Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசுரன்

Featured Replies

அசுரன்

 

 
kadhir10


மைசூரில் இருந்து கிளம்பும்போதே முதல் வகுப்புப் பெட்டியில் மூன்று பேர்களுடன் காற்றுதான் பிரயாணம் செய்தது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் விடுவது பற்றி எழுந்த உணர்ச்சிப் பிழம்பு கார்களையும், பஸ்களையும், கடைகளையும் எரித்துத் தள்ளி விடும் தீவிரத்தில் இருந்ததுதான் காலி வண்டிக்குக் காரணம். சுமாராக நடந்த அறிமுகப் பேச்சில் மற்ற இருவரும் சகோதரர்களென்றும் அவர்கள் பெங்களூரில் இறங்கி விடுவார்களென்றும் தெரிந்தது. சென்னை வரைக்கும் காலி வண்டியில் ஒற்றை ஆளாகப் பிரயாணம் செய்யும் பாக்கியம் பெற்றவன் என்பதை விட பயம்தான் அதை மீறி நின்றது. பெங்களூரில் கொஞ்சம் கூட்டம் சேர்ந்து கொண்டால் நன்றாயிருக்கும் என்று மனது அடித்துக் கொண்டது.

 

ஆனால் நாம் விரும்புவது நமக்கு கிடைக்காது என்பதுதான்  வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம் இதுவரை என்றிருக்கும் போது இன்று மட்டும் அது ஏன் மாற வேண்டும் என்பது போல் பெங்களூரில் இருந்து வண்டி கிளம்பும் வரை ஒருவரும் பெட்டிக்குள் நுழையவில்லை. ஜன்னலின் வழியே பார்த்த போது பிளாட்பாரத்தில் தண்ணீர் சிற்றாறு போல் ஓடிக் கொண்டிருந்தது. நல்ல மழை போலிருக்கிறது. பெட்டியையும் படுக்கையையும் தூக்கிக் கொண்டு தண்ணீரில் நடக்க முடியாமல் நடந்து சிலர் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

 

வண்டி கிளம்பும் சமயம் ஒருவர் அடித்துப் பிடித்துக் கொண்டு நான் இருக்கும் பெட்டியில் ஏறுவதைப் பார்த்தேன். என்னைக் கடந்து செல்லும் போது ஒரு புன்னகையை நழுவ விட்டுக் கொண்டு சென்றார். நல்ல உயரம். வாட்ட சாட்டமான உடம்பு. நாற்பது வயது இருக்கக் கூடும். காதில் காலேஜ் பசங்கள் பாட்டு கேட்பதற்காக சொருகியிருப்பது போல சொருகி இருந்தார். ஆனால் அவை சற்றுப் பெரிதாக இருந்தன. தனது தோற்றத்திற்கு ஏற்ப இருக்கட்டும் என்று பெரிதாக மாட்டிக் கொண்டிருக்கலாம். இரு கைகளிலும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு போனார். 

 

சில நிமிஷங்கள் கழித்து அவர் நானிருக்கும் இடத்திற்கு வந்தார்.
""மெட்ராசா?'' என்று நின்றபடியே கேட்டார்.  
""ஆமாம். நீங்க?''
""நா திருவள்ளூர்ல இறங்கணும். இப்பவே பன்னெண்டு மணியாகப் போகுது. கண்ண மூடி தெறக்கறதுக்குள்ள எறங்கற எடம் வந்திரும்'' என்றார்.
நான் புன்னகையுடன் அவரைப் பார்த்தேன்.
""என் பேரு செந்தில். டெலிபோன்ஸ்ல இருக்கேன்'' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். நானும் என் பெயரையும் வேலையையும் சொன்னேன்.
""இந்த கோச்சிலயே நாம ரெண்டு பேருதான். ஒரு பத்து பேர் இருந்தா ஏறி இறங்கறேன்னு சத்தமாவது வந்துகிட்டு இருக்கும். கொஞ்சம் அசந்தா இறங்கற எடத்த தவற விட்டிருவோம்'' என்றேன்.
""இல்ல. ஒரு ரவுண்டு போய் பாத்துட்டு வந்தேன். பெட்டி கடைசியில ரெண்டு பேர் இருக்காங்க'' என்றார்.
""நாலு பேர்னா நல்ல கூட்டம்தான்'' என்றேன். அவர் வாய் விட்டுச் சிரித்தார்.
""இருந்தாலும் இந்த தண்ணி விஷயத்துல இவ்வளவு கலாட்டா நடக்காம இருக்கலாம். பஸ்ஸý ரெயிலு ஓட்டலுன்னு எல்லா இடத்திலையும் பிரச்னைய கௌப்பி...  ஆனாலும் பாருங்க அங்க வடக்கெ கங்கா நதி அஞ்சு  ஸ்டேட்ல புகுந்து ஓடிட்டு இருக்கு. எவனும் அதுக்கு நான்தான் சொந்தக்காரன்னு சண்டை போடல. இங்க என்னடான்னா ?''


