங்கினோம்.
தெற்கில் நடக்கும் திருவிழாவான "டைடங் பாம்பிங் ஆப் மாஸ்டர் ஹேன்டன்'-க்கு செல்வதற்காக, வாடகை கார் ஒன்றை புக் செய்யலாம் என்று எத்தனித்த வேளையில் கிடைத்த தகவல்கள் எங்களை கதிகலங்க வைத்தன.

மாஸ்டர் ஹேன்டன் என்பவரை செல்வத்தின் கடவுளாக தைவானின் மக்கள் போற்றி வணங்கினர். இந்த கடவுளுக்கு குளிர் என்றால் பயமாம். அதனால் அவரை சூடாக வைத்திருக்க பட்டாசுகளைக் கொளுத்தி அவர் மீது எறிவார்களாம். இப்படிச் செய்தால் ஹேன்டன் மகிழ்ச்சி அடைந்து அந்த வருடம் முழுவதும் பெரும் செல்வத்தையும், பேரின்பத்தையும் அளிப்பாராம்.

ஆகையினால் லான்டர்ன் திருவிழாவின்போது டைடங்கில் ஒரு மனிதரைத் தேர்ந்தெடுத்து அவரை மாஸ்டர் ஹேன்டன்னாக நடிக்க வைக்கிறார்கள். ஒரு தூக்கு நாற்காலியில் (நங்க்ஹய் ஸ்ரீட்ஹண்ழ்) அவரை உட்கார வைத்து விடுவார்கள். சிகப்பு நிற குட்டை கால் சட்டையைத் தவிர வேறு எதையும் அவர் அணிந்திருக்க மாட்டார். அவருடைய கையில் ஆலமர கிளை ஒன்றை மட்டும் பிடித்திருப்பார். சுற்றியிருக்கும் மக்கள் அவர்மீது பட்டாசுகளை கொளுத்திப் போடும்பொழுது தன்னுடைய முகத்தைப் பாதுகாத்துக்கொள்ள அந்த ஆலமரக்கிளையை உபயோகப்படுத்துவாராம். இப்படி செய்வதால் கடவுள் ஹேன்டன் மகிழ்ந்து பெரும் அதிர்ஷ்டத்தை நல்குவாராம்.

இந்த வேடிக்கையான, உற்சாகமான திருவிழாவைக் காண உள்நாட்டு மக்களும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் பெரும் அளவில் வருவார்களாம். இந்த சடங்குகள் முடிந்தபிறகு கண்கவர் வானவேடிக்கைகள் நடக்கும் என்றார்கள்.

இதற்குச் செல்லவேண்டும் என்றால் மணிக்கட்டு வரை மூடும்படியான ஷர்ட்டுகள், கையுறைகள், பாதம்வரை நீளும் பாண்ட், கண்களுக்கு மட்டும் இடைவெளிவிட்டு பிறகு முகத்தை முழுமையாக மறைக்கும் முகக்கவசம், காது பிளக், தலைக்கு தொப்பி, கண்களுக்கு கண்ணாடி என்று வேற்று கிரகத்துக்கு செல்லும் மனிதனைப் போல செல்லவேண்டும். ஏனெனில் மாஸ்டர் ஹேன்டன் மீது எறியப்படும் பட்டாசுகள் நம்மையும் தாக்கும் அபாயம் உண்டு. 
இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று எங்களை பயமுறுத்தியது "என்சுயி பிஹைவ் திருவிழா'. இது இதயத்தை உறைய வைக்கும். இந்த திருவிழாவின் வேர் 1870 வரை நீள்கிறது.

அந்தக் காலகட்டத்தில் என்சுயி நகர மக்களை காலரா என்ற பெரும் நோய் தாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொண்டது. பாக்டீரியா மற்றும் வைரஸ்களினால்தான் இத்தகைய நோய்கள் உருவாகின்றன என்பதை அறியாத மக்கள் கெட்ட தேவதைகளால்தான் இப்படிப்பட்ட நோய்கள் உருவாகின்றன என்று நம்பினார்கள். கியுகாங் (ஓன்ஹய் ஓன்ய்ஞ்) என்கின்ற போர் கடவுளை வணங்கி கெட்ட ஆவிகளையும், பேய்களையும் என்சுயி நகரத்தை விட்டு விரட்டி அடிக்க பெரும் அளவில், யாவரும் கற்பனை செய்யமுடியாத முறையில் பட்டாசுகளை கொளுத்தியிருக்கிறார்கள். 

இன்றளவிலும் என்சுயி நகரத்தில் பெரிய, பெரிய மரச்சட்டங்களுக்கு இடையே தேனியின் கூட்டைப்போல துளைகளை இட்டு அதில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சொருகி வைத்து விடுகிறார்கள். லான்டர்ன் திருவிழா அன்றைக்கு இரவு உரிய வேளையில் அத்தனை ராக்கெட்டுகளும் பற்ற வைக்கப்பட்டு சீறிப் புறப்படுகின்றன. வானத்தை நோக்கி அல்ல, சுற்றியிருக்கும் மக்களை நோக்கி என்றால் கேட்பதற்கே எனக்கு நடுங்கிப் போனது. முன்னே கூறிய பாதுகாப்புடன் சென்றால் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெறலாம் என்றனர். கேட்கும்போதே ரத்தத்தை உறைய வைத்த இந்த அனுபவம் தேவையா...?
(தொடரும்...)

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

தைவானை அலங்கரித்த லான்டர்ன்கள்! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

 

 
sk14

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 10

"டைடங் பாம்பிங் ஆப் மாஸ்டர் ஹேன்டன் திருவிழாவுக்கும், என்சுயி பிஹைவ் திருவிழாவுக்கும் நான் உன்னை அழைத்துக் கொண்டு போவதாக இல்லை'' என்று என் கணவர் திட்டவட்டமாகக் கூறினார். மனதில் திகில் இருந்தாலும், புதுவிதமான அனுபவத்திற்காக ஏங்கிய நான், ""ஏன் இப்படி சொல்லுகிறீர்கள்?'' என்று முனங்கினேன்.
"கேட்பதற்கே வயிற்றை புரட்டிப்போடும் இந்த விழாக்களுக்கு சென்று, தீக்காயம் ஏதாவது ஏற்பட்டால், அந்நிய நாட்டில் தவித்துப் போவோம். இதைத் தவிர, தைவானை முழுமையாக சுற்றிப் பார்க்க நாம் போட்டிருக்கும் அட்டவணையும் தவிடுபொடியாகிவிடும். வடக்கு தைவானில் நடக்கும் திருவிழாவான பிங்ஸி ஸ்கை லான்டர்ன் மற்றும் டைபி லான்டர்ன் திருவிழாக்களை முழுமையாக ரசித்து அனுபவிப்போம். ஏனெனில், இதில் அபாயகரமான நிகழ்வுகள் ஒன்றும் இல்லை'' என்று என் கணவர் முடித்துக்கொண்டார்.
அன்று மாலை ஆறு மணியாகி இருந்தது. எங்கும் சூழ்ந்திருந்த இருளை, நியான் விளக்குகள் விரட்டிக் கொண்டிருந்தன. ரயிலைப் பிடித்து டைபி எக்ஸ்போ பார்க்கை அடைந்தோம். டைபி லான்டர்ன் திருவிழா நடக்கும் அந்த இடத்திற்கு இட்டுச் செல்லும் பாதைகளின் ஓரம் இருந்த மரங்களின் கிளைகளில் எல்லாம் சரம்சரமாக பலவிதமான வண்ணங்களைக் கொண்ட, பல வடிவங்களைத் தாங்கிய மின்சார பல்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. திரும்பிய திசைகளில் எல்லாம் ஒளியைக் கக்கும் அலங்காரப் பலகைகள், கண்கள் கண்ட அழகிய காட்சிகள் உள்ளத்தினுள்ளே பதிய, என் வாய், "வாவ்' என்று கூவியது.
"சாந்தி அதோ பார்'' என்று என் கணவர் காட்டிய இடத்தில் இருந்த லான்டர்னைப் பார்த்து கல்லாக சமைந்தோம். ஒரு பெரிய ராட்சதத் தேளின் முகம். அது மனிதனின் முகம்போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமா? தன்னுடைய கால்களையும் வாலையும் அசைத்துக் கொண்டிருந்தது. மூங்கில் சட்டங்களையும், காகிதத்தையும் கொண்டு செய்யப்பட்ட சைனீஸ் லான்டர்ன்களை வானத்திலும், கடை வீதிகளிலும் பார்த்துப் பழகிய எனக்கு இந்த தேள் அதே பொருட்களால் செய்யப்பட்ட ஒரு லான்டர்ன் என்று நம்புவதற்கே சிறிது நேரம் பிடித்தது.
இது என்ன பிரமாதம், இது அதைவிட அழகு. அம்மம்மா... இப்படிப்பட்ட லான்டர்ன்களைக் கூட உருவாக்க முடியுமா! வியப்பின் எல்லைகளைக் கடந்து நின்றோம். 2014-க்கு தைவான் மக்களுக்கு குதிரைதான் ராசியான விலங்காக விளங்கியது. அதனால் ஐந்து குதிரைகள் பாய்ந்து செல்வதுபோல ஒரு பெரிய புல்வெளியில் அமைத்திருந்தனர். ஒரு மனிதனுக்குள் இவ்வளவு கற்பனை சக்தி இருக்குமா, அப்படியே இருந்தாலும் சாதாரண மூங்கிலையும் காகிதத்தையும் கொண்டு இப்படிப்பட்ட உருவங்களை உருவாக்க முடியுமா? என் இருதயம் பல நேரங்களில் ஒரு துடிப்பை இழந்தது.
சீனாவின் நாட்டுப்புறக் கலைகளை வெளிப்படுத்தும் லான்டர்ன்கள், கார்ட்டூன் கேரக்டர்கள், மிருகங்களின் உருவங்கள், நிலத்தை உழுவும் விவசாயிகள், வரலாற்று நிகழ்வுகள், புகழ் வாய்ந்த நிலவு திருவிழா கொண்டாடப்படும் விதம், கல்யாண உற்சவம் என்று லான்டர்ன்களைக் கொண்டு சித்தரித்திருந்தார்கள்.
பன்னிரண்டு பகுதிகளாக பார்க்கப்பட்டிருந்த அந்த எக்ஸ்போவில் முதலில் பழமையும், புதுமையும் கலந்து செய்யப்பட்ட லான்டர்ன் உருவங்கள், பலவிதமான ஒலிகளுக்கு ஏற்ப அசைந்து கொண்டிருந்தன. ஒரு உயர்ந்த மேடையின் மீது 17,868 பயன்படாத சிடி டிஸ்குகளையும், கப்பலின் உபயோகப்படுத்தப்படாத பாகங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட குதிரை பத்து நிமிடத்துக்கு ஒருமுறை கனைத்து ஓடுவதுபோல அசைந்தது, அது மட்டுமல்ல, பலவிதமான வண்ணங்களை வாரி இறைத்தது. உலகின் மிகச் சிறந்த கட்டடங்களை லான்டர்னாக செய்து வைத்திருந்தனர். என்னை மிகவும் கவர்ந்தது, கல்யாண ஊர்வலமாக நின்ற லான்டர்ன்கள். மணப்பெண் பல்லக்கில் வர பல்லக்கைத் தூக்கி வருபவர்கள், மேளக்காரர்கள், குழலூதுபவர், நடனக்காரர்கள், ஊர்வலத்தின் பின்னே வரும் அழகிய ஆண்கள், பெண்கள் அட நீங்கள் எல்லாம் வெறும் மூங்கிலும், காகிதங்களுமா, படைக்கும் கடவுள் பிரம்மாவுக்கே இந்த லான்டர்ன்கள் சவால் விட்டு நின்றன.
இது மட்டுமா? குழந்தைகளுக்கான விளையாட்டு இடம் இங்கே பம்பரம் சுற்றுகிறது, காத்தாடி பறக்கிறது, குழந்தைகள் ஷட்டில் காக் விளையாடுகிறார்கள் எல்லாம் லான்டர்ன் மயம். பன்னிரெண்டு பகுதிகளைப் பற்றி எழுத அரைபக்கம் எப்படி போதும்? பார்த்தேன், மலைத்தேன், ரசித்தேன், முடிந்தவரை விவரித்தேன், சொர்க்கமோ இந்த இடம் பார்த்தால் மட்டுமே விளங்கும்.
அடுத்த நாள் மாலை பிங்ஸி நகரத்தை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழியில் தென்பட்ட குன்றுகளில் எல்லாம், அடுக்கடுக்காக உருவாக்கப்பட்ட வயல்களில் அறுவடை முடிந்திருந்தது. அதிக விளைச்சலைக் கொண்டாடும் விதமாகத்தானே லான்டர்ன் திருவிழா அரங்கேறுகிறது. அழகிய மூங்கில் தோப்புகள், நதி பள்ளத்தாக்குகள் என்று தொடர, பிங்ஸியை அடைய எங்களுக்கு 41 நிமிடங்கள் ஆயிற்று. டைபியில் இருந்து புறப்பட்டு 40 கி.மீ தொலைவில் இருந்த இந்த அழகிய நகரத்துக்கு வந்து சேர்ந்துவிட்டோம். ஆனால் உள்ளே வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், லான்டர்ன் திருவிழா நடக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் (லண்ய்ஞ்) ஜிங் டைனாஸ்டி ஆட்சியின்போது திருடர்கள் அடிக்கடி தைவானின் கிராமங்களைத் தாக்கிக் கொள்ளை அடிப்பார்களாம். தங்களுடைய உயிராவது மிஞ்சட்டும் என்று மக்கள் பக்கத்தில் இருக்கும் மலைகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். திருடர்கள் போனதும் ஊர் காவலர் நெருப்புப் பந்தங்களை ஏற்றி வானத்தை நோக்கி வீச, ஆபத்து நீங்கியதை அறிந்து மக்கள் வீடு திரும்பியிருக்கிறார்கள். இப்படி பிங்ஸியில் சைகைக்காக கொளுத்தப்பட்ட நெருப்புப் பந்தங்கள் இன்று சைனீஸ் லான்டர்ன்களாக, அமைதியையும், நல்லிணக்கத்தையும், நட்புணர்வையும் பறை சாற்றுபவைகளாக, பிங்ஸியின் லான்டர்ன்ஸ் திருவிழாவின்போது தைவான் முழுவதிலும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான தைவான் மக்களாலும், உல்லாசப் பயணிகளாலும் வானத்தில் பறக்கவிடப்படுகின்றன.
நூறு ஆண்டுகளுக்கு முன் பிங்ஸி நகரத்தில் நிலக்கரி கிடைத்திருக்கிறது. இது தைவானின் இளைஞர்களை எல்லாம் பிங்ஸி நகரத்தை நோக்கி படையெடுக்க வைத்தது. அவர்களைக் கொண்டுவர ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக அங்கே நிலக்கரி கிடைக்கவில்லை. ஆகையினால் ரயில், நிலக்கரியையும், சுரங்கத் தொழிலாளர்களையும் கொண்டுவருவதில்லை. ஆனால் உல்லாசப் பயணிகளை சுமந்து வருகிறது. பிங்ஸியின் லான்டர்ன்ஸ் திருவிழாவின்போது இந்த இரயில்வே பாதையின் மீது நின்று லான்டர்ன்களைப் பறக்கவிடுவது பாரம்பரியமாகி விட்டது.
இருள் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் கைகளில் சைனீஸ் லான்டர்ன்களை சுமந்தபடி வந்து குவியத் தொடங்கினர். ரயில்வே பாதையின் இருபுறமும் இருந்த கடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நாங்களும் ஒரு சைனீஸ் லான்டர்னை வாங்கினோம்.
கடைக்காரர் எங்களிடம் இரண்டு பிரஷ்களையும் ஒரு கருப்பு ‘இங்க்' பாட்டிலையும் தந்தார். எல்லோரையும்போல நாங்களும் எங்கள் விருப்பத்தை லான்டர்கள் மீது கருப்பு மையில் தோய்த்து எடுக்கப்பட்ட பிரஷ்ஷைக் கொண்டு எழுதினோம். "நம்முடைய ஆசைகளை விண்ணுக்கு இந்த லான்டர்ன்கள் எடுத்துச் செல்ல, அது கடவுளின் அருளால் நிறைவேறும்' என்றனர்.
சுற்றி கருப்பு கோபுரங்களாக மலைகள், அதோடு லேசான மழையும், குளிர்காற்றும் கைகோர்த்துக்கொள்ள சுற்றி இருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் ஏற்றி பறக்கவிட்ட சைனீஸ் லான்டர்ன்கள் மெல்ல எழுந்து, உயர்ந்து, மிதந்து வானத்தை நிரப்பி ஒளி சிந்தி பறக்க, பார்த்த மனங்கள் எல்லாம் நாடு, சாதி, மதம், நிறம் என்ற பாகுபாடுகளை உடைத்த களிப்பின் பிடியில் சிக்குண்டு அந்த லான்டர்ன்களோடு பறக்க, அப்பொழுது எழுந்த மகிழ்ச்சி ஆரவாரங்கள் என் உயிர் உள்ளவரை என் காதுகளில் ஒலிக்கும், பார்த்த காட்சி நெஞ்சில் நிலைக்கும்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- : புஷ்கர் ஏரியில் புனித ஆரத்தி!

 

