Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் சாம்பியன்

Featured Replies

உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் சாம்பியன்

 
 
france,croatia,final,FIFA,football
Colors:
  •  
  •  
  •  
  •  
 
 

 

  •  
  •  
  •  
  •  

மாஸ்கோ : உலக கோப்பை கால்பந்து போட்டியின் பைனலில் குரோஷியாவை 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

ரஷ்யாவில், 21வது 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் மாஸ்கோவில் நடக்கும் பைனலில் பிரான்ஸ், குரோஷியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

போட்டியின் 18வது நிமிடத்தில் பிரீகிக் வாய்ப்பில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மான் அடித்த பந்தை தடுக்க முற்பட்ட குரோஷியா வீரர் மான்ஸ்சுகிக் தலையில் பட்டு 'சேம் சைடு' கோலானது. தொடர்ந்து 28வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் அட்டகாச கோல் அடிக்க போட்டி சமனானது.

38வது நிமிடத்தில் கோல் ஏரியாவுக்குள் வைத்து குரோஷிய வீரர் கையில் பந்து பட்டதால் பிரான்சுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் கோல் கீப்பரை ஏமாற்றி லாவகமாக வலைக்குள் பந்தை தள்ளிய கிரீஸ்மான், தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 2 - 1 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் பிரான்ஸ் வீரர்கள் அசத்தினர். 59வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பவுல் போக்பா கோல் அடித்தார். 65வது நிமிடத்தில் மபபே கோல் அடிக்க 4 - 1 என வலுவான முன்னிலை பெற்றது. 69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் தவறால், குரோஷியாவின் மான்ட்சுகிச் கோல் அடித்து போட்டியில் விறுவிறுப்பை ஏற்றினார். இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. முடிவில் 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=2062184

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை கால்பந்து- குரோசியாவை 4-2 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ்

 
அ-அ+

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரோசியாவை 4-2 என வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. #WorldCup2018 #Pogba

 
 
 
 
உலகக்கோப்பை கால்பந்து- குரோசியாவை 4-2 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ்
 
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

48-வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை. தொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது. மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார். அவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றது.

201807152229224537_1_mbappe005-s._L_styvpf.jpg

69-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரான்ஸ் கோல் எல்லைக் கோட்டிற்குள் வைத்து பிரான்ஸ் வீரர் பாதிகாப்பாக கோல் கீப்பர் லோரிஸிடம் பந்தை அடித்தார். அதை லோரிஸ் அஜாக்கிரதையாக திருப்பி அடிக்க முயன்றார். அப்போது அருகில் நின்ற குரோசியா வீரர் மாண்ட்சுகிச் மீது பட்டு கோல் கம்பத்திற்குள் புகுந்தது. இதனால் குரோசியா இரண்டு கோல் அடித்தது. பிரான்ஸ் முன்னிலை 4-2 எனக் குறைந்தது.

அதன்பின் எவ்வளவு போராடியும் குரோசியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 4-2 என குரோசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
 
 
  • தொடங்கியவர்

உலகக்கோப்பை போட்டியில் தங்கப்பந்து மற்றும் தங்க ஷு யாருக்கு கொடுக்கப்பட்டது தெரியுமா?

 

 

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை திருவிழாவில் இங்கிலாந்து வீரர் ஹரி கேனுக்கு தங்க ஷு கொடுக்கப்பட்டது.

ரஷ்யாவில் நடைபெற்ற 21-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோவில் நடைபெற்றது.

இதில் பிரான்ஸ்-குரோசியா அணிகள் மோதிய ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாதனை படைத்தது.

20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் தலைவர் Harry Kane-க்கு தங்கஷு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக்கோப்பையில் Harry Kane 6 கோல் அடித்துள்ளார். கடந்த 1986-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து வீரர் Gary Lineker 6 கோல் அடித்திருந்தார்.

அதன் பின் தற்போது Harry Kane 6 கோல் அடித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து குரோசியா அணியின் நட்சத்திர வீரரான லுகா மேட்ரிக்கிற்கு தங்கப்பந்து கொடுக்கப்பட்டுள்ளது.

View image on Twitter
 
 

FIFA Young Player Award: Kylian MBAPPE #FRA
Golden Ball Award: Luka MODRIC #CRO #WorldCup

 

மேலும் பிரான்ஸ் அணியின் இளம் வீரரான Kylian MBAPPE-க்கு இந்தாண்டு உலகக்கோப்பைக்கான சிறந்த இளம் வீரர் என்ற விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

http://news.lankasri.com/football/03/183519?ref=imp-news

  • தொடங்கியவர்

உலககோப்பை கால்பந்து 2018: குரேஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்

உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

• பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பிபடத்தின் காப்புரிமைMATTHIAS HANGST

உலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டம் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்துவருகிறது. பிரான்ஸ் அணி அரை இறுதியில் பெல்ஜியத்தையும், குரேஷியா இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தன.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்து இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது. எனினும் இறுதியில் பிரான்ஸ் வென்றது.

குரேஷிய வீரர் லூகா மோட்ரிக் மற்றும் பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பிபடத்தின் காப்புரிமைCATHERINE IVILL Image captionகுரேஷிய வீரர் லூகா மோட்ரிக் மற்றும் பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி

உலக கோப்பை தொடரில் யாருக்கு என்ன விருது ?

  • இங்கிலாந்து அணித்தலைவர் ஹேரி கேன் இந்த உலககோப்பை தொடரின் தங்க ஷூவை வென்றார்.
  •  
  • இத்தொடரின் சிறந்த வீரருக்கான தங்க பந்தை குரேஷிய வீரர் லூகா மோட்ரிக் வென்றார்
  •  
  • பெல்ஜியம் நடுகள வீரர் ஈடன் ஹஜார்டு இரண்டாவது சிறந்த வீரராகவும் மற்றும் பிரான்ஸின் ஆன்டாய்னி கிரீஜ்மென் மூன்றாவது சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுப்பட்டனர்.
  •  
  • பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி சிறந்த இளம் வீரர் விருதை வென்றார்.
  •  
  • பெல்ஜியம் வீரர் திபாவுட் கோர்டியோஸ் முன்னணி கோல் கீப்பராக விளங்கியதால் கோல்டன் குளொவ் விருதை ஜெயித்தார்.
  •  
  • 1986 -க்கு பிறகு உலக கோப்பை தொடரில் கோல்டன் ஷூ விருது வெல்லும் முதல் இங்கிலாந்து வீரர் ஆனார் கேன்.

முதல் பாதியில் என்ன நடந்தது?

பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் ம்பாப்பி ஆட்டத்தின் தொடக்க சில நிமிடங்களில் பந்தை தவறவிட்டுக்கொண்டிருந்தார்.

உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி:படத்தின் காப்புரிமைVI-IMAGES

சொந்த அணிக்கு எதிராக கோல் போட்ட மரியோ மண்ட்ஜூகிக்.

ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. பிரான்ஸ் வீரர் ஆன்டோன் கிரீஜ்மன் அட்டகாசமாக பந்தை உதைத்தார். அந்த பந்தை தலையில் முட்டி தடுப்பதற்காக எம்பினார் குரோஷியா வீரர் மரியோ மண்ட்ஜூகிக். ஆனால் பந்து அவர் தலையில் பட்டு இன்னும் எம்பி கோல் கீப்பரின் கையில் தஞ்சம் அடையாமல் குரேஷியாவின் வலையில் விழுந்தது .

இதையடுத்து உலககோப்பை இறுதி போட்டியில் 1-0 என்ற முன்னிலையுடன் விளையாடத்துவங்கியது பிரான்ஸ்.

ஆனால் விரைவிலேயே குரோஷியா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் பெரிசிச் இடது காலால் ஒரு கோல் அடித்தார்.

குரோஷியா வீரர் பெரிசிச்படத்தின் காப்புரிமைSHAUN BOTTERILL

குரோஷிய வீரர்கள் இந்த உலக கோப்பையில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து ஆட்டத்தில் பின்தங்குவதும் பின்னர் மீண்டு வந்து வெற்றி பெறுவதுமாக இருந்தனர். டென்மார்க் அணிக்கு எதிராக ரவுண்ட் ஆஃப் 16, ரஷ்ய அணிக்கு எதிராக காலிறுதி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதி போட்டிகளில் முதல் கோல் எதிரணி அடித்திருந்தாலும் மீண்டும் வந்து வென்றது குரேஷியா.

ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஆன்டோனி கிரீஜ்மன் ஒரு கோல் அடித்தார். பத்தே நிமிட இடைவெளியில் மீண்டும் முன்னிலை பெற்றது பிரான்ஸ் அணி.

 

 

உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பத்து நாக் அவுட் போட்டிகளில் 12 கோல்களை தானாக அடிக்கவோ அல்லது இன்னொரு வீரர் அடிக்கவோ உதவியுள்ளார் ஆன்டோனி கிரீஜ்மன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்ஸ் வீரர் ஒருவர் நாக்அவுட் போட்டிகளில் செய்த மிகப்பெரிய சாதனை இது. முன்னதாக ஜினடின் ஜிடேன் எட்டு கோல்களை அடித்ததே பிரான்ஸ் வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது.

முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டிபடத்தின் காப்புரிமைCATHERINE IVILL

இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் பால் போக்பா அடித்த கோலால் பிரான்ஸ் 3-1 என முன்னிலை பெற்றது.

குரோஷியா அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி கிட்டத்தட்ட 22 யார்டு தூரத்தில் இருந்து கோல் அடிக்கவே பிரான்ஸ் 4-1 என மிகப்பெரிய முன்னிலை பெற்றது. குரேஷியா கோல் கீப்பரால் கோல் மழை தனது வலையில் பொழிவதை பார்க்க மட்டுமே முடிந்தது.

வெற்றி கொண்டாட்டத்தில் பிரான்ஸ் வீரர்கள்படத்தின் காப்புரிமைIAN MACNICOL Image captionவெற்றி கொண்டாட்டத்தில் பிரான்ஸ் வீரர்கள்

தொடர்ச்சியாக கோல் வாங்கிக் கொண்டிருந்தாலும் குரேஷியா தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் மரியோ மண்ட்ஜூகிக் ஒரு கோல் அடிக்க குரேஷியாவின் நிலை 2- 4 என்றானது.

உலககோப்பை கால்பந்து மற்றும் ஈரோ கோப்பை/சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் கோல் அடித்த ஐந்தாவது வீரர் ஆனார் மரியோ மண்ட்ஜூகிக்.

முன்னதாக ஃபெரன்க் புஸ்கஸ், ஜோல்டன், முல்லர், ஜினடின் ஜிடேன் இந்த சாதனையைச் செய்திருந்தனர்.

போட்டி முடிவில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் வென்றது.

https://www.bbc.com/tamil/sport-44840364

  • தொடங்கியவர்

இரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியது பிரான்ஸ் (வீடியோ,படங்கள் இணைப்பு)

 

 
 

ஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் குரோஷியாவை 4 க்கு 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட பிரான்ஸ் கடந்த 20 வருடங்களில் இரண்டாவது தடவையாக பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியனானது.

12_france_final_world_champions.jpg

1998, 2006 ஆகிய வருடங்களைத் தொடர்ந்து மூன்றாவது தடவையாக உலக கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ், இன்றைய இறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட அணியாக காணப்பட்டது.

ஆனால் போட்டியின் 18ஆவது நிமிடத்தில் மரியோ மாண்ட்சூக்கிச் போட்டுக்கொடுத்த சொந்த கோல் பிரான்ஸை உற்சாகமடையச் செய்தது.

9_france_final_best_yourg_player_mbappe_

அந்த சந்தர்ப்பத்தில் பிரான்ஸுக்கு கிடைத்த ப்றீ கிக்கை அன்டொய்ன் க்றீஸ்மான் 30 யார் தூரத்திலிருந்து உதைக்க குரோஷிய வீரர் மரியோ மாண்சூக்கிச் தலையால் பின்னோக்கி தட்டி தனது சொந்த கோலுக்குள்ளேயே பந்தை புகுத்த, பிரான்ஸ் முன்னிலை அடைந்தது.

8_france_final_great_gesture_by_france_a

எனினும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் கிடைத்த ப்றீ கிக்கை புத்திசாதுரியமாக வலப்புறமாக அணித் தலைவர் லூக்கா மொட்ரிச் உதைக்க அங்கிருந்த வீரர் தலையால் முட்டி பந்தை பெனல்டி எல்லையை நோக்கி நகர்த்தினார். அங்கு மற்றொரு குரோஷிய வீரர் தலையால் தட்டி ஐவன் பெரிசிச்சுக்கு கொடுக்க அவர் இடது காலால் பலமாக உதைத்து கோல் நிலையை சமப்படுத்தினார்.

37183269_2124829414450689_73491648571129

ஆனால் போட்டியின் 38ஆவது நிமிடத்தில் பெரிசிச் பந்தை கையால் தட்டியமைக்கு பெனல்டி ஒன்றைத் தாரைவார்த்தார்.

பிரான்ஸ் வீரர் அன்டொய்ன் க்றீஸ்மான் எடுத்த கோர்ணர் கிக்கை நோக்கி உயரே தாவிய ஐவன் பெரிசிச்சின் கையில் பட்ட பந்து வெளியே சென்றது. இதனை அடுத்து பிரான்ஸ் வீரர்கள் பெனல்டி கோரினர். தொடர்ந்து வீடியோ மத்தியஸ்தரின் உதிவியை நாடிய பிரதான மத்தியஸ்தர் பிட்டானா நெஸ்டர், பிரான்ஸுக்கு பெனால்டியை வழங்கினார். க்றீஸ்மான் மிக இலகுவாக பந்தை கோலினுள் புகுத்தி பிரான்ஸை மீண்டும் முன்னிலையில் இட்டார்.

3_france_final_ref_gatting_the_var_assis

இடைவேளையின்போது பிரான்ஸ் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

இடைவேளையின் பின்னர் சுமார் 15 நிமிடங்கள் வரை குரோஷியா கடுமையாக போராடியபோதிலும் கோல்போடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக மேலதிக நேரத்தில் விளையாடிய குரோஷிய வீரர்களிடம்  உடல்பலம் குன்றி இருந்ததை அவதானிக்க முடிந்தது.

2_france_final_ivan_pericic_celebrates_a

இதனை சாதமாக்கிக்கொண்ட பிரான்ஸ் 6 நிமிட இடைவெளியில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டது.

போட்டியின் 59ஆவது நிமிடத்தில் போல் பொக்பா அடுத்தடுத்து இரண்டு முயற்சிகளை எடுத்து இரண்டாவது முயற்சியில் பிரான்ஸின் மூன்றாவது கோலைப் போட்டார். வலதுகாலால் உதைத்த பந்து குரோஷிய வீரரின் மேல்பட்டு திரும்பிவந்தபோது பொக்பா இடதுகாலால் உதைத்து இலகுவாக கோல் போட்டார்.

1_france_final_mandzukic_own_goal_1.jpg

மெலும் ஆறு நிமிடங்கள் கழித்து கிலியான் எம்பாப்பே வெகமாக பந்தை முன்னொக்கி நகர்த்திச் சென்று அலாதியான கோல் ஒன்றைப் போட்டு பிரான்ஸை 4 க்கு 1 என முன்னிலையில் இட்டார்.

போட்டியின் 69ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் காப்பாளர் ஹியூகொ லோரிஸ் இழைத்த தவறினால் குரோஷியாவுக்கு கோல் ஒன்று கிடைத்தது.

XP3A3WI3KE6ZPMZVDKZX7KFGMM.jpg

பிரான்ஸின் பின்கள வீரர் பின்னோக்கி பரிமாறிய பந்தை லோரிஸ் தனது பாதத்தால் கட்டுப்படுத்திய அதேவேளை வேமாக ஓடிவந்த மரியோ மாண்ட்சூக்கிச்சுக்கு வித்தைக் காட்டி பந்தை முன்னோக்கி உதைக்க முற்பட்டபோது பந்து மாண்ட்சூக்கிச்சின் வலதுகாலில் பட்டு கோலினுள் புகுந்தது.

எனினும் அதன் பின்னர் பிரான்ஸ் வீரர்கள் அனைவரும் நிதானத்துடனும் கட்டுப்பாட்டுடனும் விளையாடி உலகக் கிண்ணமும் தங்கப் பதக்கமும் தங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தனர்.

201807152224030956_World-cup-2018-France

உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் அறிமுகமான 20 வருடங்களில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற குரோஷியா, வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.

இதேவேளை, பிரான்ஸ் கோல்காப்பாளருக்கும் குரோஷியா கோல்காப்பாளருக்கும் இடையிலான போட்டியாக இறுதிப் போட்டி அமையும் என எமது இணையத்தில் எதிர்வு கூறியிருந்ததைப் போன்று போட்டி அமைந்தமை குறிப்பிடத்தக்கது. 