""காக்கா தள்ளி விட்ட தண்ணிக்கும் கடவுள் எடுத்து விட்ட தண்ணிக்கும் வித்தியாசம் இருக்கணுமில்லே?'' என்றேன் சிரித்தபடி.
""நா விளையாட்டா சொல்றத விட்டா கூட, உண்மை என்னன்னா நமக்குள்ள இருக்க வேண்டிய நல்லதையும், நம்ம மேல தள்ளி விடற கெட்டதையும் நாம தீர்மானிக்காம வேறவங்க கையில பிடிச்சு குடுத்திட்டோம்.'' 
""நல்லா சொன்னீங்க. ஒருத்தொருக்கொருத்தர் நம்பிக்கையா இருக்கறது, ஒழுக்கமா இருக்கறதுன்னு இருந்ததெல்லாம் போயிடுச்சு'' என்றார் அவர்.
திடீரென்று அவர் ஒழுக்கத்தைப் பேச்சில் கொண்டு வந்தது எனக்கு ஆச்சரியமாக  இருந்தது. 
""சரி நீங்க படுங்க. விட்டா நான் பேசிக்கிட்டே இருப்பேன்'' என்று நகர்ந்தவர், நின்று ""நான் காலேல சீக்கிரமே முழிச்சிருவேன். அப்பிடியே தப்பிட்டா, நீங்க கொஞ்சம் என்னை அஞ்சு மணிக்கே எழுப்பி விட்டிருங்க'' என்றார். நான் தலையசைத்தேன்.
அவர் திரும்பிச் சென்றார். சில நிமிஷங்களில் குறட்டை ஒலி கேட்டது..
""கொடுத்து வைத்த ஆசாமி'' என்று நினைத்துக் கொண்டே நான் படுக்கையில் புரண்டேன். இரவு ரயிலில் பயணம் செய்வதை நான் வெகுவாகத்  தவிர்ப்பதன் காரணமே இந்தத் தூங்க முடியாத அவஸ்தைதான். ஆனால் சில சமயம் தப்பிக்க முடிவதில்லை.  
அப்போது டிக்கட் பரிசோதகர் என்னைக் கடந்து சென்றார். அவருக்கு இன்று வேலையே  இல்லை. அடுத்துப் படுத்திருக்கும் ஆசாமியின் டிக்கட்டைப் பரிசோதனை செய்த பின் அவரும் படுக்கையில் விழுந்து விடலாம் என்று நினைத்தேன்.
""சார்! சார்!'' என்று நாலைந்து முறை அவர் கூப்பிடும் சப்தம் கேட்டது. ஒவ்வொரு முறையும் அவர் குரல் உயரே சென்றது.
இப்போது எழுந்திருக்கும் சப்தம் கேட்டது.