 
sk5

வெளிநாட்டில் இருந்து வந்திருந்த உல்லாசப் பயணிகள் சுமாராக ஒரு பதினைந்து பேர் இருப்பார்கள், கைகளில் மண் லோட்டாக்களை ஏந்தி அதிலிருந்த டீயை குடித்துக் கொண்டிருந்தனர். முக்காலி போல இருந்த ஒரு உயரமான இரும்பு ஸ்டூலின் மீது அடுப்பு, அது வெளியே தெரியாதவாறு ஒரு தகர தகடு மூடியிருந்தது. பளபளவென்று துலக்கிய பித்தளை குடத்தில் டீ, ஒரு கரண்டியால் மொண்டு, அடுப்பைச் சுற்றி வரிசையாக அடுக்கப்பட்டிருந்த மண் லோட்டாக்களில் ஊற்றிக் கொடுத்தார் அந்த டீ வியாபாரி. டீ அபாரமாக சுவைத்தது.
மறுநாள் பொழுது விடிந்தது. ராஜஸ்தானின் சுற்றுலாத்துறை, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்காக பலவிதமான விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். எந்தெந்த நேரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை நாள், நேரம் என்று வரிசைப்படுத்தி அச்சிட்டு கொடுத்துவிடுகிறார்கள்.
அன்றைய தினம் மட்காவை (ஙஹற்ந்ஹ) உடைக்கும் போட்டி நடைபெற இருந்தது. உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மண்பானையை உடைப்பவர்களே வெற்றி பெற்றவர்கள் என்றார்கள். உள்நாட்டு மக்களும் வெளிநாட்டினரும் இரண்டு குழுக்களாக பிரிந்தனர். ஒருவர்மீது ஒருவர் ஏறி கையில் இருக்கும் கொம்பைக் கொண்டு பானையை அடிக்க முயன்றனர். கடைசியில் வெற்றி நம்மவர்களுக்கே. வெளிநாட்டினரின் குழு சறுக்கி விழுந்ததால் வெற்றி கிட்டவில்லை. மற்றவர்களோடு சேர்ந்து நானும் கமான் இந்தியா என்று கத்தி ஊக்கப்படுத்தினேன். ராஜஸ்தானின் சுற்றுலா அதிகாரிகள், வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
மைதானத்தின் மற்றொரு புறம் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வந்த மல்யுத்த வீரர்கள் மோதிக் கொண்டனர். ஒரு வீரர் மற்றொரு வீரரைத் தூக்கி சுழற்றி எறியும்போது கைதட்டல் காதைப் பிளந்தது. நகரமுடியாமல் இரும்புப்பிடி பிடிப்பது, ஆளை விடப்பா போதும் என்று நீட்டி படுத்துவிடும்படி எதிராளியை வலுவிழக்கச் செய்வது என்று அப்பப்பா கைதட்டி, வாவ், வாவ் என்று கூவி மகிழ்ந்தோம்.
மதிய உணவிற்குப் பிறகு, தமிழ்நாட்டு வீரர்கள் ஆடிய கபடி ஆட்டம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பல மாநிலத்து கபடி வீரர்கள் மோதிக் கொண்டனர். நாங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம் என்பதை அறிந்த தமிழ்நாட்டு கபடி வீரர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
மறுநாள், வெளிநாட்டினர் பங்குபெற்ற கயிற்றை இழுத்து பலத்தை நிரூபிக்கும் போட்டியில் வெளிநாட்டினர் குழு வெற்றி பெற்றது. அடுத்தது டர்பன் கட்டும் போட்டி. பாம்மைப்போல நீண்டு இருந்த டர்பன் துணியை, யார் முதலில் உட்கார்ந்திருப்பவரின் தலையில் கட்டுகிறார்கள் என்பதே போட்டி. ராஜஸ்தானிய போட்டியாளர்கள் இலகுவாக டர்பனைக் கட்ட, நீண்டு செல்லும் துணியை ஏனோதானோ என்று சுற்றிய வெளிநாட்டினர் எப்படி டர்பனை கட்டவேண்டும் என்று தெரியாமல் அசடு வழிய நின்றதை இன்று நினைத்தாலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது. 
""சிவா'' என்றேன்.
""என்ன?'' என்றார் என் கணவர்.
""எனக்கு ஒட்டகங்களையும் பிற கால்நடைகளையும் விற்கும் பகுதிக்குச் சென்று பார்க்க ஆசையாக இருக்கிறது'' என்றேன்.
விசாரித்ததில் அந்த இடம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்றனர். ஒட்டகம் இருக்கும் ஒரு கூண்டு வண்டியில் ஏறி அந்த இடத்தை நோக்கிப் பயணித்தோம். வண்டியை மூடியிருந்த துணியில் பலவிதமான கண்ணாடிகளும், எம்பிராய்டரியும் செய்யப்பட்டிருந்தன. ஒட்டகத்தின் கால்களில் கட்டப்பட்டிருந்த சலங்கைகளும், வண்டியின் ஓரங்களில் தொங்கிய சலங்கைகளும் சல், சல் என்று ஒலியெழுப்ப, அந்த பாலைவனத்தின் மண்ணில் ஒட்டகங்கள் கால்கள் பதியும்பொழுது, எழுந்த அசைவால் நாங்களும் ஆட, சூரிய அஸ்தமனம் தொடங்கி இருந்த அந்த வேளை, கைதேர்ந்த ஓவியனின் சித்திரமாய் மனதை சிலிர்க்க வைத்தது.
அப்பப்பா, இவ்வளவு ஒட்டகங்களை நான் ஒருசேர பார்த்ததே இல்லை. குட்டி ஒட்டகங்கள் அட்டைக்கரியாக இருந்தன. வளரும்போது முடியின் நிறம் மாறும் என்றார்கள். ராஜஸ்தானின் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒட்டக வியாபாரிகள் இந்த புஷ்கர் மேளா சந்தைக்காக ஒட்டகங்களை ஓட்டி வந்திருந்தனர். எல்லா நேரத்திலும் பெரிசாக லாபம் கிடைத்துவிடாது என்றனர். ஒட்டகப் பாலில் டீயைப் போட்டு கொடுத்தபோது மறுக்காமல் வாங்கிக் குடித்தோம். அதற்காக பணத்தைக் கொடுத்தபொழுது வாங்க மறுத்ததுடன், "இவ்வளவு தூரம் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு இதுகூட செய்யக்கூடாதா' என்று கேட்டது, ஏழ்மையிலும் அவர்களுடைய விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்தது.
பசுக்கள், காளைகள், குதிரைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் என்று எத்தனை, எத்தனை வகைகள். வெள்ளை, கருப்பு, பழுப்பு, கருப்பில் வெள்ளைத் திட்டு, வெள்ளையில் பழுப்பு, கருப்பு என்று இயற்கையின் அற்புதப் படைப்பை வெளிக்காட்டி நின்ற அந்த கால்நடைகளின் அழகை என் நெஞ்சிலும், நினைவிலும் பதித்துக்கொண்டேன்.
நான்காவது நாள், குதிரைகளுக்கான அழகுப்போட்டி நடந்தேறியது. பிறகு புஷ்கர் மேளாவின் ஹைலைட்டான யாருடைய மீசை நீளமானது என்ற போட்டி நடைபெற்றது. அவ்வளவு நீளமான மீசைகளை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. 
ஒருவர் தன் கன்னங்களின் இரு பக்கங்களிலும் பன்களைப்போல மீசையை சுற்றி வைத்திருந்தார். மற்றொருவர் தன் மீசையை கயிறுபோல சுழற்றி காற்றில் பறக்கவிட்டார். குட்டை மீசை ஆனால் சுருளான மீசை, மார்புவரை, கைவரை தவழும் மீசைகள் என்று மீசைகளில் இவ்வளவு ரகங்களா என்று மலைத்தோம். பன்னிரெண்டு அடி நீளமுள்ள மீசையைக் கொண்டாரே கடைசியில் வென்றார்.
பானைகளைத் தலையில் சுமந்து, பழக்கம் இல்லாத புடவையில் வெளிநாட்டுப் பெண்கள் நடக்க, புடவை தடுக்க தலையில் இருந்த பானை நழுவி கீழே விழுந்து உடைய ஒரே வேடிக்கைதான் போங்க!
கார்த்திக் பெüர்ணமியும் வந்தது. குஜராத்தில் இருந்து வந்திருந்த ராஜஸ்தானிய குடும்பம் புஷ்கர் ஏரியில் சாஸ்திரிகளைக் கொண்டு பூஜை செய்தனர். எங்களையும் அந்த பூஜையில் கலந்துகொள்ள அழைத்தனர். எதிர்பாராதவிதமாக அந்த பூஜையில் கலந்துகொண்டு, புஷ்கர் ஏரிக்கு செய்த புனித ஆரத்தியையும் பார்த்தோம். 
பல்லாயிரக்கணக்கான மக்களோடு நாங்களும் புனித புஷ்கர் ஏரியில் நீராடினோம். பிறகு ஜெகத்பிதா பிரம்மதேவரின் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கினோம். பிரம்மாவின் வலதுபுறம் சாவித்திரி தேவியும், இடதுபுறம் காயத்திரி தேவியும் காட்சி அளித்தனர். கர்ப்பகிரகத்தை நோக்கி ஒரு பெரிய வெள்ளி ஆமை அமர்ந்திருந்தது. அதைச் சுற்றி நிறைய வெள்ளிக் காசுகள். 
இறந்துபோன தங்களுடைய உறவினர்களின் பிறப்பு, இறப்பு தேதிகளை அதில் பதித்து அன்பர்கள் காணிக்கையாக்கி இருக்கிறார்கள். இப்படி புஷ்கரின் மேளா ஆன்மிகத்தையும், கிராமப்புற கலைகளையும், பல விளையாட்டுகளையும், கால்நடைகளின் அருமை, பெருமைகளையும் வெளிப்படுத்தி உள்ளத்தைக் கவர்கிறது. 
(தொடரும்...)

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் : மைசூர் நவராத்திரி பெருவிழா!

 

 
sk5

மாமி எங்க வீட்டிலே கொலு வெச்சிருக்காங்க, அவசியம் எல்லாரும் வரணும்'' என்று என் தாயார் ஜீவாட்சரி சொல்லிக் கொடுத்த வாசகங்களைத் தவறில்லாமல் சொல்லுவேன்.
தாழம்பூவை அழகாகக் கத்தரித்து என் சடையில் வைத்துத் தைத்து, அணிகலன்களை அணிவித்து, பட்டுப்பாவாடை, சட்டை, அதன்மீது பின்களை வைத்து ஒரு டிஷ்யு துணியை முக்காடாக்கி விட, ராதையாகி விடுவேன். என் அண்ணனுக்கு கிருஷ்ணன் வேஷம். அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று எங்கள் வீட்டு கொலுவுக்கு வரச்சொல்லி அழைப்போம். மொத்தம் பதினோரு படிக்கட்டுகளில், பொம்மைகள் கொலுவிருக்கும். இவற்றுக்குப் பக்கத்தில் தரையில் ஆற்று மணலைப் பரப்பி, கடுகைத் தெளித்து விடுவார் என் தந்தை சுப்ரமணியன். பிறகு குளம் கட்டி, மலைபோல் எழுப்பி அதன்மீது பொம்மை கோயிலை வைப்பார். கொலு ஆரம்பிப்பதற்கு முன் கடுகு அழகாக வளர்ந்து இலைகளைப் பரப்பி நிற்கும். ஒரு கிராமத்தில் மலைமீது கோயில் என்று அமைந்திருக்கும்.
ஒன்பது நாட்களுக்கும் எங்கள் வீட்டு கொலுவைக்காண நண்பர்களும், உற்றார் உறவினர்களும் வருவார்கள். என் அருமை பெரிய அன்னை ராணியம்மாள், தங்க மனசுக்காரி. அறுசுவை உணவுகளை அன்போடு சமைத்துப் பரிமாறும் தங்கக் கைகளுக்குச் சொந்தக்காரி. ஒவ்வொரு நாளும் விதவிதமான சுண்டல்களைச் செய்து வருபவர்களுக்கு எல்லாம் தேங்காய், மஞ்சள், வெற்றிலை பாக்கோடு கொடுப்பார்கள். 
"சொல்லுக் கடங்காவே - பராசக்தி
சூரத்தனங்க ளெல்லாம்
வல்லமை தந்திடுவாள் - பராசக்தி
வாழி யென்றே துதிப்போம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் - பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.'
என்ற பாரதியாரின் பாடலை என் தந்தையார் மனப்பாடம் பண்ணி பாடச்சொல்ல அதை நாங்கள் ஓங்கிக் குரல் கொடுத்துப் பாடுவோம்.
இப்படித் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் கொலுவை சிறுவயது முதல் ஆத்மார்த்தமாக அனுபவித்த எனக்கு இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கொண்டாடப்படும் நவராத்தியைக் காண வேண்டும் என்ற ஆவல் நீறுபூத்த நெருப்பாக நெஞ்சில் கனன்றுகொண்டே இருந்தது.
தமிழ்நாட்டில் கொலு என்றும், மைசூரில் தசரா, வடநாட்டில் நவராத்திரி என்றும் கொண்டாடப்படும் பண்டிகைக்கு மூலம் ஒன்றுதான். நவ என்றால் ஒன்பது ராத்திரி என்றால் இரவு. இப்படி ஒன்பது ராத்திரிகள் சக்தியை வழிபட்டு நன்மை பெறுவதே இந்த நவராத்திரி திருவிழாவின் குறிக்கோளாகும்.
தன்னையே நினைத்து பலகாலம் தவம் இயற்றிய மகிஷாசுரனின் பக்தியை மெச்சி தேவர்கள் மற்றும் அசுரர்களால் அவனுக்கு அழிவில்லை என்ற வரத்தை சிவபெருமான் தந்துவிட, பிறகு அவனுடைய அட்டகாசத்தைப் பொறுக்கமுடியாமல் பிரம்மா, விஷ்ணு, சிவனுடைய சக்திகளை ஒன்றாகச் சேர்த்து உருவான துர்காதேவி, அந்த மகிஷாசுரனை அழித்த நாளை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். இப்படி கெட்டதை அழித்து நல்லதை நிலைநாட்டிட சக்தியை, துர்கையைப் போற்றி அவளுடைய எட்டு வடிவங்களை, முன்வருகின்ற எட்டு நாட்களுக்கும் ஆராதனை செய்கிறோம்.
வடநாட்டில் துர்காதேவியை வழிபடுவதோடு, ராமரையும் வணங்குகிறார்கள். விஜயதசமி அன்று தேவியின் அருளோடு ராமர், ராவணனை வதம் செய்தபின் மறுநாள் அவர் சீதையோடு அயோத்தியா திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆகையினால் விஜயதசமி அன்று பெரிய மைதானங்களில் பத்து தலைகளைக் கொண்ட ராவணனின் மிகப்பெரிய உருவ பொம்மைகளை நிறுவி, ராமர் விடும் அம்பு (அதில் தீப்பந்தம் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்) ராவணைனைத் துளைக்க, துணிபோன்ற பலவிதமான எரியும் தன்மைகொண்ட பொருட்களால் ஆன அந்த ராவணனின் உருவம் பற்றி எரிந்து அழிய சுற்றித் திரண்டிருக்கும் மக்கள், தீயதை, நல்லது வெற்றிகொள்வதைப் பார்த்து கைகளைத் தட்டி மகிழ்வார்கள். "ராமலீலா' என்று அரங்கேறும் இந்த நிகழ்ச்சியை 170 வருடங்களுக்கு முன் தொடங்கி வைத்தவர் மொகலாயப் பேரரசர் பகதூர்ஷா ஜாபர் என்கின்ற தகவல் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ஏற்ப இந்தியாவின் 29 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் வாழும் மக்கள் பலவிதமான மொழிகளைப் பேசினாலும், பல சமயங்களைப் பின்பற்றினாலும் இந்து சமயத்தவர்கள் என்று வரும்போது நவராத்திரியை பாகுபாடுகளைக் கடந்து கொண்டாடுவதைக் கண்டு அதிசயித்திருக்கிறேன்.
மைசூரில் நான் கண்டு ரசித்த தசரா பெருவிழாவும், அகமதாபாத்தில் மக்களோடு மக்களாக சேர்ந்து நவராத்திரியின்பொழுது ஆடி மகிழ்ந்த தாண்டியா நடனமும், இந்த இரண்டு இடங்களில் எனக்குக் கிடைத்த நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அனுபவங்களும் இந்த விழாக்களைப் பற்றி எழுத என்னைத் தூண்டுகிறது.
மைசூருக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அழகான இயற்கையின் வெளிப்பாடுகள், அன்பான மக்கள், சரித்திரப் புகழ் பெற்ற இடங்கள், இவற்றுக்குமேல் மைசூர் மசால்தோசை, மெதுவடை, இந்த வடை சென்னையில் கிடைக்கும் மெதுவடையைவிட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். சுவையிலும் மென்மையிலும் நாக்கின் சுவை மொட்டுக்களை சும்மா அதிருது இல்லே என்று அதிர வைக்கும். பிறகு என்ன மைசூர் என்றாலே குஷியோடு புறப்பட்டு விடுவேன். 
மைசூர் தசராவைப் பார்க்க வேண்டும் என்ற என்னுடைய நெடுநாளைய ஆசை 2015-ஆம் வருடம் நிறைவேறியது. மைசூர் தசராவின் முடிவில் நடக்கும் பிரம்மாண்டமான ஊர்வலத்தையும், டார்ச்லைட்டு பரேடையும் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து, தசரா வைபவத்தின் ஐந்தாவது நாள் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு சென்று அங்கிருந்து காரில் மைசூருக்குப் பயணப்பட்டோம்.
நாங்கள் மைசூர் நகரத்தின் மத்திய பகுதியில் இருந்த, எங்களுக்காக புக் செய்யப்பட்டிருந்த ஹோட்டலை நோக்கி சென்றபோது கண்ட காட்சிகள்...
(தொடரும்...)

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

அகமதாபாத்தின் நவராத்திரி - சாந்தகுமாரி சிவகடாட்சம்  

 

 
sk11

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 16
இந்தியாவின் மேற்குப் பகுதியில் அகமதாபாத் இடம் பெற்றிருக்கிறது. அதன் நடுவில் சபர்மதி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் கரையில் அமைந்திருக்கும் சபர்மதி ஆஸ்ரமத்தைப் பார்த்துவிட்டு, வெளியே வந்தேன். மகாத்மா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுகின்ற அந்த ஒற்றைக் கிழவரின் குரலுக்கு அடிபணிந்து, இங்கேதானே மக்கள் கூடி உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தனர்?. அவர்கள் நடமாடிய அந்த புனித மண்ணில் நிற்கிறேன் என்பதே எனக்கு மெய்சிலிர்ப்பைத் தந்தது.
இந்த முறை நான் அகமதாபாத்திற்கு வந்தது, அங்கே ஒன்பது நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காகத்தான் என்றால் மிகையாகாது. பூகம்பம், வெள்ளம், கனமழை என எவ்வளவுதான் இயற்கையின் சீற்றத்திற்கு இலக்கானாலும் குஜராத் மக்களின் உற்சாகம் மட்டும் ஒருபோதும் குறைவதில்லை.
குஜராத்தின் நவராத்திரியில் நடனமே பிரதானமாக விளங்குகிறது. கார்பா, தாண்டியா நடனங்கள் இங்கே முக்கிய பங்கு வகிப்பதால், இந்த நடனங்களைக் கற்றுத்தரும் பள்ளிகள் தெருவெங்கும் முளைவிட ஆரம்பித்து விடுகின்றன. ஒவ்வொரு குஜராத்தியும் குறைந்தது ஒரு மாதகாலம் இந்த நடனத்தில் பயிற்சி பெறுகிறார். கற்றுக் கொள்ளும் நடனங்களை உற்சாகமாக ஆடவேண்டும் என்பதற்காக "ஃபிட்னஸ் சென்டர்'களில் சேர்ந்து உடலையும் ஆரோக்கியமாக தயார்படுத்திக் கொள்கின்றனர்.
நவராத்திரி விழாவில் ஆடுவதற்காக குஜராத்தில் ஆண்களும், பெண்களும் தங்களை அலங்கரித்துக்கொள்ளும் பாங்கைப் பார்த்து அசந்துபோனேன். இரவு ஏழு மணிக்கு கைகளில் தாண்டியா நடனம் ஆடுவதற்குத் தேவையான அழகிய கோலாட்டக் குச்சிகளை ஏந்திக்கொண்டு பெண்களும், தாண்டியா கொம்போடு ஆண்களும் வீதிகளில் சாரை சாரையாக நடந்து வந்தபொழுது அந்த வானத்து விண்மீன்களே தரையில் இறங்கி வந்துவிட்டனவோ என்ற மயக்கத்தைத் தந்தனர்.
பெண்கள் "சானியா சோளிஸ்' என்று அழைக்கப்படுகின்ற பாதம் வரை நீள்கின்ற பாவாடை, சட்டை மற்றும் துப்பாட்டாவோடும் ஆண்கள் "கப்னி பைஜாமா' மற்றும் குட்டை "குர்த்தா'வோடும் காட்சி அளித்தனர். பெண்களின் சானியா சோளிஸ்ஸில் செய்யப்பட்டிருந்த வேலைப்பாட்டைப் பார்த்து வாயடைத்துப் போனேன்.

