Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம் - கடைக்குட்டி சிங்கம்

Featured Replies

சினிமா விமர்சனம் - கடைக்குட்டி சிங்கம்

 
 

80களிலும் 90களிலும் குடும்பம் என்ற அமைப்பைப் போற்றும் சினிமாக்கள் வரிசைகட்டி வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாத்திரம் தியாகியாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவை சமீப காலமாக நகைச்சுவைப் படங்களும் பேய்ப் படங்களும் பிடித்து ஆட்டியதில் இந்த வகைப் படங்கள் இல்லாமலேயே போயின. இந்தப் படத்தின் மூலம் அந்த கடந்த காலத்திற்குள் கூட்டிச் செல்கிறார் பாண்டிராஜ்.

   
திரைப்படம் கடைக்குட்டி சிங்கம்
   
நடிகர்கள் கார்த்தி, சாயிஷா, அர்த்தனா பினு, பிரியா பவானி, சத்யராஜ், சூரி, பொன் வண்ணன், விஜி, பானுப்ரியா, இளவரசு, சந்துரு, சரவணன்
   
இசை டி. இமான்;
   
ஒளிப்பதிவு வேல்ராஜ்
   
இயக்கம் பாண்டிராஜ்
   
   
கடைக்குட்டி சிங்கம்படத்தின் காப்புரிமை2D ENTERTAINMENT

பெருநாழி ரணசிங்கம் (சத்யராஜ்) மிகப் பெரிய பணக்காரர். முதல் மனைவிக்கு (விஜி சந்திரசேகர்) ஆண் குழந்தை இல்லாததால், முதல் மனைவியின் தங்கையையே (பானுப்ரியா) திருமணம் செய்துகொள்கிறார். இதற்குப் பிறகு முதல் மனைவிக்கு ஆண்குழந்தையாகப் பிறக்கிறார் குணசிங்கம் (கார்த்தி). குணசிங்கத்திற்கு ஐந்து சகோதரிகள். இந்த சகோதரிகளில் இருவருக்கு திருமண வயதில் பெண்கள் இருக்கிறார்கள்.

ஒருவர் செல்லம்மா (ப்ரியா பவானி); மற்றொருவர் ஆண்டாள் (அர்த்தனா பினு). இவர்களில் ஒருவரை குணசிங்கம் கல்யாணம் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அவர் கண்ணுக்கினியாள் (சாயிஷா) என்ற வேறொரு பெண்ணைக் காதலிக்கிறார். இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன, அதை மீறி காதலித்த பெண்ணை குணசிங்கம் கைப்பிடித்தாரா என்பதுதான் கதை. இதற்கு நடுவில் கண்ணுக்கினியாளின் மாமாவாக வரும் வில்லனையும் (சந்துரு) சமாளிக்க வேண்டும்.

கடைக்குட்டி சிங்கம்படத்தின் காப்புரிமை2D ENTERTAINMENT

சேரன் இயக்கிய பாண்டவர் பூமி படத்தைப் போல, இந்தப் படத்திலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். யார், யாருக்கு எந்த வகையில் உறவு என்பதை குழப்பமில்லாமல் பதியவைப்பதற்காக படத்தின் முதல் அரை மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறார் இயக்குநர் . இந்த அரை மணி நேரத்தில் விவசாயத்தின் பெருமை, இயற்கை விவசாயத்தின் மகிமை ஆகியவற்றையும் சொல்வதால், நமது பொறுமை ரொம்பவுமே சோதனைக்குள்ளாகிறது.

ஆனால், இதற்குப் பிறகு கொஞ்சம் சுதாரித்துக்கொள்ளும் இயக்குநர், பிரதான கதைக்குள் நுழைகிறார். குடும்பத்திற்கு வெளியில் காதல், ஊருக்குள் சாதி உணர்வை வளர்த்து தலைவராக நினைக்கும் வில்லன், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நடந்த ஆணவக் கொலையை ஞாபகப்படுத்தும் சம்பவங்கள் என மெல்ல சூடுபிடிக்கிறது படம். அவ்வப்போது வில்லனின் ஆட்களை துவம்சம் செய்து, படத்தின் டெம்போ குறையாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர். முடிவில் ஒரு உருக்கமான காட்சிக்குப் பிறகு எல்லாம் சுபம்.