37238794_10160994504130019_6727364106455

இது இவ்வாறிருக்க, 1998இல் பிரான்ஸ் உலக சம்பியனானபோது அணியில் வீரராக இடம்பெற்ற டிடியர் டெஸ்சாம்ப்ஸ் இம்முறை பிரான்ஸ் அணியின் பயிற்றுநராக உலகக் கிண்ணத்தை வென்று சாதனை புரிந்துள்ளார்.

இதன் மூலம் மரியோ ஸகல்லோ (பிரேஸில்), பிரான்ஸ் பெக்கன்போயர் (ஜேர்மனி) ஆகியோரைத் தொடர்ந்து வீரராகவும் பயிற்றுநராகவும் உலகக் கிண்ணத்தை வென்ற மூன்றாமவர் என்ற பெருமையை டெஸ்சாம்ப் பெற்றுக்கொண்டுள்ளார். (என்.வீ.ஏ.)

 

விசேட விருதுகள்

அதி சிறந்த வீரருக்கான தங்கப் பந்து: லூக்கா மொட்ரிச் (குரோஷியா)

அதிக கோல்களுக்கான தங்கப் பாதணி: ஹெரி கேன் (இங்கிலாந்து 6 கோல்கள்)

சிறந்த கோல்காப்பாளருக்கான தங்கக் கையுறை: திபோட் கோர்ட்டொய்ஸ் (பெல்ஜியம்)

அதி சிறந்த இளம் வீரர்: கிலியான் எம்பாப்பே (பிரான்ஸ்)

நேர்த்தியான விளையாட்டு விருது:: ஸ்பெய்ன்

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

உலக கோப்பை வெற்றி: வரம்பு மீறிய ரசிகர்கள்; வன்முறையில் முடிந்த கொண்டாட்டம்- 2 பேர் பலி

 

 
VBK-FRANCEjpg

உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பை வென்ற மகிழ்ச்சியை பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். கொண்டாட்டம் வரம்பு மீறி வன்முறையாக வெடித்தது. கொண்டாட்டங்களில் 2 பேர் பலியாகினர்.

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்த மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கின.

           
 
 

இந்த போட்டியில், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். அந்த அணி 1998-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த அணி மீண்டும் மகுடம் சூடியுள்ளது.

20180716111547819534e2ed2c3e0a516a1e5dbd
 
17clashesworldgbhasdfggh1531696489jpg
 

அதேவேளையில் முதன் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் குரோஷியா அணியின் கனவு நிறைவேறாமல் போனது. சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு கோப்பையுடன் ரூ.257 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அதேவேளையில் 2-வது இடம் பெற்ற குரோஷியா அணி ரூ.191 கோடி பரிசுத் தொகையை பெற்றது.

களைகட்டிய கொண்டாட்டம்

20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்றதை பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொது இடங்களில் திரண்டு கால்பந்து ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

பாரீஸ் நகர வீதிகளில் திரண்ட ரசிகர்கள் ஆடிபாடி கொண்டாடினர். முகமூடியை அணிந்தும், தேசியக்கொடியையும் ஏந்த வந்த ரசிகர்கள் வாகனங்களை நிறுத்தி சாலையில் ஆடிபாடினர். இதையடுத்து பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிக்கப்பட்டனர்.

20180716111547819534e2ed2c3e0a516a1e5dbd
 

கொண்டாட்டத்தின் போது, சிலர் மதுபானங்களை அருந்தியதால் போதை மிகுதியுடன் வரம்பு மீறி நடந்து கொண்டனர். இந்த பரபரப்பால் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சில ரசிகர்கள் மதுபான கடைகளை உடைத்து உள்ளே இருந்த மதுபான பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

ரசிகர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டதால் சில இடங்களில் போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். வேறு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சியடித்தும் கூட்டத்தை போலீஸார் கலைத்தனர்.

bc80bf0671055856e21041c67574e65d08e2e9db
 

வாகனம் மீது தாக்குதல்

அந்த இடத்தில் இருந்து கலைந்து செல்ல மறுத்தக் கூட்டம் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டது. பாரீஸ் மட்டுமின்றி லியோன் உள்ளிட்ட நகரங்களிலும் கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறியது. நள்ளிரவு வரை ரசிகர்கள் கூடி கொண்டாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்களை கலைப்பதற்கு போலீஸார் பெரிதும் சிரமப்பட்டனர்.

இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை வழிமறித்து ஒரு கும்பல் தாக்கியது. இருசக்கர வாகனங்கள், கார்களில் சென்ற குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வன்முறை கும்பல் தாக்குதலில் காயமடைந்தனர்.

சாலையில் மதுபான பாட்டில்களை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். லியானில் உள்ள சிட்டி சென்டர் பகுதியில் நூற்றுக் கணக்கானோர் திரண்டு வன்முறையில் ஈடுபட்டதால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை போலீஸார் கலைத்தனர்.

153169226000017P7FVjpg
 

 

file711552ysg2g104ghvei0153172jpg
 

2 பேர் பலி

இதுகுறித்து பிரான்ஸ் போலீஸார் கூறுகையில் ‘‘இது கொண்டாட்டம் அல்ல. வரம்புமீறி நடந்து கொள்ளும் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் போலீஸாருக்கு உள்ளது. எனவே தான் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டிய தேவை ஏற்பட்டது’’ எனக் கூறினர்.

ஆல்பின் நகரில் ரசிகர் ஒருவர் உற்சாகத்தில், கால்வாயில் குதித்த போது அவரது கழுத்து முறிந்து பலியானார். இதுபோல் செயின்ட்-பெலிக்ஸ் நகரில், ரசிகர்கள் சிலர் ஆடிப்பாடிக் கொண்ட காரில் சென்றனர். அந்த காரை ஓட்டிச் சென்ற 30-வது வயது ரசிகர் உற்சாக மிகுதியில் தாறுமாறாக கார ஓட்டினார். அப்போது கார் மரத்தில் மோதி அவர் உயிர் இழந்தார். காரில் இருந்த மற்றவர்கள் காயமடைந்தனர்.

17clashesworldgbhasdfggh1531696489jpg

http://tamil.thehindu.com/sports/article24431743.ece

  • தொடங்கியவர்

2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் - 10 சுவாரசிய தகவல்கள்

உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது.

ஆன்டோனி கிரீஜ்மன்.படத்தின் காப்புரிமைSHAUN BOTTERILL Image captionஆன்டோனி கிரீஜ்மன்

உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை நேயர்களுக்காக வழங்குகிறோம்.

1. ஒரு அணியில் ஆட்ட வீரராகவும், ஒரு அணிக்கு மேனேஜராகவும் இருந்து உலக கோப்பையை வென்ற மூன்றாவது நபரானார் டெஸ்சாம்ப்ஸ். இதற்கு முன்னதாக பிரேசிலின் மரியோ ஜகல்லோ மற்றும் ஜெர்மனியின் பிரான்ஸ் பெக்குன்பெர் இந்தச் சிறப்பை பெற்றிருந்தனர்.

2. நாற்பத்தெட்டு வருடத்திற்கு பிறகு இறுதிப்போட்டியில் நான்கு கோல் அடித்த அணி பிரான்ஸ். 1970-ல் பிரேசில் இத்தாலியை 4-1 என வென்றிருந்தது.

3. உலக கோப்பை இறுதியாட்டத்தில் முதல் முறையாக விளையாடும் ஓர் அணி தோல்வியடைவது 1974க்கு பிறகு இதுதான் முதல் முறை. குரோஷியாவுக்கு இது முதல் உலக கோப்பை இறுதிப்போட்டி.

4. உலக கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் தனது அணிக்கு எதிராக கோல் அடித்த ஒரே வீரர் ஆனார் குரோஷியாவின் மண்ட்ஜூகிக்.

5. உலக கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இரண்டாவது இளையவர் ஆனார் பிரான்ஸின் ம்பாப்பி. அவருக்கு வயது 19 வருடம் 207 நாள்கள். இறுதிப்போட்டியில் இளம் வயதிலேயே கோல் அடித்த பெருமை பிரேசிலின் பீலேவுக்குச் சேரும். அவர் 1958-ல் 17 வருடம் 249 நாள்கள் வயது இருக்கும்போதே கோல் அடித்தார்.

6. உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பிரான்ஸ் அணிக்காக இதுவரை 10 கோல்கள் அடித்திருக்கிறார் கிரீஜ்மன். உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பத்து நாக் அவுட் போட்டிகளில் 12 கோல்களை தானாக அடிக்கவோ அல்லது இன்னொரு வீரர் அடிக்கவோ உதவியுள்ளார் ஆன்டோனி கிரீஜ்மன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்ஸ் வீரர் ஒருவர் நாக்அவுட் போட்டிகளில் செய்த மிகப்பெரிய சாதனை இது. முன்னதாக ஜினடின் ஜிடேன் எட்டு கோல்களை அடித்ததே பிரான்ஸ் வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது.

பெரிசிச்படத்தின் காப்புரிமைMATTHIAS HANGST

7. பெரிய கால்பந்து தொடர்களில் 11 கோல்களுக்கு நேரடி காரணமாக இருந்திருக்கிறார் பெரிசிச். வேறு எந்த குரேஷிய வீரரும் இச்சாதனையை செய்யவில்லை.

8. உலககோப்பை இறுதிப்போட்டியில் 1982-க்கு பிறகு பெனால்டி பகுதிக்கு பிறகு அதாவது அவுட்சைடு தி பாக்ஸ் பகுதியில் இருந்து கோல் அடித்த வீரர் ஆனார் பிரான்ஸின் போக்பா. 1982-ல் இத்தாலி Vs ஜெர்மனி போட்டியில் மார்கோ டர்டெல்லி இம்முறையில் கோல் அடித்திருந்தார்.

குரோஷியாவின் மண்ட்ஜுகிச்படத்தின் காப்புரிமைCLIVE ROSE

9. உலக கோப்பை வரலாற்றிலேயே ஒரே போட்டியில் தனது அணிக்காக ஒரு கோலும் தனது அணிக்கு எதிராக ஒரு கோலும் அடித்த இரண்டாவது வீரர் ஆகியுள்ளார் குரோஷியாவின் மண்ட்ஜுகிச். 1978-ல் இத்தாலிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்தின் எர்னி பிராண்ட்ஸ் இதே போல விளையாடியுள்ளார்.

10. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த ஆறு உலககோப்பை போட்டிகளில் (1998, 2006,2018) மூன்றில் இறுதிப்போட்டிக்கு வந்த ஒரே நாடு பிரான்ஸ். இதில் இரண்டு முறை (1998, 2018) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.

https://www.bbc.com/tamil/sport-44841760

  • தொடங்கியவர்

ரஷ்யாவில் கர்ஜித்த இளம் சிங்கங்கள்... இனி கால்பந்துக்கு பிரான்ஸ்தான் ராஜா! #WorldCupFinal

 

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் பிரான்ஸ், பலரது ஃபேவரிட் லிஸ்ட்டில் இல்லை. இந்த உலகக் கோப்பையின் மோசமான ஆட்டம் ஆடியதும் அவர்கள்தாம். ஆனால், நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் வேற லெவலில் ஆடியது.

ரஷ்யாவில் கர்ஜித்த இளம் சிங்கங்கள்... இனி கால்பந்துக்கு பிரான்ஸ்தான் ராஜா! #WorldCupFinal
 

பிரேசிலில் 2014-ல் உலகக் கோப்பை வென்ற ஜெர்மனியின் அப்போதைய கேப்டன் பிலிப் லாம், கோப்பையை சமர்ப்பிப்பதற்காக மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்துக்கு நேற்று வந்திருந்தார். இந்தமுறையும் கோப்பை ஐரோப்பாவில்தான் இருக்கப் போகிறது என்று தெரியும். ஆனால், பிரான்ஸ், குரோஷியா இரண்டில் எந்த ஐரோப்பிய நாட்டில், அந்தக் கோப்பை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது என்பதைப் பார்க்கத்தான், மாஸ்கோவில் லட்சம் பேர் திரண்டிருந்தனர். உலகெங்கும் கோடிக்கணக்கான பேர் டிவி முன் அமர்ந்திருந்தனர்.

லாம்

`ரெண்டுல யார் ஜெயிச்சாலும் சந்தோஷம்தான். பிரான்ஸ் ஸ்ட்ராங், குரோஷியா முதல்தடவை வேர்ல்ட் கப் ஃபைனல் வந்திருக்காங்க. அவங்க ஜெயிச்சா இன்னும் சந்தோஷம்’ என்பதே, 2018  கால்பந்து உலகக் கோப்பை ஃபைனல் மீதான எதிர்பார்ப்பு. இருபது ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பை வெல்லும் கனவோடு வந்திருந்தது பிரான்ஸ். `Underdogs to World Champions’ எனும் சரித்திரம் படைக்கும் முனைப்பில் களமிறங்கியது குரோஷியா. இரு அணிகளும் செமி ஃபைனலில் ஆடிய பிளேயிங் லெவனை மாற்றவில்லை. முதல் நிமிடத்திலிருந்தே சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லை.

 

 

முதல் பத்து நிமிடம் குரோஷியாவின் கையே ஓங்கியிருந்தது.  பொசஷன் என்றால் என்னவென கேட்பது போல ஆடியது பிரான்ஸ். 17-வது நிமிடத்தில் கிரீஸ்மேனை, ப்ரோஸோவிச் பெளல் செய்ய, பிரான்ஸுக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. கிரீஸ்மேன் எடுத்த அந்த செட் பீஸை ஹெட்டர் செய்து கிளியர் செய்கிறேன் என, மேண்ட்சுகிச் தலையில் முட்ட, அது எதிர்பாராதவிதமாக கோல் கம்பத்துக்குள் சென்றது. Own goal. உலகக் கோப்பை ஃபைனலில் அடிக்கப்பட்ட முதல் own goal. இந்த உலகக் கோப்பையில் 12-வது own goal. பிரான்ஸ் 1-0 என முன்னிலை. சென்டர் டிஃபண்டர் செய்ய வேண்டிய வேலையை சென்டர் ஃபார்வேர்டு செய்ததால் வந்த வினையை அனுபவித்தது குரோஷியா. ஆனால், அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே குரோஷியா பதிலடி கொடுத்தது. What a response!

உலகக் கோப்பை

 குரோஷியாவின் ஃப்ரீ கிக்கை கிளியர் செய்யாமல் தட்டுத்தடுமாறினர் பிரான்ஸ் டிஃபண்டர்ஸ். அந்த நேரத்தில் பந்தை அழகாக கன்ட்ரோல் செய்து லெஃப்ட் ஃபுட் மூலம் ஃபார் போஸ்ட்டை நோக்கி ஒரு ஷாட் அடித்தார் பெரிசிச். பிரான்ஸ் கோல் கீப்பர் தனக்கு இடதுபுறம் ஃபுல் லென்த் டைவ் அடித்தார். ஆனாலும், பந்தைத் தடுக்க முடியவில்லை. கோல். ஆட்டம் லெவல். Game on.

VAR உதவி இல்லாமல் ஃபைனல் முடிந்துவிடுமா என்ன? பெனால்டி பாக்ஸ் ஏரியாவில் குரோஷியா வீரர் பெரிசிச் கையில் பந்து பட்டுவிட்டதாகத் தெரியவந்ததும், VAR உதவியை நாடினார் ரெஃப்ரி. சைட் லைனில் இருந்த வீடியோவில் மூன்று நிமிடம் உன்னிப்பாக நடந்ததைக் கவனித்த ரெஃப்ரி, பிரான்ஸுக்கு பெனால்டி வழங்கினார். அப்போதே குரோஷியா வீரர்களின் உடல்மொழி மாறிவிட்டது. சிரமமே இன்றி அந்த ஸ்பாட் கிக்கை, கோல் அடித்து Dream 11-ல் தன்னைக் கேப்டனாக எடுத்தவர்களின் வயிற்றில் பால் வார்த்தார் கிரீஸ்மேன். முதல்பாதி முடிவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை.