sk12.jpg

சின்னச் சின்ன வண்ணத் துணித்துண்டுகளை இந்தப் பாவாடைகளில் வைத்துத் தைத்து, அதைச்சுற்றி அழகிய எம்பிராய்டரி வேலைப்பாடுகளை செய்து, மத்தியில் கண்ணாடித் துண்டுகளைப் பதித்து இருக்கிறார்கள். அந்த இரவு வேளையில் இதை அணிந்துகொண்டு, பெரிய பெரிய மைதானங்களில் ஒளியைக் கக்கும் நியான் விளக்கு வெளிச்சத்தில் அந்த பெண்களும் ஆண்களும், உடைக்கு ஏற்ற நகைகளோடு சுழன்று, சுழன்று ஆடும் அழகைப் பார்க்க நிஜமாகவே கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
அகமதாபாத்தில் "லா கார்டன்' என்ற ஒரு மார்க்கெட்டில் நவராத்திரிக்காகவே, மக்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக கடைவிரிக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்து இதயங்கள் நிச்சயமாக ஒரு துடிப்பை இழக்கும்.
வெள்ளை உலோகத்தினால் ஆன மாலைகள், காது கம்மல், ஜிமிக்கி, நத்து, நெத்திச்சுட்டி, வளையல்கள், அழகிய குஞ்சலங்களோடுகூடிய நெக்லஸ்கள், சானியா சோளிகளில் இதில் ஒன்றுபோல மற்றொன்று இருக்காது என்று வியாபாரிகள் சத்தியம் செய்யாத குறையாக தெரிவிக்கிறார்கள். சிறுமி முதல் நடுவயதைத் தாண்டியவர்வரை அணியும் வகையில் எத்தனை விதமான ஆடைகள், அவைகள் வெளிப்படுத்திய ஜொலிப்பில் மதி மயங்கினேன்.
இவை எல்லாமே கார்பாவுக்காகவும், தாண்டியா வுக்காகவும்தான். அது என்ன "கார்பா?' நடனம்தான் என்றாலும் பெயரின் அர்த்தம்? அழகிய வேலைப்பாடுள்ள மண்பாண்டம், அதில் துளைகளும் உண்டு. இந்த பானைக்குப் பெயர்தான் கார்பா. இந்தப் பானையின் உள்ளே தீபத்தை ஏற்றி வைத்து பெண்களும், ஆண்களும் சுற்றி நின்று ஆடுவதுதான் கார்பா நடனம்.
ஆடும்போது துர்க்கையைப் போற்றிப் பாடுகிறார்கள். கார்பாவிலுள்ளே இருக்கும் ஜோதி இந்த ஜகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தையும் காக்கும் சக்தியாக துர்க்கையின் ரூபமாக இருப்பதாக ஐதீகம்.
ஜி.எம்.டி.சி. மைதானத்தில் ஆண்களும், பெண்களும் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, ஒரு குஜராத்தி பெண் என் கையைப் பிடித்து இழுத்து ஆடச் சொன்னாள். சரி என்று நானும் அந்த துர்க்கையை மனதில் வணங்கி கொஞ்ச நேரம் ஆடினேன். நடனக்கலையோடு, பக்தி கைகோர்த்துக் கொள்ளும் அந்த நேரம் மனதைக் குதூகலிக்க வைத்து, இறையருளில் கலக்கவைக்கிறது.
தாண்டியா நடக்கின்ற பல மைதானங்களில் பாலிவுட் பாடல்களுக்கு இளைஞர்கள் ஆடுகிறார்கள். மேனக் சவுக் மற்றும் பாட்ரா போர்ட் போன்ற இடங்களில் சினிமா பாடல்களைத் தவிர்த்து, குஜராத்தின் நாட்டுப்புறப் பாடல்களுக்கு மக்கள் ஆடுகிறார்கள். இங்கே பெண்கள் தங்கள் தலைகளில் மண்பானைகளை வைத்துக்கொண்டு கார்பாவைச் சுற்றி பானைகள் கீழே விழுந்துவிடாமல் ஆடுகிறார்கள். பொங்கல் சமயங்களில், நான் சிறுமியாக இருந்தபோது மூங்கில் கூடைகளை வைத்து அதைச்சுற்றிப் பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி கும்மி அடித்து ஆடியது என் மனதில் நிழலாடியது.
நவராத்திரி விழா கொண்டாடப்படும் ஒன்பது நாட்களும் அரிசி, கோதுமை கலக்கப்படாத "பெரார்' என்று வழங்கப்படும் உணவையே உட்கொள்கிறார்கள். இது தவிர பழங்கள், வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு என அளவாக சாப்பிடுகின்றனர். குஜராத்தின் உணவுகளான ஜவ்வரிசியால் செய்யப்படும் சபுதானா கிச்சடி, கடலைமாவு மற்றும் தயிரைக்கொண்டு தயாரிக்கப்படும் (Khandvi) கான்ட்விக்கு என் நாவு அடிமைப்பட்டுப் போனது.
இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்து நடுஇரவையும் தாண்டி நடனமாடி, காலையில் அலுவலகம் சென்று மீண்டும் இரவு தேவதைகளாக அலங்கரித்துக் கொண்டு நடனமாடி துர்க்கையை வணங்கி நவராத்திரியைக் கொண்டாடும் குஜராத்திகளின் எனர்ஜியை வர்ணிக்க வார்த்தைகள் தொலைந்து போகின்றன.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிப் பெண்களை துர்க்கையின் அம்சமாகப் பாவித்து, அவர்களை பூஜிக்கிறார்கள். இதை மஹாநவமி கன்யா பூஜை என்று அழைக்கிறார்கள். சிகப்பு, நீலம், மஞ்சள், பச்சை, சாம்பல், ஆரஞ்சு, வெள்ளை, பிங்க், ஆகாயநீலம் என்று நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கு ஒன்பது விதமான உடைகளை அணிகிறார்கள். வானவில்லாக நம்மை மயக்கி, மகிழ வைத்து பக்தியில் திளைக்க வைக்கும் அகமதாபாத்தின் நவராத்திரியை, எண்ணிப் பார்க்கும்போதே உள்ளம் சும்மா அதிருது இல்ல!.
(தொடரும்...)

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 17: கால்கிரியின் ஸ்டாம்பிட் திருவிழா

 

 
sk3

'கனடா', உலகில் மிகவும் ஈர்க்கக்கூடிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பாரக் ஒபாமா புகழ்ந்து கூறியிருக்கிறார். இயற்கை அழகு கொஞ்சும் இந்த நாடு, தெற்கில் அமெரிக்க எல்லையில் தொடங்கி வடக்கில் ஆர்டிக் சர்க்கிள் வரை நீள்கிறது. முதல் முதலில் நான் கனடாவில் கால் பதித்தது டொரன்டோவில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காகச் சென்றபோதுதான். இரண்டாவது தடவை, வேன்கூவர் சென்று அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் சொகுசு கப்பலில் அலாங்காவுக்கு பயணப்பட்டேன்.
கனடாவின் இந்த இரண்டு நகரங்கள் என் கண்முன் கடைவிரித்த இயற்கையின் வெளிப்பாடுகள் அந்த நாட்டின் மீது தீராத காதலை ஏற்படுத்தியது. பலர் சொல்லியும், கேட்டும், படித்தும் கனடாவில் கொலுவிருக்கும் ராக்கி மலைத்தொடர்களைக் காண வேண்டும் என்ற ஆவலை மனதில் புதைத்து வைத்திருந்தேன்.
மொத்தம், நூறு தனித்தனி மலைத்தொடர்கள், 4,800 கி.மீ. பிரிட்டிஷ் கொலம்பியா தொடங்கி, கனடாவின் ஆல்பர்ட்டா (Alberta) என்று நீண்டு நடுவில் பல இடங்களை முத்தமிட்டு, முடிவில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் முடியும் இந்த மலைகள் அணைத்துச் செல்லும் தேசிய பூங்காக்கள், ஏரிகள், (Glacier) கிளேசியர் எனப்படும் பனிப்பாறைகள், அங்கே வாழும் பலவிதமான உயிரினங்கள், மரங்கள் "கடவுளே' எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று அவற்றைப் பார்க்கும்போது என் மனது கூவியது.
ஜேஸ்பர், பேன்ப் என்ற ராக்கி மலைத்தொடர்களின், தேசிய பூங்காக்களை தன்னகத்தே கொண்ட கனடாவின் நகரங்களைப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், கால்கிரியில் நடக்கும் ஸ்டாம்பிட் திருவிழாவைப் பார்க்கவும் 
திட்டமிட்டிருந்தோம்.
கனடா நாட்டின் முக்கிய மாகாணமான ஆல்பர்ட்டாவின் அழகிய நகரம்தான் கால்கிரி. அங்கே ஒவ்வொரு வருடத்தின் ஜூலை மாதத்திலும் உலகின் மிகப்பெரிய, உயரிய வெளிப்புற (ஞன்ற்க்ர்ர்ழ் ள்ட்ர்ஜ்) நிகழ்ச்சியான ஸ்டாம்பிட் திருவிழா, பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஸ்டாம்பிட் திருவிழாவைக் காண உலகில் எல்லா பாகங்களிலிருந்தும் ஒரு மில்லியன் உல்லாசப் பயணிகள் கால்கிரியை நோக்கிப் படையெடுக்கின்றனர். அங்கே அப்படி என்னதான் நடக்கிறது என்ற கேள்விக்குப் பதிலாக அமைவது, ரோடியோ என்கின்ற குதிரை போன்ற கட்டுக்கடங்காத விலங்குகள் மீது சவாரி செய்யும் போட்டி, சக்வேகன் என்னும் குதிரைகள் இழுத்துச் செல்லும் பார வண்டிகளின் ஓட்டப்பந்தயங்கள், பொருட்காட்சி, விவசாய விளைச்சல்களை காட்சிக்கு வைக்கும் விவசாயப் பொருட்காட்சி, சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடுகளைக் கடந்து கலந்து, மகிழும்படியான கேளிக்கைகள், கிராண்ட் ஸ்டான்ட்ஷோ (Grand stand show) என்ற பலவிதமான கலைநிகழ்ச்சிகள், லேசர் ஷோக்கள் அரங்கேற்றப்படுவது என்று கால்கிரியே குலுங்கி மகிழ்கிறது. இந்த நிகழ்ச்சிகள் போதாது என்று இவற்றுக்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போன்று ஸ்டாம்பிட் பரேட் என்று ஆரம்பநாளில் நடக்கும் பரேட் பிரம்மிப்பின் விளிம்புகளை எட்ட வைக்கும் என்று கால்கரியில் வாழுகின்ற எங்கள் குடும்ப நண்பர் சுப்பிரமணியம் சொல்லியிருந்தார்.
இந்த நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான நுழைவுச் சீட்டுகளை அந்த நண்பரின் உதவியோடு ஸ்டாம்பிட் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்து இருந்தோம். சிக்காகோவில் நடந்த ஒரு இருதய மாநாட்டுக்குச் சென்றுவிட்டு பிறகு ராக்கி மவுண்டன் சுற்றுலாவை முடித்துக்கொண்டு, கடைசியாக கால்கிரியில் ஸ்டாம்பிட்டை பார்ப்பது என்று அட்டவணை போட்டிருந்தோம்.
நாங்கள் சிகாகோவில் இருந்தபோது பெரிய மழையால் ஆல்பர்ட்டா மாகாணம் பாதிக்கப்பட்டது. அதனால் கால்கிரி ஸ்டாம்பிட்டை ரத்து செய்துவிடுவார்கள் என்ற செய்தியை அறிந்தோம். என் மனம் எல்லையில்லா வருத்தத்தில் ஆழ்ந்தது. சரி கனடா டிரிப்பைக் கான்சல் செய்துவிட்டு இந்தியா திரும்பிவிடுவது என்று முடிவு செய்தோம். எங்களின் பேரதிர்ஷ்டம், ஸ்டாம்பிட் திருவிழாவின் பிரசிடண்ட் பாம் தாம்ஸன் அந்த திருவிழாவை நடத்தியே தீருவது என்று முடிவு செய்தார். அவர் சொன்னார் "கால்கிரியின் சரித்திரத்திலேயே, இரண்டு முறை போர் மூண்டபோதும், பொருளாதார சீர்கேடுகள் நிகழ்ந்தபோதும் உலகின் பெரிய உயரிய நிகழ்ச்சியான ஸ்டாம்பிட்டை நிறுத்தவில்லை. ஆகையால் இப்போது நரகமோ, வெள்ளமோ ஸ்டாம்பிட் நடக்கும்" என்றார்.
2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எங்களுடைய ராக்கி மவுண்டன் சுற்றுலாவை முடித்துக் கொண்டு கால்கரிக்குள் காலை வைத்தோம். நாங்கள் தங்கப்போகும் ஹோட்டல், மற்றும் பெருவாரியான கட்டிடங்களின் வெளிப்புறக் கண்ணாடிகளில் எல்லாம் கால்நடைகளை மேய்க்கும் கவ்பாய்ஸ் (CowBoys) குதிரைகளின் மீது கவ்பாய்ஸ் தொப்பிகளோடு அமர்ந்திருப்பது போல வரைந்து பல வண்ணங்களில் பெயிண்ட் செய்திருக்கிறார்கள். நீளமான தாம்புக்
கயிறை சுழற்றியபடி இருக்கும் கோலம், கவ் பாய்ஸ் உருவங்களுக்கு மேலும் மெருகூட்டியது.
கால்கிரி ஸ்டாம்பிட்டின் தோற்றம் 1912 என்று அறிந்தோம். (Guy Weadick) கை விடிக் என்ற அமெரிக்க வியாபாரி ரோடியோவை அறிமுகப்படுத்தி அதற்கு ஸ்டாம்பிட் திருவிழா என்ற நாமகரணத்தைச் சூட்டினார். பிறகு 1919-இல் அவர் மீண்டும் கால்கரிக்கு வந்து வெற்றி ஸ்டாம்பிட் என்ற திருவிழாவை ஒன்றாம் உலகப்போரில் வெற்றிவாகை சூடி திரும்பி வந்த சிப்பாய்களை உற்சாகப்படுத்த நடத்தினார். இப்படி கை விடிக் தோற்றுவித்த ஸ்டாம்பிட் திருவிழா 1923-ஆம் ஆண்டு முதல் வருடம்தோறும் கால்கிரி தொழிற் பொருட்காட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு, கொண்டாடப்படுகிறது.
ஸ்டாம்பிட் பரேடைப் பார்ப்பதற்காக அவரசமாகப் புறப்பட்டோம். காலைசூரியன் சுள்ளென்று அடித்தாலும் சுட்டெரிக்கவில்லை. வெப்பக் கதிர்களோடு, குளிர்காற்று கலந்து உடலுக்குப் புத்துணர்வு அளித்தது. நடைபாதையில் போடப்பட்டிருந்த தற்காலிகப் படிக்கட்டுகளில் எங்கள் எண்கள் இருக்கும் இடத்தில் சென்று அமர்ந்துகொண்டோம். கைக்கடிகாரம் காலை மணி 7.30 என்று காட்டியபொழுது ஸ்டாம்பிட் அணிவகுப்பு தொடங்கியது.
கால்கிரியின் படைத்தளபதியும், விண்வெளி வீரர் கிரிஸ் ஹேட்பீல்டும் ஊர்வலத்தின் முன்னால் வெள்ளை குதிரைகளில் வந்தனர். மிக அழகான ஆறு பெண்கள் "எங்கள் நாடு மற்றும் மாகாணத்தின் மனஉறுதியை வெள்ளத்தால் அடித்துச் செல்லமுடியாது" என்ற பேனரை சுமந்து வந்தனர். 700 குதிரைகள், 30 ஊர்திகள், 4,000 பங்கேற்பாளர்கள் என்று கனடாவின் மிகப்பெரிய அணிவகுப்பு மனதை ஈர்த்தது. சிறிய கார்களையும், விமானங்களையும் ஓட்டிவந்தனர். இதைக் கண்ட நான் மீண்டும் குழந்தையானேன். கைகளைத் தட்டி மகிழ்ந்தேன். கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மக்களோடு மக்களாக உட்கார்ந்து, அணிவகுப்பைப் பார்த்து ரசித்ததைப் பார்த்து அதிசயித்தோம். மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. அது.....
தொடரும்....

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/apr/22/சிந்தை-கவர்ந்த-திருவிழாக்கள்---17-கால்கிரியின்-ஸ்டாம்பிட்-திருவிழா-2905417.html

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 18: ஒன்பது அதிசயங்களில் ஒன்று!

 

 

 
sk6

டமர... டமர... டம் என்ற இசைக்கு ஏற்றாற்போல, பேண்ட் வாத்தியக்குழு நடைபயின்று சென்றுகொண்டிருந்தது. பின்னால் அணிவகுத்து வந்த குதிரைகளின் மீது கண்களைக் கவரும் வண்ணங்களில் உடையணிந்திருந்த வீரர்கள் அமர்ந்திருந்தனர். இப்படி வந்த பல குதிரைகள் தங்களுடைய கழிவுகளை வெளியேற்றிய வண்ணம் இருந்தது. அட, அது என்ன பசுமாட்டைப் போன்ற முக அமைப்பு முன்புறம், பின்புறம் மாட்டின் வாலைப்போன்ற தோற்றத்தை உடைய குப்பை அள்ளும் வண்டிகள், அவைகளின் அடிப்பாகத்தில் குப்பைகளை உறிஞ்சும் பெரிய, பெரிய வட்ட பிரஷ்கள், சுழன்றபடி வந்த அந்தக் கழிவுகளை உடனே சுத்தம் செய்துவிட்டன. எப்போது எல்லாம் குதிரைகள் வந்தனவோ, கழிவுகளை வெளியேற்றினவோ அப்போது எல்லாம் இந்த வண்டிகள் வந்தன அல்லது ஆட்கள் வந்து உடனே சுத்தம் செய்தனர். 

"தூய்மை தெய்வீகத்திற்கு அடுத்தது' என்பதின் முழு அர்த்தத்தை அங்கு உணர்ந்தேன்.

ஸ்டாம்பிட்டின் தொடக்கநாள் அணிவகுப்பு, நெஞ்சை அள்ளும் அந்த இனிய நினைவுகளோடு எங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினோம். எங்களுடைய மிக நெருங்கிய குடும்ப நண்பர் சிராஜ் என்ற முகமதிய பெண்மணி. அவரின் மகன் சலீம் தன் மனைவியுடன் கால்கிரியில் வாழ்கிறார். எங்களை அவருடைய இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தார், பிறகு சொன்னார், ""இவ்வளவு தூரம் பயணித்து கால்கிரிக்கு வந்திருக்கிறீர்கள், நாளை காலையில் ஒன்பது மணிக்கு தயாராகி இருந்தீர்கள் என்றால் கால்கிரியின் ஒன்பது அதிசயங்களில் ஒன்று என்று சி.பி.சி. ரேடியோ பேனல் தேர்வு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியைக் கண்டு 
மகிழலாம்'' என்றார்.


""ஓ அப்படியா! இது என்ன?'' என்று ஆவலை அடக்கமுடியாமல் கேட்டேன்.

""இலவச பேன் கேக் (Pan cake) காலை உணவு, வகைகளை விநியோகிப்பது'' என்று முடித்துக்கொண்டார்.

கால்கிரி வாழ் மக்கள் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். வெனிஸýலா (Venezuela) மற்றும் சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக கனடாவில் பெட்ரோலியம் கிடைக்கிறது. மண், களிமண், தண்ணீர் இவைகளோடு கூடிய பெட்ரோலிய எண்ணெய் மண்ணாகவோ அல்லது கல்லாகவோ கிடைக்கிறது. இந்த மண்ணிலிருந்து பெட்ரோலியத்தைப் பிரித்தெடுக்கும் பல தொழிற்சாலைகள் ஆல்பர்ட்டாவில் உள்ளன. ஏனெனில் இந்த கனிமம் அதிக அளவில் காணப்படுவது ஆல்பர்ட்டாவில்தான் என்றால் மிகையாகாது.

இப்போது புரிந்திருக்கும் ஏன் கால்கிரி செல்வந்தர்களால் நிறைந்திருக்கிறது என்று! இந்த கால்கிரியின் மிகப்பெரிய திருவிழா 1988-இல், குளிர்கால ஒலிம்பிக்காக அரங்கேறியது. அடுத்த மாபெரும் விழா ஆண்டுதோறும், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும் ஸ்டாம்பிட் திருவிழாவாக இருப்பதினால், தண்ணீர்போல் பணத்தைச் செலவழித்து அதை மிகச்சிறப்பாக நடத்துகிறார்கள். இந்தத் திருவிழா நடக்கின்ற பத்து நாட்களுக்கும் காலைச் சிற்றுண்டியை யாரும் வீட்டில் தயாரிக்க மாட்டார்கள். ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பகுதியில் இருப்பவர்களோடு சேர்ந்து ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த இடம் ஒரு தேவாலயம் அல்லது மசூதியின் வெளிப்புறமாக இருக்கலாம். ஒரு பெரிய மைதானமாகவும் இருக்கும் பட்சத்தில் பெரிய பெரிய அடுப்புகள் மீது பேன்கேக் சுட்டெடுக்கும் கல்களை வைத்து ஆயிரக்கணக்கில் அந்த கேக்குகளைத் தயாரிப்பார்கள். பிறகு பேக்கன் (Bacon) என்கின்ற பன்றிக் கறிகளின் துண்டுகளையும், ஸாஸ்úஸஜ்களையும் (Sausages), வறுத்தெடுக்கும் கடாய்களை வரிசையாக அமைத்து அவைகளை வறுத்துக் கொடுப்பார்கள். இதைத் தவிர பழசரம், பலவிதமான சிரப்புகள் (Syrup), முட்டை வறுவல்கள், காபி, உருளைக்கிழங்கு துண்டுகள் என்று சலீம் சொல்லச் சொல்ல அந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.


மறுநாள் காலையில் ஹோட்டல் வழங்கிய காலை உணவைப் புறக்கணித்துவிட்டு சலீமோடு புறப்பட்டோம், எங்கே என்று புருவங்களை உயர்த்தாதீர்கள். இலவச பேன்கேக் காலைச் சிற்றுண்டியை சாப்பிடு
வதற்காகத்தான்!