கடைக்குட்டி சிங்கம்படத்தின் காப்புரிமை2D ENTERTAINMENT

அவ்வப்போது பாடல்கள், கதாநாயகன் 50 பேரைப் பந்தாடும் சண்டைக்காட்சிகள், பெண்கள் உருக்கமாகப் பேசும் நீள நீள வசனங்கள் என பழைய பாணியிலேயே நகர்கிறது படம். ஆனால், இம்மாதிரிப் படங்களைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்டதாலும் சற்றே விறுவிறுப்பான திரைக்கதையாலும் தொடர்ந்து ஆர்வத்தைத் தக்கவைக்கிறது படம்.

கதாநாயகனின் தந்தை, ஆண் குழந்தைக்காக இரண்டு கல்யாணங்களைச் செய்வதும் மூன்றாவதாக திருமணம் செய்ய நினைப்பதும் படத்தின் பிற பாத்திரங்களால் ஆங்காங்கே விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், அது ஒரு குற்றமாக அல்லாமல் சாதாரண சம்பவம்போல படத்தின் பிற பாத்திரங்களால் பார்க்கப்படுவது உறுத்தலாக இருக்கிறது.

அதே நேரம், ஆணவக் கொலை செய்யும் நபரை வில்லனாக வைத்திருப்பது ஒரு நல்ல உத்தி. இருந்தும் காதாநாயகன் காதலிக்கும் பெண், யதேச்சையாக அவருடைய ஜாதியாகவே இருந்துவிடுகிறார்.

கடைக்குட்டி சிங்கம்படத்தின் காப்புரிமை2D ENTERTAINMENT

படம் முழுக்க குடும்பம் ஒற்றுமையாக இருப்பதையும் விவசாயத்தின் பெருமையையும் வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறார் இயக்குனர். ஆனால், இந்தக் குடும்ப ஒற்றுமைக்கு பெண்கள் விலைகொடுப்பது மேலோட்டமாக கடந்துசெல்லப்படுகிறது.

எத்தனை பேர் வந்தாலும் கதாநாயகன் குணசிங்கம் அடித்து நொறுக்கிவிடுவார் என்பதால், படத்தில் வரும் பயங்கரமான வில்லன் என்ன செய்வாரோ என்ற பதற்றம் ஏற்படவேயில்லை. இடைவேளைக்குப் பிறகு, ஒரே விவகாரம் திரும்பத் திரும்பப் பேசப்படும் போது சற்று அலுப்புத் தட்டுகிறது.

கடைக்குட்டி சிங்கம்படத்தின் காப்புரிமை2D ENTERTAINMENT

இம்மாதிரி கிராமத்துக் கதைகளுக்கென படைக்கப்பட்டவரைப் போலவே இருக்கும் கார்த்தி, அநாயாசமாக இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜாலியாக லூட்டியடிப்பது, பொறுப்பான மகனாக இருப்பது, சகோதரியின் பாசத்திற்காக உருகுவது என புகுந்துவிளையாடியிருக்கிறார் கார்த்தி.

கார்த்தியின் நண்பனாக வரும் சூரி செய்யும் காமெடிகள் பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கவில்லை. ஆனால், அவர் இல்லாமல் போயிருந்தால், இந்தப் படத்தை நினைத்தே பார்க்க முடியவில்லை.

 

 

வனமகன் மூலம் தமிழுக்கு அறிமுகமான சாயிஷாதான் இந்தப் படத்தின் கதாநாயகி. வனமகனில் இவரது நடிப்பு ரொம்பவுமே தனித்துத் தெரிந்தது. ஆனால், இந்தப் படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள் இருப்பதாலோ என்னவோ, சற்று மெருகு குறைந்திருக்கிறது.

குணசிங்கத்தின் முறைப் பெண்களாக வரும் அர்த்தனா பினு, பிரியா பவானிசங்கர் ஆகியோருக்கு படத்தின் பிற்பாதியில் நடிப்பதற்கு சற்று வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால், ஒரே மாதிரியான படங்களைப் பார்த்து அலுத்துப்போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடித்துப்போகக்கூடும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44818348

  • தொடங்கியவர்

``ரணசிங்கம், குணசிங்கம் மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காங்க!" - `கடைக்குட்டி சிங்கம்' விமர்சனம்

 

கொஞ்ச நாள்களாகக் கத்தியும் துப்பாக்கியுமாகத் திரிந்துகொண்டிருந்த கார்த்தியை ரத்தமும் சதையுமாகக் குடும்பக் கதைக்குள் கொண்டுவரும் முயற்சியே இந்தக் 'கடைக்குட்டி சிங்கம்.’