""என்ன சார், கூப்பிட கூப்பிட எழுந்திருக்கவே மாட்டேன்னுட்டீங்க?''
""சாரி சார். எனக்கு கொஞ்சம் காது கேக்காது. சத்தமா குரல் குடுக்கணும். சாரி. ஒரு நிமிஷம் இருங்க. என்னோட இயர் ஃ போனை மாட்டிக்கிறேன்'' என்று செந்தில் பதில் அளிக்கும் குரல் கேட்டது. காது கேட்காதவர்கள் தாங்கள் பேசும் போதே கொஞ்சம் இரைச்சலாகப் பேசுவது வழக்கம் என்று நினைத்துக் கொண்டேன்.
""நான்தான் உங்க கிட்டே சாரி சொல்லணும்'' என்று டிக்கட் பரிசோதகர் சொல்வது கேட்டது. சில விநாடிகளுக்குப் பிறகு அவர் ""குட்நைட்'' என்று வாழ்த்தி விட்டுச் சென்றார்.
அப்போது கைபேசி ஒலிக்கும் சப்தம் செந்தில் இருந்த இடத்திலிருந்து கேட்டது. அதை எடுத்து அவர் ""ஹலோ'' என்றார்.
""நாந்தான் பேசறேன். ரயில்ல ஏறிட்டிங்களா?'' என்று பெண் குரல் கேட்டது. தனக்குக் காது சரியாகக் கேட்கவில்லை என்று அவர் மொபைலில் வால்யூம் அதிகம் வைத்திருக்க வேண்டும்.
""வீட்டை விட்டு வந்து அஞ்சு நிமிஷமாகல. அதுக்குள்ளே எதுக்கு போனு?'' என்று அவர் உறுமினார்.
""இல்ல. நீங்க போகறப்போ மழையா இருந்திச்சில்ல. அதான்''
""ஓ... மழையில கரைஞ்சு போயிடுவேன்னு பயந்துட்டியாக்கும்.''
""பூரி செஞ்சு வச்சிருக்கேன். சூடு ஆறி போகறதுக்குள்ள எடுத்து சாப்பிட்டுருங்க.'' 
""எனக்கு கண்ணு இருக்குல்ல. பாத்து சாப்பிட மாட்டேனா? இதுக்குன்னு ஒரு போனா?''


""ஆபிஸ்லேர்ந்து லேட்டா வந்து பெட்டியத் தூக்கிட்டு ஓடறதுக்குத்தான் உங்களுக்கு நேரம் இருந்திச்சு. காலேல ஊருக்கு போய் காஞ்சு போன பூரிய பாத்துட்டு தூக்கி எறிவீங்க. கொலப் பட்டினியா கிடக்க வேண்டாமேன்னுதான்...''
எவ்வளவு அழகாக புருஷனைக் கவனித்திருக்கிறாள் என்று முகம் தெரியாத அந்தப் பெண்ணின் மேல் எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. வண்டியில் ஏறிப் படுத்த மனுஷன் அடுத்த நிமிஷம் தூக்கத்தில் மயங்கி விழுந்தது உண்மைதானே?
""அப்பா ! வீட்டுலதான் உன் ரோதனையின்னா வெளியில வந்தப்புறவுமா?'' என்று செந்தில் அலுத்துக் கொள்வது கேட்டது.
  மனிதன் எதற்காக இப்படி  "வெடுக் வெடுக்'கென்று பேச வேண்டும்?  
""சரி, குழந்தை கிட்ட ரெண்டு வார்த்தை பேசுங்க.''
""ஏன் அவன் இன்னும் தூங்கலையா?''


""நீங்க அவன் கிட்ட சொல்லாம போயிட்டீங்கன்னு அழுது அடம் பிடிச்சான். இருடா அப்பா வண்டி ஏறினதுக்கு அப்புறம் உனக்கு போன் பண்ணுவாருன்னு சொல்லி சமாதானம் பண்ணி வெச்சேன். அவங்கிட்ட கொடுக்கறேன்'' என்றாள்.
செந்தில் ""ஹலோ, ஹலோ'' என்று கூப்பிடுவது கேட்டது. இன்னும் இரண்டு தடவை அவர் கூப்பிட்டும் மறுமுனையிலிருந்து சப்தம் வரவில்லை.
திடீரென்று ""நா உங்கிட்ட பேச மாட்டேன் போ'' என்ற மழலைக் குரல் கேட்டது.
செந்திலிடமிருந்து பதில் ஒன்றும் இல்லை. ரயில் பயணத்தில் இது ஒரு ரோதனை. சிக்னல் விட்டு விட்டு வரும் என்று நினைத்தேன்.
""ஹலோ ஹலோ'' என்ற சிறுவனின் குரல் மறுபடியும் கேட்டது. பதில் வராது போகவே அவன்"" கீளே வச்சிராதே !'' என்று கத்தினான்.
""அப்படி வா வழிக்கு'' என்று செந்தில் சிரிக்கும் சப்தம் கேட்டது. ""தூங்காம இன்னும் என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?''
""நானு டிவி பாத்துகிட்டு இருக்கேன்'' என்றான் குழந்தை.
""பாருடா. நல்லா பாத்துகிட்டே இரு. ஒன்னோட தமிழ் பரிட்சைக்கு  சோட்டா பீம் வந்து எளுதுவான். உங்கம்மாக்கு புத்தியே கிடையாது. இன்னிக்கி ஹோம் ஒர்க்கெல்லாம் செஞ்சியாடா?''
எதிர்முனையில் இருந்து பதில் ஒன்றும் வரவில்லை.