இலவசமாக சிற்றுண்டியை வழங்கும் பாரம்பரியம் எப்படி ஏற்பட்டது? எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது போல இந்தப் பழக்கம் தொடங்கியது 1923-ஆம் ஆண்டு என்கிறார்கள். (Chuckwagon) சக்வேகன் என்கின்ற குதிரைகள் இழுக்கின்ற பாரவண்டி ஆல்பர்ட்டா மாகாணத்தில் மிகவும் பிரபலம். இந்த இடம் மரமற்ற பரந்த புல்வெளிகளைக் கொண்டது. இங்கே ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதற்கு சக்வேகன் வண்டிகளை இன்றளவும் உபயோகிக்கிறார்கள். இந்த கூடு வண்டிகளில் சமையல் அறையும் இருக்கும், உணவுப்பொருட்களைச் சேமித்துவைக்கும் இடமும், அவைகளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் இந்த வண்டிகள் 
உபயோகப்படுகின்றன. 

இப்படிப்பட்ட வண்டி ஒன்றில் அமர்ந்துகொண்டு ஜாக் மார்டன் என்கின்ற ஓட்டுநர், ஸ்டாம்பிட்டுக்காக வந்தவர்களை தன்னோடு காலை உணவை சாப்பிட அழைத்துள்ளார். அவருடைய இந்த விருந்தோம்பல் இன்று சமுதாய நிகழ்வாக மாறிவிட்டது.

ஸ்டாம்பிட் சக்வேகன் காலை உணவுக்குழு, ஒரு நாளைக்கு 150 காலன் பேன்கேக் மாவுக்கரைசல் என்ற கணக்கில் ஸ்டாம்பிட் முடியும் வரையில் 1500 காலன் பேன்கேக் மாவையும், 500 பவுண்டு பன்றி கறி என்று 5000 பவுண்டு பன்றிக்கறியை சமைக்கிறார்கள் என்று அறிந்து வாய் பிளந்தேன். 

சலீம், கால்கிரியின் ஒரு புகழ்மிக்க மாலின், வெளிப்புற மைதானத்திற்கு எங்களை இட்டுச் சென்றார். 60 ஆயிரம் மக்கள் அங்கே கூடியிருந்தனர். மொத்தம் 400 தொண்டர்கள் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தனர். அந்த மிகப்பெரிய இடத்தில் வரிசையாக காட்சிஅளித்த அடுப்புகளையும், கிரில் அடுப்புகளையும் கண்டமாத்திரத்தில் சன்னமான குரலில் கூவினேன், ""நெஜமாகவே இது கால்கிரியின் ஒன்பது அற்புதங்களில் ஒன்று'' என்று!

நாசியின் வழியாக நுழைந்த பலவிதமான உணவின் வாசனைகள் எங்களைத் திக்குமுக்காட வைத்தது. கைகளில் பிளேட்டுகளை ஏந்தியபடி ஏழை, பணக்காரன் என்ற எல்லைக்கோடுகளைக் கடந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அப்போது ""ஹேய்.. கைஸ்'' என்று யாரோ என் முதுகில் தட்ட திடுக்கிட்டுத் திரும்பினேன். அங்கே...

தொடரும்...

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 19: வாயில்லா ஜீவன்களின் சாகசம்!

 

 
sk5

திருவிழாக்கள் என்றாலே கூட்டமாக கூடி மகிழ்வதுதானே, கால்கிரி ஸ்டாம்பிட் திருவிழா மட்டும் அதற்கு விதிவிலக்காகுமா என்ன! பலவிதமான கேளிக்கைகளும், விளையாட்டுகளும் இலவச பேன்கேக் வழங்கும் மைதானத்தை ஆக்கிரமித்திருந்தன. ""ஹேய் கைஸ்'' என்று என் முதுகைத் தட்டிய பெண்மணி, இந்திய வம்சாவளி சாயலுடன் சிரித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

""ஹலோ!'' என்று ஒரு புன்னகையைப் படரவிட்டேன். அன்று நான் புடவையை அணிந்திருந்தேன். அதனால்தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றேனா அல்லது அமெரிக்காவில் வாழும் இந்தியரா என்ற குழப்பம் அவளுக்கு ஏற்பட்டது. நான் தென்னிந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்றதும், அசந்துபோன அந்தப்பெண் தன் கணவரை எனக்கு அறிமுகப்படுத்தினாள். இங்கே கால்கிரியில் வேலை பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டோம். அவர்கள் எங்களை அழைத்துக்கொண்டு சென்று பலருக்கு அறிமுகப்படுத்தினார்கள். சுடச்சுட அவர்கள் எங்களுக்கு கொடுத்த பேன் கேக்குகளின் சுவையை என்னவென்று சொல்வேன். வயிராற பல உணவுகளை உண்டோம். பிறகு பிரியாவிடை பெற்றோம். அங்கே ஒரு ஸ்டாலில் விற்பனைக்கு வைத்திருந்த கவ்பாய் தொப்பிகளில் ஒன்றை வாங்கி அணிந்துகொண்டேன். பல விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தேன். 

அடுத்து நாங்கள் சென்ற இடம் ஸ்டாம்பிட் பார்க்காக இருந்தது. சிறுவர் முதல் பெரியவர் வரை, ஜோடியாக, குடும்பமாக புற்றீசல்களாக இங்கே வந்து குவிந்துகொண்டே இருந்தனர். ஸ்டாம்பிட்டின் மொத்த கேளிக்கைகளும், போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும், பொருட்காட்சிகளும் தன்னகத்தே கொண்டுள்ள ஸ்டாம்பிட் பூங்காவை மக்கள் முற்றுகையிடத்தானே செய்வார்கள்! ரோடியோ, சக்வேகன் போட்டிகள் அரங்கேற இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. அதனால் சில விளையாட்டுகளில் ஈடுபட்டோம். ஒருவர் பெரும் அளவில் வெற்றிபெற்று தூக்க முடியாமல் ஒரு பெரிய பென்குயின் பொம்மையைத் தூக்கிக்கொண்டு செல்வதைப் பலர் பொறாமைக் கண்கள் கொண்டு பார்த்தனர். சிலர் நமக்கு வாய்த்தது இதுதான் என்று சிறுபொருட்களைச் சுமந்தனர்.

நாய்கள் கண்காட்சியில், அந்த வாயில்லா ஜீவன்கள் நடத்திக் காட்டிய சாகசங்களைக் கண்டு அசந்து போனோம். கனடாவின் பல பாகங்களிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த பொருட்களை ஒரு கண்காட்சியில் கடைவிரித்திருந்தனர். பஞ்சைவிட மென்மையான, தொட்டால் வெண்ணெயைப்போல வழுக்கிய, ஆடுகளின் ரோமங்களினால் நெய்யப்பட்ட ஒரு போர்வையை வாங்கினோம்.

ஒருபுறம் பலவிதமான வாத்தியங்களின் முழக்கம் கேட்க, அங்கே விரைந்தோம். கனடாவின் பழங்குடி மக்களின் கூடாரங்கள் அங்கே கொலுவிருந்தன. அந்த மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனங்களை ஆடிக்கொண்டிருந்தனர். எங்கள் சிந்தையைக் கவர்ந்த நடனங்களாக அவை இருந்தன. 

ஸ்டாம்பிட் பார்க்கில்தான் எத்தனை விதமான உணவகங்கள். சாப்பிட வாய் மட்டும் இருந்தால் போதாது. வயிற்றின் கொள்ளளவு அதிகமாக இருக்கவேண்டும். பகல் மணி இரண்டு என்று கைக்கடிகாரம் காட்டியது. வந்திருந்த கூட்டத்தில் முக்கால்வாசி மக்கள், கவ்பாய் தொப்பி வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த ஸ்டேடியத்தை நோக்கி நடக்கத்தொடங்கினர். நாங்களும் அவர்களைத் தொடர்ந்தோம். பலவிதமான ரோடியோ, சக்வேகன் போட்டிகள் அங்கேதானே நடக்கப்போகிறது! எங்களுடைய எண்கள் அடங்கிய இருக்கைகளில் அமர்ந்தோம்.

ரோடியோ போட்டிகள் ஆரம்பமாயின. குதிரைகள், காளைகள், (Steer) ஸ்டியர் என்று அழைக்கப்படுகின்ற ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட காளைகள், கன்றுகள் என்று போட்டியில் மனிதனோடு கைகோர்த்த விலங்குகளுள் எல்லாமே முதல்தரம் வாய்ந்ததாக இருந்தன. காளைகளின் திமில்கள், குதிரைகளின் முறுக்கேறிய தோள்கள், பளபளத்த தோல்கள் என அவைகளைக் கண்ட என் கண்கள் விரிந்தன. 

முதலில் (BareBack) பேர்பேக் என்ற போட்டி. இதில் அமர்ந்திருக்கும் கவ்பாய் ஒரு கையால் குதிரையின் முதுகு பகுதியில் கட்டப்பட்டிருக்கும் பட்டையைப் பிடித்துக்கொண்டு காலில் போட்டிருக்கும் ஷூவில் உள்ள கூர்மையான பகுதியால் குதிரையை சீண்ட, அது துள்ளிக்குதிக்கிறது. இப்படிப் பல கோணங்களில் துள்ளும் குதிரையிலிருந்து குறைந்தது எட்டு விநாடிகளாவது குதிரையின்மேல் அமர்ந்திருக்க வேண்டும். லேடீஸ் பேரல் என்ற போட்டியில் குதிரைகளை ஓட்டிவரும் பெண்கள், கிளாவர் வடிவில் வைக்கப்பட்டிருக்கும் பேரல்கள் வழியாக அவைகள் விழாமல் குதிரையை ஓட்டிச் செல்லவேண்டும்.

டைடவுன் ரோப்பிங் (Tiedown Roping) என்ற போட்டி கொடுக்கும் ஆர்வக்கோளாறைச் சமாளிக்க முடியாமல் மொத்த ஜனமும் எழுந்து நின்று கைகளைத் தட்டி ஆர்ப்பரிக்கின்றது. மூடியிருக்கும் கதவுகள் திறந்ததும் ஒரு அழகான கன்று வெளியே ஓடிவருகிறது! குதிரையில், கைகளில் கயிற்றை சுழற்றியபடி வரும் கவ்பாய் அதைக் கன்றின் கழுத்தை நோக்கி வீச, அது கன்றின் கழுத்தைச் சுற்றிக்கொள்கிறது. நொடிப்பொழுதில் கீழே இறங்கும் கவ்பாய் கன்றைப் பிடித்து, அதை மல்லாக்காக படுக்க வைத்து, அதன் மூன்று கால்களைக் கயிற்றைக்கொண்டு கட்டவேண்டும். யார் குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர். அடுத்த போட்டியில் ஓடி வரும் காளையை மடக்கி, குதிரையிலிருந்து குதித்து அதன் கொம்புகளைப் பிடித்து அதை நிலத்தில் தள்ளி அதனுடைய நான்கு கால்களும் வானத்தை நோக்கி இருக்குமாறு செய்யவேண்டும். ஒரு குதிரையில் வரும் ஆணின் கையில் இருக்கும் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையில் ஓடிவரும் காளையை மயிரிழையில் தப்பவிட்டாலும், தோல்விதான். இந்த போட்டியை ஸ்டியர் ரேஸ்லிங் என்கிறார்கள். 
இதற்குப் பிறகு சக்வேகன் வண்டிகளின் போட்டிகள் தொடங்கின. பார வண்டிகளை இழுத்துக்கொண்டு, தங்களை ஆட்டுவிக்கிற எஜமானர்களின் கட்டளைகளுக்கு ஏற்ப ஓடிய குதிரைகளின் அழகையும், வேகத்தையும் ஜெயிக்கும் திறமையைக் கண்டு கைகளைத் தட்டி, தட்டி மைகாட், வாவ், சூப்பர் என்று கத்தி கத்தி மாய்ந்துபோன கூட்டத்தோடு நாங்களும் சேர்ந்துகொண்டோம்.
மணி மாலை ஆறு ஆனபோது கிராண்ட் ஸ்டாண்ட் ஷோ ஆரம்பமானது. இசை, ஆட்டம், பாட்டம், லேசர் ஷோ, சீனாவிலிருந்து வந்திருந்த குழு செய்துகாட்டிய கழைக்
கூத்தாடி வித்தைகள், சர்க்கஸ் சாகசங்கள், வானவேடிக்கைகள் என்று கால்கிரியின் ஸ்டாம்பிட் திருவிழா மனங்களைக் கவ்வி, அங்கே பீடம் போட்டு அமர்ந்துகொள்கிறது.
தொடரும்...

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

ஸ்ரீநகர் டியூலிப் திருவிழா- சாந்தகுமாரி சிவகடாட்சம்  

 

 
sk11

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 20
"காஷ்மீர் சொர்க்கத்தைவிட அழகாக இருக்கிறது. உயர்ந்த பேரின்பத்தை வழங்குகின்ற கொடையாளியாகத் திகழ்கின்றது. இங்கே இருக்கும்பொழுது தேன் ஏரியிலே குளிக்கின்ற இன்பத்தை அடைகின்றேன்.'
- காளிதாஸ்
இவை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் என்பதை ஒவ்வொரு முறையும் அங்கே செல்லும்பொழுது உணர்ந்திருக்கிறேன். வசந்தகாலம், கோடைக்காலம், குளிர்காலம் என்ற மூன்று காலக்கட்டங்களிலும் காஷ்மீரின் அழகினை என் கண்கள் கண்டு மகிழ்ந்திருக்கிறது.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரமாகத் திகழும் ஸ்ரீநகரின் இயற்கையின் அற்புதங்களைப் பார்த்தபொழுது தேன்குடித்த வண்டாக மாறினேன். 1983-ஆம் ஆண்டு என் கணவருடன் சென்றபொழுது தீவிரவாதத்தின் சுவடுகள் அங்கே காணப்படவில்லை. எங்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. குளிர்காலம் என்பதால் எங்கும் நிலமங்கை பனிப்போர்வையை அணிந்திருந்தாள். பாறைகள் மீது பனி, சாக்லேட் கேக்கின் மீது பரவியிருக்கும் கிரீம்போல அழகு காட்டி அசத்தியது. மலைகளின் மீது படர்ந்திருந்த பனித்துகள்கள், காலை சூரியனின் கதிர்களால் கரைந்து கீழே நோக்கி வரும்பொழுது, மீண்டும் உறைந்து, ஊசிகளாய் சூரிய ஒளியில் பளபளத்த காட்சியைக் கண்ட கண்கள் இமைப்பதை மறந்தன. 
அதுமட்டுமா! சினார் (Chinar) மரக்கிளைகளில் கொத்துக்கொத்தாக பனிகள், வீட்டு கூரைகளின் மீது பஞ்சுப்பொதிகளாக பனிகள், ஓடும் ஆறுகளில் மிதந்து செல்லும் ஐஸ்கட்டிகள் அம்மம்மா, ஒரு பனிக்கரடியாக மாறி அந்தப் பனிப்போர்வையில் உருண்டு மகிழ்ந்தேன். பனியைப் பந்துகளாக ஆக்கி வீசி விளையாடி வீடுகட்டி, இப்பொழுது நினைத்தாலும் இன்பப்பெருக்கால் நெஞ்சு நிறைந்துவிடுகிறது.
உலகின் பல அழகிய நாடுகளைப் பார்த்திருந்தாலும், ஸ்ரீநகரின் அழகு என்னை அங்கே அடிக்கடி செல்லத்தூண்டியது. ஆனால் பலவிதமான காரணங்களால் அங்கே போகமுடியாமல் இருந்தாலும், 2012-இல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வசந்தகாலத்தில் ஸ்ரீநகரில் அரங்கேறும் டியூலிப் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டோம்.
ஸ்ரீநகரின் விமானதளத்திலிருந்து, நாங்கள் தங்கப்போகின்ற ஹோட்டலை நோக்கி எங்களை சுமந்துகொண்டு அந்தக் கார் விரைந்து சென்றது. பனியின் ஆதிக்கத்தின்கீழ் கட்டுண்ட ஸ்ரீநகரை பார்த்துப் பழகிய என் கண்களுக்கு இப்பொழுது அந்த நகரம் முற்றிலும் மாறுபட்ட காட்சிகளைக் கடைவிரித்தது.
வசந்தகாலம் என்பதால் எங்கு பார்த்தாலும் பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. வானுயர்ந்த மலைகள், தலைகளில் மட்டும் பனிக்குல்லாக்களை அணிந்திருந்தன. கிடு, கிடு பள்ளத்தாக்குகளில் பலவிதமான காட்டுப்பூக்கள் தலையாட்டி எங்களை வரவேற்றன. அதுமட்டுமா, ஸ்ரீநகரின் விவசாயிகள், பல ஏக்கர் நிலங்களில் கடுகை விதைத்திருந்தார்கள். அவை இரண்டு அடி நீளமுள்ள செடிகளாக வளர்ந்து, மஞ்சள் பூக்களை ஏந்தி இருந்தன. நீலவானம், வெள்ளை முகில்கள், மலைகள், கண்ணுக்கு எட்டியவரை மஞ்சள் போர்வையில் விரிந்து காட்சிதரும் கடுகுச்செடிகள், இதைத்தவிர தென்றல் காற்று சுமந்து வந்த நறுமணம், மூக்கின் வழியாக மூளையை அடைந்து மயக்கியது.
ஸ்ரீநகரில் தங்கியிருந்த அந்த பத்து நாட்களில், எதனால் வீசும் காற்றில் இத்தகைய மணம் என்ற காரணம் புரிந்துபோனது. பாதாம் மரங்கள், செரி, ஆப்பிள், பீச், பேரிக்காய் என்று எல்லா மரங்களும் சுமக்கமுடியாமல் பூக்களைத் தங்களுடைய கிளைகளில் சுமந்திருந்தன. பூக்களின் வழியே தவழ்ந்து வரும் தென்றல் மணக்காமல் இருக்குமா?
ஹோட்டலை அடைந்தோம். பகல் உணவை முடித்துக்கொண்டு சிறிது ஓய்வு எடுத்தோம். தகிக்கும் சூரியன், உஷ்ணம் அடங்கி, தங்கத்தட்டாக மாறி குளுமை காட்டி நின்றான். கைக்கடிகாரம் மாலை மணி ஐந்து என்று காட்டியது. 
அன்றைய தினம் உலகப்புகழ் பெற்ற டால் (Dal) ஏரியில் படகுசவாரி செய்ய முடிவு செய்தோம். மறுநாள் காலையில் இந்திராகாந்தி மெமோரியல் டியூலிப் கார்டனில் நடக்கும் டியூலிப் திருவிழாவைக் காண முடிவு செய்திருந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பின்பக்க பால்கனியில் இருந்தே, வானத்தில் இருந்து தரையில் இறங்கிய வானவில்லாக டியுலிப் தோட்டம் காட்சி அளித்தது.
அறுபது வகைகளைக் கொண்ட டியூலிப் மலர்கள் எண்ணிக்கையில் இருபது லட்சம் என்றால் சும்மாவா. இப்பொழுதே சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவலை உள்ளடக்கி, டால் ஏரியை நோக்கி நடையைக் கட்டினோம்.
டால் ஏரியின் ஒருபுறம் ஆயிரக்கணக்கில் படகுவீடுகள் வரிசைகட்டி நின்றன. இவைகளில் உல்லாசப் பயணிகளும் தங்குகிறார்கள், ஸ்ரீநகரின் மக்களும் வாழ்கிறார்கள். பளிங்குபோன்ற டால் ஏரியின் தண்ணீர் மனதைக் கவ்வியது. ஷிகாரா என்று அழைக்கப்படும் சொகுசுப் படகில் ஏறி டால் ஏரியை வலம் வந்தோம்.
ப்ளக்...ப்ளக் என்ற துடுப்புகளின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. குளிர்ந்த தென்றல் காற்று என் கேசத்தைக் கலைத்து, என் உடலைத் தழுவிக்கொண்டது. மறையும் சூரியனின் சிகப்பு வண்ணம் ஆகாயத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அந்த அழகிய காட்சியை ஏரியின் பளிங்குத் தண்ணீர் படம் பிடித்துக் காட்டியது. என்னைச் சுற்றிலும் தாமரை இலைகள் தட்டுகளாய் மிதந்தன. அவைகளின் இடைவெளியில் தாமரை மலர்கள் நம் ஊரில் கிடைப்பதைப் போன்ற தோற்றத்தில் ஆனால் இரண்டு மடங்கு பெரிய அளவில் ஆயிரக்கணக்கில் பூத்து மதியை மயக்கின.
படகோட்டி ஒரு நாட்டுப்புறப் பாடலை மென்மையான குரலில் பாடத்தொடங்க, நான், "இதோ சொர்க்கம் என் முன்னாலே' என்று முணுமுணுத்தேன். என் கண்களில் சுரந்த கண்ணீர், உதடுகளில் பட்டு, என்னை இவ்வுலகத்திற்கு இட்டு வந்தது.
தொடரும்