``ரணசிங்கம், குணசிங்கம் மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காங்க!
 

ரில் பெரிய தலைக்கட்டு சத்யராஜ். அவருக்கு விஜி, பானுப்ரியா என இரண்டு மனைவிகள். ஆண் குழந்தை வேண்டுமென்ற அவரின் ஆசையைப் பொய்க்கச் செய்து வரிசையாக ஐந்து பெண் குழந்தைகள் பிறக்கின்றன. கடைக்குட்டியாகப் பிறக்கிறார் 'விவசாயி' கார்த்தி. இரண்டு அம்மாக்கள், ஐந்து அக்காக்கள், போதாக்குறைக்கு இரண்டு முறைப்பெண்கள் எனத் தேவதைகள் சூழ் உலகு கார்த்தியுடையது. ஆனால், ஒருகட்டத்தில் கார்த்தியினாலேயே குடும்பத்துக்குள் பிளவு ஏற்படுகிறது. இருக்கும் பிரச்னைகள் போதாதென்று ஒரு ஜாதிவெறி குரூப் வேறு கார்த்தியைப் போட்டுத்தள்ளத் துடிக்க, மயிரிழையில் தப்பித்துக்கொண்டே இருக்கிறார் ஹீரோ. எதற்காக அந்த ஜாதிவெறி கும்பல் இவரைத் துரத்துகிறது, குடும்பத்துக்குள் ஏற்பட்ட விரிசல் சரியானதா என்பதே மீதிக்கதை.

கடைக்குட்டி சிங்கம்

விவசாயி குணசிங்கமாகக் கார்த்தி. காமெடி, சென்டிமென்ட், உறவுச் சிக்கல்கள் என அவரின் முழு முதல் குடும்பப் படம் இது. ஒரு குறையும் வைக்காமல் சூப்பராக நடித்திருக்கிறார். அத்தைப் பெண்களுடன் பட்டும்படாத ஊடல், அக்காக்களிடம் மிஞ்சிக் கெஞ்சுவது, முறுக்கிக்கொண்டுத் திரியும் மாமன்களின் வெட்டி ஜம்பத்தை அசால்ட்டாக டீல் செய்வது, சத்யராஜிடம் குழைவது என எல்லா ஃப்ரேம்களிலும் கார்த்தி மட்டுமே தெரிகிறார். கொஞ்ச நாள்களாக 'ஏ' சென்டரில் மையம்கொண்டிருந்த அவரை பி, சி சென்டர்களில் கொண்டு சேர்க்கும் முக்கியமான படமாக இது இருக்கும்.

 

 

சயீஷா - கிராமத்து மண்மணத்துக்குப் பொருந்தா அழகோடு வந்தாலும் கண்களை நிறைக்கிறார். எக்கச்சக்க கேரக்டர்கள் உலாவரும் படத்தில் அவருக்கான பங்கு கொஞ்சம்தான் என்றாலும், உறுத்தாத வகையில் நடித்துக்கொடுத்திருக்கிறார். ஃபேஸ்புக் பைத்தியமாக வரும் பிரியா பவானிசங்கரியும் "மாமா! மாமா!" எனச் சுற்றிச் சுற்றிவரும் அர்த்தனா பினுவும் நம் அத்தைப் பெண்களின் சாயலில் லேசாகத் தெறியத்தான் செய்கிறார்கள்.

 
 

 

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கத்தில் கட்டப்பாவின் கெட்டப் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சீனியர்மோஸ்ட் நடிகருக்கு நடிக்கத்தான் ஸ்கோப் இல்லை. ஒன்றிரண்டு காட்சிகளிலேயே பார்வையாளர்களைத் தன்வசப்படுத்திவிடும் சத்யராஜின் எனர்ஜி இந்தப் படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங். 