க்ரீஸ்மேன்

ஸ்கோர்போர்டு தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது எப்படி ஆட வேண்டும் என்பது பிரான்ஸுக்கு அத்துப்பிடி. மிட்ஃபீல்டில் போக்பா லாங் பாஸ் போட்டு மிரட்ட, ரைட் விங்கில் இருந்து தன் வேகத்தாலும் டிரிபிளிங் திறமையாலும் கதறவிட்டார், 19 வயது இளைஞன் எம்பாப்பே. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ரைட் விங்கில் ஏறி வந்த எம்பாப்பேவ, 30 யார்டு பாக்ஸின் வலதுபுறம் வந்ததும், அங்கே இருந்த கிரீஸ்மேனுக்கு பாஸ் போட்டார். கிரீஸ்மேன் அதை பாக்ஸுக்கு வெளியே கோல் அடிக்க ஏதுவமான இடத்தில் இருந்த போக்பா வசம் செட் செய்து கொடுக்க, போக்பா வலது காலில் கம்பம் நோக்கி ஷாட் அடித்தார். பந்து ரீபவுண்டாகி வந்தது. மோட்ரிச் கோல் கீப்பரை மறைத்து நின்றார். இதுதான் சரியான நேரம் என, இந்தமுறை இடது காலில் ஒரு ஷாட் அடித்தார். இந்தமுறை தப்பவில்லை. குரோஷியா கோல் கீப்பர் சுபாசிச் செய்வதறியாது திகைத்து நின்றார். இது, இந்த உலகக் கோப்பையில் போக்பா அடிக்கும் முதல் கோல். ஒரு கோல் என்றாலும் உருப்படியான கோல். பிரான்ஸுக்கு மூன்றாவது கோல்.

கிரீஸ்மேன், போக்பா இருவரும் கோல் அடித்தபின் எம்பாப்பே மட்டும் சும்மா இருப்பாரா என்ன? 65-வது நிமிடத்தில் ரைட் விங்கில் இருந்து பெர்ணான்டஸ் கொடுத்த அட்டகாசமான பாஸை ஒரே டச்சில், கோல் அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் இடம்பிடித்தார் எம்பாப்பே. ஆம், உலகக் கோப்பை ஃபைனலில் கோல் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமை பெற்றார் எம்பாப்பே. இதற்கு முன் 1958-ல் பிரேசில் ஜாம்பவான் பீலே அந்த சாதனையைப் படைத்திருந்தார்.

எம்பாப்பே

அரை மணி நேரமே இருக்கிறது. மூன்று கோல்கள் சாத்தியமா? குரோஷியா மனரீதியாக நம்பிக்கை இழந்திருந்தது. மாறாக, பிரான்ஸ் அதீத நம்பிக்கையில் இருந்தது. கிரீஸ்மேன் அட்டாக்கிங்கை தளர்த்தி, டிஃபன்ஸ் பக்கம் வந்தார். பிரான்ஸ் வீரர்கள் கோல் அடிப்பதைவிட, கோல் வாங்காமல் இருப்பதில் கவனம் செலுத்தினர். ஆனாலும் குரோஷியா கோல் அடித்தது. எப்படி?

 69-வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் ஹியூகோ லோரிஸ் செய்த கிறுக்குத்தனம், குரோஷியாவுக்கு சாதகமாக அமைந்தது. டிஃபண்டர் கொடுத்த பேக் பாஸை தூரத்தில் இருக்கும் சக வீரருக்குக் கொடுப்பதற்கு பதிலாக தனக்கு இடதுபுறத்தில் இருப்பவருக்கு பாஸ் போட முயன்றார். அதற்குள் குரோஷியா ஸ்ட்ரைக்கர் மேண்ட்சுகிச், நேக்காக காலை நீட்ட, பந்து அவர் காலில் பட்டு கோலானது. சிரமமே இல்லாமல் குரோஷியாவுக்கு ஒரு கோல் கிடைத்தது. ஆனாலும், அடுத்த 20 நிமிடத்தில் அவர்களால் மேலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலக சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜென்டினா, உருகுவேயை அடுத்து இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் வரிசையில் பிரான்ஸ் இணைந்தது.

குரோஷியா

இந்த உலகக் கோப்பையில் குரோஷியாவின் பயணம் பாராட்டுக்குரியது என்றாலும், ஃபைனலில் பிரான்ஸ் போன்ற பெரிய அணியைச் சந்திக்க, அவர்கள் சரியான ஸ்ட்ரேட்டஜியுடன் வரவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. கவுன்ட்டர் அட்டாக்கில் பிரான்ஸ் கிங் என்பதைக் கணித்து அதற்கேற்ப வியூகம் அமைக்கவில்லை. பொசஷன், பால் கன்ட்ரோல், பாஸிங் அக்யூரஸி என டெக்னிக்கல் ரீதியாக பல விஷயங்களில் குரோஷியாவே முன்னிலையில் இருந்தது. ஆனால், ஆறில் நான்கு ஷாட்களை கோல் அடித்து, பிரான்ஸ் கோப்பையை வென்றுவிட்டது.

ரைட் விங்கில் அச்சுறுத்தும் எம்பாப்பேவை சமாளிக்க, குரோஷியா, உருகுவேயின் உத்தியைக் கடைப்பிடித்திருக்கலாம். எம்பாப்பேவயை நிழல்போல தொடர ஒரு வீரரை நியமித்திருக்கலாம். போக்பாவை லாங் பாஸ், கிராஸ் போட விடாமல் தடுத்திருக்கலாம். மிட் ஃபீல்டில் பிரான்ஸின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கலாம். இதையெல்லாம் செய்யத் தவறியதால், குரோஷியாவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்துவிட்டது.

மோட்ரிச்

பிரான்ஸ் முன்னிலை பெற்றதும், கேலரியில் இருந்த ரசிகர் ஒருவர், ஒரு பத்திரிகையை சந்தோஷத்துடன் காட்டினார். அதில், 1998-ல் பிரான்ஸ் உலக சாம்பியன் ஆன தருணம் ஜாம்பவான் ஜிடான் படத்துடன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பின் இன்று பிரான்ஸ் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான பத்திரிகைகளில் கிரீஸ்மேன், எம்பாப்பே படம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அவர்கள், 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1998-ல் உலகக் கோப்பை வென்ற பின் பிரான்ஸ் ஒரு வலுவான அணியைக் கட்டமைக்க சிரமப்பட்டது. இப்போதுதான் ஒரு இளம் வலுவான அணி அமைந்திருக்கிறது. பிரான்ஸ் முதன்முறையாக வேர்ல்ட் சாம்பியன் ஆனபோது, எம்பாப்பே பிறந்து 165 நாள்களே ஆகியிருந்தது. இன்று அவர் வேர்ல்ட் கப் வின்னர். பல டீன் ஏஜ் சிறுவர்களின் ரோல் மாடல். எம்பாப்பே மட்டுமல்ல போக்பா, கிரீஸ்மேன் என பிரான்ஸின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. ஆம், பிரான்ஸ் அணியில் இருந்தவர்களில் 14 பேருக்கு இது முதல் உலகக் கோப்பை. இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது இளமையான அணி பிரான்ஸ்தான்.

ஃபிரான்ஸ்

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் பிரான்ஸ், பலரது ஃபேவரிட் லிஸ்ட்டில் இல்லை. இந்த உலகக் கோப்பையின் மோசமான ஆட்டம் ஆடியதும் அவர்கள்தான். (பிரான்ஸ் – டென்மார்க் கோல் லெஸ் டிரா). ஆனால், நாக் அவுட் சுற்றில்  பிரான்ஸ் வேற லெவலில் ஆடியது. பயிற்சியாளர் டிடியர் டிசாம்ப்ஸ் பல விஷயங்களில் பக்காவாக பிளான் செய்திருந்தார். அதனால்தான் அவரால், வீரராகவும், மேனேஜராகவும் உலகக் கோப்பை வென்றவர்கள் பட்டியலில் இடம்பிடிக்க முடிந்தது.

எப்படியோ, பிரான்ஸ் கால்பந்தில் ஒரு நல்லகாலம் பிறந்திருக்கிறது. 2016 யூரோ கோப்பை ஃபைனலில் போர்ச்சுகலிடம் தோல்வியடைந்தபின், நிலைகுலைந்து அழுதார் கிரீஸ்மேன். இன்று தன் மகளுடன் உலகக் கோப்பையை ஏந்தி புன்னகைக்கிறார். இரண்டு ஆண்டுகளில்தான் எத்தனை மாற்றங்கள்!