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

ஆசியாவில் மிகப்பெரிய டியுலிப் தோட்டம்! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

 

 

sk11

 

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 21

 


"பூமி மலர்கள் மூலமாக சிரிக்கிறது'
- ரால்ப் வால்டோ எமர்சன்
பூக்களைப் பார்க்கும்பொழுது எல்லாம் நான் பூரித்துப்போவேன். டால் ஏரியில் ஆயிரக்கணக்கில் தாமரைப் பூக்களைப் பார்த்தபொழுது ஆனந்தத்தின் எல்லைக்கோடுகளைக் கடந்தேன். தாமரைப்பூவின் தண்டுகளை "நடுரு' (Nadru) என்று காஷ்மீரின் மக்கள் அழைக்கின்றனர். இந்தத் தண்டுகள் அவர்களுக்கு மிக விருப்பமான உணவாக இருப்பதால் டால் ஏரியில் இந்த தாமரைகளை வளர்க்கின்றனர். "நடுருயக்னி' (Nadru yakhni) என்கின்ற தாமரைத் தண்டுகளையும், தயிரையும், மசாலாப் பொருட்களையும் கொண்டு செய்யப்பட்ட உணவைச் சாப்பிட்ட என் நாக்கு இன்றளவும் அதன் சுவையில் மூழ்கியிருக்கிறது.
மறுநாள் காலைப்பொழுதில், கைகளில் கேமரா, வீடியோ கேமராக்களை சுமந்த வண்ணம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தோட்டமாகத் திகழ்கின்ற "இந்திராகாந்தி மெமோரியல் டியுலிப் தோட்டத்திற்குள்" நுழைந்தோம். ஜபர்வன் மலைத்தொடர்களின் அடிவாரத்தில், ஏழு படிகளாக அமைக்கப்பட்ட கடல்மட்டத்திலிருந்து 2,600 அடிகள் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த தோட்டத்தில் டியுலிப்களைப் பயிர் செய்திருக்கிறார்கள். இந்த தோட்டத்தின் மூன்று பக்கங்களில் டால் ஏரி, நிஷாட் பாக் மற்றும் ஷெஷ்மசாஹி என்கின்ற அழகிய பூங்காவனங்கள் சூழ்ந்து இதற்கு மேலும் அழகூட்டுகின்றன. நுழைவுச்சீட்டுகளை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்து, என் பார்வையைப் படரவிட்டேன், சிலையாகிப்போனேன்.
கண்களுக்கு எட்டியவரை வரிசைகட்டி நின்ற, விதவிதமான நிறங்களைக் கொண்ட, டியுலிப் மலர்கள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள், ஊதா, கலப்பு செய்யப்பட்ட பல வண்ணங்களைக் கொண்ட டியுலிப் மலர்களின் அழகு என் நெஞ்சினை நிறைத்தது.
லட்சக்கணக்கான மலர்களையும் அவைகளின் அழகினையும் என்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாகப் பார்த்தேன். இந்த அழகிய சூழ்நிலையில் இப்படிப்பட்ட தோட்டத்தை அமைக்கும் எண்ணம் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு முதல்முதலில் தோன்றியிருக்கிறது.
இதுபோன்ற டியுலிப் தோட்டங்களை நெதர்லாண்டில் பார்த்த குலாம் நபி ஆசாத், இத்தகைய தோட்டங்களை ஏன் ஸ்ரீநகரில் உருவாக்கக்கூடாது? என்று எண்ணி அதை செயல்படுத்தத் தொடங்கினார். இதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. டியுலிப் மலர்கள் மத்திய ஆசிய நாட்டிற்கு உரியது. பிறகு அது டர்க்கி நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், நெதர்லாண்டில் லட்சக்கணக்கில் பயிரிடப்பட்டு மக்களின் கண்களுக்கு விருந்தானபோதுதான் இந்த உலகம் இந்தப் பூவின் அழகையும், பெருமையையும் புரிந்துகொண்டது.
ஸ்ரீநகரில் டியுலிப் திருவிழாவைத் தொடங்கி வைக்க வந்த சோனியா காந்தி சொன்னார் "டியுலிப் மலர்களின் பிறப்பிடம் காஷ்மீர். காட்டுப்பூவாக மலர்ந்த இந்த மலர்களின் தோற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது, இப்படி இங்கே பூத்த பூக்கள் மேலைநாடுகளுக்கு பிற்காலத்தில் பயணப்பட்டது.
நெதர்லாண்டில் 1634-1637, டியுலிப் மேனியா என்ற ஒரு காலகட்டம் ஏற்பட்டது. அப்பொழுது இந்த டியுலிப் மலர்கள் சிலவற்றை வாங்கவேண்டும் என்றால் ஒரு வீட்டை வாங்கக் கொடுக்கும் தொகையைக் கொடுக்க வேண்டி இருந்தது'' என்ற உண்மையான தகவலைத் தெரிவித்திருக்கிறார்.
இன்றளவும் நெதர்லாண்டில் மூன்று பில்லியன் டியுலிப் பூக்கள் வருடம்தோறும் அறுவடைசெய்யப்பட்டு உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படி நம் நாட்டில் பிறந்து, மேல்நாட்டின் மேன்மை அடைந்த டியுலிப் பூக்களை மீண்டும் அதன் பிறப்பிடத்திற்குக் கொண்டு வந்து லட்சக்கணக்கில், பலவண்ணங்களைக் கொண்ட இந்த மலர்களை மலரச்செய்து நம் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கும் குலாம் நபி ஆசாத்துக்கு என் உள்ளம் ஆயிரம் நமஸ்காரங்களைக் காணிக்கை ஆக்கியது.
என்னுடைய அதிர்ஷ்டம் டியுலிப் தோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்களுடைய ஹோட்டலுக்கு வந்தபொழுது, வரவேற்பு அறையில் குலாம் நபி ஆசாத்தைப் பார்க்கும் பெரும் பாக்கியம் கிட்டியபோது, என் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்து நான் மகிழ்ந்தேன்.
ஒரு தண்டில் ஒரு டியுலிப் பூ என்பதுதான் நியதி. ஆனால் சில சமயம் நான்கு பூக்களும் கொத்தாகப் பூக்கின்றன. இப்படி இருந்த பூக்களை டியுலிப் திருவிழாவின்போது இந்திராகாந்தி மெமோரியல் தோட்டத்தில் பார்த்து மகிழ்ந்தோம். பட்டு போன்ற மென்மையைக் கொண்டு, டர்பன் போன்ற தோற்றத்துடன் இருக்கும் டியுலிப் மலர்கள் 3-7 நாட்கள் இப்படி இருந்து பிறகு முழுமையாக மலர்ந்துவிடும். பெர்ஷியன் மொழியில் டியுலிப் என்றாலே டர்பன் என்று அர்த்தமாம்.
புகைப்படம் எடுத்து, எடுத்து கைகள் சோர்ந்து போயின. பலவகையான டிசைன்களிலும், அமைப்புகளிலும் அந்த மலர்கள் அணிவகுத்து நின்றன. இந்தத் தோட்டத்தின் கடைசி பகுதிகளில் டேபடில்ஸ், ரோஜா, ஐரிஸ், ஹாயஸிந்த் (Hyacinth) போன்ற பலவகையான பூக்களையும் பார்த்து மகிழ்ந்தோம்.
ஸ்ரீநகரின் வசந்தகாலம் எங்களைத் தன் வசப்படுத்திக் கொண்டது. கண்கள் பார்த்த இடங்களில் எல்லாம் பூக்கள், இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல இந்திராகாந்தி மெமோரியல் தோட்டத்தில் கண்ட லட்சக்கணக்கான டியுலிப் மலர்கள் காட்டிய அழகிய கோலங்கள், ஸ்ரீநகரின் பல இடங்களில் இந்த டியுலிப் திருவிழாவுக்காக அரங்கேறிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், சிறப்பு உணவுகளின் சுவை, கைவினைப் பொருட்கள் பொருட்காட்சிகள் அப்பப்பா, இயந்திரமயமாகிப்போன மனிதனின் மனமும் இங்கே மலராகி மணம் வீசுகின்றது.
- தொடரும்

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 22: மியுனிக் அக்டோபர் ஃபெஸ்ட் என்கின்ற பீர் திருவிழா!

 

 
dk5


"கடவுள் நம்மை நேசிக்கிறார், நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிறார் என்பதற்கு ஆதாரம் பீர்' 
- பென்ஜமின் பிராங்லின்

பீர் விரும்பிகளின் இத்தகைய முழக்கங்களையும், ஆனந்தக் கூத்தாட்டங்களையும் காணவேண்டுமா, செல்லுங்கள் மியுனிக்குக்கு. அங்கே அக்டோபர் ஃபெஸ்ட் என்று வருடம்தோறும் கொண்டாடப்படுகின்ற பீர் திருவிழாவில் இத்தகைய காட்சிகள் சர்வசாதாரணமாக அரங்கேறும்.

மத்திய ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி. இந்த நாட்டிற்கு பலமுறை சென்றிருக்கிறேன். தொன்மை வாய்ந்த கலாச்சாரம், அழகிய இயற்கையின் வெளிப்பாடுகள், இவைகளோடு உலகின் மிக முக்கியமான பொருளாதார சக்தி என்கின்ற பெருமைகளோடு தலைநிமிர்ந்து நிற்கும் ஜெர்மனி என் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றிருந்தது.

பிளாக் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படுகின்ற கருப்பு காடுகள், சூரிய ஒளி உள்ளே ஊடுருவி செல்லமுடியாத அளவிற்கு பைன், ஓக், எல்ம் (Elm) மரங்களினால் சூழப்பட்டிருப்பதால் இந்த பெயர். இந்த காடுகளின் வழியாக பயணப்பட்டபொழுது எல்லாம், அந்த பகுதிகளின் அழகில் என் சிந்தையைத் தொலைத்திருக்கிறேன்.

சென்ற வருடம் ஒரு பதினைந்து நாட்கள் விடுமுறையில் எங்கே செல்லலாம் என்ற முடிவை எடுக்கும்பொழுது, ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான மியுனிக்கில் நடக்கும் பீர் திருவிழாவை முதல் நாள் தொடங்கி ஒருவாரம் பார்த்துவிட்டுப் பிறகு பிளாக் ஃபாரஸ்டில் இருக்கும் கென்கென்பேஷ் (Gengenbach) என்கின்ற அழகிய கிராமத்தில் ஐந்து நாட்கள் தங்கி, சுற்றியுள்ள இடங்களைப் பார்ப்பது என்று திட்டமிட்டோம்.

""பீர் திருவிழாவா! அங்கே போய் நீ என்ன செய்யப்போகிறாய்?'' என்று என் மகன் என்னை கிண்டல் அடித்தான்.

தண்ணீர், பழரசங்களைத் தவிர மதுபானங்களை கைகளினால்கூட தொட்டத்தில்லை. அதனால் இப்படி கலாய்க்கப்பட்டேன்.

பீர் திருவிழாவில் நடக்கும் கேளிக்கைகளைக் கண்களால் ரசிக்கின்றேன். பெவேரியன் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தும் அக்டோபர் ஃபெஸ்ட் பீர் திருவிழாவில் கலந்துகொள்வேன் என்று சூளுரைத்துக் கிளம்பினேன்.

உலகின் தலைசிறந்த திருவிழாக்களில் இந்த அக்டோபர் ஃபெஸ்ட் முதல் இடத்தில் நிற்கிறது. பெயர் என்னவோ அக்டோபர் விழா என்றாலும், தொடக்கம் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரக் கடைசியிலும், முடிவு அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறிலும் இருப்பது ஏன் என்கின்ற கேள்வியை எழுப்புகின்றது. 

1810-ஆம் ஆண்டில் இந்த பீர் திருவிழா ஆரம்பமானது. முதலில் அக்டோபர் மாதம் தொடங்கிய விழா, வானிலை, மற்றும் அதிக உல்லாசப் பயணிகளைக் கவர்ந்து இழுக்க வேண்டும் என்ற காரணங்களினால் செப்டம்பர் மாதமே கொண்டாட்டங்களைத் தொடங்கியது.

dk5a.jpg

எந்த ஒரு திருவிழாவுக்கும் தொடக்கத்துக்கு என்று ஒரு காரணம் இருக்குமே, இந்த அக்டோபர் பீர் திருவிழா மட்டும் இதற்கு விதிவிலக்காகுமா!

1810-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, இளவரசர் (LUDWIG) லுட்விக், இளவரசி (THERESE) டிரியசை கரம்பிடித்தார். இந்த கோலாகலத்தைக் கொண்டாட மியுனிக்கின் மக்களை அரச குடும்பத்தினர் இருகரம் நீட்டி வரவேற்றனர். டிரிஸ்ஸியன் வீஸ் (Theresienwiewse) என்று அழைக்கப்பட்ட மிகப்பெரிய புல்வெளி மைதானத்தில் மக்கள் ஒன்றுகூடினர். பலவிதமான கேளிக்கைகளுக்கு இடையே மியுனிக்கில் தயாரிக்கப்பட்ட மிக உயர்ந்த ரக பீர் பேரல், பேரல்களாக மக்களுக்காக கொண்டுவரப்பட்டு பரிமாறப்பட்டது. ஆறாக ஓடிய பீரில் மக்கள் நீந்தி குளித்தனர் என்றே சொல்லலாம். இப்படி உற்சாகத்தின் உச்ச கட்டமாக அரங்கேறிய விழாவின் முடிவில் குதிரை பந்தையங்கள் நடைபெற்றன.

1811-ஆம் ஆண்டில் மீண்டும் கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவோடு விவசாய கண்காட்சியும் சேர்ந்துக் கொண்டது. இன்றைக்கு பீர் கூடாரங்களை அமைத்து இந்த திருவிழாவை கொண்டாடுகிறார்கள். குதிரைப் பந்தையங்கள் மறைந்து இங்கே மிகப்பெரிய பொருட்காட்சியும், அதில் பலவிதமான விளையாட்டு அம்சங்களும், உணவு ஸ்டால்களும் ஆக்ரமித்துக் கொண்டுள்ளன. விவசாயப் பொருட்காட்சி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் செயல்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து மியுனிக்கில் நாங்கள் தங்கப் போகும் ஹோட்டலை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். மறுநாள் அக்டோபர் ஃபெஸ்ட் திருவிழாவின் தொடக்க நாளாக இருந்தது. ஜெர்மனியின் தென்கிழக்கு மாநிலமான பெவேரியாவின் தலைநகர் மியுனிக் என்பதால், அங்கே பெவேரியன் கலாச்சாரமே அதிகமாகக் காணப்படுகிறது.

அக்டோபர் பீர் திருவிழாவுக்கு என்றே ஸ்பெஷலாக பெண்கள் அணியும் பெவேரியன் ஆடையான டென்டல்லும், ஆண்கள் அணியும் லிடர்ஹோசன்னும் ரயில் நிலையங்களின் வெளியிலும், துணிக்கடைகளிலும், பஜார்களிலும் விற்பனைக்காக கடைவிரிக்கப்பட்டிருந்தன. மக்கள் மகிழ்ச்சி பொங்கும் முகங்களோடு, கைகளில் ஷாப்பிங் பைகளை ஏந்திய வண்ணம் கும்பல், கும்பலாக நடைபயின்று கொண்டிருந்தனர்.

இந்த பீர் திருவிழாவிற்காக சுமார் ஆறு மில்லியன் மக்கள் உலகின் பல பகுதிகளில் இருந்தும், ஜெர்மனியின் பிற மாநிலங்களில் இருந்தும் மியுனிக்கில் வந்து குவிகிறார்கள்.

"நல்ல நேரம் அருகில் இருக்கு வாருங்கள்
இங்கே அதிகமான சாப்பாடும்
அதிகமான பீரும் இருக்கும்
எங்களோடு வருடாந்திர
அக்டோபர் ஃபெஸ்டில் கலந்துகொள்ளுங்கள்'
இப்படிப்பட்ட வாசகங்கள் எங்கும் காணப்பட்டன.

தொடரும்...

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 23: ஏழு கி.மீ. தூரத்துக்கு நீண்ட ஊர்வலம்!

 

 
sk5

காலை சூரியனின் இளங்கதிர்கள், விலகியிருந்த திரைச்சீலைகளின் வழியாக என் முகத்தில் விழ திடுக்கிட்டுக் கண்விழித்தேன். பக்கத்தில் இருந்த கடிகாரம் காலை மணி 7.30 என்று காட்டியது. அம்மாடி, இப்படி தூங்கிவிட்டோமே என்று எண்ணி முடிப்பதற்குள் என் கணவர் குளித்து முடித்து ஃபிரஷ்ஷாக வந்தார்.
""நன்றாக தூங்கினாயா, நீண்ட பயணம் செய்து வந்து இருக்கிறோம், அதனால்தான் நான் உன்னை எழுப்பவில்லை, அக்டோபர் ஃபெஸ்டின் பரேடு, பத்து மணிக்குத்தான் ஆரம்பமாகிறது. அதுவும் ஊர்வலம் நாம் தங்கியிருக்கும் ஹோட்டலின் வீதி வழியாகத் தானே செல்கிறது, அதனால் பதட்டப்படாமல் கிளம்பு'' என்றார்.
அக்டோபர் பீர் திருவிழா நடந்தேறும் டிரிஸ்ஸியன்வீஸ் மைதானத்தின் அருகிலேயே, அங்கு ஐந்து நிமிடங்களில் நடந்து சென்றுவிடும் வகையில் நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன்னரே இந்தியாவிலிருந்து இன்டர்நெட் மூலம் ஹோட்டலை புக் செய்து இருந்தோம். இதில் கூடுதல் செüகரியம் என்னவென்றால் உலகப்புகழ் பெற்ற பரேடைப் பார்க்க, எங்கள் ஹோட்டலை விட்டு வெளியே வந்து நின்றாலே போதும்.
வெளியே குளிர்காற்று வெயிலையும் மீறி, போட்டிருந்த ஸ்வெட்டரின் வழியாக ஊடுருவி உடம்பை நடுங்க வைத்தது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூட ஆரம்பித்திருந்தார்கள். உலகிலேயே, மிகப் பெரிய நாட்டுப்புறப் பண்பாட்டை வெளிப்படுத்தும் அணிவகுப்பு இது என்று கேள்விப்பட்டதினால் அதைக் காண பெரும் ஆர்வம் கொண்டிருந்தோம். திடீர் என்று பீர் பேரல்கள் பலவற்றை சுமந்தவண்ணம் ஒரு பெரிய தள்ளுவண்டி வந்தது. அந்த வண்டியை இழுத்துவந்த குதிரைகளின் அழகையும், அவைகள் அலங்கரிக்கப்பட்டிருந்த விதங்களைப் பார்த்த மக்கள் கைகளைத் தட்டி மகிழ்ந்தனர்.
"அக்டோபர் ஃபெஸ்ட்' என்கிற பீர் திருவிழா கொண்டாடப்படும் டிரிஸ்ஸியன்வைஸ் மைதானத்தில், உலகெங்கிலும் வந்து குழுமும் மக்களுக்கு பீரை சப்ளை செய்ய என்று பீர் கூடாரங்களை அமைக்கிறார்கள். இங்கு மியுனிக்கிலும், அதனுடைய சுற்றுப்புறங்களிலும் தயாராகும் பீரை மட்டுமே வழங்குகிறார்கள். இதைப் போன்ற கூடாரங்கள் 30 இருந்தாலும், மிகப்பெரிய மெகா சைஸ் கூடாரங்கள் பதினான்கே உள்ளன.
பீர் திருவிழாவுக்கு நாள் ஒன்றுக்கு ஆறு லட்சம் மக்கள் வருகிறார்கள். ஆனால் நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர்கள் மட்டுமே அமர்ந்து பீரை குடிக்க முடியும் என்பதால், இத்தகைய கூடாரங்களில் இருக்கைகளுக்கான முன்பதிவை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மிகவும் புகழ்வாய்ந்த ஸ்சுட்ஜென் கூடாரத்தில் (Schutzen Tent) இரண்டு இருக்கைகளை, மூன்று மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்திருந்தோம். பீர் திருவிழாவின் அணிவகுப்பில் ஹாக்கர் சுவார் (Hacker Pschorr), ஹோப்பிராய் ஹவுஸ் (Hofbrau haus) போன்ற பல புகழ்பெற்ற பீர் தயாரிப்பாளர்களின் கூடாரங்களைச் சேர்ந்த பீர் பேரல்கள் வண்டிகளை குதிரைகள் இழுத்து வந்தன. இந்த வண்டிகளில் அழகிய பெண்கள் நின்றுகொண்டு பெரிய பெரிய பீர் மக்குகளில் வழிய வழிய பீரை ஊற்றி சுற்றியிருக்கும் மக்களை நோக்கி நீட்ட, அவர்களும் குடு, குடு என்று ஓடிச்சென்று அவைகளைப் பெற்றுக் கொண்டனர். குவளையும் பீரும் இலவசம் என்றால் மகிழ்ச்சிக்கு சொல்லவா 
வேண்டும்.
தொலைதூரத்தில், பீர் திருவிழாவின் அணிவகுப்பு வருவது பார்வையில் பட்டது. என் மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறந்தது. மொத்தம் 8,000 - 10,000 மக்கள் விதவிதமான உடைகளில் அணிவகுத்து வர இருந்தனர். 70 வகையிலான வாத்தியக் குழுக்கள் இசைத்த வண்ணம் வருவார்கள் என்றனர்.
நாங்கள் காத்துக் கொண்டிருந்த வீதியில் ஊர்வலம் நுழைந்தது, மியுனிக்கிலேயே அழகிய பெண் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவள் குதிரையில் அமர்ந்து கைகளை அசைத்த வண்ணம் வந்தாள். பின்னர் என் கண்களுக்கு விருந்து படைத்தவற்றை எழுதி மாளாது. இரண்டு மணி நேரத்துக்கு சற்றுக்கூடுதலாக, மொத்தம் ஏழு கி.மீ நீளம் நீண்ட ஊர்வலத்தை, கற்பனை சக்தியின் விளிம்புகளை உடைத்தெறிந்து, மெய்மறக்க செய்தவற்றில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.
வண்டிகளை இழுத்து வந்த குதிரைகளின், முன் நெற்றியில் கற்றையாகப் புரளும் முடி காற்றில் பறக்க, தரையைத் தொடும் வால்களில் இருந்து நீளும் முடியின் அழகு, நான்கு கால்களில் பரவிக் கிடக்கும் ரோமம், வெள்ளை, கறுப்பு, சாந்து நிறம், சாம்பல் நிறம் என்று பேண்டு வாத்தியங்களின் இசைக்கு ஏற்ப நடந்த அந்த வாயில்லா ஜீவன்கள் கடைவிரித்த அழகையும், அவைகளை அலங்கரித்த ஆபரணங்களை வடிவமைத்தவர்களின் கைத்திறனையும் புகழ வார்த்தைகள் என்னிடம் இல்லை.
எத்தனை விதமான வண்ண உடைகள், தொப்பிகள், காலணிகள், மலர்கள், அவைகளை அணிந்து வந்த மங்கையர்கள், காளைகளின் அழகு, குழந்தைகள் கூட சின்ன தள்ளுவண்டிகளில் ஊர்வலம் வந்தனர். நான்கு வயது முதல் பத்து வயது பிள்ளைகள் தங்கள் பெற்றோர் கைகளைப் பற்றி நடந்து வந்தனர். ஜெர்மனியின் மூலை முடுக்குகளில் இருக்கும் பலவகை கலாச்சாரங்கள், அங்கே அணிவகுத்து வந்த மக்கள் மூலமாக தங்கள் பாரம்பரியத்தையும் சுமந்து வந்தன.
பலருடைய உடைகளில், சூரிய ஒளியில் பளபளத்த மெடல்கள் மாலைகளாக அவர்களுடைய கழுத்திலிருந்து இடுப்பு வரை தொங்கி நடையின் வேகத்திற்கேற்ப நடனம் புரிந்தன. பல கிளப்புகளில் நடந்த ஏர் ரைபில், ஏர் பிஸ்டல் சுடும் போட்டியில் வென்ற மெடல்கள் அவை என்று கேட்டு அறிந்து பிரம்மித்தோம். என் மனதை மிகவும் நெகிழவைத்த நிகழ்வு ஒன்று இத்தனை அமர்க்களத்திலும் நடந்தேறியது. பல உயர் ரக நாய்களின் அணிவகுப்பும் நடந்தது. ஓடி வந்து கொண்டிருந்த அந்த நாய்களுக்கு!...
(தொடரும்)