முன்பாதியில் ஒன்றிரண்டு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் சூரி. ஆனா, இன்னும் எத்தன நாளைக்கு இதே வாய் குழறுன மாடுலேஷனுல பேஜிகிட்டு இருக்கப்போறீங்க ஜூரி பாஜு? போரடிக்குது! இரண்டாம் பாதியில் சூரியோடு சேர்ந்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள் சரவணனும் இளவரசும். கிராமத்தில் லந்து பண்ணும் பெரியப்பாக்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. மெளனிகா, யுவராணி, தீபா, இந்துமதி, ஜீவிதா என ஐந்து அக்காக்களும் தங்களுக்குள் யார் பெஸ்ட் எனப் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள் போல! அவ்வளவு இயல்பான நடிப்பு. மாமன்களாக வரும் ஶ்ரீமனும் மாரிமுத்துவும் பாட்டியாக வரும் அம்மாச்சியும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

 

 

படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் என்பதால் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்லவே இரண்டு நாள்களாகும் போல! ஒவ்வொருவரும் நம் கிராமத்து சொந்தங்களை அப்படியே கண்முன் கொண்டுவருகிறார்கள். இதற்காக மட்டுமல்ல, இயக்குநரை இன்னொரு விஷயத்துக்காகவும் பாராட்டியே ஆக வேண்டும். படத்தில் அனைவருக்குமே தூய தமிழ்ப் பெயர்கள். பெருநாழி குணசிங்கம், கண்ணுக்கினியாள், அதியமான் நெடுங்கிள்ளி, வானவன் மாதேவி எனக் கம்பீரமாக ஒலிக்கின்றன பெயர்கள்.

வேல்ராஜின் கேமரா விவசாய நிலங்களின் வனப்பை அப்படியே கேமராவுக்குள் கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் பச்சையும் பசுமையுமாக.. ஜில்ஜில்! அவருக்கு பக்காவாக ஒத்துழைத்திருக்கிறார் கலை இயக்குநர் வீரசமர். இமானின் இசையில் எல்லாப் பாடல்களும் வழக்கம்போல 'ஆல்ரெடி கேம் ப்ரோ' டோனிலேயே இருக்கின்றன. சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயனின் சாய்ஸா இல்லை இயக்குநரின் சாய்ஸா எனத் தெரியவில்லை. ஒரே மாதிரியான மூன்று ஸ்டன்ட் சீக்வென்ஸ்கள் - ஆடியன்ஸுக்கு கொட்டாவிதான் வருகிறது. முன்பின் ஃபினிஷிங் இல்லாத நிறைய காட்சிகளால் எடிட்டருக்கு எக்கச்சக்க வேலை இருந்திருக்கும்!

கடைக்குட்டி சிங்கம்

வில்லன் சந்துருவுக்கான ஆரம்பகட்ட பில்ஃப் காட்சிகள் விறுவிறு ஆக்‌ஷன் படத்துக்கான டெம்போவை தக்க வைக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ஏமாற்றமளிக்கிறார். ஹீரோ விவசாயிதான். அதை நிறுவ படத்திலும் ஏகப்பட்ட காட்சிகள் இருக்கின்றனதான். ஆனால் வில்லனிடம் பன்ச் பேசும்போதுகூட, 'நான் விவசாயிடா' என்பதெல்லாம் ஓவர்டோஸ்! 

படத்தின் முக்கிய மைனஸ் நீளம்தான். கதையின் கனம் முழுக்க இரண்டாம் பாதியில் தங்கியிருப்பதால் முதல்பாதி வீக்காக இருக்கிறது. முதல்பாதியில் அத்தனை உறவுகளையும் அறிமுகப்படுத்தும் காட்சி சற்றே நீளம் என்றாலும் புதுசு. இன்டர்வெல் வரை கேரக்டர்களின் டெஸ்க்ரிப்ஷனிலேயே கவனம் செலுத்தியதாலோ என்னவோ அந்த வீக்னஸ் துருத்தித் தெரிகிறது. 

ப்ரீ க்ளைமாக்ஸும் சரி, க்ளைமாக்ஸும் சரி நிச்சயம் தாய்க்குலங்களை டிஷ்யூ பேப்பர் தேடவைக்கும். அதில் வெற்றி பாண்டிராஜுக்கே! ஆனால், படத்தின் வசனங்களில் அநியாய நாடகத்தன்மை. 'நெல்லு வெதைக்கிறதும் முக்கியம், சொல்லு வெதைக்கிறதும் முக்கியம்', 'உனக்கு பாடம் எடுத்ததுக்கு அவனை பாடைல அனுப்பிட்டீயே!', 'சரி செய்றதை சரியா செய்யணும்', 'உறவுல வேகுறதைவிட வெறகுல வேகலாம்', மொதல்ல அவன் கெத்த சாகடிக்கணும் அப்புறம் அவன் சொத்தை சாகடிக்கணும்' - இப்படி ரைமிங் வசனங்களை வைத்து  எங்களை சோதிக்கிறீங்களே இயக்குநர் சார்? 