ஃபிரான்ஸ் உலகக் கோப்பை

``இது இளம் படையின் வெற்றி. அணியில் உள்ள பல வீரர்களுக்கு இது முதல் உலகக் கோப்பை. ஆனாலும், பெரிய டோர்னமென்ட்களில் வெற்றிபெறுவதற்கேற்ற மனநிலையை அவர்கள் பெற்றிருந்தனர்.  மனரீதியாக, உளவியல் ரீதியாக நாங்கள் வலுவாக இருந்தோம். அதனால்தான், எந்தத் தாக்குதலும் இல்லாமலேயே முதல் பாதியில் முன்னிலை பெற முடிந்தது. இனி, சாம்பியன் பிரான்ஸின் ஆட்டம் பல விதங்களில் கேள்வி எழுப்பப்படும். இருக்கட்டும். என்ன இருந்தாலும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நாங்கள்தான் சாம்பியன்’’ என்றார் டிடியர் டெஸ்சாம்ப்ஸ். அதுதான் உண்மையும் கூட!

https://www.vikatan.com/news/sports/130930-france-beats-croatia-to-lift-the-fifa-world-cup.html

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "france coach didier deschamps 1998 - 2018"

1998 சாம்பியன் அணியின் ஆட்ட  நாயகன்....... 2018 சாம்பியன் அணியின் பயிற்சியாளர்....!  ?

  • தொடங்கியவர்

வெற்றி, அதிர்ச்சி, கண்ணீர், இயலாமை... உலகக் கோப்பை கால்பந்து ஒரு ரீவைண்டு!

 

இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவே பிரான்ஸ் கருதப்பட்டது. குரோஷியாதான் எதிர்பாராமல் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய அணி. இறுதி ஆட்டத்தில் குரோஷியாவுக்கு துரதிருஷ்டம் துரத்தி வந்தது என்றே சொல்ல வேண்டும்.

வெற்றி, அதிர்ச்சி, கண்ணீர், இயலாமை... உலகக் கோப்பை கால்பந்து ஒரு ரீவைண்டு!
 

ரு மாத காலம் உற்சாகத்தைத் தந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிவுக்கு வந்துள்ளது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. இந்தத் தொடரில் பிரான்ஸ் தோல்வியைச் சந்திக்காமல் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. நாக்-அவுட் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் எதிர் அணியை வீழ்த்தி சாதித்துள்ளது பிரான்ஸ். உலகச் சாம்பியன் ஆடிய ஓர் ஆட்டம் கூட கூடுதல் நேரத்துக்குச் செல்லவில்லை. பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ், பிரேசில் ஜாம்பவான் மரியோ சகல்லோ, ஜெர்மனி ஜாம்பவான் பெக்கன்பர் ஆகியோருக்கு அடுத்தபடியாக வீரராகவும் பயிற்சியாளராகவும் உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

உலகக் கோப்பை

இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவே பிரான்ஸ் கருதப்பட்டது. குரோஷியாதான் எதிர்பாராமல் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய அணி. இறுதி ஆட்டத்தில் குரோஷியாவுக்கு துரதிருஷ்டம் துரத்தி வந்தது என்றே சொல்ல வேண்டும். மரியோ மான்ட்சூகிச் அடித்த `சேம்சைட் கோல் ' அணியின் உறுதியைக் குலைக்கவில்லை. சேம்சைட் கோலால் பிரான்ஸ் முன்னிலை பெற்றாலும் இவான் பெரிசிச் அடித்த அற்புதமான கோல் குரோஷியாவுக்குப் பெரும் உற்சாகத்தை தந்தது. பிரான்ஸுக்கு அடுத்தும் ஒரு பெனால்டி கிடைத்தது குரோஷியாவுக்கு உண்மையிலேயே போதாத காலம்தான். கிரீஸ்மேன் அடித்த இந்த பெனால்டி கோல் பிரான்ஸுக்கு 2-1 என முன்னிலைப் பெற்றுத் தந்தது. 

 

 

இடைவேளைக்குப் பிறகு குரோஷியாவின் தடுப்பாட்டத்தில் சற்றுத் தொய்வு காணப்பட அதைப் பயன்படுத்தி பால் போக்பாவும், கிலியன் எம்பாப்பேவும் அடுத்தடுத்து இரு கோல்கள் அடிக்க கிட்டத்தட்ட பிரான்ஸ் அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. 6 நிமிடங்களுக்குள் விழுந்த இந்த இரு கோல்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. பல கோல் வாய்ப்புகளை அற்புதமாகத் தடுத்த பிரான்ஸ் கோல்கீப்பர் லாரீஸ் ஒரு `சில்லி' கோல் விழவும் காரணமாக இருந்தார். 3 கோல்கள் முன்னணி பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் பெனால்டி ஏரியாவுக்குள் மரியோ மான்ட்சூகிச் காலுக்குள் பந்தை போட்டு எடுக்க முயற்சிக்க அது வினையாக முடிந்தது. பந்து மான்ட்சூகிச் காலுக்குள் கிடைக்க அதை எளிதாக கோலாக மாற்றினார் அவர். குரோஷியாவுக்குச் சற்று தெம்பு வந்தாலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் `லெஸ் ப்ளுஸ்' மீண்டும் உலகக் கோப்பையை வென்றது. 

 
 

 

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை உலகக் கோப்பையில் ஆடிய அனுபவமிக்கவர் என்று பார்த்தால் `ஸ்ட்ரைக்கர்' கிரீஸ்மேன் மட்டுமே. டிஃபென்ஸிவ் மிட்ஃபீல்டர் கான்டேவின் பணியும் அருமை. களத்தில் ஓடிக்கொண்டே இருக்கும் கான்டேவை மீறி முன்கள வீரர்கள் செல்வது சிரமம்தான். பிரெஞ்சு அட்டாக்கிங் ஆட்டத்துக்கு முதுகெலும்பாக இருந்தார் கான்டே என்பதில் சற்றும் சந்தேகமில்லை. கிரீஸ்மேன் தன் அனுபவத்தை தன் பார்ட்னர் எம்பாப்பேவுடன் நன்கு பகிர்ந்து கொண்டார். பிரான்ஸ் அணியின் பல கோல்கள் தடுப்பாட்டக்காரர்கள் அடித்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த போது பெஞ்சமின் பாவட் அடித்த கோல்தான் ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தது. உருகுவேக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 40-வது நிமிடத்தில் ரஃபேல் வெரான் அடித்த கோல் பிரான்ஸுக்கு முன்னிலை பெற்றுத்தந்தது. பெல்ஜியத்துக்கு எதிரான அரையிறுதியில் சாமுவேல் உம்மிட்டியின் ஒரே கோல்தான் பிரான்ஸ் அணியை இறுதி ஆட்டத்துக்கு அழைத்து வந்தது. அதனால்... பிரான்ஸ் அணியில் பின்கள வீரர்களும் முக்கிய ஆட்டங்களில் கோல் அடித்து அணிக்குப் பெரும் பலமாக இருந்துள்ளனர். 

பிரான்ஸ பயிற்சியாளர்

லூகா மாட்ரிட்ச் அணியையும் குறை சொல்ல முடியாது. 1998-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் குரோஷியா வீழ்ந்தது. தற்போது மீண்டும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸிடம் தோற்றுள்ளது. இந்தத் தொடரில் அர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா துவம்சம் செய்தது. நாக்-அவுட்டில் டென்மார்க் காலிறுதியில் ரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது குரோஷியா. இறுதி ஆட்டத்தில் கண்ட தோல்வியால் குரோஷியா வருத்தப்பட அவசியமில்லை. அடுத்து வருகிற யூரோ தொடரில் குரோஷியா முத்திரை பதிக்க வாய்ப்புள்ளது. 

 

 

ஜெர்மனி அணி கண்ட தோல்விதான் இந்த உலகக் கோப்பையில் ஏற்பட்ட முதல் அதிர்ச்சி. லீக் சுற்றில் கடைசி இடத்தைப் பிடித்து பரிதாகமாக வெளியேறியது நடப்புச் சாம்பியன் அணி. நடப்பு உலகக் கோப்பையில் அனைவரின் மனதையும் கவர்ந்த மற்றோர் அணி பெல்ஜியம். ராபர்ட்டோ மார்டினஸின் பாய்ஸ் அற்புதமாகக் கால்பந்தை விளையாடிக் காட்டினர். நாக் -அவுட்டில் பின்தங்கியிருந்த நிலையில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பெல்ஜியம் வீழ்த்திக் காட்டியது. காலிறுதியில் ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணியே... பெல்ஜியத்திடம் மண்ணைக் கவ்வியது. பெல்ஜியத்தின் `கோல்டன் ஜெனரேஷன் ' என்று தற்போதையை அணியைச் சொல்கிறார்கள். மூன்றாவது இடத்தை பெற பெல்ஜியம் தகுதியான அணியே..