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

திருவிழாவுக்கு வாங்கிய உடை! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

 

 
sk14

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 24

"மனிதனை நன்றாக புரிந்துகொள்ள தொடங்கியபொழுது, நான் நாய்களை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தேன்'.
- சார்லஸ் டி கால்
விதவிதமான நாய்களின் அணிவகுப்பை ரசித்துக் கொண்டிருந்தோம். மூச்சிரைக்க ஓடி வந்து கொண்டிருந்த நாய்கள் நின்று கொண்டிருந்த சாலையின் வளைவை நெருங்கியபொழுது, பக்கெட்டுகளிலும், பெரிய கிண்ணங்களிலும் வழிய வழிய தண்ணீரை நிரப்பி கொண்டு வந்த காவலர்கள் அவற்றை நாய்கள் வரும் பாதையின் ஓரம் வைக்க, அவை அந்த தண்ணீரை ஆர்வத்துடனும், தாகத்துடனும் குடித்த காட்சி, என் மனதை நெகிழ வைத்தது, பெவேரியன் கலாச்சாரத்தின் உயர்ந்த உள்ளம் அங்கே வெளிச்சத்திற்கு வந்தது.
அணிவகுப்பு முடிந்த உடன், மக்கள் கலையத் தொடங்கினர். பெண்கள் அணிந்திருந்த பாரம்பரிய டென்டல் உடையின் அழகில் மயங்கிய நான், அதுபோல் ஒரு உடையை வாங்கி அணிந்துகொண்டு பீர் திருவிழாவில் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். 
ஒரு கடையில் அழகான டென்டல் ஆடையை வாங்கினேன். அங்கே இருந்த பெண் விற்பனையாளர் அந்த உடையை அணியும் முறையை சொல்லிக் கொடுத்தார். 
"மேடம், இந்த ஆடையில் வரும் ஏப்ரனை (apron) அதாவது மேல் அங்கியை முன்னால் ஒரு "போ' (bow) போல கட்டவேண்டும். இதில் அதிக கவனம் தேவை'' என்றாள்.
"எதனால்?'' என்றேன்.
"இந்த போ இடது பக்கமாக இருந்தால் நீங்கள் 
திருமணம் ஆகாதவர் என்று பொருள்.''
"ஓ, வலதுபுறம் இருக்கும்படி கட்டிவிட்டேன் என்றால்?'' என்று நான் முடிப்பதற்குள் அவள் சொன்னாள், ""திருமணம் ஆனவர் என்று காளைகள் நகர்ந்து சென்று விடுவார்கள். நடுவில் முடிச்சு போட்டீர்கள் என்றால் நீங்கள் கன்னி கழியாதவர் என்று அர்த்தம்'' என்றதும் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். "தமிழகத்தில் கழுத்தில் தாலி, கால் விரலில் மெட்டி, பெண்களை திருமணம் ஆனவர்கள் என்று அடையாளப்படுத்தும்'' என்று சொன்னதும், அந்தப் பெண் ஆச்சரியத்தில் மூழ்கினாள்.
செப்டம்பர் 16-ஆம் தேதி 2017 பகல் பன்னிரெண்டு மணிக்குத் திரளாகக் கூடி இருந்த கூட்டத்தோடு ஸ்காடன்ஹேமல் (Schottenhamel) கூடாரத்தில் நின்றிருந்தோம். மியுனிக்கின் மேயர் டைடர் ரைடர் (Keg) கெக் என்று அழைக்கப்படுகின்ற சிறிய பீர் பேரலின் மூடியைத் தட்டி திறந்து ஒரு குவளையில் பீரைப் பிடித்து அதை பெவேரியன் மினிஸ்டர் பிரசிடென்ட் ஹார்ஸ்ட் சிஹாபருக்கு வழங்க, பீர் திருவிழா தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவ்வளவுதான் குழுமி இருந்த மக்கள், கூக்குரல் இட்டு கைகளைத் தட்டி மகிழ்ந்தனர். "அக்டோபர் ஃபெஸ்ட் பீர் திருவிழா ஆரம்பமாகிவிட்டது. இனி எல்லா கூடாரங்களிலும் பீர் விநியோகிக்கப்படும்'' என்றனர். 
மக்கள் கூட்டம், தங்களுடைய முன்பதிவு செய்யப்பட்ட கூடாரங்களை நோக்கி படையெடுத்தது. 2017 அக்டோபர்ஃபெஸ்டின் கணக்கெடுப்பின்படி 7.5 மில்லியன் லிட்டர் பீரை, மொத்தம் 6.2 மில்லியன் மக்கள் குடித்திருக்கிறார்கள் என்றால் இந்த திருவிழாவின் விஸ்வரூபம் ஓரளவுக்கு புரிகிறது அல்லவா!
பெவேரியன் சிலைக்கு அருகில் டிரிஸ்ஸியன்வீஸ் மைதானத்தில் அமைந்திருந்த, முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட மிகவும் பிரபலமான ஸ்சுட்ஜென் கூடாரத்துக்குள் நுழைந்தோம். வெகுநேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்தாக அந்த கூடாரம் அமைந்திருந்தது. 
சிகப்பு, பச்சை, மஞ்சள் என்ற வகையில் ரிப்பன்கள் மாலைகளாக கூரைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன. எங்களுடைய இருக்கைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு உட்கார வைக்கப்பட்டோம். உள்ளே ஐயாயிரத்திற்கும் அதிகமாக மக்கள் குழுமியிருந்தனர்.
சிறிது நேரத்தில், ஈரானைச் சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேர் எங்களுக்கு அருகே வந்து அமர்ந்தனர். ஸ்சுட்ஜென் கூடாரத்தில் பீர் விநியோகம் அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. பெண் வெயிட்ரஸ் கைகளில் ஒரே சமயத்தில் பத்து பீர் மக்குகளை அநாயசமாக சுமந்து கொண்டு வந்து கஸ்டமர்களுக்கு பரிமாறினார்கள். 
ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பீர் மக்குகளில் பொன்னிற (Lowenbrau) "லோவன்பிரவ்' என்கின்ற உயர்தர பீரை கொண்டுவருவதைப் பார்த்த இளவட்டங்கள் "வாவ்!' என்று கத்தி அதைப்போலவே பத்து பீர் குவளைகளை சுமக்க முயன்று தோற்றனர். பீர் பாரல்கள் அடுக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்து பீரை சப்ளை செய்துகொண்டு இருந்தனர். அன்று நான் டென்டல் உடையில் இருந்தேன். "நான் பீரை மட்டுமல்ல; எந்த வகையான பானங்களையும் சாப்பிட மாட்டேன்'' என்றதும் அந்த பணிப்பெண் அதிர்ந்து போனாள். எங்களைச் சுற்றியிருந்த மக்கள், 5 லிட்டர் முதல் எட்டு லிட்டர் பீரை அநாயசமாக குடித்துக் கொண்டிருந்தனர்.
எனக்கு, எலுமிச்சை பழத் துண்டுகளும், ஐஸ்கட்டிகளும் மிதந்த கொக்கோ கோலாவை வழங்கினர். எனது கணவர் (Pretzel) "பிரட்ஜெல்' என்று அழைக்கப்படுகின்ற பிரேவியன் பிரட்டை வாங்கினார். அந்த பிரட்டுகளை அழகிய பெண்கள் விற்றுக் கொண்டிருந்தனர்.
ஸ்சுட்ஜென் கூடாரத்திற்கே பெருமை சேர்க்கும் (Niederlamer) நிடெர்லாமர் இன்னிசைக் குழுவின் இசை குடிக்காமலேயே ஆடவைக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருந்தது.
வறுக்கப்பட்ட கோழி, வாத்து, மாட்டிறைச்சி, சுட்ட மீன்கள், வேகவைத்த கோஸ், உருளைக்கிழங்கு, சீஸ் என்று வரிசையாக ஆர்டருக்கு ஏற்ப பரிமாறப்படுகிறது.
பால் குடிக்கும் பன்றியை, மால்ட் பீர் சாஸில் வேகவைத்து, உருளைக்கிழங்கோடு பரிமாறுவது ஸ்சுட்ஜென் கூடாரத்தின் ஸ்பெஷாலிட்டியாக இருக்கிறது. (Hendl) ஹென்டில் என்ற வறுத்த கோழி மிகவும் சுவையாக இருந்தது.
பதினான்கு கூடாரங்களுக்கும் ஒரு விசிட் அடித்தோம், விதவிதமான அலங்காரங்கள், இசைகள், இளவட்டங்கள் போட்ட ஆட்டம், பாட்டம் அம்மம்மா உம்மணா மூஞ்சிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி குலுங்க வைக்கும். பொருட்காட்சிச்சாலை 115 விதமான விளையாட்டுகளுடன் களைகட்டி பெரியவர்களையும் குழந்தைகளாக்கி விடுகிறது. மிட்டாய்களை விற்கும் கடைகளில் பெவேரியன் கலாச்சாரத்தின் சின்னமாக விற்கப்பட்ட இருதய வடிவிலான ஜின்ஜர் பிரட் பிஸ்கெட்டில், "ஐ லவ் அக்டோபர் பெஃஸ்ட்' என்று எழுதி வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டேன்.
(தொடரும்)

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

ஆலப்புழாவின் படகுத் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

 

 
sk13

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 25

ஆலப்புழாவின் படகுத் திருவிழா "கடவுளின் சொந்த ஊர்' என்று போற்றப்படுகின்ற கேரள மாநிலத்தின் ஓர் அங்கமாக ஆலப்புழா திகழ்கின்றது. இது ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலின் ஓரத்தில் உள்ளது. ஏரிகள், உப்பங்கழிகள், ஆறுகள் இந்த ஊரின் உள்ளே குடிகொண்டு இதற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
"பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும்' என்பார்கள், ஆனால் இந்த பாம்பைப் பார்க்க ஆர்வத்தோடு மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் மாதம், இரண்டாவது சனிக்கிழமை ஆலப்புழா அருகில், "புன்னை மடா' ஏரியில் நடக்கும் "வெள்ளம் களி' படகு போட்டிக்குத்தான் மக்கள் வெள்ளம் முட்டி மோதி வருகிறது. அதைக் கண்டும் களிக்கிறது.

இதற்கும் பாம்புக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது. தண்ணீரில் நின்று பதினைந்து அடிகள் உயர்ந்து, நூறு அடிக்கு மேல் நீளம் கொண்டு, மொத்தம் நூறு ஆட்கள் துடுப்பு போட்டு ஓட்ட, கம்பீரமாகத் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு வேகமாகச் செல்லும் (Chundan Vallam) சந்தன் என்று அழைக்கப்படும் படகுகள். இந்த படகுப்போட்டியில் பங்கு பெறுகின்றன.
பளபளப்பான பாலீஷ் செய்யப்பட்ட மரத்தினாலும், பித்தளை தகடுகளாலும் அழகுற செய்யப்பட்ட இந்தப் படகின் ஒரு மூலை படம் எடுத்து ஆடும் பாம்பின் தலையை ஒத்து இருப்பதால் இதற்கு "பாம்பு படகு" என்ற காரணப் பெயர் கிடைத்திருக்கிறது.

1952-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆலப்புழாவிற்கு வருகை தந்திருக்கிறார். அப்பொழுது அவரைப் பாம்பு படகில் அழைத்து வந்திருக்கிறார்கள். அவரைச் சுற்றி சூழ்ந்து வந்த பாம்பு படகுகளின் வேகம், கம்பீரம், ரிதம் அதன் அழகிய தோற்றம் நேருவை மிகவும் கவர்ந்திருக்கிறது. படகுப்போட்டி நடத்துவதற்கான வித்து அவர் நெஞ்சில் விதைக்கப்பட்டது.

1952-இல் "வெள்ளம் களி' படகுப் போட்டியை நடத்தியதுடன், ஒவ்வொரு வருடமும் அந்தப் போட்டி நடைபெறும் வகையில் "நேரு சுழல் கோப்பையை' அறிமுகப்படுத்தினார்.

2012-ஆம் வருடம் நடைபெற்ற அறுபதாவது படகுப்போட்டியைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. படகுப்போட்டி நடக்கும் இடத்திற்கு இட்டுச் செல்லும் பாதைகளில் எல்லாம் வியாபாரிகள் கடை விரித்திருந்தார்கள். தொப்பிகள், ஊதுகுழல்கள், குளிர்பானங்கள், பாப்கார்ன், முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகள், நேந்திர பழத்தால் செய்யப்பட்ட பஜ்ஜிகள் என பலதரப்பட்ட பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை ஆகிக் கொண்டிருந்தன.

நீல நிறத்தில் பளபளத்த ஒரு ஊதுகுழலை நானும் வாங்கிக் கொண்டேன். நுழைவுச் சீட்டுகளைக் காட்டி நானும் என் கணவரும் எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்து கொண்டோம். உள்நாட்டிலிருந்தும், பல வெளிநாடுகளிலிருந்தும் உல்லாசப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இதைத் தவிர பக்கத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் முண்டியடித்து வந்தவண்ணமிருந்தனர்.

ஏரியின் தண்ணீரில், போட்டியில் பங்குபெறப் போகும் பலவகையான படகுகளில், சந்தன் வல்லத்தைத் தவிர, ஓடி வல்லம், சுருளான் வல்லம், வைப்பு வல்லம், வடக நாட்டு வல்லம், கோசு (Kochu) வல்லம் என்று பலவிதமான தோற்றங்களைக் கொண்ட படகுகள் அணிவகுத்து போட்டியை ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து வரிசை கட்டி நின்றன.

சந்தன் வல்லம் என்கின்ற பாம்பு படகுகள் வரிசையாக வந்தபொழுது மக்கள் பெருங்குரல் கொடுத்து ஆரவாரித்தனர். பெண்கள் மட்டுமே ஓட்டி வந்த படகுகள் வந்தபோது மீண்டும் எழுந்த ஆரவாரம் காதுகளைப் பிளந்தது.

மதியம் மூன்று மணிக்கு (அப்போதைய) மக்களவைத் தலைவர் மீராகுமார் படகுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். வண்ண பலூன்கள் நீலம், சிகப்பு, வெள்ளை, பச்சை என்று வானில் பறக்க விடப்பட்டது. முதலமைச்சர் உம்மன் சாண்டி, நேருவின் சிலையை நிரந்தரமாக படகுப்போட்டி நடத்தப்படும் பெவிலியனில் இருக்கும்படி திறந்து வைத்தார்.

பலவிதமான படகுகளின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் பதினாறு சந்தன் வல்லம் படகுகள், நான்கு என்று வரிசைகட்டி வந்தபொழுது எழுந்த கைதட்டல்கள் விண்ணைப் பிளந்தது.

கடைசியாக நான்கு பாம்பு படகுகள் முதல், இரண்டாவது, மூன்றாவது இடத்திற்காக வேகம் கூட்டி வந்தபொழுது, ஊதுகுழல்களின் பூம், பூம் ஒலி தாளங்களின் ஓசை "வா, வா முந்தி வா" என்று கூடியிருக்கும் மக்கள் இடும் ஆரவாரம், நூறு ஆட்கள் தாளம் தவறாமல் துடுப்புகளை வலிக்கும்பொழுது தண்ணீரில் ஏற்படுத்தும் சத்தம், அந்தப் படகுகளின் நடுவில் அமர்ந்திருக்கும் பாடகர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள், சலங்கைகளைக் கட்டிய உலக்கைகளைப் பிடித்தபடி நிற்கும் மனிதர்கள் அவைகளைப் பாடலின் தாளத்திற்கு ஏற்பட தட்டி தொம், தொம் என்று எழுப்பிய இனிமையான ஒலி, கேரளத்து படகு ஓட்டுனர் பாடும் நாட்டுப்புற பாடல்களைக் கைகளைத் தட்டிப் பாடும் மக்களின் குரல்கள், உச்ச ஸ்தானத்தில் அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் வர்ணனையாளர்கள் என்று இத்தனை ஓசைகளையும் ஒருசேரக் கேட்டு மலைத்துப் போனேன்.

இந்த படகுப்போட்டிகளை மிக அருகில் சென்று பார்ப்பதற்கு வாடகைக்கு படகு வீடுகள் கிடைக்கின்றன. ஒரே சீராக நூறு படகோட்டிகள் துடுப்புகளை வலித்துச் செல்வதும், தண்ணீரை கிழித்துக் கொண்டு சந்தன் படகுகள் செல்லும் அழகையும், மக்களின் குதூகலத்தையும், கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தையும் பார்த்து மகிழ்ந்து நாமும் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற, செல்ல வேண்டும் ஆலப்புழா திருவிழாவுக்கு!
(தொடரும்)

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 26: லூர்த் மாதாவுக்கு ஒரு திருவிழா! 