""படிக்காத.  டிவி பாத்துகிட்டே இரு. வெளங்கிரும்'' என்று அதட்டினார். கல்லுளி மங்கனிடமிருந்து இப்போதும் பதில் இல்லை. 
இப்போது அவர் மனைவியின் குரல் கேட்டது.  
""ஏங்க குளந்தைய போட்டு திட்டுறீங்க ? இப்பதானே ஒண்ணாங் கிளாஸ் படிக்கிறான். காலேல ஸ்கூலுக்கு போறதுக்கு முந்தி பண்ணிருவான்.''
""கருமம்.கருமம். உன்னாலேயே அவன் கெட்டு போயிருவான். நீயே ஆறாங் கிளாசு. இப்பவேர்ந்து படிச்சு பளகினாதானே அவன் மேல வருவான் ? சரி சரி காலேல அஞ்சு மணிக்கு அவன எழுப்பி படிக்க விடு'' என்றார் செந்தில்.
""சரி நீங்க ஊருக்கு போனதும் போய்ச் சேர்ந்தேன்னு ஒரு போனப் போட்டு சொல்லிடுங்க'' என்றாள் அவர் மனைவி.
அவர் மறுபடியும் படுக்கும் சப்தம் கேட்டது. சில நிமிஷங்களில் தூங்கியும் விட்டார். மனிதனை நினைத்தால் ஆச்சரியமாக  இருக்கிறது. எதற்கு மனைவி மீது எரிந்து விழுகிறார்? அவள் சரியாகப் படித்த பெண் இல்லையோ? ஆள் பார்க்க அட்டகாசமாக இருக்கிறார். ஒரு வேளை  மனைவி அவ்வளவு அழகு இல்லாதவளாய் இருக்குமோ ? ஊருக்குப் போகும் தந்தைகள் பிரிவாற்றாமையில் எப்படி குழந்தைகளைக் கொஞ்சித்துத் தள்ளுவார்கள்? சுத்த அரைக் கிறுக்கனாய் இருப்பார் போலிருக்கிறது.
நடு இரவுக்கு மேலே, என்னை அறியாமலே ஒரு மணி, ரெண்டு மணி வாக்கில் மயங்கி விழுந்து விடுவேன். இன்றும் அதுதான் நடந்தது.  முழிப்பு வந்த போது கைக்கடிகாரம் மணி நாலரை என்றது. ஐந்து நிமிடத்தில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றது. மூடியிருந்த ஜன்னலைத் திறந்து எட்டிப் பார்த்தேன். காட்பாடி... ஓ,  வண்டி அரைமணி தாமதமாகப்  போகிறது. ஏழு மணிக்கு சென்னை போக வேண்டிய வண்டி ஏழரைக்கு போகுமோ இல்லை எட்டு மணிக்கோ? இன்று ஆபிசுக்குப்  போக எப்படியும் லேட்டாகி விடும். செந்தில் ஐந்தரைக்கு இறங்க ஐந்து மணிக்கு எழுப்பச் சொன்னார்