ரஷ்யா உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணிக்குச் சற்று ஆறுதல் அளித்துள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி வேர்ல்டு கப் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியது. கடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வீட்டுக்கு நடை கட்டியது இங்கிலாந்து. 2016-ம் ஆண்டு யூரோவின் நாக்- அவுட்சுற்றில் குட்டி அணியான ஐஸ்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை விரட்டி அடித்தது. உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு டை-பிரேக்கர் என்றாலே அலர்ஜி. இந்த உலகக் கோப்பையில் டை-பிரேக்கரில் கொலம்பியாவை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அந்தக் குறையை நிவர்த்தி செய்து கொண்டது. இங்கிலாந்து அணி. இதற்காக கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டுக்குத் தாராளமாக விசில் அடிக்கலாம். அடுத்த யூரோவில் காரத் சவுத்கேட் அணி கூடுதல் தன்னம்பிக்கையுடன் களம் இறங்கும் என்று நம்பலாம். 

பிரான்ஸ் அணியிடம் தோற்ற சோகத்தில் மாட்ரிச்

அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்கலாம். அடுத்த தொடரின் போது மெஸ்ஸி 35 வயதை எட்டியிருப்பார். ரொனால்டோவுக்கு 37 வயதாகியிருக்கும். இவர்களுக்கு இனிமேல் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு குறைவே. பல முன்னாள் ஹீரோக்களுக்கும் கூட இதே நிலை ஏற்பட்டுள்ளது. பரெங் புகாஸ் தலைமையில் 1954-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஹங்கேரி கலக்கியது. லீக் சுற்றில் 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை துவம்சம் செய்தது. ஆனால், இறுதி ஆட்டத்தில் அதே ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்று கோப்பையை நழுவ விட்டார் பரெங் புகாஸ். ஒவ்வொர் ஆண்டும் சிறந்த கோல் அடித்த வீரருக்கு ஃபிஃபா இவரின் பெயரில்தான் விருது வழங்குகிறது. போர்ச்சுகல் முன்னாள் கேப்டன் எஸ்பியோவும் ஒரு காலத்தில் ஹீரோ. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுகல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரையிறுதியில் எதிர்பாராமல் எஸ்பியோ அணி இங்கிலாந்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறியது. 1974-ம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு `டோட்டல் ஃபுட்பால் ' என்ற நிக் நேம் உண்டு. ஜோகன் க்ரைஃப் உள்ளிட்ட தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர். இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனியிடம் 2-1  என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் நெதர்லாந்து வீழ்ந்தது. இதனால், ஜோகன் க்ரைஃப்பும் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போய் விட்டது. ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் இந்த வரிசையில் இணைந்து விட்டனர். அர்ஜென்டினாவின் ஆட்டம் இயலாமை போலவே தோன்றுகிறது. 

அடுத்த உலகக் கோப்பை கத்தாரில் நடைபெறுகிறது. 2022 வரை பொறுத்திருப்போம்!

https://www.vikatan.com/news/sports/130973-russia-world-cup-round-up.html

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "france coach didier deschamps 1998 - 2018 moving gif"

  • தொடங்கியவர்

ஆரவாரம், குதூகலிப்பு, கோஷங்கள் - பிரான்ஸ் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட அமோக வரவேற்பு!

3393_thumb.jpg
 

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையைக் கைப்பற்றி நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் வீரர்களுக்கு வரவேற்பு

உலககோப்பை கால்பந்து போட்டிகள் திருவிழாபோல நடைபெற்று முடிந்தன. மிகுந்த எதிர்பார்ப்பும், ஆர்வமும் ஒவ்வொரு போட்டியிலும் கூடிக்கொண்டே சென்றது. காரணம், நட்சத்திர ஆட்டக்காரர்கள் இடம்பெற்றிருந்த அணிகள் அடுத்தடுத்து வெளியேற, யார் இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள் என்ற கேள்வி கால்பந்து ரசிகர்களிடையே ஆர்வத்தைக் கூட்டியது. இறுதியில் பிரான்ஸும் குரோஷியாவும் களத்தில் எதிரெதிர் அணிகளாய் நின்று இறுதிப்போட்டியில் களமாடின.

 

 

வரவேற்பு

பிரான்ஸின் அதிரடி ஆட்டம் குரோஷியாவை தடுமாறச்செய்தது. இருந்தபோதிலும் குரோஷியா தொடர்ந்து ஈடுகொடுத்தே வந்தது. ஆட்டத்தின் முடிவில் 4-2 என்ற கோல்கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். பிரான்ஸ் மக்களிடையே ஆனந்தக்கண்ணீர் ததும்பியது.

 

 

AP18197647623172_05250.jpg

பிரான்ஸின் வெற்றிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், கோப்பையைக் கைப்பற்றிய பிரான்ஸ், நாடு திரும்பியது. அந்நாட்டின் தலைநகரான பாரீஸில்,  பிரான்ஸ் வீரர்களை வரவேற்பதற்காக லட்சக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் குழுமியிருந்தது. வீரர்கள் வருவதைக் கண்டதும் வழிநெடுங்கிலும் நின்றுகொண்டிருந்த ரசிகர்கள், அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்; தொடர்ந்து அவர்கள் கோஷங்களை எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

https://www.vikatan.com/news/sports/131024-france-team-returns-home-town-cheerful-welcome.html

  • தொடங்கியவர்

க்ரீஸ்மன், எம்பாப்வே... - நேற்றைய அகதிகள் இன்றைய சாம்பியன்கள்! #WorldCup2018

 

பிறந்து வளர்ந்த நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் எனும் வெறியை விட, அன்னியர்களான தங்களை அரவணைத்த நாட்டுக்கு மரியாதை செலுத்த வேண்டும் எனும் அன்புதான் பேரன்பு...

க்ரீஸ்மன், எம்பாப்வே... - நேற்றைய அகதிகள் இன்றைய சாம்பியன்கள்! #WorldCup2018
 

பிரான்ஸ் என்றதும் ஈஃபில் டவரும், காதலும்தான் நினைவுக்கு வரும். பிரான்ஸின் மதம், பிரான்ஸின் கலாச்சாரம், பிரான்ஸின் பூர்வ குடிகள், பிரான்ஸின் விடுதலை இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இனி பிரான்ஸ் என்றால் உலகக் கோப்பையும் நினைவுக்கு வரும். கூடவே, பிரான்ஸ் எப்படிப் பல தேசங்களை ஒருங்கிணைத்து இந்த உலகக் கோப்பையை வென்றது என்பதும் நினைவுக்கு வரும். இந்த உலகக் கோப்பை அகதிகளாக வந்து பிரான்ஸின் அரவணைப்பில் சாதித்த மக்களுக்குச் சொந்தமானது. கிரீஸ்மேன் ஜெர்மானிய தந்தைக்கும், போர்ச்சுகீஸ் தாய்க்கும் பிறந்தவர், எம்பாப்பே கேமரூன் தந்தைக்கும் அல்கேரிய தாய்க்கும் பிறந்தவர். போக்பா ஆப்பிரிக்காவின் கினி நகரத்தில் இருந்து வந்தவர், உம்டிட்டி கேமரூனில் பிறந்தவர். இவர்கள் மட்டுமல்ல ஜிடேன் அல்கேரிய தாய் தந்தைக்குப் பிறந்தவர்.

கோப்பையை வென்ற பிறகு 

பிரான்ஸ் இப்போது வளர்ந்த நாடுகள் பட்டியலில் இருப்பதற்கு அகதிகளே காரணம். இந்தக் கதை இரண்டாம் உலகப்போரில் ஆரம்பமாகிறது. 1945-ல் உலகப்போர் முடிவுக்கு வந்திருந்த சமயம் ஒட்டுமொத்தமாக அழிந்திருந்தது பிரான்ஸ். தனது தேசத்தை மீண்டும் கட்டமைக்க மக்கள் தேவை என்பதால் அருகில் இருந்த அல்ஜீரியா, ஜெர்மனி, போலந்து, போர்ச்சுகீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து அகதிகளை வேலைக்கு எடுத்தது ஃபிரென்சு அரசு. 1950-ல் உலகப்போரின் துயரத்தில் இருந்து மீண்டுவந்தும் அகதிகளை அனுமதிப்பதை நிறுத்தவில்லை. போர் முடிந்த பிறகு, 1940-ல் இருந்து 1965 வரை மொத்தம் 27 லட்சம் அகதிகளை அனுமதித்திருந்தார்களாம். இக்காலகட்டத்தில் பிரான்ஸின் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொழிலாளர்கள் பற்றாக்குறை வந்தது. அதற்காக மீண்டும் அரபு நாடுகளிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் போரில் அகதிகளானவர்களை பிரான்ஸ் அனுமதித்தது. இவர்களில் பெரும்பாலானோர் பாரிஸ், மார்செல், லியான் போன்ற நகரங்களில் குடிபெயர ஆரம்பித்தனர். 

