Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலா திரை விமர்சனம்

Featured Replies

காலா திரை விமர்சனம்

 

காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அந்த வகையில் கபாலியில் ஒரு இயக்குனராக ரஞ்சித் ரஜினி என்ற யானைக்கு சாப்பாடு வைத்து திருப்திப்படுத்தினாலும், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை காலாவில் போக்கினாரா? பார்ப்போம்.

கதைக்களம்

நெல்லையில் இருந்து மும்பை தாராவி சென்று அங்கு தன் கண்ட் ரோலில் தாராவியை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகின்றார் காலா சேட்டு.

அப்படியிருக்க தாராவியையே சுத்தமாக்குகிறேன் என்று நானே பட்னேக்கர் உள்ளே வந்து தாராவி மக்களை விரட்டியடிக்க பார்க்கின்றார்.

அதற்காக ரஜினிக்கு எதிராகவும் அவரை நம்பியிருக்கும் மக்களுக்கு எதிராகவும் பல சதி திட்டங்களை நானா பட்னேக்கர் தீட்ட அதை காலா எப்படி முறியடிக்கின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சூப்பர்ஸ்டார் இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும், 67 வயதிலும் அப்படி ஒரு சுறுசுறுப்பு. மனைவியிடம் குறும்பு, ரொமான்ஸ், முன்னாள் காதலியிடம் ஏக்கம், கியாரே செட்டிங்கா என்று அதிர விட்டு மழையில் அடுத்த காட்சியில் இறங்கி அடிப்பது என என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் என நிரூபித்துவிட்டார்.

ரஜினி படம் என்றால் அவரை சுற்றி மட்டும் கதை இல்லாமல் தாராவி அதை சுற்றி இருக்கும் மக்கள், காலாவின் குடும்பம் என அனைவருக்குமே படத்தில்.முக்கிய பங்கு உள்ளது.

படத்தின் அடிப்படையே நிலம் தான், அதை சுற்றி கதை நகர்கின்றது. அந்த விதத்தில் ரஞ்சித் நிலத்தின் முக்கியதுவத்தை வசனங்கள் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்.

ஒரு சிறு குழந்தை காலில் விழ வர, யார் காலிலும் விழக்கூடாது என ரஜினி அட்வைஸ் சொல்வது. காலில் விழுவது சமத்துவம் இல்லை, கைக்கொடுத்து வரவேற்க வேண்டும், அதுதான் ஈகுவாலிட்டி என பாடமே எடுத்துள்ளார்.

அதிலும் முதன் முறையாக இராவணன் ஜெயிக்கிறான், அதை கதை சொல்லி கிளைமேக்ஸாக கொண்டு போன விதம் சூப்பர்.

அதேநேரத்தில் காலா தாராவியையே ஆள்கின்றார் என்பது கார்ட்டூனாக கதை சொல்கின்றனர், அதில் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். மேலும் ஆளும் கட்சியை ரஜினியை வைத்தே ரஞ்சித் ஆட்டிவைத்தது சாமர்த்தியம் என்றாலும், ரஜினி போராடுவோம் என்று சொல்லும் போது கொஞ்சம் சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை.

ரஜினி சொன்னது போல் ரகுவரனுக்கு பிறகு சரியான வில்லனாக டப் கொடுத்துள்ளார் நானா பட்னேக்கர்.

படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு, இசை தான். அதிலும் பின்னணியில் கபாலியில் விட்டதை சந்தோஷ் பிடித்துவிட்டார்.

க்ளாப்ஸ்

ரஞ்சித்தின் திரைக்கதை

படத்தின் வசனம் மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள்.

அதிலும் சவுண்ட் இன்ஜினியரிங் அத்தனை யதார்த்தம்.

இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ்.

நானா பட்னேக்கர்-ரஜினி காட்சி

பல்ப்ஸ்

காலா ஹுமா குரேஷி காதல் கொஞ்சம் கபாலியை நியாபக்கப்படுத்துகின்றது.

இரண்டாம் பாதி முழுவதுமே வன்முறை தான் எங்கும் எதிலும், ஆனால் கதைக்கு தேவையே.

மொத்தத்தில் கபாலியில் விட்டதை ரஞ்சித் காலாவில் பிடித்து சூப்பர் ஸ்டாரை கால் மேல் கால் போட வைக்கின்றார் ஸ்டைலாக கெத்தாக.

http://www.cineulagam.com/films/05/100940?ref=reviews-feed

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: 'காலா'

 
'காலா'
   
நடிகர்கள் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அஞ்சலி பாடீல், சாயாஜி ஷிண்டே, சம்பத் ராஜ்
   
இசை சந்தோஷ் நாராயணன்
   
ஒளிப்பதிவு முரளி. ஜி
   
இயக்கம் பா. ரஞ்சித்

கபாலி படத்திற்குப் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக நடித்திருக்கும் இரண்டாவது படம்.

மும்பையின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியின் தாதா, கரிகாலன் என்ற காலா (ரஜினிகாந்த்). மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்) மற்றும் மகன்களோடு வாழ்ந்துவருகிறார்.

அந்த குடிசைப் பகுதியை கையகப்படுத்தி, மிகப் பெரிய கட்டுமானத் திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறார் அரசியல்வாதியான ஹரிதாதா (நானா படேகர்). ஹரிதாதாவுடனான மோதலில் மனைவி, மகனைப் பறிகொடுக்கிறார் காலா. முடிவில், கட்டுமானத் திட்டத்தை நிறுத்தி அவரிடமிருந்து தாராவியை காலா எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துவரும் நகர்ப்புற நிலவுடமை குறித்த கதையை ஒடுக்கப்பட்ட மக்களின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் ரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களிடம் இருக்கும் சிறு துண்டு நிலத்தையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி தொடர்ந்து பறிக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள், அதை எதிர்த்து ஒடுக்கப்பட்டவர்கள் எப்படிப் போராடிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது என்பதையே இந்தப் படம் சொல்கிறது.

சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவுட் ஆனபடி அறிமுகமாகிறார் ரஜினிகாந்த். பிறகு படம் நெடுக அவருடைய ஆட்டம்தான். நரைத்துப்போன தாடியுடனும் சுருக்கிய சருமத்துடனும் தோற்றமளிக்கும் ரஜினி, தன் அனாயாசமான நடிப்பாலும் பாணியாலும் வெகுவாகக் கவர்கிறார்.

தன் முன்னாள் காதலியை சந்திக்கவரும் காட்சியும், காவல் நிலையத்தில் அமைச்சரை "யாரு இவரு" என்று கேட்டு நோகடிக்கும் காட்சியும், வில்லனின் வீட்டுக்குள்ளேயே புகுந்து எச்சரிக்கும் காட்சியும் ரஜினியால் மட்டுமே செய்யக்கூடியவை. ஒரு பாலத்தில் நடக்கும் சண்டைக் காட்சி அவரது ரசிகர்களுக்குப் பெரிய விருந்து.

'காலா'

ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரி ராவுக்கு இது பெரிய ரீ - என்ட்ரி வாய்ப்பு. துவக்கத்தில் நாடகத்தனமாக இருக்கும் அவரது நடிப்பு, போகப்போக இயல்பாகிறது.

ரஜினியின் முன்னாள் காதலியான ஹிமா குரேஷியின் பாத்திரமும் நண்பர் மாரிமுத்துவாக வரும் சமுத்திரக்கனியின் பாத்திரமும் கதையை நகர்த்துவதில் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை.