.ஆனால் இப்போது அவர் திருவள்ளூர் போகும் போது ஆறு மணியாகி விடும். அவரை ஐந்து மணிக்கு எழுப்ப வேண்டியதில்லை என்று எனக்குத் தோன்றியது.
நான் என் இருக்கையில் சாய்ந்து கொண்டேன். திறந்திருந்த ஜன்னல் வழியாகக்  குளிர்ந்த காற்று வீசிற்று. சென்னையில் கிடைக்காத சொர்க்கம். வெளியே வயல் வெளிகளில் இருந்து ""கிராக்' ""கிராக்'கென்று தவளைகளின் சத்தம் ரயிலுடன் ஒடி வந்து கொண்டிருந்தது. தூரத்தில் ஆங்காங்கே எரிந்த விளக்கொளியும் பரவியிருந்த இருளும் மாறி மாறிக்  கவனத்தை ஈர்த்தன. ரயிலின் ஓடும் இரைச்சலுக்கு நடுவேயும் விரவிக் கிடந்த அமைதி ஆச்சரியத்தை ஏற்படுத்திற்று. வெறுமனே கண்ணை மூடிக் கொண்டு படுத்துக் கிடந்தேன்.
சற்றுக் கழித்து பக்கத்திலிருந்து செந்தில் இருமும் சத்தமும், தொடர்ந்து அவர் படுக்கையிலிருந்து எழுவதும் கேட்டன. எழுந்து வந்தவர் என்னைப் பார்த்து ""குட் மார்னிங் சார்"" என்றார்.
""வண்டி அரை மணி லேட்டா போகுது'' என்றேன்.


அப்போது அவரது கைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. காதில் இயர் போனை எடுத்து அணிந்திருந்தார். சத்தம் கேட்டு, தான் இருந்த இடத்துக்குச் சென்று கைபேசியை எடுத்து ""ஹலோ'' என்றார்.
""குட் மார்னிங், எழுந்துட்டீங்களா?''  என்று பெண் குரல் கேட்டது. இரவில் கேட்ட குரலிலிருந்து சற்று வேறுபட்டிருந்தது போல இருந்தது. தூக்கத்திலிருந்து எழுந்து பேசும் குரல் காரணமாக இருக்கும்.
""குட்மார்னிங். குட்மார்னிங். அதுக்குள்ளயும் எழுந்திட்டியா? என்ன அவசரம்னு எழுந்த? இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியதுதான?'' என்றார் செந்தில். அப்பாடா ! என்ன பரிவு ?
""உங்க வண்டி லேட்டா இல்லாம ஓடுதான்னு கேக்கத்தான் போன் பண்ணினேன்'' என்றாள் அவள்.
""நான் ஏறின வண்டி என்னிக்காவது சரியான நேரத்துக்கு ஓடியிருக்கா?'' என்று கேட்டு விட்டு அவரே சிரித்தார்.
எதிர்முனையிலும் குலுங்கிச் சிரிக்கும் சத்தம் கேட்டது.


  
""குழந்தை என்ன பண்ணுறான்?''
""வேறென்ன? நேத்து பூரா ஆட்டமும் டிவி யுமா ஆடிட்டு தூங்கிகிட்டு இருக்கான். அப்பா அப்பான்னு நெனச்சுக்கிட்டு அழறான்'' என்றாள்.
""தூங்கட்டும். தூங்கட்டும். பாவம். இப்ப முழிச்சு என்ன பண்ணப் போகுது குளந்தை?'' என்றார் அவர்.
என்னால் நம்ப முடியவில்லை. மனிதன் எப்படி இப்படி மாறிவிட்டார்? நேற்று இரவு அவர் பேசியது எல்லாம் அவருக்கே மறந்து விட்டதா? ஒரு சமயம் இரவு ஏதாவது "போட்டு விட்டு'ப் பேசினாரா? நேற்றிரவு என்ன ஒரு அதட்டல், அலட்சியம் எரிச்சல்? இப்போது என்னடாவென்றால் குரலில் அப்படி ஒரு குழைவு! இனிமை! பெருந்தன்மை!
""இன்னும் அரை மணியாகுமா ஸ்டேசன் வர?'' என்று கேட்டாள்.
""ஆமா. ஒளுங்கான டயத்துக்கு வந்திருந்தா இப்ப உன் கையால காப்பி வாங்கி குடிச்சுக்கிட்டு இருப்பேன்.''
""என்னது?''
""இன்னிக்கி என்ன சமைக்கப் போற?'' என்று செந்தில் கேட்டார்.
""உங்களுக்கு பிடிச்ச காரம் போட்ட வாழைக்கா பொரியலும் வெங்காய சாம்பாரும், லெமன் ரசமும்தான்'' என்று மறுமுனையில் இருந்து பதில் வந்தது.
""வெரிகுட்.  உங்கையால சாப்பிட்டு ஒரு மாசத்துக்கு மேலாகப் போகுது'' என்றார்  செந்தில்.
அடப் பாவி !

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.