 

 
sk5

உலக மக்களின் பாவங்களைத் தன் மீது ஏந்தி, சிலுவையில் அறையப்பட்டு இன்னுயிரை நீத்து, பிறகு தேவ மகன் இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த இனிய நாளை ஈஸ்டர் தினமாக மக்கள் கொண்டாடி முடித்திருந்த தருணம் நாங்கள் பிரான்ஸ் சென்ற நேரம்!
இந்தப் புனிதரைக் கருவில் சுமந்த கன்னி மேரிக்கு உலகெங்கும் தேவாலயங்கள் கட்டப்பட்டிருந்தாலும், பிரான்ஸில், லூர்ட்ஸ் (கர்ன்ழ்க்ங்ள்) என்ற இடத்தில் ஒரு குகையை ஒட்டி எழுப்பப்பட்டிருக்கும் தேவாலயத்தை ஆறு மில்லியன் மக்கள் வருடம்தோறும் வந்து பார்த்து வழிபடுகிறார்கள். அப்படி அங்கே என்ன 
இருக்கிறது?
பிரான்ஸின் தெற்குப் பகுதியில் வானத்தையும், பூமியையும் இணைக்கும் பாலம் போல விஸ்வரூபம் எடுத்து ஓங்கி அணிவகுத்து நிற்கும் பைரணிஸ் (டஹ்ழ்ங்ய்ங்ங்ள்) மலைத்தொடர் பகுதியின் காலடியில் அமர்ந்திருப்பதுபோல் அமைந்துள்ள சிறிய நகரம் இந்த லூர்ட்ஸ். இது பிரான்ஸின் தலைநகரமான பாரீஸில் இருந்து 497 மைல்கள் தொலைவில் உள்ளது.
நானும் என் கணவரும் எங்கள் மகனோடு தனியாக ஐரோப்பிய நாடுகளை வலம் வந்துகொண்டிருந்த நேரம் அது. பிரான்ஸ் நாட்டின் பல புகழ்மிக்க இடங்களைப் பார்த்து முடித்த உடன், லூர்ட்ஸூக்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்கு பின்னணியில், என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது.
செலேஷியன் என்று அழைக்கப்பட்ட கத்தோலிக்க குருமார்களில் சிலர் என் கணவருடைய நண்பர்களாக இருந்தனர். முதலில் சிகிச்சைக்காக வந்தவர்கள் பிறகு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வந்துவிட்டனர். அவர்களில் லையனல் என்ற குரு எனக்கு இயேசுவைக் குறித்த பல நிகழ்வுகளைக் கூறுவது வழக்கம்.
ஒருநாள் அவரைச் சந்தித்தபொழுது, பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள லூர்ட்ஸ் நகரத்தைப் பற்றியும், அங்கே ஒரு குகையில் பெர்னாடெட் என்கின்ற ஆடுகளை மேய்க்கும் சிறுமிக்கு, புனிதமேரி பதினெட்டு முறை காட்சி அளித்ததைப் பற்றியும் கூறினார். ""பல கத்தோலிக்க தேவாலயங்களின் வெளி நுழைவு வாயிலின் ஓரத்தில் மலையில் இருக்கும் குகையில் புனிதமேரி கைகளைக் கூப்பிய வண்ணம் காட்சி தருவதும் சற்று கீழே ஒரு பெண் மண்டியிட்ட நிலையில் அன்னையை நோக்கி வணங்கியபடி இருப்பதையும் பார்த்திருப்போம். அவை லூர்த்தில் நடந்தேறிய புனித நிகழ்வை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
மேலும் தொடர்ந்தார், ""அழும் குழந்தை ஆறுதல் தேடி அன்னையின் மடியில் அடைக்கலம் புகுவதுபோல, பலவிதமான வியாதிகளால் அல்லல்படுவோரும், விதியின் கோரப்பிடியில் சிக்கி மனம் நொந்தவர்களும் லூர்த்துக்கு சென்று தேவ மங்கை மேரியை தரிசித்து மன ஆறுதல் அடைகிறார்கள். கன்னி மேரி எழுந்தருளியிருக்கும் குகையின்கீழ் வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும் சுனைத் தண்ணீரில் குளித்து எண்ணற்றவர்கள் வியாதிகளில் இருந்து குணம் அடைந்து வருகிறார்கள்'' என்றார்.
""ஃபாதர், நீங்கள் சொல்லும் நிகழ்ச்சிகள் என்னை பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்த் ஆலயத்திற்கு இப்பொழுதே சென்று பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. பெர்னாடெட்க்கு புனிதமேரி எப்படி காட்சி அளித்தாள் என்று சொல்லமுடியுமா?'' 
என்றேன்.
ஃபாதர் லையனல் மேலும் சொல்லத் தொடங்கினார்:
""கேவ் தி பா (எஹஸ்ங் க்ங் ல்ஹன்) என்னும் ஆறு, தான் செல்லும் வழியெங்கும் வளம் சேர்த்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் கரையில் 14 வயது நிரம்பிய ஒரு சிறுமி சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு இருக்கிறாள். பெர்னாடெட் என்று அழைக்கப்பட்ட அந்த சிறுமி லூர்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழை குடியானவனின் மகள். அன்றைய தினமான பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி தன் வாழ்க்கையில் ஒரு பேரதிசயம் நடக்கப்போகிறது, கால ஏடுகளில் அழியாத நிகழ்வாக அது பதியப்படப் போகிறது என்பதை அறியாதவளாக, பொறுக்கிய சுள்ளிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தாள் பெர்னாடெட்.
மெசாபியேல் (ஙஹள்ள்ஹக்ஷண்ங்ப்ப்ங்) என்று வழங்கப்பட்ட ஒரு குகையின் அருகில் வருகிறாள் அவள், என்ன அதிசயம் "கண்ணைப் பறிக்கும் ஒளிவெள்ளம் குகையில் இருந்து வெளிப்பட, அதனூடே வெள்ளை உடை அணிந்து, அதே நிறத்தில் முக்காடு இட்டு இடுப்பில் நீலம் பட்டையோடு, ஒவ்வொரு காலிலும் மஞ்சள் ரோஜா அலங்கரிக்க பேரழகு மிக்க ஒரு பெண் புன்னகைத்திருக்கிறாள். இப்படி ஒரு முறை அல்ல, பதினெட்டு முறை பெர்னாடெட்டுக்குக் காட்சி அளித்த அந்தப் பெண் தன்னை புனிதமேரியாக சிறுமியிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்"
பிப்ரவரி 1858 தொடங்கி ஜூலை வரை நீடித்த இந்த வெளிப்பாட்டில், கிராமத்துப் பாதிரியாரிடம் சென்று அந்த குகைக்கு அருகில் தனக்கு ஒரு தேவாலயத்தைக் கட்டித் தரச் சொல்லும்படி 
சிறுமியைப் பணிக்கிறாள் அன்னை மேரி.
பிறகு அன்னையின் ஆணைப்படி குகைக்கு வெகு அருகில் பெர்னாடெட் தரையைத் தோண்ட, அதில் இருந்து ஒரு ஊற்று பெருகி புனித நீராக வெளிப்பட்டது. அது அன்று முதல் இன்று வரை பலருடைய நோய்களைக் குணப்படுத்தி வருகிறது. அதற்கான ஆதாரங்
களும் பதிவில் உள்ளது.
இத்தகைய அதிசயங்கள் பெருகப் பெருக சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மக்கள் பெருங்கூட்டமாக வரத்தொடங்கினர். தற்போதைய கணக்கெடுப்பின்படி 111 உலக நாடுகளில் இருந்து மாதாவின் அருள் வேண்டி மக்கள் வருடம்தோறும் இந்தக் குகையைக் காண கூடுகிறார்கள்'' என்று ஃபாதர் லையனல் முடித்துக்கொள்ள அன்றே என் மனம் சூளுரைத்தது பிரான்ஸூக்கு சென்றால் லூர்த்துக்கு செல்வேன் என்று! சபதம் நிறைவேறியது, ஒரு பெரும் திருவிழாவைக் காணும் பாக்கியமும் கிட்டியது. 
தொடரும்...

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 27: புனிதமேரிக்கு எல்லா மொழிகளிலும் பிரார்த்தனை!

 

 
sk4

இன்று நீங்கள் துயருற்ற நிலையில் இருந்தால், புனித மேரியை நோக்கி கூப்பிடுங்கள். பிறகு இந்த எளிய பிரார்த்தனையை சொல்லுங்கள், "மேரியே, இயேசுவின் தாயாரே. தயவுசெய்து இப்பொழுது எனக்குத் தாயாராக இருங்கள்," இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த பிரார்த்தனை என்னை ஒருபொழுதும் தோல்வி அடையச் செய்ததில்லை.'
- மதர் தெரசா
இத்தகைய நம்பிக்கையை மனதில் இருத்திதான் நாள்தோறும் லூர்தில் இருக்கும் புனிதமேரியின் தேவாலயத்தில் லட்சக்கணக்கில் மனிதர்கள், ஜாதி, மதம், நிறம், நாடு, பணக்காரன், ஏழை போன்ற பாகுபாடுகளை ஒதுக்கி வைத்து வந்து கூடுகிறார்கள். இந்துவாகிய நாங்கள், பிரான்ஸில் வாழும் எங்கள் முகமதிய நண்பரோடு காரில் பாரீஸில் இருந்து பயணப்பட்டு லூர்த்துக்கு வந்து சேர்ந்தோம். இந்துவும், முகமதியரும் கைகோர்த்து வந்தது கிருத்துவ தேவாலயத்திற்கு. இங்கு அன்னையின் அருளைப் பெறவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.
என்னுடைய பேரதிர்ஷ்டம் அன்றைய தினம், (அள்ள்ன்ம்ல்ற்ண்ர்ய் ர்ச் ஙஹழ்ஹ்) அசம்ஷன் ஆஃப் மேரி என்று கத்தோலிக்க கிருத்தவர்கள் உலகெங்கிலும் கொண்டாடும் திருவிழா தினமாக அமைந்திருந்தது. இந்த நாளில் அங்கே இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செல்லவில்லை. எதேச்சையாக அமைந்தது.
புனிதமேரியின் அசம்ஷன் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறதுதானே!
தன்னுடைய அருமை மகன் இயேசு மறைவுக்குப்பின் பதினொரு ஆண்டுகள் இந்தப் பூவுலகில் வாழ்ந்த அன்னை மேரி, பிறகு இறந்திருக்கிறார். அவருடைய ஆன்மா, அதைச் சுமந்திருந்த உடலோடு சொர்க்கம் அடைந்ததாக கத்தோலிக்க கிருத்துவர்கள் நம்புகிறார்கள். அப்படி புனிதமேரி தன் உடலோடு சொர்க்கம் புகுந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியை "அசம்ஷன் ஆஃப் மேரி தினம்' என்று கொண்டாடுகிறார்கள்.
சாதாரணமாகவே சுற்றுலா பயணிகளால், லூர்த் பொங்கி வழியும், திருவிழா தினமாக ஆகிப்போனதால், நாங்கள் தங்க ஒரு ஹோட்டல் கூட கிடைக்கவில்லை. பெரும் முயற்சிக்கு பிறகு லூர்த் கிராமத்திலிருந்து 12 கி.மீ தள்ளியிருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கினோம்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்து, பிறகு புறப்பட்டு லூர்த் தேவாலயத்திற்கு இட்டுச் செல்லும் பாதைகளில் நடக்கத் தொடங்கினோம். வழியெங்கும் சாலையின் இருபுறங்களிலும் எண்ணற்ற கடைகள் ஒளிவெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கியிருந்தது. கடைகளில் ஆள் உயர புனிதமேரி மாதா சிலைகள் தொடங்கி, கட்டைவிரல் அளவு சிலைகளும் விற்பனைக்கு கடைவிரிக்கப்பட்டிருந்தது. பலவிதமான சைஸ்களில் வாட்டர் கேன்கள், குகையில் கைகளைக் கூப்பிய வண்ணம் புனிதமேரி நிற்பதுபோல பொறிக்கப்பட்ட படத்துடன் காட்சி அளித்தன. இதை மக்கள் வாங்கிச் செல்வதைப் பார்த்தவுடன், எங்களுடன் வந்த நண்பரிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார், ""புனிதமேரி காட்சி அளித்த குகையின் கீழே, பெர்னாடெட், புனித மேரியின் கட்டளைப்படி தோண்டிய இடத்திலிருந்து பொங்கிப் புறப்பட்டு இன்றுவரை வற்றாத ஊற்றாக வெளிவந்து எண்ணற்ற மக்களின் நோய்களைத் தீர்க்கும் புனித நீரை, இத்தகைய கேன்களில் மக்கள் பிடித்துக் கொண்டு செல்வார்கள்'' என்றார்.
"அட, கங்கை மற்றும் பல புனித நதிகளின் 
தண்ணீரை நாம் வீட்டிற்கு கொண்டு வந்து நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவதுபோல செய்கிறார்களே!' என்று வியந்தேன். நானும் இரண்டு அரை லிட்டர் கேன்களையும், சில மேரி மாதாவின் சிலைகளையும் வாங்கினேன். என்னுடைய கிருத்துவ நண்பர்களுக்காக ஜெபமாலைகளையும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன்.
மற்றொரு பொருள் என் கவனத்தை தன்பால் ஈர்த்தது. நம்ம ஊரில் கிடைக்கும் மெழுகுவர்த்திகளைப் போலத்தான் அவை இருந்தன. ஆனால் அவற்றின் தலைப்பகுதியில், திரி இருக்கும் இடத்திற்குச் சற்று இறக்கமாக, பேப்பரினால் ஆன, புனிதமேரியின் உருவங்கள் பொறிக்கப்பட்ட, மேல் பகுதியில் மெழுகுவர்த்தி எறிய ஏதுவான வகையில் ஓர் ஓட்டையுடன் கூடிய கூம்பு போன்ற மறைப்பு அலங்கரித்து இருந்தது.
இந்த மெழுகுவர்த்தியைக் கையில் ஏந்தி நடந்தால், காற்றினால் அதன் தீபம் அணைந்துவிடாதபடி வெகுநேர்த்தியாக அவை உருவாக்கப்பட்டிருந்தன. இதைத் தவிர ஆள் உயர மெழுகுவர்த்திகளையும் இரண்டு ஆட்களாக சுமந்து வந்துகொண்டிருந்தனர்.
லூர்த் மேரியின் தேவாலயத்தை அடைந்தோம். பெர்னாடெட் வர்ணணைக்கு ஒத்த முறையில் கால்களில் இரண்டு மஞ்சள் ரோஜா பூக்களுடன் புனிதமேரி காட்சி தந்தாள். இது வெளிப்புற மைதானத்தில் இருக்க, அந்த புனிதமேரிக்கு நேர் எதிரில் மூன்று அடுக்குகளாக, இரண்டு பக்கங்களில் மக்கள் ஏறிச் செல்லும் வகையில் தேவாலயம் எழுப்பப்பட்டிருந்தது. 
இதற்கு இடதுபுறத்தில் புனித மேரி காட்சி கொடுத்த மெசாபியேல் குகையில் அன்னை மேரியின் சிலை நிற்கிறது. அவள் முன்னே ஆளுயர மெழுகுவர்த்திகள் ஒளிவீசி நின்றன. அவளுடைய குகையின் கீழே புனித ஊற்று பொங்கிச் செல்கிறது. இது ஒரு வாரத்திற்கு 27,000 காலன் தண்ணீரை வெளிப்படுத்துகிறதாம். அந்தத் தண்ணீரை 17 குளியல் தொட்டிகளுக்கு அனுப்புகிறார்கள். நீண்ட வரிசையில் நின்று, ஆறு குளியல் தொட்டிகளில் ஆண்களும், மீதியில் பெண்களும் குளிக்கிறார்கள். அந்தப் புனித தண்ணீரை மற்றவர்கள் செய்வதுபோலவே, நானும் குழாய்களின் வழியாக வரும் நீரைக் கேன்களில் பிடித்துக் கொண்டேன். 
லட்சக்கணக்கில் மக்கள் கைகளில் முன்னே நான் சொன்ன மெழுகுவர்த்திகளை ஏந்தி தேவாலயத்தின் முன் பக்கத்தில் நடுநாயகமாக நிற்கும் புனித மேரி மாதாவின் சிலையைச் சுற்றி "ஏவ் மேரி' (அஸ்ங் ஙஹழ்ஹ்) என்று பாடி சுற்றிவர, அந்தக் கண்கொள்ளாக் காட்சி என்னுள் சிலிர்ப்பு அலைகளாக எழும்பியது. ஆயிரக்கணக்கான நோயாளிகள் வீல் சேர்களில் வந்து பிரார்த்தனையில் கலந்துகொள்கின்றனர். மக்களின் பிணிகள் தீர, சிறப்புப் பிரார்த்தனைகள் எல்லா மொழிகளிலும் செய்யப்பட்டன. தமிழ் மொழியில் பிரார்த்தனையைக் கேட்கும் பெரும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது.
உலகின் பல நிகழ்வுகளைப் பகுத்தறிவு என்று பூதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் பக்தி என்னும் அளவுகோல் கொண்டு கவனித்தால், அளவில்லாத பயனை அடையலாம்.
(தொடரும்...)