வில்லனான நானா படேகர் அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலம் அசத்துகிறார். ஆனால், பல இடங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பது புரியவில்லை.

ஏழு பாடல்களில் சில முழுமையாகவும் சில பகுதியாகவும் இடம்பெறுகின்றன. கண்ணம்மா பாடல் தொடர்ந்து காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால், பின்னணி இசை பல இடங்களில் இல்லாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. குறிப்பாக நானா படேகர் பேசும் இடங்களில் பின்னணி இசை பெரும் தொந்தரவாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் முரளியும் நிஜ தாராவியைப் போன்ற செட்டை உருவாக்கியிருக்கும் கலை இயக்குனர் ராமலிங்கமும் பாராட்டத்தக்கவர்கள்.

திரைக்கதையைப் பொறுத்தவரை, முதல் பாதியில் காலாவின் மிகப் பெரிய குடும்பத்தை அறிமுகப்படுத்துவது, அவரது முன்னாள் காதலியை வைத்து "ப்ளாஷ்-பேக்"கில் சிறுவயது ரஜினியின் கதையை அனிமேஷனில் விவரிப்பது, தாராவியை அபகரிக்க நினைக்கும் முயற்சியை முடக்குவது என விறுவிறுப்பாகவே நகர்கிறது. இருந்தபோதும் இந்த அறிமுக படலம் வெகு நேரத்திற்கு நீண்டுகொண்டே போவது சற்று அலுப்பை ஏற்படுத்துகிறது.

'காலா'படத்தின் காப்புரிமைLYCA

இரண்டாவது பாதியில் 'தாராவியைக் கைப்பற்ற நினைக்கும் ஹரிதாதா VS காப்பாற்ற நினைக்கும் காலா' என்ற போட்டி விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டும். மாறாக, உபதேசங்களாக, தத்துவங்களாக, அலுப்பூட்டும் சம்பவங்களாக கடந்துசெல்கிறது. தொடர்ந்து காலாவை அடித்துக்கொண்டேயிருக்கிறார் ஹரிதாதா. மனைவி, மகனைக் கொல்கிறார். வீட்டை எரிக்கிறார். கலவரத்தை ஏற்படுத்துகிறார். கைதுசெய்ய வைக்கிறார்.

எப்போதுதான் காலா, ஹரிதாதாவைப் புரட்டியெடுக்கப்போகிறார் என்று எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால், கடைசிவரை அப்படியேதும் நடப்பதில்லை. உச்சகட்டக் காட்சியில் மிகப் பெரிய, வண்ணமயமான பாடலோடு படம் நிறைவடைகிறது. இந்தப் பாடல் நன்றாக இருந்தாலும், படத்தில் வரும் நில அபகரிப்பு தொடர்பான பிரச்சனைக்கு அது ஒரு தீர்வாக நம்மை சமாதானப்படுத்தவில்லை. இரண்டாம் பாதியில் உள்ள இந்த பலவீனங்களே படம் முடியும்போது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றன.

இருந்தபோதும் பல விதங்களில் இந்தப் படம் கவனத்திற்குரியது. படம் நெடுக வழக்கமாக தமிழ் சினிமாவில் காட்டப்படும் பிம்பங்களுக்கு மாற்றான பிம்பங்களை தொடர்ந்து முன்வைக்கிறார் ரஞ்சித். ரஜினியின் மேஜையில் டேனியலின் படைப்புகள், ராவண காவியம் புத்தகங்கள் இடம்பெறுவது, ராமன் நல்லவன், ராவணன் அரக்கன் என்ற கதைக்கு மாறாக ராவணனாக காலாவை உருவகப்படுத்தியிருப்பது போன்றவை கவனிக்கத்தக்கவை.

வில்லனாக வரும் ஹரிதாதா தொடர்ந்து தூய்மை குறித்தும், வளமான எதிர்காலம் குறித்து பேசுவதும் வில்லனின் கொடி காவி நிறத்தில் இருப்பதும் பல தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கக்கூடும்.

மேலும் ஒரு காட்சியில், எச். ராஜாவைச் சுட்டிக்காட்டுவதுபோல எச். ஜாரா என்ற பெயர் இடம்பெற்றுள்ள பெயர்ப் பலகை வருவதும் நுணுக்கமான சித்தரிப்பு. ஆனால், நிஜத்தில் இப்போதுவரை ரஜினியின் அரசியலுக்கு ஆதரவாக இயங்கிவரும் சில கட்சிகளுக்கும் அதன் தொண்டர்களுக்கும் இந்தக் காட்சிகள் பெரும் அதிர்ச்சியாக இருக்கக்கூடும்.

'காலா'

படத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போலவே ஒரு மிகப் பெரிய போராட்டம் காலாவால் நடத்தப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் முடிவில் தூத்துக்குடி கலவரத்தைப்போலவே ஒரு கலவரம் நடக்கிறது. அந்தக் கலவரத்தை காவல்துறையே தூண்டிவிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான காட்சி இது. ஆனால், சமீபத்தில் தூத்துக்குடி கலவரம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்களோடு இந்தக் காட்சிகள் முரண்டுபடுகின்றன. இது பார்வையாளருக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

படத்தில் பிரதான பாத்திரத்தை ஏற்றிருக்கும் ரஜினி, பிரம்மாண்டமான திரையில் பிரம்மாண்டமான முறையில் ஒரு போராட்டத்தை, ஒரு வழிமுறையை சொல்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் நியாயத்தைப் பேசுகிறார். ஆனால், நிஜத்தில் ரஜினி அளிக்கும் பேட்டிகளும் தெரிவிக்கும் கருத்துகளும் இந்தக் காட்சிகளுக்கு முரணாக இருப்பதால், படம் பார்ப்பவர்கள் நிஜ ரஜினியுடன் ஒன்றுவதா அல்லது திரையில் போராடும் காலா ரஜினியுடன் ஒன்றுவதா என்ற முரண்பாடு ஏற்படுகிறது.

ரஞ்சித்தின் முதல் இரண்டு படங்களான அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களிலும் ஒரு அரசியலைச் சொல்லியிருப்பார். கலைநேர்த்தியுடன் வெளிப்படும் மிக நுணுக்கமாக அவரது பார்வையும் அரசியலும் அந்தப் படங்களில் வெளிப்பட்டன. ஆனால், இந்தப் படத்தில் வெளிப்படையாகவே பேசுகிறார். இந்த நேரடி பேச்சு,ரஞ்சித் விரும்புவதைச் சாதிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44393562

  • தொடங்கியவர்

வாவ் இராவண காவியம்... கிரேட் இரஞ்சித்... `நடிகர் ரஜினி'க்கு கங்கிராட்ஸ்! - காலா விமர்சனம்

 
 

நகரத்தை உருவாக்கி, அதன் மையத்தில் வாழும்... ஆனால் நகரத்தின் சௌகரியங்கள் கிடைக்காத `நகர்ப்புற ஏழை' மக்களின் வாழ்வியலை கொண்டாட்டமாகவும், நம்மில் பெரும்பான்மையானவர்கள் மூக்கை மூடிக்கொண்டு கடந்துபோகும் ஒடுக்கப்பட்ட `கறுப்பர்'களின் அரசியலை வலியோடும் பதிவுசெய்திருக்கும் படம்தான் `காலா'.