 

 

ஒரு வழியாகப் பொருளாதார ரீதியான வளர்ச்சியை அடைந்தது ஆனால், உலக அரங்கில் மரியாதையைப் பெற பிரான்ஸுக்கு விளையாட்டு சார்ந்த வளர்ச்சி தேவைப்பட்டது. 1960-ல் இருந்து 74 வரை நடைபெற்ற 3 உலகக் கோப்பையிலும், 3 யூரோ கோப்பையிலும் பிரான்ஸின் கால்பந்து அணி தேர்ச்சி பெறவே இல்லை. இந்தக் சிக்கலை தீர்க்க பிரான்ஸ் முதல் முறையாக தேசிய அளவிலான ஒரு கால்பந்து அகாடமியை தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களுக்குள் மறைந்திருக்கும் கால்பந்து திறமைகளைக் கண்டுபிடிப்பதுதான். விசி எனும் இடத்தில் முதல் முறையாகத் கால்பந்தை பயிற்றுவிக்கக் கல்லூரி திறக்கப்படுகிறது. 4 ஆண்டுகள் கழித்து பிரான்ஸின் அனைத்து பெரிய கால்பந்து அணிகளுடனும் பேசி, ஒவ்வொரு ஊரில் இருக்கும் திறமையான இளைஞர்களை வளர்த்தெடுக்க அங்கங்கு துணை கல்லூரியை நிறுவுகிறது பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம்.

 

 

அகதிகளாக வந்து சாதித்தவர்கள்

பிரான்ஸின் தேசிய கால்பந்து கல்லூரி பாரிஸின் புறநகர்ப் பகுதியான கிளாரிஃபோன்டேனுக்கு மாற்றப்பட்டது. 1990, பிரான்ஸ் கால்பந்து அகடெமி உலகின் சிறந்த வீரர்களை உருவாக்கிக்கொண்டிருந்தது.1998 பிரான்ஸ் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. வெகுகாலமாக ஆசைப்பட்ட அந்த மரியாதை கிடைத்ததை நாடே கொண்டாடியது. பிரான்ஸின் பன்முக கலாச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அதைக் கருதினார்கள். உலகக் கோப்பையை வென்ற அணியில் பலர் அகதிகளாகவும், அகதிகளுக்குப் பிறந்தவர்களாகவும் இருந்தார்கள். பிரான்ஸின் மூவர்ண கொடிபோல அதன் கால்பந்து அணியும் பல நிறங்களால், கலாச்சாரங்களால் நிறைந்தாகவே இருந்தது. இந்த அணியை  black-blanc-beur என்றுதான் அழைத்தார்கள். கறுப்பு, வெள்ளை, அரபு என்பது இதன் அர்த்தம். .

ஜிடேன்

வெற்றிக்கு பிறகும் இனவாத கமென்டுகளால் குத்திக் கிழிக்கப்பட்டார்கள் பிரான்ஸின் சாம்பியன்கள். ஆனால், அகதிகளாக வந்தவர்கள் பிரான்ஸ் நாட்டின் கால்பந்து உலகத்தை மாற்றினார்கள். பிரான்ஸ் நாட்டுக்குள் வந்தவர்களில் 38 சதவிகிதம் பாரிஸ் நகரின் புறநகர் பகுதிகளில் வசித்தவர்கள்தான். இந்த இடத்தை பான்லியூ என்றார்கள். போராட்டம், வருமை, வேலைவாய்ப்பின்மை என கடினங்கள் சூழ்ந்தபோதும் பான்லியூதான் பிரான்ஸின் சிறந்த கால்பந்து வீரர்ளை உருவாக்கிய பூமி. இந்த ஆண்டு விளையாடிய 50 வெளிநாட்டு பிளேயர்களில் 16 பேர் பாரிஸில்  பிறந்து வளர்ந்தவர்கள். 19 வயது கிலியன் எம்பாப்பே, ஆட்டோனி கிரீஸ்மேன், உம்டிட்டி உட்பட ரஷ்ய உலகக் கேப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் 8 பேர் பான்லியூவில் இருந்து வந்தவர்கள். பிரான்ஸ் அணிக்கு மட்டுமில்லை, மற்ற உலகநாடுகளின் வீரர்களும் பாரிஸில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்.  செனகல் அணியில் இருக்கும் 4 பிளேயர்கள் பாரிஸில் பிறந்து வளர்ந்தவர்கள், துனிஸியாவின் சயிஃப் எடினே பாரிஸ் நகரில் பிறந்தவர், போர்ச்சுகளின் ரஃபேல் குரேரோ, மொராக்கோவின் மெஹதி பெனாடியா பாரிஸ் நகரில் வளர்ந்தவர்கள்தான். 

 

 

உலகக் கோப்பையை வென்ற ஃபிரான்ஸ் அணி

பிரான்ஸின் தனித்துவமான கால்பந்து அணியும், மற்ற நாடுகளில் இருந்து வரும் திறமைகளை அரவணைத்து வளர்க்கும் பண்பும்தான் பிரான்ஸை வெற்றியாளர்களாக மாற்றியுள்ளது. அகதிகளை வெறுத்து ஒதுக்கும் இந்த உலகில், அகதிகளை வைத்தே தன்னை கட்டமைத்துக்கொண்டு, தனக்கான மரியாதையை அவர்களை வைத்தே பெற்றுக்கொண்டது பிரான்ஸ். இது அகதிகளை வெறுக்கும் தேசங்களை தலைகுனிய வைக்கும். இது அகதிகளுக்கு கிடைத்த வெற்றி.

https://www.vikatan.com/news/sports/131026-how-france-created-more-world-cup-players-than-any-other-countries.html

  • தொடங்கியவர்

'கறுப்பு மனிதரின் வெள்ளை மனம்...' - சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய எம்பாப்பே

 

பிரான்ஸ் சூப்பர்ஸ்டார் கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை சம்பளம் முழுவதையும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். 

கிலியன்

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணி குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது. தொடரின் சிறந்த இளம் வீரராக பிரான்ஸ் முன் கள வீரரான 19 வயது கிலியன் எம்பாப்பே தேர்வுசெய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பை போட்டியில், கிலியன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, 4 கோல்களையும் அடித்தார். தற்போது, பி.எஸ்.ஜி அணிக்காக விளையாடிவரும் கிலியன், உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியதன் மூலம் தனக்குக் கிடைத்த சம்பளம் மற்றும் போனஸ் தொகை ரூ. 3.50 கோடியை விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுவரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் 

 

 

உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் விளையாட 17 ஆயிரம் பவுண்டுகள் சம்பளமாகக்  கிடைக்கும். அதன்படி, 7 ஆட்டங்கள்  மூலம் கிலியனுக்கு சம்பளம் மற்றும் போனஸாக 2,65,000 பவுண்டுகள் கிடைத்தது. இந்தத் தொகையை நல்ல விஷயத்துக்காகப் பயன்படுத்த முடிவுசெய்த எம்பாப்பே குழந்தைகள் நலனுக்கு செலவிட முடிவுசெய்தார். தற்போது, உலகிலேயே அதிக மதிப்புள்ள கால்பந்து வீரர்களில் நெய்மருக்கு அடுத்தபடியாக  இவர்தான் உள்ளார். சமீபத்தில் மொனாக்கோ அணியில் இருந்து எம்பாப்பேவை பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 135 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம்செய்தது. ரியல்மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகி யுவான்டஸ் அணியில் இணைந்ததால், ரொனால்டோ இடத்தில் எம்பாப்பேவை கொண்டுவர  மாட்ரிட் அணி  முயன்றுவருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால்தான், தொடர்ந்து பி.எஸ்.ஜி அணியில் விளையாடப்போவதாக எம்பாப்பே கூறியுள்ளார். 

 

 

சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய எம்பாப்பேவை 'கறுப்பு மனிதரின் வெள்ளை மனம் ' என்று நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர். 

https://www.vikatan.com/news/sports/131036-kylian-mbappe-is-donating-his-world-cup-winnings-to-charity.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.