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சந்திரபாகா திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

 

 
sk14

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 28

நமது பாரதத் திருநாட்டின் பல மாநிலங்களுக்குச் சென்றிருந்தாலும், ராஜஸ்தானுக்கு போகவேண்டிய அவசியம் வந்தால் என் மனம் துள்ளிக் குதிக்கும். பலமுறை ராஜஸ்தானைச் சுற்றிப் பார்க்க, அங்கே நடந்தேறும் இருதய மாநாடுகளில் கலந்துகொள்ள என் கணவருடன் கிளம்பி சென்றிருக்கிறேன்.
ஜெய்ப்பூர், உதயப்பூர், பிகானிர், ஜோத்பூர், ஜெய்சல்மீர் என்று ராஜஸ்தானின் புகழ்பெற்ற, சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் வந்துபோகின்ற நகரங்களுக்கு விசிட் அடித்திருக்கிறேன். "வாவ்' என்று கூவ வைக்கும் அரண்மனைகள், கோட்டைகள், பாலைவனம், நெஞ்சில் நிறைந்து நினைத்தாலே வாயில் உமிழ்நீரைச் சுரக்க வைக்கும் பலவிதமான சுவையான ராஜஸ்தானிய உணவு வகைகள், வண்ண வண்ண உடைகள், விதவிதமான நடனங்கள், கம்பீரமான ஆண்கள், அழகான பெண்கள், அவர்களின் கலாச்சாரம், சரித்திரம் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ஒருமுறை ராஜஸ்தானின் பிரதான நகரமான ஜெய்ப்பூரில், காரில் சென்று கொண்டிருந்தேன். ஓட்டுநராகவும், கைடாகவும் இருந்த சந்தீப் சொன்னார்,
"மேடம் ராஜஸ்தானின் பிரதான நகரங்களை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள். சற்று உள்ளே பயணப்பட்டு, பூந்தி, கோட்டா, (Jalawar) ஜலாவர் போன்ற புராணங்களில் பேசப்பட்ட, சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்களையும் பார்க்கவேண்டும்'' என்றார்.
பூந்தி, கோட்டா போன்ற நகரங்களைப் பற்றி கேட்டுவிட்டு, "ஜலாவரில் என்ன இருக்கிறது?'' என்றேன்.
"ஜலாவரில் இருந்து 6 கி.மீ தொலைவில் (Jhalrapatan) ஜால்ரபட்டான் என்கின்ற மிக பழமையான நகரம் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த நகரம் பல கோயில்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. பூஜைகளின்பொழுது எழுப்பப்படும் ஆலய மணிகளின் ஓசை ஓயாமல் இந்த நகரத்தில் கேட்டுக் கொண்டிருந்ததால் (City of bells) "சிட்டி ஆஃப் பெல்ஸ்' என்ற காரணப் பெயரும் ஜால்ர பட்டானுக்கு உண்டு.
காலத்தின் கோரப்பிடிகளில் சிக்கி மனித உருவம் சின்னாபின்னமாவது போல இங்கே இருந்த பல கோயில்கள் அழிவைக் கண்டன. ஆனாலும் இன்னும் இங்கே நான்கு கோயில்கள் அழியாமல் இருக்கின்றன'' என்றார். 
"என்ன கோயில்கள் அவை?'' என்று ஆவலை அடக்கமுடியாமல் கேட்டேன்.
"சூரிய கோயில், சாந்திநாதா ஜெயின் கோயில் மற்றும் சீதலேஸ்வரா மகாதேவா கோயில். இது இன்னும் காலத்தால் அழிக்க முடியாத, அந்த கால (6th C) ஆறாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாக சிற்பக் கலையின் மகத்துவத்தை பறைசாற்றி நிற்கின்றன. (Fergusson) "ஃபெர்குசன்' என்கின்ற புகழ்மிக்க சரித்திர வல்லுநர், இந்த கோயிலை மிகவும் பழமையானது, மிக அழகானது, சிற்பக்கலையில் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதில் இந்தியாவில் முன்னணியில் நிற்கும் கோயில்களில் ஒன்று என்று அறுதியிட்டு கூறலாம்'' என்றார்.
"சீதலேஸ்வரா மகாதேவா என்பதில் இருந்து இது ஒரு புனித சிவன் கோயில் என்று தெரிகிறது. இதை இப்பொழுதே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை என்னுள் எழுப்புகிறதே!'' என்றேன்.
"மேடம், இந்த கோயிலின் கரையில் புனித சந்திரபாகா (Chandrabhaga) நதி ஓடுகிறது. ஜால்ரபட்டானிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் இந்த புனித நதி ஓடுவதால் அந்த இடத்திற்கு "சந்திரபாகா' என்று பெயர். இங்கே வருடம்தோறும் சந்திரபாகா திருவிழா கார்த்திக் பூர்ணிமா தினத்தன்று நடக்கிறது. ஆயிரக்கணக்கில் இங்கே மக்கள் கூடி மருத்துவ குணம் உடையதும், நோய்களைத் தீர்க்கும் வலிமை கொண்டதுமான இந்த புனித நதியான சந்திபாகாவில் குளிப்பார்கள். அந்த சமயத்தில் வந்தால் நதியிலும் குளிக்கலாம், கோயில்களை வலம் வரலாம், அப்பொழுது நடக்கும் சந்தையையும் கண்டு களிக்கலாம்'' என்றார் சந்தீப்.
"சந்திரபாகா நதிக்கு மருத்துவ குணம் உண்டு என்கிறீர்களே?'' என்று நான் முடிக்கும் முன் சந்தீப் தொடர்ந்தார்:
"ஒரு முனிவரின், மகளின் பேரழகில் மயங்கிய சூரியன் அவளிடம் தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினான். அவளுக்கு அதில் உடன்பாடு இல்லை என்று தெரிந்தும் சூரியன் இடைவிடாமல் அவளை வற்புறுத்த மனம் நொந்த அந்த மங்கை தன்னுடைய கற்பை காப்பாற்றிக்கொள்ள நதியில் மூழ்கி இறந்துபோனாள். சூரியன் மனம் கலங்கித் தான் செய்த செயலுக்கு வருந்தி தன் காதலி மூழ்கி இறந்த நதிக்கு, நோய்களை குணப்படுத்தும் மருத்துவத் தன்மையைத் தந்து, அந்த நதிக்கு "சந்திரபாகா' என்ற பெயரையும் சூட்டினான். 
"அட, நிஜத்திலே இந்த நதிக்கு அந்த சக்தி இருக்கிறதா?'' என்றார் என் கணவர்.
"சார், இதற்கும் ஒரு புராணக் கதை இருக்கிறது'' என்றார் சந்தீப்.
"சொல்லுங்கள், கேட்க ஆவலாக இருக்கிறோம்'' என்றோம் நானும் என் கணவரும். 
"சார், இந்த கடையிலே மிக சுவையான, சமூசாவும், மசாலா டீயும் கிடைக்கும், வாங்க சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்''.
இப்படி ஒரு மசாலா டீயை, நான் என் வாழ்நாளிலேயே குடித்தது இல்லை. இஞ்சியின் சுவை சற்று கூடுதலாக தொண்டையில் இதமாக இறங்கி நெஞ்சில் நிறைந்தது அந்த டீ. சமூசாவும் நான் மட்டும் இளைத்தவனா என்று போட்டி போட்டது.
சந்தீப் அந்த புராணக் கதையை சொன்னாரா! சந்திரபாகா திருவிழாவுக்கு சென்றேனா, வாழ்க்கையில் எண்ணி, எண்ணி மகிழும் அனுபவங்களைப் பெற்றேனா என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்!
தொடரும்...

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

மருத்துவக் குணத்துடன் ஓடும் நதி! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

 

 
sk6

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 29

"நீங்கள் குளிர்ச்சியாக இருக்கிறீர்களா, டீ உங்களை உஷ்ணப்படுத்தும், நீங்கள் சூடாக இருந்தால் அது உங்களை குளிர்ச்சி அடையச் செய்யும், நீங்கள் மனச்சோர்வோடு இருந்தால் அது உங்களை உற்சாகப்படுத்தும், நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தால் டீ உங்களை சாந்தப்படுத்தும்"
- வில்லியம் வார்ட் கிளாட்ஸ்டோன் (William Ewart Gladstone)
ஒரு டீ பிரியரின் வாக்குமூலம் எவ்வளவு உண்மையானது என்பதை நாங்கள் குடித்த மசாலா டீ உணர்த்தியது.
சந்தீப் தொண்டையைச் செருமிக்கொண்டு உற்சாகமாக கதையைச் சொல்ல ஆரம்பித்தார்:
"பரமாத்மா கிருஷ்ணனுக்கு சம்பா என்று ஒரு மகன் இருந்தான். பல தகாத செயல்களைச் செய்து வந்தான். கிருஷ்ணன் எவ்வளவு அறிவுரை கூறியும் அவன் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் பெருங்கோபம் உற்ற கிருஷ்ணன் "நீ ஒரு தொழுநோயாளியாகக் கடவது' என்று சபித்துவிட, அவனும் அப்படியே ஆகிப்போனான்''.
"அச்சச்சோ'' என்றேன், ஆவலை அடக்க முடியாமல். "பிறகு என்ன நடந்தது?'' என்றார் என் கணவர்.
"சம்பாவின் அம்மா ஜாம்பவதிக்கு தன் மகனை தொழுநோயாளியாகப் பார்க்க முடியவில்லை. அவன் படும் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் தன் கணவரான கிருஷ்ணரிடம் தன் மகனை குணப்படுத்தும்படி வேண்டினாள்.
முதலில் மறுத்த கிருஷ்ணன் பிறகு மனமிரங்கி, சொன்னார்.
"என் சாபம் தீரவேண்டும் என்றால் சம்பா சூரிய பகவானை வணங்கி, பிறகு சந்திரபாகா நதியில் மூழ்கி எழவேண்டும். அப்படிச் செய்தால், அவன் தொழுநோய் நீங்கி குணம் அடைவான்' என்றார்.
"நீங்கள் இங்கேயே அவனைக் குணப்படுத்துங்கள். இல்லை, அவனை தூக்கிக் கொண்டு சென்று சந்திரபாகா நதியில் குளிக்க வையுங்கள். ஏனெனில் அவனால் நடக்கக்கூட முடியவில்லை' என்று ஜாம்பவதி அழுதாள்.
அவளின் வேண்டுகோளுக்கு இரங்கி, கிருஷ்ண பகவான் தன் மகனைச் சுமந்து சென்று நதியில் குளிக்கச் சொன்னார்.
சூரிய கடவுளை வேண்டி, வணங்கி சந்திரபாகா நதியில் குளித்த சம்பா, தொழுநோயிலிருந்து பூரண குணம் அடைந்தான்.
இப்பொழுது புரிகிறதா, ஏன் சந்திரபாகா நதிக்கு மருத்துவ குணம் இருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள் என்று?'' என்றார் சந்தீப். ""தன்னைக் குணப்படுத்திய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சம்பா, கோனார்க்கில் அவருக்கு சூரிய கோயிலைக் கட்டுவித்தான்'' என்று முடித்துக் கொண்டார்.
என் மனதில் சந்திரபாகா திருவிழாவையும், அங்கே ஓடுகின்ற புனித நதியான சந்திரபாகாவையும், அதன் கரையில் அமர்ந்திருக்கும் கோயில்களைக் காணவேண்டும் என்ற எண்ணம் கடல் அலைகள் என எழுந்தது.
சரியாக மூன்று வருடங்களுக்குப் பிறகு, கார்த்திக் பூர்ணிமா தினத்தன்று, அதே கார் ஓட்டுநர் சந்திப்புடன் சந்திரபாகாவை நோக்கிப் பயணப்பட்டோம்.
ஜலாவரில் பல புகழ்பெற்ற கோயில்களை ஒரு விசிட் அடித்தோம். சந்திரபாகா என்கின்ற சிறிய கிராமத்தில் எங்கள் கார் நுழைந்ததுமே என் உள்ளம் பலவிதமான எதிர்பார்ப்புகளால் நிறைந்திருந்தது.
"மேடம், சில வருடங்களுக்கு முன் நான் சொன்னவற்றை நினைவில் வைத்து இங்கே இந்தப் புனிதநாளில் நீங்களும் வந்து எனக்கும் இங்கே வர ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி'' என்றார் சந்தீப்.
காரை, பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினோம். ஒரு திருவிழாவின் கோலாகலங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி நின்றது சந்திரபாகா! பலவிதமான ராஜஸ்தானிய உணவு வகைகளை விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள், வளையல் கடைகள், துணிக்கடைகள் என்று சாலை ஓரங்களை ஆக்கிரமித்திருந்தன.
"மேடம் இங்கே பாருங்கள், கால்நடைகளை விற்பனை செய்யும் சந்தை. இதை இந்த சந்திரபாகா திருவிழாவிற்காகவே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இங்கே ராஜஸ்தானின் பல நகரங்களில் இருந்து மக்கள் வருவதால் இந்த ஏற்பாடு. இதைத் தவிர பக்கத்து கிராமங்களில் இருந்து வருகின்ற கிராமத்து மக்கள், தங்களின் வயல்களில் உழுவதற்குத் தேவையான எருதுகள், பால் வியாபாரத்திற்கான பசுமாடுகள், ஆடுகள், பார வண்டிகளை இழுக்கும் ஒட்டகங்களை இங்கேதான் வாங்கிச் செல்வார்கள்'' என்றார் சந்தீப்.
வரிசை கட்டி நின்ற கால்நடைகள் என் கண்களுக்கு விருந்தாகின. மேலும் சிறிது தூரம் நடந்தோம். ராஜஸ்தானின் கிராமிய கலைகளுள் ஒன்றான (Kathputli) "கத்புட்லி' என்கின்ற பொம்மலாட்டம் நடந்து கொண்டிருந்தது. கணவன் திரைக்குப் பின்னால் செயல்பட, மனைவி டோலாக்கைத் தட்டி பாடிக்கொண்டிருந்தாள். நாட்டுப்புற நடனங்களும் நடந்து கொண்டிருந்தன. புஷ்கர் திருவிழாவைப் போலவே இங்கும் பல விளையாட்டுகள் அரங்கேறுகின்றன. சந்திரபாகா நதியை நெருங்க, நெருங்க பலவிதமான பூஜைப் பொருட்களை விற்கும் கடைகள் தென்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள், இதில் பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடக்கம், சந்திரபாகா நதியில் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு கூடை நிறைய உதிரி மலர்களை நானும் என் கணவரும் வாங்கினோம். சந்திரபாகா நதியில் முழங்கால்கள் நனையும்வரை இறங்கினோம். எதிரே சூரிய பகவான் உச்சியில் நிலை கொண்டிருக்க, அவரை வணங்கி பாதி மலர்களை நதியில் தூவி, சிறிது தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டோம். மீதி மலர்களை எடுத்துக்கொண்டு, சிவன் குடிகொண்டிருக்கும் கோயிலை நோக்கி சென்றோம். 
ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கோயிலின் தூண்களும் அவை தாங்கி நின்ற சிற்பங்களும் பிரமிப்பை ஏற்படுத்தின. கோயிலிலும் நூற்றுக்கணக்கில் மக்கள் குழுமியிருந்தனர். கோயிலின் மண்டபத்திற்கு வெளியே எட்டு சிவலிங்கங்கள் அணிவகுத்து நின்றன. ஒன்பதாவது கர்ப்பக்கிரகத்திற்குள் இருந்தது. மலர்தூவி வெளியே இருந்த லிங்கங்களை வணங்கினோம். உள்ளே சென்று மூலவரையும் கும்பிட்டோம். "இந்த ஒன்பது லிங்கங்களும் ஒன்பது கிரகங்களால் ஏற்படும் தீமைகளை விலக்கி, நன்மை பயக்கும்'' என்று சந்தீப் கூறினார். பல மாநிலத்தவரை ஒன்று சேர்க்கும் அந்த சந்திரபாகா திருவிழா, இந்த ஒன்பது லிங்கங்களை மக்கள் வழிபாடு செய்வதின் மூலம், அன்பே சிவம் என்பதை வலியுறுத்துகின்றது.
(தொடரும்...)

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 30: மஸ்கட் திருவிழா!

 

 
sk4

"இந்த நாட்டில் எல்லோரும் சமமானவர்கள். இங்கே பெரியவன், சிறியவன், பணக்காரன், ஏழை என்கின்ற பாகுபாடுகள் இல்லை. எல்லோரும் சமம் என்பது, அவர்களை உடன்பிறப்புகளாக்கி, சமூகநீதி என்கின்ற குடையின் கீழ் கொண்டு வரும்'
- Qaboos bin said al said கபோஸ் பின் செய்த் அல் செய்த்

யார் இந்த கபோஸ் என்று புருவங்களை உயர்த்தாதீர்கள். ஓமன் நாட்டின் சுல்தான்தான் இந்த கபோஸ். ஜூலை 23, 1970-இல் தன் தந்தையின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அரியணையைக் கைப்பற்றி, சுல்தானாக ஆனவர். ஓமன் நாட்டை பழமையிலிருந்து விடுவித்து பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.
கபோஸ், 47 வருடங்களுக்கு மேலாக நல் ஆட்சியை நல்கி, ஓமன் மக்களுடைய மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார். மத ஒருங்கிணைப்பை செயல்படுத்தி வருபவர். நான்கு கத்தோலிய மற்றும் புராடெஸ்டாண்ட் தேவாலயங்களையும், இந்து கோயில்களை கட்டிடவும் பணஉதவி செய்தவர். கலை மற்றும் கைவினைப் பொருட்கள் மேன்மை அடைய வழிவகுத்தவர். இவருடைய அனுமதியோடு, மஸ்கட்டின் நகராட்சியின் அதிகாரிகளும், ஊழியர்களும் வருடம்தோறும் மஸ்கட்டில், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில், முப்பது நாட்களுக்கு தொடரும் மஸ்கட் திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.
இத்தகைய திருவிழாவைப் பற்றிய தகவல்களை, ஓமானின் தலைநகரமான மஸ்கட்டில் வாழும் எங்களது நண்பர்கள் சொல்லி, அந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள பலமுறை எங்களை அழைத்திருந்தனர்.
ஓமானிய மக்களின் கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, சரித்திர வரலாறு, கேளிக்கைகள், பாரம்பரிய உணவு வகைகள், நாட்டுப்புறப் பாடல்கள், நடனங்கள், வாழ்க்கைமுறை, கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் முறை போன்ற பலவகையான செய்திகளை அறியவும், நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவும் மஸ்கட் திருவிழா பாலமாக அமையும் என்றனர்.
2016-ஆம் ஆண்டு ரஷியாவுக்கு இருதய மாநாடு ஒன்றுக்காக பயணப்பட்டோம். திரும்பி வரும்பொழுது மஸ்கட்டில் இறங்கினோம். நாங்கள் சென்ற சமயம் அங்கே மஸ்கட் திருவிழா நடந்து கொண்டிருந்ததால், அதைப் பார்த்து மகிழ பேராவல் கொண்டு அங்கே சென்றிருந்தோம்.
விமான நிலையத்தை விட்டு எங்களைச் சுமந்து சென்று கொண்டிருந்த கார் வெளிவந்து, தார் சாலையில் வழுக்கியபடி ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிச் சுழன்ற என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தது. சாலைகளின் இருபக்கங்களிலும், பசும் புல் பாய்விரித்திருந்தது. சீராக வெட்டப்பட்ட செடிகளில் பலவிதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. மஸ்கட்டிலிருந்து 2 மணி நேரம் பயணம் செய்தால் (ரஹட்ண்க்ஷஹ நஹய்க்ள்) "வகிபா சாண்ட்' என்று அழைக்கப்படுகின்ற பாலைவனம் வந்துவிடுகிறது. இப்படி சூரிய வெப்பமும், பாலைவனமும், தண்ணீர் பற்றாக்குறையும் உள்ள இடத்தில் எப்படி இப்படிப்பட்ட அழகிய பூங்காக்களை உருவாக்குகிறார்கள் என்று அசந்துபோனோம். இதைத் தவிர, நான்கு சாலைகள் கூடும் இடங்களில் (round abouts) அழகிய அற்புதமான கற்பனா சக்தியுடன் உருவாக்கப்பட்ட  அலங்கரித்தன.
ஒரு இடத்தில் மீன்கள் இணைந்து நிற்பதுபோல், கூஜாக்களில் இருந்து தண்ணீர் வழிந்து கிண்ணங்களில் நிரம்புவதுபோல என்று அசத்தின.
கண்களுக்கு விருந்தளித்த காட்சிகளை ரசித்துக் கொண்டே எங்களுக்கு என்று பதிவு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். என் கணவரின் பெரியப்பா மகன் குமார் மஸ்கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் தன் மனைவி ரேவதியுடன் எங்களைப் பார்க்க ஹோட்டலுக்கு வந்திருந்தார். அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மஸ்கட்டில் வசித்து வருகிறார்கள். ஆகையினால் அந்த நகரத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தனர்.
குமார் சொன்னார்: ""இந்த வருட மஸ்கட் திருவிழா அமரட் பூங்காவில் (அம்ங்ழ்ஹற்) நடைபெறுகிறது. இதற்காகவே ஓமானிய பாரம்பரிய கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதைத்தவிர குழந்தைகளுக்காக டைனாசரஸ் பூங்காவும் திறந்திருக்கிறார்கள்'' என்றதும், நான் ""வாவ்!'' என்றேன்.
""இதோ, உன் அண்ணியே ஒரு குழந்தையாகி விட்டாள் பார்'' என்றார் என் கணவர்.
""அண்ணி இன்னொரு விஷயமும் உங்களைக் கவரப்போகிறது.''
""அது என்ன தம்பி''
""குடும்ப கிராமமும் உருவாக்கி, அதில் குடும்ப உறுப்பினர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அப்படியே தத்ரூபமாகக் காட்ட ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.''
""இது எல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?'' 
என்றேன்.
""எல்லாம் செய்தித்தாள்களில் படித்ததுதான்.''
""சரி அண்ணா, மஸ்கட் திருவிழாவுக்கு நாளை சாயங்காலம் உங்கள் இருவரையும் அழைத்துப் போகிறேன். இன்று நீங்கள் அவசியம் காண வேண்டியது, கபோஸ் கிராண்ட் மசூதியை!'' என்றார் குமார்.
""என்னது மசூதிக்கு போகணுமா. நாம் இந்துவாயிற்றே, நம்மை உள்ளே விடுவார்களா!''
""ஓமனிலே, இந்துக்களை மட்டும் அல்ல முகமதியர் அல்லாத எல்லா மதத்தினரையும் அங்கே அனுமதிப்பார்கள்'' என்றார்.
சரி என்று சிறிது ஓய்வுக்குப் பின்னர், கபோஸ் கிராண்ட் மசூதியை காணச் சென்றோம்.
கபோஸ் மசூதியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடுகின்றேன். தலையை முக்காடு இட்டு மறைத்து, மணிக்கட்டுவரை மூடும் ஜாக்கெட் அணிந்து, பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் கபோஸ் மசூதியின் உள்ளே நுழைந்தேன். மலைத்து நின்றேன். என்னை மறந்தேன். மசூதியின் 
அழகில் கரைந்தேன்.
தொடரும்...

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/jul/22/சிந்தை-கவர்ந்த-திருவிழாக்கள்---30-மஸ்கட்-திருவிழா-2964852.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.