காலா

 

தாராவியின் ராஜாதி ராஜா காலா சேட் என்கிற கரிகாலன். இந்தக் கறுப்புச் சட்டைக்காரர் சொல்லாமல் அங்கே அணுவும் அசையாது. மொத்தக் குடிசைப் பகுதியையும் சுத்தமாக்கும் `ப்யூர் மும்பை' திட்டத்தோடு அங்கே முகாமிடுகிறது வில்லன் நானா படேகர் அண்ட் கோ. இவர்களின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு விரட்டுகிறது காலாவின் காலாட்படை. செய்வதறியாது நானா படேகர் கையைப் பிசையும்போது வந்து இறங்குகிறார் ஹியூமா குரேஷி. பிரேசிலின் ரியோ நகரத்துக் குடிசைப் பகுதிகளை மேம்படுத்திய கையோடு தான் பிறந்து வளர்ந்த தாராவியையும் முன்னேற்ற கலர்ஃபுல் கனவுகளோடு வருகிறார் காலாவின் முன்னாள் காதலியான ஹியூமா! சூழ்ச்சியால் அவரைக் கையில் போட்டுக்கொண்டு திரும்பவும் தாராவி மண்ணை அபகரிக்க முயற்சிசெய்கிறார் நானா. அவரின் திட்டத்தை காலா சேட் எப்படித் தடுக்கிறார் என்பதுதான் கதை.

கம்பீரக் கரிகாலனாக ரஜினி. முதல் காட்சியில் ஜீப்பில் நெஞ்சை நிமிர்த்தி வரும்போதே எமன் உருவகம் நமக்குள் வந்துவிடுகிறது. அந்த அதிர்வு படம் முழுக்கவே நமக்குள் பயணிக்கிறது. முதல் காட்சியில் முறைப்பும் விறைப்புமாக இருந்துவிட்டு அடுத்த காட்சியிலேயே ஈஸ்வரி ராவிடம் பம்மிப் பதுங்குவதில் வெளிப்படுகிறார் காலாவுக்குள் இருக்கும் க்ளாஸிக் நடிகன். ஈஸ்வரி ராவிடம் ஐஸ் பாறையாக உருகலும் முனகலுமாக இருக்கும் ரஜினி, ஹியூமாவின் முன் பனிக்கூழாக நெகிழ்ந்து உடைகிறார். அவரின் ரகளை நடிப்பை கடைசியாக `சிவாஜி' படத்தில் பார்த்தது. பத்து ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரு பத்து நிமிட காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறார் `கள்ளு' குடித்த ரஜினி. சாவு பயத்தை படரவிட்டுவிட்டு கிளம்பும் வில்லனிடம், `நான் உன்ன கிளம்பச் சொல்லலையே' என கெத்தாகச் சொல்லும் ரஜினி... வின்ட்டேஜ் ரஜினி. ஆக, ஸ்டைல், ஆக்‌ஷன், கெத்து, காமெடி, ரொமான்ஸ் என எல்லா ஏரியாக்களிலும் ஃபார்ம் அவுட்டே ஆகாத சூப்பர்ஸ்டார் நான் என்பதை நிரூபித்திருக்கிறார் ரஜினி.

பா. இரஞ்சித்

ஈஸ்வரி ராவ் - ராவணனுக்கு ஏற்ற ராட்சஷி. அறிமுகமாகும் முதல் காட்சியில் மூச்சு முட்டுமளவுக்கு வசனங்கள். அதுவும் வேறு வேறு கேரக்டர்களோடு. அதை சிங்கிள் ஷாட்டில் அனாயாசமாக ஓகே செய்யுமளவுக்கு நடிப்பு ராட்சஷி. ஊரையே கட்டி மேய்க்கும் தாதாவைத் தன் வீட்டோடு சேர்த்துக் கட்டி மேய்க்கும் பாசக்கார செல்வி. `நீங்க மட்டும்தான் முன்னாள் காதலியை பார்க்கப் போவீங்களா? நானும் திருநெல்வேலி போறேன். என்னையும்தான் ஒருத்தன் லவ் பண்ணான்' எனப் பொய்க்கோபம் கொள்ளும்போது தியேட்டரே அதிர்கிறது. `அடங்கப்பா, ஒரு லவ் யூ சொன்னாதான் என்னாவாம்?' எனக் காதலை கேட்டுக் கேட்டு வாங்கி ரசிக்கும் குழந்தை. படம் நகர நகர நாமும் காலா குடும்பத்தில் ஒருவராக மாறுவதற்கு முதல் காரணம் இந்தத் தாயம்மாதான். 

சரீனாவாக ஹியூமா குரேஷி - வழக்கமாக நடிப்பில் வெளுத்துவாங்கும் இந்த வெள்ளாவி தேவதைக்குக் காலாவில் வெளி குறைவுதான். ஆனால், தன் திறமையை நம்பி வருபவர்களை ஏமாற்றாமல் ரஜினியை உணவகத்தில் சந்திக்கும் காட்சியில் செஞ்சுரி போடுகிறார்! கடந்த காலக் காதலை கண்களில், விரலசைவில், குறுகுறுப்பான உடல்மொழியில் இவரும் ரஜினியும் மாறி மாறி பரிமாறிக்கொள்ளும்போது நம் வாழ்க்கையிலிருந்த சரீனாவும், கரிகாலனும் வந்துபோகிறார்கள். 

காலா

ஹரிதேவ் என்ற ஹரிதாதாவாக நானா படேகர் - நானா இருக்கும்போது வேறு யார் ஃப்ரேமில் இருந்தாலும் அது நானாவின் ஃப்ரேம்தான். வெறும் பார்வையிலேயே நம்மை நடுங்கவைக்கிறார். வீட்டுக்கு வரும் ரஜினியை ஆறுதலாக அணைத்து, அவர் சொல்லும் அந்த விஷயம்... வேற லெவல் வில்லத்தனம். ராவணனை அழிக்கத் துடிக்கும் ராமர் வேஷத்துக்குப் பக்கா பொருத்தம்.

ரஜினியின் குடிகாரத் தோழனாக சமுத்திரக்கனி! ஒரு சாயலில் பார்த்தால் `மெட்ராஸ்' ஜானியின் நீட்சி! வழக்கமான போதனைகளை விட்டுவிட்டு காமெடி ஒன்லைனர்களால் அதிரடிக்கிறார். ரஜினியின் தளபதியாக, வீட்டைக் காத்து நிற்கும் மதுரைவீரனாக திலீபன். கண்ணைக் காட்டியவுடன் பாயும் சிறுத்தையாகக் கவனம் ஈர்க்கிறார். சிவப்புச் சட்டை லெனினாக வரும் மணிகண்டனுக்கு இது முக்கியமான படம். தன் கேரக்டரின் கனம் உணர்ந்து பொருத்தமாக நடித்திருக்கிறார். ஒடிசலான தேகம், ஓங்கிய குரல், பயமறியா பார்வை என காம்ரேட் ரோலுக்காகவே செய்து வைத்ததைப் போல இருக்கிறார் அஞ்சலி பாட்டீல். சம்பத், அருள்தாஸ், ஷாயாஜி சிண்டே, அருந்ததி என நிறைய நடிகர்கள், சின்னச்சின்ன கேரக்டர்களில் வந்தாலும் தங்களின் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். 