கடைக்குட்டி சிங்கம்

'குழந்தைல ஆம்பள என்ன பொம்பள என்ன' எனக் கேட்கிறார் ஹீரோ. 'ஒரு பொண்ணும் பையனும் பேசுனாலே லவ்வா' எனவும் சாட்டை சுழற்றுகிறார்! ஆணவக்கொலை பற்றியும் பேசுகிறார். நல்லது! ஆனால், அப்பாவும் மகனும் போட்டி போட்டுக்கொண்டு, 'நீ ஒரு ஆம்பளன்னா நேர்ல வாடா' என வில்லனிடம் திரும்பத் திரும்ப சொல்கிறார்களே... அதென்ன கணக்கு சார். ஏன் இந்த ப்ரிவிலேஜ் மனநிலை? 

பல கேரக்டர்கள், பலமான பில்டப் எல்லாம் படத்தில் இருக்கின்றன. ஆனாலும், இயல்பான ஏதோவொன்று மிஸ்ஸிங். அனைவரும் சொல்லி வைத்ததுபோல செய்ய வேண்டியதை சரியான சமயத்தில் செய்துவிட்டுப் போகிறார்கள். கூடக்குறைச்சல் இல்லாமல் எல்லாம் அளவாக, அழகாக இருக்கிறது. இதனாலேயே மிக நேர்த்தியான மெகா சீரியல் பார்க்கும் உணர்வு உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை.

வசனங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி... நீளத்தைக் குறைத்து... இப்படி சில குறைகளும் சொல்லலாம்தான்! ஆனாலும், குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கத்தைப் பார்க்க ஒரு ட்ரிப் போய்விட்டு வரலாம். ரை... ரைட்!

https://cinema.vikatan.com/movie-review/130753-kadaikutty-singam-tamil-movie-review.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: கடைக்குட்டி சிங்கம் - என் பணம் வீண்போகல!

 

 
Untitledpng

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்திக், சயிஷா, ப்ரியா பவானி சங்கர், சத்யராஜ், சூரி ஆகியோர் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் இந்த வாரம் வெளிவந்துள்ளது. இப்படம் குறித்த தங்கள் விமர்சனத்தை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்டிஸில்...

Prakash

 

‏#KadaikuttySingam குடும்பங்களுடன் சென்று பார்த்துக் கொண்டாடவேண்டிய படம் பல நாட்கள் கழித்து சொந்தங்களை எண்ணி கண்கலங்கவைத்த படம்.

வில்லாதி   வில்லன்    

‏மனசாட்சி இல்லாம அழ வைக்கிறானுவடா எப்பா  #KadaikuttySingam ✌

KING

‏ குடும்பக் காவியம்.

RO͛ɮ

‏கடைக்குட்டி சிங்கம் ரொம்ப நாள் அப்புறமா ஒரு பக்கா பேமிலி எண்டெர்டெய்னர் #KadaikuttySingam

GuGa

என் குடும்பத்தை miss பண்றேன். 2half என் குடும்பத்துக்குள்ள போன feel கிடைத்தது.

✌543 ✌

விவசாயம்  பத்தி செம்மையா சொல்லியிருக்காங்க.  யாருமே இப்படி

சொன்னதில்ல... என்னைப் பொறுத்தவரைக்கும்..   

Dinesh Kumar M

‏ குடு இன்பம் - குடும்பம்...

இரண்டையும் சரியாகப் பொருத்தி ‌காட்டினீர் அண்ணா... #KadaikuttySingam ஒருநாள் விவசாயியாக ‌இருந்து பார், இல்ல விவசாயிகூட இருந்து பார்... செம மாஸ்...

sakthi Dinakaran

‏அடுத்தவனை சந்தோஷப்படுத்தறவனை தான்

இந்த உலகம் அதிகமாக கஷ்டப்படுத்துது !!!

பாண்டிராஜ் As usual Your Dialogues          

sakthi Dinakaran

‏ரொம்ப நாள் ஆயிடுச்சுயா இந்த மாதிரி நல்ல குடும்பப் படம் பார்த்து.      