காலா

ரிலீஸுக்கு முன்பே பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். `பின்னணி இசையிலும் பின்றேன் பாரு' என இறங்கியடித்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ரஜினிக்கான தீம் ஒலிக்கும்போதெல்லாம் நமக்குள்ளும் எனர்ஜி தொற்றிக்கொள்கிறது. சில இடங்களில் அவர் விடும் சைலன்ஸ்...நமக்குள் பரபரப்பை உண்டாக்குகிறது. தாராவியை இத்தனை அழகாகக் காட்டமுடியும் என நொடிக்கு நொடி உணர்த்துகிறார் ஒளிப்பதிவாளர் முரளி. கறுப்பும், சிவப்பும், நீலமுமான வண்ண விளையாட்டில் ஓங்கிப் பறப்பது முரளியின் மூவர்ணக் கொடிதான். ஶ்ரீகர் பிரசாத்தின் கத்திரி... கச்சிதம். `இது செட்தான்' என முன்பே அறிவித்துவிட்டார்கள். ஆனால் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கமே வந்து சத்தியம் செய்தாலும் அதை நம்பமுடியாது! சுவரில் மினுங்கும் சார்ஜர் முதல் காரை பெயர்ந்த சுவர்கள் வரை அவ்வளவு கச்சிதம். விருதுகள் குவிப்பீர்கள் தோழர்!

இப்போது படத்தின் மற்றொரு ஹீரோவான ரஞ்சித் பற்றி! ரஜினியிடம் என்ன பலம், என்னவெல்லாம் வாங்கலாம் என்பதை அறிந்து கச்சிதமாக திரைக்கதை அமைத்ததிலேயே அவருக்குப் பாதி வெற்றி கிடைத்துவிட்டது. நில அரசியல் என்னும் மையப்புள்ளியை விட்டு எந்த இடத்திலும் விலகாமல் பயணிக்கும் நேர்த்தியான திரைக்கதை. அதிகாரத்துகு எதிரான அரசியல் பேசவேண்டும், அதேசமயம் ரஜினிக்கான மாஸ் ஃபேக்டரும் இருக்கவேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். பலன் திரையில் தெரிகிறது. குறிப்பாக, அந்த வித்தியாச க்ளைமாக்ஸ் - பல ஆண்டுகளுக்குப் பேசப்படும். நித்தமும் போராட்டம் என இருக்கும் சமகாலச் சூழலை அப்படியே பொருத்திக் கொள்ள முடிவது படத்தின் பெரிய ப்ளஸ். 

காலா

மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, ரஞ்சித் மூவரின் வசனங்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம். `நான் நீ முன்னாடி பார்த்த சரீனா இல்ல, உனக்கு உன் நினைவுகள்ல இருக்குற சரீனா போதும்' என ஹியூமா விலகும் காட்சி நெஞ்சைத் தொடும் டச்! `என்னோட நிலத்தைப் பறிக்குறதுதான் உன் கடவுளோட வேலைன்னா உன் கடவுளையும் விடமாட்டேன்' என்ற வசனம் மதத்தின் பேரால் ஒடுக்கப்பட்ட ஒருவனின் கோபம். `சமத்துவம்னா கையைக் கொடு, கால்ல விழ வைக்காதே' எனப் போகிற போக்கில் போலியவாதிகளின் பொட்டில் அறையும் வசனங்களும் எக்கச்சக்கம்.

படத்தில் நானா தன்னை தேசபக்தர் எனச் சொல்லிக்கொள்கிறார். `தூய்மையான மும்பையே என் கனவு' என அறிவிக்கிறார். `என் மனதின் குரல் இது' என உரையாடுகிறார். `என் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்' எனக் குற்றம் சாட்டுகிறார். `கறுப்பு என் கண்ணை உறுத்துது' எனச் சலித்துக்கொள்கிறார். உங்களுக்கு யாரேனும் நினைவுக்கு வருகிறார்களா? போதாக்குறைக்கு ஒரு காட்சியில் சமுத்திரக்கனி வேறு, `ஹே காக்கி டவுசரு.. ஒழுங்கா ஓடிப் போய்ரு' என விரட்டுகிறார். 

படத்தில் எக்கச்சக்க குறியீடுகள். நண்பர்களோடு ரஜினி கலந்தாலோசிக்கும் இடமாக ஒரு புத்த விகாரம் இருப்பது, வீட்டுக்கு வெளியே உள்ள சிறுதெய்வ சிலை, `மூதாதையர்களோட சொல்... என்னோட ஆணை' என்ற ரஜினி பன்ச்..., ரஜினியின் வீட்டில் நானா தண்ணீர் அருந்த மறுப்பது, இரண்டாம் பாதியில் நானா வீட்டில் அதே காட்சியில் தண்ணீர் குடித்த கையோடு, `ஆசிர்வாதம் எல்லாம் வாங்கவேணாம், வணக்கம் போதும்' என படேகர் பேத்தியிடம் சொல்வது, `மனு' ரியாலிட்டி ஹோம்ஸ், `தண்டகாரன்யம்' நகர், டிவி செய்தி ஸ்க்ரோலில் ஓடும் `ஆதிச்சநல்லூர் ஆதித்தமிழரின் தொன்மப்படிமங்கள்' கண்டெடுப்புச் செய்தி, நிறைய காட்சிகளில் அம்பேத்கர், புத்தர் படங்கள், பெரியார் சிலை... தான் யாருக்கான அரசியல் பேசுகிறோம், யாருக்கெதிராகப் பேசுகிறோம் என்பதை படத்துக்குப் படம் மேலும்மேலும் உறுதியாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் ரஞ்சித். அதிலும் பின்னணியில் ராம கதாகாலட்சேபம் நடக்க, இங்கே கறுப்புச் சட்டையில் ராவணனாக ரஜினியும் அவர் மக்களும் சண்டை போடும் இடம் - க்ளாசிக் உருவகம். 

காலா

`கறுப்பு.. உழைப்போட வண்ணம்'- அது மட்டுமல்ல, அது அதிகாரத்துக்கு எதிரான கலகக்குரல், ஒடுக்கப்பட்டவர்களை ஓரணியில் திரள வைக்கும் கொடி, அடிப்படைவாதத்துக்கு எதிராக நிற்கும் உறுதியான அரசியல் குறியீடு' எனப் படம் முழுக்க காலா காதலை கொண்டாடியிருக்கிறார் ரஞ்சித். இராவணனின் ஒரு தலை ரஜினியென்றால், மற்ற ஒன்பது தலைகளும் ரஞ்சித்தான்..! 

படத்தின் நீளம் ஒரு மைனஸ். இதனாலேயே ஒருசில காட்சிகளில் தொய்வு ஏற்படுகிறது. ஒரே ஏரியாவில் கேமரா சுற்றி சுற்றி வருவதால் பார்வையாளர்களுக்குச் சலிப்பு தட்டுவதையும் தவிர்ப்பதற்கில்லை. முதல் பாதி முழுக்க பயங்கர ஹைப் ஏற்றப்படும் நானாவின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் சர்ரெனச் சுருங்கிப் போவது ஏமாற்றமளிக்கிறது. லாஜிக் ஓட்டைகளும் இல்லாமல் இல்லை. மொத்த ஏரியாவையும் கன்ட்ரோலில் வைத்திருக்கும் ரஜினிக்கு முதல் காட்சியில் கலாட்டா நடப்பது மட்டும் எப்படித் தெரியாமல் போகும்? மும்பை முழுக்க செல்வாக்கு இருக்கும் ஒருவர் பேப்பர் பார்த்துதான் தன் ஏரியா பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வாரா என்ன? 

ஆனால், நிகழ்கால நிதர்சனங்களுக்கிடையே இவ்வளவு துணிச்சலாக அரசியல் பேசவும் ஒரு தில் வேண்டும் ரஞ்சித். கிரேட்!  

https://cinema.vikatan.com/movie-review/127035-kaala-movie-review.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ௠தà¯à®à®¿à®¯à®®à¯

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்

`` `காலா'ல ரஜினி பன்ச் பேசாதது சிம்பிள் லாஜிக்தான்!" - மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா #VikatanExclusive

 
 

`காலா' படத்தை முடித்துவிட்டு வெளியே வந்ததும் நினைவுக்கு வந்தது, `` `காலா’ அரசியல் படம் இல்லைங்க... ஆனா, படத்துல அரசியல் இருக்குனு!" என்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுல ரஜினிகாந்த் சொன்ன விஷயம்தான். படத்தின் வசனங்கள் தாராவியின் நில அரசியலைக் கண்முன் நிற்க வைத்திருக்கிறது என்றால், மிகையில்லை. இதுகுறித்து ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றிய  மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரிடம் பேசினோம்.

தாராவி

 

"ரஞ்சித் எனக்கு, என் தோழரும் அவரின் உதவி இயக்குநருமான அதியன் ஆதிரை மூலம்தான் நட்பானார். `மெட்ராஸ்' படத்தின் வெளியீட்டுக்கு முன் எங்களது இதழில் 'தண்ணீக்கோழி' என்னும் தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். `காலா' படத்தில் இருக்கும் நிலம் சம்பந்தமான பல கேள்விகள் அந்தக் கதையில் இருந்தன. இன்னும் நிறைய கேள்விகளும் இருக்கு!" என ஆரம்பித்தார் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.

"அதுவரை போனில் மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தோம். `மெட்ராஸ்' படம் வெளியான பிறகு, சென்னையில் ஓர் ஆய்வரங்கம் நடந்தது. அப்போதுதான் நானும் ரஞ்சித்தும் முதல்முறையாகச் சந்தித்துப் பேசினோம். சமகால அரசியல் நடப்பு, இலக்கியம் என எங்கள் நட்பு தொடர்ந்தது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வாதாரம் பற்றிய ஒரு கதையை டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தோம். அப்படி உதித்ததுதான், `கபாலி' ஐடியா. ரஞ்சித்தின் நண்பர் இயக்க நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த 'பிவேர் ஆஃப் கேஸ்ட்' ஆவணப்பட திரையிடலில் 'நாங்கெல்லாம் இருக்கும்போது நீங்க சினிமாவுக்கு வர யோசிக்கக் கூடாது. நீங்க வாங்கண்ணா'னு கூப்பிட்டார். ஒருநாள் ஒரு கதையைக் கொடுத்து, `இதை முழுசா படிங்க. உங்களுக்கு எங்கெல்லாம் நெருடலா இருக்குதோ எங்கெல்லாம் மாத்தலாம்னு நினைக்கிறீங்களோ நோட் பண்ணி வைங்க. டிஸ்கஸ் பண்ணுவோம்'னு சொல்லிட்டுப் போயிட்டார். அவர் கொடுத்த கதையே நிறைவானதாக இருந்தது. படத்தின் வசனங்களை இறுதிபடுத்த நான், ரஞ்சித், மகிழ்நன் ஆகியோர் டிஸ்கஸ் செய்து வந்தோம். படத்தின் இணை இயக்குநரும் மற்றொரு வசன கர்த்தாவுமான மகிழ்நனுக்கு தாராவிதான் பூர்வீகம். அது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. கதையின் சூழல்கள் சில நிஜ தாராவியில் நடந்திருந்தால் எப்படி நடந்திருக்கும் என ஊர்ஜிதப் படுத்துவதற்கும் உதவியாக இருந்தது" என்கிறார் ஆதவன் தீட்சண்யா. 

``தமிழ் படத்தில் அரிதாகச் சொல்லப்பட்ட கதைக்களம், ரஜினி இதுக்குமுன் ஏற்றிராத கதாபாத்திரம் எனப் பல சவால்கள் இருந்திருக்குமே?"ஆதவன் தீட்சண்யா

``படத்தில் ரஜினிகாந்த் ஒரு குடும்பத் தலைவன். அவருக்கும் சமுதாயத்துக்கும் உள்ள உறவு, அவருக்கும் அங்குள்ள மக்களுக்கும் உள்ள உறவு, மக்கள் கேட்கும் கண்ணியமான வாழ்க்கைக்கான போராட்டத்துக்கு அவர் குரலாய் இருப்பது... என ஒரு சாதாரண மனிதராகவே ரஜினி இருப்பார். அதனால், ரஜினிக்கு பன்ச் வசனங்கள் தேவைப்படவில்லை. படத்தின் ஓர் இடத்திலும் 'எங்க உரிமைதான் என்னோட சுயநலம்'னு சொல்லியிருப்பார். அதனால், தனி மனித சாகசங்கள் எதுவுமே படத்தில் இல்லை. 'காலா' ஒரு இயல்பான மனிதன்.   

ஓர் இடம் அதன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என முடிவு செய்துவிட்டோம். அந்த வாழ்வியலுக்குத் தேவையான வசனங்களைக் கதாபாத்திரங்கள் பயன்படுத்தினார்கள். தாராவி கிட்டத்தட்ட 550 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம். ரியல் எஸ்டேட் வியாபார சாத்தியக்கூறுகள் அதிகம் கொண்ட இடம். அதன் அன்றைய விலையைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது 40,000 கோடி வந்தது. அதை ஓர் இடத்தில் வசனமாகச் சேர்த்துக்கொண்டோம். பூர்வீக மக்களை அவர்கள் இடத்திலிருந்து அகற்றும் அநீதி தாராவிக்கு மட்டுமின்றி, உலகளவில் பல இடங்களுக்கு நடந்து வருகிறது. அந்த விஷயங்களைத் தாராவிக்கு மட்டுமானதாக இல்லாமல், பொதுப்படுத்துவது எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது.

முக்கியமாக, பத்தமடை அயூப் பாய் கரிகாலனுக்கு தன் மகள் சரினாவை கட்டிக் கொடுக்க சம்மதித்த விஷயமும் படத்தில் இடம்பெற்ற, "நாமெல்லாம் ஒண்ணா இருந்தாதான் நம்மை யாரும் ஒண்ணும் செய்ய முடியாது'னு காலா சொல்வது, இயக்குநர் ரஞ்சித்தின் கனவு!" என ஆதவன் தீட்சண்யா முடிக்க, தாராவியின் மகன் மகிழ்நன் தொடர்ந்தார். 

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தாராவிதான். ஏழு வருடங்களுக்கு முன்னாடி சென்னைக்கு வரும்போது எங்க மக்களைப் பற்றிப் படம் எடுக்க மாட்டாங்களானு ஏக்கத்தோடதான் வந்தேன். என் அரசியல் கண்ணோட்டம் இங்கே இருந்த பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகலை. பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சியில வேலைக்குச் சேர்ந்துட்டேன்" என்ற மகிழ்நனிடம் சில கேள்விகள்.  

காலா

"இயக்குநர் ரஞ்சித்துடனான பழக்கம்..?"