Tamilselvan

‏#KadaikuttySingam நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த திரைப்படம். கட்டாயம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திரைப்படம்

Mohamed Haja Kamil

‏100% தரமான குடும்பச் சித்திரம்.

 உறவுகளின் பாலம்.......

விவசாயிகளின் வாழ்க்கை....

கடைக்குட்டி சிங்கம்.

தேவா

எவன் சொல்றதையும் காதுல வாங்காதீங்க. படத்த தியேட்டர்ல பாருங்க. உங்களையே அறியாம சொந்தத்தைத் தொலைச்ச ஏக்கத்தோடதான் வெளிய வருவீங்க...

rishnan

‏அருமை. தரமான கதைக்களத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் திறமையானவர்  கார்த்தி. இயல்பான கதைக்களத்தில் எதார்த்த வசனங்களில் எளிமையானவர் பாண்டிராஜ். குடும்பங்கள் கொண்டாடும் நிறைவான திரைப்படம்.

Ranjith

‏#KadaikuttySingam சிம்பிளா சொல்லணும்னா . படம்னா இதுதான் படம். விவசாயம் மற்றும் குடும்பப் படமாக்கியிருக்கிறார்கள்...நன்றி. என் பணம் வீண்போகல.

RRM SRI RISHIKHESHEN

‏ரொம்ப நாள் கழித்துப் பார்த்து ரசித்த ஒரு அருமையான குடும்ப கதைக்களம் கொண்ட திரைப்படம். அரங்கை விட்டு வரும் போது ஆத்மார்த்தமான திருப்தி.

meenakshisundaram

உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால், ரசிகர்களை அழ வைக்க முடியும் என கடைக்குட்டி சிங்கத்தில்  நிரூபித்து இருக்கிறார் கார்த்தி. சூரி காமெடியும் ரசிக்க வைக்கிறது.

ᗰᖇ. ᕼOᑎEᔕTY™   

‏குடும்பம்  

விவசாயம்  

காமெடி  

ஆனா செகண்ட் ஹாஃப் கொஞ்சம் ஸ்பீடா இருந்திருக்கலாம் மத்தபடி ஓகேஸ்

தமிழும் நானும்

‏சிறந்த படைப்பு சார்!! (கடைக்குட்டி சிங்கம்) பின்னிட்டீங்க...

வாழ்த்துகள்..!

நகரத்துல்ல இருக்குற பிள்ளைங்ளை கிராமத்தை நோக்கி இழுக்கணும் - விவசாயி

சங்கிலி 

‏பாண்டிராஜ்  சல்யூட் தலைவா. உங்க படத்தப் பாத்த அப்பறம் கூட்டுக் குடும்பமா வாழ்றவுங்க சந்தோஷப்படுவாங்க. தனியா இருக்கவுங்க ஒண்ணா வாழ ஆசைப்படுவாங்க !!!

எம்.ஜி.ஆர்.தாசன்

‏ரொம்ப  நாளைக்கு அப்புறம்  ஒரு  நல்ல மிகச்சிறந்த  குடும்பப்  படம்  பார்த்த மகிழ்ச்சி  கடைக்குட்டி  சிங்கம்  படம் மூலமா  கிடைச்சது

 Kettavan  

‏சூர்யாவுக்கு ஒரு வேல்

கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம்..

ரொம்ப நாள் மிஸ் பண்ணிய ஃபேமிலி சப்ஜெக்ட்.

JSK.GOPI

‏கடைக்குட்டிசிங்கம் மிக அருமையான திரைப்படம்

தமிழ் சினிமாவில் நீண்ட நாள் கழித்து வந்துள்ள பந்த பாசம் நிறைந்த குடும்பத் திரைப்படம்

சொத்து சேர்க்குறதுமட்டும் பெருசு இல்ல, சொந்தத்தையும் சேர்க்கணும் அதான் பெருசு:-இந்த வசனத்தை எழுதியவருக்கும் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனதுபாராட்டுகள்.

Αrυη

‏நீண்ட நாட்களுக்குப் பிறகு பல இடங்களில் மனதைத் தொட்ட படம்...!

INDIAN         

‏வாழையும் காளையும் வீட்டின் ஒருவராக சித்தரித்ததற்கு நன்றி.

“பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மென்ட் வீக்...” - ரக்‌ஷிதா ‘கலகல’ பேட்டி

http://tamil.thehindu.com/opinion/blogs/article24419066.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.