"தோழர் ரஞ்சித் எனக்கு முகநூல் நண்பர். அவ்வப்போது நான் எழுதுவதைப் படித்திருக்கிறார். அப்பப்போ போன்ல பேசியிருக்கோம், பின்னர் உற்ற நண்பர் ஆனார். 'மெட்ராஸ்' படத்தின் வெற்றி இயக்குநர் என்ற தோரணை எதுவுமே அவரிடம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. 'கபாலி' முடிந்ததும் ஒருநாள் போன் பண்ணி, 'தோழர் வாங்க, தாராவி போயிட்டு வருவோம்'னு சொன்னார். இணை இயக்குநர்கள் பார்த்தி, ஜெனியோடு போய் அங்கே நாங்க சந்திச்ச மனிதர்கள்தான், 'காலா' கதாபாத்திரங்கள் ஆனார்கள். 

நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால், எனக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் யார்னு சொல்ல முடியும். உதராணத்துக்கு, செல்வி கதாபாத்திரம் பல தாராவி பெண்களோட பிரதிபலிப்பாக இருந்தது. ஆரம்பத்துல என்னை வசனம் எழுதச் சொல்வார்னு தெரியாது. எனக்கு ரஞ்சித் தோழரை ரொம்பப் பிடிக்கும். நான் உதவி இயக்குநராக வேலை செய்யணும்னுதான் அவர்கிட்ட கேட்டேன். 'கொஞ்சம் பொறுங்க, உங்களுக்குனு ஒரு வேலை இருக்கு'னு சொன்னார். பிறகு, கதை விவாதத்துல இணைச்சுக்கிட்டார். வசனம் எழுதுறதுக்கு ரஞ்சித், ஆதவன் தோழர்களோடு நானும் சேர்ந்துக்கிட்டேன்." 

"நீங்க தாராவியைச் சேர்ந்தவர்னுதான் வசனம் எழுத வச்சாங்களா?"

"படம் பார்க்கும்போதுதான் எனக்கு ஏன் வசனம் எழுதுற வேலை கொடுத்தார்னு புரிஞ்சது. ரஞ்சித் தோழர்கிட்ட தாராவியைப் பத்தி நான் பல விஷயங்கள் பேசியிருக்கேன். நான் பேசுற தமிழும் திருநெல்வேலி ஸ்லாங்கும்கூட காரணமா இருக்கலாம். படத்துல இயக்குநர் காட்சிக்குத் தேவைப்படுற வசனங்களைக் கேட்பார். அவருக்குத் தேவையான வசன ஆப்ஷன்ஸ் கொடுக்கிறதுதான் என் வேலை. நல்ல வசனங்களா பார்த்துத் தேர்ந்தெடுத்ததும் திருத்தினதும் இயக்குநர்தான்." 

காலா காட்சியில் மகிழ்நன்

" 'கியாரே... செட்டிங்கா' வசனம் உருவான விதத்தைச் சொல்லுங்க, படத்துல பன்ச் வசனங்கள் கம்மியா இருக்கக் காரணம் என்ன?" 

"பாம்பேல ஷூட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். திடீர்னு ரஞ்சித் தோழர், 'ஒரு பன்ச் வசனம் எழுதனும்'னு சொன்னார். எனக்கு ரஜினி சாருக்கு பன்ச் எழுதுற டென்ஷனைவிட, தோழருக்குப் பிடிக்கிற மாதிரி எழுதணும்னு டென்ஷன். சில ஆப்ஷன்ஸ் கொடுத்தேன். அதுல, இயக்குநர் ரஞ்சித் தேர்ந்தெடுத்ததுதான், 'கியாரே செட்டிங்கா' வசனம். மக்களோடு மக்களாக இருக்கிற காலா பன்ச் வசனங்களைவிட, மக்களோட உணர்வுகளைப் பேசணும். கதையோட எல்லையும் அதுதானே!"

"தாராவி மக்கள்ல ஒருத்தனா நீங்க சந்திச்ச பிரச்னைகளைப் படத்துல ரஜினி பேசுனதைப் பார்க்கும்போது எப்படி இருந்தது?"

"தாராவில நான் 10x10 ரூம்லதான் பிறந்தேன். பெரும்பாலான இரவுகள்ல வீட்டுக்கு வெளியே உறங்கும் நிலைதான் எனக்கு. காலா கதாபாத்திரம், தாராவி பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கும் பல இளைஞர்களோட பிரதிபலிப்புதான். படத்தில் பேசும் அரசியல், துண்டு பிரசுரம் கொடுப்பது, சமூகம் சார்ந்து பேசுற பசங்க... என எல்லாம் நிஜ தாராவியில் நடக்கும் விஷயம்தான். சமுத்திரக்கனி கதாபாத்திரம்கூட தாராவியில் இருக்கும் பல மனிதர்களோட பிரதிபலிப்புதான்."  

தாராவி

"படத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய வசனங்கள் உள்ளதா?"            

"ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னாடி தாராவியை டாப் ஆங்கிள் ஷாட்டில் எடுத்தார்கள். அதை எனக்குப் போட்டுக் காட்டும்போது என் கண் கலங்கிடுச்சு. படத்துல செல்வி கதாபாத்திரம் பேசுற பல வசனங்கள் எங்க அம்மா என்னை எப்படித் திட்டுனாங்கனு கேட்டு எழுதுனேன். சில இடங்களில் காலா பேசுற 'எரிச்சாலும் புதைச்சாலும் இங்கதான். இது இந்த இடத்தில வளந்த மரம்'னு சொல்லும்போது, எங்க அம்மாவுக்கு எங்க அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. பல பசங்களுக்கு அந்த 'விழித்திடு இளைஞர் இயக்கம்' பெயரைப் பார்த்துட்டு, தாராவி பசங்க நடத்துற விழித்தெழு இளைஞர்  இயக்கத்தோட கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. என் அக்கா பையன், லெனின் கதாபாத்திரத்தோட கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சதுனு சொன்னான். காலா மக்களை ஒன்றுதிரட்டி, 'உடம்புதான் நம்ம ஆயுதம்'னு  சொல்லும்போது, ரொம்ப உணர்வுபூர்வமாய் இருந்தது." 

'' 'காலா' படத்துல தாராவியின் அரசியல் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கா?"

"தாராவி மிகப்பெரிய ஏரியா. அதுல பல அரசியல் இருக்கு. தாராவி ஒரு ரியல் எஸ்டேட் ஹப் மாதிரிதான். நிறைய பில்டர்ஸ் அணுகுறாங்க. அங்கே இருக்கிற எல்லோருக்கும் ஒரு நல்ல கட்டடம், வீட்டுக்குள்ளேயே டாய்லெட்னு எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கு. ஆனா, அதுக்காக நிலத்துல பாதியைத் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கிற திட்டத்தோடதான் வர்றாங்க. எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்து மக்கள் உருவாக்கிய நிலம் அது. அது மொத்தமும் தாராவி மக்களுக்குத்தான் சொந்தம். அந்த வகையில, 'காலா' தாராவியைப் பற்றி யாரும் பேசாத அரசியலைப் பேசியிருக்குனுதான் சொல்வேன். இப்படம் தாராவி மக்களுக்கே தாராவியைப் பற்றி எடுத்துச் சொல்ல பெரிதும் உதவியிருக்கிறது!"  என்கிறார் மகிழ்நன்.

  • தொடங்கியவர்

ரஜினிகாந்த அவர்களே! நீங்களுமா இப்படி?

 

 
kaala_pic

 

நாற்பது ஆண்டுகளைத் தாண்டிய கலைப் பயணத்தில் உங்கள் சினிமாக்கள் எங்களை சிரிக்க வைத்திருக்கிறது, சிந்திக்க வைத்திருக்கிறது, மிகக் குறைந்த அளவில் அழவும் வைத்திருக்கிறது. ஆனால் தியேட்டரில், அமர்ந்த இடத்தில் என்றுமே நெளிய வைத்ததில்லை. அந்தக் குறையை ‘காலா' படம் போக்கியிருக்கிறது.

இந்தப் படத்திற்கு கி. வீரமணி கதை எழுதி, சு.ப. வீரபாண்டியன் நடித்திருந்தால், படத்தைப் பற்றி யாரும் விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், இந்து மத எதிர்ப்பு அவர்களின் ரத்தத்தில் ஊறியது. ஆனால், ஆன்மீக அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்ட ரஜினிகாந்திடமிருந்து, இந்து மதத்தை கேலி செய்யும் ஒரு படத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

படத்தின் பல காட்சிகள் இந்துக்களுக்கு எதிராக இருப்பதை உணரமுடிகிறது. இவ்வளவு ஆண்டுகள் சினிமாத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் ரஜினி அவர்களே! இத்தனை ஆண்டு அனுபவம் மிக்க உங்களுக்கு கதை இப்படித்தான் இருக்கும், அது இப்படித்தான் மக்களால் புரிந்துகொள்ளப்படும் என்பது தெரியாதா?

ரஜினிகாந்த் ஏமாற்றப்பட்டார் என்று சிலர் சொல்கிறார்கள். ரஜினிகாந்த் அவர்களே! முதல் பட ஹீரோக்களுக்குத்தான் படத்தின் கதை, அதில் இடம்பெறும் வசனங்கள் ஆகியவற்றில் தலையிடும் வாய்ப்பு கிடைக்காது. இது உங்கள் முதல் படமல்லவே! அதனால், படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்புடையது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது நடந்தவை எல்லாம், உங்களுக்குத் தெரியாமல் நடந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது மற்றவர்கள் சொல்வதைப் போல நீங்கள் ஏமாற்றப்பட்டீர்களா?
kala.JPG

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு வியாபாரி. காலத்திற்கும், நேரத்திற்கும் தகுந்தாற்போல வியாபாரம் செய்வான். சில நேரங்களில் பழங்கள் விற்பான். சில நேரங்களில் பூக்களை விற்பான். சில நேரங்களில் மிட்டாய்களை விற்பான். மக்கள் அனைவரும் அவன் விற்கும் பொருட்களை ஆர்வத்தோடு வாங்குவார்கள். அதற்கு காரணம் அவனுடைய வசீகரம், அன்பான பேச்சு, நேர்மை. அதோடு மட்டுமில்லாமல், வியாபாரத்தின் போது அவன் பாடும் இனிமையான பாட்டு. அது எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். அவனிடம் பொருட்களை வாங்குவதையே மக்கள் பெருமையாக நினைத்தனர்.

ஒரு நாள் வியாபாரியின் நண்பன் அவனை சந்தித்தான்.

‘வியாபாரியே! நீ அருமையாக வியாபாரம் செய்கிறாய். ஆனால், இன்றைய சூழலில் வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாள்வது அவசியம். ‘குறைந்த உழைப்பு, நிறைய லாபம்' என்பதே வியாபாரத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். வழக்கமாக நீ விற்கும் பொருட்களை ஒதுக்கி வை. என்னிடம் இருக்கும் பொருட்களை விற்பனை செய்', என்று சொல்லிய நண்பன் தன் வீட்டிலிருந்த கற்களை வியாபாரியின் கடையில் விற்பனைக்கு வைத்தான்.

வழக்கம்போல் மக்கள் கடைக்கு வந்தனர். வியாபாரியின் பாட்டை கேட்டனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கற்களை வாங்கிச் சென்றனர். வியாபாரம் அபாரமாக நடந்தது. எக்கச்சக்க லாபம். வியாபாரி பேசினான்.

‘நண்பனே! என்னிடம் கற்களை வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி. கிடைத்த லாபத்தினால் எனக்கு மகிழ்ச்சி. என் மூலம் உன் கற்களை விற்றதால் உனக்கு மகிழ்ச்சி. உன்னுடைய புதிய வியாபார யுக்தி ஒரே நேரத்தில் எல்லோரையும் மகிழ்ச்சியடையச் செய்துவிட்டது', என்று பாராட்டினான்.

சில நாட்களுக்குப் பின் ஒரு சாது அந்த ஊருக்கு வந்தார். வியாபாரி அவரை சந்தித்தான். தனது புதிய வியாபாரத்தையும், தனது புத்திசாலி நண்பனையும் பற்றி அவரிடம் சொல்லி பெருமைப்பட்டான். எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டார் சாது.

‘வியாபாரியே! என்னுடன் வா. உன்னிடம் பொருட்களை வாங்கிய பயனாளிகளை சந்திக்கலாம்', என்று கூப்பிட்டார் சாது.

சாதுவும், வியாபாரியும் புறப்பட்டனர். முதல் பயனாளியை சந்தித்தனர். அவன் பேசினான்.

‘ஐயா! வியாபாரியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் பொருட்கள் வாங்குவதை பெருமையாக நினைக்கிறேன்', என்றான் அவன்.

‘நல்லது! வியாபாரியிடம் வாங்கிய பொருட்களை காட்டுங்கள்', என்று கேட்டார் சாது.

‘ஐயா! வியாபாரியிடம் பொருட்கள் வாங்குவதே எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். இதற்கு முன் இவரிடம் வாங்கிய பழங்கள், பூக்கள், மிட்டாய்கள் ஆகிய எல்லாவற்றையும் உபயோகப்படுத்திவிட்டோம். பொருட்களின் உபயோகத்திற்குப் பிறகு அவை திருப்தியாக உருமாறிவிட்டது', என்றான் அவன்.

‘அதெல்லாம் சரி. கடைசியாக வாங்கிய கற்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே?' என்று கேட்டார் சாது.

‘அதோ அந்த மூலையில் கிடக்கிறது பாருங்கள்!' என்று சொல்லிவிட்டு அமைதியானான் அவன்.

அங்கிருந்து புறப்பட்ட இருவரும் ஒவ்வொரு பயனாளியின் வீட்டுக்கும் சென்றனர். எல்லா வீடுகளிலும் வியாபாரியிடம் வாங்கிய கற்கள் ஒரு மூலையில் கிடப்பதை பார்த்தார்கள். இறுதியில் சாது பேசினார்.

‘வியாபாரியே! இதற்கு முன் நீ விற்ற எல்லா பொருட்களுமே அவர்களுக்கு மகிழ்ச்சியையும், பொருட்களின் பயன்பாட்டிற்குப் பிறகு திருப்தியையும் கொடுத்தது. ஆனால், நீ கடைசியாக விற்ற கற்கள் அவர்களுக்கு உன்னிடம் பொருட்கள் வாங்கிய மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்திருக்கிறது. திருப்தியை கொடுக்கவில்லை. நீ யாரையும் ஏமாற்றவில்லை. ஆனால், அவர்கள் உன்னிடம் ஏமாந்துவிட்டார்கள்', என்றார் சாது.

‘நான் ஏமாற்றாமல் அவர்கள் எப்படி ஏமாற முடியும்?' என்று கேட்டான் வியாபாரி.

‘அதுவா! உன் நண்பன் உன்னை ஏமாற்றவில்லை. ஆனால், நீ எப்படி அவனிடம் ஏமாந்துவிட்டாயோ, அதுமாதிரிதான்', என்று சொல்லிவிட்டு சாது புறப்பட்டார்.

kaala_new144.jpg

 

 

ஏமாற்றியது யார்? ஏமாந்தது யார்? என்பது அவரவர் அனுமானத்திற்கு விடப்படுகிறது. ஆயிரம் கவலைகளை மனத்தில் சுமந்து வரும் ரசிகனை ரஜினியின் திரைப்படங்கள் சிரிக்க வைக்கும். ரசிக்க வைக்கும். ரசிகனின் மனச்சுமையை இறக்கிவைக்கும். ஆனால், இன்று ரஜினிக்காக பல நெருடல்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வேதனையானது.

ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில மண்ணு', என்ற நம்பிக்கையுட தமிழக மக்கள் ராமனை நிந்திப்பவர்களையும், ராவணனை துதிப்பவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது ரஜினிக்கு தெரியாததல்ல.

‘ரஜினியின் திரைப்பட வாழ்க்கை வேறு, அரசியல் வாழ்க்கை வேறு', என்று இரண்டிற்குமிடையே மெல்லிய கோட்டை யாராவது வரைய நினைத்தால், அவர்கள் தன்னை ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.  ரஜினிகாந்த் அவர்களே! உங்கள் மன ஓட்டத்தை ‘பஞ்ச்' வசனங்கள் மூலமாக பல படங்களில் பேசியிருக்கிறீர்கள். அவையெல்லாம் உங்கள் கொள்கைகளாகவே மக்களிடம் இதுநாள்வரை சென்றடைந்திருக்கிறது. தற்போது அது தவறு, சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த வார்த்தை ஜாலங்கள் தமிழக மக்களிடம் எடுபடாது.
kala-teasure-9.jpg

கதையில் ரஜினியை ராவணனாகவும், வில்லனை ராமனாக சித்தரிக்கும் விதமாக காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. கதைக்கு வில்லனாக வருபவர்கள் காவி நிறத்தை அணிந்த இந்துக்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. தவறு நடக்கும் போது பல இடங்களில் பிள்ளையார் சிலை ஊர்வலம் தவறான குறியீடாக, மதவாத குறியீடாக காட்டப்படுகிறது. இது சரியா?

கிளைமாக்சில், வில்லன் ரஜினியை கொல்ல உத்தரவிடுகிறார். ‘ரஜினி ராவணனா? அவரை கொன்றுவிடுவீர்களா? என்று வில்லனை அவர் பேத்தி கேட்க, ‘வால்மீகி அப்படித்தானே எழுதி வைத்து இருக்கிறார்', என்று சொல்லிவிட்டு வில்லன் சிரிக்கிறார். இது சரியா?

ஒரு குறிப்பிட்ட கட்சியை அசிங்கப்படுத்தினால், எதிர்ப்பு அறிக்கைகள் வரும், பிறகு அதனை வைத்து படத்தை ஓட்டிவிடலாம்' என்ற வியாபார யுக்தி இந்தப் படத்தின் பின்னால் இருக்காது என்று நம்புவோம். எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அவரவருக்கு பிடித்த மதத்தை புகழ்ந்து பேசலாம். அது அவர்களது உரிமை. ஆனால், இந்துக்களின் நம்பிக்கையை தொடர்ந்து சிதைப்பது சரியான நடவடிக்கை அல்ல. இந்த நடவடிக்கைக்கு ரஜினியும் துணைபோனாரா? என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனத்திலும் இருப்பதை மறுக்கமுடியாது.
rajini-kala3.jpg

படத்தில், ‘எச். ஜாரா என்பவர் ‘சென்னை கிளீன் சிட்டி பற்றி ஒரு விளம்பர போர்டு வைத்திருப்பது போன்ற ஒரு காட்சி படத்தில் காட்டப்படுகிறது. எளிதில் உணர்ச்சிவசப்படும் ஒரு தமிழக தலைவரை வம்புக்கு இழுத்து, அவரை பேச வைத்து, அதன் மூலம் படத்தை உயரத்தில் பறக்கவிடலாம் என்று யாராவது நினைத்தால், அது அவர்களது சிறுபிள்ளைத்தனம். ரஜினிகாந்த் படத்திற்கு அப்படிப்பட்ட குறுக்குவழி வியாபார யுக்தி தேவையில்லை. இந்த யுக்தியை யாராவது புத்திசாலித்தனம் என்று நினைத்தால், அவர்களுக்கு ரஜினியின் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ரஜினிகாந்த் அவர்களே, உங்கள் பெயரைச் சொன்னவுடன் கண்களை மூடிக்கொண்டு உங்கள் தடங்களை பின் தொடரும் உங்கள் பிள்ளைகள், இனி தடத்தை தட்டிப்பார்த்தே பயணிப்பார்கள். தங்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பதல்ல இதன் பொருள். தங்கள் தலைவனை யாரும் தவறாக பயன்படுத்திக் கொண்டுவிடக்கூடாது என்ற அக்கறையில் தட்டப்படும் தட்டுகளே அவை.

தமிழக தலைவர்கள் பலர் இந்துக்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். திரைப்படத் துறையச் சார்ந்த பலர் இந்துக்களின் மீதான வன்மத்தை திரைப்படங்களிலும் காட்டியிருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. தன்னை இயக்குபவர்களையும் எல்லை மீற விட்டதில்லை. ஆனால், எல்லை மீறிவிட்டது போன்ற ஒரு தோற்றாம் ‘காலா' திரைப்படத்தின் மூலம் ஏற்பட்டுவிட்டது. இது வருத்தமான நிகழ்வு. இந்த நேரத்தில் ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம். இது நம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

kala-teasure-8.jpg

ராமபிரான் ஒருமுறை குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். அதற்கு முன் தன்னுடைய அம்பை கரையில் ஊன்றிவைத்தார். குளித்து முடித்த பின், ஊன்றிய அம்பை கவனித்தார். அம்பு ஊன்றிய இடத்தில் ஒரு தவளை அம்பினால் குத்தப்பட்டு வழியும் இரத்தத்தோடு இருந்தது. அப்போது ராமபிரான் பேசினார்.

‘தவளையே! நான் அம்பை ஊன்றும் போது நீ கத்தியிருந்தால், உயிர் பிழைத்திருப்பாயே', என்றார்.

‘நான் எப்படி கத்துவேன் ராமா! என்னை யாராவது இம்சை செய்தால், ராமா . . . ராமா ...', என்று கத்துவேன். ராமனே என் மீது அம்பை ஊன்றும் போது யாரை உதவிக்கு கூப்பிடுவேன்?' என்றது தவளை.

அந்தத் தவளையின் நிலையில்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இந்துக்கள். ரஜினிகாந்த அவர்களே! உங்களை நாங்கள் ராவணனாக என்றுமே பார்த்ததில்லை. அப்படி பார்க்கவும் விரும்பவில்லை. அம்பை விட கூராக வடிவமைகப்பட்ட காட்சிகளாலும், வசனங்களாலும் குத்துபட்டு நிற்கும் எம்மக்கள் சொல்வது, ‘ரஜினிகாந்த அவர்களே! நீங்களுமா இப்படி?'

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

 

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/jun/11/ரஜினிகாந்த-அவர்களே-நீங்களுமா-இப்படி-2937634--3.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.